Thursday, May 31, 2012

சோலைக்கிளி​யின் கவிதைகளும் பத்தியும்


புகைப்பட விபரம்:
அடையாளம் சாதிக், தோப்பில் முகமது மீரான், சோலைக்கிளி, அவர்தம் மனைவி, மகன்

***

ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம் அவருடைய முழுக் கவிதைகளிலிருந்தும் 271 கவிதைகளை "அவணம்" எனும் பெயரில் செம்பதிப்பாகக் கொண்டு வந்தது. அந்தத் தொகுதியிலிருந்து நான்கே நான்கு கவிதைகளை மட்டும் ஆபிதீன் பக்கங்களுக்காக அனுப்பி வைக்கிறோம்.  - எஸ்.எல்.எம்.ஹனீபா

***



தொப்பி சப்பாத்துச் சிசு
தொப்பி,
காற்சட்டை, சப்பாத்து,
இடுப்பில் ஒரு கத்தி,
மீசை
அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து
குதிக்கின்ற ஒரு காலம் வரும்
அந்த
தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்
பயிர்பச்சை கூட இப்படியாய் இருகாது
எல்லாம்
தருணத்தில் ஒத்தோடும்
சோளம் மீசையுடன் நிற்காது
மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற
துவக்கை ஓலைக்குள் மறைத்து வைத்து  ஈனும்
வெள்ளை சிவப்பு
இளநீலம் மஞ்சள்
என்று கண்ணுக்கு குளிர்த்தியினைத் தருகின்ற
பூமரங்கள் கூட
சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை
அரும்பி அரும்பி
வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்
குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்
இளநீர் எதற்கு
மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற
தலைமுறைக்குள் சீவிக்கும்
கொய்யா முள்ளாத்தை
எலுமிச்சை அத்தனையும்
நீருறிஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக் காய்
இரத்தம் உறிஞ்சும் அந்நேரம் காய்க்காது
வற்றாளைக் கொடி நட்டால்
அதில் விளையும் நிலக் கண்ணி
வெண்டி வரைப்பீக்கை
நிலக்கடலை தக்காளி
எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்
முகர்ந்தால் இறக்கும்
நச்சுப் பொருளாக
எடுத்தால் அதிரும்
தெருக்குண்டு வடிவாக
உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழிநடத்த
உள்ளியும் உலுவா1 வும் சமைத்துண்டு ருசி பார்க்கும்
மனிதர் எவரிருப்பர்
கடுகு பொரித்த வாசந்தான் கிளம்புதற்கும்
ஆட்கள் அன்றிருக்கார்
இவர்கள்
பொக்கணிக்கொடி2 யோடு பிறந்த ஒருவகைப்
புராதன மனிதர்களாய் போவர்.
-----
20.10.1986
1. உலுவா - வெந்தயம்
2. பொக்கணிக்கொடி - தொப்புள் கொடி

-----------------------------------------

எட்டாவது நரகம்

நீ நரகத்தைப் பற்றியா அச்சப்படுகிறாய்
அது இலகுவானது
அங்கே மலைப்பாம்புகள் ஆயிரம் இருந்தாலும்
அஞ்சத் தேவையில்லை அதைப் பற்றி
வேதம் சொல்வதைப் போல
சீழிலாலான ஆறுகளும்
செந்தீயில் காய்ச்சிய ஈயக் குழம்புகளும்
பாவாத்மாக்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கலாம்
செவிட்டு மாலிக் அதன்
அதிபதியாகி
பல நூறு தடவைகளுக்கு ஒரு தடவை
'பேசாமல் கிடவுங்கள்' என்று
கட்டளை இடலாம்
அழுகுரல்கள்
சொர்க்கத்திலுள்ளோரை  சிரமத்திற்குள்ளாக்கி
அவர்களின் கோபத்தையும்
சாபத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம்
நீ நரகத்தைப் பற்றியா அச்சப்படுகிறாய்
நான் அதைப் பற்றி நினைத்ததே கிடையாது
ஏழு நரகங்கள் உண்டென்று சொல்வார்கள்
நாம் கொடுமைகள் நிறைந்த
ஏழாவது நரகந்தான் சென்றாலும்
பின்னொரு நாளில் மன்னிப்புக் கிடைக்குமாம்
நான் நினைப்பதும்
ஒரு பொட்டுப் பூச்சியைப் போல் பயந்து சாவதும்
மன்னிப்பே கிடைக்காத எட்டாவது நரகமாம்
இந்த உலகத்தைப் பற்றித்தான்.
13.06.1985
--------------------------------------

எனது இனத்துப் பேனையால் அழுதது

நிலவுக்கு வேலியிடு
சூரியனையும் பங்குபோட்டுப் பகிர்ந்து கொள்
வெள்ளிகளை எண்ணு
இன விகிதாராசப்படி பிரி
நாகரிக யுகத்து மனிதர்கள் நாம்
கடலை அளந்து எடு
வானத்தைப் பிளந்து துண்டாடு
சமயம் வந்தால்
காற்றைக் கடத்து
அல்லது
சூறாவளியைக் கொண்டு சகோதர இனத்தை அழி
அங்கே
செவ்வாய்க் கிரகத்தில் நம்மிலொருவன் இறங்கட்டும்
எறும்புக்கும் இன முத்திரையிடு
மரத்திற்குக் கூட
சாதி சமயத்தைப் புகட்டு
புறா முக்கட்டும்
இன்னொரு யுகத்தை இனத்தை நகைத்து
பல்லியும் பூச்சியும் நத்தையும் தவளையும்
கத்தும் ஒலியிலெல்லாம் பேதங்கள் தொனிக்கட்டும்
வா
வா
வண்ணத்துப்பூச்சியே
இது உன்னுடைய இனத்து மலர்தான் நுகர்
பாவம்
மனிதன் பிரிந்த விதம்
நான்கூட இந்தக் கவிதை எழுதுகையில்
ஒரு பேனை மறுத்தது
"உனது இனத்துப் பொருளல்ல" நானென்று
ஓ... அது வேறு இனத்துப் பேனை
26.11.1989
----------------------------------------------------

பாரதியும் நானும் சாப்பிட்ட இரவு

பாரதி முட்டை உண்பதில்லை
அதற்குப் பதிலாகத்தான் அவன்
உலகத்தை விழுங்கினான்
நான் அவனோடு நேற்றிரவு
மிகவும் பசியென்றான்
பாத்திரத்தைச் சேர்த்து உண்டான்
நிலவை அவன்
உடைத்து நசித்துப் பிசைந்து உண்ட விதம்
எனக்கு வியப்பாக இருந்தது
கடலைச் சிறு கோப்பைக்குள் நிறைத்தெடுத்தான்
உண்டு உண்டே அவன் அதனைக் குடித்து முடிக்கையில்
சமுத்திரத்தில் நீந்திக் கொண்டிருந்த
கப்பல்களும் அவன் வயிற்றுள் சமித்தன
எனக்கும் நல்ல பசிதான்
நான் வானத்தைப் பிடித்து விழுங்கினேன்
இன்று விடிய அதன் வயிற்றுள் இருந்த சூரியன் எனது
தொண்டையில் சிக்கிக் குத்தியது
பாரதி விழுந்து விழுந்து சிரித்தான்
நட்சத்திரங்களை மிட்டாய் போல் உணவியபடி பலமாய்
பாரதியின் மீசையிலிருந்து இப்போதும் தேன்வடிவதனை
அந்த இரவு வேளையிலும் நான் கண்டேன்
காற்று வழக்கம் போல் இப்போதும் அவனின்
குதிகாலைத் தடவி
பிடறியை முகர்ந்து
வாசத்தையும் இனிப்பையும் பெற்றுக் கொண்டுதான்
காதலர்களைத் தாலாட்டப் போகிறது
நானும் பாரதியும் பூக்களைப் பற்றிப்
பேசிக் கொண்டே சாப்பிட்டோம்
கண்ணம்மாவைப் பற்றிய கதையும் வந்தது
வயது போனாலும் கண்ணம்மா இப்போதும்
அதே இளமை குளுகுளுப்பு என்றான்
நம்மூர் பெண்களது நலத்தை அவன் அக்கறையாய்
என்னிடத்தில்
துருவி விசாரித்தான்
ஆண்களை தோளில் சுமந்தபடி இருந்தாலும் பாதகமில்லை
பார்த்துக் கொண்டிருக்கலாம்
இங்கு நடப்பதோ
மிகக் கொடுமை
பெண் குடித்து அவள் வயிற்றுள்ளிருக்கின்ற நீரில்தான்
ஆண் குளிக்கின்றான்
பெண்ணின் வாய்க்குள்ளால் தன் குதிகாலை விட்டே
கால் கழுவுகின்றான்
என்றெல்லாம்
நான் சொன்னேன்
உண்ட இடத்திலேயே வெடித்தான் பாரதி
எனது வீடு முழுக்க
அவனது கவிதைகள்
சிதறித் தெறித்தன
போத்தல் உடைந்து தேன் வழியும் விதம் போல
அவனிலிருந்து
கவிதைகள் ஒழுகின
நான் கையைக் கொடுத்து நாக்கில்
தொட்டு வைத்தது கூட
மறக்க முடியாத இனிப்பாய்
இருந்தது
தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உயிர்த்து உயிர்த்து
நாங்கள் சாப்பிட்ட இடமெல்லாம்
பாரதியை வணங்க வந்தன
ஏதோ ஓர் எழுத்து என்னை வந்து
தொடையில் குத்தியது
பாரதியை நான் உடைத்த ஆத்திரத்தில்
இரட்டைக் கொம்பை நீட்டியபடி
28.08.1992

***


சென்ற நவம்பரில் காலச்சுவடு பதிப்பகம் சோலைக்கிளியின் "பொன்னாலே புழுதி பறந்த பூமி" எனும் பத்தி எழுத்துக்களின் முதலாவது தொகுப்பொன்றை நூலாகக் கொண்டு வந்தது. இதுவரை காலமும் எம்மால் கவிஞனாக அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னுமொரு பரிமாணம் அவருடைய இந்த எழுத்துக்கள்.

நூலில் என்னுரையாக அவர் குறிப்பிடும் ஒரு பத்தி நம் கவனத்திற்குரியது. "ஒருவனின் நினைவு ஒருவனுக்குப் புதிது. மற்றவனின் நினைவு அடுத்தவனுக்கு ஆனந்தம். இப்படி நினைவுகளை மாறி மாறி பகிருகின்ற போதுதான் மனிதன் தங்களுக்குள்ளான இணக்கத்தைப் பேணி, ஒருவனிலிருந்து ஒருவன் வெளிக்கிறான். ஒருவனின் நினைவை ஒருவன் உண்ணும் போது நினைவுகள் விருந்தாகின்றன". அவருடைய வார்த்தைகள் நூலைப் படித்து முடித்ததும் சத்தியமாகிறது.

இங்கே முதற் பாகம் முப்பது அத்தியாயங்களாக நூலுருப் பெற்றிருக்கிறது. அவற்றிலிருந்து "என் தொண்டைக்குள் அவள் கொண்டை மயிர்" எனும் பத்தியை ஆபிதீன் பக்கங்களுக்காக பதிவேற்றம் செய்யும் இந்தத் தருணத்தில், இந்த நூலுக்கு ஒரு சிறு குறிப்பை எமது ஆத்மார்த்த கலைஞன் உமா வரதராஜன் அவர்கள் எழுதியுள்ளார். அந்தக் குறிப்பின் ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமான காவியத்தைக் கேட்பது போன்ற மெய்சிலிர்ப்பையும் பூரிப்பையும் நம் மனத்தில் ஏற்றி வைக்கிறது. ஒரு ஐம்பது ஆண்டு கால வாசிப்பு அனுபவத்தில், ஒரு நூலுக்கான முன்னுரையாக ஒரு குறிப்பு என்ற மகுடத்தில் ஒரு சிறிய பத்தி இடம்பெற்றிருப்பது தமிழில் ஒரு புதிய கண் திறப்பாகும். இதோ அந்தக் குறிப்பு:

சோலைக்கிளியும் நானும் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தில் நெய்தலுக்கும் மருதத்துக்கும் நடுவிலமைந்த இரு வேறு கிராமங்களில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எங்களிருவரின் ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர்கள் இருக்கலாம். நாங்கள் பிறந்த இரண்டு இனங்களும் அவ்வப்போது உன்மத்தம் கொண்ட யானைகள் போல் மோதிக்கொள்ளும் காலங்களில் கூட, அவற்றின் தூண்களையொத்த கால்களுக்குள்ளால் இரு முயல்களாக எப்படியோ நுழைந்து எல்லையோரம் வரை துள்ளித் துள்ளி, வந்து சந்தித்துப் பிரிவது வழக்கம். எங்கள் கிராமங்களின் தோற்றங்கள் இன்றைக்கு மாறிய போதிலும் குரங்குப் பிடியுடன் எமது மண்ணையும் ஞாபகங்களையும் இறுகப் பற்றிக் கொண்டு கிடக்கிறோம்.

எங்கள் ஆறுகளின் நீர்ப்பரப்பை சல்வீனியா மூடாத, எங்கள் சமுத்திரங்களின் கடல்களில் சடலங்கள் ஒதுங்காத, எங்கள் பூரண நிலவை கருமுகில்கள் திரைபோடாத, காலமொன்று இருந்தது. "எங்கள் பூமியில் பொன்னாலே புழுதி பறந்த அந்தக் காலத்திற்கு" என் நண்பன் சோலைக்கிளி வசியம் செய்து அழைத்துச் செல்கிறான். அவனுடைய பால்ய கால ஞாபகங்கள் இந்நூலில் பொங்கி வழிகின்றன. இதில் தென்படும் காற்று மண்டலத்தில் என் மூச்சுக்களும், சமுத்திரக் கரையினில் என் காலடிகளும், கல்யாணிப் பத்தைகளில் என் வண்ணத்துப்பூச்சிகளும், திரையரங்குகளின் சுவர்கள் நடுவே என் கரகோஷங்களும் விசிலடிப்புகளும் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. ஒரு குடையின் கீழே ஒட்டிய படி நடந்து எங்கள் வானத்தின் பரிசுகளான வெயிலின் வெம்மையில் வாடியும் மழையில் நனைந்தும் பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இந்தப் பிரதேசத்தின் வாழ்வையும் மனித நடத்தையையும் கிராமிய மணங்கமழ அவன் விபரித்துச் செல்லும் பாங்கை ஒரு சிறுவனாக மாறி வியந்து பார்க்கின்றேன். இந்த மண்ணைத் தோண்டி, புதையல்களை வெளிக்கொணரும் வித்தையை அவன் எங்கே கற்றான் எனப் புரியவில்லை. கவிஞனாக மட்டும் இதுவரை அறியப்பட்ட அவனது படைப்பாற்றலின் மற்றொரு பரிணாமம் அது.

தேர்ந்த பாடகன் ஒருவனின் ஆதங்கம் நிறைந்த பெருமூச்சுக் கூட சங்கீதந்தான். சோலைக்கிளியும் கைதேர்ந்த ஒரு கலைஞன்தான்.

