Saturday, December 19, 2020

அவரவர் தலையெழுத்து - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் ‘அழிவற்றது’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து இந்த ’கர்ணபரம்பரைக் கதை’யைப் பதிவிடுகிறேன். காலச்சுவடு பதிப்பகத்தாருக்கு நன்றி. 

*

 அவரவர் தலையெழுத்து

அந்த குரு ஒரு மகத்தான மனிதரும்கூட. அவருடைய குடும்ப வாழ்க்கை ஊருக்கு வெளியே ஒரு சிறு குடிசையில், அவருக்கு ஒரு சிஷ்யன், மிகுந்த கூர்மையும் ஆற்றலும் உடையவன். உணவருந் தும் நேரம் தவிர அவன் குடிசைக்கு வெளியே பயிற்சியில் ஈடுபட்டிருப்பான்.

குருவின் குடிசையில் ஒரு குழந்தையின் குரல். அவருடைய மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நள்ளிரவு. ஒரு கிழவர் குடிசைக் கதவைத் திறக்க முயலுவதைச் சிஷ்யன் பார்த்துவிட்டான்.

கிழவர் பதறிப்போய்விட்டார். “நான் மனிதர் கண்ணிலேயே பட மாட்டேனே? உன் கண்ணுக்குத் தெரிந்துவிட்டேனே?" என்று அதிர்ந்துபோய் விட்டார்.

சிஷ்யன் அவர் கையைப் பிடித்தான். “நீங்கள் யார்?”
“நான் தான் பிரம்மா.”
"அதுதான் குழந்தை பிறந்தாகிவிட்டதே?”
"இன்னும் ஒரு பணி பாக்கியிருக்கிறது.”
“என்ன ?”
"இதெல்லாம் நான் சொல்லக் கூடாது."
சிஷ்யன் கை இறுகியது. "பிறந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வேண்டும்.”
"என்ன எழுதப்போகிறீர்கள்?"
"எனக்கே தெரியாது. என் எழுதுகோலைத் தலையில் வைப்பேன். அது எழுதிவிடும். என் கையை விடு. நேரமாகிறது."
"எனக்கொரு வாக்குறுதி வேண்டும். அப்போதுதான் கையை விடுவேன்."
"என்ன ?"
"தலையெழுத்து என்ன எழுதப்படுகிறதோ அதை என்னிடம் சொல்ல வேண்டும்."
“அதெல்லாம் மனிதருக்குத் தெரியக் கூடாத ரகசியம்.”
சிஷ்யன் கை இன்னும் சிறிது இறுகியது.
"சரி, சொல்கிறேன். ஆனால் நீ ஒரு வாக்குறுதி தர வேண்டும்.”
"என்ன ?"
"எக்காரணம் கொண்டும் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது."
"சரி.” சிஷ்யன் அந்தக் கிழவரின் கையை விட்டான். கிழவர் உள்ளே சென்றார். ஒரு நிமிடத்திற்குள் திரும்பி வந்துவிட்டார். அவர் முகம் வாடியிருந்தது.
"என்ன?" என்று சிஷ்யன் கேட்டான்.
"என்ன சொல்வது? இவ்வளவு உத்தமமான மனிதருக்கு இப்படி யொரு பெண்ணா?"
"ஏன்?"
"ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையைத்தான் அவள் வாழ வேண்டி - வரும்."

சிறிது காலத்தில் அந்தக் குடிசையில் இன்னொரு குழந்தையோசையும் கேட்டது. இம்முறையும் சிஷ்யன் கிழவர் கையைப் பிடித்துவிட்டான். அவருடைய எழுதுகோலைப் பிடுங்கிக் கொண்டுவிட்டான்.

“இதெல்லாம் மனிதருக்குச் சொல்லக் கூடியதில்லையப்பா. என்னை விட்டுவிடு."
"என் கண்ணில் நீங்கள் தென்பட்டுவிட்டீர்கள். ஆதலால் இந்தக் குழந்தையின் தலையெழுத்தையும் சொல்லியாக வேண்டும்."

கிழவர் தன் தலையில் அடித்துக்கொண்டு குடிசைக்குள் சென்றார். திரும்பி வரும்போது அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.
"இந்த மகாத்மாவுக்கு இப்படியொரு மகனா?”
"ஏன்?"
"இவன் பிணம் காப்பவனாக வாழ்வான்."

சிஷ்யன் குருவைப் பிரியும் காலம் வந்துவிட்டது. அவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. பெரிய அறிவாளியாகப் பெரியவர்கள் கொண்டாடினார்கள். அவனுக்கு மணமாயிற்று. குழந்தை பிறந்தது. ஆனால் அவன் கண்ணில் பிரம்மா மீண்டும் சிக்கவில்லை. பிரம்மா அவன் சிந்தனையிலிருந்து மறைந்துவிட்டார்.

ஒரு நாள் அவன் குளித்துவிட்டுத் தலையைக் கோதிவிட்டுக் கொண்ட போது ஒரு முடி உதிர்ந்தது. அது நரை மயிர். அவனுக்குப் பிரம்மா நினைவு வந்தது. அவன் குருவைத் தேடிப் போனான். அவர் குடிசையிருந்த அடையாளமே கிடைக்கவில்லை. அருகி லிருந்த கிராமத்தில் விசாரித்துப் பார்த்தான். ஒரு நாள் யாரோ குருவின் இரு குழந்தைகளையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அடுத்த தினம் குரு, அவருடைய மனைவி இருவரும் உயிரை விட்டார்கள்.

சிஷ்யனின் தந்தையார் காசியில் கடைசி நாட்களைக் கழிக்க வேண்டும் என்றார். சிஷ்யன் அவரைக் காசியில் கொண்டுபோய் விட்டான். கங்கைக் கரையில் அரிச்சந்திர கட்டத்தில் குளிக்கச் சென்றான். ஒரு படி சறுக்கிக் கங்கையில் விழுந்தபோது ஓர் இளைஞன் சிஷ்யனைக் காப்பாற்றினான். இளைஞனை சிஷ்யன் அடையாளம் கண்டுகொண்டுவிட்டான். "என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

"இந்த மயானத்தின் குத்தகைதாரருக்கு நான் அடிமை. பிணங்கள் வெந்துகொண்டிருக்கும்போது ஒரு காலையோ கையையோ பிய்த்துக் கங்கையில் போடுவது என் வேலை."
"உனக்கு ஒரு அக்கா உண்டல்லவா?"
"அவளைப் பற்றிப் பேச வேண்டாம்."
"ஏன்?"
"இந்தக் காசியிலேயே ஒழுக்கங்கெட்டவள் அவள்தான்."

சிஷ்யன் குருவின் மகளைத் தேடிப் போனான். ஊருக்கு வெளியில் ஒரு குடிசையில் இருந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் அழகாக இருந்த அவள் முகம் இப்போது வயதை மீறிய கிழடு தட்டியிருந்தது. அவள் சிஷ்யனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்,

"அழாதே. உன் தலையெழுத்தை மாற்றிவிடுகிறேன்."
"எனக்குத் தலையெழுத்து என்று ஏதாவது பாக்கியிருக்கிறதா?"
"நூறு முத்துகளைக் கொடுத்தால்தான் உன்னைத் தீண்டலாம் என்று அறிவித்துவிடு."
"எனக்கு நான்கு செப்புக் காசுகள் தர மாட்டார்கள்...."
"நான் சொன்னதைச் செய்யம்மா, வந்த நூறு முத்துகளை அடுத்த பகலுக்குள் தானதர்மத்துக்குப் பயன்படுத்திவிடு. ஒரு காசு கூடச் சேர்த்து வைக்காதே."
"இதெல்லாம் நடக்கும் காரியமா?" "முயற்சி செய்வோம். ஒரு காசைக்கூட மீதம் வைத்துக்கொள்ளாதே. உன் தர்மம் உன்னைக் கடைத்தேற்றிவிடும்.”

யார் வந்தாலும் "நூறு முத்து” என்றாள். இரவு முடியப் போகும்போது ஒருவர் தலையை மூடிக்கொண்டு வந்தார். அவ ளுக்கு அன்று வருமானமே கிடையாது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு, "நூறு முத்து” என்றாள். அந்த மனிதர் நூறு முத்துகள் கொடுத்துவிட்டுப் போனார்!

மறுநாள் பகலுக்குள் அவள் நூறு முத்துகளையும் பணமாக்கிக் காசியிலுள்ள ஏழை விதவைகளைத் தேடிப் போய் அவ்வளவு பணத்தையும் விநியோகம் செய்துவிட்டாள்.

அன்று மாலையும் யாரும் அவளை நாடவில்லை. நூறு முத்துகளுக்கு எங்கு போவது? அவள் தொழிலுக்கு அன்று விடுமுறை என்று நினைத்தாள். ஆனால் பொழுது விடியப்போகும் நேரத்தில் அந்த முக்காடு மனிதர் நூறு முத்துகள் கொண்டுவந்து கொடுத்தார். அன்று அவள் அனாதையாக விடப்பட்ட கிழவர்களுக்கு அவள் பணத்தையெல்லாம் விநியோகம் செய்தாள். இப்படித் தினமும் அவள் ஆதரவற்றவர்களைத் தேடித் தேடிப்போய் தர்மம் செய்தாள். அவளுடைய தலையெழுத்து மாறிப்போய் விடாமல் தினம் அந்த முக்காடு மனிதர் அவளிடம் நூறு முத்துகள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார்.
***

சிஷ்யன் தென்னிந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது. பாண்டிய நாட்டில் அமோக வரவேற்பு. அப்போது முத்துக்குளிப்பு நடந்து கொண்டிருந்தது. அவன் அன்று இரவு கடற்கரையில் தங்க வேண்டியிருந்தது. நள்ளிரவில் விழித்துக்கொண்டான். கடலோசை ஓர் அபூர்வ இசையை எழுப்பிக்கொண்டிருந்தது. ஒரு மனித உருவம் கடலிலிருந்து தரைக்கு ஓடி வருவதைச் சிஷ்யன் பார்த்தான். அவன் நெருங்குவதற்குள் ஒரு குழியில் எதையோ போட்டுவிட்டு அந்த உருவம் மீண்டும் கடலுக்கு ஓடியது. சிஷ்யன் அந்தக் குழியருகே சென்றான். மீண்டும் அந்த உருவம் கடலிலிருந்து ஓடி வந்தது. சிஷ்யனைப் பார்த்தவுடன், "ஐயோ, இங்கேயும் நீ வந்துவிட்டாயா?" என்றது. பிரம்மா!

"இங்கே யார் தலையெழுத்தை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?"
"உன் குரு குமாரியிடம் எதையோ சொல்லிவைத்துப் போய் விட்டாய், அவள் தினமும் நூறு முத்து கொடுத்தால்தான் அவளைத் தொட முடியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய தானதர்மங்களால் இன்று காசியில் அவள் தான் பெரிய புண்ணியசாலி."

சிஷ்யனுக்குக் கண்களில் கண்ணீர் துளித்தது.

"சரி, சரி, வழியை விடு, நான் முத்துக் குளிக்கப் போக வேண்டும்.”
“நீங்கள் எதற்கு ..."
"யார் அவளுக்குத் தினமும் நூறு முத்துத் தருவான்? அன்றிலிருந்து அவள் தலையெழுத்துப்படி நடக்க வேண்டும் என்று நான்தான் தினம் நூறு முத்து கொண்டுபோகிறேன்.” கிழவர் அவசரம் அவசரமாகக் கடலுக்குள் ஓடினார்.

"இதுதான் இவர் தலையெழுத்து போலிருக்கிறது” என்று சிஷ்யன் சொல்லிக்கொண்டான்.
***
(உலகத்தமிழ் பொங்கல் மலர் , ஜனவரி 2005)
*

Saturday, October 10, 2020

அமராவதியின் பூனை - ஜே.பி. சாணக்யா

நன்றி :ஜே. பி. சாணக்யா, உயிர்மை

நன்றி : யாழினி சென்ஷி

**

 அமராவதியின் பூனை - ஜே.பி. சாணக்யா


ரசாக்கின் வீட்டில் பூனைகள் மிகுந்துவிட்டன. கூடத்தில் மல்லாந்து படுத்தபடி சமையல் புகையில் கறுப்பாகிவிட்ட உள் கூரையை வெறித்துக் கிடந்தான் அப்பூனைகள் பெருகுவதற்கு அவன் மனைவி அமராவதிதான் காரணம். அவள் தான் மிகப் பிரியமாக ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அதன் பிள்ளைகள் தான் தற்போது அவன் வீட்டில் பெருகிக் கிடப்பது. அவன் ஒருநாள் மேல் சுவரில் எட்டிப்பார்த்து எண்ணியும்கூட அவனால் அப்பூனைக்குட்டிகளை எண்ணிக்கையோ அடையாளமோ வைத்துக்கொள்ள முடியவில்லை .

தனிமை அவனைச் சூழ்ந்து கிடந்தது. அமராவதி இருக்கும் வரை அவ்வீடு அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் தங்கை ஆதியம்மாளைக் கொண்டுவந்து குடித்தனம் செய்ய ஆரம்பித்து விட்ட பிறகு வீடே அவனுக்கு அலுப்பான ஒரு பொருள் போல் ஆகிவிட்டது. ஆதியம்மாள் வெளி வேலைக்குப் போயிருக்கிறாள் அவனைவிடப் பருத்த கெட்டியான கறுப்பு உருவம். அவள் அவனை மரியாதை கெட்டத்தனமாக நடத்துவதாக ரசாக் எண்ணிக்கொண்டிருந்தான். மிகவும் தட்டமான உடலமைப்பைப் பெற்றிருந்தவன்தான் ரசாக். பிற்பாடு அவனுடல் நிறைய விசனங்களில் விழுந்து மெலிந்து போய்விட்டது.

