Showing posts with label சீர்காழி இறையன்பன். Show all posts
Showing posts with label சீர்காழி இறையன்பன். Show all posts

Sunday, August 18, 2013

வீழ்ச்சிக்கான கூறுகள்! - சீர்காழி இறையன்பன்

மர்ஹும் ஆளூர் ஜலால் அவர்களின் 'நாவூரும்மா' சிறுகதையை நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன் வலைப்பதிவில் படித்துவிட்டு மேலும் தேடியபோது கவிஞர் பஷீர் அஹ்மது என்கிற சீர்காழி இறையன்பன் அவர்களின் இந்த நேர்காணல் கிடைத்தது. முஸ்லிம் முரசு இதழில் வந்திருக்கிறது (ஜூன் 2011 / சந்திப்பு : தரமணியார், சோதுகுடியான்.) எனவே  முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய பதிவு (முனைவர் தாஜ் அல்ல!) . இணையத்தில் பகிர்ந்த ஜெ.ஜஹாங்கீர் (எ) கவிஞர் சோதுகுடியானுக்கு நன்றி சொல்லி நானும் பதிவிடுகிறேன். - ஆபிதீன்

***
 

வீழ்ச்சிக்கான கூறுகள்!

முஸ்லிம் கட்சி பல கூறுகளாகி பலமிழந்து போனதற்குக் காரணம் முஸ்லிம் தலைவர்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் போது தனது தொண்டர்களை அவர்களிடம் இழந்தது. சிறு எலும்புத்துண்டு, பதவிகளுக்காக அக்கட்சிகளில் அவர்கள் இணைந்தது. ரவுணா சமுத்திரம் பீர் முஹம்மது, திருப்பூர் மைதீன், பக்கர் போன்று இன்றுள்ள தலைமுறையைக் கவரும் பேச்சாளர் இன்று இல்லாமல் போயினர். வஹாபிகள் வருகையிலான பாதிப்பு. சூடான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்துக்கு ஆட்கள் வளைகுடா வேலைக்குச் சென்றதனால் 25,000 மாத ஊழியம் பெற்ற தமிழக முஸ்லிம்கள் 10,000 ரூபாய் பெறும் நிலையால் அரபுலக வருமானம் குறைந்தது. பொருளாதார நலிவு தொடங்கியது, தலைமைப் பதவி வேண்டுமென்பதற்காக தனித்தனி அமைப்புகள் சமூகத்தில் தோன்றின. முஸ்லிம் அரசியல் கட்சிக்கு சரியான, சக்தி வாய்ந்த தலைவர் கிடைக்கவில்லை. அதனால், இளைஞர்கள் மத்தியில் சாத்வீகப் போராட்ட உணர்வு மழுங்கியது. ஆலிம்கள் ஆங்கிலக் கல்வி ஹராம் என்று கூறியதன் விளைவாக சமூகம் விலகி நின்றது. தக்னி முஸ்லிம், பிராமணர் கல்வியில் வேகமாக முன்னேறி முதன்மை பெற்றனர். வெள்ளையர் மீதான எதிர்ப்பு வெறியை ஆங்கிலக் கல்வி மீது காட்டியதால் சமூகத்திற்குள் பெருத்த பின்னடைவும் மரண அடியும் கிடைத்தது. ஆங்கிலக் கல்வி வேண்டாம் என்ற ஆலிம் இனம் இன்று தங்கள் பிள்ளைகளை ஆங்கிலக் கல்விக்கு அனுப்பி வேகமாக முன்னேற்றுகின்றது. நாடார் சமூகம் நலிவுற்றவர்களுக்கென கல்வி நிதி நிலை ஏற்படுத்தி தம் சமூகத்தை தூக்கி நிறுத்துகிறது. நம் சமூகத்தில் ஆழமாக அது போன்ற பொருளாதார வலிமை ஏற்படுத்தப்படவில்லை. கல்லூரிக் கல்விக்கு உதவுகிறோம். பள்ளிக் கல்விக்கு உதவமாட்டோம் என்கின்றனர். அந்தெந்த நிலைகளில், காலக்கட்டங்களில் தேவையுணர்ந்து தீர்த்து வைக்கவேண்டும். அது உயர்வுக்கு வழி வகுக்கும். வெளிநாடு சென்று பொருளீட்டி வந்து வாழும் நிலையுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. சீர்காழியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்படவில்லை. கூட்டு தொழில் முயற்சி இல்லை, பைத்துல்மால் போன்றவை