தாஜூடன் டெலிஃபோனில் பேசினாலே போதும், தனியாக 'விஷம்' எதற்கு?! - ஆபிதீன்
**
ஆபிதீன் பக்கங்கள் குறித்த சந்தோசத்தில் சஞ்சரித்ததில், முதலில் சொல்லணும் என்று நினைத்ததை சற்றைக்கு மறந்துதான் விட்டேன். போகட்டும். கீழே காணும் சுஜாதாவின் கட்டுரைக்கு அவர் இட்டிருந்த பெயர் 'பேரழகியாக இருப்பதால்...?' ஆனால், இங்கே இக்கட்டுரைக்கு நான் சூட்டியிருக்கும் பெயர் 'விஷம்'. சுஜாதாவிடம் மானசீகமாக அனுமதி பெற்றே இத்தலைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை வாசகர்களின் கவனத்திற்கு வைக்கிறேன். சுஜாதா அப்படி பெயரிட்டிருந்தாலும், இக்கட்டுரை எந்தவொரு பேரழகி குறித்த வர்ணனையும் கொண்டதல்ல. பரிபூர்ண நச்சு விஷத்தின் பரிமாணங்களை தீர அலசியிருக்கும் கட்டுரை மட்டுமே இது. நான் தேர்வு செய்தப் பெயரை மறுக்காமல் சுஜாதா வரவேற்கவே செய்வார். அத்தனைக்கு சுஜாதா நல்லவரும் கூட. கோபித்துக் கொள்ளவே தெரியாது.
சரி, இக்கட்டுரைக்கு 'பேரழகியாக இருப்பதால்...?' யென ஏன் அவர் பெயரிட்டிருக்கிறார்? யோசிக்கத் தோன்றுகிறது. 'விஷம்' என்பதைவிட 'பேரழகி' கவர்ச்சியானது. 'பேரழகி....' யை பத்து நூறு வாசகன் கூடுதலாக எழுத்துக் கூட்டியேனும் காணுவான். விஷத்தை யாருக்குதான் பிடிக்கும்? என்பதாக அவரது அனுமானம் இருந்திருக்கலாம். இந்த என் அனுமானமும் கூட அவரிடம் பெற்ற அனுபவத்திலானதுதான். சுஜாதாவை இன்னொருக் கோணத்திலும் ஆழ்ந்துப் படித்து கற்றிருக்கிறேன். அது சரி... என்றாலும்... யோசிக்க யோசிக்க பிடிப்பாடு கொஞ்சம் உதைக்கிறது.
உலக நியதிப்படி 'அழகு' என்பது இன்னொருவகை விஷம்! மறுக்க முடியாது. அப்போ... பேரழகி என்பது? வெரி சிம்பிள், முத்திரை கொண்ட விஷம்! சுஜாதா சுட்டி இருக்கும் தலைப்பு சரிதானோ!? இருக்கலாம். எனக்கு அவரை அணுக, என்னுடைய ஏனோதானோ அனுபவம் போதாதுதான். இன்னொரு பக்கம், விஷத்தோடான அனுபவமும்கூட அப்படிதான். அதனிடமான சல்லாபம் குறைவிலும் குறைவு. எப்பவோ ஒரு காலத்தில் வைத்தீஸ்வரன் கோவில் வடக்குத் தெருவில் கொண்ட அதனோடான அனுபவமெல்லாம் சேர்த்தாலும் குறைவு குறைவுதான். நிச்சயம் போதாத சங்கதிதான். அப்படியும் சொல்லிவிட முடியாது. நிறைய நாடுகளைச் சுற்றி நிறைய நண்பர்களை பெற்றவன். In other hand, நானும் அவர்களுக்கு நண்பர்களாக இருந்தவன். தவிர, இப்போது 'ரியல் எஸ்டேட்' வியாபார முகாந்தர அலைச்சலில் விதவித வினோத மனிதப் பேரழகையெல்லாம் சலிக்கச் சலிக்க கண்டுகொண்டே இருக்கிறேன். ஒரு ரூபாய் சம்பாதிக்க
ஒருநூறு விஷம் தோய்ந்த வார்த்தைகள் என்கிற கணக்கில் நானும் புழங்குகிறேன். இதற்குப்போய் சமர்த்தென்று மெச்சுகிறார்கள். இப்போதைக்கு விஷம்தான் எத்தனை கவர்ச்சி! அதுதான் எத்தனைப் பேரழகு!!
