Monday, December 20, 2021

பாரதி கிருஷ்ணகுமார் உரை

ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை நடத்திய கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரை.
Thanks : Shruti TV
*

Thursday, December 16, 2021

சாபங்களின் மோகனம் - கென்

கென்’ன் கவிதைத் தொகுப்பு. (எச்சரிக்கை : ஆசிப்மீரான் முன்னுரையும் உண்டு!). Click 'pop-out' to Download.
*

 

Tuesday, November 30, 2021

கும்மந்தான் கான்சாகிபு (pdf) - ந. சஞ்சீவி

 

முன்னுரை - ந. சஞ்சீவி :
தமிழக வீரர்களுள் தனிச் சிறப்புக்கள் பல வாய்க்கப் பெற்ற பெருவீரன் கும்மந்தான் கான் சாகிபு. இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம்பெற்ற அம் மாவீரனின் கதையை ‘கலைமகளுக்குக் காணிக்கையாக 1959-ஆம் ஆண்டு மே, ஜூன் திங்கள்களில் படைத்தேன். அப் படையலே இப்போது நூல்வடிவில் வெளிவருகிறது. அளவால் சிறியதே ஆயினும், முதன்முதலாகத் தமிழில் கும்மந்தான் கான்சாகிபைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி நோக்குடன் வெளிவரும் நூல் என்னும் அருமைப்பாடு உடையது.
' கலைமகள்' கருணைக்கும் தமிழ் மக்களின் ஆதரவுக்கும் நன்றி செலுத்தி இந்நூலை வெளியிடுகிறேன்.
 

இந்நூல் அச்சாகும் காலத்துத் திருத்தங்கள் செய்துதவிய ஆசிரியர்-வித்துவான்-உயர் திரு-சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கட்கு எனது உளங் கனிந்த நன்றி உரித்து.
 

வாழ்க தமிழகம்!

**

'கலைமக'ளின் கருத்து (மே, 1959) :

தமிழ் நாட்டில் நாடோடியாக வழங்கும் நெடும் பாடல்கள் பல. அல்லியரசாணிமாலை, பவளக்கொடிமாலை, முதலிய கதைப் பாடல்கள் மக்களிடம் வேரூன்றிப் புத்தக உருவத்தில் வெளிவந்திருக்கின்றன. தேர், திருவிழாக் கடைகளில் இந்தப் புத்தகங்கள் ஏராளமாக விலையாகி வந்த காலம் உண்டு. இந்தக் கதைப் பாடல்களில் சரித்திர சம்பந்தமானவைகளும் இருக்கின்றன ; தேசிங்கு ராஜன் கதை அத்தகையது. “ அண்ணா வாடா தம்பி வாடா ராஜா தேசிங்கு" என்பது போன்ற பல அடிகள் தமிழ் நாடு முழுவதும் பலருடைய வாக்கிலே தவழ்கின்றன. அதுபோலவே கான்சாகிபு சண்டை என்பது ஒன்று. யூசுப்கான் என்ற ஒரு வீரனுடைய கதையைச் சொல்வது அது. அவனுடைய வரலாற்றை ஆராய்ச்சி முறையில் பல நூல்களின் வாயிலாகத் தெரிந்து, திரு. ந. சஞ்சீவி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

**

View / Download PDF : http://www.tamilvu.org/library/nationalized/pdf/20-dr.sanjivi/kummanthankansakipu.pdf

**

தொடர்புடைய பதிவு :
தூங்காநகர நினைவுகள் - கான்சாகிப் என்கிற கும்மந்தான்
- அ. முத்துக்கிருஷ்ணன்

Sunday, October 24, 2021

நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை

’கணையாழி’யின் ஆரம்ப இருபத்தைந்து வருசத்தில் தன் மனதில் இன்னும் நிற்கும் சிறுகதையாக ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய இந்தக் கதையைச் சொல்லியிருந்தார் சுஜாதா - தன்னுடைய ’கணையாழி கடைசிப் பக்கங்கள்’ நூலில் (Aug'1990). (கவிதை : ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம், நாவல்: மரப்பசு, குறுநாவல் : கடை) . 

இந்தச் சிறுகதை வெளியான ஆண்டு 1974.(மே - ஜூன்). 'பூர்ணாஹூதி’ தொகுப்பில் இருக்கிறது.

பல வருடங்களாக தேடிக்கொண்டிருந்தது கதை, தங்கை யாழினி மூலம் சென்றவாரம் கிடைத்தது. நண்பர்களுக்காக பகிர்கிறேன். காப்பி பேஸ்ட் செய்பவர்கள் நன்றியை யாழினிக்கும் அப்படியே சென்ஷிக்கும் சொல்லவும். நன்றி!
***

நாடாக்காரர்கள் - ராமச்சந்திர வைத்தியநாத்
------------------
தொரக்கண்ணு அவசர அவரசமாக தலைக்கு ஊத்திக் கொண்டான். நயினா வேறே மறப்புக்கு அப்பாலே நிண்ணுகிட்டு "டேய் சுருக்கா குளிச்சுட்டுப் போடா. அப்பாலே போனா எதனாச்சும் சாக்கு போக்கு சொல்லிடப் போறானுவ” என்று கத்திக் கொண்டு இருந்தார். ஒழச்சு ஓடாப் போன சந்திரிகாவை கஸ்டப்பட்டு கையில் பிடிச்சிண்டு மூஞ்சிலே அழுத்தி தேச்சுண்டான். ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து மூஞ்சிலேயும் தலிலேயும் படால் படால்னு அடிச்சிண்டான். அரை வேஷ்டியாலே புளிஞ்சு தொடச்சிண்டு, மறு தவா புளிஞ்சு இடுப்லே சுத்திண்டு உள்ளே போனான். 
கொடாப்புக்கு பொகை போடற மாதிரி வூடு பூரா பொகை. அம்மாக்காரி அடுப்படிலே உக்காந்துண்டு ‘உப்ப்பு உப்ப்பு' என்று ஊதிக்கினு இருந்தாள்.

பழைய முண்டா பனியனை எடுத்துப் போட்டுகிட்டு அதுமேலே கட்டம் போட்ட கருப்பு சட்டையை போட்டுக்கினு கெளம்பினான். தொரக்கண்ணு கிட்டே இருக்கிறதுலேயே அது ஒண்ணுதான் நல்ல சட்டை “டேய் தொரய் நாஸ்டா ஆவலே நாயிரு கடலே துண்ணுக்கிறியா? என்றாள். 'அது சர்தான் துட்டுக்கு எங்கே போவுது?” என்று அனாசியமாகப் பதில் கொடுத்தான். “இந்தா எட்டணா பில்லை சாமியை கும்பிட்டு போ. வேலெ கெடக்கும்.” என்று பாட ஆரம்பிச்சா.

அவன் அப்பா வேறு கோயிங்களை படலைத் தொறந்து வெளிலே விட்டுகினு இருந்தவர் பாத்துட்டார். "டேய் இன்னுமாடா போல? அவனுங்கள்ளாம் கரெக்டா கௌம்பி பூட்டானுங்க. இன்னும் தூங்கறியே சீக்கிரமா போடா சோம்பேறி” என்று கத்தினார்.

தொரக்கண்ணு நெதானமாவே அப்பாவை பார்த்து ஒரு முளி முளிச்சுட்டு,. “நாரா.... கய்தேப் பையா எனக்கு ஏண்டா நாய்னாவாப் பொறந்தே” என்று மனசிற்குள் திட்டிக் கொண்டே கௌம்பினான்.

பச்சபாஸ் டேனிங் வரைக்கும் போயிட்டா அங்கேந்து எழுவத்தியொண்ணைப் புடிச்சுடலாம். இல்லாக்காட்டி கார்டன் வரை போயிட்டா பார்டி ஸெவனையும் சேர்த்து புடிக்கலாம் என்று நெனச்சிகிட்டே பச்சப்பாஸ் வந்தான். எவனோ ஒத்தன் இப்பதான் எழுவத்தியொண்ணு ஒண்ணு போச்சு என்றான். பக்குனு ஆயிடுச்சு தொரக்கண்ணுக்கு. மணி இப்பவே ஏழாயிடுச்சு. ஏழரைக்குள்ளே போனாதான் இஞ்சினீயரை பாக்கலாம். வேலக்கி முதல்நாளே, கேக்கறதுக்கே லேட்டாப் போனா அவன் வூட்டு துட்டு போறா மாதிரி காயுவானுங்களே, இன்னொரு நாள் கய்தேனு சொல்லிட்டாங்கன்னா என்னா பண்றது. கிடுகிடுன்னு கார்டன் வரக்கிம் போயிட்டா அங்கேந்து எதுலாச்சும் பூள்ளாம் என்று நெனச்சான். வழிலே கடைலே ரண்டு சார்மினார் வாங்கினான். வழக்கமா தொரக்கண்ணுக்கு கணேஸ் பீடி இல்லாட்டி, சாது பீடிதான். இன்னக்கி நாயின பஸ்ஸுக்கா கொடுத்த எட்டணா, அம்மாக்காரி நாஸ்டாக்கு கொடுத்த முழு எட்டணா பில்லை மொத்தம் ஒரு ரூபா, பை நெறஞ்சிருந்திச்சு. பாக்கிச் சில்லறையை. ஆப் டிரவுசர் பாக்கெட்டில் போட்டுகினான்.

'ஒரு காலி பாக்கெட் இருந்தா கொடுப்பா அப்படி நசுங்கி பூடும்" என்றான். ஏதோ முணகின்டே பங்க்காரன் காலி பியர்ஸ் பாக்கெட்டைப் போட்டான். சிகரெட்டை பத்த வைக்கறதுக்கு பேப்பர் துண்டு பாத்தான். டப்பாலே துண்டுங்களே இல்லை. "யோவ் பொட்டி குடுய்யா" என்றான் அதிகாரமாகவே. "ஏன் வெளக்கு எரியறது கண்லே தெரில்லியா” என்றான் பங்க்காரன். “சரி பேப்பர் துண்டு கொடு பத்த வச்சுக்கறேன்” என்றான். உடனே பெரிய ஜோதி ஊறுகாய் அட்டை எடுத்துப் போட்டான். தொரக்கண்ணு அதை ரெண்டா, பெரிசா கிழிச்சான் அப்படியே தீவட்டி கொளுத்தற மாதிரி கொளுத்தினான். சிகரெட்டை பத்த வச்சுகினான். பங்க்காரன் முறைச்சுப் பார்த்தான்.

வேகமாக நடையைக் கட்டினான். வேஷ்டியை மடிச்சி ஆப் டிரவசர் தெரியிற மாதிரி கட்டினான். இப்படி கட்டிகினு நடந்தா பாஷ்டா நடக்க முடியும். தவுத்து படா ஸோவா வேறேயிருக்கும்னு தொரக்கண்ணுக்கு நெனப்பு. சேர்ந்தா மாதிரி இரண்டு இழுப்பு இழுத்தான். பொகையை நெஞ்சுலே அடக்கி மூக்கு வளியா விடறதுலே என்ன சொகம். கார்டன் ஸ்டாப்பிங் இன்னும் 25 கஜம்தான் இருக்கும். ஒரு 71 பஸ் காலியா வந்துச்சு. உடனே சிகரெட்டை கீழே போட்டுட்டு ஓல்டான் ஓல்டான்னு கத்திக்கிட்டே ஓடினான். பஸ் நிக்கவேயில்லை. இன்னும் அந்த பஸ் டிரிப் ஆரம்பிக்கலை போலிருக்கு. தொரக்கண்ணுக்கு கோவம் தாங்கலை. பஸ்ஸை விட்டது பெரிசுல்லே, பத்தவச்சு நாலு இழுப்பு இழுக்கறதுக்குள்ளே சிகரட்டை கீழே போட்டதுதான் இன்னும் வருத்தம்.

“தேவ்டியாப் பசங்க! பஸ் டிரைவர்னா கொம்பு மொளச்ச ஞாபகம். பப்ளிக்லாம் சேந்து இவனுகளை கொளுத்தணும், பச்சப்பாஸ் ஸ்டுடெண்ட்ங்க ஏன் தகராறு வலிக்கமாட்டாங்க இப்படி செஞ்சா?" இன்னோர் சிகரெட்டையும் புடிக்கணும் போல தோணிச்சு. பத்த வைக்கலாமா? இல்லாக்காட்டி பஸ் வந்துடுமா? யோசிச்சான். சரி பத்த வச்சுக்கலாம் நெனச்சு முனைலே இருந்த பங்க் கடைப் பக்கம் போனான். அதுக்கு 47 ஒண்ணு வந்துடுச்சி, கிடுகிடுனு ஓடிப்போய் ஏறிண்டான். கோச்பாட்டரி ஒண்ணு என்று சொல்லி பத்து பைசா டிக்கட் வாங்கினான்.

சுடுகாட்டுக்கு அடுத்த ஸ்டாப்பிங் குடிசை மாத்து வாரியம் ஸ்டாப்பிங். அதுலே எறங்கி பீச்சாங்கை பக்கமா கொடார்ஸ் தான் சொல்லிருந்தாரு நயினா. சுடுகாடு தாண்டின உடனே எழுந்து புட்போர்டிலே நிண்ணுகினான். "ஏன்யா யென் உசிரை வாங்கறீங்க மேலே ஏறி நில்லுய்யா”ன்னு டிரைவர் கூச்சல் போட்டான்.

வர வர டான்ஸ்போர்ட்டே மோசமா பூடிச்சி. நெச்சயமா ஜெகநாதபொரம் பசங்களை விட்டு ஒரு தபா கல்லடிக்கச் சொன்னா ரூட்லே சரியா பூடுவாங்க என்று தீர்மானிச்சு, "சர்தான் கண்ணு நாங்கள்ளாம் சர்வீஸ்காரங்கதான்" என்றான் தொரக்கண்ணு. ஸ்டாப்பிங் வந்துடுச்சு இறங்கினான். டிரைவரை ஒரு வெட்டு வெட்டிகினே நடந்தான். பொட்டிக் கடை ஒண்ணு இருந்தது. சைட்லே தினத்தந்தி போஸ்டர்லே பிரபல நடிகை கொலை என்று பெரிசா இருந்திச்சு. சார்மினாரை பத்தவச்சுகினு எவ செத்துருப்பா? விஜயாவா இல்லாக்காட்டி ஜெயலலிதாவா? யோசிச்சான். ஏன் ஒரு தெனத்தந்தி வாங்கி படிச்சா என்ன? காசுதான் இருக்கே. பதினாரு பைசாலே குடியா முளுவிடும். பெட்டிக்கடைலே ஓர் பாண்ட்காரர் வில்ஸ் பத்த வைச்சார். “ஸார் டைம் எவ்ளோ ?” என்றான். “ஏழு பத்து என்று சொல்லவே, இன்னும் இருபது நிமிசம் இருக்கே அதுக்குள்ளாறே படிச்சுகிட்டே போயிடலாம்னு தெனத்தந்தி ஒண்ணு கொடுய்யான்னு பதினாறு பைசாவைக் கொடுத்தான். அவருகிட்டேயே "ஏய்யா இந்த வேலைக்கி எடுக்கற ஆபீஸ் எங்கே இருக்கு?" என்று கேட்டான். “நேரே ஸ்டெயிட்டா போ அங்கேதான்...” என்றான் பெட்டிக் கடைக்காரன்.


