Monday, December 30, 2019

நல்லம்மாவின் நெருப்புச் சட்டி - அ. யேசுராசா


'அறியப்படாதவர்கள் நினைவாக...!' கவிதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்
*


நல்லம்மாவின் நெருப்புச் சட்டி
யேசுராசா


இன்றுமிந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்த நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிட்டுக் கேட்கிறது...!

"எழும்பு பிள்ள...!
மணி அடிச்சுப் போட்டு...து;
நேரம் போகு...து"

தட்டிவிட
எழுந்த மகள்,
பின் தொடரத்
தான் நடந்து
குசினிக்குப் போகின்றாள்.

"சிரட்டை உடை
அடுப்பு மூட்டு;
தேங்காயுடை
பாலைப் பிழி
மணி,
இரண்டடிச்சுப் போட்டு...து.
சந்திக்கடை ராசதுரை
கடைதிறக்க நாலுமணி
ஆகும்; அதுக்கு முன்னம்
அப்பஞ் சுட்டுப் போடோணும்."

பால் பிழிஞ்சு
மாக்கரைச்சு,
அடுப்பூட்டி முடிச்ச மகள்
தூங்கிவிழ, போய்ப்படுக்கச்
சொல்லியவள் --தனியிருந்து
அப்பம்,
சுடுகின்றாள்.

பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெரு வெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.

ஓம்...!
பின்னிரவின் இரண்டுமணிப்
போதிருந்து முற்பகலின்
எட்டுமணிப் பொழுதுவரை,
அவள் அப்பம் சுடவேண்டும்.

மூத்தமகன் பள்ளியில்
பத்துப் படிக்கிறாள்;
சின்னவனும் இன்னும் இரண்டு
பிள்ளைகளும் கூட,
பள்ளிக்குப் போகின்றார்.

கடலுக்குப் போற அவள்
புருஷன் பின்னேரம்,
கொண்டுவரும் நாலைந்து
ரூபாய்கள்...?

பற்றியொி,
ஆறு வயிறுகளின்
நெருப்பணைக்கக் காணாது;
பள்ளிச் செலவுக்கும்
வழிகாண ஏலாது...

ஆதலினால்,
வாழ்வு திணித்த அந்த
சுமைச்சட்டி நெருப்பேந்தி...
பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெருவெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்;
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.

நாளைக்கும்
மீண்டு மந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்து நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிடுங்
குரல் கேட்கும்...!
(7.8.69)

*
நன்றி : அ. யேசுராசா , க்ரியா , நூலகம், றஷ்மி

தொடர்புடைய பதிவுகள் :
1. நேர்காணல் யேசுராசா
2. ‘நல்லம்மா’ – அ.யேசுராசா தாய் நினைவாக வெளியான ‘இலக்கிய மலர்’ பற்றி .. Dr.M.K.Muruganandan

Thursday, December 26, 2019

ஆண்ட்ராய் குஞ்சப்பன் வெர்சன் 5.25 - சென்ஷி விமர்சனம்

 

வண்ணநிலவனின் கவிதையான ’எதையேனும் சார்ந்திரு’வைப் போன்று பாஸ்கரன் பொதுவல் சார்ந்திருப்பது தன் பிடிவாதத்தின் மேல். நவீன ரக விஞ்ஞான உபயோகங்களின் மேல் ஆர்வங்கொள்ளாதவர். வயதேற ஏற தன்னால் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருக்க முடியுமென்று நம்புபவர்.
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும், தந்தையை பார்த்துக்கொள்ள சரியான ஆள் கிடைக்காததால் வீட்டிலேயே சுற்றி வரும் சுப்பிரமணியன் நண்பர்களின் கேலி மற்றும் தூண்டுதலால் ரஷ்யாவிற்கு வேலைக்கு செல்கிறார். வீட்டில் தங்கி பாஸ்கரனைப் பார்த்துக்கொள்ள வரும் செவிலியர்களும், பாஸ்கரனின் செயல்களால் உடன்பட இயலாமையால், தனிமை பாஸ்கரனை தாக்குகிறது. ஆனாலும் அவரது பிடிவாதம் தனிமையைத் தாங்குகிறது.

தனியே சிரமப்படும் தந்தையின் உதவிக்காக தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருக்கும் அதி நவீன ரோபோ ஒன்றை தந்தையின் துணைக்குத் தருகின்றார் சுப்பிரமணியம். நவீன விஞ்ஞான உலகுடன் ஒத்துவராது சிரமப்படும் பாஸ்கரனுக்கும் ரோபோவிற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், பிணைப்பு முற்றி அதன் மேல் பாஸ்கரன் பித்துக்கொள்வதும் அதன் முடிவுமாய் நிறைவுகிறது இத்திரைப்படம்.

வயதானவர்கள் பெரும்பாலும் தங்கள் கால்களை வலிக்கு நீவிக்கொண்டு அதனுடன் பேசிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதிக தூரம் நடந்துவிட இயலாத நீளவாக்கில் வெம்பிய பழமாய் சுருக்கங்களைக் கொண்ட தோல்களுடைய கால்கள். வயதானவர்களின் அற்புதமான துணை அவர்களின் கால்கள் அன்றி வேறேது? அதனாலேயே படுக்கையில் வீழ்ந்து கிடத்தலை மறுதலிப்பவர்களாக உள்ளனர். அவர்களின் கோபம் கால்களின் மேல் திரும்புகிறது. பாஸ்கரனும் அப்படியே. தனியே இருப்பதாலேயே எல்லாவற்றையும் தன்னால் செய்துவிட முடியுமென்று நம்புபவராக இருக்கிறார். அந்த நம்பிக்கையே அவரது வாழ்வை நகர்த்தும் காரணியாகவும், மற்றவர்களின் முன் வீண் பிடிவாதக்காரராகவும் முன்நிறுத்துகின்றன.

ஆண்ட்ராய்ட் ரோபோ பாஸ்கரனின் தனிமைக்கு நல்ல துணையாக இருக்கிறது. பாஸ்கரன் பேசுவதைக் கேட்கிறது. இளமையில் விரும்பிய பெண்ணுடன் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்படுத்தி தருகிறது. ரோபோட் தனக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை மீறாமல் தனக்குரிய அம்சத்துடன் இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் காட்டப்படும், பாதுகாப்பு என்ற அம்சத்தில் குறிப்பிட்ட செயலி தவறாக உபயோகப்படுத்தப்பட்டு பெரியவரின் உயிருக்கு ஏதும் கேடு விளைவிக்குமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுந்து அடங்கியது.

இறுதியில் மகனைவிட அதிகமாக நேசிப்பை கைக்கொள்ளும் பாஸ்கரனின் குஞ்சப்பன் என்ற பெயர் கொண்ட ரோபோவின் மீதான பிரியத்தை எதனுடன் வரையறுப்பது. சிறு குழந்தை கை கொண்ட துண்டின் முனையாகவா? மற்றவர்களுடன் பகிர மறுக்கும் பிடித்த பொம்மையாகவா? வயதானால் குழந்தை போலாகிவிடும் மனதென்பதால் ரோபோவுடன் ஊர் நீங்க விரும்புகிறானா? உடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையாக இருக்கிறதா அந்த அழுகை! தனது விருப்பம் நொறுங்குவதைக் கண்டு மனம் நொறுங்கிய பாஸ்கரனின் அழுகை இத்தனைக் காலம் தான் கொண்டாடிக் கொண்டிருந்த பிடிவாதம்தானோ!
*


நன்றி : சென்ஷி

Wednesday, December 25, 2019

என் வழியைச் சொல்கிறேன். - பா. ராகவன்

'இறவான்’ நாவல் எழுதியது பற்றி நண்பர் பா. ராகவன் ஃபேஸ்புக்கில் இன்று எழுதியது :
**
மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என் வழியைச் சொல்கிறேன்.

என்னிடம் ஏழெட்டு யோசனைகள் இருந்தன. எல்லாமே நாவலுக்கான யோசனைகள், திட்டங்கள். எங்கும் இனி வேலை பார்க்க வேண்டாம், அரசியல் எழுதி உருப்படாமல் போக வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு வந்து உட்காரும் துணிவை அந்த ஏழெட்டு நாவலுக்கான யோசனைகளே அளித்தன. வருமானத்துக்குத் தொலைக்காட்சி, என் திருப்திக்கு நான் எழுதுவது என்று தெளிவாகப் பிரித்துக்கொண்டு பணி புரிய ஆரம்பித்தேன். விசித்திரம் என்னவெனில் என்னிடம் திட்டமாக இருந்த நாவல்களில் ஒன்றைத் தவிர (யதி) வேறெதையும் நான் இதுவரை எழுதவில்லை. யதிக்கு முந்தைய பூனைக்கதையோ, அதன்பின் ஆரம்பித்து இன்னும் எழுதிக்கொண்டிருக்கும் Fake Idயோ, இப்போது எழுதி முடித்திருக்கும் இறவானோ எப்படி எங்கிருந்து வந்தன என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. திட்டம் போட்டு வைத்ததையெல்லாம் எழுதுவேனா மாட்டேனா என்ற கவலையோ பதற்றமோ இல்லை. திட்டங்கள் கலைந்தும் மாறியும் போனால் வருந்துவதில்லை. இது நாவலா, இலக்கியமா, வெறும் மொக்கையா, யாருக்காக எழுதப்படுகிறது - இம்மாதிரியான சிந்தனைகளைத் தவிர்த்துவிடுகிறேன். எழுதுவதில் எனக்குள்ள ஒரே அக்கறை ஆரம்பித்ததை முடிப்பது மட்டுமே.

 நான் புத்தக விழாக்கள் நடத்துவதில்லை. மதிப்புரைகளுக்குப் பிரதி அனுப்புவதில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போவதில்லை. என் காலத்தில் எழுதும் பெரும்பாலானவர்களை எனக்குத் தெரியும் என்றாலும் யாருக்கும் நான் நண்பன் இல்லை. என் உலகம் 10X12 சதுர அடிகளுக்குள் முடிந்துவிடக்கூடிய மிகச் சிறிய அறை. இந்த அறையில் நான் என் புத்தகங்களுடனும் மேக்புக் ஏருடனும் வசிக்கிறேன். ஒரு நாளின் எண்பது சதவீத நேரத்தை இங்கேதான் கழிக்கிறேன். படிப்பது அல்லது எழுதுவது. முன்பெல்லாம் படங்கள் பார்ப்பேன். பாட்டுக் கேட்பேன். இப்போது அது இல்லை. ஏசி ஓடும் சத்தம்கூட இடைஞ்சலாக இருக்கிறது. அணைத்துவிட்டு, வியர்வைக் கசகசப்புடன்கூட வேலை செய்கிறேன். தொடர்ந்து அப்படி எழுதிக்கொண்டே இருக்கும்போதுதான் என்னைப் பற்றி எனக்குச் சில நேர்மையான விமரிசனக் கருத்துகள் கிடைக்கின்றன.

இறவான் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் (தினமும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்து 2 மணிவரை எழுதுவேன்.) ஒரு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. இந்நாவலில் கதாநாயகனான இசைக் கலைஞனைத் தவிர மற்ற அத்தனை பேருமே 'மற்றும் பலர்'தான். வருவார்கள், போவார்கள், இருக்க மாட்டார்கள். கதாநாயகன் இருப்பான், இருப்பான், இருந்துகொண்டே இருப்பான். எழுந்து அடுத்த அறைக்குக் கூடப் போகாமல் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல எல்லா பக்கங்களிலும் இருப்பான். ஏனென்றால், அவன் எப்போது எழுந்து போக நினைத்தாலும் ஏதாவது பெரிய பிரச்னை வந்துவிடும்.

