Monday, January 30, 2012

நான் , புலி , நினைவுகள் 1 : எஸ்.எல்.எம். ஹனிபா

அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா நம்ம ஹனிபாக்காவை? பழைய ஆபிதீன் பக்கங்களின் கடைசி பதிவில் மறுமொழியிட்டிருந்தார் இப்படி : “நான் புலி நினைவுகள்” எனும் மகுடத்தில் கடந்த முப்ப‍தாண்டு கால போர்வாழ்வில் எனக்குக் கிட்டிய அனுபவங்களில் சிலதை பொறுக்கி எழுத திட்ட‍மிட்டு அதில் ஒரு பத்தியை இன்று எழுத வந்தேன். ஆபிதீன், அவருடைய பக்க‍ங்களை ஸலவாத்துடன் முடிப்பதை‍தை அறிந்து நானும் பின்வாங்குகிறேன். என்ன‍த்தை எழுதிக் கிழிக்க‍ என்ற வழமையான கூண்டுக்குள் புகுந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை’

இப்போது , கூண்டிலிருந்து வெளிவருகிறார் நம் ஹனிபாக்கா. உஷார்...! - ஆபிதீன்


***

நான் , புலி , நினைவுகள் 1
எஸ்.எல்.எம். ஹனிபா


1989 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு அதிகாலைப் பொழுது - சுப்ஹூத் தொழுகை முடியும் தறுவாயில் இந்திய அமைதிப்படையினர் ஊரைச் சுற்றி வளைத்திருந்தனர்.
எனது பகுதி மக்கள் அனைவரையும் (மூவாயிரம் பேரளவில்) ஹிஜ்ரா பாடசாலை வளவினுள் அடைத்து வைத்திருந்தனர். இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.
காலை ஆறு மணியளவில் எனது வீட்டின் கேற்றில் நின்று ஒருவர் மெதுவான குரலில் என்னை அழைத்தார்.
"சேர்! விசயம் தெரியுமா? நம்மெட ஆக்களையெல்லாம் இந்தியன் அள்ளிக் கொண்டு பள்ளிக்கூடத்திலெ போட்டிருக்கான்"
சொன்னவன் வந்த வழியும் தெரியாது மறைந்து விட்டான்.
நான் அப்பொழுது இந்தியாவின் உதவியால் தமிழ் மக்களுக்குக் கிட்டிய அதிகபட்ச அதிகாரம் கொண்ட வடக்குக் கிழக்கு மாகாண சபையின் (எஸ்எல்எம்சி) உறுப்பினராகயிருந்தேன்.
இந்தியப் படையினர் பார்வையில் நானொரு எம்.எல்.ஏ.சாப்!
உடனடியாக அந்த இடத்திற்கு நான் பிரசன்னமானேன்.
அமைதிப் படையினரால் வீதி நிறைந்து விட்டது.
பாடசாலையின் அரைச்சுவரில் கட்டைக் காற்சட்டை, ரீ சேர்ட் அணிந்தவராக - கெப்டன் தமுழி ஹிந்தியில் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும் இந்தியப் படையில் நின்று கொண்டிருந்த இந்தியப் படை ஜவானும் தஞ்சாவூர்க்காரரும் நண்பனுமான கந்தசாமி, "வணக்கம் சாப்! இரவு நாங்க உங்க ஆக்கள தூங்க விடல்ல பாருங்க. அப்புறம் இவன் தாயோளி சொல்றான், எல்.ரீ.ரீ.ஈ பசங்க வந்தா - நம்மெ அக்காமாரு அண்ணன்மாரெல்லாம் எங்க கேம்பில வந்து தகவல் கொடுக்கணுமாம். அப்படித் தகவல் தந்தா தம்பிமாரு இவங்கள சுட்ர மாட்டாங்க? யாருமெ சொல்லப்படாது. உங்க உயிருக்கு ஆபத்து. இவன் கிடக்கான்"
கந்தசாமியின் மொழிமாற்றம் கேட்ட ஆண்களும் பெண்களும் 'கொல்'லென்று சிரித்தனர்.
ஹிந்தியிலிருந்து மொழிமாற்றம் பெற்ற 'தமிழ்' வார்த்தைகளின் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர எனக்கு நெடுநேரமெடுத்திற்று

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com ) , நளீம்

Saturday, January 28, 2012

குஹூ குஹூ போலே கோயலியா

ஆதி நாராயணராவ் இசையமைத்த ’தேசுலாவுதே தேன் மலராலே’ பாடலை நீண்டநாளாக தேடிக்கொண்டிருந்தேன் , யுட்யூபில். கிடைக்கவில்லை. (மணாளனே மங்கையின் பாக்கியம்) மிகவும் நீளமான படமாதலால் படம் முடிவதற்கு முன்பே விமர்சனம் போட்டுவிட்டதாக பதிவர் ஆர்.வி எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். அவர் மூலம் ஆடியோ மட்டும் http://www.dhool.com/sotd/thesulaavuthE.rm சுட்டியில் கிடைத்தது. cooltoadல் MP3 கிடைக்கலாம். சரி, வியாழனன்று ரூமுக்கு வந்த மஜீதிடம் ’ரா-1’ படத்தில் சின்மயி பாடிய ‘என் உயிர்'-ல் சிலிர்த்ததைச்  சொன்னபோது (மகளார் அனீகா சிபாரிசு செய்திருந்தாள். அவள் சிபாரிசு செய்த இன்னொரு பாட்டு ‘நான் வரைந்த வைத்த சூரியன்’. ‘ நள்ள முழ்ழை இள்ளை; நாறும் கய்யில் இள்ளை” என்று 'மது'ஸ்ரீ மயக்கிய பாட்டு. 'இது என்னட்ட இருக்கு செல்லம், படம் பேரு மறந்துடிச்சி’ ‘ஜெயம்கொண்டான் வாப்பா’ ’ஜெயம் கொன்றானா?’ . சிரித்தாள்) ’இத கேளுங்க நானா’ என்று மனதோடு மனோ நிகழ்ச்சியில் சின்மயி பாடிய ‘குஹூ குஹூ போலே கோயலியா’ பாடலைச் சொன்னார். அட, ஹிந்தி தேசுலாவுதே!. படத்தின் பெயர் ’ஸ்வர்ண சுந்தரியாம்.  இப்போதுதான் பார்க்கிறேன். ரஃபியும் லதாவும் பாடுகிறார்கள். ஆனால் இஸ்மாயில், கண்டசாலா கண்டசாலாதான். தூக்கி ஏப்பம் விட்டுவிட்டார் உங்கள் ரஃபியை!

***


கீரனூர் ஜாகிர்ராஜா கட்டுரையும் ஒரு புதிரும்

’ஆச்சிமா’ என்று நாங்கள் அழைத்த சித்தி ஜூனைதா பேகம் குறித்து சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல எழுத்தாள நண்பர் கீரனூர் ஜாகிர்ராஜா. சுட்டி : http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html . பழைய ஆபிதீன் பக்கங்களில் ஆச்சிமா பற்றி நிறைய பதிவேற்றியிருக்கிறேன். ’ஆச்சிமா ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில்  நண்பர் நாகூர் ரூமியின் கட்டுரையோடு (இவரை கவிஞர் நாகூர் ரூமி என்று அழைக்கிறார் ஜாகிர்ராஜா. எப்படி  விடுவது மூச்சை என்று (மூச்சை மட்டும்) எளிமையாக  சொல்லித் தரும் A1 ஆன்மீகவாதியல்லவா நாகூர் ரூமி? )’காதலா கடமையா’ நாவலின் சுட்டி,  ஆச்சிமாவின் ’மண்ணில் மறைவது சில்லடியா ?’ கட்டுரை , நா.கண்ணனின் ’சித்தி ஜூனைதா பேகமும் முதுசொம் இலக்கியக் கூடமும்’ கட்டுரை மற்றும் ஆச்சிமாவின் அபூர்வமான நேர்காணல் இருக்கிறது. அ. வெண்ணிலாவின் ’கனவுலகும் படைப்புலகும்’ கட்டுரைரையை  தனியே பதிவேற்றியிருக்கிறேன். ’சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும் என்று நான் வைத்த தலைப்புடன் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களின் கட்டுரையும் (‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ ) அங்கே உண்டு. இதெல்லாம் எத்தனை நாள் வேர்ட்பிரஸ்ஸில் இருக்கும் என்று தெரியவில்லை. காப்பி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஆபிதீனுக்கும் தேவைப்படலாம். இங்கே சொல்ல வந்தது... நண்பர் ஜாகிர்ராஜாவால் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிர் பற்றி...


