Monday, March 25, 2013

இன்னும் மனிதனாக இருப்பதனால்.... - வேதாந்தி

தவிர்க்கவே இயலாத இஸ்லாமிய இலக்கிய ஆளுமையான நாகூர் ரூமியை மறந்துவிட்டு "தமிழ்ச் சிறுகதை - முஸ்லிம்களின் பங்களிப்பு" பற்றி எழுதிய ஹனீபாக்காவின் சிறுகுறிப்பை படியுங்கள் முதலில். பிறகு வேதாந்தியின் கதையை வாசிக்கலாம்.  அந்தக் குறிப்பைப் படித்தவுடன் எனக்கு உருப் (பி.சி. குட்டி கிருஷ்ணன்) எழுதிய உம்மாச்சு நாவலில் வரும் சின்ன வாக்கு வாதம்தான் நினைவுக்கு வந்தது (நன்றி : சென்ஷி) . "பெரும்படப்பிலிருக்கிற பள்ளிவாசல், குண்டோட்டியிலிருக்கிற பள்ளிவாசலைவிட ஒசந்தது’ என்று பீரான் சொல்வான்.  எப்படி? ”அதோடே கும்பம் தங்கக்கட்டியாக்கும்! அதோடே உச்சுக்கு ஏறி நின்னு பாத்தா மக்காவும் மதீனாவும் தெரியும்!” ”சரியான டாவு!” என்று சொல்லி மாயன் மடக்குவான் இப்படி : “ குண்டோட்டி பள்ளிவாசல் உச்சிக்கு ஏறினா சொர்க்கத்துக்கே போகலாம்! ஒரு முழ உயரத்திலே எட்டிப்பாத்தாக்கூட சொர்க்கத்திலே தேவதைங்க நடமாடறதைப் பார்க்கலாம்”
 
அது மாதிரியல்லவா இருக்கிறது! - ஆபிதீன்

***


இன்னும் மனிதனாக இருப்பதனால்....  
வேதாந்தி (எம்.எஸ். சேகு இஸ்ஸதீன்)

நான் ரொட்டியைச் சாப்பிட்டுக் கொண்டு தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தேன். எனக்குத் தள்ளி அருகில் வந்து ஒரு காகம் அமர்ந்தது. நான் சாப்பிடுவதை அது ஏக்கமாகப் பார்த்தது. காகங்களிற்கு லட்சணமான ஜாக்கிரதை உணர்வு அதனிடம் அபரிமிதமாகவே தென்பட்டது. தன் உயிரிற்குப் பெறுமதி இல்லையென்பதை விட ஒரு முறை தன்னை விட்டு அகன்றால் திரும்பவும் அந்த உயிர் உடலில் புகுந்து கொள்ளாது என்பதை அறிந்து கொண்டது போல அது தன் நிலையில் மிக எச்சரிக்கையாகவும், சுற்றாடலில் மிக விழிப்புள்ளதாகவும் நின்று கொண்டிருந்தது. இருந்தும் அதன் கண்களில் ஏனோ ஒருவித ஏக்கம் மிக விசாலமாக வியாபித்திருந்தது. அது ஒரு மெலிந்த காகம். எல்லாக் காங்களும் எங்கெல்லாமோ அவசரமாய்த் தத்தம் குடலை நிரப்ப உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கையில் இது மட்டும் வெகு சாதாரணமாக ரொட்டியைத் தின்று கொண்டிருந்த என் தனிமையைப் பயன்படுத்தும் நோக்கில் ஏங்கி பார்த்துக் கொண்டிருந்தது.
 
நான் உண்மையில் அந்தக் காகத்திற்காகப் பரிதாபப்பட்டேன். சகல காகங்களாலும் புறக்கணிக்கப்பட்டதாய் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைக் காகத்தில் இயற்கையாகவே என் இரக்கம் விழுந்தது. தனித்து விட்டவற்றின் துணைக்குத் தனித்துவிட்டவைதான் பொருந்த வேண்டும். எனவே, நான் அக்காகத்தின் துணைக்குத் தயாரானேன். என் கையில் எஞ்சியிருந்த அரைவாசிக்கும் அதிகமான மீதி ரொட்டியை அக்காகத்தோடு அக்காகத்திற்காகப் பகிர்ந்து கொள்வதாய்ச் சங்கற்பித்துக் கொண்டேன். என் நிலையைப் புரிந்து கொண்டு என்னோடு சகஜமாக பயமற்றுப் பழக வேண்டுமென்று அக்காகத்தை நான் விரும்பினேன்.
 
