Saturday, February 23, 2013

விஸ்வரூபம் தந்த வியப்பு! - ஒரு கவிஞரின் பார்வை

ஒரு கண்ணால் 'காயத்தை ரத்தத்தால் கழுவும் கதை’யை வாசித்துக்கொண்டு மறுகண்ணால், அல்லது மாறுகண்ணால் , இதையும் வாசிக்கலாம்.  ஆபிதீன்.

***
பார்வை: விஸ்வரூபம் தந்த வியப்பு!

தாஜ்

24 பிரிவாகவும்
எண்ணற்ற கோணங்களாகவுமான
தமிழக இஸ்லாமிய கட்சிகளின்
ஒருங்கிணைந்த வேடிக்கைகளிடமும்...
அதிகார அரசியலின் கரங்களிடமும்
சிக்கோ சிக்கென்று சிக்கி
அலைக்கழிக்கப்பட்ட
கமலின் விஸ்வரூபம்
பல வெட்டுகளுக்கும்
ஒரு சில வசன அழிப்புகளுக்கும்
உள்ளான நிலையில்,
மூன்று நாட்களுக்கு முன்
அப்படத்தைக் கண்டு களித்தேன்.

நல்ல தியேட்டர்!
சிதம்பரம் மாரியப்பா!
100 பேர்களுக்கும் குறைவான
பார்வையாளர்கள்!
அமைதியான
இரவுக் காட்சி! 
ஓர் இனிமையான அனுபவம்.

இஸ்லாமியக் குழுக்கள்
இப்படத்தை பிரத்தியேகமாக
கண்டுவந்த நாளில்
அவர்கள் கூறிய மதம் சார்ந்த
கருத்துக்களையெல்லாம்
முற்றாய் ஒதுக்கிய மனோநிலையில்
காண அமர்ந்தேன். என்றாலும்
வியாபார ரீதியிலான படங்களின் மீது
எப்பவும் நான் கொள்ளும்
அவநம்பிக்கை மட்டும் வாழ
படத்தை காணத் தொடங்கினேன்.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும்
விரிய விரிய
என் அவநம்பிக்கை முற்றாய் மறைந்தது.
இது வியாபாரப் படம் என்றாலும்
முகம் வேறு!

அடுத்தவர்கள் சொல்லத் தயங்குகிற
நிஜத்தை
துணிந்து சொல்ல முனைகிற
வித்தியாசமான
ஆண்மை கொண்ட முகமிது!

குத்திட்ட விழி,
தேவைக்கும் இமைக்காத பார்வையோடு
அடுக்கடுகாய்
வியந்து கொண்டே இருந்தேன்!
துணை வியப்பாய்
'காண்பது தமிழ்ப் படம்தானா?"
எனுமோர் கேள்வி!

ஹீரோ பலரை சாய்ப்பது
தியேட்டரையே கிடுகிடுக்க வைக்கும் இசை
தெரிந்தே வைக்கும் சில ’லாஜிக்’ அற்ற
பிழை போன்ற
சினிமா சங்கடங்களைத் தவிர்த்து,
படம்
முழு நீள உண்மைச் சம்பவங்களின்
தடம்பிடித்து
விஸ்தீரணக் காட்சிகளாக
தீவிரப்பட்டு கொண்டே இருந்தது.

அங்கே இங்கே திரும்பியென
ஒரு காட்சியையும் விட்டுவிடாது
என்னைப் பார்க்கவைத்த
ஒரு ஆக்சன் தமிழ்ப் படமென்றால்...
அது,
இதுவொன்றாகத்தான் இருக்கும்!

படத்தைக் குறித்து பேச
நிறைய இருக்கிறது.
அதற்கு இங்கு இடம் போதாது.
நேரமும் பஞ்சம்.

விஸ்வரூபத்தில்
விரியும் பிரமாண்டம் தவிர்த்து
அதன் கலை நேர்த்திகள் குறித்தும்
யுக்திகள் குறித்தும் நிறைய எழுதலாம்.
சில யுக்தியான
சங்கதிகளை மட்டும் பார்ப்போம்.

