Saturday, April 23, 2022

இசை : ஆண் மோகினி !

நாதஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களின் அழகைப் பார்த்து ‘ஆண் மோகினி’ என்று அழைப்பாராம் செம்மங்குடி! வாசிப்பைக் கேட்டும் சொல்லியிருப்பார். மயங்கிவிட்டேன். தேடித்தேடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

Thiruvengadu Dr .T.P.Subramania Pillai-Pallavi_Mohanam_Ragamalika

Thanks to : Guruvayurappa Dhasan & Yuvan

*

ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு பதிவு :

திருவெண்காட்டாரும் நானும் :

- நாதஸ்வர ரசிகமணி குருவாயூரப்பதாசன் Dr. B.சுந்தரராமன், M.A, BEd, M.Phil ,PhD

1969ல் நாதஸ்வர நவராத்திரி இசை விழாவை பிரதி வருடம் பத்து நாட்கள் நான் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார்நேரியில் தொடக்கிய பொழுது திருவீழிமிழலை, செம்போன்னார்கொவில், இஞ்சிக்குடி ,திருப்பாம்புரம் திருமெய்ஞானம், ஏகேசி, போன்ற பிரபல மேளங்கள் வருகை தந்தாலும் திருவெண்காட்டார் வருகை தராத குறை மிக இருந்தது .இதைப்பற்றி அவரிடம் முதல் தவிலாக பன்னெடும்காலம் பணி புரிந்தும் அவரது ஒலிப்பதிவு ரிகார்டுகளில் தனிதவில் வாசித்தும் இருந்த பிரசித்தி பெற்ற தவில் கலைஞர் கும்பகோணம் அமரர் திரு கே. ஏ.தங்கவேல் பிள்ளை அவர்களிடம் கூறியதும் அவர் என்னை திருவெண்காட்டிற்கு அழைத்து சென்று டாக்டர் திருவெண்காடு டிபி சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அது முதல் டி பி எஸ் அவர்களின் இனிய குடும்பத்தில் அவரது மூன்று மகன்களுடன் நானும் நான்காவது மகன் ஆனேன். இனி இக்கட்டுரையில் திருவெண்காடு திரு டி பி சுப்பிரமணிய பிள்ளை அவர்களை “டி பி எஸ்” என்றே குறிப்பிடுகிறேன்.

டி பி எஸ் அவர்களை அவரது தெய்வத்தாய் கருவில் சுமந்து இருந்த பொழுது திருவெண்காட்டில் அகோர மூர்த்தி திரு வீதி உலா வந்த சமயம் சிவாசாரியார் ஒருவருக்கு தெய்வ சாந்நித்யம் ஏற்பட்டு பின் வருமாறு அருள் வாக்குக் கூறினார் “உலகம் போற்றும் புகழ் மிக்க இசை மேதை ஒருவன் இந்த இல்லத்தில் பிறக்க போகிறான் ! அவனுக்கும் பிறகு இவ்வூர் அவன் பெயரினாலேய இயங்கும் “ அது அப்படியே உண்மையானது

சிறுவயதிலேயே தம் தகப்பனார் திரு பிரமநாத பிள்ளை அவர்களை டி பி எஸ் அவர்கள் இழந்ததால் இவரது தாய் மாமன் இவரை தம் தோளிலேயே நாங்கூரில் இருந்து சிதம்பரம் வரை (அந்நாட்களில் பஸ் வசதி இல்லாததால்) அடிக்கடி சுமந்து சென்று சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை அவர்களிடம் நாதஸ்வரம் பயிற்றுவித்தார்.

மிக குறுகிய காலத்திலேயே நாதஸ்வரத்தின் முடி சூடா மன்னன் ஆகி நாதஸ்வர ராஜா’ புன்னாக நாத மணி மகுடி மன்னன் கலா சிகாமணி கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப்பெற்றார் .இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் இவர் புகழ் பரவியது . உலகத்தின் வரைபடத்தில் இவர் கால்தடம் பதிக்காத நாடுகளே இல்லை எனலாம் அந்நாளில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி திரு, டி .என்.ராஜ ரத்னம் பிள்ளை அவர்கள் தம் இரு சகோதரிகளையும் ஒரே நாளில் இவருக்கு மணம் முடித்து வைத்தார் .திருவெண்காட்டில் நடந்த ஊர்வலத்தின் போது ராஜ ரத்னம் அவர்கள் நாதஸ்வரம் இசைப்பதாக இருந்தது.சில சூழ்நிலைகளால் அவர் கலந்து கொள்ள முடியாமல் போகவே வந்திருந்த மாபெரும் ஜனத்திரள் டி பி எஸ் அவர்களே நாதஸ்வரம் இசைக்க வேண்டும் என்று ஒரு மாபெரும் போராட்டமே நடத்தியது .உடனே ஊர்வலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் வேடம் இட்டு நடுவில் உட்கார வைத்து இரு புறமும் தம் இரு மனைவியரை அமர வைத்து தம் திருமண ஊர்வலத்துக்கு தாமே நான்கு திரு வீதிகளிலும் டி.பி.எஸ் நாதஸ்வரம் வாசித்தார் .( இந்த சம்பவம் அடியேனால் எழுதப்பட்டு இதயம் பேசுகிறது இதழில் 1976ல் வெளி வந்துள்ளது .)