ஒரே ஆளைப் பற்றிய கதை. அவனோ எழுந்துகொள்ள எட்டணா கேட்பவன். ஆனாலும் கதை பேய் ஓட்டம் ஓடுகிறதோ என்று எழுதும்போதே எனக்கொரு சந்தேகம் வந்தது. நாவலுக்கான Pace என்று ஒன்று உண்டு. அது அருவமானது. directly proportional to the subject matter. அது சரியாகக் கூடினால்தான் வாசிக்க நன்றாக இருக்கும். இந்நாவலில் அந்த வேகம் சிறிது அதிகரித்திருந்தது போலத் தோன்றியது. மாற்றி எழுத வேண்டுமா என்று நினைத்தபோதே இன்னொன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு சம்பவங்கள் வேண்டாத சுமை. வேறு வழியின்றி உள்ளே வரும் சம்பவங்களைக் கதாநாயகன் விரைவில் சோலி முடித்து வெளியே துரத்திவிடுகிறான். எனவே மற்ற கதாபாத்திரங்களைப் போலவே இந்நாவலில் வரும் சம்பவங்களும் 'மற்றும் பலர்' பட்டியலுக்கு உட்பட்டதுதான். எனவே அந்த வேகம் தவிர்க்க முடியாதது.

எத்தனை எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடிகிறது! நாவலை வாசித்த நானறிந்த ஒரே மற்றும் உருப்படியான விமரிசகர் ஹரன் பிரசன்னா இதைக் குறிப்பிட்டார். 'இவ்வளவு வேகம் இருந்திருக்கக்கூடாது.' நான் என்ன செய்ய? அது தன் லட்சணத்தை அப்படித்தான் அமைத்துக்கொண்டது.

இந்நாவல் எழுதும்போது எனக்குச் சவாலாக இருந்த ஒன்று, ஒரு எக்சண்ட்ரிக் இசைக் கலைஞன் பேசுவது என்னவானாலும் அந்தக் கணத்தில் அவன் மனத்துக்குள் என்னவெல்லாம் நினைப்பான் என்று படிப்பது. மனத்துக்குள் ஓடுவதையும் வாய் திறந்து சொல்வதையும் அடுத்தடுத்துக் காட்சிப் படுத்த நினைத்தேன். சீரியல்களில்தான் எவ்வளவு வசதி! மை.வா. என்று ஒரு குறிப்புப் போட்டு அனுப்பிவிட்டால் போதும். வில்லிகள் மனத்துக்குள் மைக் வைத்துப் பேசி முடித்துவிடுவார்கள். நாவலில் அது எப்படி வரும்?

மாய யதார்த்த எழுத்து முறை இதற்கு உதவவில்லை. மயக்கநிலை எழுத்தாக ஒன்றை முயற்சி செய்து பார்த்தேன். கனவு நிலை அல்ல. அது வண்ணமயமானது. மயக்க நிலை என்பது சரக்கு ஊற்றிக் கொடுத்து உளற வைத்துப் பெறுவது. இந்நாவலின் ஒரு பெரும் பகுதிக்கு இந்த முறை எழுத்து மிகவும் உதவி செய்தது. அந்தப் பகுதிகள் மிகவும் பழுப்பாக இருக்கின்றன என்று பிரசன்னா சொன்னார். அரை நினைவு நிலை சரியாக வந்துவிட்டது என்று தோன்றியது. தெளிவின் பேரெழிலுக்குச் சற்றும் சளைக்காதது மயக்க உளறல்களின் மாயாஜாலம்.

நாம் எல்லோரும் அறிந்த, ஆனால் பெரும்பாலானோர் மறந்துவிட்ட ஒரு சரித்திரத் தருணத்தில் இருந்துதான் இந்நாவலுக்கான கருவைப் பெற்றேன். எழுதத் தொடங்கியபோது என் மனத்தில் என்ன வடிவம் இருந்தது என்பது இப்போது நினைவில்லை. முடித்த பிறகு ஆபிரஹாம் ஹராரி காட்டுவது சந்தேகமின்றி விஸ்வரூப தரிசனம்தான் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு நாவலிலும் முதல் பாகத்தை எழுதிவிட்டு ஆசிரியன் விடைபெற்றுப் போய்விடுகிறான். வாசகர்களே அதன் இரண்டாம் பாகத்தைத் தீர்மானிக்கிறார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த நாவலில் ஒரு பக்கத்தில் முதல் பாகமும் மீதிப் பக்கங்களில் இரண்டாம் பாகமும் நானே எழுதவேண்டியதாகிவிட்டது. எனவே வாசகர் பங்கென்பது மூன்றாம் பாகம்.

இதனை எழுதிக்கொண்டிருந்த நாள்களில் தினமும் நான் எழுதி முடிக்கும்வரை விழித்திருந்து படித்துப் பார்த்துக் கருத்து சொன்ன நண்பர் சரவண கார்த்திகேயனுக்கு மிக்க நன்றி. 'நாவல் படிக்கும் மூட் இப்போது இல்லை' என்று என்னிடம் சொல்லிவிட்டு ரகசியமாகப் படித்து முடித்துவிட்டு விரிவாகப் பேசிய பிரசன்னாவுக்கு அதைவிட நன்றி. பிரசன்னா என் மனச்சாட்சியைப் போன்றவர். நான் என்றுமே மனச்சாட்சி சொல்வதைக் கேட்பவனல்லன். ஆனாலும் அது சொல்வது எனக்கு முக்கியம். எதை எழுதினாலும் என் மனைவிக்கு முதலில் படிக்கக் கொடுப்பேன். இதையும் அப்படியே செய்தேன். படித்து முடித்ததும் அவர் சொன்னதுதான் அந்தப் பிரசித்தி பெற்ற உத்தரவு: 'ஆபிரஹாம் ஹராரி மாதிரியெல்லாம் உன்னால இருக்க முடியாது. போய் இட்லி அரிசி ஒரு கிலோ வாங்கிட்டு வா.'

இன்று அச்சுக்குப் போவதற்கு முந்தைய வடிவை மீண்டும் ஒருமுறை படித்து மீண்டும் சில திருத்தங்கள் செய்தேன். கணப் பொழுது மிகுந்த திருப்தி ஏற்பட்டது. என்ன நினைத்தேனோ அதைச் செய்துவிட்டேன். என்ன எதிர்பார்த்தேனோ, அது வந்துவிட்டது. எண்ணிப் பார்த்தால், அந்தக் கணப் பொழுது திருப்திக்காகத்தான் இத்தனைப் பாடுகளும்.

 இறவான், ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகும். சந்திப்போம்.
*
 நன்றி : பா. ராகவன்

Saturday, December 7, 2019

'உதடுகளில் உனது பெயர்’ (நா. கா) - யுகபாரதி


பிரியத்திற்குரிய கவிஞர் யுகபாரதியின் 'நேற்றைய காற்று' புத்தகத்தில் இருந்த இந்தக் கட்டுரையைக் கேட்டதும் உடனே வாங்கி அனுப்பிய தம்பி ஆசிப்மீரானுக்கு முதலில் நன்றி. என் கல்லூரிப் பருவத்தின் கதாநாயகர்களில் ஒருவர் நா. காமராசன் (பேராசிரியர் மன்சூர் சாரும் நண்பர் நாகூர் ரூமியும் ’கறுப்பு மலர்களை’ அறிமுகப்படுத்தினார்கள்).

‘நேற்றைய காற்று’ பற்றி எழுத்தாளர் பாமரனின் விமர்சனத்தை கட்டுரையின் அடியில் தந்திருக்கிறேன்.  க்ளிக் செய்து அவசியம் வாசியுங்கள்.

இணைய வெர்ஷனுக்காக சில பாடல்களுக்கு யூட்யூப் சுட்டிகளை இங்கே இணைத்திருக்கிறேன். கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள்!

யுகபாரதி வக்கீலாகப் போயிருக்க வேண்டியவர். ஹா, என்ன அலசல்! - AB
*


உதடுகளில் உனது பெயர்


வெகுமக்களின் ரசனைக்கும் துய்ப்பிற்கும் புதுக்கவிதைகள் வந்து சேராதிருந்த காலத்தில், தன்னுடைய “கறுப்பு மலர்கள்” கவிதைநூல் மூலம் ஆகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் நா. காமராசன். அதிர்ந்து பேசக்கூடிய வானம்பாடிகளின் கவிதைகளிலிருந்து அவருடைய கவிதைகள் தனித்துத் தெரிந்தன. அன்று சிற்றிதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த புதுக்கவிதைகளிலிருந்தும் அவருடைய கவிதைகள் வேறுபட்டிருந்தன. தமிழ் இலக்கிய மாணவரான அவர், மரபுக் கவிதைகளின் வாயிலாகவே புதுக்கவிதையை வந்தடைந்திருக்கிறார்.

இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு எழுதக்கூடிய மரபுகளை முற்றாக நிராகரித்து, வசனகவிதை என்னும் வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது பாரதியே என்பது பலரும் அறிந்ததுதான். பாரதி அறிமுகப்படுத்திய வசன கவிதையை அப்படியே உள்வாங்காமல், ஓரளவு கவிதைக்கான அம்சங்களைக் கொண்டு முதல்முதலில் அசல் புதுக்கவிதைகளை எழுதியவர் ந.பிச்சமூர்த்தி. பாரதியின் வசன கவிதைகளில் புதுக்கவிதையின் அம்சங்கள் இல்லையா எனக்கேட்கலாம். இருந்தன. ஆனால், அதைப் பெரிதாக வளர்த்தெடுத்தவர் ந. பிச்சமூர்த்தியே. ஒளியே முக்கியமெனினும் அதை ஊதிப் பெரிதாக்கிய பிச்சமூர்த்தியே புதுக்கவிதைகளின் முன்னோடி. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றை எடுத்துக்கொண்டால் இரண்டு திருப்பங்களை முதன்மையாகக் கருதலாம். ஒன்று, பாரதியால் விளைந்தது. மற்றொன்று ந. பிச்சமூர்த்தியால் சாத்தியப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த பாரதி, கம்பனுக்குப் பிறகு தேங்கியும் குன்றியுமிருந்த தமிழ்க்கவிதைகளின் பொலிவை மீட்டுக் கொடுத்திருக்கிறான். அவன் மறைவையடுத்து, அவனுடைய ஒட்டுமொத்த இடத்தையும் பூர்த்திசெய்யும்விதத்தில் பயணித்த ஒருவராக ந.பிச்சமூர்த்தியைச் சொல்லலாம். “என் புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே காணாத அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப் படித்தபோது கவிதை ஊற்றுக்கண் தெரிந்தது. தொடர்ந்து பாரதியின் வசன கவிதையைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. 1934இல் சோதனை ரீதியான கவிதைகளை எழுதத் தொடங்கினேன்” என்று ந. பிச்சமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

பாரதியின் வசன கவிதைக்கான தோற்றுவாயாகவும் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் நூலே இருந்திருக்கிறது. “அமெரிக்காவில் புதிய யாப்பு முறையில் விட்மன் என்ற கவிஞர் கவிதைகள் எழுதியிருக்கிறார்” என்ற கூற்றின் அடிப்படையில் நாம் அதை விளங்கிக் கொள்ளலாம். தொல்காப்பியம் முதல் நன்னூல்வரை யாப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்திருந்த பாரதிக்கு, கவிதைகளைப் புதுவிதமாகவும் எழுதலாம் என்கிற எண்ணம் எழுந்திருக்கிறது. வசனம் வேறு, கவிதை வேறு என்பதை அறிந்தே வசன கவிதை என்று தாம் கண்டடைந்த வடிவத்திற்குப் பெயர் சூட்டியிருக்கிறான். அவனே உணர்வுகளைப் பிரதிபலிக்க உதவிய கவிதைகளை, காட்சி விவரணனைகளுக்கு உரியதாகவும் ஆக்கியிருக்கிறான். படிமத்தின் வழியேயும் குறியீட்டின் வழியேயும் தம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறான். பெரும் பாய்ச்சலாக அவன் மேற்கொண்ட மாற்றங்களால் கவிதைகளில் இருந்துவந்த ஓசைநயங்கள், அவசியமற்றதாக ஒதுங்கியிருக்கின்றன. “பல கோடி ஒலி அமைப்புகளிலே, சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கவிதையில் ஒலி இன்பத்தைக் காட்டுவதுபோல பல கருத்துகளையும் உணர்ச்சிகளையும் பொறுக்கியெடுத்து இசையவைக்கும் முயற்சியே புதுக்கவிதை ஆயிற்று” என சி. சு. செல்லப்பா எழுதியிருக்கிறார்.

