Sunday, August 10, 2014

'நமது இன்றைய உடனடித் தேவை அம்பேத்கர்!' - அருந்ததி ராய் நேர்காணல்

Source : "We Need Ambedkar--Now, Urgently..." - SABA NAQVI INTERVIEWS ARUNDHATI ROY (Outlook) - (MAR 10, 2014)
***
'சமநிலைச் சமுதாயம்' (ஏப்ரல் 2014) இதழில் வெளியானது. மொழியாக்கம் : கொள்ளு நதீம் 
***
1936 ஆம் ஆண்டு இந்து மதத்திற்குள் லாகூர் நகரில் இயங்கி வந்த (Jat-Pat-Todak Mandal) சாதிய ஒழிப்பு முன்னணி என்கிற சீர்திருத்த குழுவின் அழைப்பின் பேரில் ஆண்டு சிறப்பு சொற்பொழிவாற்ற டாக்டர் அம்பேத்கர் கேட்டுக் கொள்ளப்பட்டார். விழா ஏற்பாட்டாளர்கள் உரையின் எழுத்துப் பிரதியை பெற்ற போது அதன் உள்ளடக்கம்  அவர்களால் சகிக்க முடியாதவையாக இருப்பதை கண்டு அதை மாற்றி தரும்படி கோர, அம்பேத்கர் அதை மறுக்க, அதனால் அவர்கள் தாம் அனுப்பிய அழைப்பை திரும்ப பெற்றனர். (டாக்டர் அம்பேத்கர் தயாரித்த உரை, நிகழ்ச்சி ஏற்புடையதாக இல்லாததால் இம்மாநாட்டையே ரத்து செய்து விட்டனர்.) ஆகவே, அம்பேத்கர் அச்சொற்பொழிவுக்கு என்று தான் தயாரித்த உரையை தனி புத்தகமாக தன் சொந்த செலவில் 1500 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் அது பல மொழியாக்கம் கண்டது. (Annihilation of Caste) சாதியை அழித்து ஒழிக்கும் வழி என்கிற அந்த நூல் ஒரு சிறு எண்ணிக்கையினரால் மட்டும் வாசிக்கப்பட்ட அந்த நூல், யாருக்காக எழுதப்பட்டதோ அந்த பட்டியல் இன தலித்களின் பெரும்பகுதியினரால் படிக்கப்படாமலேயே உள்ளது.

அம்பேத்கரின் குறிப்பிடத்தக்க அந்த உரை இப்போது மிக கவனமான விளங்கங்களையும், மீள் பதிப்புகளையும் கண்டு வருகிறது. அந்த வகையில் புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் எழுதியுள்ள The Doctor and the Saint என்கிற முன்னுரை தற்பொழுது பொது புத்தியின் கவன ஈர்ப்பை பெற்று இருக்கிறது.

ராயின் கட்டுரை 400 பக்க Annihilation of Caste புத்தகத்தின் கிட்டத்தட்ட சரி பாதியாகும். ஜாதி மற்ற பாதி அரசை ஆகிறது. சமகால இந்தியாவின் காந்தி-அம்பேத்கர் இடைநிறுத்தங்களில் சாதியம் பற்றி ராய் எழுதிச் செல்கிறார். “நகலின் தாக்கங்கள்பிரதிபலிப்பு தொற்றுநோய்என்று அம்பேத்கர் குறிப்பிடுவதை வர்ண படிநிலையின் மேலிருந்து கீழ் வரை செல்லும் தளர்ச்சியான ஆதிக்கம் என ராய் கருதுகிறார். ஒரு கதிரியிக்க அணுவின் அரை ஆயுள் காலம் போலபிரதிபலிப்பு தொற்றுநோய்சாதிய ஏணியில் கீழ் நோக்கி இறங்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும் அது என்றுமே மறைந்து போவதில்லை. இந்த அமைப்பு முறையை படிநிலை சமத்துவமின்மை என அம்பேத்கர் கூறுகிறார். தாழ்ந்தவர்கள் தம்மில் தாழ்ந்தவர்களாக சிலரை இருப்பதை தங்களுக்கேயுரிய சிறப்புரிமையாக கருதுவதாகும். வரிசைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையில் ஒவ்வொரு பிரிவினரும் சலுகை பெற்றவர்களாக உணர வைப்பதால் இந்த அமைப்பை தொடர்ந்து பராமரிப்பதில் ஒவ்வொரு பிரிவினரும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

எனினும், ஆற்றல் மிக்க தாக்குதலை கொண்ட ராயின் கட்டுரை காந்திஅம்பேத்கர் பற்றிய விவாதத்தில் புதிய இடங்களை கண்டெடுக்கும் பயணங்களுக்கு ஒப்பானவை. ஆகவே தேசத்தந்தை என ஒளி வட்டத்துடன் போற்றப்படும் ஆளுமை இந்த நூலில் அவ்வாறு வெளிப்படவில்லை. காந்தியால் எதிர்க்கப்பட முடியாத அளவுக்கு மிகவும் வலிமையானவராக அம்பேத்கர் விளங்கினார். அம்பேத்கரின் சவால்களை காந்தியால் அரசியல் மற்றும் அறிவார்ந்த ரீதியால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பதல்ல, அடிப்படையில் அறம் சார்ந்து முகங்கொடுக்கவும் அவரால் முடியவில்லை. நாமெல்லாம் கேட்டு வரும் காந்திய கதையாடலை அம்பேத்கர் பரிகசிக்கிறார். அதேப் போல் காந்தியை தவிர்த்து விட்டு அம்பேத்கரை எழுதுவதும் சம தீங்கானது, காரணம் காந்தி அம்பேத்கரை கணக்கில் அடங்காத முறைகளிலும், வியப்பூட்டு வகையிலும் பயமுறுத்திக் கொண்டிருந்தார்,
Question No : 1

அம்பேத்கரின் Annihilation of Caste என்ற நூலுக்கான The Doctor and the Saint என்ற உங்களின் புதிய முன்னுரையில் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். நேசிப்புக்கும், மதிப்புக்கும் உரிய ஆளுமையாக திகழும் காந்தி மீதான ,இவ்வகை எழுத்துக்கள் எங்களை கவலையுறச் செய்கின்றன?

ஆம், எனக்கு தெரியும். இவ்வாறு எழுதுவது எளிதானதும் அல்ல. காரணம் நாம் அனைவரும் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், விஷயங்கள் அது இருக்கின்ற வகையில் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. காந்தி மற்றும் அம்பேத்கர் பற்றிய இந்த விவாதம் மக்களில் சிலருக்கு தொந்தரவாக இருக்க கூடும். ஆனால் அவை பழைய மற்றும் நிலைக் கொண்ட சிந்தனைகளை தான் அதிகம் பாதிக்கச் செய்யும். ஆனால் உண்மையில், இறுதியில் எங்கள் பாதையில் அவை ஒளியூட்ட உதவக் கூடியவை. காரணம் Annihilation of Caste அத்தியாவசியமாக வாசிக்கப்பட வேண்டிய நூலென நான் நினைக்கிறேன்.. நமது சமுகம் அழுகிப் போய் இருப்பதற்கு சாதியமே மூலக் காரணமாகும். அதை விட, தாழ்ந்த சாதியினருக்கு அது செய்திருக்கும் அநீதிக்கு மேல், உயர் சாதியினரின் அறநெறிகளை துருப்பிடிக்க வைத்து விட்டது. ஆகவே அம்பேத்கரியல் இன்றைய உடனடி தேவை

Question No : 2

அம்பேத்கரின் நூலில் காந்தி ஏன் அதிகமாக பேசப்படுகிறார்? அவ்வாறு ஏன் நிகழ்ந்தது?

காந்தியின் நேர்மையான விமர்சகராக அம்பேத்கர் இருந்து இருக்கிறார், அது அரசியல் மற்றும் அறிவார்ந்த தளத்தில் மட்டுமல்ல, அறம் சார்ந்ததும் கூட. .  அது தான் மைய நீரோட்ட நடையில் கேலிக் கூத்தாக எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் சுமையாக நீடிக்கும் காந்திய விவாதத்தின் உள்ளே செல்லாமல், அதற்கொரு முன்னுரையை என்னால் எழுத முடியவில்லை

Annihilation of Caste டாக்டர் அம்பேத்கரால் தயாரிக்கப்பட்ட ஆனால பேசப்படாத உரையாகும், Jat-Pat-Todak Mandal, - சாதி மத ஒழிப்பு முன்னணி ஆர்ய சமாஜ் என்கிற இயக்கத்தின் என்ற கிளை அமைப்பாகும். இந்த உரை இந்து மதம் மற்றும் அதன் புனிதப் பிரதிகள் மீது நேரடி தாக்குதல் தொடக்க இருப்பதை உணர்ந்த  அவர்கள் அம்பேத்கருக்கு கொடுத்த அழைப்பை திரும்ப பெற்றனர். அதனால் அம்பேத்கர் தன்னுடைய பேசப்படாத உரையை நூல் வடிவில் வெளியிட்டார். காந்தி அதற்கு தன்னுடைய ஹரிஜன் பத்திரிக்கையில் மறுப்பை எழுதினார். ஆனால் இந்த விவாதம், அவர்கள்  இருவருக்கும் இடையில் நிலவிய பாரிய முரண்பாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்தது.. அம்பேத்கர் விரிவாக எழுதப்படவில்லை என்று நான் சொல்வது, அவர் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார் என்ற பொருளில் அல்ல. மாறாக அரசியல் சாசனத் தந்தை என்ற அவரை போற்றும் அதே நேரம் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என சேரிக்குள் முடக்கப்பட்டார். ஆனால் என்றும் தூண்டிக் கொண்டே இருந்த  தார்மீக  கோபம் மற்றும் பேரார்வம் இந்த கதையில் கூடுதல் குறைவாக அவரை புறம் தள்ளி விட்டது. நாம் தற்பொழுது புதையுண்டு கிடக்கும் சதுப்பு நிலத்தில் இருந்து மீள ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினால் அம்பேத்கரியலை தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே தலித்கள் அவரை பல்லாண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். இப்பொழுது நாட்டின் இதர மக்களும் அவ்வாறு செய்தாக வேண்டிய நேரம் தற்போது வந்திருக்கிறது.