பழனி, திருவையாறு இசைக்கல்லூரிகளுக்கு டிபி எஸ் முதல்வராக இருந்த பொழுது அவருடன் சென்று வருவேன்.எம் ஜி ஆர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன் கலைஞர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன்.கட்சிகட்கு அப்பாற்பட்டு எல்லாத் தலைவர்களும் டி பி எஸ் அவர்களுடன் ஒன்று கலந்து அவருக்கு உரிய மரியாதை அளித்து மனித நேயத்துடன் பழகுவார்கள்.

தனிப்பிறவி படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் முருகன் வேடத்தில் வருவது டி பி எஸ் அவர்களின் காத்தவராயன் படித்தில் அவர் தோன்றிய முருக வேட ஸ்டில் ஒன்றைப்பார்த்த பிறகே ஆகும். இவரைப்போன்ற சிகை அலங்காரத்தையே எம் ஜி ஆர் அவர்கள் தம் முன்னாள் படங்களில் மேற்கொண்டார் .இவரிடம் இருந்த அபரிமிதமான நட்பின் அடிப்படையிலேயே தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கியதும் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இவருக்கு அளித்து எம் ஜி ஆர் மகிழ்ந்தார்

மக்களின் ஏகோபித்த ஆதரவு டிபி எஸ் அவர்களிடம் இருந்தது .கல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட விழா நிறைவின் போது மேலிருந்து மேடை முழுவதும் ரோஜா மலர்களை கூடை கூடையாக கொட்ட ஏற்பாடு செய்து இருந்தார்களாம் .வட இந்திய திரைப்பட இசை அமைப்பாளர் சைகால் அவர்களின் பாடல் ஒன்றை இவர் வாசித்ததற்கு வெகுமதி அந்த கௌரவம் தரப்பட்டது .இதே பாடல் பிறகு நௌஷாத் அவர்களால் சோல்ஜர் என்ற படத்தில் கையாளப்பட்டது ,

ஆல் இந்தியா ரேடியோ என்று நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு சிவ ரஞ்சனி ராகத்தில் ஒரு தொடக்க இசை இசைக்கப்படுமே அது டி.பி.எஸ் அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானது . இவர் நாதஸ்வரத்தில் வாசித்ததை அடியொற்றி வாத்திய விருந்தா குழுவினரால் ஒப்புமை ஆக்கம் செய்யப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதன் முதல் ஆல் இந்தியா ரேடியோவில் முதன் முதல் நிகழ்ச்சியாக சுதந்திரப்படல்கள் நாதஸ்வரத்தில் வாசித்து ரிகார்ட் ஏற்படுத்தியவர் இவரே எனலாம்.

ஒருமுறை தமிழிசை சங்கத்தில் இவர் நாதஸ்வரம் வாசித்த போது ம்யூசிக் அகாடேமிக்கு கூடிய கூட்டத்துடன் சிலர் ஒப்பிட்டு பேசிஎதில் வருந்திய கலைஞர் அவர்கள் “காட்டில் காய்ந்த நிலா” என்று இதனை ஒப்பிட்டுப்பேசி அவர்கட்கு பதிலடி கொடுத்தார்.வயலின் மிருதங்கத்துடன் தம்பூரா ஸ்ருதியுடன் நாதஸ்வர கச்சேரிகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர் டி பி எஸ் அவர்களே

மத்யம ஸ்ருதியில் நாதஸ்வரம் இசைக்கும் மாண்பும் இவருக்கே உரியது .மோகனம் பிலஹரி போன்ற ராகங்களை வாசிக்கும் போது அடிக்கடி தைவதத்தை தொட்டு ஒரு ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தி வருவார். ஷண்முகப்ரியா போன்ற பிரதி மத்தியம ராகங்களில் அடிக்கடி மத்தியமத்தில் நிலைத்து நிற்பதும் டி பி எஸ் அவர்கட்கே உரிய தனித்துவமானது எனலாம். துரித கால ஸ்வரங்களைத் தமக்கே உரிய பாங்கில் மிக வேகமாக அதிரடியாக வாசிப்பதும் இவருக்கே உரிய கை வந்த கலை எனலாம் ! .

