Thursday, March 28, 2013

நயீமுன்னிசா ஷேக் அரங்கம்

நெகிழ வைத்தது , மறைந்த தனது சகோதரி பற்றி 'புதியவன்’ ஷாஜஹான்   எழுதிய இந்த ஃபேஸ்புக் பதிவு. ‘எப்பேர்பட்ட பெண்மணியாக தெரிகிறார். நெஞ்சம் கனத்துவிட்டது. வேறு சொல்லவும் தெரியவில்லை’ என்றார் தாஜ். அதே உணர்வுதான் எனக்கும் இங்குள்ள தோழர்களுக்கும். - ஆபிதீன்

***

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்....

1980கள்.... நான் இடதுசாரி இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட காலம்.... முழுநேரமும் தொழிற்சங்கம், கட்சி என்று அலைந்து கொண்டிருந்த காலம்... எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டவற்றை எல்லாம் யாருக்கேனும் சொல்லிக்கொடுக்கத் தேடிய காலம்... எவரைப் பார்த்தாலும் இவரை இயக்கத்துக்குள் இழுக்க முடியுமா என்று ஆழம்விட்டுப்பார்ப்பதே பிழைப்பாக இருந்த காலம்... அப்படி இழுக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் நிறைய.

* * *

படத்தில் சிரித்துக்கொண்டே நடந்து வரும் இவர் என் சகோதரி. நான்கு சகோதரிகளும் நானுமாக ஐந்து பேர். இவர் வீட்டில் இரண்டாமவர். நான் நான்காவது ஆள்.

எட்டாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு முடித்திருந்தவர், தனித்தேர்வு எழுதி எஸ்எஸ்எல்சி முடித்தார். 1970களில் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், யூனியன் ஆபீசில் டெஸ்பாட்ச் கிளர்க் வேலையில் சேர்ந்தார். தகுதி இருந்தது என்றாலும் திமுக தலைவர் பரிந்துரையும் காரணம். அதற்கு நன்றியும் கூற வேண்டும்.

எங்கள் வீட்டில் எல்லாருக்குமே படிக்கும் ஆர்வம். படிப்பது என்றால் முக்கியமாக குமுதம், விகடன், கல்கி, தினமணி கதிர்தான். அப்புறம் நூலகப் புத்தகங்கள். வீட்டில் எல்லாருமே குண்டு பல்பின் மஞ்சள் விளக்கொளியில் சுவரொட்டி அமர்ந்து படிப்பது அன்றாடக் காட்சி. இவரும் படிப்பார். தீவிரமாகப் படிப்பார்.

முன்னேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். படிப்படியாகத் தேர்வுகள் எழுதினார், மேலே மேலே போய்க் கொண்டே இருந்தார்.

அப்பா போனார், அம்மா போனார், ஆளாளுக்கு திருமணம் செய்து கொண்டு போனார்கள். நானும் கட்சிக்குப் போனேன். கட்சி-தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே எப்போதாவது நல்ல சாப்பாட்டுக்கு ஏங்கும்போது அக்கா வீட்டுக்குச் செல்வது வழக்கம். சாப்பிட்டு முடித்து இரவு உரையாடல் துவங்கும். மைத்துனர் அமைதியாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, மயிர்பிளக்கும் வாதங்கள் நடக்கும். குடும்பத்திலிருந்து இயக்கத்துக்கு இழுக்கு முடிந்த முதல் நபர் இவர்தான்.

அப்போது அவர் இருந்த ஊரில் அரசு ஊழியர் சங்கம் கொஞ்சம் முனைப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இவருடைய ஆர்வம் அங்கே வெளிப்பட, அவர்கள் இழுத்துக்கொண்டார்கள். ஊருக்கு வரும்போது என்னிடம் கேட்பார் – “நீ இருக்கிறது அதுல, நான் இருக்கிறது இதுல.” “எதுவாக இருந்தால் என்ன, இடதுதானே” என்பேன். சங்கத்தில் தீவிரமாக இருந்தார், போராட்டங்களில் பங்கேற்றார். கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.

பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஊருக்குப் போயிருந்தபோது கலை இலக்கிய இரவு ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் மக்களோடு மக்களாக மண்ணில் போய் உட்கார்ந்து கொண்டேன். “வா, தோழர்களை அறிமுகம் செய்யறேன்” என்றார். சிலரை எனக்கு முன்னரே தெரியும். “மேடைக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க, வேண்டாம்க்கா” என்றேன். எப்படியோ தோழர்களுக்கும் தெரிந்து போயிற்று. அன்று நடைபெற இருந்த பட்டிமன்றத்தில் பேசுவதற்கு இரண்டு தரப்பிலும் ஓர் ஆள் குறைவாக இருந்தது. என்னை அழைக்க, நானும் மேடையேற வேண்டியதாயிற்று.

மனதுக்கு நிறைவாக இருந்தது. சென்னையிலும் தில்லியிலும் எத்தனையோ மேடைகளில் பேசி சலித்துப்போயிருந்தாலும் சொந்த ஊரின் முதல் மேடை அது. அதற்கு எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்தவர் என்னால் உருவாக்கப்பட்ட என் அக்கா.

டெஸ்பாட்ச் கிளர்க் காலத்திலேயே அவருக்கு ஒரு லட்சியம் இருந்தது. பிடிஓ-வுக்கான ஜீப்பில் முன் சீட்டில் உட்கார்ந்து போக வேண்டும். சும்மா பயணம் போவதல்ல, பிடிஓ ஆக....

கடைசியில், படிப்படியான பதவி உயர்வுகளோடு, ஊர்ஊராக பணி மாற்றங்களோடு முன்னேறினார். பிடிஓ ஆவதற்கான ஒரு படி ஏற வேண்டியிருந்தது. அதற்குள் எங்கள் குடும்பத்தினரைத் தேடி வருகிற சொத்து ஒன்று அவருக்கும் வந்தது. புற்று நோய்.

புற்றுநோயுடனான போராட்டம் எளிதானதல்ல. அதவும் தோற்றுப் போயே தீரும் என்று தெரிந்தும் நடத்துகிற போராட்டம் இன்னும் கடினமானது. என் குடும்பத்தில் நான்கு பேர் இப்படிப் போராடிப் பார்த்திருக்கிறார்கள். அதை அவரும் தொடர்ந்தார். நோயின் உச்ச கட்டத்திலும் போராடிக்கொண்டே பணியில் மீண்டும் சேர்ந்து பி.டி.ஓ. ஆனார். அவர் விரும்பியபடியே ஜீப்பில் பயணித்தார். சில நாட்களில் மறைந்தார்.

நேற்று முகநூலில் Nags Rajan ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். உடுமலையில் 23ஆம் தேதி நடைபெற்ற கலை இலக்கிய இரவு பற்றிய செய்தி. அதன் மேடைப் பின்னணியில் இருந்த படத்தில் இருந்தது ஒரு பெயர் – நயீமுன்னிசா ஷேக் அரங்கம்.

நன்றி தோழர்களே. நீங்கள் இந்தப் பெயரைப் போடாமல் இருந்திருந்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனாலும் நினைவு வைத்திருக்கிறீர்கள்.

பார்வையாளர்கள் பலருக்கு அது வெறும் பெயராக இருக்கலாம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு அது நினைவின் வெளிப்பாடாக இருக்கலாம். பார்க்க நேர்ந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம்.

எனக்கோ.........

***


நன்றி : ஷாஜஹான் | http://www.facebook.com/shahjahanr

1 comment:

  1. ஷாஜஹான்July 28, 2013 at 5:20 PM

    இது இங்கே பகிரப்பட்டதே எனக்குத் தெரியாது. நன்றி நண்பர்களே.

    ReplyDelete