Sunday, June 30, 2013

ஜமிலூனி ஜமிலூனி...

'அன்னயும் ரசூலும்’ படத்தில் இடையிடையே வருகிற இந்தப் பாடலில் சஹ்பாஸ் அமானின் கதறல் - ’மவுத்தான மொஹப்பத்’, ’கல்போ முஸீபத்து....’ என்று வரும் இடங்களில் -  உலுக்கி விடுகிறது, உண்மையாகவே.    இசையமைத்த ‘கே’ என்கிற கிருஷ்ணகுமார் எங்க நாகப்பட்டினத்தில் பிறந்த பொடியன் என்று விக்கி சொல்வது வேறு ஆச்சரியம் தருகிறது. கேட்டுப்பாருங்கள்.

'ஜமிலூனி' என்றால்? It means "cover me". After the Prophet Muhammad (peace be upon him) was visited by the angel jibrail in the cave, he was afraid and when he went home, Khadija (ra) comforted and supported him. என்று இணையம் சொல்கிறது , இன்னொரு நஷீதுடன்,

'ஜமிலூனி'யின் அசல்  விளக்கத்தை ஜாஃபர்நானாதான் சொல்லவேண்டும். ஏனென்றால் , '(வலது) தோள்பட்டை வலியும் கடுப்பும்  தாங்கலே நானா.. போட்டு குடையுது... நம்ம அசனா மரைக்கார்ட்டெகூட சொன்னேன், ஊர்ல இக்கிம்போது..' என்று நேற்று அவரிடம் சொன்னதற்கு , 'அசனாட்டெ பழைய சினிமா பாட்டுதான் கேக்கனும்.. என்னெட்ட மார்க்கம் அப்படி இப்படின்னு கேக்கலாம். ஏன், ஒடம்புவலிக்கும் கேக்கலாம்.. ஜிம்மிகார்ட்டர்ட்டெ போவ சொல்லுவேன்' என்று சொன்னார்.

'அமெரிக்காவுக்கா?' 

'சும்மா இருங்கனி,  ஜிம்மி கார்ட்டர்னு ஒரு சூப்பர் பிசியோதெரபிஸ்ட் நாவப்பட்டினத்தில இக்கிறாரு.. ' 

இருக்கட்டும். அடுத்தமுறை ஊர்போகும்போது பார்க்கிறேன். அதுவரை ’ஜமிலூனி’யைக் கேட்க வேண்டியதுதான். அடுத்தவருக்கு அதிகம் வலிப்பது தெரிந்தால் நம் வலி அற்புதமாக குறைகிறது..!

***
Thanks to : ANNAYUM RASOOLUM
+
Shahabas Aman share experiences through ON RECORD on Asianet News

Wednesday, June 26, 2013

Who are we in this complicated world? - Rumi

Thanks :Mohamed Ismail

from Mathnawi 1 , 1510 - 1513:

Who are we in this complicated world?

if we come to sleep
we are His drowsy ones.

and if we come to wake
we are in His hands.

if we come to weeping,
we are His cloud full of raindrops.

and if we come to laughing,
we are His lightning in that moment.

if we come to anger and battle,
it is the reflection of His wrath.

and if we come to peace and pardon,
it is the reflection of His love.

who are we in this complicated world?

Saturday, June 22, 2013

எந்த சமுதாயத்தில் சர்வாதிகாரி தோன்றுகிறான்?

M.Z. முஹம்மத் இஸ்மாயீல் எழுதிய 'ஷஹீத் செய்யித் குதுப்' எனும் நூலிலிருந்து (வெளியீடு : இலக்கியச் சோலை) நன்றியுடன் பதிவிடுகிறேன்,  'ஃபீழிலாலில் குர்ஆன்'  எனும் திருக்குர்ஆன் விளக்க உரையில் இவ்வாறு போராளி செய்யித் குதுப் அவர்கள் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.உலகெங்கும் ஏகாதிபத்தியத்திற்கெதிராக எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் போராடும் போராளிகளுக்கு இச்சிறுநூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. 'அப்பாடா, நமக்கல்ல’ என்று நீங்கள் ஆறுதல் அடையலாம். 