விஷத்தைப்பற்றி எழுதிக்காட்ட எண்ணம் கொண்ட போது, ஓர் பழைய ஞாபகம் விடாது துரத்தி, தன்னையும் எழுதென்கிறது. தவிர்க்க முடியவில்லை.
முழுச்சுதந்திரத்தையும் அனுபவித்த இளமையில், என் நண்பர்கள் குழுமத்தில் ஒட்டியும் ஒட்டாமல் ஒரு நண்பன். கொஞ்சத்திற்கு வேடிக்கை வேதனை கலந்தவன். எங்களோடு அவன் ஒட்டுவதற்கு ஒத்த வயதும், ஒட்டாமல் விலகிப் போக வறுமையும் கொண்டிருந்தான். 'காக்கா' வீட்டுப் பையன். காக்காவுக்கு ஊரில் 'சாயா' கடை இருந்தது. கேரளாவில், அவரது மனைவி மக்கள் இருந்தது. இங்கே, எங்கள் ஊரிலும் கூடுதலாக மனைவி மக்கள். நண்பனின் அம்மா எங்கவூர் தமிழ் இஸ்லாம். அங்கீகரிக்கப்பட்ட கலப்பில் பிறந்த அவனது பெயர் ஷாஜகான். அவனது சின்ன வயதில், அவன் தன் குடும்ப வறுமையை தூக்கிப் பிடித்தவனாக டிரைவராக பெரிய வீடுகளில் பணி செய்யத்துவங்கினான். ஆனால், அவன் பணிச் செய்யும் பெரிய வீடுகள் அவனுக்கு நிலைப்பது இல்லை. அவ்வப்போது அது மாறிக் கொண்டே இருக்கும். காரணமெல்லாம் பெரிய ரகசியங்கள் கொண்டது. எந்த பெரிய வீட்டில் அவன் பணி எடுத்தாலும் அவ்வீட்டு முதலாளிக்கு அழகான, வயதுக்கு வந்த, ஒரு மகளாவது இருக்கும். கட்டாயம் அது இவனை காதலிக்கும், அல்லது இவனை காதலிக்க அது ஏங்கித் தவிக்கும். அவன்தான் இதனை அவ்வப்போது ரகசியச் செய்தியாக எங்களிடம்
சொல்வான். இதனை காக்கச் சொல்லிவிட்டு, இன்னும் பலரிடமும் சொல்லி அப்படியே அதே வேண்டுகோளையும் வைப்பான். எங்களிடம் சொன்னாலே போதுமென்று ஏனோ அவனுக்கு ஒருபோதும் விளங்குவதே இல்லை.
ஒரு பெரிய வீட்டில் இருந்து இன்னொரு பெரிய வீட்டிற்கு அவன் மாறுவதென்பது, கொண்ட காதல் தோல்வியினாலா? அல்லது, சம்மந்தப்பட்ட வீட்டார் அவனை தனியே கனித்த கவனிப்பாலா? தெரியாது. அந்தப் பக்கத்தை அவன் சொல்ல மாட்டான். சொல்லத்தான் முடியுமா என்ன? அவன் சொல்லாவிட்டால் என்ன, அவன் உடம்பில் காணும் முத்திரைத் தழும்புகள் போதாதா. போதாகுறைக்கு அவன் நொந்துத் திரிவதில் காணக்கிடைக்காத செய்தியா! இந்த நண்பனை இங்கே இத்தனைக்கு அவசியமாக காட்டுவதென்பது அவன் சம்மந்தப்பட்ட ’கிசுகிசு’களுக்காகவெல்லாம் அல்ல. தொடர்ந்து, பின் தொடரும் அவனது விஷம் தோய்ந்த வேதனை மற்றும் வேடிக்கைகள் பாக்கி இருக்கிறது.
அதுதான் இங்கே முக்கியம்.
