Showing posts with label நாகூர் ரூமி. Show all posts
Showing posts with label நாகூர் ரூமி. Show all posts

Monday, August 28, 2023

மன்னிப்பு (சிறுகதை ) - நாகூர் ரூமி



மன்னிப்பு - நாகூர் ரூமி


சாயங்காலம் ஆரம்பித்த வேதனை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். கால்வலிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. என்றாலும் எங்கோ நெருடுவதை அவனால் உணர முடிந்தது.


வலது பாதத்தைப் பார்த்தான். பெரு விரலிலிருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து விடலாம் போலத் தோன்றியது. ஆயிரம் கோடாரிகளை வைத்து யாரோ உள்ளே கொத்துகிறார்கள். நின்றால், நடந்தால் ம்ஹூம் சாயங்காலத்திலிருந்து விரலைக்கூட அசைக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. எப்படிச் சொல்வது? பாட்டிக்கு மட்டும்தான் தெரியும். அவள் 'அப்பவே சொன்னேனே' என்று அரற்ற ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் புலம்பலை ஒரு முறைப்பு அடக்கிவிடும். ஆனால் மனசாட்சியின் புலம்பலை? சாயங்காலத்திலிருந்தே அவனது அறிவு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து கிடக்கிறது. மீசையில் மண் ஒட்டிவிடுமே என்று சமாளித்து வந்தான். இனிமேல் முடியாது.


பாட்டியின் நாற்பது வருஷ மூடநம்பிக்கைகள் பச்சிலை உருவில் பாதத்தில் தேய்க்கப்பட்டனவே தவிர, வலி குறையவில்லை. பாட்டியின் நம்பிக்கை பச்சிலையாகக் காய்ந்து, உதிர்ந்து விட்டிருந்தது. ராமநாதன் சில தைலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதில் சிங்கப்பூர் 'கோடாலி' தைலமும் ஒன்று. அவனைப் பொறுத்தவரை அதுவும் சர்வரோக நிவாரணி மாதிரி. அதையும் காலில் கொட்டியாயிற்று. விறுவிறுவென்று ஏறியதே தவிர, பாதத்தினுள்ளே நரம்புகளுக்குப் பதில் அக்கினிக் கட்டிகள் தான்.


ஈஸிசேரில் சாய்ந்தபடி காலைத் தூக்கி எதிரிலிருந்த கட்டிலில், மெத்தைமீது போட்டுக் கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந் தாலும் கோடாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.


ராமநாதன் தன் நண்பன் ரவியின் உபாயத்தைக் கையாண்டு பார்த்தான். உடலில் எங்காவது அரித்தால் ரவி சொறிய மாட்டான். மனதின் திடத்தன்மைக்கு உடனே ஒரு போட்டி. 'அரிக்கிறாயா...ம்... அரி... எவ்வளவு நேரம் அரிப்பாய்... பார்க்கிறேன்... நான் சொறியவே மாட்டேன்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்து கொள்வான். தோலின் தினவையும் நகங்களின் பரபரப்பையும் அவன் மனம் வெற்றி கொள்வதை ராமநாதன் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். அதை நினைத்துக்கொண்டான். 'வலிக்கிறாயா... பார்ப்போம்... எவ்வளவு நேரம் வலிப்பாய்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்துகொண்ட கனமே அது சுக்கு நூறாய் உடைந்து போனது. ஆயிரம் ரவிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத வலி.


நத்தைபோல் வந்தது இரவு. ராமநாதன் முனங்க ஆரம்பித்தான். பாட்டி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள். ஒருமுறை முறைத்து, “உடனே டாக்டர் சீனிவாசனை வரச்சொல்லி ஃபோன் பண்ணு," என்றான்.


'அப்பவே சொன்னனே... மாரியாத்தாட்ட விளையாடாதடான்னு'' - போகும்போதும் புலம்பிக் கொண்டே சென்றாள் பாட்டி.


மாரியாத்தா, நகங்களும் மீசையும் கொண்ட மாரியாத்தா! சே... என்ன அறிவு கெட்டவர்கள் என்று நினைத்தான். வலி அதிகமாகியதுபோல் இருந்தது. கண்ணை மூடிக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்.


சீனிவாசன் வந்தார். பாதத்தைத் தட்டிப் பார்த்தார். திருப்பினார் அப்படியும் இப்படியும் சுண்டினார். கடைசியில் ராமநாதனிடம், 'வாட் ஹாப்பண்ட் ஆக்ச்சுவலி?" என்றார். இப்போது என்ன சொல்வது? ஒரு கணம்தான். தயக்கம் உணரப்படுவதற்குமுன் பதில் சொல்லிவிட வேண்டும்.


"காலை உதறினேன். சுவரில் இடித்துவிட்டது''. பாட்டியைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்துக் கொண்டான். அவள்தானே ஒரே சாட்சி. சாட்சியும் மௌனித்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே.


"இடிச்சுதுன்னா சொல்றே?" வீக்கமே இல்லையே?" ஆச்சரியப்பட்டார் சீனிவாசன். 'ஓகே... ஒரு ஆயின்ட்மென்ட் தாரேன், தடவிக்கோ" என்றார்.


''சார்... இரவு நான் எப்படியாவது தூங்கணூம்."


'ஏன், அவ்வளவு வலிக்கிறதா?” என்று கேட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டார்.


ஊசி போட்ட வலியை உணர முடியவில்லை. இமைகள் லேசாக கனத்தன. டாக்டர் காலையில் வருவாராம்.


மனத்தில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.


வீட்டுக்குள் வந்தபோது பாட்டியைத் தவிர யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் சிதம்பரம் கோயிலுக்கு. பாட்டி அடுப்பங்கரையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தான் ராமநாதன். ஓசைப்படாமல் வழக்கம்போல. அப்போது தான் அது நடந்தது.


பாட்டியின் பக்கவாட்டில் எவர்சில்வர் ப்ளேட்டில் மல்லிகைப் பூவாய்ச் சாதம். பாட்டி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவள் பார்க்காதபோது, சோற்றில் வாயை வைத்து நக்கிக் கொண்டிருந்தது மாரியாத்தா. மாரியாத்தா, வீட்டுப் பூனை. பாட்டியின் செல்லப் பூனை. பாட்டி வைத்தபெயர். பாட்டியின் இஷ்ட தெய்வம் மாரியாத்தா. இஷ்டத்துக்குச் சாதத்தை எச்சில் பண்ணிக் கொண்டிருந்தது.


