Thursday, May 31, 2012

சோலைக்கிளி​யின் கவிதைகளும் பத்தியும்


புகைப்பட விபரம்:
அடையாளம் சாதிக், தோப்பில் முகமது மீரான், சோலைக்கிளி, அவர்தம் மனைவி, மகன்

***

ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம் அவருடைய முழுக் கவிதைகளிலிருந்தும் 271 கவிதைகளை "அவணம்" எனும் பெயரில் செம்பதிப்பாகக் கொண்டு வந்தது. அந்தத் தொகுதியிலிருந்து நான்கே நான்கு கவிதைகளை மட்டும் ஆபிதீன் பக்கங்களுக்காக அனுப்பி வைக்கிறோம்.  - எஸ்.எல்.எம்.ஹனீபா

***தொப்பி சப்பாத்துச் சிசு
தொப்பி,
காற்சட்டை, சப்பாத்து,
இடுப்பில் ஒரு கத்தி,
மீசை
அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து
குதிக்கின்ற ஒரு காலம் வரும்
அந்த
தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்
பயிர்பச்சை கூட இப்படியாய் இருகாது
எல்லாம்
தருணத்தில் ஒத்தோடும்
சோளம் மீசையுடன் நிற்காது
மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற
துவக்கை ஓலைக்குள் மறைத்து வைத்து  ஈனும்
வெள்ளை சிவப்பு
இளநீலம் மஞ்சள்
என்று கண்ணுக்கு குளிர்த்தியினைத் தருகின்ற
பூமரங்கள் கூட
சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை
அரும்பி அரும்பி
வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்
குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்
இளநீர் எதற்கு
மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற
தலைமுறைக்குள் சீவிக்கும்
கொய்யா முள்ளாத்தை
எலுமிச்சை அத்தனையும்
நீருறிஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக் காய்
இரத்தம் உறிஞ்சும் அந்நேரம் காய்க்காது
வற்றாளைக் கொடி நட்டால்
அதில் விளையும் நிலக் கண்ணி
வெண்டி வரைப்பீக்கை
நிலக்கடலை தக்காளி
எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்
முகர்ந்தால் இறக்கும்
நச்சுப் பொருளாக
எடுத்தால் அதிரும்
தெருக்குண்டு வடிவாக
உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழிநடத்த
உள்ளியும் உலுவா1 வும் சமைத்துண்டு ருசி பார்க்கும்
மனிதர் எவரிருப்பர்
கடுகு பொரித்த வாசந்தான் கிளம்புதற்கும்
ஆட்கள் அன்றிருக்கார்
இவர்கள்
பொக்கணிக்கொடி2 யோடு பிறந்த ஒருவகைப்
புராதன மனிதர்களாய் போவர்.
-----
20.10.1986
1. உலுவா - வெந்தயம்
2. பொக்கணிக்கொடி - தொப்புள் கொடி

-----------------------------------------

எட்டாவது நரகம்

நீ நரகத்தைப் பற்றியா அச்சப்படுகிறாய்
அது இலகுவானது
அங்கே மலைப்பாம்புகள் ஆயிரம் இருந்தாலும்
அஞ்சத் தேவையில்லை அதைப் பற்றி
வேதம் சொல்வதைப் போல
சீழிலாலான ஆறுகளும்
செந்தீயில் காய்ச்சிய ஈயக் குழம்புகளும்
பாவாத்மாக்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கலாம்
செவிட்டு மாலிக் அதன்
அதிபதியாகி
பல நூறு தடவைகளுக்கு ஒரு தடவை
'பேசாமல் கிடவுங்கள்' என்று
கட்டளை இடலாம்
அழுகுரல்கள்
சொர்க்கத்திலுள்ளோரை  சிரமத்திற்குள்ளாக்கி
அவர்களின் கோபத்தையும்
சாபத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம்
நீ நரகத்தைப் பற்றியா அச்சப்படுகிறாய்
நான் அதைப் பற்றி நினைத்ததே கிடையாது
ஏழு நரகங்கள் உண்டென்று சொல்வார்கள்
நாம் கொடுமைகள் நிறைந்த
ஏழாவது நரகந்தான் சென்றாலும்
பின்னொரு நாளில் மன்னிப்புக் கிடைக்குமாம்
நான் நினைப்பதும்
ஒரு பொட்டுப் பூச்சியைப் போல் பயந்து சாவதும்
மன்னிப்பே கிடைக்காத எட்டாவது நரகமாம்
இந்த உலகத்தைப் பற்றித்தான்.
13.06.1985
--------------------------------------