Question No : 3
நீங்கள் காந்தி பற்றி எப்பொழுதுமே இவ்வாறான கருத்துடையவரா? அல்லது நீங்கள் அம்பேத்கரை கண்டடைந்ததைப் போன்று காந்திய அம்சங்களை கண்டறிந்தீர்களா?

எதையும் பக்தியுணர்வுடன் அணுகுவது எனது வழக்கமில்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால் குறிப்பாக அரசியல் போன்ற விஷயங்களை அவ்வாறு பரிசீலிக்கவும் கூடாது. நன்மையாக போகட்டும்! சாப்பிடுவதை அழுக்கானது என்றும், காமத்தை பாம்பின் தீண்டலை விட நஞ்சானது என்றும் சொல்லி இருக்கிறார் காந்தி. நிச்சயமாக மேற்கின் நவீன சிந்தனைகளும், வளர்ச்சியும் இந்த பூமியின் சகல மக்களையும் உள்வாங்கிக் கொள்ள இருக்கிறது என்ற அவருடைய புரிதல் முன்னுணர்வு கொண்டது. மறுபுறம், பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் செல்வத்தை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற நிறுவன மயமான சமுக பொறுப்புணர்வு இன்றைக்கு பொருத்த மற்றதாகி விட்டது. பெண்களை அவர் நடத்திய விதம் என்னை அதிகம் சங்கடப்படுத்தியுள்ளது. சாதி பற்றி காந்தியின் அணுகுமுறையின் நான் திடமில்லாமலும், தெளிவின்மையையும் காண்கிறேன். Annihilation of Caste நூல் என்னை What Congress and Gandhi Have Done to the Untouchables வாசிக்க தூண்டியது. அது எனது புரிதலில் செழுமை ஏற்பட எனக்கு உதவியது. நான் காந்தியின் கடிதங்களையும், நாளேடுகளில் வெளியான கட்டுரைகளையும் 1909 ஆண்டு முதல் ஹிந்த் சுவராஜ்”-ல் எழுதி இருப்பதையும் வாசிக்க ஆரம்பித்தேன். பல மாதங்கள் நீடித்த ஆய்வு மற்றும் கடின உழைப்பில் The Doctor and the Saint எழுதி வரும் போது சில விஷயங்களை என்னால் நம்ப முடியவில்லை. காந்தி ஒரு சிக்கலான நபராக இருந்தார். அவர் இருந்த மாதிரி அவரை புரிந்துக் கொள்ள நமக்கு தைரியம் வேண்டும். அவர் திறமையான அரசியல்வாதி, குறை-நிறை கொண்ட கண்கவர் ஆளுமை,. கணவன், தந்தை என அவரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மட்டும் தொடர்புடைய விஷயமல்ல. அவரை நாம் கொண்டாட விரும்பினால், அவரை அவர் இருந்த விதத்தில் நோக்கும் தைரியம் வேண்டும். அதன்றி கற்பனையாக, கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை கொண்டு அல்ல.

Question No : 4

நூல்கள், கட்டுரைகளில் உள்ள எழுத்துக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில மேற்கோள்களை மட்டும் பிய்த்தெடுத்து உங்களின் கற்பனைக்கேற்ப காந்தியை உருவாக்குவதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே…?

நூல் திரட்டுகளாக 98 தொகுதிகளில் தன் எழுத்துக்களை விட்டுச் செல்லும் போது, அவற்றில் குறிப்பிடத்தக்க சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு கண்டுவிட முடியும். ஆம், நான் தேர்ந்தெடுக்கும் திறனுள்ளவள் இன்ன பிறரை போல், அதை விட வேறு வழியேதும் என்னிடம் இல்லை. நிச்சயமாக, குறிப்பிடத்தக்க அரசியல் செய்தவரை தேர்வுகள் அன்றி எப்படி சொல்லி விட முடியும் என்கிறீர்கள். Annihilation of Caste என்ற நூலுக்கு முன்னுரை எழுதுவது என் முன் இருந்த பணி, அம்பேத்கரை வாசித்துக் கொண்டிருந்த போது, அவரை காந்தி எந்த அளவுக்கு பயமுறுத்தி வந்து இருக்கிறார் என்பதை அம்பேத்கர் எனக்கு புரிய வைத்தார். சாதியை ஆதரிக்கும் காந்தியின் பிரகடனம் எனக்கு ஆச்சரியம் அளித்தது, அகிம்சை, சத்தியாகிரகம் போன்ற அவரின் கோட்பாடுகள் இருக்கின்ற அமைப்பின் மீது வசதியாக நிலை கொண்டிருப்பதும்,, நிரந்தரமான மற்றும் கற்பனைக்கும் மீறிய இடைவிடாத அமைதியின்மைக்கு காரணமாகும் அதன் பொருத்தப்பாடு வியப்பானது. இத்தனைக்கும் பிறகு அவரை ஒரு மகாத்மா என்று அழைப்பதை அதிசயமாக பார்த்தபடியே வளர்ந்து வந்தேன்.

அம்பேத்கர் காந்தியை அரசியல் மற்றும் அறிவார்ந்த ரீதியாக மட்டுமல்ல, தார்மீக நெறியுடனும் எதிர்த்து இருக்கிறார். மைய நீரோட்ட விவரிப்புகளில் இருந்து விலக்கியும் வைத்து இருந்தார்.

அவர் தன் 24-ம் வயதில் இளம் வழக்கறிஞராக முதல் முறையாக தென் ஆப்ரிக்கா வந்து சேர்ந்த 1893 ஆண்டுக்கு அது என்னை இட்டுச் சென்றது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கொண்ட சாதியை பற்றிய காந்தியின் எழுத்துக்களை நான் பின் தொடர்ந்தேன். மோசமான தொடக்கத்தில் இருந்துமகாத்மாஎன வளர்ந்த காலம் வரை காந்தியிடம் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து இருந்ததா, அவ்வாறெனில் எந்த வகையில் என துருவினேன்.அதில் உணவுக் கட்டுப்பாடு, இயற்கை மருத்துவம் போன்ற காந்தியின் பார்வையை குறித்து நான் ஏதும் ஆராய்ந்ததில்லை. சாதி மற்றும் வர்க்கத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போது கொந்தளிப்பாகவும்,, பதற்றமாகவும் இருந்தது. அதே நேரம் ஓரளவுக்கு புரியவும் செய்தது.

இது நிலையான, ​​மற்றும் தொடர் குழப்பத்தை ந்தது. உண்மையில், அவர்  சொன்னதும், செய்தவைகளிலும் பாதகமான அம்சங்களுடன் சில மிக அழகானவைகளும், நல்லவைகளும் கலந்தே இருந்தன. அவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன். பாவி, துறுவி என இது நம்மில் அனைவருக்கும் பொதுவானது, யாரேனும் ரவீந்திரநாத் தாகூர் எழுத்துகளை பாரபட்சத்துடன் அணுகுகிறார் என்று வாதத்திற்காக, பேசுவோம். எனக்கு ஒன்றும் தாகூரின் படைப்புகளில் மேதமை இல்லை. இருப்பினும் எனக்கு ஐயமுள்ளது, காந்தியின் கட்டுரைகள், சொற்பொழிவுகள், நேர்காணல்கள் என்பனவை கவலையுறச் செய்யும் அளவுக்கு தாகூருடையது அல்ல சந்தேகிக்கிறேன்.

Question No : 5

தென்னாப்ரிக்க வாழ்க்கையில் காந்தியின் மனப்பான்கு கறுப்பின மக்களுடன் இனவெறியுடன் கூடியதாக இருந்தது என்கிறீர்கள். அவருடைய நடத்தையை நயவஞ்சகத்தனமானது குற்றம் சாட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். இதை ஏற்றுக் கொள்வீர்களா?

நான் எந்த அடைமொழிச் சொல்லையும் பயன்படுத்தவில்லை. காந்தியின் சொற்பொழிவுகள், எழுத்துகளை என் முன்னுரையில் மீளாக்கம் செய்து இருப்பதில் இருந்து இவ்வாறு நீங்கள் கூறுவதாக  யூகிக்கிறேன். உண்மையில் காந்தி ஒரு கபடதாரி என நான் நினைக்கவில்லை. மாறாக, அவர் ஆச்சரியமூட்டும் வகையில் வெளிப்படையானவராக இருந்து இருக்கிறார். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன், அவருடைய மொத்த எழுத்து தொகுதிகளில் ஒரு சிலதேனும் என்னுடைய பார்வையில், தீவிரமான பாகுபாடு காட்டக் கூடியவை என கருதுகிறேன். இருப்பினும் அவைகளை அப்படியே விட்டு விட வேண்டும்.