ராமநாதனுக்குப் பூனைகள் என்றாலே கால்கள் பரபரக்கும். நக்கும் சுவாரஸ்யத்தில் மாரியாத்தா இவனைக் கவனிக்கவில்லை. மெல்ல மெல்லப் பூனைபோல் ஓசைப்படாமல் நடந்து அதனருகில் சென்றான்.


அதன் வயிற்றுக்குக் கீழ் தன் வலது பாதத்தை நுழைத்தான். பாட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். அதற்குள் காரியத்தை முடித்து விடவேண்டும். இல்லையேல் சத்தம் போட்டுக் கிழவி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். இந்தச் சனியன் பிடித்த பூனை இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.


கால் பந்தை 'கோல்' நோக்கி உதைப்பதுபோல ஒரே எத்து. பூனை எதிரே இருந்த சுவரில் 'டக்' என்ற ஒலியுடன் பயங்கரமாக மோதிக் கீழே விழுந்தது. விழுந்தபோது 'மோவ்' என்று பரிதாபகரமான ஒரு ஒலியை எழுப்பியது. அந்த ஒலி ராமநாதனைச் சற்றுப் பயமுறுத்தியது. பின்பு பூனை ஓடிவிட்டது.


பாட்டி பார்த்துவிட்டு, "அடப்பாவி! மாரியாத்தா சூலிடா, அடப் படுபாவி” என்று பதறினாள்.


சூல்கொண்ட மாரியாத்தா. ராமநாதனுக்கும் சற்றுப் பாவமாக இருந்தது. அவசரத்தில் வயிற்றின் உப்பலைக் கவனிக்கவில்லை. 


''சரி ...சரி ...இந்தச் சோத்தை வெளியிலே கொட்டு... மாரியாத்தாவாம் மாரியாத்தா...” என்று திட்டிவிட்டு வந்ததுதான். அரைமணியில் ஆரம்பித்தது வலி.


திடீரென்று விழிப்பு வந்தது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. வீடு பாட்டியோடு சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனோடு சேர்ந்து வலது பாதம் விழித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் கோடரிகள்.


ஒரு யோசனை தோன்றியது. அப்படிச் செய்துவிட வேண்டியது தான் என்ற முடிவோடு எழுந்தான். ஹாலின் கிழக்கு மூலையில் உள்ள அலமாரிக்குப் பின்புறம்தான் மாரியாத்தாவின் குடித்தனம். இந்நேரம் அங்கிருக்கிறதோ என்னவோ.


ஹால் விளக்கைப் போட்டான். அலமாரிக்குச் சென்றான். பின்னால் பார்க்கப் பயம். மாரியாத்தா மேலே பாய்ந்து விடுமோ?


மெதுவாக எட்டிப் பார்த்தான். மாரியாத்தா குட்டிகள் ஈன்றிருந்தது. இரண்டு குட்டிகள். வெள்ளையும் சாம்பலுமாய். குட்டிகளை நக்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை நுழைத்தான். இவனைப் பார்த்தவுடன் பளபளக்கும் கண்களுடன் போருக்குத் தயாராவதுபோல் எழுந்து நின்றது.


ராமநாதன் என்ன ஆனாலும் சரியென்று மண்டியிட்டு அமர்ந்தான். மிகுந்த சிரமத்துடன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். வார்த்தைகள் பயனற்றுப் போயின. கரகரவென்று கன்னங்களில் சூடாகக் கண்ணீர் வழிந்தோடியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று தெரியாது. 'சரி போ' என்று மாரியாத்தா உத்தரவு கொடுத்ததுபோல் இருந்தது. எழுந்து வந்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.


காலையில் காப்பியுடன் பாட்டி எழுப்பினாள். விசாரித்தாள். ராமநாதன் பாதத்தைப் பார்த்தான். கோடரிகள் புதைக்கப்பட்டிருந்தன. வலி இறந்து விட்டிருந்தது. உற்சாகமாகப் பாதத்தை ஆட்டிக் காட்டினான். பாட்டி வாஞ்சையாகத் தலையைக் கோதினாள். அறைக்குள் பார்வையை ஓட்டினான் ராமநாதன். அறை வாசலில் நின்று மாரியாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

*

(குமுதம் 27.8.1987)

*

நன்றி : மாரியாத்தா &  நாகூர் ருமி

Monday, April 12, 2021

எச்சில் படாத நோன்பு (சிறுகதை) - நாகூர் ரூமி

ரமலான் ஸ்பெஷல்! நண்பரின் ’குட்டியாப்பா’ சிறுகதைத் தொகுதியிலிருந்து...
*

எச்சில் படாத நோன்பு (சிறுகதை) - நாகூர் ரூமி

அந்த ஓசைக்காகவே காத்திருந்தான் பஷீர். வாப்பா விடும் குறட்டை, காற்றுடன் கிசுகிசுக்கும் தென்னை ஓலைகள், பல்லிகளின் சங்கேத மொழி. எல்லாம் மறுபடி மறுபடி ஒலித்து அவன் செவிகளில் மனப்பாடம் ஆகிக்கொண்டிருந்தன. திடுக்கென்று தூக்கிப்போடும்படி ஒரு குண்டு போட்டார்கள். சில வினாடிகளில் மறுகுண்டு. ஆஹா நோம்புதான்! இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த கற்பனையின் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டு சேவலைப்போல் கிளம்பின. பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் பஷீர். குண்டுகளைத் தொடர்ந்து அந்த ரமலான் மாதத்தின் முதல் விடியலை ஒலித்த 'நஹரா' இசை அவன் சந்தோஷத்தை ஆமோதித்தது. அந்த ஓசைக்காகத்தான் அவன் காத்திருந்தான்.

நாளைக்குத் தல நோம்பு . மாலை, புதுட்ரஸ், கையில் பூச்சென்டு. 'மருவண்டி ' சகிதமாய் ஒரு மினி புடை சூழ சொந்தக்கார வீடுகளுக்கெல்லாம் காட்சி கொடுத்துக் காசு பெறுதல் - நினைக்கும் போதே பஷீருக்கு இனித்தது. அரைவிழிப்பில் இருந்த அம்மாவைத் துரிதப்படுத்தினான். சஹர் செய்ய வேண்டுமே ....