கல்முனை
அக்டோபர், 2011

***



என் தொண்டைக்குள் அவள் கொண்டை மயிர்

எழுத்தாளனும் பைத்தியக்காரனும் ஒன்று, மனதில் பட்டவைகளை விளாசித் தள்ளுவதில் என்று கூறியிருக்கிறேன். இதை இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், பைத்தியக்காரன் எழுத்தாளனாகி விடுவான். அப்படிச் சில பைத்தியக்காரன் எழுத்தாளனாகி, ஏளனமாகிப் போன கதை ஊரிலுண்டு. இன்னும் சிலர் இந்த நிலையை அடைந்து விடக் கூடாது என்பதற்காக.

சந்தர்ப்பங்களில் எழுத்தாளன் பைத்தியக்காரன். அதாவது, விசயங்களைப் பிட்டு வைப்பதில், வெட்கம் பாராது. மற்றப்படிக்கு எழுத்தாளன் எழுத்தாளன்தான். ஒரு பைத்தியக்காரனால் எழுத்தாளனாகி விட முடியாது.
கப்பல் பார்க்க வந்த "சில்லெனப்பாஞ்சான்" அங்கு நின்ற என்னையும் அழைத்துக் கச்சான்கொட்டைகள் தந்தாள். தரும் போது பார்த்தேன், அவள் உள்ளங்கை நிறைய மருதோன்றிப் பூக்கள், பளிங்குப் பீங்கானில் இருந்தது மாதிரி.

ராசாவுக்குக் காய்ச்சிய பாலென்றாலும் பூனை குடிக்காமல் விடாது என்பதைப் போல, யார் நாட்டிய கம்பு என்றாலும் அதில் காகம் குந்திக் கத்தாமலும் விடாது என்பதும் மெய்தான்.

அந்தக் கப்பலின் கொம்புகளிலெல்லாம் கடற் பறவைகளோடு காகங்களும் குந்தியிருந்து கலந்து கத்தின. இது காகத்தின் அடிப்படைக் குணம். எதற்குள்ளும் போய்த் தானும் கலப்பது. நமக்குள்ளும் இப்போது எத்தனை காகங்கள் கலந்திருக்கின்றன!

காகங்கள் கத்தின என்பதை விட, "கத்தம்" ஓதின என்பதுதான் பொருத்தம். காகங்கள் சாகாத மனிதனையும் அவன் செத்தவன் போல் கத்தம் ஓதி, அவனை நிஜமாகவே பிணமாக்கி விடும் வல்லமையுள்ளன. எத்தனை மனிதன் இங்கு காகங்களால் பிணமாகி விட்டான்!

நான் தொழில் செய்கின்ற காரியாலயத்தில் கூட எனது மேலதிகாரியைச் சுற்றி எத்தனை காகங்கள்!

இந்தக் கப்பலுக்கு கத்தம் ஓத யாரும் மாடு அறுப்பார்களா என்று கேட்பதைப் போல, எங்கள் தலைகளுக்கு மேலால் காகங்கள் பறந்தன.

கத்தம் ஓதுவதற்கு எங்களூரில் வசதி படைத்தவர்கள் மாடு அறுப்பார்கள். அதன் இரத்தத்தையும் கழிவுகளையும் இந்தக் காகங்கள்தான் தின்பன.

காகத்தின் கத்தலுக்கு காது கொடுப்பதற்கு அப்போது ஊரில் இரண்டு வகையினர்தான் இருந்தார்கள். ஒன்று காதலில் கட்டுண்டு தன் சோடியைத் தேடிக் கொண்டிருக்கும் ஒற்றைக் குருவியினர். மற்றது கணவனைத் தொழிலுக்கு அனுப்பி விட்டு அவன் எப்போது திரும்பி வருவான் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் உத்தமிகள். மற்றப்படிக்கு நானறிந்த வரை, வேறு யாருமில்லை. காகம் அப்போது ஓர் உதவாப்பறவை.

இப்போது காகத்தின் மகத்துவமே வேறு. அரச வாகனவே இன்று காகந்தான். ஏன் அரச முடியும் அதற்குண்டு.

காகம் எங்களை ஆட்சி செய்கின்றது. இந்தப் பூமியை சுழற்றுவது காகந்தான் என்கின்ற காலமில்லையா இது! காகந்தான் இப்போது வண்ணங்களாய்ப் பறப்பது உங்கள் கண்களுக்குத் தெரிகிறதுதானே. நம்மைக் கண்டு காகம் எழும்பிப் பறந்த காலம் போய்விட்டது. காகத்தைக் கண்டு நாம் எழும்பி நிற்காமலா இப்போது இருக்கின்றோம்!

காகத்தின் பாசையில் சொன்னால், மெய்தான், அதற்குப் பாசையே இல்லையே.

பாசை இல்லாமலே நம்மை ஆளுகின்ற ஒரு பறவை காகம். ஒரு குயில் பிடிப்பதற்குக் கூட காகத்தின் மாளிகைக்குள் இப்போது யாராலும் நுழைய முடியுமா? காகங்கள் அங்கு மெத்தையில் உறங்குகின்றன.

இந்தக் கப்பலப் பார்க்க எங்களூருக்குப் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்த வண்ணமிருந்தனர். வருடா வருடம் எங்களூரில் இருக்கின்ற கொடியேற்றப் பள்ளிக்கு வருவதைப் போன்று. வந்தவர்கள் உண்ணப் பருகவென்று பல தற்காலிகக் குட்டிக்கடைகளும் கொடியேற்றப்பள் பள்ளியில் முளைத்திருப்பதைப் போல எழும்பியிருந்தன. கொடியேற்றப் பள்ளியைப் போலப் பல தட்டு "மினறாவில்" கொடி பறக்கவில்லை. அவ்வளவுதான் இதற்கும் அதற்குமான வேறுபாடாக இருந்தது.

இந்த உலகத்தில் இன்னும் உருவத்தால் வளராமல் இருக்கின்ற வியாபாரி கச்சான் கொட்டை விற்கும் பையன்கள்தான்! அன்றும் சின்னச் சின்ன பையன்கள் கச்சான் கொட்டை விற்றுக் கொண்டிருந்தார்கள். இன்றும் அதே அளவான பையன்கள்தான் விற்கிறார்கள்.

காற்று வாங்குபவனுக்கு வாய்க்குள் போடக் கச்சான் கொட்டையை விட்டால் வேறு அமிர்தம் கிடையாது என்பது போல. கப்பல் பார்க்க வந்தவருக்கும் அதை விட்டால் வேற திரவியங்கள் இல்லாமல்தான் இருந்தது.

எங்களூர்க் கடல் குடாக்கடல் என்கிறார்கள். இதனால்தான் இங்கு மீன்பிடியும் அதிகமாம். இருந்தாலும் மீன் மலியவில்லையே எங்கள் ஊரில்! அது குளிர் அறைகளுள்ள வாகனங்களில் ஏறிப் படுத்துறங்கி "பில்கிளிண்டனையும்" "மார்கிரட் தட்சரையும்" சந்தித்துக் கை குலுக்கிவரப் பயணம் செய்யத் தொடங்கிவிட்டது.

அத்தோடு எங்களூர்க் கடலுள் பெரியமலைகளைப் போன்று பாறைகள் கிடப்பதாக அறிய முடிகிறது. இவ்வாறு பாரிய பாறைகள் இருப்பதால்தான் சங்குச்சொண்டன், கலவா, விளல் என்று "கல்மீன்கள்" இங்கு அதிகமாகப்படுகிறதாம். கல்லில்தான் பாசி இருக்கும். பாசிதான் கல்மீன்களுக்கு புரியாணி!

எனக்குக் கடல்மீனில் விருப்பமான மீன் "சங்குச் சொண்டன்தான்" சமைத்தாலும் அதில் வீசும் பாசி மணம் எனக்குப் பிடிக்கும்.

என் சின்ன வயதில் தெருக்களில் உள்ள பழைய மதில்களில் படிந்திருக்கும் பாசிகளைப் பார்த்து நான் மகிழ்ந்திருக்கிறேன். பெரியவனானதும் இப்படியரு மதில்கட்டி, அது முழுக்க இப்படிப் பாசியை வளர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பிற்காலத்தில் பாசி வளர்த்தேனா! ஒரு பப்பாசியைக் கூட வளர்ப்பதற்கு முடியாமல் போனது.

ஆம், சுனாமிக்கு முன்பு எனது வளவில் இரண்டு பப்பாசி மரங்கள் குமர் நிலையில் இருந்தன. கன்னிப்பருவத்தில் பெண் மாத்திரமல்ல, "கள்ளியும்" அழகுதான். காலையில் எழுந்ததஉம் நான் அவற்றைத்தான் அண்ணாந்து பார்ப்பேன். சுனாமி வந்து என் வளவில் தண்ணீர் கசிகசித்ததால் அந்தப் பப்பாசிகளும் மாண்டன. ஓர் இரட்டை மரணம் என் வளவிலும் நடந்தது.

பாசிகளில் படுத்துறங்கிக் கனவு காண எனக்கு இப்போதும் பெரிய ஆசை இருக்கிறது. வண்ணத்துப் பூச்சிகள் கொடுத்து வைத்தவைகள். பாசிகளை எப்போதும் முகர்ந்த படியே இருக்கின்றனவே!

கனவு என்று சொன்ன போதுதான் எனக்குள் குறுக்குத் தெளிந்து ஓடிவரும் கோழியைப் போல இன்னுமொன்றும் என் நினைவிற்கு வருகிறது.

எனது தாயின் தகப்பனான மூத்தவாப்பா எனக்குப் பல பேய்க்கதைகளைச் சொல்லியிருக்கிறார்.

அவர் வயலுக்குப் போகும் போது முளைவண்டியின் வாலில் ஏறி இருந்து பேய் பாட்டுப்பாடிய கதை.

கூட்டாளியின் கலியாணத்திற்குப் போய்வரும் போது முச்சந்தியில் மரம் விழுந்து கிடந்த கதை.

அவரைப் பேர் சொல்லி அழைத்த பேய்க்கு அவர் பயந்து நடுங்காமல் தன் உடுமானத்தை உயர்த்திக் காட்டி அதை வெட்கித்து ஓடச் செய்த சம்பவம் என்று, எத்தனையோ கதைகள், அதைப்போல -

அவர் கண்ட கனவுகளையும் என்னிட் சொல்லி வைத்ததால்தான் இன்று நான் காணும் கனவுகளின் பலத்தையும் பலவீனத்தையும் என்னால், பிரித்துப் பார்த்து உணர முடிகிறது.

அவர் கண்ட கனவுகளில் ஒன்றை இங்குச் சொல்லலாம். கொஞ்சம் சுணங்கிப் போனால் பத்திக்கை பிடித்து நினை விறைக்கும் கை என்ன சிவந்தா போகப் போகிறது.

ஒரு கொசுவாம். அது பறக்கின்ற கப்பலாகியதாம். அதில் எனது மூத்தவாப்பா எறிப் போய் ஒரு பலாமரத்தில் நின்றாராம். அந்த மரத்தில் இரண்டு பலாப்பழங்களாம். அதில் ஒன்று பழுத்து மணத்ததால், அதை அவர் கையில் பிடிக்க, உள்ளே இருந்த கொட்டைகள் உதிர்ந்து மணலாகி, ஒரு கடற்கரையானதாம். அந்தக் கடற்கரையில் ஒர உதோணியாக மூத்தம்மாவின், "கொண்டைக்குத்தி" மீன் பிடித்துக் கொட்டிக் காத்துக் கிடந்ததாம். எல்லாம் நெத்தலி மீனாம்!

இந்தக் கனவு, என்ன அழகான கனவு! மூத்தம்மாவின் "கொண்டைக்குத்தி" மீன் பிடிக்கிறதாம் ஒரு தோணியாகி!

அப்போது பெண்கள் தங்கள் சடைத்த கொண்டைகளில் "கொண்டைக்குத்திகள்" தான் ஏற்றுவார்கள் அவிழாமல், காது குடையக் காதுக்குடும்பி.

அந்தக் காலத்தில் கனவு கண்டவன் எவ்வளவு பசுமையாகப் படுத்துத் தூங்கியிருக்கிறான்!

இப்போது காண்பது எல்லாம் பேய்க்கனவு, எலும்புக் கூடும் பிணங்களுமான கழுகுக்கனவு. அதிலும் கவிஞர்கள் அவிந்த நகங்களையும், அழுகிய விரல்களையும் ஒரு மண்டையோட்டுக்குள் போட்டுக் காய்ச்சும் ஆளையாள் பின்பற்றும் "காப்பிக்கனவு".

நமது கவிஞர்கள் இப்போது பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சுவதே இல்லை. ஏன், இவர்களுக்கு மூக்கு இல்லையா! இருந்திருந்தால் தம் குழந்தைகளுக்கு இட்ட முத்தம் பற்றியெல்லாம் பாடியிருப்பார்களே!

வறுத்த ஓட்டைப் போல் காய்ந்து விட்டது நமது கவிஞர்களின் உள்ளம். மண்டை ஓட்டை விட்டால் ஒரு வாழைக்காய் கூட இவர்களுக்குச் சாப்பாடாய்க் கிடையாது. கவிஞனின் மனம் "குருவி" என்ற காலம் போய்விட்டது. இப்போது அது வெறும் மயிர்கொட்டிப்புழு. தினம் நெஞ்சுக்குள்ளேயே ஒட்டிப் படுத்துப் பூவரசு இலை அரிக்கிறது.

சில்லெனப் பாஞ்சானின் காதல் இளவரசன் "மைனர் மச்சான்". அப்போது மைனர் மச்சானும் ஒரு முற்போக்கு வாலிபன். அப்போது உள்ளவர்கள் எல்லாம் கைக்கடிகாரங்களைத் தங்கள் முழங்கைக்குச் சற்றுப் பணிவில் கட்டும் போது அதைத் தாராளமாக வழியவிட்டு மணிக்கட்டிலேயே கிடக்கச் செய்தவன் மைனர்மச்சான்தான். அடிக்கடி அவன் கால்ச்சட்டையும் மாட்டிக் கொண்டு திரிந்ததுமல்லாமல், இடைக்கிடை கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினான். ஊரிலுள்ளவர்களுக்கு இவர்களின் காதல் பெரும் அவலாக இருந்தது.

சில்லெனப்பாஞ்சானை ஊரைவிட்டுத் துரத்த வேண்டும் என்றெல்லாம் அப்போதைய சமூகத்தவர் கொதித்தனர். மைனர் மச்சானுக்கு அவள் கடிதம் எழுதுவது மாத்திரமல்லாமல், கப்பல் பா த்த இடத்தில் நின்று இருவருமாகப் புகைப்படம் எடுத்த கதையும் பெரிதாக அடிபட்டது.

ஒரு நாள், ஊரே இவர்களைச் சேர்த்து வைத்தது மாதிரி இருவரும் எங்கென்று தெரியாமல் ஓடிப் போய் விட்டனர். ஊர் அப்போதும் நிம்மதியாய்த் தண்ணீர் குடிக்காமல், கிடந்து கொந்தளித்தது.

சில்லெனப்பாஞ்சானின் சேலைத்தலைப்பில் இருந்த புள்ளிகள் கூட எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் அவளது குதிகாலில் பித்தம் வெடித்திருந்ததைக் கண்ட யாரோ, "இது என்னடி பொடிச்சி பித்தம், அடிக்கடி மாங்காய் திங்கிறாயா?" என்று கேட்டதற்கு, அவள் அறைந்து அனுப்பிய அறையை வாங்கி வந்த பெண் தான் இறக்கும் வரை அதைச் சொல்லிச் சொல்லிக் காலத்தைக் கழித்தாள்.

