Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


துக்ளக் சத்யாவின் ஹாஸ்ய எழுத்து குறித்து, நான் இங்கே பல முறை ரசித்து எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் அவரது அந்தத் திறம் 'நுட்பத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிறது' என்பதை மட்டும் சுட்டிக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்கள் ஒவ்வொரு பாராவிலும் நின்று வாசித்து யோசிப்பதென்பது அவசியத்திலும் அவசியமாகவே இருக்கும். அப்படி நீங்கள் வாசிப்பதில், வாய்விட்டு சிரிப்பதென்பது இரட்டிப்பாக வாய்ப்புண்டு. நன்றி. - தாஜ் 

***


தி.மு.க.வும்  ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.


***


நன்றி: சத்யா / துக்ளக்
தட்டச்சு செய்து அனுப்பி சிரிக்கவைத்த தாஜ்பாய்க்கும் நன்றி

***

மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

Monday, November 19, 2012

ஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்


“The painting rises from the brushstrokes as a poem rises from the words. The meaning comes later.” - John Miro

***
மதிப்பிற்குரிய பிரம்மராஜனின்  'மீட்சி' சிற்றிதழில் (மார்ச்-ஏப்ரல், 1984) நண்பர் சுகுமாரன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பதிவிடுகிறேன். 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தொகுப்பு இது. வாசிப்பின் புதிய எல்லைகளை அறியத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் எஸ்.வி.ஆர் - நமக்கு சுகுமார் மாதிரி. ''இலக்கியமும் கலையும் இருத்தலியல் அனுபவங்கள். இருப்பிலிருந்து வாழ்வு நோக்கி உயர மனித மனம் கொள்ளும் வேட்கையின் வினையும் எதிர்வினைகளும்தான் அவற்றின் அடிப்படை' என்பார் சுகுமார் , தன் முன்னுரையில். இந்தத் தொகுப்பு பற்றி நண்பர் பி.கே.எஸ் எழுதிய விமர்சனம் காண இங்கே க்ளிக் செய்யுங்கள். ஏற்கனவே இந்தத் தொகுப்பிலிருந்து எடுத்த வான்காவின் கடிதங்களை நண்பர்கள் படித்திருக்கலாம்.  'முயற்சிகளின் முடிவில் மீரோ , மீரோவைக் கண்டடைந்தார்' என்று ஆன்மீகமாகச் சொல்லும் சுகுமாரனை இதிலும் காணலாம். கண்டடையுங்கள் - நேற்று கூகில்+-ல் மீரோவின் புகைப்படத்தை - பெயரைக் குறிப்பிடாமல் - போட்டு,  நாளை இவர் பற்றிய கட்டுரை வெளியாகும் என்று தமாஷ் செய்த சில நொடிகளில் ஐஃபோன் உதவியுடன் சித்தார்த்தும் ( 'ஐஃபோன்ல இருக்கற கூகுள் நிரல்ல கூகுள் காகில்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு. அத போட்டதும், எத தேடனும்? படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு!') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..! - ஆபிதீன்

**
ஜான் மீரோ

சுகுமாரன்

யெஹான் மீரோ (John Miro 1893-1984) சென்ற ஜனவரியில் காலமானார். ஓவியக் கலையில் நவீன யுகத்தை நிறுவி வளர்ந்த முன்னோடிகளில் கடைசி நபரும் காட்சியரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

1893இல் ஸ்பானிய பிரதேசமொன்றில் பிறந்தார். கிராமிய வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள மனப்படிமங்களுடன் 1919இல் பாரிசில் குடியேறினார். மனிதனின் இளமை, மரபு ரீதியான பழக்கங்கள், புராணிகங்கள் மீரோவின் மூலமாக ஓவியங்களில் இடம்பெற்றன.

மீரோவின் படைப்புகள் அசாதாரண எளிமையும், அதேசமயம் நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய தீவிரத் தன்மையும் கொண்டவை. மீரோவின் இந்தத் திறன் ·ப்ராய்ட், யுங் ஆகிய உளவியலாளர்களின் சித்தாந்தங்களால் தூண்டப் பெற்று செயல்பட்டு வந்த அமெரிக்க ஓவியர்களான ஜாக்ஸன் பொல்லாக், ஆர்ஷெல் கார்க்கி, ராபர்ட்மதர்வெல் போன்றவர்களின் இயக்கத்தைத் திசை திருப்பியது. கட்டற்ற வர்ணப் பரப்புகளின் மீது புராணிக விஷயங்களை இணைத்து நவீனத்துவமான மதிப்பீடுகளை உருவாக்கும் முறையை இந்த ஓவியர்கள் மீரோவிடமிருந்து கற்றுக்கொண்டு பரவலாக்கினார்கள்.

பாரிஸை அடைந்த மீரோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் பிந்திய இம்ப்ரஷனிஸ ஓவியங்களின் செல்வாக்கு இருந்தது. தொடர்ச்சியான சோதனை முயற்சிகளின் முடிவில் மீரோ மீரோவைக் கண்டடைந்தார். மீரோ எந்தக் குழுவிலும் சாராமல் தணித்து நின்றார். எனினும் சர்ரியலிஸம் என்னும் இயக்கத்திற்கு மீரோ தேவைப்பட்டார். பெரும்பாலும் கவிஞர்களே நிறைந்திருந்த சர்ரியலிஸ இயக்கத்திற்கு மீரோவின் கான்வாசுகள் புதிய பரிமாணத்தை அளித்தன. 1926இல் முதலாவது சர்ரியலிஸ ஓவியக் கண்காட்சியில் மீரோ பங்கேற்றார். 'சர்ரியலிஸ்டுகளில் மிகப் பெரிய சர்ரியலிஸ்ட்' என்று சிறப்பிக்கவும்பட்டார்.