உண்மையில் அது ஒரு தைரியமான விஷயம். நான் தென் ஆப்பிரிக்காவுக்கு காந்தியின் ஆண்டுகள் பற்றி அதிகமாக எழுதியுள்ளேன், .நான் அந்த கால கட்டத்தை பற்றி ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பீட்டரெம்பர்க் செல்லும் ரயில் பயணத்தில்வெள்ளையர்களுக்கு மட்டுமேயான சிறப்பு பெட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அரசியல் விழிப்புணர்வு அடைந்தார் என்கிற மிக பிரபலமான சம்பவம் முதல், இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் வரை கதையின் ஒரு பாதி மட்டுமே. மறு பகுதி இனவெறி பாகுபாட்டை ஒரு போதும் எதிர்த்ததில்லை. இந்தியர்களுக்கு தனி சலுகைகளை வேண்டியே காந்தி தென்னாப்ரிக்காவில் இயக்கம் நடத்தினார். ஆப்ரிக்க கறுப்பர்களை விட இந்தியர்களின் சமவுரிமை அவருடைய இலக்காக இருந்தது. அவருடைய முதல் அரசியல் வெற்றி டர்பன் அஞ்சலக பிரச்சனையாகும். கறுப்பினர்களுக்கென்று இருந்த நுழைவு வாயிலை பயன்படுத்தாமல் இந்தியர்களுக்கென்று தனியாக மூன்றாவதாக ஒரு நுழைவு வாயிலை திறக்க செய்தது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய-போயர்களின் போரில் Bambatha எழுச்சியை நசுக்கும் பிரிட்டீஷ் படையில் காந்தி பணிபுரிந்தார். “ஏகாதிபத்ய சகோதரத்துவம்என்று ஒரு இடத்தில் பேசுகிறார்., இராணுவ தளபதி ஜான் ஸ்மட்ஸ் உடன்பாடு செய்த பின் 1913-ல் தென்னாப்ரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்புகிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கான அவருடைய சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக நாடு திரும்பும் வழியில் இலண்டனில் அவருக்கு கைசர்--ஹிந்த் என்ற விருது வழங்கப்பட்டது. இதை எப்படி இனவெறி மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் சேர்ப்பீர்கள்?

Question No : 6

ஆனால் இறுதியாக காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடவில்லையா? அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா?

இதை சுதந்திரம் என்பதை விட அதிகார மாற்றம் என வேண்டுமானால் சொல்ல முடிiயும். காந்தியஅம்பேத்கரிய விவாதம் ஏகாதிபத்யம்”, “சுதந்திரம்போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது. அம்பேத்கர் முதல் முறையாக. 1931-ம் ஆண்டு காந்தியை சந்திக்கிறார். அப்பொழுது காந்தி காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிரமான விமர்சனத்தை குறித்து கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிகவும் பிரபலமானது, காந்திஜி! எனக்கென்று தாயகம் எதுவுமில்லை, தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.

அவர் தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பின்னரும் கூட, பிரிட்டானிய பேரரசுக்குபொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டார். ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே முதல் தேசிய ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டானியர்களுக்கு எதிராக திரும்பியது. இலட்சக் கணக்கான மக்கள் அவரின் அழைப்பை ஏற்று திரண்டனர். எனினும் அவர் மட்டுமே பிரிட்ஷார் பிடியிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் என சொல்வது சரியல்ல. நிச்சயமாக அவருக்கு என்று நட்சத்திர பங்கு இருந்தது. முழு போராட்டத்தின் ஒரு கட்டத்தில் அவர் சமத்துவமின்மையை பற்றி சமூக சீர்திருத்தவாதியைப் போல் பேசி இருக்கிறார். ஆனால் பாரம்பரிய சாதிய மரபு, பெரு நிலவுடமையாளர்களின் அதிகாரத்தில் அவர் என்றுமே தலையிட்டதில்லை.

டாடா, பிர்லா, பஜாஜ் போன்ற தொழிலதிபர்கள் வீட்டில் இருந்து கொண்டு காந்தி தன் அரசியல் நடவடிக்கையை  சிந்தித்தார். ஆனால் அவர்களுக்கு எதிராக காந்தி ஒரு போதும் செயல்பட்டதில்லை. அதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவர்களில்  பலர் முதல் உலக போரில் பெரும் பணம் ஈட்டினர். அது ஒரு தடுப்புச் சுவராக குறுக்கே நிற்கிறது. பிரிட்டீஷ் ஆட்சியில் அவர்கள் வெறுப்புற்றும், இனத்துவேச கட்டுப்பாடுகளையும் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் தேசிய இயக்கத்தின் பின்னால் தங்கள் பலத்தை காட்ட தொடங்கினர்.

காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர் அகமதாபாத் நூற்பாலை நிர்வாகத்தினரின் மூலம் பயனடையாத தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் செய்தனர். நூற்பாலை முதலாளிகள் பிரச்சனையை தீர்த்து வைக்க காந்தியை நாடினர். தொழிலாளர் தகராறுகளில் காந்தியின் தலையீடு, தொழிற்சங்கங்களை அவர் கையாண்ட விதம், வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்களுக்கு அவர் செய்த அறிவுரை என இவை அனைத்தும் விடுகதை போல் புதிரானவையாக இருப்பதை நான் சுட்டிக் காட்டி இருக்கிறேன். பிரபலமான காந்தியசாத்தியக்கூறுகள் வியப்பான திருப்பங்களை கொண்டவை. எடுத்துக்காட்டாக, 1924-ம் ஆண்டு பூனாவுக்கு அருகில் டாடா குழுமம் கட்டுமானம் செய்ய இருந்த முல்ஷி அணைக்கு அருகில் இருந்த கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலிருந்து மும்பையில் உள்ள ஆலைகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இருந்ததால் தங்கள் போராட்டங்களை கைவிட காந்தி அந்த மக்களுக்கு கடிதம் எழுதினார். உலக வங்கி உதவியுடன் உருவாக இருந்த சர்தார் சரோவர் அணை திட்ட வழக்கில் 2000 வருடத்தில் உச்ச நீதிமன்றம் சொன்னதை போன்று இருந்தது காந்தியின் எளிமையான தர்க்கம். அம்பேத்கர் உடனடியாக அதில் குறுக்கிட்டு சொன்னார். ”காங்கிரஸ் சுதந்திரத்துக்காக போராடுகிறது என்பதே குறைவான முக்கியத்துவம் கொண்டது, காரணம் யாருடைiய சுதந்திரம் என்பது கூடுதல் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கிறது.”

Question No : 7

உடனடி நிகழ்வுகளிலிருந்து கள ஆய்வுகளை மேற்க்கொண்டு ஆற்றல் மிக்க அரசியல் கட்டுரைகளை கடந்த காலத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். அதனால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால் இந்த நூலில், மிக தீவிரமான ஆய்வை மேற்க்கொண்டு, தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து அறியப்பட்ட வரலாற்றாசிரியர்களின் முடிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விடையை தந்து இருக்கிறீர்கள்..நிச்சயமாக நீங்கள் கடுமையாக எதிர்ப்புகளை சந்திக்க கூடும். The Doctor and the Saint எழுதும் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா?

எனக்கு சவால் விடப்படுமா? 1 அறைகூவல்களை எதிர்கொள்ள எனக்கும் கொள்ளை ஆசை. பல வருடங்களுக்கு முன்பு நவயானாவின் பதிப்பாளர் எஸ் ஆனந்த் Annihilation of Caste-ன் அச்சு படிகளை வாசிக்க தந்து, அதற்கொரு முன்னுரை எழுதி தரும்படி கேட்டுக் கொண்டார். அதை வாசித்த போது பலத்த அதிர்ச்சியடைந்தேன். அதற்கு முன்னுரை எழுத, சரியான கச்சிதமான முன்னுரை எழுத, வெறுமனே அங்கெங்கு என ஒரு சில மேற்கோள்களை எடுத்துப் போட்டு, பாராட்டி சாதாரணமாக எழுத எனக்கு விருப்பமுமில்லை. அவ்வாறு செய்ய என்னாலும் முடியாது. அவ்வாறு செய்வது ஆழம் காண முடியாத காட்டாற்று வெள்ளத்தில் நீச்சலடிப்பது போன்றது என்பதும் எனக்கு தெரியும். தான் காத்திருப்பதாக சொன்ன ஆனந்த், அப்படியே பொறுமையுடன் இருந்தார்.

இதற்கிடையில் அவர் Annihilation of Caste உரை எழுதும் பணியை ஒன்று சேர்க்க தொடங்கினார். அது அசாதாரணமானதாகவும்அறிஞர்களால் ஆதாரமானதாகவும் பேசப்பட வேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டோம். புனைவுகளை எழுதிக் கொண்டிருந்த போது இனி ஒரு போதும் அடிக்குறிப்புகளுடன் நூல்களை எழுதுவதில்லை என எனக்கு நானே சத்தியம் செய்துக் கொண்டேன், ஆனால் முன்னுரை எழுத தொடங்கிய போது, ஒவ்வொரு வரியிலும் அதற்குரிய அடிக்குறிப்புகளை தர வேண்டி வந்தது. பிறகு அதுவே எனக்கு பிடித்தும் போனது. அந்த அடிகுறிப்புகள் ஒன்றும் பிற்சேர்க்கை அல்ல, அது தன்னளவில் இணையுரை ஆகும். ஆனால் ஒரு சிலரின் வாசிப்பில் அது சிரமத்தை அளிக்கும் என நினைக்கிறேன்.

The Doctor and the Saint என்பதே சவாலான பணி என்கிற உங்களின் கேள்விக்கு பதில், பல வரலாற்றாசிரியர்கள் பிற காரணங்களுக்காக இதற்கு முன் காந்தியை விமர்சித்துள்ளனர். அதனால் இவ்வாறு செய்வது நான் ஒருத்தி மட்டுமல்லநிறைய தலித் அறிஞர்கள் பல பத்தாண்டுகளாக காந்தி மற்றும் அவரின் கொள்கைகளை மிக தீவிரமாக விமர்சித்து வந்திருக்கின்றனர். இந்த நூல் மூலம், இன்னுமொரு விவாதம்உண்மையான விவாதம் தொடங்குகிறது என வேண்டுமானால் சொல்லலாம். அது நல்ல விஷயமல்லவாஇதுவே சரியான நேரம்! நிச்சயமாக நிறைய பேர் இதனால் மகிழ்ச்சி அடைவர் என்றே நான் எண்ணுகிறேன்.

