Sunday, March 25, 2012

காஷ்மீரும் கவனிக்கவேண்டிய புத்தகங்களும்

பயங்கரவாதி தாஜ் (புகைப்படத்தை பார்த்து உறுதிசெய்து கொல்லவும். இன்னொரு நகைச்சுவைக் காட்சி என்று குறிப்பிட்டே அனுப்பியிருந்தார் மனுசன்) எழுதிய புதிய கட்டுரை இது. இலங்கைக்கு 'எதிரான' அமெரிக்காவின் தீர்மானம் இந்தியாவின் 'ஆதரவுடன்' வருவதற்கு முன்பு எழுதி அனுப்பினார்.   பதிவிட தாமதமாகிவிட்டது. மன்னியுங்கள். காஷ்மீரின் துயரத்தையும் , இஸ்லாம் மட்டும் பயங்கரவாத மதமாக சித்தரிக்கப்படும் அவலத்தையும் சொல்லும் இரு புத்தகங்கள் பற்றிய தோழர் மீனாவின் (தீராநதி) கட்டுரை தாஜை மிகவும் உலுக்கி விட்டது. 'முள்ளும் மலரும்' மாதிரி 'கெட்டமுஸ்லிம் நல்ல முஸ்லிமாக' மாறுவது இப்படித்தான். இறைவனே, தாஜின் பிழைகளைப் பொறுத்து , பழையபடி தீவிர இலக்கியவாதியாக மாற்றி, மேலும் பிழைகள் பல செய்ய வைப்பாயாக, ஆமீன். இன்னொன்று.. கட்டுரையாளர் மீனாவின் புகைப்படத்தை இணைக்கச் சொன்னார் தாஜ். கிடைக்கவில்லை. ’ஒற்றை விடுதலையைக் கட்டுடைக்கும்’ பெண்ணியம் தளத்தில் மீனாவின் இன்னொரு  கட்டுரை மட்டும் கிடைத்தது (வாய்மூடி இருக்கும் ஓவியம் அவரல்ல என்று நினைக்கிறேன்).  வாசிக்கலாம்.

காட்டுக் கத்து கத்தினாலும்  கவர்ண்மெண்ட்டுகளுக்கு கேட்காது கவிஞரே, காஷ்மீர் மட்டுமா உதாரணம்  ? - ஆபிதீன்

***



கவனம் செய்யத்தக்க புத்தக அறிமுகம்

இம்மாத குமுதம் தீராநதியில் (March-2012) வாசித்த , இரண்டு புத்தகங்களைக் குறித்த ஓர் அறிமுகக் கட்டுரை என்னை துயரத்தில் ஆழ்த்தியது. வெகு காலமாக தீர்க்கப்படாத காஷ்மீரின் அரசியல் பிரச்சனையை ஒட்டி, ஆண்ட/ ஆளும் மத்திய அரசுகளின் அரசியல் ராஜ தந்திரங்களை தீர்க்கமாய் அவ்விரு புத்தகங்களும் பேசியிருப்பதாக அந்தக் கட்டுரை சொல்கிறது.

இந்தியாவில் முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுவதாக ஓர் புத்தகமும்/  பாராளுமன்ற தாக்குதலையொட்டி அப்சல் குருவையும், அப்துல் ரஹ்மான் கிலானியையும் கைது செய்து நடத்தப்பட்ட வழக்கின் பின்னணியில் நடந்தேறிய திரைமறைவு நாடகங்களை இன்னொரு புத்தகமும் ஆழ்ந்து ஆதார முகாந்தரங்களுடன் பேசியிருப்பதாக மேலும் அந்தக் கட்டுரை சொல்கிறது.

தீராநதியில், அப்புத்தகங்களை ஒட்டி மேல் விளக்கங்களோடு  புத்தக அறிமுகம் அளவில் எழுதியிருப்பவரின் பெயர் மீனா. அரசால் நிகழும் மனித உரிமை நசிவுகள் மீது தாங்கவொண்ணா மனத்துயரத்தோடு அந்தக் கட்டுரையை அவர் எழுதி இருக்கிறார்.

