Wednesday, July 25, 2012

மந்திர சக்தியுடன் மழலைப் பாப்பா !

என் இளையதம்பி ஹாஜாவுக்கு சென்ற 20ம் தேதி ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. பெயர் : அஸீல் ஹுஸைன். ஃபோட்டோவில் உள்ள பொடியர் அவர்தான். ஃபேஸ்புக்கில் , புலவர் ஆபிதீன் காக்காவின் பாடலில் ஒரு பாராவை மட்டும் நேற்று பதிவிட்டிருந்தேன். முழுப் பாடலும் இங்கே. வாழ்த்துங்கள். நன்றி.  - ஆபிதீன்

***

மழலைப் பாப்பா !


கன்னங் குழியச் சிரித்துவிடில்
கவலை பறக்குது காற்றினிலே
சின்னஞ் சிறுவிழிக் கடைவிளிம்பில்
சிந்தொளி தெய்வீகப் பொற்கதிரே!

பிஞ்சுவி ரல்களை நீட்டிமனப்
பிரியத்தை வெளியிடும் போதினிலே
நெஞ்சினில் தேன்மழை பெய்துதுயர்
நீக்கியே இன்பம் நிறைக்குதுவே

புரியாத வார்த்தைகள் பற்பலவே
பொழிந்து மழலையைக் கொட்டுகையில்
மரியாதை காட்டிடச் செய்யுமந்த
மந்திர சக்தியை என்னென்பேன்.

கொள்ளை சமத்துடன் நீநடந்தால்
கோரிய தெல்லாம் தாம்வலிய
பிள்ளைக் கனியுனைத் தேடிவந்து
பிரியமாய்ச் சூழ்ந்து மொய்த்திடுமே

***

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (நூல் : அழகின்முன் அறிவு)

Monday, July 16, 2012

மன்மோகன் அரசும் மதிநுட்ப அரசியலும் - தாஜ்


’உங்களது பாகத்தையும் சிறக்க எழுதுங்கள்’ என்று சொல்லியிருந்தார் நண்பர் தாஜ். அரசியல் கொஞ்சமும் அறியாத ஆபிதீன் என்ன எழுதுவான்?இன்று காலை மலையாள 96.7 FM-ல்-  ஸ்பெஷல் நியூஸ் வாசித்த ஷாபு - ‘ராஜா எங்கே இருந்தாலும் ராஜா அல்ல; ஆனால் ஞானி எங்கிருந்தாலும் ஞானிதான்’ என்று சொல்லிவிட்டு , ‘சொந்த ராஜ்யத்தில் முதலில் ராஜாவாக முயற்சி செய்’ என்று ஒபாமாவுக்கு அட்வைஸ் செய்ததை மட்டும்தான் சொல்ல இயலும். ஒலிம்பிக் செல்லும் அமெரிக்க வீரர்களுக்கான ஆடைகளைத் தயாரித்தது  சீனா!’ என்று வெடைத்ததையா சேர்ப்பது? - ஆபிதீன்

***


மன்மோகன் அரசும் அமெரிக்க மதிநுட்ப அரசியலும்


***

'T I M E'
அமெரிக்காவின் பிரபலமான வார இதழ்.
அந்நாட்டின் மூத்த பத்திரிகை!

முதலாம், இரண்டாம்...
உலக யுத்தத்தின் போதும்
வியட்னாமில்...
அமெரிக்கா படையெடுத்த போதும்
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும்
பனிப்போர் நடைபெற்ற போதும்
இப்பத்திரிகை ஆற்றிய பங்கு பெரிது!

மஹா சுதந்திரமான இதழ்!
அமெரிக்க அரசை தயவு தாட்சணையற்று
எத்தனையோ முறை விமர்சித்தும் இருக்கிறது!

இதனால் என்னவோ இதன் கருத்துக்கள்
உலகப் பார்வையில்
ஓர் தனித்த, உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறது.

இத்தனை புகழ் கொண்டிருந்தும்...
இவ்விதழ் இந்தியாவுக்குள்
காலடியெடுத்து வைத்தபோது
'நம்பர் ஒன்' ஆகமுடியவில்லை.
விற்பனையில்..
பத்தோடு பதினொன்று அவ்வளவுதான்!

சரியாகச் சொல்லணும் என்றால்...
இந்திய ஆங்கில இதழ்களை
இதனால் வெல்ல முடியவில்லை.
நம்மவர்களின் சமர்த்தும் சாதூர்யமும்
எப்பவும் விசேச அந்தஸ்து கொண்டது!

அதனால் என்னவோ...
நம் இதழ்கள் மாதிரி
அலங்காரங்களை மாற்றி கொண்டு
அதிர்ச்சிகளோடு கூடிய தலைப்புகளை தரவும்
இப்போதெல்லாம்...
'T I M E' தயங்குவதேயில்லை.

தயங்காத அப்படியொரு தலைப்பாகத்தான்...
பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றிய
'இயங்காத பிரதமர்!''தன்னிச்சையாக செயல்படத் தெரியாதவர்''துணிந்து முடிவெடுக்க முடியாதவர்'என்பதான இத்தியாதிகள்.

இச் செய்திக்குப் பின்னால்...
இன்றைய அரசை சீர் குலைக்கும்
அமெரிக்காவின் அரசியல் இருப்பதாகக் கருதுகிறேன்.
அதனையே 'T I M E' வெளிப்படுத்தி இருப்பதாக
நிச்சயமாக நம்புகிறேன்.

வெளுத்ததெல்லாம்...
பால் அல்ல.
தமிழில் ஒரு சொல்லும் இருக்கிறது.

*

கொஞ்ச ஆண்டுகளாகவே
பெரிய எதிர் கட்சியான பி.ஜே.பி.
மக்கள் மத்தியில் தூக்கிப்பிடிக்கும்
செய்திகள் அத்தனையும்
அமெரிக்காவிலிருந்தும், அதன் நேசத்திற்குரிய
மேலை நாடுகளில் இருந்தும்தான் வருகிறது.

நேற்று...
அமெரிக்காவில் உள்ள நாசா கூறியதாக,
இதிகாசத்தில் கூறப்பட்டிருக்கிற
'ராமர் பாலம்' என்பது
மெய்யென்றும்... அது சாஸ்வதமேயென்றும்
மக்கள் மத்தியில் பி.ஜே.பி. அமர்க்களப்படுத்தினார்கள்.
அதனையொட்டி சேது சமூத்திர திட்டத்தை முடக்கி,
நாட்டின் வருவாய்க்கு உலைவைத்து,
தமிழகத்து மூத்த தலைவர்கள் பலரின்
கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை
உருக்குலைய வைத்து
துஷ்பிரயோக சப்த அரசியலை நடத்தினார்கள்.

பின்னர்...
ஸ்விஸ் பேங்கில் உள்ள
இந்தியர்களின்
கருப்புப் பணத்தின் இருப்பைப் பற்றி
'விக்கிலீக்ஸ்' இணைய தளம் சுட்டியிருப்பதாக
ஏழை பரோபகார சிந்தையோடு
பிஜேபி காரர்கள்,
வியக்கவைக்கும் பரிசுத்த அரசியல் நடத்தினார்கள்.

தங்களுடைய அரசு இருந்த காலத்தில்
ஸ்விஸ் பேங்கில்
கருப்பு கணக்கு வைத்திருக்கும்
அந்த யமகாதக இந்திய முதலைகளை...
நாமே துவசம் செய்திருக்கலாமே என்று
அவர்கள் ஒருபோதும் யோசித்தார்கள் இல்லை.

இன்றைக்கு அமெரிக்காவின்
சிந்தைப்படி
T I M E -ல்
முழுக்க முழுக்க அரசியல் உள் நோக்கம் கொண்ட
செய்தியாக...
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
'தன்னிச்சையாக செயல்பட தெரியாதவர்'
'துணிந்து முடிவெடுக்க முடியாதவர்'
என்பதான இத்தியாதிகள்
வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது!