Question No : 8

Wendy Doniger  எழுதிய நூல் விஷயத்தில் என்ன நடந்தது? அது உங்களை கவலையுறச் செய்கிறதா?

குறிப்பாக இந்த நூல் பற்றி அல்ல. இது அம்பேத்கரின் நூல். ஆனால் நினைப்பதை சொல்வதற்கும், எழுதுவதற்கும் உள்ள நமது சுதந்திரம் குறுக்கப்பட்டு வருகிறது என்பதும் உண்மை. தனக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள உறவு குறித்து பக்தியாளராக வாழாத மிர்சா காலிப் 19-ம் நூற்றாண்டில் பாடியது போல, சாதத் ஹுசேன் மண்ட்டோ 1940-களில் எழுதியது போல, இந்து மதத்தைப் பற்றி அம்பேத்கர்  1930-களில் பேசியதைப் போல, நேருவும், ஜெயபிரகாஷ் நாராயணனும் காஷ்மீரைப் பற்றி சொன்னதைப் போல இப்பொழுது நம்மில் யாரும் நமது வாழ்வை பணயம் வைக்காமல் சொல்லி விட முடியாது. Annihilation of Caste பதிப்பின் வெளியீட்டிற்கு பிறகான காந்திஅம்பேத்கர் விவாதம் தீவிரமானது. அசாதாரணமான இரண்டு ஆளுமைகளுக்கு இடையில் நிகழ்ந்த ஆழ்ந்த உரையாடல், அவ்வாறு உண்மையான உரையாடலில் ஈடுபட அவர்கள் தயங்கியதில்லை, அஞ்சியதுமில்லை. நூல்களை தடை செய்யக் கோரும் நம் காலத்து மூடர்களைப் போலல்லாமல், அம்பேத்கருடைய சொற்பொழிவின் எழுத்துப் பிரதியுடன் உடன்படாத காந்தி, அதை மக்கள் வாசிக்க வேண்டுமென உண்மையில் விரும்பினார். “எந்த சீர்திருத்தவாதியும் இந்த அழைப்பை புறக்கணித்து விட முடியாது, இதை ஏன் வாசிக்க வேண்டுமென்றால் அது கடுமையான விமர்சனங்களை வைக்கிறது, டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்துக்கு உண்மையில் மிகப்பெரிய அறைகூவல்என்று கூறினார்.


Question No : 9

ஊடகத்துறை உள்ளிட்ட சமூக அமைப்பை ஊடுருவி செல்லும் மேல் சாதியினர் ஆதிக்கத்தை கடுமையாக சாடும் வகையில் உங்களின் முன்னுரை தொடங்குகிறது. முழு அரசியல் அமைப்பை சுற்றிலும்காட்சிக்கு புலனாகாத - அறியப்படாத திட்டம்ஒன்று இருப்பதை குறிப்பிடுகிறீர்கள். சமகால இந்திய அரசியலை உண்மையில் சாதியம் பிரதான அடிப்படை அலகாக மண்டலுக்கு பிந்தைய எதார்த்தங்கள் மாற்றி விட்டதாக கருதுகிறீர்களா?

இந்தியாவை எடுத்துக் கொண்டால், செல்வத்தை, பெருநிறுவனங்களை, ஊடகத்தைநீதித்துறையை, அரசு நிர்வாகத்தை, நிலத்தை கட்டுப்படுத்துவோர் சாதியின் இணைத்தன்மையுடன் தமது நலன்களை முன்னிறுத்தும் போது, ஒன்றும் இல்லாத எளிய மக்கள் திடிரென்று பார்க்க தொடங்கியுள்ளனர். மண்டல் குழு பரிந்துரைகள் வெளியான பல்லாண்டுகளுக்கு முன்பே இந்துக்கள் மட்டும் என்றில்லை, இந்தியாவை இயக்கும் மூல விசை சாதியமே. The Doctor and the Saint–ல் இதை நான் விரிவாக அலசியிருக்கிறேன்.19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'பேரரசு - வல்லரசு' என்ற கருத்து 'தேசிய அரசுஎன மாறுதல் அடைந்தது  முக்கிய நிகழ்வாகும். ஆட்சி செய்வதில்பிரதிநிதித்துவம்போன்ற புதிய சிந்தனைகள் நமது நாட்டுக்கு வந்து சேர தொடங்கின. அது மக்கள் தொகுதியில்எண்ணிக்கைஎன்பது அதீத பதற்றத்துக்கு வழி வகுத்தது.  அதற்கு முன் பல நூற்றாண்டுகளாக சாதிய படிநிலையில் அடக்கி வைக்கப்பட்டிருந்த கோடானு கோடி மக்கள் சமுக ஒதுக்குதலில் இருந்து தப்பிக்க இஸ்லாமிய சமயத்துக்கு மாறிக் கொண்டிருந்தனர். பின்னர் அது சீக்கியம் மற்றும் கிறித்துவம் ஊடாக தங்கள் மீதான சாதியக் கறையை போக்கி கொண்டனர். பின்னர் திடிரென்றுஎண்ணிக்கைஎன்பதும் பொருட்படத்தக்கதாக மாறியது. கிட்டத்தட்ட ஐந்து கோடி "தீண்டத்தகாதவர்கள்" எண்களின் விளையாட்டில் முக்கியத்துவம் பெற தொடங்கினர். இந்து மதத்தில் செயல்பட்டு வந்த சீர்திருத்தவாதிகள், பிற அந்நிய மதத்துக்கு மதமாற்றம் செய்ய நினைத்தவர்களை மீண்டும் தமது மதத்துக்குள் கொண்டு வந்து விட கட்டுமரமாக மாறினர். இதனால் அவ்வகை மதமாற்றம் தடுத்துவிட முடியும் என அவர்கள் நம்பினர். ‘ஆர்ய சமாஜ்என்கிற அமைப்புஅசுத்தப்பட்டவர்களை மீண்டும் சுத்தமாகிவிட   ‘சுத்திஇயக்கத்தை தொடங்கியது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பட்டியல் இன மக்களை மீண்டும் இந்து மத குடைக்குள் கொண்டு வந்து விட முயற்சித்தனர். அதன் ஒரு வகைப்பாடு தான் இன்றைக்கு விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர்வீடு திரும்புதல்என்கிற திட்டங்கள் தீட்டி தீண்டத்தகாதவர்களைதூய்மைப்படுத்திஇந்து மதத்திற்குள்மீண்டும் திரும்பஅழைத்து செல்ல விரும்புகின்றனர். ஆக, சாதியம் முன்பு இருந்தவாறே தொடர்ந்து இந்திய அரசியலின் அடிப்படை அலகாக நீடிக்கவே செய்யும்.
Question No : 10

எனவேகாட்சிக்கு புலனாகாதஅறியப்படாத திட்டம்என அதை எப்படி அழைக்க முடியும்?

காட்சிக்கு புலனாகாதஅறியப்படாத திட்டம்என்று நான் எழுதியுள்ளது முற்றிலும் வேறு விஷயம். இன்றைய செல்வாக்கு பெற்ற இந்திய அறிவுஜீவிகள், குறிப்பாக இடதுசாரிகள் சாதி என்பதை வெறுமனே புத்தகத்தின் அடிக்குறிப்புகளாக,, மார்க்சிய வர்க்க பகுப்பாய்வு சாதியத்தை பார்க்கக் கூடாத சங்கடமாக கடந்து சென்று விடுகிறது. முற்போக்காளர்கள் "ங்களுக்கு சாதியில் நம்பிக்கை இல்லை" என்று அழகாக கூறுகின்றனர். இந்த நிலைப்பாடு தளர்ச்சியான, சலுகையாக நழுவி செல்லும் எளிய தப்பித்தல் வழி. இவ்வாறு சாதியம் என்றைக்கும் எதிர்க்கொள்ளப்படுவதே இல்லை. ‘காட்சிக்கு புலனாகாதஅறியப்படாத திட்டம்என்பது கிட்டத்தட்ட நமது பண்பாட்டின் எல்லா தளங்களிலும் நடைமுறையில் உள்ளதே. ’பாலிவுட்இதைப் பற்றி பேசுகிறதா? ஒரு போதுமில்லை. மிகப் பெரிய எழுத்தாளர்களில் யாரேனும் எதையாவது சொல்கிறார்களா - ஒரு சிலரை தவிர? புதிய தாராளமய கொள்கையின் மோசமான விளைவுகளை குறித்தும், நீதி மற்றும் சுய அடையாளம் பற்றி எழுதுவோரும் சாதியம் பற்றி ஏன் எழுதுவதில்லை? தீவிரவாத மக்கள் இயக்கங்கள் கூட சாதியைப் பற்றி மேலோட்டமாக உச்சரிப்பதோடு சரி! வேறு ஒன்றும் உருப்படியாக செய்வதில்லை.

