Saturday, June 6, 2020

பூவரசம் பீப்பி (சிறுகதை) - அழகிய பெரியவன்

அழகிய பெரியவனின் 'குறடு’ சிறுகதைத் தொகுதியிலிருந்து, நன்றியுடன்...
*



பூவரசம் பீப்பி

வாழ்நாளில் எப்போதுமே நான் பார்க்க விரும்பாத என் ஊரில் வந்து நின்றுவிட்டன எங்கள் மிதிவண்டிகள். எனது ஊர். கோபச் சூட்டில் நினைவுகளின் குப்பைகளில் கருகி விழுந்துவிட்ட ஊர்.

சாவடியில் யாருமில்லை. ஆழ்ந்த கருநிழல்களைக் கவிழ்த்து விட்டு நின்றுகொண்டிருந்தன பூவரசுகள். உள்ளே நுழைந்தவுடன் பூவரசம் பீப்பிகளின் இசை மந்தைக்குள் சிக்கிக் கொண்டேன். கட்டிடத்தின் முன்புறத்தில் எங்களை உட்காரவைத்துவிட்டு தேநீர் வாங்கிவர ஓடினார் சிப்பந்தி ஒருவர். எங்களின் மிதிவண்டிகள் ஒருக்களித்துநின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. பீப்பி
ஓசைகள் என்னை உட்காரவிடவில்லை. மர்லீனை தனியே விட்டுவிட்டு வெளியே வந்து நின்றேன்.

பூவரசின் இதயங்கள் காற்றுக்கு அசைந்தபடியிருந்தன. சடை சடையாய் நீண்டு தழைத்திருந்த அதன் மெலிந்த கொப்புகளில் - பிடித்திருக்கும் இலைகள், பச்சை நரம்புகளில் எனக்கான நினைவுகளைத் தாங்கியிருந்தன. அங்கங்கே பழுத்திருக்கும் மஞ்சள் இலைகள். அடி சிவந்து மஞ்சளாய் விரிந்திருக்கும் பூக்கள். வசீகரச் சுழல்களை மறைத்து வைத்திருக்கும் பம்பரக்காய்கள்.

பால்யத்தில் பூவரசின் முற்றிய பச்சை இலைகளைச் சுருட்டி ஊதி பீப்பிக்கள் அலையவிட்ட இசை, இதுவரைக்கும் கேட்டவை களின் எந்தச் சுரங்களிலும் இல்லை. மரத்தின் காற்று வயலில் புதைந்திருந்த பீப்பி இசை எனக்காக இப்போது வெளிக்கிளம்புவது போலிருந்தது. நான் கண்களைச் சாத்திக்கொண்டேன். நாக்குச் சுடும் காரத்திற்காக பல்தீட்டுவதையே வெறுத்தபோதும் அதிகம் விரும்பி அந்த பயோரியா டப்பாக்களை பாதுகாத்தது அந்தப் பிராயத்தில்தான். பல்பங்களும், புளியங்கொட்டைகளும், பம்பரப் பிஞ்சுகளும் நிறைந்த அந்த டப்பாக்கள் காக்கி டவுசர் ஜோப்பில் ஆடும். தேடிச் சேர்க்கும் பூவரசின் பழுப்பு இலைகளை ஒவ்வொன்றாய் பள்ளிக்கூட சிமிண்ட் தரையில் வைத்து, பயோரியா டப்பா மூடியை அதன் மேல் கவிழ்த்து அழுத்தி தரையில் தேய்த்து கூட்டாஞ்சோறு உண்ண வட்ட இலைகளை அடுக்குவதுண்டு.

பூவரசின் பூக்கள் அப்போது சுவையான பண்டம். இதழ் இதழாய்ப் பிரித்துத் தின்றதுபோக மகரந்தக் காம்பைத் தனியே தின்பது ஒரு பிரியத்துக்குரிய ருசியாய் இருக்கும். விழுந்துவிட்டால், காயம் என்றால் பூவரசுக்காய்களை உடைக்கக் கசிரும் மஞ்சள் பாலை பூசுவதுதான். நான் ஒற்றை இலையைத் தேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். காற்றுக்குத் தாழ்ந்து நிமிரும்போதெல்லாம் தென்படும் வெள்ளை வானம் என என் நினைவுகளின் தொலைப் பரப்பு கண்சிமிட்டியது. கதவாய் என் முன்நாட்களைத் திறந்து மூடியது அப்பூவரசு இலை. நான் பருகும்படியாக அவ்விலை குவிந்து நினைவுகளை வழியவிட்டபடி இருந்தது. என்னில் நினைவு பாரித்தது. வேறெந்த ஊர்களிலும் இத்தனை பூவரச மரங்களை நான் பார்த்ததில்லை. பள்ளிக்கூட வாசலில் பூவரசுத் தோப்பே இருக்கும். பள்ளி மைதானத்தின் எல்லைகளிலிருந்து மலை தொடங்கிவிடும். பெரும்பாறைகளும், குண்டுகளும், சீக்கைப் புதர்களும், சீத்தாச் செடிகளுமாய் மலை விரியும்.