ரொட்டியில் ஒரு துண்டை எடுத்து சற்று அஜாக்கிரதையாகவே எறிந்தேன். அந்தத் துண்டு ரொட்டி எனக்கும் அந்தக் காகத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை இரண்டாக ஆனால் அதற்குப் பாதகமாகப் பிரித்துக் கொண்டு விழுந்தது. அந்தக் காகம் அந்த ரொட்டியை எடுக்கப் பயப்பட்டது தெரிந்தது. எனக்குத் தர்ம சங்கடமாய்ப் போய்விட்டது. எறியப்பட்ட துண்டு ரொட்டியை முதலில் அது தின்ன வேண்டுமென்பது என் விருப்பம். மற்றக்காகங்களைப் போல் தெத்தித் தெத்தி ஜாக்கிரதையாக வந்து அதைக் கௌவிக் கொண்டோடி தூரத்தே நின்று தின்ன வேண்டுமென நான் நியாயமாகவே பிரியப்பட்டேன். ஆனால் அது அப்படிச் செய்யவில்லை. என் அசைந்து கொண்டிருந்த வாயையும் கையையும் எச்சரிக்கையோடு கவனித்துக் கொண்டிருந்தது. என் உடலில் அசைவிருக்கும் வரை அது என்னையே இமைக்காது பார்த்துக் கொண்டு நிற்கும் போல் தெரிந்தது. நான் இறந்து விட்ட பின்னர்தான் அது ரொட்டித் துண்டை எடுத்துச் சாப்பிடக் காத்திருக்கிறதா? எனக்குக் கோபத்தின் தொனி இதய அடிப்பில் எழுந்தது. இருந்தும் அக்காகத்திற்கு உதவி செய்ய நான் உடலில் எந்த அசைவுமற்றவனாய் என்னை ஆக்கிக் கொண்டு பாசாங்கிற்காய் சுவரில் சாய்ந்தபடியே இறந்து விட்டவனாய் நின்றேன்.
 
'படபட'வென்ற சிறகுச் சப்தம் திடீரென எழுந்து அடங்கிய பின்னர் கண்களை விழித்துப் பார்த்தேன். அந்த ரொட்டித் துண்டு காகத்தின் வாயிலிருப்பது தெரிந்தது. என்னுள் சந்தோஷ நரம்புகள் சிலுப்பி விட்டுக் கொள்ளச் சற்று முன்னர் வேறு ஒரு காகம் நிற்பது தெரிந்தது. நான் அடையாளம் கண்டு கொண்டேன். அதுதான் தன் புதுமாதிரியான ஏக்க நிலையால் என் பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொண்ட அந்த மெலிந்த காகம். ஆனால் அதன் வாயில் ரொட்டி இருக்கவில்லை. சும்மாதான் எதனையோ பறிகொடுத்த அதே பார்வை பரம்ப நின்று கொண்டிருந்தது. ஆகவே ரொட்டித் துண்டை எடுத்தது புதுக்காகம். என் இரங்கலைப் பெற்றுவிட்ட காகத்தில் எனக்கு எரிச்சலும் பாவமும் எழுந்தன. 'அசட்டுக் காகம்' என்று சொல்லிக் கொண்டேன். புதுக்காகம் அந்த ரொட்டித் துண்டை தின்று முடிக்கு முன் நான் அவசரப்பட்டு இரண்டாம் துண்டையும் உடைத்து இந்த முறை கொஞ்சம் கவனமாகவே என் காகத்தின் அருகேயே விழுமாறு போட்டேன். ரொட்டித் துண்டு பூமியில் விழுமுன் 'டப்'பென்று அதனைச் சொண்டுகளில் முதற் துண்டு விழுந்து விடாமலேயே இரண்டாம் காகம் பிடித்துக் கொண்டது. என் காகத்தின் இயலாமையில் எனக்கு அதிருப்தியும் மற்றக் காகத்தின் சாமர்த்தியத்தில் வியப்பும் ஏற்பட்டது. அதன் சாமர்த்தியத்தை நான் மெச்சிக் கொள்ளவில்லை. பேராசைக்காரர்களின் வெற்றியை ரசிக்கவோ திருடர்களின் திறமையைத் தட்டிக் கொடுக்கவோ என்னால் முடியக்கூடாது என்று நான் விரும்பினேன். அவர்களை அதற்காகச் சபித்தேன்.
 
