Monday, February 20, 2012

கவர்னர் பெத்தா - மீரான் மைதீன்

’காணாமல் போன ஒட்டகத்தில்' வந்த கவர்னர் பெத்தாவைப் பார்ப்பதற்கு முன்...

முக்கியமானது பேரறிவு....

டிசம்பர் 2002-ல் வெளியான, பேரா. மு. அப்துல் சமது எம்.ஏ.,எம்.பில்., அவர்கள்  தொகுத்த ’காணாமல் போன ஒட்டகம்’ நூல் பற்றி ’புதியகாற்று’ ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா சொன்னது:

'இந்தியச் சூழலில் எண்பதுகளுக்குப் பின் முஸ்லிம்கள் மீதான நெருக்கடி முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கிறது. இதன் தொடர் - எதிர் விளைவுகளாய் தங்களின் இருப்பையும் சுய அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வேகம் பெற்றிருக்கின்றன. முஸ்லிம்கள், அவர்களின் நேற்றைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதும், இன்றையைக் குறித்த சுயவிமர்சனத்தை முன்வைப்பதும், நாளைய வெளிச்சத்திற்கென்று சில வாசல்களையும் ஜன்னல்களையும் திறந்து வைப்பதும் கால அவசரங்களாக முன் நிற்கின்றன. இது குறித்து யோசிக்கின்ற சிந்தனை மனங்களும் இதற்கான் நேரத்தை, உழைப்பை செலுத்துகின்ற சமூக மனங்களும், அமைப்புகளும் இதுபோன்ற முயற்சிகளுக்கு பின்புலமாய் இருக்கின்ற புரவலர் மனங்களும் ஒரு பொது அரங்கில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது இந்த நூலின் வழி கைகூடி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதிலும் கல்வி தளத்தில் இது சாத்தியப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்தது. தமிழகத்தில் சிறிதும் பெரிதுமான கல்வி முயற்சிகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் முஸ்லிம்கள் மத்தியில் வேகம் பெற்றிருக்கின்றன. வருகின்ற காலங்களில் அதன் இலக்குகள் எவை என்பதை துல்லியமாகத் தொட்டுக் காட்டுகிறது இந்நூல். பீரப்பா சொல்வதுபோல், ‘முக்கியமானது பேரறிவு’. அதனை எங்கிருந்தெல்லாம் கொண்டு வந்து கொடுக்கலாம் என்று கோடிட்டுக் காட்டுகிறது இந்நூல்.'

(நூல் வெளியீடு :  I.C.O. அறக்கட்டளை, 431, நேதாஜி ரோடு, ஈரோடு - 638 001)

***

’மஜ்னூன்’ என்ற மகத்தான சிறுகதை எழுதிய நண்பர் மீரான் மைதீனின் 'யானை' கதையில் ஒரு தமாஷ். 'தோப்பில் மீரானைத் தூக்கி சாப்பிட்டு விடுவார் இவர் ' என்ற குறிப்புடன் நம் சாபத்தா அகத்தியர் குழுமத்தில் போட்டது ;

திடீரென காதர் சொன்னான்
யானை விட்டயில ஒரு விசேஷம் இருக்கு தெரியுமா ?
எல்லோரும் காதரைப் பார்த்தார்கள்
படிப்பு வராத பயலுவளெல்லாம் யானை விட்டய சமுட்டுனா படிப்பு வரும் !
***

சிரித்தீர்களா?

எதையும் இங்கே மீள்பதிவு செய்யக்கூடாது என்று நினைத்தாலும் கவர்னர் பெத்தாவை தட்டச்சு செய்து அனுப்பியவன் என்ற முறையில் (தட்டச்சு மட்டும். கதை அவருடையதுதான்; அவருடையதுதான்) உரிமை எடுத்துக்கொள்கிறேன்.  நன்றி . - ஆபிதீன்


***

கவர்னர் பெத்தா'அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமா பீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் வந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்'.

