Sunday, August 31, 2014

நாகூர் ரூமியின் “தாயுமானவள்” குறுநாவல் அறிமுகமும் விமர்சனமும் - சு.மு.அகமதுநாவலாசிரியர் இதைகுருநாவல் என்று சொன்னாலும் கோபித்து கொள்ளமாட்டார் என்று நம்பலாம்.தனது குருவான தாயம்மா(பாட்டி) பற்றின கதையாடல் தான் இந்த குறுநாவல்.இந்த புத்தகம் இவர் எழுதினவற்றுள் ஏகதேசம் நாற்பதுக்கு மேல் ஐம்பதற்குள் ஒன்றாக இருக்கலாம்.

நாகூர் ரூமிக்கே உரித்தான ஹாஸ்ய பாணியில் வழமையான துவக்கம்.மறுபடியும் ஒருகுட்டியப்பாவை எதிர்நோக்கி வந்தவனுக்கு மண்டையின் மீது ஒரு குட்டு வைக்க இவர் காத்திருப்பது அப்போது தெரியாமல் போனது.நாகூருக்கே உரித்தானஸ்பெஸல் லேங்குவேஜ் ஸ்லேங்ஆங்காங்கே தெறித்தாலும் தடையேயில்லாமல் கதையினூடாக பயணத்தை துவக்க முடிகிறது.

ஆனால் கண்டிப்பாக இரண்டாம் அத்தியாயத்தை கடந்து உங்களால் நாவலின் உள்ளே செல்லவே முடியாது.சரி முதலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்து திரும்பிப்பார்த்தால்...திண்ணைக்கு திண்ணை தாவி விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன் நமது விரலை பிடித்து நம்மை எங்குமே செல்ல விடாது தடுத்துவிடுகிறான்.நாமும் அவனோடு சேர்ந்து விளையாடலாம் தான்.ஆனால் நம்மை கதாசிரியர் நிறுத்தி வைத்திருக்கும் இடம்...?விளையாட்டுச்சிறுவனின்மவுத்தான தாயை கிடத்தியிருக்கும் வீட்டின் திண்ணையில்.

உம்மா கெடந்து ஒறங்குறா’.

இப்படி தனக்கு பாடம்(கிதாபு) ஓதிக்கொடுக்கும் ஹஜரத்திடம் சிறுவன் கூறுவதாய் நாமே ஒரு சிறு நூலிழையை ஒட்டிக் கொள்ளலாம்.ஏனென்றால் நம்மை கதையோடு ஒன்றவிட்டு வேடிக்கை பார்க்க காதாசிரியர் பிரயத்தனமே படவில்லை.தானாகவே அமைந்துவிடுகிறது சுயத்தை பதியும் போது இப்படியான நிகழ்வுகள்.தனது தாயின் மரணத்தைக்கூட அறியாத பருவத்தில் தனது பால்யத்தை தொலைத்து நிற்கும் ஒரு சிறுவனின் மனவோட்டத்தை அழகாக சொல்வதில் வெற்றியாளராய் மாற்றமடைவதை நீங்களும் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

இந்தகுட்டை’(மோதிரக்கை குட்டு) மண்டையில் வாங்கின கையோடு மௌனம் என்ற ஒன்று மட்டும் இல்லாது போயிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும் என்ற எண்ணமெழ,

மௌனத்தை மௌனத்தால் மட்டுமே மனனம் செய்ய முடியும். தனிமையோ வெறுமையோ வலுவில் மௌனத்தை ஸ்தாபிக்க முடியாது.மனம் விரும்பும் போது மட்டுமே மௌனம் சாத்தியப்படும்.மனதை விரும்பும் சூழலுக்கு நாம் ஆட்படுத்தலாம். விரல் வழி கசியும் மௌனம் கூட வார்த்தைகளால் தான் அலங்கரிக் கப்படுகிறதுபோன்ற தத்துவங்கள்(!?) எனக்குள் (கு)தித்தன.

வலியை நிரப்பிக்கொண்டு வாழ்க்கையோடு அல்லல்படுவர்களை எந்த மூலையிலிருந்தாவது நம்மை போன்றவர்கள் வருத்தியிருக்கலாம். அவைகளை புறந்தள்ளும் இரங்கும் மனமும் இறைஞ்சும் குணமும் மனிதனுக்கே உரித்தான சிறப்பியல்புகளெனதாயுமானபாட்டியம்மாவின் மூலம் மீண்டும் நிரூபணமாக்கியுள்ளது இந்த குறுநாவல்.

பார்வைகள் வித்தியாசப்படலாம்.தன்னிலையிலிருந்து இறக்கம் கொண்டு இரக்கப்படுதல் மனிதநேயம்.தாயை இழந்த ஒரு சிறுவனின் வாழ்வியல் போராட்டத்தை சுருங்கச்சொல்லியதில் கதைச்சொல்லி ஏற்றம் பெறுகிறார் எனலாம்.

இது தாண்டா வாழ்க்கை (’ஜிகிர்தண்டா’) என்பதை முன்பே உணர்ந்தவரின் நெகிழ்வான படைப்பிது.

கடைசியாக இதை சொல்லி முடித்து கொள்வோம்.

நிழலுக்கென்ன
ஒளிக்கும் தனக்கும் இடையே
இருக்கின்றவற்றில் தான் பிரச்சினை
ஒன்று
உயிர்ப்புடனும்
மற்றது
உணர்வற்றதாயும் பயணிக்கிறது

- சு.மு.அகமது
***
நன்றி :  சு.மு.அகமது | https://www.facebook.com/musthaqsyedahmed/

1 comment:

  1. ”தாயுமானவள்” படைப்பாளியின் மற்றைய படைப்புகளிலிருந்து சற்றே விலகி மாறுபட்ட கோணத்தில் ஒரு தாயற்ற சிறுவனின் வாழ்க்கை போராட்டத்தை சொல்வதால் சிறப்பான கவனம் பெறுகிறது எனலாம்.வாழ்த்துகள் நாகூர் ரூமி அவர்களுக்கு.நன்றி ஆபிதீன் பாய்.

    ReplyDelete