நான் என் காகத்தின் அசட்டுத் தனத்தில் மனம் கசிந்தேன். அதன் நிராயுத நிலைக்கு இளகினேன். எதேச்சையான ஒரு சிறு காரணத்திற்காக எனக்கு அந்தக் காகத்தில் ஏற்பட்ட பிடிப்பைப் போலவே, அதன் சோர்ந்த நிலைக்கு வருத்தப்படும் என் மனோ நிலையும் எனக்கு விசித்திரமாகத்தான் இருந்தது. பிடிப்பும் வெறுப்பும் இப்படி எதேச்சையானவைதான். பிடிப்பிற்கும், வெறுப்பிற்கும் அதாவது எதேச்சையான உணர்வுகளின் நிலைப்பிற்காக மனிதனிடம் எவ்வளவு கசப்பு; எத்தனை போராட்டங்கள்; எப்படி ரகளைகள். எனக்கும், என்னினத்திற்கும் நானே ஒரு சிறிய அளவில் ஒரு பெரிய உதாரணமாக எனக்குள் நிற்கிறேன்.
 
மூன்றாம் காகமொன்று இங்கு நோக்கி வந்து கொண்டிருப்பதை நான் தற்செயலாகக் காண நேரிட்டது. நான் என் காகத்திற்காய் என்னை மேலும் அலட்டிக் கொண்டு உசாரானேன். அவசர அவசரமாய் மூன்றாம் துண்டை உடைத்து இரண்டாம் காகத்திற்கு ரொட்டியை வேறு ஒரு திசையில் எறிவதாய்ப் போக்குக் காட்டி அதை ஏமாற்றி வேறு ஒரு இடத்திற்கு நகர்த்தி விட்டு உடனே என் காகத்தின் அருகில் அதனைப் போட்டேன். இந்த முறை அந்தத் துண்டு என் காகத்தின் காலடிக்கு அருகிலேயே விழுந்தது. அது விளைவுகளை யோசித்துக் கொண்டு நிற்பதாய் சற்று நேரம் நிதானித்து விட்டு என் அசைவுகளைப் படிக்க சாவகாசமாய் ஒரு முறை என்னையும் பார்த்து விட்டு அதன் பின்னர் அந்தத் துண்டு ரொட்டியைக் கௌவ முயன்றது. அதற்குள் எப்படியோ இரண்டாம் காகம் முந்திக் கொத்திக் கொண்டு மிக அலட்டிக் கொள்ளாமல் என்னைப் பார்த்தது. அதற்கு, நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் அனைத்தும் மெலிந்த காகத்தின் மேல் எனக்கு அன்பும் ஈடுபாடும் என்பவை காரணமாக என்று புரிந்து விட்டது போலிருந்தது. நிலைமை இப்படி ஒரு புதுக்கோணத்தில் ஏற்படுவதும் உண்டு. நமது அன்பிற்குப் பாத்திரமானவர்கள் தாம் இன்னாரின் அன்பிற்குப் பாத்திரமாகி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளு முன்னர், அவர்களுக்கு வேண்டாத நமக்கும் ஆகாதவர்கள் அதனை மிக இலகுவாக அறிந்து கொள்வதைப் போல.
 
அதன் பார்வையில் பொதிந்திருந்த அனர்த்தக் கேலியும், அலட்சியமிடுக்கும் எனக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்தின. அதனளவில் நான் தோற்றவன் என்று அது கருதி என்னை அவமதிப்பில் பார்த்ததில் எனக்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அதன் பேராசை பிடித்த மனோவலிமையை நான் மனமார வெறுத்தேன். அந்தக் கொழுத்த காகம் நாசமாய்ப் போகச் சபித்தேன். என் காகம் போன்றவையாக இப்படியான தன் நலக் காகங்களோ காரணமென்பதில் நான் இப்படியான காகங்கள், இவை போன்றவை அனைத்தையும் ஒரே மூச்சில் மிக வலுவற்றனவாய் ஆக்கிவிடும் தத்துவம் நம்மிடம் இல்லாமற் போயிற்றேன என ஏங்கினேன். அந்தப் பேராசைக் காகம் மிக நிதானமாய்ப் பக்கத்திலிருந்த 'நறிவிலி'யில் ஏறிச்சுகமாகக் குந்திக் கொண்டு ரொட்டித் துண்டுகளைக் காலுக்கடியில் லாவகமாகப் பிடித்துக் கொண்டு வித்தியாசமாய் இருமுறை கரைந்துவிட்டு ரொட்டியைச் சுவைக்கத் தொடங்கிற்று.
 