சுபுஹ் தொழுகைக்குப் பிறகு விடிந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் தர்ஹா ரேடியோவிலிருந்து காலைக் காற்றில் கலந்து வந்த அறிவிப்பை எல்லோரும் கேட்டார்கள். தொழுகைப் பாயிலிருந்த பீர்மா பெத்தாவுக்கு இருப்பு வரவில்லை. உடனடியாக தர்ஹாவுக்குப் போகவேண்டும் என்ற தவிப்பும் துடிப்பும் அவளின் மனம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெரையில் கிடந்த களக்கம்பு ஏணியைத் தூக்கி சாய்த்து வைத்து மெல்ல தட்டுக்கு ஏறிவந்து கிழக்குப்பக்கம் சாயம்போன கலர் சேலையைப் போல ஒரு தினுசாய் செவந்து கிடந்த ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயத்தைத் தொடுவது போலவே நின்ற தர்ஹா மினாரா அவளின் கண்களுக்குள் வந்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த மினாரா உச்சியில் கொடி பறந்து கொண்டிருந்தது. தெருவைப் பார்த்தாள். யாருமில்லை. பீர்மா பெத்தாவுக்கு கோபம் கோபமாக வந்தது.

"சே.. என்ன ஜென்மங்கோ.. கவர்னர் வாராவோ.. நேரத்த முழிப்போம்னு பாக்குதுவளா.. லெட்சணம் கெட்டதுவோ... சே.. சே.."

தெருவில் இறங்கி நடந்து விடலாமா? நினைப்பு வந்த உடனே மகனோ அல்லது பேரனோ "எங்களா போற துக்கே.. வயசு காலத்துல ஒரு எடத்துல கெடவராதாளா..?" என்று திட்டுவார்கள். பீர்மா பெத்தாவுக்கு மகனோ பேரனோ பேசுவது கூட கவலை தராது. ஆனால் மருமகள் தமாஷ் அடிப்பாள் என்பதில்தான்

தயங்கினாள்.

பத்து நாட்களுக்கு முன்னாலே கவர்னர் தர்ஹாவுக்கு வரப்போகிறார் என்ற செய்தி ஊருக்குள் குசுகுசுக்கப்பட்டாலும் பீர்மா பெத்தாவின் காதுக்கு அது எட்டவில்லை. அமலா கான்வென்ட் ஸ்கூல்டேக்கு பேரனின் இங்கிளீஸ் டிராமா பார்க்கப்போன மறியம் பெத்தா வந்த உடன் பீர்மா பெத்தாவிடம் ஒருபாடு பீத்திவிட்டுச் சொன்னாள்.

"பிள்ளா.. பீர்மா...தர்ஹா ரோட்ல ரோடு போடுதானுவோ பாத்துக்கோ.. உனக்கு என்னமும் தெரியுமா?"

"என்ன நீக்கம்போ எனக்கெங்க தெரியும்"

"உச்செக்கு ஒருபாடு போலீஸ்காரன்மாருவளும் தர்ஹா கிட்ட வந்தானுவளாம்.."

"அந்த களுசாம்பறையோ இங்கே எதுக்கு வந்தானுவோ?"

மறியம்பெத்தா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் பீர்மா பெத்தா எதிர்கேள்வியாகவே கேட்டாள். பீர்மா பெத்தாவிடம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என வந்த மறியம் பெத்தாவுக்கு ஏமாற்றமாகிப்போனது. மறியம் பெத்தாவின் முகத்தைப் உற்றுப்பார்த்த பீர்மா பெத்தாவுக்கு அவள் ஏமாந்து போனதை அறிய முடிந்தது. அந்த முகத்தோடு அவளை அனுப்ப பீர்மா விரும்பவில்லை.