1930களில் இடைப்பகுதியில் மீரோவின் ஓவிய உலகம் மாறுதலடைந்தது. அடர்ந்த நிறங்களும் ராட்சச வடிவங்களும் அவரது திரைகளில் இடம்பெற்றன. தனது தாய்நாடாகிய ஸ்பெயின் மீது பாசிஸம் செலுத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதாக அவை அமைந்தன.

நிறங்களில் வெற்றுப் பரப்பில் நிறைய சிறிய உருவங்களைப் பரவவிட்ட பாணியை மீரோவின் படைப்புகளில் காணலாம். வயது ஆக ஆக மீரோவின் பாணி மாற்றமடைந்து வந்தது. பிற்கால ஓவியங்கள், வெறும் நிறப்பரப்பில் ஒற்றை உருவங்கள் கொண்டவையாக இருந்து, கடைசிக்கட்ட ஓவியங்கள் விரிந்த நிறப்பரப்பில் தீர்க்கமான தூரிகை வீச்சுக்களை மட்டுமே கொண்டிருந்தன.

யெஹான் மீரோவை, பாப்லோ பிக்காஸோவுடன் ஒப்பிடலாம். பிக்காஸோவைப் போலவே மீரோவும் ஸ்பானிய மரபிலிருந்து தோன்றியவர். எந்தக் குழுவிலும் அடைபடாமல் சுதந்திரமாகச் செயல்பட்டவர். தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். சமகாலக் கலைஞர்களிடம் வலுவான செல்வாக்குச் செலுத்தியவர். கிராபிக்ஸ், எட்சிங், சுவர் ஓவியங்கள், சிற்பம் என்று பல சாதனைங்களையும் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர். பிக்காஸோவைப் போலவே தொண்ணூறுகளின் தொடக்க வயதில் இறந்தும் போனார்.

பிக்காஸோவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும், புகழும் மீரோ என்ற சர்ரியலிஸ்டை அணுகவில்லை. எனினும், நவீன ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்ததில் யெஹொன் மீரோ வகித்த இடம் பிக்காஸோவுக்குச் சமமானது.

***
நன்றி : சுகுமாரன், மீட்சி, அன்னம் பதிப்பகம்
***

Wednesday, November 14, 2012

மஜா ஆகயா! - நுஸ்ரத் ஃபதே அலிகான்

நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு டென்சன். இசையைப்பற்றி மருந்துக்குகூட எனக்கு தெரியாதென்றாலும் அதுதான் மருந்தாக இதுவரை எனக்கு இருக்கிறது. அதை இங்கே இணைக்கலாம் என்றால் ’வடிவேலு தலையிலேர்ந்தும் வாக்னர் இசை வரும்’ என்று ஒரு சுட்டி அனுப்பி குட்டினார் ஒருவர். நங்! சிரித்து முடித்ததும் துக்கம் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. வழக்கம்போல உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான்தான் இப்போதும் என்னைக் காப்பாற்றினார். மஜா ஆகயா! கேளுங்கள். - ஆபிதீன்
***


Thanks : SAFFY7411

Tuesday, November 13, 2012

டால்ஸ்டாய் இருக்காரா ? - சென்ஷி


காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ’என் பெயர் சிவப்பு’ நாவலின் [ஓரான் பாமுக்-ன் My Name Is Red (Benim Adım Kırmızı)] மொழிபெயர்ப்பை வாங்கி அனுப்புகிறேன் என்று சொன்ன நண்பர் தாஜ் , பயங்கரமான ஃபேஸ்புக் போராளியாக இப்போது மாறிவிட்டதால் நாமாவது ஷார்ஜா புத்தகக்கண்காட்சிக்கு போகலாம் என்று தோன்றியது. அஸ்மாவுக்கும் உம்மாவுக்கும் மாதச் செலவுக்கு அனுப்பியது போக பாக்கெட்டில் இருந்த 13 திர்ஹத்தின் உறுத்தல் வேறு தாங்க இயலவில்லையே... ஆனால் , அங்கே போனால்.....

கூகிள்+-ல் தம்பி சென்ஷி நேற்று பதிவிட்டதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அவர் எழுதியிருப்பதில்,  ‘அசல் இலக்கியவாதிகளாக’ என்னையும் மஜீதையும் குறிப்பிட்டதைத் தவிர மற்றதெல்லாம் உண்மை. இனி, சென்ஷியைப் படியுங்கள். - ஆபிதீன்

***


ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சிக்கு போன கதை

சென்ஷி

புத்தகத் திருவிழா வருடா வருடம் ஷார்ஜாவுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னை கொண்டு போகத்தான் ஆளில்லை என்ற குறை போன வருடம் வரை எனக்கு இருந்திருக்கும் போல.  அடுத்த வருடம் இந்த குறையிருந்திடக்கூடாதென அசல்/அமீரக/இலக்கியவாதிகளான ”ஹாரிபிள் ஹஜரத் புகழ்” மஜீத் மற்றும் சாதிக்குடன் எழுத்தாளர் ஆபிதின் அண்ணனும் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார்.

காலச்சுவடு பதிப்பகம் இம்முறை ஷார்ஜா புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போடுகிறார்களாமே! உனக்குத் தெரியுமா? என்று அவர் தொலைபேசியில் கேட்டதில் இருந்துதான் இந்த நிகழ்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.   உங்களின் நல்ல நேரம் இது இரண்டாம் பத்தியாகிவிட்டது.