இதற்குள், காகங்களாய் பதினைந்து இருபதும், இரு கோழிகளும் கூடி விட்டன. இதுதான் அந்தப் பேராசைக் காகத்தின் 'குறி' போலும். என் காகத்தைத் தனிமையில் விட விரும்பாததிலும், தன்னால் இனி மேலதிகமாக ஒன்றையும் பெற முடியாது என்பதிலும் அது கரைந்து மற்றக் காகங்களைக் கூட்டி விட்டது. 'காக்கை கரவா கரந்துண்ணும்' என்பது இதுதானா? இருக்க முடியாது. தன் நலிந்த சகோதரக் காகத்திற்கு ஒரு துண்டையும் விடாமல் தானே பறித்துக் கொண்ட அந்தக் காகமா கரந்துண்ண நினைக்கும். என் காகத்தில் பொறாமை கொண்டுதான் அது அப்படிச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சாப்பிட நிற்கும் பொழுதே மற்றக் காகங்களையும் அழைக்கக் கரைந்திருக்கலாமே. மட்டுமல்லாமல் காகம் உணவைக் கண்டால் கரைவது தனியாக அகப்பட்டுக் கொள்வோமோ என்ற பயத்தில்தானேயொழிய ஒன்றும் பெரிய காகத் தன்மையினாலல்ல. இனி இப்படித்தான் நான் நம்புவேன். பழமொழி பழையது என்பதற்காக ஏற்றுக் கொள்ள நான் தயாரில்லை. புதுமொழியும் உண்மையற்றிருந்தால் ஏற்றுக் கொள்ள நான் எப்படித் தயாரில்லையோ அது போல.

கடைசி வரையில் என் காகத்தை ஒரு துண்டு ரொட்டியாவது பெற வைப்பது எனத் தீர்மானித்து நான் தின்பதை முற்றாக நிறுத்திக் கொண்டேன். பலவகைகளில் முயன்று அதிகமான துண்டுகளை என் காகத்திற்கு அருகில் விழ எறிந்தேன். அது ஒரு சிறு முயற்சி செய்திருந்தாலாவது பல துண்டுகளைப் பெற்றிருக்கும். ஆனால் அதுவோ எல்லாக் காகங்கட்கும் மிகப் பின்னால் நின்று கொண்டிருந்ததாலும் அதன் உதவிக்கும் துணைக்கும் வந்த என்னை தன் உயிரைக் குடிக்கப் போகும் எமனாக அறிந்து கொண்டது போலவும், தன் பசியை ஒரு துண்டு ரொட்டியிலாவது போக்கி விட வேண்டுமென்று ஆசை கொண்டது போலவும் நின்றிருந்தது. அதற்கு மட்டும் ஏன் அவ்வளவு பயமென்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நான் பரிவு காட்டியதுதான் அது பயரக் காரணமோ. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அதன் ஆத்மா உள்ளூர அதற்கு ஏதாவது எச்சரிக்கை விடுத்திருக்குமோ? ஆம், இல்லையென்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை.
 
என் கையிலிருந்த ரொட்டி சிறிதாகிச் சிறிதானதைக் கண்டு என் மனம் சஞ்சலப்பட்டது. எங்கே, என் காகத்திற்கு ஒரு துண்டு ரொட்டியாவது கிடைக்காமற் போய் விடுமோ எனப் பயந்து வேதனைப்பட்டது. இருந்தாலும் அதற்கு உதவும் முயற்சியையும் நம்பிக்கையையும் நான் என்னுள் தளரவிடவில்லை. கடைசித் துண்டு ரொட்டி கையில் எஞ்சியதும் அதனையும் என் காகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். இந்தத் துண்டு ரொட்டியாவது அதன் வாயுள் இறங்கி, வயிற்றுள் சீரணமாக ஏலவே விதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நான் மிகவும் விரும்பினேன். ஒரு திட்டத்துடன் சில கணங்கள் காத்திருந்தேன். இதற்குள் அதிகமாக எல்லாக் காகங்களும் போய் விட்டிருந்தன. சற்றுப் பின்னர் என் காகம் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தது. நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்பட வைக்க கடைசித் துண்டு ரொட்டியை அக்காகத்தருகே போட்டேன். ரொட்டித் துண்டை 'சடக்'கென்று கௌவுவதை விட்டு அது என்னை மிகச் சோர்ந்து நொந்து போய்ப் பார்த்தது. பின்னர் அதன் கண்களில் ஒரு கனிவு தெரிந்தது. நன்றியுணர்விற்குரிய கனிவாய் அது இருக்கலாம். ஆனால் நான் அது அப்படிப் பார்த்து நேரத்தைக் கடத்துவதை விரும்பவில்லை. அது ஒரேயடியாய் அந்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்டுவிட வேண்டுமென மிக ஆவலானேன்.
 
