Thursday, April 26, 2012

மூட்டைப்பூச்சியும் கடவுளும் - தி.ஜ.ர.

சுதேசமித்திரன் தீபாவளி மலரில் (1972) வெளியான சிறுகதை. தி.ஜ.ர. அவர்கள் பற்றி மலர்மன்னன் எழுதிதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

***



மூட்டைப்பூச்சியும் கடவுளும்
 தி.ஜ.ர.

எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர? 'படி படி' என்று பாட்டியும் அம்மாவும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். 'படிக்காவிட்டால் காபி இல்லை; சாப்பாடு இல்லை' என்பார்கள். காபிக்காகக் கொஞ்சம் சாப்பாட்டுக்காகக் கொஞ்சம் படிப்பான். என்ன படிப்பான்? தமிழுக்குக் கோனார் நோட்ஸ்; இங்கிலீஷ¤க்கு ஏதோ நோட்ஸ்; பாடங்களை மட்டும் படிக்கவே மாட்டான். பரீட்சையில் சுழிதான். ஆனாலும் என்னவோ 'பாஸ்' செய்து விடுவான். அது என்ன மாயமோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அது எப்படியோ போகட்டும்.

அவனுடைய சந்தேகங்களை இல்லையா சொல்ல வந்தேன்!

ஒரு நாள் திடுதிப்பென்று அவன் கேட்டான். 'இந்த மூட்டைப்பூச்சி நம்மை ஏன் கடிக்கிறது, தாத்தா?'

'பசி தீர்த்துக் கொள்ளக் கடிக்கிறது' என்றேன் நான்.

'நம்மைக் கடித்தால் பசி தீருமா?'

'நம் ரத்தம் அதன் உணவு. நம்மைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதன் பசி தீர்கிறது.'

'நம் ரத்தம் அதற்கு ஏன் உணவாயிருக்கிறது? எறும்பு மாதிரி அரிசி, பருப்பு, சர்க்கரை இப்படி ஏதாவது அது தின்னக்கூடாதோ?'

'தின்னலாம். ஆனால் எறும்பின் பிறவி அப்படி; மூட்டைப் பூச்சியின் பிறவி இப்படி.'

மேலும் மேலும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தான் பையன்.

தொண தொணப்புப் பொறுக்காமல் கடவுளைத்தான் நான் சரணடைய  வேண்டியதாயிற்று.

'மனித ரத்தம் உன் உணவு' என்று மூட்டைப்பூச்சிக்குக் கடவுள் வரங்கொடுத்திருக்கிறாராம் என்பதாகச் சொன்னேன். அதற்கு மேல் தத்துவ சாஸ்திரி மாதிரி கடவுளைப்பற்றிச் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப் பையன் தொடங்கி விட்டான். கடவுளே இல்லையாமே, கடவுள் என்பதே கட்டுக்கதை என்கிறார்களே, கடவுள் என்பது சுத்த மோசடியாமே, சமயக் கதைகளெல்லாம் ஒரே புளுகு மூட்டையில்லையா, அறிவியலை நம்பினால் கடவுளை நம்ப இடமே இல்லையாமே என்றெல்லாம் பல கேள்விகளைப் போட்டு என்னைத் தொளைத்து விட்டான். நானே இந்த ஐயங்களால் திணறிப் போனேன். கடவுளை யாராவது கண்டதுண்டா? கண்டிருந்தால் அது உரு வெளி மயக்கமாய்த்தான் இருக்கும். அல்லது கடவுளின் இலக்கணப்படி அது கடவுளாயிருக்க முடியாது. கலப்பற்ற நிர்க்குணப்பிரம்மமே கடவுள் என்கிறார்கள், அப்படியென்றால் அந்தக் கடவுளால் நமக்கென்ன பயன்? கடவுள் என்ற பெருங்கடலில் நாமெல்லாம் நீர்க்குமிழிகளா? அல்லது தனித் தனி ஜீவன்களா? எல்லாம் பழைய பெரியவர்கள் செய்த விசாரணைகள்தான். என் புதிய சிந்தனை ஒன்றுமில்லை. ஆனாலும் எண்ண எண்ண மனத்தைக் குழப்புகிறது. பையனின் மூட்டைப் பூச்சிக் கேள்விகள் இப்படித் தத்துவ
விசாரணையில் என்னை இறக்கி விட்டன.

என்ன தத்துவ சிந்தனை செய்தாலென்ன? உருவக் கடவுள் இருக்க முடியாது; அருவக் கடவுளை மனனம் செய்ய முடியவில்லை. ஆகவே வாழ்வுத் தொல்லைகளில் விளைவான மனச் சங்கடங்களிலிருந்து விடுபட உருவக் கடவுள்தான் வேண்டியிருக்கிறது. நம்பாவிட்டாலும்  உருவக் கடவுளையே தியானிக்கிறேன். அதுதான் , திருப்தியில்லாவிட்டாலும், ஏதோ ஆறுதல் தருகிறது. அது என்னவானாலும் சரி; கடைசியில், 'யார் என்ன சொன்னாலும் சரி;
என்ன நினைத்தாலும் சரி; கடவுள் இருக்கத்தான் இருக்கிறார்' என்று பையனிடம் அடித்துச் சொன்னேன்.

'அப்படியானால் அவருக்கு அறிவு உண்டா? மனிதனைப் படைத்து, அவனுடைய ரத்தத்தை நீ குடி' என்று மூட்டைப் பூச்சிக்கு ஏன் வரம் கொடுத்தார்?'

பையன் கேட்டது சரியான கேள்வி. என்னால் ஏற்ற பதில் சொல்ல முடியவில்லை. என்னவோ மழுப்பினேன்.

அடுத்து அவன் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது. 'நான் கடவுளாயிருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?' என்றான்.

'என்ன செய்திருப்பாய்?'

'மனிதனையும் படைத்திருக்க மாட்டேன்; மூட்டைப் பூச்சியையும் படைத்திருக்க மாட்டேன்.'

'சரி. சரி; மகா புத்திசாலி. பாடத்தைப் படி. இல்லாவிட்டால் உதைப்பேன்'

பையன் ஓய்ந்து விட்டான். ஆனால் படிக்கவில்லை.

'படிடா'

'என்ன படிப்பது?'

'இங்கிலீஷ் படி; தமிழ் படி.'

'இரண்டு பரீட்சையும் ஆகிவிட்டது'.

'நாளைக்கு என்ன பரீட்சையோ?'

'கணக்கு'

'கணக்குப் புத்தகத்தை வைத்துக்கொண்டு கணக்கைப் போடு.'

கணக்குப் புத்தகத்தை அவன் எடுத்துப் பிரித்தான். ஆனால், கணக்குப் போடுவதாகத் தெரியவில்லை. கன்னத்தில் கை வைத்துக்கொண்டு புத்தக
ஏடுகளைப் புரட்டியபடி ஏதோ ஆழ்ந்த யோசனை செய்யலானான். 'எக்கேடு கெட்டுப் போகட்டும்' என்று அதோடு விட்டுவிட்டு என் ஜோலிகளை
கவனிக்கத் தொடங்கினேன்.

அதன்பின் சில நாள் ஆயின. கடவுளையும் மூட்டைப் பூச்சியையும் பையன் மறக்கவேயில்லை. அதே சிந்தனையாயிருந்திருக்கிறான். பரீட்சை எல்லாம் முடிந்து விட்டது.

'எல்லாப் பரீட்சையும் தீர்ந்தது' என்று உற்சாகமாய்ச் சொன்னான்.

'எல்லாம் சுழிதானே?'

'படிக்குப் பாதி மார்க் வரும்.'

'பார்க்கலாம். இதுவரையில் வந்ததில்லை.'

'இந்தத் தடவை வருகிறது பார், என்ன பந்தயம்? வந்தால் பதினைந்து பைசா தருவாயா?'

'வந்தால் நான் தருகிறேன். வராவிட்டால் நீ தரவேண்டும்.'

'நான் எங்கேயிருந்து தருவேன். நானா சம்பாதிக்கிறேன்?'

இதேபோல் கொஞ்சநேரம் சம்வாதம்; பிறகு பழைய மூட்டைப் பூச்சியைத் தொடர்ந்தான் பையன்.

'ஏன் தாத்தா, இந்த மூட்டைப் பூச்சிக்கு எத்தனை கால்?'

'தெரியாது, நான் எண்ணவில்லை.'

'மனிதனுக்கு இரண்டு கால், மாட்டுக்கு நாலு கால், ஈக்கு ஆறு கால், சிலந்திக்கு எட்டு கால்..'

'பூரானுக்கு ஆயிரங்கால். ஆதிசேஷனுக்கு ஆயிரந் தலை; காலே இல்லை.'

'சரி தாத்தா, மூட்டைப் பூச்சிக்கு இரண்டாயிரம் காலா?'

'துளியூண்டு மூட்டைப் பூச்சிக்கு எப்படி இரண்டாயிரம் கால் இருக்க முடியும்?'

'பின்னே எத்தனை கால்தான்? சொல்லேன்.'

'உன் சின்னம்மாவைக் கேட்டுப் பார். தெரியலாம். அவள்தான் பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு மூட்டைப் பூச்சியின் மேல் பிடித்து அதை ஆராய்கிறாள்.'

'அவள் கொலைகாரி. சூரிய வெயிலில் பூதக்கண்ணாடிகொண்டு அதைத் துடிதுடிக்கச் செய்து அதைக் கொல்லுவாள். நான் கேட்டால், சொல்ல மாட்டாள். என்னை அடிப்பாள்.'

'மூட்டைப் பூச்சிக்கு எத்தனை கால் இருந்தால் உனக்கென்ன? உனக்கு இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?'

'ராத்திரி தாங்க முடியாமல் கடிக்கிறது. விளக்கைப் போடுவதற்குமுன் அதிவேகமாய் ஓடி மாயமாய் மறைந்துவிடுகிறதே, அது எப்படி?'

ஆமாம், உண்மை. பையன் சொல்வது உண்மை. கடவுளைப் போல் மூட்டைப் பூச்சி அந்தர்த்தானம் ஆகி விடுகிறது. ஒன்றோ இரண்டோ மட்டுமே கண்ணில் படும். மற்றவை எல்லாம் போன இடம் தெரியாமல் போய்ப் பதுங்கி விடுகின்றன. கண்ணில் பட்ட ஒன்றிரண்டும் கூடக் கையில் பிடிபடாமல் ஓடித் தப்பி விடுகின்றன. அடுத்து விளக்கை  அணைத்தால் போதும். முலு முலு என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து சுள்சுள் என்று பிடுங்குகின்றன. இந்த மூட்டைப் பூச்சிக்குதான் எவ்வளவு சாமர்த்தியம்! இது பதுங்காத இடமில்லை. மேஜை, நாற்காலி, புத்தகங்கள், சுவர் வளைவுகள், கதவிடுக்கு, சுதிப்பெட்டி, பாய், படுக்கை எங்கும் சர்வ வியாபியாய் ஒளிந்து கொள்கிறது. இதை நினைக்கும்போது ஆயிரம் சந்தேகங்கள் தோன்றின. இதற்கு அறிவு உண்டா? எல்லாம் உள் உணர்வுதானா? வெளிச்சத்தைக் கண்டால் இதற்குக் கண் கூசுமா? கண்தான் உண்டா? இந்திரனைப்போல் உடம்பெல்லாம் கண்ணா? மாட்டு வண்டியைவிடக் குதிரைவண்டி வேகம்; குதிரைவண்டியைவிட ரெயில்வண்டி, மோட்டார்கார் இவை வேகம். ஏரோபிளேன் அதைவிட
வேகம். ஜெட்பிளேன் மேலும் வேகம்; காற்று இன்னும் வேகம்; வாயுவேக மனோவேகம் என்று எல்லாவற்றையும்விடப் பெரும் வேகத்தைச்
சொல்வார்கள். என்னைக்கேட்டால் மூட்டைப் பூச்சியின் வேகத்தைத்தான் இணையற்றதாக்ச் சொல்வேன்.  இந்தப் பூச்சியைப் பற்றி எந்த உயிரியல்
நிபுணராவது ஆராய்ச்சி செய்திருக்கிறாரா? ஒருநாளில் நூற்றுக்கணக்கான் மூட்டைப்பூச்சிகளைக் கொல்கிறோம்.; மறுநாளூம் அதற்குமேல் பூச்சிகள்
வந்து பிடுங்குகின்றன.  யாரோ ஒரு அசுரனின் ரத்தத்தைச் சிந்தினால்  அத்தனை சொட்டு ரத்தத்திலிருந்தும் புதிய அசுரர்கள் தோன்றுவார்களாம்.  இந்த மூட்டைப்பூச்சியும் சாகச்சாக புதிய மூட்டைப்பூச்சிகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. இதுவும் அந்த அசுரப் பிறவியா? அவனைப்போல் வரம் வாங்கி வந்ததா? மூட்டைப் பூச்சியில் ஆண், பெண் உண்டா? பிரதம மந்திரி தொடங்கி எல்லாரும் குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரசாரம் புரிகிறார்கள். மூட்டைப் பூச்சிக்கு இந்தப் பிரசாரம் செய்வோர் யாராவது உண்டா? இதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாதா? கொசுவைக்கூட உலகெங்கும் ஒழித்துவிடப் போவதாக ஐ.நா. நிபுணர்கள் சொல்கிறார்கள்.; இந்த மூட்டைப் பூச்சியை ஒழிக்கும் முயற்சியில் யாருமே இறங்கவில்லையே, ஏன்? இந்த மூட்டைப்பூச்சியின் விஷயம் அத்தனையும் பெரிய புதிராய்த்தான் இருக்கிறது. கடவுளின் விஷயம் எவ்வளவு பெரிய புதிரோ அவ்வளவு பெரியது இந்தப் புதிரும். கடவுளைப் பற்றி ஆராய்வோரெல்லாம் இனி இந்த மூட்டைப்பூச்சியைப் பற்றியும் ஆராய்ந்தாக வேண்டும். இல்லையேல் எங்கள் வீட்டுப் பையனின் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது. முடியுமென்று யாராவது சொன்னால் முடியாதென்று நான் சவால் விடத் தயார். கடவுள்
உண்டு என்று சொல்வோருக்கு மட்டும் அல்ல; இல்லையென்று சொல்வோருக்கும் கூடத்தான் இந்தச் சவால்.

***

நன்றி : தாஜ்

Saturday, April 21, 2012

இந்தச் செய்தியை இன்னொருவர் சொல்லியிருந்தால்...

நான் , புலி , நினைவுகள் 1

நான் , புலி , நினைவுகள் 2

நான் , புலி , நினைவுகள் 3

***
நான் புலி நினைவுகள் - 04 - எஸ்.எல்.எம்.ஹனிபா

இந்திய அமைதிப்படை எமது தேசத்தை விட்டும் வெளியேறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவில், ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் செயலாளர் நாயகம் திரு. பத்மநாபா அவர்கள் நான் தங்கியிருந்த செவன் ஐலண்ட் ஹோட்டலுக்கு என்னைக் காண வந்தார். அவருடன் ஈ.பி.ஆர்.எல்.எப். உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் இருந்தார்கள்.
நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் "ஐயா! உங்களிடம் ஒரு தூது கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் விடுதலைப் புலிகளுடன் கொஞ்சம் நெருக்கமானவர் என்பதை நாங்கள் அறிவோம். தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தில் கிடைத்த அற்ப சொற்ப அதிகாரமுள்ள இந்த  வடகிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் கேள்விக்குள்ளாவதை நீங்களும் அறிவீர்கள். இந்த மாகாண சபையை நமது இலட்சியத்தை அடைவதற்கான ஆரம்பமாகக் கொள்வோம். இப்பொழுது இது ஒரு ஒற்றையடிப் பாதை. இன்னும் பத்து வருடங்களில் இது ஒரு தார்ச்சாலை. அடுத்த தலைமுறையில் நெடுஞ்சாலையாக உருவெடுத்து நமது இலட்சியத்தை அடையும். எந்த வகையிலும் இந்தச் சபையை கட்டிக் காக்க வேண்டும். ஈ.பி.ஆர்எல்.எப். உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்கின்றோம். ஸ்ரீலங்கா இந்திய அரசின் அனுசரணையோடு இந்தச் சபையை விடுதலைப் புலிகளின் கைகளில் அளிப்பதற்கு சித்தமாக இருக்கிறோம்.அவர்களைப் பொறுப்பெடுத்து சபையை முன்னெடுத்து செல்லச் சொல்லுங்கள்".