வருடா வருடம் ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதை செய்தித்தாளில் தெரிந்து கொள்கிற அளவு மாத்திரமே இலக்கிய அறிவு கொண்டவனிடம் காலச்சுவடு பதிப்பகத்தினர் இம்முறை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்களாமே!? உனக்குத் தெரியுமா என்று கேட்டவரிடம் என்ன பதில் தந்துவிட முடியும்..!  தவிர  நான்கைந்து சிறந்த சிறுகதைகளை தட்டச்சிவிட்ட தைரியத்தில், இணைய இலக்கியவாதியெனும் சித்திரத்தில் பங்கும்/பரிமளித்தும் கொண்டிருக்கும் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் முதன்முறையாகவா? வருடா வருடம் தமிழ்ப்பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்கக் கொண்டுவருகிறார்களா? இம்முறை காலச்சுவடு அடியெடுத்தலில் அடுத்தடுத்து எல்லாப் பதிப்பகங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற தீவிரத்துவமான கேள்விகள் அரித்துக் கொண்டிருந்தாலும் மனதை அமைதியாக்கி, ”வெள்ளிக்கிழமைதானே... ஆமாண்ணே.. ஒண்ணும் வேலை இல்லைண்ணே.. போயிடலாமுண்ணே.. மதியம் சாப்பிட்டப்புறம் கெளம்பிடலாமா.. சரிண்ணே” என்று வியாழன் மதியம் தொலைபேசியில் ஹா.ஹ. புகழ் மஜீத் அண்ணனிடம் சொல்லியாகிவிட்டது.

வெள்ளி...

கிளம்பிய பிறகு சரியாய்ப் பூட்டினோமா என்ற சந்தேகமெழுவதைப் போல, காலச்சுவடு நெசம்மாவே இங்க ஸ்டால் போடுறாங்களா? என்று ஆபிதீன் சந்தேகப் பிரகடணத்தைக் கொண்டு வர, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு உலகந்தெரிந்த உத்தமரான ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டால் ஆச்சு என்ற யோசனை பரிசீலனைக்குட்படுத்தப்படாமலேயே மற்ற மூவரும் ஆமோதித்த தருணத்தில் அண்ணாச்சிக்கு தொலைபேசி உறுதி செய்து கொள்ளவியன்ற முயற்சி தோல்வியுற்றது. காரணம் அவருக்கு அதைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையாம். அண்ணாச்சிக்கே அழைப்பில்லாத இடத்தில நாம என்ன செய்ய என்று சிகரெட் புகையோடு வெடைத்தவனை காரில் தூக்கிப் போட்டு ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு சென்றாயிற்று.

சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதில் சாண் அளவாவது ஏறிய சந்தோசம் கிடைக்கட்டுமே என்ற மகானின் வாக்குக் கிணங்க காலச்சுவடு இல்லாவிட்டால் ஷார்ஜா கூட்டத்தையாவது கண்டு வரலாமென்று உள்ளே நடைபோட்டோம்.  ஐந்து அரங்குகள். முதல் நான்கில் அரபி புத்தகங்களை மொய்த்தபடி சுமாரான கூட்டமிருக்க, ஐந்தாம் அரங்கான இந்திய வாயிலில் சூப்பர் கூட்டம். முன்னால் இரண்டடி கூட நகர விடாது, முன்னேயுள்ளோர் வழிவிடாது புத்தக அரங்கினை மொய்த்திருந்தனர். அரங்கின் முதல் கடை அமர்சித்ர கதா கதைப்புத்தகங்கள்.. பெரும்பாலும் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலமென்று இருந்த கூட்டத்தில் தஸ்தோவாஸ்கி இருக்காரா? காஃப்கா இருக்காரா என்றெல்லாம் குரல்கள் எழுந்து வந்தது. என் பங்கிற்கு டால்ஸ்டாய் இருக்காரா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். புத்தகம் வாங்குபவர்களுக்குத்தானெ பதிலின் அவசியம் முக்கியம்.. ஐந்தாம் அரங்கின் மத்தியில் இருந்த கும்பல் இல்லாத நேஷனல் புக் டிரஸ்டின் உள்ளே நுழைய, காண்டெம்ப்ரரி ஆஃப் ஆர்ட் இன் இந்தியா புத்தகத்தை விருப்பமாய் ஆபிதின் அண்ணன் எடுத்து விலை விசாரிக்க, அங்கிருந்த மேற்பார்வையாளர் இவையெல்லாம் விற்பனைக்கில்லை.. பார்வைக்கு மாத்திரமே வைத்துள்ளோம். பார்த்துவிட்டு வைத்துவிடுங்கள் என்று கொஞ்சமும் அனுதாபமின்றி கூறினார். புத்தக விற்பனைக்கான கண்காட்சியில் விற்பனை செய்யப்படாது, புத்தகத்தையே கண்காட்சியாக வைத்திருக்கும் அவர்களின் பாங்கு வியப்பில் திக்குமுக்காட வைத்தது. ஒரு பெரும் நன்றியை உதிர்த்துவிட்டு தென்னிந்திய தேசியக்கடலை நோக்கி நகர்ந்தோம்.