மீனா அவர்கள், அந்த இரண்டு நூலையும் நம் பார்வைக்கு வைத்து, அதன் உண்மைகளை; நம்முடைய மறதியில் தோய்ந்துபோன அல்லது அறியப்படாத நம் குறைபாடுகளின் பள்ளங்களில் இட்டு நிரப்பியிருக்கிறார். இந்திய அதிகார வர்க்கத்தினரால் பெரிதும் வஞ்சிக்கப்படும் காஷ்மீர் மக்களின் அவலத்தை தமிழர்களின் பார்வைக்கு தொடர்ந்து கொண்டுவந்து சேர்க்கும் பணியை பலகாலமாக செய்து கொண்டிருப்பதாக மீனா அவர்களை அறியமுடிகிறது. என் கணிப்பு சரியாகும் பட்சம், மீனா இடதுசாரி சார்ந்த அரசியல் பார்வை கொண்டவராகவோ / வக்கீல் பணி செய்பவராகவோ இருக்கக் கூடும்.

'பயங்கரவாதத்தின் வேர்கள்: காஷ்மீரும் உலக அரசியலும்' என்று தனது தீராநதி கட்டுரைக்கு மீனா தலைப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையை, அவசியம் கருதி 'ஆபிதீன் பக்கம்' வாசகர்களுக்காக நான், எழுத முற்பட்ட போது, 'காஷ்மீர் அரசியல்: கேள்விக்குறியாகிப் போன இந்திய முஸ்லீம்களின் வாழ்க்கை!' என்பதாக தலைப்பிட கருதினேன். ஆதங்கப்படுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தோன்ற... 'கவனம் செய்யத்தக்க புத்தக அறிமுகம்' என்று உப்புச் சப்பில்லாததோர் தலைப்பை சூட்டியிருக்கிறேன்.  

காஷ்மீர் அரசியல் சிக்கலை முன்வைத்து நடந்தேறி கொண்டிருக்கும் இந்திய அரசின் மறைமுகமான சாணக்கிய சதுரங்கத்தை அறியநேரும் எந்த ஒருசராசரி இந்தியனும் அறிந்த மாத்திரத்திலேயே மூச்சையாகிவிடுவான். அத்தனைக்கு மறைமுக பயங்கரவாதம் கொண்ட அடாவடியாக அந்தச் சதுரங்க ஆட்டம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. 1947 ஆகஸ்ட்-15ல் இருந்து இந்த விளையாட்டால் மரணக்குழியில் தள்ளப்பட்ட காஷ்மீர் முஸ்லீம்களின் எண்ணிக்கை எத்தனை லட்சமிருக்கும் ? நல்லவர்கள் என்பவர்கள் உறைந்து போகிற அளவுக்கு!  

ஸ்ரீலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்தும், அத்துமீறிய போர் குற்றங்கள் குறித்தும் ஐ.நா.சபையில் அமெரிக்கா விரைவில் கண்டன தீர்மானம் கொண்டுவர இருப்பதை வாசகர்கள் அறியலாம். இங்கே, காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்திய அரசு நிகழ்த்துவதாக அறிப்படும் மனிதஉரிமை மீறல்கள், எல்லை துப்பாக்கிச் சூடுகள், அவ்வப்போது நடந்தேறி கொண்டிருக்கும் அத்து மீறிய ராணுவ நடவடிக்கைக் குற்றங்கள் போன்றனவற்றை நாம் தீர அறியவரும்பட்சம், ஸ்ரீலங்கா குறித்து இன்றைக்கு அமளிதுமளிப்படும் அத்தனைக் குற்றங்களும் இதற்கு நிகரில்லையென்றாகிவிடும்.

அமெரிக்கா, ஐ.நா. வில் விரைவில் கொண்டு வரவிருக்கும் அந்தக் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் தமிழகத்தின் எல்லா கட்சிகளின் எம்.பி.க்களும் ஒருசேரக் குரலெழுப்பி கத்துகிறபோதும் கூட... ஆளும் அரசு அதற்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. அது அசைந்து கொடுக்காததற்கும், முந்தைய ஆளும் கட்சியும் இன்றைய எதிர்கட்சியுமான பாரதிய ஜனதா மௌனம் செய்வதற்கும் பின்னால்... காஷ்மீர் மக்கள் மீது இவர்கள் இருவரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள்/ அத்துமீறிய ராணுவ நடவடிக்கைகள்/ கொன்று குவித்த படுகொலைகள் என்று ஏகத்திற்கும் இருக்கிறது! மறந்தும் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக நின்றுவிட முடியாது.

