Wednesday, February 29, 2012

இப்னு பதூதா (பகுதி 3 ) - ஹமீது ஜாஃபர்

இப்னு பதூதா - அருட்கொடையாளர் - 10/3

இதை எழுதிக்கொண்டிருந்தபோது போதுமான செய்திகள் இணையத்தில் கிடைக்கவில்லை. அவருடைய பயணப் புத்தகம் அரபியில் கிடைக்கிறது, ஆனால் எனக்கு அரபி தெரியாது. தமிழ் தளங்களில் இல்லை; ஆங்கிலத்தில் கிடைக்குமா என்று ஷார்ஜாஹ் புத்தகக் காட்சியில் தேடியபோது ஏமாற்றமே காத்திருந்தது. ஒரு திரிசங்கு நிலை, எப்படியாவது முழுமையாக முடிக்கவேண்டும், எண்ணத்தின் வலிமையோ என்னவோ அதிர்ஷ்ட வசமாக ஒரு புத்தகக்கடையில் H.A.R. Gibb எழுதிய "The Travels of Ibn Battuta" கிடைத்தது. அதன் துணையால் இதை எழுதிக்கொண்டிரும்க்கும்போது, தாயாருக்கு சுகவீனம் ஏற்பட்டு அவசரமாகத் தாயகம் திரும்பும் நிலை. அவர்களுக்கு ஓரளவு சுகம் ஏற்படும் வரை எதிலுமே மனம் ஓடவில்லை, தாயார் குணமாகிக்கொண்டு வரும்போது தமக்கையாரின் மரணம் இப்படி இக்கட்டான பல்வேறு சூழலுக்கிடையில் இதை முடித்துள்ளேன். வரலாற்றுச் செய்தி தவறாகிவிடக்கூடாதே என்று கவனமாகத்தான் எழுதியுள்ளேன் இருந்தாலும் தவறுகள் இருக்கலாம், இருந்தால் சுட்டிக்காட்டவும். 

ஹமீது ஜாஃபர்.

***

இப்னு பதூதா முதல் பகுதி  | இரண்டாம் பகுதி

***

பாகம் 3
1344–1349

மாலத்தீவு

கள்ளிக்கோட்டை வந்தபின் தீபாத் அல் மஹல்(மாலத்தீவு) செல்ல முடிவு செய்தேன். அத்தீவைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருந்தேன். பத்து நாள் பயணத்தில் தீவை அடைந்தேன். இரண்டாயிரம் தீவுகளை உள்ளடக்கிய அந்நாடு 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் போவதாக இருந்தால் அங்குள்ள வழிகாட்டி இல்லாமல் போகமுடியாது, தவிர காற்றும் சாதகமாக இருக்கவேண்டும் இல்லையானால் கப்பல் திசைமாறி சிலோனுக்கோ அல்லது கோரமண்டலுக்கோ சென்றுவிடும். ஒரு சில தீவுகளில் விளையும் தானியங்கள் தவிர வேறு பயிர்கள் கிடையாது, 'கல்ப் அல்-மாஸ்' (மாசி மீன்/tuna  நிறைய கிடைக்கிறது. அதன் மாமிசம் இறைச்சிபோல் இருக்கிறது அதை இந்தியா, சீனா, ஏமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அங்கு கோகோ மரம் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு தீவிலும் பள்ளிவாசல்கள் இருக்கின்றன, பெரும்பாலான வீடுகள் மரத்தாலானது. காய்ந்த ஓலையில் இரும்பினால் செய்யப்பட்ட வளைந்த ஆணியால் எழுதுகின்றனர், காகிதத்தை  குர்ஆன், ஹதீஸ் எழுத மட்டும் உபயோகிக்கின்றனர். மக்கள் அன்பாகவும், மரியாதையாகவும், சுத்தமாகவும் இருக்கின்றனர்.  இடுப்பில் ஒரு துணியும் உடம்பில் ஹஜ்ஜில் அணிவதுபோல் ஒரு துணியும் தான் அவர்களது ஆடை, சிலர் தலைப்பாகையுடன் இருக்கின்றனர், சிலர் கைக்குட்டையை கட்டிக்கொள்கின்றனர்.  பெண்களைப் பொருத்தவரை இடுப்பிலிருந்து கால்வரை நீண்ட ஆடையைத் தவிர வேறு இல்லை, திறந்த மேனியாக இருக்கின்றனர். அங்குள்ள பெண்களை குறைந்த வரதட்சணையில் சுலபமாக மணந்துக்கொள்ளலாம். அங்கு வரும் கப்பல் சிப்பந்திகள்(ship crews) அப்பெண்களை திருமணம் செய்துக்கொள்வார்கள் தங்கள் கப்பல் புறப்படும்போது விவாகரத்து செய்துவிடுவார்கள்.

அந்த நாட்டை கதீஜா என்ற பெண் ஆட்சி செய்துவந்தார். அவருடைய கணவர் ஜமாலுதீனும் ஒரு மந்திரியாக இருந்தாலும் ஆட்சி முழுவதையும் கதீஜாவே கவனித்தார்.

கள்ளிக்கோட்டையிலிருந்து வந்தடைந்த முதல் தீவு கன்னலூச் என்பது. இங்கு பல பள்ளிவாசல்கள் இருந்தன, இங்கு நான் தாஃபர்(மஸ்கட்) மனிதர் முஹம்மதுவைக் கண்டேன். "நீ மஹல்(மாலி-தலைநகர்) சென்றால் உன்னைப் பிடித்துக்கொள்வார்கள், ஏனென்றால் அங்கு நீதிபதி யாருமில்லை" என்றார்.  என் பயணத்திட்டம்  மஆபர்(Coromandel), சிலோன், வங்காளம் சென்று பின் சீனா செல்லவேண்டும் என்பது. பதிநான்கு நாட்களுக்குப் பிறகு மஹல் வந்தடைந்தேன். இடையில் ஒவ்வொரு தீவிலும் எங்களை நன்றாக வரவேற்றனர், மஹலில் எங்களுக்கு நல்ல கௌரவம் தந்தனர் ஆனால் நான் யார் என்று காட்டிக்கொள்ளவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு சிலோனிலிருந்து இறை நேசர்களின் சீடர்களும்(தர்வீஷ்கள்), அரபிகளும், பாரசீகர்களும் வந்தனர். அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர், நான் யார் என்பதையும் டில்லியில் நீதிபதியாக இருந்ததையும் மந்திரி ஜமாலுதீனிடம் அறிவித்துவிட்டனர்.
அதன் பிறகு எனக்கு மரியாதை இன்னும் கூடியது.

சிலோனிலிருந்து வந்தவர்களுக்கு நான் விருந்தளித்தபோது மந்திரிகளும் கலந்துகொண்டனர். முடிவில் எனக்கு வீடும் தோட்டமும் தருவதாக மந்திரி வாக்களித்தார். அதுவே எனக்கு பாதகமாகவும் அமைந்தது. எனக்கு நீதிபதி பதவி அளித்து அரச குடும்பத்தில் திருமணம் செய்வித்தனர். நான் நீதிபதியாகப் பதவி ஏற்றபின் முதல் கட்டமாக பெண்கள் மேலாடை கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றினேன். அதை அவர்கள் விரும்பவில்லை, ஆனால் என்முன் வரும்போது உடல் முழுவதையும் மறைத்து வரவேண்டும் என்பதைத் தவிர மற்றது தோல்வி அடைந்தது. என்றாலும் மேலாடை அணிய வற்புறுத்தியே வந்தேன். மேலும் மாலுமிகள் திருமணம் புரிவதும் புறப்படும்போது
விவாகரத்து செய்வதுமாக  இருந்த நிலைக்கு கட்டுப்பாடு விதித்தேன்; தவறு செய்பவர்களுக்கு கசை அடியும் கடைத்தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தண்டனையும் அளித்தேன்; எல்லோரும் தொழவேண்டும் என்ற அறிவிப்பைச் செய்தேன்; வெள்ளிக்கிழமை தொழாதவர்களுக்கு தண்டனை அளித்தேன்; இமாம்களுக்கும் மோதின்களுக்கும் அவர்களின் கடமையை உணர்த்தி ஊக்குவித்து மக்களையும் ஊக்குவிக்கச் செய்தேன்; இந்தச் சட்டத்தை
எல்லா தீவுகளிலும் அமல் படுத்தும்படி ஓலை அனுப்பினேன்.

இதற்கிடையில் மேலும் மூன்று மணங்கள் புரிந்தேன், அதில் ஒருவர் மந்திரியின் மகள், மற்றொருவர் சுல்தான் ஷிஹாபுதீனின் மாஜி மனைவி. இதனால் மக்கள் என்மீது பீதி கொண்டனர். அது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஒரு முறை சுல்தான் ஷிஹாபுதீனுடைய அடிமைக்கு பாலியல் குற்றத்துக்காக நான் கொடுத்தத் தண்டனை சுல்தானுக்குப் பிடிக்காததால் என் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால் நான் கொரமண்டலம் செல்வதை அவர்கள் விரும்பவில்லை அப்படிச் செல்வதானால் எனக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மனைவிகளையும் திருப்பிக் கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்ற நிபந்தனை விதித்தனர். மேலும் நான் சென்றால் அங்கு ஆட்சி செய்யும் சுல்தான், என்
மனைவியின் சகோதரியின் கணவர். அவருடன் சேர்ந்து படை எடுத்து தங்கள் நாட்டைப் பறித்துவிடுவேனோ என்றும் பயந்தனர். ஒரு பக்கம் அச்சம் இருந்தாலும் என் மீது அன்பும் வைத்திருந்தனர் எனவே நீ சென்றாலும் திரும்ப வந்துவிடவேண்டும் என கட்டளை இட்டனர். ஒரு வழியாக நான் புறப்படும் நாள் நிர்ணயிக்கப்பட்டு மந்திரியிடம் விடை பெற்றபோது அவர் என்னை ஆரத்தழுவிக் கண்ணீர் விட்டார்.

நான் புறப்பட்டு ஒவ்வொரு தீவாக வந்து முலுக் என்ற தீவை அடைந்ததும் அங்கு கேப்டன் இப்றாஹிம் என்பவருடைய கப்பல் நின்று கொண்டிருந்தது, அதில் மஆபார்(கோரமண்டலம்) செல்ல ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். 

அத்தீவின் மந்திரி எங்களுக்கு தினமும் முப்பது தினார் பெறுமானமுள்ள சங்குமணிகளும், தேங்காய், தேன், மீன் என அளித்தார். எழுபது நாட்கள் அங்கு தங்கியிருந்த காலத்தில் இரண்டு திருமணங்கள் செய்தேன். இபுறாஹிமுடன் புறப்படும் சமயத்தில் தங்களை சூறையாடி விடுவாரோ என்ற பயத்தில் அவரிடமிருந்த ஆயுதங்களை பறித்துக்கொண்டனர். எனவே நாங்கள் மீண்டும் மஹல் சென்று கப்பலிலிருந்து இறங்காமலே எங்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்ட செய்தியை மந்திரி ஜமாலுதீனிடம் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து மஆபார் புறப்பட்டோம். நான்கு மாதத்திற்குப் பிறகு ஜமாலுதீன் இறந்துவிட்டார்.

இலங்கையில் [1]

நாங்கள் மஆபார் புறப்படும்போது ஹிஜ்ரி 745 ஜமாத்துல் ஆகிர், (22-8-1344). அனுபவமில்லாத மாலுமியினால் மூன்று நாட்களில் மஆபார் செல்லவேண்டிய நாங்கள் ஒன்பதாவது நாள் சைலான் தீவை(சிலோன்) அடைந்தோம். சொர்க்கத்தின் மீது இருப்பதுபோல் புகை மூட்டத்துடன் 'சரன்தீப்'(ஆதம் மலை)[2] தெரிந்தது. தீவை அடையும்போது மாலுமி சொன்னார், இங்கே இறங்குவது உசிதமல்ல இது 'ஆயிரி சக்ரவதி' ஆட்சியில் இருக்கிறது, இவன் கொள்ளைக்காரன் இவனது கடற்கொள்ளைக் கப்பல்களை இங்கே நிறுத்தி வைத்திருக்கிறான் என்றார். அத்துறைமுகத்துக்குச் செல்ல நாங்கள் பயந்தோம், ஆனால் கடும் காற்று(gale) வீசத் தொடங்கியதால் எங்கள் கப்பல் மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டது. நான் சொன்னேன், நீ எப்படியாவது என்னை கரையில் இறக்கிவிடு நான் ராஜாவிடம் பேசிப்பார்க்கிறேன் என்று. ஒருவகையாகக் கரை இறங்கினேன். நான் இறங்கிய இடத்திலேயே அம்மன்னனின் ஆட்கள் என்னை சூழ்ந்து "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" என்றனர். "நான் மஆபார் மன்னரின் மைத்துனரும் நண்பனும் ஆவேன்" என்றேன். உடனே மன்னரிடம் அறிவிக்கப்பட்டதும் தன்னைக் காண எனக்கு அழைப்பு வந்தது. பட்டாளா என்ற அவரது தலை நகருக்கு அழைத்துச்சென்றார்கள், நான்கு வசமும் மரத்தாலான சுவர் எழுப்பப்பட்டு நடுவே மன்னரின் இருப்பிடம் இருந்தது, முழுவதும் இலவங்க மரத்தால்(cinnamon) சூழப்பட்டிருந்தது.

அவரது இருப்பிடம் அடைந்ததும் எழுந்து என்னை வரவேற்று தன் அருகில் அமரவைத்தார். என்னைப் பற்றி விசாரித்தபோது நான் மஆபார் நாட்டு மன்னரின் உறவினர், நண்பர் என்று சொன்னதும் என்னை மூன்று நாட்கள் தங்கிப்போக பணிந்தார். நிறையப் பரிசுகளும் முத்துக்களும் தந்து இவைகளை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். மேலும் ஏதும் தேவை பட்டாலும் வெட்கப்படாமல் கேளுங்கள் என்றார். "என்னுடைய சகாக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும்,

நான் ஆதம் மலையைப் பார்க்கவேண்டும்" என்றேன். ஆனால் என் சகாக்கள் நான் இல்லாமல் மேற்கொண்டு பயணம் செய்யமாட்டோம், அது ஒருவருடம் தாமதமானாலும் சரி என கண்டிப்புடன் சொல்லிவிட்டனர். அவர்களை பாதுகாப்பது என் பொறுப்பு, தவிர உங்களை பாதுகாப்புடன் ஆதம் மலைக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார் மன்னர். அவர் சொன்னது போல் எனக்குப் பல்லக்கும் அதை தூக்க நான்கு பேரும்,
வருடம் ஒருமுறை புனிதப் பயணம் மேற்கொள்ளும் நான்கு யோகிகளும், ஐந்து பிராமணர்களும், பத்து அதிகாரிகளும், பதினைந்து சேவகருடன் உணவுப் பொருட்களுமாய் அனுப்பிவைத்தார்.

