Wednesday, June 13, 2012

தங்க விசாரிப்புகளுடன் தாஜ் கடிதம் - TO: கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் (89)

முதல்வரம்மாவுக்கு எழுதியது போல கலைஞரய்யாவுக்கு கடிதம் எழுதுகிறார் கவிஞர் தாஜ். அடுத்து, உலகநாயகர் ஒபாமாவுக்கு எழுதவேண்டியதுதான் பாக்கி.  'பாவம்யா அவரு , வுட்டுடு' என்று சொன்னால், 'எனக்கு மட்டும் அந்த மனசு இல்லையா என்ன?  இந்த மீடியாக்களின் உலகத்திற்கிடையே அவர் இன்னும் அரதப் பழசு அரசியலையே நடத்துகிறார். உங்களிடம் சொன்னால் சிரிப்பீர்கள்; நான் இப்படி ஏதேனும் ஒரு பத்திரிகையில் உட்கார்ந்து எழுதக் கூடுமெனில் என் வீட்டையும் தேடி பணப்பண்டலை அனுப்பிவைத்தாலும் வைப்பார். ஆனாலும்... திருந்தவே மாட்டார். கட்டுரையில் அவரது இன்னும் பல அரசியல் நடவடிக்கைகளை எழுதியிருந்தேன். கட்டுரை கனமாகிப் போகிறதே என்று எடிட் செய்துவிட்டேன்' என்கிறார் நண்பர்.தப்பித்தேன். ஆமா, இது ஆபிதீன் பக்கங்களா தாஜூதீன் பக்கங்களா? - ஆபிதீன்
***


TO: 'மகா' கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்

'89-தங்க விசாரிப்புகளுடன்'
-------------------------------------

தாஜ்

12.06.2012

உங்களது நலத்தை
அன்புடன் விசாரிக்கிறேன்.
தவிர,
உங்களுக்கு
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அரசியல்வாதி என்கிற பதம்
அரசியலை உள்ளாகக் கொண்டது.
அரசியல்... சாணக்கியம் சார்ந்தது.
சாணக்கியமோ.... சூழ்ச்சியின் வடிவம்.
சூழ்ச்சியை  மோசடியென அர்த்தப்படுத்தலாம்.
மோசடி... தமிழில் ஒரு கெட்டவார்த்தையானாலும்
அரசியல், அரசியல்வாதி என்கிற பதம்
இன்னும் இங்கே மதிப்பிற்குரியதாகவே இருக்கிறது.
பெரும்பாலோர்களாலும் போற்றவும் படுகிறது.

அரசியலின் 'மகா' அர்த்தம்...
எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்
பெரும்பாலோரால்... இங்கே
போற்றப்படுவதுதான் முக்கியம்!

என் கணிப்பில்... நீங்கள்
எல்லோராலும் போற்றப்படும் 
'நம்பர் ஒன்' அரசியல்வாதி!

பாசி பிடித்து துர்நாற்றமும் வீசும்
இந்திய அரசியல் துறையில்
நீங்கள்
நீண்டகால அனுபவம் கொண்டவர்!
வானளாவிய சகிப்புத் தன்மையுடன்
கூடுதல் திறமை கொண்டு
வெற்றிகரமாக
வலம் வருபவராகவும் நீங்கள் இருக்கிறீர்கள்!

'வாய்மையே வெல்லும்' என்பது சான்றோர் வாக்கு.
உங்கள் விசயத்தில் அது  100-க்கு 100 -சரி!
அதனை மெய்ப்பித்தும் காட்டியவர் நீங்கள்!
மெய்ப்பிப்பு என்றால்.... சாதாரண மெய்ப்பிப்பா அது...!?
அதிரடி மெய்ப்பிப்பு!
அந்த 'வாய்'யையும்.... 'மை'யையும்
நீங்கள் உபயோகித்த மாதிரி
இன்னொரு அரசியல்வாதி இங்கே உபயோகிக்கவேயில்லை!

வாய்மையே வெல்லும் என்பதை நிரூபணம் செய்ய
உங்களுக்குத்தான் எத்தனை உந்துதல்!
எத்தனைத் திறனாய் அதனை உபயோகித்துக் காட்டினீர்கள்.
ஒரு காலக்கட்டத்தில்
உங்களது அரசியல் எதிரிகளையெல்லாம்
துண்டைக் காணோம் துணியைக் காணோமென
ஓட்டம் பிடிக்க அல்லவா வைத்தீர்கள்!