புதுக்கவிதையை வளர்த்தெடுத்ததில் சி.சு. செல்லப்பாவுக்கும் அவர் நடத்திய எழுத்துப் பத்திரிகைக்கும் முதன்மையான பங்குண்டு. வசன கவிதை என்ற சொல்லை, புதுக்கவிதை என பிரயோகிக்கத் தொடங்கியவர் அவர்தான். 1959இல் அவர் அப்பிரயோகத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். “வசனம் செய்தியைத் தெரிவிக்கிறது. அறிவுக்கு உணவாக புதிய விஷயங்களைச் சேர்க்கிறது. கவிதை அறிவுடன் தொடர்புகொள்ள முயல்வதில்லை. உணர்வுடன் தான் உறவாட முயல்கிறது. வசனம் லோகாயத உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மனநெகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. வசனம் கவிதைபோல் செயல்படும்போது அது, தன் தொழிலை விட்டுவிட்டு கவிதையின் தொழிலை ஏற்றுக் கொண்டுவிடும். பார்வைக்கு வசனம்; உண்மையில் கவிதை. உணர்ச்சி கூடினால் தரையில் நடக்கும் வசனம், சிறகு பெற்று கவிதை ஆகிவிடும்” என்று “எழுத்து” பத்திரிகையில் புதுக்கவிதைக்கு அவர் எழுதியிருந்த விளக்கம் குறிப்பிடத்தக்கது. பாரதியின் வசன கவிதையை அடியொற்றி ந. பிச்சமூர்த்தி எழுதத் தொடங்கினாலும், அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கவிதைகளை அவரே அழைத்துவந்திருக்கிறார்.

பெரும்பாலான தமிழ்ப் புலவர்களும் பண்டிதர்களும் ஆரம்பகாலப் புதுக்கவிதைகளை வரவேற்கவில்லை. மாறாக, கண்டித்திருக்கின்றனர். பன்னெடுங்காலக் கவிதைத் தொடர்ச்சியை யாரோ சிலபேர் தங்கள் அறியாமையால் கெடுப்பதாகவும் கிளர்ந்திருக்கின்றனர். காலம் தம்முடைய தேவையைத் தாமே தீர்மானித்து, அதற்குரிய நபர்களை அடையாளம் கண்டுகொள்ளும் என்பதற்கேற்ப ந. பிச்சமூர்த்தியும் இன்னபிறரும் புதுக்கவிஞர்களாக உருவாகியிருக்கின்றனர். அவர்கள் எழுதியவற்றில் எத்தனை கவிதையாக தேறும் என்கிற கேள்விக்குள் போகவேண்டியதில்லை. தற்போதைய சிந்தனைகளின் திரட்சியில் அணுகினால் அவை கவிதைகளே இல்லையென்றுகூட வாதிடலாம். ஆனால், அவர்கள் முன்னெடுத்த காரியம் முக்கியமானது. இலக்கண இலக்கியப் பயிற்சியில்லாதவர்களும் கவிதை எழுதலாம் என்கிற சுதந்திரம், அவர்கள் பிடிவாதத்தால் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆரம்ப நிலையிலிருந்த புதுக்கவிதைகள் உணர்விலிருந்து அறிவை நோக்கி நகர்ந்திருக்கிறதென்றால், அதற்குப்பின் வந்த புதுக்கவிதைகள் அறிவிலுள்ள உணர்வுகளைப் பேசியிருக்கின்றன.

சமூகப் பிரச்சனைகளையும் அரசியல் பிரச்சனைகளையும் கவிதைகளில் சொல்லலாம் என்கிற புரிதலே பாரதிக்குப் பிற்பாடுதான் வந்திருக்கிறது. ஆனாலும். “பாரதியின் கவிதைகளில் சமூகப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட அளவுக்கு, அரசியல் பிரச்சனைகள் பேசப்படவில்லை. தேசீய பிரச்சனைகளை முன்வைத்து அவன் எழுதிய கவிதைகளை அரசியல் கவிதைகளாகப் புரிந்துகொண்டிருக்கிறோமே தவிர, உண்மையில் அரசியல் கவிதைகளை அவன் எழுதவில்லை” என்றுதான் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். “சுதந்திரம், சுதேசியம், பெண் விடுதலை, ஜாதி, தொழில், தமிழ்நாடு, பாரதம் இப்படிப் பல விஷயங்களை அவன் எழுதியிருக்கிறான். அவையெல்லாம் சமூகப் பிரச்சனைகளே அன்றி, அரசியல் பிரச்சனைகள் அல்ல” என்பதுபோல சிலர் எழுதியிருக்கிறார்கள்.

சமுதாயப் பிரச்சனைகளே அரசியல் பிரச்சனைகள் என்ற தளத்தில் அவர்கள் எழுதியதில் தனிப்பட்டமுறையில் எனக்கு உடன்பாடில்லை. சமூகமே அரசியலால் பின்னப்பட்டிருக்கும் பொழுது, அரசியலையும் சமுதாயத்தையும் அவர்கள் பிரித்துப்பார்த்துப் பொருள் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. பாரதியை சமுதாயக் கவியாக மட்டுமே பார்த்து எழுதவந்தவர்களால் அவனுடைய அரசியல் எல்லைகளைத் தொட முடியவில்லை அல்லது அவர்கள் சொல்வதுபோல சமுதாய எல்லைகளைத் தொடமுடியவில்லை. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளும் அத்தகைய உள்ளடக்கத்தையே கொண்டிருக்கின்றன. மரபுக் கவிதைகளை உரத்த வாசிப்புக்கு உரியனவாக கருதிய அவர்கள், மௌன வாசிப்பை நோக்கி புதுக்கவிதைகளை இழுத்து வந்திருக்கின்றனர். அதிர்ந்து பேசாத கவிதைகளே ஆகச்சிறந்த கவிதைகள் எனவும் அவர்களால் முன்மொழியவும் வழிமொழியவும் பட்டிருக்கின்றன. சிறுபத்திரிகைகளும் அவற்றை ஏற்று, அம்மாதிரியான கவிதைகளையே பிரசுரித்திருக்கின்றன.

ந. பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து புதுக்கவிதை எழுதவந்த பலருடைய கவிதைகளில் எதுகைகளும் மோனைகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. உரைநடை எழுத்தாளர்களும் புதுக்கவிதைகளை எழுதப் புகுந்ததால் இயல்பிலேயே அவர்களிடம் இல்லாத ஓசை ஒழுங்குகள் கவிதையின் அழகுகளாகப் பார்க்கப்படவில்லை. எழுத்தாளர் புதுமைப்பித்தன் மட்டும், தம்முடைய புதுக்கவிதைகளை மரபின் நீட்சியாகப் பார்த்திருக்கிறார். அவருடைய கவிதைகள் ஓரளவு சந்தங்களை உட்கிரகித்துள்ளன. புதுக்கவிதைகளின் தொடக்க காலத்தில் அரசியல் கவிதைகளோ சமுதாயக் கவிதைகளோ பிரதான பாடுபொருட்களாக இருக்கவில்லை. தன்னுணர்வுகளும் காட்சிப் படிமங்களுமே கவிதைகளுக்கான கச்சாப் பொருட்களாக இருந்துள்ளன.

தீவிர இலக்கிய முயற்சிகளாக அன்று அவர்கள் செய்துபார்த்த சோதனைகளின் வழியேதான் இன்றைய நவீனக் கவிதைகளை நாம் பெற்றிருக்கிறோம். ஐம்பதுகளில் பெரும் அலையாக வீசிய புதுக்கவிதைகள், ஒரு கட்டத்தில் அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் வலுத்த நேரத்தில், வெறும் தன்னுணர்வுகளைக் கவிதைகளென்று கொண்டாடுவதற்கு எதிரான குரல் எழத்தொடங்கியிருக்கிறது. நா. காமராசன், மிகத் துல்லியமாக அந்த வேறுபாட்டை உணர்ந்திருக்கிறார். மக்களுக்கானதே கலையும் இலக்கியமும் என்பதைப் புரிந்த அவர், ஏற்கெனவே எழுதப்பட்டுவந்த புதுக்கவிதைகளைப்போல் அல்லாமல், சமுதாயக் கருத்துகளை முன்வைத்து எழுதத் தொடங்கியிருக்கிறார். அவர் வருகைக்கு முன்பே மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைக்கான தளத்தை ஏற்படுத்தி வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்விதழ்களின் தொடர்ச்சியாக வெளிவந்த சூறாவளி, கலாமோகினி, சிவாஜி மலர், கிராம ஊழியன், சரஸ்வதி, நடை, கசடதபற, தீபம், கணையாழி, தாமரை என எத்தனையோ பத்திரிகைகள் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன. அகம் சார்ந்த பதிவுகளே புதுக்கவிதைகளின் கருப்பொருள் என்றிருந்த நிலையை, வானம்பாடிகளின் வருகை மாற்றியிருக்கிறது. தன்னுணர்வைப் புறந்தள்ளி, சமூகக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வானம்பாடிகள் எழுதிய புதுக்கவிதைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அக்காலத்தில் நிலவிவந்த அரசியல் சூழலுக்கு ஏற்பக் கவிதைகளை எழுதத் தொடங்கியவர்களில் பலர், இடதுசாரி முகாமைச் சேர்ந்தவர்களாகவும் தமிழிலக்கியத்தை பயின்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

மீரா, சிற்பி, அப்துல்ரகுமான், இன்குலாப், மு. மேத்தா, தமிழன்பன், புவியரசு, தமிழ்நாடன், அக்கினிபுத்திரன், பாலா என அப்பட்டியலில் இடம்பிடித்துள்ள பலரும் பேராசிரியர்கள் என்பது கவனிக்கத்தக்கது. கோவையை மையமாகக் கொண்டு இயங்கிய வானம்பாடிகள், பூமியையே புரட்டிவிடக்கூடிய நெம்புகோல்களாக புதுக்கவிதைகளைப் பார்த்திருக்கின்றனர். பொதுவுடைமையைக் கவிதையின் கோட்பாடாக முன்நிறுத்தியவர்களில் கோவை ஞானி குறிப்பிடத்தக்கவர். கவிதைகளையும் கவிஞர்களையும் இயக்கமாகக் கட்டி எழுப்பிய ஞானியின் திறனாய்வுக் கட்டுரைகள் புதுக்கவிதைகளின் போக்குகளையும் திசைகளையும் தீர்மானித்திருக்கின்றன. யாப்பிலிருந்து இசங்களுக்குக் கவிதைகள் மாறிய காலமாக அதைப் பார்க்க இடமிருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் நெருக்கடி நிலையையும் எதிர்கொண்டிருந்த வானம்பாடிகள், அரசுக்கு எதிராகவும் ஆதிக்கத்திற்கு எதிராகவும் எழுதுவதே கவிதையென்னும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அவர்களின் அப்போதைய ஒரே குறி, வார்த்தைகளில் சிக்கிக்கிடந்த கவிதையை எப்படியாவது விடுதலை செய்துவிட வேண்டும் என்பதுதான்.

