’தீராநதி’யில் 2008ஆம் ஆண்டு வந்த பேட்டி இது. Paris Review 1992-இல் வெளியான நேர்முகத்தை தமிழில் தந்தவர் நண்பர் : சா.தேவதாஸ். ’தொழுகையிடுகிறீர்களா?’ என்பதை ‘தொழுகிறீர்களா?’ என்று வாசிக்கவும். சரி, இந்தப் பேட்டியின் சுட்டியை
நாகிப் மாஃபௌஸ்-ன் நோபல் பரிசு உரையில் முன்பு இணைத்திருந்தேன். அந்த சுட்டி காலாவதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னார்கள். நல்வாய்ப்பாக அந்தப் பேட்டி கூடல் தளத்தில் இப்போதும் இருக்கிறது. அதை மீள்பதிவு செய்கிறேன் இங்கே, ’தமிழ் கூட’லுக்கு நன்றியுடன். -
ஆபிதீன்
***
எகிப்திய எழுத்தாளர் நாகிப் மாஃபௌஸ்
நாகிப் மாஃபௌஸ் (1911-2006) எகிப்தின் தலைசிறந்த எழுத்தாளர். நோபல் பரிசு (1988) பெற்ற ஒரே அரேபிய எழுத்தாளர் என்ற பெருமைமிக்கவர். The Children of Gebeleuvi என்னும் இவரது நாவல், லெபனான் தவிர்த்த அரபு நாடுகளில் தடைசெய்யப்பட்டது. Palace walk, Palace of desire மற்றும் Sugar street என்னும் மூன்று நாவல்களும் "கெய்ரோ முத்தொகுதி" என்றழைக்கப்படுகின்றன. Arabian Nights and Days என்னும் நாவல் ஆயிரத்தோரிரவு கதைகளின் மறு எழுத்தாக்கம் ஆகும். "அதிருஷ்டவசமாக கலை தாராளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சினைகளற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை" என்று குறிப்பிட்டிருந்த மாஃபௌஸ், 14.10.94 அன்று கெய்ரோ வீதி ஒன்றில் நடந்து சென்றபோது, கத்திக்குத்துக்கு ஆளாகி, பல மாதங்கள் சிகிச்சை பெறவும் நேர்ந்தது.
திருடனாகவும், சிறைப்பறவையுமாக இருந்து, 22 துப்பறியும் நாவல்கள் எழுதிய ஹாஃபிஸ் நஜீப்தான், மாஃபௌஸ் எழுத்துக்களில் ஆரம்பகாலத் தாக்கம் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஒருவித அவநம்பிக்கை வாதம் அவரை ஆட்கொண்டிருக்க, ஐம்பதுகளில் சூஃபி அனுபூதியில் ஈடுபாடு காட்டினார்.
***
- Paris Review 1992-இல் வெளியான நேர்முகத்தின் தமிழ் வடிவம்.
பேட்டியாளர் : சார்லெட் எல்சாப்ரவி
எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?
1929-இல் தொடங்கினேன். எனது கதைகளெல்லாம் மறுதலிக்கப்பட்டன. "உங்களிடம் திறமை இருக்கிறது. இன்னும் நேர்த்தி கைகூடவில்லை" என்பார் Majallaவின் ஆசிரியர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் போலந்தைத் தாக்கிய செப்டம்பர் 1939இல்தான் "Abath alaqdar" என்னும் எனது கதை வெளியானது. இது என் வாழ்வில் பெரிதும் முக்கியத்துவம் நிரம்பியதாகும்.
உங்களின் Kharafish குழு பற்றிக் கூறமுடியுமா?