இதே செய்தியினை
இதே பி.ஜே.பி.
முன்பு எத்தனையோ தடவைகள் கூறியிருந்தாலும்...
அமெரிக்காவின்...
''TIME' இதழே சொல்லிவிட்டது என்பதாக
இன்றைக்கு இச் செய்தியினை
மக்கள் மத்தியில் வைத்து
பரபரப்பு அரசியல் நடத்துகிறார்கள்.

ஆக, இந்தியாவின்
பெரிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி.
அவ்வப்போது புது உற்சாகம் கொள்ள
அமெரிக்கா...
இப்படி தொடர்ந்து அடியெடுத்து
கொடுத்து கொண்டேயிருக்கிறது.
இது ஏனென்று யோசிப்பது தகும்.

அப்படியெல்லாம்...
யோசிக்க வேண்டாத அளவுக்கு
உலக அரசியல் நடவடிக்கைகளில்
நேராகவும் மறைமுகமாகவும்
வலிய ஈடுபாடு கொள்ளும்
அமெரிக்காவின் செயல்பாடுகள்
எப்பவுமே யோக்கியம் கொண்டதல்ல.

தன் கட்டுப்பாட்டுக்குள்
அடங்க இணங்காத எவரையும்
அது, நிம்மதியாக விட்டதில்லை.
தயவு தாட்சண்யமற்று வீழ்த்தும்.

இங்கே...
இந்தியா, அமெரிக்காவின் நேசநாடுதானே?
பின் ஏன் இப்படி? யென உங்களுக்கு தோணும்.
நேச நாடுதான். சந்தேகமில்லை. ஆனாலும்..
இன்றைய ஆளும் காங்கிரஸ் அரசு
அதனை இன்றைக்கு பரிபூரணமாக நிரூபணம் செய்யவில்லை.
இப்படியானதோர் வருத்தம்
அமெரிக்காவுக்கு இருப்பதாக கேள்வி.

*
விளங்கவும் விளங்க வராததுமான
மையலான தடம்பிடித்து...
வலைப் பின்னலாய் யோசிக்கிற போது....
அமெரிக்காவின் மறைமுகமான ஆணைகளை
மன்மோகன் சார்ந்த அரசும்
காங்கிரஸின் தலைவரான சோனியாவும்
ஏனோ தட்டிக் கழித்திருப்பதை உணரமுடிகிறது.

பொருளாதார ரீதியாகவும்
அணு பரிசோதனை ரீதியாகவும்
ஆப்கானிஸ்தானில்...
அமெரிக்கா மேற்கொண்டு வரும்
ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா...
ராணுவம் தந்து உதவாததின் ரீதியாகவும்...

மேலும்,
அமெரிக்கா வேண்டாமெனக் கூறியும்
ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல் வணிகத்தை
நிறுத்தாது தொடர்வதின் ரீதியாகவும்....

இன்னும்,
அமெரிக்கா கூறுகிறபடியான பரிபூர்ண
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை
இந்தியா காது கொடுத்து
கேளாதிருப்பதின் ரீதியாகவும்...
இந்திய காங்கிரஸ் அரசு முரண்டு பிடிப்பது
அமெரிக்காவுக்கு பிடிக்காது போயிருக்கிறது.

இதனால்,
இன்றைய காங்கிரஸ் அரசு தொடர்ந்து நீடிப்பதை
அது விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

அதனால்...
இந்தியாவின் பெரிய எதிர்கட்சிக்கு அனுசரணையாக,
அடுத்து ஆட்சியில் அதனை அமர்த்தும் பொருட்டும்
இப்படியான
மறைமுகமாக அரசியல் உதவிகளை செய்ய
அது முன்வந்திருக்கலாம்.
பி.ஜே.பி.யும் அதனை வரவேற்று இருக்கலாம்.

பிஜேபியே ஒருசமயம் தயங்கி இருந்தாலும் கூட
அதன் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ். முன்நின்று
அமெரிக்க நேச உறவுக்கு கரம் நீட்டி இருக்கலாம்.

காங்கிரஸ் அரசு,
அமெரிக்காவுக்கு பரிபூர்ணமாய் போடத் தயங்கிய
'ராயல் சல்யூட்'டை
இனி பிஜேபி தாராளமாகப் போடுமென நம்பலாம்.

எல்லா அரசியல் பேரங்களும்
அரசியல் வட்டத்திற்குள்ளேயே திரைமறைவில் சாத்தியம்!

அடுத்த ஆட்சியை பி.ஜே.பி. அமைக்க
அமெரிக்காவே உதவ முன்வருவதென்பது...
எத்தனை பெரிய விசயம்!
பெரும் அதிர்ஷ்டமல்லவா அது!
சதாம் உசேனும், ஒசாமா பின் லேடன்
முதலான இன்னும் பல நாட்டு தலைவர்களும் கூட
அமெரிக்கா வலுவில் முன்வந்து செய்த உதவியினை
அப்படிதான் முதலில் நினைத்தார்கள்.

உலகின் பல திக்கிலும்
அமெரிக்கா நிகழ்த்தி கொண்டிருக்கும் அரசியலை
அறிந்தவர்கள் அறிவார்கள்
என் கூற்றின் உள்ளார்ந்த நிஜத்தை.

நம்புங்கள், நம்மைச் சுற்றி
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
என்னென்னவோ நடக்கிறது!
என்றாலும், தீர்மானமாக
சொல்ல முடியாமல் போவதென்பது
துரதிர்ஷ்டம்தான்.

*
எனக்குத் தெரிந்து...
பலம் கொண்ட / திறன் கொண்ட/
எதைப் பற்றியும் கவலைப்படாத/
நாலையும் யோசிக்கவும் செய்யாத/
தனது முடிவே இறுதியென
தான்தோன்றித்தனமாக செயல்பட்ட
பிரதமர் ஒருவர் இந்தியாவில் இருந்தார் என்றால்...
அது, இந்திரா காந்திதான்!

அசாத்திய திறன்,
அச்சமற்றத் தன்மை,
அதையொட்டிய துணிந்த செயல்பாடுகளென
பல தகுதிகள் கொண்ட அன்னை இந்திராதான்
நம் நாட்டில்
'எமர்ஜென்ஸி'யை அறிமுகப் படுத்தி,
செயல்படுத்தியும் காட்டினார்.

மொத்த இந்தியாவுமே அன்றைக்கு நடுங்கிய நடுக்கம்
முன் எப்பவும் நடுங்கி இருக்காது!
நான் இங்கே சொல்லியிருப்பது....
இந்தியாவை ஆண்ட
வெள்ளையன் காலத்தையும் சேர்த்து.

பங்களாதேஷை
பாகிஸ்தானில் இருந்து பிரித்தார்.
பாகிஸ்தானோடு ஒன்றுக்கு மேற்பட்டமுறை
யுத்தமும் செய்தார்.

உலக நாடுகளின் பிரச்சனைகளுக்காக
பல நாடுகளுக்கு
நம் ராணுவத்தை அனுப்பிவைத்தார்.

ஈழப் புரட்சியாளர்களுக்கு
இந்தியாவில் தங்கவைத்து ராணுவப் பயிற்சி அளித்தார்.

சுதந்திரம் பெற்ற போது
இந்தியா எழுதிக் கொடுத்த
ஒப்பந்தப் பத்திரங்களை கடாசிவிட்டு,
மன்னர்களுக்குரிய மானியங்களை ஒழித்தார்.

சீக்கியர்களின் புனிதத்தலமான
பொற்கோவிலுக்குள்
தடையின்றி ராணுவம் நுழைய உத்தரவிட்டார்.

இந்தியாவின் மூத்த தலைவர்களையெல்லாம்
சிறைப்படுத்தினார்!

மக்களின்
பேச்சுரிமை, எழுத்துரிமைகளை பறித்தார்.
அவர்களின் சுதந்திர செயல்பாடுகளை முடக்கினார்.

பத்திரிகைகளின் சுதந்திரத்தைப் பறித்து
அவைகளின்  வாயைப் பூட்டினார்.

சொந்தக் கட்சியை உடைத்தார்.
ஆட்சிக்கும் கட்சிக்கும் தானே தலைவரானார்
இப்படி இன்னும் எத்தனையோ
விசேச அட்டகாசங்கள்!

