Showing posts with label நேஷனல் புக் டிரஸ்ட். Show all posts
Showing posts with label நேஷனல் புக் டிரஸ்ட். Show all posts

Thursday, January 2, 2014

அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளி! - ராஜேந்திர யாதவ்

ராஜேந்திர யாதவ் எழுதிய 'வானம் முழுதும்' (sara aakash) நாவலிலிருந்து சுவாரஸ்யமான ஒரு விவாதம்.   "நீங்க உங்க ஹிந்து தர்மத்தை உலகத்திலேயே உயர்ந்த மதமா நெனக்கலியா? ' என்று கதாநாயகன் கேட்டதில் விவாதம் சூடுபிடிக்கிறது. (இப்படி முஸ்லீம்கள் தங்கள் மதம் பற்றி  செய்தால் என்னாகும் என்று நினைத்தாலே கதி கலங்குகிறது. கதி என்ன, கொத்துக்கறிதான்!). மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் எழுதிய கன்னட நாவலான 'சிக்கவீர ராஜேந்திரன்'-ல் வரும் பிரமாதமான இன்னொரு விவாதத்தை (இதில் ஹிந்துமதம் வாகை சூடும், முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன்!)  பிறகு பதிவிடுகிறேன். முதலில் ஹிந்தி. சரியா ?  நன்றி. - ஆபிதீன்

***


"உலகம் ரொம்ப முன்னேறிட்டுது சமர் தம்பி. இந்த ஆர்.எஸ்.எஸ். பாஷை அரபிக் கடலைத் தாண்டி ஒருத்தருக்கும் தெரியாது. உலகம் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தயாரிச்சுக்கிட்டு இருக்கு. நீங்க என்னன்னா உங்க சாணிக் கலாச்சாரத்தைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறீங்க. இதுமாதிரி பெருமையடிச்சுக்கறதுக்கு முன்னாடி மற்ற கலாச்சாரங்களையும் நாகரிகத்தையும் புரிஞ்சுக்க எப்பவாவது முயற்சி பண்ணுவீங்களா? பழைய இடிபாடுகளும், வேதாந்த புஸ்தகங்களும், ரோமிலேயும் , எகிப்திலும்கூட ஒண்ணும் கம்மியில்லே. சீன நாகரீகம் உலகத்துக்குக் கொடுத்ததிலே பாதிகூட வேறயாரும் கொடுத்ததில்லே. கிறிஸ்தவர்களை நீங்க வேணும்னா திட்டலாம். மதம் மாத்தறாங்கன்னு வையலாம். ஆனா அவங்கதானே எதுவுமே தெரியாத மக்களிடையே போய் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பள்ளிக்கூடம் திறந்து, ஆஸ்பத்திரிகட்டி, தங்களோட வாழ்க்கையையே தங்களோட மதத்துக்காக அர்ப்பணிக்கிறாங்க? நீங்க என்ன பண்றீங்க? உலகநன்மை, உலகநன்மைன்னு வாயால சொல்லிக்கிட்டு, கொஞ்சம் ஆவேசம் அதிகமாச்சுன்னா இமயமலைக்கு ஓடிடறீங்க. பணக்காரனா இருந்தா சாமியார்களை சோறுபோட்டு வளர்க்க தர்மம் எழுதி வைக்கிறான். ஏழையா இருந்தா மொட்டை அடிச்சிக்கிட்டு சாமியாராகி மூக்குப் பிடிக்கத் திங்கறான்."

"நீங்க ஒரு பக்கத்தையே பாக்கறீங்க" என்றேன் நான்.