மறுநாள், மாலை மரியாதையுடன் சொந்தக்கார வீடு செல்லும் படலம் தொடங்கியது. பஷீர் நோன்பு பிடிப்பதைப் பார்த்து அவன் ம்மாவுக்கு பொரியரிசி வாசம். மாமா வீட்டுக்குப் போனான் முதலில். மாமா சாய்மா' நாக்காலியில் அழுக்கு முண்டா பனியனும் கைலியுமாய் சாய்ந்திருந்தார். விஷயம் சொன்னவுடன் எந்திரிச்சு 'என்னட வாப்பா , பரக்கத்தா இரி' என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டார்.

"மாமா, உங்க வாய் ஏன் இவ்வளவு நாறுது?'' சிறுவனின் கேள்வி ஒருகணம் மாமாவை சங்கடப்படுத்தியது. 'டேய், மூனாகானா மவன்லடா நீ'' என்று வழிந்து பின்பு பெருமையோடு சொன்னார்.
"டேய் .... நோம்பு புடிச்சிக்கிறேன்ல .... பல்லு வௌக்கக் கூடாது. நா மெளத்தாப்போனா, இந்த நாத்தம் கஸ்தூரி வாசமா மாறிருண்டா பயலே ... இதெல்லாம் ஒனக்கெங்கேப் புரியப் போகுது...''

''மாமா அப்பன்டா நீங்க மௌத்தாப் போறவரைக்கும் இந்த நாத்தம் அடிக்குமே?'' என்று கவலையோடு கேட்டான் பஷீர். வாய்நாற்றம் வெளிப்படுத்திய மறு உலகம் சார்ந்த ஆன்மீக தத்துவத்தைப் புரிந்து கொள்ள பஷீருக்கு வயது பத்தாது என்ற முடிவுக்கு வந்தவராய், "டேய் மூனாகானாமவனா கொக்கா?'' என்று சப்தமாக சிரித்துக்கொண்டே அவன் முதுகில் அழுத்தமாகத் தட்டினார் மாமா.

பகல் இரண்டு மணியளவுக்கு பஷீருக்கு பயங்கரமாகப் பசித்தது. யாருக்கும் தெரியாமல் தண்ணீர் குடித்து விடலாமா என்று நினைத்தான். நாக்கு வறண்டு உலர்ந்து வாய் பூத்தது. சரியாகப் பேசக்கூட முடியவில்லை. வீட்டில் தண்ணீர் குடித்தால் யாரும் பார்த்துவிடுவார்கள். ஜோப்பில் கையை விட்டான். சில்லறைகள் சிரித்தன. கடைக்குப் போய் முட்டாய் வாங்கியாருக்கும் தெரியாமல் தின்றுவிடலாம் என்று முடிவு செய்தான். கடைக்குப் போகும் வழியில் ரஹ்மான் வந்தான். அவன் போன வருஷமே நோன்பு பிடித்தான். அதனால் வாத்தியார் கூட அந்த மாசம் பூரா அவனை அடிக்கவே இல்லை .

"டேய் .... நீ தல நோம்பாடா புடிச்சிக்கறே?''

"ம்''

'ஒனக்குப் பசிக்கலயாடா?'' அநுபவத்தின் பால் விளைந்த ரஹ்மானின் கேள்விக்கு பஷீர் பதில் சொல்ல யோசித்தான். அவனுக்கு எப்போதுமே தன் கஷ்டத்தை யாரிடமும் வெளிப் படுத்துகிற பழக்கம் கிடையாது. அவன் ரத்தம் அப்படி. அவன் வாப்பா இந்த விஷயத்தில் ஒரு பாறை. இவனும் பாறைக்குப் பிறந்தவனாகவே பல விஷயத்தில் இருந்தான்.

"ம்ஹும்"சர்வ சாதாரணமாகச் சொல்ல முயன்றான் பஷீர்.

"எனக்கு ரொம்ப பசிச்சிச்சுடா... யார்கிட்டயும் சொல்லாதே.... நா போன வருஷம் யாருக்கும் தெரியாமே தண்ணியைக் குடிச்சிட்டேனே'' என்று சொல்லிக் கண்சிமிட்டினான்.

தன்னுடைய பிரச்சினை. அதற்கான பஷீரின் ரகசியமான தீர்வு எல்லாம் ஊருக்கே பொதுவானதாக இருப்பதை நினைத்து பஷீர் ஆச்சர்யப்பட்டான். ரஹ்மானை விட்டு வரும் போது தன் முடிவை மாற்றிக்கொண்டான். எல்லாருக்கும் தெரிந்த அந்த ரகசியத்தைப் பின்பற்றப் பிடிக்கவில்லை . தனக்கு மட்டும் உரிய ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். முட்டாய் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டான். ரொம்ப யோசனைக்குப் பிறகு, அந்த முடிவுக்கு வந்தான். தெருவில் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யாரும் கவனிக்கவில்லை. அதுவரை காறித்துப்பிக் கொண்டு வந்த எச்சிலை விழுங்கினான். விழுங்கும் போது சப்தம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் என்றாலும் ஆதாமின் ஆப்பிள்' ஸ்லோமோஷனில் ஏறி இறங்குவதை அவனால் கேட்க முடிந்தது. தொண்டையையும் குடலையும் நனைத்து குளிர்காலத்தில் சுடுதண்ணியில் குளித்த இதமாக இறங்கிய உமிழ்நீர் பெருநாள் சாப்பாட்டைவிட அப்போது சுவையாக இருந்ததை உணர முடிந்தது. இந்த வழி மிகவும் ரகசியமானதாகவும் வசதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தது. பசி கூட அடங்கிப் போனதாகத் தோன்றியது.

ஊரை ஒரு ரவுண்டு வந்தான். ரஷீது நானாசிங்கப்பூர் கடையில் ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலக னின் போன உயிரை எப்படி ஆண்டவன் பாவா ரூபத்தில் வந்து மீட்டுத் தந்தான் என்று ஹனீபா மிகவும் உருக்கமாக ரொம்ப நேரம் பாடிக்கொண்டிருந்தார். அந்த மாதத்திற்கே உரிய நிறங்கள், வாசனைகளை ஊர் அடையத் தொடங்கியிருந்தது. காதிரியா மதரஸாவில் ஒரே பிள்ளைகள் கூட்டம். எல்லாம் கையில் தூக்குச் சட்டிகளுடன் செம்சட்டியைச் சுற்றி ஆக்ரமித்துக் கொண்டிருந்தன. கஞ்சி ஊற்ற ஊற்ற குழந்தைகள் நகர்ந்து கொண்டிருந்தன (விரட்டப்பட்டனர்). பணக்காரப் பிள்ளை களை அறிந்த அகப்பை இரண்டு முறை அள்ளி அவர்கள் தூக்குச் சட்டிகளை நிரப்பியது.