ஆதம் மலையை சர்வ மதத்தினரும் கொண்டாடுகின்றனர். முஸ்லிம்கள் பாவா ஆதம்(அலை) அவர்களின் பாதச்சுவடு என்றும், ஹிந்துக்கள் சிவனடி என்றும், புத்தர்கள், புத்தமகானின் பாதம் என்றும், கிருஸ்துவர்கள் ஆதாமுடைய பாதம் என்றும் கொண்டாடுகின்றனர். ஆகவே எல்லோருமே அங்கு செல்கின்றனர். நாங்கள் மூங்கில்கள் நிறைந்த ‘மனார் மந்தாலி’(Minneri-Mandel) பின் பந்தர் சலாவாத்'தைக் (Chilwa)  கடந்தபின் நிறைய சிறு ஓடைகள் குறுக்கிட்டன.

அங்கு கூட்டங்கூட்டமாக காட்டு யானைகளைப் பார்த்தோம். அவை அவ்வழியாக நடந்து செல்வோரை ஒன்றும் செய்வதில்லை. விசாரித்தவகையில் ஷெய்கு அபு அப்துல்லாஹ்[3] என்ற சூஃபி முதன் முதலில் இப்பாதை வழியாக நடந்துச் சென்றார் அதுமுதல் யானைகள் யாரையும் எதும் செய்வதில்லை, கள்வர்கள் பயமும் இல்லை என்றனர். அதன் பின் குனாகர்(Karaunagala) என்ற இடத்தை அடைந்தோம். இது பேரரசனின் தலைநகர், இங்கு இரண்டு மலைகளுக்கிடையில் செல்லும் பாதை வழியாகச் சென்றால் பெரிய ஏரி வருகிறது, அதற்கு ரூபி ஏரி என்று பெயர். இங்கு நிறைய சிகப்புக் கல்(ரூபி) கிடைக்கிறது. ஊருக்கு வெளியே ஷிராஜை(ஈரான்) சேர்ந்த ஷெய்கு உதுமான் பள்ளிவாசல் இருக்கிறது.

இந்நகரின் அரசரிடம் வெள்ளை நிற பட்டத்து யானை இருப்பதைப் பார்த்தேன்; உலகில் வேறெங்கும் வெள்ளை யானையைப் பார்த்ததில்லை. சிலோனில் பல பாகங்களில் ரூபி கிடைக்கிறது, சில இடங்களில் சிகப்புக் கல்(Ruby), சில இடங்களில் மஞ்சள் கல்(Topaz), சில இடங்களில் நீலம்(Sapphire) கிடைக்கின்றது. இவைகளைக் கடந்து ஓரிடம் வந்ததும் அங்கு நிறைய குரோட்டன்ஸ் செடிகள் வரிசை வரிசையாக இருந்தன. அங்கே பறக்கும் அட்டைகளைக் (flying leech) கண்டேன். அவை பறந்து வந்து மனிதனின் மேல் ஒட்டி இரத்தம் குடிக்கின்றன, ஆகவே அவ்வழியாகச் செல்பவர்கள் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்துக்கொள்கின்றனர். அட்டை ஒட்டியவுடன்
எலுமிச்சையை அதன்மீது பிழிந்து ஊற்றினால் உடனே கீழே விழுந்துவிடும். 

ஆதம் மலை

ஒன்பது நாட்கள் பயணத்துக்குப் பின் கடலிலிருந்து பார்த்த அந்த  ஆதம் மலையை அடைந்தோம். இப்போது மேகக்கூட்டம் கீழே தெரிந்தது. எங்கு நோக்கினும் பச்சை, பசுமை நிறைந்த அம்மலையில் விதவிதமான பூக்கள் பல்வேறு நிறங்களில் பூத்திருப்பதைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. அங்கு மலர்ந்திருந்த ரோஜா மலர் உள்ளங்கையை விட பெரிதாக இருந்தது. பாதம் இருக்கும் இடத்தை அடைய இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று பாபா பாதை மற்றொன்று அம்மா(ஏவாள்) பாதை. பாபா பாதை செங்குத்தாக இருந்தது, மேலே செல்வது கடினம். அம்மா(ஏவாள்) பாதை அப்படியல்ல; செல்வது சுலபமானது. பாபா பாதை செங்குத்தாக இருந்ததால் முன் வந்தவர்கள் சில இடங்களில் படிக்கட்டுக்கள் செதுக்கி இரும்பினால் கைப்பிடியும் வைத்துள்ளனர். பத்து இடங்களில் சங்கிலிகள் பொருத்தி வைத்துள்ளனர், அவற்றை பிடித்துக்கொண்டு ஏற வேண்டும். பத்தாவது சங்கிலிக்குபின் செயற்கை குகை ஒன்று இருக்கிறது அதற்கு 'கிதர் குகை என்று பெயர். அங்கு ஒரு சுனை உள்ளது அதில் நிறைய மீன்கள் இருக்கின்றன, அவற்றை யாரும் பிடிப்பதில்லை. இங்கிருந்து இரண்டு மைல் தூரம் போனால் புனிதமிக்க பாவா ஆதமுடைய பாதச்சுவடு
இருக்கிறது. கருப்பு பாறையில் பதியப்பட்டு ஏழு கெஜம் நீளம் உள்ளதாக இருக்கிறது. பண்டைய காலத்தில் சீனர்கள் இங்கு வந்து ஜயட்டூன்(Zaytun) கோயிலை கட்டியிருக்கிறார்கள். பாதத்தில் ஏழு குழிகள் இருக்கின்றன இவற்றில் ஹிந்துக்கள் தங்கம், ரத்தினக் கற்கள், ஆபரணங்களை காணிக்கையாக வைப்பார்களாம்.

கிதர் குகையில் மூன்று நாட்கள் தங்கி தினமும் காலை மாலை பாதத்தை தரிசித்து வருவது அம்மக்களின் பழக்கம். அவர்களை நானும் பின்பற்றினேன். நான்காம் நாள் நாங்கள் அம்மா(ஹவ்வா) பாதை வழியாகத் திரும்பினோம்.

வரும் வழியில் பல மலை கிராமங்களில் தங்கித்தங்கி வந்தோம். மலையடிவாரத்தில் ஓர் பழமைவாய்ந்த மரம் யாரும் அடையமுடியாத இடத்தில் உள்ளது அதிலிருந்து ஒரு இலைகூட உதிர்வதில்லை அப்படி உதிர்ந்ததைப் பார்த்தவர் யாரையும் நான் சந்திக்கவுமில்லை. ஆனால் அங்கு நிறைய யோகிகள் அந்த மரத்தின் இலைக்காகக் காத்திருப்பதைக் கண்டேன். ஒரு கட்டுக்கதை சொல்லப்படுகிறது அந்த இலையைச் சாப்பிட்டால் முதுமை அடைந்தவன்கூட இளமையாகிவிடுவானாம்.  அங்கும் ஒரு ஏரி உள்ளது, அதிலும் ரூபி கற்கள் கிடைக்கின்றன. அதன் பின் தீனவாரை(தெவந்துறை) அடைந்தோம். அங்கு ஒரு கோயில் உள்ளது, சுமார் ஆயிரம் பிராமணர்களும்  யோகிகளும் இருந்தனர்.

கோயிலின் தெய்வம் தங்கத்தால் செய்யப்பட்டது ஒரு ஆள் உயரத்தில் இருக்கிறது, அதன் இரு கண்ணிலும் ரூபி கல் பொருத்தப்பட்டுள்ளது, அவை இரவில் மின்னுகின்றன. அதன் முன்னால் ஒவ்வொரு இரவும் ஐநூறு பெண்களும் சிறுமியரும் ஆடிப் பாடுகின்றர். பின் அங்கிருந்து Qaali(காளெ) சென்று பின் கலன்ம்பு(கொழும்பு) சென்றோம். கலன்ம்பு பெரிய நகரம், அங்கு ஜலஸ்தி என்ற கப்பலின் தலைவரிடம் தங்கியிருந்தோம். அவரிடம் ஐநூறு அபிசீனியர்கள் இருக்கக் கண்டேன். அங்கு மூன்று நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் பத்தாலா வந்தடைந்தோம். அங்கு கேப்டன் இபுறாஹிம் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

சோழமண்டலம்....

கேப்டன் இபுறாஹிமுடன் இணைந்து மஆபருக்கு (Coromandel)  எங்கள் பயணம் இருந்தது. புறப்பட்டபின் காற்றின் வேகம் கூடி புயலாய் மாறியது. அனுபவமில்லாத மாலுமியினால் கப்பலில் நீர் நிறைந்து, பாறையில் மோதி தரைதட்டி நின்றது. கப்பலில் இருந்த அனைவருக்கும் மரணபயம் கவ்விக்கொண்டது, எல்லோரும் இறந்துவிடுவோம் என்ற நிலை ஏற்பட்டது. தப்புவதற்கு வழி இல்லாமல் பாய்மரத்தை சாய்த்து கடலில் எறிந்து அதைப் பிடித்துக்கொண்டு தப்பவேண்டிய நிலை, என்னிடமிருந்த இரு அடிமைப் பெண்களில் ஒருத்திக்கு நன்றாக நீச்சல் தெரிந்ததால் மற்றவர்களை பாய்மரம் மூலம் தப்பிக்க வைத்தாள். என்னிடம் விலைமதிப்பற்ற பொருட்கள் இருந்ததால் அவற்றை இழக்க
மனமில்லாமல் வேறு சிலருடன்  நான் கப்பலின் மேல் தளத்தில் இருந்துகொண்டேன். புயல் அடங்கியதும் மீதமுள்ளவர்களைக் காப்பாற்ற கரையிலிருந்து வந்த படகின் மூலம் என்னிடமிருந்த பொருட்களுடன் கரை சேர்ந்தேன்.

நாங்கள் வந்திருப்பது அரசருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. மூன்று நாளைக்குப் பின் பல்லக்கு, குதிரைகள், வீரர்கள் சகிதமாக அரசரின் பிரதிநிதி வந்து எங்களை ஹரக்காட்டு[4] என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஓர் இரவு பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் சுல்தான் கியாசுதீன் இருப்பிடத்தை அடைந்தேன். அவருடைய தங்கையை நான் டில்லியில் மணம் புரிந்திருந்தேன் எங்களுடன் அளவளாவியப் பிறகு என்னை மீண்டும் மாலத்தீவுக்குச் சென்று பரிசுப்பொருட்களையும், உதவிப் பொருட்களையும் அரசியரிடம் கொடுத்துவிட்டு ஐந்து நாட்களில் திரும்பும்படி ஏவினார். ஆனால் மூன்று மாதம் காலநிலை மோசமாக இருக்கும் என்பதை அறிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டு
தலைநகர் மதுரா(மதுரை)க்கு அழைத்துச்சென்றார்.

தலைநகரிலிருந்து  புறப்பட்டு Fattan [5] என்ற நகரை அடைந்தோம். அது அழகிய, பெரிய கடற்கரை நகர், அழகிய துறைமுகம் ஒன்றிருந்தது. பெரிய மரத்தினால் கட்டப்பட்ட தோணித்துறை இருந்தது. இரவும் பகலும் வீரர்களின் பாதுகாவலில் இருந்ததால் எந்த எதிரியும் உள்ளே புக முடியாது. நகரில் அழகிய பள்ளிவாசல் ஒன்றிருந்தது. அங்கு  நிஷாப்பூரைச் சார்ந்த 'முஹம்மது' என்ற சூஃபி ஒருவரை ச ந்தித்தேன். அவருக்கு  முப்பது  சீடர்கள் இருந்தனர்; கூடவே ஒரு சிங்கமும் ஒரு கஜல் இன மானும் ஒன்றாகவே இருந்தன. நான் இங்கு பதிநான்கு நாட்கள் தங்கிவிட்டு தலைநகர் மதுரைக்குத் திரும்பினேன். அகலமான வீதிகளையுடைய பெரிய நகரமாகத் திகழ்ந்தது. நான் வந்த சமயம்
மதுரை நகர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் இரண்டு அல்லது மூன்று நாளைக்குமேல் வாழமுடியவில்லை. மன்னரின் தாயாரும் மகனும்கூட நோயால் பாதிக்கப்பட்டனர். மன்னர் மூன்று மைல் அப்பாலுள்ள நதி (வைகை) அருகே சென்றுவிட்டார், அங்கு சென்று நான் மன்னரை சந்தித்தேன். அவரும் பதிநான்கு நாட்களில் இறந்துவிட்டார். அவரது சகோதரி மகன் நசிருதீன் பதவி ஏற்றார்.

எல்லோரையும் பிடித்த நோய் என்னையும் பிடித்துக்கொண்டது. எனக்கு நேரம் நெருங்கிவிட்டது என்றே நினைத்தேன். அங்கு ஏராளமாக விளைந்திருந்த புளியை சிறிது வாங்கி நீரில் கரைத்து அருந்தியபின் இறைவன் அருளால் குணமானேன். அங்கு இருக்க விருப்பமில்லாமல் மன்னருடைய வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் Fattan வந்தேன். அங்கு ஏமனுக்குப் புறப்படத் தயாராக இருந்த எட்டு கப்பல்களில் ஒன்றில் நான் ஏறிக்கொண்டேன். நான்கு போர்க்கப்பல்களின் இடையூறால் கொல்லம் அடைந்தேன். நோயின் தாக்கம் இன்னும் நீடித்திருப்பதை உணர்ந்ததால் மூன்று மாதங்கள் அங்கேயே தங்கினேன். பின்  ஹினாவர்(Honavar) சுல்தான் ஜமாலுதீனை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியவனாகப் புறப்பட்டேன். ஆனால் என் விதி ஹினாவருக்கும் ஃபாக்கன்பூர்(pigeon island) தீவுக்கும் இடையில் பன்னிரண்டு போர்க்கப்பல்களால் தாக்கப்பட்டோம், அவர்களின்
மும்முரத் தாக்குதலால் என்னிடமிருந்த இலங்கை மன்னர் பரிசளித்த அறிய பொக்கிஷங்கள், சூஃபியாக்கள் அளித்த அரும் பொருட்கள் அனைத்தையும் பறிகொடுத்து கட்டியிருந்த ஆடையுடன் உயிர் தப்பி கோழிக்கோடு பள்ளிவாசலை அடைந்தேன். என் நிலையைக் கண்ட இமாமும் வணிகரும் எனக்கு ஆடைகளும் தலைப்பாகையும் தந்து உதவினர்.

மீண்டும் மாலத்தீவை நோக்கி....

