Saturday, May 19, 2012

சுயவிளம்பரமும் சுந்தர ராமசாமி கடிதமும்

முதலில் வருவது ஹனீபாக்காவின் மெயில். சு.ரா அவர்களின் கடிதத்தை அனுப்பிவிட்டு , இதெல்லாம் கொஞ்சம் சுயவிளம்பரந்தான் என்று சொல்லியிருப்பதை மிகவும் ரசித்தேன். உண்மைதானே? ஆபிதீனின் அரிப்புதான் ஆபிதீன் பக்கங்களாக வருகிறது. இல்லையா? நாகூர் ரூமியை உசுப்பிவிடவும் என்று காக்கா சொல்வது மட்டும் சரியாகப்படவில்லை. நண்பர் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வார் ! - ஆபிதீன்

***


அன்புள்ள ஆபிதீன்,

ஒரு காலத்தில் கடிதம் எழுதுவதென்றால் அதப்போல், அதற்கு நிகரான சுகமில்லையே. இன்று யாரும் கைபட எழுதுவதில்லை. தபால்காரன் கடிதங்கள் பட்டுவாடா செய்வதில்லை. கரண்ட் பில், தண்ணீர் பில், டெலிபோன் பில் என்றுதான் வீடுகளில் வீசிவிட்டுப் போகிறார்கள். தபால்காரர் குடும்பத்தில் ஓர் உறவுக்காரர் போல் வாழ்ந்த அந்தக் காலம் இனிமேல் ஒருபோதும் திரும்பாது. போனது போனதுதான். ஆனாலும் எங்களைப் போன்றவர்களின் (அந்தக்காலம்) பேச்சு மட்டும் குறையாது.

எழுபதுகளில் தீபம் இதழில் ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் கடிதங்களுக்கென்றே ஊஞ்சல் என்றொரு பகுதியை ஆரம்பித்திருந்தார். அதில்தான் நான் முதன் முதல் அற்புதமான கடிதங்களைப் படித்தேன். கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, மௌனி, தி.ஜ.ரா, நா.பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், தி.க. சிவசங்கரன், டி.கே.சி என்று பலரும் எழுதினார்கள்.

பின்னாளில் புதுமைப்பித்தனின் கண்மணி கமலாவுக்கு, வண்ணதாசனின் அனைவருக்கும் அன்புடன், கி.ராவின் கடிதங்கள், கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள் என்று ஒரு பரந்து பட்ட கடிதங்களை படிக்கும் பாக்கியம் நம் எல்லோருக்கும் கிட்டியது.

மெய்தான், சென்ற வருடம் ஜெயமோகனுக்கு நானெழுதிய இரண்டு கடிதங்களை அவருடைய பக்கங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். படித்ததுண்டா ஆபிதீன்?

ஆபிதீன் பக்கங்களில் நாமெல்லோரும் ஆளுக்கொரு கடிதம் எழுதினால் எப்படியிருக்கும்! தம்பி தாஜ் ஆரம்பித்து வையேன். நாகூர் ரூமியையும் உசுப்பி விடுங்கள்.

இத்துடன் சு.ரா. எனக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றை மட்டும் அனுப்பி வைக்கிறேன். சு.ரா. டைப் செய்து வான் கடிதமாக அனுப்பியது. அதை உங்களுக்கு நாங்கள் டைப் செய்து அனுப்புகிறோம். இதெல்லாம் கொஞ்சம் சுயவிளம்பரந்தான்.

மெய்தான், எங்களூரில் வெய்யில் நெருப்பாகக் கொட்டுகிறது. அப்படியென்றால் துபாய் எப்படியிருக்கும்? நாகூர் எப்படியிருக்கும்? காலையில் எட்டு மணிக்குப் பிறகு வெளியே செல்ல முடியாது. உண்மையாகவே ஓசோன் படலத்தை பொத்துக் கொண்டு சூரியன் தலைக்குள் வந்து விட்டான் போல் உடலெல்லாம் பதபதைக்கிறது. இதற்குள் இலக்கியம்! இதெல்லாம் தேவைதானா ஆபிதீன்? உன்னுடைய அஸ்மா என்ன சொல்கிறா?

அன்புடன் ஹனீபா காக்கா. | slmhanifa22@gmail.com


***


சுந்தர ராமசாமி
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் 629001

அன்புள்ள ஹனீபா அவர்களுக்கு,
வணக்கம்,

உங்கள் 08.02.02. கடிதம் கிடைத்தது. உங்கள் கடிதம் கிடைத்ததும் எப்போதும் எனக்குள் ஏற்படும் அதிகப்படியான சந்தோஷம் இப்போதும் ஏற்பட்டது.

வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் எனக்கு மிகுந்த சங்கடத்தைத் தந்தன. சிலர் வாழ்க்கையில் பிறரை நம்பி இழந்து கொண்டேயிருக்கிறார்கள். மகா கெட்டிக்காரர்களாகவும் சிலர் இருக்கிறார்கள். நாம் முதல் ரகம் போலிருக்கும். என்னைப் பற்றியும் மிகவும் கவனமும் எச்சரிக்கையும் கொண்டவன் என்று ஒரு பெயருண்டு. அதனால் என் இழப்புகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு நிலைக்கு நான் ஆளானதுதான் மிச்சம். பிறரை நம்பி எவ்வளவோ பணத்தை இழந்திருக்கிறேன். தொலைந்து போகட்டும். குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவனாகவும் முதுமையில் முன்னெப்போதுமில்லாத சுறுசுறுப்போடு எழுதி வருபவனாகவும், இருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். மனிதன் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வருபவன் என்று சொல்வது பெரிதும் யதார்த்தத்திற்குப் பொருந்தி வராத விஷயமாகவே இருக்கிறது.

நீங்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நடந்து விட்டதை வருந்திக் கொண்டிருப்பதில் எவ்வித இலாபமுமில்லை என்பது நீங்கள் அறியாததல்ல. இனியும் எல்லாக் காரியங்களும் உங்களுக்குச் சரிவர நடக்கும். இப்படி என் மனதுக்குத் தோன்றுகிறது.

எனக்கு வணிகர் உலகமும், எழுத்தாளர் உலகமும் நன்றாகவே தெரியும். எழுத்தாளர்கள், வணிகர்களை விட கீழானவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் என் பொது அனுபவம். எங்கள் அருமைத் தமிழ்நாட்டில் அப்படி. தமிழீழத்தில் எப்படியோ? அங்கு தமிழர்களுக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் அன்றாட வாழ்க்கை சார்ந்த கஷ்டங்களும் நினைத்துப் பார்க்குமளவுக்குப் பயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற நெருக்கடி இங்கு ஏற்பட்டால், நாங்கள் எல்லோரும் மன நோயாளியாகவோ தற்கொலை செய்து கொள்பவராகவோ ஆகியிருப்போம் என்று நினைக்கிறேன்.

மௌனி பற்றிய கருத்தரங்கு மிக நன்றாக நடந்தது. அக்கருத்தரங்குக் கட்டுரைகளை கண்ணன் கணையாழிக்கு (பிப் 02) அளித்துப் பெரும்பான்மையானவை பிரசுரமாகியிருக்கின்றன. கணையாழியை நீங்கள் பார்த்தீர்களா? இல்லையென்றால் எழுதுங்கள். அனுப்பி வைக்க முயல்கிறேன். இப்போதைக்கு மௌனி பற்றி நூல் எதுவும் வரவிருப்பதாகத் தெரியவில்லை.

வெவ்வேறு எழுத்தாளர்களுடனான என் அனுபவங்களை நான் சொல்ல அவற்றை ஒரு எழுத்தாளர் நாடாவில் பதிவு செய்து கொண்டு வருகிறார். சுமார் பதினைந்து எழுத்தாளர்கள் பற்றி இதுவரையிலும் சொல்லி முடித்திருக்கிறேன். இவற்றை ஒன்றாகவோ அல்லது சிறு புத்தகங்களாகவோ கொண்டு வர வேண்டும் என்ற யோசனை கண்ணனுக்கு இருக்கிறது. ஆனால் நாடாவிலிருந்து எழுத்துப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துவது கடுமையான வேலை. ஒரு சிலருக்கு இந்த நூலைப் படிப்பது ஒரு தனியான மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். அந்தப் பட்டியலில் உங்கள் பெயரும் என் மனதில் இருக்கிறது.

உமா வரதராஜன் எப்படியிருக்கிறார்? அவருடைய மௌனம் இன்னும் எத்தனை யுகங்களுக்குத் தொடரும்? பௌசர் அவ்வப்போது தமிழகம் வருவதாக அறிந்தேன். நான் நாகர்கோவிலில் இருப்பதால் சென்னை வருகிறவர்களைச் சந்தித்துக் கொள்வது சுலபமாக இல்லை.

அடிக்கடி கடிதம் எழுதுங்கள்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்
சு.ரா.