ஜெயலலிதா செத்துருக்கக் கூடாது. வேற எவ செத்தாலும் பரவாயில்லைனு மனசிற்குள் சொல்லிக்கினே பேப்பரைப் படிக்க ஆரம்பித்தான். சிகரெட்டை கடைசி இழுப்பு இழுத்து மெறிச்சுட்டு படிச்சிகினே நடந்தான். எவளோ தெலுங்குக்காரி சைட் நடிகை. இப்பதான் தமிழ்லே புக் ஆவப் போறான்னு படிச்சதும் சப்னு ஆயிடுச்சு. கோவம் கோவமாக வந்தது. தெனத்தந்தி அயோக்கியன். பப்ளிக்கை ஏமாத்றானுங்க. டெய்லி டூப், ஆய்த்தன் ஒளிகண்ணு மனசிற்குள் கூவினான். பேப்பரை மடிச்சு அக்குளில் சொருகிக்கினான். கொடார்ஸ் தாண்டினான். வழிலே நாலைஞ்சு சிட்டுங்க 
போயிண்டிருந்ததுங்க. இங்கிலீஸ்லே புல்தினு போனாளுங்க. கடேசிலே ஆபிஸ்கிட்டே போனான். வாசல்லே ஏக கும்பல். பாத்தோண்ணியே இதான் இஞ்சினீயர் ஆபீஸ்னு கண்டுகினான்.

"ராசாராம் இஞ்சினீயர் ஐயரு, அவருட்டே சாமிக்கண்ணு மகன், கார்பேசன் கார்டன்லே இருந்தவருன்னாலே புரிஞ்சுப்பாரு. எந்த வேலயும் செய்றேன்னு சொல்லு” என்று நாயினா சொல்லியிருந்தார்.

நேத்து ராவிலே பயனி, கோயிந்தன் இவங்கள்ளாம் வந்து கோச் பாட்டரிலே ஆள் எடுக்கறாங்கணு சொன்னவுடனேயே, இஞ்சினீயர் ராசாராம்டே வேலை செஞ்சதையும் கட்டுபடியாவலேனு பின்னாடி கார்பேசன் கவுன்சிலர் மோசஸ் கிட்டே ஒரு மாச சம்பளத்தை ரண்டு மாசமா தரேன்னு சொல்லி வேலக்கி போனதையும். நாயினா தொரக்கண்ணுட்டே சொல்லிட்டாரு.

"நீ போய் நெலமையை சொன்னா உனக்கு வேலை நிச்சயமா தருவாருடா” என்று அடித்துச் சொன்னாரு நாயினா.

தொரக்கண்ணுக்கு பைத்தியக்காரத்தனமாயிருந்தது. எப்பவோ வேல பாத்த இஞ்சினீயர், டெய்லி எத்தினி கூலியை பாக்கறானோ? அவன் எவனோ? அவங்கிட்டே போய் தொங்கனுமேன்னு இருந்தாலும் பயணி, கோயிந்தா, ரண்டு பேரும் வேல சாதாரணமாவே சிபாரிசு காட்டிகூட நடக்கும்னு சொல்லவே எதுக்கும் ட்ரை பண்ணித்தான் பாக்கலாம்னுதான் இன்னக்கி கௌம்பினான். இவன் கெளம்பறதுக்கு முன்னாடியே கோயிந்தன், பயனி, இன்னும் நாலைஞ்சு பேர் இவன் ஏரியா பசங்க, வேல வெட்டி இல்லாம சுத்தறவங்க கெளம்பிட்டாங்க. ஆபீஸ் பின்னாடி அவங்கள்ளாம் வரிசைலே நிண்ணுகிட்டு இருந்தாங்க. பெரிய க்யூ 'ஒலகம் சுத்தும் வாலிபன்' கணக்கா இருந்தது. வளைஞ்சு வன பெரிசுதான். பின்னாலே நிண்ணு தெனத்தந்தி பூரா படிக்கலாம்னு கடைசி வரிசைலே போனான். அதுக்குள்ளாரே 'தொரக்கண்ணு தொரக்கண்ணு’னு யாரோ கூச்சல் போடவே திரும்பினான். கோயிந்தன் வரிசைலே முன்னாடி பத்து பதினஞ்சு ஆளுங்களுக்குள்ளே இருப்பான். கூப்பிட்டான். பின்னாடி அல்லாம் நாலஞ்சு பேர் மூஞ்சி தெரியாதவனுங்களாயிருந்தாலும் ஏரியா பசங்கதான். பயனி, மைக்கேல், ரங்கா எல்லாரும் இருந்தாங்க, கோயிந்தன் மெதுவா சொன்னான். “டேய் கய்தே இவ்ளோ நேரம் கயிச்சா வருவே? இந்த மாசத்லே நாப்பது ஆளுங்கதான் எடுப்பானாம். நீ யோக்யனா கடேசிலே போனா கெடைக்காது. நைசா என் பின்னாடி பூந்துடு."

"என்ன கோயிந்தா போலீஸ் பாக்றப்பவே ஆனந்த் க்யூலே பால் மார்றவனாச்சே இப்ப இந்த க்யூவா ப்ரம்மாதம்?” என்று நைசாய் பூந்தான். அதுக்குள்ளாரே பின்னாடி எவனோ பாத்துட்டான். 

"ஏம்பா தெனத்தந்தி வெள்லே வாய்யா. ஏய்யா பூர்ரே! இப்ப வந்துட்டு பூர்ரியே! நாய்மா இது? பின்னாடி நிக்கறவனுங்க மன்சாள்லே சேத்தியில்லியா?" என்று கூச்சல் போடத் துவங்கினான்.

பொல பொலன்னு காத்திருந்த மாதிரி ஏழெட்டு பேர் சேந்துட்டாங்க 'வெள்லே வாய்யா'ன்னு கத்தினாங்க. கூச்சலோட நிக்காம தடியன் ஒத்தன் முன்னாடி வந்து, "வாய்யா வெளிலே, போய் பின்னாடி நில்லுய்யா' என்று சொன்னான். தொரக்கண்ணுக்கு ஜமா தைரியம். “யோவ் கக்கூசு போயிட்டு வரேன். பூர்ரேங்கிரியே” என்றான். “யோவ் இவரு அப்பவே எங்கிட்ட சொல்லிட்டுப் போனார்ய்யா" என்றான் கோயிந்தன். தடியன் முன்னாடி வந்தான். அவன் பின்னாடி வேறே ஏழெட்டு பேர், தொரக்கண்ணைத் தொட்டு "யோவ் தெனத்தந்தி வெளிலே வாய்யா கடேசிலே போய் நில்லுய்யா” என்று திரும்பித் திரும்பி சொல்லிக்கிட்டே இருந்தான். பயனி தடியனைப் பாத்து, "யோவ் அந்த ஆள் மேலேந்து கையை எடுய்யா” என்றான். "எடுக்காட என்ன செய்வே?" என்று சொல்லிக்கிட்டே தொரக்கண்ணு சட்டை காலரை புடிச்சு இளுத்தான். அந்தப் பக்கம் கோயிந்தன் தொரக்கண்ணு கையை புடிச்சு க்யூலே தங்க வைக்கறா மாதிரி இளுத்தான். தடியன் இப்போ வேகமா இளுக்கவும் சட்டை டர்ருனு கிளிஞ்சுது. தொரக்கண்ணுக்கு ஆங்காரம் வந்தது. "டோய் சோமாறி சட்டையாடா கிளிச்சே" என்று தடியன் மேல் பாஞ்சான். டிரான்ஸ்போர்ட் மேலே கோவம், தெனத்தந்தி பேப்பர் காரனுங்க மேலே இருந்த கோவம் எல்லாம் சேந்து, தடியனுக்கு மூஞ்சிலே அடி செமுத்தியா விழுந்தது. தடியன்  அமுங்கறவனாயில்லே! அவனும் தொரக்கண்ணு முதுகிலே ஓர் குத்துவிட்டு சட்டையைப் புடிச்சி வேமாக "டாய் என்னயாடா அடிக்கறே”ன்னு இழுத்தான். தொரக்கண்ணுவின் கட்டம் போட்ட கருப்பு சட்டை தூளாகியது. அதுக்குள்ளாற பயனி தடியன் மேலே பாஞ்சான். தடியன் செட்டும் பாஞ்சானுங்க. ஆனா பயனி, கோயிந்தன், ரங்கா மூணு பேரும் சேர்ந்ததும் பூட்டானுங்க. மைக்கேல் மட்டும் சைட்லே தடியனுக்கு ஒண்ணு சரியா கொடுத்தான். ஒரே களபேரம். "ஜெகநாதபுரம் செட்டுடா எங்களையா மொறக்கிறீங்க" என்று கத்திகிணு, சோர்ந்து போய் கீழே உட்கார்ந்த தடியனை இன்னொரு குத்துவிட்டான் தொரக்கண்ணு.

“ஏன்யா வேலைக்கு வந்தீங்களா? இல்லே சண்ட போட வந்தீங்களா?" என்றான் ஒருத்தன். அவனும் வரிசைலே பின்னாடி நிண்ணுண்டுருந்தான். ஆனா, வயசானவனாயிருந்தான்.

“போய் கம்னு இருய்யா இப்ப இருக்ற வெறுப்லே நீயும் வாங்கிக்கப் போறே'' என்றான் மைக்கேல்.

அதுக்குள்ளார 'இஞ்சினீயர் வந்துட்டாரு வந்துட்டாரு' என்று முணு முணுக்கவே எல்லாரும் வரிசைலே நிண்ணாங்க. தொரக்கண்ணு, பயனி, கோயிந்தன் பக்கத்திலே நின்றான். பின்னாடி ரங்காவும் மைக்கேலும் இருந்தார்கள். தடியன் மெதுவா எழுந்து மொனவிக்கிட்டே பின்னாடி போனான்.

“யோவ் மொனவாதே இன்னும் சம்பளம் வாங்கிப்பே" என்று தெனாவட்டா சொல்லிண்டே இஞ்சினீயரைப் பார்த்தான் தொரக்கண்ணு. எவனோ அதுக்குள்ளரே அவருட்டே போய் வத்தி வச்சுட்டானுங்க போல இருக்கு. நேர இங்கதான் வந்தார்.

"ஏம்பா சண்டைக்கின்னா வந்தீங்க, வெளியிலே போயிடுங்க'' என்றார். தொரக்கண்ணு “குட்மானிங் சார், அந்தத் தடியன் தான் எங்ககிட்டே வலுச்சண்டக்கி வந்தான். அதோட இல்லாமே என் சட்டையைப் புடிச்சி வேறே கிளிச்சுட்டான்'' என்றான்.

ஏற இறங்கப் பாத்தார் இஞ்சினீயர். பயனி, கோயிந்தன், மைக்கேல், ரங்கா அத்தினி பேரையும் நோட்டம் விட்டார். "எந்த இடத்துலேந்துய்யா நீங்கள்ளாம் வரீங்க'' என்றார்.

“சேத்துப்பட்டு ஸார்'' இந்த வாட்டியும் தொரக்கண்ணுதான் பதில் சொன்னான்.

“சேத்துப்பட்டுனா ஜெகநாதபுரம் தானே?''

தொரக்கண்ணுக்கு பெருமையா பூடுச்சி. ஏரியா பத்தி ஆபீஸருக்கு கூட தெரிஞ்சிருக்கே என்று சந்தோஷப்பட்டான். "ஆமாம் சார் அதே தான்" என்றான்.

"அதானே பாத்தேன் வேலக்கி வந்த இடத்துலேயும் பொறுகித்தனம் பண்ற கேப்மாரிங்க ஜெகநாதபொரம் பசங்கதானே'' என்றார் தடியனுக்கு மூஞ்சி மேலே கொடுத்தா மாதிரி இவருக்கும் தாடைல ரெண்டு கொடுக்கலாமானு தொரக்கண்ணு நெனச்சான்.

"சார் மன்னிச்சுக்கோங்க'' என்றான் பயனி. கோயிந்தனும் கூடச் சேந்துண்டான். மைக்கேலும், ரங்காவும் கையைக் கட்டிக்கிட்டு பேசாம நின்னாங்க. தொரக்கண்ணு மட்டும் அலச்சியமா அவரை மொறச்சி பாத்தான்.

“நீங்க அஞ்சு பேரும் போயிடுங்க, ஒங்களுக்கெல்லா கொடுத்தா இந்த பாக்டரி உருப்பட்ட மாதிரிதான்'' என்றார் இஞ்சினியர்.

எவருமே அசையவில்லை. இந்தவாட்டி மன்சுக்கோங்க ஸார். இனிமே சண்டேல்லாம் போடமாட்டோம்" என்று அஞ்சு பேரும் சேர்ந்து சொன்னார்கள்.

இதை அவர் காதில் வாங்கிக்கிட்டது மாதிரியே தெரியலை. அதுக்குள்ளாறே ரயில்வே போலீஸ் ஒத்தன் வந்துட்டான். பாத்தா புல் தடுக்கி மாதிரி அவன் இருந்தான். “ஏம்பா யார்யா சண்டை போடறது? மரியாதையா வெளியே போயிடுங்க. மெயின் ரோட்லே போய் வச்சுக்கோங்க. இங்கெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அப்புறம் கேஸ் புக் பண்ணும்படியாக ஆயிடும்"னு சவுடால் பேசிக்கினு வந்தான். தொரக்கண்ணுவையும், அவன் கிழிஞ்ச சட்டை கசங்கி அக்குளில் சொருகியிருந்த தெனத்தந்தி, ஆப்டவுசர் தெரிய மடிச்சு கட்டிண்டு இருந்த வேஸ்டி இதெல்லாம் பாத்த உடனேயே புரிஞ்சிண்ட மாதிரி "நீ தானேய்யா போயிடு வெளிலே. உன்னோட எவன்யா வந்தான்?" என்று அவன் நீட்டுவதற்குள் பயனி, கோயிந்தன், ரங்கா, மைக்கேல் எல்லாரும் தொரக்கண்ணை பாலோ பண்ணினாங்க. கொஞ்ச தூரம் தாண்டல. மைக்கேலுக்கு கோவம் கோவமா வந்தது. அவன் வீட்லே பொண்டாட்டி, அவன் நாயினா, ரெண்டு புள்ளீங்க, இத்தினிபேரு இவனை நம்பிதான் அவங்க துண்றாங்க.