‘‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.’ என்கிறார் ஜாகிர்ராஜா.

என்ன புதிர், ஆச்சிமாவின் பேரன்பும், மன்னிக்கும் பெருந்தன்மையும்தான் மௌனத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.


’இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்காக மட்டிலும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக – உங்கள் இனத்திற்காக – உங்கள் சமுதாயத்திற்காக – உங்கள் மக்கட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டிலும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகத் திகழுங்கள்.’ என்று சொன்ன ஆச்சிமாவால்  அப்படித்தான் இருக்க இயலும்.

என்ன சொல்கிறீர்கள்?

***

நன்றி :  கீரனூர் ஜாகிர்ராஜா







Tuesday, January 24, 2012

அபூர்வமான ஹனிபா பாட்டுடன் இப்னு பதூதா (பாகம் 2)

***


'பிஸ்மில்லாஹ்' சொல்லி ஆரம்பிக்கலாம் பெரியார் பற்றிய பாடலுடன்! இது ரொம்ப ரொம்ப பழைய ஹனிபா பாட்டு. 'தமிழ் இணைய வரலாற்றிலேயே முதன்முறையாக' பதிவேற்றப்படுகிறது. புலவர் ஆபிதீன்காக்கா எழுதியது. சமநிலைச் சமுதாயம் இதழில் வந்த கட்டுரையோடு இதை இணைக்கலாம் என்றிருந்தேன். நண்பர் கய்யூமின் வலைப்பக்கத்தில் கட்டுரை இருப்பதால் இங்கே பாடல் மட்டும். பாட்டைக் கேட்பீர்களோ பதிவைப் படிப்பீர்களோ, உங்கள் இஷ்டம். MP3 அனுப்பிய ’சீசன்’ அசனா மரைக்காயருக்கு நன்றி. - ஆபிதீன்

***
பாடல் கேட்க :
Download

***






இப்னு பதூதா (1304-1369)The Greatest Arab Traveller



பாகம் 2


1332–1344
ஹஜ்ஜு முடிந்ததும் ஏமனுக்குச் சென்றால் அங்கிருந்து செல்லும் கப்பலில் இந்தியா செல்லலாம் என்ற திட்டத்துடன் ஜுத்தா(ஜித்தா) சென்றேன். ஆனால் என் திட்டம் நிறைவேறவில்லை. என்னுடன் சேர்ந்துவர யாரும் கிடைக்கவில்லை. நாற்பது நாட்கள் தாமதித்தும் பயனில்லை, எனவே கெய்சர் செல்வதற்காக ஒரு கப்பல் தயாராக இருந்தது. அக்கப்பலின் அமைப்பு எனக்கு திருப்திகரமாக இல்லை, அதில் பயணம் செய்ததில் வழியில் மூழ்கியதால் ஒரு சிலரே அதிலிருந்து தப்பித்தோம். வேறொரு கப்பலில் அய்தாபுக்குப் [on the Egyptian coast of the Red Sea] பயணம் செய்தபோது சுழல் காற்றினால் கரை ஒதுக்கப்பட்டு பாலைவனத்தில் பயணம் செய்து நைல் நதி வழியாக கெய்ரோ சென்று மீண்டும் இரண்டாம் முறையாக Gaza, ஹெப்ரான், ஜெருசலம் வழியாக சிரியா சென்றேன்.

சிரியாவிலிருந்து ஜெனோவா வியாபாரிகளுடன் அண்டோலியா வுக்கு (துருக்கி) கடல்வழி பயணம் செய்து பின் தரைவழியாக கோனியா(in Cyprus) வை அடைந்தேன். கோனியா- இது அலக்ஸாண்டரினால் உருவாக்கப்பட்ட மூன்றாவது பெரிய நகரம். அழகிய கட்டிடங்களும், பழத்தோட்டங்களும், பெரிய வீதிகளும் அமைத்து திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரமாகும். இப்போது சுல்தான் பதுருதீன் இப்னு குராமனுடைய ஆட்சியில் இருந்தது. பாரசீக சூஃபி கவிஞர் மௌலானா ரூமி அவர்களின் அடங்கியுள்ள இடத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பின் அங்கிருந்து கருங்கடல் தீரத்திலுள்ள சினோப் சென்றேன்.

இதற்கிடையில் பிர்கி சுல்தானை(Sultan of Birgi) சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவரது விருந்தினராக இருந்தபோது "நீ விண் கல்லைப் (asteroid) பார்த்திருக்கிறாயா?" என்றார். "இல்லை, அப்படி ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை” என்றேன். வானிலிருந்து ஒரு கல் நகருக்கு வெளியே விழுந்தது அதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கொண்டுவரச் செய்தார். அது கருப்பு நிறத்தில் நான்கு பேர் தூக்கும் அளவுக்கு கனமாக இருந்தது. பின்பு கல் உடைப்பவர்கள் நான்கு பேரை வரவழைத்து உடைக்கச் சொன்னார். அவர்கள் பெரிய இரும்பு சம்மட்டியால் ஒன்றாக நான்குமுறை அடித்தும் உடையவில்லை. பின் அதை இருந்த இடத்தில் வைக்கச் சொன்னார். அவரிடம் இரண்டு வாரங்கள் விருந்தினராக இருந்தேன். நிறைய வெகுமதிகளும் ஆயிரம் திர்ஹம் பணமும், பொன்னும் கொடுத்து என்னை வழியனுப்பினார். Tim என்ற நகர் வழியாக சென்றபோது 40 தினார் கொடுத்து ஒரு கிரேக்க அடிமைப் பெண்ணை வாங்கினேன்.

சினோபிலிருந்து க்ரிமியா வுக்கு (உக்ரைனுக்கு அருகிலிருக்கும் குட்டி நாடு) செல்வதற்காக நாற்பது நாட்கள் காத்திருக்கவேண்டியதாகி விட்டது. கிரேக்கர்களிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பலில் பயணம் செய்வதற்கு முன் சாதகமான காற்றுக்காக மேலும் 11 நாட்கள் தாமதித்தோம். ஒரு வழியாக பயணம் புறப்பட்டு மூன்றாம் நாள் நடுக்கடலில் கப்பல் சென்றுக்கொண்டிருக்கும்போது கொடும் புயலினால் கப்பல் சினோபை நோக்கித் திரும்பியது. காற்று ஓய்ந்ததும் மீண்டும் கப்பலைத் திருப்பி இலக்கை நோக்கி செலுத்தும்போது மீண்டும் ஒரு புயல், கப்பல் நீண்ட மலைப்பகுதியில் ஒதுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அங்கே எதிரி அல்லது கடல் கொள்ளையர் கப்பல் இருந்ததால் வேறு பகுதியில் கரை ஒதுங்கினோம்.

///கரை ஒதுங்கிய இப்னு பதூதா அஜோவ் நகர்(town of Azov காகஸஸ்(Caucasus, கீழ் ஓல்கா(lower Volga செல்கிறார். அங்கு முஹம்மது ஒஜ்பெக் அரசரை சந்திக்கிறார், பின் மேல் ஓல்கா(upper Volga) வழியாக பல்கொர்(Bulgory பின் அஸ்ட்ரகன்(Astrakhan) வருகிறார். அங்கு அரசர் உஜ்பெக்’கான்-ஐ மீண்டும் சந்திக்கிறார். அப்போது அரசர் தன் மனைவிகளில் ஒருவரும் பசாந்திய பேரரசர் Andronikos III Palaiologos ன் மகளுமான இளவரசி பெய்லன்(Baylan) பிரசவத்துக்காக தன் தாய்நாடான கான்ஸ்டாண்டிநோபிள் செல்ல அனுமதிக்கிறார். இளவரசியுடன் இப்னு பதூதாவும் செல்கிறார். இஸ்லாமிய நாட்டுக்கு அப்பால் முதன் முறையாக இப்போதுதான் செல்கிறார். 1332 (or 1334) கான்ஸ்டாண்டிநோபிளில் (இஸ்தான்புல்) பேரரசரை சந்திக்கிறார். அங்குள்ள சோஃபியா தேவாலயத்துக்கு(church of Hagia Sophia ) செல்கிறார் அங்கு பாதிரியாரை சந்தித்து அளவளாவும்போது தான் ஜெரூஸலம் சென்றுவந்ததை விளக்குகிறார். [புகழ் பெற்ற blue mosque  கிபி. 1616ல் கட்டப்பட்டது.] ஒரு மாதகாலம் தங்கிவிட்டு மீண்டும் அஸ்ட்ரகன் திரும்புகிறார். தலை நகர் சராய் அல்-ஜதித் சென்று சுல்தான் முஹம்மது உஜ்பெக்கை சந்தித்து தன்னுடைய பயணத் திட்டத்தை விளக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு காஸ்பியன் கடல் மற்றும் ஏரல் கடலைக் கடந்து புக்கரா மற்றும் சமர்கந்த் வந்தடைகிறார்.