பலரும் அறிந்த
பெரியாரிஸ்ட்டான கமல்.
தான் நடிக்கும் படங்களில்
சாமி கும்பிடும் காட்சிகளை
கிண்டலும் கேலியுமாகவே
காட்சிப் படுத்தியிருப்பார்.
இதற்கு முன் வந்த
கமலின் தசாவதாரத்தில்
சுவாமி சிலை பந்தாட்டப்படுவதாக
படம் பூராவும் சித்தரித்திருப்பார்.

இந்தப்படத்தில்
'வாசிம் அஹமத்' என்னும் பெயர் கொண்ட
காஷ்மீரி முஸ்லிமாக நடிக்கும் கமல்,
ஓர் இந்துவாக....
விஸ்வநாதன் எனும் பெயர்தாங்கி
மாறு வேடத்தில் இருக்கிற போது...
தொழுகைக்கு அவர் விரையும் விரைவும்
தொழுகையை நிறைவேற்றும் விதமும்
குறைகாண முடியாத அளவில்
பவ்யமாகவே
காட்சியாக்கியிருக்கிறார்.

தான் கொல்லப்படப் போவதை அறிந்து
தனது கடைசி ஆசையாக
தொழ அவர் வேண்டுகோள் வைப்பதும்
தொழுது முடித்த நிலையில்
'ரப்பனா...' என்று தொடங்கும் 'சூரா'வை
சப்த லயத்துடன் ஓதி முடித்தவராக,
ஓதப்பட்ட சூராவின் துவா பலத்தோடு
எதிராளியைப் பந்தாடுவார்!
தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது இது.

அதாவது,
அடிப்படையில்
தான் ஒரு பெரியாரிஸ்டாக இருந்தாலும்,
கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும்,
இப்படத்தில்
இஸ்லாமிய வேடமேற்றிருக்கும் கமல்
நம்பிக்கைச் சார்ந்த எந்தவொரு
கிண்டலோ கேலியோ இல்லாமல்
கௌரவமான முறையிலும் செய்திருக்கிறார்.

ஒரு கோணத்தில் பெரியாருக்கு
இஸ்லாத்தையும்,
இஸ்லாமியர்களையும் பிடிக்கும்.
இங்கே,
இப்படத்தில் கமலுக்கும்
அப்படி பிடித்ததோர் நிலையே
வெளிப்படுவதாக உணரமுடிகிறது!

ஆப்கானிஸ்தானில்
தலைமை கொண்டிருக்கும்
அல்கொய்தா இயக்கத்தை
வேவு பார்க்க
இந்திய அரசின் 'ரா'வால்
’ஜிஹாதி’யாக
அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்
உயர் அதிகாரியும், முஸ்லிமுமான கமல்
அல்கொய்தா இயக்கத்தினரோடு
இரண்டறக் கலந்து
வேவு பார்க்கும் காலத்தில்
அவரையும் அறியாமல்
ஓர் ஜிஹாதியின் மனோநிலைக் கொண்டு
அமெரிக்கர்களின் வான் தாக்குதலில்
படுகொலை செய்யப்படும்
ஆப்கான் இஸ்லாமியர்களுக்காக
மனம் பதறுகிறார்.
தவிர, அவர் பங்கிற்கும்
அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்த
ஆக்ரோஷம் கொள்கிறார்.

'வெஜிட்டேரியன்' என பீற்றிக் கொள்ளும்
அவரது சொந்த இன மக்களிடத்து
கிளைக்கும் சிக்கன் உணவு மோகத்தை
போர் சூடும்
அதன் தகிப்புகளும் கொண்ட
இந்தப் படத்தில்
சந்திக்கு இழுத்து வைத்திருக்கிறார்!

தமிழக இஸ்லாமியர்களின் காவலர்களாக
தங்களை பிரகடணப்படுத்திக் கொள்ளும்
24 இஸ்லாமியக்
கூட்டமைப்பு கட்சிமார்களுக்கு
கமல் நிகழ்த்தியிருக்கும்
இந்த யுக்திகள் எதுவும்
கண்ணில் பட்டதாகவே தெரியவில்லை.