"அது ஒரு பக்கமா, ரெண்டு பக்கமா அப்படீன்னெல்லாம் எனக்குத் தெரியாது. நமக்கு முன்னோடியா இருக்கறது, நம்மை பலி வாங்கிக்கிட்டு இருக்கறதை நான் பாக்கறேன். உங்க நாட்டிலே பாலும், தேனும் ஆறாய் ஓடுச்சி, பால் மாரி
பெஞ்சுது. ஆனா இன்னிக்கு உலகத்திலேயே காட்டுமிராண்டு நாடு உங்களுதுதான். உங்க மதம்தான் எல்லாத்தைவிட விஞ்ஞானப் பூர்வமில்லாத மதம். மனிதனின் அறிவு வளர்ச்சியை மறந்துட்டு, நடைமுறை சாத்தியமில்லாததையெல்லாம் வாழ்க்கையோட லட்சியமாகக் காட்டற மதம், உலகத்திலே இருக்கிற ஞான, விஞ்ஞான விஷயங்கள் எல்லாத்தயும் தன்னோட வேதங்களில பூந்து தேடற மதம், உண்மையாகவே ரொம்ப பரிதாபப்படவேண்டிய மதம். நீங்க சொல்றதைக் கேக்கறப்போ லக்னோவில் இன்னிக்கு ரிக்சா இழுக்குற நவாப் பரம்பரை ஆளுங்க ஞாபகம்தான் வருது." என்றவர் தன் பேச்சுக் குறித்துத் தானே உரக்கச் சிரித்தார்.

நான் மிகவும் பிரயாசைப்பட்டு, "இந்த வெளி விஷயங்களை நாம் என்னிக்கும் முக்கிய விஷயமா நெனச்சதில்லே, அதனால்தான் நாம இன்னொரு நாட்டுமேலே படையெடுத்துப் போனதுமில்லே, மதத்தைப் பரப்பறதுக்காகப் புனிதப்போர் என்கிற பெயரிலே சண்டையும் போட்டதில்லே, நம்ம குறிக்கோள் எப்பவும் ஆன்ம சாந்தியும் முன்னேற்றமுந்தான்" என்றேன்.

இம்முறை அவர் சிகரெட் பிடிப்பதைப் பாதியில் நிறுத்தி 'ஹஹ்ஹா' என்று சிரித்தார். "வக்கத்துப்போனதை மறைக்க அருமையான வாய்ஜாலம். இதைத்தான் ஏழ்மையை ஆராதிக்கறதுன்னு மத்தவங்க சொல்றாங்க. வெளியிலே போய் தாக்குதல் நடத்தாததுக்கு காரணம் ஆன்மீகமும் இல்லே, மண்ணும் இல்லே. உங்ககிட்டே வலிமை கெடயாது. அவ்வளவுதான். இல்லாதபோனா தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கறதிலேயும் நீங்க ஒண்ணும் சளைச்சவங்க இல்லியே! வல்லமை படைச்ச அசோகனும் , கனிஷ்கனும் வெளிநாட்டுக்காரங்க மேலே பெரிய தயவு காட்டினாங்கன்னும் கிடையாதே!" என்றவர் பாதியில் அதைவிட்டு, "பழைய சரித்திரமும் வேண்டாம், கற்பனைகளும் வேண்டாம். நான் நேரே ஒரு கேள்வி கேக்கறேன். இன்னிக்கு நீங்க உங்க நாட்டிலே எவனை வேணும்னாலும் புடிச்சி 'உனக்கு எவ்வளவு ஆன்மசாந்தி கிடைச்சிக்கிருக்கு'ன்னு கேட்டுப்பாருங்க. இந்த ஆன்ம சாந்தி,.கீன்ம சாந்தியெல்லாம், கோவில் குளம்னு தானம்செய்றவங்க கிட்டேயும், கோயில் பிரசாதத்தை ஒருபிடி பிடிக்கிற பண்டாரங்கள் கிட்டேயும்தான் இருக்கு."

கத்திக்கிழிக்கிற இவர் பேச்சை நறுக்கென்று நிறுத்தும் வண்ணம் என்ன கேள்வி கேட்கலாம் என்று என் மனம்  பரபரத்தது. திடுதிப்பென்று "இந்த உலகம் எப்படி தோன்றுச்சு?" என்று கேட்டேன்.