நான் கோழிக்கோட்டில் இருக்கும்போது மாலத்தீவின் அரசி கதீஜாவின் கணவர் ஜமாலுதீன் இறந்தபின் அப்துல்லாஹ் மணமுடித்தார் என்பதை அறிந்தேன். மேலும் நான் மாலத்தீவைவிட்டு நீங்கும்போது என் மனைவி
கற்பமுற்றிருந்தாள், அவள் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் என்றும் அறிந்தேன். இரண்டு வயதாகும்[6] என் குழந்தையைக் காண ஆவல் ஒருபக்கம் இருந்தாலும் எனக்கும் மந்திரி அப்துல்லாஹ்வுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கலால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயமும் இருந்ததால் தொழுதுவிட்டு குர்ஆனைப் புறட்டியபோது "எவர் துன்பத்திலும் இறையச்சம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்மீது வானவர்கள் அருள்மாரி பொழிகிறார்கள்" என்ற வசனம் கண்ணில்பட்டது. அதை இறை உத்திரவாக ஏற்று மாலத்தீவை நோக்கி பயணத்தை வைத்தேன். நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை மந்திரி அப்துல்லாஹ் என்னை வரவேற்றார், விருந்தளித்தார், என் மகனைக் காணச்செய்தார்.
என்னிடம் இருப்பதைவிட தாயிடம் இருப்பதே மேல் என்று அவர்களிடம் கொடுத்துவிட்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

பங்காளா (வங்காளம்)

நாற்பத்திமூன்று இரவுகள் கடலில் கழித்தபிறகு வங்காளத்தை அடைந்தேன். வங்காளத்தைப் பற்றி கொரசான் மக்கள் கூறுவது 'நல்லவைகள் நிறைந்த நரகம் (A hell full of good things)' பொருட்கள் கிடைக்கும் வேதனை நகரம்' என்று. ஆம், அதுபோல்தான் இருந்தது. நான் எங்கும் பார்த்திராத அளவு மிக அதிகமாக அரிசி மிக குறைந்த விலையில் கிடைத்தது; கொழுப்பு நிறைந்த எட்டு பறவைகளின் கறி ஒரு திர்ஹத்திற்கு கிடைத்தது; நல்ல கொழு கொழு செம்மறி
ஆடு இரண்டு திர்ஹத்திற்கு கிடைத்தது; முப்பது முழமுள்ள உயர்வான இரண்டு துணிகள் இரண்டு தினாருக்கு விற்கப்பட்டது; அழகிய பெண் அடிமை ஒரு பொன் தினாருக்கு விற்பனையானாள், ஒரு பொன் தினார் எங்கள் மொராக்கா நாட்டின் இரண்டரை பொன் தினாருக்கு சமம். நான் அடைந்த முதல் நகரம் கடற்கரை நகரமான சுத்காவான் (Chittagong). ஹிந்து மக்கள் ஜுன்(யமுனை) நதிக்கு புனித யாத்திரை செய்தனர். அங்கு மிகப் பெரிய, நீண்ட நதி வழிப்பாதைகள் இருந்தன. சுல்தான் ஃபக்ருதீன் ஆட்சி செய்துவந்தார் என்றாலும் சூஃபியாக்களுடைய அறிவுரையின்படியே நடந்தார்.

இறைநேசர் ஜலாலுதீன்

என்னுடைய எண்ணம் தப்ரிஜிலிருந்து(ஈரான்) வந்திருந்த சூஃபி ஷெய்கு ஜலாலுதீன் அவர்களை சந்திக்கவேண்டும் என்பது. எனவே காமரு மலைகள் வழியாகப் பயணம் செய்தேன். இம்மலைத் தொடர் கஸ்தூரி மான்கள் வாழும் நிறைய இருக்கும் தாப்பாத்(திபேத்) வழியாக சீனா வரை சென்றது.  ஒரு மாதப் பயணத்துக்குப்பின் ஷெய்கின் சீடர்கள் நால்வரை சந்தித்தேன்.  மேற்கிலிருந்து ஒரு பயணி உங்களிடம் வருவார், 
நீங்கள் சென்று அவரை வரவேற்று அழைத்து வரும்படி உத்திரவிட்டதாக சொன்னார்கள். என்னைப் பற்றி எந்த செய்தியும் அவருக்குத் தெரியாது ஆனால் எனது அடையாளத்தை அவர்களிடம் குறிப்பிட்டிருந்தார். இரண்டு நாள் நடைப்பயணத்துக்குப் பின் சூஃபியின் இருப்பிடம் (Sylhet) சென்றோம். அவர்கள் வாழ்ந்த இடமோ ஒரு குகை, வரண்ட பூமி என்றாலும் அவர்களை சந்திக்க பல மதத்தவரும் வந்தனர். அவர்களிடம் ஒரு
பசு இருந்தது, அதன் பாலை அருந்தி தனது பத்து நாள் நோன்பைத் திறப்பது பழக்கமாகக் கொண்டிருந்தார். சுற்றுவட்டாரத்திலிருந்த மக்கள் அனைவரையும் இஸ்லாத்தில் சேர்த்திருந்தார்கள். அவர்கள் என்னை ஆரத்தழுவி வரவேற்று என் நாடு, பயணம் குறித்து அளவளாவி என்னைப் பாராட்டினார்கள். எப்போதும் அணிந்திராத வினோதமாக செம்மறி ஆட்டு ரோமத்தால் நெய்யப்பட்ட ஆடை அணிந்திருந்ததைக் கண்டேன். இது எனக்கு வியப்பாக தோன்றியது. அன்று நான் விடைபெறுவதற்காக சென்றபோது அவ்வாடையைக் கழற்றி என்னை அணித்துக்கொள்ளச் சொன்னார்கள், தொப்பியும் தந்தார்கள். இதன்மூலம் அவர்கள் என்னை ஆசிர்வதித்தாக உணர்ந்தேன்.

பர்மாவில்....

சீனா செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் நதிவழியாக சுனுர்காவான் (Sunarganw-15 miles S.E. of Dacca) என்ற நகருக்குப் பயணமானேன், பதினைந்து நாள் நதிப் பயணம், நதியின் இருமருங்கிலும் பல கிராமங்களும் பசுமை நிறைந்த தோட்டங்களும் இருந்தன, எல்லாகிராமங்களிலும் படகுகள் நிறைய நின்றுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு படகிலும் ஒரு முரசு உள்ளது, பயணத்தில் படகுகள் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ளும்போது முரசை ஒலித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர். சூஃபியாக்கள் மற்றும் சிடர்களிடமிருந்து பயணக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மன்னரின் உத்திரவு, அதனால் கட்டணம் வசூலிப்பதில்லை; அதுபோல் அவர்களுக்கு பாதி விலையில்
உணவுப் பொருட்கள் கொடுக்கவேண்டும் என்றும் உத்திரவு;  சுனுர்காவானிலிருந்து ஜாவா(சுமத்ரா) செல்வதற்காக கப்பல் இருப்பதை அறிந்து அதில் பயணத்தைத் தொடர்ந்தேன்.

நாற்பது நாட்களில் சுமத்ராவை அடையவேண்டிய கப்பல் பதினைந்தாம்  நாள்  பரஹ்னகார் (பர்மா) என்ற ஊரில் கப்பல் நங்கூரமிட்டது. அங்குள்ள பழங்குடியினர் ஹிந்து இனத்தவரா இல்லை வேறு மதத்தவரா என்று எனக்குப் புலப்படவில்லை. ஆனால் அவர்களின் குடிசைகள் நாணல்களாலும் இலைகளாலும் வேயப்பட்டிருந்தது, அம்மக்கள் பார்ப்பதற்கு நம்மைப் போல் இருந்தாலும் முகம் நாயைப் போலிருந்தது,  ஆடையில்லாமல்  இருந்தார்கள், பெண்கள் மட்டும் இடுப்பை இலைகளினால் மறைத்திருந்தனர் அங்கு வணிகக் கப்பல் வந்துபோவதால் ஒரு குறிப்பிட்டப் பகுதியை வங்க முஸ்லிம்களும் சுமத்ர முஸ்லிம்களும் ஆக்ரமித்திருந்தனர். அருகில் தண்ணீர் கிடைக்காததால் வெகு தூரத்திலிருந்து யானைகளில் தண்ணீர் கொண்டுவந்தனர்;  யானைகள் அங்கு நிறைய இருந்தன, எல்லா வேலைகளுக்கும் அவற்றை பயன்படுத்தினர். பழங்குடித் தலைவன் ஆட்டுத் தோலில் ஆடை அணிந்திருந்தார். மிளகு, இஞ்சி,
இலவங்கம், மாலதீவு மீன், வங்கத் துணிகளை நாங்கள் பரிசாகக் கொடுத்தோம். துணியை அணிந்துக்கொள்ளாமல் யானைக்கு அணிவித்தனர். பின் அங்கிருந்து இருபத்தைந்து நாள் பயணத்தில் சுமத்ராவை அடைந்தோம்.

ஜாவா(சுமத்ரா) [7]

எங்கள் கப்பல் கரை அடுப்பதற்கு அரை நாள் தூரத்திலிருந்தே அதன் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். பசுமை நிறைந்த கரையோரத்தில் அடர்த்தியான கோகோ மரங்களும், பாக்கு மரங்கள், கற்றாழை(indian aloe), கிராம்பு செடிகளும், மா, பலா மரங்களும், நாவல் மரங்களும், ஆரஞ்சு மற்றும் பிரம்புச் செடிகளும்  விளைந்திருப்பதைக் கண்டேன்.  இங்குள்ள மக்கள் உருக்கி எடுக்காத வெள்ளீயமும் சீன தங்கத்தையும் பண்டமாற்று முறையில் வணிகம் நடத்தினர். எங்கள் கப்பல் நங்கூரமிட்டபின் அங்குள்ள மக்கள் சிறிய படகுகளில் தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், மீன்களுடன் வந்து எங்களை வரவேற்றனர். இது, அங்கு வரும் வெளிநாட்டு வணிகர்களை வரவேற்கும் பழக்கமாகும். அதற்கு பகரமாக வணிகர்களும் தங்கள் பொருட்களைப் பரிசாக அளிப்பர்.
சுல்தான் மாலிக் அல் ஜாஹிர் ஆண்டுவந்தார். நாங்கள் வந்துள்ளதை மன்னருக்கு அறிவிக்கப்பட்ட பின் எங்களை மன்னரின் பிரதிநிதி அழைத்துச்சென்று தங்கச்செய்தார். மூன்று நாட்கள் கழித்தே மன்னர் விருந்தினரை காண்பாராம் காரணம் அவர்களின் பயணக்களைப்பு முற்றிலும் நீங்கவேண்டும் என்ற நோக்கமாம், இது அவர்கள் நாட்டு வழக்கம், அதன்படி நான்காம், இன்று மன்னர் உங்களை சந்திப்பார் என்று பிரதிநிதி அறிவித்தார். அன்று வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்கு பெரிய பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம், தொழுகைக்குப் பின் என்னை மன்னர் சந்தித்து மிக அன்பாக அளவளாவினார், சுல்தான் முஹம்மது பின் துக்ளக்கையும் எங்கள் பயணத்தையும்
விசாரித்தறிந்தார். மாலை (அசர்) தொழுகைவரை எங்கள் உரையாடல் நீடித்தது. மன்னருடன் உரையாடியது மகிழ்ச்சியாகவே இருந்தது, அவர் அறிஞர்களை கௌரவிப்பவராகவும், இஸ்லாத்தின்மீது பற்றுள்ளவராகவும் இருந்தார். பின் எங்களை அரசு விருந்தினராக அழைத்துச் சென்று உயர்வான பட்டு, பருத்தி ஆடைகள் பரிசாக அளித்தார். இந்தியாவில் உள்ளதுபோல மன்னர் பள்ளிவாசலிலிருந்து திரும்பியபோது அரண்மனையில் இசைக்கலைஞர்களின் பாடல்களுடன் வரவேற்கப்பட்டார் என்றாலும் தொழுகைக்கு வரும்போது அரசப்பிரமுகர்களுடன் நடந்தே வந்தார். பதினைந்து நாட்கள் அரசு விருந்தினராக இருந்தபின் மேற்கொண்டு பயணம் செய்வதற்கு மன்னரிடம் அனுமதி கேட்டபோது, இது பயணம் செய்வதற்கு உகந்த காலம், வருடத்தில் எல்லா காலங்களிலும் சீன தேசத்திற்கு பயணம் மேற்கொள்ளமுடியாது என்பதால் எங்களுக்கு உயரியப் பரிசாக சிறிய கப்பலும், உணவுப் பொருட்களும் தந்தமைக்காக இறைவனிடம் நல்லருள் புரிய  பிரார்த்தித்தேன். 

கரை ஓரமாக எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். காகுலா(Qaaqula-கில்லாங்) துறைமுகத்தை அடைந்தபோது அங்கு நிறைய சிறிய கப்பல்கள் நின்றுக்கொண்டிருந்தன, அவை கடல் கொள்ளைக்காகப் பயன்படுத்தப்படுபவை. நாங்கள் கரைக்குச் சென்றோம், அங்கு நிறைய யானைகள் இருந்தன, சொல்லப்போனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு சொந்தமாக யானை வைத்திருந்தனர், அவைகளை பொருட்கள் சுமப்பதற்கும் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தினர். இதே
நிலையை வடக்கு சீனாவில் பார்த்தேன். அரசர் முஸ்லிம் அல்லாதவர் என்றாலும் எங்களுக்கு 'சலாம்'(அஸ்ஸலாமு அலைக்கும்) என்று சொல்லி வரவேற்றார், நான் பதில் சலாம் சொன்னேன். ஒரு துணி விரிப்பில் என்னை அமரச் சொன்னார், ஆனால் அரசரோ வெறும் தரையில் அமர்ந்திருந்தார், மன்னர் தரையிலிருக்க எப்படி நான் மட்டும் விரிப்பில் அமருவது என சங்கடமாக இருந்தது. அது தன்னப் பார்க்க வரும் விருந்தாளிகளை அமரச்செய்யும் முறையாம்.