முஸ்தஃபா மஹ்முத், அஹ்மத் பஹா அல்-தின், சாலா ஜாஹின், முகம்மது அஃபிஃபி மற்றும் நான், 1943இல் ஒன்றாகக் கூடுவதும், கலை பற்றியும், நடப்பு நிலவரங்கள் பற்றியும் விவாதிப்பதும் என ஆரம்பித்தோம். எகிப்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஹ்மத் மஸ்கர் இக்குழுவுக்கு Kharafish என்று பெயரிட்டார். அதற்கு "கேடி" என்று பொருள். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது முதலில் கொள்ளையடிக்கத் தொடங்குபவர்கள் அவர்கள். ஆரம்பத்தில் அஃபிஃபியின் இல்லத்தில் சந்தித்து வந்த நாங்கள், சமயங்களில் பிரமிட்களின் அருகிலுள்ள Sahara city என்னும் இடத்தில் கூடுவோம்.
1952-க்கு முந்தைய அரசியல் நிலவரம் உங்கள் வாழ்வில் என்ன பங்காற்றியது?
1919 புரட்சியின்போது எனக்கு சுமார் ஏழு வயது. அந்த லட்சியத்தின் பால் மேலும் மேலும் உற்சாகம் கொண்டேன். எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரும் Wafd கட்சி பக்கமாகவும் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரத்தின் பக்கமாகவும் நின்றனர். பிற்பாடு ஸாக்லல் பாஷா சாதின் சீடனானேன். என்றாலும், நான் அரசியலில் பணியாற்றியதோ, அரசியல் கட்சியில் அதிகாரபூர்வ கமிட்டியில் உறுப்பினராகியதோ கிடையாது. எழுத்தாளன் என்ற வகையில், ஓர் அரசியல் கட்சி உறுப்பினருக்குக் கிடைக்காத முழு சுதந்திரத்தை நான் விரும்பினேன்.
1952இல்?
புரட்சியில் சந்தோஷமாயிருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அது ஜனநாயகத்தைக் கொண்டு வரவில்லை.
நாஸர் மற்றும் சதாத் காலங்களிலிருந்து ஜனநாயகத்தை நோக்கியும் சுதந்திரத்தை நோக்கியும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றெண்ணுகிறீர்களா?
ஆமாம், அதில் சந்தேகமே இல்லை. நாஸர் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பயம். காபி விடுதிகளில் சந்திக்கும் எங்களுக்குப் பேச பயமாயிருந்தது. வீட்டில் இருந்தாலும் பேச பயமாயிருந்தது. புரட்சிக்கு முந்தையவற்றை என் பிள்ளைகளிடம் பேசுவதற்கும் பயமாயிருந்தது. சதாத் காலத்தில் மிகவும் பத்திரமாயிருந்தோம். முபாரக்? அவர் ஜனநாயகவாதியாக இருந்தாலும், அவரது அரசியலமைப்பில் ஜனநாயகத்தன்மை கிடையாது. இப்போது எங்களால் அபிப்பிராயங்களை வெளியிட முடியும். பத்திரிகை சுதந்திரம் உள்ளது.
சல்மான் ருஷ்டி விவகாரம் குறித்து என்ன கருதுகிறீர்கள்? ஓர் எழுத்தாளனுக்கு முழுமுற்றான சுதந்திரம் அவசியம் என்றெண்ணுகிறீர்களா?