வெகுவாகத் தமிழில் புழங்கிவந்த மரபையும் இலக்கணத்தையும் கட்டுடைக்க விரும்பிய அவர்கள், காலகதியில் என்னவானார்கள் என்பது விவாதத்துக்குரியது. தன்னுணர்வுகள் எப்படி ஒருசமயத்தில் அயர்ச்சியைக் கொடுத்தனவோ அதேபோல, கொள்கைப் பிரகடனங்களும் கோபாவேசக்கூற்றுகளும் கவிதையாகாதென வானம்பாடிகளுக்கு எதிராகவும் ஒரு குரல் வந்திருக்கிறது. அந்தக் குரல் எங்கிருந்து எழுப்பப்பட்டது என்பதை ஊகித்து விவாதிக்கவேண்டிய தேவை இப்போதில்லை. ஆனால், அந்தக் குரலுக்கு பதில் சொல்லும் விதத்தில் அமைந்த கவிதைகளை நா. காமராசன் எழுதியிருக்கிறார். அவர் அவருடைய கவிதைகளைப் பழைய யாப்புமுறைக்கு மாற்றாகவும் கொள்கைப் பிரகடனங்களுக்கு எதிராகவும் ஆக்கி அளித்திருக்கிறார். சொல்முறையில் அவர் கைக்கொண்ட புதுமை, வானம்பாடிகளில் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறது.

திராவிட இயக்கச் சிந்தனைகளில் முகிழ்த்த அவர், சர்வதேசியப் பார்வையுடைய சோஷலிச கவியென்னும் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கவிதைகள் வேறு, திரைப்பாடல்கள் வேறு என்று கொள்ளாமல் கவிதைகளையே திரைப்பாடல்களாக எழுதவேண்டும் எனவும் விரும்பியிருக்கிறார். “ஜாலிலோ ஜிம்கானாவும், ஜின் ஜினாக்கிடியும் என் கலைப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்க முடியாது” எனவும் கூறியிருக்கிறார். “இலக்கியம் சினிமா மூலம் திக் விஜயம் செய்ய ஆரம்பித்தால்தான் மக்கள் இலக்கியங்களை உருவாக்கமுடியும்” என்றும் தெரிவித்திருக்கிறார். “ஓசை இலக்கியத் தேவதையின் ஒப்பனை. ஆனால், இன்றைய சினிமாப் பாடல்களில் ஒப்பனை மட்டுமே இருக்கிறது. தேவதைக்கு வயதாகிவிட்டது. இன்றைய கலைத் துறைக்குத் தலைமை தாங்கும் சக்திவாய்ந்த சினிமாத் துறையை இலட்சியக் கவிஞர்கள் கைப்பற்றவில்லையே என்பதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன்” என்றிருக்கிறார்.

சின்னச் சின்ன வாக்கியங்களில் கவிதைத் தெறிப்புகளை வெகுசன பகிர்தலுக்குக் கொண்டுவந்த அவர், இருபதிலிருந்து முப்பது வரிகளில் மரபுக் கவிதைகளில் சொல்லிக்கொண்டிருந்த விஷயத்தை இரண்டே வரிகளில் சொல்லிக் காட்டியிருக்கிறார்ர். “நிர்வாணத்தை விற்கிறோம், ஆடை வாங்குவதற்காக” என பாலியல் தொழிலாளிகளின் வாழ்வை அவர் எழுதும்வரை, புதுக்கவிதைகளின் வீரியத்தை மரபார்ந்த தமிழிலக்கிய உலகம் அறிந்திருக்கவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலில் விலங்கிடப்பட்ட கைதியாகச் சிறையிலிருந்த அவர், புதுக்கவிதைகளின் பரவலுக்கும் விடுதலைக்கும் கூடுதலாக உழைத்திருக்கிறார்.

சுரதாவால் அடையாளங் காட்டப்பட்ட நா. காமராசன், உவமைகளின் வாயிலாகச் சிந்தனைகளைச் சொல்லிவந்த பழைய மரபைக் கவனமாகத் தாண்டியிருக்கிறார். வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் “நா. காமராசனின் கவிதைகள், கவிதைகளே அல்ல” என்றாலும், தம்முடைய தனித்தன்மை வாய்ந்த சொற்களால் புதுக்கவிதைக்குப் புதுமெருகை ஊட்டியிருக்கிறார். எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆகியோரின் வகுப்புத் தோழரான நா. காமராசன், அடிப்படையில் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். தான் பயின்ற மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவர் பாடம் நடத்தும் அழகைக் காண மாற்றுத் துறையைச் சேர்ந்த மாணவர்கள், வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருந்த காலம் ஒன்றுண்டு. அதன்பின் வெவ்வேறு காரணங்களால் அவர் அப்பணியைத் துறந்துவிட்டு முழு நேர அரசியல் பணியில் ஈடுபட நேர்ந்திருக்கிறது. தெ.பொ.மீ., தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

கவிதைகளில் அடர்த்தியையும் சொல்முறையில் வித்தியாசத்தையும் கொண்டுவந்த அவர், அடுத்த தலைமுறைப் படைப்பாளர்களுக்கு ஆதர்சமாக விளங்கியிருக்கிறார். பொதுவான பாடுபொருள்களில் சமுதாயச் சிந்தனைகளைப் பெருமளவு எழுதிக் காட்டிய பெருமை அவருடையது. திரைப்பாடல்களில் புதுக்கவிதைகளை எழுதமுடியும் என நிரூபித்த மிகச்சிலரில் அவரும் ஒருவர். திராவிட இயக்கச் சார்பினாலும் தம்முடைய கவிதைகளாலும் எம். ஜி. ஆரின் நன்மதிப்பைப் பெற்று, திரைத்துறையில் பாடல் எழுதும் சந்தர்ப்பதையும் அவர் பெற்றியிருக்கிறார். “பஞ்சவர்ணம்” என்னும் திரைப்படத்திற்குக் கதை வசனமும் எழுதியிருப்பதாக அறியமுடிகிறது. இசைக்குப் பாட்டு, பாட்டுக்கு இசை என இருவகைப்பட்ட அணுகுமுறையிலும் தேர்ந்திருந்த அவர், பல பாடல்களில் தம்மையும் தம் இலக்கியத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 1978இல் வெளிவந்த “தங்கரங்கன்” திரைப்படத்தில் “உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது / அதை உச்சரிக்கும் போது நெஞ்சம்தித்திக்கின்றது” என்ற பாடலை எழுதி விசேஷ கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அப்பாடல் முழுக்கவே அழகழகான படிமங்களைக் கையாண்டு, திரைப்பாடலில் புதுக்கவிதையின் செல்வாக்கை மெய்ப்பித்திருக்கிறார். “யாத்திரைக்காரன்” என்னும் கவிதையில், “மூன்றெழுத்து படித்தவுடன் பாட்டெடுத்தேன் / என் மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்” என்றிருக்கிறார். “கூடுவிட்டுப் கூடுபாய்ந்து போனதில்லை / நான் கொள்கைவிற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை” என்று நீளும் அக்கவிதையைத் திரும்பத் திரும்ப ரசிக்கலாம். மரபின் அழகும் புதுக்கவிதையின் தெறிப்பும் தென்படும் அவருடைய கவிதைகளில், எத்தனையோ மேற்கோள்களை எடுத்துக்காட்டலாம். “காயாம்பூ கருக்கிருட்டு / அவ கண்ணிரண்டும் மின்விளக்கு / ஆகாயம் சிரிச்சிருக்கு / அங்கே ஆயிரம்பூ மலர்ந்திருக்கு” என்ற கிராமியச் சந்தங்களை புதுக்கவிதைப் பூக்களாக நுகரக் கொடுத்திருக்கிறார்.

ஓசைகளை முற்றாக நிராகரித்த புதுக்கவிதைகளை நா. காமராசன் எழுதவில்லை. ஓசைகளையும் உள்ளடக்கிய கவிதைகளே அவரிடமிருந்து வந்திருக்கின்றன. ஆனாலும், அவை தன்னுணர்வுகளைப் பிரதானப்படுத்தவில்லை. வார்த்தைகளின் கட்டமைப்பை ஓசைகளுக்கேற்ப அமைத்தாலும், சிந்தனைகளைப் பொறுத்தவரை அவர் தம்மை ஒரு திராவிட இயக்கப் படைப்பாளராகவே அறிவித்திருக்கிறார். கருப்பு நிறத்தை அமங்கலத்தின் குறியீட்டு வண்ணமாக சமூகம் பார்த்துவந்த வேளையில், அதைத் தம் கவிதை நூலுக்குத் தலைப்பிட்டதில் இருந்தே அவருடைய திராவிடச் சார்பைப் புரிந்துகொள்ளலாம். புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மனிதர்களையே அவர் கறுப்பு மலர்கள் என அடையாளப்படுத்தியிருக்கிறார்.கவியரங்குகள் செழித்திருந்த காலங்களில் நா. காமராசனின் கவிதைகளைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. “மகாகாவியம், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், சூரிய காந்தி, ஆப்பிள் கனவு, கிறுக்கன், காட்டுக்குறத்தி, சொந்தவனத்து ஊமைக்குயில், பொம்மைப்பாடகி, நாவல்பழம்” உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

எழுத்துவாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களும் அனுபவங்களும் வேறு எவர்க்கும் கிடைக்காதவை. கறுப்பு மலர்களில் தம் முழு ஆளுமையையும் வெளிப்படுத்திய அவர், தன்னளவில் மட்டுமில்லாமல் தன்னைப் பின்தொடர்ந்து எழுத வருபவர்களுக்கும் உந்துசக்தியாக இருந்திருக்கிறார். “சந்திப்பிழைபோல நாங்கள் சந்ததிப் பிழைகள்” என்று திருநங்கைகளைப் பற்றி அந்தக்காலத்தில் சிந்தித்தவர் அவர் ஒருவர்தான். உரைநடையிலும் மேடைப் பேச்சிலும்கூட அவருக்கு ஆர்வம் இருந்திருக்கின்றன.

தம் திசையைத் தாமே தீர்மானித்துக்கொள்ளும் அளவுக்கு எழுதிவந்த அவர், இறுதிக்காலங்களில் எழுதுவதில் அதிருப்தி அடைந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் இருந்தபோது எழுதியதே நான் ‘”கூடுவிட்டுக் கூடுபாய்ந்து போனதில்லை” என்பது. ஆனால், காலம் அவரை ஒரு கூடு அல்ல, பல கூடுகளை நோக்கிப் பாய வைத்திருக்கிறது. மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டிருந்த அவரை, ஆரம்பத்தில் அண்ணாவும் கலைஞரும் ஈர்த்திருக்கின்றனர். அதன்பிறகு அதே அளவுக்கு எம்.ஜி.ஆர். ஈர்த்திருக்கிறார். அண்ணாவும் கலைஞரும் அவரைக் கொள்கையால் ஈர்த்தார்கள் எனில், எம்.ஜி.ஆரோ அவரை அன்பினால் ஈர்த்திருக்கிறார்.

எழுத்தினாலும் பேச்சினாலும் வளர்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் தம்மை ஓர் அந்தஸ்துமிக்க நபராக ஆக்கிக்கொண்டிருந்த நா. காமராசன், எழுத்தின் வழியே தம்மை ஒரு மார்க்சியவாதியாகவும் கட்டமைத்திருக்கிறார். தேர்ந்த இலக்கியவாசகராக இருந்ததுடன், அதை மேடைகளில் பகிர்ந்துகொள்ளவும் பழகியிருக்கிறார். ஒருபக்கம் கவிதைகளில் அவருக்குக் கிடைத்துவந்த அங்கீகாரத்தை மேம்படுத்திக்கொள்ள மேடைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். சொற்பொழிவில் அவர் கலைஞரையோ அண்ணாவையோ பின்பற்றவில்லை. மாறாக, அவரிடமிருந்த தமிழ்ப்புலமை அவரை வெவ்வேறு கோணங்களில் பேச வைத்திருக்கிறது. கவிதைகளுக்கு இடையேயும் கட்சிப் பணிகளை மேற்கொண்ட அவர், காலப்போக்கில் கட்சிப் பணிகளுக்கு இடையே கவிதை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார். இயக்கத்தில் இணைந்து பணியாற்றக்கூடிய கவிஞர்களுக்கு நேரக்கூடிய தர்மசங்கடங்களை அவருமே அனுபவித்திருக்கிறார்.