எனது இனத்துப் பேனையால் அழுதது

நிலவுக்கு வேலியிடு
சூரியனையும் பங்குபோட்டுப் பகிர்ந்து கொள்
வெள்ளிகளை எண்ணு
இன விகிதாராசப்படி பிரி
நாகரிக யுகத்து மனிதர்கள் நாம்
கடலை அளந்து எடு
வானத்தைப் பிளந்து துண்டாடு
சமயம் வந்தால்
காற்றைக் கடத்து
அல்லது
சூறாவளியைக் கொண்டு சகோதர இனத்தை அழி
அங்கே
செவ்வாய்க் கிரகத்தில் நம்மிலொருவன் இறங்கட்டும்
எறும்புக்கும் இன முத்திரையிடு
மரத்திற்குக் கூட
சாதி சமயத்தைப் புகட்டு
புறா முக்கட்டும்
இன்னொரு யுகத்தை இனத்தை நகைத்து
பல்லியும் பூச்சியும் நத்தையும் தவளையும்
கத்தும் ஒலியிலெல்லாம் பேதங்கள் தொனிக்கட்டும்
வா
வா
வண்ணத்துப்பூச்சியே
இது உன்னுடைய இனத்து மலர்தான் நுகர்
பாவம்
மனிதன் பிரிந்த விதம்
நான்கூட இந்தக் கவிதை எழுதுகையில்
ஒரு பேனை மறுத்தது
"உனது இனத்துப் பொருளல்ல" நானென்று
ஓ... அது வேறு இனத்துப் பேனை
26.11.1989
----------------------------------------------------

பாரதியும் நானும் சாப்பிட்ட இரவு

பாரதி முட்டை உண்பதில்லை
அதற்குப் பதிலாகத்தான் அவன்
உலகத்தை விழுங்கினான்
நான் அவனோடு நேற்றிரவு
மிகவும் பசியென்றான்
பாத்திரத்தைச் சேர்த்து உண்டான்
நிலவை அவன்
உடைத்து நசித்துப் பிசைந்து உண்ட விதம்
எனக்கு வியப்பாக இருந்தது
கடலைச் சிறு கோப்பைக்குள் நிறைத்தெடுத்தான்
உண்டு உண்டே அவன் அதனைக் குடித்து முடிக்கையில்
சமுத்திரத்தில் நீந்திக் கொண்டிருந்த
கப்பல்களும் அவன் வயிற்றுள் சமித்தன
எனக்கும் நல்ல பசிதான்
நான் வானத்தைப் பிடித்து விழுங்கினேன்
இன்று விடிய அதன் வயிற்றுள் இருந்த சூரியன் எனது
தொண்டையில் சிக்கிக் குத்தியது
பாரதி விழுந்து விழுந்து சிரித்தான்
நட்சத்திரங்களை மிட்டாய் போல் உணவியபடி பலமாய்
பாரதியின் மீசையிலிருந்து இப்போதும் தேன்வடிவதனை
அந்த இரவு வேளையிலும் நான் கண்டேன்
காற்று வழக்கம் போல் இப்போதும் அவனின்
குதிகாலைத் தடவி
பிடறியை முகர்ந்து
வாசத்தையும் இனிப்பையும் பெற்றுக் கொண்டுதான்
காதலர்களைத் தாலாட்டப் போகிறது
நானும் பாரதியும் பூக்களைப் பற்றிப்
பேசிக் கொண்டே சாப்பிட்டோம்
கண்ணம்மாவைப் பற்றிய கதையும் வந்தது
வயது போனாலும் கண்ணம்மா இப்போதும்
அதே இளமை குளுகுளுப்பு என்றான்
நம்மூர் பெண்களது நலத்தை அவன் அக்கறையாய்
என்னிடத்தில்
துருவி விசாரித்தான்
ஆண்களை தோளில் சுமந்தபடி இருந்தாலும் பாதகமில்லை
பார்த்துக் கொண்டிருக்கலாம்
இங்கு நடப்பதோ
மிகக் கொடுமை
பெண் குடித்து அவள் வயிற்றுள்ளிருக்கின்ற நீரில்தான்
ஆண் குளிக்கின்றான்
பெண்ணின் வாய்க்குள்ளால் தன் குதிகாலை விட்டே
கால் கழுவுகின்றான்
என்றெல்லாம்
நான் சொன்னேன்
உண்ட இடத்திலேயே வெடித்தான் பாரதி
எனது வீடு முழுக்க
அவனது கவிதைகள்
சிதறித் தெறித்தன
போத்தல் உடைந்து தேன் வழியும் விதம் போல
அவனிலிருந்து
கவிதைகள் ஒழுகின
நான் கையைக் கொடுத்து நாக்கில்
தொட்டு வைத்தது கூட
மறக்க முடியாத இனிப்பாய்
இருந்தது
தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உயிர்த்து உயிர்த்து
நாங்கள் சாப்பிட்ட இடமெல்லாம்
பாரதியை வணங்க வந்தன
ஏதோ ஓர் எழுத்து என்னை வந்து
தொடையில் குத்தியது
பாரதியை நான் உடைத்த ஆத்திரத்தில்
இரட்டைக் கொம்பை நீட்டியபடி
28.08.1992

***


சென்ற நவம்பரில் காலச்சுவடு பதிப்பகம் சோலைக்கிளியின் "பொன்னாலே புழுதி பறந்த பூமி" எனும் பத்தி எழுத்துக்களின் முதலாவது தொகுப்பொன்றை நூலாகக் கொண்டு வந்தது. இதுவரை காலமும் எம்மால் கவிஞனாக அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னுமொரு பரிமாணம் அவருடைய இந்த எழுத்துக்கள்.

