Sunday, March 31, 2013

வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்

நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'தீர்க்க வர்ணம்' நூலிலிருந்து ஒரு பத்தியை, நன்றியுடன் மீள்பதிவிடுகிறேன். அவர் குறிப்பிடும் ‘வாப்பா வருவார்’ சிறுகதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். சி. அய்யப்பன் எழுதிய 'பைத்தியம்’ சுட்டியை அளிக்கிறேன்! - ஆபிதீன்

***

வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்

அஷ்ரஃப் சிஹாப்தீன்

ஓர் இலக்கியக் கலந்துரையாடலின் போது முழுச் சபை யினதும் கவனத்தைக் கவர்ந்து நண்பர் அஸீஸ் நிஸாருத்தீன் ஒரு சிறுகதை குறித்துச் சிலாகித்துப் பேசிய போது எனக்கும் ஆச்சரிய மாகத்தான் இருந்தது. அக்கதை வெளி வந்த காலப் பகுதி, வெளிவந்த பத்திரிகை பற்றி அவருக்குச் சரியான தெளிவு இல்லாதிருந்த போதும் அக்கதை முழுவதையும் சபைக்கு ஒப்புவித்து ஒரு குறுந் திரைப் படத்துக்கு மிகவும் பொருத்தமான கதை என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. முதன் முதலில் அக்கதையைப் படித்த போது அது தன்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்றும் இன்றும் அக்கதையைத் தன்னால் மறக்க முடியவில்லையென்றும் கூடச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கதையின் தலைப்பும் படைப்பாளியின் பெயரும் அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போன்று அவருக்கு ஞாபக மறதி இல்லை என்பதற்காகவும் சக இலக்கியப் படைப்பாளி யின் திறமையை இருட்டடிப்புக் குணம் இன்றிப் பகிரங்கமாகப் பாராட்டிய அவரது பண்புக்காகவும் அவருக்கு நான் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும். நான் கதையைத் தேடிப் படிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

 கைக்கெட்டும் தூரத்தில் இருந்த படைப்பாளியுடன் தொடர்பு கொண்டு பிரதியைத் தேடிக் கண்டு பிடித்து எடுப்பதற்குள் மூன்று மாதங்கள் சென்று விட்டன. கதையின் தலைப்பு: ‘வாப்பா வருவார்.’ வெளிவந்த பத்திரிகை ‘பாமிஸ் - மார்ச் 1988’. டெப்ளொயிட் அளவில் வெளிவந்த இந்தப் பத்திரிகை முக்கியமான சில பதிவுகளைச் செய்திருக்கிறது என்பது வரலாறு. இப்பத்திரிகையை இயக்கிவர்களுள் எம்.எம். ஸ_ஹைர், எம்.எச்.எம். ஷம்ஸ், அபுல் கலாம், கலைவாதி கலீல், ரஸீன் மாஸ்டர் ஆகியோர் முக்கியமானவர்கள். கதை பத்திரிகை யின் பத்தாம் பக்கம் முழுமையாகப் பிரசுரமாகியிருந்தது.

 “பொறு.. இண்டைக்கி வாப்பா வரட்டும்... ஒன்ட முதுகுத் தோல உரிச்சிக் காட்டுறன்...” என்ற தாயாரின் எச்சரிக்கையுடன் கதை ஆரம்பமாகிறது. அவ்வீட்டின் வறுமையை மறைமுகமாக எடுத்துச் சொல்லியபடி அடுத்த வசனம் வருகிறது. ‘கிழிந்து போன கொப்பி களை உடைந்து கிடந்த கதிரையில் வீசி விட்டு சட்டையைக் கழட்டும் போது உம்மா சொன்ன வார்த்தைகள் உதுமானின் காதுகளில் விழுந்தன.’ ஆம்! பதினொரு வயதான உதுமான்தான் இக்கதையின் பிரதான பாத்திரம். பாடசாலையில் தன் நண்பனுடன் சண்டையிட்ட மாணவன் ஒருவனுக்கு உதுமான் தலை புடைக்குமளவு எதிர்த்தாக்கு தல் நடத்தி விட்டான். செய்தி வீட்டுக்கு வந்தது. தாயார் அவனை வைதபடியே இருக்கிறாள். வாப்பா வந்தவுடன் சொல்லிக் கொடுத்து அடி வாங்கிக் கொடுப்பதாக வேறு சொல்வதால் அந்தப் பயத்தில் வாப்பாவின் வருகையை பதட்டத்துடன் எதிர்பார்த்திருக்கும் அவனது மனப்போராட்டத்தில் கதை நகர்கிறது. அந்தப் பயத்திலிருந்து தன் எண்ணத்தை மறக்க டயர் உருட்டுவதும் வேறு ஒரு இடத்தில் மாங்காய் பறிக்கப் போவதும் பாடசாலைக்குச் சென்று புறாப் பிடிக்க முயல்வதுமாக நேரத்தைக் கடத்துகிறான் உதுமான். கிழக்கு முஸ்லிம் கிராமச் சூழலில் வாழும் சிறுவன் ஒருவனின் செயற்பாடுகளோடு இணைத்துப் பின்னப்பட்டுள்ளது கதை. ஊர் ஊராக ஐஸ்பழம் விற்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வாப்பா திரும்பி வரவே இல்லை. அவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டார். வாப்பா வந்து விடுவாரோ என்ற உதுமானுடைய பயப் போராட்ட மனது வாப்பா இனி வரவே மாட்டார் என்ற நிலையில் அவர் வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உருகிக் கண்ணீர் சிந்துகிறது.

 இன்றைய நிலையில் பலநூறு சம்பவங்களோடு இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இக்கதை படைக்கப்பட்ட காலப் பகுதியில் படிப்பவர் மனதைக் கரைக்கும் கதையாக இது அமைந்து விட்டிருக்கிறது. அதனால்தான் இருபது வருடங்கள் சென்று விட்ட போதும் நண்பர் நிஸார்தீன் போன்றவர்களின் மனதில் நின்று நிலைத்திருக்கிறது. தவிர, இக்கதையை ஒரு சிறுவனின் பார்வையில் நகர்த்திச் சென்றிருப்பதானது படைப்பாளியின் கூர்ந்த கண்ணோட் டத்தை எடுத்துச் சொல்கிறது. இன்று புதிதாக வாசிப்பவருக்கும் ஒரு மனத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இனப்பிரச்சினையின் பின்னணி யில் முஸ்லிம் சமூகப் பாதிப்பினை எடுத்துச் சொல்லும் முதலாவது கதையாக இது இருக்கலாம் என்பது எனது கணிப்பு. இத்திகதிக்கு முன்னரான இவ்வாறான இனப் பிரச்சினையை மையப்படுத்திய கதைகளை யாராவது எழுதியிருந்தால் எழுதியவரோ அறிந்த வாசகர்களோ (தயவு செய்து பொய்ப் பெயர்களில் வாசகர் கடிதம் மூலம் தாக்குதல் நடத்த முனையாமல்) எனது கவனத்துக்குத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழைச்சேனை அமர்தான் இக்கதையின் ஆசிரியர். இவர், “விடுதலையின் நிகழ்வுகள்” என்றொரு சிறு தொகுதியை 1985ல் வெளியிட்டார். இனமுரண்பாடு எரியத் தொடங்கிய காலகட்டத்தில் அதுபற்றிப் பேசிய கவிதைகள் கொண்ட தனி நபரின் முதல் தொகுப் பாகவும் அநேகமாக இதுவே இருக்கக் கூடும். இவரது “நீ வரும் காலைப் பொழுது” கவிதைத் தொகுதி 2004ல் வெளிவந்தது.

 அமர் எழுதிய கதை ஒன்றுதான்| எழுதப்படாத கதைகள் ஆயிரமாயிரம் உள்ளன. வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்பாத வாப்பாக்களதும் அப்பாக்களதும் பிள்ளைகளின் கண்ணீர் அன்று முதல் இன்று வரை வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு அப்பால் தந்தையரின் முகமே அறியாமல் எப்போது வருவார் என்று காத்திருக்கும் பலநூறு பிள்ளைகள்; உள்ளனர் என்பதையும் நீங்கள் அறிவீர்களா?

***
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன்


Saturday, March 30, 2013

குயிலிசை : கௌஷிகி சக்ரபோர்த்தி

Smt. Kaushiki Chakrabarty's concert took place at Trafo (Budapest, Hungary) on 03.02.2008. as the 5th concert of the Masters of Indian Classical Music Series. Hiranmay Mitra - Harmonium ,Shahbaz Hussain - Tabla , Christian Ledoux - Tampura.
***

***
Thanks to : tothszabi

Thursday, March 28, 2013

நயீமுன்னிசா ஷேக் அரங்கம்

நெகிழ வைத்தது , மறைந்த தனது சகோதரி பற்றி 'புதியவன்’ ஷாஜஹான்   எழுதிய இந்த ஃபேஸ்புக் பதிவு. ‘எப்பேர்பட்ட பெண்மணியாக தெரிகிறார். நெஞ்சம் கனத்துவிட்டது. வேறு சொல்லவும் தெரியவில்லை’ என்றார் தாஜ். அதே உணர்வுதான் எனக்கும் இங்குள்ள தோழர்களுக்கும். - ஆபிதீன்

***

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்....

1980கள்.... நான் இடதுசாரி இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட காலம்.... முழுநேரமும் தொழிற்சங்கம், கட்சி என்று அலைந்து கொண்டிருந்த காலம்... எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டவற்றை எல்லாம் யாருக்கேனும் சொல்லிக்கொடுக்கத் தேடிய காலம்... எவரைப் பார்த்தாலும் இவரை இயக்கத்துக்குள் இழுக்க முடியுமா என்று ஆழம்விட்டுப்பார்ப்பதே பிழைப்பாக இருந்த காலம்... அப்படி இழுக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் நிறைய.

* * *

படத்தில் சிரித்துக்கொண்டே நடந்து வரும் இவர் என் சகோதரி. நான்கு சகோதரிகளும் நானுமாக ஐந்து பேர். இவர் வீட்டில் இரண்டாமவர். நான் நான்காவது ஆள்.

எட்டாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு முடித்திருந்தவர், தனித்தேர்வு எழுதி எஸ்எஸ்எல்சி முடித்தார். 1970களில் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், யூனியன் ஆபீசில் டெஸ்பாட்ச் கிளர்க் வேலையில் சேர்ந்தார். தகுதி இருந்தது என்றாலும் திமுக தலைவர் பரிந்துரையும் காரணம். அதற்கு நன்றியும் கூற வேண்டும்.

எங்கள் வீட்டில் எல்லாருக்குமே படிக்கும் ஆர்வம். படிப்பது என்றால் முக்கியமாக குமுதம், விகடன், கல்கி, தினமணி கதிர்தான். அப்புறம் நூலகப் புத்தகங்கள். வீட்டில் எல்லாருமே குண்டு பல்பின் மஞ்சள் விளக்கொளியில் சுவரொட்டி அமர்ந்து படிப்பது அன்றாடக் காட்சி. இவரும் படிப்பார். தீவிரமாகப் படிப்பார்.

முன்னேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். படிப்படியாகத் தேர்வுகள் எழுதினார், மேலே மேலே போய்க் கொண்டே இருந்தார்.

அப்பா போனார், அம்மா போனார், ஆளாளுக்கு திருமணம் செய்து கொண்டு போனார்கள். நானும் கட்சிக்குப் போனேன். கட்சி-தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே எப்போதாவது நல்ல சாப்பாட்டுக்கு ஏங்கும்போது அக்கா வீட்டுக்குச் செல்வது வழக்கம். சாப்பிட்டு முடித்து இரவு உரையாடல் துவங்கும். மைத்துனர் அமைதியாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, மயிர்பிளக்கும் வாதங்கள் நடக்கும். குடும்பத்திலிருந்து இயக்கத்துக்கு இழுக்கு முடிந்த முதல் நபர் இவர்தான்.

அப்போது அவர் இருந்த ஊரில் அரசு ஊழியர் சங்கம் கொஞ்சம் முனைப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இவருடைய ஆர்வம் அங்கே வெளிப்பட, அவர்கள் இழுத்துக்கொண்டார்கள். ஊருக்கு வரும்போது என்னிடம் கேட்பார் – “நீ இருக்கிறது அதுல, நான் இருக்கிறது இதுல.” “எதுவாக இருந்தால் என்ன, இடதுதானே” என்பேன். சங்கத்தில் தீவிரமாக இருந்தார், போராட்டங்களில் பங்கேற்றார். கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.

பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஊருக்குப் போயிருந்தபோது கலை இலக்கிய இரவு ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் மக்களோடு மக்களாக மண்ணில் போய் உட்கார்ந்து கொண்டேன். “வா, தோழர்களை அறிமுகம் செய்யறேன்” என்றார். சிலரை எனக்கு முன்னரே தெரியும். “மேடைக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க, வேண்டாம்க்கா” என்றேன். எப்படியோ தோழர்களுக்கும் தெரிந்து போயிற்று. அன்று நடைபெற இருந்த பட்டிமன்றத்தில் பேசுவதற்கு இரண்டு தரப்பிலும் ஓர் ஆள் குறைவாக இருந்தது. என்னை அழைக்க, நானும் மேடையேற வேண்டியதாயிற்று.

மனதுக்கு நிறைவாக இருந்தது. சென்னையிலும் தில்லியிலும் எத்தனையோ மேடைகளில் பேசி சலித்துப்போயிருந்தாலும் சொந்த ஊரின் முதல் மேடை அது. அதற்கு எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்தவர் என்னால் உருவாக்கப்பட்ட என் அக்கா.

டெஸ்பாட்ச் கிளர்க் காலத்திலேயே அவருக்கு ஒரு லட்சியம் இருந்தது. பிடிஓ-வுக்கான ஜீப்பில் முன் சீட்டில் உட்கார்ந்து போக வேண்டும். சும்மா பயணம் போவதல்ல, பிடிஓ ஆக....

