Showing posts with label கமல்ஹாசன். Show all posts
Showing posts with label கமல்ஹாசன். Show all posts

Monday, December 17, 2012

சுரண்டல்: DTH/ விஸ்வரூபம்/ கமல்... - தாஜ் கட்டுரை


கமல்,
தனது 'விஸ்வரூபம்' படத்தை
DTH -வழியே
T.V.யில் காண்பிக்க இருக்கிறார்!

அதாவது...
டிஸ்-ஆண்டனா - பிளஸ் -
செட்டப் பாக்ஸ் வசதியுடன்
T.V. பார்ப்போர்களில்...
எவரெவர் விரும்புகிறார்களோ
அவர்களெல்லாம்
அப்படத்தை கண்டு களிக்க முடியும்.

அந்த துடிப்பானவர்கள்
விஸ்வரூபம் காண
மூன்று மணிநேர பேக்கேஜிற்கு
பணம் செலுத்தும் பட்சம்
பார்க்க முடியும்.

தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு
சுமார் எட்டு மணி நேரம் முன்னரே
T.V.யில் அப்படத்தை
அந்த வகையினில் காண
ஆர்வம் கொள்ளும் ரசிகர்களுக்காக
வசதி செய்துதர முனைந்திருக்கிறார்...
அப்படத்தின் நாயகரும், இயக்குனரும்,
தயாரிப்பாளருமான கமல்!

அதாவது...
உலகக் கிரிக்கெட் நிகழ்ச்சிகள்
நடைபெறும் போது
அந்த கிரிக்கெட் போர்ட்
இப்படித்தான்
T.V. மூலம் உலகம் தழுவி
அந்நிகழ்ச்சியினை ஒளிபரப்பி
வசூல் வேட்டை நடத்தும்!
இப்போ...
இந்த 'வசூல் ராஜா'
திட்டமிட்டு
முனைந்திருப்பதும் அதே ரீதிதான்!

தனது வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய
தியேட்டர்கார்களின்
வேண்டுகோளையும் ஏற்காது
அதனால் கிளர்ந்தெழும்
அவர்களின் எதிர்ப்பையும் மீறி
காரியத்தில் கண்ணாக இருக்கிறார்.

(குறிப்பு:...
கிரிக்கெட்போர்ட்காரர்களுக்கு
கிரிக்கெட் விளையாட்டைக் காட்ட
சினிமாவுக்கு உள்ளது போல்
தியேட்டர் வசதி இல்லை என்பதையும்
அதன் மூலமான சம்பாத்தியமும்
இல்லை என்பதையும்
வாசகர்கள் இங்கே மறந்துவிடக் கூடாது.)

கிரிக்கெட்டுக்கு
காசு கொடுத்து T.V. பார்க்க
உலகம் தழுவி ரசிகர்கள் இருப்பது மாதிரி
'உலக நாயகன்' சினிமாவுக்கும்
உலகம் தழுவி
அப்படியோர் ஆர்வம் கொண்டவர்கள்
தாராளமாகவே இருக்கிறார்கள்!

குறையொன்றுமில்லா...
திரை மூர்த்தி கண்ணா அவர்!

அப்படியானதோர் முத்திரையை
மக்களிடம் கஷ்டப்பட்டு பெற்று
அதை காபந்தும் செய்து...
வளர்த்தும் வைத்திருக்கிறார்!

திராவிடத்துக்கு பெரியாரியம்...
கம்யூனிஸ்ட்டுக்கு கம்யூனிஸம்...
உலகப் பொருளாதாரத்திற்கு
திரை எதிர்ப்பு!
சினிமா தொழிலுக்காக
அதையே வரவேற்கும் வலது!
இப்படி..
இன்னுமான பல முகங்களை
ஒருசேர காபந்து செய்யும்
'பஞ்சதந்திர'க்காரர் அவர்!

'DTH/ விஸ்வரூபம்/ கமல்' என்பன பற்றி
கடந்த பத்து நாட்களாக
ஃபேஸ்புக்கில்
ஆள் மாற்றி ஆள்
சின்னச் சின்ன
விமர்சனங்களும் கருத்துகளுமாக
'விஸ்வரூபம்' எடுத்திருக்கும் கமலை
தூக்கிப் பிடிக்கவே செய்கிறார்கள்!

எல்லோராலும் கவனம் பெறும்
விமர்சகரான ஞாநியும் கூட
இந்த 'நாயக’னுக்குதான் ஜே! 

ஒரு டிஷ் -ஆண்டனாவில்
இப்படத்தை பார்க்க
இந்திய ரூபாய்க்கு 1000/-
கட்டணம் செலுத்தப்பட வேண்டும்!
மதுரையில் வைத்து, 
'ஆடியோ' வெளியிட்டின் போது
'நாயகன்' கமல்
சொன்ன தகவல் இது!