2001-ம் ஆண்டு டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான பன்னாட்டு மாநாட்டில் கலந்துக் கொள்ள விரும்பிய தலித்கள் விஷயத்தில் இந்திய அரசின் நடத்தை பண்பற்றது. அதுகாட்சிக்கு புலனாகாதஅறியப்படாத திட்டத்தின் காரணமாகவே அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல், இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான விவரம் மேம்போக்காக பதியப்படுகின்றன. அதன் தரவுகள் அனைத்தும் நம்மை இருட்டடிப்பில் வைக்கிறது. தலித்களின் உரிமை பறிக்கப்படுவதும், அவர்களுக்கு எதிரான வன்முறையும்காட்சிக்கு புலனாகாதஅறியப்படாத திட்டத்தின் காரணமாகவே. 1919-ம் ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அமெரிக்காவில்சிவப்பு கோடையில் 165 கறுப்பின நீக்ரோக்கள் கொல்லப்பட்டனர். சரியாக நூறாண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி 1574 தலித் பெண்கள் குழு வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். 651 தலித்கள் கொல்லப்பட்டனர். இவைகள் குற்றவியல் தாக்குதல் மட்டுமேபொருளாதார சுரண்டல்அது வேறு கதை. தலித்களுக்கு எதிராக போடப்படும் முட்டுக்கட்டைகளால் கோடீஸ்வரர்களாக எழ முடியாதது என்பது இதனுடன் இணைந்த மற்றும் தனியாக பிரிக்கப்பட்ட மற்றுமொரு சோகம்.  

Question No : 11

iந்தியாவின் சாதிய முறை, மனித சமூகம் கண்ட குருரமான படிநிலை கொண்ட அமைப்பு முறை என நீங்கள் சொல்கிறீர்கள். ஏனெனில் இந்து மதம் அதை ஆரத்தழுவி நிற்பதாலும், ஆன்மிகம், மாந்திரகம், அகிம்சை, சகிப்புத்தன்மை, காந்தி, யோகா, பீட்டில்ஸ் வகை வெளியாட்கள், என துருவிப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறது. சாதிய பாகுபாடு இனவெறி என்கிற அளவுக்கு சமமாகாது, நிறவெறி அளவுக்கு தீங்கு செய்யவில்லை வாதிடுகின்றனர். தேர்தல் அரசியலில் இடஒதுக்கீடு என்பது வரலாற்றில் நிகழ்ந்த அநீதியை சரி செய்து விடும் என்கின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்தன் திரிவேதி என்பவர் இடஒதுக்கீட்டை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் என கூறியுள்ளார். இதை போன்ற வாதத்துக்கு உங்கள் பதில் என்ன?

அவ்வாறு பேசுவது மூர்க்கத்தனம்., இட ஒதுக்கீடு மிகவும் முக்கியமானது. அதை ஆதரித்து நான் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பை பெற விரும்பும் தலித் குறைந்தபட்சம் உயர்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 70% தலித் மாணவர்கள் பள்ளிக்கூட கல்வியை கூட நிறைவு செய்யும் முன்பே இடைநிறுத்தம் செய்து விடுவதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவ்வாறெனில் அரசாங்க கடைநிலை ஊழியராக வர குறைந்தபட்சம் நான்கு தலித்களில் ஒருவருக்கே அதற்கான தகுதி உண்டாகிறது. எழுத்தர் போன்ற அலுவலக பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்ட படிப்பில் தேர்ச்சி. தலித்களில் வெறும் 2 சதவீதம் பட்டதாரிகள் மட்டுமே இருக்கின்னர். உண்மையில் ஒரு சிலருக்கே அது பொருந்தும். எனவே இட ஒதுக்கீடு கொள்கையால் அதிகார பகிர்வில் குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. இது நிச்சயம் முக்கியமானதே.அம்பேத்கரை எடுத்துக் கொள்வோம். கொலம்ம்பியா பல்கலைகழகத்தில் சேர்ந்து கற்க அவருக்கு கல்வி உதவித் தொகை கிடைத்தது. அதே போல், இன்றைக்கு வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள், அரசு ஊழியர்கள் என வந்து இருப்பதும் இட ஒதுக்கீடு இருப்பதால் தான். வாய்ப்புக்கான இது போன்ற சிறிய வாசல் கூட மேல் சாதியினரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள், நீதித்துறை, அதிகார வர்க்கம் மற்றும் முற்போக்கானவர்கள் நிரம்பி இருப்பதாக கூறப்படும் ஜவஹர்லால் பல்கலைக் கழகம்  போன்ற நிறுவனங்கள் கூட இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் திருப்திகரமான நேர்மையை கடைப்பிடிப்பதில்லை என்பது கடந்த கால அனுபவம். ஒரே ஒரு அரசு துறையில் மட்டுமே தலித்கள் தங்கள் எண்ணிக்கைக்கு மேலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சிகளில் பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 90% பேர் தலித்கள். அவர்கள் நமது தெருக்களை சுத்தப்படுத்துவோராகவும், உயிரை பணயம் வைத்து பாதாள சாக்கடை குழாய்களில் இறங்கி கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியாளராகவும், மனித கழிவறைகளை தூய்மைப்படுத்துவோராகவும் என சமுகத்தில் உள்ள அத்தனை இழிவான அடிமை வேலைக்கு மட்டும் தலித்களா? இப்பொழுது அந்த பணியும் தனியார் மயமாகிக் கொண்டு வருகிறது. செய்து கொண்டு வரும் அந்த வாய்ப்பையும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் தலித்களுக்கு தற்காலிக அடிப்படையில் மட்டுமே வழங்க முன் வருகின்றன. இதனால் வேலை உத்ரவாதம் என்பதெல்லாம் இல்லாமல் போய் விடும். நிச்சயமாக போலிச் சான்றிதழ் பெற்று தலித்களின் உரிமையை பறிக்கும் போக்கு என்கிற சிக்கல்களும் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டியதும் அவசியம். அதற்காக இட ஒதுக்கீடு என்பதையே நீக்கி விட வேண்டும் என்பதெல்லாம் மோசம்.

Question No : 12

ஆனால், பகுஜன் சமாஜ் போன்ற தலித் அரசியல் கட்சிகளின் எழுச்சி இந்திய ஜனநாயகத்தில் ஒரு புரட்சிகரமான மாறுதலை நிச்சயம் உருவாக்க கூடும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

தலித் அரசியல் கட்சிகள் எழுச்சி நிச்சயம் திகைப்பூட்டும் நிகழ்வாகும்.

ஆனால் நமது தேர்தல் அரசியல், தற்போதுள்ள அதன் வடிவம், உண்மையான புரட்சியை  கொண்டு வந்து விடுமா என்ன? ஒருகாலும் இல்லை. எனது நூலின், முன்னுரையில் அதை குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். 1931-ம் ஆண்டு இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் தலித்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பாக துல்லியமான மாற்றுக் கருத்துடன் அம்பேத்கார் காந்தியோடு முரண்பட்டு இருக்கிறார்.

பிரதிநிதித்துவ உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக என்று அம்பேத்கர் நம்பினார்.

தீண்டத்தகாதவர்கள் அந்த உரிமையை பெற்று விட வேண்டுமென தன் வாழ்க்கை முழுவதும் போராடினார். அதையே சிந்தித்தார், அது குறித்து மிக அதிகமாக எழுதியுள்ளார், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய அமைப்பு முறையில் தாழ்த்தப்பட்டவர்களால் ஒரு போதும், மேல் சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்து மேலெழுந்து விட முடியாதவாறு நாடு முழுக்க அவர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். இதனால் எந்த ஒரு தொகுதியிலும் தீண்டத்தகாத மக்கள் பெரும்பான்மை வாக்கை பெற்று விடவே முடியாமல் போய் விடுகிறது. தலித்களிடம் அர்ப்பணிப்பு உணர்வுடன் காந்தி செயல்பட்ட போதிலும், அவர்கள் தங்களை தாங்களே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென்பதை அனுமதிக்க மறுத்து விட்டார். அதில் வெளிப்படையா அத்தனை சாத்தியக்கூறுகளுக்கு எதிராகவும் காந்தி நின்றார். மேல் சாதியினரைக் கொண்டு ஜி.டி. பிர்லா நிறுவிய ஹரிஜன் சேவா சங்கம்கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தியது. அஹ்மதாபாதில் ஆலை தொழிலாளர்களை கொண்டு காந்தி அமைத்தமஹாஜன் மஸ்தூர் சங்கம்தலித்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் தலித்கள் அந்த தொழிற் சங்க தலைமைப் பொறுப்புக்கு வரவும், தங்களை தாங்களே பிரதிநிதித்துவம் செய்து கொள்வதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. 1931-ம் லண்டன் வட்ட மேசை மாநாட்டில் காந்தி சொன்னார் : “நான் என்னுடைய  சொந்த பொறுப்பில் பெருமளவிலான தீண்டத்தகாத மக்களை பிரதிநித்திதுவம் செய்கிறேன்என்றார்., பூனா ஒப்பந்தம் பற்றி மாநில குழு, பஞ்சாயத்து அமைப்புகளில் தாங்கள் ஹரிஜன மக்களின் பிரதிநிதித்துவத்தை ஆதரிக்கிறீர்களா என்ற காங்கிரஸ் கட்சியின் ஹரிஜன உறுப்பினர்கள் கேள்விக்கு; இதுஆபத்தான கொள்கைஎன காந்தி சொன்னதை நூலின் பின்னட்டை குறிப்பில் எஸ் ஆனந்த் எழுதியிருக்கிறார்.

