Monday, November 7, 2022

தந்தை சொல் மிக்க (நாடகம்) - மஜீது

முதலில் ஒரு ’பிஸாது’ : முதல் பரிசு வாங்குன நாடகமே இப்படின்னா மத்ததுலாம் ?!
*

தந்தை சொல் மிக்க (நாடகம்) - மஜீது

அண்ணே, ஒரு குறுநாடகம் போடுறோம், 'தந்தை சொல் மிக்க' ன்னு தலைப்பு. 12 நிமிசத்துக்குள்ள இருக்கனும்.. அதுல ஒரு சின்ன கேரக்டர்ணே...நம்ம ரஃபீக் சுலைமான் நடிக்க வேண்டியது..

அவரா? அவரு ஊருக்குல்ல போயிருக்கார் ஆசிஃப்? நான்  ஃபேஸ்புக்ல பாத்தேன்...

ஆமண்ணே.. ஊர்லதான் இருக்காரு..ஆனா வர்றதுக்கு லேட்டாகும்போல தெரியுது...

அடுத்த க்விக் ஆப்ஷன் நீங்கதான்னு தோனுச்சு... அதான் கூப்ட்டேன்... வர முடியுமா?

(வரமுடியுமான்னு கேக்குற மாதிரியேஏஏஏ, வரனும்னு ஆர்டர் போட வேற யாரால முடியும்?)

அப்டியா?

“ஆமண்ணே.... ஒரு காலேஜ் சீன்,மூனு நிமிசம்தான் வரும்...” ன்னு ஆரம்பிச்சு முழு கேரக்டர் பத்தியும் ஒரு நிமிசத்துல சொல்லிட்டாரு... (அதாவது டீல் முடிஞ்ச்சாம், அப்டியான்னு கேக்குறமாதிரியேஏஏ சரின்னுட்டேனாம்)

வரச்சொன்ன அன்னைக்குப் போனேன்... ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தாரு... படிச்சுப்பாத்தா உள்ளபடியே சிம்ப்பிள்தான்... பெருசா ஒன்னும் சிரமப்படாம, சின்ன மாடுலேஷன்ஸோட பேசுனாலே நல்ல அவ்ட்புட் கிடைக்கும்.. ரொம்ப ஈசிதான்... அதனால ஒன்னும் கஸ்ட்டமா தோனலை....

ஒரு சீன்ல என் கேரக்டர் செல்ஃபோன்ல தன்னோட அப்பாட்ட ஒரு நிமிசம் தொடர்ச்சியா பேசுறமாதிரி இருந்துச்சு. அதுதான் ஸ்க்ரிப்ட்ல முக்கியமான ட்விஸ்ட்.. 

ஆசிஃப் கொடுத்த அந்த சீன் டயலாக்கை படிக்கும்போதும் ஒன்னும் வித்தியாசமா தோனலை.. பண்ணிறலாம்னு தைரியமா சொல்லிட்டேன்.

ஆனா, அடுத்த நாள் ஒரு குண்டு வெடிச்சிச்சு..

முதல் ரிகர்சல்: அந்த போன் பேசுற சீன் வந்தப்பதான் அந்த ட்விஸ்ட் என் மண்டைக்குள்ளயும் திடீர்னு ஏறுச்சு.

பல வருசங்களுக்கு முன்னால் என்னோட வாழ்க்கைல நடந்த பலத்த அதிர்வுகள்..

தொலைஞ்சுச்சு.... மொத்தமும் காலி....

அந்த டயலாக் வரும்போது நான் அங்கெயே இல்லை..

எங்கெயோ போய்ட்டேன்... வாய்லாம் கொழறுது..

வார்த்தைலாம் திக்குது... மாடு சாணிபோடுறமாதிரி டயலாக் டெலிவரி வருது...

எனக்கே தெரியுது.. ஆனா வெளில சொல்ல புடிக்கலை..

சமாளிச்சிறலாம்னு தோனுச்சு... யாருக்கும் திருப்தி இல்லை..

மறுபடி ரெண்டாவது ரிகர்ஸல்ல இன்னும் மோசமா போய்ருச்சு...

குரல்லாம் உடைஞ்சு நடுங்க ஆரம்பிச்சிருச்சு...

பாத்துக்கிட்டு இருந்த தம்பி பாலாஜிக்கு ஏதோ தோனுச்சு போல...

விறுவிறுன்னு ஓடிப்போயி கொஞ்சம் தண்ணி கொண்டாந்து கொடுத்து, “என்னாச்சுண்ணே... தண்ணியைக் குடிங்கண்ணே... குரல் ரொம்ப உடைஞ்சு ஒரு மாதிரியாயிருச்சுண்ணே...”ன்னு சொன்னவொடனே, வாங்கிக் குடிச்சுட்டு, பாலாஜி முகத்தைப் பாத்தேன்...

“போதுமாண்ணே... இப்ப ட்ரை பண்ணுங்க”ன்னு சொன்னதும், போதும்ப்பா, சரியாயிருச்சுன்னு சொல்லிட்டு, சட்டுனு உள்ளதை சொல்லிறலாமான்னு யோசிச்சேன்..

அப்ப பாத்து ஒரு ஃபோன் வரவும், இன்னும் ஒரு தடவை ட்ரை பண்ணிட்டு சொல்லலாம்னு அடங்கிட்டேன்... ,

போன் பேசிட்டு அஞ்சு நிமிசத்துக்கு அப்பறம் திரும்ப வந்து பேசும்போது சுமாரா வந்துச்சு...

அதுவே போதும்கிற அளவுக்கு ஆசிஃப்க்கு திருப்தி..

ஆனா எனக்கு திருப்தி இல்லை...

ஆனாலும் அவர்ட்ட நம்பிக்கையோட சொன்னேன்:

"என் கேரக்டரை பத்தி கவலை வேணாம்... இதைவிட சிறப்பா செஞ்சிர்றேன்"

அவரும் 'ம்ம்.. சரி'ன்னு சொன்னாரே தவிர அவருக்கு அன்னைக்கு பெருசா நம்பிக்கை இல்லை.

அடுத்த மூனு நாலு நாள்ல ஸ்டேஜ் ரிகர்சல். நாங்க நடிச்சு முடிச்சதும், அமைப்பாளர்கள்ல ஒருத்தர் (எனக்கு அறிமுகம் இல்லாதவர்) என்னைக் காமிச்சு, இவரு நல்லாப் பண்ணுனாரு, முக்கியமா அந்த ஃபோன் பேசுற சீன் நல்லாப் பேசுனாருன்னு குறிப்பிட்டு சொல்லவும் ஆசிஃப் முகத்துல லேசா ஒரு ஒளிவட்டம். 

இவ்வளவு தூரத்துக்கு என்னை ஆட்டிப் படைச்ச அந்தவிசயம் என்னன்னா,

ஆசிஃப் கொடுத்த அந்த செல்ஃபோன் டயலாக்,எனனோட இருபதாவது வயசுல, என்னோட தகப்பனார்ட்ட,

நெசம்மாவே நான் பேசுன அதே டயலாக்..

வாசகங்களும் 95 பெர்சண்ட் அப்படியே டிட்டோ...

நான் அப்டிப் பேசுனதுனால ஆரம்பிச்ச பிரச்சினை பெருசாகி, எப்டிலாமோ திசைமாறி, ஒரு பெரிய பிரளயமா மாறி, அவரைவிட்டு நான் பிரியவேண்டியதாயிருச்சு...

பிரிவுன்னா சாதாரண பிரிவில்லை...

மறுபடி அவர் முகத்தை சகஜமா பாத்து, நல்லாருக்கீங்களான்னு கேக்க 14 வருசம் ஆகிருச்சு...

அதுவும் எப்டி? எங்கே?

காரைக்குடி கடைவீதில எதிரும் புதிருமா ரெண்டுபேரும் கடந்துபோயிட்டோம்..

அடையாளம் தெரியாம....

என் தோள்ல என் ரெண்டாவது மகன்,

3 வயசு நிரம்பாத சின்னபபையன்..

10 செகண்ட்ல எனக்கு பொறிதட்டி, திருப்ப ஓடிப்போய்,

அவருக்கு நேரா நின்னு, முகத்தை சகஜமாப் பாத்து, 

கேட்டேன்: நல்லாருக்கீங்களா?

அவரு: நல்லாருக்கேன்... நீங்கஅஅஅஅ? யார்னு தெரியலையே....

இப்ப எனக்கு சுர்ர்ர்ர்னு கோபம்... ஆனா உடனே அடங்கிருச்சு..

நான்: நெசமாவே அடையாளம் தெரியலையா? இல்லை கோபத்துல சொல்றீங்களா?

அவர்: இல்லை, எனக்கு நெஜமாவே தெரியலை...

நான்: சரி நான் பாக்குறதுக்கு நிறைய மாறிருக்கேன்தான்... இல்லைங்கலை...ஆனா குரல் கூடவா தெரியலை?

அவர்: இல்லை தெரியலை... யார்ன்னு சொல்லிருங்க...

நான்: மஜீது த்தா....

10-15 செகண்ட் மவுனம்... ஆனா அது ரொம்ப நீளமான கனமான மவுனம். 

அப்பறம்,

அவர்: ம்ம்ம்ம்... நல்லா இருக்கியா..?

சொன்னேன்: நான் நல்லா இல்லை.. கடனோடவும் பல பிரச்சினைகளோடவும் இருக்கேன்..

(கொஞ்சங்கூட கூச்சமோ வெட்கமோ எதுவுமே இல்லாம சொன்னேன்)

அவர்: நீ சவூதில இருக்குறதா கேள்விப்பட்டேன்.. அப்பறம் என்ன கடன், பிரச்சினை..?

நான்: அந்த சம்பாத்தியம்லாம் போச்சு.. அதெல்லாம் அப்பறமா சொல்றேன்..

அவர்: சரி, இப்ப என்ன பண்ற?

நான்: ஒன்னும் பண்ணலை.. துபாய் போறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன்..

மறுபடி அமைதியானோம்...

அதுக்கப்பறம், ரெண்டு பேரும் அப்ப எங்கே இருந்தோம்னு விசாரிச்சுக்கிட்டோம்,

என் பையனுக்கு அவன் கேட்ட ‘மக்ரூன்’ வாங்கிக்கொடுத்தார்.

கிளம்பிட்டோம்... அவ்வளவுதான்..

மறுபடி தொடர்பில்லை..

அதுக்கப்பறம், 6-7 மாசம் கழிச்சு, துபாய் வந்து சேந்தேன்...

வந்த ஆறுமாசத்துல என் தம்பிட்ட சொல்லி அவர்ட்ட என் சார்பா பேச சொன்னேன்

(செல்ஃபோன்லாம் இல்லை)

அடுத்த ஆறுமாசத்துல என்னோட முதல் வெக்கேஷன்,

ஷார்ஜா - திருச்சி டைரக்ட் ஃப்ளைட் சர்வீஸ்,

முதல்முதல் ஃப்ளைட்

இறங்குன தேதி: 01-01-1997 அதிகாலை 1:00 மணி

எல்லாமே, ஒன்னுல ஆரம்பம்,

என்னோட புது வாழ்க்கையும்..

என்னை அழைக்கிறதுக்கு அத்தா வந்திருந்தார்

(வர வச்சிருந்தேன்)

வழில கிராமத்துக்கு கிராமம், இளவட்டப் பயலுக

எங்க வண்டிய அங்கங்கெ நிறுத்தி

சத்தம் போட்டு அலப்பறை பண்ணி

ஒரே வரவேற்பு!

ஸ்வீட்டுகளும், கேக்குகளுமா கொண்டாட்டம்..

ஒரே ஹேப்பி நியூ இயர் ஆர்ப்பாட்டம்!

அதுக்கப்பறம் அவரை அவராவே

அப்டியே ஏத்து அணைச்சிக்கிட்டு

நான் அவரை விடவே இல்லை..

கடைசிவரைக்கும், 

அதாவது 27/07/2018 வெள்ளிக்கிழமை ராத்திரி வரைக்கும்..

அன்னைக்கு ராத்திரி சாப்பிட்டுட்டு, மயங்கி பின்னால சாய்ஞ்சு மயங்கினவருதான்..

தகவல் கிடைச்சு பதறி  ஓடிவந்து, மவுத்தை உறுதி செஞ்ச டாக்டர் வேற யாருமில்லை..

அன்னைக்கு 3 வயசுல மக்ரூன் வாங்கி  அறிமுகம் ஆன என் ரெண்டாவது மகன் தாரிக்..

எனக்கு அத்தாவோட செய்தி வந்தப்ப,

நான் துபாய்ல ஒரு ரெஸ்டாரண்ட்ல ராத்திரிச் சாப்பாட்ல இருந்தேன்...

அதிர்ந்து நிக்கும்போது,

"தைரியமா இருங்கண்ணே"ன்னு சொல்லி தேத்துனது வேற யாரும் இல்லை

என்கூட சாப்ட்டுக்கிட்டுருந்த இதே ஆசிஃப் மீரான் அண்ணாச்சிதான்..

என்ன சொல்ல...!

நாடகம் என்னாச்சுன்னு கேக்குங்கிறீங்களா?

17 நாடகங்கள்ல “சிறந்த நாடகம்” னு தேர்வாச்சு,

த ந் தை சொ ல் மி க் க

அந்த வசனத்தை நீங்களே நேரடியா நாடகத்துலயே கேக்கலாம்.