"தொரக்கண்ணு ஒன்னாலேதான் இந்த வெனயே'' என்றான் அழுத்தமாக.

"நா கம்னு கடேசிலே போய் நின்னுருப்பேன். கோயிந்தன் தானே...' என்று இழுத்தான் தொரக்கண்ணு.

"டேய், ஒனக்கு நல்லதெ நெனச்சதுக்கு இது போதாதுடா எனக்கு. ஏதோ நம்ப ஏரியா பையனாச்சே பழகினவனாச்சேன்னு கூப்பிட்டா... ” என்று பொரிந்து தள்ளினான் கோயிந்தன்.

"போங்கடா மயிரானுங்களா எனக்கு இது போதாதுடா” என்று தலேலையும் அடிச்சிக்கிட்டான்.

பயனி சமாதானப்படுத்த ஆரம்பிச்சான். "சரி பேசாம வாங்க. இன்னக்கி ஆக மொத்தம் எங்கூலி போச்சு'' என்றான்.

"நம்ப எல்லார் கூலியும் தான், ஆனா தொரக்கண்ணு இன்னக்கி புதுசு” என்றான் மைக்கேல்.

“சரி பேசாம வா'' என்று சொல்லிக்கிட்டே பெட்டிக்கடை முன்னாடி போய் நிண்ணுட்டான் தொரக்கண்ணு.

"ஒரு கட்டு சாது, ஒரு சீட்டா பொட்டி ஒண்ணு கொடுங்க'' என்று எட்டணா பில்லையை பிஸ்கட் பாட்டில் மூடிமேல வச்சான். “சாது இல்ல, காஜா தரவா?'' என்றான் கடைக்காரன். “கணேஷ் இருந்தாக் கொடு'' என்றான். பீடியை வாங்கிண்டான் “சீட்டா இல்ல கார் தரட்டுமா?'' என்றான் மறுபடி கடைக்காரன். “என்யா கடே..'' சொல்ல வாயெடுத்த தொரக்கண்ணு கஸ்டப்பட்டு அடக்கிண்டான். “பரவால்லே எதினாச்சும் ஒரு பொட்டி கொடு” என்றான். அதுக்குள்ளாரே ரங்கா, “தொரக்கண்ணு எங்கிட்டே பொட்டி இருக்கு வாங்காதே'' என்றான். பாக்கி இருபது பைசா திருப்பிக் கொடுத்தான் கடைக்காரன். “ஏம்பா கணேஸ் இருவத்தஞ்சுதானே? என்னிலேந்து முப்பது? என்றான் தொரக்கண்ணு.

"அதெல்லாம் ஒரு மாசமாவுது. இப்பல்லாம் இந்த ஏரியாலே முப்பதுதான்'' என்று வெட்டிப் பேசினான் கடைக்காரன்.

சரி இன்னக்கி நம்ப டைம் சரில்லே வாயை தெறக்கக்கூடாதுன்னு தொரக்கண்ணு தீர்மானிச்சான். எல்லாரும் கணேஸரை பத்த வைச்சிண்டாங்க. ரங்கன் மட்டும் அடிமடிலேந்து ஒரு பாதி அடிச்ச பியர்ஸைப் பத்த வச்சிண்டான். அவன் சிகரட்டைப் பாத்த உடனே தொரக்கண்ணுக்கு காலிலே பஸ் வரச்சே கீழே போடாம அனைச்சி வெச்சிருந்தா இப்ப ஒரு அரை தம்மாவது அடிக்கலாமேன்னு தோணிச்சி.

"அப்போ இன்னி பொழப்பு அம்பேல்தானா மச்சான்'' என்றான் கோயிந்தன்.

“இல்லேடா மாமா, கவலப்படாதே. தொரக்கண்ணு எக்ஸ்பர்ட், இருக்கான். இன்னக்கி ஆளுக்கு அஞ்சாவது தேறும்" என்றான் பயனி.

“இங்க ஸ்கூல் எதினாச்சும் இருந்துச்சுனா இங்கியே உட்காந்துக்கலாம்'' என்றான் கொஞ்சம் சந்தோஷமாகவே தொரக்கண்ணு.

“தொரை இன்னக்கி தெரிஞ்சுக்கோ? ஏரியா வுட்டு ஏரியா மட்டும் என்னக்கிம் வச்சுக்காதே. அது படா டேஞ்சர் புரிஞ்சுண்டியா'' என்றான் ரங்கா .

“அப்ப எங்கே தான் போவறது?''

“அப்படி கேளு தொரை. பச்சப்பாஸ் காலேஜ் பக்கமாவே போயிடலாம்" என்றான் பயனி.

“முதல்லே மொத்தம் எவ்ளோ துட்டுனு பாக்க வோணாமா?" என்று மைக்கேல் சொல்லவே பயனி கலெட் பண்ணினான். மொத்தம் மூணு தொண்ணூறு இருந்தது. சரி இது போதும். வா நடந்தே போயிடலாம் என்று பயனி சொன்னவுடன், தொரக்கண்ணுவும், கோயிந்தனும் ஒத்துக்காததால் கார்டன் வரை பஸ்லே போய் அங்கேந்து பச்சப்பாஸ் நடந்து பூடலாம் என்றான் ரங்கா .

கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு பீடி எல்லாருமே பத்த வச்சிண்டாங்க. இந்தவாட்டியும் ஒரு அணைச்ச பாதி சிகரட்டை ரங்கா எடுத்துப் பத்த வச்சிக்கிட்டான். பஸ் வந்தது. பயனி 'அஞ்சு கார்டன்’ என்று சொல்லி டிக்கட் வாங்கினான். டிரைவர் சீட் சைட்லே நாலு பேரும் எதிர்க்க பயனியும் உட்கார்ந்தனர்.

இரண்டு ஸ்டாப்பிங் தாண்டறதுக்குள்ளேயே பஸ் ரொம்பிடிச்சி. ஸ்கூல், வேலை, காலேஜ் போறவங்க கூட்டம். ஒரு கிருதாக்காரன் பேக் பாக்கெட்லேந்து பர்ஸ் ஒன்று பயனியைப் பார்த்து பல்லை இளிச்சிது. பயணி சாவதானமா எழுந்து, “ஸார் நீங்க உக்காருங்க” என்று வயதானவரைக் கூப்பிட்டான். அவர், “இல்லேப்பா நான் கார்டன்லேதான் எறங்கிடறேன்” என்று சொல்வதற்குள் கிருதாக்காரன் உக்கார்ந்துட்டான். பயனிக்கு என்னவோ போல ஆயிடுச்சி “சனியனே தூய்த்தெறி கெய்வா, கிருதா'' என்று மனசிற்குள் வண்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். கார்டன் ஸ்டாப் வந்தது. பயணி நாலு பேருக்கும் முன்னாடியே ஜாடை காட்டிட்டான். எவருமே இறங்கவில்லை.

பஸ் பொறப்பட்டு, அழகப்பா நகர் தாண்டவே கண்டக்டர் பயனின் பார்த்துட்டான். “யோவ் கார்டன் வரை டிக்கட் வாங்கிட்டு தாண்டி வரியே! இன்னும் அஞ்சு பத்து காசு டிக்கட் வாங்குய்யா'' என்றான்.

“கார்டன் வந்தா சொல்லு எங்களுக்கு தெரியாதுண்ணு அப்பவே நான் சொன்னேனே! நீ தான் எங்களுக்கு சொல்லயே'' என்றான் ரங்கன்.

தொரக்கண்ணு திருதிருனு முளிச்சான்.

“பெரியவர் கார்டன்லேதானே எறங்கறதா சொன்னாரு, அவரோட எறங்கறதானே?'' என்று கிருதா சொன்னவுடன் அவனை வெட்டி எறியலாம் போல் இருந்தது பயனிக்கு. 'சரி வெட்டிப் பேச்சு வேண்டாம் இங்கே இறங்கிடுங்க' என்றான் டிரைவர். அவனுக்கு பேசிட்டே இருந்தா வசூலை பின் சர்வீஸ்காரன் அடிச்சிருவானேனு பயம்.

அஞ்சு பேரும் எறங்கினாங்க. "இவங்களுக்கு இதே வேலயாப் போச்சு'' என்று கண்டக்டர் தினம் வருகிறது மாதிரி அலுத்துக் கொண்டான். பஸ் பொறப்பட்டு ஸ்பீட் எடுத்தது. மைக்கேல் கண்டக்டரைப் பாத்து, “டேய் நன்னா உன்னை ஒதிக்கறேன்'' என்றான். அவன், காதுலே விழுந்திருக்க முடியாது.

“நம்ப ஐடியா எப்படி? நடை கொஞ்ச தொலவு தான்" என்றான் பயனி. அதுக்குள் ரங்கா, "நான் சமாளிக்காட்டி இன்னும் பேஜாரா பூட்டிருக்கும் என்றான்.

"ஏன் பயனி நடுப்பறே எழுந்துட்டே'' என்றான் தொரக்கண்ணு. கிருதாக்காரனை குறிவச்சத சொல்ல இஷ்டப்படலே பயனிக்கு.

“சும்மா கால் மரத்துப் போச்சு அதான்'' என்றான். 
"அதெல்லாம் இல்லே வேற ஏதோ'' என்றான் கோயிந்தன். 
"நீ நெனக்கற மாதிரி இல்லே கோயிந்து'' 
“கிருதாக்காரனை குறி வைக்கலேன்னு சொல்லு?'' 
"அதெல்லாம்''
"பயனி, ரைட் இல்ல எதினாச்சும் ஒரு வார்த்தை சொல்லு போதும்''
"ரைட் கோயிந்தா'' என்று முடிச்சான் பயனி. பயனியைத் தவிர மீதி நாலு பேரும் மனசிற்குள் சிரித்துக் கொண்டார்கள்.

"வெட்டி வார்த்தை எதுக்கு? மணி 9 ஆவப் போவுது, காலேஜ் பயலுக வர நேரம். குயிக்கா வாங்க'' என்றான் பயனி கொஞ்சம் மொறைப்பாக.

எல்லாரும் பீடி பத்த வச்சுக்கிட்டாங்க. இந்த வாட்டி ரங்கன் அனைச்ச பாதி பில்டர் சிகரட் குடிக்க ஆரம்பிச்சான். “தொரக்கண்ணு கிளிஞ்ச சொக்காயை அவுத்துடு. நான் உள்ளே மஞ்ச பனியன் போட்டுருக்கேன் அத அவுத்து தரேன் அதே போட்டுக்கோ'' என்றான் கோயிந்தன்.

பனியன் போட்டுட்ட பின்னர் சொக்காயை அழகாச் சுருட்டி தெனத்தந்தி உள்ளே வச்சு மறுபடி அக்குளில் சொருகிக்கினான்.

"மேக்கே காம்பவுண்டு சுவர் பக்கம்தான் நெறய நிழல் இருக்கு. அங்கே போயிடலாம். அதுக்குள்ளாற நான் மணி கடேக்கு போய் வரேன் என்று சொல்லிக்கிட்டே மைக்கேல், கோயிந்தன், ரங்கன், 

மூணுபேருட்டேயும் ஒவ்வோர் ரூபாயைக் கொடுத்துட்டு பயனி கடைக்கிப் போனான்.

பச்சப்பாஸ் காலேஜ்னு எதுக்கு பேர் வச்சானுங்க? கேட்டு, ஜன்னல் கதவு எல்லாம் பச்சையா இருக்கறதனாலேயா என்று நெனச்சிகினே தொரக்கண்ணு சுவர் ஓரமாக நிழலைப் பாத்து ஒக்காந்தான். கிழிஞ்ச சட்டையாலே கீழே மண் போகத் தட்டிட்டு அதை மடிச்சுப் போட்டுகிட்டு உட்காந்தான். எதிர்க்க தெனத்தந்தியை மடிச்சி பாய் மாதிரி விரிச்சான். உடனே பயனி வந்து விட்டான். நீட்டமான அரிக்கன் விளக்குலே கொளுத்தற மாதிரி ஒரு நாடாவையும் புது காப்பிங் பென்சில் ஒன்றையும் தொரக்கண்ணுகிட்டே கொடுத்தான்.

தொரக்கண்ணு நிமிந்தான். பின் நாடாவை ரெண்டா படிச்சு ரவுண்டா சுத்திக்கிட்டு, “வாங்க சார் சரியான டபுள் மடிப்பை இந்த நாடா மேலே பென்சில் வச்சு கண்டுபிடிங்க. ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு இத்தினி மடிப்லே எது நடு மடிப்னு கண்டுபிடிச்சீங்கன்னா டபுள் துட்டு ஒரு ரூவா வச்சா ரெண்டு ரூவா, ரெண்டு வச்சா நாலு. அஞ்சு வெச்சா பத்து'' என்று மந்திரம் மாதிரி சொல்ல ஆரம்பிச்சான். மெதுவா காலேஜ் ஸ்டூடன்ஸ் நாலைஞ்சு பேர் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாங்க.

மைக்கேல் வந்தான். “யோவ் மடிப்பக் கரெக்டாக் கண்டுபிடிச்சாத் துட்டை கை மேலே தருவியா?'' என்றான்.

"ஏன்யா பென்சிலை இப்படிக் கொடு. நான் மடிப்பைக் கண்டுபிடிக்கறேன்''னு சொல்லி ஒரு ரூபாயை கீழே போட்டுட்டு பென்சிலை எங்கோ மடிப்பிலே சொருகினான் கோயிந்தன்.

பயனி மெதுவா பசங்க பாண்ட் பாக்கெட்டுகளைப் பாக்க ஆரம்பிச்சான். ரங்கா இந்தவாட்டி சாது பீடியை வாயில் வைச்சு புகையை இஸ்துகினே செவப்புத்தலையன் வரானானு நோட்டம் விட ஆரம்பித்தான்.
**

நன்றி : கணையாழி, சென்ஷி

*
தொடர்புடைய காணொளி :

Thursday, September 30, 2021

காலம் கலைத்துப்போட்ட கலையும் (முஸ்லீம்களின்) வாழ்வியலும் - சு.மு.அகமது

கட்டுரை : சு.மு.அகமது

"இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்" எனும் தகவல் களஞ்சியத்தை தனது அயராத ஆய்வுகளால் தேடிக்கண்டடைந்து அவற்றை தொய்வின்றி திரட்டாக இலக்கியவெளிக்கு அளித்திருக்கும் எழுத்தாளர் அப்சல் பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர்.

