Thursday, August 21, 2014

வழிநிலை (2) - ஆபிதீன்

மூன்றே வரியில் முன்பு  இணையத்தில் முனகியிருந்தேன், 'லண்டனுக்கும் போயிருந்தீரா பிழைக்க? - கேட்டார் நண்பர் - ஜனாப், நாகூருக்கும் போயிருக்கிறேன்' என்று.  'ஹைக்கூ' லோக்கூவெல்லாம் தெரியாது எனக்கூ.  கவிதைதான் என்று அடித்துப் பாராட்டிய காலேஜ் புரொப்பஸர், ' மடக்கி எழுதியிருந்ததாலா?' என்று நான் மடக்கியபோது மழுப்பலான சிரிப்பைத்தான் பதிலாகத் தந்தார். 'தோழ'ய மட்டும் தூக்கிட்டா நல்லா இரிக்கிம்ங்கனி' என்று தூய தமிழிலும் சொன்னார்  பிறகு. எடுத்துவிட்டு ? இவர் பெயரை போட நினைக்கிறார் போலும். போதும் பட்டது.

சொல்லவந்த விசயம் வேறு. அந்தக் கவிதைக்கு - அப்படியே இருக்கட்டுமாக - நான் வைத்த தலைப்புதான் : வழிநிலை. இந்த வார்த்தை உண்மையிலேயே எனக்கு புதுசு.  நாடோடிக்கூட்டம் போல நானூத்தி சொச்ச வருடங்களாக ஒவ்வொரு நாடாகச் சென்று பிள்ளைகுட்டிகளுக்காக நாய்படாத பாடு படும் நம்மவர்களின் நிலையைச் சொல்ல 'சஃபர்' (பிரயாணம்) என்ற வார்த்தை போதாதே, பிற மதத்துச் சகோதரர்கள் புரிந்துகொள்ளவும் சிரமமாயிற்றே என்று யோசனை செய்துகொண்டிருந்தபோதுதான் - இம்மாதிரி 'பொழக்கத் தெரிஞ்ச புள்ள'யாக நேரத்தைச் செலவழிப்பதில் என்னை அடிக்க ஆள் கிடையாது - 'வழிநிலை' வந்து கையில் விழுந்தது.  போட்டவர் , பெரும்புலவர்களில் ஒருவரான மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் பேரன் ஈ.எம்.அலி மாமா (இவர்களும் இப்போது இல்லை. இன்னாலில்லாஹி..).  என் வாப்பாவின் நெருங்கிய சிநேகிதர்களில் ஒருவர்.  சஃபரிலிருந்து ஊருக்கு இவர்கள் வந்தால் கண்டிப்பாக  பார்க்கச்சொல்லி 'காயிதம்' வரும் பினாங்கிலிருந்து. வீட்டுக்கான சாமான்களுடன் எனக்காக வாப்பா கொடுத்தனுப்பும் விதவிதமான சீன பிரஷ்கள் வாங்கவும் ஆர்வமாகப் போவேன். ஆ, எப்படி இருப்பார்கள் கம்பீரமாக மாமா..  கப்பதொப்பியும், கவர்ச்சியான குறுந்தாடியுமாக... சின்னவயசிலிருந்து பலமுறை பார்த்திருக்கிறேன் , தாடியை அல்ல, தங்கமான மாமாவை. 'உம்மட்டேர்ந்து லெட்டர் வந்தா ஒடனேயே காட்டிடுவாரு மம்மசன் (என் வாப்பாவின் பெயர்).  ஆர்டிஸ்டா போவப் போறியுமோ? ஒழுங்கா படிக்கப் பாரும்ங்கனி' என்பார்கள் பிரியத்தோடு.

'வரையிற ஆசை'யில் மண் விழுந்து வழியற்ற எழுத்தாளனாக  வளர்ந்த பிறகு அவர்கள் வைத்திருக்கும் அபூர்வமான புத்தகங்கள் வாங்கவும் பிறகு போயிருக்கிறேன்.