மாலை ஐந்தே முக்காலுக்கெல்லாம் செய்யது பள்ளி ஞாபகம் வந்தது. நோன்பு அங்கே திறந்தால் தான் திறந்த மாதிரி இருக்கும். நோன்பின் சுவையேறிய கஞ்சி அங்குதான் கிடைக்கும் . ம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டான். ப்ராசாப்பம், எறச்சியானம், வட்லப்பம் என்றெல்லாம் ம்மா சொல்லி ஆசை காட்டிய போதும் செய்யது பள்ளியில் நோன்பு திறக்கவே விரும்பினான் பஷீர்.

எச்சில் விஷயம் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. செய்யது பள்ளியில் கொட்றாக்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முக்கியப் பிரமுகர்கள் பள்ளியின் உள்பகுதியில் தூண்களில் சாய்ந்து
கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களைச் சுற்றி கஞ்சி நிரம்பிய கொட்றாக்கள் காத்துக்கொண்டிருந்தன.

''வாங்கனி மூனாகானா தலநோம்பா புடிச்சிக்கிரியும்'' என்ற பஷீரைப் பார்த்து சிரித்தார் உமர்காகா. ஏன் எல்லோரும் தன்னை வாப்பாவின் பெயரைச் சொல்லியே அழைக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டான் பஷீர். பஷீருக்காக இரண்டு கொட்றாக்களை வைத்தார் அவர். பெரியவர்களெல்லாம் ஹவ்தில் போய் ஒதுவு செஞ்சபிறகு வந்தமர்வதைப் பார்த்த பஷீர் எழுந்து சென்று தானும் அதைப் போலச் செய்து விட்டு வந்து அமர்ந்து கொண்டான். உட்காரும் போது கவனமாக பெரிய கடிகாரத்துக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டான்.

சின்ன முள் ஆறிலும் பெரிய முள் பன்னிரண்டிலும் நின்றன. திரும்பப் பெரிய முள் ஆறருகில் வரவேண்டும். 'என்னாங்கனி, மூனாகானா பசிக்குதா மணி பாக்குறியுமே'' சிரித்துக்கொண்டே ஈரக்கைகளை மேல் துண்டால் துடைத்துக்கொண்டே பெரியவர் தானும் ஒரு முறை பார்த்துக்கொண்டார். பஷீர் எல்லாரையும் கவனித்தான். சிலர் உள்ளே நுழையும்போதே காலை சாக்குத் துணியில் இப்படியும் அப்படியும் தேய்ப்பது போல மணி பார்த்துக்கொண்டார்கள். சிலர் 'யா அல்லாஹ்' என்று முகத்தை உயர்த்தி தாடியைக் கோதி முகத்தைக் கீழே இறக்கும் போது மணியைப் பார்த்துக்கொண்டே இறக்கினார்கள். பஷீரிடம் நிறையப்பேர் பேசினார்கள். பேசிய எல்லார் வாயிலும் மாமா இருந்தார். மௌத்துக்குப் பிறகு கஸ்தூரி வாசம் அதிகம் பெற எல்லாரும் போட்டி போடுவது தெரிந்தது. என்னவோ பஷீருக்கு அந்த கஸ்தூரிப்போட்டியை நினைத்தாலே குமட்டியது.

அந்த ஊரின் பெரும் பணக்காரரான எஸ்.ஜே. வந்து வழக்கம் போல எல்லாருக்கும் ஆப்பம் வாடா தர்மம் செய்தார். கஞ்சியைப் பார்த்தான் பஷீர். மேலே ஆடை விழுந்து தேங்கி ஆடாமல் கொட்றாவில் நின்றது கஞ்சி. கஞ்சியின் கண்ணாக நடுவில் பேரீச்சம்பழம் . ஓரத்தில் சம்பால் ஒட்டிக்கொண்டிருந்தது. எஸ்.ஜே. கொடுத்த ஆப்பத்தை வாங்கி கஞ்சி கலையாமல் அதன்மேல் வைத்து, அதன்மேல் வாடாவை வைத்தான் பஷீர். பொட்டியில் இருந்த வாடா ஆப்பங்களையெல்லாம் கொடுத்தபின் எஸ்.ஜே. பஷீரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். மூன்று கொட்றாக் கஞ்சிகளைக் கொண்டு வந்து அவர்முன் பவ்யமாக வைத்தார்கள். பஷீருக்கு சந்தோஷமும் ஆச்சர்யமும் எப்போதும் காரிலேயே போகும் எஸ். ஜே. நானாவுக்கும் கஞ்சிதானா?

திடுக்கென்று தூக்கிப்போடும் வகையில் தர்காவில் குண்டு போட்டார்கள். எல்லாம் நோன்பு திறக்கும் துஆ ஓதினார்கள். பஷீர் கையை மட்டும் அவர்களைப் போல ஏந்திக்கொண்டு ஓதுவது போல் முணுமுணுத்தான். கஞ்சி குடிக்கும் போது மறுபடியும் எச்சில் ஞாபகம் வந்தது.

- மணிச்சுடர், 1988
*
நன்றி : நாகூர் ரூமி , ஸ்நேகா

தொடர்புடைய பதிவு :
ருசிக்காலம் - ஆபிதீன்

Monday, October 30, 2017

நாகூர் ரூமிக்கு ஒரு கடிதம் (Dec'1995)

அமைதியாக எழுதும்போது ஆபிதீன் கையெழுத்து எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சான்று ! 'ரியாலத்' (ஆன்மீகப் பயிற்சி) சம்பந்தமாக நண்பர் ரஃபிக்கு - டிசம்பர் 1995-ல் எழுதியது. கடிதத்தின் பின்னணி ஓவியமாக இருப்பது - நான் வரைந்திருப்பது - எங்கள் ஹஜ்ரத். 'மீண்ட பொக்கிஷம்' என்ற தலைப்பில் ஒரு பதிவாக ரஃபி அவருடைய வலைப்பக்கத்தில் முன்பு இதைப் பகிர்ந்திருந்தார். எதற்கும் இங்கேயும் போடுகிறேன் :) - AB

