Sunday, November 6, 2016

ஈரத்தை இழந்த மரங்கள் - அபு ஹாஷிமா

கண்ணீர் வரவழைத்த பதிவு...

ஈரத்தை இழந்த மரங்கள் - அபு ஹாஷிமா

முடியாத வேதனைகளின் விடியாத இரவுகளோடு விழித்துக் கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை!
கனவுகளே வராத அவர்களின் கண்களில் மரணித்துப்போன நினைவுகள் மட்டுமே குடியிருக்கும்!
விறகாகிப்போன வாழ்க்கையோடு
போராடிப் போராடி எரிந்துபோன களைப்பில் சாம்பலாய் மிச்சமிருக்கும் எஞ்சிய நாட்கள்!
வீடிருக்கும்.....
வெளிச்சமில்லாமல் அவை இருண்டிருக்கும்! ஊரெங்கும் குதூகலிக்கும் பண்டிகையின் கோலாகலம் சிதிலமடைந்த இவர்கள் வீட்டுச் சுவர்களிலும் சித்திரம் தீட்டும் !
பார்த்து ரசிக்கத்தான் பார்வை இருக்காது! சிறுசுகளின் சந்தோசக் கூச்சல்கள் நுழைந்து செல்ல செவி வாசல் திறக்காது!
பக்கத்து மாதரசிகளின் பளபளக்கும் பட்டாடைகளில் இவர்களின் பார்வைப் பாயாது.வெறுமையோடு சிநேகமாகிப்போன கூடுகளாய் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பரிதாப ஜீவன்கள்..

யார் இவர்கள்?

எப்போதோ வாழ்ந்து இப்போது வீழ்ந்து போனவர்கள்.
எல்லா ஊர்களிலும் சிலர் இருக்கிறார்கள். வறுமையை மானமாகக் கட்டிக்கொண்டு பொறுமையால் மெலிந்து போனவர்கள். "இல்லை" என்று இவர்கள் யாரிடமும் கைநீட்டி எதையும் கேட்பதேயில்லை.
பழகிய முகங்களைக் கண்டால் மெல்லிசாய் ஒரு புன்னகை இதழோரம் எட்டிப் பார்க்கும். அப்போதும் எதுவும் "தா" என்று கேட்காத தன்மானம் இவர்களின் நாவைத் தடுக்கும். கண்களில் எப்போதும் மறையாத கனிவு கண்ணீரைப்போல் கசியும்.
இவர்களைப் புரிந்து கொண்டவர்கள் வழங்கும் உதவிகளையும் லஜ்ஜையுடனேயே பெற்றுக் கொள்வார்கள்.
இவர்களின் சொந்தம் பந்தம் என்று ஆங்காங்கே கொஞ்சம்பேர் இருப்பார்கள்....
ஆனாலும்
இவர்கள் இறக்கும்வரை எந்த உதவிக்கும் அவர்கள் வரமாட்டார்கள்.
ஜக்காத்துகள்..
பித்ரா தர்மங்கள்...
குர்பானி மாமிசங்கள் ...
எதுவும் இவர்கள் வீடுதேடி வராது.
அவற்றை தேடிச் சென்று வாங்கவும் இவர்களுக்குவலுவிருக்காது.
அக்கம் பக்கத்து மனிதர்கள் அவ்வப்போது உதவுவார்கள்.
உணவளிப்பார்கள்.
அதுவும் இல்லாத நேரத்தில்
பசியால் சுருண்டு படுப்பார்கள்.
அப்படி சுருண்டு சுருண்டு படுத்தே
சுருங்கிப் போவார்கள்.

எப்போதும் என் நினைவில் நிழலாடும்
இந்த சீதேவிகளை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு விம்முகிறது.
கண்ணீர் வருகிறது.

*


நன்றி : அபு ஹாஷிமா
https://www.facebook.com/abuhaashima