இதற்கு முன் இந்தி நடிகர் தர்மேந்திரா குறித்து ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார்.பெருநாள் படைப்புகள் எனும் ஒரு தொகுப்பும் அவரது இலக்கியப்பணியில் சேர்த்தி.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது வசிப்பது சென்னையில்.

இந்திய சினிமாவில் முஸ்லீம்கள் எனும் இப்புத்தகத்தில் காலவெள்ளத்தின் கட்டுக்கடங்காத பெருக்கால் எவ்வாறு முஸ்லீம் சமூகமும் அதன் வாழ்வியல் நெறிமுறைகளும் கலைக்கப்பட்டு பிறழ் பதிவாய் மாற்றியமைக்கட்டது என்பதை தரவுகளின் துணைக்கொண்டு ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.துவக்கத்தில் செம்மைப்படுத்தின வாழ்வியலாக எதோ ஒரு வகையினத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு இந்திய சினிமாவில் பிரதிபலித்துக் கொண்டிருந்ததையும்,காலப்போக்கில் எவ்வாறு அவர்களது அழகிய வாழ்வியலும் பங்களிப்பும் மழுங்கடிக்கப்பட்டன என்பதையும் பல திரைப்படங்களை உதாரணமாக முன்னிறுத்தி பதிந்துள்ளது அவரது ஆய்வுப்பணியின் செழுமையை வெளிக்காட்டுகிறது.

கலையின் வடிவமைப்பில் ஒளியொலித்திரைக்கலையும் ஒரு அங்கம்.கலைக்கு மதம் இனம் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது.பெரும் சாகரமான கலை வடிவமைப்பில் மூழ்கி தமக்கானதை கண்டடைபவர் திறமைசாலி.திரைக்கலை என்பது ஒரு கூட்டு முயற்சி.பல துறைகளையும் தன்னகத்தே கொண்டு பலருக்கும் வாய்ப்பளித்துக்கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம் இது.இந்தியத் துணைக்கண்டம் பல மத இனக்கலாச்சாரங்களை கலவையாக கொண்ட ஒரு தீபகற்பம்.இதன் கலை வடிவங்களும் அதனதன் தன்மைக்கேற்ப மாறுபட்டிருக்கும்.

வேற்றுமையில் ஒற்றுமையை காணத்துடிக்கும் ஒரு கலைஞன் தனது படைப்பை இவற்றையெல்லாம் மனதுள் இருத்தித்தான் படைக்க வேண்டியுள்ளது.பெரும்பாலானவை வரலாற்று ஆவணங்களாய் மாறிப்போகின்றன.இப்படி தனது அனுபவங்களை தோழர் அப்சலால் முன்னிறுத்தப்பட்டு அவற்றை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மைகளையும் நிலைநிறுத்தி படைக்கப்பட்ட படைப்பு தான் இந்த அரிய புத்தகம்.

இந்தியத்திரைப்படங்களின் ஆரம்பக்காலந்தொட்டே முஸ்லீம்கள் இத்துறையில் பெரும் பங்காற்றியிருப்பது ஆச்சர்யமான உண்மை.ஆண் பெண்ணெனும் பாகுபாடின்றி அனைவரது பங்களிப்பும் சரிசமமாய் இருந்தது கண்டு வியப்பே மேலோங்குகிறது.

தமிழ்த்திரைப்படங்கள் தொடங்கி மலையாளம் கன்னடம் தெலுங்கு மராத்தி ஹிந்தி ஒரியா மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளிலும் பல இஸ்லாமியர்கள் பங்காற்றியுள்ளனர்.

இப்படி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்த இக்கலை ஊடகம்90-களுக்கு பிறகு எப்படி மாற்றம் கண்டது என்பதையும் விரிவாக ஒரு ஆய்வுப்பார்வையாக நம் முன் நிறுத்துகிறார் படைப்பாளி.

உதாரணத்துக்கு...

"கள்ளழகர்" படத்தில் விஜயகாந்த் நடித்திருந்த கதாபாத்திரமும் "விஸ்வரூபம்" படத்தில் கமல் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்குமான வித்தியாசத்தையும் நுணுகி ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

அதோடு இன்றைய காலகட்டத்தில் வியாபார நோக்கோடு எடுக்கப்படும் படைப்புகள் தனது கலைத்தன்மையை இழப்பதோடல்லாமல் மத இன துவேஷத்தையும் பரப்பும் விதமாகவும் அமைந்துவிடுவது காலத்தின் சாபக்கேடு என்பதாயும் பதிவு செய்கிறார்.

பொதுவில்...

இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை அதன் சமூக நல்லிணக்க போதனைகளை அதன் சாரம் குறையாமல் மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு கலைவடிவமாக திரைத்துறையையும் உபயோகப்படுத்த வேண்டுமென்பதே படைப்பாளியின் பேரவாவாக இருப்பதை உணர முடிகிறது.

எல்லாவற்றையும் ஒற்றை சொல்லாக சொல்ல முடியாது தான்.ஆனாலும் வார்த்தைகளின் கோர்வை வரிகளாக வரிகளின் கோர்வை படைப்பாக மாறுவது போல்...முஸ்லீம்கள் இந்திய சினிமாவுக்கு ஆற்றியுள்ள பெரும் செயல்களை இப்புத்தகம் வெளிச்சமிட்டுள்ளது.இதுவொரு நல்ல தகவல் களஞ்சியம்.

இதன் தொடர்ச்சியாய் இன்னும் பல அரிய தகவல்களடங்கிய படைப்புகள் தமிழில் வர வேண்டும்.

வாழ்த்துகள்.


 -சு.மு.அகமது

**

"இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்" - - அப்சல்

பக்கங்கள் : 232

விலை : ₹ 250/-

**

வெளியீடு :

இருவாட்சி(இலக்கிய துறைமுகம்)

41,கல்யாண சுந்தரம் தெரு,

பெரம்பூர்,சென்னை - 600 011

அலைபேசி : 94446 40986

மின்னஞ்சல் : bookudaya@gmail.com

***

தொடர்புடைய பதிவு :
இந்திய சினிமாவில் முஸ்லிம்களின் சித்தரிப்பு - சு.தியடோர் பாஸ்கரன்

 


Saturday, September 4, 2021

கோடை வெயில் (சிறுகதை) – ஜே. பி. சாணக்யா

நன்றி : ஜே. பி. சாணக்யா, சென்ஷி

*


 கோடை வெயில் - ஜே.பி. சாணக்யா

அது ஒரு கடுமையான கோடைக்காலம். வெயில் எல்லோரையும் வீட்டுக்குள் போட்டு மூடிவிட்டிருந்தது அதிகாலை வெயிலே உச்சிவெயில் கனத்திற்கு இறங்கத் தொடங்கிவிடும் நாட்களாக இருந்த அப்பருவத்தில் ஊர் முழுதும் பசியும் வேலையின்மையும் தான் நிரம்பிக் கிடந்தன. வசந்தா முன்பக்கம் கட்டப்பட்டிருந்த சாக்கை விலக்கி ரோட்டைப் பார்த்தாள். தார் ரோடு கண்ணைக் கூசியது. தார் ரோட்டுக்கும் மறுபக்கம் கிளைத்துச் செல்லும் மண்சாலை, பொடி மண் வெயிலில் தகதகத்துக் கிடந்தது. செருப்பில்லாமல் ஒரு அடிகூட நடக்க முடியாது என நினைத்தாள். வீடு முழுவதும் கருகல் வாசனை நிரம்பிக் கிடக்கிறது. சேகரை இன்னும் காணவில்லை. அவள் பார்வையில் முகத்தைத் தொங்கப்போட்டபடி நிற்கும் தூங்குமூஞ்சி மரமும் வளைந்து குறுகும் செம்மண் சாலையும் கானலில் அலைந்துகொண்டிருந்தன. சாக்கை விட்டு விட்டு உள்ளே வந்து சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். சுவரில் ஏறியிருந்த வெப்பம் முதுகைத் தள்ளியது. சில வினாடிகள் வெயில் எட்டிப் பார்த்தது. வீடே இருட்டாக இருந்தது. கண்களை மூடித் திறந்தாள். நெளிநெளியான கம்பிகள் அந்தரத்தில் வளைந்து நகர்ந்து சென்றுகொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். ஒரே புழுக்கமாக இருந்தது. சிறிது நேரம் ஊறும் வியர்வையை அங்குமிங்குமாய்ப் புடவைத் தலைப்பால் துவட்டினாள். அவன் களைத்து வருவதுபோலக் கற்பனை வந்தது. முட்டிக்கால் போட்டு நடந்து சென்று மீண்டும் சாக்கு விலக்கிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது தான். கண்ணை இருட்டும் பளீரென்ற வெயில். அவன் இன்னும் வரவில்லை. மண்டி போட்டபடியே பின்னகர்ந்து சென்று சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். மேலே கீற்று எரவாணத்தில் செருகியிருக்கும் பனைவிசிறியை எடுக்கச் சோம்பேறித்தனமாக இருந்தது. முந்தானையால் மீண்டும் கழுத்தையும் வயிற்றுப் பகுதியையும் அழுத்தித் துடைத்துக் கொண்டாள். விசிறி தரும் காற்று கற்பனையில் மீண்டும் கட்டுப்பட்டவுடன் சடக்கென முழுதாய் எழாமல் எழுந்து விசிறியை உருவினாள். அவள் நினைத்தது போல் ஒரு இழுப்பில் வரவில்லை. இரண்டு முறை எக்கி இழுத்தாள். மிகவும் அலுப்புடன் விசிறிக்கொள்ளத் தொடங்கினாள்.

அவள் அமர்ந்திருக்கும் அவ்வீடு பழங்காலத்தில் கட்டித் தரப்பட்ட அரசுத் தொகுப்பு வீடு. அவள் வீடுதான் உள்ளே செல்லும் தெருவையும் வலப்பக்கம் நீண்டு செல்லும் தொகுப்பு வீடுகளையும் தொடக்கிவைக்கும் முதல் வீடு. அது அவ்வூரை வடக்கும் தெற்குமாகப் பிரித்துச் செல்லும் தார்ச்சாலையின் ஓரத்திலுமாக இருந்தது. முன்பக்கம் அவள் அமர்ந்திருக்கும் 'டாப்பு' இவளுடைய கல்யாணத்தின் போது சேகர் போட்டது. பின்பு அங்கேயே காற்றுக்காக உட்காரத் தொடங்கி அதுவே புழங்குமிடமாகிவிட்டது. பிறகு சேகர் மூலையில் இரண்டடுப்பு ஒன்றை வாங்கிப் போட்டான். பாத்திரம் வைக்க மேடைகள் செய்தான். அதன் பின் அவ்விடம் ஒரு முழுமையான சமையல்கட்டாக மாறிவிட்டது. மழைக்காலத்தில் முகப்பில் உட்கார முடியவில்லையெனக் கீற்றுக் கட்டி சன்னல் வைத்துச் சாக்கு கட்டிவிட்டான். அதுவும் ஒரு அறையாகிப் போனது. பழையபடி வீட்டினுள் சுழலும் புழுக்கம் அங்கேயும் புழங்கத் தொடங்கிவிட்டிருந்தது. இவ்வெயில் காலத்தில் இந்த 'டாப்பும் இல்லையென்றால் கல்வீட்டுக்குள் உட்கார்ந்திருப்பதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. உள்ளிருக் கும் ஒரு சிறிய அறையில் துணிமணிகள், அடுக்குப் பானைகள், டிரங்குப் பெட்டிகள் இருளில் முழித்துக்கொண்டு கிடந்தன. தோட்டத்திலிருந்த பின் டாப்பு சமையலறை எருமை கட்டுவதற்குத் தோதாகிவிட்டது.

ரோட்டோர வீடாதலால் பேருந்துகள் மற்றும் டிராக்டர்கள் இதர வாகனங்களின் உறுமல் அவளுக்கு எப்போதும் கேட்டபடியே இருக்கும். சில சமயம் அதுவே அவளுக்கு வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் இருந்துவிடுகிறது. அமைதியாக ஏதாவதொரு நினைவுக்குள் அமிழ்ந்து கிடக்கும் போது ஒரு சைக்கிள் மணிச் சப்தமோ இதர வாகனங்களின் சப்தமோ அவளை இன்பமாகக் கலைத்துவிட்டுப் போகும்.  ஊருக்குள் நுழைபவர்கள், பயணத்திற்குக் காத்திருப்பவர்கள் என எல்லோருக்கும் பேருந்துகளின் மணிக்கணக்கும் போக்குவரத்தும் சொல்லியே அலுத்துவிடும். இவ்வெயில் காலத்தில் விவசாய வேலைகள் எதுவுமில்லை. வீட்டுக்குள் சோர்ந்து படுப்பதும் அசட்டுத் தூக்கம் தூங்குவதுமெனப் பொழுதுகள் சாய்ந்துகொண்டிருந்தன.

வறுமையான வாழ்க்கைதான் அவளுக்கு. சேகர் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவள் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுடன் வயல் வேலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டிருந்தாள். பரதூருக்குச் சேகர் வசந்தாவைப் பார்க்கப் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு எண்ணெய் தடவி வகிடெடுத்துச் சீவிக்கொண்டு நோட்டுப் புத்தகங்களுடன் செல்லும் போதெல்லாம் ஊரே வசந்தாவைக் கிண்டல் செய்து சந்தோஷப்பட்டது. பைப்படிகளிலும் வயல் வெளிகளிலும் படித்துறையிலும் சேகரைச் சொல்லி அவளை வம்புக்கிழுத்தார்கள். அவள் சிரித்துக்கொண்டே சண்டை போட்டாள். சிறுவர்கள் வசந்தாவைச் சேகரின் பெயரைக் கூறிக் கூப்பிட்டுச் சிரித்துக்கொண்டு ஓடினார்கள். சேகரின் பெயரைச் சொல்லும்போது அவளால் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை . அத்தை மகன். அவன் வருவதற்கு யாரைக் கேட்க வேண்டும் என்றாள் வசந்தாவின் அம்மா. அவளுக்குச் சேகரை ரொம்பப் பிடித்திருந்தது. நெடுநெடுவென வளர்ந்த உருவம். அவனுடைய அப்பாவைப் போலவே மீசை தாடி விளையாத சாந்தமான முகம்.

அவன் படிப்புக்கு வேலை கிடைத்துவிட்ட பிறகு வசந்தா வெயிலில் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே ஜாலியாக இருக்கலாம் என எல்லோரும் கிர்ரேத்தி விட்டார்கள்.