அவரது திட்டம் இந்தியா செல்லவேண்டும், டில்லியை ஆட்சி செய்யும் சுல்தான் முஹம்மது பின் துக்ளக்கை காணவேண்டும், மகிழ்விக்க வேண்டும் என்பது. சுல்தானுக்கு சாதாரணமாக அங்கு வரும் வணிகர்கள் பரிசளிப்பார்கள், அதுபோல் சுல்தானும் வணிகர்களுக்கு பரிசளிப்பார், இதை ஏற்கனவே கேள்வியுற்றிருந்தார். எனவே இப்னு பதூதாவும் குதிரை, ஒட்டகம் என நிறையப் பரிசுப் பொருள்கள் வைத்திருந்தார், அப்பரிசுப் பொருட்களுடன் தெற்கு ஆப்கானிஸ்தான் வழியாக இந்து குஷ் மலையைக் கடந்து சிந்து வந்தடைகிறார்.

அவர் பயணம் செய்த ஆசியா மைனர், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பாரசீகம்(தற்போதைய உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான் நாடுகள்), ஆப்கானிஸ்தான் அனைத்திலும் ஆட்சி செய்த பல குறுநில மன்னர்கள், மந்திரிப் பிரதானிகள், முக்கியப் பிரமுகர்கள், மதத் தலைவர்கள்(religious brotherhoods) என பலரை சந்திக்கிறார். அனைவரும் இப்னு பதூதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.///

இந்தியாவில் இப்னு பதூதா

வருஷத்தில் குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானிலிருந்து சிந்து, இந்தியா வரமுடியுமாம். ஜூலை ஆரம்பத்தில் புழுதிக்காற்று வீசத்தொடங்கினால் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்ல. எங்கள் காரவான் சிந்து நதி தீரத்தை அடைந்தது, அப்போது முஹர்ரம் 1 ஹிஜ்ரி734 (12-9-1333). இங்கு வந்தடைந்ததும் நாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம் எத்தனை பேர் இருக்கிறோம், எதற்காக வருகிறோம் என்ற எல்லா விபரங்களையும் இங்குள்ள அதிகாரிகளால் இந்தியாவிலுள்ள சுல்தானுக்கு அறிவிக்கப்படுகிறது. இப்பகுதி இந்திய சுல்தானுக்குக் கட்டுப்பட்டது, முல்தான் இதன் தலைநகர், நாங்கள் மட்டுமல்ல பயணிகள் வரும் விபரம் முல்தான் கவர்னருக்கு அறிவிக்கப்படுகிறது. கவர்னர் செய்தியை டில்லியில் சுல்தானுக்குத் தெரியப்படுத்துகிறார். அங்கிருந்து உத்திரவு வந்தபின்னறே மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் கௌரவிக்கவும்படுகின்றனர்.

சிந்துவிலிருந்து டில்லி செல்ல 50 நாட்கள் பிடிக்கும், ஆனால் அவர்கள் வைத்திருக்கும் தபால் துறையினால் ஐந்து தினங்களில் செய்தி டில்லியை அடைந்துவிடும். இரண்டுவிதமான தபால் தொடர்பு வைத்திருக்கிறார்கள். ஒன்று வேகமாகச் செல்லக்கூடிய குதிரை வீரர்கள், நான்கு மைல்களுக்கு ஒரு வீரர் என்ற முறையில் மாறி மாறிப் போகும் தொடர் முறை(relay), மற்றொன்று குதிரை செல்ல முடியாத இடத்தில் மனிதர்கள். ஒவ்வொரு ஊரிலும் தனி அலுவலகம் உண்டு அங்கு இதற்கென்று பிரத்தியேக ஆட்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் ஒரு கையில் ஒருமுனையில் மணி கட்டிய கம்பும் இன்னொரு கையில் எடுத்து செல்லும் கடிதங்களும் இருக்கும்; கடிதத்தை எடுத்துச் செல்பவர் மணியை அடித்துக்கொண்டே வேகமாக ஓடுவார், மறு முனையில் இருப்பவர் மணி சத்தம் கேட்டவுடன் அடுத்து செல்ல தயாராகிவிடுவார். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் என தபால் சேவை துரிதமாக நடந்தது. இதுமட்டுமல்ல சுல்தானுக்காக செல்லும் பொருட்களும் இம்முறையிலேயே எடுத்துச் செல்லப்படுகிறது. தவ்லதாபாத்தில்  சுல்தான் இருந்தாலும் கங்கையிலிருந்து நீர் இம்முறையிலேயே சுல்தானுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

இரண்டு மாதத்திற்குப் பிறகு முல்தானின் காவல்துறை உயர் அதிகாரி என்னிடம் வந்து பயணத்துக்குத் தயாராகும்படி சொன்னார். புதிதாக வெளிநாட்டவர் டில்லி செல்வதானால் விளக்கம் கொடுக்கவேண்டும், என்னை அழைத்து எதற்காக டில்லி செல்கிறாய்? என்று கேட்டனர். "Khund A'lam(Master of world) அவர்களிடம் பணிவிடை செய்வதற்காக வந்திருக்கிறேன்" என்று பதிலளித்தேன். குரஸானிலிருந்து வருகிறவர் இந்தியாவில் தங்குவதற்கல்லாமல் வேறு காரணம் இருந்தால் அனுமதிக்கப்படுவதில்லை. பதிலளித்த பின் ஒப்பந்தம் எழுதப்பட்டு சாட்சிகளுடன் நீதிபதி முன் கையெழுத்து இட்டேன். சிலர் மறுத்ததால் அனுமதிக்கப்படவில்லை.



உடன்கட்டை ஏறுதல்

டில்லிக்கு பயணம் தொடங்கியது, நாற்பது நாள் பயணம், எங்களுடன் திரமித் நகர நீதிபதி தன் குடும்பத்துடன் 20 சமயல்காரார்கள் உள்பட பரிவாரங்களுடன் வந்தார். முதலில் அடைந்த நகரமான அபுஹர் என்ற இடத்தில் நாங்கள் சிறிது தாமதித்து சிறு குழுவாக பயணத்தைத் தொடர்ந்தோம், என்னுடன் அரபிகள், பார்ஸிகள், துருக்கியர்கள் இருபது குதிரைகளில் சென்றோம், வழியில் கரடுமுரடான மலைகளைக் கடக்கும்போது சுமார் எண்பது ஹிந்துப் போராளிகள் இரண்டு குதிரை வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர், அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டதில் 12 பேரையும் ஒரு குதிரைவீரனையும் கொன்று எஞ்சியவர்களை சிறை பிடித்தோம். நடந்த சண்டையில் என்னை ஒரு அம்பு துளைத்தது என்றாலும் நானும் என் குதிரையும் சிறு காயத்துடன் தப்பித்தோம். சிறைபிடித்தவர்களை கவர்னர் அபுபக்கரிடம் ஒப்படைத்தோம். எங்கள் பக்கம் மோசமாகக் காயம் பட்ட குதிரையைக் கொன்று அதன் மாமிசத்தை துருக்கியர் உணவாக்கிக்கொண்டனர்.

ஷெய்கு ஃபரீதுதீனை சந்தித்துவிட்டு எங்களது கூடாரத்துக்கு திரும்பும்போது சிலர் வேகமாகச் செல்வதையும் அவர்களுடன் எங்கள் குழுவினர் சிலர் இருப்பதையும் கண்டேன். விசாரித்தபோது இறந்துபோன ஹிந்து ஒருவரை தீயிட்டனர், பின் அவர் மனைவியும் சுயமாக தீயிட்டுக்கொண்டாள் என்றனர். பின் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடப்பதைப் பார்த்தேன். ஓரிடத்தில் உயர்வான ஆடை அணிவித்து ஒரு பெண்ணை குதிரையில் ஊர்வலமாக மேளதாளத்துடன் அழைத்து வந்தனர், பின்னால் முஸ்லிம்களும், ஹிந்துக்களும், பிராமணர்களும் வந்தனர். அவர்கள் சுல்தானிடம்(அப்பகுதி ஆட்சியாளர்/கவர்னர்) சென்று இறந்த கணவனுடன் அவளையும் எரிக்க அனுமதி கேட்க சென்றனர். அவள் இஷ்டப்பட்டால்தான் எரிக்கமுடியும் இல்லாவிட்டால் அவள் வாழலாம் ஆனால் நல்ல ஆடை அணியமுடியாது, எந்தச் சடங்கிலும் ஈடுபடமுடியாது, சமுதாயத்தில் கலக்கமுடியாது, சுருக்கமாகச் சொன்னால் அவள் தனிமைப் படுத்தப்படுகிறாள் (total isolation).