ஒவ்வொரு சமூகமும் தனக்கென்றுள்ள சட்டங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைப் பாதுகாத்திட முயலுகின்றது. தான் ஒத்துக் கொள்ளாதவற்றைத் தாக்கிடும் உரிமை ஒரு தனி நபருக்கு உள்ளது போல், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை சமூகத்திற்கு உள்ளதென்று நம்புகிறேன். தன் சமூகத்தின் சட்டங்களோ, நம்பிக்கைகளோ செல்லுபடியாகாதவை அல்லது தீங்கானவையும் கூட என்னும் முடிவுக்கு ஓர் எழுத்தாளன் வரும் பட்சத்தில், அதனைப் பேசுவது அவனது கடமையாகும். ஆனால், தனது துணிச்சலுக்கான விலையைத் தந்திட அவன் ஆயத்தமாயிருக்க வேண்டும். அவ்விலையைத் தர அவன் ஆயத்தமாயில்லாதபோது, அவன் நிசப்தமாக இருந்து விட வேண்டும். தம் கருத்துக்களை வெளியிட்டமைக்காக சிறை சென்றவர்கள், எரியூட்டப்பட்டவர்களால் வரலாறு நிறைந்துள்ளது. சமூகம் எப்போதும் தன்னைத் தற்காத்துள்ளது. இப்போதெல்லாம் தனது போலீஸ் மற்றும் நீதிமன்றங்களைக் கொண்டு அவ்வாறு செய்து கொள்கிறது. வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அதனை எதிர்க்கும் சமூகத்தின் உரிமை என்னும் இரண்டும் வேண்டும் என்கிறேன். வேறுபடுவதற்கான விலையை நான் கொடுத்தாக வேண்டும். அதுதான் இயற்கையானது.
The Satanic Versusனை வாசித்தீர்களா?
இல்லை. அது வெளியான சமயத்தில் என்னால் சரிவர வாசிக்க முடியாது போனது. சமீபத்தில் என் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அலெக்ஸான்டிரியாவிலுள்ள அமெரிக்கப் பண்பாட்டு அலுவலர் அந்நூலினை அத்தியாயம் அத்தியாயமாக எனக்கு விளக்கினார். அதிலுள்ள புண்படுத்தல்கள் ஏற்கப்பட முடியாதவை. தீர்க்கதரிசியின் பெண்டிரைக்கூட ருஷ்டி புண்படுத்துகிறார்! என்னால் கருத்துக்களை வாதிடமுடியும், புண்படுத்தல்களை என்ன செய்வது? புண்படுத்தல்கள் நீதிமன்றப் பிரச்சினையாகும். அதே வேளையில், கோமேனியின் நிலையும் சமமான அளவில் அபாயகரமானதாகும். தீர்ப்புரைக்கும் உரிமை அவருக்கில்லை - அது இஸ்லாமியப் பண்பில்லை. இஸ்லாமிய நெறிகளின்படி, ஒருவன் சமயத்துரோக குற்றஞ்சாட்டப்பட்டால், அவன் வருந்தித் திருந்தலாம் மற்றும் தண்டனை பெறலாம். ருஷ்டிக்கு அந்த வாய்ப்புத் தரப்படவில்லை. கருத்துக்கள் என்ற அளவில் தான் விரும்புவதை எழுதும் ருஷ்டியின் உரிமையை நான் மதித்துள்ளேன். ஆனால் புனிதமாகக் கருதப்படும் ஒன்றினை அல்லது தீர்க்கதரிசியை புண்படுத்தும் உரிமை அவருக்கில்லை. ஒத்துக்கொள்கிறீர்களா?
உங்கள் கருத்தினைக் கவனிக்கிறேன்.... புண்படுத்தல்கள் / அவதூறு பற்றி குரான் விவாதிக்கின்றதா?
நிச்சயமாக. குரானும் பண்பட்ட தேசங்களின் சட்டங்களும் மத நிந்தனைக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுள்ளன.
குழந்தையாயிருக்கையில் மதவுணர்வு கொண்டிருந்தீர்களா? ஒவ்வொரு வெள்ளியும் உங்கள் அப்பாவுடன் மசூதிக்குப் போனீர்களா?
