Wednesday, May 4, 2016

மிஃராஜ் (விண் பயணம்) - மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி

மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் உரையிலிருந்து....
தேர்வும் தட்டச்சும் : ஹமீது ஜாஃபர்
-------------------------
அரபு மாதமான ரஜபு பிறை 27 ம் இரவு நபி (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்கள் படுத்திருக்கும்போது மிஃராஜ் (விண் பயணம்) சென்றார்கள். ஷரீஅத்தை வைத்துப் பார்க்கும்போது மிஃராஜைப் பற்றி சொல்லப்பட்டிருப்பது, நபி (சல்) அவர்கள் இறைவணக்கம் பண்ணிக்கொண்டிருக்கும்போது, இறைவணக்கத்தின் வளர்ச்சியில் வளர்ந்து முதல் வானம், இரண்டாம் வானம் சென்று இப்படி படிப்படியாக ஏழு வானங்களைக் கடந்து உயர்வு மிக்க இருப்பிடமான அர்ஷ் மு அல்லாஹ்வில் இறைவனை சந்திக்கிறார்கள்.  எப்படி என்றால், மிக நெருக்கமாக 'காபகௌஸைனி' என்கிறார்கள். 'காபகௌஸைனி' என்று சொன்னால் இரண்டு புருவங்களுக்குமுள்ள இடைவெளி எவ்வளவோ அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்; ஆனால் இரண்டறக் கலக்கவில்லை. அவன் இவர்களாக மாறவுமில்லை, இவர்கள் அவனாக மாறவுமில்லை. ஒரு இடைவெளி இருந்தது.

அப்புறம் சட்டங்கள் வர ஆரம்பித்தன என்று ஹதீஸ் இருக்கிறது. ஒவ்வொரு வானத்திற்குப் போகும்போது அங்கு ஒரு குறிப்பிட்ட நபி இருந்ததாகவும், அங்கு அவர்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடமிருந்து குறிப்பிட்ட அறிவைப் பெற்றதாகவும் சரித்திரம் சொல்கிறது. இவை எல்லாம் உவமானமாகச் சொல்லப்பட்டதுதான், உண்மையான பொருள் அதுவே அல்ல. ஏனென்று கேட்டால், ஷரீஅத்தின் சட்டம் என்னவென்றால், ஆண்டவன் என்ற வார்த்தைக்கு , கட்டுப்படாத பொருள் என்று அர்த்தம். எந்த வகையிலும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாதது எதுவோ அது இறைவன்.

நீங்கள், அல்லாஹ்வைத் தேடிக்கொண்டு ரசூல் (சல்) அவர்கள் ஏழாம் வானத்திற்குப் போனார்கள் என்று சொன்னாலும் சரி; நபியை ஏழாம் வானத்திற்கு இறைவன் அழைத்தான் என்று சொன்னாலும் சரி இரண்டுமே தவறு. அப்படியானால் ஆண்டவன் பூமியில் இல்லை, அங்கில்லை, இங்கில்லை என்றால் வேறு எங்கிருக்கிறான்? ஏழாம் வானத்தில் இருக்கிறான் என்று அர்த்தமாகிறது. அது 'குஃப்ரு'. அப்படி சொல்லவே 
கூடாது. இரண்டாவது, அங்கிருந்து ரசூல் (சல்) அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் இறைவனுக்கு இயலாமையை ஏற்படுத்திவிடுவதாகிவிடுகிறது. சந்தேகமில்லாமல் இதுவும் 'குஃப்ரு'தான்.

அப்படியானால் மார்க்கத்தில், ஷரீஅத்தில்  ஏன் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது? இதிலுள்ள இரகசியமென்ன? மக்களுக்கு சில உண்மைகளைக் காட்டவேண்டும்; அதேநேரத்தில் அதை மறைக்கக்கூடாது. 'அறிவை மறைப்பது ஹராம்'.  தகுதி படைத்தவர்களிடம் சொல்லிவிடவேண்டும். தகுதி இல்லாதவர்களிடம் சொல்லும்போது பட்டும்படாமல் இலைமறைவு காய்மறைவாகச் சொல்லிவிடுவார்கள். யாருக்குத் தகுதி இருக்கிறதோ, யாருக்குப் புரிந்துகொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதோ , அவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படியானால் சஹாபா பெருமக்கள் தகுதி இல்லாமலா இருந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.  அது உண்மைதான், எல்லோருக்குமல்ல , சஹாபாக்களில் ஒரு சிலருக்குத்தான் தகுதி இருந்திருக்கிறது.