அம்ஜாரி என்ற இடத்தை அடைந்தபோது சண்டையில் மூன்று பேர் இறந்துவிட்டனர், அவர்கள் மனைவிகளும் உடன்கட்டை ஏற சம்மதித்திருந்தனர். அவர்களுக்கு உயர்வான ஆடை அணிவித்து, வாசனைப் பூசி, வலது கையில் தேங்காயும், இடது கையில் முகம்பார்க்கும் கண்ணாடியும் கொடுத்து குதிரைமீது அமர்த்தி மேளதாள நாயனத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கூடவே பிராமணர்களும், உறவினர்களும் வந்தனர். ஒவ்வொருவதும் இறந்துபோன முன்னோர்களுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படி அப் பெண்களிடம் கூறினர். முக மலர்ச்சியுடன் ஆம் சொல்கிறோம் என்றனர்.

இக்கிரியைகள் எப்படி நடக்கிறது என்று பார்ப்பதற்காக என் சக தோழர்கள் சிலருடன் சென்றேன், மூன்று மைல் தூரம் சென்றபிறகு ஒரு இருளான இடத்தை அடைந்தனர். அங்கு நிறைய தண்ணீரும் அடர்ந்த மரங்களும் நான்கு கோயில்களும்(pavilion with idol) இருந்தன. கோயில்களுக்கிடையில் சூரிய ஒளி புகமுடியாத அளவுக்கு அடர்த்தியான நிழலில் தண்ணீர் தொட்டி இருந்தது. அது பார்ப்பதற்கே நரகம் போலிருந்தது. நீர்தொட்டியின் அருகே வந்ததும் அவர்கள் அதிலிறங்கி தங்கள் ஆபரணங்கள் ஆடைகளைக் களைந்து ஏழைகளுக்கு(alms) கொடுத்தனர். தைக்கப்படாத பருத்தி துணி ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது, ஒரு பகுதி இடுப்பில் சுற்றிக்கொண்டு ஒரு பகுதியை தோளோடு சேர்த்து தலையில் முக்காடு போட்டுக்கொண்டனர். நீர் தொட்டிக்கருகே தீ வளர்க்கப்படுகிறது, நெய்யும் எண்ணெயும் ஊற்றி கொழுந்துவிட்டு எரியவைக்கின்றனர். சுமார் பதினைந்து பேர் சிறிய விறகுக்கட்டுக்களுடனும் பத்துபேர் பெரிய விறகுகளுடனும் நிற்கின்றனர். மோளக்காரர்கள் அப்பெண்கள் வரும் வரை வாசிக்காமல் காத்திருக்கின்றனர். அப்பெண்கள் அஞ்சாமலிருப்பதற்காக நெருப்புக் குண்டம் பெரிய விரிப்பால் மறைக்கப்படுகிறது.
நான் பார்த்தேன் , அவர்களில் ஒரு பெண் புன்சிரிப்புடன் வந்து விரிப்பை வலுக்கட்டாக நீக்கி "நெருப்பைக் காண்பித்து என்னை பயமுறுத்துகிறீர்களா? எனக்கு தெரியும் இது நெருப்பு, என்னை தனியே விடுங்கள்" என்றாள். பின்பு தன் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி நெருப்பைக் கும்பிட்டுக்கொண்டே அதனுள் இறங்கிவிடுகிறாள். அப்போது தாரைத்தப்பட்டைகள் சத்தமாக வாசிக்கப்படுகின்றன, சிறிய விறகுகளை அவள்மீது முதலில் எறிகின்றனர், பின் பெரிய கட்டைகளை எறிந்து அங்கிங்கும் நகரவிடாமல் தடுத்துவிடுகின்றனர். அழுகை சத்தம் கேட்க சத்ததுடன் ஆரவாரிக்கின்றர். இதை பார்த்துக்கொண்டிருந்த நான் மயங்கி நான் அமர்ந்திருந்த குதிரைமீது விழுந்தேன், நல்லவேளையாக என்னுடன் வந்தவர்கள் என் முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கத்தை நீக்கினர். காணச் சகிக்காமல் விரைவாக அவ்விடத்தை விட்டு நீங்கினோம்.

இதேபோல் கங்கையிலும் நடக்கிறது, கங்கை, நதிகளின் சொர்க்கம் என்கின்றனர். சிலர் கங்கையில் மூழ்கி தன் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். கேட்டால் நாங்கள் தனியாக 'குஸே' (Kusa'y can hardly represent Lord Krishna as the French transletion suggests) கடவுளை சந்திக்கப்போகிறோம் என்கின்றனர். இறந்த உடலை வெளியே எடுத்து எரித்து சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர்.

30 ம் வயதில் டில்லி அடைதல்

அங்கிருந்து புறப்பட்டு டில்லிக்கு பத்து மைல் தூரத்திலுள்ள மஸூதாபாத் வந்து மூன்று நாட்கள் தங்க நேரிட்டது. அப்போது சுல்தான் துக்ளக் தவுலதாபாத்திலிருந்து டில்லி திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் ராணியின் தாயார் டில்லியில் இருந்தார், அவரும் ஒரு மந்திரி. எங்களை வரவேற்க அதிகாரிகளை அனுப்பியிருந்தார். இதற்கிடையில் சுல்தானுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டு பதிலும் வந்தது. பின் அங்கிருந்து நீங்கி டில்லிக்கு அருகேயுள்ள பாலம் என்ற கிராமத்தை அடைந்தோம். மறு நாள் டிஹ்லி(டில்லி)யை அடைந்தோம். டில்லி இந்தியாவின் தலைநகர், அற்புதமான நகரம், அதன் அழகும் சுற்றியுள்ள அபாரமான சுவரும் இந்தியாவில் - ஏன், இஸ்லாமிய உலகில் - வேறு எங்கும் இல்லாத பெரிய நகரம் என்று பறைச் சாற்றியது. அடுத்தடுத்துள்ள நான்கு[1] நகரங்களைத் தன்னகத்தே கொண்டது. ஒன்று ’பழைய டில்லி’ 1188 ல் கைப்பற்றப் பட்டது; இரண்டாவது சிறி என்று சொல்லப்படும் ’கலிஃபாபாத்’, இது அப்பாசிய கலிஃபா முஸ்தன்சிரின் பேரன் கியாதுதீனுக்கு சுல்தானால் கொடுக்கப்பட்டது; மூன்றாவது ’துக்ளகாபாத்’, இது சுல்தான் துக்ளக்கினால் உருவாக்கப்பட்டது; நான்காவது ’ஜஹான் பனாஹ்’ இது சுல்தான் முஹம்மது ஷாவின் அரண்மனை உள்ளது. இந்த நான்கையும் இணைத்து ஒரு சுவற்றுக்குள் அமைத்தார் ஷா. இங்குள்ள பெரிய பள்ளிவாசல் வெள்ளை கற்களால் கட்டப்பட்டது, இதன் மண்டபம், கூபா, மிஹ்ராப்(தொழவைக்கும் இடம்), மிம்பர்(பிரசங்க மேடை) அனைத்தும் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்டது. பள்ளியின் நடுவே ஆச்சரியத்தை தூண்டக்கூடிய தூண் ஒன்று உள்ளது, அது எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்று யாருக்கும் அறியவில்லை. ஒரு பெரியவர் சொன்னார் ஏழு உலோகத்தால்(Haft Fu'sh) செய்யப்பட்டது என்று. இது 30 முழம்(cubit) உயரம் உள்ளது. எங்கள் தலைப்பாகையால் தூணின் சுற்றளவை அளந்தபோது 8 முழம் இருந்தது.[2]

//குறிப்பு: உலோகத் தூண், அலாய் மினாரா, குதுப் மினாரா இவைகளைப் பற்றிய இப்னு பதூதாவின் குறிப்பில் முரண்பாடு உள்ளது. குதுப் மினாரா, அலாய் மினார, உலோகத் தூண் இவைகளைக் காண இங்கே சொடுக்கவும். //

ஊருக்கு வெளியே இமாம் ஒருவரை சந்தித்தேன், அவரை குகை மனிதர் என்றழைக்கின்றனர், அவர் பெயர் கமாலுதீன், மிக எளிமையாக இருந்தார். அவரை எனக்குப் பிடித்திருந்தது, அவருடன் சில காலம் தங்கியிருந்த காலத்தில் பார்த்தேன், பத்து இருபது நாட்கள் தொடர்ந்து நோன்பு வைப்பார், பெரும்பாலும் இரவு முழுவதும் நின்றுகொண்டே இருப்பார். சுல்தான் வரும்வரை அவருடனேயே இருந்தேன்.