ஆர்.பி.எம் கனி எழுதிய 'பாரஸீகப் பெருங்கவிஞர்கள்' புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு ஒரு மாதம் கழித்து திரும்பக் கொடுத்தேன்.

'புத்தகத்தை திருடறவன்ற ஒரு கையை வெட்டணும்' என்று அமைதியாகச் சொன்னார்கள்.

'மாமா..' என்று சொல்லிவிட்டு தெருவில் பாய்ந்தோட ரெடியானேன், கையை உதறிவிட்டு.

'திருடுன நல்ல புத்தகத்தை திருப்பிக் கொடுக்குறவன்ற ரெண்டு கையையும் வெட்டணும்ங்கனி' என்றார்கள். சிரித்துக்கொண்டுதான்.

அந்த ஆன்மீகப் புத்தகத்தோடு அன்று எடுத்த ஓட்டம்தான். விபரீதமாகப் பார்க்கவேண்டாம். அதிலிருந்து எடுத்து கவிதைகள் எல்லாம் எழுதுவதில்லை. அசல் சூஃபியாகும் ஆர்வம்தான்.

இன்னும் 'வழிநிலை'க்கு வரவில்லை பாருங்கள். இந்த வார்த்தையைச் சொன்னது மாமாதான் என்றாலும் எனக்குச் சொன்னவர் அவர்களின் மூத்த மகனார் சேத்தாப்பா. நூர்ஷா தைக்கால் ’ஹந்திரி’யில் ஒருமுறை அவர் முகம் பார்த்து , தங்கித் தங்கிச் செல்லும் 'முகாம்' பற்றி தயங்கித் தயங்கி ஏதோ நான் பேசியபோது அதற்கு 'வழிநிலை' என்று சொல்லலாம் என்று தன் வாப்பா சொன்னதாகச் சொன்னார். அட, அளஹா இக்கிதே...

அந்த வார்த்தை சரிதானா என்று ஒரேயொரு தமிழ்க் களஞ்சியத்திடம்தான் கேட்டேன் அப்போது.  பெயரைச் சொன்னால் சிங்கை ’தமிழ்முரசு‘வில் பணியாற்றிய ஜாஃபர்முஹ்யித்தீன் மாமா  என்று தெரிந்துவிடும். ரகசியமாகவே இருக்கட்டும். ‘அலியார் சொன்னா சரியாத்தான் இரிக்கிம்’ என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு மேல் அப்பீல் ஏது? தர்ஹா அலங்காரவாசலில்  உட்கார்ந்துகொண்டு , போகிற வருகிற அத்தனை பேரிடமுமா 'வழிநிலை' பற்றி கேட்க இயலும்? பக்கத்தில் தலையாட்டிக் கொண்டிருக்கும் யானையிடம் கேட்டுக் கொள்ளச் சொல்லிவிடுவார்கள். அதுவும் சொன்னாலும் சொல்லும்.

'மெய்நிலை கண்ட' கூகுளாண்டவர் சொன்னாரே என்று வலைத்தமிழ் அகராதியை மேய்ந்தேன். 'பின்னின்று ஏவல் செய்தல்' பிரமாதமாகக் குழப்பிற்று.

முடிவில், 'வழிநிலை'யை  உபயோகித்தேனேயொழிய கூடவே பிறந்த என் சந்தேக ஷைத்தான் விடவில்லை. எவ்வளவு தூரம் சரியான வார்த்தையென்று தெரிந்துகொள்ள, அதைச் சொன்ன மாமாவிடமே கேட்கவேண்டும் என்று நினைத்தால் அடுத்த முறை ஊர் போகும்போதுதான் அது சாத்தியமானது. இரண்டு வருடங்களுக்கொருமுறை ஊர்போவது என் வழக்கம் (அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையாலும் அரபியின் கருணையாலும் அது ஒண்ணேமுக்கால் வருசமாகவும் ஆவதுண்டு).