"பீர்மாட்ட கேக்கலாம்னு போனேன். அந்து துக்கேக்கு ஒண்ணும் தெரியலே..." என்று வேறுயாரிடமாவது போய் சொல்லுவாள். அது தனது கௌரவத்துக்கு இழுக்காகிவிடும் என்பதை பீர்மா உணர்ந்தவளாய் தாண்டிப்போன மறியத்தைப் பார்த்து "பிள்ளா..மறியம்..நில்லுனா.. எம்பேரன்ட கேப்போம்". பேரனை அழைத்து பீர்மா கேட்டாள்.

"லே வாப்பா.. தர்ஹாகிட்டே ரோடு போடுதானுவளாமே.. போலீஸ்காரன்மாருவளும் வந்தானுவளாமே.. உள்ளதா..?"

"உள்ளதுதான்.."

"என்னத்துக்குலே.."

"அது... நம்ம தர்ஹாவுக்கு கவர்னர் பாத்திமா பீவி வாராங்களாம்.."

"பாத்துமாயியா... இஸ்லாமானவளா..?"

"பின்னே.." பேரன் தலையாட்டினான்.

பீர்மாவுக்கும் மறியத்துக்கும் முகங்களில் தவழ்ந்த புன்னகை காற்றில் கலந்து, அவர்களின் வயதை ஒத்த அனைவியரின் முகங்களிலும் அடுத்த அரைமணிநேரத்தில் தவழத் தொடங்கியது.

"இதுக்கு முன்னால அவா பெரிய ஜட்ஜியா இருந்தாளாம்... கேரளத்துகாரியாம்..முட்டாக்கும் போட்டுட்டு எப்படி இருக்கா தெரியுமா... பேப்பர்ல போட்டுருக்கானுவோ.."

செய்தூன் பெத்தா வீட்டுத் திண்ணையில் நூறுபீவியும் சேனம்மாவும் விசயங்களோடு அமர்ந்திருந்தனர். சுப்ரமணி அண்ணாச்சியின் அம்மா வடுவாச்சியும் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தூன் பெத்தா பேப்பரை கொண்டுவந்து பீர்மாவிடம் கொடுத்தாள். கவர்னர் பற்றிய செய்தியும் போட்டோவும் இருந்தது. எல்லோரும் படத்தை உற்றுப்பார்த்தார்கள். பீர்மாவுக்கு படிக்கத் தெரியாது. மறியத்துக்கும் அப்படித்தான். செய்தூனும் சேனம்மாவும் எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள். எல்லோரும் முண்டியடித்து அந்த பேப்பர் துண்டை எச்சி ஒழுக உத்துப் பார்த்தனர்.

கவர்னரின் புன்னகையான முகமும் அதிலே கச்சிதமாக இருந்த கண்ணாடியும் கருப்பு வெள்ளை படத்தில் மங்கலாகத் தெரிந்தாலும்கூட பட்டுச்சேலையின் பளபளப்பும், பட்டுச்சேலையின் ஒருபாகம் கவர்னரின் தலையில் முட்டாக்காய் கவிழ்ந்து கம்பீரமாய் கிடக்கும் விதமும் பீர்மாவை சிலிர்க்க வைத்தது. உற்றுப் பார்த்தாள். அவளின் பார்வையில் நிறைய தேடல்கள் இருந்தன. ஸலாம் சொல்லிவிட்டு கவர்னர் பாத்திமா பீவியின் கரங்களைப் பற்றி, "என்னா சொகமா... இருக்கியளா...?" என்று உடனே ஒரு வார்த்தை கேட்கவேண்டும்போல இருந்தது.

ஊரின் அநேக வீடுகளிலும் கவர்னர் புராணம் தொடங்கிவிட்டது. தெருவிலும் கடைப்பக்கத்திலும் குளத்திலும் எல்லா இடங்களிலும் கவர்னர் பற்றி எப்படியாவது ஒரு பேச்சு வந்து விடும், ஒருவரை ஒருவர் எதிர் எதிரே பார்க்கும் போதெல்லாம்.