அனேகமான பெண்களுக்கு எங்குப் போனாலும் மாங்காயின் எண்ணமும், களிமண்ணின் சந்தேகமும்தான். இப்போது யோசித்துப் பார்த்தால் சில்லெனப்பாஞ்சான் அப்படிப் பெரிய குற்றமொன்றும் புரியவில்லை. அவள் உரிமையை அவள் சரியாகப் பேணியிருக்கிறாள் போலத்தான் படுகிறது.

அவள் தனது நகத்திற்கும் உதட்டிற்கும் சாயம் அடித்தது பிழையா!
இன்று எத்தனை மணிகள் அதில் குளிக்கிறார்கள்!

எந்தக் குருவியும் தனது ஓட்டை உடைத்துப் பறந்தால் தாய்க்குச் சந்தேகம்தான். அது தானாக உடையும் வரை காத்திருக்கப் புதுமைப்பட்சிகளுக்கும் பொறுமையில்லை.

இங்கு இரு தரப்பும் பிழை விடவே இல்லை. பூமி இப்படித்தான் உருள்கிறது.

அப்போது சிக்குண்ட கப்பல் மெல்ல மெல்ல நீருக்குள் புதைந்து அதன் கொம்பு கூடத் தெரியாதபடிக்கு மறைந்து போனது. கப்பலுக்குக் கொம்பு இருப்பதால்தான், சற்றுத் தலைகனத்துத் தம்பட்டம் அடித்துத் திரிபவர்களையும் "கப்பல்" என்கிறார்கள்! அது எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, கிழடாகி விழுந்த ஒரு மனிதனின் கொடுப்புப் பல்லைப் போல, அண்மையில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தின் போது தெரிந்து, இறந்து. கடல் வற்றி அது ஊருக்குள் சற்று நேரம் வந்து நின்றதால்.

என் நினைவுகளே நீங்கள் எங்கெல்லாம் போகிறீர்கள்! நான் வந்து பத்திக்கை பிடித்தவுடன் எத்தனை திக்குகளில் தாவுகிறீர்கள்!

சில்லெனப்பாஞ்சானும் மைனர்மச்சானும் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தத் தெரியாத என் வயதில்.

அவர்கள் வாழ்ந்தார்களோ, அல்லது மாண்டுதான் போய்விட்டார்களோ என்பதெல்லாம் எனக்கு இதுவரைக்கும் தெரியாது.

ஆனால், எனக்கு ஒன்று தெரியும். நான் அந்தப் பசிய காலத்தை விட்டும் மாண்டு மடிந்து வெறும் பாலைவனமொன்றில் ஆவியாக அலைந்து திரிகிறேன்.

மைனர் மச்சான் முடி வாரும் அழகு இன்னும் என் கண்ணுக்குள் இனிக்கிறது. அவர் போனால், போன வழியெல்லாம் ஒரு வாசம்!

சில்லெனப்பாஞ்சான் தலையில் எப்போதும் ஒரு மல்லிகைப்பூ!

எனக்கு இந்த இருவரையும் பிடிக்கும். இன்றும் இந்த இருவரும் எனது புதுமையின் புள்ளிமான்கள்.

அவர்கள் உடம்புக்கு, அவர்கள் உயிரோடு இருந்தால் வயதேறி இருக்கும். மனங்கள் நிச்சயமாக இப்போதும் அருவியாகவே பாயும்.

எங்கு துள்ளுகிறார்களோ! நினைக்க, என் நெஞ்சம் விம்முகிறதே! அவள் கொண்டைமயிர் சிக்கி அடைத்தது மாதிரி இருக்கிறது என் தொண்டை.

----
பத விளக்கம்:
கச்சான் கொட்டை - நிலக்கடலை
கத்தம் - முஸ்லிம்கள் மரணித்த பின் நிகழும் சடங்கு
குறுக்கு - ஒரு பருவம் முட்டையிட்டு அடுத்த பருவம் ஆரம்பமாகும் வரை கழிக்கும் இடைக்காலம்
கொண்டைக்குத்தி - பெண்கள் கொண்டைகளில் இடுக்கும் உபகரணம்

***

Tuesday, May 29, 2012

ஜெண்டில்மேன் அப்துல் ஜப்பார்

'அண்ணாச்சி' என்று மாட்சிமை பொருந்திய துபாய் மன்னாரு ஷேக் முஹம்மதால் அழைக்கப்படும் - புரவலர்கள் பொரும வேண்டாம் -
பிரபல பதிவரான ஆசிப்மீரானிடமிருந்து முந்தாநாள் மெயில் : 'நல்லா இருக்கீகளா? வெயில் காலத்துல முட்டைங்க சீக்கிரம் கெட்டுப் போயிடுமாம். பார்த்து நடமாடுங்க :-))'.   ஏற்பாடு செய்துவிட்டு என்னா கரிசணை!

சிலமாதங்களுக்கு முன்பு ஆசிபிடம் கேட்டு வாங்கிய அவருடைய வாப்பாவின் புத்தகத்திலிருந்து டைப் செய்த  சில பக்கங்களை முடிக்க வேண்டுமே.. எழுத்தாளர்களை விட அவர்களின் வாப்பாக்களும் பிள்ளைகளும்தான் பிடிக்கும் என்று பந்தாவாக வேறு சொன்னோமே... எங்கே அந்த புத்தகம்? தேடு! ஆசிபுக்கு ரொம்பவும் கூர்மையான நகையுணர்வு. நண்பரோடு  சொங்கீதா ரெஸ்டாரண்ட்டில் உட்கார்ந்து சொகமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார். நண்பர் அங்கலாய்த்துக்கொண்டாராம் : 'சே, இங்க ரெண்டு அறிவுஜீவிங்க பேசிக்கிட்டிக்கிறோம். துபாயில யாருக்குமே தெரியமாட்டேங்குது'.  உடனே ஆசிப் சொல்லியிருக்கிறார்,  ' நான் இங்கே இருக்கேன். இன்னொரு ஆளு யாரு?!'. (நண்பரின் பெயர் அய்யனார் அல்ல!). எனக்கு எழுதவரவில்லை, ஆசிபிடம் கேட்டுப்பாருங்கள். ஜாலியாக  இருக்கும். எல்லாவற்றையும்விட தமாஷ் , அவர் எனக்கு 'சலாம்' சொல்லும் விதம். அமீரகமே அதிர்ந்துவிடும். ('சாத்தான்குளத்து' வேதத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறதாம்!).  நான் கேட்டிருந்த , அவரது வாப்பாவின் 'மாதர் தம்மை இழிவு செய்யும்.......' கட்டுரையை அனுப்பினார், 'உங்கள் கெட்ட நேரத்துக்கு அது கிடைத்து விட்டது' என்ற குறிப்புடன்! போதுமா கிண்டல்?  'பஞ்சவாடிப்பாலம்' போன்ற அற்புதமான மலையாள சினிமாக்களை அவரது பதிவுகளின் மூலம்தான் அறிந்துகொள்வேன்.

அமீரகத் தமிழ் மன்றத்து 'அண்ணாச்சி'யின் அன்பு வாப்பாவான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் 'காற்று வெளியினிலே' நூலிலிருந்து... - * முதற்பதிப்பு 2003 - எனக்குப் பிடித்த  பக்கங்களைப் (பக் : 41 to 45 ) பதிவிடுகிறேன் .   மட்டைப்பந்து வர்ணனையாளராக எனக்குத் தெரிந்த அப்துல் ஜப்பார் அவர்களின் இலங்கை வானொலித் தொடர்பு , அது குறித்த செய்திகள் எல்லாம் படு சுவாரஸ்யமாக இதில் சொல்லப்பட்டிருக்கிறது.  'உங்கள் அன்பு அறிவிப்பாளன்'  பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு இவர்தான் உந்துசக்தியாக இருந்தவர் என்றும் 'நுனிப்புல் மேய்ந்ததில்' அறிந்தேன்.  

'முற்றும் துறந்த முனிவருக்குக் கூட முக்தி என்கிற லாபநோக்கு உண்டு' என்று முதிர்ச்சியுடன் எழுதுகிற, காதர்பாட்சாவின் ஹார்மோனியத்தையும் நாஞ்சில் நாடனின் எழுத்தையும் குறிப்பிடுகிற இந்த வாப்பாவை , எனக்குப் பிடித்த இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ (இலக்கியப் போலிகளை தோலுரிப்பதால் 'எக்ஸ்போஸ்' என்று இவரை அழைக்கிறார் அப்துல் ஜப்பார். மகனே தேவலை! ) இழுத்துவந்து , தனது மித்ர பதிப்பகம் மூலம் காட்டியிருக்கிறார்.  இதைப் பதிவிடுவதற்கு காரணம், 'மந்தையை விட்டு வெளிவந்த முதல் ஆடு நான். என் ஒழுக்கத்தின் மீது சிறு கீறல் விழுந்தாலும் சமூக ரீதியாக என்னைக் குழிதோண்டி புதைத்து விடுவார்கள்' என்று அப்போதே ஜாக்கிரதையாக இருந்த அப்துல் ஜப்பார் அவர்களின் எழுத்தாற்றலைச் சொல்வது மட்டுமல்ல, கிட்டத்தட்ட அவர்கள் சந்தித்த அதே நிலை எனக்கும் விரைவில் வரப்போகிறது.  நதீம், நான் அப்போது ஜெண்டில்மேனாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். ஜஃபருல்லாநானா அட்வைஸ் செய்யாமலிருக்க வேண்டும்! - ஆபிதீன்

***


காற்று வெளியினிலே..

சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்

ஒருநாள் மாலை ஒரு 'பேர்த்டே' பார்ட்டிக்கு வருமாறு எனக்கும் (நண்பன்) மக்கீனுக்கும் சேர்த்துக் கடிதம் வந்தது. இருவரும் சென்றோம். வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் 'பேர்த்டே பார்ட்டி இங்கல்ல, வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே, துணையாக இருக்கத்தான் வரச்சொல்லி எழுதினேன்' என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்துகொண்டது போல், 'சரி இருவரும் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன்' என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள், ஆனால் தவறான ஒரு பார்வையோ, பேச்சோ கூட இல்லை.

என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னாள். என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்தாள். எனக்கும் அந்த விருப்பம்
இல்லாமல் இல்லை. என் நிலைமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன்.
வெவ்வேறு மதம் - இனம், பொருளாதாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்னபோது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணீரைத் துடைத்துவிட்டேன் - கைக்குட்டையால். அப்போதுகூட அந்தப் பெண்ணைத் தொடவில்லை என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப் பெண் என் தோளில் அபயம் தேடினால்.. இக்கட்டான நிலை, ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான்.  உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முகமாக வெளியே வந்தாள். நாங்கள் விடை பெற்றோம்.

வரும் வழியில் மக்கீன் துருவ ஆரம்பித்தான். நூறு நீண்ட நிமிடங்கள் என்னென்னவெல்லாம் நடந்தனவோ  என்று அறிய வாலிபக் குறுகுறுப்புடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் அவன் இருக்கிறான் என்பது எனக்குப் புரிகிறது. என் மௌனமும் முகத்தில் படர்ந்துள்ள சோகமும் அவனை பொறுமை இழக்க வைக்கிறது என்பதையும்  புரிந்துகொண்டு நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொன்னேன். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். என் முன்னால் வந்து நின்று இரு கைகளையும் உயர்த்தி நீட்டி விரல்களால் என் தோள்களைப் பற்றிய வண்ணம்  என் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னான். 'மச்சான் நீ ஒரு உலக மஹா ஜெண்டில் மேன்'. அந்தப் பாராட்டை கிரகித்து அதைப் புன்னகையாக முகத்தில் வெளிப்படுத்தும் முன்பு, முகத்தில் அடித்தாற்போல் அடுத்த வார்த்தைகள் உதிர்ந்தன. 'உலக மஹா பொண்ணையனும் நீதான்.' என் தோள்களை மாத்திரமல்ல, என்னையும்
விட்டு விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான்.
.....

தொடர்ந்து ஒரு நாடகம், நான் காதலன், ஃபிலோமினா சொலமன் காதலி, பிச்சையப்பா அவளைக் கைப்பிடிக்கும் கணவன். ஃபிலோமினா சீரியஸாக
இல்லாமல் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தார். 'உம்மை எப்படியப்பா காதலனாக நினைத்துக்கொண்டு நடிப்பது?' என்றவர் 'சானா கிட்ட சொல்லி
மாற்றச் சொல்லப்போகிறேன்' என்று அவர் கிளம்பும் முன்பு சானாவே உள்ளே வந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் 'பிச்சையப்பாவை மட்டும் உம்மால் காதலனாக ஏற்றுக்கொள்ள முடியுமோ' என்று சற்று காட்டமாகவே தாட்சண்யம் இல்லாமல் கேட்டார். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. ஃபிலோமினா முகம் கறுத்து, கண் கலங்கும் நிலைக்கு வந்துவிட்டார். பெண் என்றும் பார்க்காமல் சற்று ஓவராக 'சானா' பேசிவிட்டதாக நான் பிச்சையப்பாவிடம் சொன்னபோது, 'அவுக அப்பாவும் மகளும் போல, உட்டுடுங்கோ, ஆரம்ப காலத்திலே உரிமையோட செல்லமாக மண்டையில் கூடக் குட்டுவார். வெளையாட்டு சிரிப்பெல்லாம் நிண்ணு போச்சா, இப்பப் பாருங்க அந்தப் பொண்ணு பிச்சி உதறும்' என்றார் - மிக அனுபவ 'பாவத்துடன். அதுதான் நடந்தது. உலகத் தரத்தில் வைத்து எண்ணப்படவேண்டிய அந்த ஒப்பற்ற நடிகை அன்று சில அற்புத உச்சங்களை - உன்னதங்களை எட்டிப் பிடித்தார் - நடிப்பில்! நாடகம் முடிந்து பாராட்டும் பாவனையில் பேச்சை ஆரம்பித்தார் 'சானா' ஒன்டும் சொல்லவேண்டாம்' என்று சீறிவிட்டு செக்கை கூட வாங்க நிற்காமல் போய்விட்டார் , சகோதரி ஃபிலோ!

மறுநாள் அதிகாலை தொழுகைக்குப் பின் என்னைக் கண்ட மக்கீன் 'டேய் கிறுக்குப் பயலே.. ராத்திரி மூணு பேரும் பிச்சி உதறிட்டீங்கடா. அந்தப்
பொண்ணுகிட்டே என்னமா மன்றாடினே.. இழந்தபின் என்னமா துடிச்சே..பொம்பளைங்க அழுதுட்டாங்கடா..பின்னே எப்படிடா அன்னைக்கு மட்டும் அப்படி நடந்துகிட்டே?' என்றான். அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தவன்போல் உடனே பதில் சொன்னேன். 'நாடகத்தில் காதலியிடம் மன்றாடினேன். அவளை இழந்ததால் துடித்தேன். நிஜவாழ்க்கையில் மன்றாடவும் இல்லை. இழப்பும் இல்லை; துடிப்பும் இல்லை.' என்றேன். ஆனால் அது உண்மைதானா? நான் செய்தது சரிதானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய்விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய்விட்டதா? அல்லது ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பொறுப்புள்ள தலைமகனாக நடந்துகொண்டேனா? இன்றுவரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்துகொண்டே இருந்தது. இறைவனின் அருட்கொடைபோல் ஒரு நல்ல துணை வாய்க்கும்வரை - வாய்த்தாள்!