ஒரு முழுநேர ஊழியனாக கட்சிகளில் இணைந்து பணியாற்றும் கலைஞர்களுக்கு, இறுதியில் நேரக்கூடிய கதிதான் அவருக்கும் நேர்ந்திருக்கிறது. கட்சி ஊழியத்தில் இணைந்த பல படைப்பாளிகள் தங்கள் படைப்புத்திறனை இறுதிக்காலங்களில் இழந்திருப்பதை உணரலாம். இதன்மூலம் கலைஞர்கள் யாருமே கட்சிப் பணிகளில் ஈடுபடக் கூடாதென்று நான் சொல்ல வரவில்லை. கட்சிப் பணியுடன் கலைப் பணியையும் ஏககாலத்தில் செய்யக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றே சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இயங்கிய நா. காமராசன், திரைத்துறையில் காலடி எடுத்துவைக்க எம்.ஜி.ஆர். உதவியிருக்கிறார். அந்தச் சமயத்தில் திரைப்பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தவர் எம்.ஜி.ஆர். என்பது அறியக்கூடியதே.

மக்களைச் சென்றடைய எளியவழியாக எம்.ஜி.ஆர். திரைப்பாடல்களையே எண்ணியிருக்கிறார். அதுமட்டுமல்ல, எப்பொழுதெல்லாம் கவிஞர் கண்ணதாசனுடன் அவருக்கு முரண்பாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு புதுப் பாடலாசிரியரை அவர் திரைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்படித்தான் நா. காமராசனுக்கும் திரைவாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே நா. காமராசனின் எழுத்துகளில் அபிமானம் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அவரையும் திரைப்பாடலாசிரியராக்கித் தவிர்க்கமுடியாத இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

தம்முடைய தேவைகளுக்காக ஒருவரை வளர்த்தெடுத்து, அதன்மூலம் அவர்கள் அடையும் முன்னேற்றங்களை ரசித்திருக்கிறார். அவருடைய அந்தச் செயல் திரைத்தமிழையும் காப்பாற்றியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை பிளந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் தமிழறிஞர்களையும் தம்முடன் வைத்துக்கொள்ள விரும்பியிருக்கிறார். தமிழ் உணர்வாளர்கள் நிறைந்திருந்த தி.மு.க.வை எதிர்க்க அதுவே சரியான வழியென்றும் நினைத்திருக்கிறார். தம்மை மலையாளியென்றும் தமிழ் உணர்வற்றவர் என்றும் சொல்லிவிடுவார்களோ என்கிற அச்சத்தின் விளைவாக, அவர் எப்பொழுதும் தம்மைச்சுற்றி தமிழ்ப்பெரும் கூட்டத்தை வைத்திருக்க நினைத்திருக்கிறார். அச்சத்தின் விளைவோ அடிப்படைத் தமிழுணர்வோ எதுவாயிருந்தாலும், அதனால் பலபேர் பயனடைந்திருக்கின்றனர். அந்தப் பயனாளிகளில் ஒருவராக நா. காமராசனைக் கருதலாம்.

மெட்டைவிட பாடல் வரிகளே முக்கியம் என்று கருதிய எம். ஜி. ஆரின் அணுகுமுறைகளில் தமக்கு ஈர்ப்பு ஏற்பட்டே அவரிடம் சென்றதாக அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். தம்மை எம்.ஜி.ஆர். நடத்தியவிதமும் தமக்களித்த முக்கியத்துவமும் இயல்பாகவே அவரை நெருங்கிச்செல்லும் வாசலை திறந்திருக்கின்றன. கலைஞர் மீது அபிமானம் கொண்டிருந்த நா. காமராசனுக்கு ஆரம்பத்தில் அ. தி. மு. க.வில் சேரத் தயக்கம் இருந்திருக்கிறது. ஆனாலும், “படித்த தமிழறிந்த தங்களைப் போன்றோர் எம்முடன் இணைந்தால் கட்சி வளர்ச்சிக்கு உதவும்” என்று எம்.ஜி.ஆர் விடாமல் அழைத்திருக்கிறார். திரையிலும் அரசியலிலும் பெரும் ஆளுமையாக இருந்த அவருடைய அழைப்பை ஒருகட்டத்தில் தட்டமுடியாமல் கட்சியில் இணையச் சம்மதித்திருக்கிறார். அரசுப் பணியில் இருந்துவந்த அவர், எம். ஜி. ஆரின் வேண்டுகோளுக்கு இணங்க அவ்வேலையை ராஜினாமா செய்யவும் நேர்ந்திருக்கிறது.

முழுநேரக் கட்சிப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட வேளையில், அவர் அதிகமும் விரும்பிய எழுத்துகளை எழுதமுடியாமல் போயிருக்கிறது. தினசரி ஏதோ ஓர் ஊரில் கட்சி ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பேசவேண்டி இருந்ததால், பேசப்படும் படைப்புகளைத் தம்மால் எழுதமுடியாமல் போனதென்று ஓர் இடத்தில் வருந்தியிருக்கிறார். அத்துடன், அவர் நடத்திவந்த “சோதனை” பத்திரிகையும் கட்சிப்பணியினால் முடங்கியிருக்கிறது. எழுதும் நேரங்களை இயக்கம் எடுத்துக்கொண்டதால், இனி எழுதவே முடியாதோ என்றுகூட அஞ்சியிருக்கிறார். ஆனாலும், எம்.ஜி.ஆர். காட்டிய அன்பிற்கு எதையும் இழக்கத் துணிந்திருக்கிறார். நா. காமராசன் எழுதிய ஒரு பாடலை எந்தத் திருத்தமும் இல்லாமல் மெட்டமைக்கும்படி இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்.

அவரும் எவ்வளவோ முயன்றிருக்கிறார். ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு பாடல் திருப்தியாக வரவில்லை. உடனே, விஸ்வநாதன் தம்முடைய மெட்டுக்கு எழுதும்படி நா. காமராசனை வேண்டியிருக்கிறார். யாப்புப் பயிற்சியுடைய நா. காமராசனுக்கு மெட்டுக்கு எழுதுவதில் சிக்கலில்லை. என்றாலும், புதுக்கவிதை முயற்சிகளைத் திரைப்பாடலில் விஸ்தரிக்க விரும்பிய அவர் மெட்டுக்கு எழுதத் தயங்கியிருக்கிறார். இவ்விஷயத்தை அறிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., பாடலுக்கு மெட்டமைக்க மறுத்த எம்.எஸ்.வி.யை கடிந்துகொண்டிருக்கிறார். அதன்பின் எம். எஸ். வி. இசையமைத்த பாடலே 1976இல் வெளிவந்த “நீதிக்குத் தலைவணக்கு” திரைப்படத்தில் இடம்பெற்ற “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடல்.

அப்பாடல் வெளிவந்தவுடனேயே திரையுலகின் தவிர்க்கமுடியாத இடத்தை நா. காமராசன் அடைந்திருக்கிறார். “நகக்குறி வரைகின்ற சித்திரமோ / அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ / முகமென்று அதற்கொரு தலைநகரோ / விழி மூடிய கோட்டையின் கதவுகளோ” என்று அப்பாடலில் எழுதியிருக்கிறார். இயைபுக்காக இறுதிவார்த்தைகனை அமைக்கும் வழக்கமானமுறையை அப்பாடலில் நா.காமராசன் தவிர்த்திருக்கிறார். புதுக்கவிதையின் சாயலைக் கொண்டுவர இயைபுகளை அவர் மீறியிருப்பது கவனிக்கத்தக்கது. “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் வெளிவந்த “போய்வாநதியலையே” பாடலிலும்கூட, இதே பாணியைக் கையாண்டிருப்பதைக் கவனிக்கலாம். “கனி தூங்கும் தோட்டம் / முகம் போட்ட கோலம் / பனி வாடை காலம் / உனைக்காண வேண்டும்/ நிலவென்னும் ஓடம் / கரை சேரும் நேரம் / மழைக் கூந்தல் ஓரம் / இளைப்பாற வேண்டும்” என்றே எழுதியிருக்கிறார். மழைக்கூந்தல் ஓரம், நிலவென்னும் ஓடம் போன்ற உவமைகளெல்லாம் அதற்குமுன் வேறு எவரும் எழுதாதவை. புதுக்கவிதைச் சொல்லாட்சிகளில் அவருக்கிருந்த மயக்கத்தைப் பல பாடல்களில் காணலாம். “இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்” என்று ஆரம்பிக்கும் “ஊருக்கு உழைப்பவன்” திரைப்பாடலை எடுத்துக்கொள்ளலாம்.

அதுஒரு மிகச்சிறிய தாலாட்டுப் பாடல். அப்பாடலில் “புத்தனின் முகமோ / என் தத்துவச் சுடரோ சித்திர விழியோ / அதில் எத்தனை கதையோ என்று சிந்தித்திருக்கிறார். புத்தனின் முகமும் தத்துவச்சுடரும் அப்பாடலுக்கு அவசியமில்லாதவை. தாலாட்டுப் பாடலென்றால் கண்ணே கண்மணியே, ஆராரோ ஆரிராரோ என்று எழுதியே குழந்தையை உறங்க வைத்துவிடலாம். ஆனால், அவரோ புத்தனையும் தத்துவச் சுடரையும் சொல்லியிருக்கிறார். எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றை எழுதிவிடாமல், எவருமே சிந்திக்காத உவமையைக் எழுதிக் காட்டுவதே அவர் தனித்துவம். புத்தனின் முகமோ எனக் கேட்டது வெறும் உவமையல்ல. அதற்குப் பின்னே இந்துத்துவ எதிர்ப்பும் திராவிடக் கருத்தியலும் இருக்கின்றன. விவரித்துச் சொல்ல இடமில்லை.

புதுக்கவிதைகளின் தாக்கத்திலிருந்து அவர் திரைப்பாடல்களை எழுதினாலும், இரண்டு வார்த்தைகளுக்கு இடையே இருந்து பிறக்கும் கவித்துவத்தை கவனிக்காமல் விட்டதில்லை. “வஞ்சிக்கோ மான் விழிகள்” என்பதைப் பிரித்து “வஞ்சிக் கோமான் விழிகள்” என்று எழுதவும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. சிலேடையாக ஒன்றைச் சொல்வது பழந்தமிழ் இலக்கிய மரபு, அதையும் புதுக்கவிதைகளில் எழுதிப்பார்த்தவராக அவரைச் சொல்லலாம். அதேபோல பாடல்களில் ஒடிச் சந்தமென்று சில இடங்கள் வரும். அதற்கு வார்த்தைகளைப் பொருத்துவது அவ்வளவு எளிதல்ல. துண்டுச் சொற்களிலும் பாடலின் தன்மை கெடாமல் வார்த்தைகளைப் பிரயோகிப்பது தனிக்கலை. வெறும் பாடலாசிரியராக இருப்பவர்க்கு அது, சாத்தியமில்லை. கவிஞராகவும் கலை இலக்கியப் பயிற்சியுடையவராகவும் இருந்தால் மட்டுமே அப்படி எழுதமுடியும்.

