முன்குறிப்பு : 2001ஆம் ஆண்டு ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்ட ’அசோகமித்திரன் கட்டுரைகள்’ எனும் நூலிலிருந்து இந்தப் பகுதியைப் பகிர்கிறேன். இது சுருக்கமான வடிவம் போலிருக்கிறது. ‘நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பிலேயே அசோகமித்திரனும் பிற தமிழ் எழுத்தாளர்களும் எழுதிய விரிவான உரை, தமிழிணையம் மின்னூலகத்தில் 153 கிலோ எடையுடன் கிடைக்கிறது. (பலமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து பதிவிறக்கலாம்.) க.நா.சு , தி. ஜானகிராமன், வில்லியம் ஃபாக்னர், ஜான் அன்வி என்று பல ஆசிரியர்களைப் பற்றியும் அசோகமித்திரன் அவர்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பகுதியை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அந்த ரப்பர் ஸ்டாம்ப் விசயம் :-) எனக்குத் தேவை கொஞ்சம் புன்னகை. அவ்வளவுதான். நன்றி. - AB.
*
இது ஆசிரியர் அழைப்பின் மீது எழுதப்படும் பகுதி. பொதுவாகப் பிரபலஸ்தர்களுக்குப் பொருந்திப் போகும் பகுதி. பிரபலமாவதும் தன்னைப் பற்றி விவரித்துக் கொள்வதில் தேர்ச்சியடைவதும் இணைந்து செல்பவை. மூன்று முறை முழுக்கட்டுரை எழுதித் தூக்கிப் போட்டுவிட்டு நான்காவதாக இதை எழுதுகிறேன்.
சுமார் இருபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். அச்சில் பெயர் வந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போகிறது. அதற்கும் முன்னால் நான் எழுதிய ஒரு, ஒரு மணி நேரரேடியோ நாடகத்திற்கு, நமது அகில இந்திய ரேடியோக்காரர்கள் பரிசு கொடுத்தார்கள். சுமார் நான்கைந்து நாட்கள் உட்கார்ந்து எழுதி போட்டிக்கு அனுப்பித்த அந்த நாடகத்தை, பரிசு முடிவு அறிவிக்கப்பட்ட பின் ஒரு முறை வாசித்துப் பார்த்தேன். உடனே என் கைப்பிரதி, நாடகத்திற்காக நான் எழுதியிருந்த குறிப்புகள் எல்லாவற்றையும் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தேன். அந்த நாடகத்தை இன்று ஏதாவது போட்டிக்கு மறுபடி அனுப்பினால் அவசியம் பரிசு பெறும்.
என் கதைகளைப் பொறுத்த மட்டில் அச்சுப்படுத்தும் முடிவுகள் அவ்வளவு சீக்கிரம் எடுக்கப்படவில்லை . ஒவ்வொரு கதையும் சாவகாசமாகப் பத்திரிகைக் காரியாலயங்களுக்குச் சென்று விட்டு வரும். அந்நாளில் அநேகமாக எல்லாப் பத்திரிகைக்காரர்களும் அவர்களுடைய முடிவை, அதாவது பிரசுரிக்க இயலாது என்ற முடிவை, ஒரு ரப்பர் ஸ்டாம்பு கொண்டு கையெழுத்துப் பிரதி மீது முத்திரையடித்துத் திருப்பியனுப்புவார்கள். என்னுடைய கையெழுத்துப் பிரதிகளின் முதல் பக்கத்தில் பல கட்டங்கள் வரைந்து வைத்திருப்பேன். அவற்றில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கான ரப்பர் - ஸ்டாம்பின் சுற்று வடிவத்தை வரைந்து இந்த இடம் இந்தப் பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் அந்த பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடவும் செய்திருப்பேன். அப்படியிருந்தும் பத்திரிகைக்காரர்கள் கண்ட கண்ட இடங்களில் முத்திரையடித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். ஒரே ஒரு முறை மட்டும் குமுதம் பத்திரிகை ஒழுங்காக நான் வரைந்திருந்த எல்லைக்குள் முத்திரையடித்துத் திருப்பியனுப்பியது.
இந்தக் கதைகள் பல என்னிடம் தங்கிப் போயின. இந்த ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் வெளியான 'நம்பிக்கை' 1961 ஆம் ஆண்டில் எழுதிய கதை. ஒரு 'தீபம்' ஆண்டு மலரில் வெளியான 'அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்' 1956 இல் எழுதப்பட்டது. நான் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளும் பல என் கைவசம் இருக்கின்றன. சமீபத்தில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி வெளியிட்ட என் கதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இப்போது அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த நடுவர் ஒருவர் எழுதியிருந்தார் : 'புதுமையான படைப்பு......'
