Monday, March 5, 2012

உமா மகேஸ்வரி: கவிதைப் பெண் - க.நா.சு.தாஜ்

'பனிப்புல் பாதை வழியே நடக்கும் இதம்' என்கிறார், உமா மகேஸ்வரியின் கவிதைகளை. இலங்கை எழுத்தாளர் ஹனீபாக்காவின் செல்லம் அனார் போல சீர்காழி கவிஞரின் செல்லம் இந்த உமா மகேஸ்வரி. எழுத எழுத அலுக்க மாட்டேன் என்கிறது தாஜுக்கு. ‘"எழுத்தின் மூலம் உலகைத் திருத்தும் உத்தேசமோ, நீதி புகட்டும் லட்சியமோ எனக்கில்லை’ என்று சொல்லும் உமாவை எனக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த கட்டுரைக்காக அனுப்பிய தாஜின் புகைப்படம்தான் பிடிக்கவில்லை. என்னய்யா இப்படி என்று கேட்டால் அதைவிட பயங்கரமான ஃபோட்டோலாம் நம்மள்ட்ட இருக்குய்யா என்கிறார்! - ஆபிதீன்


***


உமா மகேஸ்வரி: கவிதைப் பெண்
- க.நா.சு.தாஜ்


கவிஞர் உமா மஹேஸ்வரியையும் சேர்த்து
தமிழில்
பெண் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்!
நம் புருவங்களை நெளியவைக்குமான அதிகம்!
நம் பெண்களிடம்
இந்த அளப்பரிய
புலமைப் பெருக்கத்திற்கு
என்ன காரணமாக இருக்க முடியும்?
தெரியவில்லை.
அறிவுசார்ந்த செழிப்பில்
நம் பெண்கள்
இன்றைக்கு கல்வித்துறை தொட்டு
அநேக துறைகளில் வெற்றி கொள்வதென்பது
சாதாரணமாகிவிட்டது.
இதைச் சுட்டி
காரணம் அதுவாகவே இருக்கும்
என்கிறார்கள் நண்பர்கள்.
அப்படி இருக்குமோ?
இருக்கலாம்.
தெரியவில்லை.
ஓர் ஆய்வில்
நம் பெண்கவிஞர்கள்
அத்தனை பேர்களுமே மஹா கெட்டி!
சோடை என்பதும் கிடையாது.
இருக்குமென்றால்...
அது ரொம்பக் கம்மி.
இல்லை,
இன்னும் கூடுதலாக இருக்குமென்றால்...
அந்தக் கூடுதல்
நேற்று பெய்த மழையில்
இன்றைக்கு கவிஞர்களானவர்கள்!
வசனங்களையும்
சாதாரண உணர்ச்சி வெளிப்பாடுகளையும்
கவிதையென்று நம்பி
முதல் தளமேறி,
அங்கே குதித்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களது பெருக்கத்தை
கணக்கில் எடுத்தும்தான் என்ன செய்ய?
ஆய்வினூடே...
கண்களை இன்னும் இடுக்கி
வேறு கோணத்தில் அலச,
நம் பெண்கவிஞர்கள் பலரிடம்
தங்களுக்கென்று சொல்லத் தகுந்த
தனித்துவமிக்க செய்திகளும்
புரட்சிகரக் கருத்துக்களும்
உலகலாவிய கோட்பாட்டு நெறிகளும்
அவரவர்களின் ஈர்ப்புகளுக்கேற்ப
அவைகளில் ஏதேனும் ஒன்று 
அவர்களின் நிழலாகத் தொடர்கிறது.
அதுவின்றி அவர்களால்...
அவர்கள் கருதும்
'சிறந்த' கவிதைகளை எழுத இயலாது.
இங்கே குறிப்பிடத் தகுந்த சோகமே அதுதான்.
அவர்களது பார்வையில்
பெரும்பாலும்
சிறந்த கவிதையென்பது
'புரட்சி' சார்ந்ததாக இருக்கும்.
அந்தப் புரட்சி சார்ந்த கவிதைகள்
பல நேரம் மிகைத் தொனியோடு
அறுதியிட்டு உரக்க முழங்கும்.
அதிர்வலைகளை
கட்டாயம் அது எழுப்பும்.
அதனால் கிட்டும் புகழ்
சம்பந்தப்பட்ட கவிஞர்களின் தேவை.
தங்களது கவிதை வெற்றியை
வாசிப்பனின் ஆழ்ந்த ரசனையில்
கொண்டுசேர்ப்பதை விட்டும்
துணுக்குறும் அவனது வியப்பில்
நிறைவுகொண்டு விடுவார்கள்.
இந்த அதிர்வலைகளால்...
அவர்களது கவிதைகளின்
அலகுகள் தேய்மானம் கொண்டு
விசேஷ மென்மைகளும் சிதைய
கருவிலேயே அது ஊனமாக உருக்கொள்கிறது.
அப்படியே..., பிறக்கவும் பிறக்கிறது.
ஊனத்தை வாசிக்கும் வாசகன்
இடிந்து போகிறான்.
கவிதைகளை நேசித்து 
கொள்ளும் சந்தோஷத்திற்குப் பதிலாக
மிரட்சியும் கழிவிரக்கமும் கொள்கிறான்.
கவிதை என்பது பெண்ணையொத்த
நளினங்கள் கொண்டது.
அதன் இடைவளைவுகள்
இதமான மென்மைகள்
பெண்ணைக் காட்டிலும் அதிகம்!
பெண்ணின் மனதை
புரிந்து கொள்ள இயலாதது மாதிரியே
ஒரு கவிதையின்
அடி ஆழத்தையும் அத்தனைச் சீக்கிரம்
தேர்ந்த வாசகனாலும்
கண்டடைந்துவிட முடியாது.
அத்தகையதோர் நளினத்திற்கு...
மீசையெல்லாம் வரைவதென்றால் எப்படி....?
கஷ்டம்.
கவிதைகளால்...
உலகை மாற்றிவிட முடியுமென்று
யாரோ இவர்களுக்கு
தவறுதலாக உபதேசம் செய்திருக்கிறார்கள்.
அதைப் பிடித்துக்கொண்டு,
ஆதி தொட்டு
ஆளுமை கொண்ட ஆண் வர்க்கத்தை
உருட்டிப் புரட்டிவிடும் நெம்புகோலாக
கவிதையை
இவர்கள் நம்பத் தொடங்கிவிட்டதும்தான்
எத்தனை பேதமை!
'யுட்டோபியன்' உலகை நம்பும்
பக்தர்களைக் காட்டிலும்
பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.
ஆண் ஆதிக்கத்தை
அந்த க்ஷணமே
ஒழித்துக்கட்டவென்று
கவிதையெழுதக் கிளம்பிய
பெண் கவிஞர்கள் நம்மில் அதிகம்.
இவர்களது கவிதைகள்
அதிகம் பேசும்
புரட்சியின் மையமும் அதுதான்.
ஆண் ஆதிக்க எதிர்ப்புதான்
இவர்களின் கவிதைகளது தலையாயத் தலை.
இதனாலேயோ என்னவோ
இவர்களது கவிதைகள்
எப்பவுமே எக்குத் தப்பாக திருகிக் கொள்கிறது.
அவர்கள் கைக்கொள்ளும் கவிதை யுக்திகளும்
தேர்வு செய்து புழங்கும்
விஷேச கவிதை மொழிகளும்
வாசிப்பவனிடம்
ஒரு நிமிஷ உணர்வலைகளை எழுப்புவதைத் தாண்டி
ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது.
விடியலுக்கு முன்னே
உதிர்ந்துவிடும் மலர்கள் மாதிரி.
இன்னொரு பக்கம்...
வாழ்ந்துப் பெற்ற அனுபவங்களை
கவிதையெனும் அச்சில்
வாசனை மாறாமல் வார்த்தெடுக்கும்
அசல் கவிதைத் திறனை
அவர்கள் கைநழுவ விடுவதாகவும் முடிகிறது.
கடைசியில்
அவர்கள் தேட முனையும்
நிலையான கவிதை வெற்றி...
மின்னலாகிவிடுகிறது.
காட்டில் நிலா...
கடலில் மழை...
அவர்களது கவிதை உழைப்பு
இப்படி, அர்த்தமிழப்பதும்தான் எத்தனைச் சோகம்.
*
நம் பெண் கவிஞர்கள்
தங்களது கவிதைகளால்...
உலகை மாற்றுவது கிடக்கட்டும்,
ஆண் ஆதிக்கத்தின் சுண்டு விரலையும்
அதனால் அசைக்க முடியுமாயென்ன?
யோசித்தார்களா?
சின்னதான இந்த யதார்த்தத்தை
சம்மந்தப்பட்ட நம் பெண் கவிஞர்கள்
இன்னமும்கூட
புரிந்துணர்ந்ததாக தெரியவில்லை.
புரட்சியைச் சுமக்கும்
அவர்களது கவிதைகள்
நேற்று மாதிரியே இன்றைக்கும்
அர்த்தமற்று
எட்டுத் திக்கும் வேகமெடுத்து விரைகிறது!
ஆனால்,
நம் பெண்கவிஞர்கள் தங்களது கவிதைகளில்
தலையாய் முன்வைக்கும்
அவர்களது மனத்துயரம் சரியானது.
எதிரிகளை எதிர்கொள்ள
அவர்கள் கைக்கொள்ளும் ஆயுதம்தான்...
இங்கே கேள்விக்குறி.
மலரெல்லாமா...ஓர் ஆயுதம்?
ஆயுதத்திற்கென்று
ஓர் கனம் வேணாமா?
நம் பெண்கவிஞர்கள்
எதிர் நிறுத்தும் ஆண்ணாதிக்க வர்க்கம்
வக்கிரத்திற்கு பேர் போனது.
சரியாக சொன்னால்..
புராணம் பேசும் அரக்கக் கூட்டத்தின்
ஒன்றுவிட்ட சகோதரர்கள்.
பெண்களை இவர்கள்
வஞ்சித்துக் கொண்டு இருப்பது மாதிரி
உலகில் தலையெடுத்த
எந்தவொரு சர்வாதிகாரியும்
இப்படி அரக்கம் புரிந்திருக்க மாட்டான்.