தனது ஓவ்வொரு காதல் தோல்வியையும், காதலைச் சொன்ன அதே ஆர்வத்தோடுதான் அவன் சொல்வான். நாங்களும் அவனிடம் 'மெய்ப்பொருள்' காண முயலமாட்டோம். எதையாவது கேட்டு சங்கடப்படுத்தப்போய், அவனால் கிட்டும் இனாம் சுவாரசியங்கள் கைநழுவிவிட்டால்? அவன் எது சொன்னாலும் சரியென்றே கேட்போம். மெய்பொருள் பின்னாடி தானே காற்றில் வரும்.
தன் காதல் தோல்வியை சொன்ன அடுத்த மூன்றாம் நாளைக்கு நம்ம ஷாஜகான் மஜுனுவாக மாற்றம் கொள்வான். கட்டாயம் சவரம் செய்ய மாட்டான். அவன் கைகொள்ளும் முதல் முயற்சியும் அதுவாகத்தான் இருக்கும். அவனது கருத்த முகத்தில் கருகருத்த முடிகள் தீவிரமாக வளர்ந்து, இரண்டொரு நாளில் அடர்ந்து தோற்றத்தையே மாற்றிவிடும். அது அவன் பெற்ற வரமாகவே கணிக்கத் தோணும். தவிர, அவ்வப்போது அவன் தேவதாஸாகவும் 'மணம்' பரப்பிக் கொண்டு நடையில் அழகு தடுமாற்றம் காட்டுவான். 'உலகத்தில் ஒன்றுமேயில்லை' என்றும் தத்துவம் பேசுவான். சரியாய் அடுத்த மூன்றாம்தின முன்னிரவில் எங்களிடம் வந்து "என்னை நாளை நீங்கள் பார்க்க முடியாது.." என்பான். அவன் தன் காதலைச் சொன்ன நேரத்தில் கொண்ட அதே ரசனையோடேயே அவனது இந்தக் பிரகடனத்தையும் கேட்போம். ஆனால் அப்போது நாங்கள் மறந்தும் சிரிக்கக் கூடாது. அது அவனுக்கு ஆகாது.
ஒருவன் தனது சாவை பிரகடனப்படுத்தும் போது எதிராளிகள் சிரிப்பது என்பது எந்த வகையில் சரி. அது என்ன நாகரீகம்? புரியத்தான் செய்தது. என்றாலும் நாங்கள் நாகரீகம் என்பதையே அப்போதான் படித்துக் கொண்டிருந்தோம். அதனால் என்னவோ எங்கள் முகம் எங்களோடு ஒத்துழைப்பதில்லை. பெரிதாக இல்லாவிட்டாலும், சின்னதாக முகம் பூத்துவிடும். அதுதான் தருணமென அவன் தனது கைவிரல்களின் மடிப்பில் வைத்திருக்கும் எலிப்பாஷாணப் பொட்டலத்தைக் காட்டுவான். எங்கள் சிரிப்பு எங்களைக் கேட்காது சட்டென மலர்ந்துவிடும். பிறகு அவனிடம் ’ஸாரி’ கேட்டுவிட்டு, அடுத்த முறை இப்படி நீ சொல்கிறபோது நாங்கள் கட்டாயம் சிக்க மாட்டோம் என்று உறுதியும் செய்வோம். எங்களை முறைத்தபடிக்கு சாகும் ஆயத்த அவசரத்தில் அவன் போய்விடுவான். மறுநாளைக்கு மறுநாள் இரவு தென்படுவான். விஷம் ஏமாற்றிவிட்டது என்பான். இருநூறு ரூபாய் டாக்டர் செலவு செய்ய நேர்ந்ததில்
சங்கடப்பட்டு கொள்வான். எலிப்பாஷாணம் எலிகளுக்கான மாற்றுத்தீனி அல்லது சத்துணவு என்பதை எத்தனையோ முறை அவனிடம் எடுத்துச் சொல்லியாகிவிட்டது. திரும்பத் திரும்ப அவன் அதையே நம்பி ஏமாந்து புலம்பினால்? யார்தான் என்ன செய்ய முடியும்?