இப்படியான
துணிவுகள் பல கொண்ட, தன்னிச்சையாகவும் இயங்கிய,
பற்பல அரிய செயல்பாடுகளையும் நிகழ்த்திக் காட்டிய
இந்திரா காந்தி மாதிரியானதோர் பிரதமரையா
அமெரிக்காவும், பி.ஜே.பி.யும் விரும்புகிறார்கள்?
நிஜமாலுமே அந்த மாதிரியான பிரதமருக்காகவா இவர்கள் இந்த ஆர்வம் காட்டுகிறார்கள்?
இல்லை.... இல்லவே இல்லை.
சத்தியமாக இருக்காது.
ஒரு காலமும்...
அப்படி அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

குறிப்பாய்...
எமர்ஜென்ஸி காலங்களில்,
இந்த பி.ஜே.பி.காரர்கள் பலர்
சிறைக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள்!
அவர்களில் இன்னும் பலர்
வெளியே தலைகாட்ட இயலாது
மண் புழுவாய் மண்ணுக்குள் 
நொந்து நெளிந்தவர்கள்!

இன்றைக்கு அவர்கள்,
துரிதமாக செயல்படும் பிரதமர்
வேண்டுமென்பதற்காகவும்
தன்னிச்சையாக முடிவெடுக்கும் பிரதமர்
வேண்டுமென்பதற்காகவும்
விசும்புவதெல்லாம் பக்கா அரசியல் நாடகம்.
அதற்குத்தான்.., அமெரிக்கா
அலுக்காமல் கதை வசனம்
எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அப்படியொரு பிரதமர் இந்தியாவில் கொலுவீற்றால்...
இந்தியாவில் தழைத்து வரும் ஜனநாயகம்
படுகுழிக்குள் தள்ளப்படும் என்பதை
அமெரிக்கா அறிந்திருந்தும்
இப்படியான அரசியல் சூழ்ச்சிகளையும்
அதனை வெற்றி காண
நிகழ்த்தும் குயுக்தியான செயல்பாடுகளையும்
படு ஆர்வமாக
அது செய்து கொண்டிருப்பதென்பதைக் காண ஆச்சரியம்!

அப்போ...
அமெரிக்கா உலகம் முழுக்கவும்
பெருமை பேசும்
ஜனநாயக மதிப்பீடுகள் கொண்ட
பேச்செல்லாம் பொய்யா?
ஜனநாயக அமைப்புகளுக்கு
வக்காலத்து வாங்குவதென்பதும் கூட அரசியல்தானா?
தலைச் சுற்றுகிறதுடா சாமி!

'துரிதமான செயல்பாட்டு பிரதமர்'
'தனிச்சையான செயல்பாடுகள் கொண்ட பிரதமர்'
வேண்டும் என்று
மன்மோகனைச் சுட்டி பி.ஜே.பி. குரல் எழுப்புவதில்
நான் அறிந்து சில அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது..

1. சோனியா இத்தாலியைச் சேர்ந்தவர்
அவர் இங்கே சூப்பர் பிரதமராக இருந்து செயல்படக் கூடாது.

2. ஒரு சமயம் மன்மோகன்
எதிர்க்கட்சி எதிர்பார்ப்பது மாதிரி இயங்கக் கூடுமெனில்
சோனியாவுக்கும் அவருக்கும் லடாய் ஏற்படலாம்.
அதையொட்டி சோனியா தனிமைப் படுத்தப்பட்டால்...
அதனையோர் அரசியல் ஆதாயமாக
பி.ஜே.பி. மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.

அமெரிக்கா கூட்டிக் கழித்து போடும் கணக்கு வேறு.
அது பல நோக்குகளை கொண்டது.

*
பின்குறிப்பாக சில தகவல்கள்:

ஜனநாயக நெறிமுறைகளை
தனதென வகுத்துச் செயல்படும் ஓர் நாட்டில்...

மக்கள் கோரிக்கைகளை கட்சித் தலைவர்கள்
கட்டாயம் கேட்க வேண்டும்.

மாநில கட்சித் தலைவர்கள் சொல்வதை
பிரதான கட்சித் தலைவர் பரிசீலித்து ஏற்கவேண்டும்.

பிரதான கட்சித் தலைவர் சொல்வதை
பிரதமர் என்கிற ஆட்சித் தலைவர்
கேட்க வேண்டும். கேட்க வேண்டும் மட்டுமல்ல கேட்டே ஆக வேண்டும்!

பிரதமர்,
அப்படி தான் கேட்டதை
தனதின் கீழ் இயங்கும்
மந்திரிசபையில் வைத்துப் பரிசீலித்து, நிறைவேற்றி
அதிகாரிகளின் மூலம் அதை அமுல்படுத்த வேண்டும்.

இதுதான் ஓர் ஜனநாயக நாட்டின்
ஜனநாயக அமைப்புகளோடு இயங்கும்
கட்சி / ஆட்சி முறை.
இந்த மரபினை கட்டிக் காப்பதுதான்
ஜனநாயக விரும்பிகளின் தலையாய பணி.

இந்த மரபின் மாத்திரை குறையும் பட்சம்
அங்கே ஜனநாயகம் செத்துக் கொண்டு
இருப்பதாகவே அர்த்தம்.
தவிர, இன்னொரு புறம் மெல்ல சர்வாதிகாரம் தலைதூக்கவும் தூக்கும்.

கட்சித் தலைமைப் பதவியையும்
ஆட்சித் தலைமைப் பதவியையும்
ஒரே நேரத்தில் இந்திரா காந்தி
தன்னகப்படுத்தி செயல்பட்டதால் வந்த வினைதான்
அவர் காலத்தி அவர் தன்னிஸ்டத்திற்கு
அரங்கேறிய எமர்ஜென்சி
என்பதை
இங்கே மீண்டும் ஒருமுறை நினைவு கொள்ளுதல் வேண்டும்.

*

சோனியாவை கட்சித் தலைவராகப் பார்க்காமல்
தனிப்பட்ட இத்தாலி சோனியா சொல்வதாகவும்
இந்தியாவைச் சேர்ந்த பிரதமர்
கூச்சமற்று அதைக் கேட்டு இயங்குவதாகவும்
இதனை ஓர் கேவலம் என்பது போல
பி.ஜே.பி. ஆரம்பம் தொட்டு
பிரச்சாரம் செய்து வருகிறது.
யோசிக்கத் தெரிந்த எவராலும்
சகிக்க முடியாத அரசியல் இது.

இன்னொரு பக்கம்...
பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான
ஆர்.எஸ்.எஸ். கிழிக்கும் கோட்டை
பி.ஜே.பி.யில் எவர் ஒருவரும் தாண்ட முடியாது.
அதை மீறும் தைரியம்
அந்தக் கட்சியில் எவருக்குமில்லை.
இவர்கள்தான்
மன்மோகன்சிங் அவர்களை கரி பூசிப் பார்க்கிறார்கள்.

பி.ஜே.பி.காரர்களுக்கு
ஆர்.எஸ்.எஸ். என்பது 'சிண்டிகேட்' என்றால்...
காங்கிரஸ் அரசின்
தலைமைக்கும் (பிரதமருக்கும்) அவரது நிர்வாகத்திற்கும்
அவர்களது கட்சித் தலைமைதான்...
அதாவது.. சோனியாதான்.. 'சிண்டிகேட்'!

ஆக
சிண்டிகேட் எனப்படும் சோனியா சொல்வதை
பிரதம நிர்வாகமான மன்மோகன் சிங்
கேட்டே ஆகவேண்டும்.
தனிச்சையாகவோ,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ
ஓர் இந்திய பிரதமர் செயல்படக் கூடாது.
அது ஆகவும் ஆகாது.
அதுதான்
நமதின் ஜனநாயக ரீதியான
கட்சி - ஆட்சி நெறிமுறை.

