Wednesday, November 1, 2017

'திருட்டுப்பொருளும் நேரடி சாட்சியும்' - ஆசிப் விமர்சனம்!

ச்சே, இது தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்டதல்ல, 'தொண்டி முதலும் த்ருக்சாட்சியும்' மலையாள சினிமா விமர்சனம் . இங்கே இதைப் பகிர்வதற்கு அனுமதி வேண்டியதற்கு 'அல்லாஹ்வே!! போட்டுட்டேன்ல பக்கின்னு சொல்றத விட்டுட்டு.. இது என்ன புதுசா அனுமதி?? உங்களுக்கு அஸ்மா மச்சிதான் சரி :-) ' என்றார் அட்டகாசமான விமர்சனம் எழுதிய தம்பி ஆசிப் மீரான்!
***


தமிழ் சினிமா காலம்‌காலமாக ஒரு டப்பா நியாயத்தைக் கற்பித்திருக்கிறது. நாயகன் திருடனாக இருந்தால் அவன்‌ திருடனாக மாறியதற்குப் பின்புலம் அமைத்து சூழலால் அவன்‌ அப்படி ஆகிவிட்டான்‌ என்பது போல ஒரு காட்சியில் அதனை நியாயப்படுத்தித் தொலைப்பார்கள். இது போன்ற எண்ணத்தோடு படம் பார்க்கிற கோஷ்டியில் நீங்களும் ஒருவரென்றால் இப்போதே தப்பித்து விடுங்கள்.. இது உங்களுக்கான சினிமாவே அல்ல

ஒரு சின்னத் திருட்டுச் சம்பவம். அதைத்‌ தொடர்ந்து நிகழும் தொடர் சம்பவங்கள். இதுதான் படத்தின் ஒற்றை வரிக்கதை. இந்தக் கதையை எப்படி சுவாரஸ்யமிக்க திரைக்கதையாக மாற்ற முடியுமென்பதில்தான் ஓர் எழுத்தாளரின் திறமை வெளிப்பட முடியும். அதுவே திரைக் காட்சிகளாக அதன் இயல்பு நிலை மாறாமல் விரியும்போது மனதில் நிலைத்துவிடும் படமாக அது நிலைத்து விடுகிறது

பேருந்தில் சங்கிலியைத் திருடி விழுங்கி விடுகிறான் அவன். கடைசி நிமிடத்தில் கூக்குரலெழுப்பி திருடனை அடையாளம்‌காட்டி பேருந்து காவல் நிலையத்துக்கு விடப்படுகிறது. அங்கே நடக்கும் விசாரணைதான் மீதிக்கதை

ஆலப்புழையின் காயலும் நகரப் பாய்ச்சல்களுக்கு ம் காஸர்கோட்டின் வறண்ட தன்மைக்குமான பரந்த நிலப்பரப்பிற்குள் படத்தின் மையச்சரடு

ஒரு விசாரணை எப்படி எவ்வாறு தன்னியல்பில் மாறுகிறது, அது யாரைப்‌ பாதிக்கிறது, அதிகாரத்திற்கு முன் சாதாரணர்களின்‌ விதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, அதிகாரமே தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எப்படி அல்லாடுகிறது என்று ஏகப்பட்ட விசயங்கள்‌ படம் முழுதும் பரவிக் கிடக்கின்றன ஒரு மெல்லிய கண்ணுக்குப் புலப்படாத நூலிழை போல.

தன்னுடைய சங்கிலி திருடப்பட்டதிலிருந்து காவல் துறையிடம் அந்தச் சங்கிலியைப்‌ பெறுவதற்கான போராட்டம் ஒரு புறம்.. சாதாரணமாக அதை அலட்சியம்‌ செய்யும் காவல் துறையின் அலட்சியம் இன்னொரு புறம், திருடனிடமிருந்து சங்கிலியைப் பெற காவல்துறை நடத்தும் போராட்டம் ஒரு பக்கம், அந்தப் போராட்டத்திற்கிடையில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள காவல் துறையே படும்பாடு மறுபக்கம் என்று ஓர் எளிய சம்பவம் தேர்ந்த சித்திரக்காரன் வெள்ளைத்தாளில் படம் வரைகையில் உருவாகும் வண்ணக்கலவை போல மெருகேறுகிறது.

நியாயங்கள் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் அதைச் சூழலும் சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களது இருப்பை நிலைநிறுத்த அன்றாடம் சமரசங்களைச் செய்து கொள்கிறோம். அந்த சமரசங்களில் நமக்கான நியாயங்களும்‌ சமரசத்துக்குள்ளாக்கப்படுகின்றன. அதுபற்றிய பிரக்ஞை சம்பந்தப்பட்டவர்களுக்கு இருப்பதும்‌இல்லாமல் போவதும்‌கூட சந்தர்ப்ப சூழல்களால் மட்டுமே அமைகின்றன.