மைதானம் வழியாகத்தான் ஆடுமாடுகளை ஓட்டிச் செல்வதும் ஓட்டி வருவதும். மேய்ந்த களைப்பும், அலுப்புமாய் காடிறங்கும் கால்நடைகள் பள்ளிக்கூடம் தாண்டி கீழிறங்குகிற மேட்டுப் பாதையின் நடுவிலே பூவரசுக் கூட்டத்திடையில் இருக்கும் பெரும் நீர்த்தொட்டிகளில் நீர் பருகும். அத்தொட்டிகளிலே குறவர்கள் மூங்கில் பத்தைகளை ஊறவிட்டு கூடை முடைந்தபடி இருப்பார்கள். மூங்கில் ஊறும் குச்சி அய்ஸ் வாசனை அங்கே சூழ்ந் திருக்கும். நீர் குடித்த கால்நடைகள் மலையடிவாரத்திலிருந்து ஊருக்குள் சேரும் வரைக்குமான கல்பொதிந்த பாதையில் சறுக்கி விடாதபடி நிதானித்து இறங்கும்.

ஊரைவிட்டால், பெரிய ஊரின் எல்லா முடுக்குகளிலும் பூவரசு மரங்கள்தான். ஸ்டேட் வங்கி எதிரில். வண்டி மேட்டில். சாவடிக்குள். மருத்துவமனை மைதானத்தில். காவல் நிலைய வாசலில். முஸ்லீம் பள்ளியின் ஓரங்களில். எல்லா இடங்களிலும் பூவரசுதான். ஊரைவிட்டு கிளம்பும்போதும் நாலைந்து ஊர்கள் வரைக்குமாக இலையுதிர்காலம் சந்திக்காத பூவரசுகளின் துரத்தல் இருக்கும்.

தேநீர் வந்தது. பள்ளிகூடத்தில் மத்தியான சாப்பாட்டுக்குப் போட்ட கோதுமை உப்புமாவின் ஆவிபறந்த வாசனை தேநீர் குவளையிலிருந்து எழும்பி முகத்தில் படர்ந்தது. என் உள்ளே பீப்பி இசை உச்சமடைந்தது. நிலைகுலைந்து போனேன்.

பாபா சாகேப்பின் நினைவு நாளன்றுதான் நானும், மர்லீனும் மிதிவண்டிகளில் கிளம்பினோம். சென்னையில் அதிகாரிகள் சிலர் கொடியசைத்து வழியனுப்பினார்கள். சாதி ஒழிப்பு, சமத்துவம் வலியுறுத்தி மிதிவண்டியிலே தென்னிந்தியா முழுதும் சுற்றும் பயணம். சென்னையிலிருந்து வேலூர், பேரணாம்பட்டு, கோலார் தங்கவயல், பெங்களூர் என்று வழித்தடம்.

இம்முறை விரிவாய் பயணம் இருந்ததால் அதிக முன்னேற் பாடுகளை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. மிதிவண்டிகளைப் பழுது பார்த்து, பயணச் செலவுகளுக்கு உதவி தேடி நிறுவனங்களிடமும் தொண்டு அமைப்புகளிடமும் அலைந்து கசந்த மனதுடனேயே மிதிவண்டிகளில் ஏறி அமர்ந்தோம்.

பயணம் எங்களுக்கு எப்போதுமே ஓர் அற்புத அனுபவமாகவேதான் இருந்திருக்கிறது. பயணம் மனிதர்களை உடைத்து விடக்கூடியது. அந்தத் துகள்களிலிருந்து மாறாத நம்பிக்கையிருந்தால் புதுமனிதர்களாக உயிர்த்தெழுந்துவிடலாம். இயற்கை ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டில் பயணம் செய்பவர்களால் மட்டுமே பங்கெடுத்துக்கொள்ள முடிகிறது. திருப்பெரும்புதூரில் முதல்நாள் இரவும், வேலூரிலே இரண்டாம் நாள் இரவும் கழிந்தன. முதல்நாள் மாலையிலேயே தொடைகளும், கைகளும், கல்லாய் சமைந்து வலி கிளம்பின. தசைகள் இறுகி இறுகி மிதிப்பதற்குக் கடினமாக இருந்தது. அதிகாலமே எழும்ப முடியவில்லை. இருக்கும் வலியுடனே வேலூர் வந்து சேர்ந்த போதுதான், கோலார் தங்கவயலுக்குப் போகும் வழியில் மலையடிவார கிராமத்தில் தங்கிவிடுவது என்று ஏற்பாடா யிற்று. எங்களுக்கு முன்பாக ஜீப்பிலே கிளம்பிவிட்ட சமூக நலத்துறை அதிகாரியை பார்க்கும்வரைக்கும் எங்கள் ஊரிலே தங்க நேரிடும் என்று நான் நினைக்கவில்லை. கால்களுக்குப் புது பலமும், துடிப்பும் வந்து சேர்ந்துவிட்டன. மனம் முழுக்கக் கொப்பளித்து வழிந்தது.