காலச்சுவடு அரங்கு பார்வைக்குக் கிடைக்கவில்லையென்பது ஒரு புறம் இருக்கட்டும். அங்கு காணக் கிடைத்த தமிழ் பொக்கிஷங்கள் அனைத்தும் இரண்டு எழுத்தாளர்களின் எழுத்தாக மாத்திரமே இருந்தது. அதிலும் ஒருவர் ஐந்து புத்தகங்கள் எழுதியவராயும் இன்னொருவரின் ஒரு புத்தகமும் கிடைத்தது. சாவு வீட்டில் சொல்லிட்டுப் போகக்கூடாதென்ற சாங்கியமிருப்பது போல புத்தக கண்காட்சிக்கு வந்து எதையும் வாங்காமல் செல்லக்கூடாதென்ற சாங்கியமும் சேர்ந்து கொண்டது போல. மஜீத், இப்பி ஃபக்கீர் மற்றும் வேர்கள் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டார். வேர்கள் மொழிபெயர்ப்பின் மூலமான ரூட்ஸ் தொலைக்காட்சித் தொடர் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்து ஆபிதின் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். இன்றுவரை அந்தத் தொடரைப் பார்க்காமல் இருப்பதை மறைத்துவிட்டேன். எங்களின் வருகை நினைவுக்காக எடுக்கப்பட்ட நான்கைந்து புகைப்பட முன்நிற்றலுக்குப் பின் தமிழ் அரங்கை விட்டு நகர்ந்தோம்.

அன்றைய இரவு எட்டு முப்பது மணிக்கு நிகழவிருந்த அருந்ததி ராயின் உரையாடலைக் கேட்கவும் காணவும் அங்கிருந்த நாற்காலிகள் இந்தியப்பெண்களால் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டே அருந்ததிராயின் உரையாடலைக் கேட்கும் ஆர்வமில்லாததால் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேறினோம். இரவு உணவிற்காக சென்ற அப்பா ஹோட்டலும், அதன்பின்னான டீக்கடைக்கு முன்னால் நின்று ஆபிதின் அவர்களுடனான உரையாடலும் என்னுடைய அந்த நாளை முழுமையாக்கின.

***

நன்றி : சென்ஷி | E-Mail : me.senshe@gmail.com

தலைப்பு உதவி : ரா.கிரிதரன் 

***




Thursday, November 8, 2012

ஹெச்.ஜி.ரசூலுடன் ஓர் உரையாடல் : தாஜ்

தாஜ் : நான் முக்கியமெனக் கருதும் தமிழ்ப் படைப்பாளிகளில் தோழர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களும் ஒருவர். தன் சிந்தையில் உராயும் மதக் கூறுகளுடன் அவர் நிகழ்த்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன்பொருட்டு அவர் எதிர் கொள்ளும் இழப்புகள் சாதாரணமானதல்ல. சொந்த மதத்துக்காரர்களால் அவர் நேர்கொண்ட இன்னல்களில், நான் அதிகமாக அலைக்கழிக்கப்பட்டேன். 'சைத்தான்' என்ற சிறுகதையினை நான் எழுத அந்த அலைக்கழிப்புதான் பெரிய காரணம்.

இம்மாதம் (நவம்பர்) 2, 3, தேதிகளில் பேஸ்புக் வழியாக அவரோடு ஓர் உரையாடல் நிகழ்த்த வழி கிட்டியது. 'ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்' என்கிற ஆய்வு சார்ந்த பதிவொன்றை அத் தேதிகளில் அவர் பதிய, அதையொட்டி சில வினாக்களுக்கு விடைதேடும் முகமாக அவரோடு உரையாடினேன்.

அந்த உரையாடலில், குளைச்சல் மு. யூசூஃப், பிர்தவ்ஸ் ராஜகுமாரன், பென்னேஸ்வரன், கிரிதரன், ஃபைசல்கான் போன்ற நண்பர்களும் பங்கேற்றனர். அதன் முழு வடிவத்தையும் இப்போது உங்களின் பார்வையில் வைக்கிறேன். நன்றி.


***


ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்
ஹெச்.ஜி.ரசூல்

மஸ் அலா அரபு மூலச் சொல்லில் இருந்தே மசலா என்ற வழக்குச் சொல் உருவாகி உள்ளது. மஸ்-அலாத் என்பதற்கு வினா என்பது பொருளாகும். இஸ்லாம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்கும் உரையாடல் இலக்கியமே மசலா இலக்கிய வகைமையாகும்.
நூறுமசலாவினைப் போன்றதொரு மசலாஇலக்கியத்தின் பெயர் ஆயிரம் மசலா என்பதாகும். இதன் காலம் கி.பி.1572. இந்நூலை எழுதியவர் மதுரையைச் சேர்ந்த வண்ணப் பரிமளப்புலவர். இதற்கு அதிசயப் புராணம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு.

நபிகள் நாயகம் அவர்களின் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்த ஹிஜ்ரத் ,ஹதீஸ்கள் அடிப்படையிலான வாழ்வியல்நெறிகள் தீனியத்தான அறங்கள், வானவர்கள்.சொர்க்கம் .நரகம். என விரியும் பண்பாட்டுலகம் தொடர்பான வினாக்களாகவும் விளக்கங்களாகவும் இந்நூல் உருமாறுகிறது.. செய்யுள்வடிவிலான நடை அமைப்பு ஆயிரம் மசலாவை புரிந்து கொள்வதற்கு சிரமத்தைக் கொடுக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.

நூறுமசலாவைப் போன்ற எளிய நாட்டுபுற மொழிநடை ஆயிரம் மசலாவில் முகுதியாகத் தென்படவில்லை.. இது அப்துல் இப்னு சலாம் நபிகள் நாயகத்திடம் விளக்கம் பெற கேட்கும் வினாக்களில் ஒன்று.
தீன் என்பது என்ன?-இதன் செய்யுள் வடிவம் இவ்வாறாக அமைகிறது..

மானாக மேவந்த மக்காவில் வாழ்
தேனாவிலே வந்த செப்போசையாய்
மீனாகமே கொண்ட மெய்த்தூதரே
தீனாவதே தென்று செப்பீர்மனே
நபிகள் நாயகம் அவர்கள் இதற்கான விடையைப் பகர்கிறார்கள்.
வீறான சூதர்க்கு மேலானவா
தேறாகு பாகொத்த தீனாவதே
சாறான கலிமா ஷஹாத்துட
னீறாத சீபத்தி லீமானுமாம்……

எது தீன் என்பதற்கு பதிலாக தேனொத்த பாகொத்த தீன் என்பது சாறான கலிமா சஹாதத் என விளக்கம் கிடைக்கிறது..ஈமான் கொள்வதையே தீன் எனவும் அறிவிக்கிறது.