நூலில் என்னுரையாக அவர் குறிப்பிடும் ஒரு பத்தி நம் கவனத்திற்குரியது. "ஒருவனின் நினைவு ஒருவனுக்குப் புதிது. மற்றவனின் நினைவு அடுத்தவனுக்கு ஆனந்தம். இப்படி நினைவுகளை மாறி மாறி பகிருகின்ற போதுதான் மனிதன் தங்களுக்குள்ளான இணக்கத்தைப் பேணி, ஒருவனிலிருந்து ஒருவன் வெளிக்கிறான். ஒருவனின் நினைவை ஒருவன் உண்ணும் போது நினைவுகள் விருந்தாகின்றன". அவருடைய வார்த்தைகள் நூலைப் படித்து முடித்ததும் சத்தியமாகிறது.

இங்கே முதற் பாகம் முப்பது அத்தியாயங்களாக நூலுருப் பெற்றிருக்கிறது. அவற்றிலிருந்து "என் தொண்டைக்குள் அவள் கொண்டை மயிர்" எனும் பத்தியை ஆபிதீன் பக்கங்களுக்காக பதிவேற்றம் செய்யும் இந்தத் தருணத்தில், இந்த நூலுக்கு ஒரு சிறு குறிப்பை எமது ஆத்மார்த்த கலைஞன் உமா வரதராஜன் அவர்கள் எழுதியுள்ளார். அந்தக் குறிப்பின் ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமான காவியத்தைக் கேட்பது போன்ற மெய்சிலிர்ப்பையும் பூரிப்பையும் நம் மனத்தில் ஏற்றி வைக்கிறது. ஒரு ஐம்பது ஆண்டு கால வாசிப்பு அனுபவத்தில், ஒரு நூலுக்கான முன்னுரையாக ஒரு குறிப்பு என்ற மகுடத்தில் ஒரு சிறிய பத்தி இடம்பெற்றிருப்பது தமிழில் ஒரு புதிய கண் திறப்பாகும். இதோ அந்தக் குறிப்பு:

சோலைக்கிளியும் நானும் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தில் நெய்தலுக்கும் மருதத்துக்கும் நடுவிலமைந்த இரு வேறு கிராமங்களில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எங்களிருவரின் ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர்கள் இருக்கலாம். நாங்கள் பிறந்த இரண்டு இனங்களும் அவ்வப்போது உன்மத்தம் கொண்ட யானைகள் போல் மோதிக்கொள்ளும் காலங்களில் கூட, அவற்றின் தூண்களையொத்த கால்களுக்குள்ளால் இரு முயல்களாக எப்படியோ நுழைந்து எல்லையோரம் வரை துள்ளித் துள்ளி, வந்து சந்தித்துப் பிரிவது வழக்கம். எங்கள் கிராமங்களின் தோற்றங்கள் இன்றைக்கு மாறிய போதிலும் குரங்குப் பிடியுடன் எமது மண்ணையும் ஞாபகங்களையும் இறுகப் பற்றிக் கொண்டு கிடக்கிறோம்.

எங்கள் ஆறுகளின் நீர்ப்பரப்பை சல்வீனியா மூடாத, எங்கள் சமுத்திரங்களின் கடல்களில் சடலங்கள் ஒதுங்காத, எங்கள் பூரண நிலவை கருமுகில்கள் திரைபோடாத, காலமொன்று இருந்தது. "எங்கள் பூமியில் பொன்னாலே புழுதி பறந்த அந்தக் காலத்திற்கு" என் நண்பன் சோலைக்கிளி வசியம் செய்து அழைத்துச் செல்கிறான். அவனுடைய பால்ய கால ஞாபகங்கள் இந்நூலில் பொங்கி வழிகின்றன. இதில் தென்படும் காற்று மண்டலத்தில் என் மூச்சுக்களும், சமுத்திரக் கரையினில் என் காலடிகளும், கல்யாணிப் பத்தைகளில் என் வண்ணத்துப்பூச்சிகளும், திரையரங்குகளின் சுவர்கள் நடுவே என் கரகோஷங்களும் விசிலடிப்புகளும் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. ஒரு குடையின் கீழே ஒட்டிய படி நடந்து எங்கள் வானத்தின் பரிசுகளான வெயிலின் வெம்மையில் வாடியும் மழையில் நனைந்தும் பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இந்தப் பிரதேசத்தின் வாழ்வையும் மனித நடத்தையையும் கிராமிய மணங்கமழ அவன் விபரித்துச் செல்லும் பாங்கை ஒரு சிறுவனாக மாறி வியந்து பார்க்கின்றேன். இந்த மண்ணைத் தோண்டி, புதையல்களை வெளிக்கொணரும் வித்தையை அவன் எங்கே கற்றான் எனப் புரியவில்லை. கவிஞனாக மட்டும் இதுவரை அறியப்பட்ட அவனது படைப்பாற்றலின் மற்றொரு பரிணாமம் அது.

தேர்ந்த பாடகன் ஒருவனின் ஆதங்கம் நிறைந்த பெருமூச்சுக் கூட சங்கீதந்தான். சோலைக்கிளியும் கைதேர்ந்த ஒரு கலைஞன்தான்.