தீண்டத்தகாதவர்களை அரசியல் மயப்படுத்துவதிலும், தங்களின் உரிமைகளைப் பற்றிய முழு புரிதல் உடையவர்களாக அவர்களை மாற்றுவதிலும், தாங்கள் அனைவரும் கூடி தங்களில் இருந்து ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் திட்டத்தை வளர்த்தெடுக்கும் அம்பேத்கரின் முயற்சிகளை இடைமறித்தல் மற்றும் பள்ளம் தோண்டுதல் போன்ற கெடுதல்களை செய்யவும் காந்தி தயங்கவில்லை. அம்பேத்கரின் திட்டம் முறியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் இன்றைக்கும் தலித்களை பின் தொடர்கிறது. இந்த தடைகள் எல்லாம் அப்படியே இருந்த போதிலும் உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கால் பதித்துள்ளது. இதை சாதிப்பதற்கே கான்ஷிராம், அவருக்கு பிறகு மாயாவதி ஆகியோருக்கு ஐம்பதாண்டுகள் பிடித்துள்ளது. கான்ஷிராம் கடுமையாக அயராது உழைத்தார். இதில் வெற்றியடைய பிற ஒடுக்கப்பட்ட சாதியினருடன் எச்சரிக்கையுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். உத்திரபிரதேசம் விசித்திரமான மக்கள் தொகுதிகளை வாழ்விடமாக கொண்ட மாநிலமாத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவும் கை கொடுத்தது. அது ஒரு கட்சியாக வளர்ந்து வரும் போது அதன் அரசியல் ஊடுருவல் நீர்த்தும் போகிறது. உத்திர பிரதேசம் உட்பட எங்கும் ஒரு தலித் வேட்பாளர் பொது தொகுதியில் வெற்றி பெறுவது என்பது இன்றைக்கும் சாத்தியமற்ற ஒன்றே. ஊழல், முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களை மீறி, பகுஜன் சமாஜ் கட்சி தலித்களின் சுயமரியாதையை மீள் கட்டமைப்பு செய்து இருக்கிறது என்பதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. தலித்கள் தேர்தல் அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க அழுத்தங்களை தரக்கூடிய ஆற்றலை வளர்த்து வருகின்றனர் என்பதையும் கணக்கில் கொண்டு பார்த்தாலும், ஜனநாயகம் என்கிற அமைப்பே மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது என நான் கவலைப்படுகிறேன்.

Question No : 13

தீண்டத்தகாத மக்களுக்கு பிரிட்டீஷ் ஆட்சியில் வழக்கத்தில் இருந்த Communal Award வகுப்புவாரி தனி பிரதிநிதித்துவம் என்கிற கண்கவரும்  உரிமையை காந்தியின் வற்புறுத்தல் காரணமாக 1932-ல் பூனா ஒப்பந்தத்தின் போது அம்பேத்கர் கைவிட்டார் என விரிவாக எழுதிச் செல்கிறீர்கள். ஆனால் தனி தொகுதி முறை பற்றி நான் கேட்க விரும்புகிறேன். ஆனால் நாடு பிரிவினை உள்ளிட்ட இங்கு இருக்கும் பிரச்சனைக்கான மூலக் காரணம் இதுவே என பல வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். இந்தியாவில் இன்றும் தனி தொகுதி முறை நீடிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?

நடைமுறையில் இருக்கும் தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாறும் தன்மை கொண்ட அமைப்பே குறைபாடு உடையது. அதனால் தான் நாம் முழுமையாக தோற்று வருகிறோம். ஆகவே அதை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். அதற்காக தனி வாக்காளர், தனி தொகுதி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை கையாளும் போதும், முழுவதுமாக அதை நொறுக்கி மறு உருவாக்கம் செய்வதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். காரணம் இது உணர்வுபூர்வமான விஷயம், மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்கிற வகையாகும். முன்பு நான் எழுதியதையே திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அம்பேத்கரின் திட்டங்கள் தன்னளவில் மிகச் சிறந்தவையே.

உண்மையில் தலித்களை அரசியல் ஒருங்கிணைப்பு செய்து, சுயமாகவே தங்களிலிருந்து தலைவர்களை உருவாக்கி கொள்ளும்படியாக செய்து விட வேண்டும் என்றே சிந்தித்தார். அவ்வாறான தனி தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு தேவைப்படும் திட்டமாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேல் சாதியினரால் சமுகத்தில் இருந்து கற்பனைக்கும் எட்டாத வகையில் ஒதுக்கி வைக்கப்பட்ட, அநாகரிகமாக புறக்கணிக்கப்பட்ட, பொது கிணறுகளில் இருந்து குடிநீர் பிடிக்கவும், கல்வி கற்கவும், கோயில்களில் எல்லோரையும் போல் வழிபடவும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள், வன்முறையும், புண்படுத்தலுக்கும் உள்ளான மக்களுக்கான தனித் தொகுதி பற்றிய பேச்சின் போது மட்டும் உலகமே முடிவுக்கு வந்து விட்டதை போல் கூச்சல் இடுகின்றனர்.
பழங்குடியினர் பற்றி அம்பேத்கரின் கருத்து காந்தி தீண்டத்தகாத மக்களை பற்றி பேசியதைப் போன்றே உள்ளது. தன் சொந்த மக்களின் அவமானங்களை கண்ட மனிதன் இவ்வாறு கூறுவதை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.

காந்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், பொது மக்களின் அழுத்தமும் அம்பேத்கர் தனது கோரிக்கையை கைவிட்டு பூனா ஒப்பந்தம் கையெழுத்திட செய்தன அம்பேத்கரின் தனி தொகுதி கோரிக்கை தான் பிரிவினைக்கு வழி வகுத்தது என எப்படி சொல்ல முடியும்? இது நியாயமற்றது, அபத்தமானது. முட்டாள்தனமானது. இவ்வாறு உணர்ச்சி வசப்படுவது நேரெதிரானது. சுதந்திரம், சமத்துவம் மறுக்கப்பட்டு நச்சு சுழலில் சிக்கியுள்ள ஒரு சமுகம் நிறவெறி போன்ற கொடுமைக்கு  உள்ளாகியுள்ளது. அவர் நீதி, சகோதரத்துவம், ஒற்றுமை, சக உணர்வு பற்றி பேசுகிறார்பிரிவினையை பற்றி அல்ல. ஆனால் சாதிய மரபு இவைகள் அனைத்தும் மேல் சாதியினருக்கு மட்டுமானது என கூறி  தலித்களுக்கு இல்லை என்று கதவை அடைத்து விட்டனர்.

தலித்கள் அதே கதவை உள்பக்கமாக தாழிடும் போது நம்பிக்கை துரோகமாகவும், வஞ்சக ஏமாற்றுத்தனம் என்றும் வசைமாறி பொழிகின்றனர். அதே போல் நாடு பிரிவினை ஜின்னாவால் தான் நிகழ்ந்தது பழிப்பதும் ஆகும். ‘குற்றம் சாட்டுதல்என்று யூகமாக சொல்லும் போது நாடு பிரிவினை பயங்கரமான விஷயம் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வர். இருப்பினும் அது மட்டுமே உண்மை அல்ல. ‘கதர்இயக்கத்தின் நிறுவன உறுப்பினரும், ஆர்ய சமாஜ்-ன் லாகூர் நகர முக்கிய தலைவருமான பாய் பரமாந்த் போன்றவர்களை மறந்து விடுகிறோம். பிற்காலங்களில் இவர் இந்து மகா சபையின் தலைவராகவும் இருந்த அவர் வங்காள பிரிவினை 1905-களிலேயே சிந்து பகுதி, வட மேற்கு எல்லை மாகாணம் ஆப்கானிஸ்தானுடனும் இணைக்கப்பட்டு முஸ்லிம் நாடாக போய் விட வேண்டும்  என்கிறார். ஆக நாட்டு பிரிவினை என்பதில் பல்வேறு குழுவினர் தத்தம் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்பட்டனர்கட்டுப்பாட்டை இழந்த இந்த கட்டுக்கதையில் ஒருவரை பிடித்து எப்படி பொறுப்பாளியாக்க முடியும்?

Question No : 14

பழங்குடி மக்களைப் பற்றிய கருத்துக்களுக்காக அம்பேத்கரின் மிகவும் கடுமையாக நீங்கள் விமர்சித்துள்ளீர்களே?

பழங்குடியினரைப் பற்றி அம்பேத்கரின் கருத்துகள் காந்தி தீண்டத்தகாத மக்களை பேசியதற்கு இணையானது. தனது சொந்த மக்களின் அவமானத்தை தெளிவாக பார்த்த ஒரு மனிதன் எவ்வாறு இப்படி கூறியிப்பதை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.
அம்பேத்கர் ஒரு பகுத்தறிவாளர், எது ஒன்றையும் அதன் காரண காரியங்களுடன் புரிந்துக் கொள்ளக் கூடியவர். அவர் விமர்சனங்களை ஆக்கபூர்வமானதாக எடுத்துக் கொண்டு தம்மை செம்மைபடுத்தி இருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவர் மீதான் என் விமர்சனம் அல்ல. மேற்கத்திய தாராளவாதம், நகரமயமாக்கல் மற்றும் நவீன 'வளர்ச்சி' போன்ற விஷயங்களில் அவரின் நிலைப்பாடு அதனுள் மறைந்து இருந்த தீமைகளை முழுமையாக புரிiந்துக் கொள்ள தவறி இருக்கிறார். அது குறித்தும் நான் விரிவாக எழுதி இருக்கிறேன்.
Question No : 15

சாதியம் விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் அடைந்த தோல்வி குறித்து ஆராய்ந்துள்ளீர்கள். “அவர்(கம்யூனிஸ்டு)கள் வர்க்க பகுப்பாய்வு என்பதை நாட்டுப்புற செவ்வியல் வழக்காக அணுகி இருக்கிறார்கள்என்று நீங்கள் எழுதிச் செல்கிறீர்கள். பெரும் தொழிற்சங்க தலைவர் எஸ்..டாங்கே பற்றிய உங்களின் திட்டவட்டமான, துல்லியமான விமர்சனத்தை எல்லா கம்யூனிஸ்டுகளும் என்று நான் நினைக்கிறேன். என் கேள்வி இது மட்டும் தான்: கட்சி வகை பொதுவுடமையில் நீங்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறீர்கள். அதை தவிர்த்து கம்யூனிசத்தின் வேறு ஏதேனும் ஒருவடிவம்அல்லதுமாதிரிஉங்களின் ஒப்புதல் / ஆதரவை பெற்று இருக்கிறதா?

