Thursday, March 7, 2013

’பாவ வரி’ போடுகிறார் ப. சிதம்பரம் - வரிவரியாய் தாஜ் வரிகள்

இத்தனை வரிகளுக்கு மேல் கவிதை எழுதினால் அதற்கொரு ஸ்பெஷல் வரி என்று போடுங்கள். அப்போதுதான் எங்கள் தாஜ் சரிப்படுவார். உடைத்து உடைத்து இவர் போடுகிற வரிகள் , 'புகை’ விடும்  என்னை புழுதிபறக்க ஓட வைக்கிறது சார்... - ஆபிதீன்

**சிகரெட்டுக்கு வரி:

மத்திய அரசின் வருடாந்திரச் சடங்கு


இந்திய 'வரியுலக மேதை'
மன்னிக்கவும்....
இந்தியப் 'பொருளாதார மேதை'
மதிப்பிற்குரிய
மத்திய அமைச்சர்
எங்கள் சிதம்பரத்திற்கு....

உங்களை
சிறந்த பொருளாதார அமைச்சரென்று
இந்தியப் பத்திரிகைகளெல்லாம்
புகழ்ந்துகொட்டிய காலம்தொட்டு
உங்களது வரிவிதிப்பின்
மகிமையை அறிவேன்.

நீங்கள் தமிழ்நாட்டுக்காரர் என்பதாலும்
உங்களை மாதிரியே...
ஒரு காலக்கட்டத்தில்
நானும் பெருந்தலைவரின்
புகழ் பாடியவன் என்பதாலும்
உங்களை நெருக்கமாக உணர்ந்தவனாகவும்,
வானளாவிய உங்களது கீர்த்திகளை
தீர அறிந்து வந்தனாகவும் இருக்கிறேன்.

பெருமைக்குரிய வகையில்
மத்திய அரசில்
அமைச்சராக நீங்கள் பதவியேற்றதிலிருந்து
குறிப்பிட்ட சில ஆண்டுகள் நீங்களாக
நிதியமைச்சராகவும்
பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு
இஷ்டமானவராகவும்
இன்னொரு பக்கம்.
'பட்ஜெட் கிங்'காகவும்
நீங்கள் வலம் வந்த
காலங்கள் முழுமையும் தொடர்ந்தறிவேன். 

வருடா வருடமும்
எல்லாப் பொருட்களும்
விலையேறி கொண்டேயிருந்தாலும்...
விலைவாசி வானையே எட்டினாலும்
அதற்கு
நீங்கள் ஆண்டுதோறும்
தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கும்
பட்ஜட்டே முதன்மைக் காரணமாக
இருந்த போதிலும்
அப்படியும் இப்படியும்
வார்த்தை ஜாலம் காட்டி
வருடம் தோறும்
'வரியில்லாத பட்ஜெட்' போடுவதானதொரு
இமேஜை கஷ்டப்பட்டு
காபந்து செய்தும் வருகின்றீர்கள்!
இந்தியப் பெரும் முதலாளிகளின்
மீடியாக்கள் உங்களது கருத்தையே
எதிரொலிக்கின்றன!

இங்கே...
இதெல்லாம் சங்கதியல்ல,
இதுவேறு.
புகைப் பிடிப்பவர்களின்
வயிற்றெரிச்சல் சங்கதி.

அதென்ன
வருடம் தவறாமல்...
அல்லது
வருடத்திற்கு இரண்டு முறை
சிகரெட்டுக்கு மட்டும்
வரி விதித்தபடிக்கு இருக்கின்றீர்கள்?
கேட்பாரே இல்லை என்றா?

அது நிகோடின் / உயிர்க்கொல்லி...
அதற்கு சிபாரிசு செய்து
நம்மை
விமர்சிப்பவர் யாரும்
முன்வரமாட்டார்கள் என்கிற
அசட்டு தைரியமா? 

அல்லது
மெல்ல கொல்லும் விஷமான ஒன்றை
படிப்படியாக குறைத்து
முற்றாக
மக்கள் மத்தியில் இருந்து
இந்த சிகரெட் என்ற நாற்றத்தை
அகற்றிவிட வேண்டுமென்ற நல்ல நோக்கமா?

முதலாவதாக
நான் சுட்டி இருக்கும் வகையில்
அந்த அசட்டு தைரியம்
கட்டாயம்
உங்களிடம் இருக்க வாய்ப்புண்டு!
நான் அறிந்தும்
சிகரெட் மேல் போடப்படும் தீர்வை குறித்து
யாரும் உங்களை கேட்பதில்லைதான்.