*
கடைசி... கடைசியாக
மன்மோகன் அரசு செயல்படுகிறேன் என்று
சிலபல திட்டங்களோடு
பாராளுமன்ற ஒப்புதல்களுக்காக
தீர்மானத்தை முன் மொழிகிறபோதே
கத்தி கலாட்டா பண்ணி
மாதக் கணக்கில் பாராளுமன்றத்தை முடக்கும்
பி.ஜே.பி.....
பிரதமரின் தன்னிச்சையான துரிதமான
செயல்பாடுகளுக்காக ஏங்குவதென்பது
வேடிக்கையிலும் வேடிக்கை.
ஓர் முரண் நகை.

எனக்குத் தெரிந்து...
எம்.பி.களின் அதிகப்படியான
நிதி தொகைக் ஒதுக்கீட்டு பணத்திற்கும்/
அவர்களின் அநியாய சம்பள, பேட்டா, மற்றும்
இதர சலுகைகளின் கூடுதல் தொகைக்கான மசோதா
பாராளுமன்றத்தில் நிறைவேற்ற
கொண்டுவரும் தருணங்களில் மட்டும்தான்
பி.ஜே.பி.காரர்கள் பாராளுமன்றத்தை
முடக்க வில்லை என்றே அறிகிறேன்.

என்ன இந்தியாவோ...
என்ன அரசியலோ...

***


நன்றி : தாஜ் | http://www.tamilpukkal.blogspot.com/  | satajdeen@gmail.com
***

மேலும் ஒரு சுட்டி :

‘செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை! : திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் / கீற்று

Saturday, July 7, 2012

அரசியல் - மஜீதின் முதல் பார்வை

பள்ளிக்கொடத்துக்கு எப்பதான் போகப்போறனோன்னு மூனு வயசுல இருந்தே காத்துக் கெடந்தவனாக்கும் நான்.

சரியா அஞ்சு வயசானதுக்கப்புறமா ஒன்னாங்கிலாசுல அத்தா கூட்டிட்டுப்போய்ச் சேக்கும்போது, குண்டுவாத்தியார் என் வயசுல  9 நாள் கொறையுதுன்னு அடம்புடிச்சார்.

ஏற்கனவே நான்ஆர்வக்கோளாறால - அத்தா படிக்கும் குமுதம் ஆனந்தவிகடனப் பாத்து, பொறகு கடைகளோட போர்டுகளப்பாத்து - கத்துக்கிட்ட தமிழ் எழுத்துக்கள அவர்ட்ட சொன்னபொறகும் கூட, சோத்தாங்கையால வல்லாங்கைப் பக்கம் இருக்குற காதை உச்சந்தலை வழியா தொட்டுக்காட்டுன பொறகுதான், பொறந்தநாள அட்ஜஸ்ட் பண்ணி சேத்துக்கிட்டார்.

இடையில இந்த ரெண்டுவருசத்துல ஏதாவது அண்ணன்கூடவோ இல்ல அக்காகூடவோ - ட்ரஸ்பண்ணிகிட்டு, பவுடர்லாம் போட்டுக்கிட்டு -  எலிமெண்டரி ஸ்கூலுக்குப் போய் அவுக கிலாஸ்ல கடைசி வரிசைல அமைதியா உக்காந்துட்டு வந்ததும் உண்டு.

அப்பவே எனக்கு வெக்கேசன்லாம் இருந்துச்சு.  

ஆமாங்க, துரூ பஸ்ல ஏத்திவிட்டா 40 மைல்ல இருந்த சிவகங்கைக்கு தனியாவே  நன்னி (பாட்டி) வீட்டுக்குப் போய்ருவேன். கமர்ஷியல்னு ஒரு ப்ரைவேட் கம்பெனி பஸ்தான் அப்ப த்ரூபஸ் விட்ருந்துச்சு. அதுல ஓட்டுன டிரைவர்கள் (நாகு மற்றும் குண்டு நாயினா) ரெண்டுபேரும் எனக்கு நல்ல பழக்கம்.. 3 மணி நேரப்பயணம்.  பாதுகாப்பா இருக்கட்டும்னு மொத ஸீட்டுதான் எனக்கு எப்பவும்.

அவுக ரெண்ட்பேருமே என்னைய மாமான்னுதான்  கூப்டுவாங்க

==எழுத்துப்பிழையெல்லாம் இல்ல, அவுங்க என்னைய மாமான்னுதான் கூப்டுவாங்க. ஏன்னா நான் முசுலிம்ல்ல?  அவுக நாயக்கர்மாராம். ரெண்டு சாதிக்கும் அதான் உறவுமொறையாம், இன்னிக்கு வரைக்கும் ==

அங்கெ போனாலும் என்னங்கிறீங்க? ஆவரங்காட்டுல ஆதம்பள்ளிக்கு பக்கத்துல இருந்த நன்னிவீட்டுக்கு அடுத்தவீட்டுப் போஸ்ட்மேன் மகன் ரெண்டாப்பு மனோகரனோட கருவாட்டுப் பள்ளிக்கொடத்துக்கு போயும் உக்காந்துருக்கேன். அதுனால தமிழ் எழுத்துகள்ல நெறயத் தெரியுமாக்கும் எனக்கு.

அதுபோக,  மூக்குப்பொடி விளம்பரம் மூலம் எனக்கு 3 இங்கிலீஸ் எழுத்துகளும் தெரியும். அந்த T.A.S. ங்கிற 3 எழுத்துக்களத்தவிர எனக்கு இன்னம்ரெண்டு எழுத்துக்களுங்கூடதெரியும் அப்ப.

சிவகங்கை மதுரை ரூட்ல ஓடுன ஒரு பஸ்ல 3 இங்கிலிஸ் எழுத்து போட்ருக்கும்ஒருநாள்  எங்க நன்னிட்ட அத காமிச்சு அதுல என்ன எழுதிருக்குன்னு கேட்டேன்.

தெரியலயேடா, மொதல்ல இருக்குறதுஎம்மு”, கடசில இருக்குறது “டி”, நடுவுல இருக்குறது என்னன்னு தெரியலடான்னு சொல்லிருச்சு.  

அன்னிக்கு சாயந்தரமே  ரோட்டோரமா கூட வெளயாடிக்கிட்ருந்த இன்னொரு மொட்டக்குண்டிப் பயல்ட்ட (ஆமா ஒண்ணு நான், இன்னொன்னு அவன்) கேட்டேன்:  அப்பல்லாம் ஆவரங்காட்ல இருந்து அரமணைவாசல் வரைக்கும் அப்டியே நன்னிகூட போய்ட்டுவர்ற தைரியம் இயற்கையாவும், சுதந்திரம் நன்னிட்டயிருந்தும் எனக்கு கெடச்சிருந்துச்சு  

இது என்ன பஸ்டா?

அட்ச்சான் பாருங்க: M D T எஸ்ப்பிரஸ்

ஆக அன்னிக்கு குண்டுவாத்தியார்ட்ட எனக்கு இங்கிலிசும் தெரியும்னு சொல்லாததுல எனக்கு இப்பவும் வருத்தம்

இப்டில்லாம் ஆர்வக்கோளாறா இருந்ததுனால பள்ளிக்கொடத்துல சேந்த ரெண்டுமாசத்துலயே வேகவேகமா தமிழ் படிப்பேனாக்கும்.

ஒண்ணாப்பு சேந்த கொஞ்ச நாள்லயே எலக்சன் வந்துச்சுங்க. அதனாலயே ஒடனே அரசியலும் தெரிய ஆரம்பிச்சிருச்சு;

(கூட்டம் கூட்டமா லாரில பல கலர்ல கொடிகளப் புடிச்சுக்கிட்டுக் குய்யோமுறையோன்னு கத்திக்கிட்டுப் போறதுதான் எலக்சன்னு அப்ப நான் நெனச்சுக்கிட்டேன்.)

எனக்கு அரசியல் அரிச்சுவடி சொல்லிக்குடுத்தது ரெண்டு சொவர் வெளம்பரமும் ஒரு தட்டி வெளம்பரமும்தான்.