உங்களோடு அரசியலுக்கு வந்தவர்களில்
தொடர்ந்து...  நீங்கள் ஒருவரே
இன்னும் பெயர் போடுபவராக இருக்கின்றீர்கள்!
நிச்சயமாகச் சொல்வேன்
இம்மண் ஆயிரம் அரசியல்வாதிகளை கண்டிருக்கலாம்
ஆனால்..., உங்கள் அளவிலான சாதுர்யம் கொண்ட
இன்னொரு அரசியல்வாதியை கண்டிருக்காது!

சமீபத்தில்...
2-g, சங்கதிகளை விரித்து
உங்களது இயக்கத்தையும்
உங்களது இரத்த உறவுகளையும்
ஒரு சதிகாரக் கூட்டம் (உங்கள் இயக்கத்தார்களின் சொல்)
படாய் படுத்திய போதும்... தொடர்ந்து
இன்றளவும் படுத்திக்கொண்டிருக்கும் போதும்
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல'
நீங்கள் காட்டும் மௌனமும்
அதன் நிழலான பொறுமை என்பதும்
சாதாரணமானதல்ல!

2-g சங்கதிகளுக்கான குற்றச்சாட்டுகளுக்கு
'சட்சட்'டென்று ஆரம்பத்தில் நீங்கள்
பதிலுரைப்பும் மறுப்புகளும் சொல்கிறவாராக இருந்தாலும்
பின்னாலான நாட்களில்...
அரசியலில், காலத்தே பெற்ற அனுபவமாய்
நீங்கள் காட்டத் தொடங்கிய
மௌனமும், அதன் இன்னொரு பக்கமான
பொறுமையும் வியக்கத்தகுந்தது!
பதிலுரைப்புக்கு, சொல்லும் அர்த்தமும் மட்டும்தான்
மௌனத்திற்கோ ஆயிரம் ஆர்த்தம்!

உங்களிடம்
அரசியலின் அரிசுவடிப் பாடம் தொட்டுப்
படித்ததாலோ என்னவோ
உங்களது கழகக் கண்மணிகளும்
சொந்த ரத்தங்களும்
என்னமாய்...மௌனம் காக்கிறார்கள்!
உங்களது பேரனும் மகளும்
சகஜமான நடையிலும் கூட
சப்தம் காட்டாததோர் நடையல்லவா நடக்கிறார்கள்!
இருப்பையும் கூட அறிய முடியாத மௌனம்!
குருகுலப் பயிற்சி வீணாகவேயில்லை!
நம்மால் வியக்காமலும் இருக்க முடியவில்லை!

பாருங்களேன்....
உங்களது மௌனத்தால்.....
உங்கள் உறவுகளின் மௌனத்தால்....
2g- என்பது
இங்கே நம் மக்களிடம் இன்றைக்கு
டெல்லி வழக்குமன்றத்தில் நடக்கும் ஏதோ ஒரு வழக்கு!
அல்லது....
இன்னொரு வழக்கு. அவ்வளவுதான்!

நம் மக்களில் பாதிக்குபாதி பேர்கள்
அவ்வழக்கு பற்றிய நினைவிலிருந்தும் தூர வந்துவிட்டார்கள்!
ஏன்... மறந்தே போனவர்களும் உண்டிங்கே.

இப்படியான வழக்குகளில்
'மகா' கலைஞரான உங்களது அனுபவ ஞானம்
ஒரு போதும் பொய்த்ததில்லை.
நேற்றைக்கு...
'சர்காரியா கமிஷன்' என்னவானது?
உங்களது
மௌன சாதுர்யத்தின் முன் நின்றதாயென்ன?

அந்த வழக்கு தள்ளுபடியாகி
நீங்கள் வாகை சூடிய போது...
உங்களை
'விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி' என்றார் எம்.ஜி.யார்.  
அவர் சொன்னார் என்பதற்காக
மக்கள் அதனை இன்னுமா
நினைவிலா வைத்திருக்கிறார்கள்?
காலம் என்பது உருளக் கூடியதுதான்...
மக்களது மறதிகளின் பள்ளத்தாக்கில்
அது உருண்டு மறையக் கூடியதேயென....
உங்கள் அளவுக்கு
இங்கே அறிந்து உணர்ந்தவரும்தான் யார்?