ஆண் ஆதிக்கத்தை காலம் காலமாக நிறுவும்
அவர்களது சாணக்கியம் கீர்த்திகள் கொண்டது.
வெற்றிகளை அவர்களது காலடியில்
கொண்டுவந்து குவிக்கவல்லது.
ஆண்டாண்டு காலமாய்
பெண்களை கீழே போட்டு மிதித்து
சுகம் கண்டுகொண்டிருக்கும்
இத் துஷ்டர்களை
வெறும் கவிதைகளால்...
என்ன செய்துவிட முடியும்?
பெண்ணினத்தை அடிமைப்படுத்த
அந்த அரக்கர்கள் கைகொள்ளும்
விசேச தந்திரங்களுக்கு அளவே இல்லை.
அவர்கள் முன்வந்து பெண்களிடம் காட்டும்
அன்பும்/ காதலும் கூட
இன்னொரு இறுக்கும் கயிறுதான்.
கொஞ்சம் அசந்தால்...
விந்தாலேயேயும் கூட
கட்டிப் போட்டுவிவார்கள்.
தொடர்ந்து..
நீங்கள் தலைசாய்த்து
மௌனித்துவிட்டால் போதும்
உங்களுக்கு குலவிளக்கெனும் பட்டமும்
பத்தினி என்கிற பவிசும் நிச்சயம்.
பின்னென்ன...?
போகம் தீர்க்கும் தோல் கருவியாகி
காலத்திற்கும் சாசனப்பட்டு விடுவீர்கள்.