இதயபூர்வமாக விரும்பி மனமார முயன்றால் நமது முயற்சி நிரப்பமாகாது விடுவதில்லை என்பார்கள். நான் இதயபூர்வமாக விரும்பி மனமார முயன்றதற்காகவோ என்னவோ அது நிறைவேறவில்லை. 'லபக்'கென்று வேறொரு காகம் அந்தத் துண்டையும் எடுத்துக் கொண்டு பறந்தது. எனது மனம் இடிந்து குமைந்தது. அதனில் இரக்கப்பட்டதற்காகவே என் மன நிலையைச் சங்கடப்படுத்தி விட்ட என் காகத்தில் எனக்கு சொல்லொணா எரிச்சல் ஏற்பட்டது. என் முயற்சிகளும் பாடுகளும் விரயமானதில் அக்காகத்தில் எனக்கிருந்த இரக்க உணர்வு வேர் பெயர நீக்கப்பட கோபமே மிகப் பெரிதாய் உருவாகி உச்ச நிலையை அடைந்தது. அதிருப்தி விஷமாய்ப் பரந்தது. இப்படியான பலஹீனக்காகம் வாழ்வதற்கு லாயக்கற்றது என்றே எனக்குப் பட்டது. அது இந்த உலகத்தின் இம்சைக்கு ஈடுகொடுத்து வாழத் தகுதியற்றிருப்பதாய் நான் முடிவெடுத்தேன். என் பரிதாபம் அதன் மேல் விழாதிருந்திருக்குமானால் அதனை அதன் போக்கில் அனுமதித்திருப்பேனென்பது எனக்குத் தெரியும். இப்பொழுது என் நிலை அதுவல்ல. எனவே நான் கசந்ததில் வெகுண்டேன். உள்ளே போய் ஒரு துண்டுத் தடியை எடுத்துக் கொண்டு வந்து அதைப் பின்னால் மறைத்தபடி நின்றிருந்தேன். காகம் சற்று சற்றாய் அயர்வது தெரிந்தது.
 
நான் இனி அதை நோக்கி எறியலாம். திடீரென மனம் பிடித் தளர்த்தியது. இதயம் எதையோ எச்சரித்தது. வழக்கத்திற்கு விரோதமாக என் குறி தவறி எறியப்படும் காகத்திலேயே பட்டுவிட்டால்... 'சவம்'. அழிந்து தொலையட்டும்! என்று வாயாரச் சொல்லிக் கொண்டேன். ஆனால் மனம் மட்டும் அப்படி நடந்து விடக்கூடாதென்று பிரார்த்தித்தது. ஆனால் நான் எறிந்து தானாவது என்று தீர்த்துக் கொண்டேன். எறிவது பட்டாலும் படாவிட்டாலும் 'எறிதல்' நிகழ்ந்து தானாக வேண்டும். எறிபடுவது என் கையிலில்லை. எறிவது என் கையில். எறிந்தால்தான் அந்த மெலிந்த காகத்திற்காய் என்னுள் வளர்ந்திருக்கும் கோபம் சற்றாவது தணியும். என் உணர்வுகளை என்னுள் அடைத்துப் பாதுகாக்க என்னால் முடியாது. முழுப் பூசணிக்காயை ஓர் அகப்பைச் சோற்றில் மறைப்பது போல அல்ல இது. நெருப்புப் பொறியைப் பஞ்சின் பக்கத்தில் சேர்த்து வைப்பது போல. என் உணர்வுகள் வெளிப்பட்டு எந்த ஒரு வடிவையாவது பெற்று என்னை விட்டு அகல நான் நிச்சயம் எனக்கு உதவி செய்து தானாக வேண்டும். அவற்றை நிர்த்தாட்சண்யமாக எந்த ஒரு போலிக் காரணத்திற்கும் மறுத்து விடுவதில் என் மனத்தைக் குப்பை கூளங்களின் மடுவாக என்னால் ஆக்க முடியாது. எனவே, நான் எங்காவது அந்தத் தடியை எறிந்து என் உணர்வை ஒரு வழியில் கைகொடுத்து உதவ வேண்டும். அரசியல் எதிரியை அவமதிப்பதற்கு அவனுக்குக் கொடும்பாவி கட்டிச் சித்திரவதை செய்வது போல. உடலளவில் தொடர்பு கொள்ள முடியாமற் போகும் ஓர் இயலாமைக்காக மனத்தளவில் வேண்டியவரோடு சல்லாபம் புரிந்து மன இச்சைக்கு உதவி செய்வது போல. மனிதனில் பாசம் வைக்க மனமில்லாத போது பிராணிகள் வளர்த்து அநுசரிப்பது போல.