//முல்லா உமர்,
கோவையிலும், மதுரையிலும்
இரண்டு வருடம்
இருந்ததாக சொல்வது எப்படி?//

//வீட்டின் உள்ளிருக்கும்
சிறுவர்களையும் பெண்டீர்களையும்
அமெரிக்க ராணுவம் கொல்லாது என்று
சொல்வதெப்படி?//

//எதிரிகளைக் கொல்லத் தலைப்படும் போது
ஜிஹாதிகள்
குர்-ஆன் சூராவினை
ஓதுவதாகக் காட்டலாமா?//

//அமெரிக்க நகரங்களை
காபந்து செய்ய
கமலுக்கு ஏன் இத்தனை அக்கறை//

இப்படியான...
ஒரு நிமிடத்தில் பதில் சொல்லிவிடக் கூடிய
படு அற்பமான,
படு அபத்தமான
கேள்விக் காரணிகளை முன்வைத்து
விஸ்வரூபத்தை தடைசெய்ய சொல்லி
24 - இஸ்லாமியக் கூட்டமைப்பு கட்சிமார்கள்
அடித்தக் கொட்டம்
அந்த அல்லாவுக்கே அடுக்காது.

'துப்பாக்கி' படத்தில்
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின்
தேசப்பற்று கேள்விக் குறியாக
சித்தரிக்கப்பட்டிருந்தது
இஸ்லாமியர்கள் கோபம் கொண்டார்கள்.
படவெளியீட்டை எதிர்த்தார்கள்
அதில் குறைந்தப் பட்ச அர்த்தமிருந்தது.

விஸ்வரூபம்
அமெரிக்கா - ஆப்கானிஸ்தான்
இடையேயான தளத்தில்
கதையும் காட்சிகளுமாக
படமாக்கப்பட்டிருக்கிறது.
இதனில்
இஸ்லாமிய கூட்டமைப்பினர்
கோபப்பட வேறு என்ன
பிரத்தியோக காரணமாக இருக்கும்?

24 இஸ்லாமியக் கூட்டமைப்பின்
சிப்பாய்களும்
மற்றும் அதன் 
அரும் பெரும் தொண்டர்மார்களும்
கடந்த முப்பத்தி ஐந்து வருடக்காலமாக
ஆப்கானிஸ்தானில்
என்ன நடந்துக் கொண்டிருக்கிறதென்பதை
அறிந்திருப்பார்களா என்ன?
அறிந்திருக்கும் பட்சம்
இத்தனைக்கு...
கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள்.

*
இப்படத்தையொட்டி
கமல் செய்திருக்கிற தவறுகள் இரண்டு.

ஒன்று.
ஆப்கானிஸ்தானின்
கடந்த கால நிகழ்வுகள் அத்தனையும்
தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் என்கிற
தொனியில்
இப்படத்தின் கதை மையத்தை
தேர்வு செய்தது.

இரண்டு,
கமல்,
சப்தம் காட்டாமல்
இப்படத்தை ஆங்கிலத்தில்
எடுக்கத் தவறியது.

தமிழ்த் திரையை
உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென்று
கமலிடம்
இங்கே யார் அழுதார்கள்?.

*
24 இஸ்லாமியக் கூட்டமைப்பு கட்சிமார்களுக்கு
ஓர் தாழ்மையான வேண்டுகோள்.
படைப்பாளியையும்
அவனது படைப்புகளையும்
அசிங்கப்படுத்தி
சிதைப்பதையெல்லாம் விட்டுவிட்டு
முதலில் நீங்கள்
சினிமா பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

***

நன்றி : தாஜ்

4 comments:

 1. சென்ஷியின் ப்ளஸ்-ல் இந்த சுட்டியை பார்த்தேன்:
  “விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை
  http://eathuvarai.net/?p=2776

  ReplyDelete
 2. லோக நாயகருக்கு ஆஸ்கார் கிடைச்சுரும்ல??!!??

  ReplyDelete
 3. minority ai appothum oorukayaha ninaikkakodathu cinimave cinimava pakkura kalam varumpothu kamal visvarupam padaikkattum.

  ReplyDelete