கல்முனை
அக்டோபர், 2011

***என் தொண்டைக்குள் அவள் கொண்டை மயிர்

எழுத்தாளனும் பைத்தியக்காரனும் ஒன்று, மனதில் பட்டவைகளை விளாசித் தள்ளுவதில் என்று கூறியிருக்கிறேன். இதை இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், பைத்தியக்காரன் எழுத்தாளனாகி விடுவான். அப்படிச் சில பைத்தியக்காரன் எழுத்தாளனாகி, ஏளனமாகிப் போன கதை ஊரிலுண்டு. இன்னும் சிலர் இந்த நிலையை அடைந்து விடக் கூடாது என்பதற்காக.

சந்தர்ப்பங்களில் எழுத்தாளன் பைத்தியக்காரன். அதாவது, விசயங்களைப் பிட்டு வைப்பதில், வெட்கம் பாராது. மற்றப்படிக்கு எழுத்தாளன் எழுத்தாளன்தான். ஒரு பைத்தியக்காரனால் எழுத்தாளனாகி விட முடியாது.
கப்பல் பார்க்க வந்த "சில்லெனப்பாஞ்சான்" அங்கு நின்ற என்னையும் அழைத்துக் கச்சான்கொட்டைகள் தந்தாள். தரும் போது பார்த்தேன், அவள் உள்ளங்கை நிறைய மருதோன்றிப் பூக்கள், பளிங்குப் பீங்கானில் இருந்தது மாதிரி.

ராசாவுக்குக் காய்ச்சிய பாலென்றாலும் பூனை குடிக்காமல் விடாது என்பதைப் போல, யார் நாட்டிய கம்பு என்றாலும் அதில் காகம் குந்திக் கத்தாமலும் விடாது என்பதும் மெய்தான்.

அந்தக் கப்பலின் கொம்புகளிலெல்லாம் கடற் பறவைகளோடு காகங்களும் குந்தியிருந்து கலந்து கத்தின. இது காகத்தின் அடிப்படைக் குணம். எதற்குள்ளும் போய்த் தானும் கலப்பது. நமக்குள்ளும் இப்போது எத்தனை காகங்கள் கலந்திருக்கின்றன!

காகங்கள் கத்தின என்பதை விட, "கத்தம்" ஓதின என்பதுதான் பொருத்தம். காகங்கள் சாகாத மனிதனையும் அவன் செத்தவன் போல் கத்தம் ஓதி, அவனை நிஜமாகவே பிணமாக்கி விடும் வல்லமையுள்ளன. எத்தனை மனிதன் இங்கு காகங்களால் பிணமாகி விட்டான்!

நான் தொழில் செய்கின்ற காரியாலயத்தில் கூட எனது மேலதிகாரியைச் சுற்றி எத்தனை காகங்கள்!

இந்தக் கப்பலுக்கு கத்தம் ஓத யாரும் மாடு அறுப்பார்களா என்று கேட்பதைப் போல, எங்கள் தலைகளுக்கு மேலால் காகங்கள் பறந்தன.

கத்தம் ஓதுவதற்கு எங்களூரில் வசதி படைத்தவர்கள் மாடு அறுப்பார்கள். அதன் இரத்தத்தையும் கழிவுகளையும் இந்தக் காகங்கள்தான் தின்பன.

காகத்தின் கத்தலுக்கு காது கொடுப்பதற்கு அப்போது ஊரில் இரண்டு வகையினர்தான் இருந்தார்கள். ஒன்று காதலில் கட்டுண்டு தன் சோடியைத் தேடிக் கொண்டிருக்கும் ஒற்றைக் குருவியினர். மற்றது கணவனைத் தொழிலுக்கு அனுப்பி விட்டு அவன் எப்போது திரும்பி வருவான் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் உத்தமிகள். மற்றப்படிக்கு நானறிந்த வரை, வேறு யாருமில்லை. காகம் அப்போது ஓர் உதவாப்பறவை.

இப்போது காகத்தின் மகத்துவமே வேறு. அரச வாகனவே இன்று காகந்தான். ஏன் அரச முடியும் அதற்குண்டு.

காகம் எங்களை ஆட்சி செய்கின்றது. இந்தப் பூமியை சுழற்றுவது காகந்தான் என்கின்ற காலமில்லையா இது! காகந்தான் இப்போது வண்ணங்களாய்ப் பறப்பது உங்கள் கண்களுக்குத் தெரிகிறதுதானே. நம்மைக் கண்டு காகம் எழும்பிப் பறந்த காலம் போய்விட்டது. காகத்தைக் கண்டு நாம் எழும்பி நிற்காமலா இப்போது இருக்கின்றோம்!

காகத்தின் பாசையில் சொன்னால், மெய்தான், அதற்குப் பாசையே இல்லையே.

பாசை இல்லாமலே நம்மை ஆளுகின்ற ஒரு பறவை காகம். ஒரு குயில் பிடிப்பதற்குக் கூட காகத்தின் மாளிகைக்குள் இப்போது யாராலும் நுழைய முடியுமா? காகங்கள் அங்கு மெத்தையில் உறங்குகின்றன.

