Tuesday, December 29, 2015

மாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதாவின் செம பதிவு!

'இலக்கியம்னா என்னான்னு தெரிஞ்சுகிட்ட பாவத்துக்கே நீங்கல்லாம் நிறைய எழுதணும் ஷஹி. ரொம்ப ஆதங்கமா இருக்கு, துப்பட்டிக்குள்ள இருக்கற உலகத்த யாரும் எட்டிப்பாத்துட முடியாது, சோ நீங்கதான் இதெல்லாம் பேசியே ஆகணும்.' என்று சகோதரி லட்சுமி பாராட்டும் எழுத்து ஷஹிதாவுடையது. தொடர்ந்து அவர் 'நல்லது செய்ய'  (சாதாரண அர்த்தம்தான்!) வாழ்த்துகள். -  ஆபிதீன்
*
மாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதா

என் வீட்டில் எனக்கு இருக்க இடமுண்டு , எழுத இடமில்லை என்று , எழுத்தார்வமும் திறனும் மிக்க , அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர் பேசியதாக எங்கோ படித்த நினைவு . அப்படியும் முழுமுற்றாக நானெல்லாம் சொல்லிவிட இயலாது . ஒரேயடியாகப் புகார் சொன்னாலும் அல்லாஹ் அடிப்பானா இல்லையா ? வேலைகள் அத்தனையும் ஓய்ந்து விட்டன என்று சமாதானப்படுத்திக் கொள்ள இயல்கிற , வீட்டில் எல்லோரும் இணக்கமான அமைதியில் இருக்க வாய்க்கிற , நேரங்களில் எல்லாம் .. எழுத வேண்டியது தானே ! அப்படியெல்லாம் அமையவில்லை என்றாலும் கூட , ஒரு முத்தத்துக்காக ஏங்கி அழும் சிநேகிதிகள் வாய்க்கப்பெற்ற துக்கம் தீர நிச்சயமாக எழுத்தத்தானே வேண்டும் .

எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் அடுக்ககத்தில் சில மாதங்கள் முன்பு வரையில் வசித்து வந்தவள் ஜமீமா. மகளுக்குத் திருமணம் நிச்சயமானதில் சற்றே பெரிய வீட்டுக்குக் குடி பெயர்ந்திருக்கிறாள் . ஒரே பெண் பிள்ளையும் , அடுத்தடுத்துப் பிறந்த நான்கு ஆண் மக்களுமாக , சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் கணவர் ஊர் வந்து போகும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு விசேஷப்பட்டுப் போகும் அவள் வீடு . எங்கள் அடுப்படி சன்னலுக்கு நேரெதிரில் அவள் வாசல் , விடியலில் நான் தேநீர் தயாரிக்க வரும் பொழுதிலேயே , அடர் ரோஜா நிற சமிக்கிப் பொட்டுக்கள் பாவிய , வெறிக்கும் மஞ்சள் நிறப் புடவை ,தகதகக்கும் தங்கப் பொட்டுக்களுடன் கூடிய பீட்ரூட் வண்ணச்சேலை என்று, முகத்திலும் உதட்டிலும் பூச்சுடன் , பார்க்கும் விழிகளை , சட்டென திடுக்கத்தில் விதிர்க்கச்செய்வாள் .

ஃபஜருலியே இப்புடியா பயமுறுத்தாட்டுவிய என்று யார் கேலி பேசினாலும் கிளுகிளு புன்னகை தான் ..

நான் மாப்புள வந்த புள்ளைலா ... இனி ரெண்டு வருசத்துக்கு இந்த ரெண்டு மாச வாழ்க்க தானே !

ரெண்டு வருஷம் அல்ல .. இந்த சபர் ஆறு வருடங்களாக நீண்டது , ஐந்தாவது குழந்தை பிறந்து , அவனுக்கும் ஐந்து பிறந்த நாட்கள் கடந்த பின்னும், ஜமீம் , மறுபடி , மாப்பிள்ள வந்த பிள்ளை ஆகவேயில்லை .

சேர்ந்து தேநீர் அருந்தவென ஒரு இளமாலையில் அழைத்து , அவுக இன்னொருத்திய கட்டிக்கிட்ட மாதிரி கனவு கண்டேன் சய்தா என்றாள் முகம் வீங்கி விம்ம .

பள்ளிப்படிப்பு கூட அற்றவள் , மக்களைப் பள்ளிக்கு அனுப்பி , வீட்டுக்குப் பொருட்கள் வாங்கி , நேரங்கெட்ட பொழுதுகளில் குழந்தைகளுக்கு ஏற்ப்பட்ட சுகக்கேடுகளுக்கு அலறிக்கட்டி அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவம் பார்த்து , மகளுக்கு மாப்பிள்ளை பேச , ஊர் ஊராகச் சென்றலைந்து , பொருத்தமானவனைத் தேர்ந்து , கல்யாணம் சொல்லி என்று அத்தனையும் தானே செய்தாள் .