எந்த வித்துவான்களையும் குறைவாகப்பேசவேமாட்டார். வாய்ப்பாட்டு சங்கீத வித்துவான்களுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர்.

ஒரு குறிப்பிட்ட தினம் இரவு கச்சேரி என்றால் பிற்பகலில் ஓய்வு எடுக்கும் போது ஆக்கூர் மணி மற்றும் மலைக்கோட்டைபஞ்சாமி போன்ற உடன் வாசிப்பவரை விட்டு மெல்லிய குரலில் சில உருப்படிகளைக்காலடியில் அமர்ந்து பாட சொல்வார். அவரில் சிலவற்றை தேர்ந்து எடுத்து இரவு கச்சேரியை சோபிக்க செய்வார். அவருக்கு வாசிக்கும் தவில் வித்துவான்கள் அவரது கற்பனைக்கு இடைஞ்சல் செய்யாத வித்துவான்களாக இருக்க வேண்டும் .தற்போது உள்ளது போல நாதஸ்வர வாசிப்பின் இடையில் தன்னிச்சையாக தவுலை குறுக்கே புகுந்து வாசிப்பது,போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் இறங்க அவரிடம் துணிந்ததாக சரித்திரமே கிடையாது.அந்நாட்களில் நாதஸ்வரத்துக்கு கட்டுப்பட்டு தவில் இயங்கி வந்தது.

“சிசு அறியும் பசு அறியும் பாம்பறியும் இசையின் பெருமையை” . அவ்விதம் இவர் மகுடி இசைத்தால் இவர் வீதி உலாவில் மகுடி வாசித்தால் அந்த மாபெரும் கூட்டத்தில் எங்கிருந்தோ பாம்பு ஒன்று வந்து புகுந்து கொள்ளும் அவ்விதம் பாம்பு தட்டுப்படாமல் இருந்தது கிடையவே கிடையாது

திருவையாறு தியாக பிரம்ம ஆராதனையின் செயலராக பல காலம் விருப்பு வெறுப்பு இன்றி சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இறுதி நிகழ்ச்சி இவருடையது தான் பெரும்பாலும் வயலின் மிருதங்கத்துடன் அமையும் .இதைகண்டும் கேட்டும் களிப்பதற்கு என்றே ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் வந்து இறங்கும்.

தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி செயல் பட்ட போது(1975-1976) கவர்னரின் அட்வைசரி கமிட்டி உறுப்பினராக பணியாற்றினார் .தஞ்சையில் இருந்து முதன் முதல் சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட போது இந்த அடிப்படையில் இவருக்கு அழைப்பிதழ் வந்தது நானும் உடன் சென்று இருக்கிறேன்.

கண்ணன் குசேலர் வீட்டுக்கும் சென்று வந்ததைபோலத் தம் ரசிகர் எவ்வளவு எளிமையானவராக இருந்தாலும் நட்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களது சுய மரியாதை குறையாத வகையில் அவர்களே அறியாத வகையில் அவர்கட்கு மறைமுகமாக சில உதவிகள் செய்து வருவார். ஜாதகத்தில் இவருக்கு கஜ கேசரி யோகம் , தர்ம கர்மாதிபதி யோகம் போன்றவை உண்டு எனவே தான் இவருக்குப்பிறகும் இவர் பெருமை பேசப்படுகிறது! மேலும் இசை உள்ள அளவும் இசை ரசிகர் இப்பூவுலகில் உள்ள அளவும் திருவெண்காட்டார் அவர்கள் பெருமை பேசப்படும் !