பணியாட்கள் எவருமற்று இருந்த சாவடி, மாவட்ட அதிகாரியின் வருகையால் முகம் மாறிவிட்டது. பணியாட்களும், பொது மக்களும் திரண்டு விட்டனர். மர்லீனுடைய குடுமியும், கடுக்கனும், எங்களின் அரைக்கால் சட்டைகளும், மிதிவண்டிகளின் புதுத்தோற்றங்களும் அங்கிருப்பவர்களை கண்கொட்டாதபடி செய்து கொண்டிருந்தன. அப்போதுதான் எனக்கு அங்கே பூவரசு மரங்கள் இருப்பதின் பிரக்ஞை வந்தது. அம்மரங்களிலிருந்து விழுந்து காய்ந்த என் சிறு வயது பிஞ்சு பம்பரக் காய்கள் வேகமாகச் சுழலத் துவங்கிவிட்டன.

பீப்பியின் சப்தம் உள்ளிறங்கி நிறைந்து நான் ஓசையாகி விட்டேன். சப்தமெழுப்பும் மிதியடிகளைப்போட்டுக்கொண்டு தத்தி நடக்கும் குழந்தையைப் போல என் அடிவைப்புகள் எல்லாம் பீப்பியின் இசை அதிர்வுகளாய் மாறி என்னை கீழ்நாட்களுக்குள் தள்ளிவிட்டன.

நாங்கள் அதிகாரியின் ஜீப்பிலே ஏறிக் கொண்டோம். எங்களுடன் சுழற்சங்க உறுப்பினர் ஒருவரும் இருந்தார். எங்கள் மிதிவண்டிகளுடன் இருவர் பின்தொடர்ந்தனர். ஜீப் போய் கொண் டிருந்த பாதை என் கிராமத்துக்கானது என்று நான் மெல்ல உணரத் தொடங்கியபோது எனக்கு சிலிர்ப்பு உண்டாகியது. நினைவுகள் கரைத்தன என்னை. இளைத்துக்கொண்டே போவது போல இருந்தது எனக்கு. ஜீப் நின்றதும் என்னை நிரந்தரமாய் அக்கணங்கள் வலுவாய்ப் பிடித்துக் கொண்டன. சிறுவனாக மாறி விட்டிருந்தேன். பல ஆண்டுகள் பின்னோக்கித் தாவி என் பால்ய நாட்களின் அற்புதமான மாலை ஒன்றிலே கால்பதித்து ஜீப்பிலிருந்து இறங்கினேன். அந்த மாலை பால்ய பொழுதுகளின் தன்மைகளை எனக்கென வைத்தபடி காத்துக் கொண்டிருந்தது.

குளிர்ந்த தரையில் படுத்துக்கொண்டு இளம்வெய்யிலின் வனப்பை கண்ணுற்றபடி ஊரின் எல்லையிலிருந்து வரும் இரும்புப் பட்டறையின் சம்மட்டி சத்தங்களூடே கடைவீதிக்குப் போயிருக்கும் பாட்டியை எதிர்பார்த்திருந்த பொழுதுகள், சூரியன் மறைந்த பின்னும் மஞ்சள் அடர்ந்து கருமஞ்சளாகி எங்கும் கவிந்து கிலி ஏற்படுத்தும் மாலைகளில் ஆலவட்டம் சுற்றி விழுந்து மேல்கவியும் வானத்தையும் தாண்டி நினைத்துப் பயந்த பொழுதுகள் தங்கித் தங்கிப் பறக்கும் தட்டான்களாய் அலைந்தன அந்த மாலையில். மேலத்தெரு வழியாக நடக்கையில் இதயம் விசை கூட்டியது.
உடல் விறைத்து கோபம் தலைக்கேறியது எனக்கு. துப்புரவாக இருந்த அந்தத் தெரு அழுக்குக் கால்களை நகைப்பதாய் தோன்றியது. அதுவரைக்கும் இடைவிடாது என் காதில் அதிர்ந்துகொண்டிருந்த பீப்பி சுருதி மாறி ஒரு பெரும் பன்றியின் கதறலாய் கேட்கத் தொடங்கியது. பன்றிகளை அதட்டும் சப்தம்போல் தூரத்திலிருந்து தொடர்ந்து கேட்டது. பன்றிகளின் உறுமலும், கதறலும் முற்றிலுமாய் என்னைச் சூழ்ந்து கொண்டன. நான் நடுங்கினேன்.