எழுந்து தட்டில் சோறுபோட்டு நீரூற்றி வெங்காயம் உரித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் அதற்காகவே காத்திருந்தது போல் சுவரின் மேலிருந்து பூனைகள் ஒவ்வொன்றாய் அவனருகில் வந்தன. அப்பூனைகளில் ஒன்றை அவனுக்கு மிகவும் பிடிக்கும். செம்பழுப்பும் வெண்மையும் கலந்து பூனை. மொழுமொழுவென்றிருந்தது. மென் நரம்புகள் போல் பிற மீசை இரு பக்கமும் அந்தரத்தில் கோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. அவை அனைத்திற்கும் சோற்றுக் கவளங்களை உருட்டி வைத்தான்.  அந்தச் செம்பழுப்புப் பூனை அவன் பக்கவாட்டை உரசிக் குரலெழுப்பி அவனைப் பார்த்தது. அவன் அதை விசாரித்துப் பேசியபடி அதற்குத் தனியாகச் சோறு உருட்டி வைத்தான். அது நாவால் தீண்டிப் பருக்கைகளைச் சுவைக்கத் தொடங்கியது. அவன் வாசலை வெறித்தபடி சோறுண்டான். வெண்ணிற வெயில் வாசலுக்கு வெளியே அடைத்துக்கொண்டது போலிருந்தது. எங்கோ மரம் வெட்டும் ஓசையும் கோழிகள் சண்டை பிடித்துக்கொண்டு இட்டிக்கொள்வதும் கேட்டுக்கொண்டிருந்தன. சில குட்டிகள் எழுந்து போய்விட்டிருந்தன. செம்பழுப்புப் பூனை மீண்டும் அவனைக் குரல் கொடுத்து அழைத்தது. அதற்கு வைத்த சோறு சாப்பிடப்பட்டு, மண் தரையில் ஈரம் மட்டுமே இருந்தது. அப்பூனை மட்டும் அவன் சாப்பிடும் நேரம் வரை அவனுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். சாப்பிட்டபின் அதை, 'போ போ' என்பான். அது அவன் காலை உரசிக்கொண்டு இடமும் வலமும் நுழைந்து வரும். லேசாகக் காலால் எத்துவான். ஓடிவிடும். பின்பு படுக்கையிலோ அல்லது சோறுண்ணும் நேரத்திலேயோ மீண்டும் அவனோடு இருக்கும்.

ஆதியம்மாளுக்கு இந்தப் பூனைகளைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. பூனை குத்த வரும் குறவன்களிடம் இப்பூனைகள் அனைத்தையும் பிடித்துக்கொடுத்து விடப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். இடையிடையே அவள் அக்காள் எப்படித்தான் இதைப் பிரியமாக வளர்த்தாளோ என்று வேறு அங்கலாய்த்துக்கொண்டாள்.

வெயில் தாழ ஆதியம்மாள் விறகு பொறுக்கிக்கொண்டு வீட்டை அடைந்தபோது ரசாக் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் விறகைப் பொத்தென்று சாய்த்துவிட்டு உள்ளே வந்து அவனைப் பார்த்தாள். நடந்து வந்த களைப்பும் அன்றைய வெயிலும் அவன் தூக்கமும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்து பாத்திரங்களை உருட்டியபடி ஏச ஆரம்பித்தாள். அவள் குரலில் அவனும் அவன் தலைமாட்டில் படுத்திருந்த செம்பழுப்பு பூனையும் விழித்துக்கொண்டார்கள். அவன் எழுந்தவுடன் அவளை நன்றாக உதைக்க வேண்டுமென்று நினைத்தான். அவள் ஒரு குச்சியை எடுத்து அந்தப் பூனையை அடிக்க வந்தாள். அது சட்டென சன்னலில் தாவி ஏறிச் சுவருக்கு மேல் ஒளிந்து கொண்டது. "அந்தப் பூனை உன் என்ன செய்கிறது" என்று அலுத்தபடி எழுந்து வெளியே வந்தான். தெருப்பிள்ளைகளும் பெண்களும் வெளிச் செல்லும் ஆண்களுமான நடமாட்டத்துடன் இருந்தது தெரு. ஆகாயத்திலிருந்து இதமான சாயங்கால வெளிச்சம் ஊரின்மேல் கவிழ்ந்து கிடந்தது மனதுக்கு இதமாக இருந்ததுது. இந்நேரத்தில் கத்திக்கொண்டிருப்பதுதான் அவனுக்கு மிக எரிச்சலாக இருந்தது. அது அவள் சுபாவம் என்று விட்டிருந்தான். சில நாள் அவள் எல்லை மீறித் திட்டிக்கொண்டிருக்கும்போது கழியைத் தூக்கிக்கொண்டு வந்து தட்டியையும் வெறும் இடத்தையும் அடித்துச் சப்தம் காட்டி அவளை மிரட்டுவான் ஆரம்பத்தில் அவளும் அச்செயலுக்குப் பயந்தாள். பிறகு அவள் நன்றாகத் தெரிந்து கொண்டாள். அவன் தன்னை அடிக்க மாட்டான் என்று. அவனுக்கு டீ குடிக்க வேண்டும் போலிருந்தது. எதிரில் அவன் சேக்காளி வந்து கொண்டிருந் தான். இருவரும் பேசிக்கொண்டபடி ரோட்டுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது எதிர்ச்சாரியிலிருக்கும் காசி வாசலில் நின்றபடி ரசாக்கைப் பார்த்துச் சிரித்தான். ரசாக்கும் சிரித்தான். ரசாக்கிற்கு அவனைக் கொலை செய்ய வேண்டும் போலிருந்தது. காசி தனது தொங்கு மீசையை உருவிக் கொண்டான். இருவருக்குமான சங்கேதம் இச்செயலில் ஒளிந்து கொண்டிருந்தது. ரசாக் அவனிடம் ரோட்டுக்கு டீ குடிக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு சென்றான். காசியும் அவர்களை மரியாதையுடன் பேசி  அனுப்பினான்.

காசி அருகிலுள்ள டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிக்கிறான். சில சமயங்களில் பையன் வராத சமயத்தில் இரும்பு வாளியில் பசை நிரப்பிக்கொண்டு சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டியபடி ஊர் ஊராகச் சென்று போஸ்டரும் ஒட்டுவான். வழி நெடுக, பார்க்கும் நபர்களெல்லாம் மாறிய படத்தின் பெயரைக் கேட்டு அவனை அரித்தெடுத்து விடுவார்கள். அவனால் சொல்லாமல் செல்ல முடியாது. சிலர் படம் எப்படி என்பார்கள். அவன் பார்த்திருக்காவிட்டாலும் சணடைகளும் நல்ல பாடல்களும் அமைந்த படம் எனது பொய் சொல்லிச் செல்வான். பல சமயங்களில் பல ஊர்களில் அதுதான் அவனது அடையாளமாகவும் இருந்தது. எப்படியாவது ஆபரேட்டராக ஆகிவிட வேண்டுமென்ற துடிப்பு அவனிடம் முன்பு இருந்தது. கிழவன் செத்தால் உண்டு என்றிருந்தான். கிழவன் தன் மகனைக் கூட்டிக்கொண்டுவந்து தொழில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தவுடன் மனசு விட்டுப் போய்விட்டது.

அதிகமும் வேலை எதுவும் இருக்காது. சாயங்காலம் சென்றால் போதும். சிறுநீர் கழிப்பிடம் மட்டும்தான். மண் தரையிலேயே கீற்றுத் தட்டி கட்டி இருபக்கங்களிலும் பிரித்து விட்டிருந்தார்கள். பிளீச்சிங் பௌடர் மட்டும் விசிறிவிட்டு வந்தால் வேலை விட்டது. கேன்டீனில் ஆளில்லாதபோது கடையில் நின்று வேலை செய்வான். சிறு வயதில் தூக்கிய முறுக்குத் தட்டுதான் என்றாலும் தற்போது தொடுவதில்லை. தட்டியில் சாய்ந்து கொண்டு பாக்கு மென்றபடி டிக்கெட் கிழித்துக் கொண்டும் அங்குமிங்கும் பேச்சுக் கொடுத்து நகர்ந்தபடியும் சில ரீல்கள் ஓடும் வரை நிற்பான். இரண்டாம் காட்சி முடிந்தபின் ஓனர் கிளம்பும் வரை இருந்து விட்டு சைக்கிளில் ஏறி வீடு வந்து சேர வேண்டியதுதான். பகல் நேரங்களில் அதிகமும் விவசாய வேலைக்குச் சென்று விடுவான்.

அன்றிரவு அவன் வேலை முடிந்து வரும்வரை தந்திக் கம்ப நிழலில் செம்பழுப்புப் பூனை அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. இருளில் ஒளிந்தபடி அவன் சைக்கிள் சப்தத்தைக் கேட்டபடி இருளில் பதுங்கிப் பதுங்கி அவன் வீட்டைக் குறுக்காகக் கடந்து உள்ளே சென்று நின்றுகொண்டது. பூனையின் தொடர் இருப்பை அவன் அறிவான். அவனுக்குத் தினமும் இது வாடிக்கை. அவன் எத்தனை தாமதமாக வீடு திரும்பினாலும் அப்பூனையைப் பார்க்கத் தவறியதில்லை. அவன் சோறுண்ணும்போது அவனை முன்னும் பின்னும் உரசும். சோறிடுவான். சப்தமெழுப்பாமல் சாப்பிட்டு அவன் பின் பக்கத்தில் வந்து மெத்தென்று சரிந்து அமரும். அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கும். அவனுக்குத் தெரியும் அது ரசாக்கின் பூனையென்று. அப்படியே அள்ளி சில சமயம் மடியில் வைத்துக்கொள்வான். உயிருள்ள பூப்பந்து போல் அவனின் கதகதப்பான மடியில் பேசிக் கொஞ்சும். அவன் அதற்கு முத்தமிடுவான். கிழவி சகிக்க முடியாமல் அவனைத் திட்டுவாள்.

2

ரசாக் ஒரு மிகச் சிறந்த சிலம்ப விளையாட்டு வீரனாக இருந்தான். கோவில் திருவிழாக்கள் அவன் சிலம்ப வீச்சை அறியும். காற்றை வெட்டி வீசிப் பறக்கும் அவனது சிலம்பம் எண்ணற்ற விளையாட்டு வீரர்களைத் தோற்கடித்திருக்கிறது.
அந்நேரத்தில் அவனுடலும் ஒரு ஈவிரக்கமற்ற சிலம்பக் கோல் போலவே தோன்றும்.

திருமணம் செய்துகொண்டு வந்தபோது அமராவதிக்கு அவனைப் பிடிக்கவில்லை . தன் அழகுக்கு ரசாக் பொருத்தமில்லாதவன் என அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். முதல் வழி வரும்போது அவன் முன்னேயும் அவள் இரு பின்னேயும்தான் நடந்து வந்தாள். இரண்டாம் வழி வந்தபோது அவனை விடுத்து விளைந்த பயிர்களில் ஒளிந்து கொண்டாள் அவன் தனியாகவே வீடு வந்து சேர்ந்தான். மூன்றாவது வழி ரசாக் மறுத்துவிடவே பெரியவர்கள் அவளைச் சமாதானம் செய்து அனுப்பினார்கள்.

அமராவதியை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் உடல் வனப்பும் பூனைமயிர் பளபளக்கும் கன்னத்துச் சருமமும் மேலுதடும் அவனுக்கு மிகக் கவர்ச்சியாக இருந்தன. அவள் மேலாடையற்று முதுகு காட்டிப் படுத்துறங்கும்போது அவளுடல் ஒரு வாலிபனுடைய உடல் போலவே தோற்றம் தரும். ஆவலுடன் சில சமயங்களில் அவள் இயக்கத்தில் லயித்து உயிர்த்தொடுகையே வேறாயிருக்கும் தருணங்களில் ஒருக்களித்த முகத்துடன் இருப்பாள். அப்போது ஒரு ஆணைப் புணருவது போலவும் ரசாக்குக்குத் தோற்றம் தந்திருப்பதை அவளிடம் கூறியிருக்கிறான். அவள் வெறுமனே சிரித்தாள்.

ஊர் மக்கள் புடை சூழ மேளதாளத்துடன் மாரியம்மன் கோவில் திடலில் அவன் தார்பாய்ச்சி இறங்கி சலா வரிசை எடுத்துத் தொடை தட்டிச் சிரித்தபடி களமிறங்கும்போது இளைஞர்கள் விசிலடித்துக் கரகோஷித்தார்கள். ரசாக்கிற்கு ரசிகர்கள் அதிகம். அவனைவிடப் பன்மடங்கு பருத்தும் மார்புகளை விரித்தும் தசைகள் புடைக்கக் கோல் வீசுபவர்களும், இறங்கும் வரைதான் ஹீரோக்களாக இருந்தார்கள். நான்கு வீச்சுகளில் மேள ஒலிக்கரகோஷத்துடன் பிடுங்கப்பட்ட எதிராளியின் கம்பு ரசாக்கின் கைகளில் சேர்ந்திருக்கும். இரு கரங்களிலும் இரு கம்புகள் இரு கைச் சுற்றில் திளைத்து, காற்றைக் கிழித்துக்கொண்டிருக்கும். முந்தியும் பிந்தியுமான கால எடுப்புகளும் மண் சீய்ப்புகளும் அவனை வெறிகொண்ட மிருகம்போல் காட்டும். அருகிலுள்ள பெண்கள் அமராவதியை இடித்தார்கள். ரசாக்கிற்குப் போகுமிடமெல்லாம் பெண்கள் சகவாசம் என்றார்கள். அமராவதிக்கு மெல்லத் தாழ்வுணர்ச்சி மேலேறத் தொடங்கிவிட்டது அப்போது.