இளமையில் எனக்கு மதவுணர்வு இருந்தது. ஒவ்வொரு வாரமும் என் அப்பா வெள்ளிக்கிழமைத் தொழுகைகளுக்குச் சென்றாலும், என்னை வற்புறுத்தவில்லை. பிற்பாடு, மதம் திறந்த தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று வலுவாக உணரத் தொடங்கினேன் மூடுண்ட மதம் ஒரு சாபமாகும். மதத்தில் அதீத ஈடுபாடு கொள்வது, வாழ்க்கையில் ஓய்ந்து போனவர்களின் இறுதிப் புகலிடமாகத் தோன்றுகிறது. மதம் மிக முக்கியமானது மற்றும் மிக அபாயகரமானது என்றெண்ணுகிறேன். மக்களின் மனதைத் தொட வேண்டுமானால், அவர்களின் நாடித் துடிப்பில் கை வைக்கவேண்டும் எகிப்தில் மதத்தைப் போல் மக்கள் மனதைத் தொடுவது வேறொன்றுமில்லை. குடியானவனை வேலை செய்ய வைப்பது எது? மதம். இதன் காரணமாக மதத்தை வெளிப்படையான வகையில் விளக்க வேண்டும். அது நேசத்தையும் மனித சமூகத்தையும் குறித்துப் பேசவேண்டும். மதம், வெறுமனே உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், முன்னேற்றத்துடனும் பண்பாட்டுடனும் தொடர்புடையது. துரதிருஷ்டவசமாக இன்றைய மத வியாக்கியானங்கள் பெரிதும் பிற்போக்குத் தன்மையனவாகவும் பண்பாட்டுத் தேவைகளுடன் முரண்படுபவனவாகவும் உள்ளன.
தற்போது தொழுகையிடுகிறீர்களா?
சில சமயங்களில். ஆனால் வயது அனுமதிப்பதில்லை. உங்களுக்கும், எனக்கும் இடையே அத்தியாவசிய மானுட நடத்தையாக மதத்தைக் கருதுகிறேன். இருப்பினும், எப்போதும் பிரார்த்திப்பதும், நோன்பிருப்பதும் தொழுகைப் பாயில் தலையை வைப்பதுமாக இருப்பதை விடவும், சக மனிதனை சரிவர நடத்துவது மிகவும் முக்கியமானது ஆகும். மதத்தினை ஓர் உடற்பயிற்சி விடுதியாக கடவுள் உத்தேசிக்கவில்லை.
விருந்துகள், வரவேற்புகளுக்கான அழைப்புகளை இப்போதும் நிராகரித்து விடுகிறீர்களா?
இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் போவதே இல்லை. நண்பர்களைப் பார்ப்பதற்குக்கூட நான் போவதில்லை. Casino Kasrelnil அல்லது ஒன்றிரண்டு காபி விடுதிகளில் அவர்களைச் சந்தித்து விடுவேன். எனவேதான்.
நீங்கள் நோபல் பரிசைப் பெற ஸ்வீடனுக்குச் செல்லவில்லையா? ஏராளமான கூட்டங்களும், விருந்துகளுமாக இருக்கும் என்பதாலா?
அப்படியில்லை. இளமையில் எந்த அளவுக்குப் பயணம் செய்ய ஆசைப்பட்டேனோ, இப்போது அந்த அளவுக்கு வெறுக்கிறேன். இரண்டு வாரப் பயணம்கூட என் வாழ்க்கைப் போக்கினைத் தொந்தரவு செய்வதாய் இருக்கும்.
சீரான திட்டப்படி செயல்படுகிறீர்களா?
எப்போதும் நிர்ப்பந்தமாகி விடுகிறது. எட்டிலிருந்து இரண்டு மணிவரை நான் பணியாற்றினேன். நான்கிலிருந்து ஏழு மணி வரை எழுதினேன். அப்புறம் ஏழிலிருந்து பத்து மணி வரை வாசித்தேன். வெள்ளி தவிர்த்து, மற்ற நாட்களிலான எனது வழமை இப்படியிருந்தது. நான் விரும்பியபடி செய்திடும் நேரம் ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. ஆனால் மூன்றாண்டுகளுக்கு முன்பு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
உங்கள் பாத்திரங்கள் எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா?