அப்போது ஊரிலே எங்களுக்கு நிறையப் பன்றிகள் இருந்தன. குடிசையின் பின்னாலும், முன்வாசலிலும் பன்றி விட்டைகள் காய்ந்து கருத்திருக்கும். மலம் தின்றுவிட்டு வந்து புழக்கடை சாக்கடையில் உழலும் பன்றிகளின் வீச்சம், 'சபக் சபக்' என அவைகள் எப்போதும் எதையாவது மெல்லும் ஓசை, செவிகளில் மூங்கில் கழிகளைப் போல் நுழைந்து விலகும் அவைகளின் உறுமல்கள், பெரிய தனக்க மரங்களில் செய்த குளுதித் தொட்டிகளிலிருந்து எழும்பும் புளித்த சோற்றுக் கஞ்சியின் நாற்றம், வெல்லம் காய்ச்சும் இடங்களுக்கெல்லாம் சென்றலைந்து அப்பா வாங்கி வந்து ஊற்றும் அழுக்குப் பாகின் நொதித்த வாசம் எல்லாம் சூழ்ந்ததாய் என் வீடு இருந்தது.

வகுப்பிலிருந்த அத்தனை பேரிடமும் சாக்குக் கட்டியை கொடுத்து கரும் பலகையில் சின்ன 'ஏ' போடச் சொல்லி ஒன்பது போல இழுத்தவர்களுக்கெல்லாம் கதிர்வேல் சார் புட்டத்தில் பட்டை இழுத்த காலை ஒன்றில், மரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பெரும் மரமாய் சேகு ஏறி விரிந்திருந்த முள்மர நிழலில் வகுப்பு கொட்டமடித்துக் கொண்டிருந்த போது எங்கள் பன்றிகள் அந்தப் பக்கமாய் வந்தன. முள் காய்களைத் தேடி மென்ற படி வந்தவை என்னைப் பார்த்துவிட்டு உறுமலுடன் நின்றன போலிருந்தது.

“டேய், அதப் பார்ரா உங்க பன்னிங்க" என்று திமிலோகப் பட்டது வகுப்பு. கதிர்வேல் சார், பன்றி இருப்பது தெரிந்து பன்றி அடிக்கும்போதும் ஒரு பங்கு வேண்டும் எனக் கேட்டது அன்றுதான்.

“டேய், பன்னி அடிச்சா ஒரு பங்கு எடுத்தாடா, காசு தந்திர்றேன்.”

அந்த வாரக் கடைசியில் ராத்திரியை உலுக்கும்படி அப்பா பன்றி அடித்தார். கால்களையும், நீண்ட மூக்கு வாயையும் கயிற்றால் கட்டிவிட்டு குண்டாந்தடியால் கழுத்தைப் பார்த்து அடித்துக் கொண்டிருந்தார் அப்பா. அவருடன் பீமன் மாமாவும், கந்தஞ் சித்தப்பாவும் இருந்தார்கள். உயிர் இழுத்துக் கொண்டிருந்த பன்றியை காலையில் கழுத்தில் குத்திக் கொன்று தீய்த்தார்கள்.

மேல்மூடி இல்லாதபடி ஓடு ஒன்றால் தோலை சுரண்டிக் கழுவி மஞ்சள் பூசினார்கள். பாய்போல முடைந்திருந்த பச்சை ஓலையில் கிடத்தி துண்டு போட்டார் அப்பா. கறித்துண்டுகள் ரொட்டித் துண்டுகள் போல இருந்தன.

கையளவு தடித்திருந்த பன்றி வாரை அறுத்து அப்பா தந்தபோது மிகுந்த ஆசையுடன் வாங்கி மென்றேன் நான். கரகரவென பச்சைத் தேங்காய்ப்போல மசிந்தது அது  என் வாயில். கவுண்டமார்களும், நாயக்கமார்களுமாய் பங்கு போடும் வரை காத்திருந்து எடுத்துப் போனார்கள்.