கடைசியில், படிப்படியான பதவி உயர்வுகளோடு, ஊர்ஊராக பணி மாற்றங்களோடு முன்னேறினார். பிடிஓ ஆவதற்கான ஒரு படி ஏற வேண்டியிருந்தது. அதற்குள் எங்கள் குடும்பத்தினரைத் தேடி வருகிற சொத்து ஒன்று அவருக்கும் வந்தது. புற்று நோய்.

புற்றுநோயுடனான போராட்டம் எளிதானதல்ல. அதவும் தோற்றுப் போயே தீரும் என்று தெரிந்தும் நடத்துகிற போராட்டம் இன்னும் கடினமானது. என் குடும்பத்தில் நான்கு பேர் இப்படிப் போராடிப் பார்த்திருக்கிறார்கள். அதை அவரும் தொடர்ந்தார். நோயின் உச்ச கட்டத்திலும் போராடிக்கொண்டே பணியில் மீண்டும் சேர்ந்து பி.டி.ஓ. ஆனார். அவர் விரும்பியபடியே ஜீப்பில் பயணித்தார். சில நாட்களில் மறைந்தார்.

நேற்று முகநூலில் Nags Rajan ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். உடுமலையில் 23ஆம் தேதி நடைபெற்ற கலை இலக்கிய இரவு பற்றிய செய்தி. அதன் மேடைப் பின்னணியில் இருந்த படத்தில் இருந்தது ஒரு பெயர் – நயீமுன்னிசா ஷேக் அரங்கம்.

நன்றி தோழர்களே. நீங்கள் இந்தப் பெயரைப் போடாமல் இருந்திருந்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனாலும் நினைவு வைத்திருக்கிறீர்கள்.

பார்வையாளர்கள் பலருக்கு அது வெறும் பெயராக இருக்கலாம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு அது நினைவின் வெளிப்பாடாக இருக்கலாம். பார்க்க நேர்ந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம்.

எனக்கோ.........

***


நன்றி : ஷாஜஹான் | http://www.facebook.com/shahjahanr

Wednesday, March 27, 2013

நாகூர் ருமியின் 'தூரம்'

விக்கிப்பீடியாவில் நண்பர் நாகூர் ரூமி.
கப்பலுக்குப் போன மச்சான் (ஜெஸிலாவின் வாசிப்பனுபவம் . இதில்,
"தூரம்" படிச்சிருக்கீங்களா? - ramachandranusha கமெண்ட்.
2004-ல் 'பதிவுகள்’ இதழில் வந்த 'தூரம்...’ மீண்டும் 2011-ல் ஒருங்குறியில் அங்கே.
இப்போ இங்கேயும் மீள்பதிவாக - நம்ம ஹனீபாக்காவுக்காக!
எல்லாம் ஒரு நெருக்கம்தான் :-)

***

தூரம்

நாகூர் ருமி

மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அடி வயிற்றில் திடீரென்று ஒரு இடி.  ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.

"அம்மா" என்று அவனையறியாமல் கீழே உட்கார்ந்துவிட்டான். அப்பென் டிசைடிஸாக இருக்குமோ? உள்ளேயே வெடித்துவிட்டதோ? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறிய உணர்வுதான் இருந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு வலி அவனுக்கு வந்ததேயில்லை. வேற்று கிரகத்து வேதனயாகத் தெரிந்தது அது.

அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குழாயை பாதி மாட்டிய காலுடன் தரையில் உட்கார்ந்து விட்டான்.

அவன் போட்ட 'அம்மா' ரொம்ப புதுசாகவும் சற்று ராட்சசத்தனமாகவும் இருந்ததை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட பார்வதி

சமையல் கட்டிலிருந்து ஓடோடி வந்தாள்.

"என்னங்க? என்னாச்சு?" பதறினாள். எப்போதும் போல. அப்படி தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் உட்கார்ந்து அவளும் பார்த்ததில்லை. கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.

"சனியனே என்னன்னு தெரியலடி. நீ வேறெ உயிரெ வாங்காதெ" அவன் வழக்கம்போல பதில் சொன்னான். வயிற்றுப் பகுதியைப் பிடித்துக்கொண்டே. அப்போதுதான் அவள் கவனித்தாள்.

அடிவயிற்றுப் பகுதியில் 'அந்த' இடத்தில் லுங்கி பூராவும் ரத்தக்கறையாக இருந்தது.

எய்ட்ஸ் வந்த புள்ளிராஜாவாக தன் கணவன் மாறிவிட்டானா என்ற சந்தேகத்துடன், "என்னங்க, இது என்னங்க?" என்று அவன் கவனத்தை அந்தப்பகுதிக்குத் திருப்பினாள்.

"எங்கெயாவது அடி பட்டுச்சா?"

அப்போதுதான் அவனும் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"சனியனெ, தெரியலெ. நீ வேறெ. அடிபட்டுச்சா கிடிபட்டுச்சான்னு.
அதெல்லாம் ஒன்னுமில்ல. இது என்னன்னு பாரு"

அவள் அவனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று பார்த்தாள்.
அதுதான்.

வெள்ளை வெள்ளையாக, திப்பி திப்பியாக, ரத்தக் கட்டிகளுடன் இருந்தது. உறுதியாகிவிட்டது. இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. வியப்பும் மௌனமும் இருவர் கண்களிலும் முகத்திலும் வந்து குடியேறிக்கொண்டன. சிவநேசனுக்கு வியர்த்துக் கொட்டியது.

ஆள்மாறாட்டம் மாதிரி பால் மாறாட்டமா? பம்பாய்க்குப் போகாமல், ஊசி ஏதும் போடாமல், அறுவை ஏதும் செய்யாமல் என்ன இது? இது உண்மைதானா என்று சந்தேகமாக இருந்தது. இது சாத்தியமா?! பரமஹம்சரைத்தான் கேட்க வேண்டும். அவரும் இப்போது இல்லை. ஒரே குருதியாகவும் குழப்பமாகவும் குத்தலாகவும் இருந்தது.

பார்வதி அறையைச் சாத்தி வைத்தாள். பிள்ளைகள் பார்க்காதவாறு செய்தாள். என்றுமில்லாமல் திடீரென்று அப்பா ஆபீஸ¤க்குப் போகாமல் 'உட்கார்ந்து'விட்டதன் ரகசியம் புரியாமல் வளர்ந்த பிள்ளைகள் குழம்பினர்.

"மெடிகல் லீவு சொல்லிடவாங்க?" மெதுவாகக் கேட்டாள்.

"என்ன எழவு லீவாவது சந்தானத்துக்கு ·போன் பண்ணி சொல்லிடு"

தற்காலிகமாக ஒரு துணியைக் கொடுத்து வைக்கச் சொல்லியிருந்தாள். பாட்டி வைத்தியம். அவனும் வேறுவழியின்றி அவள் தொலைபேசச் சென்ற இடைவெளியில் அதை வைத்துக்கொண்டான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. சனியன், இதை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பார்வதி வந்து பார்த்துவிட்டு ஒழுங்காக வைத்துவிட்டாள்.

ரொம்ப களைப்பாக வந்தது. கால்களெல்லாம் வலியெடுத்தன. யாரோ அடித்துப் போட்டமாதிரி இருந்தது. அனிச்சையாக தன் கால்களைத் தானே பிடித்து விட்டுக்கொண்டான். மஸாஜ் செய்வது மாதிரி. அப்போது அவனுக்கு பார்வதியின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான் அந்த ஏழு நாட்களும் செய்து கொண்டிருப்பாள்.

"சனியனே எப்பப்பாரு ஒரே மஸாஜ்தானா? ஊர் ஒலஹத்துல யாருக்கும் வர்றதில்லையா? போய் காப்பியெப் போடு"

பார்வதி ஒன்றும் சொல்வதில்லை.

திடீரென்று மறுபடியும் இடி இடித்தது.

"அம்மா" என்று மறுபடியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் புரண்டான். முடியவில்லை. வலி உயிர் போய்விடும் போலிருந்தது. பார்வதி மறுபடி வந்தபோதும் அவன் புரண்டு கொண்டிருந்தான். ஆனால் அவள் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள்கொண்டுவந்திருந்தாள்.

"அம்மா வலிக்கிதே" மறுபடி கத்தினான். விட்டு விட்டு வலித்தது.

"இதெப் போட்டுக்குங்க. கொஞ்ச நேரத்துல வலி கொறையும்" என்று சொல்லி ஒரு அனுபவமிக்க கைனகாலஜிஸ்ட்டின் தோரணையில் ஒரு காப்ஸ¥லையும் தண்ணீர் டம்ளரையும் கொடுத்தாள்.

ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான். அந்த நாட்களில் பார்வதியின் வேதனையைக் குறைப்பதற்காக டாக்டர் வசந்தா 'ப்ரிஸ்க்ரைப்' பண்ணிய ஸ்பாஸ்மோ ப்ராக்ஸிவான் காப்ஸ்யூல்தான். சிவப்பு காப்ஸ்யூல். அதுவும் சிவப்பாகத்தானா இருக்க வேண்டும்? ஒன்றும் சொல்லாமல் போட்டுக் கொண்டான். எத்தனையோ முறை அவள் சொல்லிவிட்டும் அவன் வாங்க மறந்துபோகும் காப்ஸ்யூல்.

மறுநாளும் ஆபீஸ¤க்குப் போகமுடியவில்லை. வேதனை அதிகரித்திருந்தது. ரத்தப் போக்கும் அதிகமாக இருந்தது. அதோடு சில நிமிஷங்கள் இருந்தது வலி இப்போது சில மணி நேரங்கள் என மாறிவிட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் தான் பார்வதியாகவும் பார்வதி மீசையுடன் கூடிய தானாகவும் மாறப்போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஒருவகையான ஆச்சரியமும் எதிர்பார்ப்பும்கூட அவனிடம் வளர ஆரம்பித்தது.

மூன்றாவது நாள் அவனுக்கு ஓரளவு பழகிப் போயிருந்தது. அந்த மாத்திரை வேலை செய்யத்தான் செய்தது. வலி குறைந்த மாதிரி இருந்தது. ஐந்தாம் நாள்தான் ரத்தப்போக்கு குறைந்தது இடியுடன் கூடிய மழை விட்டு தூரல் ஆரம்பித்திருந்தது.

அடிக்கடி யாருமில்லாதபோது லுங்கியை உயர்த்திப் பார்த்துக்கொண்டான். எல்லாம் எப்போதும்போல சரியாகத்தான் இருந்தது.

மழையையும் அடிவயிற்று இடியையும் தவிர. அது ஒன்றுதான் புதுசு. அவனுக்கு ஆச்சரியம் கூடியது. சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என்று ஆறாம் நாள் குளிர் விட்டுப் போனது.

இதில் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. இது தொடருமா?  அப்படித் தொடர்ந்தால் அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. எப்படி இதைத்தீர்ப்பது? டாக்டரிடம் காண்பிப்பதா? அதன் பிறகு தொலைக்காட்சிகள், தினசரிகள், வாராந்தரிகளில் ·போட்டோவுடன் கட்டுரை வரும். இந்தியாடுடே தமிழின் அட்டைப்படத்தை அலங்கரிக்க வேண்டிவரும். "ஒன்பதாகிப்போன உலகின் எட்டாவது அதிசயம்" என்று தலைப்பு போடுவார்கள். அதன் பிறகு நிலைமை என்னவாகும்?

எப்படி ஆபீஸ் போவது? ஆபீஸை விடு. எப்படி வெளியில் போவது? எப்படி குழந்தைகளை சந்திப்பது தினமும்? சொந்தக்காரர்களை? நண்பர்களை?

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வாழ்க்கையைத் தொடர முடியாது என்பது புரிந்தது. ஒரு வாரம் கழித்தும் மழை தொடர்ந்தால் அல்லது அடுத்த மாதமும் இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். தற்கொலை செய்துகொள்வதுதான் வழி என்பதாகத் தோன்றியது.
"என்ன சனியன் இது?" என்று தன்மீதே ஒரு வெறுப்பு தோன்றியது சிவநேசனுக்கு. அந்த 'சனியன்' அவனோடு கூடப்பிறந்த செல்லச் சனியன். அவனை எப்போதுமே அது விட்டுப்பிரிவதில்லை.
எல்லாக் கேள்விகளையும் அழிப்பதாக எட்டாவது நாள் இருந்தது. மழை சுத்தமாக நின்று நிலம் குளிர்ந்து போனது. குளித்துவிட்டு அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன்னையே பரிசோதித்துப் பார்த்துக் கொண்டான். மறுபடியும் சுத்தமான ஆண்பிள்ளையாகிவிட்டதாகத்தான் தோன்றியது. 'அந்த ஏழு நாட்க'ளுக்கான எந்த அடையாளமும் இல்லை. சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. வழக்கம் போல ஆபீஸ¤க்குக் கிளம்பினான். வருவது வரட்டும். ஆனால் தொடர்ந்து வந்த நாட்கள் அவன் பயம் தேவையற்றது என்பதை அவனுக்குப் புரியவைத்தது.

பார்வதி அவனுக்குக் காபி கொடுக்கும்போதுதான் கவனித்தான்.

"ஒடம்பு சரியில்லாயா பாரா?"

பார்வதியின் புருவங்கள் அகன்று மேல் நோக்கி வளைந்தன. அவன் 'பாரா'ன்னு அவளை அழைத்து எத்தனை வருஷங்களாகிவிட்டது! கல்யாணமான புதிதில் அழைத்தது! மறுபடியும் அதே கரிசனம், அதே தொனியுடன் பாரா!

"என்ன பாரா, பதிலையே காணோம்?"

"ஆமாங்க. இன்னிக்கிதான்..." சந்தோஷத்தால் அவளால் தொடர்ந்து சொல்லி முடிக்கக்கூட முடியவில்லை.

"ரெஸ்ட் எடுத்துக்க. ஒன்னும் சமைக்க வேணாம். நா வரும்போது ஒனக்கு ஸ்பாஸ்மோ வாங்கி வந்துர்றேன்"

அவள் கன்னத்தை தடவிவிட்டு கெஞ்சுவது போலச் சொல்லிவிட்டுப் போனான்.