Tuesday, April 12, 2022

நானும் என் எழுத்தும் - அசோகமித்திரன்

முன்குறிப்பு : 2001ஆம் ஆண்டு ராஜராஜன் பதிப்பகம்  வெளியிட்ட ’அசோகமித்திரன் கட்டுரைகள்’ எனும் நூலிலிருந்து இந்தப் பகுதியைப் பகிர்கிறேன். இது சுருக்கமான வடிவம் போலிருக்கிறது. ‘நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பிலேயே அசோகமித்திரனும் பிற தமிழ் எழுத்தாளர்களும் எழுதிய விரிவான உரை,  தமிழிணையம் மின்னூலகத்தில் 153 கிலோ எடையுடன் கிடைக்கிறது. (பலமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து பதிவிறக்கலாம்.) க.நா.சு , தி. ஜானகிராமன், வில்லியம் ஃபாக்னர், ஜான் அன்வி என்று பல ஆசிரியர்களைப் பற்றியும் அசோகமித்திரன் அவர்கள் எழுதி  இருந்தாலும் இந்தப் பகுதியை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அந்த ரப்பர் ஸ்டாம்ப் விசயம் :-) எனக்குத் தேவை கொஞ்சம் புன்னகை. அவ்வளவுதான். நன்றி. - AB. 

*


நானும் என் எழுத்தும் - அசோகமித்திரன்

இது ஆசிரியர் அழைப்பின் மீது எழுதப்படும் பகுதி. பொதுவாகப் பிரபலஸ்தர்களுக்குப் பொருந்திப் போகும் பகுதி. பிரபலமாவதும் தன்னைப் பற்றி விவரித்துக் கொள்வதில் தேர்ச்சியடைவதும் இணைந்து செல்பவை. மூன்று முறை முழுக்கட்டுரை எழுதித் தூக்கிப் போட்டுவிட்டு நான்காவதாக இதை எழுதுகிறேன்.

சுமார் இருபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். அச்சில் பெயர் வந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போகிறது. அதற்கும் முன்னால் நான் எழுதிய ஒரு, ஒரு மணி நேரரேடியோ நாடகத்திற்கு, நமது அகில இந்திய ரேடியோக்காரர்கள் பரிசு கொடுத்தார்கள். சுமார் நான்கைந்து நாட்கள் உட்கார்ந்து எழுதி போட்டிக்கு அனுப்பித்த அந்த நாடகத்தை, பரிசு முடிவு அறிவிக்கப்பட்ட பின் ஒரு முறை வாசித்துப் பார்த்தேன். உடனே என் கைப்பிரதி, நாடகத்திற்காக நான் எழுதியிருந்த குறிப்புகள் எல்லாவற்றையும் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தேன். அந்த நாடகத்தை இன்று ஏதாவது போட்டிக்கு மறுபடி அனுப்பினால் அவசியம் பரிசு பெறும்.

என் கதைகளைப் பொறுத்த மட்டில் அச்சுப்படுத்தும் முடிவுகள் அவ்வளவு சீக்கிரம் எடுக்கப்படவில்லை . ஒவ்வொரு கதையும் சாவகாசமாகப் பத்திரிகைக் காரியாலயங்களுக்குச் சென்று விட்டு வரும். அந்நாளில் அநேகமாக எல்லாப் பத்திரிகைக்காரர்களும் அவர்களுடைய முடிவை, அதாவது பிரசுரிக்க இயலாது என்ற முடிவை, ஒரு ரப்பர் ஸ்டாம்பு கொண்டு கையெழுத்துப் பிரதி மீது முத்திரையடித்துத் திருப்பியனுப்புவார்கள். என்னுடைய கையெழுத்துப் பிரதிகளின் முதல் பக்கத்தில் பல கட்டங்கள் வரைந்து வைத்திருப்பேன். அவற்றில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கான ரப்பர் - ஸ்டாம்பின் சுற்று வடிவத்தை வரைந்து இந்த இடம் இந்தப் பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் அந்த பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடவும் செய்திருப்பேன். அப்படியிருந்தும் பத்திரிகைக்காரர்கள் கண்ட கண்ட இடங்களில் முத்திரையடித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். ஒரே ஒரு முறை மட்டும் குமுதம் பத்திரிகை ஒழுங்காக நான் வரைந்திருந்த எல்லைக்குள் முத்திரையடித்துத் திருப்பியனுப்பியது.

இந்தக் கதைகள் பல என்னிடம் தங்கிப் போயின. இந்த ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் வெளியான 'நம்பிக்கை' 1961 ஆம் ஆண்டில் எழுதிய கதை. ஒரு 'தீபம்' ஆண்டு மலரில் வெளியான 'அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்' 1956 இல் எழுதப்பட்டது. நான் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளும் பல என் கைவசம் இருக்கின்றன. சமீபத்தில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி வெளியிட்ட என் கதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இப்போது அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த நடுவர் ஒருவர் எழுதியிருந்தார் : 'புதுமையான படைப்பு......'