அவனது சிலம்பத்தின் முன் தான் மிகச் சாதாரணம் என்று நினைத்தாள். மைய இரவுவரை அவனை வீழ்த்த முடியாத சிலம்ப விளையாட்டுகள் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் இறைந்து வந்து கிடந்தன. எல்லோர் சிலம்பமும் பிளவுபட்டு அவனது வீச்சில் கிழிந்து சப்தமிட்டன. நடுத்தெரு வரும் போது தெரு மையத்தை வலம் வந்து மைதானத்தை அகலப்படுத்தினான். தாகத்திற்குத் தண்ணீர்  கேட்டபோது யார் யாரோ ரசாக் தண்ணீர் கேட்டதாக ஆர்வத்துடன் கொண்டுவந்தார்கள். அவன் இரண்டு மூன்று வீட்டுச் செம்புத் தண்ணீரைத் தொடர்ச்சியாக வாங்கிக் குடித்தான். மேலெல்லாம் வியர்வை மினுங்க இரும்பு போன்ற உடம்பை ஆறப் போட்டபடி பிரம்புச் சிலம்பை இடது கரத்தில் ஊன்றிப்ப் பிடித்து வானைப் பார்த்துக் குடித்தான். எல்லோரும் ரசாக்கைப் பார்த்தார்கள். சிறுபிள்ளைகள் அவன் சிலம்பைத் தொட்டுப் பார்த்து ஓடின. குமராகப் போகும் பெண்களும் கன்னிப் பெண்களும் ரசாக்கைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கும்பலில் ஒளிந்தார்கள். நட்சத்திரங்கள் மினுத்திருக்க ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் வீசியடித்தான் தனது சிலம்பாட்டத்தை. வெளியூரிலிருந்து வந்த சிலம்பக்காரர்கள் இறுமாப்புடன் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள். மேலத்தெரு வளைவில் வெளியூர்க்காரர்கள் சுற்றி இறங்கி வளைத்தார்கள் ரசாக்கை, ரசாக் சிரித்தபடி உற்சாகமாய் 'ம்ஹூம்' எனக் குரலெழுப்பி முன்னேறி ஆடினான். ஊர் மக்கள் கரகோஷித்துச் சிரித்தார்கள். ரசாக் விட்டுக்கொடுத்து ஆடினான். விடையாட்டைத் தெரிவிக்கவே விளையாடுவது போல் அந்த நேர விளையாட்டில் புன்னகை அவன் முகத்தில் பிரியாதிருந்தது. ’வெளியூர் காரங்கல்ல! அதான் விட்டுப்புடிக்கிறான். விரோதம் தட்டிறக் கூடாது பாரு" என்றார்கள். ஒரு கரத்தில் சிலம்பமும் மறு கரத்தில் ரகசியமும் வைத்தவனைப்போல் புஜத்தில் நேர்க் கோட்டில் கைகளை விரித்து எட்டி வைத்துச் சுற்றியபடி 'வா ராஜா' என்றான் எதிரியை. ரசாக் காற்றில் எழும்பிச் சுழன்று வீசும் ஏதோ ஒரு வீச்சுக்காக ஜனக்கூட்டம் காத்துக் கிடந்தது கண்களைப் பரக்கப் போட்டபடி. அப்படித்தான் செய்தான் ரசாக்கும். இமைக்கும் கணத்தில் புரியாத பாஷை போல் அவன் மன வேகத்தின் குரலும் ஆவேசமும் வெடித்துச் சிதற, எதிராளியின் கம்பு எகிற எதிரியின் நெற்றிப் பொட்டில் நிறுத்தியிருந்தான் தன் சிலம்பு நுனியை .

விளையாட ஆட்கள் இல்லாமல் தேர் நகர்ந்து ஊர் சுற்றி வரும்போது ஆட்டங்கள் சூழ்ந்து கொண்டன. பலபேர் ரசாக்கின் சிலம்பாட்டத்திற்காகக் கண்விழித்துக் களைத்து ஏமாந்தார்கள். மேலத்தெரு வளைவிலேயே அவன் வெளியூர்க்காரர்களைச் சந்தித்துவிட்டதாகப் பார்த்தவர்கள் பார்க்காதகளுக்குச் சொன்னார்கள். ரசாக் நினைத்தபடியே அமராவதி வியந்து போயிருந்தாள். ஒருவகையில் ரசாக்கின் சிலம்பாட்டத்தின் முதல் தூண்டுகோலே அமராவதிதான். அவள் முன் தனது வீரத்தைச் சொல்லிவிடும் ஆவேசமாகத்தான் அவனது துள்ளல்கள் இருந்தன. ஊர் மெச்சும் விளையாட்டுக்காரனை அவள் பிடிக்கவில்லை என்பதைத் தனக்கு நேர் அவமானமாகத்தான் அவன் கருதினான். என் திறமைதான் 'நான்' என்று இவன் சொல்வதாக இருந்தது, அதன் பின்னான அவளுடன் கலந்த முதல் சிரிப்பு.

அமராவதி எதுவும் பேசவில்லை . மறுநாள் அவனுக்குக் கோழிக் குழம்பு செய்து எண்ணெய் சூடேற்றிக் கொடுத்தாள் ரசாக் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தெரு மணக்க அவள் அப்படிக் குழம்பு செய்வாள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. சிலம்பம் வீசத் தொடங்கிய காலத்திலிருந்தே தசை இறுகிப் போன உடலைத் தொட்டுத் தடவி எண்ணெய் விட்டாள். அவன் மூர்க்கமான காமத்துடன் அவள் கரம்பற்றி நெரித்தான். அது மிகவும் வலியாக இருந்தது. வீட்டுக்குள் வரும்போது கைகளை உதறி நெட்டி முறித்துக்கொண்டாள் சிரித்துக் கொண்டபடி அவன் காமத்தின் ஆவேசம் அந்நொடிகளில் சொல்லப்பட்டுவிட்டபோது அவள் மனம் அத்தீவிரமான கணங்களை நாடியபடி காத்திருந்தது.

அன்றிரவு தன்னைத் திறந்து போட்டு அவனுக்குப் பருகக் கொடுத்தாள். ஒரு மிருகத்தின் ஆவேசம் போல்தான் இருந்தது அவனது இயக்கம். தன்னை அப்புள்ளியில் மெய்ப்பிக்கும் வெறி அவனுள் கூடி எழுந்து கொண்டிருந்தது. அவளும் அம்முரட்டுத்தனத்தில் தன்னைக் கொடுத்தபடி புடைத்தெழுந்த காமத்தோடு முறுக்கேறிக் கிடந்தாள். அவள் கற்பனைக்கான ஆண் உருவைக் கொடுத்தது போல் அவன் இயங்கினான். நகக்கீறலும் பல்பதியும் கடியுமாய் இயக்கத்தில் லயித்தபடி கீறலாய்த் திறந்த விழிகளால் அவன் முகத்தைப் பார்த்துக் கிடந்தாள். உச்சம் எழுந்தபோது அவனை ஒரு விலங்கினமாகவே பார்க்க முடிந்தது. முலைகளைக் கைவிட்டு முதுகினடியில் இரு தோள்பட்டை வழியாயும் கைகளை நீட்டித் தலையில் கோர்த்துப் பற்றிக்கொண்டு அவளை ஒரு கைக்கு அடக்கமான ஒரு பொருளைப் போல் பாவித்து இயங்கினான். கன்னங்களைப் பற்கள் கரண்டி அழுத்த முத்தினான். அவள் அத்தனையும் ஏற்றுக்கொண்டவளாய்க் கால்களை அந்தரத்தில் மடித்து நீந்தவிட்டுக் கரங்களால் அவன் பிருட்டத்தைப் பிடித்தழுத்தி வேகம் காட்டினாள். ஆவேசமாக மூச்சு காற்றும் உடலியக்கமும் ஏறுமாறான மூச்சுக்காற்றும் சுரந்து பெருகும் வியர்வைகளுமாய் அறையைப் புணர்ந்தன. பீய்ச்சப்பட்ட இந்திரியம் முடிந்தும் விலக்க முடியாத கோர்ப்பால் பிணைந்து கிடந்தார்கள். அவன் இதோடு இறங்கிவிடுவான் என்று நினைத்தாள் சில நிமிடங்கள் மூச்சுக் காற்றும் வெப்பமும் தணியக் கிடந்தவன் அவள் முகத்தை ஆசுவாசமாகக் கடித்தான். அவள் சிரித்தாள். உதடுகளைச் சப்பி மென்றான். மிக மெதுவாய் இயக்கம் காட்டினான். அவளுக்கு சவால் போல் இருந்தது. அவள் இடைவெளி எதிர்பார்த்திருந்தாள்.  சட்டென விறைத்த குறியுடன் அவன் மீண்டும் இயங்க ஆரம்பித்தான். அவள் மீண்டும் வழிவிட்டபடி வகுத்துக்கொடுத்தாள். முன்பைவிட அதிவேகமாக இயங்கினான். அவளுக்கு அவன் மேல் ஆசை சுரந்தது. அவனது இயக்கத்தினூடே இயக்கத்திற்கப்பாற்பட்டு வளமான கரும் புற்கள் போல் விளைந்து சென்று கன்னத்தில் வட்டமடித்து வீரமான மீசையை உருவி அழகு பார்த்தாள். அவனுக்கு மரியாதையாக இருந்தது. மறுநாளான பகல்களில் அவன் உறங்கினான். அவள் கறியும் மீனும் ஆக்கிப் போட்டு இரவுகளில் பால் காய்ச்சி வைத்தாள். அவன் ஒருபோதும் சளைக்காதவன் போலவும் விருப்பமான நாய்க்குட்டி போலவும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தான். அவள் தனது குறியில் எரிச்சல் மிகுந்திருப்பதாக அவனிடம் ரகசியக் கெஞ்சலுடன் வெட்கத்துடன் கூறியபோதுதான் அவன் கம்மென்றிருந்தான்.

3

சாப்பிடும் வேளை முடிந்த இரவில் ரசாக் வீட்டுக்கு வந்தான். சில வாசல்களில் உறக்கம் வராதவர்கள் உதிரிகளாய் மங்கலான நிலவொளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். உள் கூடத்தில் ஆதியம்மாள் மல்லாந்து படுத்திருப்பது நிழல்வாட்டில் தெரிந்தது. மறுபுறத்தில் அவளின் நிழல் சிம்மனியின் வெளிச்சத்தில் அசைந்தசைந்து உறங்கிக்கொண்டி ருந்தது. கதவைச் சாத்திவிட்டுச் சாப்பாட்டை எடுத்து வைத்துச் சாப்பிடத் தொடங்கினான். பூனைகள் மேலிருந்து கீழிறங்கி வந்தன. அக்குரல்களைக் கேட்டதும் தூக்கம் விலகிப் பூனை களைத் திட்டியபடி அவள் புரண்டு படுப்பதைப் பார்த்தான்.

ஆதியம்மாளின் சமையல் ரசாக்குக்குப் பிடிப்பதில்லை. உப்பும் உறைப்பும் இருந்தால் குழம்பாகிவிடுமா என்று எடை பிடித்துப் பார்த்தான். அவளும் ஏதேதோ முயற்சி செய்து பார்த்தாள். கூடுதலாக எண்ணெய் விட்டுச் செய்தால் ருசி கூடுமெனச் செய்து திட்டு வாங்கியும் தெருக்களில் பணிக்கை கேட்டும் அலைந்தாள். அவளுக்கு அப்படித்தான் சமைக்க வந்தது. மீண்டும் மீண்டும் அவன் சத்தம் போட்டே ஒரு நாளில் சமையல் சட்டிகளைக் குழம்போடு தெருவில் போட்டு உடைத்தான். ரசாக் அதோடு நிறுத்திக்கொண்டான். அமராவதியின் குழம்புப் பக்குவமும் உடல் பக்குவமும் அவனை ஏக்கத்தின் ஆழத்தில் தள்ள மூடின. வெளியூர்களில் இருக்கும் தனது பழைய காதலிகள் பலரின் வீட்டுக்கும் செல்லத் தொடங்கினான். மீசையை வீரமாக உருவிவிட்டபடி தன் வீரமும் குணமும் அறியாதவள் ஆதியம்மாள் என அவர்களிடம் குறை கூறி முடித்தான். அவர்களும் ரசாக் சொல்வது உண்மைதான் என்றார்கள் அமராவதியின் சுத்தமான குளியலுக்கு முன்னும் சுவையான சமையலுக்கு முன்னம் எந்த ஊர்ப் பெண்ணும் இணையல்ல என்றான் தற்போது அவன் காதலிகள் யாவரும் பிள்ளை குட்டிகள் ஈன்று வாழ்வின் பாதாளத்தில் வீழ்ந்து போயிருந்தார்கள். அங்கு சென்று அவர்களுக்குக் கைச் செலவுக்கு கூடப் பணம் கொடுக்க முடியாமல் பார்த்து வருவது அவனுக்கு அசிங்கமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்துக் கூடத்தில் தனது பாயையும் தலையணையையும் எடுக்கச் சென்றவன் அவளைப் பார்த்தான். ஆடை மறைப்பற்ற அவளது பருத்த தனங்கள் வட்டமான சதைப் பந்தைப் போல அவள் நெஞ்சில் மிதந்திருந்தன. அங்கேயே தனது படுக்கையைச் சரிசெய்து போட்டவனைத் தூக்கக் கலக்கத்தோடு பார்த்தவள் அவனை வெளியில் சென்று படுக்கச் சொன்னாள். அவன் இன்னும் சிறிது நேரத்தில் சென்று படுப்பதாகக் கூறி அமர்ந்தான். சட்டென அவள் புடவையை வாரி எடுத்து மேலில் சுற்றிக்கொண்டு வெளிவாசலுக்கு வந்து வெறுந்தரையில் சுருண்டு கொண்டாள். அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில் அவளை உள்ளே அழைத்தான். அவள் தெருவே கேட்கும்படி அவனை வெளியே வந்து படுக்கச் சொன்னாள். பிறகு அவன் எழுந்து வெளி வாசலுக்கு வந்தபோது அவளது முதுகில் காலால் ஒரு எத்து எத்திவிட்டுப் போனான் ஆத்திரத்துடன். அதன்பின் உள்ளே சென்று படுத்துக்கொண்ட அவள் அவன் தூங்கிய பிறகும் அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.!

4

அமராவதிக்கும் பூனைகள் மிகவும் பிடிக்கும். அவள் மணியக்காரர் வீட்டிலிருந்து ஒரு சாம்பல் நிறப் பூனையைக் கொண்டு வந்தாள். அவன் ஒரு பூனைக்குட்டியைக் கொண்டு கொடுத்தான். அது ஒரு புலிக்குட்டி போலவே இருந்தது. அவைள் இரண்டும் அவள் பிள்ளைகள் போல் வலம் வந்தன. அமராவதி அதற்கு அதிகமும் கவிச்சிக் குழம்புகள் பழக்கி வந்தாள். அவை கவிச்சிகளற்ற நாட்களில்கூட கவிச்சிக் சோறு கேட்டு பசியோடு படுத்துக் கொண்டன. அவைகளை பழக்கிவிட்டால் அப்படித்தான் என்று ரசாக் அலுத்துக்கொண்டான். மறுநாளும் மறுநாளும் ரசாக் வேண்டுமென்றே பால் சாதம் வைத்தான். அவை எங்கோ சென்று வயிற்றை ரொப்பிக்கொண்டு வந்து பிடிவாக அவற்றைப் புறக்கணித்தன. கடைசியில் அச்சாதத்தில் கவிச்சி சேர்த்துப் போட முடிவு செய்திருந்தான். அவை மீண்டும் இழைந்து கிடந்தன.