இங்கே ஒரு தமாஷ்.

‘கல்லுருகி நீர் வடிக்கும், கண்மழையோ கரை உடைக்கும்’ என்று கவிஞர் சலீம் விவரிக்கும் நிலையிலிருந்து தற்காலிகமாகத் தப்புவதற்காக முதல் சஃபர் முடித்து  சென்னை ஏர்போர்ட்டிலிருந்து  வெளியேறும்போது 'வரவேல்ப்பு' (சரியாகத்தான் சொல்கிறேன். கல்ஃப்காரன் கதையைக் கூறும் மலையாள சினிமாவின் தலைப்பு அது) தர வந்திருந்த என் அஸ்மா , தங்கமலர் பூத்ததுபோல நின்றிருந்த மகளிடம் ஏதோ சொல்லச் சொல்ல அவளும் கீச்சுக்குரலில் உரக்கச் சொன்னாள், எல்லாரும் திரும்பிப் பார்ப்பதுபோல.

‘பரக்கத்தான வாசலிலே பாவா நிக்கிறேன்மா
ஏதாச்சும் கொடுங்க சீதேவி. ஹாத் படா ஹை!’

இதுதான் முதலில் நான் கேட்ட தேவகானம். 'எப்படி மச்சான்?' என்று பெருமையோடு வேறு கேட்டாள் அறிவாளி மனைவி. ஆகா,  'பஜா மன' பாடும் பர்வீன் சுல்தானா பறந்தோடிவிட்டாளேடீ!

பரக்கத்தான என்றால் வளமான, பாவா என்றால் மிஸ்கீன். மிஸ்கீன் என்றால்? பாவப்பட்ட பிச்சைக்காரன். அந்த மிஸ்கீன் , 'பாவா' என்று கூப்பிடுவதும் அழைக்கப்பட்டவர் அதற்காக வளமாகக் கோபிப்பதும் வேறொரு வேடிக்கை.

போதும் அரபுநாட்டு அசட்டுச் சிரிப்பு.

மாமாவின் வீட்டுக்குப் போனேன்.  ஆனால்...  அவர்களின் 'ஹயால்' (நினைப்பு) வேறு ஏதோ ஊரில் இருந்தது.  முழு மறதி. கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்க கனத்த சுருட்டைப் புகைத்தபடி இருந்தார்கள். நல்லவேளையாக அது வாயில் இருந்தது, அவர்களின் வாயில்.

இப்போது எப்படிக் கேட்பது?

'திடீர் திடீர்னு அஹலுக்கு எப்பவாச்சும் யாபகம் வரும்..  பேசிப்பாருங்கம்மா' என்று மாமி சொன்னார்கள். மாமாவின் நிலையே முதலில் சரியில்லையே... என்னென்னமோ பேசினேன், மாமாவின் முகம் மட்டும் திரும்பவேயில்லை.

சட்டென்று 'ஜெய்னுல்’ஐ சேர்த்து என் முழுப்பெயரையும் சத்தமாகச் சொன்னார்கள். 'அல்லாவே , நான் வெரல்லாம் ஆட்டுறதில்லே மாமா.. ' என்று அலறிய நொடியில் அவர்கள் பார்வை மீண்டும் வேறெங்கோ போய்விட்டது. ஊஹூம், இனி திரும்ப வாய்ப்பில்லை.

அவர்களுக்கு ஆறுதல் கூறவாவது அன்பான மாமி இருந்தார்கள். அதிர்ஷ்டம் கெட்ட ஆயிரம், லெட்சம் சபராளிகளின் கடைசி நிலையென்ன, வழியென்ன?