அங்கு மூன்று நாள் அரசு விருந்தினராக இருந்துவிட்டு புறப்பட்டேன்.
வியட்நாம் அங்கிருந்து புறப்பட்ட முப்பத்தி நான்கு நாள் பயணத்திற்குப் பின் அமைதிக் கடலை அடைந்தோம். அமைதிக் கடல் என்றால் முற்றிலும் அமைதி, காற்றோ, அலைகளோ, நீரோட்டமோ எதுவும் இல்லை, குளம்போல் இருந்தது, தண்ணீர் சிவந்த நிறத்திலிருந்தது, கரையும் சிவப்பாக இருப்பதால் அப்படி காட்சியளிக்கிறது என்று சொன்னார்கள். அங்கு சீனப் படகுகள் கப்பல்களை இழுத்துச் செல்வதைக் கண்டேன். படகில் இருபது துடுப்புகளும் ஒரு பெரிய பாய்மரமும், முப்பதுக்கு மேற்பட்ட ஆட்களும் இருக்கின்றனர். கப்பல்களை இருபுறமும் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லும்போது துடுப்பிடும் ஆட்கள் எதிரும்புதிருமாக அமர்ந்து சேர்ந்தார்போல் பாட்டுப்பாடியபடி துடுப்பிடுகின்றனர். கடல்
அமைதியாக இருந்தால் சாதாரணமாக நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் செல்லவேண்டிய தூரத்தை முப்பத்தேழு நாட்களில் கடந்து தவாலிசி என்ற பகுதியை அடைந்தோம். அது மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது. மிகப் பெரிய நிலப் பரப்பைக் கொண்டது, உர்துஜா என்ற இளவரசியின் கட்டுப்பாட்டில் இருந்தது; அங்கு வாழும் ஆண்கள் சிவந்த மேனியும் துருக்கியர்களை போன்றும் இருந்தனர், போர் குணம் கொண்டவர்கள்; அதுபோல் பெண்களும் குதிரையில் அமர்ந்து ஆண்களுக்கு ஒப்பாக வில் எய்தும் வீராங்கனைகளாக இருந்தனர். ஆனால் அவர்கள் சிலைகளை வணங்குபவர்களாக இருந்தனர்.
அந்நாட்டு மக்களின் வழக்கப்படி இளவரசி விருந்தளிப்பதற்காக எல்லோரும் அழைக்கப்பட்டனர். கப்பல் தலைவன் என்னை அழைத்தபோது நான் செல்ல மறுத்துவிட்டேன், காரணம் சிலைவணங்கிகள் அளிக்கும் விருந்தில் பரிமாறப்படும் மாமிசங்களை உண்ணுவது இஸ்லாம் அனுமதிக்காததால். இதை அறிந்த இளவரசி எனக்கு பிரத்தியேக அழைப்பு விடுத்ததால் நான் சென்று மரியாதை செய்தேன். என் மரியாதையை ஏற்றுக்கொண்டவள்  "எங்கிருந்து
வருகிறீர்கள்?" என்று துருக்கி மொழியில் கேட்டாள். நான், "இந்தியாவிலிருந்து" என்றேன். "மிளகு நாட்டிலிருந்தா?" என்றாள். "ஆம்"என்றேன். பின்பு நாட்டின் வளத்தையும் என் அனுபவங்களையும் கேட்டறிந்தபின் மகிழ்வுற்று இரண்டு அங்கி, இரு யானைகள் சுமக்கும் அளவுக்கு அரிசி, இரண்டு எருது, பத்து செம்மறி ஆடுகள், கப்பல் பயணத்துக்கென்று பிரத்தியேகமாகத் தயாரித்த உணவுகள்  இரண்டு பெரிய ஜாடியில் நிறைத்து பரிசாக அளித்தாள்.

இளவரசியிடம் வீரர்கள், வேலையாட்கள், அடிமைகள் அனைவரும் பெண்கள், இவர்கள் போர் செய்வதில் ஆண்களைப்போல் வல்லமைப் படைத்தவள், தன்னை யார் வெல்லுகிறார்களோ அவனையே மணப்பதாக உறுதி பூண்டிருப்பதால் இன்னும் மணமாகாமல் இருக்கிறாள். ஆனால் அவளுடன் சண்டை செய்ய பலரும் அஞ்சுகின்றனர் என்று கப்பல் தலைவன் பின்னர் சொன்னார். பரிசுகளைப் பெற்ற நான் அங்கிருந்து சீன தேசத்தை நோக்கிப் பயணமானோம்.

சீனாவைப் பற்றி

சீனா மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டது. அங்கு கனிவர்க்கங்கள், தானியம், தங்கம், வெள்ளி ஏராளமாகக் கிடைக்கின்றன. இந்த வகையில் பார்க்கப் போனால் உலகில் வேறெங்கும் கிடைக்காத அளவுக்கு இங்கே கிடைக்கின்றன எனச் சொல்லலாம். எகிப்தில் நைல் நதிக்கரையில் இருந்ததுபோல் பழத்தோட்டங்களும், கடைத்தெருக்களும், கிராமங்களும் இருந்தன. இங்கு கிடைத்த கனிகள் இஸ்ஃபஹான், குவாரிஜம், டெமாஸ்கஸ் நகரங்களில் கிடைத்தவை போன்றோ அல்லது அதைவிட உயர்வானதாகவோ இருந்தன. அங்கு விளைந்த கோதுமை, பயறுகள்கூட மிக உயர்வானதாக இருப்பதைக் கண்டேன்.

ஜய்தூன் மற்றும் சின் - கலான் நகரங்களில் தயார் செய்யப்படும் பீங்கான்கள் மிக உயர்ந்த வகையாக இருந்தன. அவை இந்தியா மற்றும் சில மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நான் ஒருமுறை நெருப்புக் கோழி போன்று பெரிய கோழியை கொல்லத்தில் (கேரளம்) கண்டு வியந்தேன். இது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது இதைவிட பெரிய கோழிகளை சீனாவில் காணலாம் என்று அதன் உரிமையாளர் சொன்னார். அவர் சொன்ன உண்மையை
இங்கு நேரில் கண்டேன். கோழியும் சேவல்களும் வாத்தைவிட பெரிதாகவே இருந்தன.

சீனர்கள் ஹிந்துக்களைப் போல் சிலையை வணங்குபவர்கள், இறந்தவர்களை எரிக்கிறார்கள். சீனாவின் அரசர் செங்கிஸ்கான் வழிதோன்றல். ஒவ்வொரு நகரிலும் சொற்ப அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர், பள்ளிவாசல்களும் இருக்கின்றன, மரியாதையும் கௌரவமும் அளிக்கப்படுகின்றனர். சீனர்கள் பன்றி, நாய் இறைச்சியை உணவாக உண்கின்றனர். பட்டு ஏராளமாக கிடைக்கிறது, பழவகைகள் உற்பத்தி ஆகுவதைப் போல் பட்டும் உற்பத்தியாகிறது; பெரிய
அளவில் பராமரிப்புத் தேவைப் படுவதில்லை. ஏழைகள் முதல் அனைவருமே பட்டை உபயோகிக்கின்றனர். ஒருவர் வைத்திருக்கும் பருத்தி ஆடையின் அளவைப் பொருத்து அவரது செல்வம் மதிப்பிடப்படுகிறது.

தினார்(தங்கம்), திர்ஹம்(வெள்ளி) செலவாணியாக வணிகத்தில் பயன்படுத்தினாலும் காகிதப் பணங்களும் உபயோகத்தில் இருக்கின்றன. அதில் அரசு முத்திரை இருக்கிறது. காகிதப் பணம் கிழிந்துவிட்டாலோ அல்லது பயன்படுத்தமுடியாத நிலைக்கு ஆகிவிட்டாலோ அதனை கருவூலத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், அதற்காக பிடித்தம் ஏதுமில்லாமல் அதே மதிப்புள்ள புதிய பணம் பெற்றுக்கொள்ளமுடியும்.  ( குறிப்பு: இப்போதுகூட நம் நாட்டில்  பழசான பணத்தை மூன்று முறை திருப்பிப்பார்த்துவிட்டு 'வேறெ இருந்தா குடுங்க சார்'ண்டு சொல்றதை பார்க்கும்போது நாம் எங்கேயோ இருக்கிறோம் என்று தோன்றுகிறது. - ஜாஃபர்) சீனர்கள் அனைவருமே மிகத்திறமை வாய்ந்த
கலை நுணுக்கம் கொண்டவர்களாகவும் அதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் வரையும் சித்திரங்களைப் பார்த்தபோது அவர்களை விஞ்ச உலகில் யாருமில்லை என்பதை உணர்ந்தேன். 

சீனர்கள் தங்கள் மகள்களையும் மகன்களையும் குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள், அதைப் பற்றி அவர்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது.  விலைக்கு வாங்கும் பெண்களை விருப்பமிருந்தால் திருமணம் செய்துக்கொள்ளலாம் அல்லது வைப்பாகவோ, அடிமையாகவோ வைத்துக்கொள்ளலாம், நிர்ப்பந்தம் கிடையாது. என்றாலும் வரம்புமீறிய ஒழுக்கக்கேடு கிடையாது.

சீனாவுக்கு வரும் இஸ்லாமிய வணிகர்கள் அங்கு இஸ்லாமியர் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் அல்லது வணிகர்கள் விடுதியில் தங்கிக்கொள்ளலாம், அது அவரவர் விருப்பம்.  வணிகர்களின் உடமைக்கு தங்குமிடத்தின் உரிமையாளர் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்வர். மேலும் பயணம் செய்யும் வணிகர்கள் இரவு நேரத்தில் பயணம் செய்ய இயலாது. மாலைப் பொழுதானதும் அவர்களுக்கென்று அமைக்கப்பட்டுள்ள விடுதியில் தங்கவேண்டும். விடுதியின் பொறுப்பாளர் தங்கும் பயணிகளின் உடமைகளை கணக்கிட்டு தன் பொறுப்பில் வைத்துக்கொள்வார். மறுநாள் அல்லது மீண்டும் பயணம் தொடங்கும்போது உடமைகளை சரிபார்த்து திருப்பி அளித்துவிடுவார். இது 'சின்-சா-சின் முதல் கான்
பாலிக்(பீகிங்)' வரை இருந்தது. இத்தகைய முறையினால் ஒரு மனிதன் வருடம் முழுவதும் விலை உயர்ந்தப் பொருட்களுடன் பயமில்லாமல் பயணம் செய்யமுடியும்.

சீனாவில்

இளவரசியிடம் பெற்ற பரிசுப் பொருட்களுடன் சீனாவில் அடைந்த முதல் துறைமுகம் 'ஜைதூன்'(Xiamen)[8].  ஜைதூன் என்றால் ஆலிவ் என்று பொருள். அந்நகரத்தில் எங்கும் ஜைதூன் கிடையாது;

சீனாவிலும் இந்தியாவிலும் ஜைதூன் விளைவதில்லை என்றாலும் அதை ஜைதூன்  என்று அழைக்கிறார்கள். ஜைதூன், மிகப் பெரிய நகரம், இங்கு பட்டும், சாட்டின் துணியும் நெய்யப்படுகிறது. இவை கான்சா மற்றும் கான் -பாலிக் (பீகிங்)கில் கிடைக்கும் துணியைக் காட்டிலும் உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது. இதன் துறைமுகம் மிகப் பெரியது; ஒருவேலை உலகில் மிகப் பெரியதாகக் கூட இருக்கலாம். நூற்றுக்கு மேற்பட்ட பெரிய, சிறிய கப்பல்கள் நிற்பதைப் பார்த்தேன். கடல், நிலப் பகுதியில் அதிக தூரம் உள்வாங்கப்பட்டு ஆற்றில் இணைந்திருந்தது. இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தப் பகுதி நகரத்திலிருந்து சற்று ஒதுங்கியிருந்தது.
நான் ஜைதூனில் கரை இறங்கிய தினம் துக்ளக் சுல்தானுக்கு பரிசளிப்பதற்காக வந்திருந்த சீன தூதுவர் அங்கு அமீராக இருப்பதைக் கண்டேன். அவர் என்னை வரவேற்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து எனக்கு அரசு விருந்தினராகத் தங்கவைத்தார். இஸ்லாமிய தலைவர்களும், நீதிபதிகளும் என்ன சந்தித்தனர், பின்னர் இந்தியாவில் ஒருமுறை எனக்கு உதவிபுரிந்த தப்ரிஜிலிருந்து(ஈரான்) வந்திருந்த ஷர்ஃபுதீனையும் சந்தித்தேன். அவர் பெரிய வர்த்தகர், அவருக்கு சீனர்கள் மிக்க மரியாதை செலுத்தினர். சூஃபி புர்கானுதீனை சந்தித்தேன். அவருடைய ஆசிரமம் ஊருக்கு வெளியே இருந்தது. நான் வந்துள்ள விபரம் பேரரசர் Qan(Great Khan of Mangols)க்கு அறிவிக்கப்பட்டது.

அவரின் தூதுவர் என்னை அழைத்துச் சென்றார். இருபத்தேழு நாள் நதிப் பயணம், நீரோட்டத்துக்கு எதிராகப் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒவ்வொரு நாளும் பகல் வரை பயணம் செய்ய முடிந்தது, மாலை நேரம் அங்குள்ள கிராமங்களுக்குச் சென்று மறு நாளுக்குத் தேவையான உணவுகளை சேகரித்துக்கொண்டு பொழுதுவிடிந்தபின் மீண்டும் பயணம், மீண்டும் ஒரு கிராமம், இப்படியாக சின்-கலான்(பாரசீகப் பெயர்) நகரை அடைந்தேன்.

சின்-கலான், இங்கு தாயாரிக்கப்படும் பீங்கான் உயர் ரகம் கொண்டது, இவை இந்தியா, ஏமனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு அனேக கோயில்கள் இருந்தாலும் ஒன்பது வாயில் கொண்ட ஒரு கோயில் உள்ளது. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பயன்பாட்டுக்குட்பட்டதாக இருந்தது. முஸ்லிம்கள் பகுதியில் தங்கினேன், சீனாவின் பழக்கப்படி ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தலைவர்கள் இருந்தனர். அவர்களும், சட்டத்துறை நிபுணர்களும் என்னை வெகுவாக வரவேற்றனர். வணிகர்கள் ஏராளமானப் பரிசுப் பொருட்கள் தந்தனர். பதிநான்கு நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டேன். இடையில் நாடோடிகளுடன் சண்டை தீவிரமாக உள்ளதாகவும் அவர்கள் மனிதர்களையும் தின்பவர்கள் என்ற தகவல் கிடைத்ததால் மேற்கொண்டு பயணம் செய்யாமல் ஜைத்தூனுக்குத் திரும்பினேன்.

சிறிது நாள் கழித்து Qan அரசரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது, தரை அல்லது நதி வழியில் விருப்பமான ஒன்றில் வருமாறு குறிப்பிட்டிருந்தார். நான் நதி வழியைத் தேர்ந்தெடுத்தேன்.  நல்ல வசதியுள்ள கப்பலும் போதுமான சிப்பந்திகளுடன் அரசு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டேன். மதிய உணவுக்கு ஒரு கிராமம், மாலை உணவுக்கு மற்றொரு கிராம் என்று பத்து நாட்களில் டெமாஸ்கஸில் உள்ளது போல பழத்தோட்டங்கள் நிறைந்த கான்ஜன்ஃபூ என்ற பெரிய நகரை அடைந்தோம். என்னை வரவேற்க நீதிபதியும் இஸ்லாமியத் தலைவரும், கவர்னரும் வந்திருந்தனர். முழு அரசு மரியாதையுடன் என்னை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அரண்மனை நான்கு
சுவர்களையும் நான்கு வாயில்களையும் கொண்டது. ஒவ்வொரு வாயிலுக்கும் இடையே நான்கு மைல் தூரம் இருந்தது. நான் இங்கிருந்தபோது ஒரு மவ்லானா என்னை சந்தித்தார். அவரைப் பார்த்தவுடன் எங்கோ பார்த்த ஞாபகம், அவரையே நோக்கினேன்.  என் நோட்டத்தைக் கண்டு, "நீங்கள் எங்கோ என்னை பார்த்திருக்கிறீர்கள்" என்றார். "ஆம், நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?" என கேட்டேன். நான் கையுமுதீன், சபத்தா (Ceuta) விலிருந்து வந்திருக்கிறேன்" என்றார்.  "நீங்கள் இந்தியாவுக்கு சென்றிருக்கிறீர்களா?" என்றதும் "ஆம், நான் டில்லிக்குச் சென்றுள்ளேன்" என்றார். "அப்படியானால் நீங்கள் அல்-புஷ்ரி?" "ஆம்" என்று அவர் சொன்னதும் என் நினைவு திரும்பியது அவரும் அவருடன் அவர் தாயாரின் சகோதரர் அபு அல்-காசிமும் சுல்தானிடம் வந்திருந்தனர். மூவாயிரம் தினார் ஊதியத்துக்கு அரசுப் பணிக் கிடைத்தும் சீனா செல்வதற்காக மறுத்துவிட்டவர். பின் எங்களுக்குள் நெருக்கம் அதிமானது. இங்கு பதினைந்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன்.