இன்று நினைத்துப் பார்க்கும்போது என்னை வியக்கவைக்கும் விஷயம் என்னவென்றால், சகோதரி ராஜேஸ்வரி, எழுத்தாளர் சி.சண்முகம், 'மாடசாமி' என். சோமசுந்தரம், மக்கீன், சகோதரி விசாலாட்சி, சகோதரர் பி.எச். என்று காதல் திருமணம் செய்துகொண்ட என் நண்பர்கள் பட்டியல் நீண்டது.

ஆனால் காலத்தின் கோலத்தைப் பாருங்கள். என் தலைமகன் என்னைப் பற்றி, தன் தாயைப் பற்றி, குடும்பம், ஊர், உலகம், ஜாதி, சமயம், ஏன் தேடிவந்த சீதன லட்சங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறான்*. காதல் என்பது இளமைக்கு கூத்துக்களும் களியாட்டங்களும் என்றில்லாமல் , 'முப்பது நாள் மோகத்துக்கும் அறுபதுநாள் ஆசைக்குப் பிறகும் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது என்பதைப் புரிந்தே இதைச் செய்ய நினைக்கிறேன்' என்று அனுமதியுடன் ஆசியும் வேண்டி நின்றபோது  அதிர்ந்த நான், காரண காரியங்களை எண்ணிப்பார்த்தபோது சம்மதித்தேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழுச் சுற்று சுற்றி வந்துவிட்டது, இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது.

***


நன்றி : 'பதுருல் மில்லத்' அப்துல் ஜப்பார் அவர்கள், ஆசிப் மீரான், மித்ர பதிப்பகம்
***

படித்துவிட்டீர்களா? வாப்பாதான் ஜெண்டில்மேன்,  மகன் ஆசிப் அல்ல! ஆமாம், அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'தவ்பா' (பாவ மன்னிப்பு) என்னும்
பாடலின் MP3 வேண்டுமென்று பலநாளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். தரவே இல்லையே.. ;-)

சென்ஷி,  ஒரு பெண்ணுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் நம்ம  தாஜுக்கு நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். அந்தப்
பெண்ணை நினைத்து அழுகை வந்துவிடும். (கவிதைகள் சொல்லிக்கொண்டிருப்பார் என்று சொல்ல வருகிறேன்!).

சரி, சாக்கோடு சாக்காக ஆசிபுக்கு  ஒரு வேண்டுகோள். எழுதுங்கள். இலக்கியம் வளரட்டும் - அட்லீஸ்ட் அமீரகத்திலாவது.

இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லை, இருந்தாலும் கடைசியாக ஒன்று : 'அண்ணாச்சி' என்று என்னை அழைக்கும் எழுத்தாளர் ஃபிர்தொஸ் ராஜகுமாரன் ஃபேஸ்புக்கில் கேட்டார் என்னிடம் : 'இலக்கிய இதழ்களில் நீங்கள் எழுதாதற்குக் காரணம் என்ன?'

'இலக்கியம்தான் காரணம்' என்றேன்!

***

சில சுட்டிகள்...

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் - விக்கிப்பீடியா

சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் ~ இறைதூதர் முஹம்மத்' (மொழிபெயர்ப்பு நூல்)


சிந்திய பால்....! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

” யதார்த்தங்கள்...! “ - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

அமீரகத் தமிழ் மன்றத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளர். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி... (வீடியோ)

Saturday, May 26, 2012

'ஜாமீன்' ராஜாவிடம் 15 கேள்விகள் - தாஜ்


மாலனின் ’2G : இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?’ பதிவைத் தொடர்ந்து....

***

Image courtesy : Cartoonist Satish
***

வரலாறு காணாத 2g ஊழல்:
15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த
நம்ம 'ஜாமீன்' ராஜாவிடம்
15 கேள்விகள்
- தாஜ்

***


உங்களை இப்பவும்...
மாண்புமிகு என்று அழைக்கலாம்தானே?

இப்போது நீங்கள்
மத்திய மந்திரியாக இல்லை என்றாலும்..
ஒரு மாத காலம்
பாராளுமன்றம் ஸ்தம்பித்த பின்னரே
நீங்கள் வெளியேற்றப்பட்டவர் என்றாலும்...
திகார் சிறையில் பதினைந்து மாத காலம்
சிறைப்பட்டு, ஜாமீனில் நீங்கள்
வெளிவந்தவர் என்றாலும்...
பரவாயில்லை

இன்னும்...
யார் வேண்டாம் என்றாலும்
நான் உங்களை அப்படியே அழைப்பேன்.

தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு
பலிகடா ஆக்கப்பட்டவர்
நீங்கள் என்பதால்
உங்கள் மீது இனம்புரியாத ஈர்ப்பு.

எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகும்
இத்தனை மாத சிறைவாசத்திற்குப் பிறகும்
நிஜத்தை துளியும் வெளிக்காட்டாத
உங்களது மனத் திடம் சாதாரணமானதல்ல!

மாண்பு மிகு ராஜா அவர்களே...
சென்ற பொதுத்தேர்தல் முடிந்து
மத்தியில்
கூட்டணி அமைச்சரவை அமைந்த போது,
டெல்லியில் லாபி அமைத்து
தொலைத் தொடர்பு துறைக்காக முயன்று/
பிரச்சனைகளும் செய்து/ கிட்டாததில் கோபம் கொண்டு
சென்னைக்கு திரும்பி வந்து அமர்ந்து/
பத்திரிகைகளைக் கூட்டி
மத்திய மந்திரி சபையில்
இடம் பெற மாட்டேன் என்றல்லாம் பேட்டியளித்து
விடாப்பிடியாக மீண்டும்
தொலைத் தொடர்பு துறையை கேட்டுப் பெற்ற
உங்கள் தலைவன்....
அதில் உங்களை அமர்த்திய நாட்கள் தொட்டு
நீங்கள் என் பார்வைக்கு நெருக்கம் ஆனீர்கள்.

உங்கள் தலைவர் ஒன்றைச் செய்தால்...
அதுவும் இப்படியெல்லாம்
அடம் பிடித்து செய்தால்...
அதில் ஆயிரம் அர்த்தமிருக்கும் என்று
நான் அறிவேன்.
அதனால் கூட
நான்... ,

நான் என்பது பெரிய வார்த்தை.
அதை விடுங்கள்.

நிஜத்தில்...
உங்கள் தலைவருக்கும்/
மத்திய அரசுக்கும் வேண்டாத
பெரியதோர் 'நெட் ஒர்க்'
சைலண்டாக
உங்கள் தலைவரின் இந்தக் கூத்தை
கவனம் கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது.
நான் அவர்களில் ஒருவனாகவே
தள்ளி நின்று கவனித்தவன்
என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

இத்தனைக் கண்கள் கவனிக்கின்றன
என்கிற சுதாரிப்பில்
நீங்கள்
கூடுதல் கவனம் கொண்டிருக்கலாம்.

அன்றைக்கு மத்திய அரசில் சகலமும்
உங்கள் தலைவர் நினைத்த மாதிரிதான் நடந்தது.
கூடுதலாய்
உங்களை அப்பதவிக்கு
முன் நிறுத்துவதில்
அவர் மேலும் பலவும் நினைத்திருக்கக் கூடும்.
சரி...
அவர் என்னதான் அப்படி நினைத்தார்?

’தலித்’ என்ற கோதாவில்
உங்களை அந்த ஊழல் களத்தில் இறக்கிவிட்டு
அடுத்தவர்களின் இரக்கப் பார்வையில்
உங்களைக்கொண்டு ஆகுமானதை
செய்து கொள்வது.
தவறி சிக்கல் ஏற்படும்பட்சம் கூட
அதே யோசித்திருந்தபடிக்கு
’தலித்’ கூப்பாடு போட்டு
சற்று எளிதாக தப்பிக்க நினைப்பது.

’தலித்’ என்கிற பதம்தான்
தேசிய அளவில் செல்லுமே!
தலைவருக்கு புரியாதா என்ன?
அதனால்தான் என்னவோ
சிக்கலில் நீங்கள் வலுவாக சிக்கிய போது...
'தலித்தான ராஜாவை.....' என்று
உங்கள் தலைவர் அப்படியொரு
கூப்பாட்டைத் திரும்பத் திரும்ப
மஹா கரிசனையோடு போட்டுப் பார்த்தார்.
தழதழக்க உருகினார்.
தமிழகத்தையும் சேர்த்து
ஏக இந்தியாவிலும்
எவர் காதிலும் அது விழவே இல்லை.
குறிப்பாய் ஒரு ’தலித்’ தலைவர்களின்
காதுகளில் கூட அது விழவே இல்லை!
அதோடு... உங்களைப் பற்றிய
பொங்கி எழுந்த பெரும் கரிசனையை
சட்டென ஓர் சுதாரிப்புடன்
முற்றாய் கைகழுவிட்டார்.
இன்றுவரை கூட உங்களைப் பற்றி
எதுவும் அவர் வாய் திறப்பதில்லை.
சாணக்கியன் கணக்கு தப்பிவிட்டது.

அவர் போகட்டும்...
இங்கே
நான் முன் வைக்கும்
உங்களது தலைவர் குறித்த கேள்விகளுக்கு
ஒரேயடியாய் நீங்கள்
தெரியாது/ இல்லையென்றெல்லாம் கூறிவிட முடியாது.
என் கணிப்பை பொய்யென்றால்
என் வாதம் இன்னும் இன்னும்
பலமாகிக் கொண்டே இருக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?
தலையில்லாமல் வால் ஆடியதாக
சரித்திரமே இல்லை.

இந்தப் பெரும் நாடகத்தில்...
உங்களை நெருக்கத்திலும் தூரத்திலும்
கண்காணிக்கவும் கணக்கெழுதவும்
வேறொரு கோதாவில்
உங்கள் தலைவர்
தன் ரத்த சம்பந்தத்தை
அந்த டெல்லிப் பட்டணத்திற்கு
அனுப்பிவைத்த போதே
நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும்.
நாம் வெறும் அம்புதான் என்று
பெரும் படிப்பு படித்த உங்களுக்கு
பிடிபடாது போனதும் ஆச்சரியம்.

போகட்டும்
எல்லாம் ஆகிவிட்டது.
இந்திய எதிர்கட்சிகள்
இந்திய ஆதிக்கவர்க்கம்
இந்திய உயர் ஜாதி வட்டம்
இந்தியப் பத்திரிகைகள்
இந்தியாவின் இதர மீடியாக்கள்
இந்தியத் தணிக்கை அலுவலகம்
உங்களுக்கும் கீழ் பணி புரிந்தவர்கள்
சுப்ரீம் கோர்ட்
சி.பி.ஐ. கோர்ட்
உங்களது கட்சியில் உள்ள
பணம் படைத்தவரின் கரங்கள்
இன்னொரு திசையில்
உங்களது உயிர்த் தோழரின்
மர்ம மரணம்
பம்பாய் பணப் பறிமாற்றத்தின் ஆதாரம்
மேலும்
உங்கள் தலைவரின் பெரும் மௌனம்
இப்படி எல்லாம் ஒன்று கூடி
உங்களுக்கு பாதகமாக எழுந்து நிற்கிறது.

ஆனாலும்...
நீங்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை உண்டா...?
எனக்கில்லை.
அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கும் பட்சம்
நீங்கள் நிச்சயம் தப்பிக்கலாம்.

வரும் பாராளுமன்ற பொதுதேர்தலில்
உங்களது கட்சி
40க்கு 40 ஜெயித்து,
அதே நேரம் அங்கே டெல்லியில் ஜெயித்த
கட்சிகளுக்கிடையே
ஆட்சி அமைக்கும் வாய்ப்பு என்பது
தொங்கலில்
நிற்கும் நிலை ஏற்படுமெனில்
ஜெயித்த உங்கள் கட்சி
ஆட்சி அமைக்க
ஆதரவு கொடுக்கிறேன் பேர்வழியென
உங்களுக்காக...
உங்களை மீட்டெடுக்க பேரம் பேசப்படலாம்...
நீங்களும் ஜம்மென்று  
குற்றமற்றவராக வெளியே வந்துவிடலாம்!
நம்புங்கள்
இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம்!

ஆனால்.... அதற்கு
அத்தைக்கு மீசை முளைக்க வேண்டும்
அத் தருணத்தில்
உங்கள் தலைவர்
தன் குடும்ப சொந்தங்களை மறந்து
உங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
அவரோடேயே வாழும் குடும்ப முன்னேற்றம்
அவர் மனதில் எழுமேயானால்
உங்கள் கதி பரிதாபத்திற்குரியதுதான்.
அதான் சொன்னேன்...
அதிர்ஷ்டம் வேண்டும் உங்களுக்கு.

போகட்டும்..
இப்போது என் கேள்விக்கு வருகிறேன்.
மேலே வளவளவென்று
ஒருபாடு நிகழ்வுகளை
உங்களுக்கு சொல்லிக்காட்டியதற்குக் காரணம்...
இங்கே...
நீங்கள் நான் எழுப்பும் கேள்விகளுக்கு
முறையான பதிலைச் சொல்வீர்கள் என்பதினால்தான்.

தலைப்பில் நான் குறிப்பிட்டு இருந்த மாதிரி
உங்களிடம் கேட்கணும் என்று
15 கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தேன்.

உங்களது தலைவர் கூறியது போல்
’தலித்’ என்கிற காரணத்தினால்தான்
உங்களை இந்த ஊழலில் சிக்கவைத்தார்களா?

உங்களது தலைவரின் மனைவியார்
இதில் சிக்கவேண்டியிருந்தும் 
அந்தக் கைது
அவரது மகளோடு முடிந்து போனதே அது எப்படி?

உங்களது உற்ற தோழனும்
உங்களது ஊர் நபரும்
சென்னையில் பெரிய அளவில்
ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்தவரான
ஜாகீர் உசேன் அவர்கள் மர்மமான முறையில்
இறந்து போனதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்களது தலைவரின் பேரன்
இந்த ஊழலுக்கு கட்டியங்காரனாக இருந்தும்
அவர் இன்னும் தப்பிப்பது எப்படி?

- இப்படி,
ஒரு பதினைந்து கேள்விகள்
நான் தயார் செய்து வைத்திருந்தாலும்
அவைகளை
இப்போது உங்களிடம் கேட்க
ஏதுவான நேரமாக இது தெரியவில்லை.

இங்கே இப்ப
பதினைந்தாவது கேள்வியினை மட்டும்
உங்களிடம் கேட்க நினைக்கிறேன்.
ப்ளீஸ்...
மறைக்காமல் பதில் சொல்லுங்கள்.

உங்களுக்கு எதிராக, விசாரணை கோர்ட்டுகளில்
திரும்பத் திரும்ப
2-ஜீ ஊழலை ஊர்ஜிதப் படுத்துவதாகவே
நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருப்பதை
முன் வைத்தே இக்கேள்வி.

