Thursday, February 2, 2012

முத்துநபியும் அழகிய முரணும்

மீலாது விழா கொண்டாடலாமா, கொன்று ஆடலாமா என்று ’அறிவார்ந்த’ விவாதங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன. அவர்களை விடுங்கள்,  ’பூமியில் உலவிய புல்லாங்குழல்’ தெரியாத புனிதர்கள். இவர்களுக்கு எங்கள் வீட்டு பொடியன் ராஷித் எவ்வளவோ பரவாயில்லை.  ‘சே.. ஞாயித்துக்கிளமை வந்திடுச்சி வாப்பா’என்று புலம்புகிறான்.ஆபிதின் பக்கங்களில் பதிவிடுவதற்காகவே ஜபருல்லாநானா அனுப்பிய உரைவீச்சை இப்போது இடுகிறேன் - மர்ஹூம் வாஹித் பாடிய அருமையான ’முத்துநபியே முத்துநபியே உங்கள் அருள் பெறுவேனா?’ பாடலுடன். ’காண்கின்றபோது உயிர் போக வேண்டும்’ என்று கண்ணீர்விட  வைக்கிறார்.  இந்தப் பாடலை இயற்றியது சலீம்மாமா என்று நினைக்கிறேன்.  ’என்னடா.. ஒரே ’பாய்’ சமாச்சாரமா இருக்கே..’ என்று பதறுபவர்களுக்காக அடுத்த பதிவு ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையிலிருந்து வரும், இன்ஷா அல்லாஹ்! (இதெல்லாம் வேறு யார் அனுப்புவார்? நம்ம தாஜ்தான்). அதற்கப்புறம்,  அதைச் சரிக்கட்ட மலையாள மாணிக்கம் வைக்கம் பஷீர் பற்றிய பதிவு - ஹனிபாக்காவின் குறிப்புகள். நான் ரொம்ப பிஸி.  சரி, முதலில் பாட்டு. ‘ இந்த அடிமையின் வாழ்வில் வரும் மடமைகள் நீங்க’...

***


Download
***
கேட்டாச்சா?

இப்போது முரண். அழகிய முரண். ஜபருல்லாநானாவின் வரிகளில்  ’மூன்று புள்ளி; ஒரு ஆச்சரியக்குறி’ நிறையவே வரும். அதெல்லாம்  முரணல்ல என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

***


அழகிய முரண்

பேதமை முற்றத்தில்
ஞானத்தின் பிறப்பு...!

அறியாமைத் தாழ்வாரத்தில்
அறிவின் அவதரிப்பு...!

பொய்மைக் கூடாரத்தில்
உண்மையின் ஜனனம்...!

ஆரவாரக் கூட்டத்தில்
அமைதியின் உதயம்...!

அகங்கார பூமியில்
எளிமையின் உயிர்ப்பு...!

விஷப் பாலைமணலில்
அமுதப் பிரவாகம்...!

அசத்தியர்கள் மத்தியில்
அல்-அமீன் புறப்பாடு...!

யா ரசூலுல்லாஹ்
உங்கள் பிறப்பே
ஒரு அழகிய முரண்  ...!
அதுதானே எங்கள்
வாழ்க்கைக்கு அரண்...!

***


நன்றி : இஜட். ஜபருல்லாஹ்  ( Cell :  0091 9842394119) , (கவிதையை தட்டச்சு செய்து அனுப்பிய) ஹமீதுஜாஃபர், (வாஹித் பாடலை அனுப்பிய) அசனா மரைக்காயர்.

3 comments:

  1. நாநாவின்
    இக்கவிதையை
    மிகவும் ரசித்தேன்.
    அத்தனைக்கு நயம்.
    இக்கவிதை பேசி இருக்கிற
    மகா உண்மை
    இக்கவிதையின்
    இன்னொரு அழகு.
    -தாஜ்

    ReplyDelete
  2. /இக்கவிதை பேசி இருக்கிற
    மகா உண்மை
    இக்கவிதையின்
    இன்னொரு அழகு/ என்ற தாஜின் வரிகள் மூன்றாவது அழகு.

    ReplyDelete
  3. கவிதை 'கடலை கூஜாவுக்குள் அடைத்தது போல் உள்ளது''
    ரஷீத் நாகை

    ReplyDelete