"இன்னும் எட்டுநாள் பாக்கி.."

"எதுக்கு..?"

"கவர்னர் வரதுக்கு.."

"படச்சவனே, மறந்தேப் போச்சி.."

கசாப்புக்கடை மாஹின் வீடுவீடாகப் போனார்.

"கவர்னர் வர அன்னைக்கு மூணு கிடாய் அறுக்கப் போறேன்..கறி வேணும்னா சொல்லுங்கோ.."

"எனக்கு ரெண்டு கிலோ", "எனக்கு ஒண்ணு" என வீட்டுக்கு வீடு ஆடர் கூடிக்கொண்டே வந்தது. கசாப்பு மாஹின் திங்கள் சந்தைக்குப் போய் மேலும் மூன்று கிடாய் பிடித்துவந்து தெருவில் அவர் வீட்டு முன்னால் தென்னை மரத்தில் கட்டிப் போட்டிருந்தார்.

சின்னப்பையன்மாரெல்லாம் கிடாயைச் சுற்றி சுற்றி வந்தனர். ஆடுபோல கத்தினார்கள். ஒரு பையன் தென்னஈக்கலை எடுத்து ஐந்தாறு சாத்து சாத்தினான். கிடாய் முன்னங்காலை தூக்கி முட்டுவதற்கு தயாரானது.

"முட்டதுக்கா பாக்கா..ஒன்னைய சங்கரபுங்கரயாக்கி போடுவேன்.." என தூரமாய் ஓடிப்போய் ஒரு கல்லெடுத்து சரியாக எறிந்து விட்டான்.

"ம்மேய்..ம்மேய்.." சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து கசாப்பு மாஹின் பாய்ச்து வந்தார். அவரைக் கண்டதும் பயலுவ நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். எதிரே வந்த மஸ்தான் பிள்ளை,

"என்னடே சின்னபுள்ளய வெரட்டுதே.."

"பின்னே அவனுவோ கவர்னர் கிடாய கல்லெடுத்து எறியானுவோ.."

இதன் பிறகு கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் நின்ற ஆறு கிடாய்களையும் கவர்னர் கிடாய் என்றே ஊரில் எல்லோரும் கூப்பிட்டனர்.

கவர்னர் தர்ஹாவுக்கு வர இன்னும் ஐந்து நாட்களே மிச்சம் உள்ளது. இதற்கிடையில் தெருவில் நின்ற ஐந்தாறு பாடாவதி எலக்ட்ரிக் போஸ்டில் லைட்டு போட்டார்கள். புதிதாகப் போட்ட தெருவிளக்கு வெளிச்சம் ஏலாக்கரை வரை பரவிக்கிடந்தது. அவுசான்பிள்ளை தெருவிளக்கை நிமிர்ந்து பார்த்தபடி,

"நல்ல இருக்கட்டு கவர்னரு.. அவ புண்ணியத்துல லைட்டாவது போட்டானுவளே.."

பையன்மாரெல்லாம் வெளிச்சத்தில் பாட்டொ, இடியாண்டோ விளையாடினார்கள். பொட்டப்புள்ளைகளுவ சைக்கிள் , பாண்டி விளையாடினார்கள். கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் விழுந்த வெளிச்சத்தில் கவர்னர் கிடாயின் கண்கள் மின்னூட்டாம் பூச்சியைப் போல் மின்னின.

திண்ணையில் அமர்ந்து வெத்திலை தட்டிக் கொண்டிருந்த பீர்மாவுக்கு ஒரு பட்டு கசவு கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம் போல இருந்தது.

வீட்டுக்குள் போய் பார்த்தாள். ஈஸிச் சேரில் மகன் சாய்ந்து கிடந்தான். கண்கள் மருமகள் இருக்கிறாளா என்று தேடியது. மருமகள் அடுக்களையில் வேலையாக இருந்தாள். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மகனிடம் மெல்ல கேட்டாள்.

