Saturday, April 4, 2020

கொரோனாவும்-தமிழகமும்-தமிழக இஸ்லாமியர்களும் - பிலால் அலியார்

வளைகுடாவின் முக்கிய வியாபார நகரமான துபாயில் ஜனவரி மாதம் கடைசி வாரமே கொரோனா தொற்று நோய் குறித்த உரையாடல்கள் தொடங்கிவிட்டன. சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பெரிய இழப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. முதலில் சீனா மட்டுமே பாதிக்கப்படும் என்றே கருதப்பட்டது. ஆனால் பிப்ரவரி இரண்டாவது வாரமே அனைவருக்கும் உயிர் பயத்தை கொரோனா உருவாக்கி விட்டது. கொரானோ தொற்றிலிழுந்து நம்மை காத்துக்கொள்ள அரசுகளும், சுகாதார நிறுவனங்களும் வழிமுறைகளை வகுத்து Social distancing என்றழைக்கப்படும் மக்கள் நெருக்கத்தை குறைக்க திட்டங்களை வகுத்தனர். ஆனாலும் கொரோனாவின் வீச்சும், இழப்பும் இந்த நிமிடம் வரை நம்மை அச்சுறுத்தியே இருக்கிறது. மேலும் நமக்கு தெரிந்து உலகெங்கிலும் கொரோனா பரவலை தடுக்க மத, இன, மொழி, இட வேறுபாடற்று அனைவரும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானோவிற்க்காக பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவை அனைவருக்கும் பொதுவானதாகவும், எவரையும் குற்றம் சுமத்தியும் உருவாக்கப்படவில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்துவதிலும், அவர்களுக்கு மன ரீதியாக உதவுவதிலும் எந்தவொரு நெருடலுமல்லை.

இந்தியாவிலும் கொரானா தொற்று பிப்ரவரி ஆரம்பித்திலேயே கேராளாவில் பதிவு செய்யப்பட்டாலும், இந்திய ஒன்றிய அரசும், மாநில தமிழக அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்காமலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடராமலும் தேங்கி நின்றனர். ஆனால் நிலைமை கையை மீறிச்சென்ற பிறகு மார்ச் மூன்றாம் வாரம் இந்திய அளவில் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. Social distancing என்பது ஏட்டளவிலே இருந்தது, மக்கள் தங்களின் சமய வழிபாடு, சமூக கூடல்களில் இணைந்து பங்கேற்று கொரோனாவை வரவேற்றனர். மேலும் மருத்துவர்களுக்கான, மருத்துவ பணியாளர்களுக்கான நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், மருத்துவர்களே நோய் தொற்று ஆளாகக்கூடிய சூழலும் உருவாகி இருப்பதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் டெல்லி நிஜாமுதீன் பள்ளிவாசலில் கூடிய தப்லீக் ஜமாத் என்ற இஸ்லாமிய மதத்தினர் சிலருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களை பரிசோதனைக்கு அழைத்திருப்பதாகவும் அரசின் சார்பில் செய்தி வெளியாகியது. அது முதல் ஊடகங்கள், சமூக வலை தளங்களான வாட்ஸ்அப்களில் தொடர்ச்சியான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. குறிப்பாக தினமலர் பத்திரிக்கை தப்லீக் ஜமாத்தார்கள் தலைமறைவாகினர் என்று வஞ்சமாக செய்தி வெளியிட்டது. சன்டிவி, நியூஸ் 18 போன்ற செய்தி ஊடகங்கள் தப்லீக் ஜமாத்தார் மூலமாக மட்டுமே கொரோனா தமிழகத்தில் பரப்பபடுவதாக தலைப்பிட்டு செய்திகளை வழங்க ஆரம்பித்தது. கொரோனா பயத்தில் இருந்த சாமானிய பொதுமக்களும் தங்களுக்கு கிடைத்த தொடர்ச்சியான பொய் செய்திகளின் அடிப்படையில் இஸ்லாமியர்களை கொரானோவின் இந்திய தூதுவர்களாக கருத ஆரம்பித்தனர். இதனால் ஒரு சமூக குழப்பமும், அமைதியின்மையும் உருவாகியது. குறிப்பாக பல நகரங்கள், கிராமங்களில் இஸ்லாமியர்கள் தனித்து விடப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அரசின் சுகாதார செயலாளர் அனைத்து தப்லீக் ஜமாத்தினரும் பரிசோதனைக்கு வந்து விட்டனர் என்றும்,  அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ஊடக சந்தப்பில் அறிவித்த பிறகும், இப்போது வரை கொரோனாவிற்கு மத சாயம் பூசப்பட்டு மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வைத்திருக்கின்றனர் பாசிசவாதிகள், ஊடகங்களின் துணையுடன்.