வரலாறு காணாத அந்த ஊழல் பணத்தில்
மத்திய மந்திரிகளில் இருந்து
உங்களது துறை சார்ந்த அதிகாரிகள்/
இடைத் தரகர்கள்/ பெரிய மீடியாக்கள்/
டெல்லியிலும் தமிழகத்திலும் உள்ள
எதிர்க் கட்சிகள் என்று பலருக்கும்
அந்த ஊழல் பணம் பட்டுவாடா ஆகியிருக்கக் கூடும்!
ஏன் உங்கள் பங்காகக் கூட
ஒரு குறிப்பிட்ட தொகை
உங்களுக்கும் கிடைத்திருக்கும்!
இது... அரசு சார்ந்த ஊழல் பணத்தை
பங்கு போடும்
அங்கீகரிக்கப்பட்ட முறையாகத்தான்
காலம் காலமாக நடந்தும் வருகிறது!
இங்கே
நான் குறிப்பிட்டுக் கேட்க நினைக்கும் கேள்வி...
உங்களது தலைவருக்கு அல்லது தலைமைக்கு
எந்த அளவில் எத்தனைக் கோடிகள்?
மூட்டை கட்டி கூட்ஸில் அனுப்பப் பட்டதா?
அல்லது...
ஆகாய மார்க்கமாக கார்கோவாகவா?
தொகை நிறை கொள்ளாத அளவிலானதாயிற்றே!!!
அதான் இப்படி கேட்டுவிட்டேன்.
வாழ்க ஜனநாயகம்.

சிக்கலான கேள்விதான்.
பதில் சொல்வதில் கூட
உங்களுக்கு தயக்கமும் ஏற்படலாம்.
இது உங்களது நலனை மனதில் கொண்ட கேள்வி.
அத்தனைப் பணமும் நீங்கள் ஒருவரே
முழுமையாய் எடுத்தாண்ட மாதிரி
இங்கே ஒரு பேச்சு இருக்கிறது.
அது...
இப்போது இங்கே நொறுங்கி விழவேண்டும்.
அந்தக் கரிசணையில்தான் கேட்கிறேன்.
ப்ளீஸ்.. சொல்லிவிடுங்கள்.
***




நன்றி : சீயாழி போலீஸ்   | satajdeen@gmail.com

Saturday, May 19, 2012

சுயவிளம்பரமும் சுந்தர ராமசாமி கடிதமும்

முதலில் வருவது ஹனீபாக்காவின் மெயில். சு.ரா அவர்களின் கடிதத்தை அனுப்பிவிட்டு , இதெல்லாம் கொஞ்சம் சுயவிளம்பரந்தான் என்று சொல்லியிருப்பதை மிகவும் ரசித்தேன். உண்மைதானே? ஆபிதீனின் அரிப்புதான் ஆபிதீன் பக்கங்களாக வருகிறது. இல்லையா? நாகூர் ரூமியை உசுப்பிவிடவும் என்று காக்கா சொல்வது மட்டும் சரியாகப்படவில்லை. நண்பர் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வார் ! - ஆபிதீன்

***


அன்புள்ள ஆபிதீன்,

ஒரு காலத்தில் கடிதம் எழுதுவதென்றால் அதப்போல், அதற்கு நிகரான சுகமில்லையே. இன்று யாரும் கைபட எழுதுவதில்லை. தபால்காரன் கடிதங்கள் பட்டுவாடா செய்வதில்லை. கரண்ட் பில், தண்ணீர் பில், டெலிபோன் பில் என்றுதான் வீடுகளில் வீசிவிட்டுப் போகிறார்கள். தபால்காரர் குடும்பத்தில் ஓர் உறவுக்காரர் போல் வாழ்ந்த அந்தக் காலம் இனிமேல் ஒருபோதும் திரும்பாது. போனது போனதுதான். ஆனாலும் எங்களைப் போன்றவர்களின் (அந்தக்காலம்) பேச்சு மட்டும் குறையாது.

எழுபதுகளில் தீபம் இதழில் ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் கடிதங்களுக்கென்றே ஊஞ்சல் என்றொரு பகுதியை ஆரம்பித்திருந்தார். அதில்தான் நான் முதன் முதல் அற்புதமான கடிதங்களைப் படித்தேன். கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, மௌனி, தி.ஜ.ரா, நா.பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், தி.க. சிவசங்கரன், டி.கே.சி என்று பலரும் எழுதினார்கள்.

பின்னாளில் புதுமைப்பித்தனின் கண்மணி கமலாவுக்கு, வண்ணதாசனின் அனைவருக்கும் அன்புடன், கி.ராவின் கடிதங்கள், கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள் என்று ஒரு பரந்து பட்ட கடிதங்களை படிக்கும் பாக்கியம் நம் எல்லோருக்கும் கிட்டியது.

மெய்தான், சென்ற வருடம் ஜெயமோகனுக்கு நானெழுதிய இரண்டு கடிதங்களை அவருடைய பக்கங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். படித்ததுண்டா ஆபிதீன்?

ஆபிதீன் பக்கங்களில் நாமெல்லோரும் ஆளுக்கொரு கடிதம் எழுதினால் எப்படியிருக்கும்! தம்பி தாஜ் ஆரம்பித்து வையேன். நாகூர் ரூமியையும் உசுப்பி விடுங்கள்.

இத்துடன் சு.ரா. எனக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றை மட்டும் அனுப்பி வைக்கிறேன். சு.ரா. டைப் செய்து வான் கடிதமாக அனுப்பியது. அதை உங்களுக்கு நாங்கள் டைப் செய்து அனுப்புகிறோம். இதெல்லாம் கொஞ்சம் சுயவிளம்பரந்தான்.

மெய்தான், எங்களூரில் வெய்யில் நெருப்பாகக் கொட்டுகிறது. அப்படியென்றால் துபாய் எப்படியிருக்கும்? நாகூர் எப்படியிருக்கும்? காலையில் எட்டு மணிக்குப் பிறகு வெளியே செல்ல முடியாது. உண்மையாகவே ஓசோன் படலத்தை பொத்துக் கொண்டு சூரியன் தலைக்குள் வந்து விட்டான் போல் உடலெல்லாம் பதபதைக்கிறது. இதற்குள் இலக்கியம்! இதெல்லாம் தேவைதானா ஆபிதீன்? உன்னுடைய அஸ்மா என்ன சொல்கிறா?

அன்புடன் ஹனீபா காக்கா. | slmhanifa22@gmail.com


***


சுந்தர ராமசாமி
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் 629001

அன்புள்ள ஹனீபா அவர்களுக்கு,
வணக்கம்,

உங்கள் 08.02.02. கடிதம் கிடைத்தது. உங்கள் கடிதம் கிடைத்ததும் எப்போதும் எனக்குள் ஏற்படும் அதிகப்படியான சந்தோஷம் இப்போதும் ஏற்பட்டது.

வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் எனக்கு மிகுந்த சங்கடத்தைத் தந்தன. சிலர் வாழ்க்கையில் பிறரை நம்பி இழந்து கொண்டேயிருக்கிறார்கள். மகா கெட்டிக்காரர்களாகவும் சிலர் இருக்கிறார்கள். நாம் முதல் ரகம் போலிருக்கும். என்னைப் பற்றியும் மிகவும் கவனமும் எச்சரிக்கையும் கொண்டவன் என்று ஒரு பெயருண்டு. அதனால் என் இழப்புகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு நிலைக்கு நான் ஆளானதுதான் மிச்சம். பிறரை நம்பி எவ்வளவோ பணத்தை இழந்திருக்கிறேன். தொலைந்து போகட்டும். குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவனாகவும் முதுமையில் முன்னெப்போதுமில்லாத சுறுசுறுப்போடு எழுதி வருபவனாகவும், இருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். மனிதன் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வருபவன் என்று சொல்வது பெரிதும் யதார்த்தத்திற்குப் பொருந்தி வராத விஷயமாகவே இருக்கிறது.

நீங்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நடந்து விட்டதை வருந்திக் கொண்டிருப்பதில் எவ்வித இலாபமுமில்லை என்பது நீங்கள் அறியாததல்ல. இனியும் எல்லாக் காரியங்களும் உங்களுக்குச் சரிவர நடக்கும். இப்படி என் மனதுக்குத் தோன்றுகிறது.

எனக்கு வணிகர் உலகமும், எழுத்தாளர் உலகமும் நன்றாகவே தெரியும். எழுத்தாளர்கள், வணிகர்களை விட கீழானவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் என் பொது அனுபவம். எங்கள் அருமைத் தமிழ்நாட்டில் அப்படி. தமிழீழத்தில் எப்படியோ? அங்கு தமிழர்களுக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் அன்றாட வாழ்க்கை சார்ந்த கஷ்டங்களும் நினைத்துப் பார்க்குமளவுக்குப் பயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற நெருக்கடி இங்கு ஏற்பட்டால், நாங்கள் எல்லோரும் மன நோயாளியாகவோ தற்கொலை செய்து கொள்பவராகவோ ஆகியிருப்போம் என்று நினைக்கிறேன்.

மௌனி பற்றிய கருத்தரங்கு மிக நன்றாக நடந்தது. அக்கருத்தரங்குக் கட்டுரைகளை கண்ணன் கணையாழிக்கு (பிப் 02) அளித்துப் பெரும்பான்மையானவை பிரசுரமாகியிருக்கின்றன. கணையாழியை நீங்கள் பார்த்தீர்களா? இல்லையென்றால் எழுதுங்கள். அனுப்பி வைக்க முயல்கிறேன். இப்போதைக்கு மௌனி பற்றி நூல் எதுவும் வரவிருப்பதாகத் தெரியவில்லை.

வெவ்வேறு எழுத்தாளர்களுடனான என் அனுபவங்களை நான் சொல்ல அவற்றை ஒரு எழுத்தாளர் நாடாவில் பதிவு செய்து கொண்டு வருகிறார். சுமார் பதினைந்து எழுத்தாளர்கள் பற்றி இதுவரையிலும் சொல்லி முடித்திருக்கிறேன். இவற்றை ஒன்றாகவோ அல்லது சிறு புத்தகங்களாகவோ கொண்டு வர வேண்டும் என்ற யோசனை கண்ணனுக்கு இருக்கிறது. ஆனால் நாடாவிலிருந்து எழுத்துப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துவது கடுமையான வேலை. ஒரு சிலருக்கு இந்த நூலைப் படிப்பது ஒரு தனியான மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். அந்தப் பட்டியலில் உங்கள் பெயரும் என் மனதில் இருக்கிறது.

உமா வரதராஜன் எப்படியிருக்கிறார்? அவருடைய மௌனம் இன்னும் எத்தனை யுகங்களுக்குத் தொடரும்? பௌசர் அவ்வப்போது தமிழகம் வருவதாக அறிந்தேன். நான் நாகர்கோவிலில் இருப்பதால் சென்னை வருகிறவர்களைச் சந்தித்துக் கொள்வது சுலபமாக இல்லை.

அடிக்கடி கடிதம் எழுதுங்கள்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்
சு.ரா.

***
நன்றி : ஹனீபாக்கா
***
Image Courtesy : Artist Rajasekharan

Sunday, May 13, 2012

கடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்


இத்துடன் மர்ஹூம் எம்.ஐ.எம். றஊபின் கதையை அனுப்புகிறேன். சென்ற வருடம் மௌத்தாப் போன றஊபின் கதைகள் பெரும் பொக்கிஷங்கள். அவருடைய தகப்பனார் புகழ் பெற்ற கவிஞரும் கதாசிரியருமான மருதூர்க்கொத்தன் அவர்கள். எனது நீண்ட கால நண்பர்.  இன்ஷா அல்லாஹ், அடுத்து றஊபுடைய தகப்பனாரின் கதைகளில் ஒன்றை அனுப்பி வைப்பேன்.

அன்புடன்
ஹனீபா காக்கா

***

மாற்றுப்பிரதி : எண்பதுகளில் ஒரு கதைசொல்லியாக தனது இலக்கியச் செயற்பாட்டை ஆரம்பித்தவர் எம்.ஐ.எம். றஊப்.   தொடர்ச்சியான வாசிப்புகளும், அதனூடான தேடல்களுமாக தமிழின் சமகால இலக்கியப்போக்குகள்வரை அறிந்து செயற்பட்டவர். '' கனவும் மனிதன் '' என்ற இவரின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது. 90 களின் பிற்கூற்றில் அல் புனைவுகளின் மீது தனது கவனத்தை திருப்பிக்கொண்டார். ஈழத்து இலக்கியப்போக்குகளின் செல்நெறிகளோடு ஒத்துப்போக மறுத்து, புதிய திசைகள் மற்றும் போக்குகள் பற்றி சிந்திக்கவும் எழுதவும் செய்தார். தமிமொழிச் சமூகங்களுக்கிடையிலான முரணும் முரணினைவும் தொடர்பில் மு.பொன்னம்பலத்தின் பிரதிகளை வாசித்துக்காட்டினார்.  எம்.ஏ.நுஃமானை முன்னிறுத்தி - தமிழ் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவம் என்ற அரசியல் பிரதி ஆய்வை செய்துகாட்டியவர். அத்தோடு சுந்தர ராமசாமியின் நாவல்களை கவிதையியலாக வாசிக்க முற்பட்டவர்.இந்த ஒவ்வொரு வாசிப்புப் புள்ளியும் தமிழ் இலக்கியப்போக்ககளை உடைத்து,மறுத்து புதிய விவாதங்களை எழுப்பக்கூடியவை. அவை தொடரப்படாமலே போய்விட்டது. எம்.ஐ.எம்.றஊப் ஒரு மறுத்தோடிதான். வாழ்வையும் மறுத்து சுயமாகவே தனது வாழ்விற்கான முடிவைத் தேர்வுசெய்தவர். றஊபின் புனைவுகள் மற்றும் அல் புனைவுகள் தொகுக்கப்படவேண்டும். அவரின் எழுத்துக்கள் தொடர்பாக விரிவாக மிக விரைவில் எழுத உத்தேசமுள்ளது.

எம்.ஐ.எம். றஊப் அவர்களின் '' கனவும் மனிதன்'' புத்தகத்தை இங்கு வாசிக்கலாம்


***

கடலது அலையது

எம்.ஐ.எம். றஊப்

வழக்கத்தை மீறி நிறைய குடித்திருந்தான் மீரான். காக்காவின் நினைவு படரும் போதெல்லாம் நிறையக் குடிக்காமலிருக்க முடியாது அவனுக்கு. பணக்கஷ்டம் வரும் போதெல்லாம் அள்ளிக் கொடுத்த காக்காவை மிகவும் பூஷித்தான். காக்கா இல்லாதது பெரும் வேதனையாகிப் போனது அவனுக்கு. முருகையா ஊற்றிக் கொடுத்த ஒவ்வொரு கிளாஸ் சாரத்தையும் காக்காவை நினைத்தே குடித்திருந்தான் இன்று.

இன்று மாயவலைத் தோணிகள் எதுவும் கடலுக்குப் போகவில்லை. மீரானோடு மாயவலைக்கு வரும் பொடியன்கள் கரவலைக்குப் போயிருந்தார்கள். மீரானால் அப்படிப் போகமுடியவில்லை. சொந்தமாக கரவலை வைத்து தருவதாகச் சொன்ன காக்காவை நினைத்த கையோடு காலையிலேயே முருகையா வீட்டுக்குப் போயிருந்தான்.

