அனிஷா மரைக்காயர் (Mohamed Riyas) எழுதிய ‘சிகரி மார்க்கம்’ நூல் பற்றி எழுத்தாளர் சாம்ராஜின் விமர்சனம். ரியாஸின் ‘சிங்கா’ என்றதும் ஏதோ சாமான் என்று நினைத்தேன். அல்ல, அது ஒரு சிறுகதை! - AB
*
பொதுவாக இஸ்லாமிய வாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த எழுத்துகள் தமிழில் குறைவு. தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா, மீரான் மைதீன், ஆபிதீன் என்று உண்டென்றாலும் மொத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் தொகையோடு ஒப்பிடுகையில் இஸ்லாமிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.
பிரதானமாக, இஸ்லாமிய எழுத்தாளர்கள் மாத்திரமே அவர்கள் எழுத்தை எழுதும் சூழல் உள்ளது. மலையாள சினிமாவில் காட்டப்படும் இஸ்லாமிய வாழ்வு அளவிற்குகூட இங்கு அது மையநீரோட்டத்தில் இல்லை. அங்கு ஒரு சாதாரண வெகுஜன சினிமாவில்கூட இஸ்லாமியப் பாத்திரங்கள் இயல்பாய் வந்துபோகும். இன்றும் இங்கு அதுவொரு ‘தனித்த’ பாத்திரம்தான்.சினிமாவே இப்படியிருக்க, இலக்கியம் இன்னும் தூரத்திலிருக்கிறது.
இப்படியான சூழலில் ரியாஸ் எழுதவருகிறார். இது அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு ‘அத்தர்’ சீர்மை வெளியீடாக வந்து கவனம் பெற்றது.
மொத்தம் ஒன்பது கதைகள் கொண்ட இந்த இரண்டாவது தொகுப்பில் எட்டு கதைகள் சமகாலத்திலும், ‘சிங்கா’ என்ற ஒரு கதை மாத்திரம் கடந்த காலத்திலும் நிகழ்கின்றன.
ரியாஸின் கதை உலகம் இஸ்லாமிய வாழ்வும் அதில் பெரும்பாலும் பாவப்பட்டவர்களின் பாடுகளுமாய் இருக்கின்றன. அப்படி ஒற்றைப் படையாய் சுட்டுவது ரியாஸின் மீதான வன்முறைதான்.பாவப்பட்டவர்களின் துயரத்தோடு, ‘உள்ளவர்களின்’ துயரமும் உள்ளது.
ரியாஸின் தனித்தன்மை முதன்முறையாக காவிரிப் பாசனத்திலிருந்து சற்று கீழே இருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வை அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைப்பதும், அதனோடு நின்றுவிடாமல் அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம்போல சிங்கப்பூர், மலேசியா என்று தன் கதைக்களத்தை விரித்துக் கொள்வதும்தான்.
பொதுவாக, பிழைப்புக்காக புலம்பெயர்ந்தவர்கள் எழுதும் கதைகளில் ஊர் குறித்தான ஏக்கங்களும், அங்கு ஒரு பொன்னுலகம் இருந்ததற்கான பாவனைகளும் இருக்கும். வாழும் நாட்டைப் பற்றிய ‘நான்காம் மாடி’ அவதானிப்பு கொண்ட கதைகளே அதிகம்.
நான்காம் மாடி அவதானிப்பென்பது, நான்காம் மாடி பலகணியில் நின்றுகொண்டு சாலையில் நடப்பவர்களை அவதானிப்பது.பொத்தாம் பொதுவான மனிதாபிமானக் கதைகள். சிங்கப்பூரில் உமா கதிரின் ‘ரோவெல் தெரு’ சிறுகதைத் தொகுப்பு இதற்கு ஒரு இனிய விதிவிலக்கு. தரையில் இருப்பவனை தரையிலிருந்தே பார்ப்பவை அவரது கதைகள்.
ரியாஸ் தன் கதைகளில் ஊர் குறித்தோ, தான் வாழும் நாட்டைக் குறித்தோ அப்படி எந்த மனமயக்கமும் பெருமிதமும் இன்றியே வாழ்வை முன்வைக்கிறார். அந்த வகையில், ரியாஸும் உமா கதிரும் ஒரு சாலை மாணாக்கர்கள். நுட்பமான விவரிப்புக்களைக் கொண்டது ரியாஸின் கதை உலகம்.