1.       ரகுமாக்கா வீட்டு சொவத்துல ஒரு நாலஞ்சு வரி; செவ்வகமா வெள்ளயடிச்சு அதுல நீலத்துனால எழுதிருந்தாக:

//  கூட்டணிப் புரட்டர்களை, குழப்ப வாதிகளை, கொள்கை அற்ற  கோமாளிகளை நாட்டுக்கு அடையாளம் காட்டிட காளைச் சின்னத்தில் முத்திரை இடுங்கள். நன்றி //  ## பக்கத்துல ரெண்டு மாடு படம் ##

ராஜாஜி-திமுக கூட்டணியை வெடக்கிறாகலாம் காங்கிரஸ்காரவுக – இது எனக்கே(!) ரொம்ப வருசத்துக்கப்புறந்தான் தெரிஞ்சுச்சு. படிக்கத்தெரியாதவுகளுக்கு?

2.       கொஞ்சம் தள்ளி சின்னமுத்து ராவுத்தர் அய்யா வீட்டுச் சொவத்துல, இதே மாதிரியே இன்னொன்னும் எழுதிருந்தாக

// காகிதப்பூ மணக்கிறதா காமராசரே? கானல் நீர் இனிக்கிறதா கருத்திருமனே? கற்கண்டு கசக்கிறதா கக்கனே? உங்கள் வாக்கு உதயசூரியனுக்கே. நன்றி //       ## கீழே உதயசூரியன் படம் ##

எனக்கு தமிழ் வேகமா படிக்கவரும்கிற சந்தோசத்துல இந்த ரெண்டு விளம்பரத்தையும் அடிக்கடி போய்ப் படிச்சுப்பாப்பேன். இல்லைன்னா இப்பவும் அதெல்லாம் ஞாபகத்துல இருக்குமா? சமயத்துல அந்த வழியா பக்கத்து கிராமங்களுக்கு நடந்தேபோற சிலபேர் எங்கிட்ட வந்து, உனக்கு படிக்கத்தெரியுமா தம்பி? எங்க, என்ன எழுதிருக்குன்னு சொல்லு பாப்போம்னு கேக்க, அவுகளுக்கும் படிச்சுக்காட்டுவேன். படிக்கத்தெரியாத அவுகளுக்கு இந்த அடுக்குமொழி தத்துவமெல்லாம் புரிஞ்சிருக்குமான்னு எனக்கு இப்பவரைக்கும் தெரியாதுங்க. அதனால என்ன?  ஓட்டுபோட்றதுக்கு தெரியும்ல அவுகளுக்கு?

3.       பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கத்துல நின்ன ஒரு பூவரச மரத்துல வட்டமா ஒரு தட்டி தொங்குச்சு (அது சைக்கிள் டயர்ல செய்றதுன்னு எனக்கு ரொம்ப காலத்துக்கு அப்பறந்தான் தெரியும்)

அதுல, ஒரு வயசானவரும் ஒரு நடுவயசுக்காரரும் கையால் வரஞ்ச படத்துல இருந்தாங்க. நடுவயசுக்காரர் வயசானவர்ட்ட கேப்பாரு, ரூபாய்க்கு மூனுபடி அரிசின்னு சொல்றிகளே, எப்படி போடுறதுன்னு; அதுக்கு வயசானவரு சொல்லுவாரு: ஆழாக்குதான் படின்னு சட்டம் கொண்டுட்டு வந்துருவோம்னு. எனக்கு ஒண்ணும் புரியல. அதனால விடுவேனா என்ன? அந்தப்பக்கம் போகும்போது அத்தாட்ட காட்டி இதுல இருக்குறது யாரு? இதுக்கு என்ன அர்த்தம்?னு ரெண்டு கேள்வியப் போட்டேன். இது அண்ணாவும் கருணாநிதியும்னு சொன்னார். என்ன அர்த்தம்னேன். போடா இது காங்கிரஸ்காரய்ங்க வச்சிருக்காய்ங்க, களவானிப்பயலுகன்னார். (திமுககாரர் பின்ன எப்டி சொல்லுவார்?)

நானும் விடலை, வீட்ல அம்மாட்ட போய்  ஆழாக்குன்னா என்னன்னு மீண்டும் விசாரணை; இதுதாண்டா ஆழாக்குன்னுச்சு அம்மா ஒரு வஸ்துவைக் காமிக்க, அய்ய, இது ‘ஒலக்கு’ல்லன்னு என சந்தேகத்தக் கேக்க, இதத்தான்டா அப்டி சொல்வாகன்னவுடனேயே எனக்கு புரிஞ்சுபோச்சு - அரசியல்.

(உலக்கு: பக்காப்படியின் எட்டில் ஒருபகுதி – திரவம்: +/- 200 மில்லி. திடம்: அரிசின்னா 187.5 கிராம். உத்தேசமா ஒண்ணரை கிலோ அரிசி ஒரு பக்காப்படி; பக்காப்படின்னா தஞ்சைமாவட்ட பகுதிகளில் அரை மரக்கா; செட்டிநாட்டுப்பகுதிகளில் ஒரு படின்னா கால் மரக்காதான். அதை சின்னப்படின்னு சொல்லுவாக. ஆனாலும் இந்த வித்தியாசம் எப்போதும் குழப்பவே குழப்பாது. ஏன்னா எப்ப எங்க பகுதிகள்ல யாரு ஒருபடின்னு சொன்னாலும், ஒடன்ன்ன்…னே ஒரு கேள்வி பொறந்துருமே - பெரியபடியா, சின்னப்படியான்னு)

இப்டி அரசியலை முளுசா கத்துக்கிட்ட கொஞ்ச நாளக்கி அப்பறம், பள்ளிக்கொடத்துல பயலுகள்லாம் பேசிக்கிட்டாய்ங்க பாருங்க,  எம்ஜியார் கட்சி செயிச்சுருச்சுன்னு, அப்ப நான் மேலும் தெளிவாய்ட்டேன் – அரசியல்ல.

அப்டியே இன்னும் ரெண்டு முக்கியத் தகவல்களும் சொன்னாய்ங்க.

அவையாவன:
1.       எம்ஜியாரு தோக்கவே மாட்டாரு.
2.       எம்ஜியாரு சாகவே மாட்டாரு.

இப்பத்தான் எனக்கு புல்லரிச்சுச்சு

ஏன்னா நான் அப்பத்தான் ஜிவாஜி கச்சில இருந்து எம்ஜியார் கச்சிக்கு மாறி இருந்தேன். கொஞ்ச நாளக்கி முன்னாலதான் நானும் என் தம்பியும் நன்னி வீட்டுக்கு காப்பருச்சை லீவுக்கு போயிருக்கும் போது ஒரு புது வெளயாட்டு கத்துக்கிட்டு வந்துருந்தோம். எங்கள விட கொஞ்சம் பெரியபய ஒருத்தனோட வெளயாண்டுக்கிட்டு இருக்கும்போது அவன் கத்துக்குடுத்த வெளயாட்டு அது. அதாவது நானும் என் தம்பியும் சண்டை போடனும்; அதுல நான் ஜிவாஜியாம். தம்பி எம்ஜியார். கடைசில நாந்தான் செயிக்கனுமாம். (காங்கிரஸ்காரப் பயபுள்ள போல்ருக்கு அது) செயிச்சு செயிச்சு வெளயாண்டு ஊருக்குத் திரும்பி வந்தபொறகு, வீட்ல அத்தாட்ட வெளாண்டு காமிச்சா, அவர் பாத்து சிரிச்சுட்டு, கடேசியா வெளயாட்டே தப்புன்னு சொல்லிட்டார்.

சண்டைனா எம்ஜியார்தான் செயிக்கனும்ட்டார். ஏன் அப்டி சொன்னார்னு அப்ப எனக்கு வெளங்கல.

(ரெண்டு காரணம்தான் இருக்கணும்.
1.        
  1. சண்டைனா எம்ஜியார் நெறய படத்துல நல்லா போட்ருக்கார், சிலம்பம்- கத்திச்சண்டை “நல்லா” கத்துக்கிட்டவர்னு லாஜிக் காரணமா இருக்கணும்
2.      
 2. அவர் திமுக காரர்ங்கிறதால இருக்கனும்)

அப்ப எனக்கு இதெல்லாம் தெரியாதுல்ல? அதனால, நான் பாத்தேன்; சரின்னு சொல்லிட்டு அன்னைக்கே அப்பவே நான் எம்ஜியாரா மாறிட்டேன்; தம்பிய ஜிவாஜியா மாத்திட்டேன்.