முத்தொகுதியில் வரும் கமல் என் தலைமுறையினைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் - எங்கள் கருத்துக்களை, எங்கள் தெரிவுகளை, எங்கள் ஊடாட்டங்களை மற்றும் உளவியல் நெருக்கடிகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் - எனவே அந்த வகையில் அப்பாத்திரம் சுயசரிதத்தன்மை மிக்கதாகும். ஆனால் அதே வேளையில், அப்பாத்திரம் உலகளாவியதும் ஆகும். அப்பா, அப்துல் கவாடுடனும் நெருக்கமாய் உணருகிறேன்... வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படையாயுள்ள அவர், தன் நண்பர்களை நேசிக்கின்றார், யாரையும் புண்படுத்துவதில்லை. இவ்விருவரும் சேர்ந்து என் ஆளுமையின் இரு பாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அப்துல் கவாட் ஆரவாரத்தன்மை கொண்டு, கலை - இசையினை நேசிக்கின்றார்; கமல் தயக்கமும் சங்கோஜமும் கொண்டு, தீவிரத்தன்மையும் இலட்சியப் பிடிப்பும் நிறைந்துள்ளான்.
The thief and the dogs என்னும் கதையை எவ்விதம் ஆரம்பித்தீர்கள்?
கெய்ரோவை சிறிதுகாலம் மிரட்டி வந்த ஒரு திருடனால் உத்வேகம் பெற்றது அக்கதை. மஹமுத் சுலைமான் என்பது அவனது பெயர். அவன் சிறையிலிருந்து வெளிவந்ததும், தன் மனைவியையும், வழக்குரைஞரையும் கொல்ல முற்பட்டான். அவர்கள் தப்பித்துவிட, அவன் கொல்லப்பட்டான்.
நாவலில் உள்ளதுபோல, அவன் மனைவி அவனைக் காட்டிக் கொடுத்திருந்தாளா?
இல்லை... அக்கதையினை அவன் பாத்திரத்திலிருந்து உருவாக்கினேன். அப்போது நான் பின்தொடரப்படுவதான விசித்திர உணர்வால் வதைக்கப்பட்டேன். அத்துடன் அப்போதைய அரசியல் நிலையில் எங்கள் வாழ்க்கை அர்த்தம் இழந்து காணப்பட்டது. ஆகவே அக்குற்றவாளியின் கதையினை நான் எழுதியபோது, அதனுடன் சேர்த்து என் கதையினை எழுதினேன். சாதாரண குற்றவியல் கதை, காலம் குறித்த தத்துவார்த்தத்தியானமாயிற்று! பிரதான பாத்திரம் சய்யித் மஹ்ரான், என்னுடைய குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகுமாறு செய்தேன். ஷேக்கிடமும் "வழுக்கி விழுந்த" பெண்ணிடமும், பணம் - புகழிற்காக தன் கருத்துக்களைக் காட்டிக் கொடுத்திருந்த இலட்சியவாதியிடமும் பதில்களைத் தேடுமாறு செய்திருந்தேன். எழுத்தாளன் வெறுமனே பத்திரிகையாளன் இல்லை. தனது சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் மதிப்புகளுடன் அவன் ஒரு கதையைப் பின்னுகிறான். அதுதான் கலை.
அக்கதையில் மதத்தின் பங்கென்ன? ஷேக் உணர்த்துவதுபோல, கடவுளிடமான நம்பிக்கை உண்மையான மகிழ்ச்சிக்கான பாதையா? அக்குற்றவாளி தேடிக் கொண்டிருக்கும் விடை சூஃபி தத்துவமா?
ஷேக் வாழ்க்கையினை மறுதலிக்கின்றான் என்பதை நாமறிவோம். மாறாக, குற்றவாளியோ தன் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுகிறான். அவர்கள் வெவ்வேறு உலகில் உள்ளனர். அழகான கவிதையை நேசிப்பது போல் சூஃபி தத்துவத்தை நேசிக்கிறேன் ஆனால் அது விடை இல்லை. சூஃபி தத்துவம் பாலையின் கானல்நீர். இங்கே வந்தமர்ந்து சற்று ஆசுவாசம் கொள் என்கிறது. வாழ்க்கையினை மறுதலிக்கும் எந்தப் பாதையினையும் நிராகரிக்கிறேன் மிக அழகானதாய்த் தோன்றும் சூஃபி தத்துவத்தை என்னால் நேசிக்காது இருக்க இயலாது... யுத்தத்தினிடையே அது ஆறுதல் அளிக்கிறது...