இமேஜைப் பெரிதாக்க இங்கே 'க்ளிக்' செய்யவும்

தொடர்புடைய பதிவு :
நாகூர் ரூமியின் கடிதம் (2000)

Tuesday, September 2, 2014

லூகி பிராண்டெலோவின் 'யுத்தம்' (தமிழில் : நாகூர் ரூமி)

அரும்பு இதழில் 1988-ம் ஆண்டு வெளியான நாகூர் ரூமியின் மொழிபெயர்ப்பு இது. அங்கே ஒன்றும் பிரச்சனையில்லை. 2004 திண்ணை இதழில் வெளியானபோது - எழுத்துரு மாற்றம் காரணமாக - நிறைய பெயர்ப்புடன் இருந்தது (அவர் எல்லாம்  ''வர்' ஆகியிருக்கும்; அசிங்கமான உலகம் 'சிங்கமாகியிருக்கும்) . இன்னும் 'ப்படியேதான் இருக்கிறது. தேவையான இடங்களில் 'அ' சேர்த்து இப்போது மாற்றியிருக்கிறேன். சிறந்த கதை. சிரத்தையோடு அவாசியுங்கள்!. - ஆபிதீன்.
***

தமிழில் : நாகூர் ரூமி


ரோம் நகரிலிருந்து இரவு எக்ஸ்பிரஸில் வந்த பிரயாணிகள் சுல்மானாவுடன் மெயின்லைனில் இணையும் அந்தக் காலத்து பாணி சின்ன லோக்கல் ரயிலில் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வதற்கு சின்ன ஸ்டேஷனான பாப்ரியானோவில் விடியும் வரை தங்க வேண்டியிருந்தது.

விடியலில், அடைசலும் புகையுமாக இருந்த, ஏற்கனவே ஐந்து பேர் தங்கள் இரவைக் கழித்திருந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குள் ஏற்றப்பட்டாள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஒரு தடித்த பெண்மணி. ஏறக்குறைய வடிவமற்ற கட்டு ஒன்றைப்போல. அவளுக்குப் பின்னால் மூச்சிறைத்துக் கொண்டும், முனகிக் கொண்டும், சிறிய, மெல்லிய, பலவீனமான, மரண வெளுப்புக் கொண்ட முகத்துடன், சிறிய ஒளி பொருந்திய கண்களுடன் சங்கடப்பட்ட்டுக் கொண்டும் கூச்சமுள்ளவன் போன்ற தோற்றத்துடன் அவள் கணவன் பின் தொடர்ந்தான். கடைசியாக ஒரு மாதிரி இடம் பிடித்துக்கொண்டு, உதவியதற்காக சக பிரயாணிகளுக்கு நன்றி கூறினான் பணிவாக. தன் கோட்டுக் காலரை கீழே இழுத்துவிட முயற்சித்துக்கொண்டிருந்தாள் அவன் மனைவி. அவள் பக்கம் திரும்பி பணிவாக விசாரித்தான்.

' இப்பொழுது உனக்கு எப்படி இருக்கிறது ? '

அவனுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக தனது முகத்தை மறைக்கும் விதமாய் காலரை மேலிழுத்து விட்டுக்கொண்டாள். ' அசிங்கமான உலகம் ' என்று சோகமான புன்னகையோடு லேசான குரலில் சொல்லிக் கொண்டான் அவன். மேலும் தனது பாவப்பட்ட மனைவி ஏன் இரக்கப்பட வேண்டியவள் என்று தன் சக பிரயாணிகளுக்கு விளக்க வேண்டியது தனது கடமை என்று நினைத்தான்.

அவளது ஒரே மகனை யுத்தம் அவளிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தது. அவள் மகனுக்கு இருபது வயது. அவனுக்காக தங்கள் முழு வாழ்வையும் அவர்களிருவரும் அர்ப்பணித்திருந்தனர்.

அவனுக்காக சுல்மானாவில் இருந்த தங்கள் வீட்டைவிட்டு அவனைத் தொடர்ந்து ரோம் நகருக்கு வந்திருந்தனர். அங்குதான் அவன் மாணவனாகவும் குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்காவது போர்க்களத்திற்கு அனுப்பப்பட மாட்டான் என்ற உத்தரவாதத்தோடு அவனுக்கே விருப்ப மிருந்தால் மட்டும் போருக்குச் செல்லக்கூடியவனாகவும் இருந்தான். திடீரென்று இப்போது மூன்று நாட்களுக்குள் போருக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் சென்று அவனை வழியனுப்பும் படியாகவும் தந்தி வருகிறது.

தனது பெரிய கோட்டுக்குள் அந்த அம்மாள் உடலை திருகிக் கொண்டும் வேதனையில் முணுமுணுத்துக் கொண்டும், சமயங்களில் ஒரு மிருகத்தைப்போல் கோபமாக முனகிக்கொண்டும் இருந்தாள். தனது கணவனின் விளக்கங்கள் எல்லாம் இரக்கத்தின் நிழலை இவர்களிடமிருந்து எடுக்க முடியாது ஏனென்றால் அவர்களும் தன்னைப் போன்ற ஒரு நினைவிலேதான் இருப்பார்கள் என்று நிச்சயமாக உணர்ந்தாள்.

அவள் கணவன் தந்த விளக்கங்களை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :

'உங்கள் மகன் இப்போதுதானே போர்க்களத்துக்குப் போகிறான். நீங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் மகன் முதல் நாள் போருக்கே அனுப்பப்பட்டு விட்டான். இரண்டு தடவை காயத்தோடு திரும்பி வந்தான். மறுபடியும் போயிருக்கிறான். '

'எனக்கு மட்டும் என்ன ? இரண்டு மகன்களும் மூன்று சகோதர மக்களும் களத்தில் இருக்கின்றார்கள். ' என்றார் இன்னொரு பிரயாணி.

'இருக்கலாம். ஆனால் என்னுடைய விஷயத்தில் எனக்கு ஒரே ஒரு மகன்தான் ' என்றார் கணவர்.

'அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட முடியும் ? ஒரே மகன் என்றால் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுவீர்கள். நிறைய குழந்தைகள் இருந்தால் ஒரே மாதிரி நேசிக்க முடியும். பெற்றோரின் அன்பு என்ன ரொட்டித் துண்டா, எல்லோருக்கும் சரிசமமாக பங்கிட்டுக் கொடுக்க ? ஒரு தகப்பன் என்பவன் வித்தியாசமில்லாமல் தன் எல்லா குழந்தைகளுக்கும் அன்பை முழுமையாகத்தான் தருகிறான். ஒரு பிள்ளையானால் என்ன, பத்து பிள்ளையானால் என்ன ? இப்போது என் இரண்டு மகன்களுக்காக வேதனைப் படுகிறேன் என்றால் ஒவ்வொருத்தனுக்கும் பாதிபாதியாகப் படவில்லை.. '

'உண்மைதான்..உண்மைதான் ' பெருமூச்சு விட்டார் சங்கடப்பட்ட கணவர். ஆனால் ஒரு வேளை - நிச்சயமாக உங்கள் விஷயத்தில் நடக்காது என்றே வைத்துக்கொள்வோம் - ஒரு தந்தை தன் இரண்டு மகன்களை களத்தில் விட்டு, ஒருவன் இறந்து போனால், அந்த தந்தையைத் தேற்ற ஒரு மகனாவது மிஞ்சுவானல்லவா.. ஆனால்.. '

'ஆமாம்.. ' இடையில் புகுந்தார் ஒருவர். ' தேற்றுவதற்கு ஒரு மகனிருப்பான்தான். ஆனால் அந்த ஒரு மகனுக்காக அந்த தந்தை உயிர் வாழ வேண்டுமல்லவா..ஒரே மகன் என்றால் மகன் போனதும் தந்தையும் இறந்து தனது துக்கத்துக்கு முடிவு கட்டலாம் அல்லவா ? இந்த இரு நிலைகளில் மிகவும் மோசமானது எது ? என் நிலை உங்களதை விட மோசமானது என்று உங்களுக்கு இன்னும் படவில்லையா ? '

' நான்சென்ஸ் '. இடையில் புகுந்தார் வெளுத்த பழுப்பு நிறமும் ரத்தச் சிவப்புக் கண்களும் சிவந்த முகமும் கொண்ட தடித்த இன்னொரு பிரயாணி.

'அவருக்கு மூச்சு வாங்கியது. பலவீனப்பட்ட அவரின் உடம்பு தாங்கிக்கொள்ள முடியாத கட்டுக்கடங்காத வலிமை கொண்ட அகவன்மை அவரின் உப்பிக்கொண்டிருந்த கண்கள் வழியாக உடைந்து படர்வதுபோல் தோன்றியது.

' நான்சென்ஸ் ' என்றார் மறுபடியும். இரண்டு இல்லாத பற்களை மறைப்பதுபோல் வாயைப் பொத்திக்கொண்டு. ' நான்சென்ஸ், நம்முடைய நலனுக்காகவா பிள்ளை பெறுகிறோம் ? '

சங்கடத்துடன் மற்ற பிரயாணிகள் அவரைப் பார்த்தார்கள். போரின் முதல் நாளில் இருந்தே மகனை அனுப்பியிருந்த தந்தை பெருமூச்செறிந்தார். ' நீங்கள் சொல்வது சரிதான். பிள்ளைகள் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நாட்டுக்குச் சொந்தமானவர்கள்தான். '

தடித்த பிரயாணி அப்படியா என்பது போலப் பதில் கொடுத்தார்.

'பிள்ளை பெறும்போது நாம் நாட்டைப் பற்றி நினைக்கிறோமா ? நம் மகன்கள் பிறக்கிறார்கள் ஏனெனில்..சரி..ஏனெனில் அவர்கள் பிறக்க வேண்டும்.. அவர்கள் பிறக்கும்போது நமது உயிரையும் அவர்களோடு எடுத்துக் கொண்டல்லவா பிறக்கிறார்கள்.. இதுதான் உண்மை. அவர்களுக்கு இருவது வயது வரும்போது நாம் அந்த வயதில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள். நமக்கும் தாய் தந்தை இருந்தார்கள். ஆனால் அது மட்டும் அல்லவே.. மற்ற விஷயங்களும் இருக்கத்தானே செய்தன ? பெண்கள்.. சிகரெட்..மாயை..புதிய உறவுகள்.. அப்புறம் நாடு..ஆமாம் அதன் அழைப்புக்கும் நாம் பதில் சொல்லித்தானே இருப்போம் - நம் இருபதுகளில் - நம் தாய் தந்தை வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் ? இப்போ இந்த வயதில் நாட்டுப்பற்று இன்னும் அதிகமாக உள்ளது. நம் பிள்ளைகள் மீது வைத்துள்ள அன்பைவிட அதிகமாக உள்ளது. இப்போ நம் மகன்களுக்காக நாம் போகலாம் என்றால் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொள்ள யாராவது இருக்கிறீர்களா ? '

சுற்றிலும் அமைதியாய் இருந்தது. எல்லோரும் ஆமோதிப்பதுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

' ஏன், நம் இருபது வயது மகன்களின் உணர்வுகளை நாம் ஏன் மதிக்கக் கூடாது ? தங்களுடைய இந்த வயதில் பெற்றோர் பற்றைவிட நாட்டுப்பற்று பெரிது என்று அவர்கள் நினைப்பது இயற்கைதானே ? ( நான் நாகரீகமான பையன்களைப் பற்றித்தான் பேசுகிறேன்.) வீட்டைவிட்டு நகர முடியாத கிழப்பையன்களாக நம்மை அவர்கள் நினைப்பதும் இயற்கைதானே ? நாடு என்று ஒன்றிருந்தால், பசியால் சாகாதிருக்க எல்லோரும் ரொட்டித்துண்டு சாப்பிடுவது போல, நாடு என்பது ஒரு இயற்கையான அவசியம் என்றிருக்குமானால், யராவது ஒருவர் அதைக் காக்கப் போய்த்தான் ஆக வேண்டும். நம் மகன்கள் போகிறார்கள் இருபதுகளில், அவர்களுக்குத் தேவை கண்ணீரல்ல ஏனெனில் அவர்கள் இறந்தால் உணர்ச்சிப் பெருக்கிலும் மகிழ்ச்சியாகவும் இறக்கிறார்கள். நாகரீகமான இளைஞர்களைப் பற்றித்தான் மறுபடியும் குறிப்பிடுகின்றேன் வாழ்வின் அசிங்கமான பகுதிகளைப் பார்க்காமல், அதன் களைப்பூட்டும் தன்மையை, சின்னத்தனத்தை, மாயையின் கசப்பை உணராமல் ஒருவன் இளமையாகவும் சந்தோஷமாகவும் இறக்கின்றானென்றால், அதைவிட நாம் அவனுக்காக வேறென்ன கேட்க முடியும் ?