இத்தகையதான ஆயிரம் வினாக்களும் அதற்கான விளக்கங்களும் தமிழ் இலக்கியத்தினல் புது அனுபவத்தின் அற்புத வாசல்களைத் திறக்கிறது.

***
தாஜ்:
என்ன இப்படி..., இதில் போய் மயங்கிக் கிடக்கின்றீர்கள்? இலக்கிய வகையே என்றாலும்... தினத்தந்தி கன்னித் தீவைவிட பாமரத்தனமானது அல்லவா அது! இதனை ஏன் போற்றனும் என்று விளக்குங்கள் பிளீஸ்.

ஹெச்.ஜி.ரசூல்:
தாஜின் பதிவுக்கு நன்றிஉன்னதமானவற்றின் மீது நீங்கள் கவனம் கொள்கிறீர்கள்..வாழ்த்துக்கள்….பாமரத்தனமானவை எனக்குப் பிடிக்கிறது..இது முஸ்லிம்களின் சபால்டன் (subaltern)அரசியலோடு சம்பந்தப்பட்டது.ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கன்னித்தீவுகளும் சிந்துபாத்துகளும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்மையத்திற்கு மாற்றான விளிம்புகளின் குரலை இன்னும் நாம் உற்றுநோக்கவேண்டியிருக்கிறது.

தாஜ்:
அன்புடன்...
ஹெச்.ஜி.ரசூல்.
உங்களது ஹைனஸ் மீது
நான் ஏகத்துக்கும்
பெருமை கொண்டவன்.
உங்களது தீர்கமான
சில இலக்கியச் சங்கதிகளை
சிலாகித்து வாசித்தவன்.
உங்கள் மீது அபாண்டம் வந்த போதும்/
நீங்கள் நீதியின் படிகளில்,
ஏறி இறங்கி
வென்று மீண்ட போதும்
நெகிழ்ந்தும், சந்தோஷம் கொண்ட
என் இருப்பை
நீங்கள் அறிய மாட்டீர்கள்.

இணையத்தில் வெளியான
கட்டுரை ஒன்றிலும்
சிறுகதை ஒன்றிலும் கூட
அந்த என் நிலைப்பாட்டை நான்
பதிவு செய்துள்ளேன்..

உங்களை அறியாமல்
இதனை எழுதுவதாக மட்டும்
நினைத்து விடாதீர்கள்.

இப்போது
நீங்கள் சிலாகிக்கத் தொடங்கியிருக்கும்
மூத்தோர்களின்
மதப்பற்று மேவிய
மத ரீதியான சரித்திர வரிகள்
ஏனோதானோவென்று
எழுதப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன்.

சிலர் அவர்களின் தேவை பொருட்டும்
மதப்பற்று பொருட்டும்
அந்த வரிகளை
ராகத்திற்குள்ளும்/ இசைக்குள்ளும்
ரசனையான கவன ஈர்ப்புக் கொண்ட
சொல்லாடல்களுக்குள்ளும்
கலந்து தந்தபோது
அது...
இலக்கியமே அறியாத
நம் பெண்களின் மத்தியில்
அவர்களின் கவனத்தை கவர்ந்தது.
மற்றபடிக்கு
அந்த சிலாகிப்பு வரிகள்
மொழி ரீதியாக
தனித்த வேறெந்த சிறப்புகளையும்
கொண்டு விளங்குவதாக நான் கருதவில்லை.

உங்களின்
இந்த ஈடுபாடு
உங்களது
அரசியல் சார்ந்த தேவைக் கொண்டதாக
இருக்கும் என்பதுதான்
என் வலுவான எண்ணம்.

இத்தனை கருணைகொண்ட நீங்கள்...
’திண்ணை’யின் உச்சத்தில்
உட்கார்ந்து கொண்டு
சின்ஸியராக எதிர்க் கவிதைகள்
எழுதிக்கொண்டிருந்த போதுதான்
இஸ்லாத்தைக் குறித்து
அதில் மிகப் பெரிய அளவில்
அபாண்ட பிரச்சாரம் நடந்தது.
உங்களுக்கே நினைவிருக்கும்
நீங்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது
அடுத்த எதிர்க் கவிதையினை
எழுதிக் கொண்டிருந்தீர்கள்.

அதனை நேர் நிறுத்திப் பார்க்கிறபோது
இந்த உங்களது அதீத அக்கரை
உங்களின் அரசியல் தேவை பொருட்டு
நடப்பதாக நான் கருதும்
என் எண்ணத்தை ஊர்ஜிதமாகிறது.

தவறு இருக்கும் பட்சம்
தவறாமல் குறிப்பிடுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.

அன்புடனேயே
-தாஜ்

குளச்சல் யூசுப்:
தாஜுதீனுக்கு தலை சுற்றுகிறதா? கவிஞரின் அணுக்கத் தோழனான எனக்கும் முன்பெல்லாம் இப்படி தலை சுற்றியதுண்டு.

தாஜ்:
தலைவரே.. (Kulachal Mu Yoosuf சொல்வது) புரியலை!!

