Tuesday, June 5, 2012

சோவுக்கு சமர்ப்பணம் - தாஜ்


கட்டி எழுப்பப்பட்ட
புனிதங்களின் அஸ்திவார ஆட்டம்!

தாஜ்

இன்றைய செய்திகளில்
அத்வானி
பாரதிய ஜனதாவின் தலைமையைத் தாக்குகிறார்!

கட்சி மேலிடமும்
அதற்கும் மேலிடமான RSS ம்
அத்வானியின் இந்தத் தாக்குதலை
கண்டுகொள்வது கிடையாது.
கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..
அத்வானியை பொருட்படுத்துவதும் கூட கிடையாது!

பாகிஸ்தானின் தந்தையான
முகம்மதலி ஜின்னா குறித்து
நேர்மையானவர் அவர் என்று
அத்வானி என்றைக்கு அபிப்ராயம் கூறினாரோ
அன்றைக்கே அத்வானியை
அக்கட்சி தள்ளிவைத்துவிட்டது.

அத்வானிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை
என்றோர் கணிப்பு பரவலாக இருப்பதும் கூட
இரண்டாவது காரணம்தான்.

பாபர் மசூதி இடிப்பு தருணத்தில்
அத்வானியின் ஆக்ரோஷமான பேச்சை
பயன்படுத்திக்கொள்ள முற்பட்ட கட்சித் தலைமை
இவருக்கு புனிதப்பட்டம் கட்டி
வட இந்தியா பூராவும் ரதயாத்திரைக்கு அனுப்பியது
அத்வானியும்
அப்படியே தன்னை நம்பியவராக
ரதயாத்திரை சென்று
மக்கள் மத்தியில் தன் ஆக்ரோஷத்தை
கட்டவிழ்த்துவிட்டார். அது ஓர் அளவுக்கு
வெற்றிகரமாகவும் முடிந்தது.
காரியம் முடிந்ததும்
கட்சி அவரை கருவேப்பிலையாய்
எடுத்துக் கடாசிவிட்டது.
அதனை அத்வானி அவதானிக்கத்தான்
அநியாயத்திற்கு லேட்டாகிவிட்டது!

சமீப காலங்களில் அவரும்
தனது இழந்த புகழை மீட்டெடுக்க
பழையபடிக்கு
என்னென்னவோ ரத யாத்திரையெல்லாம்
போய் பார்த்துவிட்டார்
ம்ஹும்... மக்கள் ஏனென்று கேட்கவில்லை.

ஆக,
இவரது புனிதத்தின் அஸ்திவார ஆட்டம்
சீண்டுவார் இல்லாமல்
நொடித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
*
அக் கட்சியில்
அத்வானியை ஒத்த இன்னொருவர் மோடி!
இவரும் புனிதப்பட்டம் கட்டப்பட்டவர்தான்.
குஜராத்தின் முதல்வராக வலம்வரும் இவர்
நாளை
பாரதத்தின் பிரதமர் பட்டம் கட்ட
தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும்
வேடிக்கை மனிதர்.

குஜராத்தில்
இஸ்லாமியர்களை வேட்டையாடியபோது
இவரை தட்டிக்கொடுத்த தலைமை,
கிட்டத்தட்ட
ஓர் கசாப்புக்கடைக்காரனாகவே
இவரை மாற்றிப் பார்த்தது.
பின்னர் ஏதோவோர் குற்றவுணர்வில் 
எல்லோருக்கும் நல்ல மனிதனாக மோடி நடக்கவும்
கட்சித் தலைமைக்கு கெட்ட மனிதராகி போனார்.
கசாப்புக் கடைக்காரன் எப்படி
காந்தியாக மாறலாம்?
RSSயின் சப்தம் காட்டாத கேள்வி இது.
நியாயம்தானேங்க!

வெட்டுகிறேன் என்றவன்
திடுமென வெட்டமாட்டேன்ணு
முரண்டு பிடிக்கலாமோ?
கலவரமில்லாமல் கட்சி வளர்ப்பதும்தான் எப்படி?
*
இன்றைய நிலவரப்படிக்கு
கட்சியில் இருந்து ஓசைப்படாமல் விலகி
தனி கிரகங்களாக வட்டமடிக்கும்
அத்வானியும் / மோடியும்
நம்ம சோவின் செல்லங்கள்!

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ
அகில இந்தியாவிலேயே
அத்வானியையும் மோடியையும்
பிரதமருக்கு சிபாரிசு செய்யும்
ஒரே நபர் நம்ம 'சோ'தான்!இப்போது சோவின் குரலில்
ஓர் சின்னத் திருத்தம்!
அத்வானி or மோடி...This or That என்றவர்
இன்றைக்கு
மோடி or ஜெயலலிதா என்கிறார்!