மறுநாளே, ஊருக்கு வந்த நான், கிழக்கிலங்கை பொறுப்பாளர் கரிகாலன் அவர்களை எனது வீட்டுக்கு அழைத்து விடயங்களைச் சொன்னேன். அப்பொழுது கரிகாலனுக்கு 25 வயது. எனக்கு 45 வயது. கரிகாலன் என்னைப் பார்த்து, "ஐயா! இந்தச் செய்தியை இன்னொருவர் சொல்லியிருந்தால் நடப்பது வேறு. எங்களுக்கு நீங்கள் வேண்டியவர் என்பதனால் விட்டு விடுகிறோம். என்னிடம் பேசிய இந்த விடயத்தை நீங்கள் யாரிடமும் சொல்லி விடாதீர்கள்" என்றார்.

(தொடரும்)

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )

Tuesday, April 10, 2012

ஏப்ரல் எட்டு ஒன்பது பத்து - எம்.எல்.எம். மன்சூர்

மன்சூர் அவர்களின் இந்தச் சிறுகதை பற்றி ஹனீபாக்கா சொல்வது :

யாழ்ப்பாணத்திலிருந்து அ. யேசுராசா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அலையில் இந்தக் கதை பிரசுரமான போது, அதைப் படித்த தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி அவர்கள் யார் இந்த மன்சூர்? மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது என யேசுராசா அவர்களுக்கு சொன்னதாகவும், அதே போல் மதிப்புக்குரிய பிரேமிள் அவர்கள் கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் இப்படியொரு கதை எழுதப்படவில்லை என்று ஆச்சரியப்பட்டதாகவும் என்னிடம் அண்மையில் மதிப்புமிகு நண்பர் யேசுராசா குறிப்பிட்டார். தனது வாழ்நாளில் எட்டுக் கதைகளை எழுதிய மன்சூர் வசம் ஒரு கதையுமில்லை. நான்கு கதைகளை வைத்துக் கொண்டு மீதி நான்கு கதைகளையும் நான் தேடித் திரிகிறேன். இலங்கை நண்பர்கள் யாரிடமாவது மன்சூரின் கதைகள் கிட்டுமானால், அனுப்பி வையுங்கள். அதைத் தொகுதியாகக் கொண்டு வர ஆவலோடு இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.  - அன்புடன் எஸ்.எல்.எம். ஹனீபா

***


ஏப்ரல் எட்டு ஒன்பது பத்து
எம்.எல்.எம். மன்சூர்

ஏப்ரல் 8, வெள்ளி

இன்று பெரிய வெள்ளிக்கிழமை விடுமுறை. ஆறு மணிக்கு கண் விழித்தேன். ஜயதிஸ்ஸ அவனுடைய கட்டிலுக்கடியால் குனிந்து சூட்கேசில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். இன்று ஊருக்குப் போவதில்லையென்று சொன்னான். நொச்சியாகமவுக்குப் போவதாகச் சொல்லிக் கண் சினித்திச் சிரித்தான். கண்களைத் தாழ்த்திச் சிரித்து விட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு முகத்தை இடமிருந்து வலமாக அசைக்கிற ஹேமலதா என்ற அந்தப் பெண்ணின் உருவத்தை ஒரு கணத்துக்கு நினைத்துப் பார்த்தேன். பாங்கில் ஈடு பிடிக்கும் பகுதிக்குத்தான் நிறையப் பெண்கள் வருகிறார்கள். வேறு பிரிவுகளுக்கு மாறுவதில் எந்த விதமான நாட்டமுமில்லாமல் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக ஜயதிஸ்ஸ அந்தப் பிரிவில்தான் வேலை செய்து வருகிறான். தங்கத்தைக் கையாள்வதில் 'ரிஸ்க்' அதிகம் என்பதால் யாரும் அந்தப் பிரிவை விரும்பிக் கேட்பதுமில்லை.

அவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்து, “ஓல் தபெஸ்ட்” என்று சொல்லி விட்டு ஆறரை மணிக்கு சூட்கேசை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினேன். கமகேயின் கடையில் டீ குடித்து, ஐந்து சிகரட்டுகள் வாங்கி சூட்கேசுக்குள் வைத்துக் கொண்டேன். தங்கச் செயினை விரல்களுக்கு மேலாக இழுத்து வைத்து, கழுத்தை இடது உள்ளங்கையால் தடவிக் கொண்டே, “ஊருக்குப் போகவா?” என்று கமகே சிங்களத்தில் கேட்டான். நான் சிங்கள ஆள் என்றுதான் அவன் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

பஸ் ஸ்டாண்டில் புதுவருட விடுமுறையில் ஊருக்குச் செல்பவர்களின் கூட்டம். ஏராளமான சூட்கேஸ்களும், பொதிகளும், முகங்களும். கண்டி 'கியூ'வின் தொடக்கத்தையும் முடிவையும் தேடிச் சலிப்புற வேண்டியிருந்தது. ஒழுங்கீனமாகத் தெரிந்த கியூவிலிருந்து விலகி, ஒதுங்கி நின்று சிகரட் பற்றிக் கொண்டேன். 'கோணர் சீட்'டில் சாவகாசமாக உட்கார்ந்து கண்ணாடி யன்னலைத் திறந்து விட்டுக் கொண்டு சுகமாகப் பிரயாணம் செய்கிற வசதி இன்று கிடைக்கப் போவதில்லை.

மாத்தளை வரும் வரையில் சீட் கிடைக்கவில்லை. சூட்கேசை கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு முன் சீட்டுக்கு அடுத்ததாக இருந்த சீட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். தம்புள்ள தாண்டியதும் குமட்டல் தொங்கி வாந்தி வருவது போலிருந்தது. பக்கத்திலிருந்த சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். கோணர் சீட்டில் இருந்த பெண் மாநிறமுடையவளாக இருந்தாள். காற்றில் அலைகிற மயிர்க்கற்றைகளை மென்மையான ஒருவித
அலட்சியத்துடன் குறும்பு செய்கின்ற குழந்தையை அதட்டுகிற தோரணையுடன் அவள் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். அடிக்கடி கால்களை அசைத்து முழாங்காலுக்கு அடிப்பகுதியில் கையை விட்டு, கவுணை இழுத்து சரி செய்து உட்கார்ந்து கொண்டாள். முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஹாமதுறுவின் பளபளக்கும் மொட்டைத்தலையை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவளுக்கு இடதுபுறத்தில் உட்கார்ந்திருந்த பெண் வெளிர் நீலத்தில் 'சாரி' அணிந்திருந்தாள். கைப்பையை மடியில் வைத்து இடது கையால் அணைத்துக் கொண்டிருந்தாள்.

விரல் மோதிரத்தில் ஆங்கில 'ஆர்' எழுத்து தெரிந்தது. கைப்பைக்குக் கீழே பெண்களுக்கான சிங்கள வாரப் பத்திரிகையொன்று மடிந்திருந்தது. என்னுடைய சூட்கேஸ் நழுவிச் சென்று அடிக்கடி முழங்காலுக்கு கீழே இருக்கிற அவளுடைய கால் பகுதியில் மோதிக் கொண்டது. அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் கோபமுமில்லாத, இரக்கமுமில்லாத விசித்திரமான முறையில் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் உட்கார்ந்திருந்த கணவனும் மனைவியும் மாத்தளையில் இறங்கினார்கள். கோணர் சீட்டில் உட்கார்ந்து யன்னலை நன்றாகத் திறந்து விட்டேன். சப்பாத்துக்களைக் கழற்றிக் கால்களைத் தூக்கி  முன் சீட்டின்
முதுகில் சேர்த்துக் கொண்டேன். குளிர்ந்த காற்று முகத்தில் பட்டவுடன் குமட்டல் மறைந்து அலாதியான ஒரு சுகம் வருடத்தொடங்கியது.

கண்டியில் இறங்குகிற போது மணிக்கூட்டுக் கோபுரம் 12.20ஐக் காட்டியது. இன்று ஜும்மாவுக்குப் போக முடியாது. இப்போது அடிக்கடி ஜும்மா தவறிப் போகிறது. வெள்ளிக்கிழமைகளில் ஊரில் இருந்தால் மட்டுந்தான் ஒழுங்காகப் பள்ளிக்குப் போக முடிகிறது. அதிலும் கூட நிறையச் சிநேகிதர்களைச் சந்திக்க முடியும் என்கிற விஷயம்தான் முன்னுக்கு நிற்கிறது. "மனிதர்களே! நீங்கள் இந்த உலகத்துக்கு வந்த போது உங்களுடன் மௌத்தை மட்டுமே எடுத்து வந்தீர்கள். ஒரு நாளில் இங்கிருந்து பிரிந்து செல்கிற போது நீங்கள் இந்த உலகத்தில் செய்த நன்மைகளையும் தீமைகளையும் மட்டுமே உங்களுடன் எடுத்துச் செல்லப் போகிறீர்கள்" என்று கதீப் குத்பா பிரசங்கம் செய்வதை, பாயில்
துருத்துக் கொண்டிருக்கும் நார் இழையை விரல்களால் விட்டு விட்டு இழுத்துக் கொண்டு, வெளி ஹவுதில் நீர் இறைபட்டு, தகர டின்கள் சிமெண்டில் மோதி எழுகிற ஓசையின் பின்னணியில் கேட்டுக் கொண்டிருக்கிற போது ஒரு 'த்ரில்' வரத்தான் செய்கிறது.

இன்று பகலுணவை முடித்துக் கொண்டுதான் வீட்டுக்குப் போக வேண்டும். இப்பொழுதே பஸ் ஏறினால் சந்தியில் இறங்குகிற போது ஜும்மா கலைந்து வருகிற கூட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அது சங்கடம்.

பஸ் நிலையத்துக்கூடாக தலதா வீதிப் பக்கம் நடக்கத் தொடங்கினேன். கபரகலை, லுல்வத்தை, மடுல்கலை, ஸ்கோலமுதுன.... என்று நெற்றியில் ஒட்டிக் கொண்டு ஏராளமான பஸ்கள் காத்திருந்தன. வாழ்க்கையில் ஒரு போதுமே போயிராத ஊராக இருந்தாலும் பெயரைப் படிக்கிற போது அந்த ஊரின் கற்பனைப் பிம்பமொன்று மனசில் பதிந்து போய் விடுகிறது. கிரின்ட் லேய்ஸ் பாங்கில் வேலை செய்கிற மனோகரனைத் தெரியுமா? என்று யாராவது கேட்டால், அந்த மனோகரனைக் கண்டும், சந்தித்தும் இராத போதும் அவருடைய உருவம் கற்பனையிலேயே வரையப்பட்டுப் படிந்து விடுகிறது.

சூட்கேசை இடது கையில் எடுத்துக் கொண்டு தலதா வீதி நடைபாதையில் மெதுவாக நடந்தேன். குனிந்து சணல் கயிற்றில் சிகரட் பற்ற வைத்துக் கொண்டேன். வழமையாகச் செல்லும் ஹோட்டலுக்குள் நுழைந்து மேல் மாடிக்கு ஏறினேன். மாடி வழித்திருப்பத்தில் பதிக்கப்பட்டிருக்கிற ஆளுயரக் கண்ணாடி பிரயாணக்களை படிந்திருக்கும் முகத்தைப் பிரதிபலித்தது. வெளி அரைச் சுவருக்கருகிலிருக்கிற மேசையொன்றுக்கெதிரில் அமர்ந்து இடது பக்கக் கதிரையில் சூட்கேசை வைத்தேன்.

எனக்கு வலது புறத்திலிருந்த மேசையில் குள்ளமான ஒரு தாடி இளைஞனும், சிவப்பில் ‘டீ சேர்ட்’ அணிந்திருந்த ஒரு யுவதியும் இருந்தார்கள். அந்த இளைஞன் பற்கள் வெளித்தெரியாமலேயே இரகசியம் பேசும் தொனியில் எதையோ அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். மேசையில் குனிந்து கைகளுக்கு மேல் மோவாயைப் பதித்து கண்களைச் செயற்கையான ஒரு தோரணையில் மூத்திற்நதவாறு அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். மேசையில் இருந்த சிகரட் பெட்டியை பெருவிரலாலும் ஆள்காட்டி விரலாலும் மேலே தூக்குவதும் கீழே விடுவதுமாக அவன் பேசிக் கொண்டே போனான். யுவதியின் கழுத்திலும் முகத்தின் பெரும் பகுதியிலும் படர்ந்திருந்த ஒருவகையான வெள்ளைத் தேமல் அவளிடம் இருக்கிற அசாதாரண அழகையும் அசிங்கப்படுத்தியது.

இடது புறமாகத் திரும்பிக் கீழே தலதா வீதியைப் பார்த்தேன். மூன்று மாணவிகள் பைல்களை ஏந்திக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்தவாறு பஸ் ஸ்டான்ட் பக்கம் மெதுவாக நடந்தார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்பது உடையைப் பார்க்கிற போது தெரிகிறது. அட்வான்ஸ் லெவல் படிக்கிறவர்களாக இருக்கும். டியூசன் வகுப்புக்கு வந்துவிட்டுப் போகிறார்கள் போலிருக்கிறது.

வெள்ளை யூனிபோம் வெயிட்டர் பெரிய தட்டில் சோற்றையும் கறிகளையும் எடுத்து வந்து வைத்து விட்டு வெற்றுத்தட்டை நீட்டுவாக்கில் கவிழ்த்துப் பிடித்துக் கொண்டு போனான். இந்தப் பகல்நேரத்தும மந்த்ததையும் சலிப்பையும் நினைத்துப் பார்க்கிற போது முருங்கைக்காய்க் குழம்பு, சோறு, இறைச்சி ஒன்றுமே ருசிக்கவில்லை. அவசர அவசரமாகக் கையலம்பி, சிகரட் பற்ற வைத்துக் கொண்டேன். எதிர் மேசை இளைஞனும் யுவதியும் இன்னமும் பழைய மாதிரியே இருந்தார்கள். ஹோட்டலிலிருந்து கீழே இறங்கி வருகிற போது வெயில் இன்னும் உக்கிரமாக அடிக்கத் தொடங்கியிருந்தது. இன்று நகரில் சனமில்லை. மாணவர்களும், மாணவிகளும், பைல்களையும், புத்தகங்களையும் காவிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள். பஸ்கள் வரும் வரையில் காத்திருந்தார்கள். கண்களை இடுக்கிக் கொண்டு தலைகளை மேலே நிமிர்த்தி பஸ்களின் பெயர்ப்பலகைகளைப் பார்த்தார்கள். “புருஷர் மட்டும்” என்று எழுதியிருக்கிற கழிவறைக்கு  வெளியே தரையில் இரண்டு காகங்கள் தத்தித் திரிந்தன. சாக் குமூட்டையொன்றுக்கு முன்னால், ஒரு கிழவன் குந்தி நின்று கசுருட்டை வாயின் ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்துக்குத் தள்ளி
புகையை வெளியில் ஊதிக் கொண்டும், சுற்றுவட்டத்தில் எச்சில் துப்பிக் கொண்டும் இருந்தான். பொத்தான்களைக் கழட்டி, சட்டையின் நெஞ்சுப்பகுதியை அவன் அகலமாகத் திறந்து விட்டிருந்தான். சுருங்கிய மார்புப் தோலில் பச்சை குத்தியிருந்த நாகபாம்பு செத்து காய்ந்து கருகிப் போனது போலத் தெரிந்த்து. வெயிலில் இருந்து தப்புவதற்காக நிறுத்தியிருந்த பஸ்ஸொன்றுக்குப் பின்புறமாகப் போய் நின்று கொண்டேன். தூசு படிந்து போயிருந்த பஸ்ஸின் பின்பகுதியில் நிமல் என்று விரல் எழுதியிருந்த்து. அதற்குச் சற்றுக் கீழே பெரிய சிங்கள எழுத்தில் பெண்களின் பிறப்புறுப்பைக் குறிக்கிற சொல் இருந்த்து. யாரும் கவனிக்கிறார்களா என்று சுறுமுற்றும் ஒரு முறை பார்த்து விட்டு
இடது கை ஆள்காட்டி விரலால் எட்டாம் இலக்கத்தை எழுதினேன். பிறகு 7 ஐ எழுதினேன். சிரிப்பா வந்த்து. சூட்கேசை எடுத்துக் கொண்டு முன்னால் வந்து மேலுதட்டை பற்களால் கடித்துக் கொண்டு பஸ்ஸைத் தேடினேன். இடது காலை தூக்கி சப்பாத்துடன் ஒட்டி இழுபட்டு வந்த காகிதத் துண்டைப் பிய்த்து எறிந்தேன்.