இந்தக் கப்பலப் பார்க்க எங்களூருக்குப் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்த வண்ணமிருந்தனர். வருடா வருடம் எங்களூரில் இருக்கின்ற கொடியேற்றப் பள்ளிக்கு வருவதைப் போன்று. வந்தவர்கள் உண்ணப் பருகவென்று பல தற்காலிகக் குட்டிக்கடைகளும் கொடியேற்றப்பள் பள்ளியில் முளைத்திருப்பதைப் போல எழும்பியிருந்தன. கொடியேற்றப் பள்ளியைப் போலப் பல தட்டு "மினறாவில்" கொடி பறக்கவில்லை. அவ்வளவுதான் இதற்கும் அதற்குமான வேறுபாடாக இருந்தது.

இந்த உலகத்தில் இன்னும் உருவத்தால் வளராமல் இருக்கின்ற வியாபாரி கச்சான் கொட்டை விற்கும் பையன்கள்தான்! அன்றும் சின்னச் சின்ன பையன்கள் கச்சான் கொட்டை விற்றுக் கொண்டிருந்தார்கள். இன்றும் அதே அளவான பையன்கள்தான் விற்கிறார்கள்.

காற்று வாங்குபவனுக்கு வாய்க்குள் போடக் கச்சான் கொட்டையை விட்டால் வேறு அமிர்தம் கிடையாது என்பது போல. கப்பல் பார்க்க வந்தவருக்கும் அதை விட்டால் வேற திரவியங்கள் இல்லாமல்தான் இருந்தது.

எங்களூர்க் கடல் குடாக்கடல் என்கிறார்கள். இதனால்தான் இங்கு மீன்பிடியும் அதிகமாம். இருந்தாலும் மீன் மலியவில்லையே எங்கள் ஊரில்! அது குளிர் அறைகளுள்ள வாகனங்களில் ஏறிப் படுத்துறங்கி "பில்கிளிண்டனையும்" "மார்கிரட் தட்சரையும்" சந்தித்துக் கை குலுக்கிவரப் பயணம் செய்யத் தொடங்கிவிட்டது.

அத்தோடு எங்களூர்க் கடலுள் பெரியமலைகளைப் போன்று பாறைகள் கிடப்பதாக அறிய முடிகிறது. இவ்வாறு பாரிய பாறைகள் இருப்பதால்தான் சங்குச்சொண்டன், கலவா, விளல் என்று "கல்மீன்கள்" இங்கு அதிகமாகப்படுகிறதாம். கல்லில்தான் பாசி இருக்கும். பாசிதான் கல்மீன்களுக்கு புரியாணி!

எனக்குக் கடல்மீனில் விருப்பமான மீன் "சங்குச் சொண்டன்தான்" சமைத்தாலும் அதில் வீசும் பாசி மணம் எனக்குப் பிடிக்கும்.

என் சின்ன வயதில் தெருக்களில் உள்ள பழைய மதில்களில் படிந்திருக்கும் பாசிகளைப் பார்த்து நான் மகிழ்ந்திருக்கிறேன். பெரியவனானதும் இப்படியரு மதில்கட்டி, அது முழுக்க இப்படிப் பாசியை வளர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பிற்காலத்தில் பாசி வளர்த்தேனா! ஒரு பப்பாசியைக் கூட வளர்ப்பதற்கு முடியாமல் போனது.

ஆம், சுனாமிக்கு முன்பு எனது வளவில் இரண்டு பப்பாசி மரங்கள் குமர் நிலையில் இருந்தன. கன்னிப்பருவத்தில் பெண் மாத்திரமல்ல, "கள்ளியும்" அழகுதான். காலையில் எழுந்ததஉம் நான் அவற்றைத்தான் அண்ணாந்து பார்ப்பேன். சுனாமி வந்து என் வளவில் தண்ணீர் கசிகசித்ததால் அந்தப் பப்பாசிகளும் மாண்டன. ஓர் இரட்டை மரணம் என் வளவிலும் நடந்தது.

பாசிகளில் படுத்துறங்கிக் கனவு காண எனக்கு இப்போதும் பெரிய ஆசை இருக்கிறது. வண்ணத்துப் பூச்சிகள் கொடுத்து வைத்தவைகள். பாசிகளை எப்போதும் முகர்ந்த படியே இருக்கின்றனவே!

கனவு என்று சொன்ன போதுதான் எனக்குள் குறுக்குத் தெளிந்து ஓடிவரும் கோழியைப் போல இன்னுமொன்றும் என் நினைவிற்கு வருகிறது.

எனது தாயின் தகப்பனான மூத்தவாப்பா எனக்குப் பல பேய்க்கதைகளைச் சொல்லியிருக்கிறார்.

அவர் வயலுக்குப் போகும் போது முளைவண்டியின் வாலில் ஏறி இருந்து பேய் பாட்டுப்பாடிய கதை.

கூட்டாளியின் கலியாணத்திற்குப் போய்வரும் போது முச்சந்தியில் மரம் விழுந்து கிடந்த கதை.

அவரைப் பேர் சொல்லி அழைத்த பேய்க்கு அவர் பயந்து நடுங்காமல் தன் உடுமானத்தை உயர்த்திக் காட்டி அதை வெட்கித்து ஓடச் செய்த சம்பவம் என்று, எத்தனையோ கதைகள், அதைப்போல -

அவர் கண்ட கனவுகளையும் என்னிட் சொல்லி வைத்ததால்தான் இன்று நான் காணும் கனவுகளின் பலத்தையும் பலவீனத்தையும் என்னால், பிரித்துப் பார்த்து உணர முடிகிறது.