பெண்ணினத்தின்
முதலும் முடிவுமான அச் சத்ருக்களை
இனியேணும்
கவிதையால் மாற்றிவிடலாமென
நினைப்பதைவிட்டும்
பெண் கவிஞர்கள்
தீர யோசிக்க வேண்டும்.
மாற்று வழி காண வேண்டும்.
காண்பவர்கள் மலைத்து மிரளும்படிக்கு
மக்கள் இயக்கத்தை
பெரிய அளவில் திரட்டிப் போராட வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்த
அழிந்தொழியாது
காலத்திற்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்
அந்தப் பழைய பஞ்சாங்கங்களையும்
உயர்ந்த நெறிகள் என்கிற போர்வையில்
பெண்களைக் கட்டிப்போடும்
ஆதி கிரந்தங்களையும்
ஒன்றை விடாது
முச்சந்தி தோறும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.
துணிவில்லாவிட்டால்...
பாவம், ஆகாது என்றால்...
சரியான தருணத்தில் நீங்கள்
திரும்பியேனும் படுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
நிஜத்தில் அது முடியாது உங்களால்.
மாறாய்...,
என் முகம் பார்த்து அர்த்தமாய் கோபிப்பீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா..?
நீங்கள் திரும்பத் திரும்ப விழும் இடமே அதுதான்.
*
ஆணாதிக்கத்தை
ரொம்பவும் நோண்டாத
சில பெண் கவிஞர்கள்
நாற்காலி அரசியல்/
முற்போக்கு அரசியல்/
இடதுசாரி அரசியல்/
தலித் முன்னேற்ற அரசியலென
விதவிதமான கோணத்தில்
தாங்கள் கொண்டிருக்கும் சித்தாந்தங்கள்
எதிரொலிக்கக் கவிதைகள் புனைகிறார்கள்.
பல பெண்கவிஞர்களுக்கு
காதல் கிளுகிளுப்புகள்
அவர்களின் சித்தாந்தங்களில் ஒன்றாக இருக்கிறது.
வாழ்ந்துபெற்ற அனுபவத்தை
அழகு மாறாமல்
கவிதையாகக் காண்பதை விட்டும்
உணர்வுகளின் உந்தலுக்கே
இப்படி முக்கியத்துவம் தந்துகொண்டு இருக்கிறார்கள்!
இங்கே...
இதனை வாசிக்கும் வாசகர்களும்
கவிதை வழியே புரட்சியைப் பரப்பும்
சம்மந்தப்பட்ட பெண் கவிஞர்களும்
என்னிடம் கேள்வி ஏதேனும் எழுப்பக் கூடும்.
அப்படி எழுப்புவார்களேயானால்...
இவ்விரண்டு கேள்விகளை கட்டாயம் எழுப்புவார்கள்.
1. புரட்சி ரகக் கவிதைகள் எழுதுவது தப்பா? 
2. கவிஞர்குலத் திலகமாம் பாரதி
   இப்படி புரட்சிக் கவிதைகளையும்
   உணர்ச்சிக் கவிதைகளையும் எழுதவில்லையா?
சரியான கேள்வி.
பதில் சொல்லலாம்.
புரட்சி ரகக் கவிதைகளை எழுதுவது தப்பல்ல.
கவிதையில் புரட்சி துருத்திக் கொண்டும்,
கூச்சலிடாமலும் இருந்தால்....
அது வரவேற்கத் தக்கதே.
ஆனால்..
கவிதை முகம் சிதையாமல்
புரட்சி பாடும் செய்திகளோடு
கவிதைக் காண்பதென்பது பொதுவில் கடினம்.

நான் பெண்:
-----------------
ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்.
    ---
- கிழக்கிலங்கை/ சாய்ந்தமருது
கவிஞர். அனார் அவர்களின் கவிதை இது!
என் கவிதை வாசிப்பில்
இத்தனை வளமாய்/ அழகாய்
பெண்ணுரிமை பேசுகிற இன்னொருக் கவிதையை
வாசித்தது இல்லை.
கவிதையின் அலகுகள் சிதையாமல்
கவிதைக்குள் புரட்சியை பாடியிருக்கிறார்.
மறுக்க முடியாத...
மறக்க முடியாத கவிதை இது.
என்றாலும்...,
இக்கட்டுரையில் நான்
அழுந்த சுட்டிக்காட்டுவதெல்லாம்
பெண்ணுரிமை பேச
கவிதை ஏற்றத் தளமல்ல என்பதுதான்.
ஊன்றி நோக்குங்கால்...
காது கொடுத்து கேட்கும் சமூகத்தில் மட்டுமே
புரட்சிக் கவிதைகள் செல்லுபடியாகும்.
சரியாகவும் வினை பயக்கும்.
இந்தியச் சுதந்திரத்தை முழங்கிய
பாரதியின் கவிதைகளை
காதில் வாங்கிக் கொள்ள
சுதந்திர தாகமெடுத்த மக்கள்
அன்றைக்கு காத்துக்கிடந்தார்கள்.
அங்கேதான்...
அச் சமூகத்தில்தான்...
பாரதி ஜெயித்தான்.
கவனியுங்கள்
அதே பாரதி...
பெண் விடுதலையையும் பாடினான்.
'மாதர்களை ஏய்க்கும்
மடமைகளை கொளுத்துவோம்' என்றான்.
சமூகம் காது கொடுத்துக் கேட்கவில்லை.
இங்கே, பாரதி தோற்றான்.
இன்றைக்கும் கூட 
பாரதியின் இக்கருத்துக்கு அதே நிலைதான்!
அதன் தோல்வி தொடர்கிறது.
மடமைகள் கொளுத்தப்படவில்லை.
மீண்டும் கவனியுங்கள்...
பாரதியையொட்டிய பின்குறிப்பாக
இங்கே,
ஒரு சின்ன திருத்தம்.
சுதந்திரத் தாகமெடுத்த
பாரதியின் கவிதைகளை
கவிதைகள் என்பதைக் காட்டிலும்
பாடல் வடிவம் அவைகளென்றும்
ராகமிட்டு இசைக்க லகுவான
வடிவம் அதுயென்றும்
புரிந்து நாம் தெளிவுறுதல் நலம்.
அப்போ, பாடலில் புரட்சி பரவாயில்லையா?
பரவாயில்லை.
புரட்சிப் பாட ஏற்ற வடிவமே அதுதான்.
பாரதி மட்டுமல்ல...
பாரதிதாசன்/ கண்ணதாசன்/ பட்டுக்கோட்டை என்று
பலரும் பெயர் கொண்ட வடிவம் கூட
பாடல்கள்தான்.
இன்றைக்கு...
நம் பெண்கவிஞர்கள்
ஆண்களை துணுக்குற வைக்கும்
வார்த்தையாடல்களுடன்
பெண்விடுதலைக் கவிதைகளை
எழுதி கொண்டு இருக்க...
பெண்களுக்கு வழங்கப்படுவதாக உறுதி சொன்ன
33 சதவீத உரிமை
இன்னும் வழங்கப்படாமலேயே
பாராளுமன்றம் ஏமாற்றித் திரிகிறது.