"மௌனே.."

நிமிர்ந்து பார்த்தான்.

"எனக்கொரு பட்டுகசவு வச்ச கவுணியும் சட்டையும் தச்சி தாலே.."

"இப்போ எதுக்கு.."

"எனக்கு வேணும்.."

"பெருநாளுக்குத்தானே எடுத்தோம்.. அதுக்கெடையிலே இப்போ எதுக்கு.."

பீர்மாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. மௌனமாக நின்றாள். மகன் அவளின் மூஞ்சியைப் பார்த்தபடி இருந்தான்.

"கவர்னரு.. தர்ஹாவுக்கு வாரால்லா..அதான்.." தயங்கித் தயங்கித் சொல்லி முடிக்கும்போது மருமகள் வந்து விட்டாள்.

"ஆமா கவர்னரு வந்து நேர உங்க கையைப்பிடிச்சித்தான் குலுக்கப் போறாளாக்கும்.."

எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவுக்கு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பீர்மாவுக்கு அழுகை வந்து விட்டது.

இரவு முழுவதும் பீர்மா சரியாகத் தூங்கவில்லை. பேப்பரில் பார்த்த கவர்னரின் கருப்புவெள்ளை புகைப்படம் பலமுறை மனதில் வந்து போனது. மருமகள் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப மனதுக்குள் விழுந்து தெறித்தது.

காலையில் தர்ஹா பக்கத்தில் ரோட்டில் அஞ்சாறு ஆர்ச்சுகள் போடப்பட்டிருந்தன. தெருவின் முன்னாலும், ஆர்ச் போடும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. வயதானவர்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். தர்ஹா பக்கத்தில் ஒன்றிரண்டு வீடுகளில் புதிதாக வெள்ளை அடித்தனர். ஜீப்பில் சில அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் பிறகு பள்ளியில் நேச்சையாகக் கொடுத்த பழங்களைத் தின்றுவிட்டு பழத்தொலியை கசாப்பு மாஹினிடம் கொடுத்தார்கள். மாஹின் மொத்தமாக வாங்கி பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு வந்து

வீட்டுக்கு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களுக்கு போட்டான்.

நாளை காலைதான் கவர்னர் வரப்போகிறார். சாயங்காலமே தர்ஹா ரேடியோ பாடியது. தர்ஹாவில் சீரியல் லைட்டுகள் மின்னி எரிந்தன.

பீர்மா வாசலில் நின்று தெருவைப் பார்த்தாள். தெருவில் கடந்து போன ஆறேழு பேரிடமாவது கேட்டிருப்பாள்.

"காலையில் எத்தனை மணிக்கு வாராவோ?"

"ஒன்பது மணிக்கு"

எட்டுமணிக்காவது தர்ஹாவுக்கு போய்விட வேண்டும். முதல் ஆளாக நிற்க வேண்டும். நினைக்க நினைக்க அவளின் நெஞ்சம் படபடத்தது.

பீர்மா பாய்போட்டு தூங்கப்போகும்போது பத்து மணி இருக்கும். அந்த இரவு அவளுக்கு ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது. எல்லாம் ஒரு நிமிடத்தில் மாயாஜாலம் போல விடிந்துவிட வேண்டும் என்று விரும்பினாள். தஸ்பீகு மாலையை எடுத்து உருட்டினாள். தூங்கினால் கொள்ளாம் போல இருந்தது. ஆனாலும் எளவு தூக்கம் வரவில்லை.

அஞ்சாறு முறை கோழி கூவி சத்தம் கேட்டது. கிடாய்களின் சத்தம் கேட்டது. கவர்னர் கிடாய்களாகத்தான் இருக்க வேண்டும். சுபுஹ் பாங்கு சத்தம் கேட்டது. பட்டென்று பாயை விட்டு எழுந்தாள்.