ஹட்டனிலிருந்து வருகிற பஸ் நின்று ஆட்களை இறக்கிக் கொண்டிருந்த்து. டிரைவர் ஸ்ரியரிங்கில் கைகளை வைத்துப் படுத்துக் கொண்டு கண்ணாடிக்கூடாக மணிக்கூட்டுக் கோபுரத்தை எட்டிப் பார்த்தான். இறங்கும் ஆட்கள் ஒவ்வொருவரது முகங்களையும் உன்னிப்பாகப் பார்த்தேன். அவர்களுடைய உதடுகள் லேசாகப் பிரிந்திருந்தன. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் காலை வைத்துக் கீழே இறங்கினார்கள். தரையில் இறங்கி ஒரு கணத்துக்கு
அப்படியே தயங்கி நின்றார்கள். பிறகு வெவ்வேறு திசைகளில் பிரிந்து போனார்கள். மணிக்கூட்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு மணி பஸ் வருவதற்கு இன்னும் இருபது நிமிசமிருக்கிறது. ரொபியொன்றை வாங்கி வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு பஸ் நிலையத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை மெதுவாக நடந்தேன். ரொபி உறையை விரல்களால் கசக்கி, சுண்டி எறிந்தேன். முதன்முதலாக கண்டிக்கு வந்த நாளை நினைபடுத்த முயன்றேன். சந்தனக்கூடு பார்ப்பதற்கு ராசீக் நானா என்னைக் கூட்டி வந்தார். மீரா மக்கம் பள்ளியில் போய் நாங்கள் காணிக்கை வைத்தோம். சந்தனக்கூட்டைப் பார்த்துப் பார்த்து நான் பிரமிப்புற்றேன். ராசீக் நானா எனக்கு ஜிலேபி வாங்கித் தந்தார். கடைசி வரையில் நான் அவருடைய இடது கையில் தொங்கிக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்த இரண்டு ரூபாவையும் அவர் செலவு செய்ய விடவேயில்லை.

வீட்டுக்கு வருகிற போது நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்த்து. சூட்கேசை வைத்து விட்டு உடுப்புக்களை மாற்றாமல் அப்படியே போய்க் கதிரையில் அமர்ந்து கொண்டேன். அணைந்து போயிருந்த சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வாப்பா வெளியில் வந்தார். எனது முகத்தைப் பார்க்காமலேயே இப்பயோ வந்த என்று கேட்டார். இனி நான் மீண்டும் அநுராதபுரத்துக்குப் புறப்படுகிற வரையில் ஒன்றும் பேசமாட்டார். சூட்கேசை எடுத்து, நான் பெய்ட்டு வாரேன் என்று சொல்கிற போது, அல்லாட காவல் என்பார்.

உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு வந்து டீ குடித்தேன். உமாவிடம் ஊர்ப்புதினங்களை விசாரித்தேன். வாப்பா பள்ளிக்குப் போயிருந்தார். சுதந்திரமாக சிகரட் புகைக்கத் தொடங்கினேன். பிரயாணக் களைப்பில் தூக்கக் கிறக்கமாக இருந்த்து. அறைக்குள் போய், கதவைச் சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன்.

தூக்கம் கலைந்த போது ஐந்து மணியாகி இருந்த்து. முகத்தைக் கழுவிக் கொண்டு கடைத்தெருப்பக்கம் நடந்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். நண்பர்கள் யாராவது இருப்பார்கள். கரீம் நானாவின் கடையில் பிளேன் டீ குடித்துக் கொண்டே வளம்பளக்கலாம். அமீனின் காதல் விவகாரங்கள் பற்றிப் பேசலாம். பேங்க் லைப் வினோதங்களைச் சொல்லலாம். சுபைர், அமீன், நசீர் எல்லோருடனும் சேர்ந்து பாலத்தடியில் அமர்ந்து சிகரட் புகைத்துக் கொண்டு வாழ்க்கையில் ஒருபோதுமே நடக்க முடியாத விஷயங்கள் பற்றிப் பேசிப் பொழுதைக் கழிக்கலாம். நசீர் சார்ந்திருக்கிற அரசியல் கட்சியின் ஊழல்களைப் பற்றிப் பேசி அவனைச் சீண்டிவிடலாம். கிணறுகளிலிருந்து குடங்களை ஏந்திச் செல்கிற பெண்கள் மீது பார்வையைப் பதித்துக் கொண்டு அடுத்து வருகிற பொதுத் தேர்தல் பற்றிய ஊகங்களை அலசலாம். தேவையில்லை, இன்று வீட்டிலேயே இருக்க வேண்டும். இந்த மாலை நேரத்தை என்னால் தனிமையாக
இருந்து கழிக்க முடியும்.

கூடத்தில் வந்து கதிரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி வைத்துக் கொண்டேன். இடது கையால் நெற்றியைத் தடவிவிட்டு அப்படியே கண்களையும் மூக்கையும் அழுத்திப் பிடித்துக் கையை மெதுவாக கழுத்து வரை கொண்டு வந்தேன். கழுத்தைச் சுற்றிலும் தடவிப் பார்தேன். கதிரையின் பிரம்புப் பின்னலில் இருக்கும் வட்டமான இடைவெளிகளில் ஆள் காட்டி விரலைத் திணித்துத் திணித்து வெளியில் எடுத்தேன்.ந கால் விரல்களை ஆயாசத்துடன் வளைத்து நிமிர்த்தினேன். காது மடல்களை மூடித்திறந்து பார்த்தேன்.

மெஹ்ரூனின் காதுகள் எப்படியிருக்கும்? அடர்த்தியான தலைமயிரால் அவள் எப்போதும் காதுகளை மூடிக் கொண்டிருப்பாள். அவளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு வருட காலத்திலும் அவளுடைய காதுகளைப் பார்க்கவே முடியவில்லை. அவளுடைய கண்களை, மூக்கை, இதழ்களை, நெற்றியை, கழுத்தை, கை விரல்களை ஒன்றையுமே அவற்றின் அமைப்பு நுணுக்கங்களுடன் உன்னிப்பாகப் பார்த்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. உதட்டைப் பிதுக்கி, பற்கள் வெளித்தெரியாமலேயே சிரித்து, கண்களால் வரவேற்கிற அவளுடைய மொத்த உருவந்தான் ஞாபகமிருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் மௌனத்தில் கழிகிற முதல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களின் இன்னதென்று புரியாத குறுகுறுப்பு ஞாபகமிருக்கிறது. ஒரு விதமான தனி லயத்துடன் உதட்டைப் பிரிக்காமலேயே அ.... என்று இழுத்து முகத்தைக் கொஞ்சம் முன்னுக்கு நீட்டி நான் சொல்கிற விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிற நளினம்.... சிகரட் பெட்டியைப் பறித்து வைத்துக் கொண்டு வலிந்து முகத்தில் வரவழைத்துக் கொள்கிற ஒரு கோபத்துடன் சிணுங்கியது... இடது கைச்சின்னி விரல் நகத்தைக் கடித்துக் கொண்டே கண்களை
மூடிச்சிரித்தது... எல்லாமே ஞாபகமிருக்கிறது. இன்னமும் இடையில் எத்த னையோ ஆண்டுகள் ஓடிவிட்ட பின்னரும் - நன்றாகவே ஞாபகமிருக்கிறது.

வாசலில் நிழலாட்டம் தெரிந்தது. எழுந்து செல்லச் சோம்பலாகவும் எரிச்சலாகவும் இருந்த்து. ஒர உவெள்ளிக்கை உள்ளால் நீண்டு, நிறந்திருந்த கதவில் இரண்டு முறை தட்டிற்று. ஒரு சுயநலத்துடன், நான் எனக்காக மட்டுமே சுவீகரித்துக் கொண்டிருக்கிற இந்த மாலை நேரத்தில் பங்கு கேட்டு வந்திருப்பவர்கள் யாராக இருக்கக் கூடும்? சோம்பல் முறித்து விட்டு எழுந்து வாசலாண்டை போனேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்

சற்று நேர தயக்கத்துக்குப் பிறகு சத்தம் வெளியில் வராத வகையில் வாய்க்குள்ளால் பதில் சொன்னேன். பதில் சொல்வதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது, மனசுக்கு உறுத்தலாக இருந்த்து. வெள்ளைத் தொப்பியும் கறுப்புத் தாடியுமாக நான்கு பேர் வாசலுக்கு வெளியில் நின்றிருந்தார்கள். வழிகாட்டி வந்த ஹனிபா சாச்சாவின் இரண்டாவது மகன் ஒதுங்கி நின்று ஒருவித வெட்கம் கலந்த புன்னகையுடன் என்னைப் பார்த்தான். வெள்ளை ஜிப்பா அணிந்திருந்த உயரனமான ஆள் யஸலாம் சொல்வதற்கு எனக்கு முன்னால் கைகளை உயர்த்தி நீட்டினார். தாடிமயிர் முளைத்திராத அவருடைய கன்னப்பகுதி வெள்ளையும் சிவப்பும் கலந்த ஒரு விசித்திரமான நிறத்தில் பளபளத்தது. ஸலாம் சொல்கிற போது அவருடைய கையில் ஓர் அலாதியான குளிர்மையையும், மென்மையையும் ஸ்பரிசித்தேன்.

பின்னால் நின்று கொண்டிருந்த ஜெமீல் மாஸ்ரர் ஓரடி முன்னுக்கு எடுத்து வைத்து என்னையும், ஜிப்பா ஆளையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கினார்.

“இவர் பங்களாதேஷிலிருந்து வந்திருக்கிறார். இவரால் சரியாக உண்ணவோ உறங்கவோ முடிவதில்லை. இஸ்லாம் மார்க்கத்தின் இன்றைய நிலையை நினைத்துப் பார்த்து எந்நேரமும் அழுகிறார். முஸ்லிம்களை தீனின் வழியில் இழுப்பதற்காக தன்னுடைய முழு வாழ்நாளையும் தப்லீஃ சேவையில் அர்ப்பணம் செய்து வந்திருக்கிறார்"

சிரிப்பு வருவது போலிருந்தது. உதடுகளைக் கடித்துக் கொண்டு நான் பங்களாதேஷ் ஜிப்பாக்காரரை ஓரக்கண்ணால் பார்த்தேன். "பொன் வங்காளமே! உன்னுடைய வீட்டுக் கூடத்தில்தான் நான் குழந்தையாக வளர்ந்தேன். உன்னுடைய உழவர்களும் மாட்டுக்காரர்களும் என் தோழர்கள்" என்ற தாகூரின் கவிவரிகள் நினைவுக்கு வந்தன. டாக்கா நகரின் புழுதி படிந்து போன வீதியோரங்களில் படுத்துறங்குகிற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பற்றி ஞாபகம் வந்தது.
டாக்காவின் முஸ்லிம் விலை மாதர்கள்.... ஐம்பது சதத்துக்கும் இருபத்தைந்து சதத்துக்கும் கூட... அது அவர்களுடைய நஸீபு. அல்லாவுடைய கலத்தால் எழுதப்பட்ட விதி. "வறுமையையும், துன்பத்தையும், பிணியையும் கொடுத்து நான் அவர்களைச் சோதிக்கவில்லையா?"

ஜிப்பா ஆள் கருணை ததும்பும் பார்வையில் என்னைப் பார்த்தார். நான் ஒன்றையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பது தெரியாமலேயே ஜெமீல் மாஸ்ரர் சொல்லிக் கொண்டு போனார். அவர்களுடன் சேர்ந்து பள்ளிவாயலுக்கு வருமாறு என்னையும் கூப்பிட்டார். இஷாவுக்குப் பிறகு பயான் இருக்கிறது என்றும் சொன்னார். இப்பொழுது வருவதற்கு வசதியில்லை என்றும், பிறகு வருகிறேன் என்றும் சுருக்கமாகச் சொன்னேன். கூடிய வினயத்துடன் அவர்கள் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். கொஞ்ச நேரத்துக்கு நான் வாசலிலேயே நின்றிருந்தேன். அந்தி மயங்கி வந்தது. அறைக்குள் போய் விளக்கைப் போட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். இடது கை ஆள் காட்டி விரலால் சுவரில்
என்னவென்றில்லாமல் எழுதினேன். இனி மேல் சந்தித்து அறிமுகமாக இருக்கும் புதிய மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அவர்களுடைய உருவங்களைக் கற்பனை செய்ய முயன்றேன்.

இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு வருகிற இதே தேதியில், இதே நேரத்தில், நான் என்ன செய்து கொண்டிருப்பேன்? அப்பொழுது எனக்கு 47 வயதாகியிருக்கும். நினைத்துப் பார்க்கிற போது கவலையும் சிரிப்பும் வருகின்றன. சாப்பிடுகிற நேரம் வரையில் கட்டிலில் உட்கார்ந்து வெறுமனே சுவரையும், யன்னல்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஏப்ரல் 9, சனி

இன்று காலையில் பாயிஸ் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். கல்முனையில் கழித்த நாட்களை நினைவுபடுத்தி நிறையப் பேசினோம். பாயிஸ் சிரிக்கிறவிதம் எனக்கு நிறையப் பிடித்திருக்கிறது. தலையில் நிறைய மயிர் கொட்டுவதாகச் சொல்லி அவன் கவலைப்பட்டான். அநுராதபுரத்தைப் பற்றி அவன் ஒன்றுமே கேட்காதது எனக்கு ஒரு வகையில் கவலையளித்தது. நானும் அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு முயற்சிக்கவில்லை. அவனுடைய அலுவலகத்தில் வேலை செய்கிற சித்ரா என்ற டைப்பிஸ்டைப் பற்றி விசாரித்தேன். நீலக் கண்களை உருட்டி அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். காரியாலய நண்பர்களுடன் திருகோணமலைக்கு உல்லாசப் பயணம் போய் நடந்த சுவாரஸ்யங்களை
விவரிக்கத் தொடங்கினான். சித்ராவின் தலை உருண்டது. நடத்தை சரியில்லை என்று பொதுவாகக் கருதப்படுகிற பெண்களை எனக்கு நிறையப் பிடிக்கும் என்று நான் சொன்னேன். கண்களை அகல விரித்து அவன் என்னை வியப்புடன் பார்த்தான். சேர்ட் பொத்தானைத் தடவிக் கொண்டு சில வினாடிகளுக்கு நான் மௌனமாக இருந்தேன். "மட்டக்களப்பு நைட் மெயிலில் குருணாகலில் ஏறி, பொலன்றுவை வரை நின்று கொண்டே பிரயாணம் செய்த மறக்கமுடியாத அந்த
இரவு உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவனிடம் கேட்டேன்.

"அருகம் குடாவில் நீராடிவிட்டு பொத்துவிலிலிருந்து கல்முனைக்கு பஸ்ஸில் வந்த மாலை நேரமும் நினைவிருக்கிறது" என்று பாயிஸ் அர்த்தபுஷ்டியுடன் சொன்னான். பிறகு இருவரும் கொஞ்ச நேரத்துக்குச் சிரித்தோம். கல்முனைக் கடற்கரையிலும், அம்பாறை சினிமாத் தியேட்டர்களிலும் கழிந்த எங்கள் விடுமுறை நாட்களை நினைவுபடுத்திக் கொண்டோம். கடற்கரைப் பள்ளி கொடியேற்ற வினோதங்கள் பற்றிப் பேசினோம். கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு சங்கிலித் தொடராக சிகரட் ஊதிக் கொண்டு ஓவர்ரைம் செய்த இரவுகளும் என் ஞாபகத்துக்கு வந்தன. கொத்து ரொட்டி அடிக்கிற காத்தான்குடி ஆளின் முகத்தில் ஒழுங்கின்றி மீசை முளைத்திருப்பதும், அழுக்கு பனியனில் புகை படிவதும், வெயிட்டர்கள் அவசரப்படுத்துகிற எரிச்சலில் தலையைத் தூக்கிக் கண்களை பாதி மூடி இறைவனிடம் இறைஞ்சுகிற தோரணையில் கடுமையாக தூஷணம் சொல்லிக் கொண்டு போகிற அவரது இயல்பும் ஒரு கணத்துக்கு என் கண் முன்னே தோன்றி மறைந்தது. “என் பிரியமுள்ள நண்பனே! இன்னமும் கூட விடுதி அறைகளின் துயர்களில்தான் என்னுடைய நாட்கள் விடிகின்றன” என்று பாயிசின் மென்மையான கரங்களை வருடிக் கொண்டு சொல்ல வேண்டும்
போலிருந்தது.