ஒரு உதாரணம் சொல்கிறேன், ஒலு செய்வதற்குத் தண்ணீர் இல்லாதபோது  'தயமம்'  செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? ஒலு செய்ய தண்ணீர் இல்லை எனவே மணலைத் தட்டி தயமம் செய்தோம்; ஒலு என்ற கடமையை மீறவில்லை என்பதைக் காட்டுகிறது. தவிர எந்த வகையிலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போதுதான் தயமம் கடமை ஆகிறது. ஒருவர் ரசூல் (சல்) அவர்கள் முன்னே வந்து நின்றார். அவர் உடல் முழுவதும் புழுதி, கைகால்களெல்லாம் மண். என்னவென்று கேட்டால் தயமம் செய்திருக்கிறார். நாசி துவாரத்தை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியவில்லை, எனவே கேட்க வந்து நின்றார். ரசூல்(சல்) அவர்கள் பார்த்து சிரித்துவிட்டார்கள். அவரும் சஹாபிதான்.

இன்னொரு சாரார் இருக்கிறார்கள், அவர்கள் விபரம் புரிந்தவர்கள். இதில் அனேகம்பேர்  இருந்தனர். அதில் மிக மிக நெருக்கமானவர்கள், அபு பக்கர் சித்திக்(ரலி), உமர் கத்தாப்(ரலி), உதுமான் பின் கஃப்பான்(ரலி), அலி(ரலி) இன்னும் சில கண்மணி போன்றவர்கள் இருந்தனர்.  ஒரு சமயம் ரசூல்(சல்) அவர்களிடம் சில கிருஸ்துவர்கள் கேள்வி கேட்டார்கள் அஸ்ஹாபுல் கஹ்பை பற்றி. குகை மனிதர்களைப் பற்றி பைபிளில் முன்னூறு வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் குர்ஆன் முன்னூறு வருடமும் பின்  ஒன்பது வருடமும் ஆக மூன்னூற்றிஒன்பது வருடங்கள் தங்கியிருந்ததாகக் கூறுகிறது. அவர்கள் என்ன கேட்டார்கள், எங்களிடமுள்ள பைபிளும் அல்லாஹ் கொடுத்ததுதானே! எங்களிடம் ஒரு மாதிரியும் உங்களிடம் ஒரு மாதிரியும் அல்லாஹ் சொல்கிறானே! அது எப்படிச் சொல்லலாம்?  அப்போ நீங்கள் சொல்லும் இஸ்லாம் எப்படி சரியானதாக இருக்கமுடியும்?  என்று கேட்க  பக்கத்திலிருந்த அலி (ரலி) அவர்கள் பெருமானாரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சொன்னார்கள்; 'எந்த அல்லாஹ் சூரியனைப் படைத்தானோ அதே அல்லாஹ்தான் சந்திரனையும் படைத்தான். உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லிருக்கிறான் எங்களுக்கு சந்திரக் கணக்குப்படி சொல்லிருக்கிறான்' என்றார்கள்.

சந்திரக் கணக்குப்படி வருடத்திற்கு 11 நாள் கூடுதலாக வரும். 33 வருடத்திற்கு ஒரு வருடம் அதிகமாகும்; 100 வருடத்திற்கு மூன்று வருடம் கூடும், 300 வருடத்திற்கு ஒன்பது வருடம் அதிகமாகிவிடும்.

