Thursday, January 2, 2014

அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளி! - ராஜேந்திர யாதவ்

ராஜேந்திர யாதவ் எழுதிய 'வானம் முழுதும்' (sara aakash) நாவலிலிருந்து சுவாரஸ்யமான ஒரு விவாதம்.   "நீங்க உங்க ஹிந்து தர்மத்தை உலகத்திலேயே உயர்ந்த மதமா நெனக்கலியா? ' என்று கதாநாயகன் கேட்டதில் விவாதம் சூடுபிடிக்கிறது. (இப்படி முஸ்லீம்கள் தங்கள் மதம் பற்றி  செய்தால் என்னாகும் என்று நினைத்தாலே கதி கலங்குகிறது. கதி என்ன, கொத்துக்கறிதான்!). மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் எழுதிய கன்னட நாவலான 'சிக்கவீர ராஜேந்திரன்'-ல் வரும் பிரமாதமான இன்னொரு விவாதத்தை (இதில் ஹிந்துமதம் வாகை சூடும், முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன்!)  பிறகு பதிவிடுகிறேன். முதலில் ஹிந்தி. சரியா ?  நன்றி. - ஆபிதீன்

***


"உலகம் ரொம்ப முன்னேறிட்டுது சமர் தம்பி. இந்த ஆர்.எஸ்.எஸ். பாஷை அரபிக் கடலைத் தாண்டி ஒருத்தருக்கும் தெரியாது. உலகம் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தயாரிச்சுக்கிட்டு இருக்கு. நீங்க என்னன்னா உங்க சாணிக் கலாச்சாரத்தைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறீங்க. இதுமாதிரி பெருமையடிச்சுக்கறதுக்கு முன்னாடி மற்ற கலாச்சாரங்களையும் நாகரிகத்தையும் புரிஞ்சுக்க எப்பவாவது முயற்சி பண்ணுவீங்களா? பழைய இடிபாடுகளும், வேதாந்த புஸ்தகங்களும், ரோமிலேயும் , எகிப்திலும்கூட ஒண்ணும் கம்மியில்லே. சீன நாகரீகம் உலகத்துக்குக் கொடுத்ததிலே பாதிகூட வேறயாரும் கொடுத்ததில்லே. கிறிஸ்தவர்களை நீங்க வேணும்னா திட்டலாம். மதம் மாத்தறாங்கன்னு வையலாம். ஆனா அவங்கதானே எதுவுமே தெரியாத மக்களிடையே போய் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பள்ளிக்கூடம் திறந்து, ஆஸ்பத்திரிகட்டி, தங்களோட வாழ்க்கையையே தங்களோட மதத்துக்காக அர்ப்பணிக்கிறாங்க? நீங்க என்ன பண்றீங்க? உலகநன்மை, உலகநன்மைன்னு வாயால சொல்லிக்கிட்டு, கொஞ்சம் ஆவேசம் அதிகமாச்சுன்னா இமயமலைக்கு ஓடிடறீங்க. பணக்காரனா இருந்தா சாமியார்களை சோறுபோட்டு வளர்க்க தர்மம் எழுதி வைக்கிறான். ஏழையா இருந்தா மொட்டை அடிச்சிக்கிட்டு சாமியாராகி மூக்குப் பிடிக்கத் திங்கறான்."

"நீங்க ஒரு பக்கத்தையே பாக்கறீங்க" என்றேன் நான்.

"அது ஒரு பக்கமா, ரெண்டு பக்கமா அப்படீன்னெல்லாம் எனக்குத் தெரியாது. நமக்கு முன்னோடியா இருக்கறது, நம்மை பலி வாங்கிக்கிட்டு இருக்கறதை நான் பாக்கறேன். உங்க நாட்டிலே பாலும், தேனும் ஆறாய் ஓடுச்சி, பால் மாரி
பெஞ்சுது. ஆனா இன்னிக்கு உலகத்திலேயே காட்டுமிராண்டு நாடு உங்களுதுதான். உங்க மதம்தான் எல்லாத்தைவிட விஞ்ஞானப் பூர்வமில்லாத மதம். மனிதனின் அறிவு வளர்ச்சியை மறந்துட்டு, நடைமுறை சாத்தியமில்லாததையெல்லாம் வாழ்க்கையோட லட்சியமாகக் காட்டற மதம், உலகத்திலே இருக்கிற ஞான, விஞ்ஞான விஷயங்கள் எல்லாத்தயும் தன்னோட வேதங்களில பூந்து தேடற மதம், உண்மையாகவே ரொம்ப பரிதாபப்படவேண்டிய மதம். நீங்க சொல்றதைக் கேக்கறப்போ லக்னோவில் இன்னிக்கு ரிக்சா இழுக்குற நவாப் பரம்பரை ஆளுங்க ஞாபகம்தான் வருது." என்றவர் தன் பேச்சுக் குறித்துத் தானே உரக்கச் சிரித்தார்.