சுல்தானை வெகு விமரிசையாக வரவேற்கின்றனர். வீதிகளில் இரு மருங்கிலும் பலநிலைகளில் தற்காலிக மேடைகள் (scaffolding stages) அமைக்கப்பட்டு பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன; ஒவ்வொரு நிலையிலும் பட்டாடை உடுத்திய பாடகியர், கூடவே ஆடலழகியர் என நிறைந்திருக்கின்றனர்; மக்கள் வெள்ளமாக வீதிகளில் நிற்கின்றனர்; வீரர்கள், குதிரைப் படை , யானைப் படைகள் என புடைசூழ அம்பாரியில் சுல்தான் வருகிறார். யானைகள் மீது கவட்டைகள்(catapults) கட்டப்பட்டு அதன் மூலமாக வெள்ளி, தங்க காசுகள் மக்களை நோக்கி எறியப்படுகிறது. இது அரண்மனை வாயில் வரை நிகழ்கிறது. வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் வாரி வழங்குகிறார். ஒரு முறை வரட்சி நிலவியது, அப்போது எல்லாப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது, குவியல் கோதுமை ஆறு தினாருக்கு வாங்கவேண்டிய சூழல் உருவானது, மக்கள் துன்பப்பட ஆரம்பித்தனர். ஒன்னரைப் பவுண்டு மதிப்புள்ள உணவுப் பொருட்களை அரசாங்க களஞ்சியத்திலிருந்து ஒவ்வொருவரும் ஆறு மாதகாலம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுப்பு செய்தார். இதில் ஏழை, பணக்காரர், அடிமை அல்லது சுதந்திரமானவன் என்ற பாகுபாடு பாராமல் ஒவ்வொரு நபரையும் கணக்கிட்டு கொடுக்க உத்திரவிட்டார். எப்படி பாகுபாடு பார்க்காமல் வாரி வழங்குகிறாரோ அதேபோல் தவறு செய்தால் அதற்கான தண்டனையும் வழங்குகிறார். பரிசு கொடுக்காத நாளும் கிடையாது, அதுபோல் தண்டனை வழங்காத நாளும் கிடையாது என சொல்லலாம்.

நாங்கள் டில்லியை அடைந்தபோது சுல்தான் முஹம்மது பின் துக்ளக் தவுலதாபாதிலிருந்து டில்லியை நோக்கி வந்துகொண்டிருந்தார். எனவே சுல்தானுடை தாயாரை நாங்கள் சந்தித்து எங்கள் பரிசுப் பொருட்களை அளித்தோம். சில மந்திரிகளை சந்தித்த பின்னரே சுல்தானின் தாயாரை சந்திக்க முடிந்தது. எங்கள் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட அவர் நாங்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் பொருந்திய இல்லம் கொடுத்தார். ஆயிரம் வெள்ளி தினார் நிறைந்த இரண்டு பொதி கொடுத்தார். ஒன்று என் தேவைகளுக்கு மற்றொன்று என் தோழர்கள், அடிமைகள், வேலையாட்கள் ஆகியோருக்கு.

ஷவ்வால் 4(8-6-1334) துக்ளக் அரசர் தலைநகரிலிருந்து 7 மைல் தூரத்திலுள்ள தில்பாத் கோட்டையை அடைந்ததும் அங்கு சென்று காணும்படி மந்திரி எங்களுக்கு உத்திரவு அனுப்பினார். நாங்ளும் மற்றுமுள்ளோரும் அங்கே குழுமினோம். ஓவ்வருவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த பரிசுப் பொருட்களுடன் சுல்தானைக் கண்டனர், என் முறை வந்ததும் இருமுறை சுல்தானுக்கும் மரியாதை செலுத்தும்போது, ”பிஸ்மில்லாஹ் மவ்லானா பதுருத்தீன்” என்றார்கள் அங்குள்ளவர்கள். அறிஞர்களை ‘மவ்லானா’ என்று அழைப்பது இந்திய வழக்கம், அதுபோல் என்னையும் மவ்லானா அல்லது பத்ருத்தீன் என்றே அழைத்தனர். அரசர் என்னை வரவேற்றார், என் கையை குலுக்கினார், என் கையைப் பிடித்தவாறே “உங்கள் வருகை எங்கள் நாட்டுக்குப் பெருமை அளிக்கிறது, உங்கள் நாடு கேள்விப்படாத முறையில் நான் உங்களைப் பெருமைப் படுத்துவேன் என்றார் பார்ஸியில், பின் ஒவ்வொன்றாக விசாரித்தார், நான் பதிலளிக்கும் ஒவ்வொரு முறையும் என்னை பெருமைப் படுத்தினார். அவர் பெருமைப் படுத்தும்போதெல்லாம் சுல்தானின் கையை முத்தமிட்டேன், இவ்வாறு ஏழு முறை முத்தமிட்டேன்.

எங்கள் அனைவருக்கும் விருந்தளித்தபின் உங்களில் யாருக்காவது மந்திரியாகவோ, அதிகாரியாகவோ, ஆசிரியராகவோ, நீதிபதியாகவோ இருக்க விரும்புகிறீர்களா? என கேட்கப்பட்டது, சட்டவியல் படித்துள்ளேன் எங்கள் குடும்பத்தவர் நீதிபதியாகப் பணியாற்றுகின்றனர், நான் நீதிபதியாக பணியாற்றமுடியும் என என் நிலையை விளக்கினேன், சுல்தான், மாலிக்கி சட்டப் பிரிவுக்கு நீதிபதியாக நியமனம் செய்து வருஷத்துக்கு 12000 வெள்ளி தினார் சம்பளம் அளித்து உத்திரவிட்டார். நான் பாக்தாதிலும் டெமாஸ்கஸிலும் இருந்தபோது இஸ்லாமிய சட்டத்தைப் பற்றி மேலும் தெளிவாக கற்றுக்கொண்டதும் அங்குள்ள கல்வியாளர்களிடம் விவாதித்ததும் இங்கு பெரும் பயனளித்தது. துரதிருஷ்டவசமாக ஆறு மாதம் வரை சம்பளம் கிடைக்கவில்லை. இடையில் இருந்த மந்திரிகளும் கஜானா அதிகாரிகளும் இதற்கு காரணமாயிருந்தனர், எனவே சுல்தானிடம் முறையிட்டபின் அது கிடைத்தது.

21 அக்டோபர் 1341 கலகக்காரர்களை அடக்குவதற்காக சுல்தான் மஆபர்(Coromandel) நோக்கிப் படைஎடுத்து வெற்றிபெற்று வந்தபின் எனக்கும் சுல்தானுக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. அதன் காரணமாக குகை மனிதர் என்றழைக்கப்பட்ட இமாம் கமாலுதீனைக் கண்டு என் நிலையைச் சொல்லி நான் மக்கா செல்ல விரும்புகிறேன் என்றேன், ஆனால் போகவேண்டாம் என சொல்லிவிட்டார். இது டிசம்பர் 1341ல் நடந்தது. இதிலிருந்து நாற்பது நாள் பிறகு சுல்தான் என்னை அழைத்து “நீ பயணம் செய்வதில் ஆசையுள்ளவன் இப்போது சீனாவுக்கு உன்னை தூதுவனாக அனுப்புகிறேன்” என்றார்.