அவர் உரக்கச் சிரித்தார். "நீங்க பழங்கால ரிஷிகள் மாதிரி வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே! உலகம் உண்டானதுதான் ரொம்ப சின்ன விஷயமாச்சே, பிரம்மா என்னடா தனியா இருக்கோமே, பொழுதே போகலியேன்னு 'நான் நிறைய மனுஷனா ஆயிடுவேனாக'ன்னாரு! அவர் தன் குணங்களை விரிச்சுக்கிட்டாரு, அதுதான் 'ப்ரக்ருதி' (இயற்கை) அப்படீங்கற தத்துவம். இல்லேன்னா அல்லா 'குன்' அப்படீன்னாரு. உலகம் உண்டாயிடுச்சி. இதிலே என்ன பிரச்சினை?" பிறகு  மூக்கால் புகைவிட்டவண்ணம் சிகரெட்டைத் திறந்த கதவு வழியாக தூக்கியெறிந்தார். சிரித்துக் கொண்டே 'சமர்ஜி! இன்று உலகத்தின் தோற்றத்தைப் பத்தி விஞ்ஞானிகள் சொல்றதே இறுதியான உண்மைன்னு நான் சொல்லலே. ஆனால்  இந்தக் கட்டுக்கதையெல்லாத்தையும் விட அது உண்மைன்னு தோணலே? அறிவுக்கு எல்லையே இல்லே. இன்னும் யோசிச்சுக் கண்டு பிடிப்போம்." பிறகு எழுந்து சோம்பல் முறித்து, "நாமும் சரியான ஆளுங்கதான். சந்திச்ச கையோட
உலகத்தோட இறந்தகாலம், எதிர்காலம் எல்லாத்தையும் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சிட்டோம் பாத்தீங்களா? முதல்லே பாத்ததையும் இப்ப பாத்ததையும் வச்சுகிட்டு இவன் பெரிய வாயாடின்னு நீங்க நினைச்சுக்கலியே?' என்றார்.

"இல்லையில்லை, உங்ககிட்டேயிருந்து யோசிக்கவும் , சிந்திக்கவும் நெறயா கிடச்சிருக்கு" என்று வெட்கத்துடன் சொன்னேன்.

"அப்ப நீங்க ஒண்ணும் சரியான ஹிந்து கிடையாது. சரியான ஹிந்துன்னா யோசிக்கறதே கிடையாது. ஆன்மீக ஞானமாகட்டும் ,லஞ்சமாகட்டும், கறுப்புப் பணமாகட்டும் அவன் சுருட்ட மட்டும்தான் பார்ப்பான். போகட்டும், நான் பேசினதும் ஏதாவது உங்களைத் துன்புறுத்தியிருந்தா மன்னிச்சுக்குங்க. விவாதம் செய்ய ஆரம்பிச்சா எனக்கும் ஒண்ணும் நினைவிலேயே இருக்கறதில்லே. எனக்கு சரின்னு பட்டதை சொல்லிடுவேன்."

"அப்படித்தானே இருக்கணும்:" என்று நான் "நான் உங்ககிட்டே பல விஷயங்கள் குறித்து பேசணும்" என்றும் கூறினேன்.

"கட்டாயம், கட்டாயம், இனிமே நாம அடிக்கடி சந்திப்போம்" என்று ஷிரீஷ் சொன்னார். "கொஞ்சம் உங்ககிட்டேயிருந்து நான் கத்துக்குவேன். சிலதை நீங்க மறுபரீசீலனை செய்ய விரும்புவீங்க."

"என்கிட்டேயிருந்து கத்துக்க என்ன இருக்கு?" என்று நான் வெட்கப்பட்டேன். தலையைக் குனிந்துகொண்டு, "நான்தான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பல விஷயம் புதுசா இருந்தது" என்றேன்.

