Sunday, March 4, 2012

காலத்தை வென்ற கவிதைகள் (பசீல் காரியப்பர்​)


அலுவலகத்தில் வேலையும் செய்யவேண்டியிருக்கிறது காக்கா என்றால் கேட்கமாட்டேன் என்கிறார் ஹனீபாக்கா. (அனுப்பியிருந்த) பாவலர் பசீல் காரியப்பரின் மூன்று கவிதைகளுக்கு என்ன நடந்தது? என்று ஒரே மிரட்டல்!. அதனால், காலத்தை வென்ற கவிதைகள்' பத்தி இங்கும் தொடர்கிறது.... அப்புறம் ஒரு நல்ல செய்தி. 'நான், புலி , நினைவுகள்' விஸ்வரூபமெடுத்து வருகிறதாம். 'நிறையச் சங்கதிகள் சஞ்சலங்கள் ஞாபகத்திற்கு வருகிறது ; இத்தனை கொடுமைகளையும் தாங்கி வாழ்ந்திருப்பது பெரும் சாதனையாகவும் தெரிகிறது' என்கிறார் ஹனீபாக்கா.  - ஆபிதீன்


*** 


கிழக்கிலங்கை கவிதைப் பாரம்பரியத்தில் நீலாவணனுக்கு அடுத்து வந்தவர், எமது மதிப்புக்குரிய கவிஞர் மர்ஹூம் பசீல் காரியப்பர் அவர்கள். 1958 முதல் ஆசிரியராகி இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியப் பணி செய்தவர். 1978ல் கொழும்பு வளாக தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் இவரது "தங்கம்மா" பரிசு பெற்றது. தங்கம்மா பரிசு பெற்றவுடன் சம்மாந்துறையில் நடந்த பாராட்டு விழாவில் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை,

"கவிஞன் தோன்றிவிட்டான்
பசீல் காரியப்பர் கண்டீர்" என்று கூறி பாவலர் என பட்டமும் சூட்டி மகிழ்ந்தார்.

இவரின் ஆத்மாவின் அலைகள் தொகுதியிலிருந்து மூன்று கவிதைகளை ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

பசீல் காரியப்பரின் கவிதைகளுக்கு முன்னுரை எழுத வந்த கவிஞர் டாக்டர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் உயிரெனும் கவிதை பற்றி குறிப்பிடுகையில், "நான் எத்தனையோ முறை தீக்குச்சியைப் பற்ற வைத்திருக்கிறேன். அது ஒரு கவிதையின் அதிர்வை எனக்குள் எழுப்பியதில்லை. நண்பருக்கு அது கவிதையின் அதிர்வைத் தந்திருக்கிறது. அதை ஒரு படிமமாக்கி, அதற்குள் வாழ்வின் தத்துவத்தை சிறைப்பிடித்திருக்கிறார்" என்கிறார்.

உயிர்

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
குச்சி அதன் பெட்டியுடன்
கூடி உரசியதால்
விச்செனவே சுடரொன்று
வீறிட்டெழுந்து இங்கு
நின்று சுழன்று
சில நொடியில் மறைந்தது காண்!
சென்றதுவும் எத்திசையோ?
சேர்ந்ததுவும் எங்கேயோ?
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
வீணே நரம்புகளில்
விரல்கள் விளையாடத்
தேனாம் இசையுண்டோம்
சேர்ந்ததுவும் எங்கேயோ?
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
சுழன்ற சுடராமோ
சுவைத்த இசையாமோ
தளர்ந்த உயிர் உடலை
தவிர்த்த நிலை எதுவோ?
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
1962