இது குறித்து நினைவுறுத்தல் செய்ய
சமூகத்திற்கோ...
மீடியாக்களுக்கோ...
இந்த நிமிஷம்வரை சுரணையில்லை.
யதார்த்தம் இங்ஙணம் இருக்க
நம் பெண் கவிஞர்கள்
புரட்சிகர கவிதைகளுக்குள் நுழைந்து
விடாப்பிடியாக
என்ன கத்தி.. என்ன செய்ய?
யோசிக்கணும்.
பாராளுமன்றத்தை துரத்துவதென்பது
நம் கவிஞர்களுக்கு
கொஞ்சம் தூரச் சங்கதியாக இருக்கலாம்.
அதை விடுவோம்.
இந்தச் சோ...
அதான் நம்ம துக்ளக் சோ..
பெண்ணுரிமை பேசும் பெண்களையும்
பெண்ணுரிமைக் கருத்துக்களையும்
எத்தனைக் காலமாய்
எத்தனையெத்தனை விதமாய்
கேலியும் நக்கல்களும் செய்துகொண்டிருக்கிறார்.
தீரமாய் பெண்ணுரிமைப் பேசும்
நம் பெண் கவிஞர்களில் யாரேனும் ஒருவர் 
அவரை நிறுத்திவைத்து
கவிதையாலோ/ நேரிலோ
கேள்விகள் எழுப்பியதுண்டா?
சாதாரண சங்கதி இது.
உங்களால் முடிகிறதா என்ன?
முடியவில்லை.
முடியவும் முடியாது.
ஏன் முடியவில்லை என்பதின்
பின் அர்த்தங்கள் அத்தனையும் பலமானது.
இப்பவாவது...
புரட்சி பேசும் உங்களது கவிதைகளின்
வீச்சுக் குறித்தும்...
உங்களது செயல்பாடுகளின் யதார்த்தம் குறித்தும்
உங்களுக்குள் நீங்கள்
ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி
விடைத்தேடிக் கொள்ளணும். 
என்
பதிலை இங்கே முடித்து கொள்கிறேன்.
போதும்.
*
இங்கேதான்...
நான் சொல்ல முன்வரும்
கவிஞர் உமா மஹேஸ்வரி
நம் பெண்கவிஞர்களிடமிருந்து
வித்தியாசப்படுகிறார்.
அவரது கவிதை அனுபவம்
1986-கால, கணையாழி தொட்டுத் தொடர்வது!
மூத்த பெண்கவிஞர்களின் வரிசையில்
இன்றைக்கும்
பெயர் சொல்லும்படி
சிறப்பதும் அவரே!
'கவிதைப் பெண்' எனும்
அடைமொழியோடு
அந்தக் கவிஞரை
நான் காண்கிறேன் என்றால்...
அதற்கான அர்த்தம் செய்யும்
நிறைகளுடன் கவிதைப் பரப்பில்
நின்று நிலைத்து விளங்குகிறவராக
இருக்கிறார் அவர்!
அவரது சில கவிதைகள்
பெண் உரிமைக்காக குரல் தந்திருந்தாலும்
அந்த ரகக் கவிதைகளின் மீது
தொடர்ந்து அவர் நாட்டம் கொண்டதில்லை.
வாழ்ந்து பெற்ற அனுபவத்தையே
இவரது கவிதைகள்
அதிகத்திற்கும் அதிகம் பேசுகின்றன.
கவிதைக்கே உரிய
எளிமையும் அழகும் கெடாமல்
அது படைப்பாக்கம் கொள்கின்றன.
வாசிக்கும் நமக்கோ
நிஜங்களின் நுட்ப தரிசனத்தோடு.
பனிப்புல் பாதை வழியே நடக்கும் இதமும்...!
1990-ல்
இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
பெயர்: 'நட்சத்திரங்களின் நடுவே'
அவரது சொந்த ஊரான
போடிநாயக்கனூர் குமரன் பிரிண்டர்ஸில்
அச்சிடப்பட்ட கையடக்கமான
அக் கவிதைத் தொகுப்பு
சினிமாப் பாட்டுப் புத்தக அளவிலானது.
அத்தொகுப்பில்...
கவிஞர் உமா மஹேஸ்வரி
தனது கவிதைகளை முன்வைத்து
இப்படி சொல்கிறார்:
"எழுத்தின் மூலம்
உலகைத் திருத்தும் உத்தேசமோ,
நீதி புகட்டும் லட்சியமோ எனக்கில்லை.
இவை கவிதைகள்தானா என்ற சந்தேகம்
எனக்கு இன்னும் உண்டு.
விடியல் கழுவி விட்ட பின்னும்
வானில் பிடிவாதமாய் மிச்சமிருக்குமே...
ஒற்றை நட்சத்திரம்,
அதுபோல்
என்னிலிருந்து பிரிந்த எண்ணத்துளியே
எழுத்தில் தெறிக்கிறது. அவ்வளவே."