ரத்தம் தோய்ந்து காய்ந்திருந்த ஓலைத் தடுக்கை ஈக்கள் மொய்த் திருந்த போதே அம்மா மசால் அரைத்து குழம்பு கூட்டி விட்டிருந்தாள். மணம் மூக்கை வருடியது. இந்தச் சொக்கும் மணத்துக்காகவே நான் மாம்பழக் காலங்களில் கூடையை எடுத்துக் கொண்டு சீப்பிப் போட்ட மாம்பழக் கொட்டைகளுக்காகத் திரிந்தேன். கூடை நிறைய்ய தூக்க முடியாமல் திணறிக் கொண்டு வரும்போது அதை அப்பா வாங்கி தட்டித் தட்டிப் போட அவரை நெட்டிக்கொண்டு தின்று தீர்க்கும் பன்றிகள்.

ஊரார் ஒதுங்கும் முள்ளுக் காட்டிடையே மலம் தேடி அலைந்து கொண்டிருப்பவைகளை துரத்தி ஓட்டிக் கொண்டு வருவதற்கு என்றுமே சலிப்பதில்லை. எழுந்து போகும்வரை காத்திருந்து தின்பதற்கு முந்தும் பன்றிகளை சபித்தபடி போவோரின் பலவித புட்டங்களை பார்க்க நேர்ந்த நாட்கள் அவை. பெண்கள் ஒதுங்கும் காட்டுப்பக்கம் மட்டும் சின்னவள் செவந்தமணிதான் போவாள் பன்றிகளை ஓட்டிவர. கிடாய் பன்றியின் விதை அறுத்து சாம்பல் தூவி துரத்திய மாலை ஒன்றிலே அதன் மரண ஓலத்தை நெஞ்சில் வாங்கத் திணறி நடுங்கிக் கொண்டு என் நேரம் கழிந்தபோது, தனா பாட்டி ஓடிவந்து அம்மாவிடம் கூப்பாடிட்டாள்.

"கயினியில் பன்னி பூந்துடுச்சின்னு, ரத்தினத்தெ ராம நாயக்கன் அடிக்கிறான்டி."

"அய்யோ எஞ்சாமியோ."

அம்மா பேய் ஓட்டம் ஓடினாள். பெருத்த கதறல்களுடன் நானும், செவந்தமணியும், தம்பியும் கூட ஓடினோம். ஓணியில் இறங்கி ஆற்றுக்கும் சுடுகாட்டுக்கும் போகிற வழியில் மணல் துகள்கள் அரையும் சப்தமுடன் மூச்சு பீறிட ஓடினோம். ஊரார் சிலர் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். ராமநாயுடு நெல்லறுத்துக் காய்ந்திருக்கும் கழனியில் நின்றுக்கொண்டு அப்பாவை குடையால் அடித்துக் கொண்டிருந்தான்.

"வானா நாக்கிறே இது நல்லால்ல, வானா நாக்கிறே."

அம்மா புடவையை வரிந்து செருகிக்கொண்டு ராம நாயக்கனை நெட்டித் தள்ளிவிட்டு அப்பாவை அணைத்து மீட்பது தெரிந்தது.

"அடித் தேவிடியாளே, உன்ன தெங்காம உடறதிலடி இன்னிக்கி. பன்னிய நெலத்துல உட்டுட்டு எவங்கூட படுத்துனு இருந்த?"

அம்மாவை வீசித்தள்ளிவிட்டு தொடரும் தாக்குதலில் அப்பா கீழே விழுவது தெரிந்தது. ஓடின வேகத்தில் நான் அம்மாவைத் தூக்கினேன். அப்பாவிடமிருந்து "செத்தஞ்சாமீ" என்றொரு ஓலம் எழுந்தது. "அய்யோ கொன்னுட்டாங்களே" அம்மாவின் ஆங்காரக் குரல் வயல்வெளியை உலுக்கியது. அப்பாவின் முகத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.

அம்மா, புடவையால் அழுத்திப் பிடித்தபடி கதறினாள். ஊரார் நெருங்குவதற்குள் நாங்கள் அப்பாவின் ரத்தத்தால் குளித்திருந்தோம். கழனியில் கருந்திட்டுகளாய் ரத்தம் சிதறின. அப்பனின் ரத்தம் குடித்து அடங்கியது அந்த மாலையின் மௌனம்.

ரத்தப் பொழுதாய் உறைந்துபோன அந்த மாலைதான் என் இதுநாள் வரைக்குமான கனவுகளை சிவப்பாக்கிவிட்டது. ஊன்று தடியாய் வரப்புகளை குத்திக் கொண்டிருந்த குடைக்காம்பு, மழையின் போது வானையும், வெயிலின்போது சூரியனையும் காயப்படுத்தத் தீவிரித்து ரத்தம் ஒழுக என் தலைக்குள் நுழைந்துக்கொண்டது. பின் வந்த நாட்களை ஒற்றைக் கண்ணுடன் எதிர்கொண்டு உலகை சபித்தபடி வாழ்ந்து செத்தார் அப்பா. வெளிச்சம் கருத்த அவர் நாட்களின் கண்ணீர் எங்களின் காலங் களை ஈரப்படுத்திவிட்டது. கதறலும், ரத்தத் தகிப்பும், நடுக்கமும் துரத்த நாங்கள் நகரம்போய் சேர்ந்த பிறகு ஒருநாளும் எங்களின் தெறிப் போன பன்றிகளைச் சந்திக்கவேயில்லை.