புல்லரிச்சது சரிதானே?

ஆனா ஒண்ணுங்க, அண்ணாவுக்கு அப்புறமா திமுகவுல யாரு முதலிடத்துக்கு வருவான்னு யாருக்குத் தெரிஞ்சுதோ இல்லயோ, எங்க ஊரு காங்கிரஸ்காரய்ங்களுக்கு, திமுக ஜெயிக்கிறதுக்கு முன்னாலயே, தெரிஞ்சிருச்சு பாத்தியல்ல? அதெ நெனச்சா எனக்கு இப்பவும் புல்லரிக்கும்.

அரசியல்ல எனது அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சிய, சொல்லணும்னு ஆசயாத்தான் இருக்கு, உங்கள மேக்கொண்டு படுத்தவேணாம்னு இத்தோட விட்டுற்ரேன். நல்லா இருங்க…..

***



நன்றி : மஜீத் (http://majeedblog.wordpress.com/ ) | E-Mail :  amjeed6167@yahoo.com

Thursday, July 5, 2012

ஹமீது ஜாஃபரின் அல்-சாட்டியம்

வயசுக்கேத்த போடா போடுறாரு நம்ம நானா? அழிச்சாட்டியம் தாங்கலே... அருட்கொடையும் எழுதுறார், அநியாயமா குடைவதையும் எழுதுறார். எழுதட்டும், எழுதட்டும். எப்படியாவது இலக்கியம் ஒழிந்தால் சரி.

இந்தக் கதைட்டுரையில் ஒரு சம்பவம் வருகிறது. சஃபர் புறப்படும் நானாவைப் பார்த்து அவர் மனைவி , 'மச்சான் , தெரிஞ்சோ தெரியாமலோ தப்புத் தவறு பண்ணியிருந்தா மன்னிச்சுக்குங்க' என்று சொல்வதாக. இதேபோல் அஸ்மாவும் சொன்னாள் என்னிடம் ஒருமுறை . 'அப்படிலாம் சொல்லாதே புள்ளே' என்று தேற்றியதற்கு 'வூட்டுல சொல்லச் சொன்னாஹா மச்சான்' என்றாள் அப்பாவியாக! -  ஆபிதீன்

***

கிளுகிளு கீலரும் அசரத்தும்

ஹமீது ஜாஃபர்

அறுபதுகளில் பிரிட்டிஷ் அரசியலை ஒரு கலக்கு கலக்கிய அழகிய நங்கை, அதாவது மோனிகா லவன்ஸ்கியோட லாத்தா(அக்கா), மர்லின்மன்றோவுடைய தங்கச்சி. முழு பெயர் கிருஸ்டைன் கீலர். அவர்களை இங்கே சொடுக்கி பார்த்துக்கொள்ளவும். அப்ப அகில உலக பத்திரிக்கை அனைத்திலும் தலைப்பு செய்தியில் வலம் வந்த ரம்பை. ஏற்கனவே கிழிஞ்சது நல்லா கிழிஞ்சு ரொம்ப நாள் தெரியாமெ இருந்துச்சு. அப்புறம் சொச்சமிருந்ததையும் பத்திரிக்கைக்காரங்க கிழிகிழின்னு கிழிச்சு எடுத்துட்டாங்க. அதை நான் கொஞ்சம் தச்சுப்பார்த்தேன் முடியலெ!

இவ்வளவு காலமில்லாமல் இப்ப ஏன் எழுதுறேண்டு கேட்டா, ஊருக்கு போயிட்டு வந்ததுலேந்து மனசு சரியில்லை. பரக்கத்தா அஞ்சு மாசம் தங்கியிருந்தேன், எல்லாம் எதிர்பாராமல் வந்த சுனாமி, முழுசா இல்லாவிட்டாலும் 90% ஜெயிச்சுட்டுத்தான் வந்திருக்கேன். ஏகப்பட்ட பணசெலவு; விட்டதையெல்லாம் சேர்க்க வந்திருக்கேன்.

அஞ்சு மாசமும், அஞ்சு நாள் மாதிரி ஓடிடுச்சு, வர்றதுக்கு மனசே இல்லை. என்ன செய்வது? 'பூவா'வுக்கு வழி செய்யணுமே! இதுக்கிடையிலே ஆபிதீன் வேறே, "நானா எப்ப வருவீங்க? சிரிக்க ஆளில்லை!" என்பார். அவர் சொன்னது வாஸ்தவம்தான். அவருக்கு இங்கே ஆளில்லை எனக்கு ஊரில் ஆளில்லை; எங்க ஃப்ரேஸாலஜியிலெ கருத்து பரிமாற்றத்துக்கு ஆபிதீன் மாதிரி ஆள் இல்லைதான். இப்பவும் இருக்காங்க ஊர்லெ. ஆனா, நொண்டியும் மொடமுமா வூட்டோட அடஞ்சி கிடக்கறவன்கிட்டே சிரிச்சுப் பேசமுடியாது. எனக்கும் சிரிக்க மனசு வரலை.

ஒண்ணா தேஞ்ச கூட்டாளி ஒருத்தன் பத்து வருசமா கால் கட்டைவெரல் புண்ணுக்கு, கட்டுப் போட்டுக்கிட்டிருந்தான். இப்பவும் அந்த வெரல்லெ கட்டுதான். நல்லா இருந்த அடுத்த கால் கட்டை வெரல் அழுகி வெட்ட வேண்டியதாகிவிட்டது. இப்ப வெரலை எடுத்துட்டு ஊட்டு வாசல்லெ உட்கார்ந்துக்கிட்டிருக்கான். எல்லாம் சேலு(செயல்)?. இனிப்பு நீரின் மகிமை, வாயைக் கட்டுனாத்தானே! விருந்துக்குப் போனா ஃபிர்ணி கஞ்சியைக்கூட விடுவதில்லை. நடப்பு மாறாமெ அது மாறுமா? அது மட்டுமா? தொணைக்கு யாராச்சும் வேணும்.

ஒரு தடவை கிராமத்துக்கு அவனோட போயிருந்தப்ப 'பெரியய்யா வந்துட்டாரு, நாட்டக்காரு ஐயா வந்துட்டாரு'ன்னு ஏக தடபுடலான வரவேற்பு. ஐயாவை கண்டதும் கயித்துக்கட்டுலை எடுத்துப் போட்டு உட்காரவச்சு, குடிக்க எளனி வெட்டிக்கிட்டு வந்துட்டாங்க. சிறுசு பெருசுன்னு எல்லா பொண்ணுங்களும் மட்டு மருவாதையா சுத்தி நின்னுக்கிட்டு ஐயாவோட அருள் வாக்குக்காக காத்திக்கிட்டுருந்ததை இன்னும் மறக்கமுடியலெ.

சும்மா இருக்கமுடியாம நான், "ஏண்டா, அந்த காலத்துலெ வாப்பா விவசாயம் பார்த்தப்போ நீ பண்ணையாள்கிட்டெ டூயட் பாடிக்கிட்டிருந்ததை இன்னுமா விடலெ?" ன்னு கேட்டப்பொ "டேய் சத்தம்போட்டு மானத்தை வாங்காம வேடிக்கைப் பாரு" ண்டு சொன்னான். கொஞ்ச நாள் முந்திவரை ஒரு ராசம்மாதான் செகரட்டரியா இருந்தாகன்னு கேள்விப்பட்டேன், ஆனால் இப்பொ அவ இல்லை. கேட்டதற்கு அதெல்லாம் போயிடுச்சுடான்னு வருத்தமா சொல்றான்.