பத்திரிக்கை கொடுக்க வந்த போதும் மிகு ஒப்பனையும் அவளுக்கே உரிய பளீர் ஆடைகளும் துப்பட்டியை மீறி தெரியத்தான் செய்தது .

இப்பவும் என்ன பட்டிக்காட்டு துப்பட்டி , மவ கல்யாணத்துக்கு ஆசாத் அத்தா வரயில நல்ல மாடர்னா புர்கா கொண்டாரச்சொல்லி போடுங்க - என்றதில் உடைந்தாள் .. அந்த ஆம்பள என்னைய மோசம் பண்ணிட்டாரு சய்தா , பொண்டாட்டி புள்ளையள மறந்து எங்கியோ மாட்டிக்கிட்டாரு , நிக்காவுக்கு வரலேண்டா நான் மவுத்தாப் போவேண்டு போன் பேசிருக்கேன் . பொண்ணுக்கு வாப்பா கல்யாணத்துக்கு வந்துருவாஹளாண்டு கேக்குற சம்மந்தபொரத்துக்கு யாரு ஜவாபு சொல்றது !

பிறந்ததில் இருந்து பார்த்தறியாத வாப்பாவுடன் ஒரே அப்பாக ஒட்டிக்கொண்டு , திருமணத்துக்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான் ஆசாத் . நாங்கள் வீடுகட்டி குடி வந்த சமயத்தில் வாசலில் மீதமிருந்த மணலில் என் மகளோடு விளையாடிய குழந்தை , ரிஃபி . திருமணப்பட்டில் அத்தனை பெரியவளாகத் தெரிந்தவளை கண்களால் அள்ளிக்கொண்டேன் . நிக்காஹ் ஓதி , கருகமணி அணிவிக்கும் பொழுதில் எனக்குமே கொஞ்சம் சிலிர்த்துக்கொண்ட போது , மேலில் முழுதாகச் சாய்ந்து என் கழுத்தில் கண்ணீர் பெருக்கினாள் ஜமீம் .

இந்நேரத்துக்கு யாராவது அளுவாகளா ? எம்புள்ளைக்கி ஆயுச நீட்டிச்சிப் போட்டு , பெரு வாழ்க்கைய குடுடா அல்லாஹ்ண்டு துவாச் செய்யாமே ?

அவளுக்கு என்ன .. உள்ளூர்வாசி மாப்புள்ள தங்கமா அமஞ்சு போனான் . துவாச்செய்ய இம்புட்டு பேரு வந்திருக்கீக ..

பொறகென்ன ?

இவுக தேன் .. ஆசாதுக்கு அத்தா .. வந்தெறங்கி மூணு நாளாச்சு ..இன்னும் சூடா ஒரு முத்தங்கூட குடுக்கல ..

*
Thanks to : shahi da (fb)

Wednesday, December 16, 2015

'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்

காட்சிப்பிழை இதழில் நண்பர் போகன் சங்கர் அருமையாக எழுதியிருக்கும் 'பரதேசிகள்' கட்டுரையிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன். மம்முட்டியின் 'பதேமாரி'யை நானும் பார்த்தேன். குஞ்சுமுஹம்மது இயக்கிய 'கர்ஷோம்' அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனால் , அரபுநாட்டில் மனைவி மக்களுக்காக நெடுங்காலம் உழைத்த நாயகன், இனி ஊரோடு இருந்து விடும் திட்டத்தை மனைவியிடம் சொல்லும்போது, 'உங்களால் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லையென்றாலும் துபாய்க்காரனோட பெண்டாட்டி என்ற சின்ன பெருமையாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா?' என்று அவள் சொல்வது (நான் புரிந்துகொண்ட மலையாளத்தில்) அமைதியாக அழ வைத்தது. அப்படியே அஸ்மாவின் குரல்!. - ஆபிதீன்

இனி போகன் சங்கரின் வரிகள்....

அடிப்படையில் ‘குடும்பத்துக்காக ஓடாய்த் தேய்கிற மனிதனை அவன் குடும்பம் மறப்பது அல்லது வஞ்சிப்பது ‘வகைக் கதைதான் எனினும் தேர்ந்த திரைக்கதை மற்றும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் நடிகரும் இயக்குனரும் வேறு தளப் படமாக இதை ஆக்கிவிடுகின்றனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டிக்கு நிறைவான படம் இது.