ரசாக் சிலம்பம் கற்றுக்கொடுக்க ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தான். வாக்கும் ராசியும் அவனுக்கு இருக்கிறதென்றார்கள். நிறைய இளைஞர்கள் அவனிடம் தொழில் கற்றுக்கொள்ளக் காத்துக் கிடந்தார்கள். ரசாக்கும் நேக்காகக் கற்றுக்கொடுத்தான். சிறுபிள்ளைகள்கூட அவனது பக்குவமான போதிப்பில் படுசுத்தமாக சலா வரிசை வைத்தார்கள். கடைத்தெருவில் தழையவிட்ட சலவை வேட்டியும் கைக் கொண்டையில் சிறுமடிப்பாய் உருட்டிவிடப்பட்ட முழுக்கைச் சட்டையுமாய் வலம் வந்து கொண்டிருந்தான். கடைத் தெருக்களில் அவன் நடப்புக்கு மரியாதை இருந்தது. பெரும் மளிகைக் கடைகளிலும் டீக்கடைகளிலும் அவனுக்குக் கடன் வசதிக்கான கணக்குகள் இருந்தன. ஒவ்வொரு வாரமும் ஊர் திரும்பும் நாட்களில் அவளுக்குப் பிரத்யேக மஞ்சள் குளியலும் அவனுக்குச் சுடு எண்ணெய்க் குளியலும் கறிக் குழம்புமாய் வீடு மணத்தது. அறைச் சுவர்கள் அவர்களைப் பார்த்துக் கூச்சப்பட்டன. அமராவதிக்கு இரண்டு ஜதை கொலுசுகளும் மூக்குத்தியும் வாங்கிப் போட் டான். அவன் வீரத்தின் அடையாளங்கள் என்பதாக மீசையைப் புறங்கையால் மேவியபடி சொல்லிக் கொண்டான். அவளுக்கும் பெருமையாக இருந்தது. தெரு திரண்டு வெள்ளிக்கிழமைகளிலோ சனிக்கிழமைகளிலோ சம்பிரதாயம்போல் அருகிலுள்ள டூரிங் டாக்கீஸுக்கு சினிமாவுக்குச் செல்லும் வழக்கம். ஆரம்பத்தில் அமராவதி பின்தங்கினாலும் மறுநாள் பகலில் சினிமாவின் கதை எழும்பிப் பைப்படிகளிலும் வயல் வெளிகளிலும் கரைவதை அவள் தனித்திருந்து கேட்க விரும்பாதவளாய் அவர்களோடு கூடிக்கொண்டாள்.

காசி சினிமா கொட்டகையில் அவளுக்கு நிறையச் சலுகைகள் செய்து கொடுத்தான். மணல் குமித்து அமரும் உயரத்திற்கு மணப்பலகை கொண்டு வந்து தருவதிலிருந்து உடன் வரும் அனைவருக்கும் நான்கு இடைவேளைகளில் முறுக்கும் தேநீரும் மாறி மாறி வந்தன. சினிமாவுக்குப் போனால் அமராவுடன் போக வேண்டும் என்றார்கள். நாளடைவில் டிக்கெட் கூட இல்லாமல் அவளை உள்ளே அனுப்பினான் காசி. அவள் அதையும் விரும்பினாள். ரீல் பெட்டிகள் சுழல்வதையும் சதுரத்தின் வழி பாயும் ஒளியை அங்கிருந்து பார்க்கவும் காசி ஏற்பாடு செய்தான். சின்னதான ஒரு விரற்கடை அளவு அவள் விரலைப் பிடித்துப் பாயும் ஒளியில் நீட்டினான் திரை முழுவதும் ஓடும் அப்படத்தில் அவள் விரல் நுனி பூதாகாரமாய் எட்டிப் பார்ப்பதை அறிந்து இன்பமாய்த் திடுக்கிட்டாள். கொட்டகையுள் திட்டி விசிலடித்தார்கள். இருவரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள். பின்னாளில் சினிமாக் கொட்டகையே அவளுடையது போலானது.

ஊருக்குத் திரும்பி வந்த ஒரு நாளில் ரசாக் தன் வீட்டில் பூனைகளைக் காணாமல் பக்கத்து வீடுகளில் கேட்டான். அவர்கள் தயக்கமற்று காசிநாதனின் வீட்டைச் சுட்டினார்கள். தன் வீட்டை விட்டு அவை அங்கு சோறுண்ணச் செல்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வது என்று பலமாக யோசித்துக்கொண்டிருந்தான். அவன் வந்த வாசனை அறிந்ததும் பூனைகள் வீடு திரும்பி அவனைக் கொஞ்சின. அதன் வாஞ்சையில் அவன் கோபம் மெல்ல உள்ளே தள்ளப் பட்டது. ஊடலாகக் கோபித்துக்கொண்டான். அவைகளுக்கு இன்னும் நன்றாகப் பராமரிப்பும் உணவும் வழங்கப்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அப்பூனைகளின் அழகில் வேறு வழியின்றி மீண்டும் மயங்க ஆரம்பித்தான்.

அன்றிரவு அவன் அமராவதியைப் புணர்ந்து மயக்குவதில் ஈடுபட்டான். அவள் அத்தனை நாள் காத்திருப்பின் தாபம் மிதப்பதாய்ப் பிருட்டத்தைப் பிடித்து வேகம் காட்டினாள், சில வினாடிகளின் இயக்கத்திலேயே அவளை வெல்ல முடியாத ஒரு தூரத்தில் தடுக்கி விழுந்துவிட்டது போல் ஒரு பொறி தட்டிப் பறந்தது அவனுக்கு. தனக்கெதுவும் உடல் குறையில்லை வெறும் மனப்பயம்தான் என்றுணர்ந்து இயங்கினான். இருவருக்குமான ஒரே உச்சம்தான். அவன் விலகிப் படுத்தான். அவள் புணர்ந்த நிலையிலேயே ஆடைகள் கிடக்க, கீறிப்பிளந்த விழியோடு துயில ஆரம்பித்தாள். புரண்டு படுத்தபோது அவளுடைய ஆடைகளைச் சரிசெய்துவிட்டுப் படுத்தான். பயம் கண்களைத் திறந்து தூக்கத்தை விலக்க உருட்டியது. எப்போது தூங்கினோம் என்றறியாத கலை போன்ற துயிலில் விழுந்தான்.

அமராவதியின் தொடைவரை தொங்கும் நீண்ட கூந்தலும் மலர்ந்த உடலும் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பின. அவன் அதிகப்படியான கனத்தை உணரும்படியான அசைவில் மேலேறிப் படுத்தாள். அவள் உடல் சருகு என்று அவனுக்குத் தெரியும். கூந்தல் இரண்டாக முன்பக்கத் தோள்கள் வழி வழிந்து இறங்க, துவண்டு விட்ட அவனது குறியைப் பிடிவாதமாகத் தொட்டெழுப்பித் தனக்குள் நிரப்பிக்கொண்டு இயங்க ஆரம்பித்தாள். வலி உயிர் போவது போலிருந்தது அவனுக்கு. அவனைப் போலவே அவன் கால்களைத் தூக்கிப் பிடித்து அந்தரத்தில் நீந்தவிட்டாள். அப்படியான கோணத்தில் இல்லாமலேயே அவள் இயங்குவதற்குத் தடையெதுவும் இல்லாதபோதும் அவன் கீழிருக்க அவள் இயங்கும் உடலுறவு பிடித்திருந்தது. வலி மிகும் இடுப்பசைவும் கடினத் தசையால் படர்ந்த ஆண் மார்பைப் பிசைவதுமாய் அவள் இயக்கம் இருந்தது. அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளைக் கெஞ்சுவது போலி தந்தது அவன் முகம். அவளுக்காகப் பொறுத்துக்கொண்டான். அவள் முகம் மறைக்க வந்து விழும் கேசத்தை விலக்கியபடி வியர்வைத் துளிகள் பூக்கப் பூக்க அசைந்து கொண்டிருந்தாள். பிடிவாதமான அசைவுகளின் மூலம் அவள் உணர்த்தும் செய்தி அவனுக்கு உறைத்தது. தன்னை ஒரு உறுப்பாகவும் அதன் வீர்யங்களுக்கான கவனிப்பாகவுமே பாவிப்பது போன்ற உணர்வு அவனை வெட்கமுறச் செய்தது. அவனது பயம் அவள் மேல் கோபத்தைக் கொண்டு வந்தது. வலி தாளாது அவளை அப்படியே அந்தரத்தில் உருவித் தள்ளி மேலெழுந்தான். அவள் ஒதுங்கி விழுந்து அவமானப்பட்டாள். அவன் தனது ஆடையை எடுத்தான். அவள் அவனைக் குற்றத்துடன் பார்த்தாள். அவன் முனகியபடி வெளிவாசலுக்கு வந்தான். இதமான காற்று வெற்றுடம்பைத் தழுவியது நிம்மதியாக இருந்தது. உடல் பதறிக்கொண்டிருந்தது. முகப்பில் படுத்திருந்த பூனையைக் காலால் எத்தித் தள்ளினான். எஜமானனின் வெறுப்புப் புரியாத பூனை மெல்ல நழுவ ஆரம்பித்தது.

கயிற்றுக் கட்டிலை வாசலில் எடுத்துப் போட்டுத் துண்டைத் தலைக்கு வைத்துப் படுத்தான். நட்சத்திரங்களும் பிறை நிலவும் பார்க்கக் கிடைத்தன. அவை அவனை வரவேற்பது போலிருந்தது மனதுக்குச் சற்று இதமாக இருந்தது. பின் தவறு செய்து விட்டோமென உறுத்திக்கொண்டிருந்தது. அவளைத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னான். அவள வெளியே வரவில்லை. பிறகு அவனே எழுந்து சென்று மண் குடத்தில் நீர் சாய்த்து வயிறு முட்டக் குடித்தான். குளிர்ந்த நீர் குடலில் சேகரமாகி உடலே ஜில்லென்று ஆனது போலிருந்தது.
அமைதியைத் தேடி மனம் பரபரத்தது. முகம் தெரியாத மன அழுத்தமும் பெருமூச்சுக்குப் பின் சிறு விடுதலை உணர்வும் வந்தன. அவளைப் பார்த்தான். அவள் புடவை குறுக்கும் மறுக்குமாய் மேலில் மூடி அடிபட்ட பறவையாய் மருண்டு கிடந்தாள்.

சிறிது நேரத்திற்குப்பின் அவன் உள்ளே வந்து அவளருகில் படுத்தான். அவள் தன்னை மூடிக்கொண்டு அவனை விலக்கித் தள்ளினாள். அவன் பொறுத்துக்கொண்டான். குழந்தையை தூக்கிக் கொஞ்ச விழைவது போலவும் குழந்தை அவனிடம் ஒட்டாது ஓடி ஒளிவது போலவும் இருந்தது. அவன் வாய் விட்டுக் கெஞ்சினான். அவன் பொறுமையாய்ப் பேசும் அத்தனை வார்த்தைகளையும் கேட்டாள். கட்டியணைக்க முற்பட்டபோது தட்டிவிட்டாள். அவன் அப்படித் தொடர்ந்து தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவனுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவள் அப்போது அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். முறுக்கு மீசை வைத்த குழந்தை போலிருந்தான். திருவிழாவில் அசுரகதியில் வீசிப் பறக்கும் சிலம்பமும் அவன் மீசை உருவிக்கொண்டு தொடை தட்டிச் சிலம்பத்தை உயர்த்திக் கர்ஜிப்பதும் அவன் நினைவைத் தொட்டுத் திரும்பின. அவளுக்குள் சிறு மகிழ்ச்சி தொட்டு ஓடியது. அவள் நிலம் பார்க்கத் தொடங்கினாள். எதிர்பார்த்தவன்போல் அருகில் வந்து அணைத்தான். காதல் வார்த்தைகளை முத்தமிட்டபடி கிசுகிசுத்தான். அவள் அவனைச் செல்லமாகத் தோளிலும் நெஞ்சிலும் அடித்தாள். முதுகில் குத்திப் பிருட்டத்தைக் கிள்ளினாள். அவன் மெல்ல அவளை மலர்த்தி, குனிந்து ஆடை விலக்கி அவள் யோனியில் உதடு பதித்தான். அவன் அப்படிச் செய்வான் என்று அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை . அவனும் அது தன் வீரத்திற்கு அழகல்ல என்று கருதியிருந்தான். அதுதான் அவளை வசியப்படுத்த அவன் வைத்திருந்த கடைசி ரகசியமாய் அவனுக்குப் பட்டது. அவள் கூசினாள். தலையைப் பற்றி முகத்திற்கு இழுத்தாள். விருப்பமாக முலை பருகும் உணர்ச்சியோடு சுவைக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவள் கால்களை அகட்டியபடி கூத்துக்காரனைப் போன்ற அவனது நீண்ட சுருள் கேசத்தைச் சுரக்கும் தினவுடன் கோதிவிட ஆரம்பித்தாள்.

பல நாட்கள் பூனைகள் அவன் வீட்டை விட்டு வெளியேறாதிருந்தன. அவைகளுக்குப் பராமரிப்பும் சம்பாத்தியமுமாய் ஊருக்கு ஊர் சிலம்பம் கற்றுக்கொடுப்பதை மேலும் அதிகப்படுத்திக்கொண்டான். அவனது சிலம்ப வீச்சில் அவன் காதலும் குடும்ப விசனமும் இருந்தது. சிலம்பம் கோலி எடுக்கும்போது கெண்டைக்காலில் தட்டிக்கொண்டிருந்தது மனப்பிசகு என்று சமாதானப்படுத்திப் பார்த்தான். பாடத்தில் சிறு பிள்ளைகள் சுற்றத் தெரியாமல் இடித்துக் காள்ளும் நிகழ்வு தனக்கு நேர்வது அபசகுனம்தான். விசனம் விழத் தொடங்கிய காலத்தில் ஊர் தொலைவாகிக்கொண்டுவந்தது.