சீனாவுக்குத் தூதுவராக

நூறு ஆண் பெண் அடிமைகள், ஐநூறு வெல்வட் பட்டு, வாசனைப் பொருட்கள், தங்க ஆபரண ஆடைகள், ஆயுதங்கள் இவைகளை சீன அரசர் பரிசாக அனுப்பி Qara'jil (ஹிமாலயாவில்) கோயில் கட்டுவதற்காக துக்ளக்கிடம் அனுமதி கேட்டிருந்தார், இஸ்லாமிய சட்டம் இடம் கொடுக்கவில்லை என மறுத்து பகரமாக நூறு குதிரைகள், நூறு ஆடல், பாடல் அழகிகள், நூறு வெள்ளை அடிமைகள், ஆயிரத்து இருநூறு பல்வேறு துணிகள், தங்கம், வெள்ளி என அதிகமான அளவில் பரிசுப்பொருட்களுடன் சீன தூதுவர்களும், துணையாக ஜாங்ஜின் அமீர் ஜாஹிருதீனையும், பட்டாளத்துணையுடன் என்னை சீன தேசம் போக ஏற்பாடு செய்தார்.

7 சஃபர்,743 (22 ஜூலை 1342) அன்று புறப்பட்டு கொயல் (Koel, Aligarh) அடைந்தோம். ஏழு மைல் தூரத்திலிருக்கும் அல் ஜலாலி யை ஹிந்துப் படையினர்(Hindu infidels) தாக்கிக்கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அவர்கள் 1000 குதிரைப் படையினரும், 3000 காலாட்படையினரும் இருந்தனர். நாங்கள் அருகே இருப்பது அவர்களுக்கு தெரியாது, எங்களுடைய திடீர் தாக்குதலால் அவர்கள் திக்குமுக்காடினர்; பலர் இறந்தனர்; அனேக குதிரைகளையும், ஆயுதங்களையும் கைப்பற்றினோம். எங்கள் தரப்பில் 23 குதிரை வீரர்களும் 55 காலாட்படையினரும் உயிரிழந்தனர். நாங்கள் சுல்தானுக்கு செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தோம்.

இதற்கிடையில் எதிரிகள் கரடுமுரடான மலைகளிருந்து கீழ்நோக்கி தாக்குதல் நடத்தினர். தினமும் இதை சமாளிக்கவேண்டியதாகிவிட்டது. இந்நிலையில் நானும் சில நண்பர்களும் அருகிலுள்ள சோலையில் ஓய்வெடுக்கச் சென்றோம், அப்போது கோடை காலமாக இருந்ததால் சிறு தூக்கம் தேவைப்பட்டது. சற்று நேரத்தில் கூக்குரல் கேட்டு பார்த்தபோது இரண்டு பிரிவுகளாக அவர்கள் தாக்கிக்கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை பல பாகமாக விரட்டியடிக்கும்போது நானும் இன்னும் ஐந்து பேரும் பிரிந்துவிட்டோம். அப்போது குதிரை வீரர்களும், தரைப்படையினரும் கூட்டமாகத் தாக்க ஆரம்பித்ததால் நாங்கள் தப்பிக்கவேண்டியதாகிவிட்டது. என்னை மூன்று பேர் துரத்தினர். பாதை, கற்கள் நிறைந்த கரடு முரடாக இருந்தது ஒரு வழியாக தப்பிப்பது சமவெளிப்பக்கம் வந்து வழி தெரியாமல் சென்றுகொண்டிருந்தேன். அப்போது திடீரென்று சுமார் 40 பேர் அம்பை ஏந்தியவாறு என்னை சுற்றி வளைத்து என்னை சிறைபிடித்தனர்.

தலை தப்பியது...

///இப்னு பதூதாவை அடர்ந்த காட்டுக்குள்ளிருந்த அவர்கள் கூட்டத்தினரிடம் அழைத்துச் சென்றனர். அவர்களில் இரண்டு முஸ்லிம்கள் இருந்தனர், அவர்கள் பார்ஸியில் நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என கேட்டனர். பதூதாவும் சிறிது உண்மையைச் சொன்னார். அவர்கள் எண்ணம் இப்னு பதூதாவை கொல்லவேண்டும் என்று, ஆனால் அவர்களிலிருந்த ஒரு வயதானவரின் இரக்கத்தால் பதூதா தப்புகிறார். நடு இரவு வரை பயணம் செய்வதும், சற்று நேரம் கிடைத்த இடத்தில் உறங்குவதுமாக பல நாட்கள் பயணம் செய்தார். வழியில் கிடைக்கும் இலை தழைகளை உணவாக்கிக்கொண்டார். இதற்கிடையில் பல இடங்களில் எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாய் இருந்தது. சில இடங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை, நா வரண்ட நிலையிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க நடக்கவேண்டியதாயிருந்தது. மிகவு தளர்ந்துபோன ஒரு நிலையில் தன்னை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கியதும் உண்டு. தன் பலத்தையெல்லாம் வரவழைத்து மேலும் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தார். எவ்வளவோ கெஞ்சியும் அங்கிருந்த கிராமவாசிகள் இவருக்கு உணவு தர மறுத்துவிட்டனர். பசி ஒரு பக்கம் தாகம் ஒரு பக்கமாக அடுத்த கிராமத்தை நோக்கி நடந்தார். அது ஒரு பாழடைந்த கிராமம், கிணற்றின் அடியில் தண்ணீர் இருந்தது, அதை மொள்ள எந்த சாதனமும் கிடைக்காமல் தன்னுடைய காலணி(ஷூ)யைக் கழற்றி மொள்வதற்கு முயன்றபோது கயிறு அறுந்து அதுவும் விழுந்தது. செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது நடந்தது அந்த அதிசயம்!///

நிகழ்ந்த அதிசயம்....!?

நா வரண்ட நிலை. கயிறு அறுந்து விழுந்ததால் கிடைத்த ஒரு வாய்ப்பும் பறிபோய் செய்வதறியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது கையில் கூஜா, நீண்ட கம்பு, தோளில் ஒரு பை சகிதமாக கருப்பு நிறத்தில் ஒரு மனிதர் என்முன் தோன்றி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். நானும் "வ அலைக்கும் சலாம்" என்று பதில் கூறினேன். பின் பார்ஸியில் "நீ யார்" என்று கேட்டார், "வழி தவறியவன்" என பதிலளித்தேன், "நானும்தான்" என்றார். பின் கூஜாவுடன் தான் கொண்டுவந்த கயிரைக் கட்டி தண்ணீர் மொண்டார். நான் அருந்த கேட்டேன், "பொறுமையாய் இரு" என்று சொல்லிவிட்டு தான் கொண்டுவந்த பையிலிருந்து சிறிது சோறும், வறுத்த கருப்பு பயிறும் தந்தார். நான் சிறிது சாப்பிட்டுவிட்டு தண்ணீரும் அருந்தினேன். அதன்பின் இரண்டு ரக் அத் தொழுதோம். அப்புறம் என் பெயரைக் கேட்டார், முஹம்மது என்று சொல்லிவிட்டு அவர் பெயரைக் கேட்டேன், "Joyous Heart" என்றார். இறைவன் அருளால் "நீ என்னுடன் சேர்ந்துக்கொண்டாய்" என்றார், நான் "ஆம்" என்று கூறியவாறு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரம் சென்றிருப்போம் என் கை கால் உடல் முழுவதும் வலிக்க ஆரம்பித்தது என்னால் நிற்ககூட முடியாமல் உட்கார்ந்து விட்டேன். "என்ன ஆச்சு?" என்றார். "உங்களை சந்திக்கும் முன் என்னால் நடக்க முடிந்தது, இப்போது முடியவில்லை" என்றேன். "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறிவிட்டு "என் தோளில் அமர்ந்துக்கொள்" என்றார். "நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள்" என்றேன் "இறைவன் எனக்கு பலத்தை அளிப்பான்" என்று கூறிவிட்டு பலவந்தமாக தன் தோளில் அமரவைத்து நடக்க ஆரம்பித்தவர், 'கூறுவீராக, அல்லாஹ் நமக்குப் போதுமானவனும் பாதுகாப்பு அளிப்பதில் சிறந்தவனுமாவான்' (குல், ஹஸ்புனல்லாஹு நிஃமல் வக்கில்)என்றார். நான் தொடர்ந்து சொல்லிக்கோண்டே வந்தேன். ஆனால் எப்போது மயக்கமடைந்தேன் என்று தெரியாது, கீழே விழுந்தபிறகுதான் உணர்வுபெற்றேன். எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது அம்மனிதர் இருந்த அடையாளமே இல்லை, நான் ஒரு கிராமத்தின் அருகில் இருந்தேன். ஹிந்துக்கள் வாழும் கிராமம், தாஜ்புரா என்று பெயர் ஆனால் முஸ்லிம் கவர்னரின் பொறுப்பில் இருந்தது. அம்மக்கள் கவர்னருக்கு செய்தி அனுப்பினர். அவர் என்னை வரவழைத்து சூடான உணவும் ஆடையும் தலைப்பாகையும் கொடுத்தார். ஆனால் அவை இரண்டும் என்னுடையது நான் கொயல்(அலிகார்) வந்தபோது வேறு அரபிக்குக் கொடுத்தது. இது எப்படி இங்கு வந்தது என்று வியப்பில் ஆழ்ந்தேன்.

