Tuesday, March 12, 2013

அரசியல் : மார்க்கம் காட்டும் நேர்வழிகள் - தாஜ்அரசியல் : மார்க்கம் காட்டும் நேர்வழிகள் 

தாஜ்

த.மு.மு.க.
அல்லது
மனித நேயக் கட்சி என்கிற
பெயர்களால் அறியப்படும்.....
இஸ்லாமிய கட்சி ஒன்றைச்
சார்ந்த சிநேகிதன் அவன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன்.

விஸ்வரூபம் தடைப்பட்டு
பின்னர் அப்படம் வெளியான போது,
கடைசியாக அவனை சந்தித்ததாக ஞாபகம்.

அப் படத்திற்கான எதிர்ப்பை
அவனது கட்சி
வாபஸ் பெற்று கொண்டமைக்காக
அவனுக்கு அப்போது
'Thanks' கூட சொன்னேன்.

என்னிடம் விரும்பி
பழகும் பையன் என்பதால்
எங்கள் உரையாடல்
உரிமையோடான சகஜமாக நிகழ்ந்தது.
நான்தான் பேச்சைத்துவக்கினேன்.

*** 

"எங்கே உன்னை பார்க்கவே முடியலை?"

"கட்சி வேலையா பிஸிண்ணே..."

"கட்சி வேலையா? அப்போ...
விஸ்வரூபத்தை மறுபடியும்
தடை பண்ணப் போறீங்களா என்ன?"

"அதுதான் முடிஞ்சி போச்சேண்ணே!"

"அப்போ... வேற ஏதாவது படத்தை
தடை செய்ய போறீங்களோ?"

"இஸ்லாமியர்களின் உணர்வை காமிக்க
வேண்டிய நேரத்தில் காமிக்க வேண்டாமாண்ணே?
அதுக்காக எப்பவும் அதே வேலையா இருக்க முடியுமா?
நான் சொல்ல வந்தது...
மாவட்ட கமிட்டிக் கூட்ட வேலை!"

"ஓ.....!"

"என்னை மாவட்ட
செயலாளரா நியமிச்சிருக்காக!"

"வாழ்த்துக்கள். மாவட்டம் முழுமைக்குமா?"

மாவட்டத்தின் பெயரைச் சொல்லி,
அதன் "வடக்குச் செயளாலர்" என்றான்.

"பழைய செயலாளர் என்னாச்சு?"

"ஏழு லட்சத்துக்கு கணக்கே கொடுக்கல...
தலைமை கேட்டு கேட்டுப் பார்த்துடுச்சி!"

"அது ஒரு தொகைன்னா....
பதவியை பறிச்சுட்டாங்க?"

"மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த
மாவட்ட தலைவர் முப்பது லட்சத்துக்கான
கணக்கே கானோம்னு தலைகிட்டே சொன்னாரு
அவரை மன்னிச்சுடலையா? அந்த மாதிரி
ஏதாவது பதிலை சொல்ல வேணாமா இவரு?"

"ஓ..., அப்படியா.. அப்ப சரிதான்"

"அடுத்த வருஷம்
பாராளுமன்ற தேர்தல் வருதுங்கும்போது...
நிறையப் பணம் லட்சத்துல, ஏன் கோடியில
புழங்குற நேரம்...
இதுக்கே கணக்கும் கொடுக்காம,
தலைமையையும் மதிக்காம இருந்த
எப்படிண்ணே அவர வப்பாங்க?"

"சரிதான்!"

"நான்தான் அந்த ஏழு லட்சத்த
கண்டு பிடிச்சு சொன்னேன்"

"ஓ..!"

"அப்ப..., நீயே அந்தப் பொறுப்புல
இருன்னாங்க, சரின்னுட்டேன்"

"மாவட்டப் பணிங்குகிற...
கார் வாங்கித் தந்துட்டாங்களா?"

"புக் பண்ணிருக்குண்ணே
அடுத்த வாரத்துல வந்துரும்"

"எத்தனை எம்.பி. சீட் கேட்கப் போறீங்க?"

"ஏழு கேட்க இருக்காங்க, இல்லைன்னா
ஆறு நிச்சயம் கேட்போம்.
இருந்தாலும்...
அல்லா என்ன நாடியிருக்கானோ
அதான் நடக்கும்"

"அம்மா என்ன நினைச்சு
இருக்காங்களோன்னு சொல்ல மாட்டேங்கிறியே?"

"அவுங்கத்தான்
தனியா நிற்க போறதா சொல்றாங்களே"

"ஆமால!"