இதெல்லாம் பரம்பரை சொத்து. இவரு ஒரு சாம்பிள். இதுக்கு முந்தி கிராமங்கள்லெ பல மிட்டா மிராசு தொப்பிவாப்பாக்கள் இப்படிதான் இருந்திருக்காக. ஜாலா ஜோலிக்கென்றே ஒரு குட்டி பங்களா கிராமத்துலெ இருக்கும். கலர் மாறி யாராவது இருந்தா அது நம்மாளோட கைங்காரியமாத்தான் இருக்கும்னு யூகிச்சிக்க வேண்டியதுதான். சிலருக்கு முகச்சாயல் காட்டிக்கொடுக்கும், ஆனா அதைப்பத்தி அவங்களுக்கு கவலை கிடையாது இன்னும் சொல்லப்போனால் அது அவகளுக்கு கிரடிட்.

இவன் மட்டும்தான் கூட்டாளி இல்லை,  இன்னும் பலபேர் இருக்காங்க. அவங்கள்லாம் பழசை மூட்டைக்கட்டி வச்சுட்டு வக்து தவறாம பள்ளிவாசல்னு மறுமைக்கு சேர்த்துக்கிட்டிருக்கிறதா சொல்றாங்க. இதுலெ எனக்கு நம்பிக்கை இல்லை. மறுமை என்னன்னு தெரியாது. தெரியாத ஒன்றுக்கு எதுக்காக சேர்க்கணும்? எங்க ஹஜ்ரத் சொல்லிருக்காக , இரண்டு கோல்டன் டைம். 'what you are in today in the result of what you were in yesterday(ie. past)' இது முதல் கோல்டன் டைம். அடுத்தது 'what you will be in tomarrow in the result of what you are in today". நேற்றைய எண்ணம், கற்பனை, செயல் இவைகளின் மலர்ச்சி இன்று நீ இப்படி இருப்பதற்கு காரணமாயிருக்கும்போது நாளைய வாழ்வுக்கு இன்று ஒழுங்காக இருந்தாலே போதுமானதாயிற்றே. இது மறுமைக்கும் தொடருமல்லவா? அப்படி இருக்கும்போது மறுமைக்கென்று தனியா சேர்க்கிறேன் என்கிறது ஏமாற்று வேலை என்பது என் சித்தாந்தம். இருந்தாலும் யாருக்கும் சொல்வதில்லை. அதது அவங்கவங்க சொந்த விருப்பு வெறுப்பு.

ஒருவகையா ஊர்லேந்து புறப்படுமுன், "மச்சான் தெரிஞ்சோ தெரியாமலோ தப்புத் தவறு பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க" அப்டீன்னாள் என் தர்ம பத்தினி ஜல்மா. எனக்கு எகிறுனிச்சு. "அதென்ன தெரிஞ்சோ தெரியாமலோ? புருஷன் பொண்டாட்டின்னா சகலமும் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் கோபம் இருக்கும் சில சமயம் சந்தோஷம் இருக்கும். எப்போதுமே ஒரே மாதிரி இருந்தா அது வாழ்க்கையே அல்ல அதுக்குப் பேரு மல்லாகொட்டை (உப்பு சப்பு இல்லாதது). சில நேரத்துலெ உனக்கு கோபம் இருக்கும் , சில நேரத்துலெ எனக்கு இருக்கும் சில நேரங்கள்லே நான் உனக்கு தொல்லை கொடுத்திருப்பேன், பல நேரங்களில் நீ எனக்கு தொல்லைக் கொடுத்துக்கிட்டிருப்பாய் இப்படி எல்லாம் கலந்திருந்தாதான் வாழ்க்கை" அப்டீன்னு ஒரு பெரிய அட்வைஸை கொடுத்துக்கிட்டுருக்கும்போது , "நான் என்ன உங்களுக்கு தொல்லைக் கொடுத்துக்கிட்டிருக்கேன், இந்த எடக்குத்துதானே வாணாங்கிறது" என்று ஒரு மாதிரியாப் பார்த்தாள். "சும்மா ஒரு இதுக்கு சொன்னேன்" என்று சமாதானப்படுத்திவிட்டு விட்டு புறப்பட்டேன்.

ப்ளேன் இறங்குறப்பொ பார்க்கும்போது ஒரு வித வெறுப்பு; பச்சைப்பசேல்னு இருந்த பூமியை விட்டுட்டு பசுமையே இல்லாத ஒட்டக பூமிக்கு வர்றோமேன்னு. ஒட்டகத்தோட ஒட்டகமா முப்பது வருசத்துக்கு மேலா இருந்தாச்சு, இனி எப்போ மனுசனா இருக்கப்போறோமோ தெரியலெ? ம்... வந்தாச்சு? மூட்டைப்பூச்சிகளை பொறிச்சு திண்டுக்கிட்டு காலத்தை ஓட்டவேண்டியதுதான்.

என்ன இருந்தாலும் அந்த காலத்துப் பசுமை திரும்ப வருமா? பள்ளிக்கூடம் லீவு விட்டாலும் சரி, கோடை விடுமுறையானாலும் சரி, அது தனி களைகட்டும். ராத்திரியிலெ வேட்டைக்குப்போவது. அதாவது ரோட்டோரம் இருக்குக்கிற தென்னை மரத்துலெ இளனி பறிப்பது, குளத்துலெ மீன் பிடிப்பது. குத்தகை எடுத்த குளத்துலெ ராத்திரியிலே மீன் பிடிப்பதை திருட்டுண்டு அசிங்கப்படுத்தக்கூடாது. அதனால்தான் பிடிப்பது என்று நாகரீகமா சொல்கிறேன். மழை காலமா இருந்தா ஏர்கன், கேட்டாபில்ட், சுங்குத்தான் என சகிதமா கொக்கு மடையான், குயில் வேட்டைக்கு செல்வது. இல்லேன்னா வலை வச்சு மீன் பிடிக்கிறது. மழையிலெ பொடி மீன் நிறைய விழும். தோசைக்கு ரொம்ப சோக்கா இருக்கும்.

"ஆத்து மீனு சேத்து நாத்தம் சோத்துக்காகாது  பெண்களே சோத்துக்காகாது" என நாகூர்காரர் ஒருத்தர் பாடினார். தின்று பார்த்திருந்தாலல்ல தெரியும் ஆகுமா ஆகாதென்று. அதன் ருசியே தனியாச்சே!

அப்ப எங்க ஊர்லெ இருந்த கூட்டாளி அசரத் சில நல்ல ஐடியாவுல்லாம் சொல்லிக்கொடுப்பாரு. பேரு அப்துல் ஷுக்கூர், நாங்க ஷுக்கூர் பாய்ன்னுதான் கூப்பிடுவோம். எல்லார்கிட்டையும் ஃப்ரண்ட்லியா பழகினதாலெ கூட்டாளி அசரத்துன்னு சொல்றேன். தொழுவிச்சு கொடுப்பதற்காக ஊர் அவரை அப்பாயிண்ட்மெண்ட் செஞ்சிருந்தாலும் அவருக்கு டூட்டி இரண்டாவது பதினஞ்சு நாள்தான். முதல் பதினஞ்சு நாள் ஆஸ்தான இமாம் தொழுவிப்பார். ஆனால் தினமும் காலையிலெ சுமார் இரண்டு மணி நேரம் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக்கொடுப்பார். புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டா முழு நாளும் ரெஸ்ட். பள்ளிவாசலை ஒட்டி மதரஸா. ஜாகை அங்கேதான். எங்களுக்குப் பொழுது போகலைன்னா அவர்கிட்டேபோய் அரட்டை அடிப்பது. காலை நாஸ்டாவை முடிச்சிட்டு மதரஸா பெரிய தூண்லெ சாஞ்சிக்கிட்டு சொக்கலால் ராம் சேட் பீடியை திண்ணுக்கிட்டு இருப்பார். நாம போனா ரெண்டு பீடியெ கொடுத்து நல்லா இழுத்து விடுங்க ஃப்ரஷாயிடுவீங்க என்பார்.