இல்லை. பொதுப் பத்திரிகைகளில் 10 முஸ்லிம்களே எழுதிக் கொண்டுள்ளனர். வாய்ப்பு தரப்பட்டால் மற்றவர்களும் எழுதுவர். பேராசிரியர்கள் இதழ்களில் எழுதுவதில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. சமூகத் தொண்டு செய்யும் எண்ணமில்லை. சோம்பேறியாக மாறிவிட்டனர். இஸ்லாத்தின் மீதான பற்று அவர்களுக்கு போதிக்கப்படவில்லை. வாழ்க்கைக் கல்வி மட்டும் பெற்றுள்ளனர். முஸ்லிம் இதழ்கள் எழுதுவோருக்கு காசு தருவதில்லை. பொதுப் பத்திரிகைகள் தருகின்றன. பணம் தரப்படாததால் மக்கள் ஆர்வப் படுவதில்லை. எழுதி என்ன ஆகப்போகிறது என்றெண்ணுகின்றனர். பெரும் தனவந்தர்கள் சந்தா தருகின்றனரே தவிர இதழின் ரேப்பர் கழற்றுவதில்லை. என்ன எழுதி இருக்கப் போகின்றனர் என்ற எண்ணம். அதே சமயம் பொது வார, மாத இதழ்களை வாசிக்கின்றனர். கூட்டு முயற்சியாக டிரஸ்ட் அமைத்து செயல்படணும். நூல் எழுதுவோருக்கு பணம் உதவணும். கடந்த 10 ஆண்டுகளில் நிரம்ப நூல்கள் வெளியாகியுள்ளன. நூல் வெளியீட்டு விழாவில் புத்தகம் பெறும் புரவலர் தரும் பணம் மற்றும் நூல் விற்பனை மூலம் சமாளிக்கின்றனர். செய்யது முஹம்மது ஹஸன் காலத்தில் முஸ்லிம் முரசு அரசு கெஜட் புத்தகம் போல் வரும். ஆளூர் ஜலால் வந்த பிறகு கவர்ச்சியாக இருந்தது. தற்கால முஸ்லிம் முரசு முந்தைய முரசுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு புதுமை, புரட்சி, வளர்ச்சி என எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டி வைத்து கதை, கட்டுரை இதழில் எழுத வைக்கணும். சிங்கப்பூர், துபாய் வேலையிலிருந்த மாப்பிள்ளைகளே அன்றிருந்த பெண்களுடைய பிரதான விருப்பமாகவிருந்தது. இன்று நிலைமை வேறு. குடும்ப வாழ்வியல் தேவை, கால வளர்ச்சிக் கேற்றவாறு பயணித்தலுக்கு கல்வி அவசியம் என்றுணர்ந்த பெண்களின் தாய்மார்கள் தமது பெண்களை படிக்கவைத்து விட்டனர். அவர்கள் படித்த ஆணை இல்லறத் துணைவனாக எதிர்பார்க்கின்றனர். பல பெண்கள் முபல்லிஹா பட்டம் பெற்றிருப்பதை திருமண அழைப்பிதழ்கள் மூலம் அறிய முடிகிறது. 500 பேர் கொண்ட சிறிய ஊர் கோவில்புத்தூர் 25 பெண்கள், 40 ஆண்கள் பட்டதாரிகளாக உள்ளனர். பொருளாதாரத் தேவையிருக்கும் பெண்கள் மட்டும் பணிக்குச் செல்கின்றனர். சீர்காழி சுற்றியிருக்கும் பகுதிகளில் பெண்களை எளிதாக தலாக் கூற முடியாது. ஏழையாகவிருந்து அரபு நாட்டுப் பணம் வந்த பிறகு தனது மனைவியை தலாக் கூறி செல்வந்தப் பெண்ணை மணமுடிக்கும் போக்கை கையிலெடுத்தன் காரணமாக ஜமாத்தார் கடுமையான முடிவெடுத்தனர். தலாக் சொல்லும்போது வாங்கிய பணம், நகை, செலவுத் தொகையோடு ஐந்து லட்சம் ரூபாய் சேர்த்து வழங்கணும் என்று முடிவெடுக்கப்பட்ட பின்பு தலாக் நடைபெறவில்லை. அமையவிருக்கும் மாநில அரசுக்கு சொல்ல விரும்பும் வேண்டுகோள், மாவட்டந்தோறும் பெண்கள் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஏற்படுத்தணும். முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கணும். வெளிநாட்டு வேலையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சமூகத்துக்கான அவசியத் தேவையெனக் கருதி இதனை நிறைவேற்றித்தரணும்.

***