அவனும் அருகிலுள்ள சிறுநகரங்களில் வேலை கேட்டுப் போகும்போதெல்லாம் அவன் உருவத்தைப் பார்த்ததும் எல்லோரும் சொல்லி வைத்ததுபோல் 'போலீஸ் வேலைக்குப் போ. உடனே எடுத்துக்கொள்வார்கள்' என்றார்கள். அவனுக்கு அவ்வேலை மீது எதுவும் எதிர்ப்பு இல்லை. தன்னை அவனால் ஒரு போலீஸாகக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவ்வளவுதான். அப்படியான கற்பனை முளைக்கும்போதே காக்கி உடுப்பில் நிற்கும் அவனைப் பார்த்து அனைவரும்
மரியாதை செய்வதற்குப் பதில் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சைக்கிள் கடகடக்கும் சப்தம் கேட்டது. அவளுக்குள் சிறு சந்தோஷம் துளிர்த்தது. சைக்கிளைச் சுவரில் சாய்த்து விட்டுச் சாக்கு விலக்கி உள்ளே வந்தான் சேகர்.  வெயிலுக்கு மூடப்பட்ட இருட்டில் அவள் அமர்ந்திருப்பது அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. அலுப்புடன் வாயால் பெருமூச்சு விட்டுச் சட்டையைக் கழற்றினான். மேலுக்குக் குளித்ததுபோல் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. லுங்கியின் மடிப்பை லேசாகக் குனிந்து அவிழ்த்துவிட்டான். மரவள்ளிக் கிழங்குகள் ஈர மண்ணுடன் அவனைச் சுற்றிலும் விழுந்தன. அவள் எழுந்து வந்து எடுத்தாள். அப்போதுதான் அவளைக் கவனித்தான். கிழங்கு நான்கைந்து கிலோ தேறும் என நினைத்தாள். இடுப்பிலிருந்து அவிழ்த்து உதறிக் கட்டினான். வசந்தா கிழங்குளை வாரிக்கொண்டு உள்ளே சென்றாள். சரசரவெனக் காரியத்தில் இறங்கத் தொடங்கினாள். காலை நேரத்தைக்கூட ஆகாரமில்லாமல் அவளால் தள்ளிவிட முடிகிறது. மதியம்தான் அவளைப் பிசைந்து விடுகிறது.

இரவு ஒரே உலை. ஒரு குழம்பு. அதிகமும் புளியும் மிளகாய்த்தூளும் கடுகு வெடிக்குமளவு சிறிது எண்ணெயும்தான் சமையல். அபூர்வமாய்க் காய்கறிகள். இக்குழம்பும் ரசமும் மாறிமாறி வரும்.

விறகுக் குச்சிகளை அடுப்போரம் அள்ளிப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். கிழங்குகளை நன்கு கழுவி நான்கு விரல்கடை அளவு நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சாய்த்து ஏற்றிக் கிழங்குகளைக் கொட்டி உப்புப் போட்டு மூடினால் முடிந்தது வேலை. சிறிது நேரத்தில் வெந்த கிழங்குகள் உப்புச் சுவையுடனும் மாவுச் சுவையுடனும் பாளம் பாளமாக வெடித்துப் பிளந்து நிற்கும். மேல்தோலைக்கூட அவன் விடுவதில்லை. அழுக்குத் தோலை அகற்றிவிட்டுச் சதைத் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடுவான். இரண்டு நாள் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவளும் அவ்வாறே சாப்பிடத் தொடங்கிவிட்டாள். அவன் மரவள்ளிக் கிழங்கு திருடிக்கொண்டு வருவதில் அவளுக்கு வருத்தமிருந்தது. பின் அது தணிக்கும் பசி அவளை எதுவும் பேசாமல் செய்துவிட்டது.

அவனுக்கு அந்தக் கிழங்குகளைச் சிறுசிறு சதுரங்களாக நறுக்கி மஞ்சளும் மிளகாய்த்தூளும் தெளித்துப் புரட்டித் தாளித்துச் சாப்பிட வேண்டும் போலிருந்தது. அவளிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. எண்ணெய் இருக்கிறதாவென அடுப்புச் சந்தில் எண்ணெய் பாட்டிலைத் தூக்கிப் பார்த்தான். பாட்டிலின் அடிவரம்பில் சிறிது எண்ணெய் கசடுடன் படிந்து கிடந்தது. வெயிலைப் பொருட்படுத்தாது மேல்சட்டையற்று, கிட்டத்தட்ட பாய்ந்தபடி வெளியே பாட்டிலுடன் சென்றவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது அவன் எண்ணம்.  அரிவாள்மணையை எடுத்துக் கிழங்குகளை சிறுசிறு சதுரங்களாக நறுக்கத் தொடங்கினாள். மாமனாரை நினைத்துக்கொண்டாள். வீரநத்தம் வரை போயிருக்கிறார்.  அங்கு இதைவிடப் பிழைப்பு நன்றாக இருக்கிறது போலும். வர வேண்டியவர் ஒரு வாரமாகியும் வரவில்லை. தினமும் அய்யனார் தோப்புக்கு எருமையை மேய்க்க ஓட்டிச் செல்லும் அவர், நிழல் படியத்தான் வீட்டுக்கு வருவார். தினமும் வந்தவுடன் அவருடைய பங்குக் கிழங்கைத் தரும்போது தங்கத்தைத் தருவதுபோல வாங்கிக்கொள்வார். அந்த மாடு கறந்த பாலில்தான் குடும்பம் சாப்பிட்டுவந்தது. அவர் அக்கிழங்குகளை, பின்புறம் மாட்டுத் தடுப்புக்கு அருகில் மாடுகளுக்குப் புறமுதுகிட்டு அமர்ந்து வெளியே தெரியும் அடுத்த வீட்டின் பின்புறத்தைப் பார்த்தபடி சுவைத்துச் சாப்பிடுவதை அவள் மறைந்திருந்து பார்த்திருக்கிறாள். அப்போது அவளுக்கு அவர்மேல் சொல்ல முடியாத பரிதாபமும் அன்பும் பெருகும். அத்தனை வயது மனிதர் சிறுகுழந்தைபோலவே தெரிவார். இன்று தாளிக்கும் கிழங்குகளைத் தந்தால் அவர் கண்கள் விரியும் காட்சியை நினைத்துப் பார்த்தாள். வீரநத்தத்தில் அவருக்கு என்ன சாப்பிடக் கிடைக்கிறதோ என எண்ணிப் பார்த்தாள்.

சைக்கிள் கடகடத்துச் சுவரில் ஓடிச் சரியும் ஓசை முடியுமுன் அரை பாட்டில் எண்ணெயுடன் உள்ளே வந்தான் சேகர். பரவாயில்லை. ஒரு வாரத்தை ஓட்டிவிடலாம் என நினைத்தாள். அவன் எண்ணத்தை வெளியிடாமலேயே கிழங்குகளை அவள் அரிந்து கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்தவுடன் அவன் அவளைப் பார்த்துப் பல் தெரியச் சிரித்தான். அவளும் பதிலுக்குச் சிரித்தாள். நினைவில் அவனுக்குக் கிழங்கின் ருசி தட்டுப்பட்டது. அடுப்பை ஏற்றிப் பாத்திரத்தில் கிழங்குகளை நீரூற்றிக் கொட்டி மூடிவிட்டு அடுப்பின் முகப்பிலேயே தரை பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். அவன் பாயை எடுத்துவந்து போட்டு மல்லாந்து படுத்துக் கொண்டான்.

2

உலோகங்கள் மோதிக் கடகடத்து உதற உறுமிக்கொண்டு வந்து நின்ற டவுன் பஸ்ஸை எழுந்துபோய்ச் சாக்கு விலக்கிப்பார்த்தான். டிரைவர் முன் கண்ணாடி வழிப் பளீரென உள்ளே பாயும் வெயிலிலும் இஞ்சின் வெப்பத்திலும் கசப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். மறுபக்கமாய் வாசற்படியை நோக்கி நகர்ந்துவிட்ட உருவத்தைப்
பார்த்தான். பேருந்து நகர்ந்தவுடன் அவரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவர் எதற்கு மறுபடியும் இவ்வூருக்கு வந்திருக்கிறார் என்று அவனால் சட்டென்று யூகிக்க முடியவில்லை. யாரையோ பார்க்க வந்திருப்பார் என்று நினைத்தான். நிச்சயமாய் நம்மைப் பார்ப்பதற்கு இல்லை என்று ஊர்ஜிதமாக நம்பினான். அவர் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு இவன் வீட்டுப் பக்கம் வரவே, மெல்ல நடந்து வாசல் பக்கம் வந்து சாக்கை விலக்காமல் நின்றான். வசந்தா எதுவும் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவர், அவன் வீட்டின் முன் வந்து நின்று குட்டை டவலால் வழுக்கையையும் பின்கழுத்தையும் மார்பையும் அழுந்த துடைத்தபடி அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். வெயிலைக் கரகரப்பாகக் கிழித்தது அக்குரல். இவன் சாக்கை விலக்கி எட்டிப் பார்த்து, "வாங்க மாமா” என்றான். அவள் அவர் உருவத்தைப் பார்த்தவுடன் சடக்கென வாரிச்சுருட்டி எழுந்தாள். “வாங்கண்ணா " எனக் கூப்பிட்டபடி உள்ளே நடந்து ஓடினாள். இவன் பாயை மடித்துப் போட்டான். வெயிலைத் திட்டியபடியே சிரித்துக்கொண்டும் கனைத்துக்கொண்டும் உட்கார்ந்தார்.

இவ்வெயிலில் அவர் வந்தது அசௌகரியமாக இருந்தது இருவருக்கும். வசந்தா செம்பில் தண்ணீர் கொண்டுவந்து உள்ளங்கையில் ஏந்தி நீட்டினாள். சம்பிரதாயத்திற்கு மீண்டும் திருத்தமாக "வாங்கண்ணா " என்றாள். நீட்டிய கரத்தில் தாழ்ந்து தொங்கிய பிளாஸ்டிக் வளையல்களை மேலேற்றிக் கொண்டாள். அவரும் "வரேம்மா" என்றபடி அவளைப் பார்த்துச் சிரித்துத் தண்ணீரை வாங்கிக் குடித்தார். கெண்டி வியர்வை மினுமினுப்புடன் மேலேறிக் கீழிறங்கித் துடித்துக் கொண்டிருந்தது. தொண்டையில் காற்றடைக்கக் குடிப்பதை நிறுத்தி இரண்டு முறை இருமினார். இருவரும் அவர் இருமியதற்காகப் புன்னகைத்தபடியும் பார்த்துக் குடியுங்கள் என்ற உணர்ச்சியைப் பிதுக்கிக் காட்டியபடியும் நின்றுகொண்டிருந்தார்கள். பிறகு அவள் உள்ளே சென்று நின்று கொண்டாள். இவன் சுவரோரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அவர் அவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார் என்று அவன் இன்னமும் நம்பவில்லை. யாரையோ பார்க்கவோ விசாரிக்கவோ வந்திருக்கிறார். இடையில் நம்மிடம் அது பற்றிக் கேட்டுப்போக வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவர் அவனை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தான். "ஒரு வாரம் லீவு. சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றார் நேரிடையாக. அவனால்  அதை நம்ப முடிந்தது. ஆனால் அவர் எங்கு தங்குவார் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. போலீஸ்காரர்களை நம்ப முடியாது என்று நினைத்துக்கொண்டான். ஏதோ ஒரு கொலைக் கேசைத் துப்பறிய வந்திருப்பார் என்று நம்பத் தொடங்கினான்.
பிறகு ஊரில் சில நபர்களை விசாரித்தார். அவன் பதில் சொல்லிக்கொண்டுவந்தான். கடைசியில் கள்ளுக்கடை போட்டிருக்கிறார்களா என்று கேட்டார் அவன் புரிந்து கொண்டபடியே அவளும் புரிந்துகொண்டிருப்பாள். கள்ளுக்கடை, சாராயக்கடையைப் பிடிக்க வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டான். அவர் கேட்ட ரகசியத்தொனியிலும் அவர்மேல் வைத்திருந்த மரியாதையிலும் உண்மையைக் கூறிவிட்டான். பிறகுதான் பயந்தான். ஊர்க்காரர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டோமெனச் சஞ்சலமடையத் தொடங்கியது மனம். இவர் அவர்களைப் பிடித்து விட்டால் பிறகு ஒரு நாளும் ஒரு நேரத்திலும் ஊர்க்காரர்கள் தன்னை நம்பமாட்டார்கள் என நினைத்து வருத்தப்பட் டான். கள்ளின் நம்பகத்தன்மை பற்றிக் கேட்டுக்கொண்டுவந்ததற்கு அவன் பதில் கூறிக்கொண்டேவந்தபோதிலும் உள்ளுக்குள் தேவையற்று ஒரு காரியத்தில் சிக்கிக்கொண்டோமெனத் தோன்றியது. பிறகு மெதுவாக அதைக் கேட்டான். அவர் உரக்கச் சிரித்தார். “உண்மையிலேயே கள்ளுக் குடிப்பதற்குத் தான் விசாரித்தேன்” என்றார். கட்டுப்படுத்த முடியாமல் வெடிச்சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டிருந்தார். வெயிலே உடைந்தது போலிருந்தது. அவளும் மௌனமாகச் சிரித்து இவர்களுடன் கலந்துகொண்டாள். நடந்துவந்து அடுப்பைத் தள்ளிவிட்டுக் கலகலவென எரியவிட்டு மீண்டும் கதவில் ஒருக்களித்து நின்றுகொண்டாள். "தங்கச்சி கேட்டியா ஒம்புருசம் பேச்ச, நீ பேசாம போலீசா போயிடலாம்டா” என்றார். அவனுக்குப் பொறிதட்டிவிட்டது. திடீரென உற்சாகமாகிவிட்டது அவன் மனம். இவர் நினைத்தால் தனக்கு வேலை நிச்சயம் என்று நினைத்தவுடன் பரபரப்பானது அவனது முக நடவடிக்கைகள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் வெயிலைப் பொருட்படுத்தாது கிளம்பி விட்டார்கள் கள்ளுக்கடைக்கு. கிழங்கை அவளைச் சாப்பிடுமாறு சைகை செய்துவிட்டுச் சென்றான். "கள்ளு உளள போனா வெயில் குளிரும். வா மாப்ளே” என்றார். அவர் அவனை அப்படி நெருக்கமாகக் கூப்பிடுவது அவர்களுக்குப் பிடித்திருந்தது.