கண்டி ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியைப் பார்க்க இருப்பதாகச் சொல்லி பாயிஸ் பதினொரு மணி பஸ்ஸில் போனான். அவனை அனுப்பி விட்டு நான் திரும்பவும் அறைக்குள் வந்தேன். நினைந்து சந்தோசப்படவும், வருந்தவும் முடிகிற நினைவுகளை அவன் கிளறி விட்டுப் போயிருக்கிறான். "எமக்கென்று விரியும் ஒரு வானவெளி... எல்லையிலாப் பெருவெளியின் ஏகாந்தம் காத்திருக்கும்... வாழ்வின் மது பருக வண்ணாத்திப் பூச்சிகளாய்ச் சிறகடிப்போம்... சிறகில் சிறகில் கட்டிப் பறப்போம்" என்றெல்லாம் டயரியில் கிறுக்குவதற்கு தூண்டுதல் தந்த நாட்கள் அவை. கடந்து போன நான்கு வருடங்களிலும் மெஹ்ரூனைப் பார்க்க முடியவில்லை.

வெளியில் போய் வாசலில் நின்று வீதியைப் பார்த்தேன். இரண்டு பையன்கள் ஓலைப்பெட்டிகளை மேலே வீசி ‘காட்ச்’ பிடித்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போனார்கள். “எலவலூய்” துரத்தில் கேட்டது. “கிணிங் கிணிங்” என்று மணியைக் குலுக்கிக் கொண்டு வந்த மிட்டாய்க்காரன், பெட்டைக் கோழியைத் துரத்தி வந்த சேவல் பாதையைக் கடந்ததால் நின்று சற்றுத் தாமதித்து விட்டு நடந்தான். செங்கல் சூளையில் வேலை செய்கிற இரண்டு ஆட்கள், “நாய் வேலை செஞ்சிட்டான்” என்று சிங்களத்தில் யாரையோ திட்டிக் கொண்டு நடந்து போனார்கள். பெட்டியைக் கொடுத்து விட்டு டிக்கட்டை எடுத்துக் கொண்டு தம்பி வீட்டுக்குள் வந்தான். “கோழியப் புடிச்சிவை” என்று உம்மா
வீட்டுக்குள்ளிருந்து சொல்வது கேட்டது. “இத முற பள்ளிக் கந்திரில என்ன விசேஷம்” என்று தம்பியிடம் கேட்டேன். “பெண்கள் காணிக்கை போட வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது” என்று நேற்று ஜும்மாவில்
அறிவிக்கப்பட்டதாகச் சொன்னான். “ஏனாம்?” என்றேன். “தெரிய” என்று சொல்லிக் கொண்டு ஒரு விதமான கூச்சத்துடன் அவன் சிரித்தான்.

அப்பொழுதெல்லாம் பள்ளிக்கந்தூரி வந்தால், நாங்கள் எவ்வளவு சந்தோசப்படுவோம். எங்கள் வீட்டுக் கோழியை நான்தான் பள்ளிக்கு எடுத்துப் போவேன். நியாசும் கோழி எடுத்து வருவான். நாங்கள் கோழிகளை அருகருகே பிடித்து அவற்றின் முகங்களை மோதவிடுவோம். இறகுகளைத் தடவி, கழுத்தைப் பிடித்து உசுப்புவோம். மேலே வீசி 'காட்ச்' பிடித்து கோழி தொண்டைக்குள்ளால் முனகுவதைக் கேட்டுச் சிரிப்போம். களுசான் பொக்கட்டில் இருக்கும் சில்லறைகளைக் குலுக்கிக் கொண்டு வக்கடைகளில் தேங்கியிருக்கும் நீரைக் கலக்கிச் சேறாக்கிக் கொண்டு வரம்பில் நடந்து போவோம். களத்து மேட்டுப் புளியமரத்துக்கு அப்பால் பள்ளிவாசல் மினாராக்கள் நிமிர்ந்து தெரியும். லவுட்ஸ்பீக்கரில் இஸ்லாமிய கீதங்களுக்கிடையில் அறிவிப்புகள் கேட்கும்.

பள்ளிவாசலை அரைவட்டமாகச் சுற்றி ஓடுகிற மண்பாதையில் ஓலைக்கடைகள் வரிசையாகத் தெரியும். பம்பாய் மிட்டாய், சீனிக்கடலை, ஜலேபி என்று வாயில் எச்சில் ஊறும். அழுக்கு அரைக்காற்சட்டையுடன் இருக்கும் பையன் படிக்கட்டுக்குக் கீழே உட்கார்ந்து "கரும்பூ..." என்று கூவுவான். தென்னை மரத்துக்குக் கீழே பேப்பரை மடித்து உட்கார்ந்து கிதாபு யாவாரி தாடியைத் தடவிக் கொண்டிருப்பார். "தொழுகையின் சிறப்பு", "இல்லறச் சோலையிலே இஸ்லாமியப் பெண்", "மூட்டை சுமந்த முடிமன்னர்", "இஸ்லாம் காட்டும் இலட்சிய வாழ்வு" என்று ஏராளமான புத்தகங்களும், அரபுக் கிதாபுகளும் அவருக்கு முன்னால் பரந்து கிடக்கும். தொப்பிகளும் தஸ்பீகுகளும் கூட அவர் விற்பார்.

பள்ளி முற்றத்தின் ஒரு மூலையில் டெஸ்கொன்னுக்கு முன்னால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். 'ஆடு கோழி நேர்ச்சை' என்று வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டியிருக்கும். அங்கு பெயர்களைப் பதிந்து விட்டு கோழியை ஏந்திக் கொண்டு நாங்கள் பள்ளியின் பின் பக்கத்துக்குப் போவோம்.

சுற்றிலும் கம்புகள் நாட்டி பெரிய அளவில் கோழிக்கூடு கட்டப்பட்டிருக்கும். மூங்கில் கதவு வாசலில் நிற்கிற முரட்டு ஆள் பீடியை பற்களால் கடித்துக் கொண்டே கோழியை வாங்கி உள்ளே விடுவான். சிவப்பில், வெள்ளையில், கறுப்பில், சாம்பல் நிறத்தில் என்று கூட்டுக்குள்ளே "கொக்கொக்" என்று இரைந்து காற்றில் மிதப்பதைப் போன்று அசைந்து கொண்டிருக்கிற ஏராளமான கோழிகளை தடுப்புக் கம்புகளில் கைவைத்து நாங்கள் எட்டிப் பார்ப்போம். பீடி
குடிப்பவன் எச்சில் துப்பி விட்டு ஒதுங்கி நிற்குமாறு எங்களை மிரட்டுவான். கோழி அறுக்கிற இடத்துக்கு நானும் நியாசும் நடப்போம். புல்லில் புதிதாய்ச் சுவடுகள் பதிந்து தெரியும்.

பெரிய குழியைச் சுற்றி நிறையப் பேர் நின்றிருப்பார்கள். பெரியவர்களுக்கிடையால் நுழைந்து குழியோரத்துக்குச் சென்று நாங்கள் குனிந்து பார்ப்போம். புது மண்ணில் செங்கோடுகளாக ரத்தம் உறையும். குற்றுயிரில் சிறகடிக்கிற கோழிகள் தலைகீழாகப் படுத்துக் கிடக்கும். அறுத்துக் குழியில் வீசப்படுகிற சில சேவல்கள் சூரிய நமஸ்காரம் செய்வது போல வானத்தை நோக்கி ஒரு முறை தலையை உயர்த்திப் பார்த்து விட்டுச் செத்துப் போகும்.

கோழி அறுக்கிற வெள்ளை பனியன் கிழவர் ரத்தம் கசிகிற கத்தியை மெதுவாக வலது புறமாக நீட்டி, "தண்ணிய எடு" என்று உரக்கக் கத்துவார். தண்ணீர்க் கேத்தலை வைத்திருக்கிற பையன் தூரத்தில் ஒதுங்கி நின்று கையை நீட்டி கத்தியைக் குளிப்பாட்டுவான். சில கோழிகளை அறுத்துப் போட்டவுடன் அவை தலையை நிமிர்த்திக் கொண்டு ஓடத் தொடங்கும். நாங்கள் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்போம். அதை உம்மாவிடம் வந்து சொல்லுவேன். "இதய சுத்தி இல்லாத நேர்ச்சைக்காரர்கள் கொடுக்கிற கோழிகள்தான் அப்படி ஓடும்" என்று உம்மா சொல்லுவார்.

ஈரப்பலா மரத்தடியில்தான் நிறையக் கூட்டம் இருக்கும். நியாஸ் மிக அருகில் சென்று மாடு வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருப்பான். எனக்கென்றால் ஒரே பயமாக இருக்கும். கால்களைக் கயிற்றால் கட்டி மாட்டைக் கீழே வீழ்த்துகிற போது அந்த ஆட்கள் எவ்வளவு பயங்கரமாக உள்தொண்டையால் சத்தம் போடுவார்கள். மாட்டின் கழுத்துத் தோலை நீவிக் கத்தியை வைக்கிற போது நான் கண்களை மூடிக் கொள்வேன். நியாசின் தோளில் கையைப்போட்டு, "இனிப் போம்" என்பேன். "இன்னம் நாலு மாடு ஈக்கு, பாத்துட்டு போம்" என்பான் அவன்.

இரவு உம்மா, ஹபுஸா மாமி, ஸீனியா தாத்தா, சின்ன மாமி எல்லோரும் சேர்ந்து பள்ளிக்கு காணிக்கை வைக்கப் போவார்கள். நானும் நியாசும் ஆண் துணையாகப் போவோம். வழியெல்லாம் சனம். இருட்டில் பெண்கள் கூட்டம் கூட்டமாக எங்களைக் கடந்து போவார்கள். ஸியாரத்தைச் சுற்றிப் பெண்களும் சிறுவர்களும் குழுமியிருப்பார்கள். மேலே பச்சை பல்புகள் வரிசையாகத் தொங்கும். லவுட்ஸ்பீக்கரில் ராத்தீபு ஓதுவது தெளிவில்லாமல் கேட்கும். லைட் மிசினின் 'கொர்ர்ர்' இரைச்சல் லவுட்ஸ்பீக்கரையும் மீறிக் கேட்கும். பச்சைத் துணியால் மூடியிருக்கிற ஸியாரத்துக்கு முன்னால் காணிக்கைப் பெட்டிகள் இருக்கும். ஊதுவத்தி, சாம்பிராணிப் புகைகள் அடங்கி எழுந்து அழியும். வெள்ளைத் தலைப்பாகைக் கிழவர் பாயில் உட்கார்ந்து முழங்கால் மடிப்பில் கைகளைக் கோர்த்து வைத்துக் கொண்டு யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் ஓதிக் கொண்டு போவார். மஞ்சள் தொப்பி அணிந்த குறுந்தாடி இளைஞர்
காணிக்கை போடுபவர்களுக்குச் சிறு பொட்டலத்தில் நார்சாவைச் சுற்றி நீட்டுவார். பிடரி மயிரை இடதுகை விரல்களால் நீவி, தொப்பியைச் சரிசெய்து கொண்டு பெண்கள் பக்கம் ஓரக்கண்ணால் பார்ப்பார்.

காணிக்கை போட்டுவிட்டு ஸியாரத்துக்கு வெளியே ஒதுங்கி நின்று ஸீனியா தாத்தா என்னைக் கூப்பிடுவாள். லேஞ்சி முடிப்பை அவிழ்த்துக் காசை என்னிடம் நீட்டுவாள். நான் மிட்டாய்க் கடைக்கு ஆட்களுக்கிடையில் நுழைந்து ஓடுவேன். கடைக்காரர் மிட்டாயைச் சுற்றிக் கொண்டே 'பெட்ரேமாக்ஸ்' தலையில் படும் என்று முனால் நிற்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வார். பள்ளிக்கும் ஸ்கூலுக்கும் இடையில் இருக்கிற வெற்றிடத்தில் வட்டமாக ஆட்கள் நிறைந்த
உமுண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். குடம் போன்ற வயிற்றை உடைய தடி ஆள், ஆட்களைப் பிடித்துப் பின்னுக்குத் தள்ளுவார். கூச்சலிடுகிற சிறு பையன்களின் காதுகளைப் பிடித்துத் திருகுஆவர். சீனடி, சிலம்படி என்று மெய் சிலிர்க்கும். கம்புகள் வானில் பறந்து, மிதந்து 'டிக்டக்' என்று.... விளையாடுபவர்களின் வியர்வைத் துளிகள் நிலத்தில் சிந்தும். தீப்பந்தங்கள் மேலே சுழன்று செல்வதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கும்.

இதுவெல்லாம் பதினைந்து வருடங்களுக்கு முந்திய சங்கதிகள். இந்தப் பதினைந்து வருடங்களிலும் எத்தனை மாறுதல்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு நாள் ஹபுசா மாமியைப் பச்சைத் துணி போர்த்திய சந்தூக்கில் சுமந்து சென்றார்கள். ஸீனியா தாத்தா கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டாள். போகும் போது உம்மாவிடம் வந்து, "பெய்ட்டு வாரன் மாமி..." என்று அழுதாள். என் தலையைத் தடவி, தோளை நீவி விட்டாள்.

பகல் சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் தூங்கினேன். மூன்றரை மணிக்கு கண் விழித்து இந்த மாலை நேரத்தை எப்படிக் கழிப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். முகங்கழுவிக் கொண்டு வந்த போது அமீன் வந்திருந்தான். பரஸ்பரம் சுக செய்திகளை விசாரித்துக் கொண்டோம். பிறகு படிக்கட்டில் இறங்கி வந்து வீதியில் மெதுவாக நடக்கத் தொடங்கினோம். கோழிகளை ஏந்திச் செல்கிற பையன்கள் எங்களைக் கடந்து போனார்கள். பஞ்சு மரத்தின் உச்சிக் கிளையில் கிளிக்கூட்டமொன்று தென்பட்டது. மூங்கில் மரங்கள் சோம்பலில் அசைந்தன. வயல் வரம்பில் கீரை தேடிக் கொண்டிருக்கிற கிழவர் இடது கையை நெற்றிக்கு மேலால் பிடித்து, கண்களை இடுக்கிக் கொண்டு வீதிப்பக்கம் பார்த்தார். நாலரை மணி கண்டி பஸ் எங்களைத் தாண்டிச் சென்றது.

அமீன் சொல்வதொன்றையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் மௌனமாக நடந்தேன். கடை வீதிக்குச் சென்று டீ குடித்து, சிகரட் பற்ற வைத்துக் கொண்டோம். பிறகு பாலம் வரையில் நடந்தோம். இருட்டும் வரையில் பாலத்தில் அமர்ந்திருந்தோம். பாயிஸ் வந்துவிட்டுப் போனதை அமீனிடம் சொன்னேன். அவன் எந்த சுவாரஷ்யமும் காட்டாமல் கேட்டுக் கொண்டான். நான் சிறு கற்களைப் பொறுக்கி ஓடையில் எறிந்தேன். சுற்றிலும் எச்சில துப்பினேன். பாலத்துக்கூடாக நடந்து போகும் ஒரு சிங்கள ஆளிடம் சிகரட்டுக்கு நெருப்பு வாங்கிக் கொண்டேன்.

இருட்டிய பிறகு எழுந்து பள்ளிப் பக்கம் நடந்தோம். கடை வீதியில் நின்ற நஸீரும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். அமீனும், நசீரும் கதைக்கத் தொடங்கினார்கள். எனக்கு திரும்பி வீட்டுக்குப் போகலாம் போலிருந்தது. பள்ளிக்குப் போய் சில நிமிடங்களில் திரும்பி வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நாளைப் பகல் கந்தூரிக்கு வர முடியாமல் போகும் என்று மான் சொன்னான். நாங்கள் 'ஏன்' என்று கேட்கவில்லை. சாச்சியின் மகளுக்கு கல்யாணப் பதிவு இருக்கிறதென்று அவனே சொன்னான்.

பள்ளிவாசல் படிகளில் மெதுவாக ஏறிச் சென்றோம். தும்புக் கயிற்றால் வழிகள் பிரிக்கப்பட்டுத் தெரிந்தன. 'கார்ட்போட்' அட்டைகளில் அறிவிப்புகள் தொங்கின. ராத்தீபு மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படப் போவதாக ஒலிபெருக்கி சொல்லிற்று. நாங்கள் பள்ளி முற்றத்தில் நின்று கொண்டோம். பள்ளிக்குள்ளும் வெளியிலும் கீழே பாதைகளிலும் எங்கும் சனம். மெல்லிய இருட்டில் வெள்ளைத் தொப்பிகள் அசைந்தன. பச்சை பல்பின் வெளிச்சத்தில் நீண்டு போயிருக்கிற எங்கள் நிழல்களைப் பார்த்தேன்.

"எங்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிட்டார்கள் இல்லையா?"