கீழே இருக்குற லிங்க்கை ஓப்பன் பண்ணுனா கரெக்டா இந்த நாடகம் ஆரம்பமாகும்

https://www.youtube.com/watch?v=jdUtj9FZ1hY&t=13055s

(14 minutes from this point)

*

நன்றி : மஜீத்

*

தொடர்புடைய ஒரு பதிவு

ல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத்


Saturday, October 1, 2022

தோஹாவிலிருந்து ஒரு கடிதம் - ஜோ டி குரூஸ்

ஜோ டி குரூஸ் (Joe D Cruz) எழுதிய ‘அஸ்தினாபுரம்’ நாவலின் ஆறாம் அத்தியாயம் இது. நன்றியுடன் பகிர்கிறேன். - AB

**

எனதருமை மனைவி ஆனந்திக்கு, உன் அன்புக் கணவன் அமுதன் தோகாவிலிருந்து எழுதுவது. நான் இங்கு நலமே போல் நீயும் அங்கு நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். உண்மையைச் சொல்வதானால் நான் இங்கு நலமாகவே இல்லை . எப்படி இருக்க முடியும், ஆனந்தி? பொழுது போக்கென்றால் அது சாப்பிங் மட்டும்தான், நண்பர்கள் லுலு சூப்பர் மார்கெட்டுக்குள் சென்றிருக்கிறார்கள், நான் இங்கே ஒரு ஈச்சமரத்தடியிலமர்ந்து உனக்குக் கடிதம் எழுதுகிறேன்.

'என்னடா எல்லோரையும் போலதான எனக்கும் திருமணம் நடந்திச்சி, இங்க இருந்தப்ப பொழுதன்னைக்கும் போலிசு, கேசுன்னு அலைஞ்சாரு, நிம்மதியான கஞ்சி ஒருநாள் கூட இல்லிய, ஒவ்வொரு நாளும் இன்னக்கி என்ன நடக்குமோன்னு பதட்டம், இந்த ஓட்டத்துக்கு எடையிலயும் வயித்துல குழந்த ஆயிப்போச்சி. சரி, இப்பவாவது நம்மளோட இருப்பார்ன்னு பாத்தா கண் காணாத இடத்துல இருந்து சம்பாதிக்கிறாராம். எத்தன நாள் ராயபுரத்துக்காரி கூட குப்ப கொட்ட, சாப்பாட்டுக்கு பணம் குடுக்குறோம் ஆனாலும் கட்டுன புருசனோட கூடயோ , குறையோ இருக்குறத சாப்புட்டுட்டு வாழ்றதுதான வாழ்க்க..... உன் மனவோட்டம் எனக்குப் புரியாமலில்லை. 

இவையெல்லாம் எனக்கும் வரும் எண்ணங்கள். என்னடா வாழ்க்கையென்று சில சமயங்களில் சோர்ந்துவிடுகிறேன், மறுகணமே எழுந்து நின்று விடுகிறேன். காரணம், நான் வெல்லாத கோட்டைகளை வெல்ல என் மகன் வருவான் என்ற நம்பிக்கை என்னில் துளிர் விட்டிருக்கிறது. நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆவேன் என்று கனவில் கூட நினைத்தவனல்ல. வாழ்வே சூன்யமாகிப் போயிருந்தது, நீ என் வாழ்வில் புது வசந்தம் ஆனந்தி.

இந்த வெளிநாட்டு வாழ்க்கைகூட இறைவன் கொடுத்த பாதுகாப்பாக இருக்கலாம், யோசித்துப் பார் அங்கு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ ! ஆனால் என்ன, என் மனைவியின் அருகில் நான் இல்லை . கடவுள் எல்லாவற்றையும் எப்போதும் ஒருசேரத் தந்ததில்லை. எது எப்போது தேவையோ அதை அவ்வப்போது வாய்க்கப் பண்ணுகிறான். இங்கே மரத்தடியில் கிடந்த இரு பேரீச்சம் பழங்களை எடுத்துச் சாப்பிட்டேன். பழங்கள் வாயில் மாவாய்க் கரைந்து தேனாய் இனிக்கின்றன. இந்த மரத்தின் பழம் இன்று நான் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது ஊழ்...

அந்தக் காலத்துல நம்ம கொற்கையப் போல கத்தாரும் முத்துக் குளித்துறையா இருந்திருக்கு, 1940ல கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் இந்த நாட்ட செழிப்பா மாத்திருச்சி. ரெம்ப நாளுக்கு முன்னால பகரின் ஷேக்குகள் இந்தப் பகுதி ஆண்டாங்களாம், பின்னால கத்தாரோட அல்தானி குடும்பம் வெள்ளைக்காரங்க தயவுல ஆட்சிய பிடிச்சிருக்காங்க. 1995ல பழமைவாதியான தகப்பனார சத்தமில்லாம தூக்கி எறிஞ்சி ஆட்சியக் கைப்பற்றுன கமது பின் காலிஃப் அல் தானி, பரவலான முன்னேற்றத்த இந்த நாட்டுக்கு கொண்டு வந்திருக்கார். புதுசா அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகுறதா சொல்லுறாங்க, எந்த அளவுக்கு ஜனநாயகம் வருமின்னு தெரியில.

இது சூடான பிரதேசம், இங்கும் மனிதர்கள் சந்தோசமாகவே வாழ்கிறார்கள். எல்லோருமே ஒரு விதத்தில் குடும்பத்திற்காக தியாகம் பண்ணுகிறவர்களாகவே இருக்கிறார்கள். எண்ணி இரண்டு வருடங்கள் கண்ணிமைப்பது போல் போய் விடும். கடனும் போய் விடுமே ஆனந்தி. என் மகன் என்னை அப்பா எனத் தேடும்போது நிச்சயமாக அவனருகே நான் இருப்பேன்.

ஆமந்துறையில் அனைவரையும் விசாரித்ததாகச் சொல். ஊருக்கு நான் கடிதம் எழுத முடியாது, காரணம் நான் வெளியே இருக்கிறேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாமென்று பார்க்கிறேன். முதலில் வெளிநாட்டு வேலைக்கு போங்க என்ற அருண் இப்போது வந்துவிடுங்கள் என்று உயிரை வாங்குகிறான். அவனுடைய இமெயில்களைத் திறந்தால் எப்போதும் 'வந்தருளும் ஸ்வாமி வந்தருளும்' என்று ஜெபிக்கிறான். எனக்கும் நிறைமாத கர்ப்பிணியான உன்னை பக்கத்திலிருந்து பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதும் உன் வயிற்றில் வளரும் நம் பிள்ளை பற்றிய கனவு. என் பிள்ளைக்குக் கண் வந்திருக்குமா, கை கால் முளைத்திருக்குமா. என்னைப் போலிருக்குமா உன்னைப் போலிருக்குமா. ஆண்மையில்லையோ என உறவே கை கொட்டிச் சிரித்ததே, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்தச் சாபம் நீக்க வரும் என் செல்லத்தை, அதன் பிறப்பை நான் அருகிருந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஊரில் எத்தனையோ வழக்குகள், எல்லாமே பொய்வழக்குகள், நான் வந்த பிறகே அத்தனையும் பைசலாகும். பொய் கேஸ்களை முடிக்க வேண்டுமென்றால் கட்டுக்கட்டாகப் பணம் வேண்டுமே... அனுப்புகிற பணத்தையெல்லாம் கடன் அடைக்கிறேன் என்கிறாள் ஆத்தா, உண்மையிலேயே அடைக்கிறாளா என்று இப்போதெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது.

இங்கு காலையில் ஐந்தரை மணிக்கு எழும்பி பல் தேய்த்து உடனே குளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் குழாய் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். காலையில் ஏழு மணிக்கே வேலைக்கும் கிளம்பியாக வேண்டும். ஒரு மலையாளி கடையில் இட்டிலியும் சாம்பாரும் கிடைக்கிறது. அங்கேயே மதியமும் இரவும் சாப்பிடுகிறேன். 

உன்னுடைய கைப்பக்குவத்தில் சாப்பிட்ட எனக்கு இந்தச் சாப்பாடு சப்பென்றிருக்கிறது. ஏழரை மணிக்கு அலுவலகம், சரியாய் பனிரண்டரை மணிக்கு மதியச் சாப்பாட்டுக்காய் கிளம்பி விடுவோம், குளிரூட்டப்பட்ட அலுவலக அறைக்குள்ளிருந்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் காருக்குள் வந்து அமர்ந்தால் அப்படியே அடுப்புக்குள் தூக்கிவைத்தது போல் இருக்கும், வியர்த்து ஊற்றும். உடம்பு தளர்ச்சியாகி விடுகிறது. வெப்பம் அதிகமென்பதால் மூன்றரைவரை ஓய்வு, ஒரு குட்டித் தூக்கம் கிடைக்கும். திரும்ப அலுவலகம் ஆறரைவரை இருக்கும், எனக்கு எப்போதும் போலவே வேலை கொஞ்சம் அதிகம். சிலவேளைகளில் ஒன்பது மணிவரைகூட இருக்க வேண்டி வருகிறது.

இதுவரைக்கும் அரசிடமிருந்த கப்பல் ஏஜென்ஸி தொழிலை இப்போது தனியாருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்கள். கஸ்டம்ஸ் கிளியரன்ஸா, சரியான பேப்பர்கள் கைவசமிருந்தால் உடனுக்குடன் முடிந்துவிடுகிறது. கத்தாரிகள் சோம்பேறிகள். ஆனாலும் துறைமுகச் செயல்பாடுகளைத் தெளிவாகவே வைத்திருக்கிறார்கள். துறைமுகப் பொறுப்புக் கழகம் பொறுப்போடு செயல்படுகிறது. மேல்மட்டத்தில் மட்டும் கத்தாரிகள் மற்றபடி எல்லா நிலைகளிலும் நம் ஊர் மலையாளிகள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் கப்பல் ஏஜென்சி கம்பெனிகள் இங்கு முளைத்தவண்ணம் இருக்கிறது. மலையாளிகள், இங்குள்ள கத்தாரிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தனியாக கம்பெனி ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுவும் அது போல ஒரு நிறுவனம். எங்களுக்குப் புதிதாய் ஒரு காண்ட்ரெக்ட் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா, ஈராக் மேல் போர் தொடுக்கப் போகிறதாம், கனடாக்காரர்களுக்கு இந்த நிலைப்பாட்டில் உடன்பாடில்லையாம். கனடா ராணுவத்தைப் பெட்டிப்படுக்கையோடு ஏற்றுமதி செய்து அமெரிக்கா ராணுவத்தைக் கத்தாரில் இறக்குமதி செய்ய வேண்டும்.

தமிழென்றால் நானும் ஈழத்துத் தம்பி ஒருவன் மட்டும்தான். புலிகள் எப்படியும் இலங்கையில் ஈழத்தை உருவாக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்வைக் கடத்துகிறான் இந்த ஈழத்துத் தம்பி. தமிழகத்தின் திராவிட அரசியல் வியாதிகள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறான், அய்யோ பாவம் போலிருக்கிறது.

அண்மையில் நண்பர் ஒருவர் அழைத்ததால் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்த அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நாலாவது மாடியிலிருக்கிறதே லிஃப்ட்டில் செல்லலாமெனப் போனால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அரபிக் குழந்தைகள் எங்கள் மீது எச்சில் துப்பி விளையாடுகிறார்கள், பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். 

ஒரு முறை இப்படித்தான் காலையில் கார் வரத் தாமதமானதால் பக்கத்திலிருந்த கட்டிடத்தின் வாசலில் அமர்ந்துவிட்டோம். கட்டிடத்தின் உள்ளிருந்து காச் மூச்சென சத்தம் வருகிறதே என எட்டிப் பார்த்தால் கருப்பாய் நெடுநெடுவென ஒரு சூடன்காரன், புரியாத மொழியில் திட்டியபடியே எங்களை அடிப்பதற்காய் ஓடி வருகிறான். 

நிலமையைப் புரிந்துகொண்ட மலையாளி நண்பர் எங்களை அந்தப் படிகளிலிருந்து எழுந்து விடச் சொன்னார். பரிதாபமாய் எழுந்து விலகி நின்றோம். கருப்பர்களும் தீண்டாமை பார்க்கிறார்கள் ஆனந்தி. அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் சூடான்காரப் பெண்களை வைத்து எங்கள் மீது வழக்கு போட்டு விடுவார்களாம். அப்படிக் குற்றம் சுமத்திவிட்டால் எங்கள் கதி அதோ கதிதானாம். ஜனத் தொகையில் பார்த்தால் இந்தியர்கள் கத்தாரில் அதிகம், ஆனாலும் அடிமை வாழ்க்கை.