பதினேழு நாள் பயணத்துக்குப் பின் கான்சா(Hang-chow) நகரை அடைந்தபோது  வெள்ளைக் கொடி, வாத்தியங்கள் சகிதமாக கவர்னருடன், இஸ்லாமியத் தலைவரும் வந்திருந்து அரசு மரியாதையுடன் எங்களை வரவேற்றனர். இஸ்லாமியத்தலைவர் கலிஃபா உதுமான் பின் அஃப்பான் வழிமுறையினர். கான்சா, அது மிகப்பெரிய நகரம், உலகிலேயே மிகப் பெரிய நகரம் என்றுகூட சொல்லலாம். அது ஆறு நகரங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய நகரமாகும்.

முதல் நகரில் பன்னிரண்டாயிரம் பேர் அடங்கிய ராணுவம் மற்றும் காவலர்களின் குடியிருப்பு இருந்தது; இரண்டாவதில் யூதர்களும், கிருஸ்தவர்களும், சூரியனை வணங்கும் துருக்கியர்கள் வாழ்ந்தனர்; மூன்றாவதில் முஸ்லிம்கள் வாழ்ந்தனர். இஸ்லாமிய நாட்டில் இருப்பது போன்ற கடைத்தெருக்களும், பள்ளிவாசல்களும் இருந்தன; எகிப்திலிருந்து வந்த உதுமான் பின் அஃப்பான் வழியினர் செல்வ செழிப்புடைய வணிகர்களாக வாழ்ந்தனர்; நான்காவதில் அரசாங்க
அலுவலர், முக்கிய கவர்னர், மன்னரின் அடிமைகள், அரசு ஊழியர்கள் வாழ்ந்தனர். அரண்மனையும் இங்குதான் இருந்தது. இங்கு வேலை பார்க்கும் அடிமைகள் கண்கானிக்கப்படுகின்றனர், தப்பிச்சென்றுவிட முடியாது, தொடர்ந்து பத்தாண்டுகள் வேலை செய்தால் சுதந்திரமாக அந்நாட்டு எல்லைக்குள் எங்கும் செல்லலாம் அல்லது அங்கேயே வேலை செய்யலாம்; ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் வேலை செய்யவேண்டியதில்லை அவர்களுக்கு ஊதியத்துடன்
ஓய்வு கொடுக்கப்படும். வயது முதிந்தவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள்; அவர்களை 'அத்தா' (Father) என்றழைக்கின்றனர் (இப்பொழுதும் தமிழ் முஸ்லிம்களில் சிலர் தந்தையை 'அத்தா' என்றழைப்பதைப் பார்க்கலாம் - ஜாஃபர்). இப்பகுதியை ஆண்ட மன்னரின் பிரதிநிதி எனக்கு விருந்தளித்தார். ஐந்தாவது நகரத்தில் பொதுமக்களும், கடைத்தெருக்களும், பட்டுத்துணி சந்தையும் இருந்தன. ஆறாவது நகரை படகோட்டி வாயில் என்றழைக்கின்றனர். இது நதியின்
கரையோரம் இருக்கிறது, இங்கு படகோட்டிகளும், மீனவர்களும், கப்பல் பணியாளர்களும், பல்வேறு தொழிலாளிகளும், தரைப் படை வீரர்களும் வாழ்கின்றனர்.

கான் பாலிக்(பீகிங்)[9]

அரசு விருந்தினராக இருந்துவிட்டு கான்சாவிலிருந்து கிட்டா(Cathay) வழியாக கான் பாலிக்(பீகிங்) புறப்பட்டோம், அறுபத்தி நான்கு நாட்கள் நதிப் பயணம், வழியில் ஒரு முஸ்லிம் பகுதியைக்கூடக் காணவில்லை வழியில் எதிர்கொள்ளும் பயணிகளைத் தவிர. அதுபோல் சிறிய சிறிய கிராமங்களைத்தவிர பெரிய நகரம் எதுவுமில்லை. சோளக் கதிர்களும், கரும்பும், பழ மரங்களைத் தவிர வேறுவகையானப் பயிர்கள் இல்லை. வழக்கம்போல் இரவு நேரத்தை கிராமங்களில் கழித்துவிட்டு பகலில் பயணம் செய்தோம். அடைய பத்து நாட்களுக்கு முன்பிருந்து எங்கள் கப்பல் கட்டி இழுக்கப்பட்டது. கான் பாலிக்(பீகிங்) மிகப் பெரிய நகரம், இது கானிக்(Kha'niqu) என்றும் அழைக்கப்படுகிறது.

பேரரசர் கான்(Qa'n) தனது அரசை சீனா, கேத்தே முழுவதும் தன்னகத்தே வைத்திருந்தார். நாங்கள் வந்தது அரசவைக்கு அறிவிக்கப்பட்டது. அரசரின் அரண்மனை நகரின் மத்தியில், ஒரு  கோட்டையின் உள்ளே இருப்பதுபோல் இருந்தது.

நான் ஷெய்கு புருஹானுதீன் அவர்களுடன் தங்கியிருந்தேன்.  கான் பாலிக்கை அடைந்த சமயம் பேரரசர் இல்லை, மூன்று மாதப் பயண தூரத்திலுள்ள தனது சகோதரன்/சகோதரி மகன் ஃபரோஸுடன் போரிடப் போயிருந்தார்.  அப்போரில் மன்னர் கொல்லப்பட்டார். ஃபரோஸின் கையில் ஆட்சி வந்தது. தலை நகரை காராகொரும் (Qara'qorum) என்ற பெயருள்ள நகருக்கு மாற்றினார்.

நாடு திரும்புதல்

அங்கு புரட்சி வெடித்தபோது ஷெய்கு புர்ஹானுதீனும் மற்றவர்களும் தெற்கு சீனாவுக்குத் திரும்பும்படி ஆலோசனை வழங்கினார்கள். புதிய அரசர் ஃபரோஸ், அரசு மரியாதையுடன் பாதுகாப்பு அளித்து திருப்பி அனுப்பினார். நான் மீண்டும் நதிவழியாக ஜைத்தூன் வந்தடைந்தேன். அங்கு இந்தியா செல்வதற்காக கப்பல் தயாராக இருந்தது, அது ஜாவா சுல்தான் மாலிக் அல்-ஜாஹிருக்கு சொந்தமானது, எல்லா ஊழியர்களும் முஸ்லிம்கள். நான் அதில் பயணம் செய்தேன், பத்து நாள் வரைக் காற்று சாதகமாக இருந்தது, தவாலிசியை அடையும் சமயத்தில் வானம் இருண்டு கடுமையான மழைத் தொடங்கியது அடுத்த பத்து நாள் வரை சூரியனைப் பார்க்கமுடியவில்லை, சீனாவுக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது, ஆனால் அது விரும்பத்தகாதது. நாற்பத்திரண்டு நாட்கள் நாங்கள் என்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை; நாற்பத்தி மூன்றாம் நாள் இருபது மைல் தூரத்தில் மலை ஒன்று தெரிந்தது; காற்று எங்களை அதை நோக்கி இழுத்துச் சென்றது. நாங்கள் எங்கே இருக்கிறோம் அது எந்த மலை எனத் தெரியாத நிலை, ஊழியர் அனைவரையும் பயம் கவ்விக்கொண்டதால் இறைவனிடம் இறைஞ்சுவதைத் தவிர வேறு ஒன்றும்
தெரியவில்லை. இறைவன் கருணையால் காற்றின் திசை மாறி ஜாவா(சுமத்ரா)வை அடைந்தோம். சுல்தான் ஜாஹிர்,  இரண்டு பெண்களையும் இரு சிறுவர்களையும் எனக்குப் பணிவிடை செய்வதற்காக அனுப்பிவைத்தார். நான் அங்கு இரண்டு மாதங்கள் தங்கினேன். அப்போது சுல்தானுடைய மகனுக்கு நடைபெற்ற திருமணத்திற்கு சாட்சியாக இருந்தேன். பின் நான் அங்கிருந்து புறப்படும்போது சந்தனம், கிராம்பு என வாசனைப் பொருட்கள் நிறையத் தந்து வழியனுப்பி வைத்தார். நாற்பது நாட்களுக்குப் பிறகு கொல்லம் வந்தடைந்தேன். அப்போது அது புனித ரமலான் மாதம்(ஜனவரி 1347), பெருநாள் தினத்தை அங்கே கொண்டாடிவிட்டு கள்ளிக்கோட்டை வந்தடைந்தேன். அங்கு இரண்டுமூன்று நாள் தங்கிருந்தபோது டில்லி செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ஆனால் அங்கு சென்றால் தண்டிக்கப்படுவேனோ என்ற பயத்தில் அதை கைவிட்டு இருபத்தெட்டு நாள் பயணத்தில் தாஃப்ரி(சலல்லாஹ்-மஸ்கத்) வந்தடைந்தேன். அப்போது முஹர்ரம் 748(1347 ஏப்ரல் கடைசி). அதன்பின் மஸ்கத், ஹர்மூஸ், லாரக் வழியாக ஷிராஜ், இஸ்ஃபஹான், பின் பஸராவை அடைந்தேன். அங்கிருந்து நஜஃப் சென்று அலி(ரலி) அவர்கள் அடங்கியுள்ள இடத்தை தரிசித்துவிட்டு பாக்தாத் அடைந்தபோது அங்கே மொராக்கொ நாட்டவர் ஒருவரைக் கண்டேன். தாரிஃபாவில் நிலமை மோசமாக இருப்பதாகவும் அல்ஜிரியாவை கிருஸ்தவர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் சொன்னார்.

பக்தாதை விட்டு தத்மூர்(Palmyra) ல் ஹஜ்ரத் சுலைமான் நபி அவர்களுக்காக ஜின்களால் கட்டப்பட்ட இடத்தைப் பார்த்துவிட்டு டெமாஸ்கஸ் சென்றேன். இருபது ஆண்டுகளுக்குப் பின் அந் நகரை அடைந்தபோது நான் அங்கிருந்து புறப்படும் சமயத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தாள், ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததாக இந்தியாவில் இருக்கும்போது அறியவந்தேன். ஆகவே அதைப் பற்றி விசாரிக்க முனைந்தபோது அதிர்ஷடவசமாக நண்பர் நூருதீன் அல்-ஷகாவி அவர்களை பெரிய பள்ளிவாசலில் சந்தித்தேன், அங்கு அவர்தான் இமாம், அவரால் என்னை தெரிந்துக்கொள்ள முடியவில்லை, எனவே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் மகனைப் பற்றி விசாரித்தபோது 12 வயதில் இறந்துவிட்டதாக சொன்னார். பின் என் ஊரைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் ஜஹ்ரியா கல்விச்சாலையில் இருப்பதாகவும் சொன்னார். அவரை சந்தித்து என் பெற்றோர்களை விசாரித்தபோது என் தந்தை பதினைந்து வருடத்துக்கு முன் இறந்துவிட்டதாகவும் தாயார் ஜீவித்திருப்பதாகவும் சொன்னார். அவ்வாண்டு முழுவதும் டெமாஸ்கஸில் இருந்துவிட்டு பின் அலப்போ சென்றேன்.

கடைசி ஹஜ்

அலப்போவில் இருந்தபோது காஜாவில் கொள்ளை நோய் ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் இறப்பதாகக் கேள்விப்பட்டு மீண்டும் டெமாஸ்கஸ் சென்று பின் அங்கிருந்து ஹெப்ரான், அலக்ஸாந்திரியா வழியாக கெய்ரோ வந்தடைந்தேன்.  பயணத்தின் போது ஹெப்ரானின் நீதியரசர் அலக்ஸாந்திரியாவில் கொள்ளை நோய் உச்சக்கட்டத்தில் இருப்பதாக அறிவித்தார். பின் கெய்ரோ வந்தபின் அய்தாப் அடைந்து அங்கிருந்து ஜுத்தா(ஜித்தா)வுக்கு செல்லும் கப்பலில் மக்காவுக்குப் பயணமானேன். அது 22 ஷஃபான் 749 (16-11-1348).

என்னுடைய கடைசி ஹஜ்ஜை முடித்துக்கொண்டு சிரியா செல்லும் காரவானுடன் (28th Feb - 2nd March 1349)  மதினாவிலிருந்து புறப்பட்டு மீண்டும் ஜெருஸலம் வந்து அங்கிருந்து மீண்டும் காஜா(Gaza) வழியாக கெய்ரோ
வந்தடைந்தேன். சிறிய வணிகக் கப்பல் ஒன்று துனிஸ் செல்வதை அறிந்து டெமிட்டாவிலிருந்துப் புறப்பட்டு வழியில் ஜெர்பாவில் இறங்கிக்கொண்டேன். காரணம் அப்போது துனிஸ் கிருஸ்தவர்களால் கைப்பற்றப் பட்டிருந்தது. பின் ஜெர்பாவிலிருந்து சிறியப் படகு மூலம் காபிஸ் வந்தடைந்தேன். நான் அங்கு அரசு விருந்தினராகத் தங்கினேன். ஜெர்பா, காபிஸ் கவர்னர்களான அபு மர்வான், அபுல் அப்பாஸ் சகோதரர்களுடன் நபிகளாரின் பிறந்த தினத்தைக்
கொண்டாடினேன்.  பின் சில சிரமங்களுடன் துனிஸை அடைந்தேன். அப்போது தூனிஸ் முஸ்லிகள் கைவசம் ஆகியிருந்தது. அங்கு முப்பத்தாறு நாட்கள் தங்கிவிட்டு, அங்கிருந்து கிருஸ்தவர்களின் அழகிய வர்த்தகத் துறைமுகமும், பெரிய கடைத்தெருக்களும் கொண்ட சர்தானியா  [http://en.wikipedia.org/wiki/Sardinia] வை அடைந்தேன். பின்பு அங்கிருந்து பத்து நாள் பயணத்திற்குப் பிறகு டெனிஸ், முஜ்னா, முஸ்தகானிம் நகர்களின் வழியாக தலிம்சான் நகரை அடைந்தேன். தாஜா(Taza) நகரை அடைந்தபோது என் தாயார் கொள்ளை நோயினால் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது.
ஃபெஜ் தாஜா நகரிலிருந்து தலைநகரான ஃபெஜ்(Fez)ஜை அடையும்போது ஷஃபான் 750 (13 நவம்பர் 1349). அங்கு எங்களது தலைவரும், உயர்ந்த சிந்தனையாளரும், நம்பிக்கையின் பொக்கிஷமுமான அல்-ஷெய்கு  அல்-முத்தவக்கில் அபு இனான் அவர்களை சந்தித்தேன்.