ஆங்காங்கே சில ஆண்களும் சிறுவர்களும் சூழ்ந்திருக்கிற ஸியாரப் பக்கத்தைக்க ஆட்டி நசீர் சொன்னான். நானும் அமீனும் சிரித்தோம். உவைஸ் மாஸ்ரர் எங்களருகில் வந்து என்னுடைய கையைப் பற்றிக் கொண்டு, "கந்திரிக்கு வந்தா" என்று புன்சிரிப்புடன் கேட்டார். பிறகு வெளிவாரிப் பட்டப் பரீட்சை பற்றிப் பேசத் தொடங்கினார். நசீரும், அமீனும் எரிச்சலுடன் அவரைப் பார்த்தார்கள். கறுத்துப் போய் தெரிகிற அவருடைய கால் நகங்களை நான் பார்த்தேன்.
மாதுள மரத்துக்குக் கீழேயும், பள்ளி முகப்புக்கெதிரிலும், தற்காலிக காரியாலயக் கொட்டிலுக்கு முன்னாலும் கோஷ்டி கோஷ்டியாக இளைஞர்கள் குழுமி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

உவைஸ் மாஸ்ரர் போனதும் தசீர், “அப்பாடா எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!" என்று சொல்லிச் செயற்கையாகப் பெருமூச்சு விட்டான்.

"நான் வீட்டுக்குப் போக வேண்டும்"

அமீனும் நசீரும் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். நசீர் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு "இன்னும் எட்டரை கூட ஆகவில்லையே" என்றான். "நீங்கள் தாமதித்து வாருங்கள்" என்று அவர்களுடைய முகங்களைப் பார்க்காமலேயே சொல்லிவிட்டு நான் படிகளில் இறங்கினேன். சிகரட் பற்றிக் கொண்டு இருட்டில் வீதியில் இறங்கி நடந்தேன்.

முற்றத்தில் நின்று நட்சத்திரங்களை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தேன். "சோறு தின்ற இல்லையோ" என்று உம்மா வந்து கேட்டார். முட்டைப் பொரியலையும், பருப்புக் கறியையும் கொஞ்ச நேரம் அளைந்து விட்டு அறைக்குள் வந்தேன். சுவர்க்கலண்டரில் சிரித்துக் கொண்டிருக்கிற பெண்ணின் முகத்தில் சிகரட் புகையை ஊதினேன். கலண்டர் ஆணிக்கு மேலே சுவரில் ஒரு பல்லி அசையாமல் நின்றிருந்தது. மேசைப் பக்கத்திலிருந்து வந்த ஒரு கரப்பான் பூச்சி கட்டிலுக்கடியால் ஓடி மறைந்தது. விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொண்டேன்.

ஏப்ரல் 10, ஞாயிறு

காலையில் தம்பியைக் கூப்பிட்டு உடுப்புக்களை ஸ்திரி செய்து வைக்குமாறு சொன்னேன். பள்ளிக்கந்தூரியில் ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்லி அவனிடம் ஐந்து ரூபா கொடுத்தேன். பிறகு ஆர்தர் கோயிஸ்ட்லரின் கொன்பெஸன் ஆப் எ டைத் - ரோப் வால்கர்" புத்தகத்தை எடுத்து நிறுத்திய இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன். 1932ல் ஜேர்மனியில் கம்யூனிஸ்டுகளுக்கும், நாஜிகளுக்கும் இடையில் நடைபெற்ற போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் சார்பான
தனது பங்களிப்பை அவர் விவரித்திருந்தார். தான் பணிபுரிகின்ற பத்திரிகை ஸ்தாபனத்துக்குத் தெரியாமல் அவர் இரகசியமாக கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருந்தார். கட்சித் தலைமைப் பீடத்துக்கு முக்கியமான சில தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முந்திய ஜேர்மனியில் நான் நிற்கிற போது நசீர் சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தான். நான் சிரிக்க முயற்சி செய்து புத்தகத்தை மடித்து வைத்தேன். அவன் புத்தகத்தை எடுத்து அக்கறையில்லாமல் புரட்டிப் பார்த்து விட்டு மேசையில் எறிந்தான். நேற்றிரவு நான் பள்ளியிலிருந்து வந்த பிறகு நடந்த முஸ்பாத்திகளைச் சொல்லத் தொடங்கினான். கடிகாரத்தைப் பார்த்துவிட்டு "போமா" என்றான்.

தார் ரோட்டைத் தவிர்த்து குறுக்கு வழியால் பள்ளிக்கு நடந்தோம். ஸ்கூல் முற்றத்து மர நிழலில் ஏராளமான தெரிந்த முகங்கள் நின்றன. ஸ்கூல் மதிற்சுவருக்கருகில் நிழலில் நானும் நசீரும் ஒதுங்கினோம். பள்ளி வெளிமண்டபத்தில் சோறு பரிமாறுபவர்கள் பதட்டத்துடன் அலைந்தார்கள். தண்ணீர்க் கோப்பைகள் கைமாறிச் செல்கிற நளினத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. ஸ்கூல் மதிலுக்கும் பள்ளிவாசலுக்குமிடையில் இருக்கிற வாழைத் தோட்டத்தில் அழுக்குச் சாரமும் சட்டையுமணிந்த பத்துப் பதினைந்து ஆட்கள் குந்தி பள்ளிப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காபிர்களாக இருக்க வேண்டும். அடுத்த பந்தியில் சாப்பிட இருப்பவர்கள் மூங்கில் தடுப்பு கியூவுக்குள் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். வெயில் அவர்களது மண்டைகளில் மோதி வியர்வையாகக் கரைந்து கழுத்துகளிலும் முகுதுகுகளிலும் இறங்கியது.

ஸ்கூல் மண்டபத்துக்கு வெளியே நின்றிருந்த சாயம் வெளுத்த சேலைகளை அணிந்திருந்த பெண்களையும், சிறுவர்களையும் மதிலுக்கு மேலால் எட்டிப் பார்த்தேன். "வெளியூர் ஆட்கள்" என்றான் நசீர். சங்க பொருந்தி ஷெய்கு நாயகம் முஹியுத்தீன் ஆண்டகை அவர்களது பெயரால் நடைபெறுகிற 69ஆவது வருட காதிரிய்யா கந்து}ரி மஜ்லிஸ் சிறப்பாக நிறைவுற்று வருகிற சுபசெய்தி ஒலிபெருக்கியில் அடிக்கடி முழங்கி ஓய்ந்தது.

திறந்திருந்த கேட்டுக்குள்ளால் ஸ்கூல் வளவுக்குள் நுழைந்தோம். உவைஸ் மாஸ்ரரும் இன்னும் நாலைந்து பேரும் சூழ்ந்து ஜூலைத் தேர்தல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சம்பாஷணை முடிந்து போகிற நிலையில் அதன் ஏதாவது இழையன்றில் தொற்றிக் கொண்டு தொடர்ந்தார்கள். நானும் நசீரும் ஸ்கூல் மண்டப அரைச்சுவருக்கருகில் மௌனமாக ஒதுங்கி நின்றோம். "சாப்பிட ஆறுதலாக போவோம்" என்றான் நசீர். கையில் அழுக்குப் பைகளை வைத்துக் கொண்டு கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிற பையன்களையும் பெண்களையும் மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

பள்ளிப் பக்கத்திலிருந்து ஒரு மாஸ்ரர் அவசர அவசரமாக நாங்கள் இருக்கும் பக்கத்துக்கு வந்தார். கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ஆட்களுக்கருகில் போய் நின்று, காலியாக இருந்த ஸ்கூல் மண்டபத்தைக் காட்டி ஏதோ உரக்கச் சொன்னா. பெண்களும் சிறுவர்களும் வேகமாக மண்டபத்துக்குள் ஓடி ஐந்தைந்து பேர் கொண்ட வட்டங்களாக உட்கார்ந்து கொண்டார்கள். மாஸ்ரர் மண்டபத்துக்குள் போய் அரையில் கைகளை வைத்துக் கம்பீரமாக ஒரு முறை பார்த்து விட்டு, "சத்தம் போட்டால் சோறு தரமாட்டோம்" என்று உரக்கச் சொன்னார். நசீர் என்னை லேசாகக் கிள்ளிவிட்டு உட்கார்ந்திருக்கிற ஆட்கள் பக்கம் பார்த்துச் சிரித்தான்.

சத்தம் படிப்படியாகக் குறைந்து நின்று போயிற்று. வெளியில் போய்த் தண்ணீர் குடித்து, சிகரட் வாங்கிக் கொண்டு மீண்டும் நின்ற இடத்துக்கே வந்தேன். பொலித்தீன் பைகளைக் கையில் மைறத்து வைத்துக் கொண்டு சில பையன்கள் திருட்டுமுழி முழித்தார்கள். புறங்கையை மூக்கின் மேல் இழுத்து துடைத்துக் கொண்ட ஒரு பையன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். நான் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். சிவப்பு ரவிக்கைப் பெண்ணைப் பார்த்தேன். பெண்கள் பகுதிக்கு அவள் தன்னைத் தலைவியாக்கிக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவது போல் தெரிந்தது. "ஷெய்கு நாயகத்தின் மகிமை சோற்றுக்கு அடுத்த பட்சந்தான்" என்றான் நசீர்.

பள்ளிக்கும் ஸ்கூலுக்கும் இடையில் நீள் வரிசையில் விட்டு விட்டு ஆட்கள் நின்று கொண்டார்கள். நசீரும் பரிமாறுகிறவர்களுடன் சேர்ந்து கொண்டான். என்னை யாரும் கூப்பிடவில்லை. சோற்றுத் தட்டுகள் கைமாறி வந்து கொண்டே இருந்தன. மண்டபத்துக்குள் சோற்றுத் தட்டுகள் வருவதைக் கண்ட பையன்களிடையில் லேசாகப் பரபரப்பு எழுந்தது. ஆவலுடன் கூடிய பார்வைகள் அரைச்சுவருக்கு மேலே துழாவி நின்றன. பரிமாறுகிறவர்களுக்கு இடம் விட்டு நான் அரைச் சுவருடன் சாய்ந்து நின்று கொண்டேன். லேஞ்சியால் முகத்தை துடைத்து விட்டுக் கொண்டு தூரத்தில் நின்ற நசீரைப் பார்த்துச் சிரித்தேன்.

கைகளால் பையன்களைச் சற்றுப் பின்னால் இழுத்து விட்டங்களைப் பெரிதுபடுத்தி, சோற்றுத்தட்டுகளை கீழே இறக்கினார்கள். பசியால் களைத்துப் போயிருந்தவர்களின் பார்வைகள் திடீரென்று கீழே இறங்கின. கால்களைச் சிரமப்பட்டு மடித்து சோற்றுத் தட்டுகளுக்கருகில் பையன்களும் பெண்களும் குனிந்தார்கள். அவிழ்த்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார்கள்.

"யாரும் சோற்றை அள்ளிப் பைகளில் போடக்கூடாது"

பரிமாறுகிறவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த மாஸ்ரர் சற்றுக் கடுமையான குரலில் சொன்னார். பெண்கள் பக்கத்துக்குத் திரும்பி, குரலின் கடுமையைக் குறைத்துக் கொண்டு மீண்டும் அதையே சொன்னார்.

அரைச்சுவருக்குக் கீழே சற்றுக் குனிந்து சோற்றுத் தட்டுகளைப் பார்த்தேன். இறைச்சித் துண்டுகள் சிறு கூட்டமான சோற்றில் இறுகிப் படிந்து தெரிந்தன. சோற்றை அரைவட்டமாக மூடி பருப்புக் கறி படர்ந்திருந்தது. மெலிந்து போன கறுப்பு நிற விரலொன்று பருப்புக் கறியை அளைந்து சோற்றுக்குள் நுழைந்து நிறம் மாறி மேலே எழுந்தது.

மாஸ்ரர் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு உரத்த குரலில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று சொன்னார். எல்லாத் தலைகளும் சோற்றுத் தட்டுக்களில் குனிந்தன. பருப்பும் இறைச்சியும் சோறும் கலந்து உருமாறி நிறம் மாறி பிசையப்பட்டு அழுக்கு உள்ளங்கைகளில் மேலே எழுந்தன. குமட்டலை கொண்டு வருகிற சத்தங்கள் மெலிதாகக் கேட்டன.

நசீர் கடலைச் சுருளை எடுத்து வந்து என்னிடன் நீட்டினான். "இப்பொழுது சாப்பிட முடியாது" என்றேன்.

"இத வேல செய்யப்படாது" என்று மாஸ்ரர் சத்தத்துடன் சொல்வது கேட்டது. முகத்தை நசீரிடமிருந்து திருப்பி, சாப்பிடுகிறவர்கள் பக்கம் பார்த்தேன். கட்டைக் காற்சட்டையும் அழுக்குப் படிந்து நிறம் மாறிப் போயிருந்த வெள்ளை பனியனும் அணிந்திருந்த ஒல்லியான ஒரு பையன் அழுவதற்குத் தயாரானவன் போல மாஸ்ரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பொலித்தீன் பையில் அள்ளிய சோற்றை இடது கையில் அவன் வைத்துக் கொண்டிருந்தான்.
ஐந்து கைகளால் பிசையப்பட்ட சோறு பொலித்தீன் பையில் சிவப்பு நிறத்தில் இழுபட்டுத் தெரிந்தது. சோற்றை அள்ளுவதற்குத் தயாராக இருந்த மற்றவர்கள் பைகளை ஒளித்து ஜாக்கிரதையானார்கள்.

"சோறு வைக்கிறது சாப்பிடுறதுக்கு, வீட்டுக்கு கொண்டு போரதுக்கில்ல"

மாஸ்ரர் எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு மிகவும் கடுமையான குரலில் சொல்லிக் கொண்டு போனார்.

"சாப்பிடப் போமா" என்று நசீர் தோளில் கையைப் போட்டுக் கொண்டு கேட்டான். அவனுடைய கையை மெதுவாகத் தட்டிவிட்டு, "சிகரட் வாங்கி வருகிறேன்" என்று சொல்லி மெதுவாகக் கேட்டுக்கு வெளியே வந்தேன். ஸ்கூல் மைதானத்துக்கும் மையவாடிக்கும் இடையில் ஓடுகிற வழிப்பாதையில் வீட்டுக்கு நடந்தேன். "சோறு திண்டோ" என்று உம்மா கேட்டார். "ஓ" என்றேன்.

சூட்கேசில் உடுப்புகளைத் திணித்து வைத்து விட்டு முகங்கழுவிக் கொண்டு வந்தேன். "சிங்களப் பெருநாளுக்கு லீவு இல்லையோ" என்று உம்மா அறை வாசலில் நின்று எட்டிப் பார்த்துக் கேட்டார். "பாங்கில் பதிமூணுபேர் லீவு. நான் போகோணும்" என்றேன்.

கண்டியிலிருந்து புறப்படுகிற மூன்றரை மணி எக்ஸ்பிரசில் கோணர் சீட்டில் வசதியாக இடம் கிடைத்தது. எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் சிங்கள வாரப் பத்திரிகையன்றைப் படிக்கத் தொடங்கினாள். பஸ் குலுக்கலில் எங்கள் முழங்கைகள் உரசிக் கொண்டன. பாதையில் நடந்து போகிற மனிதர்கள் ஒரு கணத்துக்குத் தோன்றி மறைந்தார்கள். வீட்டுத் திண்ணைகளில் பெண்களும் பிள்ளைகளும் உட்கார்ந்திருந்தார்கள். மரங்கள் எங்களை வேகமாகத் தாண்டிப் போயின. ஒரு தடியன் வீதியோரத்தில் குந்தி நின்று சிறு நீர் கழித்தான். புளியமரமொன்றுக்குக் கீழே படுத்திருந்த நாய் அலட்சியமாக தலையைத் து}க்கிப் பார்த்து விட்டு மீண்டும் முன்னங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்
கொண்டது.