ஒரு சமயம் தமிழ் மக்களின் ஓட்டை மனதில் கொண்டு, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்பட்சம், நாளை ஐ.நா.வில் காஷ்மீர் அட்டூழியங்கள் குறித்து, இதே முகாந்திரத்தோடு சீனாவும் இலங்கையும் இந்தியாவை கூண்டிலேற்றும். மனித உரிமை நசிவுகளைப் பற்றி பேசும்! இத்தகைய  யோசிப்பால்தான் இன்றைக்கு இந்தியா நழுவுகிறது.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். ஐ.நா.வில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவரவிருப்பது வேடிக்கை என்றால் அதனை வெள்ளையாய் நம்பி, தமிழக 2கம்யூனிஸ்ட் முதலாக பிற ஏனைய கட்சிகளும் குரல் எழுப்புவதென்பது அதனினும் வேடிக்கை. யோசிக்க யோசிக்க சிரிப்பு பிய்த்துக் கொண்டு கிளம்புகிறது. அமெரிக்கா ஏன் இந்தத் தீர்மானத்தை கொண்டு வருகிறதென்று அந்நாட்டின் 'சி.ஐ.ஏ.' தவிர வெள்ளை மாளிகைக்குக் கூட இன்னும் தெரிந்திருக்காது. இந்நிலையில், நம் அரசியல் கட்சிகளுக்கு அது நம்பகமாய் தெரிந்து போனதுதான் ஆச்சரியம்!

போகட்டும், இன்னும் கொஞ்சம் காஷ்மீர் சங்கதிகளை பேசித் தீர்ப்போம்.
காஷ்மீர் பிரச்சனைகளை எத்தனை சிக்கலாக இருப்பிணும் மத்திய அரசால் பேசி தீர்க்க முடியாதா என்ன? அத்தனைக்கு முடியாதவர்களா நம் ஆட்சித் தலைவர்கள்? கஷ்மீர் மக்கள் இந்திய வரைப்படத்திலிருந்து தனியே பிரிந்து போக எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்றால்... கொஞ்சம் கஷ்டம்தான். என்றாலும் பேச்சின் வலிமை மீது எனக்கு நம்பிக்கையுண்டு. மீண்டும் மீண்டும் அம்மண்ணின் மக்கள் தலைவர்களை அழைத்து திரும்பத் திரும்ப பேசினால் போச்சு! எத்தனைப் பெரிய போரையும் கடைசியில் முடித்துவைப்பதென்பது பேச்சு வார்த்தைகள்தானே! ஜனநாயகத்தின் அடிப்படை அஸ்திவாரமே சுதந்திரமான பேச்சுதானே! நிச்சயமாய் பேசி தீர்வுகாண முடியும்.

இந்தியாவின் நடமாடும் அணுகுண்டாக அறியப்படும் மதம் சார்ந்த - அதன் அரசியல் சார்ந்த தலைவர்கள் இடம் தருவதில்லை. தவிர, அவர்களின் நிழல் படிந்த அரசின் கொள்கை வகுப்பாளர்களும் இடம் தருவதில்லை!
அது முடியாது போகிற பட்சம் இப்படியும் கொஞ்சம் யோசிக்கலாம்.

காஷ்மீர் பிரச்சனைகளுக்குப் பின்னால் பாகிஸ்தான் கை இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல எல்லா உலக நாடுகளுக்கும் அது தெரியவும் தெரிந்திருக்கிறது. இந்த நிஜத்தின் அடிப்படையில் அந்த நாட்டின் மீது படையெடுக்க நாம் ஏன் தயங்க வேண்டும்? நேர்மை என்பதே கூட அந்நாட்டின் மீது படையெடுப்பாகத்தான் இருக்க முடியும்?

இடைக்காலத்தில், இந்தியா வல்லரசாக கீர்த்தி பெற்றிருப்பதை நம் தலைவர்கள் பலர் பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானை இல்லையென்று ஆக்குவதற்கு அதிகம் நேரமும்கூட பிடிக்காது. அதைவிட்டு, 'காஷ்மீர் பிரிவினை' என்கிற பழைய குழப்பச் சங்கதியையே மீண்டும் மீண்டும்   முன்வைத்து, அவ்வப்போது நேரடியாகவும், மறைமுகமாகமாகவும் இஸ்லாமியர்களை காஷ்மீருக்குள்ளும், காஷ்மீருக்கு வெளியேயும் கொன்று அழித்துக் கொண்டிருப்பதினாலான அரசின் கணக்கும்தான் என்ன?