இவ் வாக்குமூலத்தை ஒத்தே
இன்றளவும்
இவரது கவிதைகள்
வானத்தை
எல்லையென கொண்டு
விரிவதாகவே இருக்கிறது!
ஜூன் - 1989
கணையாழியில்
அமரர்.சுஜாதா அவர்கள்
கவிஞர் உமா மஹேஸ்வரியின்
கவிதை குறித்து
இப்படி சொல்லி இருக்கிறார்:
"என்னைப் பாதிக்கும் கவிதைகள்
பாசாங்கு இல்லாமல் இருக்கின்றன.
கவிதையின் அநுபவத்தோடு எனக்கு
ஒரு இசைவு ஏற்படுகிறது.
அந்த எண்ணம்
எனக்கும் தோன்றி இருக்கும்போதுதான்
எனக்கு கவிதை பிடிக்கிறது.
'கவிதை ரசனை என்பதே கண்ணாடியில்
பார்த்துக்கொள்வது போலத்தான்'
என்று படித்திருக்கிறேன்.
இந்த வகையில்
சென்ற இதழில் வெளியான
'மழையும் நானும்'
என்ற கவிதை(உமா மகேஸ்வரி)யில்
ஒரு வரியைத் தவிர
மற்ற எல்லா வரிகளுடனும்
என்னால் உடன் வாழ முடிந்தது."
சுஜாதா அன்று கணித்தபடியே
இன்றைக்கும்
உமா மஹேஸ்வரியின் கவிதைகள்
அதே சிலாகிப்புக்கு
உரியதாக இருக்கிறதென்பதுதான்
தனிச் சிறப்பு.
உயர்ந்த வானத்தின் தெளிந்த நீலம்
என்றைக்கும்...
மாறுவதுமில்லை உறுத்துவதுமில்லை!
பெரியவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களை
நீங்கள் அறிவீர்கள்.
நுட்பம் சார்ந்த கலை இலக்கிய ஆய்வில்
அவருக்கு நிகர் அவர்தான்.
இந்தப் பெரியவருக்கு
கவிஞர் உமா மஹேஸ்வரியின் படைப்புகள் மீது
மிகுந்த நம்பிக்கை.
பல நேரங்களில் அதனை தடையற
வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
இப்போது
இன்னொருமுறையும் நடந்திருக்கிறது.
இரண்டாயிரம் வருடகால நீட்சியில்
பெண் கவிஞர்களின் பங்களிப்பை
'Tamil Women Poets: Sangam to the Present' என்று,
ஆங்கிலத்தில் ஆய்வு செய்துள்ளார்
கே.எஸ் சுப்பிரமணியன்.
அந்நூலுக்கு
பெரியவர் வெ.சா. அவர்கள்
விமர்சனம் செய்ய முனைய...
அக் கட்டுரைக்கு
'தமிழ் பெண் கவிஞர்கள்: ஆங்கிலத்தில் ஆதி மந்தியார் முதல்
உமா மஹேஸ்வரி வரை' யென
பெயரிட்டு இருக்கிறார்!
இது, உமா மஹேஸ்வரிக்கு கிடைத்திருக்கும்
நிகரில்லா பெருமை.
அரிய பரிசு!
 
தனியே தெரியும்
விழிப்பான ஒற்றை நட்சத்திரத்தைக் கண்டவராக
நமக்கு வேறு கோணத்தில்
உணர்த்தியிருக்கிறார் வெ.சா.
அத்தனைப் பெரியவரையும்
தலையுயர்த்தி பார்க்கவைத்திருக்கும் நட்சத்திரமாக
தன் படைப்புகளின் வழியே
ஒளிர்கிறார் கவிஞர். உமா மஹேஸ்வரி!

கவிஞர் உமா மஹேஸ்வரியின்
கவிதைகள் மட்டுமல்லாது
படைப்பாக்கம் கொண்ட
அவரது நாவல்கள் இரண்டின் மீதும்
உயர் மதிப்பீட்டைக் கொண்டவர்
அமரர். திரு.சுந்தர ராமசாமி.
உமா மஹேஸ்வரியின்
படைப்பிலக்கிய ஆளுமையை
சு.ரா. அவர்கள்
தனது பல்வேறு கட்டுரைகளில்
சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாதிரியே திரு.ஜெயமோகனும்.
மதிப்பிற்குரிய நண்பரான
திரு. பி.கே சிவகுமார் அவர்கள்
உமாவின் படைப்புலகை
மனம் திறந்து பாராட்டியவர்களின் பட்டியலில்
இன்னொருவராக இருக்கிறார்.
இப்படி...
உயர்ந்த கலை இலக்கிய ஆளுமைகளான
பலரிடமிருந்தும்
உமா மஹேஸ்வரி கொண்டிருக்கும் பாராட்டுகள்
அனைத்தும் அவருக்குத் தகும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்
'இந்தியா டுடே' தேர்வு செய்த
'தமிழகத்தின் தலை சிறந்த பெண்கள்' என
தேர்வு செய்த பதினைந்து பேர்களில்
கவிஞர் உமா மஹேஸ்வரியும் ஒருவர்.
இது
நம் பெண்கவிஞர்கள் எவருக்கும் கிட்டாத பேறு!
கவிதையை முன் வைத்து
பல அகாடமிகளில்
அவர் பெற்றிருக்கும் பரிசுகளுக்கும்
குறைவில்லை.
சமீபத்தில்
பெங்களூர்...
'என்.எம்.கே.ஆர்.வி. பெண்கள் கல்லூரி'யின்
'நஞ்சன் கூடு திருமலாம்பாள் சரஸ்வதி' விருதை
இவ்வாண்டு
கவிஞர் உமா மஹேஸ்வரி பெற்றிருக்கிறார்.
ஆக,
'சாகித்திய அகாடமி' விருது ஒன்றுதான் பாக்கி!
வாழ்த்துக்கள்.
இந்தக் கவிதைப் பெண்ணுக்கு
அது கிட்டும்.
கிட்டணும்.
இல்லை இல்லை என்றாலும்
கலை நுட்பத்தை
சிரத்தையாகத் தேடுபவர்கள்
நம்மில்,
நாலாப் பக்கமும் இருக்கத்தானே செய்கிறார்கள்.!!
*
பின் குறிப்பு:
அமரர் சுஜாதா ரசித்த
உமா மஹேஸ்வரியின்
'மழையும் நானும்'
(மே-1988/கணையாழி)
கவிதையையும்,
சமீபத்தில் வாசித்த
அவரது
1.நொறுங்கல்
2.அந்த முலை
(ஜனவரி- 16-31/ 2012/ புதிய பார்வை)
எனும் கவிதைகளையும்
வாசகர்களுக்காக
என் தட்டச்சில்
கீழே.....