***
நன்றி : ஹனீபாக்கா
***
Image Courtesy : Artist Rajasekharan

4 comments:

 1. ஹனிபாக்கா...
  இலக்கியம் சார்ந்தும்/ சாராமலும்
  இலக்கிய நண்பர்களுக்கும்
  அப்படி இல்லாதவர்களுக்கும்
  நிறைய கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.
  நான் கடிதம் எழுதி
  அதற்கு பதில் எழுதாதவர்களுக்கு
  கடுமையான கடிதங்கயும் கலையாய்
  எழுதி இருக்கிறேன்.
  எனெனில் கடிதம் எழுதுவது
  எனக்கு அத்தனைக்கு இஸ்டம்.

  குறிப்பாய்...
  ஆபிதீன் பக்கங்களில்
  தலை ஆபிதீனுக்கு எழுதிய
  என் கடிதங்கள் ஒரு பாடுக்கு உண்டு.
  *
  போகட்டும்...
  கீழே
  இக் கவிதை மொழியைப் பாருங்கள்.
  நன்றி.

  அன்புடன்
  ---------------

  - தாஜ்


  உயிர்
  தறித்தவர்களுக்கு
  சுவாசமட்டுமல்ல
  தேவைகளின் தொடர் நீளம்.
  இன்றைய கணக்கில்
  நித்தம் உயிர் பேணும்
  உன் கடிதமும் இல்லை.
  நாம் அறியா நொடிகளில்
  கூறுகளின் வழியே
  பொசுக்கும் உஷ்ணம்
  இருத்தலுக்கோர் சோதனை.
  காலமும்
  கால்பட்ட நிலமும் அப்படி!
  கொண்ட சூட்டிற்கு
  களிம்பிட்டுக் கொள்ளும்
  விசனத்தில்
  தவறவிட்ட நட்சத்திரச்
  சங்கதிகள் ஏராளாம்.
  உன்னில்... எனக்கான
  கடிதங்களையும் சேர்த்து.
  என் யூகங்கள்
  பொய்க்குமெனில் உன்
  பொதுப்பார்வைக்கு நான்
  நகர்த்தப் பட்டிருக்கக்கூடும்
  உடைந்த சிற்பமாய்
  வற்றிய நதியாய்
  காய்ந்த மரமாய்
  அல்லது....
  இன்னொருவன் என்கிற
  ஸ்தானம் கொண்டிருக்கும்!

  தவிர,
  கடிதமெழுதும் மொழி
  உனக்கு மறந்துவிட்டதென
  நினைக்கவும்
  சாத்தியமும் ஏது?

  ***

  ReplyDelete
 2. ஹனிபாக்கா சு.ரா.விற்கு இவ்வளவு நெருக்கமானவர் என்பது மிகவும் சந்தோசத்தையளிக்கிறது.

  ReplyDelete
 3. ஹனிபாக்காவின் இந்தக் கடிதமும் சு.ரா. கடிதமும் கடிதம் எழுதுவதின் ஆத்ம திருப்தியை வெளிப்படுத்துகின்றன. எனினும் எல்லோருக்கும் அது எளிதல்ல. தாஜுக்கு கடிதமோ பதிலோ எழுதாமல் அவரிடம் பாட்டு வாங்கிய பார்ட்டிகளில் நானும் அடக்கம்; தாஜ் கவிதைகளை வேண்டுமானால் ஆபிதீன் வெடைப்பார்; அவரது கடிதங்களை வெடைக்கமாட்டார். அத்தனைக்கு அழகு தாஜ் எழுதும் கடிதங்கள்.(இப்ப என்னை வெடைச்சுராதீங்க நானா...)

  ReplyDelete
 4. ரொம்ப நாள் கழிச்சு இங்கிட்டு வந்து,

  //நாகூர் ரூமியை உசுப்பிவிடவும் என்று காக்கா சொல்வது மட்டும் சரியாகப்படவில்லை. நண்பர் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வார்//

  னு படிச்சப்பறம் பாக்கி வச்சிருந்த சிரிப்பெல்லாம் வெளிப்பட்டுச்சு.

  அப்பறம், அந்த சு.ரா. படம்: இத்தனை இயற்கையான, உணர்ச்சிகளுடனான பெய்ண்ட்டிங் அடிக்கடி காணக்கிடைப்பதில்லை. ஆர்ட்டிஸ்ட் ராஜசேகர் யார்னு இதுவரைக்கும் தெரியாது. ஆனா, தெரிஞ்சுக்கணும்

  ReplyDelete