இரண்டாவது காரணம் சரியென்றால்...
நீங்கள் இத்தனை தூரம்
கஷ்டம் கொள்ள வேண்டாமே!
ஒரு சட்டத்தால்...
இந்தியாவின் சிகரெட் தயாரிப்பை
இனி இல்லையென்று ஆக்கிவிடலாமே!

வெள்ளைக்காரன்
இந்தியாவை ஆண்ட காலம்தொட்டு
இங்கே இருந்து
நம்மைச் சுரண்டும்
வெள்ளைக்காரக் கம்பெனிகள் சிலவற்றில்
முதன்மையானது...
இந்த சிகரெட் கம்பெனி!.
அவர்களை
ஓர் நல்ல நாள் பார்த்து
ஊர் தேசம் பார்க்க
போகும்படி செய்ய
அரசுக்கு எத்தனை நேரம் பிடிக்கும்?
ஒரு கையெழுத்து இடும் நேரம்!
ஆனால்
செய்ய மாட்டீர்கள்.
தெரியும்.

புகை பிடித்துப் பிடித்து 
மெல்ல இறந்து கொண்டிருப்பவனைப்
பார்க்க உங்களுக்கு ரொம்பவும் இஷ்டம்.
இப்படி சிகரெட்டுக்கு
ஆண்டு தவறாமல்
வரி மேல் வரிப் போட்டு
அவனது
மென்னியை இன்னும் பிடித்து
திருகுவதில் உங்களது இஷ்டமே தனி.
இல்லையென்றால்...
வரியென்றும் / பாவ வரியென்றும்*
சிகரெட் பிடிப்பவர்களை
இப்படி இம்சிப்பானேன்?

( * ஒரே ஆண்டில், இரண்டாம் முறையாக
சிகரெட்டுக்குப் போடப்படும்
வரிக்குப் பெயர்தான்... 'பாவ வரி' )


உங்களுக்கு தெரியுமா.....?
நீங்கள் சிகரெட் பிடிக்காதவர்...
தவிர, நல்லவர்...
அதனால்தான் இந்தக் கேள்வி.
உலகிலேயே
மகா மட்டமான சிகரெட்டுகளை
தயாரிக்கும் நாடுகளில்
இந்தியாவும் ஒன்று.

உலகிலேயே நம்பர் ஒன்
சிகரெட்டுகள் என்று கணிக்கப்படும்
இங்கிலாந்து / அமெரிக்கன் பிராண்ட்
சிகரெட்டுகள் எல்லாவற்றையும் விட
இன்றைய கணக்கில் 
அதிகம் விலைக்கு விற்பது..
நம்ம இந்திய தயாரிப்பு சிகரெட்டுகள்தான்!

டன்ஹில்/ பென்சன் ஹட்ஜெஸ்/
மால்பரோ போன்ற
வெளிநாடு சிகரெட்டுகளின் விலை...
ஒரு பாக்கெட் (20-சிகரெட் கொண்டது)
அதிகம் பட்சம்
இந்திய ரூபாய் மதிப்புக்கு 80 ரூபாய்கள்தான்!

இங்கே படுமட்டமான /
துளியோண்டு நீளம் மட்டுமே கொண்ட
'சிசர் ஃபில்டர்'
பத்து சிகரெட் கொண்ட பாக்கெட் ஒன்றின்
இன்றைய விலை ரூபாய் 45
அப்போ 20 சிகரெட், 90 ரூபாய்!
(குறைந்தபட்ச உதாரணமாகவும்
இந்தியாவில் விலை மலிவான சிகரெட்
இது என்பதற்காக மட்டுமே
இங்கே சிசர் ஃபில்டர் சுட்டப்படுகிறது)

இந்தியாவில் சிகரெட் பிடிப்பவன் எல்லாம்...
உங்கள் பார்வைக்கு
அடிமாட்டைவிட
கேவலமாக போய்விட்டார்கள்.
அதனால்தான்
கேள்விக் கணக்கற்று இம்சிக்கின்றீர்கள்.

மிஸ்டர் சிதம்பரம்...
உங்களது ஒவ்வொரு வரி பட்ஜெட்டும்
மக்களது ஓட்டை கணக்கில் கொண்டே
வரி விதிப்பை செய்கின்றீர்களென்பது
நிஜமெனில்...
சிகரெட் பிடிக்கும்
மாபெரும் கூட்டத்தாரிடமும்
கணிசமான அளவில்
'ஓட்டு பாங்' இருக்கின்றது என்பதை
மறந்து விடாது.நினைவில் கொள்ளுங்கள்.