'மழையும் நானும்':

ஓசைகளோய்ந்த பிற்பகலில்
உறங்கும் போது
ஜன்னல் வழி நுழைந்த
சாரலின் வெள்ளித் துளிகள்
என்னை எழுப்பின,
அஸ்பெஸ்டாஸ் கூரையில்
குழந்தைக் கூச்சலிட்டது மழை
வானத்தின் பாஷை போல
தயங்கியும், தவித்தும்
இரைந்தும் இளகியும்
பேசிக் கொண்டிருந்தது.
தடைகளற்ற தோழமை
கோபம், உற்சாகம்
அழுகை, ஆனந்தம், இளமை வேகம்
என்றேதேதோ உணர்வுகள்
என்னுள் உரசிக் கொள்ளும்
மழைக்கென.
அதுவோ இதுவறியாது
அன்று பூத்த மலர்களுக்கு
அட்சதை போடும்.
மரங்களின்
பச்சைக் கொடியசைப் பேற்று
தத்தி நடக்கும்
மாடித் தளத்தில்,
குடைகளின் கறுப்பு மறுப்பை
ஒதுக்கி ஓடும்
தரையில் விழும்; உடையும்; மீண்டு
துள்ளும் தங்கக் கனவுகள் போல்.
வெயிலுடன் கண்ணாமூச்சியாடும்
வந்தது போல் மறையும்,
வாசல் தெளித்து விட்டு,
தேங்கிய நீரில்
வண்ணங்கள் வரைந்து விட்டு,
ஒரு
பிள்ளைப் பிராய ஸ்நேகம் மாதிரி.

***

நொறுங்கல்:

கோடானு கோடி மருந்துப்
புட்டிகள்
உருளும் என் பாதையில்
பாதம் இடறும்
அவற்றின்
பற்றற்ற வழுவழுப்பு
மிதிக்கக் கூசி,
நொறுங்கஞ்சி
பிடிமானமின்மையில் தடுமாறும்
என் நடை
வெண் தகர விளிம்பு கீறி
வெடிக்கும் காயங்களோடு
நடந்தாக வேண்டும்.
ஆனால் ஏன்?
அந்தியையும், உதயத்தையும்
என் ஆனந்த மழைகளையும்
அடைத்துப் புரளும்
இந்த சீசாக்கள்
எடுத்தெறிய முடியாமல்
என் தலைக்குள்
அவை
உருள்கின்றன
திரள்கின்றன.
உடைந்து சிதறி
என்னை
உலுக்கிப் போடுகின்றன,
நான் கவனமாய் முடைந்த
என் உறக்கத்திலிருந்து.
***

அந்த முலை:

மென் முலை; வன் முலை
ஈர்க்கு இடைப் புகா இளமுலை,
கவர்ச்சிப் படிமம்,
காலகாலமாக
பத்திரிகைப் பக்கங்களில்,
காதல் விரல்களில்
தொலைக்காட்சிப் பிம்பங்களில்,
இந்த நாட்களில்
வலைப் பின்னலாடைகளுக்குள்
தளும்பும் எத்தனை எத்தனை
கோல கோளங்கள்.
ஒருத்தி
திருகி வீசவும்
தீப்பற்றி ஊரெரிந்த
முலையும் உண்டு.
காமச் சின்னமோ,
மோக ஊக்கியோ அல்ல;
உண்மையில்
சிசுவுக்கு உயிர் சுரக்கும்
தாய் உறுப்புக்கள்
எல்லாம் தாண்டி
மிகவும் கவனமாகச்
சுத்தகரிக்கப்பட்ட
கூர் கத்தியின் பரப்பில்
அறுப்பட்டு அகற்றப்பட்டு
என் நினைவில் கொப்புளிக்கும்
அந்தப் புரையோடிய
அன்னை முலையை என்ன செய்ய?
அகற்றவில்லை; அஞ்சவில்லை
துதிக்கவில்லை;
தூக்கியெறியவுமில்லை
நான்.

**


10:59 PM 3/3/2012
E-Mail : satajdeen@gmail.com

**

மேலும் :

உமா மகேஸ்வரியின் கவிதைகளும் கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்

12 comments:

  1. Facebook லதான் ப்ளாக் & ஒய்ட்னா இங்கயுமா?
    பாவம் சீவலப்பேரி கநாசு தாஜ்!

    ReplyDelete
    Replies
    1. மஜீத், 'என் புகைப்படம் என் எழுத்தைத் தாண்டி வாசகனை பயமுறுத்துமோன்ணு இப்ப பயமா இருக்கு' என்று தாஜ் மெயில் அனுப்பியிருக்கிறார். பிறக்கும்போதே அப்படித்தான் இருந்ந்தார் என்று சீர்காழிக்காரர்கள் சத்தியம் செய்கிறார்கள்!

      Delete
    2. அட ஆமா..
      சீர்காழி, சீவலப்பேரின்னு
      தவ..றி
      வந்துருச்சு;
      (மீசையைப் பாத்து வரலை)
      சாறி பார் த ஸ்பெல்லிங் மிஷ்டேக்.