அலுவலகத்தில் கார் வாங்க வற்புறுத்துகிறார்கள், லோணும் தந்து கார் அலவன்ஸும் தருவார்களாம். யாருக்கு வேண்டும் இந்தக் காரும் பவுசும். நம்ம ஊரைப் போல, இங்கு கார் ஓட்டுவதும் அத்தனை எளிதில்லை. சட்டம் எல்லாமே இங்கே தலை கீழ். வலது கைப் பக்கமே அமர்ந்து ஓட்டிப் பழகிய நமக்கு இடது கைப் பழக்கம் அத்தனை எளிதில் வந்துவிடாது. தலைகுத்தர நின்று லைசென்ஸ் எடுத்து விட்டாலும் பெண்டாட்டி, பிள்ளைகளையும், அய்யா, ஆத்தாவையுமா காரில் ஏற்றிக்கொண்டு போக முடியும். கார் வைத்திருப்பவனெல்லாம் கூப்பாடு போடுகிறான். ஃபயின் கட்டுவதற்கே சம்பளம் பத்தவில்லையாம். இந்த ஊரைப் பார்க்கும்போது நம்ம ஊர் தேரிக்காடு எவ்வளவோ மேல். கடற்கரையா, வயல்வெளியா, வனாந்திரமா, மலைப் பிரதேசமா நம்ம ஊர் சொர்க்கம் ஆனந்தி. மலையாளிகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, எப்படித்தான் இத்தனை அழகான தேசத்தை விட்டுவிட்டு வந்து இப்படி வேணா வெயிலில் கிடந்து மாய்கிறார்களோ தெரியவில்லை. வாழ்ற காலத்த வாழ்க்கைய இந்தப் பாலைவனத்துல தொலைச்சிட்டு, நோய்நொடியோட தன்னோட அந்திம காலத்துல ஊர் வந்து சேருறாங்க.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் எம் நாடேன்னு பாடத் தோணுது ஆனந்தி. படுத்தா, பாண்டி பஜாரிலும், ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும், வண்ணாரப் பேட்டையிலும், மெரினாவிலும் நடந்து திரிவது போல் கனவுகள் வருகிறது. ஆனால் இத்தனை வலியும், அவமானமும் மாதச் சம்பளத்தை முழுதாய்ப் பார்த்தவுடன் சிட்டாய்ப் பறந்துவிடுகிறது.

அங்கு வெளிநாடு போக வேண்டுமென்று பாவம் கனவுகளோடு அலைகிறார்கள், இங்கு வந்து பார்த்தால் நம்ம ஊர் நிழலின் அருமை புரியும். எங்கு பார்த்தாலும் சுட்டெரிக்கும் சூரியனும், சுடுமணலும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பழுப்பான மண். நம்ம ஊர் வேலிகளில் படர்ந்திருக்கும் கள்ளிச்செடிக்கு இங்கு சீரியல் பல்பெல்லாம் போட்டு அலங்காரம், விட்டால் பொட்டு வைத்து பூவும் வைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது. வானுயர கட்டிடங்கள் கட்டுகிறார்கள் கீழிருந்து பார்த்தால் எறும்பாய்த் தெரிகிறார்கள் மனிதர்கள். கஷ்டமான வேலைகளைப் பெரும்பாலும் தமிழர்களே செய்கிறார்கள். என் போல் கடன் சுமை அழுத்துவதால் இங்கு வந்திருப்பார்களென்று நினைக்கிறேன். எப்போதும் மனதில் இனம் புரியாத பாரம் அழுத்திக் கொண்டே இருக்கிறது. என்ன பெரிய வேலையாய் இருந்தாலும் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். அது என்னவோ கொத்தடிமையாய் மாட்டிக் கொண்ட உணர்வு. செய்தி பார்த்தேன், அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாராமே! அரசியல், ஆனாலும் இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும்.

அவ்வப்போது அய்யாவை உன்னை வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறேன். பணம் தருவார்கள், வாங்கிக்கொள். சத்தான உணவாகச் சாப்பிடு, காரணம் நீ உனக்காக மட்டும் சாப்பிடவில்லை, உன் வயிற்றிலிருக்கும் நம் குழந்தைக் காகவும் அதன் நலனுக்காகவும் சாப்பிடுகிறாய். எப்போதும் சந்தோசமாக இரு. நீ இருப்பது உன் அக்கா வீடாக இருந்தாலும் முன்பு போல் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்யாதே.

அமுதன் தாலி கட்டிய மனைவி நீ, யார் வீட்டிலும் பத்து பாத்திரம் கழுவுவதற்காக நான் உன்னை அங்கு விட்டு வரவில்லை . ஏதோ நேரம் நம்மை பிரித்திருக்கிறது. 

அன்புடன் தோகாவிலிருந்து உன் கணவன், 

அமுதன் 

25 ஜூலை 2002









நன்றி :  ஜோ டி குரூஸ், காக்கை பதிப்பகம், தமிழ்நேசன்

*

தொடர்புடைய ஒரு சுட்டி :

வெளிச்சம் – ஆழி சூல் உலகிலிருந்து…

Wednesday, September 14, 2022

மாறுசாதி (சிறுகதை) – திக்குவல்லை கமால்

மல்லிகை’ இதழில், 1972ஆம் ஆண்டு வெளியான சிறுகதை இது. திக்குவல்லை கமால் அவர்களின் ‘விடை பிழைத்த கணக்கு’ தொகுப்பிலும் உண்டு. நன்றியுடன் பகிர்கிறேன். - AB

**


மாறுசாதி – திக்குவல்லை கமால்

முன்வாசலில் எரிந்து கொண்டிருந்த குப்பி லாம்பின் வெளிச்சம் கதவுக்கிடையில் புகுந்து, அடுத்த அறை எதிர்ச் சிவரில் கோடு வரைந்தாற் போல் படிந்திருந்தது, தரையில் ஒரு பக்கமாகப் பதித்திருந்த கண்ணாடிக்குள்ளால் ஓரிரண்டு நட்சந்திரங்களும் மின்னிக்கொண்டிருந்தன.

இவை இரண்டையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ஹிதாயா. 

ஏழெட்டு வருடங்களாக நாளாந்தம் இதே நேரத்தில் விரிந்து பழகிப்போன அவளது கண் இமைகள் இன்றும் விரிந்து கொண்டதில் தவறில்லைதான். -

இந்த ஒரு மாதத்தையும் மாத்திரம் தவிர்த்து, அதற்கு முன்பெல்லாம் அவள் இந்த நேரத்தில் நிச்சயமாகக் குசினிக்குள் குந்தி அடுப்பெரித்துக்கொண்டு அல்லது கோப்பி கலக்கிக் கொண்டுதானிருப்பாள். 

அதிகாலையிலேயே பொட்டணியைச் சுமந்தபடி வெளிக்கிடும் ஜெஸில் நானாவிற்கு, அந்தக் கோப்பிக் கோப்பையில் எத்தனையோ நம்பிக்கைகளும் மன நிறைவுகளும் தான்.

ஆனால் இந்த ஒருமாத காலமாக...எல்லாம் அடிதலை மாறிப்போயிருக்கிறதே.

அவள் இன்னும் கண்களைத் திறந்தபடி புரண்டுகொண்டிருந்தாள். வெளியே காகங்கள் கத்திப் பறக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, விடிந்துவிடுமுன் தண்ணீர் எடுத்து வரக் கிளம்பும் கன்னியர்களின் கலகலப்பு அவளை ஒன்றும் செய்து விடவில்லை .

மாறாக முன்வாசலிலிருந்தெழும்பும் அந்த நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் ஒலி.......

" கஹ்.....கஹ்...... கஹ்க ஹ்''

தலையைக் கிளப்பி ஓய்ந்து விடுகிறதா என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அங்கே, அது தொடர்க் கதையாக நீண்டுகொண்டிருந்தது.

சடக் கென்றெழுந்து, நிலத்தில் உராய்ந்து இழுபட்டு வரும் பிடவையைக் கூட கவனிக்காமல் முன்வாசலுக்குப் போய் கணவனின் நெஞ்சை மேலிருந்துகீழாக இடைவிடாது தடவியபோதுதான் ஒருவாறு இருமல் ஓய்ந்தது.

அதே கைப்பட மேசையிலிருந்த 'சுடுதண்ணீர்ப் போத்தலிலிருந்து வெந்நீரில் கொஞ்சம் வாத்தெடுத்து நன்றாக பிடித்துகொண்டு தருவதற்கத்தாட்சியாக வெளிச்சம் பலபுறமும் பரவிக் கொண்டிருந்தது.

கதவைத் திறந்றகொண்டு வெளிக்கிட்டவள் பின்பக்கமாகக் கட்டிவைத்திருந்த இரண்டு ஆடுகளையும் அவிழ்ந்து விட்டுக் காலைக் காரியங்களில் ஈடுபடலானாள்.

அதிகாலை வேளையில் பனிக் குளிரில் கணவனை அதுவும் நேயாளியாக இருக்கும் நிலையில் வெளிக்கனுப்ப விரும்பாத அவள், அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து தான் வைத்திருந்தாள். 

அப்போது நேரம் ஏழு மணியைத் தாண்டியிருக்குமென்பதை குர்ஆன் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் மூலம் தெரிந்துகொண்டதும் சீக்கிரம் போய் மருந்துக் குழிகைகளை எடுத்து அவருக்கு விழுங்கச் செய்துவிட்டு முற்றத்தைப் பெருக்கத் துவங்கினாள் .

உடற்கட்டுக் கலைந்து நோயாளியாகக் கிடக்கும் ஜெஸில் நானாவை , ’பொட்டணி ஜெஸில்' என்று சொன்னால்தான் எவருக்கும் ஒரேயடியாகப் புரிந்துகொள்வார்கள்.

வசதியாக வாழும் பலர் அவர்களுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும் அவர்களுக்குப் பல்லைக் காட்டித் தலை சொறியும் பழக்கம், வாழ்க்கை வசதியற்று இப்படி நோயாளியாக அவதிப்படும் நேரத்திலும் கூட அவரிடத்திலில்லை.

அவர் கல்யாணம் செய்துகொண்ட புதிதிலெல்லாம் உதவிக்கு இன்னொருவரையும் இருத்திக்கொண்டு பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய்ப் பிடவை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நாட்பட நாட்பட இயற்கையான வாழ்க்கைச் சோதனைகளால் தாழ்த்தப்பட்டு, உள்ளூர்ப் பொட்டணி வியாபாரியாக மாறிவிட்டார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பொட்டணியைத் தலையிற் சுமந்து முழக்கோலைக் கையிலெடுத்தாரென்றால் இனி ஐந்தாறு மைல்கள் காற்தோல் தேய ”நடடாராஜா'' தான், பின்பு - மாலையில் விளக்கேற்றும் வேளையில் தான் சாப்பாட்டுச்சாமான்...காய்கறிகள் சகிதம் வீடு வந்து சேருவார்.

வாராவாரம் எப்படியோ கடைகளில் பிடலைத் தினுசுகள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார். அவளும் அப்பகுதி பெண்களின் ஓய்வு நேரக் கைப்பின்னலான 'ரேந்தை'களை வாங்கியும், சட்டைப் பிடவைகளுக்கு பூவேலைகள் செய்து கொடுத்தும் கணவனுக்கு ஒத்துழைப்பாள். 

''முதலாளி இன்ன வத:''

இக்குரலைக் கேட்டதும் சரிந்து தோளில் விழுந்திருந்த பிடவையை இழுத்துத் தலையிற் போட்டபடி கழுத்தை உயர்த்திப் பார்த்தாள். அங்கே வெற்றிலைக் காவியேறிய பற்களால் சிரித்தபடி ஒரு சிங்களவர் நின்றுகொண்டிருந்தார்.

“ஒவ் எதுவட என்ன” என்றவாறு துடைப்பக் கட்டையை மூலையில் வைத்துவிட்டு, உள்ளே போய் இரண்டாம் அறைக்கதவு இடையால் பார்த்தபோது அவர் உள்ளே வந்தமர்ந்து கணவனிடம் சுகம்விசாரிப்பதை அவதானித்தாள்.

அப்போது அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு வசதியாகப் போய் விட்டது. உடன் தேநீர் தயாரித்தவள் ஒரு கணம் தயங்கிய போது.. வந்திருப்பவருக்கு அதனைக் கொண்டுபோய்க் கொடுக்க வேறு யாரும் இல்லையே என்பதால் அவளாகவே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.

“உம்மா, ஆப்பா...உம்மா ஆப்பா'' விழித்தெழுந்து விட்டு மகள் ஓடிவந்து அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவோ முகம் கழுவவோ போகாத நிலையில் அடம் பிடித்த போது அவளுக்குப் பலத்த கோபம் வந்து முட்டியது. பாவம்; சிறு பிள்ளைகளுக்கே உரித்தான இயல்புதானே.

அன்று ஞாயிற்றுக்கிழமை; நேற்றைய நாளும் எப்படியோ கழிந்து போய்விட்டது. இன்றாவது அவளைக் கட்டிக்கொண்டுபோய் நீராடாவிட்டால் பின்பு பாடசாலை நாட்களில் அதை நினைத்துப் பார்க்கவே இயலாதல்லவா? அதே நேரத்தில் வீட்டில் சேர்ந்திருத்த அழுக்குத் துணிகளும் கூடி அவளை மேலும் உசார் படுத்தியது.

அடுத்த கணம் “ வா மகன் குளிக்கப் போக...' 'சிறுவ னையும் அழைத்தபடி துணிமணிகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தயாரானாள்.

''எனக்கேலும்மா... பௌத்த நோவு''

எங்கிருத்துதான் அவனுக்கிந்த நோய் திடீரென்று வந்ததோ. குளிக்காமலிருக்க அவன் போடும் போலிக் காரணம்தான் அது என்பது அவளுக்குந் தெரியாதா என்ன ?

“குளிக்க வந்தாத்தான் ஆப்ப தார''

இந்த மந்திரத்தை அவள் சந்தர்ப்பம் பார்த்து உச்சரித்ததுதான் தாமதம்; தன்னிச்சையாக அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

"அம்ஜத்து... அம்ஜத்து... வாளியக் கொஞ்சம் எடுக்கவா'' அடுத்த வீட்டை அண்மிக் குரல் கொடுத்தாள் ஹிதாயா.

"ஆ... நானும் குளிக்கப் போகணும். சொணக்காமக் கொணுவாங்கொ'' உள்ளேயிருந்து நிபந்தனையுடன் அனுமதி வந்தது.