'அடிப்படையில்...
கேன்சர் விளைவிக்கும் சிகரெட்டுக்காக
இப்படியா மாய்ந்து மாய்ந்து எழுதுவது?'
என்பதாக
சிதம்பரம் அய்யாவுக்கு தோணலாம்.
சரிதான் அது.
ஏதோ...
போதாத காலம்...
கற்றுக்கொண்டுவிட்டோம்,
சனியனை விடவும் முடியலை...
அதனால்தான்
சிகரெட்டின் வரியையொட்டி
உயர்ந்திருக்கும்
அதன் விலையில் மலைத்து
எழுதி மாய்கிறோம்.

சரி...
பட்ஜெட் என்பது
பற்றாக்குறையை முன்வைத்துதானே
வருடா வருடம் போடுகின்றீர்கள்.
அரசு பணத்தை
'லட்சத்தி எழுபதினாயிரம்' கோடிகள் என்றும்
'முப்பதினாயிரம்' கோடிகள் என்றும்
'முன்னூற்றி அறுபது' கோடிகள் என்றும்
சுரண்டி
அரசின் ஆன்மாவிலேயே
கேன்ஸரை உண்டாக்குகின்றார்களே...
அவர்களை நீங்கள்
எளிதில் தப்பவிடுவதினால்தானே
அதனாலும்தானே
இந்தப் பற்றாக்குறை?
அந்தப் பள்ளத்தை இட்டு நிரப்பவும்தானே
வரியென்றும் / ’பாவ வரி’யென்றும்
எங்கள் உயிரை எடுக்கின்றீர்கள்?
அரசின் கஜானாவை சுரண்டியவர்களை மட்டும்
தலைமேல் அல்லவா
தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றீர்கள்!

நிகோடின்...
உயிர்ப் பறிப்பதைவிட
சிகரெட்டின்
அநியாய விலையேற்றத்தால்...
நீங்கள்
எங்களது உயிரை பறிக்கும்
பறிப்புதான் அதிகம்.

*
அனேகமாக
சிகரெட்டுக்குப் பரிந்து
அதன் மீதான வரியினால்
சிகரெட்டின் விலையேற்றத்திற்காக...
எனக்குத் தெரிந்து
ஆவேசப்பட்டவன்
இந்தத் தமிழகத்தில் நானாகத்தான் இருப்பேன்.
இருமிக் கொண்டுதான் இதனை எழுதுகிறேன்
என்பதையும் தயக்கமில்லால் பதிவு செய்கிறேன்.

இதன் பொருட்டெல்லாம் நான்
நாகரீகத்தின் பொருட்டான
வீண் சஞ்சலம் கொள்ளவில்லை என்பதையும் கூட
இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தாஜ்

2 comments:

 1. ////இத்தனை வரிகளுக்கு மேல் கவிதை எழுதினால் அதற்கொரு ஸ்பெஷல் வரி என்று போடுங்கள். அப்போதுதான் எங்கள் தாஜ் சரிப்படுவார்.////

  ஆபிதீனை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 2. நாநா....
  வரின்னா என்னென்னு தெரியாத தேசத்தில் இருந்துக் கொண்டு
  நீங்கள் செய்யும் கிண்டல் அதிகம்.
  எங்களைப் பார்த்தா பாவமா இல்லையா?

  சிகிரெட் வரியென்பது
  அரசு வறியவர்களிடம் வசூலிக்கும்
  மறைமுக வரியென்பதை நீங்கள் அறிவீர்கள்!

  அது நிஜமென்றால்...
  எங்க ஊரில் அப்படியான மறைமுக வரியை
  அதிகத்திற்கு அதிகமும் செலுத்தும்
  ஒருசிலரில் நான் கட்டாயம் இருப்பேன்.
  தவிர,
  இப்பவே, டாக்டருக்கு வேறு
  அப்பப்ப மெய்யெழுத வேண்டி இருக்கிறது.
  நாளைக்கு அங்கே போய் படுத்துக் கொண்டு
  அவர்களின் அழிச்சாட்டிய
  'பில் தொகையை'யும் செலுத்த வேண்டியிருக்கும்.

  இதையெல்லாம் நாநா யோசிக்க வேண்டாமா?
  மாறாய்
  ஆபிதீனுக்கு வேறு, வரி சிபாரிசு செய்கின்றீர்கள்!
  தாங்குவேனா நான்?
  -தாஜ்

  ReplyDelete