தொழுதுவிட்டு வாசல்கதவைத் திறந்து திண்ணைக்கு வந்து தெருவைப் பார்த்தாள். மங்கலான வெளிச்சம். பள்ளி ரேடியோவில் கவர்னர் வருகை குறித்த அறிவிப்பு. தெருவைத் திரும்பிப் பார்த்தாள். கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களைக் காணவில்லை.

நன்றாக விடிந்தபோது பெருநாளைக்கு எடுத்த பட்டுகசவு கவுனியும், குப்பாயமும் போட்டுக்கொண்டு மறியம்பெத்தா வீட்டுத் திண்ணைக்கு வந்தாள். திண்ணையில் கால்நீட்டி உட்கார்ந்திருந்த மறியம், பீர்மா அவர்வதற்கு சவுரியம் செய்து கொடுத்தாள்.

"சவுக்கு கம்ப போட்டுக் கெட்டி வச்சிருக்கானுவளாம்.. ஒருத்தரும் கிட்டே போவ முடியாதாம்.. சுத்தி ஆபீஸர் மாருவளாத்தான் இருப்பானுவளாம். போலிஸ்மாருவெல்லாம் தோக்கையும் தூக்கிட்டு விடியதுக்கு முன்னால வந்துட்டானுவளாம்... அந்த துக்கயள பாக்கதுக்கே பேடி உண்டாவுது."

மறியம் சொல்லும்போதே பீர்மா நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

"ஆருளா சொன்னா..?"

"தொழுதுட்டு போவத்துல... முக்கூட்டு பயலும் கரிசட்டிக்கு பேரனும் பேசிட்டு போனானுவோ... நான் அந்தாக்குல கூப்பிட்டுக் கேட்டேன்..அவ வரதுக்கு ஒன்பதாவுமாம்..பப்பனாபுரம் கோட்டைக்கும் சுசீந்தரம் கோயிலுக்கும் போயிட்டுத்தான் இங்க வாராளாம்"

"கோயிலுக்கு போவாளா.." பீர்மாவுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

"அவ கவர்னருல்லா.."

பீர்மா மறியத்தின் வெத்திலை பெட்டியை இழுத்து முன்னே வைத்து கொண்டு பேச ஆரம்பித்தபோது அஸ்மா வந்து விட்டாள். தொடர்ந்து கொஞ்ச நேரத்திலெல்லாம் பாக்குப் பெத்தா வந்து விட்டாள். வந்து உடனே புதிய செய்தி சொல்ல வாய் திறந்தாள். அவள் எப்பவும் அப்படித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்று தெரிந்து விட்டால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும். இரவு என்றால் தூங்க மாட்டாள். பகல் என்றால் சாப்பிட மாட்டாள். செய்திகளை ஐந்தாறு செவிகளிலாவது சொன்னால்தான் அவளுக்கு சுகம். பாக்கு பெத்தா நடந்து எதாவது வீட்டுக்குள் போனாலே வினை போவதாகத்தான் பலரும் சொல்வார்கள்.

"பிள்ளா ஒரு விஷயம் தெரியுமளா..?" பாக்கு பெத்தா சொன்னவுடன் எல்லோர் முகங்களும் ஆவலாயின.

"அவோ இங்கிளிஸ்லதான் பேசுவாளாம்.. தமிழ் தெரியாதாம்.."

"பேப்பர்ல தமிழ்லதானே போட்டிருந்தானுவோ.." அஸ்மா மடக்கினாள்.

"என்ன எளவோம்மா இங்கிலிஸ்லதான் பேசுவாளாம். எனக்க மருமவன் சொன்னாரு"

பாக்குபெத்தா கொண்டுவந்த விசயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது பாக்கு பெத்தாவுக்கு சே என்பது போல ஆயிப்போனது.