"இல்லையில்லை, நான் எதையும் முழுமையா நெனைக்கிறதில்லே. எந்த ஒண்ணும் வளர்ச்சி அடையுது. அதனாலே எல்லாம் தெரிஞ்சவன் ஒருத்தனும் கிடையாது. அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளிங்கறதுதான் என் அபிப்ராயம். சிறிது ஆர்வம் இருக்கறவரைதான் அவன் அறிவாளி. அதுக்கப்புறம் அவனுக்கும் லைப்ரரி புஸ்தகத்துக்கும் வித்தியாசம் கெடையாது....' என்றார்.

**

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

Monday, October 14, 2013

வெற்றி என்பது... - கே. பி. கேசவ மேனனின் 'கடந்த காலம்'

நம்மில் பலரும் பொரித்துத் தின்றுவிட்ட மனச்சாட்சி பற்றி  - ‘மாத்ருபூமி’ நாளிதழை ஸ்தாபித்த மாமனிதர் கே. பி. கேசவ மேனன் சொல்லும் அட்வைஸை பகிர்கிறேன். அதை வாசிப்பதற்கு முன்பு , ரிலாக்ஸூக்கு ஒரு ஜோக், இதுவும் அவருடைய சுயசரிதையில் (‘கழிஞ்ச காலம்’ . தமிழாக்கம் : ராஜம் கிருஷ்ணன்) உள்ளதுதான்.

'பிராக்டிஸ்’ தொடங்கிச் சில நாட்கள் சென்ற பின்னரும் வழக்கு ஏதும் வராமல் சோர்ந்திருந்த ஒரு பாரிஸ்டரின் கதை அது (இந்தக் கதையைச் சொல்வது இன்னொரு பாரிஸ்டர்!). அவர் நாள்தோறும் அலுவலகம் செல்வார். சிறிது நேரம் சென்ற பின்னர், நேரம் தவறாமல் நீதிமன்றத்துக்கும் செல்வார். . எவரேனும் கட்சிக்காரர் வந்தால் உடனே எழுத்தன் (வக்கீல் குமாஸ்தா) நீதிமன்றத்துக்குச் சென்று அவருக்கு அறிவிக்க வேண்டுமென்பது கட்டளை. ஒருநாள் அந்தப் பாரிஸ்டர் நீதிமன்றத்திலிருக்கையில் எழுத்தன் மூச்சுமுட்ட ஓடிவந்து ஒரு கட்சிக்காரன் வந்திருப்பதாக அறிவித்தான். 'அப்படியா? சீக்கிரமாகப் போய் அவனை ஆபீஸில் இருக்கச்சொல்; நான் இதோ வருகிறேன்’ என்றார் பாரிஸ்டர். ’அவன் போய்விடமாட்டான் ஸார், வாசலைப் பூட்டிவிட்டு வந்திருக்கிறேன்; அவன் உள்ளே இருக்கிறான்’ என்று அந்த எழுத்தன் மறுமொழி புகன்றானாம். தன்னுடைய எழுத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மகிழ்ந்துகொண்டு வந்த பாரிஸ்டர் அலுவலகக் கதவைத் திறந்து பார்க்கையில், அங்கு யாரையும் காணவில்லை! பின்புறமிருந்து கதவைத் தாழிட எழுத்தன் மறந்து போயிருந்தான்!

அவ்வளவுதான் ஜோக். இனி மனச்சாட்சி (இன்னொரு ஜோக் என்கிறாயா?! - ஹனீபாக்கா) :
...

'என் வாழ்க்கை பாழாகிவிட்டதே! நான் நினைத்தாற்போன்று எதுவும் நடக்கவில்லையே’ என்று புலம்பும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன். உண்மையில் அவ்வாறெல்லாம் தவிப்பதற்கு ஒரு காரணமும் அவர்களுக்கு இருந்ததில்லை. ‘ஒன்றாகப் படித்து வேலையில் அமர்ந்தோம்- எனினும் என்னால் அவனைப்போல் உயர முடியவில்லை. என்னைவிடத் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் நிறையப் பொருள் தேடிப் பிரமுகர்களாகிவிட்டனர். எங்களுக்கு அப்பேறு கிடைக்கவில்லை’ என்று குறைபடுகின்றனர். வாழ்க்கைப் போரில் தோல்வியடைந்துவிட்டோம் என்ற கருத்தே அவர்களுக்குத் தோன்றுகிறது. இது உடைமைகளை ஆதாரங்களாகக் கொண்ட தவறான கருத்துகளினால் விளையும் குறைபாடுதான். பணம், பதவி, புகழ், ஆகியவற்றின் நிலையாமையை நன்கறிந்தவர்கள் அவற்றுக்காக ஏங்குவதில்லை. ...சில உலக நிகழ்ச்சிகளைப்பற்றி ஆராய்வோம்.