'தசாவதார' ஹீரோ,
இந்த முறைவழியே
2 1/4 (இரண்டேகால்)மணிநேரத்திற்கு
அப்படத்தின்
தமிழ்ப் பதிப்பை காட்ட முனைவதில் மட்டும்
சுமார் 50 கோடிகள் சம்பாத்திய சாத்தியமென
மீடியாக்களில் கிசுகிசுப்பு கேட்கிறது

உலக அளவில்
பரந்து விரிந்திருக்கும்
புலம்பெயர்ந்த தமிழர்கள்,
மற்றும், இந்திய வம்சாவளிகளினால்
இந்த வியாபாரம்
டாலர்களில் களைகட்ட
தாராள வாய்ப்பிருப்பதால்...
என் கணக்கில்
தமிழ்ப் பதிப்பின் வழியே மட்டும்
குறைந்தது குறைந்தது
500 கோடிகளை...
வேண்டாம்...
இன்னும் குறைத்து
300 கோடிகளையேனும்
கமல் நிச்சயம் சம்பாத்தியம் கொள்வார்!

தமிழ் தவிர்த்து
தெலுங்கு/ கன்னடம்/ மலையாளம்/ இந்தி
முதலிய மொழிகளில் இப்படம்
அடுத்தடுத்து
D.T.H. திரையிட வாய்ப்பிருக்கிறது.
அம்மொழிகளிலும்
இந்தப் 'பேசும் பட' நாயகன்
100 சதவீதம் செல்லுபடி ஆகக் கூடியவர்!
தடுமாற்றமின்றி
அந் நிலப்பரப்பு மக்களிடமும்
இன்னொரு 500 கோடியை
எளிதாக அவரால் கறந்துவிட முடியும்.
நிச்சயம் செய்யவும் செய்வார்.
சம்பாத்தியமாச்சே!
அதுதானே புருஷ லெட்சணம்!

ஆக,
இந்த நவீன முறையில்
இப்படத்தின் வழியே...
(அது சராசரி தமிழ் சினிமா மாதிரியோ
அல்லது...
இன்னும் குப்பையாக இருந்தாலும்)
ரசிகர்களிடம் நட்சத்திர 'கிரேஜியை'
-தமிழில் சொன்னால்
அவர்களின் கிறுக்குத்தனமான-
கொதிநிலையை சாதகமாக்கிக் கொண்டு
சுமார் 1000 கோடிகளையோ
குறைத்து மதிப்பிடும் பட்சம் 
சுமார் எண்ணூறு கோடிகளையேனும்
எளிதில் சுருட்டிவிட முடியும்!
அதாவது
சுரண்டிவிட முடியும்.

எப்படிப்பட்ட பூர்ஷ்வாவாக இருந்தாலும்
இப்படிப்பட்ட சுரண்டலுக்கு
அஞ்சவே செய்வான்!
இங்கே அது
அமர்க்களமாக...
கோலாகல வரவேற்புடன்
அரச மரியாதைகளோடு நடக்க இருக்கிறது.

சுரண்டல் இத்தோடு
முடிந்ததாவென்றால்... இல்லை.
வழக்கமான
1500 பிரிண்ட் வெளியீட்டு
கணக்கு பாக்கி இருக்கிறதே!

டிக்கட் ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட
விலை ரூபாய் 20/ 30/ 50 ஆக இருக்க.
அரசை இவர்கள்,
அனுமதியோடு பாக்கெட்டில் போட்டு கொண்டு
எல்லா டிக்கட்டுகளும்
ஏகத்துக்கும்
முதல் வாரம் 500 ரூபாய்
அடுத்த வாரம் 400 ரூபாய்
அதன் அடுத்த வாரம் 300 ரூபாய்
இப்படி வழக்கமாகி போன
பகல் கொள்ளை!

இதன்படிக்கு
அப்படம் வெற்றி நடைபோட்டு
50 நாட்களுக்கும் குறையாமல்
உலகம் முழுவதும்
இன்னொரு வசூலை நடத்தும்.
இதன் லாபத்தை கூட்டி பெருக்கிப் பார்க்க
13டிஜிடல் எண் கொண்ட
ஜப்பான் கால்குலேட்டரும் பத்தாது.
இந்தக் கணக்கில்
எப்படி குறைத்து பார்த்தாலும்
அதுவோர்
500 கோடியை கொண்டு வந்து கொட்டும்.