***
நன்றி : நாகூர் ரூமி, பதிவுகள்

Monday, March 25, 2013

இன்னும் மனிதனாக இருப்பதனால்.... - வேதாந்தி

தவிர்க்கவே இயலாத இஸ்லாமிய இலக்கிய ஆளுமையான நாகூர் ரூமியை மறந்துவிட்டு "தமிழ்ச் சிறுகதை - முஸ்லிம்களின் பங்களிப்பு" பற்றி எழுதிய ஹனீபாக்காவின் சிறுகுறிப்பை படியுங்கள் முதலில். பிறகு வேதாந்தியின் கதையை வாசிக்கலாம்.  அந்தக் குறிப்பைப் படித்தவுடன் எனக்கு உருப் (பி.சி. குட்டி கிருஷ்ணன்) எழுதிய உம்மாச்சு நாவலில் வரும் சின்ன வாக்கு வாதம்தான் நினைவுக்கு வந்தது (நன்றி : சென்ஷி) . "பெரும்படப்பிலிருக்கிற பள்ளிவாசல், குண்டோட்டியிலிருக்கிற பள்ளிவாசலைவிட ஒசந்தது’ என்று பீரான் சொல்வான்.  எப்படி? ”அதோடே கும்பம் தங்கக்கட்டியாக்கும்! அதோடே உச்சுக்கு ஏறி நின்னு பாத்தா மக்காவும் மதீனாவும் தெரியும்!” ”சரியான டாவு!” என்று சொல்லி மாயன் மடக்குவான் இப்படி : “ குண்டோட்டி பள்ளிவாசல் உச்சிக்கு ஏறினா சொர்க்கத்துக்கே போகலாம்! ஒரு முழ உயரத்திலே எட்டிப்பாத்தாக்கூட சொர்க்கத்திலே தேவதைங்க நடமாடறதைப் பார்க்கலாம்”
 
அது மாதிரியல்லவா இருக்கிறது! - ஆபிதீன்

***


இன்னும் மனிதனாக இருப்பதனால்.... 



 
வேதாந்தி (எம்.எஸ். சேகு இஸ்ஸதீன்)

நான் ரொட்டியைச் சாப்பிட்டுக் கொண்டு தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தேன். எனக்குத் தள்ளி அருகில் வந்து ஒரு காகம் அமர்ந்தது. நான் சாப்பிடுவதை அது ஏக்கமாகப் பார்த்தது. காகங்களிற்கு லட்சணமான ஜாக்கிரதை உணர்வு அதனிடம் அபரிமிதமாகவே தென்பட்டது. தன் உயிரிற்குப் பெறுமதி இல்லையென்பதை விட ஒரு முறை தன்னை விட்டு அகன்றால் திரும்பவும் அந்த உயிர் உடலில் புகுந்து கொள்ளாது என்பதை அறிந்து கொண்டது போல அது தன் நிலையில் மிக எச்சரிக்கையாகவும், சுற்றாடலில் மிக விழிப்புள்ளதாகவும் நின்று கொண்டிருந்தது. இருந்தும் அதன் கண்களில் ஏனோ ஒருவித ஏக்கம் மிக விசாலமாக வியாபித்திருந்தது. அது ஒரு மெலிந்த காகம். எல்லாக் காங்களும் எங்கெல்லாமோ அவசரமாய்த் தத்தம் குடலை நிரப்ப உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கையில் இது மட்டும் வெகு சாதாரணமாக ரொட்டியைத் தின்று கொண்டிருந்த என் தனிமையைப் பயன்படுத்தும் நோக்கில் ஏங்கி பார்த்துக் கொண்டிருந்தது.
 
நான் உண்மையில் அந்தக் காகத்திற்காகப் பரிதாபப்பட்டேன். சகல காகங்களாலும் புறக்கணிக்கப்பட்டதாய் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைக் காகத்தில் இயற்கையாகவே என் இரக்கம் விழுந்தது. தனித்து விட்டவற்றின் துணைக்குத் தனித்துவிட்டவைதான் பொருந்த வேண்டும். எனவே, நான் அக்காகத்தின் துணைக்குத் தயாரானேன். என் கையில் எஞ்சியிருந்த அரைவாசிக்கும் அதிகமான மீதி ரொட்டியை அக்காகத்தோடு அக்காகத்திற்காகப் பகிர்ந்து கொள்வதாய்ச் சங்கற்பித்துக் கொண்டேன். என் நிலையைப் புரிந்து கொண்டு என்னோடு சகஜமாக பயமற்றுப் பழக வேண்டுமென்று அக்காகத்தை நான் விரும்பினேன்.
 
ரொட்டியில் ஒரு துண்டை எடுத்து சற்று அஜாக்கிரதையாகவே எறிந்தேன். அந்தத் துண்டு ரொட்டி எனக்கும் அந்தக் காகத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை இரண்டாக ஆனால் அதற்குப் பாதகமாகப் பிரித்துக் கொண்டு விழுந்தது. அந்தக் காகம் அந்த ரொட்டியை எடுக்கப் பயப்பட்டது தெரிந்தது. எனக்குத் தர்ம சங்கடமாய்ப் போய்விட்டது. எறியப்பட்ட துண்டு ரொட்டியை முதலில் அது தின்ன வேண்டுமென்பது என் விருப்பம். மற்றக்காகங்களைப் போல் தெத்தித் தெத்தி ஜாக்கிரதையாக வந்து அதைக் கௌவிக் கொண்டோடி தூரத்தே நின்று தின்ன வேண்டுமென நான் நியாயமாகவே பிரியப்பட்டேன். ஆனால் அது அப்படிச் செய்யவில்லை. என் அசைந்து கொண்டிருந்த வாயையும் கையையும் எச்சரிக்கையோடு கவனித்துக் கொண்டிருந்தது. என் உடலில் அசைவிருக்கும் வரை அது என்னையே இமைக்காது பார்த்துக் கொண்டு நிற்கும் போல் தெரிந்தது. நான் இறந்து விட்ட பின்னர்தான் அது ரொட்டித் துண்டை எடுத்துச் சாப்பிடக் காத்திருக்கிறதா? எனக்குக் கோபத்தின் தொனி இதய அடிப்பில் எழுந்தது. இருந்தும் அக்காகத்திற்கு உதவி செய்ய நான் உடலில் எந்த அசைவுமற்றவனாய் என்னை ஆக்கிக் கொண்டு பாசாங்கிற்காய் சுவரில் சாய்ந்தபடியே இறந்து விட்டவனாய் நின்றேன்.
 
'படபட'வென்ற சிறகுச் சப்தம் திடீரென எழுந்து அடங்கிய பின்னர் கண்களை விழித்துப் பார்த்தேன். அந்த ரொட்டித் துண்டு காகத்தின் வாயிலிருப்பது தெரிந்தது. என்னுள் சந்தோஷ நரம்புகள் சிலுப்பி விட்டுக் கொள்ளச் சற்று முன்னர் வேறு ஒரு காகம் நிற்பது தெரிந்தது. நான் அடையாளம் கண்டு கொண்டேன். அதுதான் தன் புதுமாதிரியான ஏக்க நிலையால் என் பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொண்ட அந்த மெலிந்த காகம். ஆனால் அதன் வாயில் ரொட்டி இருக்கவில்லை. சும்மாதான் எதனையோ பறிகொடுத்த அதே பார்வை பரம்ப நின்று கொண்டிருந்தது. ஆகவே ரொட்டித் துண்டை எடுத்தது புதுக்காகம். என் இரங்கலைப் பெற்றுவிட்ட காகத்தில் எனக்கு எரிச்சலும் பாவமும் எழுந்தன. 'அசட்டுக் காகம்' என்று சொல்லிக் கொண்டேன். புதுக்காகம் அந்த ரொட்டித் துண்டை தின்று முடிக்கு முன் நான் அவசரப்பட்டு இரண்டாம் துண்டையும் உடைத்து இந்த முறை கொஞ்சம் கவனமாகவே என் காகத்தின் அருகேயே விழுமாறு போட்டேன். ரொட்டித் துண்டு பூமியில் விழுமுன் 'டப்'பென்று அதனைச் சொண்டுகளில் முதற் துண்டு விழுந்து விடாமலேயே இரண்டாம் காகம் பிடித்துக் கொண்டது. என் காகத்தின் இயலாமையில் எனக்கு அதிருப்தியும் மற்றக் காகத்தின் சாமர்த்தியத்தில் வியப்பும் ஏற்பட்டது. அதன் சாமர்த்தியத்தை நான் மெச்சிக் கொள்ளவில்லை. பேராசைக்காரர்களின் வெற்றியை ரசிக்கவோ திருடர்களின் திறமையைத் தட்டிக் கொடுக்கவோ என்னால் முடியக்கூடாது என்று நான் விரும்பினேன். அவர்களை அதற்காகச் சபித்தேன்.
 
நான் என் காகத்தின் அசட்டுத் தனத்தில் மனம் கசிந்தேன். அதன் நிராயுத நிலைக்கு இளகினேன். எதேச்சையான ஒரு சிறு காரணத்திற்காக எனக்கு அந்தக் காகத்தில் ஏற்பட்ட பிடிப்பைப் போலவே, அதன் சோர்ந்த நிலைக்கு வருத்தப்படும் என் மனோ நிலையும் எனக்கு விசித்திரமாகத்தான் இருந்தது. பிடிப்பும் வெறுப்பும் இப்படி எதேச்சையானவைதான். பிடிப்பிற்கும், வெறுப்பிற்கும் அதாவது எதேச்சையான உணர்வுகளின் நிலைப்பிற்காக மனிதனிடம் எவ்வளவு கசப்பு; எத்தனை போராட்டங்கள்; எப்படி ரகளைகள். எனக்கும், என்னினத்திற்கும் நானே ஒரு சிறிய அளவில் ஒரு பெரிய உதாரணமாக எனக்குள் நிற்கிறேன்.
 
மூன்றாம் காகமொன்று இங்கு நோக்கி வந்து கொண்டிருப்பதை நான் தற்செயலாகக் காண நேரிட்டது. நான் என் காகத்திற்காய் என்னை மேலும் அலட்டிக் கொண்டு உசாரானேன். அவசர அவசரமாய் மூன்றாம் துண்டை உடைத்து இரண்டாம் காகத்திற்கு ரொட்டியை வேறு ஒரு திசையில் எறிவதாய்ப் போக்குக் காட்டி அதை ஏமாற்றி வேறு ஒரு இடத்திற்கு நகர்த்தி விட்டு உடனே என் காகத்தின் அருகில் அதனைப் போட்டேன். இந்த முறை அந்தத் துண்டு என் காகத்தின் காலடிக்கு அருகிலேயே விழுந்தது. அது விளைவுகளை யோசித்துக் கொண்டு நிற்பதாய் சற்று நேரம் நிதானித்து விட்டு என் அசைவுகளைப் படிக்க சாவகாசமாய் ஒரு முறை என்னையும் பார்த்து விட்டு அதன் பின்னர் அந்தத் துண்டு ரொட்டியைக் கௌவ முயன்றது. அதற்குள் எப்படியோ இரண்டாம் காகம் முந்திக் கொத்திக் கொண்டு மிக அலட்டிக் கொள்ளாமல் என்னைப் பார்த்தது. அதற்கு, நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் அனைத்தும் மெலிந்த காகத்தின் மேல் எனக்கு அன்பும் ஈடுபாடும் என்பவை காரணமாக என்று புரிந்து விட்டது போலிருந்தது. நிலைமை இப்படி ஒரு புதுக்கோணத்தில் ஏற்படுவதும் உண்டு. நமது அன்பிற்குப் பாத்திரமானவர்கள் தாம் இன்னாரின் அன்பிற்குப் பாத்திரமாகி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளு முன்னர், அவர்களுக்கு வேண்டாத நமக்கும் ஆகாதவர்கள் அதனை மிக இலகுவாக அறிந்து கொள்வதைப் போல.
 
அதன் பார்வையில் பொதிந்திருந்த அனர்த்தக் கேலியும், அலட்சியமிடுக்கும் எனக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்தின. அதனளவில் நான் தோற்றவன் என்று அது கருதி என்னை அவமதிப்பில் பார்த்ததில் எனக்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அதன் பேராசை பிடித்த மனோவலிமையை நான் மனமார வெறுத்தேன். அந்தக் கொழுத்த காகம் நாசமாய்ப் போகச் சபித்தேன். என் காகம் போன்றவையாக இப்படியான தன் நலக் காகங்களோ காரணமென்பதில் நான் இப்படியான காகங்கள், இவை போன்றவை அனைத்தையும் ஒரே மூச்சில் மிக வலுவற்றனவாய் ஆக்கிவிடும் தத்துவம் நம்மிடம் இல்லாமற் போயிற்றேன என ஏங்கினேன். அந்தப் பேராசைக் காகம் மிக நிதானமாய்ப் பக்கத்திலிருந்த 'நறிவிலி'யில் ஏறிச்சுகமாகக் குந்திக் கொண்டு ரொட்டித் துண்டுகளைக் காலுக்கடியில் லாவகமாகப் பிடித்துக் கொண்டு வித்தியாசமாய் இருமுறை கரைந்துவிட்டு ரொட்டியைச் சுவைக்கத் தொடங்கிற்று.
 
இதற்குள், காகங்களாய் பதினைந்து இருபதும், இரு கோழிகளும் கூடி விட்டன. இதுதான் அந்தப் பேராசைக் காகத்தின் 'குறி' போலும். என் காகத்தைத் தனிமையில் விட விரும்பாததிலும், தன்னால் இனி மேலதிகமாக ஒன்றையும் பெற முடியாது என்பதிலும் அது கரைந்து மற்றக் காகங்களைக் கூட்டி விட்டது. 'காக்கை கரவா கரந்துண்ணும்' என்பது இதுதானா? இருக்க முடியாது. தன் நலிந்த சகோதரக் காகத்திற்கு ஒரு துண்டையும் விடாமல் தானே பறித்துக் கொண்ட அந்தக் காகமா கரந்துண்ண நினைக்கும். என் காகத்தில் பொறாமை கொண்டுதான் அது அப்படிச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சாப்பிட நிற்கும் பொழுதே மற்றக் காகங்களையும் அழைக்கக் கரைந்திருக்கலாமே. மட்டுமல்லாமல் காகம் உணவைக் கண்டால் கரைவது தனியாக அகப்பட்டுக் கொள்வோமோ என்ற பயத்தில்தானேயொழிய ஒன்றும் பெரிய காகத் தன்மையினாலல்ல. இனி இப்படித்தான் நான் நம்புவேன். பழமொழி பழையது என்பதற்காக ஏற்றுக் கொள்ள நான் தயாரில்லை. புதுமொழியும் உண்மையற்றிருந்தால் ஏற்றுக் கொள்ள நான் எப்படித் தயாரில்லையோ அது போல.