இதனால் இப்போது வெளியாவதெல்லாமே என்னுடைய பழங்கதைகள் தான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஆண்டுக்கு மூன்று புதுக்கதைகள் எழுதுகிறேன். உண்மையில் ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கதைகளுக்கு மேல் எழுத எனக்கு முடியவில்லை . இந்த 1970 இல் ஐந்தாறு புதுக்கதைகள் 'போட்டோ ' (தீபம் - ஏப்ரல் 1970) 'கல்யாணம் முடிந்தவுடன்' (தினமணி கதிர் - செப்டம்பர் 1970) 'குதுகலம்' (கசடதபற - நவம்பர் 1970).
என்னை முதன் முதலில் எழுதத் தூண்டிய எழுத்துக்கள் கல்கியுடையதும் சார்லஸ் டிக்கன்சுடையதும் என்று கூறிக் கொள்ள வேண்டும். இருவருக்கும் இலக்கிய உலகில் அவ்வளவு அந்தஸ்து இல்லை. டிக்கன்ஸ் எழுத்தில் மேற் பூச்சான எளிமை. கல்கி எளிதாகவே எழுதினார். தெளிவு, சீரான ஓட்டம், உருவ அமைதி - இவ்வம்சங்களுக்காக க.நா.சு.வின் ‘வாழ்ந்தவர் கெட்டால் ' நாவலைக்கண்டு மிகவும் வியந்திருக்கிறேன்.
நூல் வடிவத்தில் என்னுடையது ஒரு புத்தகம் ("கரைந்த நிழல்கள்'') வந்திருக்கிறது. ஒரு நண்பர் (இவர் பெயரை வெளியிட எனக்கு அனுமதியில்லை) எடுத்துக் கொள்ளும் முயற்சியால் என் கதைகள் கொண்ட தொகுப்பு வெளிவரவிருக்கிறது. ஜனவரி 1971க்குள் நூறு வாசகர்கள் இப்புத்தகம் வாங்க முன் வந்து ரூ.5/- அசோகமித்திரன், தாமோதர ரெட்டித் தெரு, தியாகராய நகர், சென்னை -17 விலாசத்திற்கு அனுப்புவார்களேயானால், மார்ச் 1971 க்குள் புத்தகப் பிரதிகளைத் தபால் செலவு இலவசமாக அனுப்ப அவர் எண்ணியிருக்கிறார். புத்தகம் சுமார் 200-250 பக்கங்கள் கொண்டதாயிருக்கும். பணம் அனுப்புபவர்களின் பணம் உத்திரவாதம்.
வேறு இரு தொகுப்பு நூல்களில் என் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று வாசகர் வட்டத்தின் ‘அறுசுவை'; இன்னொன்று 'நகுலன்' வெளியிட்ட 'குருக்ஷேத்திரம்', 'அறுசுவை' நல்ல தொகுப்பு. சம்பிரதாய கோட்டுக்குள் அடங்கியிருக்கும் வெளியீடாயினும், 'குருக்ஷேத்திரம்' வெளி வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நூறு பிரதிகள்தான் விற்றிருக்கின்றன. இந்த நூல் தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உண்மையாக, அழகாக, அறிவுப்பூர்வமாக, பல படைப்பிலக்கியத் துறைகள் மூலமாகப் பிரதிபலிக்கிறது.
உத்தி மட்டுமே இலக்கியமாகி விடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச் செய்யாத உத்திதான் மிகச் சிறந்ததாக நினைக்கிறேன். சொல்ல வேண்டிய பொருள், மனிதனுக்கு வெளியே இருப்பது. இதனால் ஒரு பொருளைப் பற்றி இருவர், அல்லது பலர், எழுதக்கூடும். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு பொருளைக் காரணமாகக் கொண்டு, அவனுக்கென்ற தனிப்பட்ட வகையில் மனவெழுச்சி அல்லது நெகிழ்ச்சியடைகிறான். இதன் தீவிரம்தான் எழுத்துக்குத் தரமளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆதலால், நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதி விடுவார்களோ என்ற பயம் இல்லை.
மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்து கொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்று தான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக் கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால், இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான், எழுத்து உண்மையானது என்று நான் நினைப்பேன்.
(1971)
No comments:
Post a Comment