எட்டரை மணிக்கு தெருவிறங்கி நடந்தார்கள். பீர்மாதான் முன்னே நடந்தாள். தெரு திருப்பில் பையன்கள் நின்று பரிகாசித்தனர். மெயின் ரோட்டிலிருந்து தர்ஹா வரையிலும் இரண்டு பக்கமும் வரிசையாக போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர்.

மறியம் பயந்து போனாள்.

"இந்த பாளறுவானுவளே.. பாத்தாலே கொடலு கலங்குதள்ளா.."

"பேசாம வாளா.."

சேனம்மா தைரியம் சொல்லி நடத்தினாள்.

தர்ஹாவைச் சுற்றிலும் முன்பக்கமும் பாதைபோன்று அமைத்து மற்ற இடங்களிலெல்லாம் சவுக்கு கம்பால் அடைத்துக் கட்டி விட்டிருந்தனர். பீர்மா முன்னால் வேகமாக நடந்து வாசல் பக்கமாய் போய் வாக்கான அந்த இடத்தில் வசமாக நின்று கொண்டாள். நேரம் ஆக ஆக பீர்மா பெத்தாவின் பின்னாலும் பக்கவாட்டிலுமாக நிறைய பெண்கள் வந்து குவிந்து விட்டார்கள். ஆண்கள் எதிர்ப்பக்கம் நின்றார்கள்.

காலை வெயில் பீர்மாவின் மூஞ்சியில் பளிச்சென்று விழுந்தது. ஆனாலும் அவள் விலகிக் கொள்ளாமல் முட்டாக்கை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள். முட்டாக்கு துணியின் விளிம்பிலிருந்து பட்டுக்கசவில் வெயில் பட்டு மின்னியது.

ஒரே பரபரப்பாக இருந்தது. உய்ங்...உய்ங்...என் கார்கள் வருவதும் போவதும், அதிகாரிகளும், பெரிய போலீஸ்மார்களும் சரட்டுபுரட்டு என்று அங்குமிங்கும் நடந்தார்கள். ஆங்காங்கே சிறு சிலசலப்பு எழும்போதெல்லாம் பீர்மா முகத்தில் அதிகப்படியாக ஆவல் ஒட்டிக்கொள்ளும்.

பாக்கு பெத்தாவுக்கும், மறியம் பெத்தாவுக்கும் வெறுப்பாகிப் போனது. கூட்டத்தில் கிடந்து மொனங்கினார்கள். சேனம்மாவின் காலை யாரோ சமுட்டி விட்டார்கள் என சேனம்மா திட்டி திமிறினாள்.

"நாசமா போனதுவளுக்கு என் கால கண்டவுடனே தானா பேதி எடுக்கணும்.."

சேனம்மாவின் வார்த்தை கேட்டு சில பொம்பளைகள் சத்தமாய் சிரித்தனர். சிரித்துக்கொண்டே சேனம்மாவை நெருக்கித் தள்ளினார்கள். சேனம்மா மேலும் திட்டினாள். சிரிப்பு மேலும் கூடியது. கூட்டம் கூடிவந்து பீர்மா மேலும் ஒன்றிரண்டு பொம்பளைகள் சாய்ந்து தள்ளினார்கள். நல்லவேளை முன்னால் சவுக்கு கம்பு இருந்ததால் பீர்மா விழுந்து விடாமல் நின்று கொண்டாள். ஆனாலும் திரும்பி அஞ்சாறு அறுப்பும் கிழியும் வைத்துக்கொடுத்தாள்.

ஒன்பது மணிக்கு மேலே கார்கள் அணிவகுத்து வர கவர்னர் வந்து இறங்கினார். அதிகாரிகள் சுற்றிக்கொள்ள , ஒருவர் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டார். கவர்னர் பாத்திமா பீவி முட்டாக்கும் போட்டுக்கொண்டு கம்பீரமாய் நடந்து நாலா பக்கமும் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து புன்னகையுடன் திரும்பினார்கள்.