இரவல் வாளியையும் சுமந்து கொண்டு நடக்கத் துவங்கினாள். பாவம், ஒரு பொண்ணாக இருந்த போதிலும், அவளுக்குத்தான் எத்தனைப் பொறுப்புகளும் வேலைகளும்.. விடிவுகாண முடியாத சிந்தனைகளும்...

இன்னும் மூன்றே மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. டாக்டரின் உத்தரவுப்படி ஜெஸில் நானாவை 'வீரலில கயரோக ஆஸ்பத்திரியில் கூட்டிக்கொண்டுபோய் சேர்க்க வேண்டும். குறைந்த கணக்கில் அதற்கு இருபத்தைத்து ரூபாவாவது கையிலிருக்கவேண்டும், 

இந்த ஒரே மாதத்திற்குள் கையில் மடியில் இருந்ததெல்லாம் விற்றுச் சுட்டு முடித்தாகிவிட்டது. யாரியமும் கேட்டுப் பெற்றுப் பழக்கப்படாத அவள் வேறெதுவுமே செய்ய முடியாத நிலையில் கடனுக்காவது கேட்டு வைப்போமென்று தான் நேற்று கண்ணாடி முதலாளியின் பெண்சாதியை நாடினாள்.

''உம்மா பகலக்கி மீன் வாங்கேம் சல்லில்ல'' என்பதுதான் அவனது பதில்.

வெட்கித்து வெட்கித்துக் கேட்டால் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கையில் வாய் திறந்த முதல் முயற்சியே இப்படிப் படுதோல்வியை அரவணைத்தபோது அதற்குப் பிறகு இன்னுமொருவரிடம் போய் வாய் திறக்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை .

''எனக்கேல உ.ம்மா... பெனத்த நோவுது' ' கிணற்ற டியை அடைந்ததும் மீண்டும் சிறுவனின் போலிச்சாட்டு.

நிறைந்திருந்த பெண்களுக்கிடையே அவளும் நுழைந்து அவசர அவசரமாக துணிகளைத் துவைப்பதிலும் குளிப்பதிளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு புறமும் மதில்கள் எழுப்பிப் பெண்களுக்கென்றே விஷேசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுதான் அந்தப் பள்ளிக் கிணறு. இடை விடாது பெண்கள் கூடிக்கொண்டிருக்கும் அங்கு , வழமை போல அன்றும் உள்ளூர்ச் சம்பவங்களின் விமர்சனங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்குக் காது கொடுக்கும் நிலையில் அவளில்லை.

அவளுக்குத்தான் எத்தனையெத்தனை பிரச்சினைகள் முக்கால் மணி நேரத்துக்குள் துணிகளைத் துவைத்து மகனைக் குளிப்பாட்டி, தானும் குளித்துப் புறப்படத் தயாரானபோதுதான் அந்த வேண்டுகோள்.

“வாளியக் கொஞ்சம் தா-... நான் குளிச்சிட்டு அனுப்பியன்''

எதிரே, காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் பள பளக்க மார்பு ரவிக்கையைக் கழற்றியபடி நின்று கொண்டி ருந்தாள் கண்ணாடியின் முதலாளியின் மனைவி. 

அவள் சிறிது யோசித்தாள். இரவல் கொடுத்தவள் உடனே கொண்டுவந்து தரும்படி சொல்லியிருக்கிறாளே,

''புரியமில்லாட்டி எடுத்துக்கொணு போடி ஒன்ட அருமச் சாமன''

“இல்ல இது ஏன்டயல்ல; அடுத்தூட்டு வாளி.'' அவள் காரணம் காட்ட முனைந்தாள்.

*போதும் போதும் சாட்டு. நீ இப்ப பெரிய மனிசி தானே, '' அப்பெண் அனாவசியமாக வார்த்தைகளைப் பொழிந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை.

”நாங்க பெருக்கேயில்ல...சிறுக்கேமில்லே...எப்போதும் ஒரு மாதிரித் தான்''

"வாயப் பொத்து நாணயக்காரி... நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு, மறு சாதிய ஊட்டுள்ளுக்குப் போட்டுக் கொண்டு கூத்தாடியவள்...... ஓண்ட ரசம் பட்டுத்தானே ஒத்தனொத்தனா வாரானியள் ......',

அங்கு கிளர்ந்து வெடித்த சிரிப்பொலி அவளை இன்னும் அதிரச் செய்துவிட்டது. குனிந்தவர்களும், நிமிர்ந்தவர்களும் தண்ணீர் அள்ளுபவர்களும் முதுகு தேய்ப்பவர்களும்...அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கி யதைப் பார்த்ததும், அவர்களெல்லோரும் ''கண்ணாடி முதலாளி' யின் மனைவியின் குரலை ஆமோதிப்பது போலிருந்தது.

அவள் வேறு எதுவும் பேச முடியாதவளாக...பேசியும் பயனில்லையே என்பதால் மகனையும் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

''மாறுசாதி ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு''

இந்தச் சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவள் செவியில் எதிரொலித்து அவளது உள்ளத்தைத் துகள் துகளாக்கிக் கொண்டிருந்தது.

இருக்கின்ற துயரங்களும் வேதனைகளும் போதாக் குறைக்கு இப்படியும் ஓர் அவமானமா?

இந்த ஏழு வருட காலமாக ஜெஸீல் நாளா அன்றை யன்றைக்குப் பணம்தான் சம்பாதித்து வந்தார் என்றுதான் அவள் நம்பியிருந்தாள் , ஆனால் அவர் பணத்தை மாத்திரமல்ல பல மனித உள்ளங்களைக்கூடச் சம்பாதித்துள்ளார் என்பதை. அவர் நோயாளியாக மாறிய இந்த ஒரே மாதத்துக்குள் அவள் நன்குணர்ந்து கொண்டாள். - ஒவ்வொரு நாளும் அவர் பழகிய பகுதிகளான ஊராமம், ரதம்பல, பிடதெலி முதலிய பகுதிகளிலிருந்து வந்து போய்க்கொண்டிருக்கும் சிங்களச் சகோதர சகோதரிகளே அதற்குச் சான்று.

சொந்தக்காரர்களென்றும் ஊரவர் என்றும் இருப்பவர் களெல்லாம் புறக்கணித்து வைத்திருக்கும் இந்நிலையில், பழக்கப் பிணைப்பால் வந்து போய்க் கொண்டிருப்பவர்களைக் கூட விட்டுவைக்காது கெட்ட கதைகளைத் தொடுக்கும் இவர்களின் விகாரத் தனத்தை யாரிடம் சொல்வது?

”உம்மா ...ஆப்ப..... உம்மா ஆப்ப'

வீட்டை அடைவதற்கும் சிறுவன் மீண்டும் கோரிக்கை விடுவதற்கும் சரியாக இருந்தது. 

முதன் முதலில் அவனுக்குக் காலைச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு , கணவனைப் பார்க்கமுன்னே ஓடிச் சென்றாள் ஹிதாயா.

அப்பொழுது தான் இருமி ஓய்ந்தாரோ என்னவோ? நெஞ்சை தடவியபடி சுருண்டு கொண்டிருந்தான் அவள் கணவன். அவரைக் கண்டதும் கிணற்றடியில் நடைபெற்ற சம்பவம் அவள் நினைவில் கீறல் போட்டது. 

’நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு... மாறுசாதிய ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு.......' 

ஹிதாயா பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டாள். சடுதியாக அவள் பார்வை கீழ்நோக்கிப் பதிந்தது. தோடம் பழங்கள் கீரைகறிகள் நிறைந்த கூடையொன்று அவள் கண்ணிற் பட்டது. அது காலையில் வந்தவர் கொண்டு வந்ததாகத்தானிருக்க வேண்டும். அவர் மாத்திரமா? ஒவ்வொரு நாளும் வரும் அத்தனை பேரும் இப்படித்தான்.

”ஹிதாயா....... எனத்தியன் பாக்கிய. அது வெள்ளன வந்த மாட்டின் மஹத்தயா கொணுவந்தது. அவரு என்னோட உசிரு மாதிரி. நான் போனா ஒரு மொழம் நேரந்தயாவது எடுக்காம அனுப்பியல்ல. நல்ல வரும்படிக்காரன். நான் வாணாண்டு செல்லச்செல்ல இதேம் தத்திட்டுப் பெய்த்தார்,'' என்று சொல்லியவாறு தலையணைக்கடியிலிருந்து அதனையெடுத்து நீட்டினார். ஆமாம் ஐம்பது ரூபாத் தாள். அவள் இதற்காகத்தானே நேற்று முயற்சித்து இனிமேல் அந்த முயற்சியே வேண்டாமென வெறுத்து, இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் கணவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல என்ன வழியென்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்,

அவனது நெஞ்சுப் பாரம் சட்டென்று இளகியது போன்ற உணர்வு.

இப்பொழுது அவளுக்குள் புது நம்பிக்கையொன்று சுடர் விடுகிறது.

*

(மல்லிகை . 1972 செப்டம்பர்.)

நன்றி : திக்குவல்லை கமால்

*

மேலும் வாசிக்க :

செருப்பு (சிறுகதை) - திக்குவல்லை கமால்

ஆயுள் தண்டனை – திக்குவல்லை கமால்


Friday, August 26, 2022

இந்தியா எனும் மாயம்

Thanks to : Karthik Velu

கரன் தாப்பர் எடுத்த பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன் . மிகவும் மெனக்கெட்டு கேள்விகளையும் தரவுகளையும் தயாரித்துக்கொண்டு வருவார் .கேள்விகள் வெற்று சீண்டலாக இல்லாமல் முரண்களை முன்வைத்து கேட்கப்படுவதாக இருக்கும் . பொருட்படுத்ததக்க கேள்விகளாக இருக்கும் . 

பேட்டி அளிப்பவர் கொஞ்சம் மழுப்பினாலும் இதைத்தான் சொல்ல வருகிறீர்கள் இல்லையா என்று எளிதில் ஒரு மூலைக்கு அவர்களை நகர்த்திப் போய்விடுவார் . PTR ஐ அவர் எடுத்த பேட்டியில் இப்படி நெருக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை . பதில்கள் அனைத்தும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருந்தன , ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பேட்டி நேரம் ஆனால் கேட்க வேண்டிய எல்லா விஷயத்தையும் கேட்டுவிட்டார் PTR உம் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் . 

அண்ணாவின் தனித்தமிழ்நாடு கோரிக்கை , இந்தி திணிப்பு ,கூட்டாட்சி ,அதிகார குவிப்பு , பாகிஸ்தா பிரச்சனை , GST , மக்களவை தொகுதிகள் மறுபங்கீடு ,மொழி அரசியல் , மாநிலங்களுக்கு இடையான ஏற்ற தாழ்வுகள் என்று எல்லா கேள்விகளுமே முக்கியமானவை.

தமிழகத்தில் என்ன நிறை பிற மாநிலங்களில் என்ன குறை என்பதையும் சுருக்கமாக சுட்டியிருக்கிறார்.

எல்லா கேள்விகளுக்கும் தன்னம்பிக்கையுடனும் பொறுப்புடனும் பதில் அளித்தார் , ஆங்காங்க இடைமறிக்க முயன்ற போதும் சொல்ல வந்த கருத்தை சொல்லியே முடித்தார் .இந்தப் பேட்டியில் அவர் பேசிய விதம் திமுக வை சார்ந்த ஒரு அமைச்சர் பேசியது போல தொனிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பாக ஒருவர் பேசியதை போலவே பேசியிருந்தார் . 

சில பதில்கள் ஆச்சரியப்படும் வகையிலான முதிர்ச்சியை கொண்டிருந்தன . சுயமரியாதையில் தொடங்கி self determination ல் முடித்த பதில் அருமை.தமிழகத்துக்கு உள்ளேயே தமிழ் மற்றும்  தமிழர்கள் குறித்து எள்ளலான சொல்லாடல்கள் சரளமாக புழங்கும் சூழலில் இது போன்ற கண்ணியமான பேட்டி ஒரு தேசிய அளவிலான ஊடகத்தில் வந்திருப்பது தமிழகத்தின் நிலைப்பாட்டை நேர்மையாகவும் ,நேர்மறையாகவும் காட்டியிருக்கிறது. 

ஒரு தேர்ந்த பேட்டியாளர் எப்படி பேட்டி அளிப்பவரிடம் இருந்து தரமான பதில்களை பெறமுடியும் என்பதற்கு கரன் தாப்பர் நல்ல எடுத்துக்காட்டு. இந்த பேட்டியின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுத்தாலும் நன்றாக இருக்கும் .இன்னும்  பல முக்கிய கேள்விகளை முன்வைக்கலாம் . இந்த பேட்டி இந்திய அளவில் பலரை சென்றடையும் என்றாலும் , அதைவிடவும்  தமிழகத்தில் இது முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய பேட்டி .

India Today is a Miracle…But That Miracle is Under Threat—Tamil Nadu Finance Minister P Thiaga Rajan


Tuesday, June 28, 2022

கேலக்ஸி புக்ஸ்


வணக்கம்,


கிண்டில் முதல் சோசியல்மீடியா வரை டிஜிட்டல் எழுத்துக்கள் உள்ளங்கைக்கே வந்து வாசிப்பிற்குத் தீனி போட்டாலும் பொட்டலமிட்ட காகிதத்தை வீசியெறியும் முன்னால்  கிழிந்த வார்த்தையும் சேர்த்து ஊகித்துப் படித்து முடிக்கும் ஆர்வம்  இன்னும் எத்தனை காலம் மாறினாலும் மாறாதது அல்லவா?  அச்சடிக்கப்பட்ட எழுத்தின் மீதான நேசம் பன்னெடுங்காலமாக மனித வாழ்வியலுடன் ஒன்றிப்போயிருக்கிறது. 