'ஊரோட வந்துடுங்க வாப்பா.. நாங்க பாத்துக்குறோம்' என்று பிள்ளைகள் எத்தனைமுறை சொன்னாலும் 'வந்தாரை  வாழவைக்கும் சொர்க்க பூமி இது.. தெம்பு இருக்கும்வரை இருக்கிறேன் தம்பி..' என்று மறுத்து பதில் எழுதிய என் சீதேவி வாப்பா , கடைசியில் ஒரேயடியாக ஊர்வந்து உட்கார்ந்தபிறகு கிடைத்த அனுபவங்களில் மனமுடைந்து (இப்போதே சொல்கிறேன், எனக்கும் இப்படித்தான் நடக்கும். விரிவாக எழுத மலரில் இடமில்லை) மறுமைக்கு 'சஃபர்' சென்றதும் அந்த நிலையில்தான்.

யோசித்தால் 'வழிநிலை'யை விட 'வலிநிலை'தான் சரியென்று தோன்றுகிறது.

abedheen@gmail.com

***
குறிப்பு :  நாளை மறுநாள் (23rd Aug'2014) சிங்கப்பூர்   நாகூர் சங்கம் வெளியிடும் மலருக்காக எழுதியது இது.  'சா. ரூமி, அப்துல் கையும் , காதர் ஒலி, மற்றும் பல நாகூர் எழுத்தாளர்கள் எல்லாம் பங்களிக்கிறார்கள். நாலு வரியில் கவிதை எழுதி நீங்கள் அனுப்ப இயலுமா?'  என்றுதான் முதலில் கேட்டார்கள்.   கவிதையெல்லாம் வராது என்று பழைய 'ருசிக்காலம்' அனுப்பினேன். 'நைஸ், ஆனால் சிக்ஸ் பேஜஸ் வருதே.. டூ பேஜ் ப்ளீஸ்' என்றார்கள் தமிழை நேசிப்பவர்கள்.  புலவர் ஆபிதீனின் 'பிடிவாதம் ஏனுமய்யா.' பாடலைப் புலம்பினேன் கொஞ்ச நேரம். 'இத்தனை கே.பிக்குள் சிறுகதை அனுப்புங்கள் என்று கேட்ட எழுத்தாளருக்கே 'போய்த் திரும்புதல் 35 kbக்குள் ' என்று கிண்டலாக எழுதி அனுப்பியவன் நான். இப்போது மட்டும் எப்படி முடியும்? கச்சிதமாக எழுதும் கலை உயர்ந்ததுதான். ஆனால் எனக்கு வராதே சார்...  தவிர, தனியாக வேறு இருக்கிறேனா, கை வைத்தால் அது பாட்டுக்கு நீண்டு விடுகிறது, என்ன செய்வேன்! ஒரு வகையாக - வில்லங்கம் ஏதுமின்றி - எழுதிவைத்தேன். முடித்தது எப்படியோ தெரிந்து விட்டது போல. உடனே மலரை வெளியிட்டுவிட்டார்கள்! வருத்தமில்லை, மலர் வெளியிடுபவரும், இன்னிசை தருபவரும் ஜெயினுல் ஆபிதீனாக அமைந்து விட்டதில் சந்தோஷம்தான். விழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
***

Thanks to : Nagore Association, Singapore

11 comments:

 1. முன்பு ஒரு காலத்தில்...
  'தப்பு.'
  முன் எப்போதோ...
  'தப்பு.'
  சிலபல ஆண்டுகளுக்கு முன்னால்...
  'தப்பு.'
  சரி விடுங்க
  அருமையான கட்டுரைகளை
  அவர் எழுதி
  நான் வாசித்து மகிழ்ந்த.ஞாபகம்
  பசுமையாக இருக்கிறது.

  இப்போதைய மகிழ்ச்சிக்கு
  சிங்கப்பூர் நாகூர் சங்கத்துக்கே நன்றி!