கடைசி வரையில் என் காகத்தை ஒரு துண்டு ரொட்டியாவது பெற வைப்பது எனத் தீர்மானித்து நான் தின்பதை முற்றாக நிறுத்திக் கொண்டேன். பலவகைகளில் முயன்று அதிகமான துண்டுகளை என் காகத்திற்கு அருகில் விழ எறிந்தேன். அது ஒரு சிறு முயற்சி செய்திருந்தாலாவது பல துண்டுகளைப் பெற்றிருக்கும். ஆனால் அதுவோ எல்லாக் காகங்கட்கும் மிகப் பின்னால் நின்று கொண்டிருந்ததாலும் அதன் உதவிக்கும் துணைக்கும் வந்த என்னை தன் உயிரைக் குடிக்கப் போகும் எமனாக அறிந்து கொண்டது போலவும், தன் பசியை ஒரு துண்டு ரொட்டியிலாவது போக்கி விட வேண்டுமென்று ஆசை கொண்டது போலவும் நின்றிருந்தது. அதற்கு மட்டும் ஏன் அவ்வளவு பயமென்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நான் பரிவு காட்டியதுதான் அது பயரக் காரணமோ. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அதன் ஆத்மா உள்ளூர அதற்கு ஏதாவது எச்சரிக்கை விடுத்திருக்குமோ? ஆம், இல்லையென்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை.
 
என் கையிலிருந்த ரொட்டி சிறிதாகிச் சிறிதானதைக் கண்டு என் மனம் சஞ்சலப்பட்டது. எங்கே, என் காகத்திற்கு ஒரு துண்டு ரொட்டியாவது கிடைக்காமற் போய் விடுமோ எனப் பயந்து வேதனைப்பட்டது. இருந்தாலும் அதற்கு உதவும் முயற்சியையும் நம்பிக்கையையும் நான் என்னுள் தளரவிடவில்லை. கடைசித் துண்டு ரொட்டி கையில் எஞ்சியதும் அதனையும் என் காகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். இந்தத் துண்டு ரொட்டியாவது அதன் வாயுள் இறங்கி, வயிற்றுள் சீரணமாக ஏலவே விதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நான் மிகவும் விரும்பினேன். ஒரு திட்டத்துடன் சில கணங்கள் காத்திருந்தேன். இதற்குள் அதிகமாக எல்லாக் காகங்களும் போய் விட்டிருந்தன. சற்றுப் பின்னர் என் காகம் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தது. நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்பட வைக்க கடைசித் துண்டு ரொட்டியை அக்காகத்தருகே போட்டேன். ரொட்டித் துண்டை 'சடக்'கென்று கௌவுவதை விட்டு அது என்னை மிகச் சோர்ந்து நொந்து போய்ப் பார்த்தது. பின்னர் அதன் கண்களில் ஒரு கனிவு தெரிந்தது. நன்றியுணர்விற்குரிய கனிவாய் அது இருக்கலாம். ஆனால் நான் அது அப்படிப் பார்த்து நேரத்தைக் கடத்துவதை விரும்பவில்லை. அது ஒரேயடியாய் அந்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்டுவிட வேண்டுமென மிக ஆவலானேன்.
 
இதயபூர்வமாக விரும்பி மனமார முயன்றால் நமது முயற்சி நிரப்பமாகாது விடுவதில்லை என்பார்கள். நான் இதயபூர்வமாக விரும்பி மனமார முயன்றதற்காகவோ என்னவோ அது நிறைவேறவில்லை. 'லபக்'கென்று வேறொரு காகம் அந்தத் துண்டையும் எடுத்துக் கொண்டு பறந்தது. எனது மனம் இடிந்து குமைந்தது. அதனில் இரக்கப்பட்டதற்காகவே என் மன நிலையைச் சங்கடப்படுத்தி விட்ட என் காகத்தில் எனக்கு சொல்லொணா எரிச்சல் ஏற்பட்டது. என் முயற்சிகளும் பாடுகளும் விரயமானதில் அக்காகத்தில் எனக்கிருந்த இரக்க உணர்வு வேர் பெயர நீக்கப்பட கோபமே மிகப் பெரிதாய் உருவாகி உச்ச நிலையை அடைந்தது. அதிருப்தி விஷமாய்ப் பரந்தது. இப்படியான பலஹீனக்காகம் வாழ்வதற்கு லாயக்கற்றது என்றே எனக்குப் பட்டது. அது இந்த உலகத்தின் இம்சைக்கு ஈடுகொடுத்து வாழத் தகுதியற்றிருப்பதாய் நான் முடிவெடுத்தேன். என் பரிதாபம் அதன் மேல் விழாதிருந்திருக்குமானால் அதனை அதன் போக்கில் அனுமதித்திருப்பேனென்பது எனக்குத் தெரியும். இப்பொழுது என் நிலை அதுவல்ல. எனவே நான் கசந்ததில் வெகுண்டேன். உள்ளே போய் ஒரு துண்டுத் தடியை எடுத்துக் கொண்டு வந்து அதைப் பின்னால் மறைத்தபடி நின்றிருந்தேன். காகம் சற்று சற்றாய் அயர்வது தெரிந்தது.
 
நான் இனி அதை நோக்கி எறியலாம். திடீரென மனம் பிடித் தளர்த்தியது. இதயம் எதையோ எச்சரித்தது. வழக்கத்திற்கு விரோதமாக என் குறி தவறி எறியப்படும் காகத்திலேயே பட்டுவிட்டால்... 'சவம்'. அழிந்து தொலையட்டும்! என்று வாயாரச் சொல்லிக் கொண்டேன். ஆனால் மனம் மட்டும் அப்படி நடந்து விடக்கூடாதென்று பிரார்த்தித்தது. ஆனால் நான் எறிந்து தானாவது என்று தீர்த்துக் கொண்டேன். எறிவது பட்டாலும் படாவிட்டாலும் 'எறிதல்' நிகழ்ந்து தானாக வேண்டும். எறிபடுவது என் கையிலில்லை. எறிவது என் கையில். எறிந்தால்தான் அந்த மெலிந்த காகத்திற்காய் என்னுள் வளர்ந்திருக்கும் கோபம் சற்றாவது தணியும். என் உணர்வுகளை என்னுள் அடைத்துப் பாதுகாக்க என்னால் முடியாது. முழுப் பூசணிக்காயை ஓர் அகப்பைச் சோற்றில் மறைப்பது போல அல்ல இது. நெருப்புப் பொறியைப் பஞ்சின் பக்கத்தில் சேர்த்து வைப்பது போல. என் உணர்வுகள் வெளிப்பட்டு எந்த ஒரு வடிவையாவது பெற்று என்னை விட்டு அகல நான் நிச்சயம் எனக்கு உதவி செய்து தானாக வேண்டும். அவற்றை நிர்த்தாட்சண்யமாக எந்த ஒரு போலிக் காரணத்திற்கும் மறுத்து விடுவதில் என் மனத்தைக் குப்பை கூளங்களின் மடுவாக என்னால் ஆக்க முடியாது. எனவே, நான் எங்காவது அந்தத் தடியை எறிந்து என் உணர்வை ஒரு வழியில் கைகொடுத்து உதவ வேண்டும். அரசியல் எதிரியை அவமதிப்பதற்கு அவனுக்குக் கொடும்பாவி கட்டிச் சித்திரவதை செய்வது போல. உடலளவில் தொடர்பு கொள்ள முடியாமற் போகும் ஓர் இயலாமைக்காக மனத்தளவில் வேண்டியவரோடு சல்லாபம் புரிந்து மன இச்சைக்கு உதவி செய்வது போல. மனிதனில் பாசம் வைக்க மனமில்லாத போது பிராணிகள் வளர்த்து அநுசரிப்பது போல.

நான் மிகவும் நிதானித்து என் காகம் பறப்பதற்கு அவகாசம் கொடுக்குமளவில் நின்று தடியை வீசினேன். மனத்தின் எங்கோ ஒரு சதுக்கமான மூலையில் ஆரவாரமின்றி உதித்த என் எதிர்பார்ப்புதான் நடந்தது. தலையிலடிபட்டுக் காகம் கிறுகிறுத்து விழுந்தது. எனது இருதயம் வெளியேற்றிய வியாகுலப் பெருமூச்சில் காகத்திற்கு அடிபடுவதை நான் கொஞ்சமும் விரும்பியிருக்கவில்லையென்றே தோணிற்று. என் கண்களில் நீர் கசிந்தது. விசித்து அழ எனக்கு வராது. விக்கலையும் விழுங்கி என் அழுகையையும் என்னுள்ளேயே ஆக்குவதுதான் எனக்குப் பழக்கம். ஏனோ நான் அழுதேன். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த காகத்தைக் கொண்டு வந்து கோப்பையிலிருந்த தண்ணீரை அதில் தெளித்து மூடுவதற்கு ஏதும் அகப்படாததில் நானே நின்று என் சீலையால் மூடினேன். இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிச் செய்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். அதனால் தான் நான் இயல்பூக்கத்தால் தொழிற்படுவது போல சற்றும் யோசியாமல் தொழிற்பட்டேன். அதிலுள்ள உண்மைகள் என்னவென்று உண்மையில் எனக்குத் தெரியாவிட்டாலும் அதில் உண்மைகளே இல்லை என்று சொல்ல எனக்குத் தெம்புதர வேறு மாறான உண்மைகள் என்னிடமில்லை. தன் வருத்தம் சுகமானால் சரி என்பதற்காக எந்த விதமான அர்த்தங்களுமற்ற மூட நம்பிக்கைகளையும் விசுவாசிக்கும் ஒரு சராசரி மனிதனாய் நானும் என் பரிதாபத்தைப் பெற்றுவிட்ட காகம் மயக்கம் தெளிந்து பழையபடி ஆகவேண்டுமென்பதற்காய் சும்மாவே செயல்பட்டேன். ஒரு வேளை உண்மைகள் ஏதாவது இருந்து விட்டால் என்ற பயம் எழுந்ததற்காகவும் செய்தேன். நான் அதிக நேரம் அந்தக் காகத்தை என்னுள் வைத்து நின்று விட்டதாகத் தெரிந்ததும் அதை வெளிப்படுத்தக் கவனமாக விலகினேன். காகம் விறைத்துக் கிடந்தது. சரிதான். அதன் உயிர் என்னாலேயே அறுதியாக்கப்பட விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் நாம் மிகவும் சஞ்சலமானேன். எல்லா அசைவுகளையும் தரிப்புகளையும் போல காகம் இறந்ததும் ஏற்கனவே பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்படும் எண்ணம் கர்த்தரின் சிந்தையில் தெரிந்த அன்றே - தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்றாக இருக்குமானால் அதனை மாற்றக் காகத்தைப் போலவே ஆனால் காகத்திலும் சித்ரவதை கூடிய படைப்பில் ஒரு வனான என்னால் என்ன செய்து விட முடியும். நான் அழுந்த வருந்தினேன். நான் வருந்தியும் ஆக வேண்டும் என்பதும் அந்தத் 'தெளிவான புத்தகத்தில்' எங்கோ ஒரு குறிப்பில் உள்ள வாசகம்தானா? அதனால்தான் அந்தக் காகம் அப்படி நின்றதா? அதன் ஆத்ம துடிப்பை, எச்சரிக்கையை, இறுதி மூச்சுகளைப் புரிந்தும், எமன் உருவில் என்னை அறிந்து கொண்டும் தனது ஊழியை நீட்டிக் கொள்ளச் சக்தியற்று சற்று முன்னால் என் முன்னே நின்ற இக்காகத்தின் நிலையை என்னால் அட்சரம் ஒன்று கூட விடாமல் இன்னும் பார்க்க முடிந்தது. நான் அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு வந்து அமர்ந்தேன்.
 
என் மனோ நிலை விகாரப்பட்டு வெறி கொள்வது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. நான் என் பிரச்னைகட்கு முடிவுகளை எடுக்காத ஒரு மத நிலை இது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. விவாத மேடைகளும் ரணகளங்களும் பிரளயங்களும் மனத்தைத் தம்போக்கில் நிர்ணயிக்கத் தலைப்பட்டன. நெஞ்சு, கதிரவன் போல அனந்த எண்ணக் கதிர்களுக்கு ஆரை தந்த மையமாயிற்று. நான் தலையைப் பாங்கு பாவனையறியாதவன் போல் அழுத்தமாய்ச் சீய்த்துக் கொண்டேன்.
 
அது என் தடியினால் இறக்குமென்று நான் தெளிவாக எதிர்பார்த்தே இருக்க வேண்டும். என் மன உணர்வுகட்கு உதவி செய்வதை இன்னும் அபாயமற்ற முறையில் முயன்றிருக்க வேண்டும். அல்லாமல் போயிருந்த வரையில் நான் அறிவற்றவன் பச்சாத்தாபமற்றவன். என் தவறு எனக்குப் புரிந்தால் சிறப்பு. அது 'பலஹீனமானது' என்று நான் அடக்கிக் கொள்ள முடியாது ஆத்திரப்பட்டது எங்ஙனம் முறையாகும். பலஹீனர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எனக்குப் பிடித்த கொள்கையா? எனவேதான் நான் அதன் மேல் ஆத்திரப்பட்டேனா? இல்லை. ஒருபோதும் அப்படி இல்லை; எனக்கு என் ஆத்திரத்திலுள்ள வேறுபாடும் அதன் அடியில் நான் உயிர்களிடத்தில் கொண்டிருந்த கசிவின் இரகசியமும் புரிந்தது. வேண்டுமானால் பலஹீனர்கள் உலகில் நிறைய இருக்கட்டும். அதில் எனக்குப் பிரச்னை அதிகமில்லை. ஆனால் எனக்கு வேண்டியவர்கள் என் உதவி நேரடியாக கிட்டியவர்கள் எவரும் பலஹீனர்களாய் இருப்பதில் எனக்கு எள்ளளவும் பிடித்தமில்லை.
 