அடுத்த காதல் தோல்விக்கு அவன் பூச்சிக்கொல்லி மருந்தை பரிசோதித்தும் தோற்றான். அந்த மருந்தை உட்கொண்டால் மட்டும் போதாதாம். காதில் அதனை கொஞ்சம் ஊற்றிக் கொள்ள வேண்டுமாம். அந்த தொழில் நுட்பத்தை அவன் அறியவில்லை. அல்லது அறியவந்தும் அதை அவன் செய்யவில்லையா என்று தெரியாது. இப்போது இரண்டாயிரம் செலவென்றான். பிறகு நேர்ந்த அதி தீவிரமான காதல் தோல்வி ஒன்றில் கயிற்றையே பிரதானமாக நம்பினான். கயிற்றை
நம்பினான் சரி. ஆனால் தனது பழைய ஓட்டுவீட்டு உத்திரத்தை அவன் நம்பி இருக்கக் கூடாது. அந்த நடு இரவில், எல்லாம் முடிந்ததென தொங்கிய நாழியில், உத்திரம் எடைத் தாங்காமல் முறிந்து சரிந்து, முதலில் அவன் கீழே விழு... அவனது கழுத்தை உராசிக் கொண்டு உத்திரம்! வீடே அமளித்துமளி. தெருவே கதறல். இப்போ, வீட்டை எடுத்துக்கட்டின கூடுதல் செலவோடு ஏழாயிரமாம். பாவம்! ரொம்ப காலம் கழுத்தில் மாவுகட்டுடன் ஓர் தினுசாகப் போய்வந்து
கொண்டிருந்தான். பெரிய வீடு, டிரைவர் பணி, காதலிக்கும் பெண்கள், காதல் ஏக்கம் கொள்ளும் பெண்கள் எல்லாம் அவனுக்கிப்போ பழைய நிகழ்வுகலாகிவிட்டது. விஷத்தை முன் வைத்து தன் சாவோடு விளையாடுவதைப் பற்றி பேசவே மறந்து போன ஒரு நாள் ஒரு இரவு திடுமென அவனுக்கு விக்கல் எடுத்து, அது நில்லாமல் இல்லையென்றாகிப் போனான். நேரத்தில் கிட்டாத ஒருவாய் தண்ணீர் இப்போது அவனுக்கு அசல் விஷமாகிப் போனது.
நான் பார்த்த கிராமத்து வீடுகளின் தலைமாட்டுக் கொல்லையில் அரளி என்னும் விஷ செடியினை செழிப்பாக வளர்த்து வைத்திருக்கிறார்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் முற்றினால், அரளிச்செடியையே நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். அதன் காயைப் பறித்து அம்மியில் இரண்டுதட்டுத் தட்டி உருட்டி விழுங்கி மறு நாளைக்கு குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் நான் உயிர் பிரிய இருக்கிறேன் என்று தகவலை
அனுப்பிவிட்டு உயிரை விடும் அழகியல் ஜப்பானிய எழுத்தாளர்களிடமும், அறிவு ஜீவிகளிடமும் பிரபலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் தூக்கமாத்திரைகளை அதிகத்திற்கும் அதிகமாக உபயோகப்படுத்துவதாகவே சொல்கிறார்கள். தமிழ் இலக்கிய வட்டத்தில் இரண்டு பெரிய எழுத்தாளர்கள் கிணற்று தண்ணீரையும், குளத்து தண்ணீரையும் தங்களுக்கான விஷக் காரணிகளாக கண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பிரபலஸ்தர் பஞ்சம் பிழைக்க லண்டன் போய் இருந்த போது, ஓடும் ரயிலை விஷமாக ஏற்கத் தவித்திருக்கிறார். ஓடும் ரயில், மலையுச்சி, மொட்டை மாடியெல்லாம் அத்தனைக்கு ரசிக்கக் கூடிய விஷக் காரணிகளாகாது. அது இன்னும் மென்மையாக இருக்க வேண்டும். ஆம், நானெல்லாம் மெல்ல கொல்லும் விஷத் தேர்வாளன். புகைத்துப் புகைத்து மெல்ல...!
இருக்கு இன்னும்.
என்றாலும் போதும்.
இனி சுஜாதா.
-தாஜ்
இருக்கு இன்னும்.
என்றாலும் போதும்.