  இந்தக் கட்டுரையின் (இது கதை இல்லையே தல?)
  பொருள் 'விழிநிலை'
  அதையே ஆய்கிறதென்றும் உறுதியாக நம்புவோம்.
  'விழிநிலை...'
  எந்தப் பொருளை வேண்டுமானாலும் தந்துவிட்டுப் போகட்டும்.
  ஆபிதீனின்
  இந்தக் கட்டுரை வாசிக்க கிடைத்த
  மகிழ்ச்சிதான் எனக்குப் பெரிது.

  வாப்பா, அலி மாமா,
  ஜாஃபர்முஹ்யித்தீன் மாமா,
  தங்கை அஸ்மா, பிள்ளைகள் என்றும்
  'அட, அளஹா இக்கிதே...!' என்றும்
  அவர் எழுத்து தரும் மகிழ்ச்சி
  இதிலும் நிறைவாகவே இருக்கிறது.

  - தாஜ்

  ReplyDelete
 2. ‘பரக்கத்தான வாசலிலே பாவா நிக்கிறேன்மா
  ஏதாச்சும் கொடுங்க சீதேவி. ஹாத் படா ஹை!’

  இம்மாதிரி 'பொழக்கத் தெரிஞ்ச புள்ள'யாக நேரத்தைச் செலவழிப்பதில் என்னை அடிக்க ஆள் கிடையாது - 'வழிநிலை' வந்து கையில் விழுந்தது.

  ஆன்மீகப் புத்தகத்தோடு அன்று எடுத்த ஓட்டம்தான். விபரீதமாகப் பார்க்கவேண்டாம். அதிலிருந்து எடுத்து கவிதைகள் எல்லாம் எழுதுவதில்லை. அசல் சூஃபியாகும் ஆர்வம்தான்.

  மிகவும் ரசித்த விஷயங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துவிட்டதானால் ஆபிதீன் பாய் கோபித்து கொள்ள(அவரிடம் சொல்ல சொன்னால்...’கொல்ல’என்பார்) மாட்டாரில்லையா?

  ReplyDelete
 3. என்ன ஆபிதீன் நாலு வரியிலெ கவிதை வராதுன்னு சொல்லிப்புட்டீங்க, நாலு வரியிலெ அல்ல நாலு எளுத்திலேயும் கவிதை எளுதலாம். 'பு.டு.க்.கு' ன்னு எளுதினா நாலு எளுத்து கவிதை, அதையே ஒன்னுக்கு மேலே ஒன்னு அடுக்கினா நாலு வரி கவிதை.ரொம்ப சிம்பிள்.

  ReplyDelete
  Replies
  1. நாநா...
   நீங்க கவிதையை விபரீதமா புரிஞ்சு வச்சிருக்கீங்க.
   வரி வரியா
   நூறு இரநூறு வரி எழுதினாதான்
   மதிக்கத்தக்க சங்கதின்னு நெனைக்கிறீங்க.
   என்னத்தைச் சொல்ல.

   Delete
  2. தாஜ், புரியாத சங்கதி ஒன்னு இரிக்கி. அது புரியும்போது நான் சொன்னது சரியா இரிக்கும்.

   Delete
  3. நீங்க சொல்வது சரியாவே இருக்கும் என்கிற நம்பிக்கை
   எனக்கும் இருக்கு நாநா. நீங்க புடு....குன்னு எழுதியதால குழம்பிட்டேன். (சரி, எப்ப அது புரியவரும்?