அரபுநாட்டிலிருந்துகொண்டு இப்படியெல்லாம் பதிவிடக் கூடாதுதான். ஆனால் , ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்! - ஆபிதீன்

***
எந்த சமுதாயத்தில் சர்வாதிகாரி தோன்றுகிறான்?
 
எப்பொழுதுமே கொடுங்கோலர்களிடம் பொதுமக்களின் அப்பாவித்தனமும், தாழ்வு மனப்பான்மையும், கட்டுப்பாடும், கீழ்ப்படிதலும்தான் ஏமாறச் செய்கின்றன. தங்கள் முதுகுகளை அவர்கள் சவாரி செய்வதற்கேற்ப நீட்டிக்கொண்டு தங்கள் தலைகளை அவர்கள் மேலே ஏறுவதற்கேற்ப தாழ்த்திக்கொண்டும், மானம் மரியாதை போன்ற தங்களின் உரிமைகளை அவர்கள் அடக்குமுறை செய்வதற்கும், கொடுங்கோன்மை புரிவதற்குமேற்ப விட்டுக் கொடுத்துக் கொண்டுமிருக்கும் தாழ்வு மனப்பான்மை கொண்ட அப்பாவி மக்கள்தான் எப்போதுமே சர்வாதிகாரியின் சக்தியாகவும், பலமாகவும் இருந்து வருகிறார்கள். இல்லையென்றால் கொடுங்கோலர்கள் என்பவர்கள் உண்மையில் எந்த ஆற்றலும் வலிமையுமற்ற தனி மனிதர்கள்தான்.

பொதுமக்கள் இப்படிப்பட்ட அப்பாவித்தனங்களுக்கு ஒருபுறம் அச்சத்தாலும் மறுபுறம் ஏமாற்றப்படுவதாலுமே பலியாகின்றார்கள்.

இந்த அச்சம் அவர்களின் கற்பனையினால் விளைவதே ஆகும். உண்மையில் கொடுங்கோலன் பல்லாயிரக்கணக்கான மக்களைவிட எந்த விதத்திலும் மேலதிகமான ஆற்றலில்லாத ஒரு தனி மனிதன்தான்!

மனிதத்துவம், சுதந்திரம், மானம், மரியாதை ஆகியவற்றில் யாரும், யாருக்கும் தாழ்ந்தவரில்லை! ஒவ்வொரு மனிதனும் ஆற்றலிலும், வலிமையிலும் கொடுங்கோலர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை. ஆயினும் அவர்கள் மக்களைத் தங்களுக்கு அவர்களைவிட ஏதோ ஒரு ஆற்றல் இருப்பதாக நம்ப வைத்து ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். தன்  சுயமரியாதையை இழக்கத் துணியாத ஒரு சமுதாயத்தில் ஒரு தனிமனிதன் அடக்குமுறை செய்துவிட முடியாது!

நேர்மையும் ஒழுக்கமும் மிக்க சமுதாயத்தில் ஒருக்காலும் தனிமனிதன் ஒருவன் கொடுங்கோன்மை புரிந்துவிட முடியாது! தனதிறைவனைப் பற்றிய ஞானமும் அவன் மீதுள்ள நம்பிக்கையும் மிகுந்து, தனக்கு லாபமோ, நட்டமோ, நன்மையோ, தீமையோ செய்துவிட முடியாத அவன் படைப்புக்களில் ஒருவனுக்கு தலல குனிய மறுத்து வாழும் சமுதாயத்தில் தனிமனிதன் ஒருவன் என்றுமே ஆதிக்கம் செலுத்திவிட முடியாது.

இறைநம்பிக்கையும், சுயமரியாதையும், பாதுகாப்புணர்வும் கொண்ட சமுதாயமாகவும், அற்பமான ஒருவன் தங்களை எதுவும் செய்துவிட முடியாது. ஒரு கொசு அவனிடமிருந்து ஒன்றைப் பறித்துச் சென்றால் கூட அதனிடமிருந்து அதை அவனால் பறித்துவிட முடியாது; என்று புரிந்து சமுதாயமாகவும் இருந்தால் ஒருக்காலும் எந்த சமுதாயத்திலும் சர்வாதிகாரி தோன்ற முடியாது.

***

நன்றி : M.Z. முஹம்மத் இஸ்மாயீல், இலக்கியச் சோலை

Saturday, June 15, 2013

பகை...? - 'இஜட்'-ன் அன்பு வரிகள்

அன்பு -
எல்லோரையும்
நேசிக்கும்...
பகையைக் கூட!

***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ் | Tel : 0091 9842394119

Friday, June 7, 2013

அப்பனே நமச்சிவாயா! - ஜோ டி குரூஸின் அகவெளி

தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார், 'ஆழி சூழ் உலகு' எனும் அற்புத நாவலை நமக்குத் தந்த ஜோ.டி. குரூஸ். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு ('காக்கைச் சிறகினிலே' ஜூன்'2013 இதழ்) அவர் சொன்ன பதில் இது :

'இதற்கு நான் என்ன சொல்வது? காரணமில்லாமல் காரியமில்லை.