அவர் அருகில் உள்ள சிறு நகரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். அவருக்குப் பூர்வீகம் இவ்வூர்தான். சிறுவயதில் அவருடைய அப்பா குடிபெயர்ந்து வெளியூருக்குச் சென்று தங்கிவிட்ட பிறகு அவருக்கும் இவ்வூருக்குமான பிணைப்பு நின்றுபோனது. சில வயல்கள் வைத்திருந்தார்கள். அது பெரியவர் இறக்கும்வரை இவ்வூரின் ஞாபகங்களாய்க் கிடந்தன. பருவங்கள் தப்பிய விவசாயம் செய்தும் போட்ட முதலுக்கு நட்டங்களை மட்டுமே அறுவடை செய்தும் நகர்ந்து சென்ற நாட்கள். பெரியவரின் இறப்புக்குப் பின் விற்கப்பட்டுவிட்ட வயல்களோடு கடைசித் தொடர்பும் நின்றுபோனது. இவன் வெளியூருக்கு மேல்நிலைப் படிப்புக்குச் சென்றபோது ஒரு நாளில் நம்முடைய மாமாதானே என்று முகவரி விசாரித்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றான். பெரிய முகப்பிட்ட கல்வீடும் கட்டடத்தை மறைக்கும் கேட்டும் நாயுமாய்ப் போலீஸ் உடுப்போடு வாசலில் வந்து நின்றுகொண்டிருந்தார். அவனை அடையாளம் தெரியாமல் யார் எனனவென்று மிரட்டலோடு விசாரித்துவிட்டு நம்மூர் என்றவுடன் சிறிது கருணையுடன் விசாரிக்கத் தொடங்கினார். தான் அப்போது அலுவலகம் செல்லவிருப்பதாகவும் பிறகு வரும்படியும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அவ்வழைப்பு மிகவும் சம்பிரதாயமாக இருந்தது. அவனுக்கு அவர் மேல் கோபமாக வந்தது. உள்ளே ஒரு கனமான பெண்ணுருவம் பின்கட்டுக்கு அசைந்து சொல்வதைப் பார்த்தான். அவர் மனைவி. அவள் இருமிக்கொண்டு செல்வது மிக மோசமாகக் கேட்டது. குறைந்தபட்சம் தன்னை உள்ளே கூப்பிட்டாவது பேசுவார் என்று நினைத்திருந்தான். அவனும் அவரைப் பார்க்க வந்ததாகக் கூறாமல் இந்தப் பக்கம் வேறு ஒரு வேலையாக வந்ததாகவும் அப்படியே தங்களைப் பார்த்து விட்டுச் செல்லலாமென்று வந்ததாகவும் கூறினான். அப்படிப் பேசியதன் மூலம் பதிலுக்கு அடித்துவிட்டது போல உணர்ந்தான். நிம்மதியாக இருந்தது.

அதன்பின் அவர் மனைவி உடல்நிலை சரியில்லாமல் கிடந்து இறந்த பிறகு காரியத்திற்காக நான்கைந்து நாள் தன்னுடைய அப்பாவின் அழைப்பின் பேரில் சென்று தங்க நேரிட்டிருந்தது. அப்போது அவரது தோரணையனைத்தும் துவண்டு போயிருந்தது. அவனிடம் அன்பாகப் பேசினார். வசந்தா அத்தனை பெரிய வீட்டை ஒற்றை மனுஷியாக நின்று பெருக்கிக் கழுவித் துடைத்து, அவரது துணிமணிகள், போர்வை, படுக்கை விரிப்புகள் என அனைத்தையும் வாரிப்போட்டுத் துவைத்து ஒழுங்குசெய்து நன்றாகச் சமைத்துப்போட்டாள். ஒரு தனியாளாக அரக்கிபோல் அக்காரியங்களைப் பார்த்தது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவர் சேகருடைய அப்பாவிடம் கடைசி நாள் கேட்டுப் பார்த்தார். சேகரும் வசந்தாவும் இங்கேயே இருந்துகொள்ளட்டும்; அவனுக்கு ஏதாவதொரு வேலை ஏற்பாடு  செய்து தந்துவிடுகிறேன்; குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றபடி. எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள். சேகர் ஏதோ ஒரு பிடிவாதத்தில் மறுத்துவிட்டான். அதன்பின் தற்போதுதான் அவரை மீண்டும் சந்திக்கும்படி நேர்ந்திருக்கிறது

"நீ அவர் வீட்டிலே தங்கியிருக்கலாம். வேலையும் சாப்பாடும் கிடைத்திருக்கும்" என்போரிடமெல்லாம் பள்ளிக் காலத்தில் ஒருநாள் சந்தித்த அந்த நிகழ்வை விடாமல் கூறிக்கொண்டிருந்தான். அவர் அன்று சரியாகப் பேசாதது பற்றியும் பேசிய தோரணை எதுவும் அவனுக்குப் பிடிக்காமல் போனது பற்றியும் சொல்லிவிட்டு, தற்போது மட்டும் என்ன உறவு வாழ்கிறது என்பான்.

3

கள்ளுக்கடை குறிஞ்சிக்குடியில் இருந்தது. பேரூருக்குச் செல்லும் வளைவில் மழைக்காலத்தில் பிதுங்கி எழுந்த வண்டிக் தடங்களோடு செம்மண் பாட்டையாக உள்ளிழுத்துக்கொண்டு சென்றது.

வெயில் கண்களைக் கூசி நிமிர விடாமல் செய்து கொண்டிருந்தது. எல்லாவற்றின்மீதும் வெப்பம் வேரூன்றி விட்டிருந்தது. அங்கும் விவசாயம் வெயில் காலம் முடிந்தபின் தான். மோட்டார் வைத்திருப்பவர்கள் மட்டும் சிறு சிறு பகுதிகளில் பயிரிட்டிருந்தார்கள். எரிந்த கரும்பு வயல்கள் நடந்து முடிந்த போர்க்களம்போல் விரிந்து சென்றுகொண்டிருந்தன இரு பக்கமும்.

வெடிப்புகள் நிரந்தரமாகிவிட்ட ஓடையை ஒட்டிப் பனை மரங்கள் நீண்டு சென்றுகொண்டிருந்தன வெயிலுக்குத் துணிச்சலாய் முகத்தைக் காட்டியபடி. வெள்ளையான ஆகாயமும் கலயங்கள் தொங்கும் பனைமரங்களும் பார்ப்பதற்கு வெயிலை மறக்கச் செய்வதாகக் கூறிக்கொண்டுவந்தார் அவர். அதை அவர் சொன்னதுமே கள்ளை அவர் எப்படி விரும்புகிறார் என்பதை அவனால் ஓரளவுக்குப் புரிந்து சிரிக்க முடிந்தது.

ஓடைச் சரிவில் இறங்கி, சைக்கிளை நெட்டிக்கொண்டு ஓடையின் மையத்தில் நீளும் ஒற்றையடிப் பாதை வழம் நடந்து சென்றார்கள். லேசாகத் திரும்பிய வளைவில் பனைவோலைக் குடிசை காற்றில் சிலும்பிக்கொண்டு நிற்பதை பார்க்க முடிந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு மேடேறிச் சென்றபடி "யம்மோவ்" என்றான். பதில் எதுவும் வராது போக அவர் பக்கம் திரும்பிச் சிரித்தபடி, "அவளுக்குக் காது கொஞ்சம் செவிடு" என்றான். அவரும் சிரித்தார்.

குடிசையை நோக்கிப் போனான். அவர் ஓடைச் சரிவிலேயே நின்றுகொண்டிருந்தார். வாசல் பக்கம் வந்தபோது அவள் துணிகளைக் காற்றுக்குத் திறந்து போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். நின்று அவள் மார்பகங்களைப் பார்த்தான். தளர்ந்த மார்பகங்கள் இரு பக்கமும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தன. சற்று பின்னகர்ந்து மீண்டும் குரல் கொடுத்தான். தூங்காதவள் போல் "யாரது?" என்றாள். உண்மையில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாளா என்று அவனுக்குச் சந்தேகம் வந்தது. "கள்ளு இருக்கா ?” என்றான் முன்னே வந்தபடி. “சாயங்காலந்தான்” என்றபடி துணி போர்த்திய மேலுடலுடன் வெயில் உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். அவன் மெல்லக் குனிந்து, கிசுகிசுப்பாகப் பேசும் தோரணையுடன் "போலீஸ்காரர்" என்றான். அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது முகத்தில் தெரிந்தது. அதை அவன் ரசித்தான். சடக்கென எழுந்து தட்டியில் செருகியிருந்த ரவிக்கையை எடுத்து அவனுக்கு முதுகு காட்டிப் பூட்டத் தொடங்கினாள். இவன் திரும்பிச் சென்று அவரை மேலேறி வரும்படி "வாங்க” என்றான். அவனைத் தடுத்து, "அங்கேயே நெழல்ல குந்த வையி” என்றாள். "போ எடுத்தாரேன்" என்றாள் சத்தமான கிசுகிசுப்பாய்.

இடத்தைச் சரிசெய்து பனைமர நிழலில் அமர்ந்தபோதுதான் அவ்விடத்தின் அழகு அவருக்குப் புலப்பட்டதாகச் சொன்னார். அவள் வரவழைக்கப்பட்ட வெட்கத்துடன் வந்தாள், சிறிய பானை நிறையக் கள்ளுடன். வெட்கத்தை மீறிப் பயம்தான் அவளிடம் தெரிந்தது. கொண்டு வந்து வைத்துவிட்டு, "வணக்கங்க” என்றாள். அவர் அதைப் பொருட்படுத்தாது, “என்ன? நல்ல கள்ளுதானே?" என்றார். அவள் ஒரு விருப்பமான புதிய மனைவிபோல் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு, "சுண்டல் கொண்டாரவா?" என்றாள். "வேறென்ன இருக்கு?” என்றதற்கு “ஒன்னுமில்ல” என்றாள். "பழங்குழம்பு ஏதாவது இருக்கா?" என்றார். அவரை அவளுக்கு அந்தக் கணமே பிடித்துவிட்டது. பயம் போய், "கருவாடு தரவா?” என்றாள். “குடு” என்றார். சிறுபிள்ளைபோல் மேலேறி ஓடினாள். பேண்ட் பெல்ட்டைத் தளர்த்தி ஊக்குகளை விடுவித்துத் தளர்ச்சியுடன் உட்கார்ந்து சரிசெய்த அவரை உள்மனச் சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தான்.

இரண்டு மொந்தை உள்ளே சென்றதும் அவருக்குப் பழைய கருவாட்டுக் குழம்பை ஒடுக்கு விழுந்த ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டுக் கருவாடு சுட்டுக் கொண்டுவந்திருந்தாள். அவருக்குச் சிரிப்பில் மிதப்பு விழத் தொடங்கியதும் மெதுவாகத் தனது வேலையின்மை பற்றி ஆரம்பித்தான். அவர் நிதானத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவ்விஷயத்தைப் பேசிமுடிக்கும்வரை கள்ளைப் பருகாமல் அப்படியே கலயத்தைத் தடவித் தடவிப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் அப்படிக் கேட்டது அவனுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் புதிர் எதுவும் போடாமல், "போலீஸ்ல சேரணும் அவ்ளோதானே? விடு” என்றார். "வர்ற மாச செலக்ஷன்ல நீ போலீஸ். போதுமா?" என்றார். அவனுக்கு உண்மையில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போலிருந்தது. அவனது கஷ்டமெல்லாம் தீர்ந்து விட்டது போலுணர்ந்தான். "பி.ஏ. பாஸ்தானே? அப்படியே ஒரு எம்.ஏ.வ போட்டுவிடு. என்ன மாதிரிச் சடசடன்னு மேல வந்திர்லாம்" என்றார். "காரியத்துக்கு வந்தப்பவே சொன் னேன். நீதான் கேக்கல" என்றார். அதை வருத்தமாகவே கூறினார்.

கோடைக்காலங்களில் வெயில் முடிந்த சாயங்காலங்கள் ரம்மியமானவை. கொட்டிய வெயிலுக்காகக் குளிர்காற்றை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வரும் நேரம். இருவரும் நல்ல போதையில் இருந்தார்கள். அவர் சைக்கிள் மிதித்தார். அவன் அமர்ந்துகொண்டு சென்றான். உல்லாசமாக இருந்தது. வீட்டுக்கு வந்தபோது சாக்குகளை விலக்கிச் செருகி வாசல் மற்றும் சன்னல்களை அகலத் திறந்துவிட்டு வாசலில் பொட்டு இடம்விடாமல் தண்ணீர் தெளித்துவைத்திருந்தாள் வசந்தா. இரண்டாவது தண்ணீர்த் தெளிப்பாக இருக்க வேண்டும். தரை சூடு காட்டாமல் ஜில்லென்றிருந்தது. காற்று சகஜமாக வீசிக்கொண்டிருந்தது. பேச்சுக் குரல்களும் பிள்ளைகளின் விளையாட்டு நடமாட்டமும் தொடங்கிவிட்டிருந்தன. இனி வீடுகளுக்குள் புழக்கமிருக்காது.

சைக்கிளை முகப்பில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வசந்தாவைப் பார்த்து மயக்கமாகச் சிரித்தான் சேகர். அவள் யூகித்ததுதான். குடித்துவிட்டுப் போகட்டும். சோற்றுக்குத்தான் இங்கு என்ன வாழ்கிறது? வீட்டுக் காசா? யாரோ வாங்கிக் கொடுக்கிறார்கள். தினமுமா குடிக்கிறான். எப்போதாவதுதான. எப்போதாவது இப்படி அவன் இருப்பதை அவளும் ரசிக்கிறாள். அவனுக்குள் இருக்கும் உள்முகம் சற்றுத் தீவிரமாக வெளிவரும்.
சில சமயங்கள் பயந்தும் இருக்கிறாள். பயந்தது போல் விடிந்து எதுவும் இருக்காது. கதகதப்பு வேண்டி
மடிமுட்டிப் படுத்துக்கொள்ளும் கண் திறவாத நாய்க்குட்டி போல் வயிற்றில் முகம் வைத்துப் படுத்துக்கிடந்திருக்கிறான் எத்தனையோ முறை. ஒரு வகையில் அது அவன் அவளிடம் கோரும் சமாதானம்தான்.

அப்போது அவனது சிரிப்பில் சல்லாபம் மிகுந்திருந்தது. இரவு நிச்சயம் உடலுறவுக்காக வருவான் என்று தோன்றியது. அவர் உள்ளே வந்தவுடன் பாய் விரித்துப் படுத்துக்கொண்டார். அவன் உள்ளே சென்று நின்றுகொண்டு அவளைச் சிரித்தபடி அழைத்தான். அவனது தந்திரங்களனைத்தும் தெரிந்தவள்போல அவர் கண் மறைய ஒயிலாக நடந்து சென்றாள். அவன் அடுக்களைப் பகுதிக்குச் சென்றான். அவளுக்குச் சிரிப்பு வந்தது. சுவரில் சாய்ந்துகொண்டு அவளை இழுத்துப்பிடித்துக் கட்டிக்கொண்டான். முத்தம் கொடுத்தான். கன்னம் கடித்தான். கழுத்தைக் கவ்வினான். அவள் கூசிச் சூழல் விலகிச் சற்றுச் சத்தமாகச் சிரித்தாள்.