காஷ்மீர் அரசியல் சிக்கலை மேலும் மேலும் தீரவொட்டாத இமாலயச் சிக்கலாக மாற்றி, மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கைகை கொத்துக் கொத்தாக குறைக்க நினைக்கிறதென அரசியல் நோக்கர்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இந்த அறமற்ற ஆசை உண்மையா?

அந்த அரசியல் நோக்கர்களின் கணக்கை கூட்டிக் கழித்துப் போட்டு யோசிக்கிற போது, அடுத்த நூற்றாண்டில், இந்திய முஸ்லீம்களின் ஜனத்தொகை சரி பாதிக்குமேல் குறைந்துப் போகும் என்கிற நிஜம் பிடிப்பட மனசு சுடுகிறது. இந்த மனச்சூடு, இன்றைக்கு காஷ்மீரில் காஷ்மீருக்கு வெளியே அழிபடும் இஸ்லாமியர்களை மனதில்வைத்து எழுந்த சூடு என்று மட்டும் கருதவேண்டாம். எந்தவோர் நாட்டிலும் பெரும்பான்மையினர் சிறுபான்மை மக்களை இப்படி சாணக்கியம் புரிந்து, சக்கர வீயூகத்தில் சிக்கவைத்து திட்டமிட்டு அழிக்க முனையும்தோரும் எழும் நெருடலைவொத்த நேருடல்தான் இது.

இப்படியெல்லாம் மனதைத் திருகித் திருகி யோசிக்கவைத்து, அதைப் பிசைந்தெடுத்த அந்தப் புத்தக அறிமுகம், தவிர்க்க முடியாத - கவனம் கொள்ளத்தக்க அறிமுகமே! மீனா குறிப்பிட்டு இருக்கும் அவ்விரு புத்தங்களையும் வாசிக்க வேண்டும். மீனாவுக்கு மிகுந்த நன்றி! -தாஜ்

*

மீனாவின் கட்டுரை எழுத்திலிருந்து சில குறிப்புகள்:

இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் வாங்கிய நூல்களுள் இரண்டு முக்கியமான நூல்களை வாசித்தேன். ஒன்று, நந்திதா ஹக்சரின் 'தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத்துயரமும்' (விடியல் பதிப்பகம்). மற்றொன்று, மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்' (முரண் பதிப்பகம்). இரண்டுமே மொழிபெயப்பு நூல்கள். முதல் நூலை அருள்குமரனும் இரண்டாவது நூலை அ.குமரேசனும் மொழியாக்கி இருக்கிறார்கள்.
*
நந்திதா ஹக்சர்: ஜவகர்லால் நேருவின் அந்தரங்கச் செயலாளராகவும் வெளியுறவுத்துறையில் முக்கிய பொறுப்புகள் வகித்தவராகவும் இருந்த பி.என்.ஹக்சரின் மகள். பிறப்பால் காஷ்மீர் பண்டிட் (பிராமணர் ) என்பதை நமது சனாதனத் தமிழ்ச்சூழலில் அழுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது.

*
மஹ்மூத் மம்தானி: கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிற மஹ்மூத் மம்தானி, ஆப்ரிக்கா மற்றும் சர்வதேச அரசியல், காலனிய, பின் காலனிய ஆய்வுகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 'சலாம் பாம்பே' முதலிய புகழ்பெற்ற படங்களை எடுத்தவரும் இந்த ஆண்டு பத்மபூஷண் விருதுபெற்றவருமான மீரா நாயரின் கணவர். எட்வர்ட் சேதிக்குப் பிறகு இத்துறையில் முக்கியமாகப் பேசப்படக்கூடிய இவர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உருது, இந்தி, மலையாளம் முதலான மொழிகளில் இந்நூல் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
*
நந்திதா ஹக்சரின் 'தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத்துயரமும்':