ஆரத்தி எடுத்து எங்களை வரவேற்றார்கள்.

"இவர்தான் ராம நாயுடு. நம்ம கிளப்புல ரொம்ப காலமா இருக்கிறவர். அவரவச்சினே சொல்லக் கூடாது. அவ்வளவு தயாள குணம். எத்தினியோ வருசமா ஊர் பிரிசிடெண்டா இருந்தவர். நம்ம ஊருக்கு எந்த அதிகாரி வந்தாலும் சரி, அய்யா வீட்டு லேர்ந்துதான் சாப்பாடு போகும். இங்க வந்து தங்கிப் போகாத முக்கியஸ்தர்கள் இல்ல."

வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டோம்.

"என்ன சாப்பிடறீங்க. காப்பி, டீ, இல்ல குளுமையா எதாவது?"

வயதை மேற்கொண்டிருந்த உடம்புடன் சிரித்தபடி எதிரில் அமர்ந்து கொண்டார் ராம நாயுடு. அவரின் நாற்காலி இழைந்து இழைந்து மெருகேறி இருந்தது. அருகில் முக்காலிமீது கனமான புத்தகமொன்றும் செம்பில் நீரும் இருந்தன.

"எதுவும் வேண்டாமே. நிறைய்ய குடிச்சி சலிப்பாயிருக்கு."

"அப்படி சொல்லீட்டா எப்பிடி? டேய் லோகு எளனி கொண்டா " வாசல் பக்கமாய் அவர் உத்தரவு போனது.

"உங்களெப்பத்தி எதுவும் தெரியில. திடீர்ன்னு சொன்னாங்க."

"நாங்க ஒரு தொண்டு அமைப்புல வேல பாக்கிறவங்க. இவர் மர்லீன். நான் ரகு. இவருக்கு நேபாளம் பக்கம். தமிழ் வராது. நான் சென்னை ."

"சந்தோசமா இருக்கு, உங்களப்போல இளவட்டங்களெல்லாம் சாதி ஒழிப்பு சமத்துவம்னு பேசி சைக்கிள் பயணம் போறது. இங்க வந்து தங்கிப் போறதுல எனக்கு நெஜமாகவே ரொம்ப பெரும."

எனக்கு நாற்காலி முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் குடையே தெரிந்தபடியிருந்தது.

"கலக்டர்கள்லேர்ந்து மந்திரிங்க வரையில் எத்தனையோ பேர இந்த ஊருக்கு கூட்டியாந்திருக்கேன். ஊர் முன்னேற என்னென்னமோ செஞ்சேன். எங்க? இன்னும் அப்பிடியேதான் இருக்காங்க அரிசனங்க. அதே கீழத்தெரு மேலத்தெருதான். காந்தி கண்ட கனவுகளெல்லாம் பலிக்க எத்னை காலம் ஆகுமோ தெரியில."

சுழற்சங்க உறுப்பினரும், அதிகாரியும் பவ்யமாக ஆமோதித்துக் கொண்டிருந்தனர்.

"நெலத்துக்கா போய் வருவங்களா? ஊரப்பாத்த மாதிரி இருக்கும். நேபாளத்துக்காரருக்கு நம்ம கிராமங்கள் பாக்க ஆச இருக்குமே."

கீழத்தெருவில் நாயுடுவின் பிரவேசம் வயசான பெண்களை எழவைத்தது. எந்த மாற்றமும் இல்லை , குடிசைகளுக்கு நடுவில் தெரிந்த சில கான்கிரீட் குடிசைகளைத் தவிர.

என் மனம் உந்திக்கொண்டு வந்தது. நடுத்தெருவின் கோடியில் தான் எங்கள் வீடு இருக்கும். போய்க் கொண்டிருக்கும்போதே ராம நாயுடு எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை நிறுத்தினார்.

"என்னாவே, நெத்தியில ஒன்னுமில்லாம மூளியாட்டமா போற. எனக்குப் புடிக்காதுன்னு தெரியுமில்ல. இங்க வா."

தெரு ஓர சாணி குப்பலிலிருந்து குச்சியால் கொஞ்சம் எடுத்து அவள் நெற்றியில் தீற்றினார் நாயுடு. வெட்கத்தாலும், அவமானத் தாலும் குறுகிய அவள் முகத்தை எங்களுக்கு பார்க்கப் பிடிக்கவில்லை .

