Tuesday, May 31, 2016

சின்ன உசிரு பெரிய உசிரு...

யுவன் சந்திரசேகரின் 'வெளியேற்றம்' நாவலில், குருவைத் தேடி அலையும் சந்தானத்திடம் , மன்னாதி சொல்லும் இந்த இடம் எனக்கு ரொம்பவும் பிடித்தது (பக் : 319-320)  . பகிர்வதைப் படிக்க விருப்பமில்லாதவர்கள் இந்தக் கூண்டுக்குள் நுழைந்துகொள்ளவும் :)

*

(நம்ப பெரியவரைப் பார்க்க) ஒரு தபா சீனாக்காரன் மாதிரி ஒர்த்தன் வந்து சேர்ந்தான். நமக்கு இந்த சீனாக்காரங்களைப் பாக்கும்போதெல்லாம் ஆச்சரியம் வந்துரும். 'நல்லா உருண்டை பிடிச்சு, மூக்கு முளி ஒதடு நெத்தி எல்லாம் நேர்த்தியாச் செதுக்கி முடிச்சப்புறம், உள்ளங்கையால மூஞ்சில சப்புனு அடிச்சுச் சப்பட்டையாக்கிப்பிட்டாரே எங்க பிரம்மா'ன்னு வேடிக்கயாத் தோணும்.

அவன் கிளம்பிப் போன பெறகு பெரியவர்கிட்டெச் சொல்லிச் சிரிச்சேன். இவரு அதெ ரசிக்கலே. அதோட என்னைக் கண்டிக்கவும் செஞ்சாரு. நாம்ப வந்து சேந்த ஆரம்பக் காலமில்லியா, அன்னாடம் இதுமாதிரி ஏதாச்சும் தப்புப் பண்றதுதான். அவரு கண்டிச்சவுடனே, மனசுக்குள்ளே 'புத்தி புத்தீ'ன்னு கன்னத்துலே போட்டுக்கிர்றதுதான்.

பெரியவர் என்ன சொல்லிக் கண்டிச்சாரு?

வைவாருன்னு நெனச்சீங்களா? கோவம்ணா இன்னதுன்னே தெரியாத பிறவியில்லையா அது? நாம்ப சொன்னதுலெ இருக்குற தப்பெ வெளக்கிச் சொல்லுவாரு. அதுவே எங்களுக்கு வலிக்கத்தானே செய்யும்? 'இத பாரு மன்னாதி, வந்த ஆளு மொதல்லெ சீனாக்காரரு கெடையாது. அவரு ஊரு கொரியா. ரெண்டாவது பாஸை ரூபம் நெறம் இதுவெல்லாம் இருக்குற கொறைபாடுகளைச் சொல்லிக் கேலியாப் பேசுறது, நெனைக்கிறதுகூட எங்களை மாதிரிப் பிரயாணத்திலே இருக்குறவங்களுக்குச் சரி கெடையாது. பாக்கப்போனா, இதெல்லாம் வேகத்தை மட்டுப்படுத்தான் செய்யும். யாருக்காவது நாஞ் சொன்ன மூணுலெயும் அவுங்களா விரும்பித் தேர்ந்தெடுக்குறதுக்கு அதிகாரம் இருக்கா?'ன்னாரு.

ஓ.

ஆனாக்கெ, பெரியவர் இதை மட்டும் சொல்லி நிறுத்திக்கிற மாட்டாரு. அன்னக்கி வரம் குடுத்த பாடம் மாதிரி இன்னொன்னும் சொல்லி முடிப்பாரு. அன்னக்கி சொன்னது இன்னும் பசுமையா ஞாபகம் இருக்கு.

ம்.

'உசிர்லெ சின்ன உசிரு பெரிய உசிருன்னு ஏதாவது இருக்கா மன்னாதீ'ன்னாரு. எனக்குச் சொரேல்ன்னுச்சு. கண்லெ தண்ணி வந்துருச்சு.

அந்தச் சீனாக்காரரு, ஸாரி, கொரியாக்காரரு இவர்ட்டெ என்ன கேட்டாரு? இவரு என்னா பதில் சொன்னாரு?

சொன்னா ஆச்சரியப்படுவீங்க...

என்று சொல்லிவிட்டு மன்னாதி சிரிக்கத் தொடங்கினார். இடையில் கொஞ்சநேரமாகச் சிரிக்காமல் இருந்த ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்கிற மாதிரி சற்று நீளமாகவே சிரித்தார். நான் மௌனமாக நந்தவனத்தைப் பார்த்தேன். அங்கிருந்து ஒரு வண்ணத்துப் பூச்சி கிளம்பி வருகிறது. நாங்கள் இருந்த அறைக்குள் ஒவ்வொரு சுவரருகிலும் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துவிட்டு வெளியேறுவதுவரை அதைப் பார்வையால பின்தொடர்ந்தேன். 'பறந்து வந்து சென்றது வெறும் பூச்சியில்லை. என்னளவு பரிமாணம் கொண்ட உயிராக்கும்' என்று எனக்குள் ஒரு வாக்கியம் உதித்தது.

..'இறப்புக்குப் பின்னாலெ என்ன நடக்குது, இங்கேர்ந்து வெளியேறி எங்கெ போறோம்'ங்குற மாதிரி கேட்டான். அதுக்கு இவரு என்ன சொன்னாருங்கிறீங்க?

சொல்லுங்க.

*
அட, நாவலை வாங்கிப் படிங்க! நன்றி : யுவன் சந்திரசேகர், உயிர்மை பதிப்பகம், சென்ஷி

No comments:

Post a Comment