பஞ்சு மரக்கிளையில் கிளிக்கூட்டம் மொய்க்கும். மூங்கில் மரங்கள் காற்றில் சாய்ந்து அசையும். பஸ்கள் வரும், போகும். சேவல் பெட்டைக் கோழியை வீதியைக் கடந்து துரத்தும். பனிமூடம் படர்ந்து கலையும். தெருவில் புணர்கிற நாய்கள் கல்லெறி வாங்கும். து}க்கத்தில் கனவும், விழிப்பில் நினைவும் உறுத்தும். லெஜர் மெஷின்களும், டைப்ரைட்டர்களும் உயிர்ப்புற, விசிறிகள் மேலே சுழலும். வவுச்சர்கள் 'சீல்' வாங்கி நகரும். கவுண்டரில் காசுத்தாள்கள் கைமாறும். வெளியில் முகங்கள் அசைந்து மறையும். பூனை மயிரும், புண் ஆறிய தழும்புமாக மேசைக்குக் கீழே வெள்ளைக் காலொன்று ஆடும். லஞ்ச்ரூமில் யாபா தூஷணம் சொல்ல, நிர்மலீ கையில் முகம் பதித்து, காலகற்றி "ச்சீ" என்பாள். கிள்ளுண்ட தொடையில் செம்மை படரும். கைப்பையில் பவுடரும், சீசன் டிக்கட்டும், சில்லறைகளும், தடை மாத்திரைகளும் சிதறுண்டு கிடக்கும். சிவப்பு போல் பொயின்டை வாயில் கவ்வி களுசான் பொத்தான்களைத்
துழாவி ஹேமசிரி ரொய் லட்டிலிருந்து வந்து மீதி சொல்லுவான். பாஸ் புத்தகங்கள் குவிய நந்தசேன லெஜரில் முகம் புதைப்பான். 'இல்லத்திலிருந்து ஏகாந்த இரவில்' என்று தொடங்குகிற நீண்ட கடிதம் கவர் கிழியாமல் மேஜை இழுப்பறையில் காத்திருக்கும். பிபிலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஏ.எல். செய்த நாட்களும், என்ஜினியரிங் பிரிவில் மேற்படிப்பைத் தொடரும் கனவின் நொறுங்கிய துகள்களும் விட்டு விட்டு நெஞ்சில் குத்தும். காட்டிலாகா அதிகாரி லஞ்சம் வாங்கி, கண்ட பெண்ணுடன் புணர்ந்து, பியர் குடித்து, தலை சாய்த்துப் புன்னகைத்து ஜிப்பில் மறைவான்.

தெருவிளக்கில் விட்டில் பூச்சிகள் சுற்ற நகரம் ஓய்வில் சலித்துக் கிடந்தது. கமகேயின் கடையில் பனிஸ் தின்று, பிளேன் டீ குடித்து, சிகரட் வாங்கிக் கொண்டு அறைக்கு நடந்தேன். அறைக்குள் சென்று இருட்டில் துழாவி லைற் சுவிட்சைத் தட்டினேன். மேசையில் வெற்று சிகரட் பெட்டிகளும், கடதாசிகளும் இரைந்து கிடந்தன. 'கரமோசோவ் சகோதரர்களின்' வயிற்றில் 'பேங்கிங் லோ'வும், 'அக்கௌண்ட்ஸ் ஃபார் பேங்கர்ஸ்'உம் சுகமாய் உட்கார்ந்திருந்தன. ஜயிதஸ்ஸவின் கட்டிலுக்கு மேலே சுவரில் நிர்வாண அழகி கொங்கைகளைக் காட்டிச் சிரித்தாள். "நான் சந்தோஷமாக இருக்கிற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?" என்ற ஆங்கில விளம்பர வாசகம் அவளுடைய மொட்டைக் கால்களுக்கு மேல் நீல எழுத்தில் மின்னின. தலையணை உறை 'சுவீட் ட்ரீம்ஸ்' என்று இளித்தது. உடைகளைக் களையாமல் சப்பாத்துடன் அப்படியே கட்டிலில் சரிந்தேன். கண்களை மூடிக் கொண்டேன்.

09.09.1981

**
நன்றி :  எம்.எல்.எம். மன்சூர் (முகவரி: mansoormlm@yahoo.com ) ,  எஸ்.எல்.எம். ஹனீபா
***
தொடர்புடைய பதிவு : எங்கோ ஒரு நகரத்தில் – ஜயதிலக்க கம்மல்லவீர சிறுகதை (தமிழில் : எம்.எல்.எம். மன்சூர்)

Sunday, April 8, 2012

கலகம் செய்யும் இடது கை (பிரெஞ்ச் சிறுகதை)

தீராநதி இதழில் (ஜனவரி 2012)  வெளியான , பெர்நார் வெர்பர்-ன் (சுட்டி தவறாக இருந்தால் திருத்துங்க சார் ) இந்தச் சிறுகதை ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. நண்பர் சாதிக்கின் சிபாரிசும் பலமாக இருந்ததால்  பதிவிடுகிறேன். கதையைவிட சுவாரஸ்யம் ப்ரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் பெயர். கூகிளிட்டபோது இவரைப்பற்றி நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா 'குறுந்தொகை நாயகர்' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருப்பதைப் பார்க்க முடிந்தது. இரண்டையும் வாசித்துவிட்டு, 'L.H.&P.A'  சார்பாக என் தோளைத் தட்டுங்கள், வலது கையால்.  telle la pluie imprégnant la terre rouge , nos cœurs se mêlent et s’entremêlent. (சும்மா!) - ஆபிதீன்

***








***

நன்றி : பெர்நார் வெர்பர், தீராநதி, சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், சாதிக்

Thursday, April 5, 2012

நரகத்தை நிரப்புவதே நம் பணி!

இணையத்தை நிரப்புவதே ஆபிதீன் பணி!

***
மகாகவி இக்பால் அவர்கள் எழுதிய 'இபுலீஸின் சபை' எனும் கவிதையில் தலைமை இபுலீஸ் (ஷைத்தான்) தன் சீடர்களுக்கு மொழிவதைப் பகிர்கிறேன். தமிழாக்கம் : தாழை மதியவன்.  ('காஷ்மீர் பெண்ணின் கவலைகள்' நூலிலிருந்து)

***

நரகத்தை நிரப்புவதே நம் பணி

எக்காளம்,  எக்காலம் ஊதப்படுமோ
அக்காலம் வரை - மக்களெல்லாம்
அடிமைப்பட்டே - கிடக்கட்டும்
ஆமைகளாய் நடக்கட்டும் -

முக்காலம் உணர வேண்டாம்
முன்னேறிச் செல்ல வேண்டாம்
முதுகெலும்பை மறக்கட்டும்
முடுக்குகளில் முடங்கியே இருக்கட்டும் -

உலக வாழ்வில்
ஒன்றும் இல்லையென ஒதுங்கட்டும்
ஒன்றுமே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம்
ஒளிந்து ஒளிந்து பதுங்கட்டும் -

அவ்வண்ணம் அவர்கள் அழுக்கைப் புனுகாக
அர்த்தமாக்கிக் கொள்ளும் போதுதான்
நமக்கு வெற்றிகள் கிட்டும்
நன்மைகள் பலவும் கொட்டும் -

அரைகுறை ஆசான்கள் ஆன்மீகத்தில் மூழ்கி
புரையேறி வேதங்களுக்கான விளக்கங்களை வில்லங்கமாகத்
திரித்துக்கூறும் போதுதான் வீரியம் நமக்குச்சேரும்
நினைத்த காரியம் நடக்கும் நாளும் -

ஒடுங்கிக் கிடப்பவர்கள் - எங்கே உத்வேகத்தோடு
விழித்து எழுந்து விடுவார்களோ என வினாடிக்கு வினாடி
உள்ளுக்குள் பயப்படுகிறேன் - தினம்
உடைந்தே சந்தேக வயப்படுகிறேன் -

உலக உண்மைகளை ஓர்மனப்பட்டு ஆய்வதுதான்
உயர்நிலை மார்க்கம் என மக்கள்
உணர்ந்து கொள்வார்களோ? என விசனப்படுகிறேன் ஒவ்வொரு முறையும்
உலகை உற்று உற்றுப்பார்த்து வேதனைப்படுகிறேன் -

அவர்கள் அறியாமையிலேயே
மூழ்கிக் கிடக்கட்டும்
கடமையேதும் செய்யாமல்
கவலையின்றிக் களிக்கட்டும் -

உலகவாழ்வின் ஒவ்வொரு பங்கையும்
உதறித் தள்ளிய அவர்கள்
தோல்விகளைத் தழுவட்டும் - தங்களைத்
தொலைத்துவிட்டு அழுவட்டும் -

கவிதைகளில் மூழ்கட்டும்
கற்பனையால் சூழட்டும்
கண்கள்மூடி துறவறத்தில் அமரட்டும்
கருத்தெல்லாம் கயமையே நிலவட்டும் -

ஊண் உறக்கமின்றி மயங்கி
உலகினையே மறக்கட்டும்
தெருவோர மடங்களெல்லாம்
திக்ருசெய்து கிடக்கட்டும் -

கரத்திலுள்ள தஸ்பீஹ்
கணக்கின்றி புரளட்டும்
நூறு நூறு கிரகங்களும்
நூலினிலே உருளட்டும் -

சொன்னதெல்லாம் நடக்கட்டும்
சொர்க்கம் காலியாகவே இருக்கட்டும்.


***

நன்றி : தாழை மதியவன் (எஸ். எம். அலி)
நன்றி : ஷார்ஜா ஷைத்தான்!

Tuesday, April 3, 2012

இப்னு பதூதா (நிறைவு) - ஹமீது ஜாஃபர்


'இப்னு பதுதா'வை நான் தொடங்கியபோது ஒரே பதிவில் முடித்துவிடலாம் என்றுதான் எண்ணினேன், ஆனால் எழுத எழுத நீண்டுகொண்டே போனது.  ஒரு வழியாக நான்கு பாகங்களில் முடிவு பெற்றதென்றாலும் நிறைவானதல்ல. இதை எழுதும்போது என்னுள் ஓர் நப்பு+ஆசை தோன்றியது, நாம் ஏன்  அவரது காலகட்டத்தில் பிறக்கவில்லை என்று. ஒரு வேலை பிறந்திருந்தால் பக்கத்திற்கு இரண்டு (மனைவிகள்) போததற்கு எண்ணற்ற அடிமைப் பெண்கள் என்று ராஜபோகத்தில் வழ்ந்திருக்கலாமே என்று. அதே நேரம் வேறொரு ஆதங்கம், கல்யாணமே ஆகாமல், அந்த மகிழ்வான இனிமையை,
சுவைக்காமல் புறப்பட்டு விட்டாரே என்று. ஆனால் அது நீடிக்கவில்லை தூனிஸில் தொடங்கி சென்ற இடங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருமணம் செய்து கொண்டார், அல்ஹம்து லில்லாஹ். இப்போது அவரது வாரிசுகள் எங்கெங்கே இருக்கின்றனரோ யாருக்குத் தெரியும்? சிலர் பெருமைப் பட்டுக்கொள்வார்கள், நாங்கள் நவாப் பரம்பரை; நாங்கள் மொகலாயப் பரம்பரை; நாங்கள் ஷேக் வம்சம்; நாங்கள் செய்யது வம்சம் என்று. (இப்னு) பதூதா வம்சம் என்று சொல்பவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படி இருப்பவர்கள் நிச்சயமாகப் பெருமைக்குரியவர்கள். - ஹமீது ஜாஃபர்.

***



இப்னு பதூதா முதல் பகுதி : http://abedheen.wordpress.com/2011/12/22/ibn-battuta/
இரண்டாம் பகுதி : http://abedheen.blogspot.com/2012/01/2.html
மூன்றாம் பகுதி : http://abedheen.blogspot.com/2012/02/3.html
***

இப்னு பதூதா பாகம் 4  (நிறைவு) :   (அருட்கொடையாளர் - 10/4)

சபத்தாவில் மூன்று மாதங்கள் நோயால் அவதிப்பட்டு இறைவன் அருளால் சுகமாகிய பின் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தபோது எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட்டதால் ஜிஹாத் உணர்வோடு கலந்துக்கொள்ள புறப்பட்டேன். சபத்தாவிலிருந்து கடல் மார்க்கமாக அந்துலூசியாவை  (ஸ்பெயின்) அடைந்தேன். அங்கு அதிக அளவில் குடியேறியவர்கள் இருந்ததால் எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இது, பத்து மாதங்கள் வரை ஜபலை (Gibraltar) தன் பிடியில் வைத்திருந்த அத்ஃபுனுஸ் (Alphonso XI) இறந்தபின் நிகழ்ந்தது. அந்துலுசியாவின் முதல் பகுதி என்று சொல்லப்படும் 'வெற்றிக்கொள்ளப்பட்ட மலையை (ஜிப்ரால்டர்) அடைந்தபின் எங்கள் மன்னர் மறைந்த அபுல் ஹஸன் அவர்கள் கட்டிய பாதுகாப்புகள் அமைந்த அழகிய கோட்டையைப் பார்த்தேன். அந்துலூசியாவில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டப்பின் தாரிக் பின் ஜாயித் முதலில் 711ல் அடைந்தபின் அம்மலை 'ஜபல் தாரிக்' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. பின்பு அது கிருஸ்துவர்கள் கைவசமானது.

கிருஸ்துவர்களிடமிருந்து 'ஜபல் தாரிக்'ஐ (ஜிப்ரால்டர்) மீட்டெடுத்த எங்கள் மாமன்னர் மறைந்த அபுல் ஹஸன் பெரிய கோட்டையைக் கட்டி தன்
பொறுப்பில் இருபதாண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தார். பின் தன் மகன் மதிப்புமிகுந்த இளவரசர் அபு மாலிக்கை அனுப்பி சக்திவாய்ந்த ராணுவத்தை நிறுவினார். அதல்லாமல் எங்கள் மரியாதைக்குரிய ஷெய்கு அபு இனான் அவர்கள் அதை அழகு படுத்தி அங்கு அனைத்து வசதிகளையும் செய்தார். அங்கிருந்து ரோண்டா நகருக்குச் சென்றேன். அதுவும் மிக அழகிய நகரம், அங்கு எனது உறவினர் நீதிபதியாக இருந்தார். அங்கு நான் ஐந்து நாட்கள் தங்கிவிட்டு மார்பலா (Marbella) நகருக்குச் சென்றேன். சிறிய விவசாய நகரம் என்றாலும் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடானது, அங்கிருந்து மலாகா (Malaqa/malaga) செல்ல எண்ணி  பயணப்பட்டேன், வழியில் குதிரை ஒன்றும், மனிதன் ஒருவனும் இறந்து கிடந்ததைப் பார்த்தபோது அங்கு எதோ சண்டை நடந்த அறிகுறி தென்பட்டதால் தாமதப்படுத்தினேன். நான் நினைத்ததுபோல் அங்கே சண்டை நடந்திருக்கிறது, ஒரு கிருஸ்துவரும் ஒரு மீனவரும் கொல்லப்பட்டனர், பத்துபேர் சிறை பிடிக்கப்பட்டனர், ஒருவர் தப்பித்துவிட்டார். ஓரு இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் பயணத்தைத் தொடர்ந்தேன்.

கர்நாட்டா (Granada)

மலாகா, இது அந்துலுசியாவின் மிக அழகிய ஒரு நகரங்களில் ஒன்று. இங்கு கிடைக்கும் பழங்களும் உணவுப் பொருட்களும் மிக சுவையுள்ளதாக இருக்கிறது. திராட்சை மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதைப் பார்த்தேன், மாதுளையும், பதாம் பருப்பும், அத்திப் பழமும் நிறையவே கிடைக்கின்றன. இதல்லாமல் மினுமினுக்கும் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன, அவைகள் பல பாகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு பெரிய பள்ளிவாசலும் இருக்கிறது. அங்கிருந்து இருபத்தி நான்கு மைல் தூரத்திலுள்ள பல்லாஷ் (Velez) நகரை அடைந்தேன். அங்கேயும் மலாகாவில் கிடைப்பதுபோல் பழவகைகள் கிடைக்கின்றன, ஓர் அழகிய பள்ளிவாசலும் இருந்தது. பின் அங்கிருந்து ஒரு மைல் தூரத்திலுள்ள அல்-ஹம்மா (Alhama) நகரத்தை அடைந்தேன். அங்கு ஓர் வெண்ணீர் ஊற்று நதியோரம் இருப்பதால் அந்நகருக்கு அப்பெயர் வந்தது.  பின் அங்கிருந்து அந்துலுசியாவின் முக்கிய நகரான கர்நாட்டாவை (Granada) அடைந்தேன். சுற்றுச்சூழல் தூய்மையாக அமைந்துள்ள ஓர் அருமையான நகர், அந்நகர் நாற்பது மைல் வரை விரிவாக்கப்பட்டிருந்தது. ஷன்னில் (Xenil) நதியின் செழிப்பால் தோட்டங்களும், பூங்காக்களும், அழகிய கட்டிடங்களும், flowery meads, wine yards இருந்தன. நான் அங்கே சென்றிருந்தபோது கர்நாட்டாவின் அரசர் சுல்தான் ஹஜ்ஜாஜ் யுசுஃப் சுகவீனப்பட்டிருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவரது தாயார் தங்க தீனார்கள் எனக்களித்தார். அங்கு பல சூஃபியாக்களை சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. அவர்களில் ஒருவர் சமர்கந்திலிருந்தும், ஒருவர் தப்ரிஜிலிருந்தும், ஒருவர் குனியா(Konia)விலிருந்தும், ஒருவர் குரஸானிலிருந்தும், இருவர் இந்தியாவிலிருந்தும் வந்திருந்தவர்கள். அவர்கள் என்னை சிறப்பு படுத்தினார்கள். பின் அங்கிருந்து அல் ஹம்மா, பல்லாஷ், மலக்கா என வந்த வழியாக சப்தா (Ceuta) திரும்பினேன்.