பின் என் சிந்தனை ஓடியது, என்னை தோளில் சுமந்துக்கொண்டு வந்தவர் யார்? ’Joyous Heart’ என்று பெயர் சொன்னாரே அதை பார்ஸியில் மொழி பெயர்த்தால் “தில்ஷாத்” என்றாகும். அன்று ஃபவ்வாவில் ’ஷெய்கு அபு அப்துல்லா அல் முர்ஷிதி’ சொன்னாரே, “நீ இந்தியா சென்றால் என் சகோதரர் தில்ஷாத்தை சந்திப்பாய் அவர் உன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்”[3] என்று. நினைத்தபோது என் உடல் புல்லரித்தது, ஆனால் அவரை மீண்டும் நான் சந்திக்கவே இல்லை. பின் நான் பாதுகாப்பாக இருப்பதாகவும் என்னை அழைத்துச் செல்லும்படியும் கொயலுக்கு செய்தி அனுப்பினேன். தகவல் கிடைத்ததும் மகிழ்ந்து உடனே அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் சுல்தானிடமிருந்தும் செய்தி வந்தது, என்னுடைய நிலையக் கேட்டிருந்தார். இனி மேற்கொண்டு பயணம் செய்வது ஆபத்தாக இருக்கும் திரும்பலாம் அல்லது சுல்தானுக்கு செய்தி அனுப்பி பதில் வந்ததும் திரும்பலாம் என்றனர். நாம் பயணத்தைத் தொடருவோம், எங்கிருக்கிறோமோ அங்கு செய்தி வரும் என்று சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அலிகாரிலிருந்து கோழிக்கோடு வரை...

///அலிகாரிலிருந்து பயணத்தைத் தொடங்கிய இப்னு பதூதா குழுவினர், பர்ஜுபுரா, குவாலியர், கஜுரோஹோ, மால்வா, உஜ்ஜைன் வழியாக துக்ளக்கின் இரண்டாவது தலைநகரான தவ்லதாபாத்(மஹராஸ்ட்ரா மாநிலம்) வந்தடைந்தார்கள். வரும் வழியில் சில சூஃபிக்களை இப்னு பதூதா சந்தித்தார். தவுலதாபாத் சுல்தான் துக்ளக்கின் ஆசிரியர் குத்லு கான் பொறுப்பில்(கவர்னர்) இருக்கிறது. இங்கு மராட்டிய பழங்குடியினரும் நந்துர்பர் என்ற இடத்தில் மராட்டிய ஷத்திரியர்களும், ஜோசியர்களும் வசிக்கின்றனர். பின் இங்கிருந்து தப்தி நதி(குஜராத்)யைக் கடந்து காம்பே நகரை அடைந்தனர். அதனருகேயுள்ள கண்டகர் என்ற இடத்தில் 70 குதிரைகளடங்கிய தன் பரிவாரங்களுடன் கப்பல் ஏறி கோவாவைக் கடந்து கர்நாடகத்திலுள்ள ஹினாவர்(Honavar) கரை அடைந்தனர்.

மழை காலம் தொடங்கிவிட்டதால் நான்கு மாதம் வரை கடல் சீற்றமாக இருக்கும் எனவே மேற்கொண்டு தொடர்ந்து கப்பல் பயணம் செய்வது சாத்தியமில்லாதாகிவிட்டது. ஆகவே கடல் சீற்றம் இல்லாதபோது அடுத்தடுத்துள்ள துறைமுகங்களில் நிறுத்தி நிறுத்தி கல்லிக்கோட்டை வரை செல்கிறார். ஹினாவரிலிருந்து வரும் மேற்கு கடற்கரையோரத்தை மலபார்(Mulaybar) என்றே குறிப்பிடுகிறார் (பார்க்க படம்). மலபாரின் உட்பகுதிக்கு தரைவழியாகவும் காயல் வழியாகவும் சென்றிருக்கிறார்.

ஹினாவர் கரையோரம் இருந்த பெண்கள் மிக அழகாக இருந்ததார்களாம். எல்லா பெண்களும் குர்ஆனை மனனம் செய்திருந்தனர். இது அவர்களின் தனித்தன்மை. அந்த சிறிய நகரத்தில் 13 பள்ளிக்கூடங்கள் பெண்களுக்காகவும் 23 ஆண்களுக்காகவும் இருந்தன. சுல்தான் ஜலாலுதீன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். ஹினாவருக்குப் பிறகு அபு சரூர்(Barcelore), ஃபாக்கனூர்(Barkur), மஞ்சரூர்(மங்களூர்) ஆகிய துறைமுக நகரங்களில் நிறுத்தி இறுதியாக கல்லிக்கோட்டை(கோழிக்கோடு) வந்தடைகிறார். எங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறாரோ அங்குள்ள நகரங்களின் சிறப்பைப் பற்றி தன் ‘ரிஹ்லா’வில் குறிப்பிடத்தவறவில்லை.

தரைவழி சென்ற பகுதிகளைக் குறிப்பிடும்போது கோவாவிலிருந்து கொல்லம் வரை வழிமுழுவதும் அடர்ந்த மர நிழல்களாக இருந்தனவாம்; பயணிகள் தங்கிச்செல்வதற்காக ஒவ்வொரு அரை மைல் தூரத்திலும் சிறிய மரக்குடில் இருந்தது. அவை ஹிந்துகளின் பராமரிப்பில் இருந்தன. அங்கு முஸ்லிம் ஹிந்து என யார்வேண்டுமானாலும் ஓய்வெடுக்கலாம். ஹிந்துக்களுக்கு பாத்திரத்தில் நீர் கொடுப்பார்கள், ஆனால் முஸ்லிம்களுக்கு ஊற்றுவார்கள் கையில் ஏந்தி அருந்தவேண்டும். தவறி பாத்திரத்தில் அருந்தினால் அப்பாத்திரத்தை அருந்தியவரிடமே கொடுத்துவிடுவார்கள் இல்லையானால் எறிந்துவிடுவார்கள்; ஹிந்துகள் வீட்டில் முஸ்லிம்கள் நுழைய முடியாது,

உணவு வாழை இலையில் பரிமாறப்படுகிறது. இஸ்லாமியர் இரவு தங்க வேண்டுமானால் முஸ்லிம் வீட்டில் தங்கி தங்களுக்கு வேண்டிய பொருளை வாங்கவேண்டும். அழகிய தோட்டத்தின் நடுவே வீடுகள் இருந்தன, தோட்டத்தை சுற்றி மரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் முக்கிய வாகனம் பல்லக்கு. அதை நான்கு அடிமைகள் அல்லது வாடகை ஆட்கள் சுமந்து செல்கிறார்கள், விரும்பாதவர் நடந்துதான் செல்லவேண்டும். பொருட்கள் எடுத்துச்செல்ல வாகனங்கள் இருக்கின்றன, கள்வர் பயம் என்பது கிடையாது, மரத்திலிருந்து விழும் ஒரு பழத்தைக்கூட யாரும் சீண்டுவதில்லை, நான் பார்த்தவகையில் மிகவும் பாதுகாப்பான சாலைகளாக இருந்தன என்று இப்னு பதூதா குறிப்பிடுகிறார். அங்கு பல ஹிந்து குறுநில மன்னர்கள் ஆண்டாலும் முஸ்லிம்களுக்குத் தனி மரியாதை இருந்தது என்று மேலும் குறிப்பிடுகிறார்.////

மலபாரின் பெரிய துறைமுகம்

Quliqu't(கோழிக்கோடு). இங்கு சீனக் கப்பல்கள் நின்றுக்கொண்டிருந்தன. சீனா, சுமத்ரா, சரன்தீப்(இலங்கை), ஏமன், மாலதீவு, பாரசீக வணிகர்கள் நிறைய இருந்தனர். எங்கள் கப்பலை அங்கு நிறுத்தினோம். அவ்வூரின் மன்னர் உட்பட அரசு அதிகாரிகள் வணிகர்கள் குழுவாக வந்து இசைமுழக்கத்தோடு எங்களை வரவேற்றனர். நான் பார்த்தபோது 13 சீன தேசத்துக் கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. அரசு விருந்தினராக இருந்துவிட்டு சீன கப்பலுடன் புறப்படத் திட்டமிட்டேன். அன்று வெள்ளிக்கிழமை பகல் தொழுகையை முடித்துவிட்டு புறப்படலாம் என்பது என் திட்டம். ஆனால் மதியத்துக்குப் பிறகு பருவ நிலை மாறியதால் என்னால் கப்பலுக்கு செல்ல முடியவில்லை,

கப்பலில் உள்ளவர்கள் கரைக்கு வரமுடியவில்லை. காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. என்னுடைய உடமைகள் எல்லாம் கப்பலில் சிக்கிக்கொண்டதால் உடுத்தியிருந்த உடுப்பும் ஒரு சால்வையும் தவிர வேறொன்றுமில்லை. அன்று இரவை கரையில் கழித்தேன். மறுநாள் சனிக்கிழமை காற்று புயலாக மாறி கப்பல்கள் திசைக்கொன்றாக சென்றன.