ஜமா-அத் தலைவர் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். கவர்னர் புன்னகையுடன் நடந்துவர வாசல் அருகே வரும்போது பெண்களின் பக்கம் கவர்னர் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டுத் திரும்பும்போது பீர்மா பளிச்சென்று கவர்னரைப் பார்த்து கையை நீட்டினாள். கவர்னரும் பீர்மாவின் கரத்தைப் பற்றி குலுக்கினார். சடசடவென நிறைய கரம் நீண்டது. கவர்னர் பீர்மாவின் கரத்தை விட்டபடி புன்னகையுடன் உள்ளே போய்விட்டார்.

கூட்டத்தில் சத்தம் வந்தது.

'பிள்ளா கவர்னர் பெத்தா.."

பூரித்துப் போனாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் கவர்னர் போய்விட்டார். பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. பீர்மாவை பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள். சிலர் பீர்மாவை வயிற்றெரிச்சலோடு பார்த்தனர். பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர் பெத்தாவாகிப்போனது.

தர்ஹாவிலிருந்து திரும்பி நடந்து வரும்போது பீர்மா மறியத்திடம் சொன்னாள்:

"நாசமா போனதுவோ...நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ...நம்மளமாதிரித்தானே இருக்கா..எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா... பள்ளிகோடத்துக்கு போட்டாளான்னு கேட்டதுக்கு.. பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்டா ஆவப்போறா..ன்னா.."

வேதனையும் எரிச்சலும் ஒருசேர எழுந்தபோது அவளின் உம்மாவின் முகமும் வாப்பாவின் முகமும் நினைவில் வந்தது.

***

நன்றி : மீரான் மைதீன் , I. C. O. அறக்கட்டளை , பேரா. மு. அப்துல் சமது , திண்ணை

***
மேலும்...


எஸ்.அர்ஷியா

வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு - எஸ் ஷங்கர நாராயணன்

3 comments:

 1. //மெயின் ரோட்டிலிருந்து தர்ஹா வரையிலும் இரண்டு பக்கமும் வரிசையாக போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். மறியம் பயந்து போனாள்.
  "இந்த பாளறுவானுவளே.. பாத்தாலே கொடலு கலங்குதள்ளா.." //

  //தர்ஹாவிலிருந்து திரும்பி நடந்து வரும்போது பீர்மா மறியத்திடம் சொன்னாள்:
  "நாசமா போனதுவோ...நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ...நம்மளமாதிரித்தானே இருக்கா..எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா... பள்ளிகோடத்துக்கு போட்டாளான்னு கேட்டதுக்கு.. பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்டா ஆவப்போறா..ன்னா.."
  வேதனையும் எரிச்சலும் ஒருசேர எழுந்தபோது அவளின் உம்மாவின் முகமும் வாப்பாவின் முகமும் நினைவில் வந்தது.//

  அச்சப்படும் மறியங்களும் ....
  ஆதங்கப்படும் பீர்மாக்களும் இருந்திருக்கிறார்கள்;இருக்கிறார்கள்; இருப்பார்கள்

  ஆனால் அனைவரும் அடையாளங்கண்டது அவர்களையல்ல;
  வெறும் ‘பொண்டுவ’ள மட்டும்தான்.

  சமூகம் மீரான்மைதீனின் பார்வையை
  தமதாக்கிக் கொள்ளவேண்டும்

  ReplyDelete
 2. அப்பப்பா சொக்கிப்போனேன் இந்தக் கதை வாசித்து. வெகு சிறப்பு

  ReplyDelete
 3. அருமையான கதை.எளிமையான நடை. அற்புதமான அனுபவத்தைத் தந்தது. மிகவும் சிறப்பு. ஆபிதீன் நானாவுக்கும் மீரான் மைதீனுக்கும் வாழ்த்துக்கள்.

  - ஸபீர் ஹாபிஸ்

  ReplyDelete