நான் மிகவும் பிரயாசைப்பட்டு, "இந்த வெளி விஷயங்களை நாம் என்னிக்கும் முக்கிய விஷயமா நெனச்சதில்லே, அதனால்தான் நாம இன்னொரு நாட்டுமேலே படையெடுத்துப் போனதுமில்லே, மதத்தைப் பரப்பறதுக்காகப் புனிதப்போர் என்கிற பெயரிலே சண்டையும் போட்டதில்லே, நம்ம குறிக்கோள் எப்பவும் ஆன்ம சாந்தியும் முன்னேற்றமுந்தான்" என்றேன்.

இம்முறை அவர் சிகரெட் பிடிப்பதைப் பாதியில் நிறுத்தி 'ஹஹ்ஹா' என்று சிரித்தார். "வக்கத்துப்போனதை மறைக்க அருமையான வாய்ஜாலம். இதைத்தான் ஏழ்மையை ஆராதிக்கறதுன்னு மத்தவங்க சொல்றாங்க. வெளியிலே போய் தாக்குதல் நடத்தாததுக்கு காரணம் ஆன்மீகமும் இல்லே, மண்ணும் இல்லே. உங்ககிட்டே வலிமை கெடயாது. அவ்வளவுதான். இல்லாதபோனா தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கறதிலேயும் நீங்க ஒண்ணும் சளைச்சவங்க இல்லியே! வல்லமை படைச்ச அசோகனும் , கனிஷ்கனும் வெளிநாட்டுக்காரங்க மேலே பெரிய தயவு காட்டினாங்கன்னும் கிடையாதே!" என்றவர் பாதியில் அதைவிட்டு, "பழைய சரித்திரமும் வேண்டாம், கற்பனைகளும் வேண்டாம். நான் நேரே ஒரு கேள்வி கேக்கறேன். இன்னிக்கு நீங்க உங்க நாட்டிலே எவனை வேணும்னாலும் புடிச்சி 'உனக்கு எவ்வளவு ஆன்மசாந்தி கிடைச்சிக்கிருக்கு'ன்னு கேட்டுப்பாருங்க. இந்த ஆன்ம சாந்தி,.கீன்ம சாந்தியெல்லாம், கோவில் குளம்னு தானம்செய்றவங்க கிட்டேயும், கோயில் பிரசாதத்தை ஒருபிடி பிடிக்கிற பண்டாரங்கள் கிட்டேயும்தான் இருக்கு."

கத்திக்கிழிக்கிற இவர் பேச்சை நறுக்கென்று நிறுத்தும் வண்ணம் என்ன கேள்வி கேட்கலாம் என்று என் மனம்  பரபரத்தது. திடுதிப்பென்று "இந்த உலகம் எப்படி தோன்றுச்சு?" என்று கேட்டேன்.

அவர் உரக்கச் சிரித்தார். "நீங்க பழங்கால ரிஷிகள் மாதிரி வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே! உலகம் உண்டானதுதான் ரொம்ப சின்ன விஷயமாச்சே, பிரம்மா என்னடா தனியா இருக்கோமே, பொழுதே போகலியேன்னு 'நான் நிறைய மனுஷனா ஆயிடுவேனாக'ன்னாரு! அவர் தன் குணங்களை விரிச்சுக்கிட்டாரு, அதுதான் 'ப்ரக்ருதி' (இயற்கை) அப்படீங்கற தத்துவம். இல்லேன்னா அல்லா 'குன்' அப்படீன்னாரு. உலகம் உண்டாயிடுச்சி. இதிலே என்ன பிரச்சினை?" பிறகு  மூக்கால் புகைவிட்டவண்ணம் சிகரெட்டைத் திறந்த கதவு வழியாக தூக்கியெறிந்தார். சிரித்துக் கொண்டே 'சமர்ஜி! இன்று உலகத்தின் தோற்றத்தைப் பத்தி விஞ்ஞானிகள் சொல்றதே இறுதியான உண்மைன்னு நான் சொல்லலே. ஆனால்  இந்தக் கட்டுக்கதையெல்லாத்தையும் விட அது உண்மைன்னு தோணலே? அறிவுக்கு எல்லையே இல்லே. இன்னும் யோசிச்சுக் கண்டு பிடிப்போம்." பிறகு எழுந்து சோம்பல் முறித்து, "நாமும் சரியான ஆளுங்கதான். சந்திச்ச கையோட
உலகத்தோட இறந்தகாலம், எதிர்காலம் எல்லாத்தையும் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சிட்டோம் பாத்தீங்களா? முதல்லே பாத்ததையும் இப்ப பாத்ததையும் வச்சுகிட்டு இவன் பெரிய வாயாடின்னு நீங்க நினைச்சுக்கலியே?' என்றார்.

"இல்லையில்லை, உங்ககிட்டேயிருந்து யோசிக்கவும் , சிந்திக்கவும் நெறயா கிடச்சிருக்கு" என்று வெட்கத்துடன் சொன்னேன்.