முடிவில் இரண்டுமூன்று கப்பல்கள் கரையில் மோதி உடைந்து சிதறின, அதில் என் கப்பலும் ஒன்று, அதிலிருந்தவர்கள் சிலரைத் தவிர சுல்தான் துக்ளக் சீன அரசருக்குக் கொடுத்த பரிசு பொருட்கள் அனைத்தும் மூழ்கின. சில கப்பல்கள் கண் காணாமல் சென்றன. அப்படிச் சென்ற கப்பல்களில் என்னுடைய அடிமைகள், பொருட்கள் ஏற்றிய கப்பலும் ஒன்று.

இனி வேறு வழி இல்லை, எனவே கவ்லம்(கொல்லம்) செல்ல முடிவு செய்தேன், தரை மார்க்கமாகச் சென்றாலும் நதி வழியாகச் சென்றாலும் பத்து நாள் பிடிக்கும். என்னுடன் வழித்துணைக்கு ஒரு முஸ்லிமை சேர்த்துக்கொண்டு நதி வழியே சென்றேன். மாலையானதும் கரையோர கிராமங்களில் தங்கி இரவை கழித்துவிட்டு காலையில் பயணத்தைத் தொடர்வது அவர்களது பழக்கமாக இருந்தது. என்னுடன் இருந்த அந்த ஒருவரைத் தவிர வேறு யாரும் முஸ்லிம் இல்லை, என்கூட வந்தவன் அவர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு என்னை திட்டவும் செய்தான், இது எனக்கு பெரிய துன்பத்தை உருவாக்கியது. வழியில் குழிஞ்சாக்கரை என்ற யஹூதிகளின் ஊரைக் கடந்து பத்தாம் நாள் குவாலம்(Quilon) அடைந்தேன். அங்கு நிறைய முஸ்லிம் வணிகர்களும் சீன வணிகர்களும் இருந்தனர். க்வாஜா முஹஜ்ஜாப் என்பவரால் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் ஒன்றிருந்தது. குவாலத்தை திரவாரி என்ற மன்னரின் ஆட்சியிலிருந்தது, முஸ்லிம்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. நான், சீனாவிலிருந்து வந்திருந்த அந்நாட்டு மன்னரின் தூதுவருடன் தங்கிருந்தேன். அவரும் என்னைப் போல் புயலில் சிக்கி உடைந்த கப்பலிலிருந்து வந்தவர். இவரை மீண்டும் நான் சீனாவில் பார்த்தேன்.

மீண்டும் ஹினாவர் சென்று சுல்தான் ஜமாலுதீனிடம் நேர்ந்த கதியைச் சொல்லி வேறு கப்பலைப் பெறலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் கல்லிக்கோட்டை சென்றபோது அங்கு சுல்தானின் 52 விரைந்து செல்லும் (போர்)கப்பல்கள் சந்தாபூர்(கோவா) செல்லவிருந்தது. அதில் ஒன்றின் கமாண்டர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கப்பட்டு எதிரி அரசனுடன் போர் புரிந்து நாட்டை கைப்பற்றினோம். ஆனாலும் சண்டை தொடர்ந்துக்கொண்டிருந்தது. இனி இங்கிருப்பது உசிதமல்ல என்பதால் மீண்டும் கல்லிக்கோட்டை வந்தடைந்தேன். அங்கே வந்திருந்த கப்பலில் என் அடிமைகள் இருவரைக் கண்டேன். புயலில் திசை மாறி போனக் கப்பலை சுமத்திரா அரசர் கைப்பற்றி பெண் அடிமைகளை தன்வசப்படுத்திக் கொண்டதாகவும் பொருட்களை அந்நாட்டவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், என் தோழர்கள் பலவாறாகப் பிரிந்து சீனா, வங்காளம், சுமத்திரா சென்றுவிட்டதாகவும் சொன்னார்கள். இனி இங்கேயே சுற்றிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனவே திலாபத் அல்-மஹல்(மாலதீவு) செல்ல முடிவெடுத்தேன்.

பயணம் தொடரும்...

[1] After the defeat of Prthviraja in the late 12th century, the city passed into Muslim hands. Quṭb al-Dīn Aybak, founder of the Muʿizzī (Slave) dynasty and builder of the famous tower Qutb Minar (completed in the early 13th century), also chose Delhi as his capital. ʿAlāʾ al-Dīn Khaljī (reigned 1296–1316) built the second city of Delhi at Siri, a short distance northeast of the Qutb Minar. The third city of Delhi was built by Ghiyāth al-Dīn Tughluq (1320–25) at Tughlakabad but had to be abandoned in favour of the old site near the Qutb Minar because of a scarcity of water. His successor, Muḥammad ibn Tughluq, extended the city farther northeast and built new fortifications around it. It then became the fourth city of Delhi, under the name Jahanpanah. - Encyclopædia Britannica

[2] Here, as also in his description of the Kutub Minar and Ala'i Minar, Ibn Battuta's figures are exaggerated. The iron pillar of Chandragupta, which was brought from Mattura and set up at Delhi by its Hindu founder in the eleventh centuray, is 16 inches in diameter and 23 feet in height. The Kutub Mina is 238 feet high, the unfinished portion of the Ala'i Minar (wrongly attributed by Ibn Battua in Qutub ad-Din) 70 feet high, and neither is so wide as he represents it to be. - H.A.R.GIBB

[3] “நீ மக்காவுக்குப் புனிதப் பயணம் செய்வாய், மதினா செல்வாய், ஏமன், ஈராக், துருக்கி சென்று பின் இந்தியா செல்வாய். இந்தியாவில் நீண்ட நாள் இருப்பாய் அப்போது அங்கே என் இந்திய சகோதரர் ‘தில்ஷாத்’ ஐ சந்திப்பாய், அவர் உன்னை, நிகழப் போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்” என அன்று ஒரு ஷெய்கு அறிவுறுத்தியதை(பாகம்1ல்) காணவும். இது எப்படி சாத்தியம்? எப்போதோ எங்கோ ஒன்று நிகழப்போவது முன்கூட்டியே எப்படி அறியமுடியும்? சொன்னவர் யார்? காப்பாற்றியவர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? காப்பாற்றியவர் தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் தன் பெயரையும் ஏன் மறைக்கவேண்டும்? நடந்து வந்தவர் திடீரென நடக்கமுடியாமல் போனதன் மர்மமென்ன? அவர் இவரை தோளில் சுமக்கவேண்டிய அவசியமென்ன? இவை எல்லாமே அவிழ்க்க முடியாத முடிச்சாக இருக்கும்போது எப்படி காரணம் கற்பிப்பது? இல்லை இன்றைய நவீன உலகம் ஏற்றுக்கொள்ளுமா? இல்லை நடக்கப்போவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரியும் என்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? பதில் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்..

Sources:
http://en.wikipedia.org/wiki/Ibn_Battuta
http://www.islamfortoday.com/ibnbattuta01.htm
http://www.answers.com/topic/ibn-battuta
http://www.fordham.edu/halsall/source/1354-ibnbattuta.asp
http://www.saudiaramcoworld.com/issue/200602/a.tangerine.in.delhi.htm
http://www.absoluteastronomy.com/topics/Ibn_Battuta
Encyclopædia Britannica
The Travels of Ibn Battuta by H.A.R.GIBB

***


நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
***
மேலும் பார்க்க : அருட்கொடையாளர்கள்