சரி...
பாரதிய ஜனதா ஓர் அகில இந்திய கட்சி.. ரைட்?
அந்த பாரதிய ஜனதாவின் மூளையாக
RSS இருந்து கொண்டிருக்கிறது
ரைட்?
நாளை பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
பாரதிய ஜனதா தனது கூட்டாளிக் கட்சிகளுடன்
மெஜாரிட்டியாக M.P.சீட்டுகளை வாகை சூடுமெனில்
அவர்களது பிரதமரை
அவர்கள் கூடி தேர்ந்தெடுப்பதுதான் நடக்கும்
அதுதான் முறை.
அதுதான் அவர்களது கட்சிக்கும் மரியாதை
அதற்கு மேல் அவர்களது மூளை அமைப்பான
RSSயையும் கலந்து பரிசீலிக்கணும்
ஆக...
இத்தனை நடைமுறை சம்பிரதாயங்களையும் விட்டு
நம்ம சோ....
தனது துக்ளக் பத்திரிகை ஆண்டுவிழாவில்
மேடையில் அத்வானியையும் மோடியையும்
உட்காரவைத்துக் கொண்டு
வரும் பாரளுமன்றத் தேர்தலில்
பிரதமர் வேட்பாளராக
பாரதிய ஜனதா மோடியை அறிவிக்க வேண்டும்.
அல்லாது போனால்...
ஜெயலலிதாவை அறிவிக்க வேண்டும் என்கிறார்!
இது எந்த ஊர் நியாமுங்க?
யோசித்துப் பார்த்தால்
இது பாரதிய ஜனதாவின் தன்மானத்திற்கு
விடப்பட்டிருக்கும் சவாலல்லவா இது!

என் மரமண்டைக்கே இது தோணும்போது
பாரதிய ஜனதா கட்சியின் மேதைகளுக்கு
இது விளங்குமா விளங்காதா?
நம்மை மீறி நடக்கும்
அத்வானிக்கும் - மோடிக்கும்
நம்மை ஊறுகாயாகப்
பயன் படுத்திக் கொண்டு வரும்
ஜெயலலிதாவுக்கும்
'ராஜ குருவாக' சோ தன்னைக் காமித்துக் கொண்டு
நம் கட்சியின் அடிப்படை சங்கதிகளில்
தலையிடுவதும்தான் எத்தனை அவமானம்?
அந்த மேதைகளுக்கு தோன்றுமா தோன்றாதா?
தேன்றியிருக்கிறது என்பதுதான் நடப்பு செய்தி.

எத்தனைக்கு ஊழலில் அல்லது
அராஜகத்தில் ஈடுபட்டு
கட்சியைவிட்டு தள்ளிப் போனவர்களையெல்லாம்
பாரதிய ஜனதா கட்சி நாடிப் போகிறதே தவிர
அத்வானியையோ மோடியையோ
அது நாடுவதாக இல்லை.
இவர்கள் மீது அவர்கள் கட்டியெழுப்பிய
புனித பிம்பத்தை
இன்றைக்கு அவர்களே
சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குருவின் சொல்லுக்கு
அத்வானி/ மோடி/ ஜெயலலிதா வகையறா
மரியாதை செய்யலாம்.
அச் சொல்லை பாரதிய ஜனதா கேட்கணுமா என்ன?
இக் குருவின் சொல்லுக்கு
இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டது பாரதிய ஜனதா!

உடல் உபாதை கொண்டார் சோ.
பாவம்.
சமீப துக்ளக் இதழ்களிலும் இது குறித்து 
புலம்பித் தீர்க்கிறார்.
நிஜமாகவே பாவமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
குருவி தன்னை பருந்தாக நினைக்கலாம்.
தப்பில்லை.
என்றாலும்...
அதன் ஆசை
அடுத்த ஜென்மத்தில்
வேண்டுமானால்
சாத்தியமாகலாம்.
***

நன்றி : தாஜ்

http://www.tamilpukkal.blogspot.com/
satajdeen@gmail.com

3 comments:

 1. ஒரு புதிய கோணத்தில் நடப்புகளை அலசியுள்ளது இந்த கட்டுரை.

  அது சரி சோவின் மீது பரிகாச கற்களை எறிந்து விட்டு பூக்களை சொரிந்தார் போல் சமர்ப்பணம் என சொல்லியிருப்பது சீர்காழியார் பிராண்ட் காமடியா!

  ReplyDelete
 2. எந்த ஜென்மத்திலும் அவரது ஆசைகள் நிறைவேறப்போவது இல்லை(ஜென்மமே புருடா)

  ReplyDelete
 3. காமெடிபீஸ் என்பது வேறு..

  முன்னால் காமெடிபீஸ் என்பது வேறு..

  சு.சா என்பது வேறு..

  சோ என்பதும் வேறு..

  ஆனாலும் எல்லாமே காமெடிதான்

  ReplyDelete