சந்திக் கடையில் பீடிக்கு நெருப்பு வைக்கும் போது, சூரியன் உச்சியிலிருந்தது. மீரானுக்கு வெறி உச்சத்திலிருந்தது. உடல் தள்ளாட்டம் போட்டாலும் கண்டத்திலிருந்து குரல் ஆரோக்கியமானதாகவே பிறந்தது. பிசிறில்லாமல் வார்த்தைகள் நேர்த்தியாக வெளியாகின. சுருக்கென்று பாய்ந்து காக்காவின் நெஞ்சத்தைத் துளைத்த துப்பாக்கி ரவைகளின் கூர்மையைப் போன்று வாயாடினான். கூடி நின்றவர்களுக்கு புரியாத தத்துவம் பேசினான். ரஷ்யாவிலிருந்து வால்கா நதியினூடாக இந்துமா கடலில் வந்து கலந்தது மீரானின் தத்துவம்.

மாரிக்கடல் பொய்த்துப் போயிருந்தது. அடிவானத்தில் புகாரித்து எழும்பும் மேகக் காடுகள் இல்லாது கிடந்தது ஆகாசம். அதற்குக் கீழே கடைக் கண்கள் விரியும் அளவுக்கு நீட்டிக் கிடந்தது வங்காள விரிகுடாக் கடல். விம்மிப் புடைத்துப் புரளும் உக்கல்கள் இன்றில்லை. ஓங்காரம் காட்டி நிலத்தை அறையும் அலைகளில்லை. சித்திரத்தை மாதத்துக் கடலாய் தெப்பம் கட்டிக் கிடந்தது மார்கழிக் கடல். வெறி தணிய மாலையாகி விட்டது. உடலும் உள்ளமும் வெள்ளைக் காகிதம் போலானது மீரானுக்கு. எதற்கும் ஒரு முறியடி அடிக்கும் நினைப்பு வர, முருகையாவை எண்ணிக் கொண்டான்.

அலை நனைக்கும் தூரம் கடலோரம் நின்றான். ஆற்று வெள்ளத்தில் அள்ளுண்ட களச்சிக் கொட்டையன்று நுரை கட்டிப் புதைந்து கிடந்தது. கடலுக்கு அப்பால் பாரத தேசத்தில் காக்காவின் கபுறடியில் கொடி மல்லிகை பூத்துக் கிடந்தது. சுவனத்தில் நண்பர்கள் புடைசூழ ராஜபவனி வந்து கொண்டிருந்தான் காக்கா. நவீன ஆயுதங்கள் காவல் செய்ய துயில் செய்தான். பத்திரிகையாளர்களை அழைத்து மாநாடு நடத்தினான். பாசறையில் காக்கா வகுப்பெடுத்தான்.

மீரானின் உலகம் குறுகியது. தெற்கே திரும்பினால் சவக்காலை, வண்ணான் தோணா, சுப்பர் வாடி கடந்து பனைகளுக்கும் தென்னைகளுக்கும் மேலால் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் மினாரா தெரியும். வடக்கே திரும்பினால் கல்லாற்று ஓடை தாழை மரங்களின் அணிவகுப்பின் முடிவில் ஓந்தாச்சி மட முடக்குத் தென்னைகள் நன்றாகவே தெரியும். வண்ணான் தோணா மண் சரிவுகளில் கடம்பு பூத்துக் கிடக்கும். எருக்கலம் பத்தைகளில் பூக்கொன்னைகள் தோறும் கருவண்டுகள் ரீங்காரிக்கும். எருக்கலம் காய்கள் வெடித்து சிறு விதைகளுடன் பஞ்சுகள் மேலெழுந்து காற்றில் மிதக்கும். நொச்சுப் புதர்களில் எலி வேட்டை தொடரும். செல்லனின் காலைப் பனங்கள்ளுக்கு சுவையூட்ட நண்டுகள் தேடி, கடலோரம் பூத்த நெட்டிகள் மீரானின் கைகளிலிருக்கும். சின்னப் பிள்ளைக்கு ஆசை வரும் போதெல்லாம் மதியக் கடலில் மீரானின் கால்கள் பன்னல் தோண்டும்.

ஒரு முறை சித்திரக் கடல், நெத்தலிச் சிவப்பாய்க் கிடந்தது. கரவலை அனைத்துக்கும் பெரும் பெரும் மீன் பாடுகள். கால் வைத்து நடப்பதற்கு கடற்கரையில் நிலம் இல்லாது போனது. நெத்தலிக் கருவாடுகள் மணல் போத்து சுருண்டு கிடந்தன. நிறை வெயிலில் மணலை உதிர்த்துப் போட்டு தலையைக் கிள்ளி விட்டு தின்பதற்கு நெத்தலிக் கருவாடு நிறையக் கிடைக்கும். மதாளித்த பயித்தங் காய்களோடு நெத்தலிக் கருவாடு மீரானின் வாயில் மணக்கும். அப்படியரு பொழுதில்தான் சின்னப் பிள்ளை மீரானுக்கு கூட்டாளியானாள். கடல் பயித்தங் காய்களும் நெத்தலிக் கருவாடும் சின்னப் பிள்ளைக்காக மீரானின் சாரன் மடிப்புக்குள்ளிருக்கும். அநேகமான வேளைகளில் அவைகளோடுதான் அவளைச் சந்திப்பான். பெரிய மனுஷியாகி அவள் ஊட்டோடு தங்கிவிட்ட போதும் கடல் பயித்தங் காய்களும் நெத்தலிக் கருவாடும் கொண்டு கொடுப்பான் மீரான்.

இப்படியெல்லாம் இருந்தவனுக்கு இந்த வருடம் மாரி பொய்த்தாற் போலவே அவன் வாழ்வும் பொய்த்துப் போய்விட்டிருந்தது. சின்னப் பிள்ளையின் நினைவுகளுடன் அவளது தாயே அவனுக்கு மனைவியாகிப் போனாள்.

முருகையா வீட்டிலிருந்து வந்தவன் ஊட்டுக்குப் போகவில்லை. பெண்டாட்டி வந்து பகல் சோத்துக்கு அரட்டியும் எழும்பவில்லை என்று, புள்ளு அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தான். தலைக்குக் கையால் முண்டு கொடுத்து கடலை ஒரு தரம் பார்த்தான். ஊத்து மணம் அவன் நாசிக்குள் நிறைந்து உணர்த்தியது. விடிபொழுதில் மாயவலைக்கு நிறைய மீன் படும் என்று அவன் மனது கூறியது.

எழும்பியிருந்து கொண்டான். ஊட்டுக்குப் போ வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதற்கு முன் ராசாக் காக்காவின் வாடிக்குப் போக வேண்டும். பதமாக கூட்டிய சிலும்பியில் இரண்டு "தம்" இழுக்க வேண்டும். புகையிலையும் முகிலியும் அளவோடு கலந்த கூட்டு வாசனை மீரானின் மனசை நிறைத்து கண் புருவத்தில் ஜில்லிட்டது.

கஞ்சா அடித்தால் நிறையக் கதைக்க வரும். மீரானுக்கு சில நாட்களில் விடிய விடியப் பெண்டாட்டியுடன் கதைத்துக் கொண்டிருப்பான். இறந்து போன உம்மாவை எண்ணி பெண்டாட்டியின் மடியில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுவான். ஆறுதலாக அவளது கைகள் அவன் முதுகைத் தடவிக் கொடுக்கும்.

வாப்பா மௌத்தான கையோடு, வாப்பா இருந்தவரை மீரானுக்கு கஷ்டம் அவ்வளவாய் இருக்கவில்லை, குடிவெறியில் அவன் புரியும் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டிருந்தான். கஞ்சாவுக்கு புகையிலை வாங்க சில்லறை பிடுங்கிக் கொள்வான். பெட்டிக்குள் வெளுத்த சாரனை எடுத்து உடுத்தி மனிசனாய்த் திரியச் சொல்வார். கஞ்சா குடியாதே, சாராயம் குடியாதே, ஒழுங்காக கடலுக்குப் போ, நேரத்துக்கு அம்புட்டதைத் தின்னு... என்பவரை முடிந்த மட்டும் காலால் உதைப்பான். அடி... நல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.

வாப்பா இருந்தவரை மீரானைப் பற்றியே அநேகம் கதைப்பார். அவனை ஒரு ஒழுங்கான தண்டயல் ஆக்க வேண்டும்; சொந்தமாக தோணி வைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற நிரம்பிய ஆசைகளுடன் அவர் இருந்தார். சீக்குடம்பை வளைத்து முழங்கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் அவர் ஆசைகள் கனவுகளாகவே போயிற்று. படுவான் கரைக் காடுகளிலும் பொத்துவில் காடுகளிலும் அரசியல் பேசித் திரிந்த மூத்த மகன், கண் காணா தேசத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த உடம்போடு அவர் கனவில் வந்து போனான்.

ஊட்டில் பெண்டாட்டியைக் காணவில்லை. சின்னப் பிள்ளை மட்டுமே இருந்தாள். மீரானைக் காணும் போதெல்லாம் அவனைக் கொல்ல வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு. பன்னல் கெண்டித் தந்தவன், கடல் பயித்தை ஆய்ந்து தந்தவன், நிலாக் கால இரவுகளில் எலி வேட்டைக்குக் கூட்டிச் சென்றவன், எருக்கலப் பஞ்சில் ஆசைகளைக் கட்டித் தூது விட்டவன். மனசில் கலந்தவன், தன் தாய்க்கு மாப்பிள்ளையான விதந்தான் என்னவென்று சின்னப் பிள்ளைக்கு புரியாது போயிற்று. அவளது காக்கா பிறந்த நாற்பதன்றுதான் மீரான் பிறந்ததென்று தன் தாய் சொல்ல சின்னப்பிள்ளை கேட்டிருந்தாள். பிள்ளைக்குச் சமமானவன், தாய்க்கும் புருஷனான விதம் சின்னப் பிள்ளைக்குத் தாங்க முடியாததாகவே இருந்தது.

சின்னப் பிள்ளையின் வாப்பா காலமான பின்னர்தான் மீரானின் புழக்கம் அதிகரித்திருந்தது. இந்த ஊட்டுக்குள் உம்மா இருக்கும் போதெல்லாம் மீரான் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தான். நிலாக் கால இரவுகளில் முற்றத்துத் தென்னைகளுக்குக் கீழே, விடி பொழுது வரை சின்னப் பிள்ளையும் அவனும் கதைத்துக் கொண்டேயிருப்பாள். கிட்டவே கேட்கும் அலையின் ஒலி வாகம் ஓய்ந்த கணப் பொழுதுகளில் வடலித் தென்னையில் குருத்தோலைகள் இரண்டு புணர்ந்து கொள்ளும் சலசலப்பு இருவருக்கு மட்டும் கேட்கும். வானத்திலிருந்து ஓரம் சாய்ந்து விழும் எரிகற்களில் ஒலிக்கீற்றுகள் சிலவேளை காணக் கிடைக்கும்.

இத்தா ஊட்டுக்குள் இருந்தவளுக்கு நிசாம் கோப்பித் தூள் வாங்கிக் கொடுத்த தொடர்பு திருமணத்தில் முடிந்து போய் விட்டது. சின்னப் பிள்ளையின் உம்மா குடித்து விட்டுக் கொடுக்கும் எச்சில் கோப்பியில் மீரான் உலகையே மறந்திருந்தான். தினமும் கோப்பிக்காகவும் போய் வருபவனாக இருந்தான்.

நிதானம் வந்த போது, ரொம்பவும் இழந்து போயிருந்தான் மீரான். அவனது இளமையின் ஆரம்பம், சின்னப் பிள்ளையின் தாயோடு அனேகம் கலந்து போயிருந்தது. பொண்டாட்டி இல்லாத ஊட்டில் மிகுந்த நேரம் மீரானால் தாங்க முடியவில்லை. குசினியில் அவனுக்காக இருக்கும் சோற்றை எடுத்து சாப்பிடும் தைரியம் வரவில்லை. ராசா காக்காவின் வாடிக்கே மீண்டும் நடையைத் தொடங்கினான். மீரானின் வரவைக் காத்திருப்பது போல, சிவமுகிலிக் கூட்டு சிலும்பியில் அடைக்க அரிபலகையில் காத்துக் கிடந்தது. ராசாக் காக்கா மெச்சக் கல்லில் கடைந்தெடுத்த சிலும்பிச் சாவியை பழந்துணியால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அடை கல்லை எடுத்து, புகைக் கசறு போகும் வரை துடைத்தெடுத்தார். புள்ளு அணை சிலையை தண்ணீரில் நனைத்து விரல்களுக்குள் பிழிந்து கொண்டிருந்தான். சீந்தா கயிறில் வளையம் போட்டு நெருப்புச் செய்து கொண்டிருந்தான்.

லாவகமாக கூட்டு அடைக்கப்பட்டு வாயில் நெருப்பு வளையம் போடப்பட்டு ஈரச் சீலைத் துண்டு போர்த்தப்பட்டு, இழுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டது சாவி. ராசாக் காக்கா மீரானிடம் நீட்டி இழுப்பைத் தொடங்கி விடச் சொன்னார்.

ராசாக் காக்காவின் வேண்டுதல்களை மீரானால் தட்ட முடியாது. சாவியை வாங்கி பெருவிரலால் மேல்பகுதியையும் மறு நான்கு விரல்களால் கீழ்ப்பகுதியையும் லாவகமாக இடுக்கி, உள்ளங்கையில் அணைத்துக் கொண்டு மூட்டிழுப்போடு இரண்டு தரம் நிறுத்தி, உள்ளிழுப்பாக இழுத்த போது, சாவி வாயில் நெருப்புத் தணல் சில கணங்கள் ஜுவாலித்து எழுந்தது.

மீரான் சகலதிலும் கைராசிக் காரன் என்று ராசாக் காக்காவின் வாதம். நீண்டு பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாக் கடலில் அவனுக்குத் தெரியாத இடமில்லை, பறட்டையன் கல்லில் வலைக்குச் சேதாரமில்லாமல் எப்படி வலை விட வேண்டும் என்பதும், ஆலடி வெட்டையில் பூக்கல்லுக்குள் வலை மாட்டிக் கொண்டால் ஒரு கண்ணும் பிசகாமல் எப்படிக் காப்பாத்த வேண்டும் என்பதும் மீரானுக்கு அத்துப்படி. நீலாவணைத் தோணா நேரே ஒன்பது பாகத் தாழ்வில் சீலா பிடிக்க கும்பிளா வலை விட்டேனேயானால், பொலுபொலுவென விடிவேளையில் தோணி முழுக்க சீலா அடுக்கப்பட்டிருக்கும்.

சுபஹுக்குத் தோணி தள்ளி பறட்டையன் கல்லுக்கு ஓரமாக வலை விட்டு ஒரு பீடி பத்த வைத்து முடிந்தவுடன் வலையைக் கிளப்பினானேயானால், பொக்குவாய்க்காரர்களும், குதிப்பான் குட்டிகளும் வலையில் பூத்துக் கிடக்கும். கரைநீர் தெளிவில்லாத போதும், பதினாலு பாகத்துக்கும் சாள வலை கொண்டு போனால், விடிய ஆறு மணிக்கெல்லாம் மாப்பிள்ளைக் கீரி தோணியில் நிரம்பிக் கிடக்கும்.