'லாவணி' பாடி
சிக்கலான பிரச்சனைகளை
ஊதி நாமே பெரிசாக்குவதைவிட
மௌனமாய் இருந்து, மக்கள் மத்தியில் அதனை
நமுத்துப் போகவைப்பதும்தான்
எத்தனை புத்திசாலித்தனம்!?
திறம்படவே அதனை அப்படி
நிகழ்த்துகின்றீர்கள் என்பதுதான் என் வியப்பு!

வாயையும் மையையும் உபயோகிப்பது பலமென்றால்...
அதனை உபயோகிக்காமல் விடுவதும்
இன்னொரு வகையான பலம்.
ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே
உங்களை கும்பிட்டு வணங்கி
இந்த அடிப்படை அரசியல்
பாடத்தினை படித்திடல் வேண்டும்.
உங்களது 89-வயசு தங்க அனுபவம்
ஒன்றும் சாதாரணமானதல்ல!

*
போகட்டும்,
உங்களது திறமைகள் குறித்து
நிறையவே மலைத்தாகிவிட்டது!
இன்றைக்கு உங்களைப் பார்த்து
புதிதாக மலைக்கவென்று ஒன்றுமே இல்லை.
உண்டென்றால்... அது உங்களது
89-வது பிறந்தநாள் பெருவிழாதான்!!
அதுதான் எத்தனை சிறப்பாக
நடந்தேறியிருக்கிறது!

89-கிலோ எடை கொண்ட கேக்கு....

89-கிலோ எடை கொண்ட தங்கம்.....

லட்சங்களின் செலவில் புது வடிவ அலங்கார மேடை....
அங்கே கூடிய மக்கள் அலையில் சிங்கநாதம்...
செய்தியைக் கேட்கவே பிரமிப்பாக இருந்தது!

பெரியாரின் வழிகளை
பின்பற்றுவதாக கூறி வருகிற நீங்கள்
பெரியாரின் எந்தெந்த வழிகளை
கெட்டியாகத் தொடர்கின்றீர்கள் என்பதை
என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது.
என்னதான் உங்களைத் தெரியுமென பீற்றிக் கொண்டாலும்
உள்ளார்ந்த உங்களது கோட்பாட்டு நடவடிக்கைகள் எல்லாம்
எனக்குத் தெரியும் என்று ஆகிவிட முடியாது.

இந்த வயது விசயத்தில் நீங்கள் பெரியாரை
தொடரக் கூடியவராகவே இருக்கிறீர்கள். சந்தோஷம்!
அவர் 98-யை தொட்டு சளைக்காமல்
மக்களைச் சந்தித்தார் என்றால்...
நீங்கள் 89-யை தொட்டு
மக்களைச் சந்தித்து வருபவராக இருக்கிறீர்கள்!

அவர் தன் எடைக்கு எடை
பரிசுப் பொருட்களை பெற்றார் என்றால்
நீங்கள் உங்கள் வயதின் நம்பருக்கேற்ப
பரிசுப் பொருட்களை பெறுகிறீர்கள்!
எடையை விட்டு, வயது அளவுக்கு என்பது
சின்ன மாற்றம்தான் என்றாலும்
இது லாபகரமாகவே தெரிகிறது.
பரவாயில்லை.

பெரியார் தனக்கு கிடைக்கும்
பரிசு பொருட்களை கணக்கிட்டு பணமாக மாற்றி
இயக்கத்தின் வளர்ச்சி/
தாழ்ந்த நம் மக்களுக்கென்று கல்லூரி/
மேலும், இன்னும் பிற அர்த்தம் கொண்ட இத்தியாதிகளுக்கு
அதனை செலவளிக்கக் கூடியவராக இருந்தார்!
இந்த விசயத்தில் நீங்கள் எப்படி?