அவர்களைப் பற்றி சொல்வதானால் எதிரிகள்மீது இரக்கம் கொண்டவர், ஈராக்கிய சுல்தானைக் காட்டிலும் கௌரவமிக்கவர், இந்தியாவின் சுல்தானைக் காட்டிலும் அழகானவர், ஏமன் மன்னரைவிட
உயர்ந்த எண்ணமுடையவர், துருக்கியர்களைக் காட்டிலும் தைரியம் மிக்கவர், கிரேக்க அரசரைக் காட்டிலும் கருணையாளர், துருக்கிஸ்தான் மன்னரைவிட  தியாகப் பண்புள்ளவர், ஜாவா மன்னரைக்காட்டிலும் அறிவில் சிறந்தவர். இத்தகைய சிறப்புமிக்கவரிடன் என் பயணத்தை சமர்ப்பணம் செய்தேன்.


பிறந்த ஊரில்



ஆன்மீக ஆசிரியர்; வழிகாட்டி; பல்வேறு நிலைகளிலும் உயர்ந்து நிற்பவர்; பல்வேறு இனத்தவராலும் மதிக்கப்படுபவர், போற்றப்படுபவரான ஷெய்கினிடம் வாழ்த்துக்கள் பெற்று என்னுடைய பிறந்த ஊரான தன்கீர் சென்று தன் தாயார் அடங்கியுள்ள இடத்தை தரிசித்தேன். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் துறந்து ஹஜ் செய்யப் புறப்பட்டு இருபத்தி நான்காண்டு காலம் பல்வேறு நாடுகளில் சுற்றித்திரிந்து மீண்டும் நான் பிறந்த, வாழ்ந்து, விளையாடி, பயின்ற ஊருக்கு வந்தபின் பல மாற்றங்களைக் கண்டேன். பெற்றோர்கள் இல்லை, நண்பர்கள் சிலரே இருந்தனர், அறியாத முகங்களும் அறிந்த முகங்களுமான ஒரு கலவை, நான் வேற்று நாட்டவன் போன்ற ஓர் எண்ணம் மனதில் ஊசலாடியது, சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு பெற்றாலும் என் சொந்த ஊர் வேறாகப் பட்டது. நீண்ட நாட்கள் தங்காமல் சப்தா(Ceuta) சென்றேன். அங்கு சில காலம் தங்கியிருக்கும்போது நோய் ஏற்பட்டு மூன்று மாதங்கள் அவதிப்பட்டேன். இறைவன் அருளால் குணமானது எல்லைப் பகுதியில் நடந்த சண்டையில் கலந்துக் கொள்வதற்காக சப்தாவிலிருந்து பயணமானேன்.

பின் நான் எங்கெல்லாம் சென்றேன் என்பதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன். என்னுடன் வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

***
[1] I visited this island of Ceylon. Its people still live in idolatry(Buddhism), yet they show respect fo Muslim darwishes, lodge them in their houses, and give them to eat, and they live in their houses amidst their wives and children. This is contrary to the usage
of the other Indian idolators (Brahmans and Hindus), who never make friends with Muslims, and never give them  to eat or to drink out of their vessels, although at the same time they neither act nor speak offensively to them. We were compelled to have some
flesh cooked for us by some of them, and they would bring it in their pots and sit at a distance from us. They would also serve us with rice, which is their principle food, on banana leavs, and then go away, and what we left over was eaten by dogs and birds. If
any small child, who had not reached the age of reason, ate any of it, they beat him and make him eat cow dung, this being, as they say, the purification for that act. - The Travels of Ibn Battuta pp 96.

[2] The 'mountain of Serendib' is Adem's Peak. Serendib is the old Arabic and Persian name of Ceylon (commonly derived from the Sanskrit Simhaledeipa, Lion-dwelling island), which was gradually replaced by the Pali from Sihalam-Saylan-Ceylon, now Sri
Lanka.

[3] Abdallah ibn Khafif,  who is known there simply as ''The Shaikh'' whose tomb in Shiraz - Iran. He went to the mountain of Sarandib(Adam's Peak) in the island of Ceylon accompanied by about thirty darwishes.... -  The Travels of Ibn Battuta pp 95

மாக்கான் ராசா காலத்தில்தான் இப்னு பதூதா (1345.9.2 – 1345.9.21) இலங்கையில் விஜயம் செய்திருந்தார். அவர் பாவாத மலைக்கு சென்று அங்கிருந்து இன்றும் பல இடங்களுக்கும் சென்றார். அப்பயணத்தில் கரவாகுவிற்கும் இப்னு பதூதா வந்துள்ளார். அங்கு அபு அப்துல்லா கப்ரை தரிசித்துள்ளார். இத்தரிசிப்பை இப்னு பதூதா தனது பிரயாணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.  ( பார்க்க : சோனகத்தேசம்: மிகச்சுருக்கமான அறிமுகம் - ஏபிஎம் இத்ரீஸ்).    இருவரும் ஒருவரா என்பது தெளிவில்லை - ஹமீது ஜாஃபர்.

[4] ஹரக்காட்டு(Harakaatu) என்ற பகுதியை சில வரலாற்றாசிரியர்கள் ஆற்காடு(ஆறு காடு) என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் ஆற்காடு வெகு தூரத்தில் உள்ளது தவிர கடலைச் சார்ந்த பகுதியுமல்ல. எனவே இபுனு பதூதா குறிப்பிடுவதுதென் மாவட்ட கடற்கரைப் பகுதியில் ஓர் ஊராக ஊகிக்கவேண்டும்.

[5] Fattan என்று குறிப்பிடுவது நாகப்பட்டினமாகவும் இருக்கலாம், அல்லது காவேரிப்பட்டினாமாகவும் இருக்கலாம். போதிய விளக்கம்/ஆதாரம் இல்லை. 1300 ம் காலகட்டத்தில் காவிரி கடலில் சங்கமிக்குமிடத்திலிருந்த காவேரிப்பட்டினம் பெரிய வணிகத்துறைமுகமாக இருந்து பின்னர் 1350 காலகட்டத்தில்  அழிக்கப்பட்டதாக மார்கோ போலோ குறிப்பிடுகிறார். அதே நேரம் நாகப்பட்டினமும் முக்கியத்துறைமுகமாக இருந்தது. என்றாலும் காயல்பட்டினமும் துறைமுகப்பட்டினமாக இருந்ததாக மார்க்கோபோலோ குறிப்பிடுகிறார், ஆனால் தொண்டி ஒரு காலத்தில் முக்கியத் துறைமுகமாக விளங்கியதால் இப்னு பதூதா குறிப்பிடும் ஃபட்டன், தொண்டியாகக்கூட இருக்கலாம். தெளிவான விளக்கம் இல்லை.

[6] இப்னு பதூதா மாலதீவிலிருந்து புறப்பட்டு சிலோன், சோழமண்டலம், கேரளம் சென்றுவிட்டு மீண்டும் மாலதீவு திரும்பியது இரண்டாண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் அவரது மகனுக்கு இரண்டு வயது என்பது பொருந்தாததாக இருக்கிறதாக வரலாற்றாசிறியர் சர் ஹென்றி யூல் குறிப்பிடுகிறார்.

[7]ஜாவா என்ற சொல் மலாயிலிருந்து பெறப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து சென்ற வணிகர்களாலும், சூஃபிக்களினாலும் இஸ்லாம் மெல்ல மெல்லப் பரவியது. அதே நூற்றாண்டின் கடைசிப் பத்தில் இஸ்லாமிய ஆட்சி உருவானது (H.A.R.GIBB)

[8]மத்திய காலத்தில் வந்த இஸ்லாமியப் பயணிகளும், கிருஸ்துவப் பயணிகளும் Ta'wan-chow-fu(Chuan-chow-fu) நகரை ஜைதூன் என்று அழைத்துவந்தனர் என்று மார்கோ போலோ குறிப்பில் உள்ளது.

[9]Peking, called by the Mongols Khan-Baliq, "City of the Khan". Western writters called Cambalu

தகவல்கள்:


 

The Travels of Ibn Battuta - H.A.R. GIBB
http://en.wikipedia.org/wiki/Ibn_Battuta
http://rolfgross.dreamhosters.com/Battuta-Web/Rihla-8-9.htm
http://rolfgross.dreamhosters.com/Battuta-Web/Battuta.htm
http://rolfgross.dreamhosters.com/Battuta-Web/Rihla-9-11.htm
http://www.saudiaramcoworld.com/issue/200004/the.longest.hajj.the.journeys.of.ibn.battuta.part.3-from.traveler.to.memoirist.china.mali.and.home.htm
http://www.answers.com/topic/ibn-battuta

***



நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
***
மேலும் பார்க்க : அருட்கொடையாளர்கள்

Saturday, February 25, 2012

ஐயா அதிகம் பேசத் தேவையில்லை... : நான் , புலி , நினைவுகள் 2 - எஸ்.எல்.எம். ஹனிபா


’எலிப்பந்தயத்தில்’ கிலியோடு ஓடிக்கொண்டிருக்கும் ஏமாளியான நான் , புலி பற்றியும் பதிவிடுவது வயிற்றில் புளியைக் கரைக்கிறது! - ஆபிதீன்

***

அன்புள்ள ஆபிதீனுக்கு

இரண்டு வாரங்களாக இருமல், தடுமல் அவ்வப்போது காய்ச்சல் எல்லாம் வந்து விடமாட்டேன் என்கிறது. ஆபிதீன் பக்கங்களை புரட்டி விட்டு மூடிவிடுவதுதான். பேப்பூர் சுல்தானின் ராஜ்யமாக உங்கள் பக்கங்களில் நீண்ட நாட்கள் மேதை பஷீர் ஹாஜியார் ஆக்கிரமித்திருந்தார். காக்காவுக்கு வலு சந்தோஷம்.

தப்லாவைக் கேட்க வேண்டும். ஆறுதலாகத்தான் அதுபற்றி எழுதுவேன். 10 நாட்கள் நாகர்கோவிலில் நின்றும் 'கவர்னர் பெத்தா' மீரா மைதீனைக் காணக் கிடைக்கவில்லை. ரோசம்மா பீவி படித்த நாள் தொடக்கம் மீராமைதீனை விசாரித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் 'ஓதியறியப்படாத  முட்டைகள்' நாவலில் அவருடைய கைபேசி இலக்கம் கிடக்கிறது. இன்று எப்படியாவது ஆளைப் பிடித்து விடுவேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரைப் போன்ற இளைஞர்களை நம்பித்தான் என்னைப் போன்ற மூத்த வாசகர்கள் காலந்தள்ளுகிறோம். அவரின் நாவலைப் பற்றி உங்கள் பக்கத்தில் கூடிய சீக்கிரம் எழுதுவதற்கு அல்லாஹ் தன்னுடைய கஜானாவிலிருந்து நேரத்தை எனக்கு அருள வேண்டும்.

அன்புடன்

ஹனீபா காக்கா / Fri, Feb 24, 2012 at 4:11 PM

***


நான் , புலி , நினைவுகள் 1

**
நான் , புலி , நினைவுகள் 2
எஸ்.எல்.எம். ஹனிபா


ஐயா அதிகம் பேசத் தேவையில்லை.

1989 நவம்பர் மாதத்தில் ஒரு நாள், எனது குடும்பம் ஊரிலிருந்து 60 கி.மீ. தொலைவிலிருந்த பொலன்னறுவை மாவட்டத்தில். அவ்வப்போது ஓட்டமாவடிக்கு வந்து போவேன், கஞ்சா வியாபாரி போல் அல்லது கடத்தல்காரன் போல். நான் வருவதும் போவதும் பரம ரகசியம்.

60 கி.மீ. பயணம், ஏழு சோதனைச் சாவடிகள், ஆங்காங்கே நேரடி மோதல், எறிகணை வீச்சுகள், பஸ்ஸுக்குள் குப்புறப் படுத்தல் என எல்லாம் நிகழும். ஐந்து கி.மீ. பயணிக்க ஒரு மணி நேரமாகும்.

ஊரிலிருந்து 20ஆவது கி.மீ. தொலைவில் மட்டக்களப்பு, பொலன்னறுவை எல்லைக்கிராமம் 'மாக்குப்பை'. அங்கு புலிகளின் முக்கிய முகாமொன்றிருந்தது. வாகனக் கடத்தல், கப்பம் பறித்தல், மாற்றுக் கருத்துக்காரர்களை மண்டையில் போட்டல் என்று நாளாந்தப் பணிகள், பெரும் பேர் பெற்ற முகாம்.

அந்த நாட்களில் புலிகளின் மரண தண்டனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், தமிழர் பார்வையில் அவர் துரோகியாகவும், முஸ்லிம்கள் மனத்தில் அவர் தியாகியாகவும் மதிக்கப்படுவார்.

அவ்வாறுதான் அன்றும் எமது ஊர் எம்.பி.சி.எஸ்ஸுக்குச் சொந்தமான லொறியில் பொலன்னறுவை நோக்கிப் பயணித்த போது, இரண்டு துப்பாக்கிதாரிகளால் நான் பயணம் செய்த வாகனம் இடைமறிக்கப்பட்டு நான் இறக்கியெடுக்கப்பட்டேன்.

"ஐயா, உங்களை விசாரணைக்காக அழைத்து வரச் சொன்னார்கள்" நான் எதுவும் பேசவில்லை.

வீதியை விட்டும் 100.மீ. தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் என்னை அழைத்துப் போய் அமர்த்தினார்கள். அங்கு ஏற்கனவே என்னைப் போல் இறக்கியெடுக்கப்பட்ட பலர் இருந்தார்கள். பெரும்பாலும் முஸ்லிம் வர்த்தகர்கள், சில அரச அதிகாரிகள். இவ்வாறு பொறுக்கியெடுத்தவர்களை இன்னுமொரு இடத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கே எமது பகுதியின் இராணுவப் பொறுப்பாளர் ரவி (20) விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். விசாரணை முடிந்ததும் ஒவ்வொருவராக வெளியேறினர். வர்த்தகர்களின் முகங்கள் வரியால் வாடி வதங்கிப் போய்க் கிடந்தன.