எகிப்தில் சர்வாதிகாரம் நடத்திவந்த ஃபரூக் அரசன் ஒருநாள் காலையில் தன் நாடு, பதவி எல்லாம் விலகிச் செல்ல, வேறு நாடுகளில் அலைந்து புகலிடம் தேடவேண்டியிருந்தது. ஃபரூக்கை வெளியேற்றி அதிகாரம் கைக்கொண்ட நஜீப், விரைவிலேயே அதை நாஸருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. பாரசீகப் பிரதம மந்திரியாக இருந்த மொஸாதீக் பின்னாளில் ஒரு கைதியாகவே வாழ்நாளைத் தள்ளினார். ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்ததும் ‘ட்ராட்ஸ்கி’யின் பெயரையும் பணிகளையும் நினைவூட்டும் சின்னங்களை அழித்தார். ஸ்டாலின் இறுதியை எய்திய பின்னர், அவருடைய நினைவை அவருக்குப்பின் வந்ததோர் அகற்ற முயன்றனர். டாக்டர் சுகர்ணோவுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பாருங்கள்! அவரை அதிகாரத்திலிருந்து அகற்றினார்கள்,.அந்தப் பெருந்தலைவனை அலங்கரித்த பதவிகள், பொறுப்புகள் எல்லாவற்றையும் உருவிக்கொண்டனர். விதி மனிதர்களை அம்மானை ஆடுவதில் ஒரு தனித்தன்மையைக் கையாண்டாற்போலிருந்தது.

வரலாற்று நிகழ்ச்சிகளையே மாற்றியும் திருப்பியும் அமைத்துவிட முயற்சிகள் நடக்கும் உலகில் பெயரிலும் புகழிலும் ஆசை கொள்வது வீணல்லவா?

இரண்டே இரண்டு விஷயங்களில் மட்டும் அசையாத நம்பிக்கை கொள்ள இயலும். அவை - பிறப்பும் இறப்பும். அவற்றுக்கிடையே நிகழ்வன அனைத்தும் நிச்சயமற்றவை. பணம், பதவி, உடல்நலம், அதிகாரம் எல்லாம் மாறிக்கொண்டிருக்கும். நிலையிலா இவ்வாழ்வில் நமக்கும் ஆறுதலளிக்கக்கூடியது ஒன்றுதான். மனம் கனிந்து பிறருக்கு உதவி செய்வதும், உள்ளார்ந்து அன்பு செலுத்துவதும்தான் செய்யக்கூடியது. சிந்தனையாளரும் அறிவியல் புலவருமான ஆல்பர்ட் ஈன்ஸ்டைன் கூறியதுபோல், வாழ்க்கையின் குறிக்கோள் வெற்றி தேடுவதல்ல; தொண்டாற்றுவதேயாம். கொடுத்ததைக் காட்டிலும் அதிகம் பெறுபவரையே சாதாரணமாக நாம் வெற்றிக்குரியவராகக் கருதுகிறோம். அதற்கு நேர்மாறாக நாம் கொள்ள வேண்டும். இங்கே பெறுவதற்கு மேலாக அங்கே வழங்க வேண்டும். அதுவே வாழ்க்கையின் சரியான வெற்றியாகும்.

