Wednesday, November 29, 2017

'இரட்டை இலை' கொண்டாட்டம் - ‘துக்ளக்’ சத்யா

'இரட்டை இலை' கொண்டாட்டம் இப்படியும் நடக்கலாம்  - ‘துக்ளக்’ சத்யா
----------------------------------------------

( இரட்டை இலைச் சின்னமும் கட்சியும் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிக்கே உரியது என்ற தேர்தல் கமிஷன் தீர்ப்பை, அ.தி.மு.க.வினர் அளவாகக் கொண்டாடுவது நல்லது. தலைவர்கள் இப்போது உள்ள மனநிலையில், கொண்டாட்டம் இப்படி முடிந்து விடலாம்.)

எடப்பாடி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் முடிஞ்ச பிறகு என்ன செய்யப் போறோம்னு ஒரே கவலையா இருந்தது. இனிமே கவலையில்லை. ஆட்சி முடியற வரைக்கும், இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதைக் கொண்டாடலாம். அவ்வளவு குட்டிக் கதைகளுக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலை.

மதுசூதனன்:
இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதிலே உங்களுக்கு என்ன வெற்றி? சசிகலாவுக்கு எதிரா நான் போட்ட வழக்குலே, எனக்கு ஆதரவா தேர்தல் கமிஷன் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அப்ப நீங்க சசிகலா அணியிலே இருந்தவர்தானே?

ஜெயக்குமார்:
ரெண்டு அணிகளும் இணைஞ்சுட்ட பிறகு, நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசக்கூடாது. எங்க அணியிலே நீங்க இருந்ததாலே உங்களுக்கும் சேர்த்து வெற்றி கிடைச்சிருக்குது. நீங்க நாங்கன்னு பேசறதை நிறுத்திட்டு, ஆர்.கே. நகர்லே உங்க வேட்பாளரை நிறுத்தறதா, எங்க வேட்பாளரை நிறுத்தறதான்னு பேசலாம்.

ஓ.பி.எஸ்:
சண்டை வேண்டாம். இரட்டை இலை மீட்பு வெற்றி விழாவிலே எல்லாரும் கலந்துக்கலாம். அரசாங்க வேலை எதுவாயிருந்தாலும் கவர்னர் பாத்துக்குவாரு. ஏதாவது பிரச்சனை வந்தா பிரதமர் பாத்துக்குவாரு. நாம ஏன் மோதிக்கணும்? மறுபடியும் பிரிஞ்சு, பேச்சு வார்த்தை நடத்தி, துணை முதல்வர் பதவியும் போய் நான் சாதா மந்திரி ஆகணுமா?

மைத்ரேயன்:
அணிகள் இணைஞ்சும் மனங்கள் இணையலை. அந்த இணைப்புக்கும் குழுக்கள் அமைச்சு பேசணும்.

செல்லூர்:
மனங்கள் இணைகிறது எப்படி? ஃபெவிகாலைத் தடவிகிட்டு கட்டிப் பிடிச்சா மனங்கள் ஒட்டிக்குமா? 

எடப்பாடி:
பொறுப்பை என்கிட்டே விட்டுருங்க. நான் படிப்படியா வளர்ந்தவன். சின்னம்மா கொஞ்சம் வளர்த்தாங்க, தினகரனாலே கொஞ்சம் வளர்ந்தேன். கூவத்தூர்லே கொஞ்சம் வளர்ந்தேன். கடைசியா ஓ.பி.எஸ்.ஸாலே கொஞ்சம் வளர்ந்து, மொத்தத்திலே எல்லோரையும் விட அதிகமா வளர்ந்துட்டேன். எனக்குத் தெரியாதா, கட்சியைத் எப்படி வளர்க்கணும்னு?

கே.பி.முனுசாமி:
முதல்வராயிட்டோம்னு ரொம்பத் துள்ளக் கூடாது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்குதுன்னு தேர்தல் கமிஷனே சொல்லிடுச்சு. இதை வெச்சுட்டு ஆட்சியை ஓட்டணும்னா எங்க தயவு இல்லாம முடியாது. நாங்களும் வெளியே போயிட்டா இரட்டை இலை கூட உங்களைக் காப்பாத்தாது.