அவன் தொழில் செய்து கொடுத்த ஊர்களில் அவனை விசாரித்தவர்கள் அமராவதியின் பூனை மீண்டும் மீண்டும் வீட்டில் தங்காதது பற்றியும் பேசிவிட்டுச் சென்றார். அந்நேரங்களில் ரசாக் மிகவும் மனமொடிந்து போனான். பூனைகளுக்குக் காசி என்னென்ன உணவு வகைகளைக் கொடுக்கிறான் என்று ரசாக் யோசித்துப் பார்த்தான். இந்தப் பூனைகளுக்குக் கொஞ்சமும் விசுவாசம் இடையாது என்றெண்ணினான் அதன் முடிவில், சலிக்காமல் கொள்ளாமல் எப்படி ஒரே விதமான அல்லது அதைவிட அதிகமான ருசியோடும் அளவோடும் தினமும் பரிமாறுவது. அது ஒரு மனிதனால் முடிகிற காரியம்தானா என்றும் நினைத்தான். இதுவரை ரசாக்கின் பூனை சாப்பாடு போதுமென்று எழுந்து போனதாகவே தெரியவில்லை என்று நினைத்தபோது திடுக்கிடலான பயம் வந்தது. கொஞ்சம் முயற்சித்தால் இன்னும் சிறிது நேரத்திற்குப் பிறகு என்பது போல் சுற்றிவந்து பருக்கைகளை நாவால் தீண்ட ஆரம்பித்து விடுகிறது என்பதை யூகித்து மலைத்தான். அதை எப்படி எவ்வகையில் பராமரித்து வந்தால் நம் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கும் என்பதுதான் அவனுக்குப் பிரச்சினையாக இருந்தது. சோறிடுவதற்கு முன்பு அவைகளுக்கு விசுவாசத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று நினைத்தான். அவன் வீட்டுப் பூனைக்கு அது புரியுமா என்றும் எண்ணினான். நிறையப் பூனைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறான். அவைகளெல்லாம் வீட்டுக்குள் தான் இருக்கின்றனவா என்று சந்தேகித்தான். இவன் வீட்டுக்கு எதேச்சையாக வந்த சில பூனைகளுக்கும் இவன் சோறிட்டுப் பார்த்திருக்கிறான். சிலதுகள் உணவைப் பொருட்படுத்தாது சட்டெனத் துள்ளி ஏறி ஓடிவிட்டிருக்கின்றன. சிலதுகள் அவன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது பதுங்கியபடி எதிர்ச் சாரியில் நின்று குரல்  கொடுத்திருக்கின்றன. அவன் அலட்சியம் செய்து கடந்துவிடுவான். அது போல் தன் வீட்டுப் பூனை ஏன் இங்கேயே தன் வீட்டிலே மட்டும் இருந்துவிடக் கூடாது என ஏங்கினான்.

ஒரு வெள்ளிக்கிழமையில் டூரிங் டாக்கீஸில் வேற்றூரிலிருந்து தனியாளாக வெறுப்பும் அலைக்கழியும் மனச்சுமையுமாய் வந்து காத்துக் கிடந்தான் ரசாக். டிக்கெட் கிழிப்பவன் அமராவதியின் பூனையைக் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுவதை கீற்றுப் பொத்தல்கள் வழி பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அப்போது அப்போது தன் பூனையை எல்லோருக்கும் தெரியம்படியாகவே காட்டிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அது பற்றி பயம் போய்விட்டிருந்தது. அன்றிரவு அவளுக்காக இனிப்புகளும் மலர்ச்சரங்களும் வாங்கிச் சென்று அவளுக்கு முன் வீட்டில் காத்திருந்தான். அன்றிரவு அவனுக்கு நெருக்கமான தோழியுடன் தாமதமாக வீடு வந்தாள். அவனைக் கண்ட அவளுக்குள் குறுகுறுத்தது. ரசாக் எதுவும் பேசாது அவலை சோறு போடச் சொல்லிப் பார்த்தான். அவள் முகம் கைகால் அலம்பிக்கொண்டு வந்து சோறு போடத் தொடங்கியபோது வாசல் கதவைச் சாத்திவிட்டு ஆடைகளைக் கழற்றச் சொன்னான். அவளுக்குப் பயமும் உதறலும் எழும்பத் தொடங்கின பிறகு அவனே வந்து ஆடை களைந்தான். உடலுறவு கொள்வான் என்று எதிர்பார்த்தாள். அவன் சோறுபோடச் சொன்னான் அவள் துணியை எடுத்து மேலில் போர்த்த முனைந்தபோது அவன் உள்ளே சென்று சிலம்பக் கழியைக் கொண்டு வந்து வலது கையைக் கழிமேல் ஊன்றி வைத்து ஒரு பைத்தியக் காரனைப் போல் அவளைப் பார்த்தான். அவள் மிரள ஆரம்பித்தாள். அவளைப் பயப்பட வேண்டாமெனக் கூறி நான் சொல்கிறபடி நடந்து கொண்டால் போதும் என்றான். அவள் துணியைப் பிரம்பால் ஒதுக்கித் தள்ளினான். மீண்டும் அவளைச் சோறு போடச் சொன்னான். அவளுக்கு மிகுந்த கூச்சமாக இருந்தது. தனக்குள் ஒடுங்கியபடி நடந்து சென்று பானை திறந்து தட்டில் சோறும் கிண்ணத்தில் குழம்பும் ஊற்றி எடுத்து வந்தாள். அவன் எதிரில் நிற்க முடியாமல் நகரச் சென்றவளை நீட்டிய பிரம்பால் தொட்டுத் தனக்குப் பிசைந்து ஊட்டுமாறு சொன்னான். அவள் தான் துணியை உடுத்திக்கொள்வதாக மெதுவாகக் கெஞ்சினாள். இமைக்கும் நேரத்தில் பிரம்பு காற்றைக் கிழித்து அவள் தோளையும் தொடையையும் தட்டி மீண்டது நுட்பமான அடியாக இருந்தது. வலியுடன் கூடிய விர்ரென்ற பயம் அவள் உடல் முழுதும் பரவி அழுத்தியது. அவள் அவன் முன் அமர்ந்து சாப்பாட்டைப் பிசைந்து அவனுக்கு ஊட்டினாள். அவளுடலை வெறித்துப் பருகியபடியும் மீசையை உருவிவிட்டுக்கொண்ட படியும் அகல வாய் திறந்து உருண்டைகளை வாங்கி மென்றான அவளுக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டாள். மலர்களை எடுத்துச் சூடிக்கொள்ளச் சொன்னான் எடுத்துக் கூந்தல் சுற்றி வைத்துக்கொண்டாள். கூந்தலை அவிழ்த்துவது சொன்னான். இனிப்புகளை எடுத்துச் சுவைக்கச் சொன்ன அவனும் வாய் திறந்து பெற்றுக்கொண்டான். அவளை சோறுண்ணச் சொன்னான். இவை யாவும் ஒரு நிதானித்த லயத்திலேயே சொல்வதுதான் அவளுக்கு பேரச்சமாக இருந்தது. அவள் சாப்பாடு வேண்டாமென்று கூறிப்பார்த்தாள். அவன் சாப்பாடு போட்டுவந்து அவளுக்கு ஊட்டினான். அவளுக்கு எதுவோ முழுதும் புரிந்தது போலிருந்தது. இனிப்புக்குள் விஷமிருந்திருக்கும் எனக் கருதி அழ ஆரம்பித்தாள். அவனும் இனிப்பு உண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவளை அலக்காகத் தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான். படுக்கை முழுதும் மல்லிகை மலர்களைச் சிதறப் போட்டு வைத்திருந்ததைப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. இது ஒரு இன்பமான நாளாகவே முடிந்து அவன் கோபம் தீர்ந்துவிட வேண்டிக் கொண்டாள். அவன் முத்தங்களோ கட்டியணைப்புகளோ எதுவுமின்றிப் புணர ஆரம்பித்தான். அவள் எந்தப் பிணக்குமில்லாமல் உடலை வகுத்துக் கொடுத்தாள். அவனுடைய உச்சம் முடிந்து சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவளைப் புணரக் கோரி மேலேற்றினான். அச்சிறிது நேர ஓய்வில் அவன் மேல் வழிந்த வியர்வையை அவள் மெல்லத் துடைக்க முற்பட்டபோது அவள் விரல்களைக் கெட்டியாகப் பிடித்தழுத்தித் தூர வீசினான். அவனாய்த் தணிந்தால்தான் உண்டு என்றுணர்ந்தவளாய் அவனுடலின் மேலே சாய்ந்து லேசான குரலில் வேண்டாம் என்றாள். பிடிவாதமாக நிமிர்த்தி இயங்கச் செய்தான். அவள் மெல்ல இயங்க ஆரம்பித்தாள். உடலுறவுக்கெதிரான முகத்துடன் வேகம் கூட்டச் சொன்னான். காட்டினாள். இன்னும் இன்னும் என்று துரிதப்படுத்தினான். தடுமாறினாள். உறுப்பு கழன்று விலகியது. கைகளைத் தலைப்பிணைப்பாய் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் தோரணையில் அவளையே எடுத்துப் பொருத்தச் சொன்னான். மீண்டும் இயக்கம் துரிதம். அவளுக்கு மிக எரிச்சலாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் சோர்வுற்றுப் படுத்தாள் அவன் மேலேயே. சட்டென அவளைப் புரட்டி அவன் மேலேறிப் புணர ஆரம்பித்தான். புணர்ந்து கொல்லும் ஆவேசம் அவன் கண்களில் அலைந்தது. அவளுடல் ஓரிடத்தில் நில்லாமல் நகரத் தொடங்கிய போது தரையில் ஊன்றியங்கிய தன் கரங்களை அவளது இரு கைகளிலும் பற்றியழுத்திப் பிடித்துக்கொண்டு இயங்கத் தொடங்கினான். மிருக வெறி அவன் உறுமலில் கசிந்து கொண்டிருந்தது. அவளுக்கு அவனது சிலம்பாட்டத்தின்போது எழும் ஆவேசம்தான் நினைவுக்கு வந்தது. அவளுடல் பயங்கரமான களைப்பில் பிசுபிசுத்தது. சில நிமிடங்களில் விலகிக் கவிழ்ந்தான்.  மூச்சற்ற மௌன வெளி அவள் அறையை அடைத்துக்கொண்டிருந்தது. அவள் தன் ஆடைகளை எடுக்க முனைந்தபோது காலால் - லாவகமாகத் தன் பக்கம் தள்ளிக்கொண்டான். அவள் ஆடைகளைக் கேட்டாள். அப்படியே படுத்துக்கொள்ளுமாறு கூறினான். உடலைக் குறுக்கி மூலையில் அமர்ந்த அழத் தொடங்கினாள். ரசாக்கிற்குச் சற்று நிம்மதியாக இருந்தது. அவன் எதையும் கண்டுகொள்ளாதவன்பே கூரையை வெறித்துக் கிடந்தான். பிறகு துணிகளைச் சுருட்டி அவள் மேல் விட்டெறிந்துவிட்டு வாசலுக்கு எழுந்து போனான் அவனுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. வாரிக்கொண்ட ஆடைகளில் புதைந்தழுதாள். நிதானமாக அழுகை முடித்து ஒவ்வொன்றாய்ப் பூட்டிக்கொண்டாள். எங்காவது ஓடிவிட வேண்டும் போலிருந்தது. காசியின் ஞாபகம்தான் வந்தது. சட்டென அவள் மனம் தீவிரமான காத்திருப்பில் வலிக்கத் தொடங்கியது. ஒரே ஒரு அசமந்த கணம்தான் தேவையென்று பட்டது. ரசாக்கை நினைப்பதற்கே பயங்கரமாக இருந்தது. ரசாக் இனித் தன்னுடன் பழையபடி கொஞ்சிப் பேசவோ விளையாடிக் களிக்கவோ மாட்டான் என்பதாக உறுத்திக் கொண்டிருந்தது. இது இனிமேல் தினம் தினம் தொடரும் என அவள் மனம் பயமுறுத்திக்கொண்டிருந்தது. காசி கடைசிவரை தன்னை வைத்துக் காப்பாற்றுவானா என யோசித்துக் குழம்பினாள். வாசலில் கட்டிலில் ரசாக் படுத்திருப்பான் என எண்ணினாள். அவளும் தரையில் படுத்துருண்டு கொண்டாள். இனிப்பில் எதுவும் விஷமில்லை என்று விடியுமுன்பான உறக்கத்தின்போதுதான் அவள் முற்றாக உணர்ந்து கொண்டாள். இருவரும் பிரிந்து படுத்திருப்பதும் முன் இரவின் பயங்கரம் இனி எப்போதுமில்லை என்பதுபோல் மனம் நினைத்தது. ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்டு அழ வேண்டுமென்று நினைத்தாள்.

அப்போதைய இருளின்போது தன் பாதங்களை வருடும் உணர்வும் மெத்தென்ற தொடுகையுணர்வும் ரசாக்கிற்கு வந்தது. பூனை அவனை வாஞ்சையுடன் பார்த்துச் சப்தமிட்டது. அதை அலட்சியமாகத் தட்டிவிட்டுத் தூங்க எத்தனித்தான். அதன் மென்மையும் அழகும் அவனை வதைத்தன. ஆயினும் அதன் குணம் அவனுக்குப் பிடிக்கவில்லை . இவ்வுலகிலேயே நாய்தான் நன்றியுள்ளது என்று நினைத்தான். அப்பூனை அவனருகில் நெருங்கி நின்று தன் விருப்பத்தை உணர்த்தியது. அவனுக்கு அது தேவையாக இருந்தது. அவனும் அதைத் தடவிக் கொடுத்தான். கண்களைத் திறவாமலேயே கட்டித் தழுவினான். அவன் விரல் மேவிக் கலைவதில் பூனையின் உடல் விருப்பமாக நடுங்கியது. அவன் அதன் உயிர் அழுத்தத்தை உணர்ந்தான். அதன் கழுத்துப் பகுதி வந்தவுடன் காத்திருந்தவன் போல் அவன் காலைச் சுற்றி இழைந்தபடி வந்து கொண்டிருந்தது. சிலம்பக் கோலை உள்ளே சென்று எடுத்துவந்து பூனையின் நடுமுதுகில் வைத்து நீவி விளையாடினான். அது அவனைப் பழைய மிரட்சியுடன் பார்த்துக் கெஞ்சியது. காலால் மிக நுட்பமாகப் பூனையைப் புரட்டி சிலம்பக்கோலை உள் கழுத்தில் வைத்தான். அதன் நாடி துடிப்பதைக் கம்பின் வழி உணர்ந்தான். மிக லாவகமாகவும் நுட்பமாகவும் கம்பைத் தூக்கி வீசி முடித்தான். ஒரே ஒரு வீச்சுதான். அவன் எதிர்பார்த்ததுதான். எந்தச் சப்தமுமில்லாது அது மல்லாந்து படுத்துக் கிடந்தது. பிறகு நிதானமாக உள்ளே சென்று கத்தி எடுத்து வந்து சிலம்பக் கோலை இரண்டாக வெட்டி முறித்துப் பூனைமேல் வீசினான். நிதானமாக எழுந்து சென்று அமராவதியின் புடவை ஒன்றைக் கொண்டுவந்து தூக்கை ஏற்றிப் பூனையை மாட்டினான். அந்தரத்தில் நின்று கொண்டு தரையைக் குனிந்து பார்க்கும் ஒரு ஜீவனைப் போல அது தொங்கத் தொடங்கியது.