... கணக்குப்பிள்ளை நாசர் மூர்ச்சையாகிக் கிடந்தார். உடலை பள்ளிவாசலில் இருந்து தருவித்த மய்யத்துக்கான கட்டிலில் மாற்றி வைத்தவன், மய்யத்தைத் குளிப்பாட்டப் போவதாகவும் பெண்கள் அனைவரும் முற்றத்தை நீங்கும்படியும் சத்தமாகக் கத்தினான் பெம்பலா. அவன்தான் இலந்தை இலை ஊறவைத்த அண்டா தண்ணீரில் சிறிது ஜம்ஜம் தண்ணீர் கலந்து கணக்குப்பிள்ளையின் உடலுக்கு ஏதுவாக வெந்நீர் கலந்து, நாள்பட்டுப் படுக்கையில் கிடந்த நாசரின் உடலை அவரின் முதுகுப் புண்களைக் கிழித்துவிடாத அளவு குவளையில் தண்ணீரை அள்ளி உடல் முழுதும் அள்ளி ஊற்றினான். நாசர் உடலை பின்பக்கம் திருப்பி ஆசனவாய்க்குள் தனது பெருவிரலை விட்டு நோண்டினான். ஆசனவாயில் இருந்து சிறிய மல உருண்டையை எடுத்து எறிந்தான். அவர் உடலை இறைவனிடம் பரிசுத்தமாக அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் தன் விரலை ஆசனவாய்க்குள் விட்டவாறு குவளைத் தண்ணீரை ஊற்றிக்கொண்டே கூறினான், ‘அஷ்ஷஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்’.
... செவத்தகனி கொழும்பு மருதானையில் படித்த காலத்தில்தான் அலிமாப்பூ அவருக்கு அறிமுகம். செவத்தகனி வாப்பாவின் தாஜ் டீ ஹவுஸ் வெள்ளவத்தையில் வெகு செல்வாக்கு செலுத்தியிருந்த காலம். செவத்தகனி சிங்கள ஆக்களைப் போல் படிக்க வேண்டும் என்று செவத்தகனியை கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார் செவத்தகனி வாப்பா. ஆனால் ஒருநாள் சிலோனில் இருந்து கோட்டையூருக்கு வரும் சரக்குப் படகு நெய்னார் சர்வீசில் செவத்தகனியும் அலிமாப்பூவும் ஜோடியாய் வந்திறங்கினர். காங்கேசந்துறையில் இருந்து கோட்டையூருக்கு வந்திறங்கும் சரக்கு மெயிலில் செவத்தகனி ஜோடியாக வந்திறங்கினார் என்று செவத்தகனி வாப்பா அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
... வழமையான நேரமாக இருந்தால் இந்நேரம் சர்க்கஸ் கூடாரம் களைகட்டியிருக்கும். க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாக்கிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப்-அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், ஆப்பிரிக்கன் நெருப்பு நடனம், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு மிருக வித்தைகளையும் மக்கள் கண்டுகளித்திருப்பார்கள். சிங்கம் காணாமல் போனதிலிருந்து பதட்டம் இருந்தாலும் அரசாங்கம் தினசரி புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டு காட்சிகளை நடத்த அவர்களுக்கு அனுமதி தந்திருந்தது.
விசிலடித்ததும் தன் கால்களைத் தூக்கி மக்களுக்கு சலாம் போடும் பாமரனியன், டால்மியன், பாண்ட் நாய்கள், பாரசீகப் பூனைகள், ஓநாய்கள், நீர்யானை, வரிக்குதிரை, பஃபூன் குரங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தது.
... பயம், தெய்வீகம் இரண்டும் கலந்த ஒன்றாக சங்கரனின் சர்க்கஸ் கூடாரச் சிங்கம் அந்நிய நிலத்தில் மாறிக்கொண்டிருந்தது. சீன கம்போங்கிலோ கதை வேறு மாதிரி உருவெடுத்தது. புராணத்தில் வரும் நியென் மிருகம் மீண்டும் உலவுவதாக நம்பினார்கள். வீடுகளில் சிவப்பு விளக்கை ஏற்றிவைத்தார்கள். அவர்களது கிராமத்தை கொள்ளை நோய் ஆட்டியது. நோயில் மடிந்துகொண்டிருந்தவர்களில் சிலர் குணம் பெற்றது சர்க்கஸ் சிங்கம் தப்பித்துப்போன நாள்களில் நிகழ்ந்தது. முற்றாக அவர்கள் குணம்பெற்ற அடுத்தடுத்த நாள்களில் அம்மக்களே சர்க்கஸ் சிங்கத்திற்கு தாமாக முன்வந்து வைத்த பெயர்தான் ‘சிங்கா’.