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின்

என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஏற்பத்தான் வாழ்க்கையை நான் பார்க்கிறேன்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மிதவைக்கு தனித் திசைவழியோ, வேகமோ கிடையாது. வெள்ளம் அடித்துக்கொண்டு போய் எங்கேயோ சேர்க்கும்.
அதுபோல் இந்த உயிர், அதாவது இந்தப் பிறவி நம்மை எங்கே அடித்துச் செல்கிறதோ அதுதான் நடக்கும். நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தில் டி
குரூசியார் பேரனாகப் பிறந்த ஜோ டி குரூஸ், இன்று சென்னையில் மரியான்' படத்துக்கு வசனம் எழுதுகிறான் என்றால் எப்படி..? இது எப்படி நடந்தது? எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புகளைத் தேடி நான் வரவில்லை. நெல்லை மாவட்டத்திலிருந்து சினிமாக் கனவுடன் கள்ள ரயிலேறியோ அல்லது பஸ்
ஏறியோ சென்னை வந்தவனல்ல நான். எனக்குத் தொழில் கப்பல் சார்ந்தது, நான் எப்படி இந்தப் புள்ளிக்கு நகர்த்தப்பட்டேன்? இது காரணமில்லாமல் காரியமில்லை என்பதுதானே.. அப்பன் நமச்சிவாயத்தின் அருளன்றி வேறென்ன..?

நமச்சிவாயத்தின் அருளா? அப்படியெனில் இறை சக்திதான் மனித வாழ்வின் மூலவிசை என்கிறீர்களா?

நிச்சயமாக அவன் சித்தம்தானே எல்லாம்! 'அறிய அறிய அறியாமை புரிகிறது' என்ற ஈரோடு தமிழன்பனின் கவிதை வரிகளுக்கேற்ப நமது அறியாமை வில விலக புதிய புரிதல் உருவாகிறது.

அறியாமல் இருள் அகல, அகல எனக்குள்ளிருக்கும் ஒரு போராளி வெளி வருகிறான். இந்தச் சமூகம் சார்ந்த கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.
சாதாரண ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனாக இறை ஊழியனாக இருந்த நான், இன்று ஓம் நமச்சிவாய என்று சொல்கிறேனென்றால்.. அது ஏன்?

....

நாவல் சார்ந்து அதற்கு வெளியிலும் மதம் ஆன்மீகம் மீது நீங்கள் முன்வைத்த பார்வை கடும் விமர்சனத்துக்குள்ளானதே?

ஆன்மிகம், ஆன்மிகம் என்று கதறுபவர்களெல்லாம் ஆன்மிகம் பற்றி அறிந்திருக்கிறார்களா? ஏசுபிரான் ,முதற்கொண்டு எல்லா அடியவர்களும்
எம்மவரை நாடி இமயமலைக்கு வந்திருக்கிறார்கள் என்றுதானே அறிகிறோம். ஆன்மிகத்தில் நாம் இமயத்தின் கைலாயத்தில் இருக்கிறோம். எல்லாம் அவன் அருளன்றி வேறென்ன?

எல்லாம் அவன் அருளா! உண்மையில் நீங்கள் யார் கத்தோலிக்கரா.. சைவ நெறியாளரா.. துறவியா? போராளியா?

அதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன். தேடல் ஒரு சுகம்.

***

நன்றி : ஜோ டி குரூஸ், 'காக்கைச் சிறகினிலே' இதழ்.

Wednesday, June 5, 2013

திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்

நாகூர் கவிஞர் சாதிக்  இயற்றி  நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்கள் பாடிய இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். என்னிடமுள்ள வெர்ஷன் மிகச் சிறந்தது. ஆனால் ஃபைல்டென் தளத்தில் தற்போது அதை வலையேற்ற இயலாததால் இதைக் கேட்டு மகிழுங்கள். மெஹ்ராஜ் ஸ்பெஷல் இதுதான். நன்றி.
***


Thansk to : commentclips
***


சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை


வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு
விண்ணகத்துத் தாரகையும் வெட்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை


அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…
அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்
பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை


திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…
திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்
அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை


சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை


சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…

***
நன்றி : கவிஞர் சாதிக்
Lyrics Courtesy : http://www.maslahi.in/2012/06/blog-post_7563.html

Tuesday, June 4, 2013

தொங்காதீர்கள்...! - இஜட். ஜபருல்லாஹ்

வார்த்தைகளைப்
பிடித்துக்கொண்டு
தொங்காதீர்கள்...