இனி சுஜாதா.
-தாஜ்
***
வி ஷ ம் - சுஜாதா
ஒரு கதைக்காக சயனைடு சாப்பிட்டால் என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. உங்கள் உடல் எடைப்படி ஒரு கிலோவுக்கு ஒரு மில்லிகிராம் சாப்பிட வேண்டும். ஒரு தபால் தலையளவுள்ள 50 மில்லிகிராம், தாராளம்.
பத்தாயிரம் கோடி சயனைடு மாலிக்யுல்கள் அதில் இருக்கும். அதாவது உங்கள் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் பத்து சயனைடு அணுக்கள். சயனைடு நம் பிராணவாயுவைப் பயன்படுத்துவதை தடுப்பதன் மூலம்
செயல்படுகிறது. மூச்சு திணறும்; மூளையில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும். நரம்பு மையம் பாதிக்கப்பட்டு, இதயத்தின் தசை இயக்கம் நின்றுபோய் பத்து செகண்டில் மயக்கம்; ஒரு நிமிஷத்தில் மரணம், மிஞ்சி மிஞ்சி போனால் மூன்று நிமிஷம்; கை கால் பலகீனம்; முகம் நீலம்பாரித்து வலிப்பு வந்து இறப்பு வரும். அதனால், எதற்கும் 'டை கோபால் எத்தலின் டயமின் டெட்ரா அசிட்டே' (மாற்று மருந்து கைவசம் வைத்திருந்தால் பிழைக்கலாம் என்று படித்துக் கொண்டிருக்கும்போது விஷங்களின் பிரயோகத்தைப் பற்றி சுவாரஸ்யமான சரித்திரம் கிடைத்தது.
ஆதிமனிதன் , கொல்வதற்கு விஷங்களை பயன்படுத்தியிருக்கிறான். கலஹாரி பாலைவனத்தில் இருந்த புதர் வாழ் மனிதர்கள் ஒருவகை மரவட்டையின் குடலிலிருந்து அரிய விஷப்பொருளை சாரமாக எடுத்து மிருகங்களை கொல்வதற்கு பயன்படுத்தினார்கள். மத்திய ஆப்பிரிக்க பிக்மி மனிதர்கள் சிகப்பு எறும்பிலிருந்து விஷம் எடுத்து பயன்படுத்தினார்கள். மலேயாவில், பனை ஓலையால் செய்த சின்னச் சின்ன ஊது அம்புகள் அம்பது அறுபது மீட்டர் கூடப் பாயுமாம். உபாஸ் மரத்தின் கோந்து, முனையில் தடவப்பட்டு செலுத்தினால் ஆளைக்கூடக் கொல்லுமாம். இந்த சிற்றம்புகள், ஜாவாவிலும் போர்னியோவிலும் இந்த உபாஸ் மரங்களையும் (ஆண்ட்டியாரிஸ் டாக்ஸிக்காரியா) பாம்பு, தேள்
விஷத்தையும் கலந்து கொடுப்பார்களாம். இவ்வாறு ஆதிகாலத்திலிருந்தே ஜப்பானியர்கள். கொலம்பியா தேசத்தின் செவ்விந்தியர்கள் காட்டுத் தவளையிடமிருந்து விஷமெடுத்தார்கள். பழங்கால மத போதகர்களுக்கும் பூசாரிகளுக்கும் சாமியார்களுக்கும் வித்தைக்காரர்களுக்கும் விஷ அறிவு தேவையாக இருந்திருக்கிறது.
கி.மு. 1900-ல் எகிப்திய பாப்பைரஸ் குறிப்பில் சயனைடு பற்றி இருக்கிறது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பர்சிய ராணி ஒருத்தி தன் மருமகனை விஷம் வைத்துக் கொன்றிருக்கிறாள். மித்திரதாத்தஸ் என்னும் ஆசியா மைனர் பிரதேச அரசன், தன் தாயை பதவி நீக்கி 80,000 பேரை விஷம் வைத்துக் கொன்றானாம். இறுதியில் இதில் என்ன சுவை இருக்கும் என்று சுயமாக சோதித்துப் பார்க்க அவனே விஷம் உண்டு இறந்தானாம்.