"என்ன? கறி வேணுமா?" என்றாள் கிண்டலுடன். அவனும் சிரித்தான். ரகசியச் சத்தத்துடன். அவளிடம் அவர் வேலை வாங்கிக்கொடுக்கப்போவதை விபரமாகக் கூறினான். அவள் உன்னிப்பாக அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்து விட்டு, "நெஜமாவா?” என்றாள். அவன் சட்டென முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு அவள் தலைமேல் கைவைத்துச் சத்தியம் செய்தான். சந்தோஷம் சுரக்க அவனைக் கட்டிக் கொண்டாள். அவர் வெளியிலிருந்து குரல் கொடுத்தார். அரக்கப் பரக்க அவளைப் பிரித்துவிட்டுச் செல்லும் அவனைச் சிரித்தபடி பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் திரும்பி வந்து பெட்டியைத் திறந்து அவனது ஃபைலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

பழைய கிளிப் ஃபைல். அவர் எழுந்து அமர்ந்தபடி சான்றிதழ்களைப் புரட்டிப் பார்த்தார். அவன் அவர் அருகே மண்டிபோட்டுப் பிருட்டத்தைக் கணுக்காலில் அமர்த்திக் கொண்டு சிறுகுழந்தைபோல் சான்றிதழ்களையும் அவரையும் புதிதாய்ப் பார்ப்பவன்போல் மாறிமாறிப் பார்த்துக்கொண்டி ருந்தான். அவள் கதவில் ஒருக்களித்து நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டில் ஆட்காட்டி விரலால் ஈரம் தொட்டுக் கடைசிக் காகிதத்தைப் புரட்டிக் கோப்பை மூடினார். சிறிது நேரம் கண்களை மூடி விரல்களால் யோசனையாய் நெருடிக் கொண்டிருந்தார். அவனுக்கு ஆர்வமாகவும் பயமான தவிப்பாகவும் இருந்தது. பிறகு அவர் அவனையும் அவளையும் தலை ஒருக்களித்து நிமிர்த்திப் பார்த்துச் சிரித்தார். அவர்களும் புன்னகைத்தார்கள்.

”நாளைக்குக் காலைல எங்கூடவே கௌம்பி வந்திரு. முன்னாடியே ரெண்டு மூணு பேர பார்க்க வேண்டியிருக்கும். மொறைன்னு ஒண்ணு
இருக்கில்ல" என்றார். "பயப்படாத.
ஒனக்கு வேலை கண்டிப்பா உண்டு. அது எம் பொறுப்பு போதுமா?"

அவளுக்கு மேலும் நம்பிக்கை பூக்கத் தொடங்கிவிட்டது. ஃபைலை மூடி அவனிடம் கொடுத்துவிட்டு, "வசந்தா சாம்பார் ரசமெல்லாம் நல்லாத்தான் வைக்கிது. கறி சமைக்குமா?” என்றார். “ஏன்னா செலருக்குச் செலதுதான் நல்லா வரும்.”

"நான் சொன்னா நல்லாருக்காது. நீங்க ஒரு வாட்டி சாப்பிடணும். அப்புறம் தெரிஞ்சிக்குவீங்க” என்றான் அவன்.

அவள் உள்ளே ஓடிவிட்டாள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டபடி. பிறகு அவர்கள் பேச்சு வேறுபக்கம் திரும்பிவிட்டது. அவள் மிளகாய்த்தூள் புரட்டிய கிழங்குகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றாள். "அடடே” என்றபடி எடுத்துக்கொண்டார் அவர்.

அவளுக்கு நிம்மதியாக இருந்தது. இப்போதுதான் தன் குடும்பத்திற்கு நல்ல நேரம் வந்திருப்பதாக நினைத்தாள். கொல்லைப்புறத்தில் பாத்திரங்களை வாரிப்போட்டுத் தேய்க்க உட்கார்ந்து விட்டாள். முதலில் அம்மாவுக்குச் சொல்ல வேண்டுமென்று நினைத்தாள். அவள் சந்தோஷம் தன்னை மேலும் சந்தோஷமாக்கிவிடும் என்று எண்ணிச் சிரித்தாள். பிறகு நிதானித்தவள் போல் எதுவாயிருந்தாலும் வேலை கிடைக்கட்டும். பிறகு சந்தோஷமே வடிந்தது போலிருந்தது. வேலை கிடைக்கத்தானேபோகிறது என்று யோசித்தவுடன் ஆறுதலும் திடீரெனத் துக்கமும் பெருகிக் கண்களில் நீர் சுரந்தது. எதுவும் செய்யாது தரையில் நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன்னை நினைத்துச் சிரித்தபடி புடவை முந்தியால் கண்களைத் தொட்டு ஒற்றிக்கொண்டாள். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும்.

தோட்டத்திற்கு வந்தான் சேகர். தான் போய்க் கறி எடுத்து வரப்போவதாகக் கூறினான். அவர்களும் கறிசோறுச் சாப்பிட்டு மாதங்களாகிவிட்டன. அவள் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். ஒயர் கூடையைத் தட்டி ஊதியபடி எடுத்து செல்லும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாதக்கணக்கில் இஸ்திரி செய்யப்படாத சட்டை முதுகுப் பக்கம் மடிப்பு மடிப்பாகத் தொங்கிக்கொண்டிருந்தது. முதலில் அவனுடைய எல்லாத் துணிமணிகளையும் துவைத்து இஸ்திரி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். வேலை விஷயமாக இனிமேல் எங்காவது போய்த் தங்க வேண்டி வந்தாலும் வரலாம் என்று நினைத்தாள். பிறகு யோசனை வந்தவளாய் வாசல் பக்கமாய் ஓடிவந்தாள். அவன் போய்விட்டிருந்தான்.

4

அவன் திரும்பி வரும்போது வீடுகளில் விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன. வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு லாண்டில் பாரிலிருந்து ஒயர் கூடையை உருவி எடுத்தபடி உள்ளே நுழைந்தான். வராந்தாவில் அவரைக் காணாமல் பழக்க தோஷத்தில் உள்ளே நுழையத் தலைப்பட்ட போதுதான் கதவு சாத்தப்பட்டிருப்பது தெரிந்தது. திடுக்கிட்டது அவனுக்கு. மெல்ல விரல் கொடுத்துத் தள்ளிப் பார்த்தான். உள்ளே தாழிடப்பட்டிருந்தது. முட்டிக்கால் தடதடவென நடுங்க விண்ணென்று தலை வலிப்பது போலிருந்தது. சட்டென மனம் உடைந்து சிதறப் பின்பக்கம் சுற்றிக்கொண்டு வந்தான். சன்னல்களும் உட்புறம் சாத்தப்பட்டிருந்தன. பக்கத்து வீட்டுப் பின்புறத்திலிருந்து கிழவி, "என்ன பூட்டிட்டுப் போய்ட்டாளா?" என்றாள். அவளிடமிருந்து தப்பிக்க வேண்டும் போலிருந்தது. எதுவும் பேசாது முன்பக்கம் வந்து ஓசைப்படாமல் சைக்கிளை நெட்டிக்கொண்டு சென்று ஒரு உந்தலில் மேலேறி மனம் போன திசையில் மிதிக்கத் தொடங்கினான்.

உடையான் குட்டை வந்ததும் கால்கள் தாமாகவே மிதிப்பதை நிறுத்திவிட இறங்கி நின்றான். யோசனைகள் நாலா பக்கமும் பரபரத்தன. விபரீதம் நடந்துவிட்டதாக மனம் உதறிக்கொண்டிருந்தது.

ஒரே முடிவுதான். அவரைக் கொலை செய்து விட வேண்டும். ஒன்றும் பெரிய சிரமமில்லை. சாதாரணமாக ஒன்றும் தெரியாததுபோல் இருந்துவிட்டுக் கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துவிட வேண்டும்.

அவன் கற்பனையில் அவர் கழுத்து அறுபட்டுக் கிடக்க ஊர்மக்கள் கூடி அழுதார்கள். வசந்தா மூலையில் கசங்கிய துணிபோல் சுருண்டு கிடக்க, உறவினர்கள் அவளைப் பற்றிக் கொண்டு ஒப்பாரியிடுகிறார்கள். நாளிதழ்கள் அவன் கொலை செய்த விபரத்தைப் புகைப்படத்துடன் பிரசுரித்துவிட்டன. கோபம் தணிக்க முடியாமல் மேலெழும்பிக் கலைந்தது. இனிமேல் வாழ்க்கையில் என்ன மிச்சமிருக்கிறது என்று நினைத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரம் காத்திருக்கத் தலைப்பட்டவன்போல் நின்றிருந்தவன் சைக்கிளைத் திருப்பி மிதித்தான்.

வாசலில் வேண்டுமென்றே தீவிரத்துடன் சைக்கிளைச் சப்தம் அதிர நிறுத்தி ஒயர் கூடையை உருவி எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவர் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தார். அவர் முதுகைப் பிரதானப்படுத்தும் அக்கோணம் அவர் உடலை ஒரு விலங்குபோல் காட்டியது. அவர் வேண்டுமென்றே நடிப்பது போன்றிருந்தது. உள்ளே சென்றான். தோட்டத்தில் வசந்தா ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவள் முகத்தைத் தேடிப் பற்றியபடி முன்னகர்ந்தபோது அவள் அவனைப் பார்த்துவிட்டு புளிச் சக்கையை வெளியே வீசினாள். கறிக்கூடையை அவள் பக்கம் வைத்துவிட்டுச் சட்டையைக் கழற்றினான். அவள் முகம் அலம்பியிருந்தாள். கன்னத்திலும் காதோர மேற்புறங்களிலும் முடிக்கற்றைகள் ஈரப் பளபளப்புடன் ஒட்டிக்கொண்டிருந்தன. மேலுடம்பில் பளிச்சென மாற்றம் தெரிவதைப் பார்த்தான். ஜாக்கெட் மாற்றியிருந்தாள். வெள்ளை நிறம். அவள் முகத்தை மிக அருகில் பார்த்தான். அது ஆண்டு அனுபவித்த ஒரு பெரிய மனுஷியின் முகம் போலிருந்தது. அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் சோர்வுற்றிருந்தன. அவனைப் பார்த்துச் சிரித்தாள்; ஒரு குழந்தையைப் போல. “இந்தக் கறிய அரிஞ்சிக் கொடு’ என்றாள். அவன் எங்கோ பார்த்தபடி நகர்ந்தான். பின்பு அவளே தோட்டத்திற்குச் சென்று ‘கவிச்சி அரிவாள்மணை’ எடுத்துவந்து திட்டமான துண்டுகளாக அரியத் தொடங்கினாள்.

அவன் திறந்திருந்த சன்னல் கம்பியைப் பற்றிக்கொண்டு நட்சத்திர வெளியை வெறித்தான். அவனை யாரோ பலமாக அடித்துப்போட்டதுபோல் களைப்பாக உணர்ந்தான். எவற்றையும் எதுவும் செய்துவிட முடியாத இயலாமை அழுத்திப் பிடித்தது. எல்லோரும் பதறிப் பதறிக் கேட்க, ஒன்றும் சொல்லாமல் கத்தி அழுதுத் தீர்க்க வேண்டும் போலிருந்தது.

தலித்
ஆகஸ்டு 2003

Thursday, May 13, 2021

அம்மா விட்டுச்சென்ற திசை - சென்ஷி சிறுகதை

அம்மா விட்டுச்சென்ற திசை
- சென்ஷி

ஆம் ! சிறுவயதிலிருந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற முதலிரண்டு அச்சங்களைப் போலன்றி மூன்றாம் அச்சம் பற்றிய துக்கம் என்னுள் எழவில்லை. 
 
என் ஒவ்வொரு அச்சங்களும் என் உடலின் பாகத்தில் ஒவ்வொரு அறையாகத் திறந்திருக்குமென நம்பினேன். அவ்வப்போதைய நிகழ் சூழலுக்கேற்ப அது தன்னுடைய வாசலை சிறிதாகவோ பெரிதாகவோ ஆக்கிக்கொள்கின்றன. அதில் என்னை முழுமையாக மூழ்கடித்தும் விடுகின்றன. குறிப்பாக தெரிந்தவர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம், நண்பர்களிடம் கடன் கேட்டு கிடைக்காத துயர், செலவைப் பற்றி எண்ணும் போது கிடைக்கின்ற அச்சத்தில் மூழ்கிவிட்டபின், அச்சம் என் இடது கை சுண்டுவிரலில் ஆரம்பிக்கிறது. எதிர்பார்த்த பணம் கிடைக்காத எல்லா நிமிடங்களிலும் சுண்டுவிரலில் யாரோ தன்னுடைய விரலைக் கோர்த்துப்பிடித்துக்கொண்டு பதற்றத்துடன் என்னுடன் அலைவது போலிருக்கும். அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் பத்திரமாய் சாலை கடத்தலைப் போன்ற - பதைபதைப்பு என்னுடன் ஓடிவரும். நேரமாக ஆக சுண்டுவிரல் பாரம் தாங்காது நோக ஆரம்பிக்கும். தனியே ஒடிந்து விழாவிட்டால் நானே அறுத்து எறிந்துவிடலாமா என்ற யோசனை வருமளவு என்னை அது பலமாய் ஆக்கிரமித்திருக்கும். யாரேனும் ஆதுரமாய் என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களா என்று ஏங்குமளவுக்கு அழுகை வரும். எத்தனை வயதானால் என்ன! எனக்கென்று ஒரு தோள் கிடைத்துவிட்டால் அழுதுதீர்த்துவிட மாட்டேனா நான். 
 
ஆம் ! எனக்கான தோளை நான் இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். சுமை இடமாற்றத்திற்காக அல்ல. என்னுடைய துயரங்களை நிச்சயம் அத்தோளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன். என்னுடைய கைகளை அந்த தோளில் மேல் இறுக்கப்பிடித்துக் கொள்ள வேண்டும். அதனுடைய அசட்டு சந்தோசங்களை நிச்சயம் என்னுடையதாக ஆக்கிக்கொள்வேன். சப்தமாக சிரித்து வைப்பேன். தொலைதூரத்தில் கண் பார்வைக்கு சிறிதாய் தெரிகின்ற முழுமையாய் அகப்பட்டுக்கொள்கின்ற அந்த மலையின் அளவு பாசம் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஓடுகிறது. 
 
தோளின் மீதமறும் அச்சம் பற்றி உனக்குத் தெரியுமா ? 
 