கிணறை ஒட்டியிருந்த பம்பு அறைத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டோம். மர்லீனுக்கு எல்லாம் புதிதாகத் தெரிவதுபோல கண்களை விரித்துக் கொண்டு பார்த்தபடி இருந்தான். பயணங்களின் போது கவனிப்பு சிதறிவிடும் என்று அவன் அதிகம் பேச விரும்புவதில்லை .

மேற்குக் கழனியில் மிளகாய்த் தோட்டம் சிவந்த பழங்களுடன் குலுங்கியது. அப்பாவின் ரத்த நிறத்தில் பழங்கள் நினைவைக் கிள்ளி காரம் வைத்தன. பொழுது சாம்பல் பூக்கத் தொடங்கி யிருந்தது. சூரியன் விட்டுச் சென்ற வெளிச்சம் தயங்கித் தயங்கிக் கரைந்துக் கொண்டிருந்தது. நாயுடு சுற்றிச்சுற்றி கட்டளைகளை எறிந்து கொண்டிருந்தார்.

"நடவுக்குச் சொல்லியாச்சா? ஓஞ்சாப்பிடி வந்து எறங்கப் போறாளுங்க. வேளையோட தள்ளினு வந்து எறக்கு."

"ஒரத்துக்குச் சொல்லியிருக்கேன். வண்டி கட்டினு போயி அக்ரி ஆபிசுலேர்ந்து ஏத்தினு வந்திடு."

"என்னா தம்பிங்களே எப்பிடி நம்ம நெலம்?" அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார் நாயுடு.

"எல்லாம் பாட்டஞ் சொத்து. ஊர விட்டு எடுத்து வைக்கிற அடி நம்ம நெலந்தான். ஊரச் சுத்தி நம்மதுதான். விவசாயம் சம்பந்தமான எல்லா பரிசும், மெடல்களும் வாங்கியிருக்கேன். அங்க பாரு நெல்லு பயிருல போர்டெ. அக்ரி ஆபீசருங்களுக்கு டெஸ்டு அது இதுன்னு வேலையே நம்ம நெலத்துங்கள்ளதான்."

திரும்பியபின் இரவுச் சாப்பாட்டுக்கு வேளையோடு உட்கார்ந்து விட்டோம். இலைகளில் குழிப்பணியாரங்களும், ஊத்தாப்பங்களுமாக மணந்தன.

"நல்லாச் சாப்பிடுங்கே. எங்கூட்டுக்காரிக்கு கை ருசி அதிகம்."

சமையலறைப் பக்கமாய் புடவை ஒண்டியதைப் பார்த்தோம் நாங்கள். உணவு முடித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்த போது நாயுடு முன்னால் உட்கார்ந்துக் கொண்டார்.

"அம்மாவையும் கூப்பிடலாமே" மர்லீன் கேட்டான்.

"போட்டோ எடுக்கறாங்களாம் வர்றீயா?" என்ற நாயுடுவின் குரலுக்கு தன் புடவையை இழுத்துப் போர்த்தியபடி அவர் பக்கத்தில் வந்தமர்ந்தார் நாயுடம்மா. புகைப்படத்துக்குப் பின் அதிகாரியும், சுழற்சங்க உறுப்பினரும் விடைபெற்றுக் கொண்டனர். காலையில் நாங்களே கிளம்பிக் கொள்வதாய் சொல்லிவிட்டோம்.

நெடுநேரமாய் தூக்கம் வரவில்லை. தனியறையொன்றில் மின்விசிறியின் சுழற்சியை கண்ணுற்றபடி இருந்தோம்.

"எப்படி இருக்கு ஊர்?"

மர்லீன் மெல்லிய ஆங்கிலத்தில் "நன்றாய் இருக்கிறது. ஆனால், சாதி கூறு போடாத ஒரு கிராமத்தை நாம் நம் பயணத்தில் ஒரு காலும் கண்டடைய மாட்டோமா?" என்றான். ஊர்க்கோடியிலிருந்து சாமங்களின் வழியே பன்றிகளின் ஓயாத கதறல் எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது. அவை புரட்டும் மண்ணாய் மனம் அல்லாடியது. விடிந்தபின்பு வயல்களுக்காய் போவதாகச் சொன்னபோது "உதவிக்கு ஆள் அனுப்பவா" என்றார் நாயுடு. வேண்டாமென்று நடந்தோம்.

"பொம்பளைங்க ஒதுங்குற பக்கமாய் போயிடப் போறீங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தார் நாயுடு.

