Monday, August 28, 2023

மன்னிப்பு (சிறுகதை ) - நாகூர் ரூமிமன்னிப்பு - நாகூர் ரூமி


சாயங்காலம் ஆரம்பித்த வேதனை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். கால்வலிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. என்றாலும் எங்கோ நெருடுவதை அவனால் உணர முடிந்தது.


வலது பாதத்தைப் பார்த்தான். பெரு விரலிலிருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து விடலாம் போலத் தோன்றியது. ஆயிரம் கோடாரிகளை வைத்து யாரோ உள்ளே கொத்துகிறார்கள். நின்றால், நடந்தால் ம்ஹூம் சாயங்காலத்திலிருந்து விரலைக்கூட அசைக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. எப்படிச் சொல்வது? பாட்டிக்கு மட்டும்தான் தெரியும். அவள் 'அப்பவே சொன்னேனே' என்று அரற்ற ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் புலம்பலை ஒரு முறைப்பு அடக்கிவிடும். ஆனால் மனசாட்சியின் புலம்பலை? சாயங்காலத்திலிருந்தே அவனது அறிவு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து கிடக்கிறது. மீசையில் மண் ஒட்டிவிடுமே என்று சமாளித்து வந்தான். இனிமேல் முடியாது.


பாட்டியின் நாற்பது வருஷ மூடநம்பிக்கைகள் பச்சிலை உருவில் பாதத்தில் தேய்க்கப்பட்டனவே தவிர, வலி குறையவில்லை. பாட்டியின் நம்பிக்கை பச்சிலையாகக் காய்ந்து, உதிர்ந்து விட்டிருந்தது. ராமநாதன் சில தைலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதில் சிங்கப்பூர் 'கோடாலி' தைலமும் ஒன்று. அவனைப் பொறுத்தவரை அதுவும் சர்வரோக நிவாரணி மாதிரி. அதையும் காலில் கொட்டியாயிற்று. விறுவிறுவென்று ஏறியதே தவிர, பாதத்தினுள்ளே நரம்புகளுக்குப் பதில் அக்கினிக் கட்டிகள் தான்.


ஈஸிசேரில் சாய்ந்தபடி காலைத் தூக்கி எதிரிலிருந்த கட்டிலில், மெத்தைமீது போட்டுக் கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந் தாலும் கோடாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.


ராமநாதன் தன் நண்பன் ரவியின் உபாயத்தைக் கையாண்டு பார்த்தான். உடலில் எங்காவது அரித்தால் ரவி சொறிய மாட்டான். மனதின் திடத்தன்மைக்கு உடனே ஒரு போட்டி. 'அரிக்கிறாயா...ம்... அரி... எவ்வளவு நேரம் அரிப்பாய்... பார்க்கிறேன்... நான் சொறியவே மாட்டேன்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்து கொள்வான். தோலின் தினவையும் நகங்களின் பரபரப்பையும் அவன் மனம் வெற்றி கொள்வதை ராமநாதன் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். அதை நினைத்துக்கொண்டான். 'வலிக்கிறாயா... பார்ப்போம்... எவ்வளவு நேரம் வலிப்பாய்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்துகொண்ட கனமே அது சுக்கு நூறாய் உடைந்து போனது. ஆயிரம் ரவிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத வலி.


நத்தைபோல் வந்தது இரவு. ராமநாதன் முனங்க ஆரம்பித்தான். பாட்டி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள். ஒருமுறை முறைத்து, “உடனே டாக்டர் சீனிவாசனை வரச்சொல்லி ஃபோன் பண்ணு," என்றான்.


'அப்பவே சொன்னனே... மாரியாத்தாட்ட விளையாடாதடான்னு'' - போகும்போதும் புலம்பிக் கொண்டே சென்றாள் பாட்டி.


மாரியாத்தா, நகங்களும் மீசையும் கொண்ட மாரியாத்தா! சே... என்ன அறிவு கெட்டவர்கள் என்று நினைத்தான். வலி அதிகமாகியதுபோல் இருந்தது. கண்ணை மூடிக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்.


சீனிவாசன் வந்தார். பாதத்தைத் தட்டிப் பார்த்தார். திருப்பினார் அப்படியும் இப்படியும் சுண்டினார். கடைசியில் ராமநாதனிடம், 'வாட் ஹாப்பண்ட் ஆக்ச்சுவலி?" என்றார். இப்போது என்ன சொல்வது? ஒரு கணம்தான். தயக்கம் உணரப்படுவதற்குமுன் பதில் சொல்லிவிட வேண்டும்.


"காலை உதறினேன். சுவரில் இடித்துவிட்டது''. பாட்டியைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்துக் கொண்டான். அவள்தானே ஒரே சாட்சி. சாட்சியும் மௌனித்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே.


"இடிச்சுதுன்னா சொல்றே?" வீக்கமே இல்லையே?" ஆச்சரியப்பட்டார் சீனிவாசன். 'ஓகே... ஒரு ஆயின்ட்மென்ட் தாரேன், தடவிக்கோ" என்றார்.


''சார்... இரவு நான் எப்படியாவது தூங்கணூம்."


'ஏன், அவ்வளவு வலிக்கிறதா?” என்று கேட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டார்.


ஊசி போட்ட வலியை உணர முடியவில்லை. இமைகள் லேசாக கனத்தன. டாக்டர் காலையில் வருவாராம்.


மனத்தில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.