காகம் அதி ஜாக்கிரதையாக அதிக விழிப்புணர்ச்சியுள்ளதாயும் இருந்தது அதன் பலவீனமா?... அதுதான் நிஜப்பலம்... இருக்கலாம். சாதாரண ஜாக்கிரதையுணர்வு கொண்ட கூட்டத்தில் ஜாக்கிரதையற்று இருப்பது எப்படி ஒரு குறையோ பலஹீனமோ அது போலத்தான் அதி ஜாக்கிரதையாயிருப்பதும். சராசரியான அறிவு கொண்ட மனித சமுதாயத்தில் அறிவற்றிருப்பதும் அதிக அறிவு கொண்டிருப்பதும் குறையாயத் தென்படுவது போல. அறிவற்ற தன்மையில் தன்னிச்சைப்படி நடந்து கொண்டால் 'பைத்தியம்' என்பார்கள். அறிவு மிக மிகைத்த தன்மையில் சுயேச்சையாய் நடந்து கொண்டால் 'கிறுக்கு' என்பார்கள். அதை போலத்தான் இதுவும். எடுபடாத உண்மை வழக்கத்திலுள்ள பொய்க்குச் சேவகம் செய்வதைப் போல. நிலத்தின் கீழ் வளரும் வேர் தேவையையொட்டி தண்டுப்பகுதியொன்றில் வளர்ந்தால், 'இடம் மாறிப் பிறந்த வேர்' என்று வித்தியாசப்படுத்தப் படுவதைப் போல. தொகைதான் பலம். தொகைதான் வழக்கத்தை நிர்ணயிக்கும். ஆகவே அக்காகம் அழிந்தது சரிதான்!

நான் வாழ்வதைக் கணிதச் சமன்பாடு ஒன்று என்று நினைக்கவில்லை. நான் காகத்தைக் கொலை செய்தது சரியா? கொலை செய்வது சரியா? ஐந்தும் ஐந்தும் பத்து என்பதைப் போல சரியா? அல்லது ஒன்பது என்பது பிழை என்று சொல்வதைப் போலுள்ள சரியா? நாம் நம்மை அறியாது நம்முள் ஏற்பட்டிருக்கும் சில வகையான ரசனைகளைக் கொண்டிருக்கு மட்டும், மனவிகாரங்களைப் பெற்றிருக்கு மட்டும், காரணமற்று எழும்பும் உணர்வுகளின் பக்கம் சாய்ந்து கொடுப்பது இன்னும் இவற்றிற்குச் சமமான பலவீனங்களை அடியோடு கெல்லி அகற்றுமட்டும் வாழ்வது கடைசி மட்டும் ஒரு கணிதச் சமன்பாட்டைப் போன்றதல்ல. எனவே சரியென்றும் பிழையென்றும் ஒன்றுமே கிடையாது. என் காகம் என் எறிக்கு இலக்கானது துரதிர்ஷ்ட வசமான ஒரு கை பிழைபாடு. ஆனால் எறிய வேண்டுமென எழுந்த எண்ணம்? அது திட்டமிடப்பட்டது. சில்லறையான உணர்வின் வழிப்பட்டதில் கேவலப்பட்டதாய் மனம் என்னை நடுச்சந்தியில் நிர்வாணமாய் நிறுத்திய அசூசையுணர்வைத் தந்தது. காகம் கெட்டழிய வேண்டுமென்று விரும்பி நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. எனது நோக்கு நல்லெண்ண வாய்ப்பட்டதற்றதெனினும் தீய எண்ணத்தின் பாற்பட்டதல்ல. சோரம்போன இந்த உலகில் நிறைய நன்மை தரும் உண்மைகளை அறிந்திருந்தும் தனித்து விடப்பட்டதினால் அவஸ்தையுறுவதை விட ஒரேயடியாச் செத்துத் தொலைப்பது மேல்தான். ஆகவே, மிக விழிப்புணர்வாயிருந்ததற்காய் காகம் அழிந்தது முறை.
 
நான் அக்காகத்தை அநியாயமாக, அது வாழ்வதற்கு வெறுக்கிறதா என்று அறியாதும் கூட இப்படி ஒரு நேரத்தில் இறக்க விட்டது தர்மம்தானா? ஏன் மரண அவஸ்தையில் துடித்த ஆட்டினை ஒரேயடியாய்க் கொன்றுவிடச் சொன்ன மகாத்மாவும் அதன் வலியைத் தாங்க முடியாத அதன் பலவீனத்தை உணர்ந்தும், பின் தன் மனச்சாந்திக்காயும்தானே அப்படிச் சொன்னார். நானும் ஏறக்குறைய அதைத்தானே செய்யும்படி ஆயிற்று.

இருந்தும், நான் காகம் செத்ததை வருந்தினேன். என் மனம் ஒன்றை நினைத்து மிகப் பலமாக வருந்திற்று. நாளை ஒருவேளை என் காகமும் மற்றவைகளைப் போல் வாழ்க்கையோடு போராடும் படிச் சந்தர்ப்பம் கிடைத்து மாற இருக்குமானால்...? என்னை இந்தக் கேள்விக்கு எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு காரணத்தைக் காட்டி என்னை சாந்திப்படுத்த துடித்தேன்.
 
நாளையே எந்தவித நிச்சயமும் அற்ற போது, நாளை அது திருந்துவது மட்டும் சந்தேகமற்ற நிச்சயமானதாய் விடுமா? 'இருக்கலாம்' என்றே எனக்குப் பட்டது. எதற்கும், எனக்காக வேண்டி 'இல்லை' என்றே சொல்லிக் கொண்டேன்.

***

நன்றி : வேதாந்தி , .எல்.எம். ஹனீபா, ஸபீர் ஹாபிஸ்

Thursday, March 21, 2013

குரங்குகள் பெண்கள் சென்ஷிகள்

ஆபிதின் அண்ணே,  வெரியர் எல்வின் தொகுத்த ‘உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலிலுள்ள பிடித்த கதை ஒன்று. செயல்களைக் காணும் சமயம் மனுசத்தனமென்பது எதுவென்பதில் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விசயத்தில் சந்தேகம் இல்லை. அது பெண்களுக்கு குரங்குகளின் மீது இருக்கும் காதல்.. :) . குரங்கின் வரைந்த ஓவியத்தை புத்தகத்தின் 40ம் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். - சென்ஷி
 
- நேற்று வந்த மெயில். குரங்கு கதை என்றாலே ஏன்தான் எனக்கு அனுப்புகிறாரோ என்று முனகிக்கொண்டே அமினா ஜெயல் தீட்டிய ஓவியத்தைப் பார்த்தேன். சரிதான், அச்சாக என்னைப்போலவே இருக்கிறது அந்தக் குரங்கு. கதையைப் படிப்பவர்கள் தங்கள் பின்பக்கத்தை அவசியம் - ஒருமுறையாவது-  பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் - ஆபிதீன்

***



ஆதிக் குரங்குகள்
...

கடபா எனும் இனத்தவர் பழங்காலத்தில் குரங்குகள் பழகிய விதம் பற்றிப் பல கதைகள் கூறுகின்றனர். ஒரு சாயங்காலம், மக்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, தலைப்பாகை, சட்டை அணிந்த குரங்கு ஒன்று வந்து அவர்கள் மத்தியிலிருந்த கல் ஒன்றில் அமர்ந்தது. பிடில் வாத்தியம் ஒன்றைக் கையில் கொண்டு, மிகவும் திறமையாக அதை வாசிக்க ஆரம்பித்தது. இசைத்த சங்கீதம் இனிமையாக இருக்கவே, வாசித்தது ஒரு குரங்கு என்பது யாருக்கும் தெரியாமற் போயிற்று. பெண்கள் மனமகிழ்ந்து சங்கீதத்திற்குத் தக்க நடனம் ஆடினர்.

ஒவ்வொரு இரவும் இது நடந்தது. சீக்கிரமே அனைத்துப் பெண்களும் இசைக் குரங்கிடம் மனதைப் பறி கொடுத்தனர். ஒரு பெண் ஒரு மோதிரத்தையும், ஒரு பெண் சுவையான உணவையும், மற்றொரு பெண் அரிசியிலிருந்து தயாரித்த ஒரு வகை பானத்தையும் அன்பளிப்பாக அளித்தனர்.

அங்கிருந்த இளைஞர்களுக்குப் பெண்களின் இந்தப் போக்குப் பிடிக்கவில்லை. இயற்கைதானே! அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். “யாருக்குமே இந்தப் புது இளைஞன் யார் என்றே தெரியவில்லை. எங்கிருந்து வந்தவன் இவன்? யார் இவன்?” ஓர் இரவில் ஒளிந்திருந்து அவன் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தனர். குரங்கில் வால் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். “ஆஹா, இது குரங்குதான்! வாலை கம்பு என்று தவறாக நினைத்து விட்டோம்!” என்று உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட ஆனந்தத்தில் களித்தனர். அந்த இரவில் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டனர். நடனத்தைத் தொடர்ந்தனர். நடனத்தை முடித்தபின் தம் வீடு திரும்பினர். குரங்கு மரத்திற்குத் திரும்பியது.
 
மறுநாள் இளைஞர்கள், குரங்கு வழக்கமாக அமரும் கல்லைச் சுற்றிலும் மரத்துண்டுகளை அடுக்கித் தீ வைத்துவிட்டனர். நன்றாகச் சுட்டதும், அந்த இடத்தைச் சுத்தமாக்கித் தீயின் அடிச்சுவடே தெரியாமல் வைத்தனர். வழக்கப்படி, பாட்டும், ஆட்டமும் தொடர்ந்தன. குரங்கும் எந்தவிதச் சந்தேகமும் எழாததால் கீழே வந்து பிடிலுடன் வழக்கமாக அமரும் அதே கல்லில் உட்கார்ந்தது. அந்தக்கல் சூடாக இருக்கவே, குரங்கின் தோல் வெந்து உரிந்தது. இளைஞர்களுக்கு ஒரே சிரிப்பு! பெண்களைக் கேலி செய்தனர். ஒரு குரங்கின் காதலைப் பெறவா பொருட்களை அன்பளிப்பாகப் பெண்கள் அளித்தனர்! நாணமுற்றனர் பெண்கள்! அன்றுமுதல் குரங்கின் வெந்துபோன பகுதி சிவப்பாகவே காட்சியளிக்கிறது.
***


 
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

Tuesday, March 19, 2013

மனிதர்கள் தம் வாலை இழந்த கதை!

கவலை வேண்டாம், இணையத்தில் - ஆபிதீனையும் சேர்த்து - அங்குமிங்கும் குதிக்கும் ‘மனிதர்கள்’ பற்றிய கதை அல்ல இது (சில 'ஹாரிபிள் ஹஜ்ரத்’களுக்கு முன் வாலே முப்பது மீட்டர் இருக்கும்!).  வெரியர் எல்வின் தொகுத்த 'When the world was young ’ (உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலில் இருக்கும் பழைய நாட்டுப்புறக் கதை இது. தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன். சித்திரம் : அமினா ஜெயல். வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்.
***


 
மனிதர்கள் முதன் முதலில் தம் வாலை இழந்த கதை

மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிரயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள். சிலர் ஆதிமனிதன் பெரிய முட்டையிலிருந்து வெளிவந்ததாக நம்புகிறார்கள். வேறு சிலர், பூமித்தாயின் குழந்தையாய் பூமி பிளந்து மனிதன் வெளிவந்ததாய்க் கூறுகிறார்கள். சிலர் ஒரு தேவதைக்கு மகனாகப் பிறந்தவனே ஆதி மனிதன்  எனவும், இன்னும் சிலர் விலங்கிலிருந்து பிறந்தவனே ஆதி மனிதன் எனவும் சொல்கின்றனர். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு; ஆதி மனிதன், தற்காலம் மனிதனைவிடத் தோற்றத்தில் நிறைய மாறுபட்டிருந்தான். இந்த ஒத்த கருத்தைப் பின்வரும் கதை மூலம் அறியலாம். ஒரிஸாவைச் சேர்ந்த சாரோக்கர்கள் ஆதிமனிதர்களுக்கு வால் இருந்ததாக நம்புகின்றனர்.
 
மனிதர்களுக்கு வால் இருந்த பழங்காலத்தில் அவர்களுடைய வால்கள் தரையைத் தொடுமளவுக்கு நீண்டிருந்தன. ஜனத்தொகை பெருகவே, விசேஷ காலங்களில், கல்யாணக் கூட்டங்களில், சாவுக் கூட்டங்களில் ஒருவருடைய வாலை மற்றவர் மிதித்தனர்; தடுக்கி விழுந்தனர். இது மிகுந்த வேடிக்கையாக இருந்தது.
 
ஒருமுறை கிட்டுங் எனும் கடவுள் சந்தைக்குப் போனபோது வழக்கம்போல் அங்கு ஒரே கூட்டம். நல்ல புகையிலைக்காக கடைகடையாக தேடி அலைந்தபோது யாரோ ஒருவர் வாலினால் தடுக்கிவிட, நிலைகுலைந்து விழுந்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக கல்லின் மேல் விழுந்ததால் முன்வரிசைப் பற்கள் இரண்டு கீழே விழுந்தன. சந்தை முழுதும் சிரிக்க, கிட்டுங்குக்குக் கோபம் வந்தது. இத்தனைக்கும் காரணமான வாலைப் பிடுங்கித் தூர எறிந்தார். பிற வால்கள் இதைப் பார்த்ததும் பயந்துபோய்த் தாமே உடலிலிருந்து கழட்டிக்கொண்டு ஓடின. கிட்டுங்குவின் வால் பனைமரம் ஆனது. பிறவால்கள் புற்களாகி இப்போது துடைப்பம் செய்ய பயன்படுகின்றன.