      மத்தபடி யாரும்
      பயப்படப் போறதில்ல
      (இனிமே புதுசாவா பயம் வரப்போகுது?)

      Delete
    3. இந்த துனியாவுல...
      மீசை வச்சாலும் தப்பு
      அது இல்லாட்டியும் தப்பு..
      அழகா இருந்தாலும் தப்பு
      அப்படின்னு இல்லாட்டியும் தப்பு...
      நானும் ஒரு காலத்தில
      'மேகன்லால்' மாதிரி இருந்தேன்னு சொன்னா
      நம்பவா போறிங்க.
      உங்கள சொல்லித் தப்பில்ல
      இந்த துனியா அப்படி.
      நான் இப்படின்னு
      படைச்சவன நொந்திங்கனா
      அது சரியா இருக்கும்.
      எய்தியன் இருக்க
      அம்பை நொந்து சளிக்கிக்கிறீங்க.
      தப்பிக்க நானும் வேற
      என்னத்த.. என்னத்த.. சொல்றது.
      இன்னொன்னு வேணும்னா சொல்லலாம்..
      'காலத்த மறந்துப் பேசாதிங்க,
      அது எல்லாதுக்கும்...
      வேஷம் போட்டுவிடாம விடவே விடாது!'

      ஊர்ல வாழும்
      மின்சாரப் பஞ்சத்தில
      எத்தனை நாள் சிரப்பட்டு
      எழுதிய கட்டுரை இது.
      எத்தனை நேர்த்தியான மொழியை
      உங்களுக்காக ரசிக்கத் தந்திருக்கேன்.
      பேச்சுப் போக்குல
      அத விட்டிட்டிங்களே அழகுகளா!
      பரவாயில்ல...
      எத்தனையோ தரம்
      அந்தக் கஷ்டத்தை அனுபவிச்சாச்சு.
      அந்த வலி மறத்தும் போச்சு.
      -தாஜ்

      Delete
  2. தாஜ்,

    என்னென்ன சொல்லணுமோ எல்லாத்தையும் நீங்களே சொல்லிர்றீங்க. (ஒண்ணு ரெண்டு மிச்சம் இருந்தா அதை தல சொல்லிருது. அப்புறம் நாங்க என்னத்தை சொல்றது..

    அதனால் ஒரே வரி: என்னைப் பொறுத்த வரைக்கும் தாஜ் எழுதியது எழுத்துக்கு எழுத்து சரி - எழுத்துப்பிழை தவிர.
    (சூப்பராச் சொன்னேய்யா - தல)

    இப்பல்லாம் சீரியஸான மேட்டருக்கு சீரியஸா கருத்து எழுத, யாரையும் அவர்களது “ஓட்டம்” அனுமதிக்கல.

    கவிதைகளுக்கு ஒரே வரிலதான் விகடன் சினிமா விமர்சனம் மாதிரி இப்ப சொல்லமுடியும். மத்ததெல்லாம் நீங்களே சொல்லிட்டிங்கண்ணே..

    சுஜாதாவுக்கு எந்தவரி ஒத்துப்போகலைன்னு யோசிச்சு எனக்கும் தூக்கத்தும் ஒத்துப்போகலை. அவருக்கும் என்னை மாதிரி மதியம் தூங்குற பழக்கம் இல்லைன்னா, முதல் வரிதான் புடிக்காம இருந்துருக்கணும்.

    அனாரின் லாவக வீச்சுக்களும்
    உமாவின் குறிதவறாத அடிகளும்
    வியக்கத்தக்கவையே.

    சொற்பிரயோகம் பற்றி
    முன்பு ஃபாயிஸா அலி கவிதைக்கு
    நான் எழுதிய பின்னூட்டம்
    நினைவுக்கு வருவதையும்
    தவிர்க்க முடியவில்லை
    http://abedheen.wordpress.com/2011/06/18/faiza-poem2/#comments

    ReplyDelete
    Replies
    1. //அஸ்பெஸ்டாஸ் கூரையில் //

      மஜீத்...
      சுஜாதா குறிப்பிடும்
      அந்த ஒரு வரி
      இதாக இருக்கும் என்பது
      என் யூகம்.
      (மனிதன் நிம்மதியாகப் போய்விட்டார்.)
      -தாஜ்

      Delete
  3. தம்பி தாஜ், கட்டுரை படித்தேன். அள்ளிக் கொஞ்சணும் போல. மீசை கொஞ்சம் குத்தும், பரவாயில்லை. ஒரு காலத்தில தம்பி பிரபாகரன்ட மீசய அப்படியே காப்பி பண்ணி, நான் வெச்சிக்கிட்டன். அதெல்லாம் பழைய காலம்.

    "கவிதை என்பது பெண்ணையொத்த நளினங்கள் கொண்டது"

    தாஜ், எப்படிடா சொல்லிப் போட்டாய்! அபாரம். பஹுத் அச்சாஹே! இதுதான் கவிதையின் தருணம். கவிதை பற்றி எல்லோராலும் எழுத முடியாது. நம்ம க.நா.சு கூட நாவல் சிறுகதை பற்றி அடித்த லூட்டிக்கு கவிதை பற்றி அதிகம் பேசவில்லை. அனார் உம்மாவையும் ஆண்டிப்பட்டி தங்கச்சி உமா மகேஸ்வரியையும் ரொம்பத்தான் புகழ்ந்திட்டீங்க. நான் வேணுமெண்டால் கவிதையைப் பற்றி இப்படிச் சொல்லுவன்;

    கவிதையை கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கவிதையைக் கண்டிலர்

    என்று மாற்றிப் போட்டு ஆட வேண்டியதுதான். தாஜ், உங்களுடைய உழைப்புக்கு வாழ்த்துக்கள். கொஞ்சமா எழுதினாலும் அந்தக் கட்டுரை ரொம்பக் கனதியாக வந்திருக்கிறது.