அசரத்துன்னு சொன்னா தறுதலைகளைத் திருத்துறவர்னு பேரு, ஆனால் இவர் எங்களோட சேர்ந்து கெட்டுக்கிட்டிருந்தார். பள்ளிவாசல் ஹவுல்லெ வளர்ந்திருந்த மீனை புடிக்க சொன்னதே அவர்தான். நாங்கதான் குஞ்சு மீனா வாங்கிக்கொண்டுவந்து விடுவோம். அதுக்கு தீணியெல்லாம்கூட போடுவோம், அதுக்காக புடிக்க உரிமை இருக்குன்னு ஃபத்துவா கொடுத்தா எப்படி? கொடுத்துட்டார். நாம அதை கேட்காம இருந்தா...? தப்பல்ல அது! அதனாலெ அன்னைக்கு ராத்திரியே கை வச்சிட்டோம். ஹவுல்லெ புடிக்கிற மீனாக இருந்தாலும் சரி, பள்ளிவாசல் குளத்துலெ புடிக்கிற பாங்கு சத்தம் கேட்ட மீனாக இருந்தாலும் சரி அசரத்துக்கு அன்னைக்கு விருந்து. ஏன்னா ஹலால் சொல்லனுமே! சாப்பிட்ட பிறகு ஒரு துஆ ஓதுவார், 'அல்லாஹும்ம இஃபத்தஹுனா அபுவாபல் பரக்கத்தி, வ அபுவாபர் ரஹ்மத்தி' ன்னு; அதாவது 'இறைவா! வளமையின் வாயிலையும் அருட்கொடையின் வாயிலையும் திறந்து வை' என்று அர்த்தம். ரஹ்மத்துக்குப் பக்கத்திலெ நிசாவையும் சேர்ந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்? கடைசிவரை எந்த சாவி போட்டும் ரஹ்மத்து(நிசா)வுடைய வாசல் திறக்கவே இல்லை.

மீன் புடிக்கமட்டுமல்ல சினிமாவுக்கு போகவும் அசரத்துதான். ராத்திரி செகண்டு ஷோ சினிமாப் பார்க்க சைக்கிள் எடுத்துக்கிட்டு போவோம். துணைக்கு மட்டுமல்ல பொழுதுபோக்கா நல்ல கதை சொல்வார். சுபஹானல்லா அல்ஹம்துலில்லா கதை (லின்க்) மாதிரி பல கதை அவர் கைவசம் இருந்துச்சு. அதனாலெ கூடு கொடியேத்தம்னு எல்லா ஃபங்ஷனுக்கும் அவரை வச்சுக்குவோம். இப்படி ஒரு ஒடுக்கத்து புதனன்று கடற்கரைக்குப் போனோம். ஆணும் பெண்ணும் நல்ல கூட்டம், ஒரே துப்பட்டி மயம். சாயந்திரம் அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். திடீரென்று பதறிப்போய் "அங்கே பாருங்க 'கீலர்' வாராக" என்றார் நம்ம அசரத்து பாய். (அப்போது கீலருடைய புகழ் எல்லா பத்திரிக்கையிலும் பரவி ஒய்ந்த சமயம்.)

"என்ன கதக்கிறீ..ங்க ப்பாய்" என்றார் பக்கத்திலிருந்த 'அய்புவான்.' (சின்ன வயசுலெ சிலோனுக்கு ஓடிப்போய் வாலிபத்தில் ஊருக்குத் திரும்பியவர். பெயர் அப்துல் வஹாப்.  அப்பொ திருச்சி ஆகாசவாணியில் சினிமாப் பாட்டெல்லாம் கிடையாது, எப்ப தொறந்தாலும் 'நிலைய வித்வான் வாசிப்பது ஆதி தாளம் _தி மேளம்' னு சொல்லி டொய்ங், டொய்ங்ன்னு ஓடிக்கிட்டிருக்கும். அதனாலெ கேட்பது சிலோன் ரேடியோதான் . இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பும், தேசிய ஒலிபரப்பும்தான் ஃபேமஸ். தேசிய ஒலிபரப்பு கொஞ்ச நேரம் ஓடும் அதன் பிறகு 'அய்புவான், இலங்கா விளது...'ன்டு சிங்களம் ஆரம்பிச்சுடும். அதனாலெ 'அய்புவான்'டு அவருக்கு இந்த அசரத்துதான் பேரு வச்சாரு. அந்த பேருதான் இப்பவும் நிலைச்சிருக்கு.)

"ஓய் கதைக்கவுமில்ல ஒதைக்கவுமில்லை. அங்கே கூலிங்கிளாஸ் கண்ணாடி போட்டுக்கிட்டு வர்றாக, யாருன்னு பாரும்."

"அது நம்ம காட்றாபாயோட அயிட்டமுள்ள.. ப்பாய்" (முக்கனியை காமிச்சிக்கிட்டுதான் வியாபரம் பண்ணுவாரு, அதனாலெ எல்லா நடவாள்களும் அதெ தரிசிச்சிக்கிட்டுதான் மளிகை சாமான் வாங்கணும். சும்மா சொல்லக்கூடாது XL சைஸிலெத்தான் இருந்துச்சு. அதனாலெ அவருக்கு நாங்க வச்ச பேரு, காட்டுறார் பாய். அது மருவி காட்றாபாய் ஆயிடுச்சு.)

"அகலெத்தான் சொன்னேன்" என்றதும் எல்லோரும் கொல்லென்னு சிரிச்சிட்டோம். சிரிச்சது கண்ணாடிக்கல்ல, நாப்பத்தஞ்சு அம்பது வயசுலே அந்தி சாயிர நேரம் கருப்புக்கண்ணாடியும் மாட்டிக்கிட்டு மேக்கப் சகிதமா அலட்டிக்கிட்டு வந்ததைப் பார்த்து பொருத்தமான பெயரை சொன்னதும் சிரிக்காம என்ன செய்யமுடியும்? அன்னையிலேந்து அஹலுக்கு எங்க கோடுவேர்டு 'கீலர்'. காட்றபாயும் லேசுப்பட்ட ஆளல்ல அந்த வயசுலேயும்(சுமார் 60) தியேட்டருக்கு குறுக்கு வழியா போறதுக்கு மதிலேறி குதிப்பாரு. கீலரும் ஒரு படம் விடாம பார்த்துடுவாக எல்லாம் செகண்டு ஷோதான். என்ன இருந்தாலும் எங்க காட்றாபாயோட குரல் நாகூர் ஹனிபாவுக்கு அடுத்தபடியா இருக்கும். அவர் மவுலிது ஓதினால் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையாவும் கம்பீரமாவும் இருக்கும். இருந்து என்ன செய்ய? தடவுறதுலெ மன்னனாவுல இருந்தாரு. அதுமட்டுமல்ல பள்ளிவாசல் மௌலிது சோத்தை கனிசமா ஒதுக்குவார். இதெ பொருக்கமுடியாம ஒருத்தன் அவர் செருப்பை பெரிய ஆணியை வச்சு தரையோடு தரையா இருக்கிட்டான். மௌலிது சோத்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போக செருப்பை மாட்டினால் எப்படி வரும்? தடுப்பு சுவர் இல்லைன்னா மனுசன் குப்புற விழுந்திருப்பார். இருட்டு வேறு சுத்திமுத்தியும் பார்த்தா யாரும் கண்ணுக்குத் தெரியலை, இரண்டுமூனு பேர்மேலே சந்தேகம் ஆனால் யாருன்னு குறிப்பா ஊகிக்கமுடியலை? மறு நாள் சொல்லி சொல்லி ஆத்திரப்பட்டார்.

இப்படியெல்லாம் அல்-சாட்டியம் செஞ்ச காலத்தை நினைக்கும்போது ஒர் ஏக்கம் இருக்கத்தான் செய்யுது. ஆனால் அதனுடைய விளைவுதான் இங்கே ஒட்டகம் மேச்சிக்கிட்டுருக்கோம் போலிருக்கு, எத்தனை பேருடைய எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கேனோ தெரியவில்லை. அல்லா என்ன பேயனா? எல்லா பனிஷ்மெண்டையும் இங்கேயே கொடுத்துட்டு டைரக்ட் ஃப்ளைட்டுலெ சொர்க்கத்துக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவாண்டு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க..........? எப்போன்னு கேட்காதீங்க, ஃப்ளைட் இன்னும் ரெடியாகலையாம்.

***


நன்றி : ஹமீது ஜாஃபர்
http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com