***
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி பிக்சர்ஸ் (ஷார்ஜா)

Saturday, March 16, 2013

கொல்கிறார்கள்... கொல்கிறார்கள்...

தாராபுரத்தில் பிறந்து, மடத்துக்குளத்தில் வளர்ந்து, படித்து, மடத்துக்குளம், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நாக்பூர், சென்னை... என பல ஊர்களிலும் அலைந்து இப்போது தில்லியில் உளைந்து கொண்டிருப்பவன் என்று தன்னைக் குறிப்பிடும்  நண்பர் 'புதியவன்’ ஷாஜஹான்  ('சமத்து ஷாஜஹான்' என்பார் தாஜ்!) ப்ளஸ்-ல் எழுதிய வரிகள் இவை. அவசியம் கருதி அனுமதி பெறாமலே பதிவிடுகிறேன். - ஆபிதீன்

***

முஸ்லிம்கள் இந்துக்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்
இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்
கிறித்துவர்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்
முஸ்லிம்கள் கிறித்துவர்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்
சிங்களர்கள் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்
தமிழர்கள் சிங்களர்களைக் கொல்கிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.
அவர்கள் இவர்களையும் இவர்கள் அவர்களையும் கொல்கிறார்கள்
என்னும் இரைச்சலில்
மறைந்து போகிறது சிலருக்கு மறந்து போகிறது
மனிதர்கள் மனிதர்களைக் கொல்கிறார்கள் என்பது.

***



நன்றி : ஷாஜஹான் | http://www.facebook.com/shahjahanr

Tuesday, March 12, 2013

அரசியல் : மார்க்கம் காட்டும் நேர்வழிகள் - தாஜ்



அரசியல் : மார்க்கம் காட்டும் நேர்வழிகள் 

தாஜ்

த.மு.மு.க.
அல்லது
மனித நேயக் கட்சி என்கிற
பெயர்களால் அறியப்படும்.....
இஸ்லாமிய கட்சி ஒன்றைச்
சார்ந்த சிநேகிதன் அவன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன்.

விஸ்வரூபம் தடைப்பட்டு
பின்னர் அப்படம் வெளியான போது,
கடைசியாக அவனை சந்தித்ததாக ஞாபகம்.

அப் படத்திற்கான எதிர்ப்பை
அவனது கட்சி
வாபஸ் பெற்று கொண்டமைக்காக
அவனுக்கு அப்போது
'Thanks' கூட சொன்னேன்.

என்னிடம் விரும்பி
பழகும் பையன் என்பதால்
எங்கள் உரையாடல்
உரிமையோடான சகஜமாக நிகழ்ந்தது.
நான்தான் பேச்சைத்துவக்கினேன்.

*** 

"எங்கே உன்னை பார்க்கவே முடியலை?"

"கட்சி வேலையா பிஸிண்ணே..."

"கட்சி வேலையா? அப்போ...
விஸ்வரூபத்தை மறுபடியும்
தடை பண்ணப் போறீங்களா என்ன?"

"அதுதான் முடிஞ்சி போச்சேண்ணே!"

"அப்போ... வேற ஏதாவது படத்தை
தடை செய்ய போறீங்களோ?"

"இஸ்லாமியர்களின் உணர்வை காமிக்க
வேண்டிய நேரத்தில் காமிக்க வேண்டாமாண்ணே?
அதுக்காக எப்பவும் அதே வேலையா இருக்க முடியுமா?
நான் சொல்ல வந்தது...
மாவட்ட கமிட்டிக் கூட்ட வேலை!"

"ஓ.....!"

"என்னை மாவட்ட
செயலாளரா நியமிச்சிருக்காக!"

"வாழ்த்துக்கள். மாவட்டம் முழுமைக்குமா?"

மாவட்டத்தின் பெயரைச் சொல்லி,
அதன் "வடக்குச் செயளாலர்" என்றான்.

"பழைய செயலாளர் என்னாச்சு?"

"ஏழு லட்சத்துக்கு கணக்கே கொடுக்கல...
தலைமை கேட்டு கேட்டுப் பார்த்துடுச்சி!"

"அது ஒரு தொகைன்னா....
பதவியை பறிச்சுட்டாங்க?"

"மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த
மாவட்ட தலைவர் முப்பது லட்சத்துக்கான
கணக்கே கானோம்னு தலைகிட்டே சொன்னாரு
அவரை மன்னிச்சுடலையா? அந்த மாதிரி
ஏதாவது பதிலை சொல்ல வேணாமா இவரு?"

"ஓ..., அப்படியா.. அப்ப சரிதான்"

"அடுத்த வருஷம்
பாராளுமன்ற தேர்தல் வருதுங்கும்போது...
நிறையப் பணம் லட்சத்துல, ஏன் கோடியில
புழங்குற நேரம்...
இதுக்கே கணக்கும் கொடுக்காம,
தலைமையையும் மதிக்காம இருந்த
எப்படிண்ணே அவர வப்பாங்க?"

"சரிதான்!"

"நான்தான் அந்த ஏழு லட்சத்த
கண்டு பிடிச்சு சொன்னேன்"

"ஓ..!"

"அப்ப..., நீயே அந்தப் பொறுப்புல
இருன்னாங்க, சரின்னுட்டேன்"

"மாவட்டப் பணிங்குகிற...
கார் வாங்கித் தந்துட்டாங்களா?"

"புக் பண்ணிருக்குண்ணே
அடுத்த வாரத்துல வந்துரும்"

"எத்தனை எம்.பி. சீட் கேட்கப் போறீங்க?"

"ஏழு கேட்க இருக்காங்க, இல்லைன்னா
ஆறு நிச்சயம் கேட்போம்.
இருந்தாலும்...
அல்லா என்ன நாடியிருக்கானோ
அதான் நடக்கும்"

"அம்மா என்ன நினைச்சு
இருக்காங்களோன்னு சொல்ல மாட்டேங்கிறியே?"

"அவுங்கத்தான்
தனியா நிற்க போறதா சொல்றாங்களே"

"ஆமால!"

"அது நடக்காதுண்ணே!
பதினைந்து எம்.பி. தொகுதியில
முஸ்லிம் ஓட்டில்லாம....
எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது!"

"கணக்கெல்லாம் பலமாதான் இருக்கு!
அப்படின்னா...
ஒரு தொகுதி கட்டாயமுன்னு சொல்லு!"

"நாங்க அவ்வளவு லேசா உரிமையை
விட்டுக் கொடுத்திட மாட்டோம்ண்ணே...."

"சரி, அவுங்க கூட கூட்டணி வைச்சு,
அவுங்களை நீங்க ஜெய்க்கவும் வைச்சாக்கா...
நாளைக்கு பாரதிய ஜனதாவுக்கோ...
மோடிக்கோல்ல ஆதரவு கொடுப்பாங்க"

"அது அப்படின்னா...
நாம என்னண்ணே செய்ய முடியும்?
ஜெயித்த பிறகு,
மேல அவுங்க வைக்கிற கூட்டு
அவுங்களோட பர்சனல் இல்லையா?
அதுல, நம்ம தலையிட முடியாது.
அது நாகரீகமும் இல்லையேண்ணே!"

"நீ சொல்றது சரியா புரியலையே"

"எங்க கூட்டுங்கிறது
அம்மாவோட மட்டுதான்!"

"அப்ப பிரதமர் தேர்வுக்கு
அம்மா ஆதரிக்கிற கட்சிய ஆதரிக்க மாட்டீங்க
எதிர்த்து ஓட்டுப் போடுவிங்க அப்படித்தானே?"

"அதெப்படிண்ணே
அம்மாவ எதிர்த்து போட முடியும்?"

"மறுப்படியும் குழப்புறியே...
பின்னே என்ன செய்வீங்க?"

"ஓட்டெடுப்புல கலந்துக்க மாட்டோம்ல!'

"சபாஷ்..."

"பேச்சுப் போக்குல
நான் சொல்ல வந்தச் செய்தி
மறந்துடப் போவுது"

"சொல்லு"

"நீங்க எங்க இயக்கத்தோட
ஒட்டமாட்டேங்கிறிங்க.
பரவாயில்லை.
அடுத்த ஞாயிறு அன்னைக்கி
எங்க 'மசூரா'வுல வச்சு
ஒரு புத்தகத்த வெளியீடு செய்கிறோம்.
நீங்கதான் அந்தப் புத்தகத்த வெளியீடணும்"

"அப்படியா! புத்தகத்தின் பெயர் என்ன?"

"மார்க்கம் காட்டும் நேர்வழிகள்!"

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com

Sunday, March 10, 2013

அண்ணல் பெருமானின் 60 பொன் மொழிகள்

'நண்பர்கள் வியக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  மக்கள் தலைவர்களில் மகத்தான மனிதர் அவர்!!!  அவரது சொல்  எப்பவுமே கவனிக்கத் தக்கது' என்ற குறிப்புடன் நண்பர் தாஜ் ஃபேஸ்புக்-ல் இதை ஷேர் செய்திருந்தார் - தம்பி காரைக்கால் அன்சாரியிடமிருந்து. இருவருக்கும் நன்றி. அப்பப்ப இது மாதிரி போடுவேன். பாராட்டனும். ஓகே?
 
‘தீனோரே ஞாயமா? மாறலாமா? தூதர் நபி போதனையை மீறலாமா? உள்ளம் சோரலாமா?..’ - நாகூர் சலீம்
 
***

 
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
 
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
 
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
 
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
 
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
 
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
 
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
 
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
 
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.

25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
 
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
 
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
 
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
 
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
 
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
 
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

. 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
 
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
 
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
 
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
 
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
 
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
 
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
 
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.

54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
 
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
 
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
 
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
 
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
 
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்

Saturday, March 9, 2013

காவல் வேட்டை - மேலாண்மை பொன்னுச்சாமி

குமுதம் சிறுகதை சிறப்பிதழில் (14/11/2012) வெளியானது. மஜீத், சபராளியின் பயம் வேறு, விவசாயியின் பயம் வேறு...! -  ஆபிதீன்
 
***


காவல் வேட்டை 

மேலாண்மை பொன்னுச்சாமி

முத்துச்சாமிக்கு இருட்டு என்றால்... கொஞ்சம் பயம். கொஞ்சமென்ன கொஞ்சம், நிறையவே பயப்படுவான். இருட்டில் பேய்கள் சுதந்திரமாக - மானவாரியாக - நடமாடும் என்று எப்போதோ சின்ன வயசில் கேள்விப்பட்டது. அது அப்படியே மனசின் ஆழத்தில் தழும்பாக வேரடித்து விட்டது.
 
நடுச்சாமத்தில் ஒண்ணுக்கு இருப்பதற்கு வீட்டுக்கு வெளியே வரவே குலைநடுங்குவான். பண்டம் பாத்திரங்கள் போட்டு மினுக்கி கழுவுகிற ஒரு இடத்தில் ஒண்ணுக்கு உட்கார்ந்து அடித்து விடுவான்,. ஒரு செம்புக்கு மூன்று செம்பு தண்ணீரை ஊற்றி விட்டு வருவான்.
 
மறுநாள் விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதில் அவனது பெண்சாதி வறுத்தெடுத்து கொட்டிவிடுவாள். கருந்தேளாக இருட்டுக்குப் பய்ந்து, ’இப்படி’ எத்தனையோ தடவைகள் வாங்கிக்கட்டியிருக்கிறான்.
 
ஊருக்குள் பேயடித்துச் செத்தவர்களைப் பற்றிய கதைகள் வண்டி வண்டியாக உண்டு. முதுகில் அஞ்சு விரல் தடயமும், கைத்தடமும் அப்படியே பதிந்திருந்ததை கண்ணால் கண்டதாக கையிலடித்துச் சத்தியம் செய்வார்கள்.
மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்து கிடக்கும், வாயிலும் வழிந்த ரத்தம் உறைந்து கிடக்கும் என்றெல்லாம் சாதிப்பார்கள்.
 
முத்துச்சாமி இருட்டுக்குப் பயப்படுவான் என்பது ஊரெல்லாம் அறிந்த ரகசியம். இதில் யாதொரு சந்தேகமுமில்லை.
 
மார்கழி பிறந்து விட்டது. வேதக் கோயிலில் அடிக்கடி ஜெபப்பாடல்கள்
முழுங்குகின்றன. பனி ஊற்றோ ஊற்று என்று ஊற்றுகிறது. எலும்பெல்லாம், பாய்ந்து பனி நடுங்க வைக்கிறது. ஆறரை மணிக்கெல்லாம் -
 
உள்வீட்டுக்குள் சமுக்காளத்தை இழுத்து மூடிப்படுத்திருக்கிறான் முத்துச்சாமி. செண்பகம் இறுகலாக உறுமினாள்.
 
“என்ன.. அதுக்குள்ளே முடக்கியாச்சா?”
 
“கூதல் கிடுகிடுன்னு நடுக்குதுலே?”
 
“கூதலுக்கு மொடங்குறவன் காடுகரை வெள்ளாமை வைக்கலாமா? கலியாணம் முடிக்கலாமா? கட்டிப்படுக்கலாமா? புள்ளே பெறலாமா? காவி கட்டிக்கிட்டு, ஓடு ஏந்திக்கிட்டு வீதி வீதியா அலைய வேண்டியதுதானே?”
 
“ஆங்காரமெடுத்துப்போய் என்னத்துக்கு இந்தப் பேய்க் கூப்பாடு போடுதே? என்ன சங்கதி?”
 