இன்றைய பரபரப்பான சூழலில்  புத்தக வாசிப்பு குறைந்து போகக் காரணம் நேரமின்மை மட்டுமே அல்ல, புத்தகங்களை  தேடி அலைந்து வாங்கி வரக் கூடிய நேரத்தை நம்மால் ஒதுக்க இயலாததும்தான். 

அந்த அலைச்சலை உணர்ந்தே  புத்தகக் காதலர்களுக்கும் புத்தகங்களுக்குமான நேரடித் தொடர்பை உண்டாக்கும் முயற்சியை இணையதளம் வழியாக  செயல்படுத்தியிருக்கிறோம்.   

இதொன்றும்  புதியவகை முயற்சியல்லதான். ஆனால் நிச்சயம் தனித்துவமான பயணமாக எங்களுக்கும் உங்களுக்கும் அமையப் போவது உறுதி. 

லாபம் எங்களின் முதன்மையான நோக்கமல்ல என்பதால் நீங்கள் எதிர்பார்த்திராத மிக மிகக் குறைந்த அஞ்சல் செலவு. 
தள்ளுபடி விலையில் புத்தகங்களை கிடைக்கச் செய்கிறோம். 

தினம் தினம் புதுப்புது சலுகைகள். 
தினந்தோறும் புதுப்புது புத்தக அறிமுகங்கள் … 
புதுப்புது எழுத்தாளர்களின் அறிமுகங்கள்... 
சிறந்த புத்தகமா வாங்க ஏற்ற தலைப்பா என்பதை முன்பேவாசித்து முடித்தவர்களின் அனுபவங்கள் வாயிலாக REVIEWS..

படிக்க விரும்பியும் கிடைக்காத புத்தகங்களை உங்களுக்காகத் தேடிப் பெற்றுத் தர 'BOOK ON DEMAND' இந்தப் பகுதியில் உங்களுக்குத் தேவையான எந்தப் புத்தகமானாலும், எந்த மொழியானாலும் சரி நீங்கள் பதிவு செய்யலாம்… அதை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்க எல்லா முயற்சிகளும் செய்வோம்.

வாசிப்பாளர்-எழுத்தாளர்-பதிப்பாளர்களை இணைக்கும் பாலமாக கேலக்ஸி இணையதளம் செயல்படும். 

இந்த பயணத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறேன். 

மிக்க நன்றி.
நட்புடன் 
பாலாஜி பாஸ்கரன்


இணையதளம் : https://galaxybs.com/
அலைபேசி : +91 99944 34432 ( இந்தியா) , +971 50 434 5083 ( அமீரகம்) 
பேஸ்புக் குழுமம் : https://www.facebook.com/groups/galaxybooks
வாட்சப் குழுமம் : https://chat.whatsapp.com/EZJ73qHr4LOLnzYhgz0acJ

Tuesday, June 14, 2022

தோழர் ஷாஜஹான் உரை

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்; புத்தக அறிமுக விழாவில் பேசியது. 

ஷாஜஹானின் ’காட்டாறு’ சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருக்கிறேன். சென்ஷியிடமும் சொல்லியிருக்கிறேன்., கிடைத்ததும், இலக்கியச் சிந்தனை அமைப்பில் பரிசுபெற்ற அவருடைய சிறுகதையைப் பகிர்வேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை சிரியுங்கள்! 

நன்றி : ஸ்ருதி டிவி 

*

Tuesday, May 31, 2022

உவைஸுல் கர்னீ

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதிய ’இஹ்யாவு உலூமித்தீன்’ நூலிலிருந்து ஒரு பகுதி  - மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்களின் விரிவுரையில் (நூல் : இம்மையும் மறுமையும்).

உவைஸுல் கர்னீயைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் ஓர் இறை பக்தர்; சிறந்த அறிவாளி. வீட்டிலுள்ளவர்கள் அவரைப் பைத்தியக்காரர் என்றார்கள். வீட்டு வாசலில் ஒரு சிறு அறை நிருமாணித்திருந்தார்கள். அவர் அங்கேயே குடியிருந்தார்கள். வருடக் கணக்கில் அவர் முகத்தை மற்றவர்கள் பார்க்க முடியாத நிலை பரவிற்று. அவர் மிகச் சாதாரண உணவை உட்கொண்டார். கேட்பாரற்றுக் கிடக்கும் கந்தல் துணிகளைச் சேர்த்து யூப்ரடீஸ் நதியில் அலசிவிட்டு அணிந்து கொண்டார். சிறுவர்கள் அவரைக் கல்லால் அடித்தார்கள். அவர்களுக்கு அவர் கோலம் 'தமாஷா'ய் இருந்திருக்க வேண்டும்.


அவரைப்பற்றிதான் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புக் கொடுத்தார்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். ''யமன் தேசத்திலிருந்து இறைவனின் மூச்சு வருகிறது'' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சிலேடையாகக் கூறினார்கள். இது உவைஸுல் கர்னீயைப் பற்றிய முன்னறிவிப்பு என்பது அநேகரின் கருத்து. உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஒன்று இதற்கு ஆதாரமாய் அமைந்திருக்கிறது.


ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர்கள் முஸ்லிம்களை எல்லாம் ஒன்று திரட்டினார்கள். “உங்களில் இரக் தேசத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்கள் எழுந்து நிற்கட்டும்!''


கூட்டத்தின் நடுவிலிருந்து சிலர் எழுந்து நின்றனர். 


"கூபா வாசிகளைத் தவிர்த்து மற்றவர்கள் உட்காருங்கள்.” 


சிலர் உட்கார்ந்தனர். 


“முராத் வகுப்பாரைத் தவிர்த்து மற்றவர்கள் உட்காருங்கள்!" 

இன்னும் சிலர் உட்கார்ந்தனர். 


''கர்னீகளைத் தவிர மற்றவர்கள் உட்காருங்கள்!''


இன்னும் சிலர் அமர்ந்தனர். இப்போது அந்தப் பெருந்திரளுக்கு மத்தியில் ஒரே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார்.


''நீர் கர்னீயா? கர்ன் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவரா நீர்?” 


"ஆம்!” என்றார் நின்று கொண்டிருந்தவர்.


''உவைஸ் பின் ஆமிர் கர்னீயை உமக்குத் தெரியுமா?'' - இது கலீபாவின் கேள்வி.


''அமீருல் முஃமினின்! அவனைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அவன் ஒரு முட்டாள்; பித்தன். எங்கள் குடும்பத்தில் அவனைப் போன்ற அறிவிலி எவருமில்லை.


உமரின் கண்கள் கண்ணீரால் நனைந்தன. ''போதும் நிறுத்தும்... நீர் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டீர். ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி என்ன முன்னறிவிப்புக் கொடுத்திருக்கிறார்கள், தெரியுமா? தம் முடைய அன்பிற் குரியவர் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.


கூட்டத்திலிருந்து ஒருவர் துள்ளி எழுந்தார். ஹரம் பின் ஹய்யான் என்ற பெயருடைய அவர் உடனே கூபாவை நோக்கிப் புறப்பட்டார். அவர் மனத்தில் எப்படியாவது

உவைஸைச் சந்தித்துவிட வேண்டும் என்ற ஓர் ஆசை துளிர்விட்டு எறிந்தது.


கலகலவென்ற சப்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது புராத் நதி (யூப்ரடிஸ்). அதன் கரையில் உட்கார்ந்து 'உலூ' செய்து கொண்டிருந்தது ஓர் ஆண் உருவம். அடர்த்தியான தாடி, வழுக்கச் சிரைத்த சிரம். அனுதாபம் தேடும் முகம்-இந்த வர்ணனைகளுடன் காணப்பட்ட அந்த உருவம் தன் வேலையில் ஈடுபட்டிருந்தது. கண்கள் குழி விழந்திருந்தன. ஆனால், அவற்றில்தான் எத்துணைப் பிரகாசம்!


"அஸ்ஸலாமு அலைக்கும்!" என்றார் ஹரம்.


அந்த உருவம் வெடுக்கென்று திரும்பிற்று. ''வஅலைக்கு முஸ்ஸலாம்...'' ஒளி நிறைந்த அந்தக் கண்கள் ஹரமை எடை போட்டன.


ஹரம் நிதானித்துக்கொண்டு, கை குலுக்கும் எண்ணத்துடன் கையை நீட்டினார். பயனில்லை. உவைஸ் கைகொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர் அணிந்திருந்த உடை பார்ப்போர் மனத்தில் இரக்க உணர்ச்சியை உருவாக்கிற்று.


''உவைஸ்! நலம்தானே?” என்றார் ஹரம்.


''ஆம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், ஹரம்?'' என்றார் உவைஸ்.


ஹரம் திடுக்கிட்டார். ஏனென்றால் உவைஸுக்கு ஹரமை அறவே தெரியாது. இதற்கு முன் ஒருவரையொருவர் சந்தித்ததும் கிடையாது. இப்படியிருக்கும்போது அவர் பெயர் எப்படி தெரிந்தது உவைஸுக்கு.


"ஒரு சந்தேகம்! என்றார் ஹரம், "என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என் பெயரைச் சொல்லிக் கொடுத்தவர் யார்?''


உவைஸ் புன்னகை புரிந்தார்.


ஹரம் மீண்டும் கேட்டார். ''இப்போது தான் முதல் தடவையாக நாமிருவரும் சந்திக்கிறோம். என் பெயர் எப்படித் தெரிந்தது உங்களுக்கு?''


''இறைவன் அறிவித்தான்! நமக்கிடையில் நேரடிச் சந்திப்பு இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரை யொருவர் மானசீகமாகச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சந்திப்பு, உரையாடல் எல்லாம் மானசீகமாகவே நடைபெறுகின்றன.


இருவரும் வெகு நேரம் உரையாடினார்கள். கடைசியில் உவைஸ் கூறினார் : ''ஹரம்! இதுதான் நமக்கிடையில் கடைசிச் சந்திப்பு. இனிமேல் என்னைத் தேடிக்கொண்டு வராதீர்கள். இந்த மதிப்பும் பெருமையும் எனக்குப் பிடிக்காது... எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நான் உங்களுக் காகப் பிரார்த்தனை செய்கிறேன்...''


ஹரம் கூபாவை விட்டுப் புறப்பட்டார். சில சமயம் அவர் மனத்தில் உவைஸின் முகம் தோன்றுவதுண்டு. அப்போ தெல்லாம் அந்தக் கடைசிப் பேச்சை நினைத்துக்கொண்டு பேசாமலிருந்து விடுவார்.


''ஒரு நாள் அபரிமிதமான அன்பினால் உவைஸைப் பற்றிப் பலரிடம் விசாரித்தேன். அவரைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை !'' என்று வேதனையோடு கூறுகிறார் ஹரம்!


(பக் : 86-89)

*

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்



Saturday, April 23, 2022

இசை : ஆண் மோகினி !

நாதஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களின் அழகைப் பார்த்து ‘ஆண் மோகினி’ என்று அழைப்பாராம் செம்மங்குடி! வாசிப்பைக் கேட்டும் சொல்லியிருப்பார். மயங்கிவிட்டேன். தேடித்தேடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

Thiruvengadu Dr .T.P.Subramania Pillai-Pallavi_Mohanam_Ragamalika

Thanks to : Guruvayurappa Dhasan & Yuvan

*

ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு பதிவு :

திருவெண்காட்டாரும் நானும் :

- நாதஸ்வர ரசிகமணி குருவாயூரப்பதாசன் Dr. B.சுந்தரராமன், M.A, BEd, M.Phil ,PhD

1969ல் நாதஸ்வர நவராத்திரி இசை விழாவை பிரதி வருடம் பத்து நாட்கள் நான் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார்நேரியில் தொடக்கிய பொழுது திருவீழிமிழலை, செம்போன்னார்கொவில், இஞ்சிக்குடி ,திருப்பாம்புரம் திருமெய்ஞானம், ஏகேசி, போன்ற பிரபல மேளங்கள் வருகை தந்தாலும் திருவெண்காட்டார் வருகை தராத குறை மிக இருந்தது .இதைப்பற்றி அவரிடம் முதல் தவிலாக பன்னெடும்காலம் பணி புரிந்தும் அவரது ஒலிப்பதிவு ரிகார்டுகளில் தனிதவில் வாசித்தும் இருந்த பிரசித்தி பெற்ற தவில் கலைஞர் கும்பகோணம் அமரர் திரு கே. ஏ.தங்கவேல் பிள்ளை அவர்களிடம் கூறியதும் அவர் என்னை திருவெண்காட்டிற்கு அழைத்து சென்று டாக்டர் திருவெண்காடு டிபி சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அது முதல் டி பி எஸ் அவர்களின் இனிய குடும்பத்தில் அவரது மூன்று மகன்களுடன் நானும் நான்காவது மகன் ஆனேன். இனி இக்கட்டுரையில் திருவெண்காடு திரு டி பி சுப்பிரமணிய பிள்ளை அவர்களை “டி பி எஸ்” என்றே குறிப்பிடுகிறேன்.