என்ன மீரான், யோசன போல? இந்தக் கிழம முழுக்கத் தொழிலில்ல. செலவுக்கும் காசில்ல. இண்டெக்கும் உனக்கு நல்ல வெறி. புள்ளக் கொண்டு சாளவல ஏத்தி வெச்சிருக்கன். விடிய சுபஹுக்கு கடலுக்குப் போ. ஆண்டவன் நமக்கு மொகம் பார்ப்பான். ராசாக் காக்காவின் பேச்சுக்கு மீறி மீரான் ஒன்றும் பேசவில்லை. இரவு வெகுநேரமாக ராசாக் காக்காவின் வாடியிலேயே இருந்தான். அவர் கொடுத்த பழஞ்சோத்தைத் தின்று கொண்டு அவர் வாடியிலேயே படுத்துக் கொண்டான்.

மீரானைப் பார்த்த வண்ணம் காத்துக் கொண்டிருந்த பொண்டாட்டி, எப்போது தூங்கிப் போனாளென்று அவளுக்கே தெரியவில்லை. அவனுக்காக வைத்திருந்த நிசான் கோப்பிக் கட்டு முந்தானைத் தலைப்பில் மணமெடுத்தது. மீரானை எண்ணும் போதெல்லாம் இப்பொழுது அவளுக்குப் பாவமாகத் தோன்றுகிறது. அவனோடு படுக்கும் ஒவ்வொரு வேளையும் மனசில் பாறாங்கல் அழுத்த துவண்டு போவாள். குமரியோடு படுத்து சல்லாபிக்க வேண்டியவனை தன் வழிப்படுத்திய விதம் என்னவென்று அவளுக்கு இன்னும் புரிவதாயில்லை.

மீரானின் தோணிக்கு நல்ல பம்பலாம். கண்ணுக்கொரு பொக்குவாய்க்காரரும் கீரியுமாம். வலையை முழுசா கொண்டு வர ஏலாமல், துண்டு துண்டாய் வெட்டி ஏத்தி கொண்டாரிக்கினமாம், இதற்கு மேலும் ஊட்டிலிருக்க பொண்டாட்டி பிரியப்படவில்லை.

மீரானைக் காணும் ஆவல் முனைப்பாக ராசாக் காக்காவின் வாடிக்குச் சென்றாள்.

சரியான மீன்பாடு. வியாபாரிகள் போட்டா போட்டி. பொன் கணக்கில் மீனை கச்சிதமாக ராசாக் காக்கா வித்துக் கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து படங்குகளில் மீன் பரவிக் கிடந்தன. தலைக்கு மேலால் காகமும் புள்ளுகளும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தலை கழன்ற மீன்களுக்கு சிறுசுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மீரானுக்கும் தண்டுக்காரப் பிள்ளைகளுக்கும் திறமான முகிலி வாங்க ராசாக் காக்கா ஆளனுப்பியிருந்தார். மீரானின் ஊட்டுக்கு நிறெஞ்ச கறியும் அனுப்பியிருந்தார்.

சகலதும் முடிந்து வாடியை விட்டு எழும் போது மதியமாகி விட்டது. மீரானின் மடிக்குள் காசு கனமாக இருந்தது. பெரிய உற்சாகத்துடன் ஊட்டுக்குப் போனான் மீரான்.

குளித்த கையோடு தலையைத் துவட்டி முடிந்ததும், பெண்டாட்டி கோப்பிக் கிளாசை நீட்டினாள். வாங்கிக் கொண்டு அவளைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தான். அவளும் பதிலுக்குச் சிரித்து விட்டு குசினிக்குள் நுழைந்தாள்.

கீரி மீன் பொரியல், கீரி மீன் பால்ச்சொதி, மீரானின் விருப்பமான முருங்கைச் சுண்டல், ஒரு பிடி பிடித்தான். நிசான் லகரியில் பெண்டாட்டிக்கும் ஊட்டி விட்டான்.

பகல் தணிந்து மாலை தொடங்கிய நேரம், கடல் காத்தில் புலால் மணம் நாசியை நிறைத்தது. பெண்டாட்டி மடியில் மீரான் கிடந்தான். என்ட ராசா என்னால் இனிமேல் ஈடு தர ஏலாது, ஒரு கொமரியப் பாத்து தேடிக்க என்றாள். வாசலில் சின்னப்பிள்ளை கூட்டாளிகளுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அவளின் உருவம் மீரானின் முன்வந்து அவனைப் பயமுறுத்தியது.

இனியெனக்கென்ன... யாரென்ன முடிப்பா... நான் இப்ப இருபத்தைந்து வயதுக்கெழவன் என்ற மீரானைக் கட்டியணைத்து உச்சி மோந்தாள் பெண்டாட்டி.

நீண்ட வெகு நாட்களுக்குப் பின்னர், முற்றத்து வடலித் தென்னையில் குருத்தோலைகள் இரண்டு சடசடத்து புணரும் சத்தம் சின்னக் கிளியின் செவிகளுக்கு மட்டும் கேட்டது.

***
நன்றி : ஹனீபாக்கா, றியாஸ் குரானா , ரியாஸ் அஹ்மத் 

Wednesday, May 9, 2012

நாகூர் ரூமியின் கடிதம் (2000)


'மீண்ட பொக்கிஷம்' என்ற தலைப்பில் என் கிறுக்கல்களை நண்பர் நாகூர்ரூமி முன்பு வலையேற்றியிருந்தார். அந்தக் கடனை இப்போது தீர்க்கிறேன். நாங்கள் ஒன்றும் கி. ராஜநாராயணனோ கு. அழகிரிசாமியோ அல்ல, 'உன் சிரங்கைப் பற்றி நீ வர்ணித்தது என் சிரங்கைப் பற்றி வர்ணித்தது போலவே இருந்தது!' என்று உண்மையான கடித இலக்கியம் செய்வதற்கு (சமயம் வாய்த்தால் 'செல்லையா கு.அழகிரிசாமியானது' எனும் - 'கொல்லிப்பாவை' இதழில் வந்த - கி.ராவின் அற்புதமான கட்டுரையை பதிவிடுகிறேன் பிறகு). இழவெடுத்த  இ-மெயில் வந்தபிறகு கடிதம் எழுதும் வழக்கம் காணாமல் போய்விட்டது; இலக்கியமும் தப்பித்தது. சரி, எனது அருமை நண்பரின் பழைய கடிதத்தைப் பாருங்கள்.  'சமீபத்தில் நான் ஒரு 20/30 புதிய கவிதைகள் எழுதிவிட்டேன். எனக்கே ஆச்சரியம். All spritual poems!' என்று 'ஆல்ஃபா மாஸ்டர்' எழுதியிருப்பதை பார்க்கும்போது இன்றைக்கும் செம சிரிப்பு வருகிறது. வேறு சிலரின் முக்கியமான கடிதங்களும் இருக்கின்றன. நேரம் வரும்போது 'காட்டுகிறேன்'.  நன்றி.  - ஆபிதீன்

***



10.11.2000
இரவு 9:10

அன்புள்ள இலக்கியச் சுடருக்கு ஆன்மீக தென்றல் சற்று தாமதமாக எழுதிக் கொள்வது. என்னை இலக்கியத்திலிருந்து தாங்கள் நீக்கிவிட்டதற்காக முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியச் சுடரின் தகிப்பில் ஆன்மீகத் தென்றலும் அவிந்து போகும் நாளை வெகுவிரைவில் எதிர்பார்க்கிறேன்!

இங்கு அனைவரும் நலம்.

'ஸ்நேகா-சென்னை' எனது சிறுகதைகளை அடுத்தமாதம் வெளியிடுகிறது. First proof இப்போது எனது கையில். உமது அவசர உதவி தேவை. குட்டியாப்பா, நாகூர் ரூமி - என்று நீர் எழுதித் தந்தால் - இந்த மாதத்திற்குள் - அட்டையில் அவற்றை உபயோகிப்பேன்.

முடியவில்லையெனில், இத்துடன் எனது ஒரு சில photos அனுப்புகிறேன். அதில் ஏதாவதொன்றை வரைந்து அனுப்பினால் அட்டை பின்பக்கம் அதைப் போட்டுக் கொள்வேன். ஸ்நேகாவும் இதனை விரும்புகிறது. உடன் எனது ambur@vsnl.com என்ற முகவரிக்கு e-mail செய்யும். உமது பதில் தேவை.

H-ஐ (ஹஜ்ரத்) நீர் பார்க்காமல் வந்தது பற்றி என் கருத்து : சரியா தவறா என்ற கேள்விதான் தப்பு. உறுத்தலில்லாமலிரும். அது போதும்.

சமீபத்தில் நான் ஒரு 20/30 புதிய கவிதைகள் எழுதிவிட்டேன். எனக்கே ஆச்சரியம். All spritual poems. 'இஸ்லாத்தில் எண்ணம்' என்ற என் கட்டுரை ஒன்று மதுரையிலிருந்து வரும் 'சிந்தனைச் சரம்' என்ற மாதாந்தரியில் பிரசுரமாகியுள்ளது இந்த மாதம். பாதி மட்டும். அடுத்த மாதம் அடுத்த பாதி வரும். (நீண்ட கட்டுரை).

'மறைவானவற்றை மனிதர் அறிய முடியுமா?' என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

எனது அடுத்த கடிதத்தில் அவைகளின் Xeroxஐயும் ஆங்கிலத்தில் நானே மொழிபெயர்த்து அனுப்புகிறேன். 'நாகூர் பக்கத்தில்' வைக்கலாம்.

சமீபத்தில் ஞானக்கூத்தன் கேட்டுக்கொண்டபடி National Book Trust India வெளியீட்டில் சேர்க்க எனது ஆறு கவிதைகளை அனுப்பிவைத்தேன்.

kumudam.com-லிருந்து கடிதம் வந்தது. சில கவிதைகளும் ஒரு கவிதையும் அனுப்பி வைத்தேன்.

'ரெய்ஹான் பலகை' என்றொரு கதை விரைவில் முஸ்லிம் முரசில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.

இந்த ஆன்மீகத் தென்றலின் இலக்கியப் பணிகள் தற்போதைக்கு இவ்வளவே. இலக்கியச் சுடரின் ஆன்மீகப் பணிகள் குறித்தும் அறிய ஆசைப்படுகிறேன்.

உம் எழுத்துக்கு முன்னுரை தர எந்த காமெடி நடிகனும் தேவையில்லை. நான்தான் இருக்கிறேனே...

ஜஃபருல்லா நானாவுக்கு அநேகமாக இன்று cotaractக்கான கண் ஆபரேஷன் இந்நேரம் முடிந்திருக்கும்.

உமக்கொரு இன்ப அதிர்ச்சி: கூடிய விரைவில் இலக்கியச் சண்டமாருதம் கவிஞர் தாஜ் அவர்கள் உம்மைச் சந்திப்பார்! (அய்யோ!  - ஆபிதீன்)

ரமலானில் இந்திய நேரப்படி காலை 4:15 to 4:45 வரை தினசரி ஒளிபரப்பாகும் ராஜ் டி.வியின் ரமலான் நிகழ்ச்சியில் என் மகள் ஃபஜிலா 'இஸ்லாம் காட்டும் ஏகத்துவம்' என்ற தலைப்பில் பேசுவாள். சரியான தேதி தெரியவில்லை. அநேகமாக முதல் நாளாக இருக்கும். ·ஃபஜிலாதான் முத்லில் பேசினாள். ஷாயிஸ்தா Quiz-ல் கலந்து கொண்டாள். முடிந்தால் பாரும்.

மற்றவை உமது பதில் கண்டு,

அன்புடன்,

முஹம்மது ரஃபி

**
PB:  உமது கதைகளை எனக்கு - நம்பி - அனுப்பினால் ஸ்நேகா மூலம் வெளியிட முயல்வேன். பதில் தேவை.
***

அவ்வளவுதான். நன்றி : நண்பர் நாகூர் ரூமிக்கு . அந்த 'அய்யோ' மட்டும் இப்போது நான் சேர்த்தேன் ;-) - ஆபிதீன்

Thursday, May 3, 2012

மதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்

ஒரு ஜாலியான வரலாற்று ஆரம்பம்தாஜ்

முந்தைய ஆட்சிக் காலத்தில், திமுகவின் அரசியல் ஆதீனகர்த்தாவாக மதுரையில் சகல பரிபாலனமும் செய்துவந்த கருணாநிதியின் மூத்தமகன் அழகிரிக்கும், திமுகவின் நிழல் அதிகார மையமாக வலம் வரும் கருணாநிதியின் இளையமகன் ஸ்டாலினுக்கும், அவர்களது குடும்பச் சொத்தாகிப் போன கழக மடத்தின் சகல உடைமைகளுக்குமான ஏக வாரிசாக 'முடிசூட்டலை' வேண்டி அவர்களுக்குள் நடந்தேறிக்கொண்டிருக்கும் சகோதர சர்ச்சைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது, மதுரையில் சமீபத்தில் நடந்தேறிய இன்னொரு மடத்தின் வேறொரு முடிசூட்டுவிழா!

இன்றைய மதுரை ஆதீனகர்த்தாவான, 'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள்' தனது 'மட' வாரிசாக 'ரஞ்ஜிதா புகழ்' நித்தியாவுக்கு "மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ
நித்தியானந்தா ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' என நாமகரணமிட்டு நடந்த முடிசூட்டு விழா... கோலாகல நிகழ்வாக நடந்தேறி
இருக்கிறது.

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி என்கிற, 'நம்ம அருணகிரி' பிறந்த வளர்ந்து படித்ததெல்லாம் சீர்காழி... சீர்காழி... சீர்காழி!!! அதாவது எங்க ஊருங்க! எங்க ஊருன்னு சாதாரணமா சொல்வதும் கூட போதாது, நான் சார்ந்த தாடாளன் கோவில் வட்டத்துக்காரர் அவர்! அவர் வசித்த தாடளான் வடக்குத் தெரு எங்க பெரிய பள்ளிவாசலுக்கு ரொம்பப் பக்கம்! அவர் சைவக் குடும்பத்துப் பிள்ளை. பிள்ளைமார்.  வறுமையான பின்னணி! 'லால்பேட்டையார்' என்கிற இஸ்லாமியருக்கு சொந்தமான '10க்கு10' தொகுப்பு குடியிருப்பில் வாடகைக்கு இருந்தது அவரது குடும்பம்! மாயூரம் - தர்மபுர மடத்தின் தமிழ்க் கல்லூரியில்  கஷ்டப்பட்டு 'புலவர்' படித்தோதியவர். படிப்பு போக மீத நேரங்களில் திமுக. அனுதாபிக்குண்டான வேலைகள். காலம் 1964ஆக இருக்கும்.

திராவிட முன்னேற்றக்கழகம் 1967-ல் பதவியேறி பெரியாரோடு கைக்கோர்த்துக் கொண்டபோது, பெரியாரின் கொள்கை அலை, திமுகவில்
அநியாயத்திற்கு எதிரொலித்தது. எங்களூரிலும் அந்த அலைக்குப் பஞ்சமில்லை! குறிப்பாய் நம்ம அருணகிரி வசித்த தாடளான் வடக்குத் தெருவில்தான் அந்த அலையே சூழ்கொள்ளும்! நம்ம அருணகிரி அந்தச் சூழலில் தினைக்கும் முழுகி எழுபவர். அப்படி முழுகி எழாமலும் அன்றைக்கு திமுக-வில் யாரும் பேர் போட முடியாது. கரையோரத்தில் நால் நனைய குளித்தால் போதும் என்று எவர் அன்றைக்கு முனைந்தாலும், கட்சியில் அவர்களது 'பத்தினித்தன்மை' கேள்விக் குறியாகிவிடும்!