கி.பி. 1400 - 1700 காலகட்டம்தான் விஷங்களின் பொற்காலம் என்கிறார்கள். வெனிஸ் நகரத்தில் விஷம் வைத்து கொல்லவென்று ஓர் அரசுப் பிரிவே இருந்த்ததாம். (இப்போது பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் இவை உள்ளன) அப்போது யாரையாவது பிடிக்கவில்லை என்று சொல்லி, பெயர் விலாசம் கொடுத்தால் போதும், அதிகாலைக்குள் ஆள் காலி. திருப்தியானபின் பணம் கொடுத்தால் போதும்.
1589-ல் பாதிஸ்தா பார்த்தா, 'விஷங்கள் தயாரிப்பது எப்படி' என்று ஒரு புத்தகமே எழுதினார். அதில் தூக்கத்தில் கொல்வது எப்படி என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது. 'ஓப்பியம், பாலடோனா, ஹெம்லாக், ஸ்டராமொனியம்' நான்கையும் கலந்து ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டுமாம். மூன்று நாள் அதை புளிக்க வைக்க வேண்டும். சின்ன பெட்டியில் போட்டு யாரை கொல்ல வேண்டுமோ அவர் தலையணைக்கடியில் வைத்துவிட்டு, மூடியதைத் திறந்து வைத்தால்
போதும். சூரிய உதயத்துக்குள் பிணத்தை எடுத்துவிடலாம்.
மனிதன் மனிதனைக் கொல்வது காதலுக்கும் முந்தைய சமாசாரம். அடுத்தமுறை படுக்கப் போகும்போது தலையணைக்கு கீழ் பரிசோதிக்கவும்.
நாகப்பாம்பு தன் விஷத்தில் பல சமாசாரங்களை கலந்து வைத்திருக்கிறது. நரம்பு மண்டலத்தைத் தாக்க வலுவான விஷம், ரத்த சிவப்பு அணுக்களை நாசமாக்கும்.
லெஸிதினேஸ் என்னும் விஷம், தசைநார்களை ஸ்தம்பிக்கச் செய்யும் மற்றொரு விஷம். நாகப்பாம்புகள் சில பதினெட்டடி வரைகூட நீளமிருந்து, ஒரே சமயத்தில் முப்பதுபேரைக் கொல்லும் அளவுக்கு விஷம் வைத்திருக்குமாம்.
எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ராவை அகஸ்தஸ் சீஸர் மன்னன் வென்றபோது, 'அவளைப் பொது இடத்தில் ஊர்வலமாக காட்டப் போகிறேன்' என்று சூளுரைத்தான். கிளியோபாட்ரா தன்னை ஆஸ்ப் என்னும் பாம்பு கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டாள். Asp என்பது நாகப்பாம்புதான். கிளியோபாட்ரா வளர்த்த செல்லப் பிராணிகளில் ஒன்று. உலகப் பேரழகியாக இருப்பதால் தேவைப்படும்; எதற்கும் கைவசம் இருக்கட்டும் என்று வைத்திருந்தாளாம்!
****
நன்றி: 'விகடன் பேப்பர்ஸ்' (11.2.1998) & சுஜாதாட்ஸ் தொகுப்பு
தட்டச்சு& வடிவம்: தாஜ் (E-Mail : satajdeen@gmail.com )
நன்றி: 'விகடன் பேப்பர்ஸ்' (11.2.1998) & சுஜாதாட்ஸ் தொகுப்பு
தட்டச்சு& வடிவம்: தாஜ் (E-Mail : satajdeen@gmail.com )
ஹும்....
ReplyDeleteபேசாது வைதீஸ்வரன்கோயில்லெ வீடு வாங்சிட்டு இருந்திருக்கலாம். விதி யாரை விட்டுச்சு சவுதிலெ அலஞ்சு, துபைலெ அலஞ்சு இப்பொ சொந்த வூர்லெ அலச்செ
நாநா
ReplyDeleteநீங்க நல்லா இருக்கிங்களா?
சந்தோஷம்.
எனக்கான
உங்களின் கவலை
எனக்கு பெரிய கவலைத் தருகிறது.