ஹெச்.ஜி.ரசூல்:
பழங்குடிகளின் காலம் தவிர்த்து நவீனத்துவத்திற்கு முற்பட்ட காலம் வரை சமயமும் அரசியலும் ஒன்றாகத்தானே இருந்தன... மரபுவழி இஸ்லாம் தீவிரமாக இறுகிய வடிவெடுத்தபோது சூபிமரபு ஒருவகையில் ஜனநாயகத்தன்மையை முன்வைத்தது. இங்கு நீங்கள் விரும்பாவிடினும் கூட ஒரு சார்புநிலை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது..

தாஜ்:
தலைவரே..., தெரியும். அதான் அரசியலா என்றேன். என்மட்டில் இஸ்லாத்தில் எந்த நிலையோடும் சமரசம் கொள்ளாதவன். மதமா.. ஓகே. அவ்வளவுதான். இங்கே எனக்கு உங்கள் மீதான கரிசனையும், உங்களை அலைக்ழிப்புக்கு உள்ளாக்கும் நபர்களும்தான் பிரச்சனை. இனி ஓகே. எதையும் எழுதலாம் நீங்கள். வாழ்த்துக்கள்.

ஹெச்.ஜி.ரசூல்:
இரண்டாவது தமிழ்- அரபு பண்பாட்டின் இணவு குறித்த எழுத்துமரபு,வாய்மொழிமரபை நாம் எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பிரச்சினை, படைப்பாக்கங் களின் அழகியல் என்பது கூட சார்புநிலைப்பட்டது...எதிர் அழகியல், கலக அழகியல் என நாம் பேசிக்கொண்டிருக்கும் இச்சூழலில் முஸ்லிம்களின் கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து போன்ற படைப்புகளின் வடிவமும் உள்ளடக்கமும் ,மொழிக் கட்டமைப்பும் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுமென கருதுகிறேன்.. இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும் போது நமது மரபின் வேர்களை தேடவேண்டியிருக்கிறது, பாதுகாக்கவேண்டியிருக்கிறது, மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யவெண்டியிருக்கிறது..இது வெறும் அரசியல் சார்ந்த பிரச்சினையல்ல..பண்பாட்டுஅரசியல் சார்ந்த பிரச்சினை..இலக்கிய அரசியல் போல..மேலும் இன்று நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பண்பாட்டு ஆய்வுகள்..மானுடவியல்சார்ந்தும் இனவரைவியல் சார்ந்தும் நுண் அரசியல் சார்ந்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது வெறும் நவீனத்துவ நோக்கில்  விளிம்புநிலைப் பண்பாடுகளை புறந்தள்ள முடியுமா என்கிற கேள்வி எழுகிறது...

நண்பர் தாஜ் , நமக்கிடையே இருந்த இடைவெளிதான் நம்மைப்பற்ரிய புரிதல்களை நெருங்கவிடாமல் தடுத்துள்ளன.உங்களது எழுத்துக்களை மிக நீண்டகாலமாகவே வாசித்திருக்கிறேன்..ஷஆ,சாகிப்கிரான்.நீங்கள்..என பலரும் வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிவேன். மட்டுமல்ல அண்மையில் கூட மைலாஞ்சி குறித்தும் அதன் அழகியல் குறித்தும் ஒரு காரசாரமான கட்டுரையை எழுதியிருந்தீர்கள்..இஸ்லாமிய தொன்மங்களை மறுபடைப்பாக்கம் செய்தல் குறித்தும் தொன்மக் கவிதைக் குறித்தும் உங்களது அபிப்பிராயங்களை முழுமையாக அறியமுடியவில்லை...அதே சமயத்தில் ஊர்விலக்கத்திற்கு எதிராக திண்ணையில் நீங்கள் எழுதிய் பதிவு முக்கியமானது என்றே நினைக்கிறேன்..நீதிமன்றம் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்.. இன்ன்மும் அப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை..ஐந்து வருடங்களாக தொடர்கிறது..உரிமையியல்நீதிமன்றத்தில ஊர்விலக்கு சட்டவிரோதமானது என தீர்ப்புவந்தது. அபீமுஅஜமாத்தினர் இதற்கு எதிராக சார்புநீதிமன்றத்திற்கு போனார்கள். அங்கும் அவர்களது அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது..இதன்பிறகு மதுரை உயர்நீதிமன்றத்திற்கு செகண்ட் அப்பீல் செய்தார்கள் அங்கும் அப்பீல் தற்போது தள்ளுபடி செய்ய்ப்பட்டுள்ளது இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்துள்ளார்கள்.. இதற்கிடையே சென்ற வாரம் ஊர் சென்ரபோது அங்கு திட்டமிட்டு எனக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள் ..பிரச்சினையை கிரிமினலாக மாற்ற முயன்றுள்ளார்கள்..எல்லாவர்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..கறுப்புபிரதிகள் வெளியிட்டுள்ள உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்..கவிதைநூல் வாசிக்க கிடைத்ததா...தற்போது உங்கள்து நூல் எதும் வெளிவந்துல்ளதா...

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:
ரசூல்ஜி ! ஏன் உங்கள் ஜமாஅத் இவ்வளவு கீழ் தரமாக உங்கள் விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது . இது உங்களின் படைப்பு சம்பந்தமான பிரச்சனை இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது . நீதி மன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் அவர்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் .

தாஜ்:
அன்புடன் ரசூல் அவர்களுக்கு..
தாமதம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

நம் சமூகத்தாரிடையே அரக்கத்தனமான அரிவாள் கலாச்சாரமும், அறிவின்மையின் கலாச்சரமும் மதத்தை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அத்தனை பேர்களும் அதிகாரத்திற்கு ஆசை கொண்டவர்கள். ஒன்றாக மேய்ந்த ஐந்து பசுவை பிரித்து, வேட்டையாடிய சிங்கத்தின் கதையை ஆரம்பப் பாடசாலையிலேயே படித்தவர்கள் நாம். இங்கே இவர்களே தங்களது சகோதர்களை பிரித்து வைத்து, பிரிந்து நின்று சிங்கத்தின் வேட்டையாடலுக்கு வழிவகுத்து தருகின்றார்கள்!