கல்லூரியில் தமிழ் ஓதுவது, கழக அனுதாபிகளுக்கான பணிகள் மற்றும் ஓய்வு நாட்களில் சீர்காழியை சேர்ந்த தி.மு.க. 'M.P'-யான திரு.சுப்ரவேல்
அவர்களுக்கு பணிவிடை செய்யும் பையனாக நம்ம அருணகிரி ஓடியாடியபடிக்கு இருப்பார். அந்த M.P. மூலமாக அப்போதைக்கு அவர் எதிர்
பார்த்ததெல்லாம்... தான் படித்த படிப்புக்கு ஏற்ப ஏதாவது ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் அல்லது அரசு இடைநிலைப் பள்ளியில் தமிழாசிரியர் வேலை மட்டும்தான். ஆனால் பாருங்கள், விதி அவரிடம் செல்லம் பாராட்டி விசேச விளையாட்டு விளையாடத் தொடங்கியது. அதை அவர் அப்போதைக்கு நிச்சயமாக அறியமாட்டார்! விதியைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் இங்கே அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

மதுரை மாவட்டத்தில் 1967-க்கு முந்தையக் காலக்கட்டத்தில், பிரபல வழக்கறிஞராக/ தி.மு.க.வில் முக்கியப் புள்ளியாக/ அண்ணாவாலும்
எம்.ஜி.ஆராலும் போற்றப்பட்டவராக திரு.மாதவன் விளங்கினார்! 1967-ல் திமுக வென்ற போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரானார்! பின்னர்
ஏதோவோர் முகாந்திரத்தில் 'தமிழ் முரசு' என்கிற நாளேட்டையும் தொடங்கி நடத்தினார். மதுரை மடத்துக்கும் அவர் ரொம்ப செல்லம் என்றும் சொல்வார்கள்!

அன்றைய மதுரை ஆதீனகர்த்தாவாக பதவிவகித்த 291-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சர் அவர்கள், தி.மு.க.வின் அனுதாபியாக
பேசப்பட்டவர்! ஒரு பொழுதில் மந்திரி மாதவனை 291-வது குருமகா சன்னிதானம் தனியே சந்திக்க நேர்கையில், 'தான் அடுத்த வருடம்
கைலாசத்திற்கு போக இருப்பதாலும் தனக்கும் வயசாகிக் கொண்டிருப்பதாலும் மடத்துக்கு அடுத்த வாரிசாக முடிச்சூட்ட தமிழோதிய நல்ல பிள்ளை ஒருவர் வேண்டும், அப்பிள்ளை நம் இயக்க அனுதாபியாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்ல, மாதவன் வழியே நான் குறிப்பிட விதி நம்ம அருணகிரிக்கு சூட்ட அதிர்ஷ்ட மாலையோடு புறப்பட்டது!

மதுரை ஆதீனம், நான்கு நாயன்மார்களில் ஒருவரானவரும், தேவாரம் பாடியவருமான ஸ்ரீ ஞானசம்பந்தர் வழிவந்த ஆதீனம்! ஸ்ரீ ஞானசம்பந்தர் சீர்காழி பதியில் அவதாரம் கொண்டவர். அதனால் என்னவோ மாதவன் அவர்கள், மதுரை மடத்துக்கான அடுத்த வாரிசை சீர்காழியில் தேடத் தொடங்கினார்.  தனது இயக்கத்தைச் சேர்ந்தவரும் நேர்மையாளருமான திரு.சுப்ரவேலு M.P.அவர்களிடம் 'மடத்திற்கு தகுதியான நல்ல பையன்' வேண்டும் என்றபோது, திரு.சுப்ரவேலு அவர்கள் மிகுந்த சந்தோஷமுடன் தன்னை அண்டி பணிகள் ஆற்றி கொண்டிருக்கும் 'நம்ம' அருணகிரி பையனை திரு.மாதவனிடம் அறிமுகப்படுத்துகிறார்.

பையனைக் கண்டதும், தான் தேடிவந்தப் பையனை சுளுவில் கண்டுவிட்டதாக மாதவனுக்கு மகிழ்ச்சி. என்றாலும், பையனின் சகல சைவப் புலமையையும்/ திராவிடப் பற்றினையொட்டிய திறனையும் பரிசோதிக்க வேண்டுமே?

திரு.மாதவன் அவர்கள் நம்ம அருணகிரியை கையோடு சென்னைக்கு அழைத்துப் போய் தனது பத்திரிகையில் பணியாற்றவைத்து பையனை கணிக்கத் துவங்கினார். ஓடியாடி திறம்பட பணிசெய்த நம்ம அருணகிரி 100க்கு100-ல் பாஸ்! அப்புறம் என்ன? 291-வது மதுரை ஆதீனகர்த்தாவிடம்
அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம அருணகிரிக்கு அடுத்து சில நாட்களிலேயே; ஓர் நல்லநாள் பார்த்து 292-வது மதுரை ஆதீனகர்த்தாவாக பட்டம்
சூட்டப்படுகிறது.

நிழல் அதிகாரத்தோடு மடத்தில் அங்கும் இங்கும் வலம் வந்துக் கொண்டிருந்த அருணகிரிக்கு அதிர்ஷ்டம் மீண்டும் விரைந்து பலமாகவும்
பலவந்தமாகவும் துணை நின்றது. காசிக்கு புறப்பட்டுப் போன மதுரை ஆதீனம் 201, போய் கொண்டிருந்த வழியிலேயே முக்தியடைந்து விடுகிறார். அந்த மரணச் செய்தி , நம்ம அருணகியை 'ஓவர் நைட்டில்' நிஜமான...'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' ஆக்கிவிடுகிறது!

***

மேலே..., எங்கள் ஊர்/ எங்கள் வட்டத்தைச் சேர்ந்த 'நம்ம' அருணகிரியைப் பற்றியும், அவரது அடுத்த அவதாரமான 'குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ
பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி'யைப் பற்றியும் நான் எழுதியவைகள் எல்லாம், எங்கள் ஊரை சேர்ந்த கழக முக்கியப் புள்ளிகள் சொன்ன நம்பகமான
தகவல்கள் அடிப்படையிலும், பத்திரிகைகளில் படித்த செய்திகளின் அடிப்படையிலும்தான். என்றாலும், அந்தச் சின்ன வயதில் நான்; நம்ம
அருணகிரியை பார்த்த ஞாபகம் நினைவில் உண்டு. வெள்ளையில், அழுக்குபிடித்த அரைக்கைச் சட்டை கசங்கிய நாலுமுழ வேஷ்டி சகிதமாக அவரது குடும்பம் குடியிருந்த குடியிருப்பில் இருந்து வீதிக்கு வந்துப் போவதைக் கண்டிருக்கிறேன். கட்சிக்காரர்களுடனும், அவர்களது கடைகளிலும் பேசா மடந்தையாக அவர் நின்றுக் கொண்டிருந்ததையும் என்னால் நினைவுகூற முடிகிறது. பாவமான.. 'தேமே'யென்ற தோற்றம் அவரது தோற்றம் என்பதாகவும் நினைவு.

மதுரை ஆதீனத்தை தீவிரமாக நான் அனுமானிக்கத் துவங்கியது 1980-களில்தான். அப்போது அவர் 'இந்து முன்னணி' மேடைகளில்
ஏறத்துவங்கியிருந்த காலம். அந்த மேடைகளில் அவ்வப்போது தமிழின் மகத்துவம் பேசி இருக்கிறார். அப்படி பேசாமலும்தான் அவரால் எப்படியிருக்க முடியும்? தமிழ் வளர்க்கும் மடத்தின் தலையாச்சே அவர்! ஒருமுறை மேடையில் அப்படி அவர் உணர்ச்சிவசப்பட்டு தமிழின் புகழ் பாடிய போது; இந்து முன்னணி தலைவர் ஒருவர், அவரது காதருகே வந்து... 'ஸ்வாமி... இந்த மேடையில் தமிழ்... தமிழென்று பேசிக் கொண்டிருக்காதீர்கள்' எனக் கூறவும் ஆதீனத்திற்கு ஏதோ பளீரென உரைக்க, அவர்களின் மேடைகளில் ஏறுவதை அத்தோடு விட்டார்.

அத்தோடு அதை விட்டார் என்பதற்காக 'சிவனெயென்று' அவர் இருந்துவிடவில்லை. பின்னர், தி.க. / திமுக மேடைகளில் சில நேரமும், ஈழப் பிரச்சனை சார்ந்த மேடைகளில் சில நேரமும், நாயகம் பிறந்த நாள் மேடைகளிலும் புத்தக வெளியீடு மேடைகளிலும், தமிழ் தேசிய/ தமிழ் ஆர்வலர்களின் மேடைகளிலும் என்று பலதரப்பட்ட மேடைகளில் ஏறி பேச்சோ பேச்சென்று பேசிக் கொண்டிருந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் ஆர்வலர்கள் மாநாடு என்று வீரமணி நெடுமாற 'சசிகலா கணவர்' நடராஜன் முதலானோரோடு தஞ்சையில் மேடையேறிய மதுரை ஆதீனம், 'நடராஜன் அடுத்த முதல்வராக வரவேண்டும்' என்று கோரிக்கை வைக்க, நடராஜன் சிரித்தபடி அப்பேச்சை வரவேற்றிருக்கிறார். இதனை கொள்ளிக் கண்களோடு கவனித்த மேலாதிக்க சமூகப் பிரதிநிதிகள் சும்மா விடுவார்களா? 'அம்மா'விடம் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். இன்றைக்கு அவ்வப்போது நடராஜன் சிறையில் காலம் கழிப்பதற்கு மூலமே ஆதீனத்தின் அந்த மேடைப் பேச்சுதானாம்! சொல்கிறார்கள். ஆதீனம் ரொம்பவுதான் உணர்ச்சிவசப் பட்டுவிடுகிறார்!

எல்லோரும் தன்னைப் பார்த்து புருவத்தை உயர்த்த வேண்டும்! ஆனால், நிச்சயமாய் அது தனது எந்தவொரு சாதனையாலும் இருந்துவிடக் கூடாது! இப்படிதான் இன்றுவரை மதுரை ஆதீனம் இருந்துவருவதாக கருதுகிறேன். அவரது பேச்சும் 'தாங்க முடியாதவோர் பேச்சு. இது, சீர்காழியின் அடிப்படை 'ஜீன்'-ஆக இருக்குமோ என்றும் தோன்றுகிறது! சில நேரம், என்னைக் கண்ணாடியில் காணும் போதும் கூட அப்படித்தான் தோன்றும். சீர்காழி பதியின்கண் தோன்றிய சில நிஜமான கீர்த்திகள் என்னை மன்னிப்பார்களாக!

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் எங்களூரில்  வீரமணி, மதுரை ஆதீனம் இருவரையும் முக்கிய பேச்சாளர்களாகக் கொண்டு 'நாயகம் பிறந்த நாள்' விழா ஒன்று விமர்சையாக நடந்தது. அந்த விழாக்குழுவில் நானும் இருந்தேன். விழாவில் வீரமணி கலந்துக் கொள்கிறார் என்கிற போது நான் இல்லாமலா? அந்த விழா மேடை, ஆதீனம் பிறந்து வளர்ந்த தெருவின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்தது. அவரது பார்வைக்கு எட்டும் தூரத்தில் அவர் வசித்த பழைய 10க்கு10 வீடு! கொஞ்சம் மேல் நோக்கி திரும்பிப் பார்த்தால்... தனது இளமையில் தினமும் அவர் கண்டு வளர்ந்த எங்களது பெரிய பள்ளிவாசலின் மனோரா!

அன்றைக்கு மேடையில் வீரமணியின் பேச்சைவிட ஆதீனத்தின் பேச்சுதான் 'ஹைலைட்!'.  மேடைகளில் வழக்கமாக ஆதீனம் உணர்ச்சிப்படுவதைக் காட்டிலும் அதிகத்திற்கு அன்று இந்த மேடையில் உணர்ச்சிவசப்பட்டார். அவரது பழைய தெருவும், குடியிருந்த பழைய வீட்டின் நிழல் முகப்பும், தினைக்கும் தான் பார்த்தும் கேட்டும் வளர்ந்த பள்ளிவாசலின் மனோராவும் பாங்கு சப்தமும் ஆதீனத்தை அன்றைக்கு அப்படி ஒரு நிலைக்கு ஆழ்ப்படுத்திவிட்டது.  அத்தனையும் அவரது பேச்சில் உண்ர்ச்சி மயமாக வெளிப்படவும் செய்தது. நிகழ்வது 'நாயகம் பிறந்த தின விழா'வாகையால், தனது பேச்சுக்கிடையில்  ஒண்ணாம் கலிமா, ரெண்டாம் கலிமான்ணு ஓதிக்காட்டவும் தொடங்கிவிட்டார். கூட்டத்தினரின் கைத்தட்டலும் சிரிப்பும் அந்தத் தெருவையே அதிரச் செய்துவிட்டது. ஆனால் எனக்குத் தெரியும் , அவர் பேச வந்ததை விட்டு, இப்படிதான் ஒண்ணுகிடக்க ஒண்ணு பேசுவார் என்று.


இன்றைக்கு, தனது ஆளுமைக்கு உட்பட்ட மதுரை மடத்தை 'ரஞ்ஜிதா புகழ்' நித்தியானந்தாவுக்கு விற்றுவிட்டதாக பி.பி.சி. செய்தியில் கேட்டேன்.
செய்தியினூடே 13 நிமிடங்களுக்கான மதுரை ஆதீனம்/ நித்தியா பேட்டியையும் ஒலிபரப்பு செய்தார்கள். வேலைமெனக்கட்டு அவசியமாக அந்தப் பேட்டியை கேட்டேன். இரண்டுப் பேர்களுமே அநியாயத்திற்கு பேத்தலோ பேத்தல் என்று பேத்தினார்கள். பி.பி.சி.யின் எந்த ஓர் கேள்விக்கும் சரியான பதிலில்லை. பேச்சில் 'லாஜிக்' வேண்டும் என்பதே இருவருக்கும் தெரியவும் இல்லை. அவர்கள் இருவரும் குழம்பி, கேட்கும் நேயர்களையும் குழப்பினார்கள். ஆனால்... இவர்களிடம்தான்... இந்த மாதிரி ஆட்களிடம்தான் கோடி கோடியென்று பணம் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது! அவர்களே போதும் என்றாலும், அதிர்ஷ்ட லெட்சுமியும் கேட்பதில்லை.  

இவர்கள் வாழ்கிற இந்த மண்ணில்தான், குன்றக்குடி அடிகளார் மாதிரியான தெளிவான பார்வையும்,  உயர்ந்த சிந்தை / வளமான சொல்லாற்றல் கொண்ட மதிப்பிற்குரிய மடாதிபதியும் வாழ்ந்தார் என்பதை கேள்வியுறும்போது... நம்ப முடியாது வியந்து போகிறோம்!

***
நன்றி : ஸ்ரீலஸ்ரீ சீர்காழி தாஜ் அவர்கள் | மின்னஞ்சலில் உதைக்க : satajdeen@gmail.com
***
தொடர்புடைய எச்சரிக்கை : 'பத்து நாட்களில் கருத்தை வாபஸ் பெறவேண்டும்' : நித்யானந்தா (தினமலர்)