மேற்கு ஆப்ரிக்கா / சஹாராவில் பயணம்

சபத்தாவிலிருந்து அசிலாவை அடைந்து அங்கு சிலமாதங்கள் தங்கிருந்துவிட்டு மிக அழகிய நகரான மர்றாகுஷை அடைந்தேன். மிக அழகிய மினாராவையுடைய பள்ளிவாசலும் அதனைச் சார்ந்த புத்தகசாலையும் ஒருங்கே இருந்தன. எங்கள் மன்னர் அபுல் ஹசன் அவர்களால் கட்டப்பட்ட கல்லூரியும் இருந்தது. பின்பு அங்கிருந்து நீக்ரோதேசமான சிஜில்மாஸாவை அடைந்தேன். அங்கு விளையும் பேரீச்சை மிகவும் சுவையுள்ளது. நான் சீனாவில் சந்தித்த கையுமுதீன் அல் புஷ்ரியுடைய சகோதரர் அபு முஹம்மது அல் புஷ்ரியுடன் தங்கியிருந்தேன். அங்கு சில ஒட்டகங்களும் நான்கு மாதத்திற்கு தேவையான உணவுகளும் வாங்கிக்கொண்டு வணிகக்கூட்டத்தாருடன் 753 முஹர்ரம் முதல் தேதி (18-2-1352) புறப்பட்டேன். இருபத்தைந்து நாட்கள் பயணத்துக்குப் பின் டகாஜா என்ற கிராமத்தை அடைந்தோம். அது எதுவுமே கிடைக்காத கிராமம்.

அங்கு வீடுகளும் பள்ளிவாசலும் உப்புக்கற்களால் சுவர்களும் ஒட்டகைத் தோலால் கூரையும் வேயப்பட்டிருந்தன, மருந்துக்குக்கூட ஒரு மரம் இல்லை, எங்கு பார்த்தாலும் மணல்வெளியும் உப்புக் குழிகளுமே இருந்தன.

உப்புத்தொழில் புரியும் மஸூஃபா பழங்குடியினரின் அடிமைகளைத் தவிர வேறு யாரும் வசிக்கவில்லை. உணவு வெளியிலிருந்தே வருகின்றன. நீக்ரோக்கள் இங்கிருந்து உப்பை வாங்கிச்செல்கின்றனர். அங்கிருந்து புறப்பட்ட எங்கள் காரவான் பத்து நாட்களுக்குமேல் கடும் தாகத்தில் பயணம் செய்யவேண்டியிருந்தது. வழியில் எங்கும் தண்ணீர் இல்லை, அப்படி கிடைத்தாலும் அது உப்புகரிப்பாகவும், அசுத்தமாகவும், ஈக்கள் மொய்த்துக்கொண்டும் இருந்தது. இடையிடையே விஷப் பூச்சிகளின் கூட்டம்; சோதனையான பயணத்தினிடையே ஓரிடத்தில் தேங்கிக்கிடந்த தூய்மையான மழை நீரில் எங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு துணிகளை சுத்தம் செய்துகொண்டு தாசரஹ்லா என்ற இடத்தில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு இவாலாதான் (Watala) என்ற நகரை அடைந்தோம். இது சிஜில்மாஸிலிருந்து இரண்டு மாதப் பயண தூரம்.

இவாலாதான் (Watala)

நீக்ரோக்களின் கடைசி வடக்குப் பகுதி. எங்களுடையப் பொருட்களை திறந்தவெளி அரங்கில் வைத்தோம், அவைகளை கருப்பர்கள் பாதுகாத்தனர். அங்கு வரும் வணிகர்கள் அந்நகர கவர்னர் முன் ஆஜராகவேண்டும். அவர் மொழிபெயர்ப்பாளர் துணையால் வணிகர்ர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்துகொள்வார். எங்களிடம் அவர் கௌரவக்குறைவாக நடந்துக்கொண்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை, தவிர வெள்ளை நிறத்தவர்களை வெறுத்தனர்.  முடிவில் எங்களுக்கு விருந்து வைத்தனர். திணை கலந்த தேனும் பாலும் ஒரு பெரிய குடுவையில் கொடுத்தனர். இது எனக்குப் பிடிக்கவில்லை;  இது அவர்களுடைய உபசரிப்பு முறை என என்னுடன் வந்தவர்கள் கூறியதால் வெறுப்புடன் ஏற்றுக்கொண்டேன். மொத்தத்தில் எனக்குப் பிடிக்காமல் மொராக்கொ திரும்ப எத்தனித்தபோது அவர்களின் அரசரை தலைநகர் மாலியில் சந்தித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. எண்ணத்தின் விளைவு ஐம்பது நாட்கள் அங்கேயே தங்கினேன். அங்குள்ள மக்கள் எனக்கு மரியாதை செலுத்தியது எனக்குப் பிடித்தது. மிகவும் உஷ்ணமான பிரதேசம். மிக உயர்வான பேரீச்சை மரங்கள் இருந்தன, தர்பூசுப் பழங்களும் கிடைத்தன. நிறைய இறைச்சி கிடைத்தது; எகிப்து நாட்டு
துணிகளை அணிந்தனர்.

பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாகவும் ஆண்களைவிட அதிக மரியாதை செலுத்தும் குணமுடையவர்களாக இருந்தனர். ஆண்களிடம் பொறாமை குணத்தை காணமுடியவில்லை. ஆனால் அவர்களிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது; தன் தந்தையிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை மாறாக தாயின் சகோதரரிடமிருந்து வாரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்; அதுபோல் தன் சொந்த பிள்ளைகளை வாரிசுதாரர்களாக ஆவதில்லை சகோதரியின் பிள்ளைகளே வாரிசுதாரர்களாக பாவிக்கப்படுகின்றனர். இத்தகைய வினோதப் பழக்கத்தை மலபாரைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை. இம்மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர்; தொழுகையில் நேரம் தவறுவதில்லை, சட்டம் படிப்பதிலும், குர்ஆனை மனனம் செய்வதிலும் ஆர்வம் காட்டினர். என்றாலும் பெண்கள், ஆண்கள் முன் நாணத்தை வெளிப்படுத்துவதில்லை, முகத்தையும் மூடுவதில்லை. தொழுகையில் மட்டும் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். ஒருவர் அப்பெண்களை மணந்துகொள்ள விரும்பினால் மணக்கலாம் ஆனால் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்ல முடியாது, பெண்
விரும்பினாலும் குடும்பத்தவர் அனுமதிப்பதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தன் குடும்பத்தவர் அல்லாது வேறு நண்பர்களும், தோழர்,
தோழியரும் ("friends" and "companions") இருந்தனர். ஒருமுறை இலாவதான் காஜி (நீதிபதி) வீட்டிற்கு சென்றேன். அனுமதி பெற்று வீட்டினுள் நுழைந்தபோது நான் கண்ட காட்சி என்னை திக்குமுக்காட வைத்தது. நான் திரும்பியபோது அங்கிருந்த பெண் என்னைப் பார்த்து வெட்கப்படாமல்
சிரித்தாள், "ஏன் போகிறாய்? அவள் என் தோழி" என்று காஜி சொன்னார். ஒரு காஜி, இஸ்லாமிய சட்டம் தெரிந்தவர், மற்றவர்களுக்கு
வழிகாட்டக்கூடியவர் இருந்த கோலம் என்னை வியப்படையச் செய்தது.

மாலி

இவாலதானிலிருந்து புறப்பட்ட எங்கள் கூட்டம் பத்து நாள் பயணத்துக்குப் பின் ஜகாரி என்ற கிராமத்தை அடைந்தோம். அது நீக்ரோ வணிகர்கள்
வாழும் கிராமம், கூடவே இபாதி இனத்தவர்களான வெள்ளை நிறத்தவரும் இருந்தனர். இங்கிருந்துதான் இலாவதானுக்கு தானியம்
கொண்டுசெல்லப்படுகிறது. பல கிராமங்களைக் கடந்து நைல் (River Niger) நதி அருகே வந்தபோது முதலையை முதன் முதலாகப் பார்த்தேன், அது
ஒரு சிறிய படகு போன்றிருந்தது. ஒரு நாள் நதிக்கரையோரம் சென்றபோது  ஒரு கருப்பு மனிதன் அநாகரீகமாக  என் குறுக்கே நின்றான். நான் விசனமடைந்தேன். அவன் சொன்னான், "உன்னை முதலையிடமிருந்து காப்பாற்ற நிற்கிறேன்" என்றான். பின்பு பத்து மைல் தூரத்திலுள்ள சன்சாரா நதிக்கரையோரமுள்ள கர்சாகு (Karsakhu) என்ற நகரை அடைந்தேன். அனுமதி இல்லாமல் யாரும் மாலியினுள் நுழைந்துவிடமுடியாது, இது அவர்கள் கடைபிடித்துவரும் கொள்கை. நான் ஏற்கனவே அங்கு வாழும் வெள்ளை இனத்தவருக்கு கடிதம் எழுதி எனக்காக ஒரு வீடு வாடகைக்கு எடுக்கும்படி அறிவித்திருந்தேன், அதனால் எந்த சிரமமில்லாமல் நதியைக் கடந்து கருப்பர்களின் தலை நகரான மாலியை அடைந்தேன். அங்கு முஹம்மது இப்னு அல்-ஃபக்கி எனக்காக வீடு பிடித்திருந்தார். அவருடன் மாலி காஜி அப்துர்றஹ்மானை சந்தித்தேன், உயர்வான குணமுள்ள கருப்பு இனத்தவர் அவர் உதவியால் அவர்களின் மொழியான 'டுகா' மொழி பெயர்ப்பாளர் கிடைத்தார். அவர்கள் எல்லோரும் என்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்கள் அளித்த ஒருவகையான  உணவு எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, நான் உட்பட எங்களில் ஆறு பேர் நோய்வாய்பட்டோம், ஒருவர் இறந்தும் விட்டார். நோய் கடுமையாகிக்கொண்டிருந்தது,  இரண்டு மாதம் அவதிப்பட்டேன்.  எகிப்தியர் ஒருவர் ஒருவகை வேரிலிருந்து கஷாயம் தயாரித்துக் கொடுத்தார், அதை அருந்தியபிறகு இறைவன்
அருளால் சுகமானோம்.

மாலி சுல்தான்

அந்நாட்டு அரசர் பெயர் மன்ஸா சுலைமான். மன்ஸா என்றால் அவர்கள் மொழியில் சுல்தான் என்று பொருள். அவர் ஒரு கஞ்சப் பிரபு, பரிசுப்
பொருளை எதிர்பார்க்க முடியாது. நோயினால் இரண்டுமாதம் வரை அவரை சந்திக்கமுடியவில்லை. ஒரு நாள் எங்கள் மறைந்த மன்னர் அபுல் ஹசன் நினைவாக ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தார். அதற்கு மார்க்க அறிஞர்கள் அழைக்கப்பட்டனர், நானும் சென்றேன் நிகழ்ச்சி முடிந்தபிறகு இப்னு ஃபக்கி அவர்களால் நான் மன்னரிடம் அறிமுகம் செய்யப்பட்டேன்.
நாங்கள் விடைபெற்று வந்தபிறகு மன்னரிடமிருந்து பரிசுப் பொருட்கள் காஜியிடம் வந்து அது பின் இப்னு ஃபக்கி மூலமாக என்னிடம் வந்தது. அதில் சில மேலாடைகளும், சிறிது பணமும், மூன்று கேக்கும், ஒரு ரொட்டித் துண்டும், வறுத்த கறியும், கொஞ்சம் தயிரும் இருந்தன. அதைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்தது. இரண்டு மாதத்திற்குப் பின் வந்த பரிசுப் பொருள் இதுதானா என்ற என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். இது மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டு என்னை அழைத்து விசாரித்தார். என்னுடையப் பயணக்கதைகளை விவரித்தேன். பின் நான் தங்குவதற்கு வீடும் மேலும் வசதிகளும் செய்து தந்தார். அது ரமலான் மாதம், பிறை 27ல் மார்க்க அறிஞர்களுக்கும் எனக்கும் நிறையப் பொருட்களும், தங்கக் காசுகளும், பணமுமாக 'ஜக்காத்' தந்தார்.

மக்கள் குறை கேட்பது அரண்மனை மைதானத்தில், அரசர் அமரும் மேடை மரத்தடியில் இருந்தது. அங்கு பட்டுத் துணி விரிக்கப்பட்டு தங்கப் பறவை
போன்ற ஆசனத்தில் மன்னர் அமருமிடத்தின் மேலே நிழலுக்காக குடையும் பிடிக்கப்படுகிறது. அதை 'பிம்ப்பி' என்றழைக்கின்றனர். மக்கள் அங்குள்ள மரத்தடியில் நிற்கவேண்டும். மன்னர் பட்டுத்துணி அங்கி அணிந்து, வில் அம்பு, முதுகில் கேடயத்துடன் வரும்போது தாரைத் தப்பட்டைகள் ஒலிக்கப்படுகின்றன, மக்கள் ''மான்ஸா சுலைமான் கி'' என்று ஒலிக்கின்றனர். ஆனாலும் மன்னரின் பேராசையால் மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். தாமதமாகப் போனால் பள்ளியில் இடம் கிடைக்காது. எனவே முன்பாகவே தங்களது அடிமைப் பையன்களிடம் ஈச்ச ஓலையினால் நெய்யப்பட்ட தொழுகைப் பாயை கொடுத்தனுப்பி இடம் பிடிக்கச் செய்கின்றனர். எல்லோருமே வெள்ளை ஆடை அணிந்து வருகின்றனர். இது தவிர இன்னொரு சிறப்பம்சம் அவர்களிடம் இருந்தது. எல்லோரும் குர்ஆனை மனனம் செய்திருந்தனர், தங்கள் குழந்தைகளையும் மனனம் செய்ய வைக்கின்றனர். செய்யத் தவறிய தங்கள் பிள்ளைகளை  மனனம் செய்யும் வரை சங்கிலியால் கட்டிவைக்கின்றனர். இதை காஜி வீட்டிலும் கண்டேன்.

பெண் அடிமைகள் தங்கள் எஜமான் முன்னாள் நிர்வாணமாக செல்லவேண்டும். மன்னர் முன்பும் அப்படியே, ஆனால் தங்கள் தலையிலும் உடம்பிலும் புழுதியும் சாம்பலையும் அப்பிக்கொண்டு ஆடையில்லாமல் மன்னர் முன் செல்லவேண்டும், இது அவர்களின் பண்பாடு. இன்னொமொரு கண்டனத்துக்குரிய செயலைக் கண்டேன். அது இறந்தவற்றின் மாமிசத்தையும், நாய் மற்றும் கழுதைகளையும் அவர்களில் பலர் உண்பது.

மாலியை விட்டு புறப்படுதல்

நான் மாலியை அடைந்தது ஹிஜ்ரி 753, ஜமாத்துல் அவ்வல் 14(28th of June 1352), எட்டு மாதம் தங்கிவிட்டு 22, முஹர்ரம்(27th Feb 1353) அன்று
அபுபக்கர் இப்னு யாக்கூப் என்ற வணிகருடன் மாலியை விட்டுப் புறப்பட்டேன். வழியில் நைல்(River Niger) நதியின் கிளை நதி ஒன்றை
கடக்கவேண்டியிருந்தது. கடக்குமிடம் கொசுக்கள் நிறைந்திருந்தன, எனவே இரவல்லாது வேறு நேரங்களில் யாரும் கடக்கமாட்டார்கள். நாங்கள் இரவு
கவிழ்ந்து சில மணி நேரம் கழித்து அடைந்ததால் நிலா வெளிச்சத்தில் நதியைக் கடந்தோம்.

நாங்கள் நதியை அடையும்போது பதினாறு வினோதமான காட்டு மிருகங்களைக் கண்டேன். குதிரை போன்ற முகம், யானைக்குள்ளது போல் கால்கள், சிறிய வால், பெரிய உடம்பு, தலையைத் தூக்கியவாறு தண்ணீரில் நீந்திச்சென்றன. அவை என்ன என்று கேட்டபோது அவை ஹிப்போபொட்டாமி Hippopotamus) என்றார் அபுபக்கர். படகை கவிழ்த்துவிடும் என்பதால் சற்று தூரத்தே எங்கள் படகு சென்றது.