டி பி எஸ் அவர்களை அவரது தெய்வத்தாய் கருவில் சுமந்து இருந்த பொழுது திருவெண்காட்டில் அகோர மூர்த்தி திரு வீதி உலா வந்த சமயம் சிவாசாரியார் ஒருவருக்கு தெய்வ சாந்நித்யம் ஏற்பட்டு பின் வருமாறு அருள் வாக்குக் கூறினார் “உலகம் போற்றும் புகழ் மிக்க இசை மேதை ஒருவன் இந்த இல்லத்தில் பிறக்க போகிறான் ! அவனுக்கும் பிறகு இவ்வூர் அவன் பெயரினாலேய இயங்கும் “ அது அப்படியே உண்மையானது

சிறுவயதிலேயே தம் தகப்பனார் திரு பிரமநாத பிள்ளை அவர்களை டி பி எஸ் அவர்கள் இழந்ததால் இவரது தாய் மாமன் இவரை தம் தோளிலேயே நாங்கூரில் இருந்து சிதம்பரம் வரை (அந்நாட்களில் பஸ் வசதி இல்லாததால்) அடிக்கடி சுமந்து சென்று சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை அவர்களிடம் நாதஸ்வரம் பயிற்றுவித்தார்.

மிக குறுகிய காலத்திலேயே நாதஸ்வரத்தின் முடி சூடா மன்னன் ஆகி நாதஸ்வர ராஜா’ புன்னாக நாத மணி மகுடி மன்னன் கலா சிகாமணி கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப்பெற்றார் .இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் இவர் புகழ் பரவியது . உலகத்தின் வரைபடத்தில் இவர் கால்தடம் பதிக்காத நாடுகளே இல்லை எனலாம் அந்நாளில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி திரு, டி .என்.ராஜ ரத்னம் பிள்ளை அவர்கள் தம் இரு சகோதரிகளையும் ஒரே நாளில் இவருக்கு மணம் முடித்து வைத்தார் .திருவெண்காட்டில் நடந்த ஊர்வலத்தின் போது ராஜ ரத்னம் அவர்கள் நாதஸ்வரம் இசைப்பதாக இருந்தது.சில சூழ்நிலைகளால் அவர் கலந்து கொள்ள முடியாமல் போகவே வந்திருந்த மாபெரும் ஜனத்திரள் டி பி எஸ் அவர்களே நாதஸ்வரம் இசைக்க வேண்டும் என்று ஒரு மாபெரும் போராட்டமே நடத்தியது .உடனே ஊர்வலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் வேடம் இட்டு நடுவில் உட்கார வைத்து இரு புறமும் தம் இரு மனைவியரை அமர வைத்து தம் திருமண ஊர்வலத்துக்கு தாமே நான்கு திரு வீதிகளிலும் டி.பி.எஸ் நாதஸ்வரம் வாசித்தார் .( இந்த சம்பவம் அடியேனால் எழுதப்பட்டு இதயம் பேசுகிறது இதழில் 1976ல் வெளி வந்துள்ளது .)

பழனி, திருவையாறு இசைக்கல்லூரிகளுக்கு டிபி எஸ் முதல்வராக இருந்த பொழுது அவருடன் சென்று வருவேன்.எம் ஜி ஆர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன் கலைஞர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன்.கட்சிகட்கு அப்பாற்பட்டு எல்லாத் தலைவர்களும் டி பி எஸ் அவர்களுடன் ஒன்று கலந்து அவருக்கு உரிய மரியாதை அளித்து மனித நேயத்துடன் பழகுவார்கள்.

தனிப்பிறவி படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் முருகன் வேடத்தில் வருவது டி பி எஸ் அவர்களின் காத்தவராயன் படித்தில் அவர் தோன்றிய முருக வேட ஸ்டில் ஒன்றைப்பார்த்த பிறகே ஆகும். இவரைப்போன்ற சிகை அலங்காரத்தையே எம் ஜி ஆர் அவர்கள் தம் முன்னாள் படங்களில் மேற்கொண்டார் .இவரிடம் இருந்த அபரிமிதமான நட்பின் அடிப்படையிலேயே தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கியதும் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இவருக்கு அளித்து எம் ஜி ஆர் மகிழ்ந்தார்

மக்களின் ஏகோபித்த ஆதரவு டிபி எஸ் அவர்களிடம் இருந்தது .கல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட விழா நிறைவின் போது மேலிருந்து மேடை முழுவதும் ரோஜா மலர்களை கூடை கூடையாக கொட்ட ஏற்பாடு செய்து இருந்தார்களாம் .வட இந்திய திரைப்பட இசை அமைப்பாளர் சைகால் அவர்களின் பாடல் ஒன்றை இவர் வாசித்ததற்கு வெகுமதி அந்த கௌரவம் தரப்பட்டது .இதே பாடல் பிறகு நௌஷாத் அவர்களால் சோல்ஜர் என்ற படத்தில் கையாளப்பட்டது ,

ஆல் இந்தியா ரேடியோ என்று நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு சிவ ரஞ்சனி ராகத்தில் ஒரு தொடக்க இசை இசைக்கப்படுமே அது டி.பி.எஸ் அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானது . இவர் நாதஸ்வரத்தில் வாசித்ததை அடியொற்றி வாத்திய விருந்தா குழுவினரால் ஒப்புமை ஆக்கம் செய்யப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதன் முதல் ஆல் இந்தியா ரேடியோவில் முதன் முதல் நிகழ்ச்சியாக சுதந்திரப்படல்கள் நாதஸ்வரத்தில் வாசித்து ரிகார்ட் ஏற்படுத்தியவர் இவரே எனலாம்.

ஒருமுறை தமிழிசை சங்கத்தில் இவர் நாதஸ்வரம் வாசித்த போது ம்யூசிக் அகாடேமிக்கு கூடிய கூட்டத்துடன் சிலர் ஒப்பிட்டு பேசிஎதில் வருந்திய கலைஞர் அவர்கள் “காட்டில் காய்ந்த நிலா” என்று இதனை ஒப்பிட்டுப்பேசி அவர்கட்கு பதிலடி கொடுத்தார்.வயலின் மிருதங்கத்துடன் தம்பூரா ஸ்ருதியுடன் நாதஸ்வர கச்சேரிகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர் டி பி எஸ் அவர்களே

மத்யம ஸ்ருதியில் நாதஸ்வரம் இசைக்கும் மாண்பும் இவருக்கே உரியது .மோகனம் பிலஹரி போன்ற ராகங்களை வாசிக்கும் போது அடிக்கடி தைவதத்தை தொட்டு ஒரு ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தி வருவார். ஷண்முகப்ரியா போன்ற பிரதி மத்தியம ராகங்களில் அடிக்கடி மத்தியமத்தில் நிலைத்து நிற்பதும் டி பி எஸ் அவர்கட்கே உரிய தனித்துவமானது எனலாம். துரித கால ஸ்வரங்களைத் தமக்கே உரிய பாங்கில் மிக வேகமாக அதிரடியாக வாசிப்பதும் இவருக்கே உரிய கை வந்த கலை எனலாம் ! .

எந்த வித்துவான்களையும் குறைவாகப்பேசவேமாட்டார். வாய்ப்பாட்டு சங்கீத வித்துவான்களுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர்.

ஒரு குறிப்பிட்ட தினம் இரவு கச்சேரி என்றால் பிற்பகலில் ஓய்வு எடுக்கும் போது ஆக்கூர் மணி மற்றும் மலைக்கோட்டைபஞ்சாமி போன்ற உடன் வாசிப்பவரை விட்டு மெல்லிய குரலில் சில உருப்படிகளைக்காலடியில் அமர்ந்து பாட சொல்வார். அவரில் சிலவற்றை தேர்ந்து எடுத்து இரவு கச்சேரியை சோபிக்க செய்வார். அவருக்கு வாசிக்கும் தவில் வித்துவான்கள் அவரது கற்பனைக்கு இடைஞ்சல் செய்யாத வித்துவான்களாக இருக்க வேண்டும் .தற்போது உள்ளது போல நாதஸ்வர வாசிப்பின் இடையில் தன்னிச்சையாக தவுலை குறுக்கே புகுந்து வாசிப்பது,போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் இறங்க அவரிடம் துணிந்ததாக சரித்திரமே கிடையாது.அந்நாட்களில் நாதஸ்வரத்துக்கு கட்டுப்பட்டு தவில் இயங்கி வந்தது.

“சிசு அறியும் பசு அறியும் பாம்பறியும் இசையின் பெருமையை” . அவ்விதம் இவர் மகுடி இசைத்தால் இவர் வீதி உலாவில் மகுடி வாசித்தால் அந்த மாபெரும் கூட்டத்தில் எங்கிருந்தோ பாம்பு ஒன்று வந்து புகுந்து கொள்ளும் அவ்விதம் பாம்பு தட்டுப்படாமல் இருந்தது கிடையவே கிடையாது

திருவையாறு தியாக பிரம்ம ஆராதனையின் செயலராக பல காலம் விருப்பு வெறுப்பு இன்றி சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இறுதி நிகழ்ச்சி இவருடையது தான் பெரும்பாலும் வயலின் மிருதங்கத்துடன் அமையும் .இதைகண்டும் கேட்டும் களிப்பதற்கு என்றே ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் வந்து இறங்கும்.

தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி செயல் பட்ட போது(1975-1976) கவர்னரின் அட்வைசரி கமிட்டி உறுப்பினராக பணியாற்றினார் .தஞ்சையில் இருந்து முதன் முதல் சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட போது இந்த அடிப்படையில் இவருக்கு அழைப்பிதழ் வந்தது நானும் உடன் சென்று இருக்கிறேன்.

கண்ணன் குசேலர் வீட்டுக்கும் சென்று வந்ததைபோலத் தம் ரசிகர் எவ்வளவு எளிமையானவராக இருந்தாலும் நட்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களது சுய மரியாதை குறையாத வகையில் அவர்களே அறியாத வகையில் அவர்கட்கு மறைமுகமாக சில உதவிகள் செய்து வருவார். ஜாதகத்தில் இவருக்கு கஜ கேசரி யோகம் , தர்ம கர்மாதிபதி யோகம் போன்றவை உண்டு எனவே தான் இவருக்குப்பிறகும் இவர் பெருமை பேசப்படுகிறது! மேலும் இசை உள்ள அளவும் இசை ரசிகர் இப்பூவுலகில் உள்ள அளவும் திருவெண்காட்டார் அவர்கள் பெருமை பேசப்படும் !

Tuesday, April 12, 2022

நானும் என் எழுத்தும் - அசோகமித்திரன்

முன்குறிப்பு : 2001ஆம் ஆண்டு ராஜராஜன் பதிப்பகம்  வெளியிட்ட ’அசோகமித்திரன் கட்டுரைகள்’ எனும் நூலிலிருந்து இந்தப் பகுதியைப் பகிர்கிறேன். இது சுருக்கமான வடிவம் போலிருக்கிறது. ‘நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பிலேயே அசோகமித்திரனும் பிற தமிழ் எழுத்தாளர்களும் எழுதிய விரிவான உரை,  தமிழிணையம் மின்னூலகத்தில் 153 கிலோ எடையுடன் கிடைக்கிறது. (பலமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து பதிவிறக்கலாம்.) க.நா.சு , தி. ஜானகிராமன், வில்லியம் ஃபாக்னர், ஜான் அன்வி என்று பல ஆசிரியர்களைப் பற்றியும் அசோகமித்திரன் அவர்கள் எழுதி  இருந்தாலும் இந்தப் பகுதியை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அந்த ரப்பர் ஸ்டாம்ப் விசயம் :-) எனக்குத் தேவை கொஞ்சம் புன்னகை. அவ்வளவுதான். நன்றி. - AB. 

*


நானும் என் எழுத்தும் - அசோகமித்திரன்

இது ஆசிரியர் அழைப்பின் மீது எழுதப்படும் பகுதி. பொதுவாகப் பிரபலஸ்தர்களுக்குப் பொருந்திப் போகும் பகுதி. பிரபலமாவதும் தன்னைப் பற்றி விவரித்துக் கொள்வதில் தேர்ச்சியடைவதும் இணைந்து செல்பவை. மூன்று முறை முழுக்கட்டுரை எழுதித் தூக்கிப் போட்டுவிட்டு நான்காவதாக இதை எழுதுகிறேன்.

சுமார் இருபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். அச்சில் பெயர் வந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போகிறது. அதற்கும் முன்னால் நான் எழுதிய ஒரு, ஒரு மணி நேரரேடியோ நாடகத்திற்கு, நமது அகில இந்திய ரேடியோக்காரர்கள் பரிசு கொடுத்தார்கள். சுமார் நான்கைந்து நாட்கள் உட்கார்ந்து எழுதி போட்டிக்கு அனுப்பித்த அந்த நாடகத்தை, பரிசு முடிவு அறிவிக்கப்பட்ட பின் ஒரு முறை வாசித்துப் பார்த்தேன். உடனே என் கைப்பிரதி, நாடகத்திற்காக நான் எழுதியிருந்த குறிப்புகள் எல்லாவற்றையும் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தேன். அந்த நாடகத்தை இன்று ஏதாவது போட்டிக்கு மறுபடி அனுப்பினால் அவசியம் பரிசு பெறும்.