மைய நீரோட்ட பொதுவுடமை கட்சிகள் சாதியை அணுகிய முறை பற்றி பேச தொடங்கினால் அது என்னுடைய The God of Small Things’ நூல் இருந்து தொடங்க வேண்டி இருக்கும். அந்த நாவல் 1997-ல் வெளியானது. இந்திய பொதுவுடமை கட்சி  (மார்சிஸ்ட் பிரிவு) கடும் கோபம் கொண்டது. அந்த நாவலில் வரும் கே.என்.எம்.பிள்ளை மற்றும் வேலுதா என்கிற பாத்திர சித்தரிப்பு. இதில் பிள்ளை கம்யூனிஸ்ட் ஆதரவாளர், வேலுதா தலித். கம்யூன்ஸ்ட்களும் தலித்களும் இயற்கையான பங்காளிகள். ஆனால் அப்படி எதுவும் இந்தியாவில் நடந்து விடவில்லை. இந்த நாவலின் முக்கிய பாத்திரமான வேலுதா, தலித் என்பதற்காகவே பிள்ளையால் பாரபட்சமாக நடத்தப்பட்டார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1920-களிலேயே இந்த பிளவு ஏற்பட்டு விட்டது. பல கம்யூனிஸ்ட்களைப் போல எஸ்..டாங்கே கம்யூனிஸ்ட்களின் தலைமை சிந்தனையாளர், பிறப்பால் ஒரு பார்ர்பனர். இன்றைக்கும் அந்த துவே நிலமையே தொடர்ந்து நீடிக்கிறது. .ஒன்றிணைந்த இந்தியாவில் 70,000 உறுப்பினர்களை கொண்டிருந்த முதல் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான கிர்னி காம்கர் சங்கத்தில் பெரும்பாலானவர்கள் மஹர்கள். அம்பேத்கரும் அந்த தாழ்த்தப்பட்ட சாதியில் தான் பிறந்தார். மஹர்கள் நூற்பாலையில் அடிநிலை பணிகளில், அற்ப கூலிக்கு மட்டுமெ அமர்த்தப்பட்டிருந்தனர். ஏனெனில் நூற்பாலையில் நூலை தங்கள் வாயில் பிடித்து பணியாற்ற வேண்டி இருந்தது. இதனால் உற்பத்தி பொருள் அசுத்தம் அடைந்து விடுவதாக கூறி அப்பணியை தலித்களுக்கு தருவதில்லை. 1928-ஆம் ஆண்டு எஸ்..டாங்கே கிர்னி காம்கர் சங்கத்தை கொண்டு முதல் முறையாக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். தொழிலாளர்களுக்குள் சம வேலைக்கு சம கூலி என்ற கோரிக்கையை அம்பேத்கர் வைத்தார். எஸ்..டாங்கே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது பெருத்த பின்னடைவை தந்தது. ‘சாதியம் என்பது வெறுமனே பிரிவினை மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு இடையிலும் அது பாரபட்சம் காட்டுகிறதுஎன அம்பேத்கர் கூறினார். Annihilation of Caste-ல் சாதியம், பொதுவுடமை போன்ற விஷயங்களை குறித்து அழுத்தமாக அம்பேத்கர் எழுதுகிறார். இதை போயா நான் ஆதரிப்பேன், இதற்கு தானா எனது ஒப்புதல் கிடைக்கும். ஆனால் முதலாளித்துவம் மீது அமைப்பு ரீதியாகவும், நியாயமான முறையில் வலுவான விமர்சனத்தின் தேவை அவசரமானது, அவசியமானது என நான் நினைக்கிறேன். உண்மையை தான் சொல்கிறேன். நான் கம்யூனிஸ்ட் அல்ல. அதன் சரியான பொருளும் எனக்கு தெரியவில்லை. அதற்காக என்னை முதலாளித்துவ ஆள் என்று புரிந்து கொள்ள வேண்டாம்.

Question No : 16
இன்றைய அரசியல் களத்தில் புதிய நபர்களின் வருகை, குறிப்பாகஆம் ஆத்மி கட்சிகாந்திய அடையாளங்களுடன் நுழைந்துள்ளது. முகேஷ் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் குழுமத்தை அதிரடியாக தாக்கி இருக்கிறது. உங்களின் நீண்ட கட்டுரையான Capitalism: A Ghost Story’. இவர்களை காரசாரமாக விமர்சித்துள்ளீர்கள். ஆக, ஆம் ஆத்மி கட்சியை குறித்த உங்களின் கண்ணோட்டம் என்ன?

ஆம் ஆத்மி கட்சியை பற்றி முரண்பாடற்ற பார்வை கொள்வது சற்று கடினமானது. காரணம் அவர்கள் தமக்குள்ளேயே ஒத்திசைவாகவும் இல்லை. ஊழல் எதிர்ப்பு என்பதை மட்டும் ஒரு அரசியல் கோட்பாடாக கண்டு நான் மயங்கியதில்லை. காரணம் ஊழல் என்பது பிரச்சனையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. ஆனால் அது மட்டுமே பிரச்சனை ஆகி விடாது. தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அது கூடுதல் கவனத்தை பெற்று இருக்கிறது, அவ்வளவு தான். நேர்மையற்றவர்களும் ஊழலுக்கு எதிராக இருப்பது வேடிக்கை. இறுதியாக அது நம்மை குறுக்குச் சந்தில் போய் முட்டி நிற்கச் செய்யும். ஆனால் அதே சமயம், முகேஷ் அம்பானியைஆம் ஆத்மி கட்சிஒரு பிடி பிடித்த போது ஆரவார மகிழ்ச்சி கொண்ட மக்களில் நானும் ஒருத்தி. மைய நீரோட்ட ஊடகங்கள், சமுக வலை தளங்கள் என திடிரென்று அனைவரும்அம்பானிகளையும், எரிவாயு விலையேற்றம் போன்ற பிரச்சனைகளையும் விவாதிக்க தொடங்கினர். சில மாதங்களுக்கு முன்பு வரை கூட இதைப் பற்றி முணுமுணுக்கும் தைரியத்தை கூட வெளிப்படுத்தவில்லை. மும்பையில் அம்பானியின் கார் விபத்தில் சிக்கிய செய்தி எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நமது நினைவில் உள்ளது. இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு சிறிய நம்பிக்கையின் கீற்றை அளித்துள்ளனர். அவர்கள் காந்தி குல்லாய்களுடன் எளிமையாக தங்களை காட்சிபடுத்தி வருகின்றனர். ஆனால் பெரு முதலாளிகளுக்கு எதிரான இது  போன்ற செயல்பாடுகளே கூட சரியான காந்தியம் அல்ல என எண்ணுகிறேன். பெரு நிறுவனங்களுக்கு இடையில் இந்த சர்ச்சையில் பழைய அரக்கனுக்கு பதிலாக புதியவன் அமர்ந்து விடுவார்கள், ஆக அவ்வளவு அது விரைவில் முடிவுக்கு வந்து விடக் கூடாது என நம்புகிறேன். சேற்றை வாரி வீசுவதும், குற்றச்சாட்டுகளை கூறிக் கொள்வதும், யார் யாருக்கு எவ்வளவு இலஞ்சம் கொடுத்தார்கள் என்பதும் நல்ல பொழுதுபோக்கு அம்சம். ஆனால் இலஞ்சம், ஊழலை முழு அமைப்பு முறையே கெட்டு அழுகிப் போய் கிtடக்கிறது

ஆனால் பெரு நிறுவனங்கள் தான் நமது உண்மையான பிரச்சனை. டாடா, ரிலையன்ஸ், ஜிண்டால், வேதாந்தா, அடானி இன்னும் பலர் ஒரே நேரத்தில் பல வணிகங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முகேஷ் அம்பானி மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்களுக்கு உரிமையாளர். டாடா, பிர்லா, வேதாந்தா, ஜிண்டால், அடானி என இவர்களில் எவரும் இதில் மாறுபட்டவர்கள் அல்ல. இந்த சிக்கல் அப்படியே நீடிக்கும். குட்டி முதலாளியாக இருந்து கொண்டு இந்த அமைப்பை பார்க்கும் ஒருவராலும் இங்கு இருக்கும் பிரச்சனை தெரிந்து கொள்வர்.  இது போன்றே வியாபாரங்களில் வெளியில் இருந்து கொண்டு முதலீடு செய்வது, வரைமுறையற்ற இலாபம், கொள்ளை இலாபம், செல்வம் மிக குறைவானவர்களிடம் சேர்ந்து கொண்டே இருப்பது, பெரு நிறுவனங்கள் மற்றும் ஊடகத்துறைக்கு நடக்கும் முரண், அந்த பெரு நிறுவனங்களே பத்திரிக்கைகளை நடத்தும் போது எழுத்து சுதந்திரம் எப்படி சாத்தியமாகும்ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு அரசிய உத்தியாக முகேஷ் அம்பானியை எதிர் கொள்வது சுத்த கண்றாவி என்றே சொல்வேன். 27 அடுக்கு மாடி கொண்ட சொந்த வீட்டை கட்டி குடியேறுவது செருக்கும், இறுமாப்பும் அல்லவா? பிச்சையெடுப்பதை பற்றி அவர் பேசுகிறார், இது அடாவடித்தனம் தானே? ஆனால் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை தீவிரமாகவும், அமைப்பு ரீதியாகவும் எதிர்கொள்ளப்படுகிறது என்ற அளவில் எனக்கும் மகிழ்ச்சியே. மோடித்துவஎழுச்சி என்பதுநிறுவன முதலாளித்துவமும், வழக்கில் உள்ள பாசிசமும் தான். அந்த வழியில் அப்படிப்பட்ட இக்காலத்தில், அது செல்ல இருக்கும் ராஜபாட்டையில் ஒரு சில தடைக்கற்களையாவது ஆம் ஆத்மி கட்சியினர் போட்டு கொண்டிருப்பது சரியானதே.