நான் மிகவும் நிதானித்து என் காகம் பறப்பதற்கு அவகாசம் கொடுக்குமளவில் நின்று தடியை வீசினேன். மனத்தின் எங்கோ ஒரு சதுக்கமான மூலையில் ஆரவாரமின்றி உதித்த என் எதிர்பார்ப்புதான் நடந்தது. தலையிலடிபட்டுக் காகம் கிறுகிறுத்து விழுந்தது. எனது இருதயம் வெளியேற்றிய வியாகுலப் பெருமூச்சில் காகத்திற்கு அடிபடுவதை நான் கொஞ்சமும் விரும்பியிருக்கவில்லையென்றே தோணிற்று. என் கண்களில் நீர் கசிந்தது. விசித்து அழ எனக்கு வராது. விக்கலையும் விழுங்கி என் அழுகையையும் என்னுள்ளேயே ஆக்குவதுதான் எனக்குப் பழக்கம். ஏனோ நான் அழுதேன். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த காகத்தைக் கொண்டு வந்து கோப்பையிலிருந்த தண்ணீரை அதில் தெளித்து மூடுவதற்கு ஏதும் அகப்படாததில் நானே நின்று என் சீலையால் மூடினேன். இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிச் செய்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். அதனால் தான் நான் இயல்பூக்கத்தால் தொழிற்படுவது போல சற்றும் யோசியாமல் தொழிற்பட்டேன். அதிலுள்ள உண்மைகள் என்னவென்று உண்மையில் எனக்குத் தெரியாவிட்டாலும் அதில் உண்மைகளே இல்லை என்று சொல்ல எனக்குத் தெம்புதர வேறு மாறான உண்மைகள் என்னிடமில்லை. தன் வருத்தம் சுகமானால் சரி என்பதற்காக எந்த விதமான அர்த்தங்களுமற்ற மூட நம்பிக்கைகளையும் விசுவாசிக்கும் ஒரு சராசரி மனிதனாய் நானும் என் பரிதாபத்தைப் பெற்றுவிட்ட காகம் மயக்கம் தெளிந்து பழையபடி ஆகவேண்டுமென்பதற்காய் சும்மாவே செயல்பட்டேன். ஒரு வேளை உண்மைகள் ஏதாவது இருந்து விட்டால் என்ற பயம் எழுந்ததற்காகவும் செய்தேன். நான் அதிக நேரம் அந்தக் காகத்தை என்னுள் வைத்து நின்று விட்டதாகத் தெரிந்ததும் அதை வெளிப்படுத்தக் கவனமாக விலகினேன். காகம் விறைத்துக் கிடந்தது. சரிதான். அதன் உயிர் என்னாலேயே அறுதியாக்கப்பட விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் நாம் மிகவும் சஞ்சலமானேன். எல்லா அசைவுகளையும் தரிப்புகளையும் போல காகம் இறந்ததும் ஏற்கனவே பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்படும் எண்ணம் கர்த்தரின் சிந்தையில் தெரிந்த அன்றே - தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்றாக இருக்குமானால் அதனை மாற்றக் காகத்தைப் போலவே ஆனால் காகத்திலும் சித்ரவதை கூடிய படைப்பில் ஒரு வனான என்னால் என்ன செய்து விட முடியும். நான் அழுந்த வருந்தினேன். நான் வருந்தியும் ஆக வேண்டும் என்பதும் அந்தத் 'தெளிவான புத்தகத்தில்' எங்கோ ஒரு குறிப்பில் உள்ள வாசகம்தானா? அதனால்தான் அந்தக் காகம் அப்படி நின்றதா? அதன் ஆத்ம துடிப்பை, எச்சரிக்கையை, இறுதி மூச்சுகளைப் புரிந்தும், எமன் உருவில் என்னை அறிந்து கொண்டும் தனது ஊழியை நீட்டிக் கொள்ளச் சக்தியற்று சற்று முன்னால் என் முன்னே நின்ற இக்காகத்தின் நிலையை என்னால் அட்சரம் ஒன்று கூட விடாமல் இன்னும் பார்க்க முடிந்தது. நான் அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு வந்து அமர்ந்தேன்.
 