... எந்த நாளில் இவ்வளவு கறார்தன்மையை உருவேற்றிக்கொண்டாள் என்று தெரியவில்லை. மூன்றுமுறை கருத்தரித்தும் கறுப்பும் சிவப்புமாக இரத்தக் கட்டிகள் வெளியாகிவிட்ட ஏதோ ஒரு நாளிலா? ஏப்புக்காட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று தோன்றிய ஒரு நாளிலா? யாரையோ எடுத்து வளர்ப்பதற்கு பதிலாக தன் அண்ணன் மகனையே எடுத்து வளர்த்தாள். ஆசையசையாய் அவனுக்கு புதிய துணிமணிகள் வாங்கிப்போட்டு ‘செல்லான், செல்லான்’ என்றழைத்தவளை, அவன் பெரியவனானதும் ‘இங்கிரு மாமி... என்ன அங்கின உக்காராதே, இதை செய்யாதேனு பெரிய சட்டம் போடுற? நீ ஒன்னும் என்னய பெத்த உம்மா கிடையாது’ என்று சொன்னதும் அழுகையும் விம்மலுமாக ஹலிமா மனம் உடைந்து சுக்குநூறாக உடைந்துபோன ஒரு நாளிலா?
... பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல். தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு. தான் தவறவிட்ட பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.அவனுடைய அத்தா பள்ளிவாசலின் உள்விதானம் நிழல் படியும் தரையில், ஒரு விரிப்பில் முழங்காலிட்டுப் பிரார்த்திப்பவராகத் தெரிகின்றார். கடலின் ஓரத்தில் படகில் இருந்த மீனவன், வலையைத் தூக்கி கடலுக்குள் எறிகின்றான். வலை முக்காலத்திற்கும் அப்பால் போய் விழுகிறது. இனி என்றும் மீட்க முடியா தூரத்தில் போய் அவனுக்குள் விழுகின்றது. பாதை மெல்ல கடலுக்குள் சரிகின்றது. உண்மையில் மனிதனுக்கு இரக்கம், அன்பு, கருணை ஆகியவை அவனைத் தீண்டும்போது மனிதன் பலவீனமடைந்துவிடுகிறான்.
இப்படி நுட்பமாய் சிறுகதைகளை நெய்வதன் வழி ரியாஸின் கதை உலகம் நமக்கு அணுக்கமாகிறது.
இந்த தொகுப்பிலுள்ள ஒன்பது கதைகளின் சுருக்கத்தையும், பழைய ‘B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்’ வெளியீடுபோல விவரித்துக்கொண்டு போவதில் எனக்கு உவப்பில்லை. சாரமாக ரியாஸ் கதைகள் என்ன முன் வைக்கின்றன என்பதை சொல்வதே சரி. ரியாஸின் கதை உலகு துரோகம், கருணை, வன்மம், மிகுபுனைவு, வீழ்ச்சி, வாய்மொழி வரலாறு என விரிகிறது.
புதுமைப்பித்தன் 99 கதைகள் எழுதினார். அதற்குப் பின் வந்த எல்லோரும் அந்த நூறாவது கதையைத்தான் எழுத முயல்கிறோம் எனப் பகடியான வரியுண்டு. ரியாஸும் அந்த நூறாவது கதையை எழுத விரும்புகிறார் என்றே நான் நம்புகிறேன்.
நமக்கு கலையில் என்னதான் வேண்டும்? எது நம்மை ஈர்க்கிறது? இந்தக் கேள்விகள் பதில் சொல்ல முடியாத அத்வைதக் கேள்விகளோ இருப்பியல் கேள்விகளோ அல்ல.
கலை நம்மை ஆட்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அவை நமக்கு உள்ளே போய் நம்மை தொந்தரவுசெய்ய வேண்டுமென விரும்புகிறோம். அந்நிய நிலத்திலோ அருகிலோ சிந்தப்படும் குருதியில் நம் இரத்தமும் இருப்பதாக உணர விரும்புகிறோம். நம்மைத் தேடுகிறோம். பிரபஞ்சத்திற்குப் பொதுவான, மறுக்க முடியாத, நிரந்தரமான அறத்தைத் தேடுகிறோம். அங்கு ஏசு சிலுவையில் அறையப்பட்டால், நாம் வலப்பக்கம் பாரபாஸைத் தொங்கவிட விரும்புகிறோம்.