நிஜத்தில், இந்தக் கலாச்சாரம் பரவிக் கொண்டிருப்பதை காண மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஒற்றுமையின் கயிற்றைப் பற்றி பிடிக்க வேண்டும் என்று நமக்கு புத்தி போதித்துவிட்டு, இப்போது என்னைப் பற்றி பிடியுங்கள் என்கிறார்கள். கஷ்டம்.

சென்ற காலங்களில், இப்படித்தான் சுன்னத் ஜமாத் அறுபதுக்கும் மேலான கூறுகளாக சிதைந்தது என்கிற வரலாற்று உண்மையை அவர்களுக்கு உரைக்கவில்லை. எதுவொன்று முற்றினாலும் உடைவது கட்டாயமாகிப் போகும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது!

இந்த நாட்டில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில், தேர்ந்த ஞானிகளாலும் சூஃபிகளாலும்தான் இஸ்லாம் வளர்ந்து நிலைக்கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களை முன்வைத்து இஸ்லாத்தைத் தழுவியர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அத்தனை மக்களும் இங்கே உள்ள பிற மதத்துகாரர்கள்தான்!

அவர்கள் தங்களது பூர்வீக மதத்தின் போக்கில், அதன் அதீத செயல்பாடுகளில், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களது பிரித்தாண்ட சூழ்ச்சியில், கூடுதலான அடக்கு முறைகளில் மனம் கசந்த தருணம் அவர்களிலேயே நாம் குறிப்பிடும் ஞானிகளும் சூஃபிகளும் தோன்றி, பந்துக்களையும், மற்ற நேசிப்பாளர்களையும் திட்டுத்திட்டாய் கிராமம் கிராமமாய் அரவணைத்து இஸ்லாத்தை தழைக்கவைத்தார்கள். ஒரு நிமிட நேரம், அந்த முயற்சி கொண்டவர்கள் தினம் தினம் தாண்டிவந்த நெருப்பாற்றை இன்றைய புதுக் கலாச்சாரம் பேசுகின்றவர்கள் யோசிக்க வேண்டும். தங்களது அழைப்பை ஏற்று வந்த மக்களின் இரத்தத்தில் ஊறிபோன சிலபல சங்கதிகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஆனால் இறைவனின் பாதையில் இருந்து நழுவாது அரவணைத்து அழைத்து போன நிகழ்வு யோசிக்கத் தெரிந்த நம்மவர்களை நிச்சயம் மலைக்கவைக்கும்!  

நம்மைச் சார்ந்த ஞானிகளும், சூஃபிகளும் பாதை செப்பனிட்டு போட்டுவைத்துவிட்டு போன தார் ரோட்டில் வாகன சகிதமாக வந்து, நீ இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று அதிகார அலட்டல் செய்பவர்களை காணும்தோறும் மனசு நோகவே செய்கிறது. இவர்கள், முதலில் அந்த ரோடு போட்டவனின் தன்னலமற்ற தியாகச் செயல்பாடுகளை மதிக்க வேண்டும். மதிக்காவிட்டாலும் அவர்கள் குறித்தும், இந்த மண்ணில் இஸ்லாம் வளர்ந்த சிரமத் திசை குறித்தும் யோசிக்கவாவது வேண்டும்.

இவர்களால் முடிவதெல்லாம்..., அழிவுச் செயல்பாடுகள் மட்டும்தான். மதச் சீர்த்திருத்தம் என்கிற பெயரில் நம்மவர்களை பிரித்து நிற்க வைத்திருப்பது, தர்கா வேண்டாம் என்கிர பெயரில் முஸ்லீம் இந்து ஒற்றுமைக்கு வேட்டு வைத்திருப்பது, திருமண சீர்த்திருத்தம் என்கிற பெயரில் திருமணத்தின் மணத்தையே இல்லாமல் ஆக்கியது, இறந்தவர்களுக்கான நினைவு மரியாதைகளை தத்துப்பித்தென்றாக்கியது, ஜக்காத்தில் புது முறையென்று அதனை கேள்விக் குறியாக்கியது,

மௌலதை வேண்டாம் என்று இஸ்லாமியர்களின் மனதில் காலம் காலமாக வளர்ந்து வந்த இனம்புரியாத இறை ஈர்ப்பை சிதைத்தது. தொழுகையில் சீர்திருத்தம் என்கிற பெயரில் இஸ்லாமியன் கொண்டிருந்த இறையச்சத்தில் கைவைத்தது என்று இப்படியே அவர்களின் தேவையற்ற செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இஸ்லாமிய வாழ்வு முறையினை ஆதி இஸ்லாமிய அரபித்தனம் மாறாமல் வழிநடக்கும் அந்தத் தம்பிகளில் ஒருவனை அழைத்து, பூமியை பாலைவனமாக்கி, அரபி பேசிபடிக்கு ஓட்டகத்தில் பயணம் செய்ய நாம் வலியுறுத்தும் பட்சம் நம்மை பைத்தியக்காரர்களாகவே பார்ப்பார்கள். ஆனால், வண்டிவண்டியாக புத்தி கூறியபடி நம்மை ஆதி அட்சரம் மாறாமல் நடக்க வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.