அவர் கண்ட கனவுகளில் ஒன்றை இங்குச் சொல்லலாம். கொஞ்சம் சுணங்கிப் போனால் பத்திக்கை பிடித்து நினை விறைக்கும் கை என்ன சிவந்தா போகப் போகிறது.

ஒரு கொசுவாம். அது பறக்கின்ற கப்பலாகியதாம். அதில் எனது மூத்தவாப்பா எறிப் போய் ஒரு பலாமரத்தில் நின்றாராம். அந்த மரத்தில் இரண்டு பலாப்பழங்களாம். அதில் ஒன்று பழுத்து மணத்ததால், அதை அவர் கையில் பிடிக்க, உள்ளே இருந்த கொட்டைகள் உதிர்ந்து மணலாகி, ஒரு கடற்கரையானதாம். அந்தக் கடற்கரையில் ஒர உதோணியாக மூத்தம்மாவின், "கொண்டைக்குத்தி" மீன் பிடித்துக் கொட்டிக் காத்துக் கிடந்ததாம். எல்லாம் நெத்தலி மீனாம்!

இந்தக் கனவு, என்ன அழகான கனவு! மூத்தம்மாவின் "கொண்டைக்குத்தி" மீன் பிடிக்கிறதாம் ஒரு தோணியாகி!

அப்போது பெண்கள் தங்கள் சடைத்த கொண்டைகளில் "கொண்டைக்குத்திகள்" தான் ஏற்றுவார்கள் அவிழாமல், காது குடையக் காதுக்குடும்பி.

அந்தக் காலத்தில் கனவு கண்டவன் எவ்வளவு பசுமையாகப் படுத்துத் தூங்கியிருக்கிறான்!

இப்போது காண்பது எல்லாம் பேய்க்கனவு, எலும்புக் கூடும் பிணங்களுமான கழுகுக்கனவு. அதிலும் கவிஞர்கள் அவிந்த நகங்களையும், அழுகிய விரல்களையும் ஒரு மண்டையோட்டுக்குள் போட்டுக் காய்ச்சும் ஆளையாள் பின்பற்றும் "காப்பிக்கனவு".

நமது கவிஞர்கள் இப்போது பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சுவதே இல்லை. ஏன், இவர்களுக்கு மூக்கு இல்லையா! இருந்திருந்தால் தம் குழந்தைகளுக்கு இட்ட முத்தம் பற்றியெல்லாம் பாடியிருப்பார்களே!

வறுத்த ஓட்டைப் போல் காய்ந்து விட்டது நமது கவிஞர்களின் உள்ளம். மண்டை ஓட்டை விட்டால் ஒரு வாழைக்காய் கூட இவர்களுக்குச் சாப்பாடாய்க் கிடையாது. கவிஞனின் மனம் "குருவி" என்ற காலம் போய்விட்டது. இப்போது அது வெறும் மயிர்கொட்டிப்புழு. தினம் நெஞ்சுக்குள்ளேயே ஒட்டிப் படுத்துப் பூவரசு இலை அரிக்கிறது.

சில்லெனப் பாஞ்சானின் காதல் இளவரசன் "மைனர் மச்சான்". அப்போது மைனர் மச்சானும் ஒரு முற்போக்கு வாலிபன். அப்போது உள்ளவர்கள் எல்லாம் கைக்கடிகாரங்களைத் தங்கள் முழங்கைக்குச் சற்றுப் பணிவில் கட்டும் போது அதைத் தாராளமாக வழியவிட்டு மணிக்கட்டிலேயே கிடக்கச் செய்தவன் மைனர்மச்சான்தான். அடிக்கடி அவன் கால்ச்சட்டையும் மாட்டிக் கொண்டு திரிந்ததுமல்லாமல், இடைக்கிடை கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினான். ஊரிலுள்ளவர்களுக்கு இவர்களின் காதல் பெரும் அவலாக இருந்தது.

சில்லெனப்பாஞ்சானை ஊரைவிட்டுத் துரத்த வேண்டும் என்றெல்லாம் அப்போதைய சமூகத்தவர் கொதித்தனர். மைனர் மச்சானுக்கு அவள் கடிதம் எழுதுவது மாத்திரமல்லாமல், கப்பல் பா த்த இடத்தில் நின்று இருவருமாகப் புகைப்படம் எடுத்த கதையும் பெரிதாக அடிபட்டது.

ஒரு நாள், ஊரே இவர்களைச் சேர்த்து வைத்தது மாதிரி இருவரும் எங்கென்று தெரியாமல் ஓடிப் போய் விட்டனர். ஊர் அப்போதும் நிம்மதியாய்த் தண்ணீர் குடிக்காமல், கிடந்து கொந்தளித்தது.