ஜெயக்குமார்:
என்ன இரட்டை இலையை அவ்வளவு அலட்சியமாப் பேசறீங்க? அம்மாவும் இரட்டை இலையும் பர்கூர்லே தோற்றிருக்கலாம். 1996-லே இரட்டை இலை கேவலமா மண்ணைக் கவ்வியிருக்கலாம். இரட்டை இலை இருந்தும் அப்பப்ப ஆட்சியைப் பறி கொடுத்திருக்கலாம். மற்ற எல்லா சமயங்களிலும் இரட்டை இலைதானே நம்மை ஜெயிக்க வெச்சது?

தங்கமணி:
ஆமா. ஊழல், அராஜகம் ரெண்டும் சேரும்போதுதான் இரட்டை இலைக்கு பின்னடைவு வரும். வெறும் ஊழல் மட்டும் இருந்தா இரட்டை இலை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாம தாராளமா சந்தோஷப்படலாம்.

மதுசூதனன்:
நாங்க கஷ்டப்படும் போது உங்களை சந்தோசப்பட விட்டுருவோமா? எங்களை விரோதிச்சுக்கிட்டு நீங்க ஆட்சி நடத்திட முடியுமா?

ராஜேந்திர பாலாஜி:
ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லேன்னா கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மோடி பார்த்துக்குவார். தினகரன் அப்பீல் பண்ணாலும் பிரச்னை இல்லை. மேலே இருக்கிறவர் பாத்துக்குவார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்லே பா.ஜ.க. நின்னாக் கூட அ.தி.மு.க.வை மோடி ஜெயிக்க வெச்சுடுவாரு. நாம ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.

மைத்ரேயன்:
மோடியை எனக்கு நல்லாத் தெரியும். பெருந்தன்மை காரணமா பல விஷயங்களை நான் அவர் கிட்டே சொல்லலை. அதுக்காக எப்பவும் பெருந்தன்மையா இருந்துடுவேன்னு நினைக்காதீங்க. பேசினப்படி செட்டில் பண்ணலைன்னா இப்பவே டெல்லிக்குப் போறேன்.

எடப்பாடி:
எனக்கு மட்டும் பிரதமரைத் தெரியாதா? நாளைக்கே, தமிழக திட்டங்களுக்காக பிரமரை சந்திக்கப் போறேன்னு அறிவிச்சுட்டு, இரட்டை இலை கிடைச்சதுக்காக அவருக்கு நன்றி தெரிவிச்சுடறேன். அவர் ஏமாந்த சமயம் பார்த்து கால்லே விழுந்துடறேன்.

ஓ.பி.எஸ்:
நீங்க டெல்லிக்குப் போனா நானும் டெல்லிக்குப் போகணும். நம்முடைய முதல் எதிரி தினகரன்தான். நாம இல்லாத நேரத்திலே, அம்மா சாந்தி அடைய, ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு அவர் தானம் கொடுத்துட்டா என்ன பண்றது?

செல்லூர்:
அவருக்கு முன்னாலே நாம அ.தி.மு.க. வுக்கு ஆர்.கே. நகர்லே திதி கொடுத்துடலாமே.

ஓ.பி.எஸ்:
அபசகுனமாப் பேசாதீங்க.  அ.தி.மு.க.வுக்கு இப்ப திதி கொடுக்கக் கூடாது. அம்மாவுக்குத்தான் கொடுக்கணும்.

ஜெயக்குமார்:
அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. அம்மா நிரந்தர முதல்வரா இருந்தாங்க. எடப்பாடியாலே அவ்வளவு முடியாட்டாலும் நூறு வருஷமாவது அம்மா ஆட்சியை நடத்த முடியும். அதனாலே, பிரச்னை பண்ணாம தி.மு.க.வையும் தினகரனையும் மட்டும் திட்டுங்க. அதான் நம்ம கொள்கை.

கே.பி. முனுசாமி:
அம்மா மரணம் பற்றி விசாரணை நடக்கிறதை மறந்துட்டுப் பேசறீங்க. நாங்க மனசு வச்சா இப்ப கூட அம்மா மரணத்திலே உங்களுக்கெல்லாம் தொடர்பு இருக்குதுன்னு சந்தேகப்பட முடியும்.