    இப்படிக்கு
    ஹனிபா காக்கா

    ReplyDelete
    Replies
    1. ஹனிபாக்க...
      உங்களுடைய இலக்கிய வியாபகத்துக்கு முன்னால்
      நான் ஒன்றுமில்லை.
      நீங்கள் என்னை மதீப்பீடு செய்திருப்பது
      மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

      எங்கள் உமாமஹேஸ்வரியை விடுங்கள்.
      நிரம்பப் படித்தவர்.
      இந்த மண்ணிலேயே கிடந்து
      வளரும் கவிதை நுட்பத்தோடு
      ஒருசேர வளர்ந்தவர்.

      அவரை முன்வைத்து,
      அனாரை பார்க்கிற போது....
      அந்தஒ பெண்ணிடம் கிட்டியிருக்கும்
      இந்த அளவிலான
      கவிதை வல்லமை வியக்க வைக்கக் கூடியது.
      இது என் புகழ்ச்சியல்ல.
      உணர்ந்த வரையிலான
      மெய்.
      அபூர்வமானதோர் நுட்பத்தைக்
      அவர் கைவரப் பெற்றிருக்கிறார்.
      மிகச் சரியாக அதை அவர் உணர வேண்டும்.
      சந்தோஷம்.

      இங்கே,
      ஹனிபாக்கா..
      என்னை அசீர்வதிக்கணும்.
      நன்றி.
      -தாஜ்

      Delete
  4. அன்பின் தாஜ் நானாவுக்கு,

    மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களது அன்பையும் ஆலோசனைகளையும் பெறக்கிடைத்தது சந்தோசமே.

    உமாமகேஸ்வரி மிகுந்த உறுதியான பெண். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    எழுதக்கூடாது என்று கவிதையைப் பொறுத்தவரை ஒரு தடையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கவிதையை எப்படி எழுதுவது? என்பதற்கு பிரத்தியேகமான உணர்வு வெளிப்பாடுகள், மொழிக் கையாளுகை போன்றவற்றில் கவனமெடுக்க வேண்டும். கவிதைத் தன்மை அவரவர்க்கு கைகொடுக்கும் விதமானது காலத்தால் அக்கவிதையை நிலைபெறச் செய்ய அல்லது செய்யாமலாக்குகின்றது.

    ஆபிதின் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

    அனார்

    ReplyDelete
  5. அன்பு தங்கைக்கு...
    உமது கவிதை ஆளுமை மீது
    எப்பவும் வியப்பு கொள்பவன் நான்!
    அதனைவிட
    அத்தகையதோர் ஆளுமை
    லாவகமாக
    தங்கைக்கு கிட்டியிருப்பதின் மீது
    பேர்வியப்பு கொள்பவன் நான்!

    தங்கை
    தன் அழகிலேயே எழுதட்டும்
    தப்பில்லை.

    என்ன..
    அகலத் திரையில்
    டிஜிட்டல் சவுண்டோடு
    பிரமிப்பைத் தரும்
    மணிரத்திணம் படம் மாதிரி
    தங்கையின் கவிதைகள் இருந்து விடுகிறது!

    தங்கைக்குத் தெரியுமென நினைக்கிறேன்
    மணிரத்தினம் படங்கள்
    வாங்கும் தேசிய விருதுகளை விட
    சாதாரண யதார்த்த சினிமாக்கள்
    அதிகத்திற்கும் அதிகம் வாங்கிவிடுகிறது.
    கலை நுட்பத்தின் மையமே எளிமைதான்!

    சற்று..
    முயன்று
    கவிதையை அதன் எளிமையோடும்
    அதற்குண்டான யதார்த்த மினுக்கோடும்
    தங்கையிடமிருந்து காணக்கிடைத்தால்
    இன்னும் மகிழ்ச்சி கொள்வேன்.

    தவிர,
    பால்ரசம்
    இன்னும் தங்கைக்கு திகட்டாதது ஆச்சரியமே!

    என்றாலும்...
    தங்கையின் மொழி அழகில் கொண்ட
    என் பெருமயக்கம் இன்னும் உண்டு.

    வாழ்த்துக்கள்.
    -தாஜ்

    *

    பின் குறிப்பு:
    நான்,
    கவிஞர் உமாவை பற்றி எழுதிய கட்டுரை
    பல செய்திகளை கொண்டது என்றாலும்...
    இங்கே,
    தமிழகத்தில்
    தீவிரமாகவும்/கவிதை அழகின் முகாந்திரத்தோடும்
    பல பெண் கவிஞர்கள்
    கவிதைகளைப் படைத்தளிக்கும் நிலையில்
    உமாவின் கவிதைகளை/ அவரது மொழியை
    முக்கியப்படுத்தி
    கலை நுட்பம் சார்ந்தப் பெரியவர்கள்
    ஏன் கொண்டாடுகிறார்கள்?
    இது குறித்து
    நான், விரிவாக சொல்லாத பதிலே
    அந்தக் கட்டுரையின்
    முக்கிய செய்தி.
    தங்கை அதனை உணர்ந்து அறியணும்.
    நன்றி.
    -தாஜ்

    ReplyDelete
  6. கட்டுரை மிகச்சிறபாக இருக்கிறது. ஆரவாரம் இல்லாத கவிஞர் உமா மகேசுவரியை மிகச் சிறப்பாக மதிப்பிட்டிருக்கிறீர்கள் நன்றி
    -----------------------------------------------------
    நந்தினி மருதம்
    நியூயார்க
    2012-06-25

    ReplyDelete
  7. உமா மகேஸ்வரியின் கவிதைகளில்

    ஊர்ந்து கொண்டிருக்கும் பல்லி
    யோசித்துக் கொண்டிருக்கும் நான்

    என முடியும் கணையாழியில் இவர் எழுதிய முழுக் கவிதையும் யாரிடமாவது உள்ளதா? தெரியப்படுத்துங்களேன்
    pspl.sankar@gmail.com -

    ReplyDelete