-------------------------

அரிய பிறப்பு

தூய நெறியோனைச்
சுமந்து சுமந்து உருவே
தேய்ந்து நான் என்னைத்
தேய்த்தழித்துக் கொள்ளுகிறேன்
எண்ணத்தில் தூய்மையுடன்
இறைவனிடம் நித்தம் நித்தம்
கண்ணீர் பெருக்கிக்
கரைந்துருகி ஆட்கொண்ட
தீய உணர்வுகளை
திசை மாற்றும் இச்சைகளை
சின்னத்தனங்களினைச்
சீரழிவின் வேள்விகளை
எண்ணி உருகி மனம்
இளகித் தெளிவுபெற
பழசுகள் அழிந்து
புதுப்பயிருக்கு உரமாகி
புத்துயிர் பெறவும்
வரும் புது வாழ்வில்
பொருள் பட வாழவும்
எத்தனங்கள் செய்யும்
இதயத்தைத் தாங்கியுள்ள
தூய நெறியோனைச்
சுமந்து சுமந்து உருவே
தேய்ந்த நான் என்னைத்
தேய்த்தழித்துக் கொள்ளுகிறேன்.
தன் குறைநிறைகளினை
தானே அறிந்து கொண்டு
சுண்ணாம்பு பூசாமல்
சுரண்டி அழுக்கு அகற்றிப்
பொன்மனத்தைப் பெறும் வழியில்
போர்க்களங்கள் கண்டு வந்து
தன்னைப் போல் மற்றவரை
தனித்தனி உணர்ந்து கொண்டு
துன்பமுறும் மனிதருக்குத்
தொண்டு செய்து பாவிகளில்
அன்பு பாலித்து அவர்களுக்கு
அருள் மனத்தால் மருந்து செய்து
தெம்பு தரும் வாழ்க்கைக்குத்
தெளிவான வழிகாட்டி
நம்பிக்கை ஊசி பாய்ச்சி
நலிந்த மனிதர்களைத்
துன்புமுறுத்தும் வலியவரைத்
துணிவோடு எதிர்த்து நின்று
காணும் பொருளில் அதன்
கர்த்தாவைக் கண்டு
மன ஏனத்தில்  அமுதுண்ண
எத்தனங்கள் செய்து வரும்
தூய நெறியோனைச்
சுமந்து சுமந்து உருவே
தேய்ந்து நான் என்னைத்
தேய்த்தழித்துக் கொள்ளுகிறேன்.
என் எஜமான் என்னை
இழுத்தரைத்துத் தேய்க்கின்றார்
என்றாலும் நான் எள்ளளவும்
ஹிம்சை எனக் கொண்டதில்லை
புனிதர்கள் வழியில் தூய
பணிகளைச் செய்யும் இந்த
மனிதருக்காய்த் தேய்தல்
மகிழ்ச்சி நான் பெற்ற வரம்
என்றே தொழும் பள்ளி
ஏறு வாயில் தனிலே
அன்று செருப்பொன்று
அடியேன் தனைப் பார்த்து
மெல்ல நகைத்ததடா
மின்னியதோர் ஒளிக்கீற்று
உள்ளே இருக்குமந்த
ஒரு மனிதருக்காகவேனும் அந்தப்
பள்ளி மகிழ்ந்திருக்கும்!
பணி செய்யக் காத்திருக்கும்!
செருப்பு அரிய ஒரு பிறப்பு!
1964
--------------------------------

அழகான ஒரு சோடிக் கண்கள்

அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!
புவியியல் கற்றிடும் வேளை - அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடும் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை - கல்வி
தங்குவதெங்கே மனம் ஒரு பாலை!
ஆட்சியியில் மறுபாடம் - நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்!
ஆட்சி செய்யுமுனைச் சாடும் - நான்
ஆளிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!
தாய் மொழிப் பாடம் நடக்கும் - நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்!
"ஏய்!" என்று என்னைப் பிடிக்கும் - மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்.?
தத்துவப் பாடம் நடக்கும் - அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்!
வித்தையில் பித்துப் பிடிக்கும் - நம்
வீட்டார் அறிந்தால் கன்னம் தடிக்கும்!
1966

குறிப்பு: இந்தப் பாடல், இலங்கை வானொலியின் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடல்களில் ஒன்று. முப்பதாண்டுகளுக்கு முன்னர், நண்பர் பசீல் காரியப்பர் அவர்களும் நானும் சாய்ந்தமருது கடற்கரையில் இரவு வேளையில் அமர்ந்திருந்து இந்தப் பாடலைப் பாடி மகிழ்ந்த தருணம் என் நெஞ்சில் அலைமோதுகிறது. -  ஹனீபாக்கா

***
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )

No comments:

Post a Comment