ஒரு பாடலாசிரியன் கவிஞனாக வெளிப்படக்கூடிய எத்தனையோ பாடல்கள் அவர் பெயருக்கு உரியவை. கைகொடுக்கும்கை (கண்ணுக்குள்ளே), காதல்பரிசு (கானலுக்குள் மீன்பிடித்தேன்) காக்கிச்சட்டை(வானிலே தேனிலா), அந்த ஒரு நிமிடம்(தேவைஒரு பாவை), அன்புள்ள ரஜினிகாந்த்(முத்துமணிச் சுடரே வா), ரெட்டைவால் குருவி(கண்ணன்வந்து பாடுகின்றான்), இதயக்கனி( தொட்ட இடமெல்லாம்), சொல்லத்துடிக்குது மனசு( தேன்மொழிஅன்புத் தேன்மொழி), நான் பாடும் பாடல்(பாடும் வானம்பாடி நான்), பெரியவீட்டுப் பண்ணைக்காரன்(மல்லிகையேமல்லிகை),வெள்ளை ரோஜா(ஓமானே மானே) முந்தானை முடிச்சு(வௌக்குவச்ச நேரத்துல), ஆயிரம் பூக்கள் மலரட்டும்(மேகம் அந்த மேகம்), இதயக்கோயில்(பாட்டுத்தலைவன் பாடினால்), உதயகீதம்(மானேதேனே கட்டிப்புடி) தங்கமகன்(அடுக்கு மல்லிகை அது), மந்திரப்புன்னகை(மந்திரப்புன்னகையோ) என குறிப்பிடத்தக்க அவருடைய பாடல் பட்டியல் மிகநீண்டது.

சட்டென்று என் நினைவுக்கு வந்த படங்களையும் பாடல்களையும் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். இவை தவிரவும் அவருடைய சாதனைகளைச் சொல்லும் பாடல்கள் உண்டுதான். குறிப்பாக, “நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்தில் அவர் எழுதிய “சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்கு” என்னும் பாடல், பலருடைய விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. தந்தையின் விருப்பத்தைத் தட்டிக்கழித்துவிட்டு காதலனைச் சேர்ந்த மகளைப் பற்றிய பாடலே அது. ஒரு வயதுவரை தந்தையின் தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிள்ளைகள், காலகதியில் விடுபடும்பொழுது அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அப்பாடலில் அபாரமாக எழுதியிருக்கிறார். சூழலுக்காக எழுதப்பட்ட பாடல் என்றாலும், அப்பாடல் வரிகள் கேட்கும் யாரையும் அழவைத்துவிடும். “காலங்கள் மாறிவரும் காட்சிகள் இங்கே / நியாயங்கள் ஆறுதலைக் கூறுவதெங்கே / மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை / பாச தீபம் கையில் ஏந்தி வாழவந்த வேளை / கண்களாலே பெண்மைப் பாட / இன்பம் கண்ட மங்கை / நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே” என்று யோசித்திருக்கிறார். “நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே” என்ற வரியில், ஒரு தந்தையின் உச்சபட்ச அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நமக்குத் தீங்கு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும் நன்றாக இருந்துவிட்டுப்போகட்டும் என்ற எதார்த்தமான சிந்தனையை மெட்டிலும் சொல்லிவிடக்கூடிய ஆற்றல் அவருடையது. எதார்த்தமான வரிகள் என்றில்லை, அழகியல் சார்ந்த பதிவுகளையும் அவருடைய பாடல்களில் மிகுதியாகக் காணலாம். குறிப்பாக “நுரைப்பூவை அள்ளி அலை சிந்தவேண்டும்” போன்ற அழகிய படிமங்களைத் திரைப்பாடலில் எழுதியவர்களில் அவரே மூத்தவர். “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் அவரெழுதிய “விளக்குவச்ச நேரத்துல” என்னும் பாடலைச் சொல்லாமல் இருக்கமுடியாது. வெகுஜனரசனைக்கு ஏற்ற அப்பாடலை விரசத்துடன் எழுதிவிட்டதாக நா. காமராசனை விமர்சிப்பவர்கள் உண்டு என்பதால், அப்பாடலைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது. அப்பாடலை நா. காமராசன் இளையராஜா கொடுத்த சந்தங்களுக்கே எழுதியிருக்கிறார்.

எழுதிய பாடலை இளையராஜா பாடினால் நன்றாயிருக்குமென்று இயக்குநர் கே. பாக்யராஜிற்குத் தோன்றியிருக்கிறது. பாடல் வரிகளை வாசித்த இளையராஜா, “இப்பாடலை வேறு யாராவது பாடட்டுமே” என்றிருக்கிறார். “சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் இப்பாடலில் வரும் வரிகளுக்கேற்ப என்னால் பாட முடியாதே” என்றும் தெரிவித்திருக்கிறார். “நீங்கள் பாட வேண்டுமென்பது என் விருப்பமல்ல. முடிவு” என்று பாக்யராஜ் சொல்லியதும், வேறு வழியில்லாமல் இளையராஜா பாடியிருக்கிறார். அதனால்தான் “விளக்குவச்ச நேரத்துல தானானனா, மறஞ்சிநின்னு பாக்கையில் தரனானனா” என்று இளையராஜா பாடியிருக்கிறார். “மாமன் வந்தான், தாகம் என்றான்” என்ற சொற்களைப் பாடினால் சாமி கோபித்துக்கொள்ளும் என்று தத்தகாரத்தையே வார்த்தைகளாகப் பாடியிருக்கிறார்.

பாடியவிதத்தில் பாடல் வரிகளில் இருந்த குறும்பை, இளையராஜாவும் ஜானகியும் அதிகப்படுத்தியிருக்கின்றனர். உள்ள வரியைப் பாடியிருந்தால்கூட, இத்தனை நளினம் வந்திருக்காது. தனனானனா, தரனானனா என்று போட்டதில்தான் விரசம் வெளிப்பட்டிருக்கிறது. பொதுவாக கே. பாக்யராஜின் படங்களைப் பொறுத்தவரை அவை, பெரும்பாலும் ஆண் பெண் உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கலையும் குறும்புகளையுமே பிரதானப்படுத்துபவை. அப்படிப்பட்ட ஒரு படத்தில் விளக்குவச்ச நேரத்துல என்று எழுதியதை விமர்சிக்க ஒன்றுமே இல்லை. அப்பாடலில், “நீலமயில் தோகைசூடி ஜாகைபோடுது / ஜாதிமலர் தேனில் ஊறி ஜாடை கூறுது” என்ற வரிகள் என்னை ஈர்த்தவை. முந்தானை முடிச்சு என்ற தலைப்பே குடும்ப அமைப்பின் குறியீடாகத் தெரியும்போது, தாம்பத்திய சமாச்சாரங்களை விரசமென்று விளங்கிக்கொள்வது எப்படியோ?

எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகும்வரை அவருடைய படங்களுக்கே அதிக பாடல்களை நா. காமராசன் எழுதியிருக்கிறார். அதன்பிறகுதான் வெளிப்படங்களுக்குப் பாடலெழுதும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தம்மைப் பற்றிய மிகையான கருத்துகளை வெளிப்படுத்தி அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். “என்னால்தான் கவிதைளே பிழைத்தன, நானில்லை என்றால் கவிதைகளுக்குக் கதிமோட்சமே இல்லை” என்பதுபோலப் பேசி, இலக்கிய உலகத்தை கதி கலங்க வைத்தவர் அவர்போல் எவருமில்லை. “கம்பனுக்குப் பிறகு தமிழில் கவிஞனே இல்லை” என்று ஒரு இடத்தில் கூறிய அவர், “கம்பனும்கூட என் பார்வையில் குறைந்தே தெரிகிறான்” என்று மற்றொரு இடத்தில் கூறியிருக்கிறார்.

என்னுடைய பத்திரிகையாள நண்பர் ஒருவர், அவரைப் பேட்டி காண போனபோது ‘கண்ணதாசனெல்லாம் ஒரு கவிஞனா?’ எனக் கரித்துக் கொட்டியிருக்கிறார். அதை அட்டைப்படக் கட்டுரையாக்கிவிடும் ஆர்வத்திலிருந்த என் நண்பர், மேலும் மேலும் அப்படியான கேள்விகளையே முன் வைத்திருக்கிறார். எதற்கும் தயங்காமல் பட்டதையெல்லாம் சட்டென்று போட்டு உடைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், “நீங்கள் சர்வாதிகாரியானால்” என்ற கேள்வியைக் கேட்க, “மோசமாக எழுதுகிறவர்களைச் சுட்டுத் தள்ளுவேன்” என்று அவர் சொல்லவில்லை. “பசியோடு இருக்கும் அத்தனைபேருக்கும் உடனே உணவு கொடுங்கள் என ஆணையிடுவேன்” என்றிருக்கிறார். “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடல் வெளிவந்த சமயத்தில், “கண்ணதாசன் பாடல்துறையில் பதினைந்து ஆண்டுகள் உழைத்துப் பெற்ற புகழை, ஒரே ஆண்டில் என்னுடைய இரண்டாவது பாடலால் நான் பெற்றிருக்கிறேன்” என்று “சொந்தவனத்து ஊமைக்குயில்” நூலில் பெருமிதப்பட்டிருக்கிறார். நெகிழ்வும் அன்பும்கூடிய அவர், எழுத்தைவிடவும் அதிகமாக மனிதர்களை நேசித்திருக்கிறார்.

தன்மீது காத்திரமான விமர்சனங்களை வைத்த ஜெயமோகனை, “எழுதும் வேலையை மட்டுமே கொண்டிருப்பவன் நானென்று” எளிதாகக் கடந்தும் போயிருக்கிறார். மேடையில் அவர் போன்றோர் உரையாற்றிய தமிழால்தான் திராவிட இயக்கங்களுக்கு ஆதரவுகள் பெருகின எனச் சொல்லப்படுவதுண்டு. திரைப்பாடல்களில் உருவகங்களை அதிக அளவு பயன்படுத்திய நா. காமராசன், அப்பாதிப்பை தனக்களித்த பிதாமகனாகக் கேரளக்கவி வயலார் ராமவர்மாவைச் சொல்லியிருக்கிறார். புதுக்கவிதையிலும் சிலேடை உத்திகளை கையாள முடியுமென்று நிரூபித்ததில் அவருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது. சிலேடை, அணியிலக்கண அழகுகள் எல்லாம் கவிதைக்குத் தேவையா? என்பது வேறு. ஆனால், சொல்லழகிலும் உத்திகளிலும் அதீத கவனம் செலுத்திய அவர், “சிலேடை என்னும் இலக்கிய அலங்காரத்தை நகைச்சுவை ராணி” என்று வர்ணித்திருக்கிறார்.

பெண்களின் கண்களை வருணித்து அவர் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. “புருவக் கொடியருகே / பொன்னிமையின் உள்ளே / உருவாகிச் சுழலும் / உள்ளத்தின் முத்திரைகள் / இதைத்தேடி மனப்பறவை / என்றே திறந்து வைத்த இருவாய்கள் / முகவிளக்கின் இரு சுடர்கள்” என்று எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகளின் திரட்சியைத் திரைப்பாடல்களில் கொண்டுவர யோசித்த நா. காமராசன், அதற்கான சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து திரைப்பாடல்களில் செய்துபார்த்திருக்கிறார். மதுவை ராஜ திரவமென்றும் கவிஞர்களின் தாய்ப்பாலென்றும் எழுதிய அவருடைய சொல்லாட்சிகள் இன்றைய நவீனக் கவிஞர்களுக்கு உவக்காமல் போகலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அவர் எழுதிய “சந்திரிகைப் பந்தல், முத்துக்களின் பள்ளம், கப்பலின் சமவெளி, நதிகளின் கல்லறை, சிவப்பு வஸந்தம், நட்சத்திர புஷ்பங்கள் போன்றவை கொண்டாடப்பட்டன. “மின்னல் நரம்பு மேகத்தில் / காற்று மீட்டும் மழைப்பாடலில் / கண்ணீர் ராகம் பாய்ச்சுவேன்” என்று அவர் எழுதிய கவிதை வரிகளை இப்போதும் மனப்பாடமாக ஒப்பிக்கும் தமிழாசிரியர்களை நான் கண்டிருக்கிறேன்.