5


காசி அகாலத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சைக்கிள் சப்தத்தைக் கேட்டபடி தந்திக் கம்ப இருளில் பஞ்சுப் பாதங்களுடன் காத்து நின்றது செம்பழுப்பு நிறப் பூனை. யாருமற்ற அத்தெருவின் குறுக்கே இடமும் வலமும் பயந்தபடி பார்த்துக்கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தது. அவன் வீட்டுக் கிழவி போ போவென விரட்டினாள். அவள் மேல் பாய்ந்துவிடுவது போல் கத்தி முன்னங்கால்களை முன்னும் பின்னுமாய் அசைத்துப் பார்த்தது. அவன் கிழவியைச் சமாதானப்படுத்தி விட்டுப் பூனையை வாரிக்கொண்டு சாப்பாட்டில் அமர்ந்தான். அவனுடன் வெவ்வேறு விதமாய் முனகியும் கத்தியும் பேசிக்கொண்டிருந்தது. அதற்குத் தரையில் உணவு உருட்டி வைத்தான். அவனை விட்டு நழுவியோடி நாவால் தீண்டித் தின்னத் தொடங்கியது. பிறகு அவன் பின்புறத்தில் மெத்தென்று சாய்ந்து உரசி அமர்ந்தது. அவனுக்கு விருப்பமான குறுகுறுப்பாக இருந்தது.

அதிகாலை இருளில் ரசாக் தன் படுக்கைக்குள் நுழையும் பூனையை உணர்ந்தவனாய் கண் திறவாத விழிப்பில் வாரி மார்பில் போட்டுக்கொண்டு தடவிக்கொண்டிருந்தான். தன்  பூப்பாதங்களை அவன் வெற்றுடல் மீது நடை பழகிக் காட்டியது. அவன் கட்டியணைத்தான். அது விருப்பமாகக் கத்தியது.

விடிந்தபின் ஆதியம்மாளின் குரலில் அது எழுந்து சுவரில் ஏறி அமர்ந்து கொண்டு கீழே நிகழும் குடும்பத்தை பார்த்துக்கொண்டிருந்தது.

**

உயிர்மை இதழில் வெளியானது (நவம்பர் 2003)
*

இன்னொரு சிறுகதை :
ஆண்களின் படித்துறை – ஜே. பி. சாணக்யா

Wednesday, September 9, 2020

யூசுப் மாமாவின் கடிதம்

 என் சீதேவி வாப்பா நாகூரில் 'மௌத்'தானபோது அவர்களின் பிரியத்திற்குரிய மச்சான் யூசுப்,  மலேசியாவிலிருந்து எனக்கு எழுதிய ஆறுதல் கடிதம் இது. மாமாவின் தமிழார்வம் பிரசித்தம். ‘அருளகம்’ என்று தன் ஏம்பல் வீட்டிற்குப் பெயரிட்டு ஆலிம்ஷாக்களால் அவதிப்பட்டார்கள். இப்போது ஊரார் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏம்பல் போய் எப்படியும் முப்பது வருடங்கள் இருக்கும். சிங்கப்பூர் / மலேசியா 1996-ல் சென்றபோது மாமாவை சந்தித்திருக்கிறேன். உயிரை உருக்கும் அதே பாசம்! இப்போது மாமாவும் இல்லை. கொரோனா காலம் முடிந்து ஊர் சென்றால் குடும்பத்தாரைப் பார்க்க முயற்சிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்! - AB

----------


கோலாலம்பூர்
2/6/95

அஸ்ஸலாமு அலைக்கும்

அறிவார்ந்த என் அன்பு மாப்பிள்ளை
ஆபிதீன் அவர்களுக்கு
அன்புடன் மாமா எழுதுவது.
முத்துக் கோத்த கையெழுத்தில் முகவரி
எழுதியிருந்த தங்கள் முந்திய கடிதமும்
பிந்திய கடிதமும் கிடைக்கத்தான் செய்தன!
நான் படித்துக் கொண்டிருந்த போதே
பக்கத்தில் இருந்து கவனித்த நண்பர்கள்
கடிதத்தில் அழகிலும் கையெழுத்தின்
கவர்ச்சியிலும் மயங்கி
அதை அப்படியே அப்பிக்கொண்டு
சென்றவர்கள்
இறுதிவரை திருப்பித் தரவே இல்லை.
அட்ரஸையும் கிழித்துவிட்டு அவதிப்பட்டுக்
கொண்டிருந்தேன்.
இதற்கிடையில்
வாப்பா வந்துவிடுவார்கள் ; முகவரி
வாங்கிவிடலாம் என்று காத்திருந்தேன்.
முகவரி தரவேண்டியவர்கள் மூச்சை
அடக்கிக் கொண்டார்கள் என்ற தகவல்
கிடைத்தவுடன் மூச்சையாகிவிட்டேன்!
என்ன கொடுமை... என்ன கொடுமை...
போன வருஷத்தில் சில வாரங்கள்
என்னுடன் தங்கியிருந்துவிட்டு
மருமகள் .. கல்யாண விஷயமாகத்தான்
சடுதியில் புறப்பட்டார்கள்.
திரும்பி வரும் நேரந்தான் என்று தெம்பாக
இருந்து நேரத்தில்
திருவிளக்கு அணைந்துவிட்ட
சேதி வந்துவிட்டதே மாப்பிள்ளை; என்ன
செய்வேன்?
அறுபது வயசு ஒரு வயசா?
அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அகால முடிவு?
சோகத்தில் முடிந்துவிட்ட மகள் .. கல்யாணம்
அவர்களைச் சுட்டெரித்து விட்டிருக்கலாம்
என்று என் தங்கை எழுதியிருந்தது!
நான் நம்பவில்லை.
எதையும் தாங்கும் இதயம் கொண்ட
என் மச்சான்
எதிர்பாராது நடந்த விஷயங்களுக்கு
எல்லாம் ஏங்கிப்போய் - இடிந்துபோய்
விடுவார்களா?
நான் நம்ப மாட்டேன்!
ஏம்பலும் அறந்தாங்கியும் ஒக்கூரும்
நாகூரும் எட்டிப்போய் இருக்கின்றன
உறவல்ல!
மாமாங்க காலமாய் ஒட்டிப்போய்
இருக்கின்ற உறவுதான்!
அதை எந்தச் சக்தியும் இடித்துத்
தகர்ந்துவிட முடியாது!
ஆபிதீனும் ஒரு ஹாரூன் ரஷீதும்*
இருக்கும் வரை
அந்தச் சொந்தம்
தொடர்கதையாகிக் கொண்டே வரும்.
மருமகள் ... வாழ்க்கை
மறுபடி சிறக்கவும் - சிரிக்கவும் -
செழிக்கவும் -
என் மனம் நிறைந்த வாழ்த்துகளை
மாலையாக்கிச் சூடுகிறேன்!
*‘காதருவி’ பாட்டியின் மானசீகமான
ஆசி தங்கள் குடும்பத்துக்கு
எப்போதும் உண்டு!
‘மடிந்து போன மாப்பிள்ளை’
என்று எழுதியிருந்தீர்கள்.
அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
இடிந்து போன மாப்பிள்ளை
என்றால் ஏற்றுக் கொள்வேன்.
குத்துவிளக்கின் பெருமை
கும்மிருட்டில்தான் தெரியும்!
’மில்லியன்கள் புரளும்
இடத்தில் மிஸ்கீனாக’ வாழ்ந்தாலும்
அன்பு செய்வதற்கும்
ஆறுதல் கூறுவதற்கும்
அரவணைத்துப் போவதற்கும்
அது என்ன இடைஞ்சல்
செய்துவிடும்?
குடும்பத்தின் மூத்த பிள்ளை
நீங்கள்!
அந்தத் தகுதியை மட்டும்
தற்காத்துக் கொள்ளும்படி
தாழ்மையோடு
கேட்டுக்கொள்கிறேன்!
உங்களை நம்பித்தான் எல்லோரும் -
அம்மா உட்பட!
*மம்மசன் வம்சத்து வாரிசு
என்பதை நிரூபிக்க
நிச்சயம் முயற்சி செய்வீர்கள்
என்று மனப்பூர்வமாய்
நம்புகிறேன்.
வஸ்ஸலாம்.

அன்புடன் மாமா
K. M. யூசுப்
2/6/96
------------
ஹாரூன் ரஷீத் - சின்ன மாமாவின் பெயர்
‘காதருவி’ பாட்டி - யூசுப்மாமாவின் தாயார்
மம்மசன் - வாப்பாவின் செல்லப்பெயர்

Tuesday, August 11, 2020

ஆன்மீகப் பேரனுபவங்கள் - அமீர் அப்பாஸ்

ஹனீபாக்காவின் முகநூலில் இருந்து நன்றியுடன்...

*

ஆன்மீகப் பேரனுபவங்கள் -  அமீர் அப்பாஸ்

பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
நீங்கள் ஒரு படுகொலை செய்யும் போது
அது படுகொலை ஆவதில்லை


நேர்ச்சை செய்து
விடப்பட்ட ஆடு
வெட்டப்படும் போது
அடையும் குதூகலத்திற்கு
ஒப்பானதாக மாறிவிடுகிறது


பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
நீங்கள் ஒரு துரோகம்
செய்யும் போது
அது துரோகமாக மாறுவதில்லை


வரலாற்றின்
மகத்தான நீதியாக மாற்றப்பட்டு விடுகிறது
 

பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
நீங்கள் ஒருவரின் வீட்டை அபகரித்தால்
 

அந்த வீட்டின் மூலப்பத்திரம்
உங்கள் பெயரிலேயே
உருவாகி விடுகிறது
 

பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
ஒருவரின் ஆலயத்தை
நீங்கள் ஆக்ரமித்தால்
 

அந்த தவறு கூட
ஆன்மீகப் பேரனுபவமாக
மாறி விடுகிறது
 

அதிகாரத்தின்
கால்களில் மிதிபட்டு
ஆயிரம் ஆயிரம்
உயிர்களைப் பறித்த
செங்கல் சமாதி
 

பெரும்பான்மை வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு
புண்ணியங்கள் போற்றும் திருக்கோயிலாகி விடுகிறது
 

பஞ்ச பூதங்களின்
பேராற்றலில் இருந்து புரிந்துகொள்ளப் பட்ட
பகவான்
 

இப்போது பஞ்சமா பாதகங்களின் வழியாக
பூஜை செய்யப்படுகிறார்
 

எல்லோரும்
மது அருந்தும்
ஒரு திருநாளில்
 

அதற்கு
தாய்ப்பால் என்று
பெயர்சூட்டி விடுவது
தர்மமாகி விடுகிறது

*

நன்றி : அமீர் அப்பாஸ்

Saturday, July 18, 2020

திருக்குறளார் உரை

நண்பர் நாகூர் ரூமி கொடுத்த,  திருக்குறள் முனுசாமி அவர்களின் பேச்சை பத்து வருடங்களுக்கு முன்பு என் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தேன் - ’கொஞ்சம் சிரியுங்கள் - மதம், இலக்கியம், அரசியல்னு எப்போ பார்த்தாலும் பிறாண்டிக்கிட்டு அலையாமல்!’ என்ற குறிப்புடன். ( சுட்டி : https://abedheen.wordpress.com/2010/08/04/thirukkural-munusami/ ) . அதை சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருக்கிறார் அன்பர் ஏ. ராதாகிருஷ்ணன். ‘திருக்குறளாரின் பொழிவினைக் கேட்டேன். அவர் பொழிவின் அருமையும், பெருமையும், ஆழமும், மிளிரும் நகைச் சுவையும் உலகறிந்தவை...! அரிய இவ்வுரை போல வேறு தங்களிடம் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அதையும் பதிவிட்டால், நாம் பெருங்களிப்படைவோம்; அதே போல், நம் தமிழ் உலகும்...’ என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.  அவருக்கு கீழ்க்கண்ட சுட்டிகளைக் கொடுத்தேன். களிப்படைவீராக!

Download :

1. https://abedheen.files.wordpress.com/2010/08/thirukkural-munusami-3.mp3

** 2. https://abedheen.files.wordpress.com/2020/05/thirukkural-munusami-from-abedeen-wp-04.mp3

** 3. https://abedheen.files.wordpress.com/2020/05/thirukkural-munusami-from-abedeen-wp-05.mp3


also visit :
இன்பம் கேட்க கேட்க அதிகரிக்கும்!

Thursday, July 9, 2020

குருத்துவாசனை (சிறுகதை) - சு.மு.அகமது

குருத்துவாசனை  - சு.மு.அகமது

ரு கணம் அவள் கூறின வார்த்தைகளின் அர்த்தம் புரியாது திகைத்த நான் அதன் பொருள் விளங்கியதும் திக்கென்ற மனதுடன் பாரமாய் ஏதோ நெஞ்சக்குழியில் இறங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

எனக்கான உறவில் அவளும் எத்தனை ஆழமாய் ஆழ்ந்திருந்தால் அதை எதற்காகவோ துறந்துவிட அனுமதியாது தீர்மானமாய் தீர்க்கமான முடிவெடுத்திருப்பாள்

ஆச்சரியம் ஆச்சரியமாய் பிரவாகமெடுத்தது.

சுரீரென்று முள் தைத்த வலியாய் உள்ளம் கிடந்து தவித்தது.

ஆச்சரியம் ஆதங்கமாக மாறியது.

அவள் மீது கனிவான எனது பார்வையை படரவிட்டேன்.

ஒரு தீர்மானத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன்.வாசற்கதவை திறந்து கொட்டும் மழையில் நனைந்தபடியே ஏதும் பிரக்ஞையற்றவளாய் அடுத்த தெருவிலிருந்த மருந்தகத்தை (மெடிக்கல் ஷாப்) நோக்கி நடையை கட்டினேன்.

அருவியின் சாரலாய்  சுகம் தர வேண்டிய மழைத்துளிகள் ஏனோ முள்ளாய் மாறினது போல் உடலெங்கும் குத்த துவங்குகிறது.

 

சேலைதலைப்பை எடுத்து தலை மீது போர்த்திக்கொண்டே திரும்பி வீட்டை பார்க்கிறேன்.பாதி திறந்த வாசற்கதவின் அருகே சாய்த்து வைத்திருந்த குடை சரிந்து கீழே வீழ்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தது.