"அது நடக்காதுண்ணே!
பதினைந்து எம்.பி. தொகுதியில
முஸ்லிம் ஓட்டில்லாம....
எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது!"

"கணக்கெல்லாம் பலமாதான் இருக்கு!
அப்படின்னா...
ஒரு தொகுதி கட்டாயமுன்னு சொல்லு!"

"நாங்க அவ்வளவு லேசா உரிமையை
விட்டுக் கொடுத்திட மாட்டோம்ண்ணே...."

"சரி, அவுங்க கூட கூட்டணி வைச்சு,
அவுங்களை நீங்க ஜெய்க்கவும் வைச்சாக்கா...
நாளைக்கு பாரதிய ஜனதாவுக்கோ...
மோடிக்கோல்ல ஆதரவு கொடுப்பாங்க"

"அது அப்படின்னா...
நாம என்னண்ணே செய்ய முடியும்?
ஜெயித்த பிறகு,
மேல அவுங்க வைக்கிற கூட்டு
அவுங்களோட பர்சனல் இல்லையா?
அதுல, நம்ம தலையிட முடியாது.
அது நாகரீகமும் இல்லையேண்ணே!"

"நீ சொல்றது சரியா புரியலையே"

"எங்க கூட்டுங்கிறது
அம்மாவோட மட்டுதான்!"

"அப்ப பிரதமர் தேர்வுக்கு
அம்மா ஆதரிக்கிற கட்சிய ஆதரிக்க மாட்டீங்க
எதிர்த்து ஓட்டுப் போடுவிங்க அப்படித்தானே?"

"அதெப்படிண்ணே
அம்மாவ எதிர்த்து போட முடியும்?"

"மறுப்படியும் குழப்புறியே...
பின்னே என்ன செய்வீங்க?"

"ஓட்டெடுப்புல கலந்துக்க மாட்டோம்ல!'

"சபாஷ்..."

"பேச்சுப் போக்குல
நான் சொல்ல வந்தச் செய்தி
மறந்துடப் போவுது"

"சொல்லு"

"நீங்க எங்க இயக்கத்தோட
ஒட்டமாட்டேங்கிறிங்க.
பரவாயில்லை.
அடுத்த ஞாயிறு அன்னைக்கி
எங்க 'மசூரா'வுல வச்சு
ஒரு புத்தகத்த வெளியீடு செய்கிறோம்.
நீங்கதான் அந்தப் புத்தகத்த வெளியீடணும்"

"அப்படியா! புத்தகத்தின் பெயர் என்ன?"

"மார்க்கம் காட்டும் நேர்வழிகள்!"

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com

1 comment:

 1. நேர்வழி காட்டியவருக்கு நன்றி.
  இப்பத்தான் மாவட்டத்தின் ஒரு திசைக்கு மட்டும்
  செயலாளராயிருக்குற ஒரு பச்சப்புள்ளட்ட இம்புட்டு கேள்வி கேட்டதற்குக் கண்டனங்கள்.

  //"சரி, அவுங்க கூட கூட்டணி வைச்சு,
  அவுங்களை நீங்க ஜெய்க்கவும் வைச்சாக்கா...
  நாளைக்கு பாரதிய ஜனதாவுக்கோ...
  மோடிக்கோல்ல ஆதரவு கொடுப்பாங்க//

  இந்தக்கேள்விக்கு, பிரதமரே அம்மாதான்னு சொல்லிக்கிறாக, அதனால பிரச்சினையில்லைன்னு
  சொல்லி சமாளிக்கத் தெரியல பாருங்க அவருக்கு..

  கத்துக்குவார், வெகுசீக்கிரமே...

  சிரிப்பை அடக்கமுடியாத வரிகள்:
  "ஏழு கேட்க இருக்காங்க, இல்லைன்னா
  ஆறு நிச்சயம் கேட்போம்.
  இருந்தாலும்...
  அல்லா என்ன நாடியிருக்கானோ
  அதான் நடக்கும்"

  "அம்மா என்ன நினைச்சு
  இருக்காங்களோன்னு சொல்ல மாட்டேங்கிறியே?"

  "அவுங்கத்தான்
  தனியா நிற்க போறதா சொல்றாங்களே"

  "ஆமால!"

  "அது நடக்காதுண்ணே!
  பதினைந்து எம்.பி. தொகுதியில
  முஸ்லிம் ஓட்டில்லாம....
  எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது!"

  "கணக்கெல்லாம் பலமாதான் இருக்கு!
  அப்படின்னா...
  ஒரு தொகுதி கட்டாயமுன்னு சொல்லு!"

  ReplyDelete