சி.வி.சண்முகம்:
அப்ப முதல்வரா இருந்ததே ஓ.பி.எஸ்.தான். அவருக்குதான் எல்லா உண்மைகளும் தெரியும்னு நாங்களும் விசாரணைக் கமிஷன்லே சொல்ல முடியும்.

மதுசூதனன்:
கூவத்தூர்லே என்ன நடந்ததுன்னு வெளியே சொன்னா, உங்க மானம் கப்பலேறிடும். கூவத்தூர் பாக்கியும் செட்டில் ஆகலை. இணைப்பு பாக்கியும் செட்டில் ஆகலை. காலத்துக்கும் மந்திரிகள் கிட்டே பிச்சை எடுக்கணுமா நாங்க? அம்மா மரணம் தொடர்பா ஸி.பி.ஐ. விசாரணை வெச்சீங்களாய்யா?

கே.பி.முனுசாமி:
சசிகலாவையும் நீக்க மாட்டீங்க. எங்க கஷ்டத்தையும் கவனிக்க மாட்டீங்கன்னா என்னய்யா அர்த்தம்?

தம்பிதுரை:
பேசும் போதே ஏன் கையை ஓங்கறீங்க? அ.தி.மு.க.விலே எந்தப் பிளவும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையா இருக்கோம். அதை ஞாபகம் வெச்சுக்குங்க.

கே.பி.முனுசாமி:
ஊழல் ஆட்சி நடக்கிறதுன்னு அண்ணன் ஓ.பி.எஸ். சொன்னதை மறந்துட்டீங்களா? போனாப் போகுதுன்னு 'எடப்பாடி நல்லாட்சி நடத்துகிறார்'ன்னு வாய் கூசாமா அவர் புளுகினதுக்கு நீங்க காட்டற நன்றியா இது?

சி.வி.சண்முகம்:
அம்மா ஆட்சிக்கு எதிரா சட்டசபையிலே வாக்களித்த துரோகிகளை கட்சியிலே சேர்த்துகிட்டது எங்க தப்பு. நீங்க வெளியே போனாக் கூட கவலையில்லை. மோடி இருக்கார். சட்டசபையைக் கூட்டாமலேயே 2021 வரைக்கும் காலம் தள்ளிவிடுவோம். பார்க்கிறீங்களா?

மதுசூதனன்:
நாங்க மறுபடியும் பிரிஞ்சு, ஆர்.கே. நகர்லே தனியா போட்டியிட்டு ஜெயிக்க முடியும். பார்க்கிறீங்களா?

ஜெயகுமார்:
அறிவோட பேசுங்க. எங்க கூட சேர்ந்த பிறகு உங்களுக்கு என்ன மரியாதை இருக்குது? நீங்க எப்படி ஜெயிக்க முடியும்?

மைத்ரேயன்:
ஜெயா டி.வி.யிலே கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. மனசுலே இருக்கிறதையெல்லாம் பேட்டியிலே சொல்லிட முடியும். மனங்கள் இணையறதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யற வழியைப் பாருங்க. இல்லேன்னா, இரட்டை இலை வெற்றி விழாவை நாங்க தனியாக் கொண்டாடிக்கிறோம்.

எடப்பாடி:
ஏன் இப்படி கோபப்படறீங்க? அம்மா ஆட்சி தொடர்ந்தா, கோடி கோடியா நன்மை. அந்த வாய்ப்பு இன்னும் மூன்றரை வருஷம்தான் கிடைக்கும். அதுவரைக்கும் ஒற்றுமையா இருக்கக் கூடாதா?

ஓ.பி.எஸ்:
நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே, ஆர்.கே. நகர் தேர்தல் வரைக்கும் நாம இரட்டைக் குழல் துப்பாக்கியா செயல்படலாம். அதுகுள்ளே அதிருப்தியாளர்களுக்கு உரிய மரியாதை செய்யலைன்னா, அம்மா சமாதியிலே தியானம் பண்ணிட்டு, தனித் துப்பாக்கி தூக்க வேண்டியிருக்கும்.

*

நன்றி: சத்யா / துக்ளக் (06.12.2017)
தட்டச்சு செய்த நண்பர் தாஜூக்கும் நன்றி

No comments:

Post a Comment