மழை இன்னும் பெய்தபடியே இருக்கிறது.

ற்று நேரத்துக்கு முன்பு….

புருவத்தின் மீது விழுந்து மெதுவாக கன்னத்தின் மேடான பகுதிக்கு குதித்து வழிந்து மெல்லிய ரோம வரிகளைக் கடந்து மேலுதட்டின் மேற்பரப்பில் வந்து நின்று நழுவ பார்த்ததை நாக்கை சுழற்றி லாவகமாக நுனி நாக்கில் ஏற்றி உள்ளுக்குள் இழுத்தபோது சில்லிட்டது உடம்பு.

கனமான துளியாக இருந்திருக்க வேண்டும்.அதனால் தான் உடற்சூட்டில் ஆவியாகாது உதடு வரை பயணித்திருக்கிறது.

’பொட்’டென்று தலை மீது விழுந்ததையும் உதடு வரை வரவழைக்க கீழே குனிந்தபோது தான் தரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பட்டுத்தெறித்து படர்ந்தவைகளை கண்டேன்.ஆவல் மிகுதியால் அண்ணாந்து பார்த்த என் பார்வையில் பட்டன மேற்கிலே கருகருவென மேலெழுந்து வேகமாக பாய்ந்து வந்து கொண்டிருந்த கருமேகங்கள்.

உடம்பினுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

எத்தனை காலமாகிவிட்டது. கொட்டும் மழையும் அதில் குதித்தாடும் பொழுதுகளும். இவை எல்லாம் மறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிற தருணத்தில் புதிய நம்பிக்கையாய் இந்த மேகங்கள் வந்து இங்கு கொட்டட்டும்.

நம்பிக்கை வீண் போகவில்லை.தவணை முறையில்  மேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்து தங்களுக்கானதை தாரை வார்க்கத்துவங்கின. 

திடீரென்று வேகங்கூட்டியது கொட்டும் கனமழை.

இப்பொழுது தான் தலை மீதிருந்து வேகமாக வழிந்து வந்த மழைநீரின் மென்சூட்டை உணர ஆரம்பித்தேன்.உதட்டோரங்களில்  வழிந்த நீரை உதட்டைக்குவித்து உள்ளுக்குள் உறிஞ்சினேன். லேசான உடலின் கரிப்பு உள்ளுக்குள் ஒரு புதிய சுவையை கூட்டியது.

மழை வலுத்தது.

வீட்டிற்குள் நுழைந்து வாசற்படி  அருகிலேயே நின்றுகொண்டு கைகளை கோப்பையாக்கி மழைநீரை சேகரித்து அதை அப்படியே வானத்தை நோக்கி எறிந்தேன்.

தெருவில்  சொட்டச்சொட்ட நனைந்தபடி இன்னும் விளையாடிக்கொண்டிருந்த ஆறாம் வகுப்பில் படிக்கும் என் மகள் நிவேதிதா கண்களில் பட்டாள்.

கைகளிருந்த நீரை உதறிவிட்டு ‘டீய்’..என  குரல் கொடுத்தேன்.

மழை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது.நிலத்தை நோக்கி வேகமாக தனது ஓட்டத்தை கூட்டும் மழைநீருக்கு என்ன அவசரமோ புரியவில்லை.பூமிக்குள் தஞ்சம் புக விரைந்தோடுகிறது.

அறைக்குள் நுழைந்தேன்.திறந்திருந்த தெருவோர சன்னல்  வழியே மழைச்சாரல் அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இடது கையால் சன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு வலது கையை கம்பிகளுக்கிடையில் விட்டு சன்னல்  கதவை இழுக்க முயற்சித்தேன்.சன்னலின் கம்பிகள் வலது கன்னக்ககதுப்பில் பதிந்து சில்லிப்பை என்னுள் படர்த்தியது.மழையில் நனைந்த இரும்புக்கம்பிகளின் வாசனையை நுகர்ந்தேன்.எதிர் பக்கத்து சன்னலை மூட வேண்டி  கைகளை மாற்றிக்கொண்டு வேண்டுமென்றே இடது கன்னத்தை கம்பிகளின் மீது ஆழ அழுத்தினேன்.வஞ்சனை கூடாது என்ற எண்ணமெழுச்சி அதிகமிருந்தது அழுத்தலில்.

அப்போது தான் என் கண்களில் மறுபடியும் மழையில் நனைந்தபடி நின்றிருந்த நிவேதிதா பட்டாள்.அவள் கைகளை கோப்பையாக்கி அதில் நிறைந்த மழை நீரை  மறுபடியும் வானத்தை  நோக்கியே தூக்கி எறிந்துவிடுவதும் அண்ணாந்து வானத்தைப்பார்த்து எறிந்த நீர் முகத்திலேயே வந்து வீழ்ந்து தெறிக்குமாறும் முகத்தை அங்குமிங்குமாய் அசக்கிக்கொண்டிருந்தாள்.முகத்தில் வழிந்தோடிய நீரை வலது கை உள்ளங்கையால் அழுத்தி துடைத்துக்கொண்டே ‘ஹோ’வென்று  கூச்சலிட்டு குதித்துக்கொண்டிருந்தாள்.

அவள் அணிந்திருந்த உடை உடலோடு ஒட்டியிருந்தது. வெளித்தெரிந்த உடல்வாகு எனக்குள் ‘பக்’கென்று எதையோ கொளுத்தியது.இன்னும் எத்தனை நாள் இவள் இப்படி சுதந்திரமாய் திரிவாள்.எண்ணும்போதே மனதுள் ஏதோ உருவாகி ஓடியது.

’சே’. எதற்கு இப்போது இந்த நினைப்பு.

வெளியே மழை வலுத்து விட்டிருந்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனுடன் கொஞ்சியும் குலாவுவதையும் விட்டுவிட்டு எப்போதோ கட்டாயமாக நிகழப்போகும் ஒரு இயற்கை நியதிக்காய் ஏன் கலங்க வேண்டும்.எல்லாம் சகஜமாகிப்போன நிகழ்வு தானே என மனதை தேற்றிக்கொண்டேன்.

தூரத்தில் எங்கோ மின்னல் வெட்டி இடி இடித்தது.பளீச்சென்ற வெளிச்ச வெட்டும் ’டம்டம்’ என்ற இடியோசையும் வீட்டிற்குள் நின்றிருந்த எனக்கே சற்று பயத்தை கொடுத்தது.இடியும் மின்னலும் இல்லாத  மழை பெய்யக்கூடாதா?

"டீய்...உள்ளே போடி.புது மழை.இடி வேற இடிக்குது.உங்க அம்மா பாத்தான்னா முதுகு தோல உறிச்சுடுவா”. பக்கத்து வீட்டு பார்வதியக்காவின் குரல் கேட்டது.

அறைக்குள்ளிருந்து நானும் குரல் கொடுத்தேன்.குரல் கொடுத்த என் திசை நோக்கி திரும்பி பார்த்தவள் சன்னல் கம்பிகளின் பின்னாலிருந்த என் முகம் சரியாக தெரியாததால் மீண்டும் அருவியென கொட்டின மழைநீரை வழித்துவிட்டு கண்களை கசக்கியவாறு பார்த்தாள். அந்த மங்கின வெளிச்சத்தில் நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதன் வெளிப்பாடு அவள் மீண்டும் விளையாட்டில் மூழ்க ஆரம்பித்ததும் உறுதிப்பட்டுப் போனது.

மனசுக்குள் சுர்ரென்று  கோபம் பொத்துக்கொண்டு வந்தது.கழுதை.காட்டுக்கத்தல் கத்தினாலும் கேட்காதது போல குதித்துக்கொண்டிருக்கிறாளே.ஒரு வேளை என்னால் அவள் போல செய்ய முடியாததின் ஆதங்க  வெளிப்பாடோ இந்த வசவுகளின் துவக்கம். இருக்கலாம். ஒருபுறம் ஆதங்கம்.மறுபுறம் புது மழையில் நனைந்து உடம்புக்கு எதாவது ஆகிவிடுமோ அவளுக்கு என்கிற அச்ச உணர்வு. அறையிலிருந்து வெளிவாசலுக்கு வந்து கதவை அண்டி நின்றுகொண்டேன். மீண்டும் குரல் கொடுத்தேன்.

”அம்மா அம்மா...இர்ம்மா வர்றேன்” கூறிவிட்டு மண் தரையில் கருநீராய் ஓடின மழை நீரில் பாதங்கள் ’பச்சக் பச்சக்’ என்று சப்திக்க சலக்சலக்கென்று குதித்துக்கொண்டிருந்தாள்.

மழை  பூமியோடு பிரிந்திருந்து கூடும் நீண்ட நாட்களின் வேட்கையை பூர்த்தி செய்வதாய் படர்ந்து எங்கும் பரவத்துவங்கியது.கூடலின் வாசம் எங்கும் வியாபிக்க துவங்கியிருந்தது. எனக்குள் இருப்பு கொள்ளவியலாத ஒரு அவஸ்தையை உணர்ந்தேன்.

”டீய்..எரும மாடே..” குரல் சற்று கனத்து கடைசியில் கீச்சீடாய் போனது. வித்தியாசப்பட்ட என் குரலொலி கேட்டு திரும்பினவள் கையில் பிரம்பை கண்டதும் அதற்கு மதிப்பு கொடுத்தோ இல்லை என் மீது பரிதாபப்பட்டோ மெதுவாக என்னை நோக்கி வர ஆரம்பித்தாள்.அவள் முகத்தில் ஒரு இளக்காரச் சிரிப்பு தவழ்வது துல்லியமாய் தெரிந்தது. நீ என்ன செய்துவிடப்போகிறாய். மிஞ்சிப்போனால் கழுதை குதிரை என்பதை தவிர்த்து வேறேதும் சொல்லப்போவதில்லை செய்யப்போவதில்லை என்பதாயிருந்தது அது.

பெயருக்கு தான் நான் பிரம்பை கையில் எடுத்தேனே தவிர எனக்கொன்றும் அவளை அடிக்க வேண்டுமென்கிற எண்ணம் கிடையாது. இருந்தாலும் அதட்டாது விட்டால் இவளது ரகளை அதிகமாகிப் போகும்.போதாக்குறைக்கு இவர் மாலையில் வரும் போது அவள் ஜலதோஷம் பீடித்தோ அல்லது வேறு உபத்திரவத்தாலோ அல்லல்பட்டால் அவர் மனது சஞ்சலப்படும்.அந்த நேரத்தில் இவளாவது சும்மா இருப்பாளா.இவளால் அது முடியாது. மழையில் நனைந்தபடியே ஆடியதையெல்லாம் கூறுவாள்.பிறகு கேட்கவா வேண்டும். டஸ் புஸ்ஸென்று முட்டவரும் காளையைப்போன்று அவர் உலவிக்கொண்டிருப்பார். கொஞ்சம் சீண்டினாலும் போதும் அவ்வளவு தான் என் கதி அதோ கதிதான்.

அவள் என்னை நோக்கி வரும் காலடி சப்தம் கேட்டது.பிரம்பை  ஓரமாக வைத்துவிட்டு ஒரு பக்கமாய் கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன்.அவள் என்னை பார்த்ததாய் தெரியவில்லை.அவள் பதுங்கி பம்மி அடி மேல் அடி வைத்து பூனையை போல்  கதவருகே வந்து நின்றாள்.சுற்றும் முற்றும் தன் பார்வையை மேயவிட்டாள்.நான் உள்ளே சென்றுவிட்டதாக நினைத்தாளோ இல்லை மழையில் விளையாடியது போதுமென்று நினைத்தபடியோ வாசலை கடக்க தனது வலது காலை எடுத்து வீட்டிற்குள் வைத்தாள்.

“ஹோ..க்” கென்று பெருஞ்சத்தத்துடன் விளையாட்டாய் அவளை பயமுறுத்த நான் குரல் கொடுத்தபடி அவள் முன்பு தொப்பென்று எகிறி குதித்தேன்.ஒரு கணம் ஸ்தம்பித்து போனவளாய் அரண்டு மிரண்டுப்போன பார்வையோடு நின்றிருந்தவளை அணைத்து பிடித்துக் கொண்டேன்.அவளது உடல் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.இதயத்தின் ‘லப்டப்’ஓசை ‘டுகுடுகு’ வென்று அணைத்துக் கொண்டிருந்த என் கைகளுக்குள் பரவியது.

“ஹூம்..போம்மா...”என்றவாறு என்னை தள்ளிவிட்டவள் பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மழை இன்னும் விட்டபாடில்லை.அடக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டியே தீருவேன் என்கிற அதன் ஆக்ரோஷம் ‘ஹோ’வென்று குரல் கொடுத்தபடி இருந்தது.

“டீய் நிவி பாவாடை சட்டையை கழட்டிட்டு மாத்திக்கோ.தலைய தொவட்டிட்டு ஹேர் டிரையரை போட்டுக்கோடி.இல்லைன்னா தலைய வலிக்கப்போது”.குரல் கொடுத்தேன்.

மழைக்கு கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்னவோ முயங்குதலின் உச்சத்தில் ஆணின் ஆக்ரோஷப்புரிதலாய் விளாசியது.எனக்கு இருப்பு கொள்ள முடியவில்லை.வெளியில் ஆள் நடமாட்டமில்லை.தெருவில் இறங்கி மழையில் நனைந்து ஆட மனம் ஆசைப்பட்டது.

சாத்தியப்படுமா?

முடியாதென்று உணர்ந்தபோது மனது ஆதங்கத்துடன் துவள்வதாய்பட்டது.

என்ன செய்ய?

யோசித்தேன்.

“நிவி...என்ன செஞ்சிட்டு இருக்க.டிரஸ்ஸ மாத்தினியா” குரல் கொடுத்துவிட்டு

”நான் போயி கடையிலேர்ந்து முறுக்கும் கலக்கா பர்ப்பியும் வாங்கிக்கினு வர்றேன்” கூறிவிட்டு மூன்று வீடுகளே தள்ளியிருந்த பெட்டிக்கடைக்கு செல்வதற்காய் முன்வாசல் வழியே வெளியே வந்தேன்.

குடை எடுத்துக்கொள்ளவில்லை.மெதுவாக தெருவில் இறங்கினேன்.மழைநீர் சூடாகிப்போயிருந்த உடலை தழுவி வழிந்து தரைக்கு ஓடத்துவங்கியது.காலின் வெள்ளிக் கொலுசு சிணுங்க மெல்ல நடை பயின்றவாறு கடையை நோக்கி நடந்தேன்.நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.ஆஹா என்ன சுகம்.கால்களால் மழை நீரை உதைத்து உதைத்தபடியே நடந்தேன்.தொப்பல்கட்டையாய் கடைக்கு முன்பு நின்றபோது கடைக்கார அக்கா என்னை விநோதமாய் ஏறிட்டு பார்த்தார்.