'எல்லாரும் அழுவதை நிறுத்த வேண்டும். சிரிக்க வேண்டும் என்னைப்போல. அல்லது குறைந்த பட்சம் என்னைப்போல இறைவனுக்கு நன்றியாவது செலுத்த வேண்டும். ஏனென்றால் என் மகன் இறப்பதற்கு முன் எப்படி தான் விரும்பியிருக்க முடியுமோ அப்படித் தன் வாழ்வை முடித்துக்கொண்டதாக, திருப்திகரமாக இறந்தபோது எனக்குச் செய்தி அனுப்பினார்கள். அதனால்தான் நான் துக்க உடைகூட அணியவில்லை தெரிகிறதா ? '

தன் லேசான மஞ்சள் கலந்த பழுப்புக்கோட்டை ...காட்டினார். அவர் சிவந்த இதழ் இருந்த இடத்திற்கு மேல் நடுங்கியது. கண்கள் அசைவற்றும் வெளுத்தும் இருந்தன. தேம்பலைப் போன்றதொரு மெல்லிய சிரிப்பில் அவர் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

'நிச்சயமா, நிச்சயமா ' என்று ஆமோதித்தனர் மற்றவர்கள். ஒரு மூலையில் தன் கோட்டுக்குக் கீழே ஒரு கட்டாகத் கிடந்த அந்த அம்மாள் அமர்ந்து அவர் சொன்னதயெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். தன் ஆழ்ந்த துயரத்தை மாற்றும் ஏதாவதொன்றை தன் நண்பர்களின், கணவனின் வார்த்தைகளில் காண, கடந்த மூன்று மாதங்களாக முயன்று வந்தாள். ஒரு தாய் தன் மகனை மரணத்துக்கோ அல்லது ஒரு அபாயகரமான வாழ்வுக்கோ எப்படி அனுப்பிவிட்டுஅமர்வது என்று கற்றுத்தருகின்ற ஏதாவதொன்றுக்காக. ஆனால் இது வரை சொல்லப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுகூட அப்படிப்பட்டதாக அவள் காணவில்லை. அவள் நினைத்தவாறு யாரும் தன் உணர்வுகளைப் பங்கிடமுடியாது என்பதைக்காண அவளின் துக்கம் அதிகமாகத்தான் ஆக்கியது.

ஆனால் இப்போது அந்த பிரயாணியின் வார்த்தைகள் அவளை ஆச்சரியப்படுத்தின. ஏன், ஸ்தம்பிக்க வைத்தன. தன் மகன்களின் புறப்பாட்டுக்கு மட்டுமல்ல, அவர்களின் மரணத்துக்குக்கூட அழாமல், எந்தக் குற்றமும் சொல்லாமல், வரும் வேதனையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தந்தைகளின், தாய்களின் உயரத்துக்குத் தன்னால் எழ முடியவில்லையே என்பதையும், அவர்களல்ல, தான்தான் தவறு செய்துவிட்டோம் என்பதையும் திடீரென்று உணர்ந்தாள்.

தலையை உயர்த்தினாள் தனது மூலையிலிருந்து. சற்று முன்னால் வந்து தன் மகன் எப்படி மகிழ்ச்சியாகவும் வருத்தங்களின்றியும் அவனது அரசனுக்கும் நாட்டுக்கும் ஒரு ஹீரோவாக இருந்து வீழ்ந்தான் என்ற விபரங்களைத் தன் நண்பர்களுக்கு  அவர் விளக்கிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகக் கேட்டாள். இதுவரை கனவுகண்டிராத உலகினுள் தடுக்கி விழுந்துவிட்டதைப் போலிருந்தது அவளுக்கு. இதுவரை அவள் அறியாத உலகம். தன்மகனின் மரணம் பற்றி எதையும் தாங்கும் இதயத்தோடு பேசிய துணிச்சலான அந்த தந்தையை எல்லோரும் பாராட்டியதைக் கேட்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பின் திடீரென்று இதுவரை சொல்லப்பட்டது எதையும் கேட்காதது போல, கனவிலிருந்து விழிப்பது போல அந்த கிழவன் பக்கம் திரும்பிக் கேட்டாள்:

'அப்படீன்னா, உங்க மகன் உண்மையிலேயே இறந்துவிட்டானா ? '

எல்லோரும் அவளையே பார்த்தனர். தனது பெரிய, உப்பிக்கொண்டிருந்த, பயங்கர வெளுப்பாயிருந்த, பழுப்புள்ள கண்களை அவள் முகத்தில் ஆழமாகப் பொருத்தி அந்தக் கிழவரும் அவளைப் பார்க்கத் திரும்பினார். கொஞ்ச நேரம் அவர் பதில் சொல்ல முயன்று கொண்டிருந்தார். திரும்ப அவளையே பார்த்தார். ஏதோ அப்போதுதான் அந்த அபத்தமான, சம்பந்தமற்ற கேள்வியில்தான் தன் மகன் உண்மையிலே இறந்துவிட்டதையும் அவன் இனி எப்போதும் திரும்பி வரமாட்டான் என்பதையும் திடீரென்று உணர்ந்து கொண்டமாதிரி அவர் முகம் சுருங்கியது. பயங்கரமாகச் சிதைந்தது வடிவம். பின்பு அவசரமாக தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்தார். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க, கட்டுக்கடங்காமல், நெஞ்சுடைக்கும் வகையில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

***

அரும்பு, அக்டோபர், '88.

லூகி பிராண்டெலோ பற்றிய குறிப்பு :

லூகி பிராண்டெலோ ஒரு இத்தாலிய எழுத்தாளர். இத்தாலியின் சிஸிலியின் 'க்ரிகெண்டோ என்ற ஊரில் ஜுன் 28, 1867 ல் பிறந்து, டிசம்பர் 10, 1936 ரோம் நகரில் இறந்தார். 1934 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரோம் மற்றும் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகங்களில் படித்தவர். தான் பிறந்த ஊரின் வட்டார வழக்கு பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர்.