எனது முறை வந்தது."ஐயா அதிகம் பேசத் தேவையில்லை. இந்தியாட மாகாண சபையில் உங்களைப் போன்றவர்கள் இருக்கக் கூடாது, நாங்கள் அமைக்கும் தமிழீழத்தில்தான் நீங்கள் உறுப்பினராக வேண்டும். அதுதான் எங்கள் ஆசை. உடன் உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள். எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாங்கள் அண்ணர் அமிர்தலிங்கத்தையே விட்டுவைக்கவில்லை"

கெப்டன் ரவி என்னை மேலும் கீழும் நோட்டமிட்டார்.

'அட அமிர்தலிங்கத்தை இவர்களா...' என்று மனம் ஓலமிட்டது.

நான், "சரி தம்பி, அப்படியே செய்கிறேன்"

1989 டிசம்பரில் நிகழ்ந்த மாகாண சபைக் கூட்டத்திற்குப் பிறகு, நான் ஒரு நாளும் மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. 1990 மார்ச் மாதத்தில் அந்த மாகாண சபையையே கப்பலில் ஏற்றி பத்திரமாக பாரத தேசம் கொண்டு சேர்த்தனர் இந்திய அமைதிப்படையினர்.

அன்றிரவு எனது கனவில், எங்கள் ஜனாதிபதி மாண்புமிகு ஆர்.பிரேமதாஸ அவர்களும் தமிழீழப் பிதாமகர் வே.பிரபாகரன் அவர்களும் ஆலிங்கணம் செய்வதைப் பார்த்து எனது மதிப்புக்குரிய நண்பரும் வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான எம்.வரதராஜ பெருமாள் அவர்கள் புன்னகைத்தார்கள்

***
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )

Monday, February 20, 2012

கவர்னர் பெத்தா - மீரான் மைதீன்

’காணாமல் போன ஒட்டகத்தில்' வந்த கவர்னர் பெத்தாவைப் பார்ப்பதற்கு முன்...

முக்கியமானது பேரறிவு....

டிசம்பர் 2002-ல் வெளியான, பேரா. மு. அப்துல் சமது எம்.ஏ.,எம்.பில்., அவர்கள்  தொகுத்த ’காணாமல் போன ஒட்டகம்’ நூல் பற்றி ’புதியகாற்று’ ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா சொன்னது:

'இந்தியச் சூழலில் எண்பதுகளுக்குப் பின் முஸ்லிம்கள் மீதான நெருக்கடி முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கிறது. இதன் தொடர் - எதிர் விளைவுகளாய் தங்களின் இருப்பையும் சுய அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வேகம் பெற்றிருக்கின்றன. முஸ்லிம்கள், அவர்களின் நேற்றைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதும், இன்றையைக் குறித்த சுயவிமர்சனத்தை முன்வைப்பதும், நாளைய வெளிச்சத்திற்கென்று சில வாசல்களையும் ஜன்னல்களையும் திறந்து வைப்பதும் கால அவசரங்களாக முன் நிற்கின்றன. இது குறித்து யோசிக்கின்ற சிந்தனை மனங்களும் இதற்கான் நேரத்தை, உழைப்பை செலுத்துகின்ற சமூக மனங்களும், அமைப்புகளும் இதுபோன்ற முயற்சிகளுக்கு பின்புலமாய் இருக்கின்ற புரவலர் மனங்களும் ஒரு பொது அரங்கில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது இந்த நூலின் வழி கைகூடி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதிலும் கல்வி தளத்தில் இது சாத்தியப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்தது. தமிழகத்தில் சிறிதும் பெரிதுமான கல்வி முயற்சிகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் முஸ்லிம்கள் மத்தியில் வேகம் பெற்றிருக்கின்றன. வருகின்ற காலங்களில் அதன் இலக்குகள் எவை என்பதை துல்லியமாகத் தொட்டுக் காட்டுகிறது இந்நூல். பீரப்பா சொல்வதுபோல், ‘முக்கியமானது பேரறிவு’. அதனை எங்கிருந்தெல்லாம் கொண்டு வந்து கொடுக்கலாம் என்று கோடிட்டுக் காட்டுகிறது இந்நூல்.'

(நூல் வெளியீடு :  I.C.O. அறக்கட்டளை, 431, நேதாஜி ரோடு, ஈரோடு - 638 001)

***

’மஜ்னூன்’ என்ற மகத்தான சிறுகதை எழுதிய நண்பர் மீரான் மைதீனின் 'யானை' கதையில் ஒரு தமாஷ். 'தோப்பில் மீரானைத் தூக்கி சாப்பிட்டு விடுவார் இவர் ' என்ற குறிப்புடன் நம் சாபத்தா அகத்தியர் குழுமத்தில் போட்டது ;

திடீரென காதர் சொன்னான்
யானை விட்டயில ஒரு விசேஷம் இருக்கு தெரியுமா ?
எல்லோரும் காதரைப் பார்த்தார்கள்
படிப்பு வராத பயலுவளெல்லாம் யானை விட்டய சமுட்டுனா படிப்பு வரும் !
***

சிரித்தீர்களா?

எதையும் இங்கே மீள்பதிவு செய்யக்கூடாது என்று நினைத்தாலும் கவர்னர் பெத்தாவை தட்டச்சு செய்து அனுப்பியவன் என்ற முறையில் (தட்டச்சு மட்டும். கதை அவருடையதுதான்; அவருடையதுதான்) உரிமை எடுத்துக்கொள்கிறேன்.  நன்றி . - ஆபிதீன்


***

கவர்னர் பெத்தா



'அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமா பீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் வந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்'.

சுபுஹ் தொழுகைக்குப் பிறகு விடிந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் தர்ஹா ரேடியோவிலிருந்து காலைக் காற்றில் கலந்து வந்த அறிவிப்பை எல்லோரும் கேட்டார்கள். தொழுகைப் பாயிலிருந்த பீர்மா பெத்தாவுக்கு இருப்பு வரவில்லை. உடனடியாக தர்ஹாவுக்குப் போகவேண்டும் என்ற தவிப்பும் துடிப்பும் அவளின் மனம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெரையில் கிடந்த களக்கம்பு ஏணியைத் தூக்கி சாய்த்து வைத்து மெல்ல தட்டுக்கு ஏறிவந்து கிழக்குப்பக்கம் சாயம்போன கலர் சேலையைப் போல ஒரு தினுசாய் செவந்து கிடந்த ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயத்தைத் தொடுவது போலவே நின்ற தர்ஹா மினாரா அவளின் கண்களுக்குள் வந்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த மினாரா உச்சியில் கொடி பறந்து கொண்டிருந்தது. தெருவைப் பார்த்தாள். யாருமில்லை. பீர்மா பெத்தாவுக்கு கோபம் கோபமாக வந்தது.

"சே.. என்ன ஜென்மங்கோ.. கவர்னர் வாராவோ.. நேரத்த முழிப்போம்னு பாக்குதுவளா.. லெட்சணம் கெட்டதுவோ... சே.. சே.."

தெருவில் இறங்கி நடந்து விடலாமா? நினைப்பு வந்த உடனே மகனோ அல்லது பேரனோ "எங்களா போற துக்கே.. வயசு காலத்துல ஒரு எடத்துல கெடவராதாளா..?" என்று திட்டுவார்கள். பீர்மா பெத்தாவுக்கு மகனோ பேரனோ பேசுவது கூட கவலை தராது. ஆனால் மருமகள் தமாஷ் அடிப்பாள் என்பதில்தான்

தயங்கினாள்.

பத்து நாட்களுக்கு முன்னாலே கவர்னர் தர்ஹாவுக்கு வரப்போகிறார் என்ற செய்தி ஊருக்குள் குசுகுசுக்கப்பட்டாலும் பீர்மா பெத்தாவின் காதுக்கு அது எட்டவில்லை. அமலா கான்வென்ட் ஸ்கூல்டேக்கு பேரனின் இங்கிளீஸ் டிராமா பார்க்கப்போன மறியம் பெத்தா வந்த உடன் பீர்மா பெத்தாவிடம் ஒருபாடு பீத்திவிட்டுச் சொன்னாள்.

"பிள்ளா.. பீர்மா...தர்ஹா ரோட்ல ரோடு போடுதானுவோ பாத்துக்கோ.. உனக்கு என்னமும் தெரியுமா?"

"என்ன நீக்கம்போ எனக்கெங்க தெரியும்"

"உச்செக்கு ஒருபாடு போலீஸ்காரன்மாருவளும் தர்ஹா கிட்ட வந்தானுவளாம்.."

"அந்த களுசாம்பறையோ இங்கே எதுக்கு வந்தானுவோ?"

மறியம்பெத்தா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் பீர்மா பெத்தா எதிர்கேள்வியாகவே கேட்டாள். பீர்மா பெத்தாவிடம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என வந்த மறியம் பெத்தாவுக்கு ஏமாற்றமாகிப்போனது. மறியம் பெத்தாவின் முகத்தைப் உற்றுப்பார்த்த பீர்மா பெத்தாவுக்கு அவள் ஏமாந்து போனதை அறிய முடிந்தது. அந்த முகத்தோடு அவளை அனுப்ப பீர்மா விரும்பவில்லை.

"பீர்மாட்ட கேக்கலாம்னு போனேன். அந்து துக்கேக்கு ஒண்ணும் தெரியலே..." என்று வேறுயாரிடமாவது போய் சொல்லுவாள். அது தனது கௌரவத்துக்கு இழுக்காகிவிடும் என்பதை பீர்மா உணர்ந்தவளாய் தாண்டிப்போன மறியத்தைப் பார்த்து "பிள்ளா..மறியம்..நில்லுனா.. எம்பேரன்ட கேப்போம்". பேரனை அழைத்து பீர்மா கேட்டாள்.

"லே வாப்பா.. தர்ஹாகிட்டே ரோடு போடுதானுவளாமே.. போலீஸ்காரன்மாருவளும் வந்தானுவளாமே.. உள்ளதா..?"

"உள்ளதுதான்.."

"என்னத்துக்குலே.."

"அது... நம்ம தர்ஹாவுக்கு கவர்னர் பாத்திமா பீவி வாராங்களாம்.."

"பாத்துமாயியா... இஸ்லாமானவளா..?"

"பின்னே.." பேரன் தலையாட்டினான்.

பீர்மாவுக்கும் மறியத்துக்கும் முகங்களில் தவழ்ந்த புன்னகை காற்றில் கலந்து, அவர்களின் வயதை ஒத்த அனைவியரின் முகங்களிலும் அடுத்த அரைமணிநேரத்தில் தவழத் தொடங்கியது.

"இதுக்கு முன்னால அவா பெரிய ஜட்ஜியா இருந்தாளாம்... கேரளத்துகாரியாம்..முட்டாக்கும் போட்டுட்டு எப்படி இருக்கா தெரியுமா... பேப்பர்ல போட்டுருக்கானுவோ.."

செய்தூன் பெத்தா வீட்டுத் திண்ணையில் நூறுபீவியும் சேனம்மாவும் விசயங்களோடு அமர்ந்திருந்தனர். சுப்ரமணி அண்ணாச்சியின் அம்மா வடுவாச்சியும் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தூன் பெத்தா பேப்பரை கொண்டுவந்து பீர்மாவிடம் கொடுத்தாள். கவர்னர் பற்றிய செய்தியும் போட்டோவும் இருந்தது. எல்லோரும் படத்தை உற்றுப்பார்த்தார்கள். பீர்மாவுக்கு படிக்கத் தெரியாது. மறியத்துக்கும் அப்படித்தான். செய்தூனும் சேனம்மாவும் எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள். எல்லோரும் முண்டியடித்து அந்த பேப்பர் துண்டை எச்சி ஒழுக உத்துப் பார்த்தனர்.

கவர்னரின் புன்னகையான முகமும் அதிலே கச்சிதமாக இருந்த கண்ணாடியும் கருப்பு வெள்ளை படத்தில் மங்கலாகத் தெரிந்தாலும்கூட பட்டுச்சேலையின் பளபளப்பும், பட்டுச்சேலையின் ஒருபாகம் கவர்னரின் தலையில் முட்டாக்காய் கவிழ்ந்து கம்பீரமாய் கிடக்கும் விதமும் பீர்மாவை சிலிர்க்க வைத்தது. உற்றுப் பார்த்தாள். அவளின் பார்வையில் நிறைய தேடல்கள் இருந்தன. ஸலாம் சொல்லிவிட்டு கவர்னர் பாத்திமா பீவியின் கரங்களைப் பற்றி, "என்னா சொகமா... இருக்கியளா...?" என்று உடனே ஒரு வார்த்தை கேட்கவேண்டும்போல இருந்தது.

ஊரின் அநேக வீடுகளிலும் கவர்னர் புராணம் தொடங்கிவிட்டது. தெருவிலும் கடைப்பக்கத்திலும் குளத்திலும் எல்லா இடங்களிலும் கவர்னர் பற்றி எப்படியாவது ஒரு பேச்சு வந்து விடும், ஒருவரை ஒருவர் எதிர் எதிரே பார்க்கும் போதெல்லாம்.

"இன்னும் எட்டுநாள் பாக்கி.."

"எதுக்கு..?"

"கவர்னர் வரதுக்கு.."

"படச்சவனே, மறந்தேப் போச்சி.."

கசாப்புக்கடை மாஹின் வீடுவீடாகப் போனார்.

"கவர்னர் வர அன்னைக்கு மூணு கிடாய் அறுக்கப் போறேன்..கறி வேணும்னா சொல்லுங்கோ.."

"எனக்கு ரெண்டு கிலோ", "எனக்கு ஒண்ணு" என வீட்டுக்கு வீடு ஆடர் கூடிக்கொண்டே வந்தது. கசாப்பு மாஹின் திங்கள் சந்தைக்குப் போய் மேலும் மூன்று கிடாய் பிடித்துவந்து தெருவில் அவர் வீட்டு முன்னால் தென்னை மரத்தில் கட்டிப் போட்டிருந்தார்.

சின்னப்பையன்மாரெல்லாம் கிடாயைச் சுற்றி சுற்றி வந்தனர். ஆடுபோல கத்தினார்கள். ஒரு பையன் தென்னஈக்கலை எடுத்து ஐந்தாறு சாத்து சாத்தினான். கிடாய் முன்னங்காலை தூக்கி முட்டுவதற்கு தயாரானது.

"முட்டதுக்கா பாக்கா..ஒன்னைய சங்கரபுங்கரயாக்கி போடுவேன்.." என தூரமாய் ஓடிப்போய் ஒரு கல்லெடுத்து சரியாக எறிந்து விட்டான்.

"ம்மேய்..ம்மேய்.." சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து கசாப்பு மாஹின் பாய்ச்து வந்தார். அவரைக் கண்டதும் பயலுவ நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். எதிரே வந்த மஸ்தான் பிள்ளை,

"என்னடே சின்னபுள்ளய வெரட்டுதே.."

"பின்னே அவனுவோ கவர்னர் கிடாய கல்லெடுத்து எறியானுவோ.."