படம் ஒரு மரணத்துடன் ஆரம்பிக்கிறது.துபாயில் ஒரு காலை அலாரம் ஒரு மனிதனை எழுப்ப முயன்று தோற்கிறது.பள்ளிக்கல் நாராயணன் என்கிற நாராயணப் பணிக்கர் .துபாய்க்கு கள்ளத் தோணியில் ஏறி வந்த முதல் மலையாளிகளுள் ஒருவர் .செய்தி கேரளத்தில் உள்ள அவரது அப்போதுதான் தூங்கி எழும் வீட்டுக்கு தெரிவிக்கப்படுகிறது .அங்கே கட்டப் பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் பணி உடனே நிறுத்தப்படுகிறது.(இவனுங்க சாகிறதுக்கு ஒரு சமயம் பார்க்கிறானுங்க பாரு )நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அவரது உடல் நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.ஆனால் அவரது உடலை புதிய வீட்டில் ‘’வைக்க’’ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான் அவரது மூத்த மகன்.துபாயில் அவருடன் பணிபுரிந்த பழைய கூட்டுக்காரன் ‘இந்த வீட்டுக்காகத்தான் அவன் அங்கே குருதி சோர உழைத்தான்’என்று கலங்குகிறார்.(இப்போது கேரளத்தில் காலியாகக் கிடக்கும் பனிரெண்டு லட்ச வீடுகளைப் பற்றிய செய்தியின் பின்புலம் தெளிவாகுகிறதுதானே?)
மத்திய கிழக்கு வாழ்க்கையின் துயரங்கள் படத்தில் மிகையில்லாமல் காட்ட பட்டுள்ளன கல்யாணம் ,கருமாதி எல்லாவற்றையும் போனிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய அவர்களது அவல நிலைமை பற்றி..’இம்முறைதான் கடைசி ‘’என்று ஒவ்வொருதடவையும் நாடு திரும்பும்போதும் அவர்கள் நினைத்துக் கொள்வது பற்றி சொந்தங்கள் வலைப்பின்னல் போல உருவாக்கி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களால் மீண்டும் மீண்டும் அந்த பாலைவனத்துக்கே திரும்ப நேர்வது பற்றியெல்லாம் நாடகத் தன்மையில்லாமல் காட்டப் பட்டுள்ளன

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாராயணன் பணிக்கர் கசப்பில்லாத மனிதராகவே வருகிறார்.டிவி பேட்டியில் ‘தான் தோற்காத மனிதன் ‘’என்றே சொல்கிறார்.அவர் எதை இழக்கவில்லை என்பதை கனல் படத்தில் வருகிற பிரதாப் போத்தன் மற்றும் ஷாயாஜி ஷிண்டே பாத்திரங்களோடு பொருத்திப் பார்க்கையில் புரிகிறது.அவர்கள் ஆன்மாவை இழந்து கட்டிடங்களையும் கார்களையும் பெற்றார்கள்.அவற்றையும் கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் பாஸ்டஸ் போல அவர்கள் இழந்தபோது அவர்கள் நிலைமை மிகப் பரிதாபகரமாக இருந்தது.

பதேமாரியின் நாயகன் அதை இழக்கவில்லை.அவன் கடைசிவரை அதற்காகவே உழைத்தாலும் அவன் பணத்துக்கு தனது ஆன்மாவை ரத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்க சம்மதிக்கவேயில்லை. அவர் கடைசிவரை தனது நாட்டோடும் மக்களோடும் சிநேகம் உள்ளவராகவே இருந்தார்.அவர்கள் அந்த ஸ்நேகத்தைத் திருப்பி அளிக்காவிட்டாலும் அவர் இழக்காதது என்ன என்பதை படத்தில் வருகிற ஒரு காட்சி உணர்த்துகிறது.மூன்றாவது முறையாக துபாய் போவதற்கு முன்பு மும்பை விடுதியில் அவர் ஒரு சக மலையாளியைப் பார்க்கிறார் .இம்முறையும் அவர் பெற்றது எல்லாவற்றையும் இழந்துவிட்டுதான் திரும்புகிறார் .அந்த மலையாளியை அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக யாரோ ஏமாற்றியிருக்க அவன் மும்பையில் தெருப்பணி செய்து திரிகிறான்.தான் அவ்வாறு திரிவதை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பாமல் நாடகமாடிக் கொண்டிருக்கிறான்.சிறிய சிறிய பரிசுப் பொருட்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்.எல்லாமே மும்பையிலேயே மலிவாகக் கிடைப்பவை.மம்மூட்டி அவனுக்கு தன கையிலிருந்த மிச்ச பணத்தையும் அளிக்கிறார்
நெகிழ்ந்து போன அவன் அவரது பெயர் என்ன என்று கேட்கிறான் .
‘’ஏன்?’’என்று கேட்கிறார் மம்மூட்டி
அவன் ‘’மதறாசாவில இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டுன்னு படிச்சதுண்டு .அதான்’’என்கிறான்
மம்மூட்டி புன்னகையுடன் சொல்கிறார்
‘’நாராயணன்’.என் பெயர் பள்ளிக்கல் நாராயணன் ‘’
*

நன்றி : போகன் சங்கர்