பிரதமர் மன்மோகன்சிங், சட்ட அறிஞர் உபந்திர பக்ஷி, வரலாற்றறிஞர் பிபன் சந்திரா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எழுதப்பட்ட திறந்த மடல்களையும் ஒரு நீதிக்கதையையும் உள்ளடக்கி இருக்கிறது நந்திதா ஹக்சரின் தொகுப்பு. டிசம்பர்13,-2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் இந்தியக் காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் வன்முறைகளை இத்தொகுப்பில் அம்பலப்படுத்துவதன்வழியே இந்திய தேசியத்தின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுகிறார் நந்திதா!
*
டிசம்பர்-13/2001 ஆம் நாள் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் 8 பாதுகாப்புப் படையினரும் ஒரு தோட்டப்பணியாளரும் தாக்குதலில் ஈடுப்பட்ட 5பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளெனக் 'கண்டுப்பிடிக்கப்பட்டு' தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவர் : டில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் ரகுமான் கிலானி மற்றும் அப்சல் குரு. நந்திதா, கிலானியின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கர்களுள் ஒருவர்.
*
குற்றமற்றவர் என்பது நிறுவப்பட்டு  உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றத்தாலும் கிலானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கிலானியின் கைது, விசாரணை என்கிற பெயரில் காவல்துறை செய்த சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், மதவாத வன்முறைகள், நீதிமன்றங்களின் பக்கச்சார்புகள், ஊடகங்களின் கள்ள மெளனம், அப்சல் குருவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என அத்தனையும் தொகுத்தளிப்பதின் மூலம் இந்திய தேசியத்தின் பெயரால் மேலெழுந்துள்ள பாசிச மதவாதப்போக்கை இத்தொகுப்பு ஆவணப்படுத்தியிருக்கிறது.
*
இந்த ஆவணங்களைத் தொகுத்தளிப்பதன்வழியாக நந்திதா நம்முன் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்: இந்திய அரசு, காவல்துறை, நீதிமன்றம் மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பான்மை மக்களும்கூட கிலானிக்கும், அப்சல் குருவுக்கும் எதிராக நின்றது எப்படி? விசாரணைக்கு முன்பே கைது செய்யப்பட்ட மறுகணமே கிலானியையும் அப்சல் குருவையும் குற்றவாளிகளாக்கி ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்தியது எவ்வாறு? சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத போதும் கிலானியும் அப்சல் குருவும் இன்றளவும் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படுவது எதனால்? குற்றம் சுமட்டப்பட்டவருக்கு தனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு வாய்ப்பே அளிக்காமல் உச்சபட்சமான மரணதண்டனையை அளித்திருக்கும் அநீதிக்கு எதிராக குரலுயர்த்த பலருக்கும் மனமும் துணிவும் வராமற் போனது ஏன்?
*
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலில் விடை அளிக்கவேண்டுமானால் கிலானியின் கைது குறித்து நந்திதா சொல்லியதைத்தான் கூறவேண்டும்: "கிலானி குற்றவாளி என அனைவரும் நம்பினர். ஏனெனில், அவர் ஒரு காஷ்மீர் இஸ்லாமியர். தாடி வளர்த்துள்ளார். அரபுமொழி கற்பித்தார். அவரைக் குற்றவாளியாக்க இவை போதாதா? பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது என்பது வியப்புக்குரியது அல்ல.

*

மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்':