வீட்டுக்குள் வந்தபோது பாட்டியைத் தவிர யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் சிதம்பரம் கோயிலுக்கு. பாட்டி அடுப்பங்கரையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தான் ராமநாதன். ஓசைப்படாமல் வழக்கம்போல. அப்போது தான் அது நடந்தது.


பாட்டியின் பக்கவாட்டில் எவர்சில்வர் ப்ளேட்டில் மல்லிகைப் பூவாய்ச் சாதம். பாட்டி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவள் பார்க்காதபோது, சோற்றில் வாயை வைத்து நக்கிக் கொண்டிருந்தது மாரியாத்தா. மாரியாத்தா, வீட்டுப் பூனை. பாட்டியின் செல்லப் பூனை. பாட்டி வைத்தபெயர். பாட்டியின் இஷ்ட தெய்வம் மாரியாத்தா. இஷ்டத்துக்குச் சாதத்தை எச்சில் பண்ணிக் கொண்டிருந்தது.


ராமநாதனுக்குப் பூனைகள் என்றாலே கால்கள் பரபரக்கும். நக்கும் சுவாரஸ்யத்தில் மாரியாத்தா இவனைக் கவனிக்கவில்லை. மெல்ல மெல்லப் பூனைபோல் ஓசைப்படாமல் நடந்து அதனருகில் சென்றான்.


அதன் வயிற்றுக்குக் கீழ் தன் வலது பாதத்தை நுழைத்தான். பாட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். அதற்குள் காரியத்தை முடித்து விடவேண்டும். இல்லையேல் சத்தம் போட்டுக் கிழவி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். இந்தச் சனியன் பிடித்த பூனை இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.


கால் பந்தை 'கோல்' நோக்கி உதைப்பதுபோல ஒரே எத்து. பூனை எதிரே இருந்த சுவரில் 'டக்' என்ற ஒலியுடன் பயங்கரமாக மோதிக் கீழே விழுந்தது. விழுந்தபோது 'மோவ்' என்று பரிதாபகரமான ஒரு ஒலியை எழுப்பியது. அந்த ஒலி ராமநாதனைச் சற்றுப் பயமுறுத்தியது. பின்பு பூனை ஓடிவிட்டது.


பாட்டி பார்த்துவிட்டு, "அடப்பாவி! மாரியாத்தா சூலிடா, அடப் படுபாவி” என்று பதறினாள்.


சூல்கொண்ட மாரியாத்தா. ராமநாதனுக்கும் சற்றுப் பாவமாக இருந்தது. அவசரத்தில் வயிற்றின் உப்பலைக் கவனிக்கவில்லை. 


''சரி ...சரி ...இந்தச் சோத்தை வெளியிலே கொட்டு... மாரியாத்தாவாம் மாரியாத்தா...” என்று திட்டிவிட்டு வந்ததுதான். அரைமணியில் ஆரம்பித்தது வலி.


திடீரென்று விழிப்பு வந்தது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. வீடு பாட்டியோடு சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனோடு சேர்ந்து வலது பாதம் விழித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் கோடரிகள்.


ஒரு யோசனை தோன்றியது. அப்படிச் செய்துவிட வேண்டியது தான் என்ற முடிவோடு எழுந்தான். ஹாலின் கிழக்கு மூலையில் உள்ள அலமாரிக்குப் பின்புறம்தான் மாரியாத்தாவின் குடித்தனம். இந்நேரம் அங்கிருக்கிறதோ என்னவோ.


ஹால் விளக்கைப் போட்டான். அலமாரிக்குச் சென்றான். பின்னால் பார்க்கப் பயம். மாரியாத்தா மேலே பாய்ந்து விடுமோ?


மெதுவாக எட்டிப் பார்த்தான். மாரியாத்தா குட்டிகள் ஈன்றிருந்தது. இரண்டு குட்டிகள். வெள்ளையும் சாம்பலுமாய். குட்டிகளை நக்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை நுழைத்தான். இவனைப் பார்த்தவுடன் பளபளக்கும் கண்களுடன் போருக்குத் தயாராவதுபோல் எழுந்து நின்றது.


ராமநாதன் என்ன ஆனாலும் சரியென்று மண்டியிட்டு அமர்ந்தான். மிகுந்த சிரமத்துடன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். வார்த்தைகள் பயனற்றுப் போயின. கரகரவென்று கன்னங்களில் சூடாகக் கண்ணீர் வழிந்தோடியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று தெரியாது. 'சரி போ' என்று மாரியாத்தா உத்தரவு கொடுத்ததுபோல் இருந்தது. எழுந்து வந்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.


காலையில் காப்பியுடன் பாட்டி எழுப்பினாள். விசாரித்தாள். ராமநாதன் பாதத்தைப் பார்த்தான். கோடரிகள் புதைக்கப்பட்டிருந்தன. வலி இறந்து விட்டிருந்தது. உற்சாகமாகப் பாதத்தை ஆட்டிக் காட்டினான். பாட்டி வாஞ்சையாகத் தலையைக் கோதினாள். அறைக்குள் பார்வையை ஓட்டினான் ராமநாதன். அறை வாசலில் நின்று மாரியாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

*

(குமுதம் 27.8.1987)

*

நன்றி : மாரியாத்தா &  நாகூர் ருமி

1 comment:

  1. ஓய் லொள்ளு, உம் நன்றியைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தேன்!

    ReplyDelete