நாவை நீட்டி
ஒரு ஆட்டு ஆட்டினால்
சொன்னது எல்லாம்
பொய்யாய் ஆகிவிடும்...!
***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

தமிழ் எழுத்தாளன் வடிவேலுவின் சலாவரிசை

1:12 வரை சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணாவும்லே..

***
Thanks to : CinemaJunction

Sunday, June 2, 2013

சாதாரணர்கள் சாதாரணர்கள்தாமா? - வலம்புரி ஜான்

'என் பேச்சால் பலர் மாறாவிட்டால், ஒருவனாவது மாறட்டும். அதுவும் வலம்புரி ஜானாகவே இருந்துவிட்டால் நல்லதுதானே!'' என்று சொன்ன 'மேரி ஜான்'-ன் 'இந்த நாள் இனிய நாள்' ஒன்றாம் தொகுதியிலிருந்து...

***

சாதாரண மனிதர்கள் என்றும் சரித்திர மனிதர்கள் என்றும் நாம் பிரித்துப் பார்க்கிறோம். மனிதர்களில் அப்படிப்பட்ட பிரிவினை உண்டுதான்.

ஆனால் வரலாறு என்பதே மகத்தான மனிதர்களின் வாழ்க்கை வடிப்புத்தான் என்று கார்லைலே சொன்னாலும் அது முழுக்கவே ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

சாதாரண மனிதர்களின்  கூட்டு முயற்சிக்கு மாபெரும் தலைவர்களின் தனி முயற்சி ஈடானது அல்ல என்கிற கருத்து தவறானது. தனி மனிதர்களின் கூட்டு முயற்சியே தலைவர்களின் தனி முயற்சியைவிட அபாரமானது.

எல்லாச் சமயங்களும் ஒன்றுதான் என்று பேசுகிறோம்; எழுதுகிறோம். மேற்கோள் காட்டுகிற மேதைமை எல்லாம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் இந்த நெறியைக் கடைப்பிடிக்கிறவர்கள் நம்மில் எத்தனை பேர்கள் என்று பார்க்க வேண்டும்.

எந்தப் பல்கலைக் கழகத்திலும் பயிலாத, நாம் சொல்லுகிற எந்தப் பாடங்களும் தேர்ச்சி பெறாத பலர் சில தத்துவங்களை வாழ்ந்து காட்டுவதன் வாயிலாக நமது பல்கலைக்கழகங்களை, கல்விச் சாலைகளை உள்ளீடற்றவைகளாக ஆக்கி விடுகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் வேளாங்கன்னியிலே சிவாலயத்துக் குருக்கள் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எங்கள் தலைவரின் பிறந்த நாள் வேண்டுதலுக்காக இங்கே போனேன். குருக்கள் அவருக்காக, எனக்காக அர்ச்சனை செய்தார்.

முடிந்ததும் நான் வேளாங்கன்னி ஆலயத்திற்குப் போனேன். அங்கே பாதிரியார் மூன்று பரிசுப் பொட்டலங்களை வைத்துக்கொண்டு என்னைத் தவிர வேறு எவரெவருக்குத் தரலாம் என்று தயங்கிக் கொண்டிருந்தார்.

நான் பின்னிட்டுத் திரும்புகிறபோது அதே குருக்கள் கால்கள் முழந்தாளில், கைகள் மெழுகுவர்த்தியோடு, அந்தப் பரிசுக்கு என்னிலும் அவர் தகுதியானர் என்பதால் அவருக்கே தாருங்கள் என்று பாதிரியாரிடம் சொன்னேன். அவரும் மிகுந்த வணக்கத்தோடு அதைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்து அதே ஊரில் உள்ள பள்ளிவாசலுக்கு அவர் எங்களோடு வந்தார். வந்த வேளையில் துவா நடந்தபோது கைக்குட்டையால் தலையை மறைத்துக் கொண்டார்.

இவர் எங்கே சமரசப்பாடம் படித்தார் என்பது தென்படவில்லை. ஆனால் பாடங்களில் காணப்பட்ட உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறவராக அவர் இருந்தார்.

ஊத்துக் கோட்டை தாலுக்காவில் சூளைமேனி என்கிற இடத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் பல ஆண்டு காலமாக முகம்மது யூசுப் என்ற இஸ்லாமியரின் பாதுகாப்பில் உள்ளது. பெருமாள் இந்த முஸ்லீமை இதுவரை முறைத்துவிடவில்லை.