இரண்டு பவுன் சங்கிலி என்பது காதலித்து மணந்து கொண்டு ஊரை விட்டு வெகு தூரம் விலகி வந்து தனியாக வேளாண்மை செய்ய முயலும் இளம்‌ தம்பதியர்களுக்கு பெரும் சொத்து. காவல் துறைக்கோ, அதைத் திருடியவனுக்கோ இது ஓர் அன்றாட நிகழ்வுதான். இப்படியொரு சூழலுக்குள் மிக எளிய மனிதர்கள் தள்ளப்படும்போது காவல்துறை அவர்களை எப்படியெல்லாம் தங்கள் வசதிக்கும் இருப்பிற்குமேற்றவாறு மாற்றிக் கொள்கிறதென்பதை இத்தனை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்ல முடிந்திருப்பதுதான் இந்தப் படத்தை சாதாரணப் படங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

ஷ்யாம் புஷ்கரனின் படம் முழுக்க இழையோடும் எளிய நகைச்சுவை வசனங்கள். சாதாரண திருட்டு வழக்கை வழிப்பறி கொள்ளை வழக்காக ஜோடிப்பதற்காகக் காவல்துறை முனையும் அந்தக் காட்சியின் இயல்பில் தொக்கி நிற்கும் அவல நகைச்சுவை ஓர் அசாத்திய உதாரணம்.

தனக்குக் கிடைத்த தேசிய விருது வெறும் தற்செயல் நிகழ்வல்ல;நல்ல கதாபாத்திரங்களை அனாயாசயமாகச் செய்யும் ஆற்றல் தனக்குண்டு என்பதை சுராஜ் வெஞ்ஞாரம்மூடு நிரூபித்திருக்கிறார். நாயகியாக வரும் நிமிஷா சஜயன் அளவான முகபாவங்களில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். ஃபஹதைப் பற்றிப் பேசவே தேவையில்லை. ஒரு சங்கிலித் திருடன் கதாபாத்திரம். படம் முழுக்க சுராஜ் வந்தாலும் கூட முக பாவனைகளில், உடல் மொழியில், வசனங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஃபஹத் ஏன் நேசிக்கப்படும் நடிகனாக இருக்கிறான் என்பதை உணர்த்தி விடுகிறார். குறிப்பாக, உச்சக் காட்சியில் நாயகியோடு உரையாடும் காட்சி..அரக்கன்யா அவன். இப்படியொரு பாத்திரத்தில் ஃபஹதை நடிக்க அழைத்த இயக்குனரையா அல்லது அத்தனை‌முக்கியத்துவமில்லையெனினும் துணிந்து இதில் நடித்த ஃபஹதையா...யாரைப் பாராட்டுவது? மலையாள சினிமாவைப் பார்த்தால் பொறாமை வர இது போன்ற முயற்சிகளே காரணமும்‌கூட.

துணை காவல்‌ஆய்வாளராக வரும் அலன்சியர் வாழ்ந்திருக்கிறார். சூழல்களுக்கேற்ற மாறும் அவரது கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக உள்வாங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் மனிதன். அவரது தொப்பை மேலும் மெருகூட்டியிருக்கிறது இந்தக் கதாபாத்திரத்தை.

ஆலப்புழையின் நகர்க்கோலங்களையும் காயல் தீரங்களையும் காஸர்கோட்டின் வறண்ட நிலப்பரப்பையும் அழகுற உள்வாங்கிய அதே சிரத்தையோடு காவல் நிலையத்தின் உட்புற வெளிச்ச அசைவுகளையும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி

பிஜிபாலின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி படத்தின் தேவையை மனதிற்கொண்டு அந்த அளவோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன

சஜீவ் பாழூரின் திரைக்கதை சம்பவங்களை அடுக்கடுக்காக நெய்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு கதாபாத்திர உருவாக்கத்திற்காகவும் அவர் மெனக்கெட்டிருப்பது சிறப்பான நடிகர்கள் தேர்வின் மூலம் இன்னும் சிறப்பாக்கப்பட்டிருக்கிறது.. ஊரில் திருவிழா முடியும்வரை குடித்து அழிச்சாட்டியம் செய்யும் கணவனை காவல் நிலையத்தில் வைத்திருக்கச் சொன்ன மனைவிக்காக சிறையிலடைக்கப்படுபவன் காவல்‌நிலையத்தில் நடப்பவைகளின் சாட்சியமாக மாறுவது போன்ற யதார்த்தமான கதைமாந்தர்கள் படத்தின் மற்றொரு சிறப்பு.

மஹேஷின்டெ ப்ரதிகாரத்தில் இடுக்கியின் பின்னணியில் கதை புனைந்த இயக்குனர் திலேஷ் போத்தன் இம்முறை தென் கேரளத்தில்‌தொடங்கி வடகேரளத்தின் கிராமத்தின் பின்னணியில் இதனை உருவாக்கியிருக்கிறார். மலையாள நவீன சினிமாவின் ரசிக்கத்தக்க ஓர் அடையாளமாக மாறியிருக்கும் இவரிடம் சினிமா என்ற காட்சி ஊடகம் பற்றிய தன்னுணர்வு நிறைந்திருப்பதை உணர முடிவது நம்பிக்கையளிக்கிறது.

படத்தின் உச்சகாட்சியை இப்படி வைக்க முடிந்த அவரது தன்னம்பிக்கை அவர் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது

நல்ல சினிமா பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இதனைப் பாருங்கள். நான்தான் நேரடியான சாட்சி.
*

நன்றி : ஆசிப் மீரான்

No comments:

Post a Comment