கொள்ளை நோயில் இருந்து ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை காத்து கொள்ள, தங்களுக்குள் பரஸ்பர ஒற்றுமையுடன் இணைத்து பயணிக்க வேண்டிய தருணத்தில், சகோதர்களாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை பிரித்து வைத்திருப்பது, இஸ்லாமியர்களுக்கு மிக கொடுமையான மன அழுத்தத்தை, மனவலியை உருவாக்கி இருக்கிறது. இதை களைய வேண்டிய அரசே,  ஊடங்களின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டும் காணாமல் ஊக்குவிப்பது நிலைமையை மோசமாக்கி வருகிறது.

இந்த சூழலில் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிமுறைகள்  தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அவதூறுகளை களைய சட்ட ரீதியாக நடவடிக்கைகளையும், மாநிலத்தின் ஏனைய முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகளுடன் இணைந்து கீழ்காணும் பணிகளை தாமதிக்காமல் செயல்படுத்த முனைய வேண்டும்.

1. தமிழக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள், ஜமாத்துல் உலமா சபை அனைத்தும் உடனடியாக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை (மருத்துவர்கள், வழக்கறிஞர், தொழில் துறையினர், அரசியல் இயக்கத்தினர், உலாமாக்கள் அடங்கிய குழு)  உருவாக்கி, தமிழக அரசிடம் தப்லீக் ஜமாத்தினர் குறித்த வெள்ளை அறிக்கையை கோர வேண்டும். அரசு உடன்படாத சூழலில் தற்போது இருக்ககூடிய சட்டப்பூர்வ வழிகளை ஆராய வேண்டும்.

2. தமிழக இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழு, தமிழக ஜனநாயக முற்போக்கு அமைப்புகளான திமுக, திராவிட கழகம், மதிமுக, விசிக, காங்கிரஸ், அமமுக, இடதுசாரி இயக்கங்களின் தலைமையுடன் பிரச்சனையின் வீரியம் குறித்து உரையாடி, இஸ்லாமியர்களை பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் கொடுமையை விளக்க வேண்டும். கட்சிகள், ஜனநாயக அமைப்புகளின் மாநில தலைமைகளின் வழியாக அந்தந்த அமைப்புகளின் மாவட்ட, நகர, கிராம நிர்வாகிகளுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி, இஸ்லாமியர்களுக்கான வாழ்வாதார உரிமையை நிலைநாட்டுவது குறுத்து தீவிரமாக வலியுறுத்த வேண்டும்.

3. ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் இஸ்லாமிய பிரமுகர்கள் முடிந்தவரை காவல்துறை அனுமதியுடன் பிறமத, பிறசமூக பிரமுகர்களுடன் உரையாடி, தப்லீக் ஜமாத் குறித்தும், அவர்களின் நோய் தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பு குறித்த அரசின் உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும்.

4. ஒவ்வொரு தனிப்பட்ட இஸ்லாமியனும் தன்னுடன் தொடர்பில் இருக்கும் பிறமத சமூக நண்பர்கள், பிறசமூக அமைப்புகளிடம் நடந்து கொண்டிருக்கும் பிரிவினைவாத பாசிச செயல்பாடுகளை விளக்குவதும், அதனால் இஸ்லாமியர்களுக்கு உண்டான இழப்புகள் குறித்தும் விளக்க வேண்டும்.

5. நாம் ஒவ்வொருவரும் அரசின் நோய் தடுப்பு கட்டுப்பாடு உத்தரவுகளையும், காவல்துறையின் அறிவுறுத்தலையும் எந்தவித சமரசமுமின்றி பின்பற்றுவதே நமக்கும், சமூகத்துக்கும் பலனளிக்குமே தவிர, மதரீதியாக சமரசங்களை மேற்கொள்வது கண்டிக்கப்படக்கூடியாதகவும் இருக்க வேண்டும்.

6. ஒவ்வொரு ஊரில் உள்ள ஜமாத் அமைப்பினரும் இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் இணைந்து அறிவியலுக்கு கட்டுப்பட்டு இந்த கொள்ளை நோயில் இருந்து அனைவரையும் காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்
தற்போதைய ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடு சூழலில் நாம் எவ்வாறு இவற்றையெல்லாம் செயல்படுத்த முடியும் என்ற பெரும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் சமூகத்திற்காக இந்த செயல்பாடுகளை நாம் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்.

தனித்திருப்போம்
விழித்திருப்போம்
நம்பிக்கையுடன் இருப்போம்
சமத்துவம்/சகோதரத்துவம் காப்போம்
கொரோனாவை வெல்வோம்.
*

நன்றி : பிலால் அலியார்