என் மனோ நிலை விகாரப்பட்டு வெறி கொள்வது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. நான் என் பிரச்னைகட்கு முடிவுகளை எடுக்காத ஒரு மத நிலை இது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. விவாத மேடைகளும் ரணகளங்களும் பிரளயங்களும் மனத்தைத் தம்போக்கில் நிர்ணயிக்கத் தலைப்பட்டன. நெஞ்சு, கதிரவன் போல அனந்த எண்ணக் கதிர்களுக்கு ஆரை தந்த மையமாயிற்று. நான் தலையைப் பாங்கு பாவனையறியாதவன் போல் அழுத்தமாய்ச் சீய்த்துக் கொண்டேன்.
 
அது என் தடியினால் இறக்குமென்று நான் தெளிவாக எதிர்பார்த்தே இருக்க வேண்டும். என் மன உணர்வுகட்கு உதவி செய்வதை இன்னும் அபாயமற்ற முறையில் முயன்றிருக்க வேண்டும். அல்லாமல் போயிருந்த வரையில் நான் அறிவற்றவன் பச்சாத்தாபமற்றவன். என் தவறு எனக்குப் புரிந்தால் சிறப்பு. அது 'பலஹீனமானது' என்று நான் அடக்கிக் கொள்ள முடியாது ஆத்திரப்பட்டது எங்ஙனம் முறையாகும். பலஹீனர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எனக்குப் பிடித்த கொள்கையா? எனவேதான் நான் அதன் மேல் ஆத்திரப்பட்டேனா? இல்லை. ஒருபோதும் அப்படி இல்லை; எனக்கு என் ஆத்திரத்திலுள்ள வேறுபாடும் அதன் அடியில் நான் உயிர்களிடத்தில் கொண்டிருந்த கசிவின் இரகசியமும் புரிந்தது. வேண்டுமானால் பலஹீனர்கள் உலகில் நிறைய இருக்கட்டும். அதில் எனக்குப் பிரச்னை அதிகமில்லை. ஆனால் எனக்கு வேண்டியவர்கள் என் உதவி நேரடியாக கிட்டியவர்கள் எவரும் பலஹீனர்களாய் இருப்பதில் எனக்கு எள்ளளவும் பிடித்தமில்லை.
 
காகம் அதி ஜாக்கிரதையாக அதிக விழிப்புணர்ச்சியுள்ளதாயும் இருந்தது அதன் பலவீனமா?... அதுதான் நிஜப்பலம்... இருக்கலாம். சாதாரண ஜாக்கிரதையுணர்வு கொண்ட கூட்டத்தில் ஜாக்கிரதையற்று இருப்பது எப்படி ஒரு குறையோ பலஹீனமோ அது போலத்தான் அதி ஜாக்கிரதையாயிருப்பதும். சராசரியான அறிவு கொண்ட மனித சமுதாயத்தில் அறிவற்றிருப்பதும் அதிக அறிவு கொண்டிருப்பதும் குறையாயத் தென்படுவது போல. அறிவற்ற தன்மையில் தன்னிச்சைப்படி நடந்து கொண்டால் 'பைத்தியம்' என்பார்கள். அறிவு மிக மிகைத்த தன்மையில் சுயேச்சையாய் நடந்து கொண்டால் 'கிறுக்கு' என்பார்கள். அதை போலத்தான் இதுவும். எடுபடாத உண்மை வழக்கத்திலுள்ள பொய்க்குச் சேவகம் செய்வதைப் போல. நிலத்தின் கீழ் வளரும் வேர் தேவையையொட்டி தண்டுப்பகுதியொன்றில் வளர்ந்தால், 'இடம் மாறிப் பிறந்த வேர்' என்று வித்தியாசப்படுத்தப் படுவதைப் போல. தொகைதான் பலம். தொகைதான் வழக்கத்தை நிர்ணயிக்கும். ஆகவே அக்காகம் அழிந்தது சரிதான்!