“மணக்காட்லே வெளைஞ்ச கடலை அப்படியப்படியே கெடக்குது. நாலுகால் நரிக, ரெண்டுகால் நரிக மேய்ச்சல் மேய்ஞ்சு நாசக்காடு பண்ணுது? வெளஞ்ச வெள்ளைமையை வீடு கொண்டார்ற வரைக்கும் கண்ணும் கருத்துமா காப்பாத்த வேண்டாமா? இழுத்து மூடிப்படுக்குற ஆம்பளைக்கு அந்த அறிவும் சுரணையும் வேண்டாம்?”
 
செண்பகம் ‘தஸ்ஸு புஸ்’ஸென்று இளைத்தாள். கோபத்தில் காட்டுக்கத்து கத்தினாள். வீட்டு மூலையில் கிடந்த அகத்திக் கொழைகளை அள்ளிக்கொண்டு தக்தக்தக்கென்று தரையதிர நடந்தாள். தொழுவுக்குள் நுழைந்தாள். ஆடுகளுக்கும் கிடாய்களுக்கு கயிற்றில் கட்டித் தொங்க விட்டாள். படப்பிலிருந்து உருவி வைத்திருந்த நாற்றுக் கூளத்தை அள்ளி பசு மாடுகளுக்கும், காளைமாடுகளுக்கும் பகிர்ந்து போட்டாள்.
 
பாயைவிட்டு எழுந்து திண்ணையில் உட்கார்ந்த முத்துச்சாமி முகத்தில் யோசனை தீவிரம்.
 
“மாடுகன்னுகளை - ஆடு குட்டிகளை நா பாத்துகிடுதேன். காடுகரைகளை நீங்கதான் பாத்தாகணும்.”
 
”சரிசரி.. நா..ம் போறேன்மா. பனியும் கூதலும்தாம் பயங்காட்டுது”
 
“இருட்டும் பயங்காட்டும்” அவளது உதடுகளில் ஏளனக் குறுநகை.
 
அவனது ரகசியக் கோழைத்தனத்தை குத்திக்காட்டுகிறாள். வெட்கமும் கூச்சமுமாக இருக்கிறது. “ச்சேய்” என்று வருகிறது. அவனுக்கு அவன் மேலேயே காறித்துப்பணும் போலிருக்கிறது.
 
ஊருக்கே வடக்கே மணல் நிரம்பிய செவல்காடு. ஒட்டினாற்போல் பனந்தோப்பு காவல்சுவராய் நிற்கிறது. பனந்தோப்புக்குள் மயில்களில் கூவல்காடு. பனந்தோப்புக்கு கிழக்கே ஒட்டினாற்போல் மயானக்கரை. இடுகாடு. குழிதோண்டிப் புதைக்கிற மயானம்.
 
குழிமேடுகளை நினைத்தாலே குலை பதறும். உள் புதைந்த பிரேதங்களெல்லாம் பேய்களாக வெளியே வந்து தோற்றமில்லாமல் உலாவுவதாக ஒரு பிரமை.
 
அதற்குப் பக்கத்தில்தான் முத்துச்சாமிக்கு முக்கால் குறுக்கம் மணல்காடு. நாற்சதுரமான காடு. ஆடிப்பட்டத்துக்கு மழை பெய்யவில்லை. மலட்டுக் காற்றாக மேல்காற்று புழுதியை அள்ளியிறைத்தது.
 
‘விதைக்கடலை வீட்லே. வெறும் புஞ்சயா காட்லே ஒழவு’ என்று வருத்த நினைவுகள் நெருஞ்சி முள்ளாக உறுத்துகின்றன. மழைக்கு ஏங்குகிற மயில்களாக இவனது மனக் கெக்கரிப்பு.
 
ஆவணியும் பிறந்து, தேதிகள் பத்து மாயமான பின்பு.. திடுதிப்பென்று ஒரு மழை. எப்படியோ தப்பிவிலகிவந்த ஓர் ஓட்டைமேகம் ஒழுகி விட்டது. பெரும்பாட்டமாய் ரெண்டு பாட்டம் மழை.
 
ஈர உழவு போட்டுப் புரட்டி, மறு உழவு போடும்போதே கடலையை விதைத்துவிட்டான். ஊடு பட்டங்களாக தட்டாம் பயறும், பாசிப்பயறும் ஒழுகவிட்டான், விரலிடுக்கில்.
 
அப்புறம், மழை கண்ணில் தட்டவில்லை. முளைத்து நாலு இலை விட்டுவிட்டன. மறு தண்ணீருக்கு மழை ஒன்று பெய்தால் போதும். உயிர்பிடித்து வேர்படர்ந்து செடி எழுந்துவிடும்.
 
ஆவணி பூராவும் மழை பேச்சு மூச்சில்லை. புரட்டாசியில் வரட்டாடு கூட புழுக்கை போடவில்லை. காய்ந்து உலர்கிற மாசம். கடலைச் செடிகள் முகம் செத்துவிட்டன. வாடிக்கருகுகின்றன. வேர்களில் மட்டும் துடிக்கிற உயிர்த்துளிகள்.
 
புஞ்சையை சுற்றிச் சுற்றி வந்து புலம்புகிற முத்துச்சாமி. வாடிய செடி கண்டு வாடிக் கதறுகிற சம்சாரி மனசின் சோகம்.
 
ஐப்பசியில் பெய்த மழை உசுர்த் தண்ணீர் போன்ற மழை. வாடிக் கிடந்த செடிகள் சுதாரித்து எழுந்தன. உரம்போட்ட மாதிரி மழைத் தண்ணீர்... கடலை விளைந்து விட்டது.
 
வேதக்கோயிலே பண்டிகை வைப்பாக. அது முடிஞ்ச மறுவாரம் கடலைவெட்டு ஆரம்பிச்சிரலாம். அதுவரைக்கும் காப்பாத்தியாகணும். இடுகாடு பக்கத்துலே புஞ்சை. இருட்டு மார்கழி மாசப்பனி. எப்படிச் சமாளிக்க? என்ன செய்ய? ஏது செய்ய? ஒண்ணும் செய்யாம முடங்கியிருக்கவும் முடியாது. என்ன செய்ய? எப்படிச் செய்ய?
 
முத்துச்சாமிக்குள் எலும்பு வரை துளைக்கிற பனிக் கூதலாக யோசனைகள்.
செண்பகம் செருமுகிற சத்தம் கேட்டு நிமிர்ந்தான். செண்பகம் முகத்தில் ஒரு பரிகாசத் தொனியிலான புன்முறுவல்.
 
“என்ன.. யோசனை பலமாயிருக்கு?”
 
“சும்மாதான்.”
 
“கோணக்காலு மாரியும் குருசாமியும் வருவாக. ஆடுமேய்ச்சித் திரிஞ்ச அனுபவம் உள்ளவுக... நீங்க சாக்குகளை விரிச்சு.. சாக்குகளை மூடி படுத்து ஒறங்குங்க.. அவுகரெண்டு பேரு காவலு காப்பாக.. போதுமா?”
 
ஆச்சரிய மகிழ்ச்சியாய் முகம் விரிய அவளைப் பார்த்தான். “எல்லாம் யோசிச்சு..ஏற்பாடு பண்ணி வைச்சுட்டுத்தான்.. எனக்கு இந்த பே(ய்)க்கூப்பாடா?
அரண்டு போய் முழிச்சுட்டேன் தெரியுமா?’
 
“நீங்க எதுக்குத்தான் அரண்டு போகலே..? நம்ம கலியாணம் மூஞ்ச அன்னிக்கு ராத்திரியும் அரண்டு போய்த்தானே நின்னீக..?
 
வெட்கத்தால் கோணிக்குறுகிய முகக்கோணலுடன் நெளிகிற முத்துச்சாமி “ச்சும்மா இரு செம்பு” என்று குழைந்தான். வார்த்தை வெளிவராமல் மிழற்றினான்.
 
ஊர் களைகட்டி உயிர்ப்போடு இருந்தது. ஏழு மணி ஆகியிருக்கும். கடைகண்ணிகளில் ஏவாரக் கூட்டம். மடத்துத் திண்ணையில் பேச்சுக்கூட்டம். ஒரே இரைச்சல். எட்டாகி விட்டால், தொடர்களில் உட்கார்ந்து உறைந்துவிடும் ஊர்ஜனம். ஊரே வெறிச்சோடி, கப், சிப்பென்று அமைதியாகிவிடும்.
 
ஆடுகுட்டிகளை.. மாடு கன்றுகளை அவிழ்த்துக்கொண்டு போனால்கூட, கவனிக்க.. தெருவில் ஒரு சுடுகுஞ்சு கூட இருக்காது.
 
உண்டு முடித்துவிட்டு சாக்குச்சுருட்டுடன் புறப்பட்டு விட்டான் முத்துச்சாமி. செண்பகம் ஈயச்சட்டி, கிளாஸ்கள், கருப்பட்டி தேயிலைப்பொட்டணம், காரச்சேவு, பார்சல் எல்லாம் ஒரு பையில் போட்டு நீட்டினாள்.
 
“இது என்னத்துக்கு?”
 
“அது மாரிக்கும் குருசாமிக்கும் தெரியும். நீங்க மகாராசா கணக்கா படுத்தெந்திரிச்சி வாங்க..”
 
தெருவில் இறங்கினான்.
 
“நாலுகால் நரிக ரெண்டுகால் நரிக.. மேய்ச்சல் மேய்ஞ்சு நாசக்காடு பண்ணுதுக” செண்பகம் அங்கலாய்த்தது சத்தியத்திலும் சத்தியம்.
 
இன்னும் மனிதர்களிடம் ஆதிகாலத்து வேட்டை குணம் பம்மிக்கிடக்கிறது.
தெறித்த விடலைப் பயல்கள் வாலிபப் பையல்கச்ள் வேட்டைக்கு சாமக்காட்டில் கிளம்பி விடுவார்கள். விளைந்து கிடக்கிற கடலைச் செடிகளை பாதத்தால் தடவி, இனம் கண்டு கொள்வார்கள். செடியின் தூரைச்சுற்றிலும் குதிகாலால் நாலு மிதிகள். பொதுபொதுத்த மணல் தரை நெகிழ்ந்து விடும். செடியில் தலையை வளைத்துப் பிடித்து தூக்கினால்.. அப்படி கடலைகள் தொங்கும். பறித்து வேட்டி மடிப்புக்குள் போட்டுக் கொள்வார்கள்.
 
அப்புறம்.. ஒரே உல்லாசம்தான். வேட்டை மாமிசத்தைப் பகிர்ந்து தின்கிற காட்டு ருசி. சம்சாரிக்கு அழிமானம். சண்டியர்களுக்கு வேட்டை..
 
அதனால் சாக்குச் சுருட்டுடன் திருவில் நடக்கிற போது... வழியில் போகிற வருகிறவர்களுடனெல்லாம் வம்புப் பேச்சுபேசுகிற முத்துச்சாமி.
 
“என்னப்பா.. சாக்குச் சுருட்டு? களவுக்கா, காவலுக்கா?”
 
“மணக்காடு, கடலைக்காவலுக்கு..”
 
“நீயாப்பா? நீதான் இருட்டுன்னா.. கெடந்து கழிஞ்சிருவியே..”
 
“என்ன செய்ய? பயந்தா முடியுமா? வெள்ளாமை வெளைச்சலை சிந்த விடாமல் சிதறவிடாம வீடு கொணாந்து சேக்கணும்லே?”
 
இதெல்லாம் ஒரு தந்திரம். சத்தமில்லாத பிரகடனம், நா காவலுக்குப் போறேன். நான் காவலுக்குப் போறேன், என்று சவுண்டு கொடுத்துக் கொண்டே போனால், வேட்டைக்குக் கிளம்புகிற விடலைகள் அந்தப் புஞ்சையை தவிர்த்துவிட்டு வேறிடம் பார்ப்பார்கள்.
 
ஊரின் எல்லையில் கோணக்கால் மாரியும், குருசாமியும் கூடச் சேர்ந்துகொண்டார்கள்.
 
ஊரைக் கடந்தவுடன் சுற்றி வளைத்து அமுக்கிக் கொண்ட இருட்டில் இறுகலான பிடி. முத்துச்சாமிக்குள் பயமும் பதற்றமும். குருசாமியை முன்னாடி போகச்சொல்லி, மாரியை பின்னாடி வரச்ச்சொல்லி, நடுவிலேயே நடந்த முத்துச்சாமிக்கு அந்தப் பனியிலும் வியர்த்தது அச்சவியர்வை.
 
செடிசெத்தை அசைகிற சத்தம் எழுந்தால் கூட, குடல் பதறி கூப்பாடு போடுவான்.
 
பின்னால் வருகிற மாரிக்குள் பேய் புகுந்துவிட்டால்..? முன்னால் போகிற குருசாமிக்குக்ள் பேய் இறங்கிவிட்டால்..?
 
விபரீதக் கற்பனைகள் அவனுடைய வியர்வையை ஊற்றெடுக்க வைத்தன. புஞ்சைபோனவுடன்.. நடுமையத்தில் தட்டைப்பயறுச் செடிக்கடியில் சாக்குகளை விரித்து படுத்து விட்டான்.
 
“ஏலேய் மாரி.. விடிய விடிய முழிச்சு எச்சரிக்கையா இருக்கணும்டா”
 
தூரத்தில் நரிகளின் நீளமான ஊளைச் சத்தங்கள். சிமிண்டாலைக் குழாயிலிருந்து புகைபோகிற கரிய அடையாளம். சிமிண்டாலைச் சங்குச்சத்தங்கள்.
 
முத்துச்சாமி ஒரு பாதுகாப்பு உணர்வுடன் உறங்கிவிட்டான். நன்றாக விடிந்த பிறகு...
 
இவனாகவே எழுந்தான். கொட்டாவி  விட்டு, நெட்டி முறித்துக் கொண்டான். மாரியும் குருசாமியும் ரத்தம் கோதிய கண்களில் சோர்வு பொங்க நின்றனர். வயிறு உப்பியிருந்தது. இவனைச் சுற்றிலும் அவித்து உரித்துத்தின்ற கடலைத்
தொலிகள். தட்டப்பயிறு தொலிகள், பாசிப்பயிறு தொலிகள். கடலையை பறி கொடுத்த வெற்றுவேர்களுடன் கடலைச் செடிகள்.
 