டி.வி.க்கு விற்பது
மொழிமாற்றம் செய்து
அதை இந்தியா பூராவும் ஓடவிட்டுப் பார்ப்பது
என்கிற வகையில்
இன்னொரு 200 கோடி வலிய வரும்!

இந்திய பிற மாநிலங்களிலும்
வெளிநாடுகளிலும்
ரஜினி படம் ஏமாற்றினாலும்
ஏமாற்றுமே தவிர
இந்த 'கல்யாணராம’னின் படம் ஏமாற்றாது.

அதிக அதிகமாக பார்த்தாலும்
சுமார் 50 கோடி பட்ஜெட்டிற்குள்தான்
இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கும்.
இங்கே கணித்தபடிக்கு
இது கொண்டுவந்து சேர்க்கும்
வருமானமோ சுமார் 1500 கோடி!

(மயக்கம் கொள்பவர்கள்
அருகிலுள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு
வாசிப்பது நலம்.)

*
DTH/ விஸ்வரூபம்/ கமல்... பற்றிய
என் அபிப்ராயங்கள் என்பது
இப்படித்தான் இருக்கிறது.

சினிமா உலகத்தவர்கள் தரும்
நெருக்கடிகளினால்
கமல்
இன்று...
இந்த யுக்தியை கைவிட்டாலும்
நாளை இன்னொரு சினிமாக்காரர்
நிச்சயம் இதனை அரங்கேற்றுவார்.

கமலின் ’விஸ்பரூப’
அரங்கேற்றத்தைத் தொடர்ந்து
வியாபார சினிமாவின்
வியாபாரிகளது
சம்பாத்திய மூளை
இந்த நவீன யுக்தியை
கெட்டியாக பிடித்துக் கொள்ளும்.
விடவே விடாது.
'திருட்டு விசிடியை ஒழிக்கவே
நாங்கள் இதனை செய்கிறோம்' என்று
கமல் மாதிரியே
எல்லோரும் சத்தியம் செய்வார்கள்.

அதாவது
கமலின் விஸ்வரூபத்தோடு
முடிந்து போகிற சங்கதியில்லை இது!
நாளை புற்றீசல் போல்
ஒருபாடு படங்கள்
இப்படி வலம் வந்து
சம்பாத்தியம் என்கிற பெயரில்
பூர்ஷ்வாதனமான சுரண்டலை நிகழ்த்தும்.
அரசு இதற்கு வழிமுறை தேடும்வரை
நம்மால் ஆகுமானது எதுவுமில்லை.
சுரண்டப்படுபவர்களின்
சாதுர்ய வலையில் சிக்கி
பொருளை இழப்பதென்ற ஒன்றைத் தவிர.

***
பின்குறிப்பு:
விஸ்வரூபம்....
விஜயின் துப்பாக்கி மாதிரியே
இருக்கிறதாம்... என்று
இப்பவே களம் இறங்கவும்/
மவுண்ட்ரோட்டை அடைத்து
தொழுகை நடத்தவும்/
தியேட்டர் வாசலில் கூக்குரலிட்டு
படத்தை வெளியிட
அனுமதிக்க மாட்டோமென....
போராட்டம் நடத்தவும்
துடிப்பாக இருக்கும்
வழக்கமான
அந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு
ஒரு வார்த்தை.

திட்டமிட்டப்படி
D.T.H.-ல்
கமல்
தனது விஸ்வரூபத்தை வெளியீடும் பட்சம்..
நீங்கள் பாவம்.
உங்களது போராட்டம்
ஒரு வீணான சங்கதியாகிப் போகும்.
அப்படத்தின் வெளியீட்டு தேதியில்
நீங்கள் போராடும் நேரம்
தியேட்டர் வெளியீட்டில் கிட்டும்
லாபத்திற்கு நிகரான
D.T.H.வழங்கியிருக்கும் லாபத்தை
அலுவலகத்தில் அமர்ந்து
சாவகாசமாக கணக்கிட்டு கொண்டிருப்பார்!

அப்படம்
உங்களால் தியேட்டரில் முடக்கப் பட்டாலும்
அது அவருக்கு கவலையை தராது.
உங்களின் போராட்ட முனையும்
மழுங்கிவிடும்.
சட்டம் ஒழுங்கின் கரங்கள் வேறு
உங்களை 'உண்டு இல்லை' யென
அவஸ்தைகளுக்கு உள்ளாக்கும்.
D.T.H.-ன் அருமையையே
அப்போதுதான்
நீங்கள் உணர்வீர்கள்.
***


 

கவிதை நடையில் சுரண்டிய தாஜுக்கு நன்றி ! இதே நடையில் தாஜை சுரண்ட  கூரிய நகங்களுடன் தொடர்பு கொள்க : satajdeen@gmail.com