எனது நம்பிக்கைகளுக்கேற்ப, என்னால் எப்போதும் செயலாற்ற முடிவதில்லை. சில சமயங்களில் நேர் விரோதமாகவே செயல் புரிய வேண்டி வந்திருக்கிறது. பலவீனங்களை நேருக்குநேர் நின்று எதிர்க்கும் ஆற்றல் இல்லாததாலும், போதிய அளவுக்கு இயல்பாகவே நெஞ்சுரம் இல்லாததாலும்தான் அவ்வாறு நேரிடுகிறது போலும்! வாழ்வின் வெற்றியும் இன்பங்களும் பெரும்பாலும் நம் இயல்பைப் பொறுத்தே அமைகின்றன. நாம் காலத்தைப் பயன்படுத்தும் முறையிலும் பிரச்னைகளைச் சமாளிக்கும் தன்மையிலும் மற்றவருடன் பழகும் விதத்திலும் , வாழ்க்கைப் பொறுப்புகளைப் பற்றிய நம் கருத்துகளிலும் நம்முடையை இயல்பின் சாயை படிகிறது. அதிர்ஷ்டம் நம்மைக் கண் திறந்து பார்த்து அருள் புரிந்தாலும் , செல்வம் தேவைப்பட்டபோது நமக்குக் கிடைத்தாலும் , நம்முடைய நல்லியல்புகளை நாம் உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லையெனில், வேறொன்றும் நம்மை அமைதியான இன்பம் நிறைந்து வாழ்வுக்கான வழியைக் காட்டாது. மாசு மறுவற்ற மனச்சாட்சி கொண்டுதான் எதிரிகளின் அச்சத்தினின்றும் தீயகாலத்தின் துன்பங்களிலிருந்தும் நாம் மீட்சிகாண முடியும்,

**

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

Thursday, July 4, 2013

கங்கைத்தாய் (Ganga Maiya)

ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா எழுதிய இந்தி நாவலான 'கங்கைத்தாய்’-ல் ஒரு பத்தி... (தமிழில் திருமதி சரஸ்வதி ராம்னாத்)
***

துயரமும் துக்கமும் எத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இயற்கை அதைவிட அதிகமாகவே அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அளித்துள்ளது. துக்கத்திற்கு வரையறைக்கப்பட்ட எல்லை என்பது எப்படி இல்லையோ, அப்படியேதான் அதைத் தாங்கும் சக்தியும் எல்லையற்றது. எந்தத் துக்கத்தைப் பற்றிய கற்பனை கூட ஒருவனுடைய ஆன்மாவின் அஸ்திவாரத்தையே கலகலக்கச் செய்து நடுங்க வைக்கிறதோ, அதே துக்கம் சற்றும் எதிர்பாராது, திடீரெனத் தலையில் வந்து விழும்போது, அதைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எங்கிருந்தோ அவனுக்கு வந்துவிடுகிறது. அதை அவன் சிரித்துக்கொண்டோ அல்லது அழுதுகொண்டோ தாங்கிக் கொள்கிறான். துக்கமெனும் கருமேகத்தினடியிலே அமர்ந்து அவன் துடிக்கிறான். அழுகிறான். அழுது அழுது அவன் அத்துக்கத்தை மறக்கிறான். மேகம் விலகுகிறது; மகிழ்ச்சியின் பிரகாசம் மின்னலிடுகிறது. மனிதனும் சிரிக்கிறான். தன்மீது துயர மேகங்கள் படிந்திருந்தன, தான் அழுதோம், துடித்து தவித்தோம் என்பதைக் கூட அவன் மறந்து விடுகிறான். இது ஒருசில அசாதாரணமான மனிதர்களுக்குப் பொருந்தாமலிருக்கலாம். ஆனால் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையானது இது.

