Saturday, July 27, 2019

நிசர்கதத்தா மஹராஜ்

'வாழ்வின் அர்த்தம் என்பது நிபந்தனையற்ற (unconditional) அன்பு ஒன்று தான் என்று அடித்துச் சொல்வேன் - என்னைத் தான் ! அறுபத்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிய பின் இன்று என் தெளிவு இது' என்று எழுத்தாளர் பாதசாரி அவர்கள் முகநூலில் சொன்னதற்கு, 'மற்றவர்கள் மேல் நாம் செலுத்தும் அன்பு முழுமையானதில்லை! ஆயினும் நம்முடைய இயல்பும், இருப்பின் மூலமும், இயற்கையான நிலையும் அன்பின் தன்மையே என்று நிசர்கதத்தா மஹராஜ் தெளிவு படுத்துகிறார்!!' என்று சகோதரர் திரு. சண்முகசுந்தரம் பதில் கொடுத்திருந்தார். மஹராஜின் சத்சங்கத்தில் நிகழ்ந்த ஒரு உரையாடலையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தார் - 'யாருக்கேனும் ஒருவருக்கு மஹராஜின் சொற்களுக்கு அனுபவப் பொறி ஏற்பட்டு விடலாம்! எனக்குப் புரிந்து கொள்ளமட்டுமே முடிகிறது!' என்ற குறிப்புடன்.


அந்த உரையாடலை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறேன். - AB
*



கேள்வியாளர்: நான் ஒரு மருத்துவர். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது, அதைத் தொடர்ந்து நோயாளிகள் மன ஆரோக்யத்திற்குப் பயிற்சியளிப்பது இவை என்னுடைய பணி! நான் மன ஆரோக்யம் பற்றியும், கடவுள் நம்பிக்கையின் மூலம் ஆரோக்யம் பெறுவது பற்றியும் சில புத்தகங்கள் எழுதியுள்ளேன்! ஆன்மீக
ஆரோக்ய விதிகளைப் பற்றி அறியத் தங்களிடம் வந்துள்ளேன்!!

நிசர்கதத்தா மகராஜ்: சரி!! ஒரு மனிதனைக் குணப்படுத்த நீங்கள் முயலுகையில் எப்போது அந்த மனிதன் குணமாகிறான்? எதைக் குணப்படுத்துகிறீர்கள்? குணமாகுதல் என்றால் உண்மையில் எதைக் குறிக்கிறீர்கள்?

கேள்வியாளர்: உண்மையில் அந்த நோயாளியின் உடலைக் குணப்படுத்த முயலும் அதே நேரத்தில் அவருடைய உடலுக்கும், மனநிலைக்கும் இடையேயான தொடர்பையும் சேர்த்தே குணப்படுத்த முயலுகிறேன்! அவருடைய மனநிலையைச் சரி செய்யவே முயலுகிறேன் என்று கொள்ளலாம்!!

நிசர்கதத்தா மஹராஜ்: உடலுக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு என்பதை ஆராய்ந்திருக்கிறீர்களா? எந்தப் புள்ளியில் அவை இணைகின்றன?

கேள்வியாளர்: உடலிற்கும் மாற்றமில்லாத ஒரு பிரக்ஞைக்கும் இடையில் “மனம்” இருக்கலாம் அல்லவா?

மஹராஜ்: உடல் உணவினால்தானே உருவாகிறது? உணவில்லாமல் “மனம்” தனியாக உருவாகிவிடுமா?

கேள்வியாளர்: ஆம்! இந்த உடல் உணவினாலேயே கட்டமைக்கப்பட்டுக் காப்பாற்றப் படுகிறது! ஆயினும் உணவில்லாத போது மனம் மிகுந்த பலவீனமாகிவிடும்! ஆனால் மனம் என்பது வெறும் உணவுதான் என்பது கிடையாதே! ஏதோ ஒரு காரணகர்த்தா “மனதை” இந்த உடலுக்குள் உருவாக்குகிறது! அது என்ன என்பதே என்னுடைய கேள்வி!!

மஹராஜ்; விறகிலிருந்து தீ பிறந்தாலும் தீ விறகல்ல என்பது போல உடலிலிருந்து மனம் பிறந்தாலும் மனம் உடலல்ல என்றாகிறது! பின் யாருக்காக, யார் நுண்ணறிய இந்த மனதில் உணர்ச்சிகளும் எண்ணங்களும் உருவாகிறது?விறகிலிருந்து உருவாகும் தீயை அனுபவிக்கும் ஒருவர் இருப்பதைப் போல் இந்த உடலிலிருந்து உருவாகும் மனதை அனுபவிப்பவர் தனியானவரா? அல்லது உடலிலிருந்து உருவாகும் “மனமே” தானா?

கேள்வியாளர்: ஆம் இதன்படி நுண்ணறிபவர் தனிப்பட்டவரே!

மஹராஜ்:அதை எப்படி அறிவீர்கள்? இந்த உடலும் மனமும் நீங்கள் அல்ல என்பது உங்களுக்கே தெளிவாகிறது! ஆயினும் அந்த“நுண்ணறிபவர்” உங்களுடைய அனுபவத்தில் உணரக்கூடியவரா? அதை அறிவீர்களா?

கேள்வியாளர்: இல்லை! உண்மையில் எனக்கு அது ஒரு ஊகமே!!

நிசர்கதத்தா மஹராஜ்: உண்மை நிரந்தரமானது மற்றும் மாறாதது! எது மாறக்கூடியதோ அது உண்மையில்லை! இப்போது எது உங்களிடம் மாறாத நிரந்தரமாகிறது? உணவிருக்கும் வரை மனமிருக்கும்! உணவில்லாத போது உடல் மரணமடைகிறது! உடல் உருவாக்கிய மனமும் கரைந்து விடுகிறது! ஆனால் இரண்டையும் அறிந்த, கவனித்த அந்த அறிபவர் அழிகிறாரா என்ன?

கேள்வியாளர்: இல்லை அவர் அழிவதில்லை என்றே எனக்கு ஊகமாகிறது! ஆனால் அதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை!

மகராஜ்; நீயே உனக்கு ஆதாரம்! உன்னுடைய இருப்பே அதற்கு ஆதாரமன்றி வேறு எதுவுமில்லை! நீயே உன்னை அறிவாய்! நீ மட்டுமே உன்னிடம் அன்பு கொள்ளுவாய்! உன் மனமும் உடலும் செய்யும் செயல்கள் யாவும் நீ உன்னிடம் செலுத்தும் அந்த அன்பின் பொருட்டே! அந்த அன்பே எப்போதும் உன்னிடம் மாறாமல் இருக்கிறது! அதுவே முக்காலமும் நேசிக்கக்கூடிய இயற்கையான தன்மையாக உன்னிடம் உள்ளது! அதுவே உன் உடலையும் உன் மனதையும் உருவாக்குகிறது! இருக்கும் அனைத்தும் அங்கிருந்தே உருவாகிறது! அதுவே கடவுளாகிறது!

- Nisargadatta, I AM THAT, ch 46


Thanks : Shanmugasundaram ST

Saturday, July 6, 2019

ஓவியம் : Bashir Series by Murali Nagapuzha

'எல்லைகளற்ற பிரார்த்தனையே வாழ்க்கை' என்று சொன்ன பெரும் எழுத்தாளர் பஷீரை எழிலோடு வரைந்திருக்கிறார் Murali Nagapuzha . ரசித்தேன். முகநூலில் பகிர்ந்த கவிஞர் சேரனுக்கு நன்றி. Thanks also to : DC Books Thiruvananthapuram.