   Delete
 4. யம்மா சீதேவி
  பரக்கத்தான வாசல்ல
  மிஸ்கின் நிக்கிறேம்மா
  ஹைர் ஹைராத்
  போடுங்கம்மா

  ReplyDelete
 5. தாஜ், சிலபல ஆண்டுகளா! உங்களுக்கு மட்டுமே படிக்கக்கொடுத்த புது குறுநாவலை முடித்து ஒரு வருஷம்தானே ஆகுது ஐயா? ஒருவேளை, கட்டுரை வகை என்று சொல்கிறீரோ? எந்த வடிவத்திலும் வித்யாசம் இல்லை என்று கருதுபவன் நான். ஆனால் இது கதையல்ல என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்! ஏற்கனவே எழுதியதைத்தான் தொகுத்து (அந்த பாவா மேட்டர் மட்டும் புதுசு. இதில் கூத்தாநல்லூரான் (சாபத்தா?) இப்போது சொல்லும் 'ஹைர் ஹைராத்' இன்னும் பெர்ஃபெக்ட். பல மிஷ்கின்களைக் கண்டுவிட்டதால் நான் கொஞ்சம் மிஷ்க் -சாரி, மிக்ஸ் செய்து கொண்டேன்) எழுதினேன். கடைசியாக பார்த்தபோது கண்ட அலிமாமாவின் ஃபோட்டோவை இப்போது இணைத்திருக்கிறேன். இவரது அண்ணனார் நெய்னாமாமாவும் பெரிய எழுத்தாளர். உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள் - பார்க்க : பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம் பதிவு (சுட்டி http://abedheen.wordpress.com/2009/03/26/persian_poets/ ) . போகட்டும், மலரில் வெளியிடாவிட்டால் என்ன, நமக்கான வெளி எந்தக் கட்டுப்பாடும் இல்லாத - இணைப்புகள் தரும் வசதியுமுள்ள - இணையம்தான் என்பதை உணர வைத்தார்களே.. அதற்குத்தான் நன்றி சொன்னேன். சரி, கடைசியாக ஒரு தமாஷ். 'அப்ப உங்க பெயர முழுசா சொன்னா எல்லாரும் போய் சேந்துடுவாஹாங்கிறீங்க..' என்கிறார் ஒருவர். ஆனால் அது ஜாஃபர்நானா அல்ல!
  ***
  நானா, 'ஒளஹ ஹராமி' நீங்க. நல்லவேளை அந்த மூணு எழுத்தை சொல்லாமல் விட்டீர்களே! வாழ்க.
  ***
  முஷ்தாக்பாய், உங்களுக்கில்லாத உரிமையா? சொல்லிட்டு எதுவேணுமானாலும் செய்யலாம்; அல்லது செய்துவிட்டும் பிறகு சொல்லலாம். சொல்வதுதான் முக்கியம் - 'சஃபர்' வலியில்லாமல் போக.

  ReplyDelete
 6. (அந்த) மூணு எழுத்தில்தானே மூச்சே இருக்கு. அதனால்தான் சொல்லலே

  ReplyDelete
 7. ஆபிதீன்....
  உங்களின் மேலான விளக்கத்தை படித்தேன்.
  நிறைவான தெளிவு.
  ஜாஃபர் நாநா கூட 'பு.... .... ...' க்கு மெயிலில்
  தெளிவு அனுப்பி இருந்தார்.
  நாநா சொல்லி இருந்த தெளிவும் மெத்தச் சரி.
  நம்மைச் சுற்றி என்னென்னவோ நடக்கிறது.
  இதனையெல்லாம் தாண்டி
  காய்ந்த பூமி பரந்த வானத்தைப் பார்க்கிற மாதிரி
  நான் உங்களின் எழுத்தை எதிர்ப்பார்ப்பவன்.
  அதனால்தான் என் ஆதங்கத்தை
  முதல் கருத்தில் அப்படி வெளிப்படுத்தியிருந்தேன்.
  'ரைட்டருன்னா... எழுதிகிட்டே இருப்பவன்' என்பதை
  நீங்கள், யோசித்தால் என்ன?

  *
  பின்குறிப்பு:
  'வழிநிலை'யை 'விழிநிலை'...ன்னு முதல் கருத்துப்பதிவில்
  வழக்க மாதிரி பிழையோடு பதிந்துவிட்டேன். ஸாரி.

  ReplyDelete