“ஏம்மா கொட கொண்டாரக்கூடாது.இப்படி தொப்பலா நனஞ்சிட்டியே”

“இல்லக்கா சும்மா பக்கத்துல தானே. அதான் அப்படியே வந்துட்டேன்.நிவி முறுக்கு கேட்டா.ஒரு அஞ்சு ரூபாய்க்கு முறுக்கும் கலக்கா பர்ப்பியும் குடுங்க்கா’’.

இப்போது அக்காவுக்கு பயந்து கடையின் கூரைக்கடியில் பம்மினேன்.பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றிக் கொடுத்ததை வாங்கிக்கொண்டு மீண்டும் மெதுவாக நடையை கட்டினேன்.

எதேச்சையாய் திரும்பி பார்த்தேன்.கடைக்கார அக்கா எட்டிப்பார்ப்பது தெரிந்தது.நடையில் வேகத்தை கூட்டினேன்.வீட்டு வாசலில் வந்து நின்றபோது வாசலே நனைந்து போகுமளவுக்கு உடலிலிருந்து மழைநீர் வடிந்து ஓட ஆரம்பித்திருந்தது.ஒரு சிறு குதி போட்டேன்.சொட்டு சொட்டாய் தண்ணீர் கீழே முத்துமணிகளாய் சிதறியது.

ஒரு பக்கமாய் திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்த என்  கண்களில் பட்டது மாடிப்படியின் இரும்புக்கிரில் பிடியில் தொங்கிக்கொண்டிருந்த குடை.

நீண்ட நாட்களாய் அதுவும் மழைக்கு காத்திருந்தது போன்று ஏங்குவதாய் எனக்கு பட்டது.வலது கையை குடைக்கு முன்பு அதன் மேல் மழைநீர் தெறிக்குமாறு தெளித்தேன்.தெறித்து படர்ந்த நீரை குடை கிரகித்துக் கொண்டது.நீர் பட்ட இடம் மட்டும் அடர்ந்த கருமைக்கு மாறிக்கொண்டிருந்தது. ஒரு புது விதமான பழமை வாசம் வீசத்துவங்கியது.

மெல்ல உள்ளே செல்ல எத்தனித்தேன்.மனதுள் குடைக்கான ஆசை ஆதங்கம் பற்றின கேள்வி எழுந்தது. மெதுவாக திரும்பி குடையை கையிலெடுத்து அதை விரித்து மழையில் நன்றாக நனைய விட்டேன்.விரிந்திருந்த குடையின் பக்கவாட்டு கம்பிகளில் தண்ணீர்க்குச்சிகளாய்  மழைநீர்  நிலத்தை நோக்கி நீண்டு கொண்டிருந்தது.

நிவேதிதாவின் ஞாபகம் வந்தது.பாவம் குழந்தை மழையில் நனைந்துவிட்டு சரியாக தலையை துவட்டினாளோ இல்லையோ?

குடையை மடித்து வாசலிலேயே கதவோரம் குடையின் ஒற்றை முனைக்கம்பியின் மீது லாவகமாக நிற்க வைத்தேன்.ஒரு சேர்ந்த மழைநீர்  அந்த ஒற்றைக்கம்பி வழியே வேகமாக கீழிறங்க துவங்கியது.

உள்ளே சென்றேன். அறையின் ஒரு மூலையில் நிவி சுருண்டுக்கிடந்தாள். மனதுக்குள் பகீரென்றது. அருகே சென்றேன்.

“நிவிம்மா...’’.குரல் கொடுத்தேன்.

அவளை சுற்றி சிறுசிறு நீர்த்தாரைகள் சிமெண்ட் தரையில் படிந்து வழிந்தோடிக்கொண்டிருந்தது. தொப்பலாய் நனைந்து போனவள் உடை கூட மாற்றாமல் அப்படியே கிடக்கிறாள்.

மெதுவாக அவளை தொட்டேன்.கால்களை மடக்கி கைகளின் முழங்கை முட்டிகள் தொடைக்குள் பதியுமாறு இன்னும் சற்று குறுகி சுருண்டு படுத்துக்கொண்டாள். ஒன்றும் புரியவில்லை.

“ஏய்...என்னடியாச்சு.எழுந்திருடி.எழுந்து டிரெஸ்ஸ மாத்திக்க”.எழுப்பினேன்.

இன்னும் சுருள முடியுமா என்று அவள் எத்தனிப்பது போல் பட்டது.அறைக்குள் மங்கலான இருள் கவ்வியிருந்தது.மின் விளக்கின் விசையை அழுத்தி அறைக்கு ஒளியூட்டினேன்.

அவளை நெருங்கி செல்லும் முன்பு என் நாசியில் கவுச்சியின் வாசனை வந்து வீசியது. கழிவுநீர் கால்வாய்களில் பெருகியோடும் மழைநீரின் வேலை சுத்தப்படுத்துதலாய் நிகழும் போது இப்படியான வாசம் வீசும்.இளம் பிராயத்தில் அரசு பொதுமருத்துவமனையை மழைக்காலங்களில் கடக்க நேரிடும் போது இதே போன்ற வாசம் அதிகமாக வீசுவதை உணர்ந்தவளாகையால் மூக்கை ஒரு சுருக்கு சுருக்கி ‘ஹூம்’மென்று காற்றை வெளியே சிந்தினேன்.

”இல்லை”. இந்த கவுச்சி வாசம் அதையும் மீறின எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாய் மிக  அதிகமாய் நாசியை துளைத்தெடுக்க ஒரு வேளை? கலக்கமுற்ற நெஞ்சோடு ஜிவ்வென்று வயிற்றிலிருந்து பிறந்து தொண்டைக்குழிக்குள் வந்து அமர்ந்து கொண்ட பயப்பிரக்ஞையுடன் நிவேதிதாவை பார்த்தேன்.

இருக்கக்கூடாது என்று மனது எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும் நிகழ வேண்டியது நிகழ்ந்து தானே தீரவேண்டும் என்பதாய் அது நிகழ்ந்தேறியிருந்தது. அவளை சுற்றிலும் படர்ந்திருந்த நீர்த்தாரைகளில் பிசுபிசுப்போடு கருஞ்சிவப்பு நிறத்தில் பரவ துவங்கியிருந்த வலியின் வெளிப்பாடு தான் அவளை அப்படி சுருண்டு படுக்க வைத்திருக்கிறது.

அவளை நெருங்கிச்சென்று அருகில் அமர்ந்து கொண்டேன்.செய்வதறியாது சிறிது நேரம் ஸ்தம்பித்து போனவளாய் அமர்ந்திருந்தேன்.அவளது தலையை லேசாக வருடினேன்.என் கண்களில் வலிப்பெருக்கின் உணர்வுகள் கண்ணீராய் வெளிப்பட  துவங்கியது.

ஒரு தீர்மானமாய் எழுந்து நின்று அறைக்கு வெளியே வந்து வெளிக்கதவை தாழிட்டு சாத்தினேன்.பீரோவை திறந்து பழைய துணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன்.மிரட்சியுடன் வெளிறிய முகத்துடன் எழுந்து அமர்ந்து கொண்டிருந்த நிவேதிதாவை பார்க்கிறேன்.

“என்னம்மா  இதெல்லாம்” என்று கேட்பது போன்ற அவளது முகபாவனை என்னுள் கலக்கல் வேலை செய்ய ஆரம்பித்தது.கலக்கத்தை அடக்கியபடி அவளை பார்த்து ஒரு சிறு புன்முறுவல் பூத்தேன். அவளருகில் சென்று அவளது இரு தோள்களையும் கைகளால் பற்றி அவளை எழுப்பி நிற்க  வைத்தேன்.என் இடுப்பை தன் இரு கைகளாலும் சேர்த்து நடு வயிற்றில் முகம் புதைத்து என்னை  இறுக பற்றிக்கொண்டாள்.சில்லென்று முகம் புதைந்ததால் எனது உடல் சிலிர்த்தது.லேசான  அவளது முகக்குலுக்கல்  அழுகிறாள் அவளென்று எனக்கு உணர்த்தியது.

”அடி அசடு..என்னாச்சி.ஒண்ணும் பயப்படற மாதிரி இல்லை.ஒண்ணும் ஆகலை’.

நானும் அவளை இறுக பற்றிக்கொண்டு அவளது தலை முடியுள் விரல் விட்டு கோதினேன்.இடுப்புக்கு கீழே எனது உடையும் ஈரத்தை  பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

சற்று நேரம் கழிந்ததும் அவளை விலக்கி அவளது நனைந்த உடைகளை களைய சொல்லி பழைய துணியால் அவளது உடலையும் வழிந்திருந்த கருங்குருதியையும் துடைத்தெடுத்து அவளுக்கு மாற்றுடை கொடுத்தேன்.

இன்னும் நாணம் வந்து பற்றவில்லை அவளுள்.ஒருவேளை நான் மட்டுமே இருப்பதால் அப்படியோ.புரியவில்லை.கீழே கிடந்த துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று அங்கு அவற்றை போட்டேன்.

வெளியே மழை பெய்த வண்ணமேயிருந்தது.குளிப்பாட்டுவோமா வேண்டாமா என்று  தீர்மானிக்க முடியாமல் மழை நின்ற பிறகு பார்த்து கொள்ளலாமென்று முடிவு செய்தேன்.பீரோவை திறந்தேன்.கீழறையில் கையை விட்டு துழாவினேன்.கைக்கு நான் தேடியது கிடைக்கவில்லை.

அப்போது தான் ஞாபகம் வந்தது. இன்னும் பதினைந்து நாட்களுக்கு பிறகு தான்  எனக்கு அது தேவைப்படுமென்பதால்  தீர்ந்து போயிருந்த போதிலும் அதை வாங்காது விட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினேன்.காலையில் கழுவி காயப்போட்டிருந்த அவரது லுங்கி  கண்களில் பட்டது.

மழைக்கு முன்பு கொடிக்கம்பியிலிருந்து காயப்போட்டிருந்த லுங்கியை வேகமாக எடுக்கும் போது ‘டர்’ரென்று கம்பி முனையில் பட்டு கிழிந்துவிட்டிருந்ததும் அதை தைத்து சீர் செய்து மடித்து தையல் மிஷின் மீது வைத்திருந்ததும் நினைவுக்கு எட்டியது. பீரோவில் புது லுங்கி இருந்ததும் ஞாபகத்துக்கு வர பீரோவை திறந்து புது லுங்கியை எடுத்தேன்.ஏற்கனவே தைத்திருந்தது.

மிஷின் மீது வைத்திருந்த லுங்கியை எடுத்துக்கொண்டு அவளிருந்த அறைக்குள் நுழைந்தேன்.வயிற்றை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.பார்வையை லேசாக திறந்திருந்த சன்னல் வழியே கொட்டும் மழையின் மீது பதித்திருந்தாள்.

”என்னடி அதிகமா வலிக்குதா.இரு வர்றேன்” என்றபடி சமையலறையில் நுழந்து சிறிது  வெந்தயம் கொண்டு வந்து அவள் வாயில் போட்டு தண்ணீரை குடிக்க வைத்தேன்.

’உவேக்’ என்றாள்.

ஆனால் வெளியே துப்பவில்லை.

”சரியா போயிடும்”.கூறிவிட்டு எடுத்து வந்திருந்த லுங்கியை பகுதிபகுதியாய் பிரித்து துண்டுகளாய் கிழித்துக்கொண்டிருந்தேன்.

அவள் என் செய்கையையே வைத்த கண் மாறாது பார்த்துக்கொண்டிருந்தாள். இரு துண்டு லுங்கித்துணியை ஒன்றாக மடித்து கனமான கைக்குட்டை மடிப்பாய் மடித்து ஒரு நீண்ட நாடாச்சீரியாய் கிழித்திருந்ததையும் எடுத்துக்கொண்டு அவளருகே சென்றேன்.அவளுக்கு ஒன்றும் விளங்கியிருக்க வாய்ப்பில்லை மருட்சியுடன் என்னை ஏறிட்டு நோக்கினாள்.

”நிவி...” என்று நான் கூற ஆரம்பித்ததை செய்ய வேண்டியதை செய்து காட்டியதை ஒரு சிறு நடுக்கத்துடன் செவிமடுத்தும் கண்ணுற்றும் கொண்டிருந்தாள்.ஏதோ விளங்கிக் கொண்டதாய் ஒரு புதுவித அனுபவத்தில் பாவுவதற்கு தயாராகும் வீராங்கனையை போல் என் கைகளிலிருந்து  அந்த லுங்கி துண்டங்களை வாங்கிக்கொண்டாள்.

எனக்கே கொஞ்சம் சங்கோஜமாக இருந்ததால் அவள் பக்கம் விடுத்து மறுபுறம் திரும்பி நின்று கொண்டேன்.

விநாடிகள் சில கடந்திருக்கும். என்னை கடந்து ஏதோ ஒன்று பறந்து சென்று கதவருகே சொத்தென்று வீழ்ந்தது.என்னால் மடித்து கொடுக்கப்பட்ட லுங்கித் துண்டங்கள் ஒரு சிறு பந்து முடிச்சாய் கதவருகே கிடந்தது. திரும்பி அவளை பார்த்தேன்.

“ஏண்டி..என்னாச்சு.பயமா இருக்கா.பயப்படாதே” என்று கூறியவாறே அவளருகே சென்றேன்.

”இனிமே மாசத்துக்கு ஒரு முறை இது மாதிரி செய்து தான் தீரனும் கண்ணு”. ஆதுர்யமாக அவளது கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி செல்லமாய் தலையுச்சியில் முத்தமிட்டேன்.

கண்களின் ஓரங்கள் பனித்தன.அவளது கண்களும் கலங்கியிருந்தன.என்னை ஏறிட்டு நோக்கியவள்,

“அம்மா…அந்த துணியில் அப்பா வாசனை வருது” என்றாள்.

திடீரென்று வெளியே பெரும் இடியோசை கேட்டது. மழை இன்னும் வேகமெடுத்து ஆக்ரோஷமாய் பெய்யத்துவங்கியது.

*

நன்றி :  சு.மு.அகமது | https://www.facebook.com/musthaqsyedahmed/