நான் வாழ்வதைக் கணிதச் சமன்பாடு ஒன்று என்று நினைக்கவில்லை. நான் காகத்தைக் கொலை செய்தது சரியா? கொலை செய்வது சரியா? ஐந்தும் ஐந்தும் பத்து என்பதைப் போல சரியா? அல்லது ஒன்பது என்பது பிழை என்று சொல்வதைப் போலுள்ள சரியா? நாம் நம்மை அறியாது நம்முள் ஏற்பட்டிருக்கும் சில வகையான ரசனைகளைக் கொண்டிருக்கு மட்டும், மனவிகாரங்களைப் பெற்றிருக்கு மட்டும், காரணமற்று எழும்பும் உணர்வுகளின் பக்கம் சாய்ந்து கொடுப்பது இன்னும் இவற்றிற்குச் சமமான பலவீனங்களை அடியோடு கெல்லி அகற்றுமட்டும் வாழ்வது கடைசி மட்டும் ஒரு கணிதச் சமன்பாட்டைப் போன்றதல்ல. எனவே சரியென்றும் பிழையென்றும் ஒன்றுமே கிடையாது. என் காகம் என் எறிக்கு இலக்கானது துரதிர்ஷ்ட வசமான ஒரு கை பிழைபாடு. ஆனால் எறிய வேண்டுமென எழுந்த எண்ணம்? அது திட்டமிடப்பட்டது. சில்லறையான உணர்வின் வழிப்பட்டதில் கேவலப்பட்டதாய் மனம் என்னை நடுச்சந்தியில் நிர்வாணமாய் நிறுத்திய அசூசையுணர்வைத் தந்தது. காகம் கெட்டழிய வேண்டுமென்று விரும்பி நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. எனது நோக்கு நல்லெண்ண வாய்ப்பட்டதற்றதெனினும் தீய எண்ணத்தின் பாற்பட்டதல்ல. சோரம்போன இந்த உலகில் நிறைய நன்மை தரும் உண்மைகளை அறிந்திருந்தும் தனித்து விடப்பட்டதினால் அவஸ்தையுறுவதை விட ஒரேயடியாச் செத்துத் தொலைப்பது மேல்தான். ஆகவே, மிக விழிப்புணர்வாயிருந்ததற்காய் காகம் அழிந்தது முறை.
 
நான் அக்காகத்தை அநியாயமாக, அது வாழ்வதற்கு வெறுக்கிறதா என்று அறியாதும் கூட இப்படி ஒரு நேரத்தில் இறக்க விட்டது தர்மம்தானா? ஏன் மரண அவஸ்தையில் துடித்த ஆட்டினை ஒரேயடியாய்க் கொன்றுவிடச் சொன்ன மகாத்மாவும் அதன் வலியைத் தாங்க முடியாத அதன் பலவீனத்தை உணர்ந்தும், பின் தன் மனச்சாந்திக்காயும்தானே அப்படிச் சொன்னார். நானும் ஏறக்குறைய அதைத்தானே செய்யும்படி ஆயிற்று.

இருந்தும், நான் காகம் செத்ததை வருந்தினேன். என் மனம் ஒன்றை நினைத்து மிகப் பலமாக வருந்திற்று. நாளை ஒருவேளை என் காகமும் மற்றவைகளைப் போல் வாழ்க்கையோடு போராடும் படிச் சந்தர்ப்பம் கிடைத்து மாற இருக்குமானால்...? என்னை இந்தக் கேள்விக்கு எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு காரணத்தைக் காட்டி என்னை சாந்திப்படுத்த துடித்தேன்.
 
நாளையே எந்தவித நிச்சயமும் அற்ற போது, நாளை அது திருந்துவது மட்டும் சந்தேகமற்ற நிச்சயமானதாய் விடுமா? 'இருக்கலாம்' என்றே எனக்குப் பட்டது. எதற்கும், எனக்காக வேண்டி 'இல்லை' என்றே சொல்லிக் கொண்டேன்.

***

நன்றி : வேதாந்தி , .எல்.எம். ஹனீபா, ஸபீர் ஹாபிஸ்

2 comments:

  1. இந்தப் பட்டியல் போடும் போது எல்லாருக்கும் ஏற்படுகிற வருத்தம்தான் எனக்கும். தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் எழுதப்போன பெரும்படைப்பாளிகளான சிட்டி, சிவபாத சுந்தரம் கூட நம்ம பெருமைக்குரிய சிறுகதை எழுத்தாளர் முல்லைக்கொடியாள் படைத்த விந்தனை மறந்து விட்டார்கள். நாகூர் ரூமியின் கப்பலுக்குப் போன மச்சானை நானெப்படி மறந்தேன். என்னை மன்னிக்கவும் ஆபிதீன். இன்னும் பலருண்டு. வயது கூடக் கூட ஞாபகப் பிசவும் கூடி வரும்.

    ReplyDelete
    Replies
    1. அட, சும்மா வம்புவளர்த்தேன் காக்கா. எனக்குத் தெரியாதா உங்களை? இங்கே எல்லோரும் பாராட்டும் நம்ம ஸபீர்தான் மோசம் :-)

      Delete