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி 

***
Cover Designed by Deo Prakash Choudhary

Thursday, March 21, 2013

குரங்குகள் பெண்கள் சென்ஷிகள்

ஆபிதின் அண்ணே,  வெரியர் எல்வின் தொகுத்த ‘உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலிலுள்ள பிடித்த கதை ஒன்று. செயல்களைக் காணும் சமயம் மனுசத்தனமென்பது எதுவென்பதில் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விசயத்தில் சந்தேகம் இல்லை. அது பெண்களுக்கு குரங்குகளின் மீது இருக்கும் காதல்.. :) . குரங்கின் வரைந்த ஓவியத்தை புத்தகத்தின் 40ம் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். - சென்ஷி
 
- நேற்று வந்த மெயில். குரங்கு கதை என்றாலே ஏன்தான் எனக்கு அனுப்புகிறாரோ என்று முனகிக்கொண்டே அமினா ஜெயல் தீட்டிய ஓவியத்தைப் பார்த்தேன். சரிதான், அச்சாக என்னைப்போலவே இருக்கிறது அந்தக் குரங்கு. கதையைப் படிப்பவர்கள் தங்கள் பின்பக்கத்தை அவசியம் - ஒருமுறையாவது-  பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் - ஆபிதீன்

***



ஆதிக் குரங்குகள்
...

கடபா எனும் இனத்தவர் பழங்காலத்தில் குரங்குகள் பழகிய விதம் பற்றிப் பல கதைகள் கூறுகின்றனர். ஒரு சாயங்காலம், மக்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, தலைப்பாகை, சட்டை அணிந்த குரங்கு ஒன்று வந்து அவர்கள் மத்தியிலிருந்த கல் ஒன்றில் அமர்ந்தது. பிடில் வாத்தியம் ஒன்றைக் கையில் கொண்டு, மிகவும் திறமையாக அதை வாசிக்க ஆரம்பித்தது. இசைத்த சங்கீதம் இனிமையாக இருக்கவே, வாசித்தது ஒரு குரங்கு என்பது யாருக்கும் தெரியாமற் போயிற்று. பெண்கள் மனமகிழ்ந்து சங்கீதத்திற்குத் தக்க நடனம் ஆடினர்.

ஒவ்வொரு இரவும் இது நடந்தது. சீக்கிரமே அனைத்துப் பெண்களும் இசைக் குரங்கிடம் மனதைப் பறி கொடுத்தனர். ஒரு பெண் ஒரு மோதிரத்தையும், ஒரு பெண் சுவையான உணவையும், மற்றொரு பெண் அரிசியிலிருந்து தயாரித்த ஒரு வகை பானத்தையும் அன்பளிப்பாக அளித்தனர்.

அங்கிருந்த இளைஞர்களுக்குப் பெண்களின் இந்தப் போக்குப் பிடிக்கவில்லை. இயற்கைதானே! அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். “யாருக்குமே இந்தப் புது இளைஞன் யார் என்றே தெரியவில்லை. எங்கிருந்து வந்தவன் இவன்? யார் இவன்?” ஓர் இரவில் ஒளிந்திருந்து அவன் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தனர். குரங்கில் வால் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். “ஆஹா, இது குரங்குதான்! வாலை கம்பு என்று தவறாக நினைத்து விட்டோம்!” என்று உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட ஆனந்தத்தில் களித்தனர். அந்த இரவில் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டனர். நடனத்தைத் தொடர்ந்தனர். நடனத்தை முடித்தபின் தம் வீடு திரும்பினர். குரங்கு மரத்திற்குத் திரும்பியது.
 
மறுநாள் இளைஞர்கள், குரங்கு வழக்கமாக அமரும் கல்லைச் சுற்றிலும் மரத்துண்டுகளை அடுக்கித் தீ வைத்துவிட்டனர். நன்றாகச் சுட்டதும், அந்த இடத்தைச் சுத்தமாக்கித் தீயின் அடிச்சுவடே தெரியாமல் வைத்தனர். வழக்கப்படி, பாட்டும், ஆட்டமும் தொடர்ந்தன. குரங்கும் எந்தவிதச் சந்தேகமும் எழாததால் கீழே வந்து பிடிலுடன் வழக்கமாக அமரும் அதே கல்லில் உட்கார்ந்தது. அந்தக்கல் சூடாக இருக்கவே, குரங்கின் தோல் வெந்து உரிந்தது. இளைஞர்களுக்கு ஒரே சிரிப்பு! பெண்களைக் கேலி செய்தனர். ஒரு குரங்கின் காதலைப் பெறவா பொருட்களை அன்பளிப்பாகப் பெண்கள் அளித்தனர்! நாணமுற்றனர் பெண்கள்! அன்றுமுதல் குரங்கின் வெந்துபோன பகுதி சிவப்பாகவே காட்சியளிக்கிறது.
***


 
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

Tuesday, March 19, 2013

மனிதர்கள் தம் வாலை இழந்த கதை!