கிராமியச் சந்தங்களைக் கொண்டு “காட்டுக் குறத்தி” என்னும் தலைப்பில் அவர் எழுதிய காவியம், எத்தனை பேரால் கண்டுகொள்ளப்பட்டதென அறியமுடியவில்லை. ஆனால், அவரோ அந்நூல் முன்னுரையில் “கேரள சாகித்ய அகாதெமி சில இடங்களில் பாரதியைத் தாண்டிய ஒரே தமிழ்க் கவிஞன் நா. காமராசன்” என்று சொல்லியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எல்லா வகையான மரபுக் கவிதைகளையும் எழுதிய தான், இருபத்து எட்டு வயதிலேயே புதுக்கவிதைகளில் முழுவெற்றி பெற்றுவிட்டதாக”வும் அறிவித்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தமிழுணர்வை நா.காமராசன் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிட்டதில்லை. அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நிகரான தமிழை எம்.ஜி.ஆர். கற்றிருந்தார் எனச் சொல்வதற்கில்லை. ஆனால், சூழலின் தன்மைக்கேற்பப் பாடல்வரிகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவருக்குத் தமிழில் பரிச்சயமிருந்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த நா. காமராசனை, தம் பக்கம் இழுக்க எம்.ஜி.ஆர். அவருக்குக் கதர் வாரியத் துணைத் தலைவர் பதவியை வழங்கியிருக்கிறார். கூடுவிட்டுக் கூடுபாய்ந்து போனதில்லை என்ற அவர், எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலால் கோபுரத்தில் ஏறிக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. தன்னை எழுதத் தூண்டியதில் எழுத்தாளர் லா.ச.ராவுக்கு முதன்மைப் பங்குண்டு என குறிப்பிடும் நா. காமராசன், காண்டேகரின் படைப்புகளையும் சங்க இலக்கியங்களையும் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார். பொதுவாக வெகுஜனத் தளத்தில் இயங்கக்கூடியவர்கள், தீவிர இலக்கியத்தைப் படித்திருக்க மாட்டார்கள் என்கிற பிம்பம் கட்டமைப்பட்டிருக்கிறது. அந்தப் பிம்பத்தை உடைத்து, அவர்களிலும் இலக்கிய ரசனையிலும் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியவர் நா. காமராசனே. திரைப்பாடலை எழுதிக்கொண்டே அவர் செய்துவந்த இலக்கியப் படைப்புகள் அந்தக்காலத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கம்யூனிஸக் கருத்துகளை மாபெரும் உருவக வரைபடத்தில் ஏற்றிச் சொன்ன வயலாரைத் தவிர்த்து, தான் மதிக்கக்கூடிய கவிஞர்களாக இன்குலாப்பையும் அப்துல்ரகுமானையும் அவர் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கவை.

பாடல் வாய்ப்புக்காக அவர் எங்கேயும் யாரிடமும் நின்றதாகக் தகவலில்லை. அதன் காரணமாக இத்தனை ஆண்டுகளில் மிகக்குறைவான திரைப்பாடல்களே எழுதியிருக்கிறார். முக்கியமான பாடலாசிரியராக அறியப்படும் அவர், முப்பத்தி மூன்று திரைப்படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதியிருப்பதாகக் குறிப்புகள் சொல்கின்றன. எண்ணிக்கையில் குறைவான பாடல்களே எழுதி இருந்தாலும், எழுதியவற்றில் முக்கியமான பாடல்கள் நிறைய உண்டு. முற்றிலும் மரபு உத்திகளைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பவையே அவருடைய கவிதைகள். “பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்த நான், சிறிது காலம் புல்லறுக்கப் போய்விட்டேன்” என திரைத்துறை அனுபவத்தை அவர் கசப்போடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். கல்லூரிக் காலங்களில் தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்.

திராவிட இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த அக்காலத்தில் தமிழ்ப் போராளியாக அவர் இருந்திருக்கிறார். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் இயல்பிலேயே வாய்த்திருந்த அவர், திரைப்பாடலைச் செறிவுள்ள இலக்கியப் பிரதியாக்க பெரும்முயற்சி எடுத்திருக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாக இயங்கிய காலத்தில் ஊர்தோறும் “படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசர் பேசுகிறார்” எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து பெரியார், “படிக்காத காமராசர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராசர் பேசுவதாகப் போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர் என அக்காலத்திய அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அவர், எம்.ஜி.ஆரை எதன் அடிப்படையில் ஆதரித்தார் எனக் கேட்பவர்கள் உண்டு. அந்தக் கேள்விக்கான பதில்களை எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அவர் எழுதிய பாடல்கள் தெரிவிக்கின்றன. கால ஓட்டத்தில் வெவ்வேறு கட்சிகளில் தம்மை இணைத்துக்கொண்ட போதிலும், இறுதிவரை திராவிடக் கருத்தியலில் இருந்து அவரால் விடுபடமுடியவில்லை. தனித்தமிழ்நாடு, தமிழ்த்தேசியம், மாநில சுயாட்சி என்றெல்லாம் பேசிவந்த அவர், சிறிதுகாலம் ஆர். எஸ். எஸ் போன்ற மதவாத அமைப்புகளுடனும் அன்பு பாராட்டியது ஆச்சர்யமளிக்கிறது.

ஒரு காலத்திய கவிதைகளின் போக்கைத் தீர்மானித்த சக்தியாக இருந்த அவர், அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட குழப்பத்தினால் அவ்வப்போது சறுக்கல்களையும் கண்டிருக்கிறார். “எத்தனை மனிதர்கள் உலகத்திலே / அம்மா / எத்தனை உலகங்கள்இதயத்திலே” என்னும் பாடலே அவர் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். “நீதிக்குத் தலைவணங்கு” திரைப்படத்தில் இடம்பெற்ற அப்பாடலில், தத்துவச் சுடரை இதயத்திற்கு நெருக்கமாக ஏற்றியிருப்பார். “எட்டடி மண்ணுக்குப் போகும்வரை / இந்தக் / கற்பனை ஊர்வல வாழ்கையிலே / யாரோ ஒருவன் தோட்டமிட்டான் / அதில் / யாரோ பலனை அனுபவிப்பார்” என்று எழுதியிருப்பார்.

பாரசீக கவிஞர் உமர்கய்யாமை நினைவூட்டத்தக்க இவ்வரிகளை இளவயதில் எத்தனைமுறை கேட்டேன் எனக் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. ஒருகாலம்வரை பாடலாசிரியர்கள் கட்சி அரசியல் சார்ந்தே இயங்கியிருக்கின்றனர். சுயமரியாதை காலத்தில் கவிதைகளில் பாரதிதாசனும் திரைப்பாடல்களில் உடுமலை நாராயணகவியும் எழுதிக்காட்டியதன் அடுத்த பாய்ச்சலை நா. காமராசன் தொடர்ந்திருக்கிறார். கருத்துகளுக்கே முக்கியத்துவம் என்றிருந்த நிலையை மாற்றி, அழகியல் பிரயோகங்களும் முக்கியமென்று அறிவித்த அவர், “என் வாழும்காலத்திற்குப் பின்னால் எனது சுவாசத்தைப்போல எனது பாடல்கள் காற்றோடு காற்றாக மிதந்துகொண்டிருக்கும். யுகயுகங்களாக அந்தக் குரல் பவனிவரும்” என்றிருக்கிறார். திராவிட ஆட்சிக் காலத்தில் திரைப்பாடல்களை எழுதிய போதிலும், தனக்கு முன்னால் எழுதிய பாரதிதாசனின் பாதிப்பையோ உடுமலை நாராயண கவியின் பாதிப்பையோ கொள்ளாமல் திரைப்பாடலை அணுகியிருக்கிறார்.

நவீன இலக்கியத்தின் அவ்வப்போதைய ஆக்கங்களைத் தவறாமல் வாசித்துவந்த அவரை, தொண்ணூறுகளின் இறுதியில் சந்தித்திருக்கிறேன். உடல் சுகவீனத்துடன் இருந்தபோதும், இலக்கிய உரையாடலில் அவர் காட்டிய உற்சாகத்திற்கு அளவே இல்லை. அதன்பின் பல்வேறு விழாக்களிலும் கவியரங்க மேடைகளிலும் அவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எழுபதுகளில் திரைப்பாடல் எழுதிய கவிஞர்களில் அவர் ஒருவரே புதுக்கவிதைகளை ஆதரித்தவர். அவருக்கு முன்பே திரைப்பாடல் எழுத வந்த புலமைப்பித்தனும் முத்துலிங்கமும் இன்றுவரை புதுக்கவிதைப் பக்கம் திரும்பவில்லை. அவ்வளவு ஏன்? கண்ணதாசனுக்கே புதுக்கவிதைகள் மேல் நல்ல அபிப்ராயம் இருந்ததாகச் சொல்லமுடியாது.

ஓசைக்கு முக்கியத்துவம் தரும் விருத்தங்களையே கண்ணதாசன் அதிகமும் விரும்பியிருக்கிறார். திரைப்பாடல் எழுதவந்த முதல் புதுக்கவிதைக்காரர் நா. காமராசன் என்பதால், அவரிலிருந்தே ஏனைய பாடலாசிரியர்களை அணுகவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ” என்று புலமைப்பித்தன் புதுக்கவிதை சாயலில் திரைப்பாடலை எழுதியிருந்தாலும், நா. காமராசனே புதுக்கவிதையைத் திரையில் புகுத்திய முதல் கர்த்தா. வசனத்தில் புதுக்கவிதைகளின் சாயலைக் கொண்டுவந்தவர்களாக இளங்கோவனையும் சுரதாவையும் கருதலாம். அக்காலத்தில் திராவிட இயக்கப் பேச்சாளர்கள், மேடையில் பேசிய அடுக்குத்தமிழ்ச் சொற்றொடர்களே பிற்காலத்தில் புதுக்கவிதைகளாக வெளிவரத் தொடங்கின என்பது வேறு விஷயம்.

“கடலின் அலை இரைச்சலை நான் அடிக்கடி குரைக்கிறேன், காரணம் நான் புயலின் வேட்டை நாய்” என்று ஒரு கவிதையில் நா. காமராசன் எழுதியிருக்கிறார். இந்த மனமே அவருடைய திரைப்பாடலிலும் பிரதிபலித்திருக்கிறது. இசையமைப்பாளர்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்பதில் தயக்கம் காட்டிய அவர், அத்துறையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்தவரல்லர். கதையையும் சூழலையும் உள்வாங்கிக்கொண்டு எழுதினாலும், அதற்குமேலே ஒரு கவிஞனாக அவர் செய்ய எண்ணியதைச் சமரசமில்லாமல் செய்திருக்கிறார். திரைப்பாடலுக்குப் புது இரத்தம் பாய்ச்சிய அவரைத் தொடர்ந்துதான் இன்றைய பாடலாசிரியர்கள் பயணிப்பதாக எனக்குப்படுகிறது. கண்ணதாசனின் திரைப்பாடல்களை எளிமைக்கு உதாரணமாகச் சொல்கிறவர்கள், நா. காமராசனின் பாடல்களை அழகியலுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். கலை இலக்கிய அழகியலைத் திராவிட இயக்கக் கருத்தியல் எப்படிப் பார்த்தது என்பதை வைத்துத்தான் நா. காமராசனின் திரைப்பாடல் வெற்றியைக் கணிக்க முடியும்.