சில்லெனப்பாஞ்சானின் சேலைத்தலைப்பில் இருந்த புள்ளிகள் கூட எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் அவளது குதிகாலில் பித்தம் வெடித்திருந்ததைக் கண்ட யாரோ, "இது என்னடி பொடிச்சி பித்தம், அடிக்கடி மாங்காய் திங்கிறாயா?" என்று கேட்டதற்கு, அவள் அறைந்து அனுப்பிய அறையை வாங்கி வந்த பெண் தான் இறக்கும் வரை அதைச் சொல்லிச் சொல்லிக் காலத்தைக் கழித்தாள்.

அனேகமான பெண்களுக்கு எங்குப் போனாலும் மாங்காயின் எண்ணமும், களிமண்ணின் சந்தேகமும்தான். இப்போது யோசித்துப் பார்த்தால் சில்லெனப்பாஞ்சான் அப்படிப் பெரிய குற்றமொன்றும் புரியவில்லை. அவள் உரிமையை அவள் சரியாகப் பேணியிருக்கிறாள் போலத்தான் படுகிறது.

அவள் தனது நகத்திற்கும் உதட்டிற்கும் சாயம் அடித்தது பிழையா!
இன்று எத்தனை மணிகள் அதில் குளிக்கிறார்கள்!

எந்தக் குருவியும் தனது ஓட்டை உடைத்துப் பறந்தால் தாய்க்குச் சந்தேகம்தான். அது தானாக உடையும் வரை காத்திருக்கப் புதுமைப்பட்சிகளுக்கும் பொறுமையில்லை.

இங்கு இரு தரப்பும் பிழை விடவே இல்லை. பூமி இப்படித்தான் உருள்கிறது.

அப்போது சிக்குண்ட கப்பல் மெல்ல மெல்ல நீருக்குள் புதைந்து அதன் கொம்பு கூடத் தெரியாதபடிக்கு மறைந்து போனது. கப்பலுக்குக் கொம்பு இருப்பதால்தான், சற்றுத் தலைகனத்துத் தம்பட்டம் அடித்துத் திரிபவர்களையும் "கப்பல்" என்கிறார்கள்! அது எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, கிழடாகி விழுந்த ஒரு மனிதனின் கொடுப்புப் பல்லைப் போல, அண்மையில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தின் போது தெரிந்து, இறந்து. கடல் வற்றி அது ஊருக்குள் சற்று நேரம் வந்து நின்றதால்.

என் நினைவுகளே நீங்கள் எங்கெல்லாம் போகிறீர்கள்! நான் வந்து பத்திக்கை பிடித்தவுடன் எத்தனை திக்குகளில் தாவுகிறீர்கள்!

சில்லெனப்பாஞ்சானும் மைனர்மச்சானும் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தத் தெரியாத என் வயதில்.

அவர்கள் வாழ்ந்தார்களோ, அல்லது மாண்டுதான் போய்விட்டார்களோ என்பதெல்லாம் எனக்கு இதுவரைக்கும் தெரியாது.

ஆனால், எனக்கு ஒன்று தெரியும். நான் அந்தப் பசிய காலத்தை விட்டும் மாண்டு மடிந்து வெறும் பாலைவனமொன்றில் ஆவியாக அலைந்து திரிகிறேன்.

மைனர் மச்சான் முடி வாரும் அழகு இன்னும் என் கண்ணுக்குள் இனிக்கிறது. அவர் போனால், போன வழியெல்லாம் ஒரு வாசம்!

சில்லெனப்பாஞ்சான் தலையில் எப்போதும் ஒரு மல்லிகைப்பூ!

எனக்கு இந்த இருவரையும் பிடிக்கும். இன்றும் இந்த இருவரும் எனது புதுமையின் புள்ளிமான்கள்.

அவர்கள் உடம்புக்கு, அவர்கள் உயிரோடு இருந்தால் வயதேறி இருக்கும். மனங்கள் நிச்சயமாக இப்போதும் அருவியாகவே பாயும்.

எங்கு துள்ளுகிறார்களோ! நினைக்க, என் நெஞ்சம் விம்முகிறதே! அவள் கொண்டைமயிர் சிக்கி அடைத்தது மாதிரி இருக்கிறது என் தொண்டை.

----
பத விளக்கம்:
கச்சான் கொட்டை - நிலக்கடலை
கத்தம் - முஸ்லிம்கள் மரணித்த பின் நிகழும் சடங்கு
குறுக்கு - ஒரு பருவம் முட்டையிட்டு அடுத்த பருவம் ஆரம்பமாகும் வரை கழிக்கும் இடைக்காலம்
கொண்டைக்குத்தி - பெண்கள் கொண்டைகளில் இடுக்கும் உபகரணம்

***

1 comment:

 1. கவிதை எப்போதும் மொழியாலான ஒரு செயல். ஆனால், காலங்காலமாக அதை பலவிகளில் புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறோம். ஆழ்மனப் பிரக்ஞ்ஞை, புற உலகின் பிரதிநிதி என நீளும் அறிதல்கள் கவிதையைச் சுற்றி உருவாகிவந்திருக்கிறது. இசை,நடனம்,தத்துவம்,தொழில்நுட்பம், வரலாறு, அறிவியல் என பல வேறு சமூகச் செயல்களொடு இணைந்து கவிதை செயற்பட்டிருக்கிறது. செயற்பட்டுக்கொண்டும் இருக்கிறது.நிலவுகிற சமூகச் சூழலை, கலாச்சாரத்தை பிரதிபலிப்பதும், அவைகளை மீறுவதுமாக கவிதை தன்னை உருப்படுத்திக்காட்டியிருக்கிறது.
  கலாச்சார மற்றும் சமூகத்தின் பொதுமனத்தை பிரதிபலிக்கவும், அதன் அதிகாரங்களைப் பாதுகாக்கவும் கவிதை பின்னிற்க்கவுமில்லை. அது போலு கலாச்சார சமூக பொதுமனத்தை உடைத்துக்கொண்டும் வெளிப்படுபவைகளும் கவிதையாகவும் இலக்கியமாகவும் உலகளவில் பயிலப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது. ஆம், கவிதையும், அடிப்படைவாதமும் இணைகிற இடம்தான் சோலைக்கிளியின் கவிதைச் செயல். இதன் சாட்சியமாக அவரின் பத்திக்கை இருக்கிறது. கவிஞர்களைவிடவும் அவருக்கு ஒழுக்கவாதிகளின் உற்பத்தியே அவசியமாகிப்போய்விடுகிறது. சமூகப் பொதுமனம் விரும்புகிற, கலாச்சாரம் கொண்டாடுகிற ஒழுக்க தன்னிலைகளே அவருக்கு அவசியப்பட்டுப் போகிறது. ஒழுக்கம் ஒழுக்கமின்மை போன்றவை கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதை அவர் ஏற்பதில்லை. அவருடைய 'இருப்பு' பத்திரிகை 3ன்றில் வெளிவந்த ஆசிரியர் உரையை இங்கு இணைத்துவிடுகிறேன். அவர் கவிஞர் இல்லை என்றோ அல்லது சிறந்த கவிதைகள் இல்லை என்றோ நான் வாதிடவில்லை. கவிதையும் அடிப்படைவாதமும் இணைகிற இடம்தான் அவரின் கவிதைச் செயல் என்கிறேன். நவீன கவிதை என்ற ஒரு நிலை உருவானபோது, ஒவ்வொரு கவிஞனுக்குமென்று தனித்தன்மைகள் இருக்க வேண்டும் என்ற பேச்சும் மேலோங்கியது. அது முக்கிய அம்சமாக கவிஞர்கள் மத்தியில் பரப்பப்பட்டது. அதன் நிமித்தமாக சோலைக்கிளியும் தனக்குரிய தனித்தன்மையை உருவாக்கத் தவறவில்லை. ஆசிரியரின் பெரில்லாமல் இருந்தாலும் இது அவரின் கவிதை என அடையாளம் காணக்கூடியவகையில் அமைந்திருக்கும். அவர் தனது கவிதைச் செயலை புதுப்பிக்கவில்லை. தனித்தன்மை என்றளவில் மாறாமலே இருந்துவிட்டார். ஆம், சோலைக்கிளி ஒரு கவிதை எடுத்துரைப்பையே திரும்பத் திரும்ப எழுதி தனது காலத்தை கழித்துவிட்டார். தனது இரண்டாவது கவிதையை அவர் இன்னும் எழுதவில்லை. இதற்கான காரணம் கவிதையின் உலகளாவிய மாற்றம் குறித்த வாசிப்புக்களோ, புரிதல்களோ அவருக்கு இல்லாமல் போனதுதான்.

  இருப்பு -03 சஞ்சிகையின் ஆசிரியர் உரையிலிருந்து....

  அடிப்படை மனித ஒழுக்கங்கூட இல்லாமல் வாழுகின்ற ஒருவனால் படைக்கப்படும் அமரத்துவமான படைப்பு என்று பிறர் கருதும் படைப்புக்களைக்கூட நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை. படைப்பைவிட சுத்தமாக படைப்பாளி இருக்க வேண்டுமென்பதில் பெரும் விருப்பம் கொண்டவர்கள் நாங்கள். ஒழுக்கமில்லாதவர்கள் ஓரங்கட்டப்பட்டு, சமூகம் மதிக்கின்ற நல்ல நெறி பிறழாத படைப்பாளிகள் உருவாக வேண்டுமென்று பிராத்திக்கிறோம். அப்போதுதான், சாதனைகள் ஏதும் செய்யமுடியாமல் போனாலும், இந்த மண்ணைக் கரைசேர்க்கின்ற எதையாவது வெளிக்கொணர முடியும். ஒருவன் படைப்பாளியாக வளருகின்ற அதே சமயத்தில் நாணயமுள்ள ஒழுக்க சீலனாகவும் வேர்விட இருப்பு பணியாற்ற விரும்புகிறது. சாக்கடைக் காற்றில் சந்தனம் கலந்திருந்தாலும் அது நமக்கெதற்கு. நோய் இருக்கும். 2002 ஏப்ரல் ( சோலைக்கிளி - எச்.எம்.பாறூக்)
  எவ்வளவு மோசமான அடிப்படைவாதம் இது. இந்தப் புரிதலும் கவிதையும் கலக்குமிடம்தான் சோலைக்கிளியின் கவிதைச் செயல்.

  ReplyDelete