“என்னடா... இது?”
 
“விடிய விடிய முழிச்சிருக்கணும்லே? பசிக்குதுல்லே? புடுங்கி அவிச்சுச்தின்னோம். வேறு என்ன செய்ய?”
 
“எங்கடா புடுங்குனீங்க? நம்ம புஞ்சையிலேயா?”
 
“நம்ம புஞ்சையிலே புடுங்குவமா, காவலுக்கு வந்துட்டு? மத்தவுக புஞ்சைகள்லே வேட்டை நடத்துனோம்...”
 
மாரி விட்ட ஏப்பத்தில் வயிற்றின் நிறைவு தெரிந்தது.
 
“என்னடா.. காவலுக்கு வந்தமா? களவுக்கு வந்தமா?”
 
“நம்ம புஞ்சை காவலுக்கு வந்துட்டா.. வேட்டைக்குப் போகக் கூடாதுன்னு சட்டமா போட்டுக்கு?” குருசாமியின் குரலில் நியாயத்தை முன் வைக்கிற வைராக்கியம்.
 
“ஆதி மனுசங்க ரத்தத்துலே ஊறுன பழக்கம். வேட்டை.. ஒம் பொஞ்சை, எம்புஞ்சைன்னு பாத்யதைக வந்த பெறவு.. இடையிலே வந்ததுதான் இந்தக் காவலு..”
 
“புஞ்சையோ.. சொந்த மண்ணோ இல்லாத எங்களுக்கு வேட்டைதான் நெரந்தரம். புஞ்சைக்காரரான நீங்கதான் காவலு கம்புன்னு தூக்கிட்டுத் திரியணும்..” என்கிற ஆட்டுக்கார குருசாமியின் கம்மிய குரலின் சோகத்தை உணர்கிற முத்துச்சாமி நிலம் வைத்திருப்பதற்காக ஏனோ குற்ற உணர்வில் உள்ளுக்குள் குன்றினான். பசித்தவர்கள் பார்வையில் பஞ்சாமிர்தம் சாப்பிடுகிற மன உறுத்தல்.
***


 
நன்றி : மேலாண்மை பொன்னுச்சாமி , குமுதம்

Friday, March 8, 2013

அசல் சினிமா : அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள்?

'See Today' ஃபோல்டரில் ஒரு வருடமாக இருந்த இந்த அற்புதமான சினிமாவை நேற்றுதான் பார்த்து அசந்து போனேன். '12  Angry Men' பற்றிய சகோதரர் இளங்கோவின் விமர்சனம் இங்கே...
***

***
Thanks to : numique

Thursday, March 7, 2013

’பாவ வரி’ போடுகிறார் ப. சிதம்பரம் - வரிவரியாய் தாஜ் வரிகள்

இத்தனை வரிகளுக்கு மேல் கவிதை எழுதினால் அதற்கொரு ஸ்பெஷல் வரி என்று போடுங்கள். அப்போதுதான் எங்கள் தாஜ் சரிப்படுவார். உடைத்து உடைத்து இவர் போடுகிற வரிகள் , 'புகை’ விடும்  என்னை புழுதிபறக்க ஓட வைக்கிறது சார்... - ஆபிதீன்

**



சிகரெட்டுக்கு வரி:

மத்திய அரசின் வருடாந்திரச் சடங்கு


இந்திய 'வரியுலக மேதை'
மன்னிக்கவும்....
இந்தியப் 'பொருளாதார மேதை'
மதிப்பிற்குரிய
மத்திய அமைச்சர்
எங்கள் சிதம்பரத்திற்கு....

உங்களை
சிறந்த பொருளாதார அமைச்சரென்று
இந்தியப் பத்திரிகைகளெல்லாம்
புகழ்ந்துகொட்டிய காலம்தொட்டு
உங்களது வரிவிதிப்பின்
மகிமையை அறிவேன்.

நீங்கள் தமிழ்நாட்டுக்காரர் என்பதாலும்
உங்களை மாதிரியே...
ஒரு காலக்கட்டத்தில்
நானும் பெருந்தலைவரின்
புகழ் பாடியவன் என்பதாலும்
உங்களை நெருக்கமாக உணர்ந்தவனாகவும்,
வானளாவிய உங்களது கீர்த்திகளை
தீர அறிந்து வந்தனாகவும் இருக்கிறேன்.

பெருமைக்குரிய வகையில்
மத்திய அரசில்
அமைச்சராக நீங்கள் பதவியேற்றதிலிருந்து
குறிப்பிட்ட சில ஆண்டுகள் நீங்களாக
நிதியமைச்சராகவும்
பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு
இஷ்டமானவராகவும்
இன்னொரு பக்கம்.
'பட்ஜெட் கிங்'காகவும்
நீங்கள் வலம் வந்த
காலங்கள் முழுமையும் தொடர்ந்தறிவேன். 

வருடா வருடமும்
எல்லாப் பொருட்களும்
விலையேறி கொண்டேயிருந்தாலும்...
விலைவாசி வானையே எட்டினாலும்
அதற்கு
நீங்கள் ஆண்டுதோறும்
தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கும்
பட்ஜட்டே முதன்மைக் காரணமாக
இருந்த போதிலும்
அப்படியும் இப்படியும்
வார்த்தை ஜாலம் காட்டி
வருடம் தோறும்
'வரியில்லாத பட்ஜெட்' போடுவதானதொரு
இமேஜை கஷ்டப்பட்டு
காபந்து செய்தும் வருகின்றீர்கள்!
இந்தியப் பெரும் முதலாளிகளின்
மீடியாக்கள் உங்களது கருத்தையே
எதிரொலிக்கின்றன!

இங்கே...
இதெல்லாம் சங்கதியல்ல,
இதுவேறு.
புகைப் பிடிப்பவர்களின்
வயிற்றெரிச்சல் சங்கதி.

அதென்ன
வருடம் தவறாமல்...
அல்லது
வருடத்திற்கு இரண்டு முறை
சிகரெட்டுக்கு மட்டும்
வரி விதித்தபடிக்கு இருக்கின்றீர்கள்?
கேட்பாரே இல்லை என்றா?

அது நிகோடின் / உயிர்க்கொல்லி...
அதற்கு சிபாரிசு செய்து
நம்மை
விமர்சிப்பவர் யாரும்
முன்வரமாட்டார்கள் என்கிற
அசட்டு தைரியமா? 

அல்லது
மெல்ல கொல்லும் விஷமான ஒன்றை
படிப்படியாக குறைத்து
முற்றாக
மக்கள் மத்தியில் இருந்து
இந்த சிகரெட் என்ற நாற்றத்தை
அகற்றிவிட வேண்டுமென்ற நல்ல நோக்கமா?

முதலாவதாக
நான் சுட்டி இருக்கும் வகையில்
அந்த அசட்டு தைரியம்
கட்டாயம்
உங்களிடம் இருக்க வாய்ப்புண்டு!
நான் அறிந்தும்
சிகரெட் மேல் போடப்படும் தீர்வை குறித்து
யாரும் உங்களை கேட்பதில்லைதான்.

இரண்டாவது காரணம் சரியென்றால்...
நீங்கள் இத்தனை தூரம்
கஷ்டம் கொள்ள வேண்டாமே!
ஒரு சட்டத்தால்...
இந்தியாவின் சிகரெட் தயாரிப்பை
இனி இல்லையென்று ஆக்கிவிடலாமே!

வெள்ளைக்காரன்
இந்தியாவை ஆண்ட காலம்தொட்டு
இங்கே இருந்து
நம்மைச் சுரண்டும்
வெள்ளைக்காரக் கம்பெனிகள் சிலவற்றில்
முதன்மையானது...
இந்த சிகரெட் கம்பெனி!.
அவர்களை
ஓர் நல்ல நாள் பார்த்து
ஊர் தேசம் பார்க்க
போகும்படி செய்ய
அரசுக்கு எத்தனை நேரம் பிடிக்கும்?
ஒரு கையெழுத்து இடும் நேரம்!
ஆனால்
செய்ய மாட்டீர்கள்.
தெரியும்.

புகை பிடித்துப் பிடித்து 
மெல்ல இறந்து கொண்டிருப்பவனைப்
பார்க்க உங்களுக்கு ரொம்பவும் இஷ்டம்.
இப்படி சிகரெட்டுக்கு
ஆண்டு தவறாமல்
வரி மேல் வரிப் போட்டு
அவனது
மென்னியை இன்னும் பிடித்து
திருகுவதில் உங்களது இஷ்டமே தனி.
இல்லையென்றால்...
வரியென்றும் / பாவ வரியென்றும்*
சிகரெட் பிடிப்பவர்களை
இப்படி இம்சிப்பானேன்?

( * ஒரே ஆண்டில், இரண்டாம் முறையாக
சிகரெட்டுக்குப் போடப்படும்
வரிக்குப் பெயர்தான்... 'பாவ வரி' )


உங்களுக்கு தெரியுமா.....?
நீங்கள் சிகரெட் பிடிக்காதவர்...
தவிர, நல்லவர்...
அதனால்தான் இந்தக் கேள்வி.
உலகிலேயே
மகா மட்டமான சிகரெட்டுகளை
தயாரிக்கும் நாடுகளில்
இந்தியாவும் ஒன்று.

உலகிலேயே நம்பர் ஒன்
சிகரெட்டுகள் என்று கணிக்கப்படும்
இங்கிலாந்து / அமெரிக்கன் பிராண்ட்
சிகரெட்டுகள் எல்லாவற்றையும் விட
இன்றைய கணக்கில் 
அதிகம் விலைக்கு விற்பது..
நம்ம இந்திய தயாரிப்பு சிகரெட்டுகள்தான்!

டன்ஹில்/ பென்சன் ஹட்ஜெஸ்/
மால்பரோ போன்ற
வெளிநாடு சிகரெட்டுகளின் விலை...
ஒரு பாக்கெட் (20-சிகரெட் கொண்டது)
அதிகம் பட்சம்
இந்திய ரூபாய் மதிப்புக்கு 80 ரூபாய்கள்தான்!

இங்கே படுமட்டமான /
துளியோண்டு நீளம் மட்டுமே கொண்ட
'சிசர் ஃபில்டர்'
பத்து சிகரெட் கொண்ட பாக்கெட் ஒன்றின்
இன்றைய விலை ரூபாய் 45
அப்போ 20 சிகரெட், 90 ரூபாய்!
(குறைந்தபட்ச உதாரணமாகவும்
இந்தியாவில் விலை மலிவான சிகரெட்
இது என்பதற்காக மட்டுமே
இங்கே சிசர் ஃபில்டர் சுட்டப்படுகிறது)

இந்தியாவில் சிகரெட் பிடிப்பவன் எல்லாம்...
உங்கள் பார்வைக்கு
அடிமாட்டைவிட
கேவலமாக போய்விட்டார்கள்.
அதனால்தான்
கேள்விக் கணக்கற்று இம்சிக்கின்றீர்கள்.

மிஸ்டர் சிதம்பரம்...
உங்களது ஒவ்வொரு வரி பட்ஜெட்டும்
மக்களது ஓட்டை கணக்கில் கொண்டே
வரி விதிப்பை செய்கின்றீர்களென்பது
நிஜமெனில்...
சிகரெட் பிடிக்கும்
மாபெரும் கூட்டத்தாரிடமும்
கணிசமான அளவில்
'ஓட்டு பாங்' இருக்கின்றது என்பதை
மறந்து விடாது.நினைவில் கொள்ளுங்கள்.

'அடிப்படையில்...
கேன்சர் விளைவிக்கும் சிகரெட்டுக்காக
இப்படியா மாய்ந்து மாய்ந்து எழுதுவது?'
என்பதாக
சிதம்பரம் அய்யாவுக்கு தோணலாம்.
சரிதான் அது.
ஏதோ...
போதாத காலம்...
கற்றுக்கொண்டுவிட்டோம்,
சனியனை விடவும் முடியலை...
அதனால்தான்
சிகரெட்டின் வரியையொட்டி
உயர்ந்திருக்கும்
அதன் விலையில் மலைத்து
எழுதி மாய்கிறோம்.

சரி...
பட்ஜெட் என்பது
பற்றாக்குறையை முன்வைத்துதானே
வருடா வருடம் போடுகின்றீர்கள்.
அரசு பணத்தை
'லட்சத்தி எழுபதினாயிரம்' கோடிகள் என்றும்
'முப்பதினாயிரம்' கோடிகள் என்றும்
'முன்னூற்றி அறுபது' கோடிகள் என்றும்
சுரண்டி
அரசின் ஆன்மாவிலேயே
கேன்ஸரை உண்டாக்குகின்றார்களே...
அவர்களை நீங்கள்
எளிதில் தப்பவிடுவதினால்தானே
அதனாலும்தானே
இந்தப் பற்றாக்குறை?
அந்தப் பள்ளத்தை இட்டு நிரப்பவும்தானே
வரியென்றும் / ’பாவ வரி’யென்றும்
எங்கள் உயிரை எடுக்கின்றீர்கள்?
அரசின் கஜானாவை சுரண்டியவர்களை மட்டும்
தலைமேல் அல்லவா
தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றீர்கள்!

நிகோடின்...
உயிர்ப் பறிப்பதைவிட
சிகரெட்டின்
அநியாய விலையேற்றத்தால்...
நீங்கள்
எங்களது உயிரை பறிக்கும்
பறிப்புதான் அதிகம்.

*
அனேகமாக
சிகரெட்டுக்குப் பரிந்து
அதன் மீதான வரியினால்
சிகரெட்டின் விலையேற்றத்திற்காக...
எனக்குத் தெரிந்து
ஆவேசப்பட்டவன்
இந்தத் தமிழகத்தில் நானாகத்தான் இருப்பேன்.
இருமிக் கொண்டுதான் இதனை எழுதுகிறேன்
என்பதையும் தயக்கமில்லால் பதிவு செய்கிறேன்.

இதன் பொருட்டெல்லாம் நான்
நாகரீகத்தின் பொருட்டான
வீண் சஞ்சலம் கொள்ளவில்லை என்பதையும் கூட
இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.




தாஜ்