அப்பொழுதில் விமர்சகர்கள் வேண்டுமானல் ஏரோது மன்னனாக நின்று வேடிக்கை பார்க்கட்டும். நாம் கண்ணீர் விட விரும்புகிறோம். நம் கண்ணீரை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி அதைப் பரிசோதித்து வகைப்படுத்துவது பேதமை மிகுந்த விமர்சகனின் பணி.
நாம் கலையில் சரணடைய விரும்புகிறோம். அது-நாம் என்ற வேறுபாடின்றி அதனோடு கலக்க விரும்புகிறோம்.
தஸ்தயேவ்ஸ்கியை விட இவ்வுலகில் யார் மீது கூடுதலாக கண்ணீர் சிந்தப்பட்டிருக்கும்?! இன்றும் அவரின் கல்லறையில் கண்ணீர் நதியில்தான் நாம் மிதந்துகொண்டிருக்கிறோம்.
சிங்கா, நகுதா, ஏழாவது வானத்தில் வீடு, பெம்பலா — இந்த நான்கு கதைகள்தாம் என்னைப் பொறுத்தவரையில் இத்தொகுப்பில் ஆகச் சிறந்தவை.
கலையில் ஒரு கொடூர விதியிருக்கிறது. அதாவது, ஆக மோசமான வறுமையைக் கூட மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும்தான் நாம் முன்வைக்க வேண்டும்.
கலைஞன் டப்பிங் ஆர்டிஸ்ட் அல்லன். அவன் அழவைக்க வேண்டுமேயொழிய அவனே அழக்கூடாது. டப்பிங் ஆர்டிஸ்டுகள் நிறைந்த இக்காலத்தில் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டியிருக்கிறது. குழந்தையைக் கிள்ளிவிட்டு கிள்ளியவர்களே அழும் காலம் இது.
இந்தக் கதைகளில் ரியாஸ் நம்மை தொந்தரவு செய்கிறார். கதையை வாசித்த பின், அன்றாடத்திற்குள் நம்மால் உடனடியாக நுழைய முடியவில்லை. நாம் கோட்டையூர் தர்காவின் வாசலிலோ, 1950களின் சிங்கப்பூரில் விமலா சர்க்கஸிலோ நிற்கிறோம். பெரியம்மா நம் கைபிடித்து சந்தனக்கூட்டிற்கு அழைத்துப் போகிறாள். சீனன் வளர்க்கும் மலைப்பாம்பு நம் மீது ஊர்ந்துசெல்ல, பெம்பலா நம் காதருகே வந்து புலம்புகிறான். துரோகத்தின் நாணயங்களை வீசி எறிய ஹலீமா எதிரே வந்துகொண்டிருக்கிறாள்.நிழல் சிறுகதை நாவலாய் விரிய வேண்டியது. மலே பாஜு சிறுகதை இந்த தொகுப்பின் குழுப் புகைப்படத்தில் கூச்சப்பட்டுக் கொண்டு நிற்கிறது. ரியாஸிடம் நாம் எதிர்ப்பார்ப்பது மலே பாஜுக்களை அல்ல.
ரியாஸ் நமக்கு புதிய நிலப்பரப்புகளையும், வாழ்முறைகளையும், பிரச்சனைகளையும் காட்டுகிறார். அவை தமிழுக்குப் புதியவை. கலையின் நியாயத்தைக் கைவிடாதவையாகவும் இருக்கின்றன. அதுவே ரியாஸிடம் நம் எதிர்ப்பார்ப்பைக் கூட்டுகிறது.
1950களில் நிகழும் சிங்கா கதையில் தொலைந்த சிங்கம் கடைசிவரை பிடிபடாமல் ஓரு தொன்மாக மாறிவிடுகிறது. சந்தா சாகிபு வீட்டில் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கையுண்டு. அந்த சிங்கம் சந்தா சாகிப் வீட்டிலிருந்து தப்பி ரியாஸ் வீட்டில் தலைமறைவாக அல்லது குரல் மறைவாக வாழ்வதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த தொன்ம சிங்கம் ரியாஸுக்கு இன்னும் நிறைய கதைகளை வழங்கட்டும். அந்த சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ரியாஸ். சிங்கா இருக்கும்வரைதான் நாம். அல்லது, நாம் இருக்கும் வரைதான் சிங்கா.
மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ரியாஸ்!
ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/sigari-maarkkam
📞 வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்ய: +91-755017476
*
நன்றி : கவிஞர் சாம்ராஜ்
*
தொடர்புடைய ஒரு சிறுகதை :