பெருந்தலைவர் காமராஜ் கூட
தனக்கு கிடைக்கும்
அன்பளிப்புகள் அத்தனையும்
அநாதை ஆசிரமத்திற்கு அனுப்பிவிடுவார் என்றும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 
கிட்டும் அன்பளிப்பு பொருட்கள் அனைத்தையும்
தனது வருமானத்தின் பெரும் பகுதியினையும்
ஏழைகளுக்காக வாரிவழங்கக் கூடியவர் என்பதாக
வாசித்தும் இருக்கிறேன்.
இப்போது, நீங்கள்தான் சொல்லணும்
இவ்விசயத்தில் எப்படி நீங்கள்?

உங்களது பிறந்த நாளுக்கு கிட்டிய
89-கிலோ கேக்கை வெட்டி
உடன் பிறப்புகளுக்கு நிச்சயம் தந்திருப்பீர்கள்.
கிட்டிய அந்த 89-கிலோ தங்கத்தை?
கேக்கை வெட்டித்தந்த மாதிரி உடன் பிறப்புகளுக்கு
இதனை வெட்டித் தந்திருக்க மாட்டீர்கள்.
அது வேண்டாத வேலையும் கூட.
சரி..., கட்சிப் பணிக்காக இருக்குமோ?
அப்படியெனில் இந்நேரம் மீடியாக்கள் அவ்வளவும்
உங்களை வியந்து வியந்தல்லவா சிலாகித்திருக்கும்!

89-கிலோ தங்கம் அன்பளிப்பாக கிடைத்த இச்செய்தி
மீடியாக்கள் சிலவற்றில் கசிந்ததோடு சரி.
பின் ஏனோ....
அவற்றின் வாயெல்லாம் அடைத்துப் போய்விட்டது!
எந்த மந்திரக்கோல் அவற்றின் வாய்களை
அடைத்ததென்று தெரியவில்லை.
போகட்டும்
இப்போது சொல்லுங்கள்...
89-கிலோ தங்கத்தின் அடுத்த நகர்வு எப்படியென்று.
ஏன் இப்படி
திரும்பத் திரும்ப கேட்கிறேன் என்றால்...
தொகை பெரிதாயிற்றே
அத்தனை கிலோ தங்கத்தையும்
பிறந்தநாள் பரிசுதானே என்பதாக
உங்கள் மனைவிமார்கள்
பங்கு போட்டு பிரித்து
வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கக் கூடுமென்றால்
உங்களது அரசியல் எதிரிகள் வாய் கூசாமல்
இத்தனைத் தங்கமும்
2-g வரவின் வேறு மாதிரியான நுழைவா?
என்றுவிடக் கூடாது பாருங்கள்
அதனால்தான் தெளிவு கேட்கிறேன்.

'அதான் மீடியாக்களின் வாயை
அடைத்துவிட்டாகிவிட்டதே' என்கிறீர்களா...
தலையைச் சுற்றுகிறது.
இத்தனை வலியோடு
எனக்கு ஏன் இந்த உறுத்தல்?
உங்களுக்கு
மீண்டும் என் வாழ்த்துக்கள்.

***

நன்றி : தாஜ்

http://www.tamilpukkal.blogspot.com/
satajdeen@gmail.com

***

தப்பிக்க ஒரு போனஸ் : சுப.வீரபாண்டியன் கவிதை :

கலைஞர் 89

நீண்டதுன் வாழ்க்கைப் பாதை
நீபல துறையில் மேதை
இன்பமும் துன்ப மென்றும்
இசையுடன் வசைகள் என்றும்
எதிரெதிர் நிலைகள் யாவும்
எதிர்கொண்ட தலைவன் நீதான்
புதுப்புனல் தனிலும் வேகம்
புயல்களும் பார்த்த தேகம்
வெற்றிகள் குவிந்த துண்டு
வேல்களும் பாய்ந்த துண்டு 
மாற்றங்கள் நூறு கண்டும்
மாறாது உனது தொண்டு
தமிழுனை என்றும் சூழ்க
தலைவரே வாழ்க வாழ்க
தொன்னூறு நூறா கட்டும்
புகழட்டும் திசைகள் எட்டும்!

1 comment:

 1. ஆபிதீன்....
  கலைஞரின் 89-க்கு
  சுப.வீரபாண்டியன் கவிதையை விடவும்
  என் புகழ்ச்சி அதிகம் என்பதை
  நீங்கள் காணாததேன்!
  -தாஜ்

  ReplyDelete