என் கதைகளைப் பொறுத்த மட்டில் அச்சுப்படுத்தும் முடிவுகள் அவ்வளவு சீக்கிரம் எடுக்கப்படவில்லை . ஒவ்வொரு கதையும் சாவகாசமாகப் பத்திரிகைக் காரியாலயங்களுக்குச் சென்று விட்டு வரும். அந்நாளில் அநேகமாக எல்லாப் பத்திரிகைக்காரர்களும் அவர்களுடைய முடிவை, அதாவது பிரசுரிக்க இயலாது என்ற முடிவை, ஒரு ரப்பர் ஸ்டாம்பு கொண்டு கையெழுத்துப் பிரதி மீது முத்திரையடித்துத் திருப்பியனுப்புவார்கள். என்னுடைய கையெழுத்துப் பிரதிகளின் முதல் பக்கத்தில் பல கட்டங்கள் வரைந்து வைத்திருப்பேன். அவற்றில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கான ரப்பர் - ஸ்டாம்பின் சுற்று வடிவத்தை வரைந்து இந்த இடம் இந்தப் பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் அந்த பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடவும் செய்திருப்பேன். அப்படியிருந்தும் பத்திரிகைக்காரர்கள் கண்ட கண்ட இடங்களில் முத்திரையடித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். ஒரே ஒரு முறை மட்டும் குமுதம் பத்திரிகை ஒழுங்காக நான் வரைந்திருந்த எல்லைக்குள் முத்திரையடித்துத் திருப்பியனுப்பியது.

இந்தக் கதைகள் பல என்னிடம் தங்கிப் போயின. இந்த ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் வெளியான 'நம்பிக்கை' 1961 ஆம் ஆண்டில் எழுதிய கதை. ஒரு 'தீபம்' ஆண்டு மலரில் வெளியான 'அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்' 1956 இல் எழுதப்பட்டது. நான் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளும் பல என் கைவசம் இருக்கின்றன. சமீபத்தில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி வெளியிட்ட என் கதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இப்போது அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த நடுவர் ஒருவர் எழுதியிருந்தார் : 'புதுமையான படைப்பு......'

இதனால் இப்போது வெளியாவதெல்லாமே என்னுடைய பழங்கதைகள் தான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஆண்டுக்கு மூன்று புதுக்கதைகள் எழுதுகிறேன். உண்மையில் ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கதைகளுக்கு மேல் எழுத எனக்கு முடியவில்லை . இந்த 1970 இல் ஐந்தாறு புதுக்கதைகள் 'போட்டோ ' (தீபம் - ஏப்ரல் 1970) 'கல்யாணம் முடிந்தவுடன்' (தினமணி கதிர் - செப்டம்பர் 1970) 'குதுகலம்' (கசடதபற - நவம்பர் 1970).

என்னை முதன் முதலில் எழுதத் தூண்டிய எழுத்துக்கள் கல்கியுடையதும் சார்லஸ் டிக்கன்சுடையதும் என்று கூறிக் கொள்ள வேண்டும். இருவருக்கும் இலக்கிய உலகில் அவ்வளவு அந்தஸ்து இல்லை. டிக்கன்ஸ் எழுத்தில் மேற் பூச்சான எளிமை. கல்கி எளிதாகவே எழுதினார். தெளிவு, சீரான ஓட்டம், உருவ அமைதி - இவ்வம்சங்களுக்காக க.நா.சு.வின் ‘வாழ்ந்தவர் கெட்டால் ' நாவலைக்கண்டு மிகவும் வியந்திருக்கிறேன்.

நூல் வடிவத்தில் என்னுடையது ஒரு புத்தகம் ("கரைந்த நிழல்கள்'') வந்திருக்கிறது. ஒரு நண்பர் (இவர் பெயரை வெளியிட எனக்கு அனுமதியில்லை) எடுத்துக் கொள்ளும் முயற்சியால் என் கதைகள் கொண்ட தொகுப்பு வெளிவரவிருக்கிறது. ஜனவரி 1971க்குள் நூறு வாசகர்கள் இப்புத்தகம் வாங்க முன் வந்து ரூ.5/- அசோகமித்திரன், தாமோதர ரெட்டித் தெரு, தியாகராய நகர், சென்னை -17 விலாசத்திற்கு அனுப்புவார்களேயானால், மார்ச் 1971 க்குள் புத்தகப் பிரதிகளைத் தபால் செலவு இலவசமாக அனுப்ப அவர் எண்ணியிருக்கிறார். புத்தகம் சுமார் 200-250 பக்கங்கள் கொண்டதாயிருக்கும். பணம் அனுப்புபவர்களின் பணம் உத்திரவாதம்.

வேறு இரு தொகுப்பு நூல்களில் என் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று வாசகர் வட்டத்தின் ‘அறுசுவை'; இன்னொன்று 'நகுலன்' வெளியிட்ட 'குருக்ஷேத்திரம்', 'அறுசுவை' நல்ல தொகுப்பு. சம்பிரதாய கோட்டுக்குள் அடங்கியிருக்கும் வெளியீடாயினும், 'குருக்ஷேத்திரம்' வெளி வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நூறு பிரதிகள்தான் விற்றிருக்கின்றன. இந்த நூல் தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உண்மையாக, அழகாக, அறிவுப்பூர்வமாக, பல படைப்பிலக்கியத் துறைகள் மூலமாகப் பிரதிபலிக்கிறது.

உத்தி மட்டுமே இலக்கியமாகி விடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச் செய்யாத உத்திதான் மிகச் சிறந்ததாக நினைக்கிறேன். சொல்ல வேண்டிய பொருள், மனிதனுக்கு வெளியே இருப்பது. இதனால் ஒரு பொருளைப் பற்றி இருவர், அல்லது பலர், எழுதக்கூடும். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு பொருளைக் காரணமாகக் கொண்டு, அவனுக்கென்ற தனிப்பட்ட வகையில் மனவெழுச்சி அல்லது நெகிழ்ச்சியடைகிறான். இதன் தீவிரம்தான் எழுத்துக்குத் தரமளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆதலால், நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதி விடுவார்களோ என்ற பயம் இல்லை.

மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்து கொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்று தான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக் கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால், இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான், எழுத்து உண்மையானது என்று நான் நினைப்பேன்.


என் கதைகளில் அநேகமாக எல்லாமே எனக்குப் பிடித்தவை. 'மறுபடியும்', 'வாழ்விலே ஒரே முறை', 'மஞ்சள் கயிறு' என்ற கதைகள் மிகவும் பிடித்தமானவை. எப்போதோ நிகழப் போவதைப் பற்றி இப்போது என்ன என்று சிலர் அல்லது பலர் கேட்பார்கள். ஆனால், சில நம்பிக்கைளில்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன.

(1971)

Thursday, March 3, 2022

இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? - கே. சச்சிதானந்தன் கவிதை

கவிதை : கே. சச்சிதானந்தன்

(தமிழில் இரவிக்குமார் எம்.பி)

"அதிர்ஷ்டம் இல்லாதவர்களைக் கொல்வதற்காக தகுதி இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்டு நன்றி இல்லாதவர்களின் நலனுக்காக விருப்பமில்லாமல் இறந்து போனவர்கள் நாங்கள்" - வியட்நாம் யுத்தத்தில் இறந்துபோன அமெரிக்க வீரர் ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் எனது கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது எதிரியின் ரத்தம் என்கிறது நாடு அது மனிதனின் ரத்தம் என்கிறேன் நான் அவன் வீழ்ந்தது இப்போதும் எனது பார்வையை விரட்டிக் கொண்டே இருக்கிறது நான் அவனைத் தழுவிக் கொள்ள விரும்பினேன் அவனது குடும்பத்தைப் பற்றி குழந்தைகளைப் பற்றி கேட்க விரும்பினேன் ஆனால் அவனைப் பற்றி எனக்குள் பயம் அதுபோலவே என்னைப்பற்றி அவனுக்குள்ளும் பயம் இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? எல்லைக்கோடுகளை உருவாக்கியவர்கள். அவர்களே நமது மெய்யான எதிரிகள். நான் அவனது உறவினர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் குழந்தைகளின் முன்னால் மண்டியிடுகிறேன் அவனைச் சுடுவதற்கு முன் அவனது கண்களைப் பார்த்தேன் அதில் குரூரம் தென்பட்டிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் நான் பார்த்தது தோழமை, துயரம், கருணை அவன் விழுந்து கிடந்த போது மார்பின் மேல் கைகளை வைத்துக் கொண்டு எதை நினைவு கூர்ந்திருப்பான்? பள்ளிக்குச் செல்லும் வழியில் பறித்துத் தின்ற புளியம் பழங்களையா? இளமைப் பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து பாடிய பாடலையா? தனது அன்புக்குரியவளுக்கு எழுதிய கடைசி கடிதத்தையா? கிராமத்தின் குறுகிய சந்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் தாயின் மங்கிய விழிகளையா? கோதுமை வயலில் வீசிய குளிர்ந்த காற்றையா? வேனிலிருந்து இறக்கப்படும் தனது சவப்பெட்டியைப் பார்த்துக் கதறும் தனது சகோதரியின் அலறலையா? வீரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. பாலைவனத்தில் நடக்கும்போது முளைவிடும் போதே கேள்விகளெல்லாம் கருகிப் போய் விடும். அமைதியாக இருக்கும் ஆடுகளின் செவியில் மேய்ப்பவனின் கட்டளைகள் மட்டுமே கேட்கும். கழுத்தை அறுக்கும் போது காளையின் வேதனையும் கவலையும்தான் வெளிப்படும். வீரம் செறிந்த பாடல்களுக்கு விடை கொடுங்கள் எனக்காக எந்த சொர்க்கமும் காத்திருக்கவில்லை. நரகத்தில் ஒரே கோப்பையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நஞ்சை அருந்துவோம் ஒரே முள் படுக்கையில் படுத்துறங்குவோம் எல்லைகளே இல்லாத உலகம் குறித்து கைவரப் பெறாத கனவைப் பகிர்ந்தபடி ஒன்றாகச் சேர்ந்து அழுவோம்.... போர் வீரன் ஒருவன் தனக்குள் பேசிக்கொண்டது.

*

Thanks to Kanagu Kanagraj & Sadik

*

தொடர்புடைய பதிவு : கே. சச்சிதானந்தன் நேர்காணல்




Monday, January 24, 2022

திக் நியத் ஹான்

நண்பர் கார்த்திக் ஃபேஸ்புக்கில் எழுதிய அஞ்சலி...

இன்று காலை (22 Jan 2022) கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே விடிந்தது . விடுமுறை முடிந்தும் முடியாதது போன்ற ஒரு மனநிலை . ஜென் மாஸ்டர் திக் நியத் ஹான் சமாதி அடைந்த செய்தி அறிந்ததும் மனம் முற்றிலும் வேறோரு  உணர்வு நிலைக்கு சென்று விட்டது. இதை வருத்தம் என்று சொல்வதற்கில்லை  மீண்டும் அவரை அணுக்கமாக நினைவுகூறும்   தருணமாகவே இதை உணர்ந்தேன்  

திக் நியத் ஹான் , உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜென் மாஸ்டர் , வியட்நாமில் பிறந்தவர் . இவரை நீங்கள் நேரடியாக கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் இவரின் எளிமையும் தெளிவும்  பொதிந்த வாசகங்களை எங்காவது பார்க்கவோ கேட்கவோ செய்திருக்கலாம் . ஆன்மீக தளத்தில் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல்  சமூகத்தில் அமைதி போக்கிற்கான தேவையை  முன்வைத்து தொடர்ந்து பேசி வந்தவர்.

1926 ல் பிறந்த திக் நியத் ஹான் , பதினாறு வயதிலேயே பெளத்த மடலாயம் ஒன்றில் சேர்ந்து துறவறம் பெற்றுக்கொள்கிறார் .அவரின் பெயரில் உள்ள  திக் (Thich) என்பது புத்தரின் குலத்தில் வந்தவர் என்பதை சுட்டும் வார்த்தை . 1960 களில்  வியட்நாம்  போர் உச்சத்தில் இருந்த சமயம் இவரின் போருக்கு எதிரான கருத்துக்களினால் வியட்நாம் அரசு இவரை மீண்டும் வியட்நாமுக்குள் நுழைய அனுமதி மறுத்தது ( அப்போது பிரான்சில் இருந்தார் ) . 

அதன் பிறகான தனது பெரும்பாலான நாட்களை அமெரிக்காவிலும் பிரான்சிலும் கழித்தார்  . அமெரிக்க கருப்பின தலைவரான மார்ட்டின் லூதத் கிங் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பின் ஆரம்பப் புள்ளி திக் நியத் ஹான் அவர்களில் இருந்து ஆரம்பித்தது எனலாம் , அதை மார்ட்டின் லூதர் கிங் மேலும் முன்னெடுத்துச் சென்றார். திக் நியத் ஹான் இறுதிவரை தொடர்ந்து எல்லா விதமான போர்களுக்கும் ,  வன்முறைக்கும் எதிராகவே பேசிவந்திருக்கிறார்

திக் நியத்  ஹான் அவர்கள் எனக்கு முதலில் அவரின் புகைப்படத்தின் மூலமே அறிமுகமானார் . சில வருடங்களுக்கு என் மனைவி பணி நிமித்தமாக கலந்துகொண்டிருந்த கான்பிரன்ஸ் ஒன்றில் மனநலம் குறித்த ஒரு விவாத்தத்தில்  'இக்கணத்தில் இருத்தல்' (minufulness ) என்ற அணுகுமுறையை விளக்கும் விதமாக திக் நியத் ஹான் அவர்களின் சிந்தனைகளும் புத்தகங்களும் முன் வைத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

கருத்தரங்கில் இருந்து  அவர் வாங்கி வந்த  புத்தகத்தில் இருந்த  திக் நியத் ஹான் அவர்களின்  புகைப்படத்தை  பார்த்ததுமே  எனக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவாகியது .அவர் முகத்தின் தெரிந்தது ஒரு புன்னகை என்று கூட சொல்லிவிட முடியாது .அதை ஒரு நிறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம், மேலதிகமாக வேறெதுவும் தேவையிருக்காத ஒரு பூரணம். 

