’ஆச்சிமா’ என்று நாங்கள் அழைத்த சித்தி ஜூனைதா பேகம் குறித்து சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல எழுத்தாள நண்பர் கீரனூர் ஜாகிர்ராஜா. சுட்டி : http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html . பழைய ஆபிதீன் பக்கங்களில் ஆச்சிமா பற்றி நிறைய பதிவேற்றியிருக்கிறேன். ’ஆச்சிமா ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் நண்பர் நாகூர் ரூமியின் கட்டுரையோடு (இவரை கவிஞர் நாகூர் ரூமி என்று அழைக்கிறார் ஜாகிர்ராஜா. எப்படி விடுவது மூச்சை என்று (மூச்சை மட்டும்) எளிமையாக சொல்லித் தரும் A1 ஆன்மீகவாதியல்லவா நாகூர் ரூமி? )’காதலா கடமையா’ நாவலின் சுட்டி, ஆச்சிமாவின் ’மண்ணில் மறைவது சில்லடியா ?’ கட்டுரை , நா.கண்ணனின் ’சித்தி ஜூனைதா பேகமும் முதுசொம் இலக்கியக் கூடமும்’ கட்டுரை மற்றும் ஆச்சிமாவின் அபூர்வமான நேர்காணல் இருக்கிறது. அ. வெண்ணிலாவின் ’கனவுலகும் படைப்புலகும்’ கட்டுரைரையை தனியே பதிவேற்றியிருக்கிறேன். ’சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்’ என்று நான் வைத்த தலைப்புடன் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களின் கட்டுரையும் (‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ ) அங்கே உண்டு. இதெல்லாம் எத்தனை நாள் வேர்ட்பிரஸ்ஸில் இருக்கும் என்று தெரியவில்லை. காப்பி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஆபிதீனுக்கும் தேவைப்படலாம். இங்கே சொல்ல வந்தது... நண்பர் ஜாகிர்ராஜாவால் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிர் பற்றி...
‘‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.’ என்கிறார் ஜாகிர்ராஜா.
என்ன புதிர், ஆச்சிமாவின் பேரன்பும், மன்னிக்கும் பெருந்தன்மையும்தான் மௌனத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
’இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்காக மட்டிலும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக – உங்கள் இனத்திற்காக – உங்கள் சமுதாயத்திற்காக – உங்கள் மக்கட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டிலும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகத் திகழுங்கள்.’ என்று சொன்ன ஆச்சிமாவால் அப்படித்தான் இருக்க இயலும்.
என்ன சொல்கிறீர்கள்?
***
நன்றி : கீரனூர் ஜாகிர்ராஜா
//மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது//
ReplyDelete//மௌனத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன்//
நினைப்பு சரியாக இருக்கலாம்
யூகம்கூட சரியாக இருக்கலாம்
மென்று விழுங்கியதை
மீண்டும் மிடறாக்க
வேண்டாமென நினைப்பது
பெருமைதான்
எது எப்படியோ,
இரண்டில் எது?
இரண்டுமா?
இல்லை வேறா?
என
இப்போது யாரும் கேட்க முடியாது
ஆச்சிமாவிடம்
நண்பர் ரஃபி மூலமாக
ReplyDeleteஆச்சியம்மாவை
நேரில் சந்தித்து
பேசவும் சந்தர்ப்பம் கிடைத்ததை
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்
நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆச்சியம்மாவின்
காதலா கடமையா
நாவலின் போக்கையொட்டியதாக
நாடோடி மன்னனின் கதை இருந்தது என
அழுத்தமாக சொல்லப்படாத
குற்றச்சாட்டொன்று
நீண்டகாலமாகப்
பேசப்பட்டுக் கொண்டிருப்பதை
நான் அறிவேன்.
ஆனால்...
நாடோடி மன்னன் திரைப்படம்
வெற்றிகரமான ஓர் ஆங்கில திரைப்படத்தின்
தழுவல் என்பது
எல்லோரும் அறிந்த வெளிப்படையான நிஜம்.