உங்களின் பெரும்பாலான கதாநாயகியர் சமூகத்தின் கீழ்த்தட்டுப் பெண்களாய் இருப்பது ஏன்? எதனையும் அடையாளப்படுத்த உத்தேசம் கொண்டுள்ளீர்களா? உதாரணமாக, எகிப்து?
இல்லை. இந்நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் பெண்கள் உரிமை இல்லாதிருந்தனர். நல்ல கணவனைக் காண முடியாமலோ கெட்டவனை விவாகரத்து செய்யவோ முடியாத அவள், நம்பிக்கை இல்லாதிருந்தாள். சில வேளைகளில் அவளுக்கிருந்த ஒரே வழி, கள்ள ஒழுக்கம். இப்போது பெண்களுக்குக் கல்வி தரப்பட்டு, நிலவரம் மாறிக் கொண்டிருக்கிறது. ஏனெனில், கல்வி பெற்ற பெண் கையில் ஆயுதம் இருக்கின்றது என்றாகும்.
உங்கள் இருதயத்திற்கு நெருக்கமாயுள்ள விஷயம் எது? எழுதுவதற்கு நீங்கள் பெரிதும் நேசிக்கின்ற விஷயம் எது?
விடுதலை. காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை, மன்னனின் முழுமுற்றான ஆட்சியிலிருந்து விடுதலை மற்றும் சமூகம் - குடும்பச் சூழலில் அடிப்படை மானுட விடுதலை. இவ்வகையிலான விடுதலை, ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குச் செல்லும். உதாரணமாக, முத்தொகுதியில், புரட்சியால் அரசியல் விடுதலை கிடைத்தபின், அப்துல் கவாடின் குடும்பம் அவனிடமிருந்து மேலும் விடுதலை கோரிற்று.
மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்து, குறிப்பாக வளைகுடா யுத்தம் மற்றும் நீடித்த வன்முறைச் சூழலில், நன்னம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
என் வயதில் அவநம்பிக்கை கொள்வது தகாதது. இளமையில் மானுடத்திற்கு
விடிவில்லை என்று நீங்கள் பிரகடனம் செய்யலாம் ஆனால் வயதாகும்போது உலகை வெறுக்குமாறு மக்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்க கற்றுக்கொள்கிறீர்கள்.
நாயகன் என்னும் கருத்தமைவு பற்றி என்ன கூறுவீர்கள்? உங்கள் கதைகளில் நாயகர்கள் இருப்பதாகத் தெரியவில்லை; எந்தவொரு சமகால எகிப்திய எழுத்தாளர் கதைகளிலும் அவர்கள் இல்லை.
எனது பெரும்பாலான கதைகளில் நாயகர்கள் இல்லை என்பது உண்மையே - பாத்திரங்கள் மட்டுமே உள்ளனர். ஏன்? ஏனெனில் விமர்சனக் கண்ணுடன் சமூகத்தை நோக்கும், நான் காணும் மக்களில், அசாதாரணமாக யாரையும் பார்க்கவில்லை. எனக்கு முந்தைய தலைமுறை, 1919 எழுச்சிகளால் தாக்கம் கொண்டு, வீர நடத்தையினைக் கண்ணுற்றது. ஒட்டுமொத்தத்தில் எங்கள் தலைமுறையில் நாயகன் என்பவன் அரிதாகிவிட்டான் புனைவியல் படைப்பாக இருந்தால் ஒழிய, நாயகனை இடம்பெறச் செய்ய இயலாது...
***
நன்றி: தீராநதி , சா.தேவதாஸ்,
தமிழ் கூடல்