அதன் பின் அவரை வாசிக்க ஆரம்பித்த போது அவரின் இருப்புக்கும்  அவர் சொல்வதற்கும் இடையே  வித்தியாசமே இல்லை என்பதை உணர முடிந்தது . பின்னர் அவரின்  உரைகளையும்   கேட்டேன் - அந்த ஒருமை உணர்வு முழுமை அடைந்தது . சில விஷயங்களை அறிதல்களாக  ஆலோசனைகளாக, வழிகாட்டல்களாக ஒருவர் முன்வைப்பது  வேறு ஆனால் அந்த தன்மையில் இருந்து கொண்டே அதை ஒருவர் அதைச் சொல்வது என்பது நம்மை  அந்தரங்கமாகத் தொடுவது. 

மகிழ்ச்சி என்பது எதிலிருந்தோ ,எதன் மூலமாகவோ , எதை அடைந்தோ பெறும் ஒன்றல்ல . மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தில்  (joy ) இருந்து தான் அனைத்தும் துவங்குகிறது . Mindfulness practice எனப்படும் 'இக்கணத்தில் இருத்தல்' என்பது எதனோடும் பிணைத்துக்கொள்ளாத , எதையும் நிபந்தனையாக்கிக்கொள்ளாத  "அடிப்படையான  மகிழ்ந்திருக்கும் நிலையை" அடைவதே  என்கிறார் . 

மனதும் உடம்பும் இக்கணத்தில் இங்கு இருக்கும்போது, அதை நாம் கவனிக்கும் போது , நமக்குள் நாம் குவியும் போது, வாழ்வெனும் மலர் இயல்பாகவே நமக்குள் மலர ஆரம்பிக்கிறது . உயிர்த்திருத்தல் என்பதே  ஒரு அற்புதமாகிறது .  மகிழ்ந்திருக்க அல்லது ஆனந்தித்திருக்க தேவையான அத்தனை சாத்தியங்களும் அந்தந்த கணத்திலேயே பொதிந்துள்ளது என்பதை அறியும் தருணமது .

இக்கணம் என்பது நிறையும் போது , நிறைந்து ததும்பும்போது , மனதுக்கு   எங்கோ , எதுவோ என்று பரபரக்கும் தேவை எழுவதில்லை. கடந்த காலம் குறித்த ஏக்கங்களோ, எதிர்காலம் குறித்த  பயங்களோ , நிகழ்காலம் குறித்த போதாமைகளோ நம்முள்  படர்ந்து நம்மை திணற அடிப்பதில்லை  . இப்படி குவிந்த ஒரு  புள்ளியில் உருவாகும் தெளிவு  ஞானத்தின் முதற்படி ஆகிறது .

இந்த தெளிவு உருவாக்கும்  மனவிரிவு கொண்டே நாம் மற்றவர்களையும் புரிந்துகொள்ளவும் அன்பு செய்யவும் முடியும் என்கிறார் . அதிலிருந்தே பிறர் மீதான முற்றான compassion பிறக்கும் என்கிறார் . நம்மை நாம் அன்பு செய்யாமல் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது  .அந்த புள்ளியிலேயே நீ அல்லது நான் என்றும் பிரிவும் மறைய ஆரம்பிக்கிறது.  இந்த இடத்தில்  நான் வள்ளலாரையும் நினைவுறுத்திக்கொண்டேன் .இந்த மனநிலை தான்  'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்லும்   இல்லையா ?

திக் நியத் ஹான் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு 'Bring your mind home, to your body ' என்று .இதுவே ஆரம்பம் , இதுவே பயிற்சி , இங்கிருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது.

ஞானியர் மரணம் என்றுமே வருத்தம் அளிப்பதல்ல . அவர்களுடனான நம் தொடர்பு என்றைக்குமானது (eternal ). அவர்கள் உணர்த்தும் விஷயமும் என்றைக்குமானவை. மரணம் என்ற சுழற்சியை வெகு இயல்பாக கடந்து செல்லும் வாழ்க்கையை அவர்கள் முன்னரே அமைத்துக்கொண்டு விடுகிறார்கள் .  இந்த தருணம்  நாம்  அவர்களையும் , அவர்கள் அளித்துச்சென்ற ஞானத்தையும் நெருங்கி உணர இன்னுமொரு வாய்ப்பு. 

*


நன்றி : கார்த்திக்

Monday, January 10, 2022

மதுர அனுபவம் - ஆசிப் மீரான்

வலி மிகுந்த வாழ்க்கை யாருக்குத்தான் இல்லை? ஆனாலும் வலிகளை இல்லாமல் ஆகச் செய்யும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் அந்த நம்பிக்கையை உணராமல் தங்களையும் தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் . ஆனால் எல்லா வலிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாக அன்பு இருக்கிறது என்று நம்புகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளைச் சந்திக்கின்ற போதும் அவற்றை நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து போய்விடவே விரும்புகிறார்கள்

எத்தனை வலிகள் இருந்தபோதும் அன்பிலும் அது தரும் நம்பிக்கையிலுமே வாழ்க்கையின் மதுரம் இருக்கிறது என்பதுதான் மதுரம் திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை
மிகச் சாதாரணமான இந்தக் கதையை தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் மூலமாக அன்றாடம் நாம் சந்திக்கின்ற எளிய மனிதர்களின் சின்னச் சின்ன உணர்வுகளைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக ஓர் அபாரமான அனுபவத்திற்குத் தயார்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் படக்குழுவினர்.
மருத்துவமனையில் நோயாளிகளின் துணைக்காக வருகின்றவர்கள் தங்குவதற்காக அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கூடம் தான் இந்தப்படத்தின் களன்.
இந்தக் கூடத்தில் தங்கியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அழைத்து வந்த நோயாளிகள் குணம் பெற்று தங்களோடு வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடும், "அவர்களுக்குச் சரியாகிவிட வேண்டுமே" என்ற பதைபதைப்போடும் கலவை உணர்ச்சியோடு இருப்பார்கள்.
இருந்தபோதிலும் அந்த உணர்வுகளிலிருந்து வெளியாகி, பிற நோயாளிகளிக்குத் துணையாக வந்து தங்கி இருப்பவர்களோடு தங்களது கதைகளைப் பகிர்ந்து கொண்டும், இணக்கமும் பிணக்கமும் கொண்டும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அடுத்தவருக்கு ஆறுதலாக முனைந்து, அதன்மூலம் நெருக்கமாகி, புதிய நட்புகள் தழைக்கும் காட்சிகளின் வழியாக எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கும் அன்பை, அடுத்தவர்கள் மீதான கரிசனையை மெல்லிய இழையாய் படம் முழுதும் உலவ விட்டிருக்கிறார்கள்.
உணர்ச்சிகரமாகக் கதை சொல்லும் உத்திதான் என்றாலும் "மெலோ டிராமா" வாக மாற்றி அழுது புரளாமல் இயல்பான சம்பவங்களோடு காட்சிக்குக் காட்சி ஒன்ற வைத்திருக்கிறார்கள்.
கப்பலில் வேலைக்குச் சென்று விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் சாபுவுக்கும், சாபுவிற்கு இணக்கமான நண்பரின் பிரியாணி கடைக்கு அப்பளம் விற்பனைக்கு வரும்‌ சித்ராவுக்குமிடை யே உருவாகும் அந்தக் காதல்தான் படத்தின் அடிநாதம்.
பெரிய ஆர்ப்பாட்டங்களில்லாத, சிறிய கடையின் அடுக்களையில், பிரியாணியில் தொடங்கும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிகளைத் தவிர்த்து காட்சிப்படுத்தப்படும் அந்தக் காதல், சாரல் மழையில் நனைந்தபின் உடல் மெல்ல நடுங்கும்‌ நிலையில் ஆவி பறக்கக்‌ குடிக்கும் சூடான தேநீரின் இதத்தோடு மதுரமாய் இனிக்கிறது. ஜோஜு ஜார்ஜும் ஸ்ருதியும் நல்ல ஜோடியும் கூட.
95லேயே சின்ன வேடத்தில் அறிமுகமாகி, மம்மூக்கா, லாலேட்டன், திலீப் போன்றவர்களுடன் நடி ல்த்திருந் தாலும் கூட ஜோஜுவை என்னளவில் அடையாளப்படுத்திய படம் 1983. 'கிரிக்கெட் கோட்சாக' அந்தப் பாத்திரத்தை அவ்வளவு அழகாகக் கையாண்டிருந்தார். அதன் பின்னர் 'லுக்கா சுப்பி' உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திரிந்தாலும் 'ஞான் மேரிக்குட்டி' யில் சப்-இன்ஸ்பெக்டராக கலக்கியிருந்தார். 'ஜோஸஃப்' வந்தபோது முழுப்படத்தையும் தோளில் தாங்கும் அளவிற்கு வளர்ந்தபோதிலும் கூட கதாநாயக வேடம் மட்டுமே செய்வேன் என்ற பிடிவாதமேதும் இல்லாமல் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். 'ஜூன்', 'பொரிஞ்ஞு மரியம் ஜோஸ்' படங்களுக்குப் பின் 'ஹலால் லவ் ஸ்டோரி', 'நாயாட்டு', 'மாலிக்' என்று கவனிக்கத்தகுந்த கதாபாத்திரங்களில் மின்னிய பிறகே 'மதுரம்' வாய்த்திருக்கிறது ஜோஜுவுக்கு. தயாரிப்பாளராகவும் களமிறங்கியதோடு முழுப்படத்தையும் மிகையில்லாத ஆற்றொழுக்கான உடல்மொழியோடு தாங்கியிருக்கிறார் ஜோஜு. மனைவியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துப் போகச் சொல்லும் காட்சிகளே போதும் ஜோஜு எத்தனை பண்பட்ட நடிகனென்பதைப் பறைசாற்ற.
குஜராத்திப் பெண் சித்ராவாக ஸ்ருதி ராமச்சந்திரன் கனகச்சிதம். சென்னையைச் சேர்ந்தவராம். மலையாளத்தின் இனி நிறைய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
நாற்பதாண்டு கால மனைவியுடனான காதல் வாழ்க்கையை எப்போதும் சிலாகித்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் இந்திரன் வாழ்ந்திருக்கிறார். "உனக்கு வருத்தமாக இல்லாவிட்டால் ஒன்று சொல்லவா?" என்று எல்லாரிடமும் அவர் கேட்கும் அந்த வசனமுமே கூட ஓர் உதாரணம். ஆரம்பத்தில் நகைச்சுவை‌போலத் தோன்றும் இதே வசனத்தை மனைவி குணமாகி வீடு திரும்ப யத்தனிக்கும் வேளையில் ஜோஜு ஜார்ஜிடம் அவர் சொல்லும்போது அந்த வசனத்தின் தொனி வேறாக மாறி நிற்கும்.
படத்தில் சில கதாபாத்திரங்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றனவே தவிர அவர்கள் காட்சியில் வருவதில்லை. என்றாலும் ரவியின் மனைவி சுலேகாவும், தாஜினுடைய தகப்பனாரும், நீது என்ற பெண்ணின் அக்காவும், கெவினுடைய அம்மாவும் நாம் காணாமலேயே நமக்கு அறிமுகமானவர்களாகிவிடுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் இன்னும் ஒரு சுவாரசியம்.
படத்தின் காட்சிச் சட்டங்களை அழகுறப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டாலினிஸ்லாஸ். ஜோஜுவும்‌ ஸ்ருதியும் காதலைப் பகிர்ந்து கொள்ளும்போது பின்னணி மழையில் அந்த அழுக்கான அடுக்களையும் கூட ஒளிப்பதிவின் மிகைவால் மின்னுவதோர் உதாரணம் மட்டும்.
மலையாளப் படங்களுக்கேயுரிய மெதுவான தொடக்கமும், கதாபாத்திரங்களுக்கான அறிமுகமும் இருந்தாலும் சற்றும் சலிப்படைய வைக்காத, மனித உணர்வுகளின் எல்லா அம்சங்களையும் தொட்டுச் செல்கிற அபாரமான திரைக்கதை.
ஆஷிக் அமீர், ஃபாஹிம் ஸஃபர் (தாஜ் என்ற வளைகுடாவாசி கதாபாத்திரத்திலும் இவர்தான் நடித்திருக்கிறார்) இருவருடைய பங்களிப்பில் மிளிர்கிறது.
எந்தப் பூச்சுகளுமின்றி, படம் பார்க்கிறவர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் முடிவோடு படத்தை இயக்கி, அதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் அஹம்மது கபீர். 'ஜூன்' என்ற முதல் படத்திலேயே நம்பிக்கை விதைத்த இயக்குநர் இவர்.
சொல்ல மறந்து விட்டேனே?! படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மதுரம் கூட்டவே செய்திருக்கின்றன. இசை அமைப்பாளர் ஷிஹாம் அப்துல் வஹாபுக்கு
வாழ்த்துகள்
!
சினிமா 'ஹராம்' என்று இங்கே சிலர் கதறிக் கொண்டிருக்கும் நிலையில் மலையாள சினிமா இளம் இஸ்லாமியர்களின் கலைப் படைப்புகளோடு புதிய பாய்ச்சல் காணத் தொடங்கியிருப்பது மேலும் நம்பிக்கையளிக்கிறது.
மனிதாபிமானமும், அன்பும், நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வதில் எந்த அகச்சிக்கலும் இருக்காதென்பதை விழிகளை நனைத்துச் சொன்னாலும்.....
"மதுரம்" நிச்சயம் இனிப்பான அனுபவம்தான்.

*