இதன் பிறகு கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் நின்ற ஆறு கிடாய்களையும் கவர்னர் கிடாய் என்றே ஊரில் எல்லோரும் கூப்பிட்டனர்.

கவர்னர் தர்ஹாவுக்கு வர இன்னும் ஐந்து நாட்களே மிச்சம் உள்ளது. இதற்கிடையில் தெருவில் நின்ற ஐந்தாறு பாடாவதி எலக்ட்ரிக் போஸ்டில் லைட்டு போட்டார்கள். புதிதாகப் போட்ட தெருவிளக்கு வெளிச்சம் ஏலாக்கரை வரை பரவிக்கிடந்தது. அவுசான்பிள்ளை தெருவிளக்கை நிமிர்ந்து பார்த்தபடி,

"நல்ல இருக்கட்டு கவர்னரு.. அவ புண்ணியத்துல லைட்டாவது போட்டானுவளே.."

பையன்மாரெல்லாம் வெளிச்சத்தில் பாட்டொ, இடியாண்டோ விளையாடினார்கள். பொட்டப்புள்ளைகளுவ சைக்கிள் , பாண்டி விளையாடினார்கள். கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் விழுந்த வெளிச்சத்தில் கவர்னர் கிடாயின் கண்கள் மின்னூட்டாம் பூச்சியைப் போல் மின்னின.

திண்ணையில் அமர்ந்து வெத்திலை தட்டிக் கொண்டிருந்த பீர்மாவுக்கு ஒரு பட்டு கசவு கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம் போல இருந்தது.

வீட்டுக்குள் போய் பார்த்தாள். ஈஸிச் சேரில் மகன் சாய்ந்து கிடந்தான். கண்கள் மருமகள் இருக்கிறாளா என்று தேடியது. மருமகள் அடுக்களையில் வேலையாக இருந்தாள். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மகனிடம் மெல்ல கேட்டாள்.

"மௌனே.."

நிமிர்ந்து பார்த்தான்.

"எனக்கொரு பட்டுகசவு வச்ச கவுணியும் சட்டையும் தச்சி தாலே.."

"இப்போ எதுக்கு.."

"எனக்கு வேணும்.."

"பெருநாளுக்குத்தானே எடுத்தோம்.. அதுக்கெடையிலே இப்போ எதுக்கு.."

பீர்மாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. மௌனமாக நின்றாள். மகன் அவளின் மூஞ்சியைப் பார்த்தபடி இருந்தான்.

"கவர்னரு.. தர்ஹாவுக்கு வாரால்லா..அதான்.." தயங்கித் தயங்கித் சொல்லி முடிக்கும்போது மருமகள் வந்து விட்டாள்.

"ஆமா கவர்னரு வந்து நேர உங்க கையைப்பிடிச்சித்தான் குலுக்கப் போறாளாக்கும்.."

எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவுக்கு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பீர்மாவுக்கு அழுகை வந்து விட்டது.

இரவு முழுவதும் பீர்மா சரியாகத் தூங்கவில்லை. பேப்பரில் பார்த்த கவர்னரின் கருப்புவெள்ளை புகைப்படம் பலமுறை மனதில் வந்து போனது. மருமகள் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப மனதுக்குள் விழுந்து தெறித்தது.

காலையில் தர்ஹா பக்கத்தில் ரோட்டில் அஞ்சாறு ஆர்ச்சுகள் போடப்பட்டிருந்தன. தெருவின் முன்னாலும், ஆர்ச் போடும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. வயதானவர்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். தர்ஹா பக்கத்தில் ஒன்றிரண்டு வீடுகளில் புதிதாக வெள்ளை அடித்தனர். ஜீப்பில் சில அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் பிறகு பள்ளியில் நேச்சையாகக் கொடுத்த பழங்களைத் தின்றுவிட்டு பழத்தொலியை கசாப்பு மாஹினிடம் கொடுத்தார்கள். மாஹின் மொத்தமாக வாங்கி பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு வந்து

வீட்டுக்கு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களுக்கு போட்டான்.

நாளை காலைதான் கவர்னர் வரப்போகிறார். சாயங்காலமே தர்ஹா ரேடியோ பாடியது. தர்ஹாவில் சீரியல் லைட்டுகள் மின்னி எரிந்தன.

பீர்மா வாசலில் நின்று தெருவைப் பார்த்தாள். தெருவில் கடந்து போன ஆறேழு பேரிடமாவது கேட்டிருப்பாள்.

"காலையில் எத்தனை மணிக்கு வாராவோ?"

"ஒன்பது மணிக்கு"

எட்டுமணிக்காவது தர்ஹாவுக்கு போய்விட வேண்டும். முதல் ஆளாக நிற்க வேண்டும். நினைக்க நினைக்க அவளின் நெஞ்சம் படபடத்தது.

பீர்மா பாய்போட்டு தூங்கப்போகும்போது பத்து மணி இருக்கும். அந்த இரவு அவளுக்கு ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது. எல்லாம் ஒரு நிமிடத்தில் மாயாஜாலம் போல விடிந்துவிட வேண்டும் என்று விரும்பினாள். தஸ்பீகு மாலையை எடுத்து உருட்டினாள். தூங்கினால் கொள்ளாம் போல இருந்தது. ஆனாலும் எளவு தூக்கம் வரவில்லை.

அஞ்சாறு முறை கோழி கூவி சத்தம் கேட்டது. கிடாய்களின் சத்தம் கேட்டது. கவர்னர் கிடாய்களாகத்தான் இருக்க வேண்டும். சுபுஹ் பாங்கு சத்தம் கேட்டது. பட்டென்று பாயை விட்டு எழுந்தாள்.

தொழுதுவிட்டு வாசல்கதவைத் திறந்து திண்ணைக்கு வந்து தெருவைப் பார்த்தாள். மங்கலான வெளிச்சம். பள்ளி ரேடியோவில் கவர்னர் வருகை குறித்த அறிவிப்பு. தெருவைத் திரும்பிப் பார்த்தாள். கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களைக் காணவில்லை.

நன்றாக விடிந்தபோது பெருநாளைக்கு எடுத்த பட்டுகசவு கவுனியும், குப்பாயமும் போட்டுக்கொண்டு மறியம்பெத்தா வீட்டுத் திண்ணைக்கு வந்தாள். திண்ணையில் கால்நீட்டி உட்கார்ந்திருந்த மறியம், பீர்மா அவர்வதற்கு சவுரியம் செய்து கொடுத்தாள்.

"சவுக்கு கம்ப போட்டுக் கெட்டி வச்சிருக்கானுவளாம்.. ஒருத்தரும் கிட்டே போவ முடியாதாம்.. சுத்தி ஆபீஸர் மாருவளாத்தான் இருப்பானுவளாம். போலிஸ்மாருவெல்லாம் தோக்கையும் தூக்கிட்டு விடியதுக்கு முன்னால வந்துட்டானுவளாம்... அந்த துக்கயள பாக்கதுக்கே பேடி உண்டாவுது."

மறியம் சொல்லும்போதே பீர்மா நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

"ஆருளா சொன்னா..?"

"தொழுதுட்டு போவத்துல... முக்கூட்டு பயலும் கரிசட்டிக்கு பேரனும் பேசிட்டு போனானுவோ... நான் அந்தாக்குல கூப்பிட்டுக் கேட்டேன்..அவ வரதுக்கு ஒன்பதாவுமாம்..பப்பனாபுரம் கோட்டைக்கும் சுசீந்தரம் கோயிலுக்கும் போயிட்டுத்தான் இங்க வாராளாம்"

"கோயிலுக்கு போவாளா.." பீர்மாவுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

"அவ கவர்னருல்லா.."

பீர்மா மறியத்தின் வெத்திலை பெட்டியை இழுத்து முன்னே வைத்து கொண்டு பேச ஆரம்பித்தபோது அஸ்மா வந்து விட்டாள். தொடர்ந்து கொஞ்ச நேரத்திலெல்லாம் பாக்குப் பெத்தா வந்து விட்டாள். வந்து உடனே புதிய செய்தி சொல்ல வாய் திறந்தாள். அவள் எப்பவும் அப்படித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்று தெரிந்து விட்டால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும். இரவு என்றால் தூங்க மாட்டாள். பகல் என்றால் சாப்பிட மாட்டாள். செய்திகளை ஐந்தாறு செவிகளிலாவது சொன்னால்தான் அவளுக்கு சுகம். பாக்கு பெத்தா நடந்து எதாவது வீட்டுக்குள் போனாலே வினை போவதாகத்தான் பலரும் சொல்வார்கள்.

"பிள்ளா ஒரு விஷயம் தெரியுமளா..?" பாக்கு பெத்தா சொன்னவுடன் எல்லோர் முகங்களும் ஆவலாயின.

"அவோ இங்கிளிஸ்லதான் பேசுவாளாம்.. தமிழ் தெரியாதாம்.."

"பேப்பர்ல தமிழ்லதானே போட்டிருந்தானுவோ.." அஸ்மா மடக்கினாள்.

"என்ன எளவோம்மா இங்கிலிஸ்லதான் பேசுவாளாம். எனக்க மருமவன் சொன்னாரு"

பாக்குபெத்தா கொண்டுவந்த விசயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது பாக்கு பெத்தாவுக்கு சே என்பது போல ஆயிப்போனது.

எட்டரை மணிக்கு தெருவிறங்கி நடந்தார்கள். பீர்மாதான் முன்னே நடந்தாள். தெரு திருப்பில் பையன்கள் நின்று பரிகாசித்தனர். மெயின் ரோட்டிலிருந்து தர்ஹா வரையிலும் இரண்டு பக்கமும் வரிசையாக போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர்.

மறியம் பயந்து போனாள்.

"இந்த பாளறுவானுவளே.. பாத்தாலே கொடலு கலங்குதள்ளா.."

"பேசாம வாளா.."

சேனம்மா தைரியம் சொல்லி நடத்தினாள்.

தர்ஹாவைச் சுற்றிலும் முன்பக்கமும் பாதைபோன்று அமைத்து மற்ற இடங்களிலெல்லாம் சவுக்கு கம்பால் அடைத்துக் கட்டி விட்டிருந்தனர். பீர்மா முன்னால் வேகமாக நடந்து வாசல் பக்கமாய் போய் வாக்கான அந்த இடத்தில் வசமாக நின்று கொண்டாள். நேரம் ஆக ஆக பீர்மா பெத்தாவின் பின்னாலும் பக்கவாட்டிலுமாக நிறைய பெண்கள் வந்து குவிந்து விட்டார்கள். ஆண்கள் எதிர்ப்பக்கம் நின்றார்கள்.

காலை வெயில் பீர்மாவின் மூஞ்சியில் பளிச்சென்று விழுந்தது. ஆனாலும் அவள் விலகிக் கொள்ளாமல் முட்டாக்கை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள். முட்டாக்கு துணியின் விளிம்பிலிருந்து பட்டுக்கசவில் வெயில் பட்டு மின்னியது.

ஒரே பரபரப்பாக இருந்தது. உய்ங்...உய்ங்...என் கார்கள் வருவதும் போவதும், அதிகாரிகளும், பெரிய போலீஸ்மார்களும் சரட்டுபுரட்டு என்று அங்குமிங்கும் நடந்தார்கள். ஆங்காங்கே சிறு சிலசலப்பு எழும்போதெல்லாம் பீர்மா முகத்தில் அதிகப்படியாக ஆவல் ஒட்டிக்கொள்ளும்.

பாக்கு பெத்தாவுக்கும், மறியம் பெத்தாவுக்கும் வெறுப்பாகிப் போனது. கூட்டத்தில் கிடந்து மொனங்கினார்கள். சேனம்மாவின் காலை யாரோ சமுட்டி விட்டார்கள் என சேனம்மா திட்டி திமிறினாள்.

"நாசமா போனதுவளுக்கு என் கால கண்டவுடனே தானா பேதி எடுக்கணும்.."

சேனம்மாவின் வார்த்தை கேட்டு சில பொம்பளைகள் சத்தமாய் சிரித்தனர். சிரித்துக்கொண்டே சேனம்மாவை நெருக்கித் தள்ளினார்கள். சேனம்மா மேலும் திட்டினாள். சிரிப்பு மேலும் கூடியது. கூட்டம் கூடிவந்து பீர்மா மேலும் ஒன்றிரண்டு பொம்பளைகள் சாய்ந்து தள்ளினார்கள். நல்லவேளை முன்னால் சவுக்கு கம்பு இருந்ததால் பீர்மா விழுந்து விடாமல் நின்று கொண்டாள். ஆனாலும் திரும்பி அஞ்சாறு அறுப்பும் கிழியும் வைத்துக்கொடுத்தாள்.

ஒன்பது மணிக்கு மேலே கார்கள் அணிவகுத்து வர கவர்னர் வந்து இறங்கினார். அதிகாரிகள் சுற்றிக்கொள்ள , ஒருவர் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டார். கவர்னர் பாத்திமா பீவி முட்டாக்கும் போட்டுக்கொண்டு கம்பீரமாய் நடந்து நாலா பக்கமும் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து புன்னகையுடன் திரும்பினார்கள்.

ஜமா-அத் தலைவர் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். கவர்னர் புன்னகையுடன் நடந்துவர வாசல் அருகே வரும்போது பெண்களின் பக்கம் கவர்னர் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டுத் திரும்பும்போது பீர்மா பளிச்சென்று கவர்னரைப் பார்த்து கையை நீட்டினாள். கவர்னரும் பீர்மாவின் கரத்தைப் பற்றி குலுக்கினார். சடசடவென நிறைய கரம் நீண்டது. கவர்னர் பீர்மாவின் கரத்தை விட்டபடி புன்னகையுடன் உள்ளே போய்விட்டார்.

கூட்டத்தில் சத்தம் வந்தது.

'பிள்ளா கவர்னர் பெத்தா.."

பூரித்துப் போனாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் கவர்னர் போய்விட்டார். பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. பீர்மாவை பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள். சிலர் பீர்மாவை வயிற்றெரிச்சலோடு பார்த்தனர். பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர் பெத்தாவாகிப்போனது.

தர்ஹாவிலிருந்து திரும்பி நடந்து வரும்போது பீர்மா மறியத்திடம் சொன்னாள்:

"நாசமா போனதுவோ...நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ...நம்மளமாதிரித்தானே இருக்கா..எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா... பள்ளிகோடத்துக்கு போட்டாளான்னு கேட்டதுக்கு.. பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்டா ஆவப்போறா..ன்னா.."

வேதனையும் எரிச்சலும் ஒருசேர எழுந்தபோது அவளின் உம்மாவின் முகமும் வாப்பாவின் முகமும் நினைவில் வந்தது.

***

நன்றி : மீரான் மைதீன் , I. C. O. அறக்கட்டளை , பேரா. மு. அப்துல் சமது , திண்ணை

***
மேலும்...


எஸ்.அர்ஷியா

வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு - எஸ் ஷங்கர நாராயணன்