Cannibals

நாங்கள் ஒரு பெரிய கிராமத்தில் கரை இறங்கினோம், அதன் தலைவர் ஒரு நீக்ரோ, பெயர் ஃபர்பா மாகா (Farba Magha). அவர் மான்சா மூசாவுடன்
வந்தவர். அந்த பகுதி அருகே மனிதனைத் திண்ணும் நீக்ரோக்கள் (cannibals) வாழ்கின்றனர். ஒருமுறை மான்சா மூசாவுடன் (father of present Mansa)
வந்த வெள்ளை நிறமுள்ள காஜி , நான்காயிரம் காசுகளைத் தன்வசப் படுத்த முயற்சித்ததால் அவரை தண்டிக்க எண்ணி அந்த நீக்ரோக்கள் வாழும் பகுதிக்கு அனுப்பிவிட்டார். ஆனால் காஜி அவர்களுடன் நான்காண்டுகள் வாழ்ந்தார், காரணம் காஜி வெள்ளை நிறமாக இருந்ததால் திண்பதற்குத் தகுதியற்றவராம் (they say that the white is indigestible because he is not " ripe," whereas the black man is " ripe" in their opinion). அப்பகுதியில் தங்கச் சுரங்கம் இருந்ததால், ஒருமுறை அவர்களின் தலைவர் ஒருவருடன் அப்பகுதி மக்களை சந்தித்தபோது ஒரு நீக்ரோ அடிமைப்  பெண்ணை பரிசாக அளித்தார். அவளை தின்றுவிட்டு கையின் ஒரு பகுதியை இரத்தத்துடன் எடுத்து வந்து மூசாவுக்கு நன்றி தெரிவித்தனர். பெண்ணின் மார்பகத்தையும் உள்ளங்கையையும் விரும்பி சாப்பிடுவார்கள் என சிலர் சொன்னார்கள்.

தம்புக்து

பின்பு அங்கிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள தம்புக்து என்ற இடத்திற்கு சென்றேன். அங்கு முஸ்ஸஃபா பழங்குடியினர் வாழ்கின்றனர்,ஒரு
பள்ளிவாசல் இருந்தது, அதை கர்நாட்டா(Granada)வில் பிறந்த அபு இஸ்ஹாக் அல் சஹிலி என்ற புலவரால் கட்டப்பட்டது. 1324ல் அல் சஹிலி மக்காவுக்கு செல்லும் வழியில் மாலி மன்னரை சந்தித்தார். அவருடைய கவிதையில் மயங்கிய மன்னர் மாலிக்கு அழைத்தார், அப்போது தம்புக்து வணிக மையமாக இருந்ததால் அங்கு மான்சாமூசாவின் பெயரால் அரங்கம் ஒன்று கட்டினார். அதை கண்டு மகிழ்ந்த மூசா அவருக்காக அந்துலுசியா பாணியில் ஒரு வீடும் பள்ளிவாசலும் கட்டினார். அவர் வீடு மறைந்துவிட்டாலும் இன்றும் அப்பள்ளிவாசல் அவர் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது
(Wikipedia).

தம்புக்துவிலிருந்து ஒரே மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட ஒரு சிறிய பட்கில் கடந்து காவ்காவை ( Gawgaw) அடைந்தேன் நைஜர் நதியில் இருக்கும் ஒரு பெரிய நகரம், அங்கு அரிசி, பால், மீன், இனானி என்று சொல்லப்படும் வெள்ளரிக்காய் நிறைய கிடைத்தன.  மாலியைப் போலவே பண்டமாற்று முறையில் வியாபாரம் நடக்கிறது. அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தேன். பின்பு தகாடாவை (Tagadda) நோக்கி ஒரு வணிகக் கூட்டத்தாருடன் பயணமானேன்.

தகாடா (Tagadda)

தகாடாவில் கட்டப்பட்ட வீடுகள் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தன. தண்ணீர்கூட சிகப்பாகவே இருந்தது, காரணம் செம்புச் சுரங்கத்திலிருந்து ஒழுகி வருவதால். ஆணும் பெண்ணும் செம்புச் சுரங்கத்திலிருந்து மண் எடுத்துவந்து தங்கள் வீடுகளில் காய்ச்சி பட்டைகளாகவும், கம்பிகளாகவும்
வடிவமைத்து விற்கின்றனர். இது அவர்களுக்கு பெரும் செல்வத்தை ஈட்டித் தருகிறது. வேறெதுவும் அங்கே கிடைக்காததால் ஒவ்வோர் ஆண்டும் எகிப்து சென்று தங்களுக்குத் தேவையான உயர்தர துணிகளையும், மற்றுமுள்ள பொருட்களையும் வாங்கி வருகின்றனர். அவர்கள் வாழ்க்கை சுகபோகமாகவும் அடிமைப் பெண்களை வைத்திருப்பதிலும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர். பெண்கள் நன்றாக கொழுத்து தடியாகவும் அழகாகவும் இருந்தனர். கல்வி அறிவுள்ள அடிமைப் பெண்களை விலைக்கு வாங்குவது மிகவும் கடினம், விற்கமாட்டார்கள். நான் இதில் முயன்று ஒரு காஜியின் உதவியால் அதிக விலை கொடுத்து வாங்கியும் அவள் உரிமையாளர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சஹாராப் பாலையில் பயணம்

அது 11 ஷஃபான் 754 (செப்டம்பர் 1353), தகடாவிலிருந்து புறப்பட்ட  600 பெண் அடிமைகளை உள்ளடக்கிய பெரிய காரவான் ஒன்றுடன் இணைந்தேன். தண்ணீரே கிடைக்காத பாலையைக் கடக்க பதினைந்து நாட்கள் பிடித்தன. எகிப்துக்கும் தாவாத் என்ற நகருக்கும் பிரியும் பாதையான 'காட்' என்ற இடத்திற்கு வந்தபோது தண்ணீர் கிடைத்தது, ஆனால் அதுவும் இரும்புத் தாதுப் பகுதி வழியாக வந்ததால் பருக லாயக்கற்றது. ஒரு வெள்ளைத் துணியை அத்தண்ணீரில் நனைத்தால் அது கருப்பாகிவிடும். பத்து நாட்களுக்குப் பிறகு ஹக்கார் (Haggar) நாட்டை அடைந்தோம். அங்கு
பெர்பர் இனத்தவர் வழ்கின்றனர். அவர்கள் மூர்க்கர்கள், தங்கள் முகத்தை துணியால் மூடிக்கொள்கின்றனர். எங்கள் கூட்டத்தின் தலைவர் ஒருவரை
பிடித்து வைத்துக்கொண்டு துணியும் வேறு சில பொருட்களும் கொடுத்தால்தான் விடுவோம் என்றனர். அப்போது புனித ரமலான் மாதம் தொடங்கியது,

ஆனால் ரமலான் மாதம் தொடங்கிவிட்டால் யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்கமாட்டார்கள், திருடமாட்டார்கள், பாதையில் பொருட்கள் கிடந்தால் தொடக்கூட மாட்டார்கள். இது அவர்களின் வழக்கமாம். ரமலான் மாதத்திலும் எங்கள் பயணம் தொடர்ந்தது, ஒரு மாத வழித்தடத்தில் சில மரங்களைத் தவிர முழுவதும் பாறைகள் நிறைந்த கடினமானதாக இருந்தது.

தாவாத்தின் முக்கிய கிராமமான புதா'வை (Buda) அடைந்தோம். அங்குள்ள மண்வளம் உப்புத்தன்மையுள்ளதாக இருந்தது. எனவே அங்கு எதுவும்
விளைவதில்லை. ஆலிவ், வெண்ணெய் என எதுவாக இருந்தாலும் மொராக்கோவிலிருந்து இறக்குமதி செய்தனர், பேரீச்சைப் பழம்
சிஜில்மாஸாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, அதையே அம்மக்கள் விரும்பினர் என்றாலும் அவர்களின் முக்கிய உணவு பேரீச்சைப் பழமும்,
வெட்டுக்கிளியும் (locusts). வெட்டுக்கிளியை பேரீச்சைப் பழத்தைப்போல் பதப்படுத்தி வைத்துக்கொள்கின்றனர். அவற்றை வேட்டையாடுவது சூரிய
உதயத்துக்குமுன், ஏனென்றால் இரவு குளிராக இருப்பதால் அவற்றால் பறக்கமுடியாது.

தாயகத்தை நோக்கி..

புதாவில் சில நாட்கள் தங்கிருந்துவிட்டு சிஜில்மாஸாவுக்குச் செல்லும் காரவானுடன் இணைந்துக்கொண்டேன். அது ஹஜ்ஜு மாதம் (29 Dec1353),
வழி நெடுகிலும் கடுமையான குளிரும் பனிப் பொழிவும். இத்தகையப் பனிப் பொழிவை புக்கரா, சமர்கந்து, குரஸான், துருக்கி நாட்டிலும் பார்த்தேன். ஆனால் அதைவிட மோசமாக உம் ஜுனைபா செல்லும் வழியில் இருந்தது. தார் அல்-தமா என்ற ஊரில் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிவிட்டு எனது மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய சங்கைமிகு ஷெய்கு அவர்கள் வாழும் ஃபாஸ் (Fez) நகரை அடைந்தேன். அதன் பிறகு நான் வேறு எங்கும் போகவில்லை. என் இறுதி நாட்கள்  வரை எங்கள் ஷெய்கின் வழிகாட்டுதலில் வாநாளைக் கழித்தேன். அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.

***      

ஹமீது ஜாஃபரின் குறிப்புகள் :

29 ஆண்டு காலம் , 73,000 மைல்கள் (117,500km), இன்றைய நவீன உலகின் 44 நாடுகளுக்கு மேலானவற்றை சுற்றிவந்தபின் மொராக்கோ சுல்தான் அபு இனானின் தூண்டுதலால் இப்னு ஜுஜை (Ibn Juzayy) என்ற இளம் அறிஞரின் உதவியால் இப்னு பதூதாவின் பயண அனுபவங்கள் எழுதி ஹிஜ்ரி 756 துல் ஹஜ்ஜு மாதம் பிறை 3 (9th December 1355) அன்று நிறைவு செய்யப்பட்டது. அதன்பின் மொராக்கோவில் சில காலம் நீதிபதியாகப் பணியாற்றிபிறகு 1368/1369 ல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் சொந்த ஊரான தன்ஜிரில் அடக்கம் செய்யப்பட்டது.

பல  நூற்றாண்டுவரை அரபு உலகத்தில் இவரது 'ரிஹலா' யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1830ல் அல்ஜிரியாவை பிரஞ்சு ஆக்ரமித்தபோது ஐந்து கையெழுத்துப் பிரதிகள் கான்ஸ்டண்டைனில் கண்டுபிடிக்கப்பட்டு பாரிஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு Charles Defrémery and Beniamino Sanguinetti
என்ற பிரஞ்சு அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1853 ல் அரபி விளக்கத்துடன் வெளியிடப்பட்டது. அதன்பின் பல மொழிகளில் எழுதப்பட்டு இன்று நம் கையில் தவழ்கிறது.

இஸ்லாத்தில் பற்றுகொண்ட இவரால் சில நாடுகளின் முஸ்லிம்களின் பண்பாடு பிடிக்கவில்லை. மங்கோலியர்கள், துருக்கியர்களின் வாழ்க்கை முறை ஏற்புடையதாக இல்லை. உதாரணமாக துருக்கிப் பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் தன்னிச்சையாகவும்,  கணவன்மார்கள் தங்களின்
அடிமைகளாகவும் இருக்கவேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்களாக இருந்தது. அதுபோல் மாலத்தீவு பெண்களும், சில ஆப்ரிக்க சஹாரா பெண்களின் அரை நிர்வாண உடை முறைகளையும் வெறுத்தார்.

இருபத்தோராவது வயதில் தொடங்கி தன்னந்தனியே 73 ஆயிரம் மைல்கள், பல நாடுகள்,  பல்வேறு நாகரீகம் பண்பாட்டுடைய மக்கள், சுகமான அனுபவங்களுக்கிடையே உயிருக்கு உலை வைக்கும் துன்பங்கள் என பல இடர்களை சந்தித்து சாதனை படைத்தது சாதாரணமானதல்ல. சென்ற இடங்களில் தான் பெற்ற பொக்கிஷங்களை இழந்து எப்படி வெறும் கையுடன் புறப்பட்டாரோ அதேபோல் திரும்பினார் என்றாலும் ஒவ்வொரு நாட்டின் செழிப்பையும் நாகரீகத்தையும் அறிய முடிகிறது.  இந்தியாவில் இருந்த ஜாதிப் பாகுபாட்டையும் அதற்கு மாறாக அண்டை நாடான இலங்கையில் வேற்றுமையற்ற நிலை இருந்ததையும் அறியமுடிகிறது. காலம் உருண்டோடியும் இன்னும் நம் நாட்டில் ஜாதி வெறி இருக்கத்தானே செய்கிறது.

மனிதனை இனத்தால், நிறத்தால் வேறுபடுத்தி வைத்தவர்கள் சுகமாக இருக்கின்றனர்; நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மேலை நாட்டவரிடம்கூட நிறவெறி இன்னும் நீங்கவில்லை. இவை என்று நீங்கும்.....?

***

இப்னு பதூதா சென்ற நாடுகளின் பட்டியல்:



Arab Maghreb - Tangier, Fes, Marrakech, Tlemcen(Tilimsan), Miliana, Algiers, Djurdjura Mountains, Béjaïa,Constantine - Named as Qusantînah. Annaba - Also called Bona. Tunis - At that time, Abu Yahya (son of Abu Zajaria) was the sultan of Tunis. Sousse - Also called Susah. Sfax, Gabès, Tripoli, Arab Mashriq, Cairo, Alexandria, Damietta, Jerusalem, Bethlehem, Hebron, Damascus, Latakia, Egypt, Syria,

Medina - Visited the tomb of Prophet Muhammad, Jeddah, Mecca - Performed the Hajj pilgrimage to Mecca. Rabigh - City north of Jeddah on the Red Sea.Oman, Dhofar, Hajr (modern-day Riyadh), Bahrain, Al-Hasa, Strait of Hormuz, Yemen, Qatif,

Byzantine Empire and Eastern Europe, Konya, Antalya, Bulgaria, Azov, Kazan, Volga River, Constantinople

Central Asia, Khwarezm and Khorasan (now Uzbekistan, Tajikistan, Balochistan (region) and Afghanistan, Bukhara and Samarqand, Pashtun areas of eastern Afghanistan and northern Pakistan (Pashtunistan),

South Asia, Punjab region (now in Pakistan and northern India), Sindh, Multan, Delhi, Present day Uttar Pradesh, Present day Gujarat, Deccan, Konkan Coast, Kozhikode, Malabar, Coromandal coast, Madurai.
Maldives, Sri Lanka - Known to the Arabs of his time as Serendip. Battuta visited the Jaffna kingdom and Adam's Peak, Colombo.

Bengal (now Bangladesh and West Bengal), Brahmaputra River in Bangladesh,  Meghna River near Dhaka, Sylhet met Sufi Shaikh Hazrat Shah Jalal,  Southeast Asia, Burma (Myanmar), Sumatra Indonesia, Malay Peninsula Malaysia, Viet Nam.

China, Quanzhou - as he called in his book the city of donkeys. Hangzhou — Ibn Battuta referred to this city in his book as "Madinat Alkhansa" مدينة الخنساء. He also mentioned that it was the largest city in the world at that time; it took him three days to walk across the city, Beijing - Ibn
Battuta mentioned in his journey to Beijing how neat the city was.

Ibn Battuta visited the Kingdom of Sultan Tawalisi, Tawi-Tawi, the country's southernmost province, Somalia, Mogadishu, Zeila, Swahili Coast, Kilwa, Mombasa, Mali Empire and West Africa, Timbuktu, Gao, Takedda, Mauritania, Oualata (Walata) Gibralter, Spain, Granada, Valencia,

During most of his journey in the Mali Empire, Ibn Battuta travelled with a retinue that included slaves, most of whom carried goods for trade but would also be traded as slaves. On the return from Takedda to Morocco, his caravan transported 600 female slaves, suggesting that slavery was a substantial part of the commercial activity of the empire.

***

Sources:



The Travels of Ibn Battuta - H.A.R. GIBB
http://en.wikipedia.org/wiki/Ibn_Battuta
http://rolfgross.dreamhosters.com/Battuta-Web/Rihla-14.htm
http://www.fordham.edu/halsall/source/1354-ibnbattuta.asp
**


நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com