மாலேகான் குண்டுவெடிப்பு, குஜராத் இனப்படுகொலை, நார்வே தாக்குதல் என எந்த ஒரு வன்முறைத் தாக்குதலும் இந்துத்துவ, கிறிஸ்துவ பயங்கரவாதங்களாகப் பார்க்கப்படாதபோது 9/11 ஐ ஒட்டி இஸ்லாம் மட்டும் பயங்கரவாத மதமாக சித்தரிக்கப்படுவது எப்படி? ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்திற்கும் பயங்கரவாதத்திற்குமான முடிச்சு இறுக்கிக் கட்டப்பட்டது எப்போது? பயங்கரவாத வன்முறை உலக அளவில் மலிந்துபோயிருக்கும் சூழலில் நாம் விடை தேடவேண்டிய இந்தக் கேள்விகளுக்கு பனிப்போர், அமெரிக்கா கூலிப்படை, பயங்கரவாதம் இஸ்லாம் என்பதான விரிந்த தளங்களில் வைத்து பதிலளிக்கிறது, மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்.'
*
உலகம் முழுவதும் மொசாம்பிக் நாட்டின் ரெனாமோ முதல் அங்கோலாவின் யூனிட்டா வரையில், நிகரகுவாவின் காண்ட்ராஸ் முதல் ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன் வரையில் பயங்கரவாத சார்பு இயக்கங்களுக்கும் அமெரிக்கா தோள்கொடுத்தது. சுருக்கமாகச் சொல்வதானால் பல்வேறு நாடுகளில் ஆட்சிக்கு வந்திருந்த கொரில்லா போராட்டக் குழுவினரையும் சோவியத் ஆதரவாளர்கள் என்று கருதிய அரசுகளையும் ஒழித்துக்கட்டுவதில் பயங்கரவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது; இதற்கெனவே பயங்கரவாதிகளைத் தட்டிக்கொடுத்து வளர்த்தது.
*
நிகரகுவாவின் மிகப்பெரும் பயங்கரவாத வன்முறை அமைப்பாக உருவாகியிருந்த 'கான்ட்ராவினருக்கு' அதிபர் ரீகன், 'விடுதலைப் போராளிகள்' என்று பட்டமளித்தார். இவர்கள் நம் நாட்டை நிறுவிய முன்னோர்களுக்கு இணையானவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
*
பிற்காலத்தில், வெள்ளை மாளிகையின் புல்வெளித்திடலில் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன் தலைவர்களை ஊடகச் செய்தியாளர்களுக்கு தடபுடலாக அறிமுகப்படுத்திய ரீகன், 'இந்த மேன்மையானவர்கள் நெறிமுறைகளைப் பொறுத்தவரை அமெரிக்காவை உருவாக்கிய முன்னோர்களுக்குச் சமமானவர்கள்' என்று உச்சிமுகர்ந்தார்.
*
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஆயுதம்தாங்கிய போராட்டம் எதையும் காணாதிருந்த உலகளாவிய இஸ்லாமியக் குழுக்களை ஒரு பயங்கரவாத யுத்தத்திற்கு தயார்படுத்திய அமெரிக்கா வெறும் பயிற்சியை மட்டும் அளிக்கவில்லை. பயங்கரவாதத்தை தனியார்மயமாக்கி ஒரு பயங்கரவாதப் போர்ப்படையையே உருவாக்கி இருந்தது. உலக அளவில் சிதறி இருந்த இஸ்லாமிய தீவிரக்குழுக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்ததும் இந்தப் பயிற்சி முகாமில்தான்.
*
அமெரிக்கா, சோவியத்தை மட்டுமல்ல தன்னெழுச்சியாகப் போராடிய அத்தனை தேசியவாத அரசுகளையும் அழித்தொழித்தது. அமெரிக்க நாட்டாமையின் கட்டளையை மீறுகிற எந்த ஒரு ஆட்சியும் எத்தகைய விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும் என்பதற்கு சதாம் உசேன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார் மஹ்மூத். ஒசாமா பின்லேடனை உருவாக்கிக் களமிறக்கிய வல்லரசு, அவரை உயிருடன் பிடித்துக் கொன்று உடலைக் கடலில் வீசியெறிந்ததிலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

***
நன்றி: நந்திதா ஹக்சரின் 'தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத்துயரமும்':
நன்றி: மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்':
நன்றி: விடியல் பதிப்பகம்/ முரண் பதிப்பகம்
நன்றி: மீனா
நன்றி: குமுதம் தீராநதி, மார்ச்-2012
எழுத்து, வடிவம், தட்டச்சு: தாஜ் (satajdeen@gmail.com )
5:45 PM 20/03/2012

***
பின் குறிப்பு:
குமுதம் தீராநதியில், மீனா அவர்கள் எழுதிய கட்டுரையின்
முழுவடிவம் காணுங்கள்.
நன்றி.
-தாஜ்

***









***
நன்றி : மீனா, தீராநதி, தாஜ்


6 comments:

  1. ஆபிதீன்:
    //தாஜின் பிழைகளைப் பொறுத்து , பழையபடி தீவிர இலக்கியவாதியாக மாற்றி, மேலும் பிழைகள் பல செய்ய வைப்பாயாக, ஆமீன்.//
    "ஆமீன்"
    *
    Thanks Abedheen.
    நுட்பமான உழைப்பில்
    பதியப்பட்டிருக்கிறது பதிவு,
    சந்தோஷம்.
    -தாஜ்