இசைக்குறிப்புகளை எழுதப் பழகியதாலேயே ஒருவர் இசையமைப்பாளராக ஆகிவிட முடியாது என்பதற்கு ஒப்பானதே தமிழைப் பயின்றாலே ஒருவர் பாடலாசிரியராகிவிட முடியும் என்பதும். குறிப்பாக, தமிழ்ச் சூழலில் ஒரு பாடலாசிரியன் சமூக அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயமிருக்கிறது. “கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு” என்று எழுதுவது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அதற்கு பின்னே ஒரு மாபெரும் இயக்கத்தின் தத்துவம் இருக்கிறது என்பதை எத்தனைபேர் அறிவர்? கதை, சூழல், எதார்த்தம் ஆகியவற்றைத் தாண்டியும் ஒரு பாடலாசிரியன் கவனத்தில் கொள்ளவேண்டியதாக அரசியல் இருக்கிறது. எந்த மண்ணுக்கு எந்த மக்களுக்கு எழுதுகிறோம் என்னும் தெளிவில்லாமல் பாடல் புனைய வந்தவர்கள் காலகதியில் காணாமல் போயிருக்கின்றனர். திரைத்துறையின் வெற்றியிலிருந்தே திராவிட இயக்கம் கிளைத்திருக்கிறது. அண்ணாவும் கலைஞரும் இன்னபிற திராவிட இயக்க எழுத்தாளர்களும் திராவிடக் கொள்கைகளைத் திரையில் எழுதிக்காட்டி வெகுமக்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றனர்.

சாதி ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு, மூடநம்பிக்கை வெறுப்பு, சமூகநீதி என்று இயங்கிய திராவிட இயக்கத்தின் பின்புலத்தைத் தவிர்த்துவிட்டு சினிமாவையோ கலை இலக்கிய வளர்ச்சியையோ கணக்கிட முடியாது. எம்.ஜி.ஆர் மீது பற்றுகொண்டு அ.தி.மு.க.வில் இணைந்த நா.காமராசன், அவருடைய மறைவை அடுத்து, மீண்டும் தி.மு.க.விற்கு வந்திருக்கிறார். “கோட்டான்கள் கூட்டத்தில் குயில் பாட்டு எடுபடுமா? கூப்பிட்டுக்கொண்டேன் என் தோட்டத்திற்கே” என்று கலைஞரும் அரவணைத்திருக்கிறார். ஒரு பொங்கல் விழாக் கவியரங்கில் “கழித்தல்” என்னும் தலைப்பில் கவிதை வாசித்த நா. காமராசன் தலைமை ஏற்றிருந்த கலைஞரைப் பார்த்து “நீ என்னைக் கழித்தால் நான் உன்னை கிழிப்பேன்” என்று மிரட்டியிருக்கிறார். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. “கை கொடுக்கும் கை” திரைப்படத்தில் அவரெழுதிய “கண்ணுக்குள்ளே யாரோ / நெஞ்சமெல்லாம் நானோ” என்ற பாடலையும், “காதல் பரிசு” திரைப்படத்தில் வெளிவந்த “கானலுக்குள் மீன் பிடித்தேன்” பாடலையும் அவருடைய மிகச் சிறந்த பாடல்களாக நிறுவமுடியும். கண்ணிழந்த பெண்ணின் உணர்வையும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்ணின் தவிப்பையும் அவ்விரு பாடல்களிலும் அவர் சிந்தித்திருக்கிறார்.

அதிலும், கானலுக்குள் மீன் பிடித்தேன், காகிதப்பூ தேனெடுத்தேன் என்கிற காதல்பரிசு திரைப்பாடலை தவிர்க்கவே முடியாது. “காகிதப்பூ தேன்” என்ற வார்த்தைக் கட்டுமானத்தை விவரித்து ஒருநாள் முழுக்கப் பேசலாம். புதுக்கவிதைகளை எழுதி அதில் அடையாளமும் அங்கீகாரமும் பெற்ற நா. காமராசன், தம்மை வானம்பாடிக் கவிஞர்கள் வரிசையில் சேர்ப்பதை ஏற்க மறுத்திருக்கிறார். “மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் தனிச் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கௌரவத்தோடு தம்மை முன்நிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்று கொண்டார்” என்று கவிஞர் மகுடேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையும் அதுவே.

தம்மை முன்நிறுத்த விரும்பாத நா. காமராசன், தம்முடைய பாடல்களால் தவிர்க்கமுடியாத இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் பின்னணியில் இருந்தே அவருடைய கவிதைகளையும் திரைப்பாடல்களையும் பார்க்கவேண்டும். ஆயிரம் வண்ணங்களில் அவர் வெளிப்பட்டாலும், அவருடைய பூர்வீக வண்ணம் கருப்பே என்பதில் சந்தேகமில்லை. வேர்க்கால்களின் வீரியமில்லாமல் கிளைகளில் பூக்கள் பூப்பதில்லை என்பதற்கு ஒப்பவே அவரை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. புராணக் கதைகளின் புகலிடமாக இருந்த தமிழ் சினிமாவை, பகுத்தறிவு நோக்கித் திருப்பியதில் திராவிட இயக்கங்களுக்கு நிகர் எதுவுமில்லை. வசனங்களில் பாடல்களில் அவ்வியக்கப் படைப்பாளர்கள் கொண்டுவந்து சேர்ந்த அறிவுப்புரட்சியை மறுப்பதற்கில்லை. மருதநாட்டு இளவரசியில், “அப்போது அக்கினியாஸ்திரத்தை வீசிப்பார்த்தாய், இப்போது வர்ணாஸ்திரத்தை வீசிப்பார்க்கிறாய். மோகனாஸ்திரத்தை வீசினாலன்றித் தப்பிக்க முடியாது” என்று கலைஞர் எழுதியிருக்கிறார்.

அக்கினாஸ்திரம், வர்ணாஸ்திரம், மோகனாஸ்திரம் என்பவை வெறும் வார்த்தை அலங்காரங்கள் இல்லை. தெய்வத்தின் பேராலும் சாதியின் பேராலும் ஒதுக்கப்பட்ட சமூகம், காதலால் கடைத்தேறும் என்பதைச் சொல்வதே அது. இன்றும் சாதியை முன்வைத்துப் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. கதாநாயகனே சொந்தச் சாதி அபிமானமுடையவனாகக் காட்டப்படுகிறான். ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தி, சாதிக் குறியீடுகளைப் பிரதானப்படுத்தித் திரைப்படங்கள் வருகின்றன. சுயமரியாதைக் காலத்தின் வெற்றியாகக் கிடைத்த திராவிட ஆட்சிக்காலம், இந்தக் கேடுகளை ஏன் தடுக்கவில்லை என்பது கேள்விக்குறி. அதிகாரம் இல்லாதபோது அதிர்ந்து பேசிய அவர்கள், அதிகாரம் கைக்கு வந்த பிறகு சாதியை, மூடநம்பிக்கையை முற்றாகத் தடுக்கமுடியாமல் போனது எதனால்? 1965 குடியரசு நாளை இந்தித்திணிப்புக்கு எதிரான நாளாக அறிவித்த அண்ணா, அந்நாளில் வீட்டுக் கூரையில் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொண்டர்களை வேண்டிக்கொண்டார்.

அதன்படி, தன் வீட்டில் கறுப்புக்கொடியேற்றியிருக்கிறார் திரைநடிகர் எஸ். எஸ். இராஜேந்திரன். அவருடைய எதிர்ப்பைப் பொறுத்துக்கொள்ளாத காங்கிரஸ்காரர்கள் அவரைத் தாக்க முனைந்திருக்கிறார்கள். இடையில் புகுந்த காவல்துறை அதிகாரி, காங்கிரஸ்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார். உடனே, அந்த அதிகாரி எஸ்.எஸ்.ஆர். துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகப் பொய்வழக்கு போட்டிருக்கிறார். இந்த சம்பவத்தையே காட்சியாக மாற்றி “அவன் பித்தனா” என்னும் திரைப்படத்தில் வைத்திருக்கின்றனர். “துப்பாக்கி காட்டி மிரட்டினேனென்று கேஸ் போடுவியா? போட்டுக்கோ” என்று எஸ். எஸ். ஆர். அவ்வசனத்தைத் திரையில் பேசும்போது, திரையரங்கம் அதிர்ந்திருக்கிறது. திரைக்கு வெளியே நிகழ்ந்த அரசியல் சம்பவங்களைத் திரைக்குள் கொண்டுவந்தவர்கள், வெளியே பேசிய அரசியலை ஏன் தங்கள் கட்சிகளுக்குள் கொண்டு செல்லத் தவறினார்களோ? அன்றைக்கு உச்ச நட்சத்திரங்களாக இருந்தவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தங்களை, திராவிட இயக்க அடையாளத்தில் பொருத்திக்கொள்ள விரும்பியிருக்கின்றனர். ஆனால், அதற்குப் பின்வந்த ரஜினியும் கமலும் அவ்வாறு தங்களைக் காட்டிக்கொள்ளவில்லை.

ஒரு பெரும் இயக்கத்தின் சார்பிலிருந்து சிந்திப்பது வேறு. அந்தச் சார்பையே தன் எழுத்தின் கொள்கையாகக் கொள்வது வேறு. “சித்திரத்துத் தேரேவா” என்று ஆரம்பிக்கும் “நாடோடி பாட்டுக்காரன்” திரைப்படத்தில், “அலைந்தாடும் ஆசை அரங்கேறும் / நிலையாக காதல் வழிந்தோடும்” என்று நா. காமராசன் எழுதியிருக்கிறார். திராவிட இயக்கப் பிரதிநிதியாகத் தம்மை அறிவித்துக்கொண்ட அவர், அதற்கான சாட்சியங்களாகத் தம் திரைப்பாடல்களை ஆக்கவில்லை. முடிந்தவரை அக்கொள்கைகளை எழுதியிருக்கிறார். ஆனால், திராவிட இயக்கக் கவியாகக் கருதியே அவருக்குப் “பாரதிதாசன் விருது” வழங்கப்பட்டிருக்கிறது.  ஆக்கத்திலும் எண்ணத்திலும் அவர் வெளிப்படுத்த முயன்றது அதுவா என்பது ஆய்வுக்குரியது. “கறுப்பு மலர்கள்” கவிதைநூலுக்கு கண்ணதாசன் எழுதிய முன்னுரையில், “வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல் கேரள மாதர்போல் முழுக்கவும் திறந்துவிடாமல் தமிழகப் பெண்கள்போல் ஒதுங்கியும் ஒதுங்காமலும் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம். தலைப்புகள் தமிழுக்குப் புதியவை. கவிதைக்கான கருவும் புதுமையானதே. மயக்கவைக்கும் சொற்சித்திரங்கள் இவை” என்று பாராட்டியிருக்கிறார். ஒதுங்கியும் ஒதுங்காமலும் என்கிற சொற்கள் நா. காமராசனின் கவிதைகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் திரைப்பாடல்களுக்கும் பொருந்தக்கூடியதே.

“மிகச் சின்ன வயதிலேயே ஒரு ஞானியைப் போல் எழுதியவன் நான்” என்று அவரே அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாலும், அதற்கான தகுதிகளை அவருடைய கவிதைகளும் திரைப்பாடல்களும் கொண்டிருக்கின்றன. “இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளுக்குப் புதுரத்தம் பாய்ச்சிய பிரும்மா” என்று நா. காமராசனைப் பற்றி கவிஞர் சிற்பி குறிப்பிட்டிருக்கிறார். “வாள் முளைத்த மண், வசந்தத்தின் பச்சை முத்திரை, பனித்துளிகளின் படுக்கை அறை, கால்நடைகளின் தின்பண்டம், உடல் மெலிந்த தாவரம்” என்று சிறிய புல்லுக்குக்கூட அழகிய படிமங்களை சிந்தித்த அவர், வார்த்தைகளின் கஜானாவாக வாழ்ந்திருக்கிறார். அள்ளி அள்ளிச் செலவழித்தாலும் தீரவே தீராத அவருடைய தமிழ், காகிதப்பூக்களையும் தேன் சுரக்க வைப்பது.
*


 நன்றி : யுகபாரதி
*
தொடர்புடைய இரு பதிவுகள் :


’நேற்றைய காற்று’ பற்றி எழுத்தாளர் பாமரனின் பார்வை (’அந்திமழை’ இதழில் வெளியானது)