Question No : 17

சாதி குறித்து காந்தியின் பார்வைக்கும் வலதுசாரி இந்துகளுக்கும், பெரிய அளவில் வேறுபாடு இருந்தது இல்லை; காந்தியின் படுகொலை பற்றிய தலித் பார்வை சகோதரத்துவ கொலை போன்றது தானே தவிர கருத்தியல் எதிரியை படுகொலை செய்வதாகாதுஎன்ற உங்கள் விளக்கம் குறித்து நிறைய பேருக்கு கேள்விகள் உள்ளன. அதன் பிறகு, “அதனால் தான் நரேந்திர மோடியால் சிறு அசௌகரியம் கூட இல்லாமல் காந்தியையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறதுஎன்று தொடர்ந்து கூறி செல்கிறீர்கள். இது போன்ற உங்கள் கருத்துக்களால் காந்தியை வலதுசாரிஇந்துக்களிடம் கையளித்து விடுகிறீர்கள் அல்லவா? அவர்களின் ஆவலை தூண்டும் விதமாக அதற்கு பொருத்தமான ஆளுமையாக காந்தி தென்படுவார் இல்லையா? அந்த வகையில் அவர்களின் விளையாட்டை நீங்கள் ஆடி விடுகிறீர்கள் தானே?

யாரிடமும் ஒப்படைத்து விட காந்தி ஒன்றும் பொம்மை இல்லையே,
என்னை பேச விடுங்கள். முஸ்லிம்களின் பிரச்சனை, இந்தியாவில் அவர்களின் வகிபாகம் ஆகியவற்றில் காந்திக்கும், வலதுசாரி இந்துக்களுக்கும் கொள்கை ரீதியாக, தீவிரமான, பாரிய வேறுபாடுகள் இருந்தன. இதற்காக காந்தி தன் உயிரையும் விலையாக கொடுத்தார். ஆனால் சாதியம், மத மாற்றம், பசு பாதுகாப்பு போன்ற விஷயங்களில் வலதுசாரி இந்துக்களுடன் அவர் ஒரு சேர நடை போட்டார். 19 மற்றும் 20 நூற்றாண்டு திரும்பும் சமயத்தில் பல்வேறு சீர்திருத்த இயக்கங்கள், பிற மதத்துக்கு மாறி விட்டிருந்த தீண்டத்தகாத மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதை முக்கிய செயல் திட்டமாகவே கொண்டிருந்தன. வலதுசாரி இந்துக்கள் இந்த விஷயத்தில் மிக ஊக்கமுடன் இருந்தனர். பாலகங்கா தர் திலகரின் முக்கிய சீடர்களில் ஒருவரும், இந்துக்களின் நாயகராகவும் இருந்த வி.டி.சாவர்கர், 1927-ம் ஆண்டு அம்பேத்கர் தலைமை ஏற்று இருந்த மஹத் சத்யாகிரகாவுக்கு தன் ஆதரவை அளித்தார். தீண்டத்தகாத மக்களும் பொதுக்குளத்தில் இருந்து தண்ணீர் பிடிக்கும் உரிமைக்காக நடந்த  அறப்போராட்டம் அது. காந்தியின் ஆதரவு இதில் மிக குறைவே. பின்னர் பூனா ஒப்பந்தம் என்பதே எதற்காக, யாரெல்லாம் அதில் கையெழுத்திட்டனர்?

அவ்வாறான பலரில் ஜி.டி.பிர்லாவும் அவர்களில் ஒருவர். வாழ்க்கை முழுவதும் காந்திக்கு புரவலராக இருந்த தொழிலதிபர். பழமைவாத இந்து மகா சபையை தோற்றுவித்த பார்ப்பனர் - பண்டிட் மதன் மோகன் மாளவியா, காந்தி படுகொலையில் உடந்தையாக இருந்ததாக கருதப்பட்ட சாவர்கர். இவர்கள் அனைவரும் சிக்கலான முறையில் ஒருவருக்கொருவர் பிணைந்தும், தனித்தும் இயங்கி வந்தவர்கள்.
பிர்லா ஒரே சமயத்தில் காந்திக்கும், ஆர்ய சமாஜின் சுத்தி இயக்கத்துக்கும் ஒரு சேர நிதியுதவி செய்து கொண்டிருந்தார். காந்தி படுகொலைக்கு பிறகு முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டு இருந்த போது, பிர்லா அந்த இயக்கத்தின் மீதான தடை அகற்றப்பட வேண்டுமென முன்னெடுப்பு செய்தார்.

புது டில்லியில் இருந்து வெளியாகி கொண்டிருக்கும் காரவான் என்ற ஆங்கில இதழ் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உண்மையான காந்தியவாதியாக இருந்தவரின் மகனுமான சுவாமி அசீமானந்த் பற்றி ஒரு அட்டைப்பட கட்டுரை வெளியிட்டு இருந்தது. எண்பது பேர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி உட்பட பல்வேறு தொடர் குண்டு வெடிப்புகளில் பங்கேற்றதற்காக அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் நடத்தி வந்த குஜ்ராத் ஆசிரமத்தில் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்ஏக்தா மந்திரம்ஒற்றுமை கோஷம்’  தினந்தோறும் காலையில் அவரின் சீடர்கள் போட்டுக் கொண்டிருந்தனர் என குறிப்பிடுகிறார்.

மஹாத்மா மந்திர் என்ற சிறப்பான பலவகை வசதிகளுடன் கூடிய அரங்கில் இருந்து கொண்டு பிறர் கவனத்தை ஈர்க்கும் விதமாக நரேந்திர மோடி அறிவிப்புகளை செய்து வருகிறார் 1936 ஆம் ஆண்டு The Ideal Bhangi என்ற அசாதாரணமான கட்டுரையில். “ஒரு இலட்சிய துறவி, தன் வாழ்வாதாரத்துக்காக சுய உழைப்பை புனிதமான கடமையாக கருத வேண்டும். வேறு விதமாக சொல்வதாக இருந்தால் அவர் செல்வம் சேர்ப்பது பற்றி கனவு காணக் கூடாது என்று காந்தி எழுதி இருந்தார். எழுபது ஆண்டுகளுக்கு பிறகு அவரின் நூலான (அது, வால்மீகி சமுக மக்களின் எதிர்ப்பால் திரும்ப பெறப்பட்ட) கர்மயோகியில் நரேந்திர மோடி எழுதுகிறார் : “நான் நினைக்கிறேன்! வாழ்வாதாரத்துக்காக அவர்கள் இதை செய்கிறார்கள் என்பதை நம்பவில்லை அது உண்மை எனில், இது போன்ற பணியை அவர்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு தான் செய்தாக வேண்டும் என ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ஞானம் கிடைத்து இருக்கும், முழு சமுகத்திற்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவும், கடவுளால் அவர்களுக்கு தரப்பட்ட வேலையாக கருதியும், அது ஒரு ஆன்மிக செயல்பாடாக பல நூற்றாண்டுகள் அது தொடர்ச்சியாக உள்ளுக்குள் நடந்தேறி வந்திருக்கிறதுஇப்பொழுது எனக்கு சொல்லுங்கள்,, எங்கிருக்கிறது பகல் வெளிச்சம்!

Question No : 18

மகாத்மா காந்தி என்று போற்றப்படும் ஒரு ஆளுமையின் மீது புண்படுத்தும் விமர்சனத்தை அருந்ததி ராய் செய்யும் போது அதை முழு உலகமும் கவனிக்கிறது. ஒரு அழகான கருத்தை உயிருடன் அப்படியே விட்டு வைப்பது தானே சரி, அதன்றி சில நடைமுறை எதார்த்தங்களுக்காக அதை குறை கூறுவது தவறு என்றும் சிலர் பேசி வருகின்றனர், என்ன சொல்கிறீர்கள்?


இது ஒரு நல்ல கேள்வி தான். சக எழுத்தாளர்களைப் போல இது குறித்து நானும் நிறையவே சிந்தித்து இருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாத தன்மை கொண்டது. இது மூடி மறைத்தல்பூசி முழுகுதலை விட வேறென்ன? அது விலையாக கேட்பது அம்பேத்கரைநாம் காந்தியை அவரின் திறமைக்காகவும் அணுகும் அதே நேரம் அவரின் குறைபாடுகளையும் கவனத்தில் கொள்வோம். அதுவே அம்பேத்கருக்கான வெளியை திறக்கும் வாசலாக இருக்கும். ஒரு துறவியாக இருந்தவர் புதிய மருத்துவர் ஒருவரின் மீது ஒளி பட வழி விட வேண்டும். அம்பேத்கருக்கான காலம் கனிந்தே விட்டது.
**
Thanks to  :ARUNDHATI ROY, SABA NAQVI,  Outlook, கொள்ளு நதீம் (kollunadeemahmed@gmail.com) , சமநிலைச் சமுதாயம்
***
குறிப்பு : கீற்று - ஜூன் 2014-ல் வெளியான நேர்காணலையும் பார்க்கவும். (மொழிபெயர்ப்பாளர் பெயர் தெரியவில்லை) . சுட்டி : http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalit-murasu-sep-2012/26663-2014-06-05-09-04-51

No comments:

Post a Comment