வைதீஸ்வரன் கோவிலில்
வீடு வாங்காவிட்டாலும்,
கொஞ்சம் தள்ளிதான்..
மாமியார் வீடே இருக்கிறது.
இலக்கியத்தில்
என் புலம்பல் எல்லாம்
வெறும் புலம்பல்கள்.
ரசனைக்கானது.
ஜஹபர் நாநா
நான்
நல்லாவே இருக்கிறேன்.
இப்படி
எழுத்தில் சொந்த அப்பட்டங்களை
பதிவு செய்கிற போது
மனசு இலேசாகி...
எதோ ஒரு சுகம்.
விமர்சனத்திற்கு
நன்றி.
-தாஜ்
தாஜ் ஏன் எழுதுவதில்லை என்று வருத்தமாய் இருந்தது. விஷமத்துடன் ஆரம்பித்துவிட்டார். சந்தோஷாம். அதிகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையுடன்,அமீன்
Deleteஅன்பு அமீன்..
Deleteஎனக்கும் ஆசையாக இருக்கிறது.
எழுத கசக்குமா என்ன?
முடியலையே அமீன்.
கரண்டோடு
கண்ணா மூச்சி ஆடிக்கொண்டிருக்கும்
எங்களைப் பார்த்தால்
பாவமாக இல்லையா?
நான் விஷமத்துடன் தொடங்கியதான
உங்கள் கூற்று
சரியாகவே இருக்கட்டும்.
உள்ளே..
விஷம் பற்றிய என் கூற்றை
சொல்லவேண்டாமா?
ஏன்....
ரசிக்கலையா?
-தாஜ்
அ.முத்துலிங்கத்தின் பத்திகளை போன்று சுவராஸ்யமாய் இருக்கிறது தாஜ்.
Deleteநாநா
ReplyDeleteநீங்க நல்லா இருக்கிங்களா?
சந்தோஷம்.
எனக்கான
உங்களின் கவலை
எனக்கு பெரிய கவலைத் தருகிறது.
வைதீஸ்வரன் கோவிலில்
வீடு வாங்காவிட்டாலும்,
கொஞ்சம் தள்ளிதான்..
மாமியார் வீடே இருக்கிறது.
இலக்கியத்தில்
என் புலம்பல் எல்லாம்
வெறும் புலம்பல்கள்.
ரசனைக்கானது.
ஜஹபர் நாநா
நான்
நல்லாவே இருக்கிறேன்.
இப்படி
எழுத்தில் சொந்த அப்பட்டங்களை
பதிவு செய்கிற போது
மனசு இலேசாகி...
எதோ ஒரு சுகம்.
விமர்சனத்திற்கு
நன்றி.
-தாஜ்
விஷமோ இல்ல விஷமமோ
ReplyDeleteவிஷயம் முக்கியம்;
பிடித்தது புகைவிஷமாம்
தாஜ் “சமர்த்து”தான்
மனித நாகரீகத்தின் உச்சம்தொட்ட
விஷம் தெரியுமா?
கயிறைக்காட்டிலும் சுகமானதாம்-
முதலில் நினைவின்மை
அடுத்து சுவாச உறுப்புகள்,
எலும்பு உள்பட அனைத்து
தசைகளையும் முடக்கி
இதயத்தையும் சுவாசத்தையும்
மெலிதாகவும் அழுத்தமாகவும் நிறுத்தி
மரணத்தை சுகமாக சுவையாகத் தருமாம்
இன்னும் சுகமாக்க ஆராய்ச்சியும் நடக்கலாம்
பரீட்சிக்க யார் தயார்?
ஒரே தகுதி: வேறு யாரையாவது
கொடூரமாகக் கொன்றிருக்க வேண்டும்
ஆமா, அமெரிக்காவின் பல மாகாணங்களில்
இதுதான் மரணதண்டனை நிறைவேற்றும் விதம்
கொடூரமான தூக்குத்தண்டனை போன்றவற்றைவிட
இது எவ்வளவு தூரம் அதிநவீனமானது என்று
பாருங்கள்: http://en.wikipedia.org/wiki/Lethal_injection
இனி
HB-1 விசாவுக்கு கிராக்கி அதிகமாகலாம்