கவலை வேண்டாம், இணையத்தில் - ஆபிதீனையும் சேர்த்து - அங்குமிங்கும் குதிக்கும் ‘மனிதர்கள்’ பற்றிய கதை அல்ல இது (சில 'ஹாரிபிள் ஹஜ்ரத்’களுக்கு முன் வாலே முப்பது மீட்டர் இருக்கும்!).  வெரியர் எல்வின் தொகுத்த 'When the world was young ’ (உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலில் இருக்கும் பழைய நாட்டுப்புறக் கதை இது. தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன். சித்திரம் : அமினா ஜெயல். வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்.
***


 
மனிதர்கள் முதன் முதலில் தம் வாலை இழந்த கதை

மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிரயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள். சிலர் ஆதிமனிதன் பெரிய முட்டையிலிருந்து வெளிவந்ததாக நம்புகிறார்கள். வேறு சிலர், பூமித்தாயின் குழந்தையாய் பூமி பிளந்து மனிதன் வெளிவந்ததாய்க் கூறுகிறார்கள். சிலர் ஒரு தேவதைக்கு மகனாகப் பிறந்தவனே ஆதி மனிதன்  எனவும், இன்னும் சிலர் விலங்கிலிருந்து பிறந்தவனே ஆதி மனிதன் எனவும் சொல்கின்றனர். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு; ஆதி மனிதன், தற்காலம் மனிதனைவிடத் தோற்றத்தில் நிறைய மாறுபட்டிருந்தான். இந்த ஒத்த கருத்தைப் பின்வரும் கதை மூலம் அறியலாம். ஒரிஸாவைச் சேர்ந்த சாரோக்கர்கள் ஆதிமனிதர்களுக்கு வால் இருந்ததாக நம்புகின்றனர்.
 
மனிதர்களுக்கு வால் இருந்த பழங்காலத்தில் அவர்களுடைய வால்கள் தரையைத் தொடுமளவுக்கு நீண்டிருந்தன. ஜனத்தொகை பெருகவே, விசேஷ காலங்களில், கல்யாணக் கூட்டங்களில், சாவுக் கூட்டங்களில் ஒருவருடைய வாலை மற்றவர் மிதித்தனர்; தடுக்கி விழுந்தனர். இது மிகுந்த வேடிக்கையாக இருந்தது.
 
ஒருமுறை கிட்டுங் எனும் கடவுள் சந்தைக்குப் போனபோது வழக்கம்போல் அங்கு ஒரே கூட்டம். நல்ல புகையிலைக்காக கடைகடையாக தேடி அலைந்தபோது யாரோ ஒருவர் வாலினால் தடுக்கிவிட, நிலைகுலைந்து விழுந்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக கல்லின் மேல் விழுந்ததால் முன்வரிசைப் பற்கள் இரண்டு கீழே விழுந்தன. சந்தை முழுதும் சிரிக்க, கிட்டுங்குக்குக் கோபம் வந்தது. இத்தனைக்கும் காரணமான வாலைப் பிடுங்கித் தூர எறிந்தார். பிற வால்கள் இதைப் பார்த்ததும் பயந்துபோய்த் தாமே உடலிலிருந்து கழட்டிக்கொண்டு ஓடின. கிட்டுங்குவின் வால் பனைமரம் ஆனது. பிறவால்கள் புற்களாகி இப்போது துடைப்பம் செய்ய பயன்படுகின்றன.

***
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி பிக்சர்ஸ் (ஷார்ஜா)