ஊரில் எங்களை வினோதமாய் பார்த்தார்கள். நேரே கீழூருக்குப்போய் பூவரசு விரிந்த ரட்சை கல்மேல் கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம். அங்கிருந்து எழுந்து நடுத்தெருவின் கோடிக்கு மர்லீனை கூட்டிக்கொண்டு போனேன் நான். எனக்கு முன்பாக ஓடியது என் மனம்.

என் நினைவுகளைப்போல் குமைந்திருந்தது என் வீடு. சுவர்கள் மட்டுமே எஞ்சி மழைக்கும் வெயிலுக்குமாக நின்றிருந்தன. குட்டிச் சுவராகியிருந்த என் வீட்டினுள் நுழைந்து ஒரு மண் துண்டை எடுத்தேன் நான். கண்கள் கசிந்தன. என் கையில் கதகதத்தது அம் மண்கட்டி.

பன்றிகள் அடைந்திருந்ததற்கான அடையாளங்களற்று வீட்டின் பின்புறம் முள்மரம் வெட்டப்பட்டுக் கிடந்தது. திசைக்கொன்றாய் சிதறிய என் பன்றிகள் என்னை நோக்கி ஓடிவருவது போலிருந்தன. என்னை முட்டிச் சூழ்ந்த பன்றி மந்தையில் நான் சிக்கிக் கொண் டேன். ஒரு பெருத்த பன்றியின் கெதாறல் என்னை உலுக்கியது.

"என்ன ஆயிற்று?"

"இது என் வீடு."

மர்லீன் அதிர்ந்து போனான். அவனால் நம்ப முடியவில்லை. "அப்படியா அப்படியா" எனஆயிரம் முறை கேட்டுக் கொண்டே இருந்தான். "அந்தக் கதையை சொல்லேன்" என்றவனுக்கு "ரத்தக் கவிச்சி அடிப்பது எங்கள் கதை" என்றேன் நான். மர்லீன் வெகு வாய் குத்தப்பட்டிருந்தான். சிற்றுண்டிவரை அவன் சகஜமாக வில்லை. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கை கழுவப் பின்கட்டுக்குப் போனோம்.

வேலையாட்கள் பனையோலைத் தட்டுகளில் கூழ் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

"என்னா பீம மாமா, சௌக்கியமா?"

என்னை மிரட்சியுடன் பார்த்தார் ஒருவர்.

"நாந்தான் ரத்தினம் மகன். மெட்ராஸ் போயிட்டமே அவங்க."

"தம்பீ" என்றெழுந்தார் அவர். எல்லார் கண்களும் எரிந்தன.

"அப்பா எப்பிடி கீறாரூ?"

"மூனு வருசமாச்சி போயி."

மேலும் அவர்கள் பேசுவதற்குள் உள்ளே வந்துவிட்டோம்.

வெயில் இதமாய் இருந்தது. மிதிவண்டிகளை தயார்படுத்திக் கொண்டு விடைபெறத் தயாரானோம். இனி வெங்கட்ட கிரிமலையை ஏற வேண்டும். கோலார் வரை காடுதான். காலடிமண் பிடித்திழுப்பது போலிருந்தது. எல்லாரும் வாசலில் நின்றிருந்தனர். நான் நாயுடுவை ஆழமாய் ஒருமுறை பார்த்தேன். அவரும் வெளியில் கிளம்பிவிட்டார் போலிருந்தது. கையில் குடையுடன் நின்றார்.

எல்லாருக்கும் சொல்லிக் கொண்டோம்.

"போயி காயிதம் போடுங்க. தினியும் பாக்கப்போறமோ என்னவோ" ராம நாயுடு சிரிப்பு வழியும் முகத்துடன் எங்களிடம் சொன்னார்.

"திரும்பவும் பாப்போமுன்னுதான் நினைக்கிறேன்."

அவர் கையிலிருந்த குடையைப் பார்த்தபடி பேசினேன் நான் எனக்குள் என் பன்றிகளின் ஊறுமல் தீவிரமடைந்துவிட்டிருந்தது வேலையாட்களின் முகங்களில் மீண்டும் தீ பிடித்திருந்தது.

"அப்படியா" | "ஆமா, நான் கீழத்தெரு ரத்தினம் மகந்தான்."

அந்த முகத்தில் குற்ற உணர்வின் சொற்ப சாயலையாகிலும் கண்டுவிடும் குறியில் தவித்தது என் மனது. ராமநாயுடு இமைக்காமல் என்னையே வறட்சியுடன் பார்த்தார்.

"எங்க அப்பா சாகிற வரைக்கும் உங்க பேரைத்தான் புலம்பினு இருந்தார். என் பயணம் முடிஞ்சதும் நிச்சயம் உங்கள தேடி வருவேன்."

*


நன்றி : அழகிய பெரியவன் , கலப்பை, சென்ஷி