நடிகை பானுமதி
அதை தமிழில் எடுக்க முயன்றதையும்
M.G.R. அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
விட்டுத்தந்தார் என்பதையும்
M.G.R. அவர்கள் ஓர் பேட்டியில் கூற
படித்திருக்கிறேன்.
தனது நாவலால் கசிந்த
சர்ச்சைக் குறித்து
ஆச்சியம்மா பதில் அளிக்காததை
என்னால் அனுமானிக்க முடிகிறது.
-தாஜ்
// ‘காதலா கடமையா?’வே ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்// http://abedheen.wordpress.com/2008/12/15/alibathusa/
Deleteஆபிதீன்
அப்படியா??? அப்படியே இருந்தாலும் ஆச்சிமா இறந்தபின் இதைச் சொன்னால் அவ்வளவு உசிதமாய் இல்லைங்கனி!
Deleteஆச்சியம்மாவின்
Deleteகீர்த்திகளை
அவர்கள்
எழுத்தோடு வாழ்ந்த காலத்திலேயே
சொல்லனும் என்றால்...
நீங்களும் நானும்
புதுமைப் பித்தன் காலத்திற்குத்தான் போகவேண்டும்.
நண்பர் அப்துல் காதர்
எந்தக் காலத்தில்
வாழ்கிறார் என்றே அவருக்குப் புரியவில்லை!
என்றாலும்...
வாழும் நகைச்சுவையை வழங்கியமைக்கு நன்றி.
-தாஜ்
ஆச்சியம்மாவைப் படித்தோம். ஆச்சரியமாக இருந்தது. ஆபிதீனுக்கு வாழ்த்துக்கள். கீரனூர் ஜாகிர் ராஜாவுடன் இரண்டு வருடங்களுக்கு முதல் புத்தகச் சந்தையிலிருந்து கைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். ஏற்பாடு செய்தவர் எழுத்தாள நண்பர் பா.செயப்பிரகாசம். பின்னர் அவருக்குப் பல மெயில்கள் அனுப்பியும் பதில் கிட்டவில்லை. அவருடைய கருத்தலெவ்வை, மீன்காரத்தெரு, துருக்கித் தொப்பி எல்லாம் படித்து விட்டோம். நான் மட்டுமல்ல, ஸபீரும் அவனுடைய மனைவியும் கூடப் படித்து மகிழ்ந்தார்கள். மீன்காரத் தெரு பற்றி சென்னையிலுள்ள முஸ்லிம் பேராசிரியர்களுக்கு அவ்வளவு உவப்பில்லை. முஸ்லிம்களை தலித்துகள் என்று சொல்லலாமா என்றெல்லாம் அங்கலாய்த்தார்கள். கலைஞனுக்கு இதெல்லாம் கணக்கில்லை என்பதற்கு கீரனூர் ஜாகிர்ராஜாவின் எழுத்து ஓர் எடுத்துக்காட்டு.
ReplyDeleteகாக்கா, நண்பர் ஜாகிர்ராஜாவின் 'மீன்காரத் தெரு' பற்றி சேகு எழுதிய இந்த விமர்சனம் இணையத்தில் - நாலைந்து வருடங்களுக்கு முன்பு - பிரபலம். சுட்டி : http://sheaku.blogspot.com/2007/04/blog-post.html
Deleteசேகு எனக்குத் தெரிய வந்தது சுவாரஸ்யம். சொந்தக்காரரகளின் பெயர்களை கூகுளில் அடித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது 'சபியாம்மாள் தோட்ட வீடு' சிறுகதையுடன் கிடைத்தார். சிறுகதை சுமார்தான்; ஆனால் விமர்சனம் சரியானது. (முஸ்லிம் பேராசிரியர்களிடம் கேட்டால் சேகுவின் சிறுகதை நன்று என்றும் விமர்சனம் மோசம் என்றும் சொல்வார்கள்!)