திருமலைக்குப் பாதயாத்திரையாக சென்னையிலிருந்து போகிற ஒரு குழுவில் ஆண்டுதோறும் தவறாமல் இடம் பெறுகிறவர் வின்சென்ட் என்கிற கும்பகோணம் கிறிஸ்தவர்.

வில்லிவாக்கம் தேவகான இன்னிசைச் சங்கம் என்கிற இந்த அமைப்பு திருமலைக்குப் போகிறபோது வேறு மதத்தவர்களும் இவர்களுக்கு அன்பு பாரட்டுகிறார்கள்.

சேலத்தில் எனக்குத் தெரிந்த மீனாட்சி ஆச்சி இருக்கிறார்கள். இவர்களுக்குச் சொந்த இடம் சிறுகூடல் பட்டி. பக்கத்து வீட்டில் கிறிஸ்தவர்கள் உள்ளன்போடு பழகினார்கள்.

அந்த வீட்டுக் கிருஸ்தவச் சிறுவன் மீது அன்பு பாராட்டி வந்தார்கள். ஒருநாள் அந்தக் கிறிஸ்தவப் பெற்றோர்கள் மறைந்தார்கள்.

அன்பு காட்டிய கிறிஸ்தவக் குழந்தையை இந்த ஆச்சி எடுத்து வளர்த்தார்கள்,. பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். எங்கும் சென்று முறையான கல்வி கற்காத இந்த ஆச்சி , கிறிஸ்தவப் பிள்ளையை அந்தச் சமய முறைப்படி வளர்த்தார்கள்.

கேரளத்திற்குச் சென்று அவருக்குப் பெண் பார்த்து திருமணித்து, பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

இவர்களது இல்லத்தில் இந்து சாமிகளும் , கிறிஸ்தவ சாமிகளும் உண்டு. வெள்ளிக்கிழமை மற்ற இரண்டு குழந்தைகளுக்காக கோயிலுக்குப் போவார்கள். ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ மகனுக்காக தேவாலயத்திற்குப் போவார்கள்.

இப்படி வேதப் புத்தகங்களில் உள்ள தங்களது மேதமையைக் காட்டாமல் உண்மையான உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறாவர்களாக இருக்கிற பெருமக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

நிரம்பப் படித்தவர்களும், ஒன்றுமே படிக்காதவர்களும் இத்தகைய உயர்நெறி வாழ்க்கையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் அரைகுறையாகப் படித்தவர்கள் இந்தச் சமயத்திற்கும் அந்தச் சமயத்திற்கும் இது வேறுபாடு, அது வேறுபாடு என்று செயற்கையாகச் சுவர்களை எழுப்புவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

ஆக, சாதாரணர்கள் சாதாரணர்கள் அல்ல. சரித்திரத்தில் இடம்பெறாத, ஆனால் பெறத்தக்க மாமனிதர்கள் இவர்களே!

**

நன்றி : ஆஸாத் பதிப்பகம்

**
+
ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான் - அண்ணாகண்ணன்

Saturday, June 1, 2013

’கலைமாமணி’ கவிஞர் நாகூர் சலீம் மரணம்


தம்பி தீனிடமிருந்து வந்த விரிவான தகவல்...

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்று மாலை 4.30  மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது..

வண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை.

இவர் எழுதிய “காதில் விழுந்த கானங்கள்” என்ற நூலை “பலாச்சுளை பாடல்கள்” என்று வர்ணித்து அணிந்துரை வழங்கியிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி. “கவிஞர் சலீமின் பாடல்கள், பக்கவாத்திய ஓசைகளையும் விஞ்சி போதங்களின் நாதங்களாக நின்று நிலவுவது தனிச்சிறப்பு” என்று சிராஜுல் மில்லத் மர்ஹூம் A. K. அப்துஸ் சமது சாஹிப் அவர்களின் பாராட்டுப் பெற்றவர்.

“இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால், இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்” என்று கவிஞர் மு. மேத்தாவின் அங்கீகாரம் பெற்றவர். கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்த கவிஞர் சலீம், நாகூரில் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் முஸ்லிம் பெண்களிலேயே முதல் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர். எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் (தீன்) ஆகியோரின் தாய் மாமா இவர். அன்னாரின் ஆத்மசாந்திக்கும், மறுமை நல்வாழ்விற்கும், இறைவனிடம் கையேந்துவோமாக! ஆமீன்.