"அப்ப நீங்க ஒண்ணும் சரியான ஹிந்து கிடையாது. சரியான ஹிந்துன்னா யோசிக்கறதே கிடையாது. ஆன்மீக ஞானமாகட்டும் ,லஞ்சமாகட்டும், கறுப்புப் பணமாகட்டும் அவன் சுருட்ட மட்டும்தான் பார்ப்பான். போகட்டும், நான் பேசினதும் ஏதாவது உங்களைத் துன்புறுத்தியிருந்தா மன்னிச்சுக்குங்க. விவாதம் செய்ய ஆரம்பிச்சா எனக்கும் ஒண்ணும் நினைவிலேயே இருக்கறதில்லே. எனக்கு சரின்னு பட்டதை சொல்லிடுவேன்."

"அப்படித்தானே இருக்கணும்:" என்று நான் "நான் உங்ககிட்டே பல விஷயங்கள் குறித்து பேசணும்" என்றும் கூறினேன்.

"கட்டாயம், கட்டாயம், இனிமே நாம அடிக்கடி சந்திப்போம்" என்று ஷிரீஷ் சொன்னார். "கொஞ்சம் உங்ககிட்டேயிருந்து நான் கத்துக்குவேன். சிலதை நீங்க மறுபரீசீலனை செய்ய விரும்புவீங்க."

"என்கிட்டேயிருந்து கத்துக்க என்ன இருக்கு?" என்று நான் வெட்கப்பட்டேன். தலையைக் குனிந்துகொண்டு, "நான்தான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பல விஷயம் புதுசா இருந்தது" என்றேன்.

"இல்லையில்லை, நான் எதையும் முழுமையா நெனைக்கிறதில்லே. எந்த ஒண்ணும் வளர்ச்சி அடையுது. அதனாலே எல்லாம் தெரிஞ்சவன் ஒருத்தனும் கிடையாது. அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளிங்கறதுதான் என் அபிப்ராயம். சிறிது ஆர்வம் இருக்கறவரைதான் அவன் அறிவாளி. அதுக்கப்புறம் அவனுக்கும் லைப்ரரி புஸ்தகத்துக்கும் வித்தியாசம் கெடையாது....' என்றார்.

**

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

3 comments:

 1. மிக அற்புதான விவாத தொடக்கம்.
  தொடர்ந்து,
  எடிட் செய்யாமல்
  பிரசுரியுங்கள் ஆபிதீன்.
  நன்றி
  - தாஜ்

  ReplyDelete
  Replies
  1. ஷிரீஷ் வேடமணிந்து ராஜேந்திர யாதவ் வரும் இடமெல்லாம் அட்டகாசம் . ஓரிடத்தில் சொல்வார், ‘இந்த கலாச்சாரப் பாதிப்புகள் எல்லாம் ரயில் பெட்டியில் உட்கார்ந்திருக்கிற பிரயாணிகள் மாதிரி. பிரயாணிகள் நிரம்பிய பெட்டியிலே நீங்க ஏறப்பாத்தீங்கன்னா, உள்ளேயிருக்கறவன் ஒவ்வொருத்தனும் உங்களைப் பிடிச்சுத் தள்ளப் பார்ப்பான். உங்களை ஏறவிடாம அடிக்கப் பார்ப்பான். ஆனா உங்களுக்கும் ஏறவேண்டிய கட்டாயம் இருக்கே. அதனால எப்படியோ முண்டியடிச்சு ஏறிடுறீங்க. உள்ளே இருக்கறவங்களோட கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டவுடனே எதிர்ப்பு எல்லாம் மறைஞ்சிடுது. நீங்க சண்டைபோட்டு வாங்கின இடத்தை விட்டு கொஞ்சம் அங்கே இங்கே போனாலும் உங்க இடத்தை பத்திரமா வச்சுருக்கற அளவு பழக்கம் ஏற்பட்டுடுது. ஆனா என்ன கஷ்டம்னா, நீங்க உள்ளேயிருக்கறவங்களோட ஒன்றிப்போன பிறகு நீங்களும் அவங்களோட சேந்துக்கிட்டுப் புதுசா வர்றவங்களை எதிர்க்க ஆரம்பிச்சிடுறீங்க. உங்களையும் இதுமாதிரிதானே கஷ்டப்படுத்தினாங்க அப்படீங்கறதை மறந்தே போயிடுறீங்க.”. எப்படி? ’மனிதனுக்கு கால் முன்னோக்கி இருக்கறதுக்கே காரணம் அவன் முன்னேறிப் போகணுங்கறதுதான். (முன்னேறி நடக்காம பழமைவாதம் பேசிக்கிட்டு இருக்கிற) பேய்களுக்கும் பூதங்களுக்கும்தான் கால்கள் பின்னோக்கி இருக்கும்! என்று இன்னொரு இடத்தில் சொல்லும்போது என் கால்களைப் பார்த்தேன். ஆ...!

   Delete
  2. அருமையான உதாரணம்.
   பதில் இன்னும் தொளிவுப் படுத்த
   வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.
   அடுத்தப் பதிவை கண்டு
   நான் மேலே பேசுவதுதான் சரியாக இருக்கும்.
   நன்றி
   ஆபிதீன்.
   - தாஜ்

   Delete