இதனால் இப்போது வெளியாவதெல்லாமே என்னுடைய பழங்கதைகள் தான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஆண்டுக்கு மூன்று புதுக்கதைகள் எழுதுகிறேன். உண்மையில் ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கதைகளுக்கு மேல் எழுத எனக்கு முடியவில்லை . இந்த 1970 இல் ஐந்தாறு புதுக்கதைகள் 'போட்டோ ' (தீபம் - ஏப்ரல் 1970) 'கல்யாணம் முடிந்தவுடன்' (தினமணி கதிர் - செப்டம்பர் 1970) 'குதுகலம்' (கசடதபற - நவம்பர் 1970).

என்னை முதன் முதலில் எழுதத் தூண்டிய எழுத்துக்கள் கல்கியுடையதும் சார்லஸ் டிக்கன்சுடையதும் என்று கூறிக் கொள்ள வேண்டும். இருவருக்கும் இலக்கிய உலகில் அவ்வளவு அந்தஸ்து இல்லை. டிக்கன்ஸ் எழுத்தில் மேற் பூச்சான எளிமை. கல்கி எளிதாகவே எழுதினார். தெளிவு, சீரான ஓட்டம், உருவ அமைதி - இவ்வம்சங்களுக்காக க.நா.சு.வின் ‘வாழ்ந்தவர் கெட்டால் ' நாவலைக்கண்டு மிகவும் வியந்திருக்கிறேன்.

நூல் வடிவத்தில் என்னுடையது ஒரு புத்தகம் ("கரைந்த நிழல்கள்'') வந்திருக்கிறது. ஒரு நண்பர் (இவர் பெயரை வெளியிட எனக்கு அனுமதியில்லை) எடுத்துக் கொள்ளும் முயற்சியால் என் கதைகள் கொண்ட தொகுப்பு வெளிவரவிருக்கிறது. ஜனவரி 1971க்குள் நூறு வாசகர்கள் இப்புத்தகம் வாங்க முன் வந்து ரூ.5/- அசோகமித்திரன், தாமோதர ரெட்டித் தெரு, தியாகராய நகர், சென்னை -17 விலாசத்திற்கு அனுப்புவார்களேயானால், மார்ச் 1971 க்குள் புத்தகப் பிரதிகளைத் தபால் செலவு இலவசமாக அனுப்ப அவர் எண்ணியிருக்கிறார். புத்தகம் சுமார் 200-250 பக்கங்கள் கொண்டதாயிருக்கும். பணம் அனுப்புபவர்களின் பணம் உத்திரவாதம்.

வேறு இரு தொகுப்பு நூல்களில் என் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று வாசகர் வட்டத்தின் ‘அறுசுவை'; இன்னொன்று 'நகுலன்' வெளியிட்ட 'குருக்ஷேத்திரம்', 'அறுசுவை' நல்ல தொகுப்பு. சம்பிரதாய கோட்டுக்குள் அடங்கியிருக்கும் வெளியீடாயினும், 'குருக்ஷேத்திரம்' வெளி வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நூறு பிரதிகள்தான் விற்றிருக்கின்றன. இந்த நூல் தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உண்மையாக, அழகாக, அறிவுப்பூர்வமாக, பல படைப்பிலக்கியத் துறைகள் மூலமாகப் பிரதிபலிக்கிறது.

உத்தி மட்டுமே இலக்கியமாகி விடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச் செய்யாத உத்திதான் மிகச் சிறந்ததாக நினைக்கிறேன். சொல்ல வேண்டிய பொருள், மனிதனுக்கு வெளியே இருப்பது. இதனால் ஒரு பொருளைப் பற்றி இருவர், அல்லது பலர், எழுதக்கூடும். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு பொருளைக் காரணமாகக் கொண்டு, அவனுக்கென்ற தனிப்பட்ட வகையில் மனவெழுச்சி அல்லது நெகிழ்ச்சியடைகிறான். இதன் தீவிரம்தான் எழுத்துக்குத் தரமளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆதலால், நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதி விடுவார்களோ என்ற பயம் இல்லை.

மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்து கொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்று தான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக் கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால், இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான், எழுத்து உண்மையானது என்று நான் நினைப்பேன்.


என் கதைகளில் அநேகமாக எல்லாமே எனக்குப் பிடித்தவை. 'மறுபடியும்', 'வாழ்விலே ஒரே முறை', 'மஞ்சள் கயிறு' என்ற கதைகள் மிகவும் பிடித்தமானவை. எப்போதோ நிகழப் போவதைப் பற்றி இப்போது என்ன என்று சிலர் அல்லது பலர் கேட்பார்கள். ஆனால், சில நம்பிக்கைளில்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன.

(1971)