அது நம்மை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். இரண்டு தோள்களிலும் தன்னிரு கால்களை போட்டுக்கொண்டு தலைபிடித்து அமரும் குழந்தை போல பொறுப்புகளை சுமந்து செல்லும் அச்சம். கண்ணுக்கு தெரியாத விரிசல் கொண்ட தண்ணீர்ப்பானையைச் சுற்றி ஈரம் விரவுதல் போல உங்களைச் சுற்றி நசநசப்பாக்கும். இது என்னுடைய வேலையே இல்லை என்று உங்களை அலறல் கொள்ள வைக்கும். முதுகை வேகமாக சுவரில் மோதிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள தோன்றும். வெளிச்சத்திலிருந்து நகர்ந்து இருட்டிற்கு ஓடிப்போவது மாத்திரமே தற்காலிக தப்பித்தலை தரும். உங்கள் முதுகின் மேலூறும் கண்கள் இருட்டை ஊடுருவக்கூடாதென்பது முக்கியம். ஆனால் எப்பொழுதும் பொறுப்பின் மீதான அச்சமே நம்மை இயக்குகிறது. வெறுமனே இயக்குதல் மாத்திரம் அல்ல சமயங்கள் வேட்டைநாயின் துரத்தலைப் போல துரத்தியடிக்கும். பரபரப்பு. வேகம். ஓட்டம். நின்று நிதானித்து பொறுப்பை எண்ணிக்கொள்ள முடியாது. அது நம் வேலையாக இருக்கலாம் குடும்பமாக இருக்கலாம் அல்லது வெளியே சொல்லத் தயங்கும் உங்களது பரிபூர்ண காதலாக இருக்கலாம். காதலைக்கூட நாமே வெளியேற்றி சொல்லக்கூடிய அளவிலாய் அமைவது அல்லது பொறுப்பைக் குறித்து யோசிக்கும்போது! 
 
தலையை பற்றிப்பிடிக்கும் அச்சம் - மிகவும் பிடித்தமானது. ஏனெனில் இதை நானே எனக்காக உண்டாக்கிக்கொள்வது. தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து, தனது கருத்தை பேசுவது போன்றதல்ல அது. சற்று விந்தையானது. உயிர் போய்விடவும் கூடுமென்பதில் உங்களுக்கு விந்தைத்தன்மை கிடைக்குமெனில், நீங்களும் முயற்சிக்கலாம். முழுக்க முழுக்க என்னைத் தண்டித்துக்கொள்வது போன்றது என்று இதனை நேரிட்டு கண்டு திடுக்கிட்ட சிலர் கூறினாலும், இவ்வச்சம் குறித்த விவரணைகளை நீங்கள் அறிய வேண்டும். ஏனெனில் என்னால் இவ்வச்சத்தை எளிதில் கையாளமுடியும். இவ்வச்சத்திலிருந்து தப்பித்துவிட முடியும். 
 
 தளும்ப தளும்ப தண்ணீர் நிரம்பப்பட்ட வாயகன்ற தொட்டியில் தலையை கவிழ்த்து மூச்சு முட்டும்வரை உங்களால் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தொட்டியின் அடியாழத்தைக் காண இயலுமா. வெளியிலிருந்து தொட்டியின் மீது படர்ந்து உள் நுழையும் வெளிச்சம் சிறிது சிறிதாக குறைந்து இருள் மாத்திரமே உங்கள் கண்களுக்கு தெரியும் வரை காத்திருக்க வேண்டும். மூச்சை இறுக்கப்பிடித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் கால்கள் தரையைத் தொட்டிருந்தாலும், தலையின் மீது அந்த அச்சம் ஏறிக்கொள்ளும். ஆனால் இந்த அனுபவத்தை உயரம் அதிகமான கட்டிடங்களின் விளிம்புகளில் நின்று முயற்சிக்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை கழுத்தை பின்னால் மடித்து அன்னாந்து முகம் தூக்கி உச்சியைக் கண்ணால் அளந்தறிய முயலா ஓர் கட்டிடத்தின் உச்சியிலே ஏறி நின்று காற்றின் வேகத்தை அனுசரித்தவாறு விளிம்பில் பத்திரமாக நின்றபடி எட்டிப் பார்த்ததற்கு தற்கொலை முயற்சி என்று கூறி தனிமைச்சிறையில் அடைக்க முயற்சித்தனர். அங்கு வழி தெரியாது கண்ணாடியின் வழி தெரியும் பாதையை முட்டிக் கொத்தும் பறவையாக நானிருப்பதை உணர முடிந்தது. 
 
அசாத்தியமான சுத்தம் குறித்த பயமும் எனக்குண்டு. உடலை எப்படி சுத்தப்படுத்தினாலும் எப்படியேனும் ஒரு கறை கண்ணில் பட்டுவிடுகிறது. வெளியில் இருக்கும் அழுக்கு என்னை துரத்துவது போலவும் அது தன்னை எச்சரிப்பது போலவும் காணுதல் உண்டு. உடல் முழுக்க பாலை மணலை மாத்திரம் சூடிக்கொண்டு அலைதலில் இறையச்சம் விட்டுப்போய்விடுன்பதால் சொர்க்கம் புக வழியில்லாமலிருப்பதால் சொர்க்க நினைவுகளிலிருந்து என்னை துண்டித்துக்கொண்டு வாழ்கிறேன். இதில் கிடைத்த நன்மைகளாவன.. 
 
தொலைந்து போதல் குறித்த அச்சத்திலிருந்து என்னால் எளிதில் விடுபட்டு விட முடிகிறது. ஜனக்கூட்டம் மிகுந்த பொருட்காட்சியில் தொலைந்து போன குழந்தையாய் உருவகித்துக்கொள்ளமுடியும். பிரயாணத்தில் ஏற்படப்போகும் விபத்தில் தனியாய் காயமின்றி தப்பித்து திசை தெரியாது அலைதலை போன்றது அது. நான் வெறும் உடல் மாத்திரமல்ல என்பதை எனக்கு அழுத்தமாய் நிரூபிக்க கிடைத்த ஒரு யாத்திரை தேவைப்படுதலை போன்றது அது. 
 
வேண்டி விரும்பி மணற்சேறுகளிலும், விலங்கினங்களின் கழிவுகள் மீதும், காய்ந்து உதிர்ந்த மரப்பட்டைகளின் மீதும் ஒரு பூச்சியாய் என்னை அலையச் செய்கிறது. 
 
 மனம் பிசைதலைப்பற்றிய அச்சம் 
 
எனக்கு மீண்டும் மீண்டும் இருதய ஒலி பலமாகக் கேட்டுக் கொண்டிருக்கும். மூச்சு விடுவதற்கு இத்தனை சிரமப்படுத்திக்கொள்ளவேண்டுமா என்றும் தோன்றும். பெரும்பாலும் ஆதுரமானதற்கு ஆறுதலுக்கானதற்காகவே இது தேவைப்படும். யாருக்கான பிரார்த்தனைகள் முக்கியமானவை என்ற குழப்பத்தில் ஆழ்த்தும் இந்த பிசைதல். எல்லோருக்கும் நல்லவளாக இருத்தலென்பது கடினமென்பதை பிரார்த்தனையில் தோற்கடிக்கச்செய்யும். எதிரிகளின் குற்றம் குறைகள் நீங்க பிரார்த்தித்து புது மனிதியாய் திரும்புதல் வரம். எல்லா சிரமங்களும் நம் கண்பார்வைக்கு எட்டாத வரை மாத்திரமே. கண்களைப் பொத்திக்கொள்வது போல என்றேனும் இதயத்தை துடிக்காது வைக்க உடலின் உள் நுழையும் ஒரு கரம் இருந்தால் எத்தனை நலம் பயக்குமென யோசிப்பேன். 
 
சப்தம் பற்றிய அச்சம் 
 
 வெளியின் அதிர்வு சப்தம். அச்சுகள் அற்ற சுவடுகள் பதியாத ஓட்டம். குறி வைத்து எய்துவிட்டு, தைத்து வாதை உணர்ந்து பின் திரும்பும் கலை. எப்போதும் என்னைச் சுற்றிலும் சப்தங்கள் புதைவதில்லை. 
 
என் மௌனத்தை கலைக்க அவன் செய்த மாயம் என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு நேரமும் படுக்கையிலிருந்து நகராமல் இருந்தேன். ஆனால் நேரமாக ஆக சப்தத்தொனி மாறியிருந்தது. அவனிடம் எனக்கு காதலை விட அதிகமாய் பயம் இருந்தது. நேராக எழுந்து அவனருகே சென்றேன். அந்த கண்ணாடியில் எனது உருவம் தவிர்த்து அவன் நின்றிருந்தான். அவனையும் தவிர்த்து ஏதேனும் பிம்பம் கிடைக்குமானால் அது வெளிச்சத்தினுடையதாக இருந்தது. எத்தனை முயன்றும் அவன் மேல் விழுகின்ற வெளிச்சத்தை என்னால் தவிர்க்க இயலவில்லை. மெதுவாய் மிக மெதுவாய் வெயில் அந்த கண்ணாடியில் தன் நாவை சுழற்றி என் பிம்பத்தினை இரையாக்கிக் கொண்டிருந்தது. அதிக வெளிச்சத்தில் நிழல் பிம்பம் தேடுதல் என்றும் சாத்தியமற்றது என்பதை நான் தெரிந்துகொண்டேன். 
 
சவரத்திற்கான அலங்கார முயற்சிகளில் கவனமாக ஈடுபடுதலில் வெளிச்சம் தொந்தரவு செய்யவில்லை போலும். கண்ணாடியிலிருந்து வெயில் மெல்ல தரையில் படிந்து ஈரமாக்கிக்கொண்டிருந்தது. ஆனால் வெயிலின் சத்தமும் சரசரப்பும் என்னை நோக்கியே இருந்தன. 
 
வார்த்தைகள் மீதுள்ள அச்சம் 
 
கோபம் குறைந்த பின்பு அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். எங்கு திரும்பினாலும் என் கண்களுக்கு அவன் தெரிய ஆரம்பித்தான். என் கண்ணில் கிடைக்கும் அச்சங்களை முழுமையாகக் கண்டுணரத் துடிக்கும் ஒரு வேட்டைமிருகத்தின் சுபாவம் அவனிடமிருந்தது. அவனிடம் பேசுவதற்காக மௌனத்தின் துணை கொண்டு வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்திருந்தேன். மனங்கொள்ளாத அளவு வார்த்தைகள் சேர்ந்திருந்தது. மனத்தில் நிலைகொள்ளாத வார்த்தைகள் மேலும் மேலும் உடல் முழுவதும் சூழத்தொடங்கின. என்னைச்சுற்றிலும் சொல்லாத வார்த்தைகள் சூழ்ந்து கொண்டன. சாப்பிடும்போது, தும்மும்போது, முகம் கழுவும்போது வார்த்தைகள் நழுவுதல் கண்டு வேதனையுற்று செயல் மறந்திருந்தேன். அதி தீவிர மௌனம் கொண்ட என் அறை முழுவதும் வார்த்தைகள் நிறைந்து விட்டன. மூடப்பட்ட அறைக்கதவை வார்த்தைகள் முட்டி மோதி திறக்க முயற்சித்தன. 
 
சுயம்புகளான வார்த்தைகள் மொத்தமும் ஒன்றையொன்று உடைத்து இறக்கும் தருவாயிலும் என்னால் கண்கலங்கி பார்க்க முடிந்ததேயொழிய சொல்லியிராத எனது வார்த்தைகளை காப்பாற்ற முடியவில்லை. உள்ளடங்கிய பழைய வார்த்தைகள் வெளியேறிய வார்த்தைகளுடன் கொண்ட காதலில் புதிய வார்த்தைகள் பிறந்திருந்தது. எனது ஓசைகள் ஆகாதவரை மௌனத்தை சுற்றி சுழலும் வார்த்தைகள் பிரியத்தின் சொல்மயக்கம் கொள்ளவைக்கக்கூடியவை. 
 
இந்த அச்சங்கள் உடலிலிருந்து உற்பத்தியானவையே. இன்றைய நாளில் அத்தனை அச்சங்களையும் வெளியில் கழற்றிவிட்டு, நாளைய பொழுதைப் பற்றி யோசித்து படுக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டுதான் படுக்கையில் கிடப்பது. ஆனால் விடாப்பிடியாக எப்படியேனும் நாளைய பொழுதின் நினைவு உறக்கத்தை கெடுத்துவிடுகிறது. 
 
தனக்கு விருப்பமான அச்சங்களற்ற கனவைக் காணுதல் என்பது இத்தனை கடினமாய் இருக்குமென்று நான் நம்பவில்லை. அச்சங்கள் அகற்றுதல் எளிதானதா என்ன!? 
 
இதுவும் உங்களைக் குறித்து எனக்கு அடிக்கடி வரும் கனவுதான் . இருள் சூழ்ந்த இருபுறமும் மரங்கள் அடர்த்தியாய்க்கொண்டிருந்த நீண்ட மண் சாலையில் உங்களுடன் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று என் கையைவிட்டு விட்டு நீங்கள் தொலைந்து போயிருந்தீர்கள் . பரிதவித்துக்கொண்டிருந்தேன். எந்த திசை சென்று மறைந்தீர்கள் என்று அறிய முடியாததொரு நிலை. உங்கள் கண்களில் இட்டிருந்த மையை எடுத்து சூனியத்தில் அப்பிவிட்டது போல அடர்த்தியானதொரு இருட்டில் எங்கு சென்று தேட. நிராகரித்துவிட்டு சென்ற அழுத்தம் இதயத்தை பிசைந்து கொண்டிருந்தது. ஆனால் நீங்கள் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும்போது எந்த திசையை முகம் பார்த்திருந்தது என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. உடைக்கப்பட்ட அறையின் உள் நுழைந்த காற்றிற்கு ஏற்ப நாணலாய் நீங்கள் உங்களை கயிறுக்கு ஒப்புக்கொடுத்து சுற்றிக்கொண்டிருந்தீர்கள். கண்களை மூடியிருந்தீர்கள். அதனால் ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்த என்னை நீங்கள் கண்டிருக்க முடியாது. தன் வாழ்வு பற்றிய அச்சத்திடமிருந்து தப்பிக்க நீங்கள் தைரியத்தைக் கைக்கொண்டதன் பலன். 
 
 இறப்பதற்கு முதல் நாள், அம்மா என்னைத் தனியே விட்டுச் சென்ற திசையிலிருந்து ஒரு சொல் கிடைத்திருந்தது. ’காத்திரு’- என்பதாக அது இருந்தது. 
 
உடல்விட்டுப் போன எனது மூன்றாம் அச்சம் தரையிலிருந்து வெறும் இரண்டடி தூரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

*

நன்றி: சென்ஷி