    ReplyDelete
  2. இதுவரை தோன்றிய மதங்களில் இஸ்லாத்தை போல
    விமர்சிக்கபட்ட மதம் வேறொன்றுமில்லை."நீங்கள்
    இதனை சிந்திக்க வேண்டாமா?"என்ற வசனத்தை
    வசதியாக மறந்த நம் சமுதாயமும்,இது வளர்ந்து
    கிளைப்பரப்பி,வியாபித்துவிட்டத்தில் அவர்களின்
    பொறாமையும் தான் முதன் காரணம்.இதற்கு
    முந்தைய சரித்திர நிகழ்விலிருந்து இன்றைய
    காஷ்மீரம் வரை இதுதான் நிலை.தீவிரவாதமே
    முஸ்லிம்களின் மனோநிலை என மீடியாக்களின்
    உதவியுடன் உலா வரும் இந்த அறிவுஜீவி(!)களின்
    அராஜகம் நின்றபாடில்லை.நேற்றிலிருந்து இன்னுமொரு
    கவலை:டோனிபிளேர் குரான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்
    -லண்டன் டெய்லி மெயில்.
    (இந்த பயங்கரமெல்லாம் போதாதென்று உங்கள்
    புகைப்படம் வேறு!!)

    ReplyDelete
    Replies
    1. //இந்த பயங்கரமெல்லாம் போதாதென்று உங்கள்
      புகைப்படம் வேறு!!// முகத்தை மூடிக்கொண்டு படிக்கவும் என்று சொல்ல மறந்துவிட்டேன் மாலிக்!

      Delete
  3. மத்தவங்களை குறை சொல்வதற்கு முன் நம்மை கொஞ்சம் பாருங்கள், "நோயாளிகள் இருக்கிறார்கள், மைக் கட்டித் தொழாதீர்கள்" என்று சொன்னதற்கு துப்பாக்கியைத் தூக்கியவர்கள்தானே நாம்(தௌஹீதுகள்)

    அது சரி எங்க தாஜ் தீவிரவாதியாவா இருக்கிறார்? அப்புறம் சீர்காழி (நாக்)ஸேட்டிலைட்ண்ணு சொல்லுவீங்க..!

    தாஜ், இனிமே இந்த மாதிரி வைதீஸ்வரன்கோயில்லெ கொடுக்கிற போட்டாவுல்லாம் கொடுக்காதீங்க.

    ReplyDelete
  4. வேலை பளுவின் காரணத்தால் அதிகம் வாசிக்க முடியவில்லை. இன்று தாஜின் கட்டுரையை படித்ததும் புல்லாங்குழலில் மீள்பதிவு செய்துள்ளேன். நன்றி நானா!/ தாஜ்.

    ReplyDelete
  5. கவனிக்கத்தக்க புத்தகங்கள் படித்தேன். இருக்கிற கவலை காணாதென்று மேலும் மேலும் துயரம் படிகிறது. இந்திய முஸ்லிம்களின் நிலை உலக முஸ்லிம்களின் நிலை எங்கள் நிலை என்று பாரச்சுமையாகிறது. உலகில் 100 கோடி முஸ்லிம்கள் என்று பெருமையாகப் பேசிக் கொள்வோம். 85 கோடி முஸ்லிம்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாதென்ற உண்மையை மிக சுலபமாக மறந்து விடுவோம். கொலவெறி பாடலை உலகமகா இசையாக போற்றிப் புகழும் பாரத தேசத்தின் முதல் மகனுக்கு முஸ்லிம்களின் அழுகுரல் காதில் விழாமல் போவது ஒன்றும் புதிதல்ல. புத்தகங்களைக் கொண்டு வந்த விடியல் பதிப்பகத்திற்கு மனசு குளிர்ந்த வாழ்த்துக்கள். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் வரை தூக்கம் வராது. இங்குள்ள எங்கள் புத்தகக் கடைகளில் எண்டமூரியும் ராஜேஸ்குமாரும்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். கட்டுரையை கனதியாக எழுதிய அருமைத் தம்பி தாஜுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் ஹனீபா காக்கா.

    ReplyDelete