விடலைத்தனம் மாறாத இவர்களைப் பற்றி இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களுள் இஸ்லாமிய சீர்திருத்தம் என்கிற அசட்டுத் தனங்களையும்  மீறி மறைந்திருக்கும் அதிகார ஆசை, இப்போது இவர்களை தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. கோடிகளில் புரளும் தாராள சூழ்நிலை யதார்த்தமாக அவர்களை அண்டியும் இருக்கும். இதுவொன்று போதும் அவர்கள் முழுகிப் போக. அவர்களை மதித்து ரசூல் கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் எந்தவொரு இஸ்லாமியப் பண்டை இலக்கியத்தையோ, சூஃபிகளின் தர்காகாக்களையோ எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு சப்தம் ஓங்கி கேட்பது நிஜம்தான். கொள்ளும் வலிகளில் நாளை தானே அது அடங்கும்.

பண்டைய இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்கு வலுவிருக்கும் பட்சம் அது தன்னை தானே காத்துக் கொள்ளும். வலுவற்றவைகள் மண்ணில் விழுந்து மடிவதுதான் முறையாகவும் சரியாகவும் இருக்கும். நான் இலக்கியம் படித்த எந்த மூத்தவர்களும் இந்த மீட்டுருவாக்கம் செய்ததில்லை. இந்த மீட்டுருவாக்கம் என்கிற வார்த்தையே உலக எழுத்தார் ஜெயமோகனால் கண்டு பிடிக்கப்பட்டதாகவே அறிகிறேன். பண்டைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு வித்தை செய்வதென்பதெல்லாம்..., முனைவருக்குப் படிக்கும் மாணவர்களின் வேலை. இலக்கியவாதிகள் எப்பவும் படைப்பை செய்கிறவர்கள். மீட்டுருவாக்கம் அவர்களுக்கு சிறப்பு தருமா என்று விளங்கவில்லை. இஸ்லாத்தின் மீது பற்று இருக்கும் பட்சம், அதை முன்வைத்து நீங்களே ஓர் படைப்பை படைக்கலாமே. உங்களது திறமை மீது உங்களைவிட அதிகமாக கருத்துக் கொண்டிருப்பவன் நான்.

இப்போ உங்களது வழக்கு குறித்து பேசலாம். எனக்கு கோர்ட்டைவிட அமர்வில் உட்கார்ந்து பேசி பேசி தீர்ப்பதில்தான் மிகுந்த நம்பிக்கை. நீங்கள் ஏன் அதனை கைநழுவி விட்டீர்கள் என்பதை நான் அறியேன். மீண்டும் கூட நீங்கள் அப்படி முயல்வதை நான் விரும்புகிறேன். நேர் பேச்சால் ஆகாதது எதுவுமில்லை. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் வருடக்கணக்கில் போர் நடக்கிற போது கூட அதனை நிறுத்துவது நாடுகளுக்கிடையே ஆன அமர்வும், சமாதான உடன்பாடும்தான். யோசியுங்கள்.

உங்களது புதிய கவிதைத் தொகுப்பு வந்திருப்பதை நான் அறியேன். வரும் புத்தகச் சந்தையில் கட்டாயம் வாங்குவேன், கட்டாயம் வாசிப்பேன், கட்டாயம் விமர்சனமும் எழுதுவேன், நன்றி.

பென்னேஸ்வரன்:
நண்பரே, இவர்களின் முகவரி கிடைக்குமா? தொடர்பு எண் ஏதாவது இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். இவர்களுடைய பாடலை டெல்லியில் நடந்த பக்தி உத்சவ் நிகழ்வில் கேட்டு இருக்கிறேன். ஏதாவது அமைப்பு மூலமாக இவர்களை டெல்லிக்கு வரவழைக்க முயற்சிக்கிறேன்.

கிரிதரன்:
இந்தப் பக்கிரிஷாக்களின் இசையும், குரல் வளமும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. நாகூர் ஹனிபாவுக்குப் பிறகு என்னைக் கவர்ந்தவர்கள் இந்த 'பக்கிரிஷாக்களே'.

ஃபைஸல்கான்:

அருமையானபதிவு. மலையாள மண்ணில் "துகிலுணர்த்தல்" கொண்டு,தேசமெங்கும் பாடித்திரிந்த, ஓலைக்குடை பாணர்களை ஒத்தவர்கள் பகீர் சாகிப்கள். அலியாரின் வீரத்தையும்,பாததிமாவின் இல்லற நெறியையும்,உமரின் தீரசரித்திரத்தோடு ,பெருமானாரின் சரித்திரத்தையும் பாமர இசுலாமியனின் ,நெஞ்சகத்தே பசுமரத்தாணியாய் பதியச்செய்தவர்கள் பகீர்கள் என்றால் அதில் மிகையில்லை.அர்பு தமிழ் கொண்டு ,மறைபயின்ற காலத்திலும்,இவர்களின் தப்ஃஸ் இசையோடு கூடிய இலக்கிய ஜாலங்களை காதோர்த்து நின்ற நாட்கள் இன்றும் இனிக்கிறது.இவர்களையும் ,பண்டை இலக்கியங்களையும் பழமையென்றும்,பாமரமென்றும் ஒதுக்கிவைத்ததால் தான் இன்று, இசுலாமிய அறிவுமிகுந்த(?) மேதாவி இளம் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.நவீனமென்றும்,நாகரீகமென்றும் நம்மை ஏமாற்றிக்கொள்ளும் தருணத்தில்,நம் நாளைய தலைமுறையில் யாரேனும் திரும்பிநோக்க நேர்ந்தால்,அழிந்துபோன பாதசுவடுகளை மட்டும் விட்டு வைக்கவேண்டாம்.

***
ஃபக்கீர்ஷாக்களுக்கு நன்றி! - ஆபிதீன்
***
தொடர்புடைய ஒரு சுட்டி :மைலாஞ்சி விவாதங்கள்