முதலில் கவிதைகளும் பின் சிறுகதைகளும் எழுதிய இவர் பின்னர் நாடகம்தான் தனக்கான களம் என்று அறிந்து கொண்டார். இவர் எழுத்தில் உண்மைக்கும் உண்மை என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் காண முடியும். அவர் மனைவி பிற்காலத்தில் மன நோய்க்கு ஆளானது, வறுமை, உளவியலில் இவருக்கு இருந்த ஆழமான ஆர்வம் ஆகியவை காரணமா என்று தெரியவில்லை. அவரே கூறுகிறார் :

'நம் வாழ்க்கை ஒரு சோகமான விதூசகமாக உள்ளது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்ற தேவைகொண்டவர்களாக நாம் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தமக்கான நிஜங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் காலம் அவற்றை மாயை என நிரூபித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஏமாளிகளை நோக்கிய ஒரு பரிவே எனது கலை '. 1920 ல் அவர் கூறிய இந்த கருத்துக்கள் இந்த சிறுகதையையும் புரிந்து கொள்ள உதவும்.
***
***
நன்றி : நாகூர் ரூமி , திண்ணை  & 'அ'

Sunday, August 31, 2014

நாகூர் ரூமியின் “தாயுமானவள்” குறுநாவல் அறிமுகமும் விமர்சனமும் - சு.மு.அகமது



நாவலாசிரியர் இதைகுருநாவல் என்று சொன்னாலும் கோபித்து கொள்ளமாட்டார் என்று நம்பலாம்.தனது குருவான தாயம்மா(பாட்டி) பற்றின கதையாடல் தான் இந்த குறுநாவல்.இந்த புத்தகம் இவர் எழுதினவற்றுள் ஏகதேசம் நாற்பதுக்கு மேல் ஐம்பதற்குள் ஒன்றாக இருக்கலாம்.

நாகூர் ரூமிக்கே உரித்தான ஹாஸ்ய பாணியில் வழமையான துவக்கம்.மறுபடியும் ஒருகுட்டியப்பாவை எதிர்நோக்கி வந்தவனுக்கு மண்டையின் மீது ஒரு குட்டு வைக்க இவர் காத்திருப்பது அப்போது தெரியாமல் போனது.நாகூருக்கே உரித்தானஸ்பெஸல் லேங்குவேஜ் ஸ்லேங்ஆங்காங்கே தெறித்தாலும் தடையேயில்லாமல் கதையினூடாக பயணத்தை துவக்க முடிகிறது.

ஆனால் கண்டிப்பாக இரண்டாம் அத்தியாயத்தை கடந்து உங்களால் நாவலின் உள்ளே செல்லவே முடியாது.சரி முதலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்து திரும்பிப்பார்த்தால்...திண்ணைக்கு திண்ணை தாவி விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன் நமது விரலை பிடித்து நம்மை எங்குமே செல்ல விடாது தடுத்துவிடுகிறான்.நாமும் அவனோடு சேர்ந்து விளையாடலாம் தான்.ஆனால் நம்மை கதாசிரியர் நிறுத்தி வைத்திருக்கும் இடம்...?விளையாட்டுச்சிறுவனின்மவுத்தான தாயை கிடத்தியிருக்கும் வீட்டின் திண்ணையில்.

உம்மா கெடந்து ஒறங்குறா’.

இப்படி தனக்கு பாடம்(கிதாபு) ஓதிக்கொடுக்கும் ஹஜரத்திடம் சிறுவன் கூறுவதாய் நாமே ஒரு சிறு நூலிழையை ஒட்டிக் கொள்ளலாம்.ஏனென்றால் நம்மை கதையோடு ஒன்றவிட்டு வேடிக்கை பார்க்க காதாசிரியர் பிரயத்தனமே படவில்லை.தானாகவே அமைந்துவிடுகிறது சுயத்தை பதியும் போது இப்படியான நிகழ்வுகள்.தனது தாயின் மரணத்தைக்கூட அறியாத பருவத்தில் தனது பால்யத்தை தொலைத்து நிற்கும் ஒரு சிறுவனின் மனவோட்டத்தை அழகாக சொல்வதில் வெற்றியாளராய் மாற்றமடைவதை நீங்களும் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

இந்தகுட்டை’(மோதிரக்கை குட்டு) மண்டையில் வாங்கின கையோடு மௌனம் என்ற ஒன்று மட்டும் இல்லாது போயிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும் என்ற எண்ணமெழ,

மௌனத்தை மௌனத்தால் மட்டுமே மனனம் செய்ய முடியும். தனிமையோ வெறுமையோ வலுவில் மௌனத்தை ஸ்தாபிக்க முடியாது.மனம் விரும்பும் போது மட்டுமே மௌனம் சாத்தியப்படும்.மனதை விரும்பும் சூழலுக்கு நாம் ஆட்படுத்தலாம். விரல் வழி கசியும் மௌனம் கூட வார்த்தைகளால் தான் அலங்கரிக் கப்படுகிறதுபோன்ற தத்துவங்கள்(!?) எனக்குள் (கு)தித்தன.

வலியை நிரப்பிக்கொண்டு வாழ்க்கையோடு அல்லல்படுவர்களை எந்த மூலையிலிருந்தாவது நம்மை போன்றவர்கள் வருத்தியிருக்கலாம். அவைகளை புறந்தள்ளும் இரங்கும் மனமும் இறைஞ்சும் குணமும் மனிதனுக்கே உரித்தான சிறப்பியல்புகளெனதாயுமானபாட்டியம்மாவின் மூலம் மீண்டும் நிரூபணமாக்கியுள்ளது இந்த குறுநாவல்.

பார்வைகள் வித்தியாசப்படலாம்.தன்னிலையிலிருந்து இறக்கம் கொண்டு இரக்கப்படுதல் மனிதநேயம்.தாயை இழந்த ஒரு சிறுவனின் வாழ்வியல் போராட்டத்தை சுருங்கச்சொல்லியதில் கதைச்சொல்லி ஏற்றம் பெறுகிறார் எனலாம்.

இது தாண்டா வாழ்க்கை (’ஜிகிர்தண்டா’) என்பதை முன்பே உணர்ந்தவரின் நெகிழ்வான படைப்பிது.

கடைசியாக இதை சொல்லி முடித்து கொள்வோம்.

நிழலுக்கென்ன
ஒளிக்கும் தனக்கும் இடையே
இருக்கின்றவற்றில் தான் பிரச்சினை
ஒன்று
உயிர்ப்புடனும்
மற்றது
உணர்வற்றதாயும் பயணிக்கிறது

- சு.மு.அகமது
***
நன்றி :  சு.மு.அகமது | https://www.facebook.com/musthaqsyedahmed/