உமர் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. அவர்களின் மறு சிறப்பு, ரசூல் (சல்) அவர்களிடம் கேட்கும் கேள்விக்கு  பதில் கிடைத்தவுடனேயே அது தம் வாழ்க்கையில் செயல்படுத்திவிடுவார்கள். அதுபோல் ரசூல்(சல்) அவர்களுக்கு  வஹி வந்து அதை சொல்லும்போது இன்னல்லாஹ ஃகபூருர் ரஹீம் என்று முடியும் ஒரு வசனத்தை பெருமானார் அவர்கள் இன்னல்லாஹ என்று சொல்லும்போது, இவர்கள் பக்கத்திலுள்ள சஹாபியிடம் ஃகபூருர் ரஹீம் என்று மெதுவாக சொல்வார்களாம்.  அப்படியானால் வஹியைப் பெறுவதற்கு ஒரு பக்குவம் இருந்தது என்று சொன்னால் அந்த பக்குவத்தில் கொஞ்சம் இவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்தது என்று அர்த்தமாகிறது. வஹி ஒரு நெருப்பு என்று சொன்னால் அந்த நெருப்பின் சூடு இவர்கள்மீது பட்டுக்கொண்டிருந்தது.

இப்படி இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒன்று சாதாரணமான நபித்தோழர்கள், இவர்கள் வெளி வட்டம். இன்னொன்று மிக நெருக்கமான  தோழர்கள், இவர்கள் உள் வட்டம்.  இந்த இரண்டு பிரிவினருக்கும் புரிகிற மாதிரி செய்தியை சொல்லவேண்டும், எப்படி சொல்வது? உவமானம் காட்டாமல் எப்படி சொல்வது? அதனால்தான் மிஃராஜில் ரசூல்(சல்) அவர்கள் உவமானத்தைக் காட்டினார்கள். மிஃராஜில் மட்டுமல்ல அவர்கள் பேசிய பேச்சு எல்லாமே உவமானம்தான். அதேபோல் குர்ஆனிலும்  உவமானம் இருக்கிறது. விண்ணகத்தின் கதவுகள் எல்லாம் திறக்கும்போது... என்று இறை வசனம் இருக்கிறது. அப்படி என்றால் விண்ணகத்தின் கதவுகள் பூட்டுப்போட்டு வைக்கப்பட்டுள்ளதா? உனக்கும் ஆண்டவனுக்கும் இடையேயுள்ள திரைகளெல்லாம் கிழித்தெறியப்படும்போது என்றுதான் அர்த்தம் அங்கே!

ரசூல்(சல்) அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை சொல்கிறேன் அப்போதுதான் மிஃராஜின் செய்தி புரியும். ஒரு நபித்தோழர் அழுதுக்கொண்டே வருகிறார். பெருமானார் அவர்களிடம் வந்து நின்று பொங்கிப் பொங்கி அழுதுக்கொண்டிருக்கிறார். ஏன் மழை பொழிகிற மாதிரி அழுகிறீர்கள் என்று கேட்க, தன் வேதனைகளை எல்லாம் சொல்கிறார். அப்படியா, போய் ஆண்டவனிடத்தில் துஆ கேள், மழைப் பெய்யும்போது கேட்கிற துஆ கபூலாகும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார்கள்.

இதை மக்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால், மழை இறைவனின் அருட்கொடை, அது பெய்யும்போது கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று. நான் கேட்கிறேன், மழை அருட்கொடை என்றால் வெயில் அருட்கொடை அற்றதா? மழை பத்து நாள் தொடர்ந்து பெய்யட்டுமே, அப்போது தெரியும் வெயிலின் அருமை. இறைவன் படைத்தது எல்லாமே அருட்கொடைதான். மழை என்ற வார்த்தை கண்ணீரைக் குறிப்பிடுகிறது. மனம் கசிந்து, உள்ளம் உருகி, கண் கலங்கி நீ கேட்கிற துஆ கபூலாகும் என்று அர்த்தம். உண்மை அதுதானே, நம் வாழ்க்கையில் பார்க்கிறோமே!

ரசூல்(சல்) அவர்கள் பேசினார்கள் என்றால் வார்த்தை சுத்தமாக ஆழ்ந்த இலக்கிய நயத்துடன் அழகாகப் பேசுவார்கள். வள வள என்று பேசமாட்டார்கள். அப்படி இருக்கும்போது ரசூல் (சல்) அவர்கள் வார்த்தையை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பண்ணினால் கேலி செய்வதுபோல் ஆகிவிடும். மிஃராஜைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? "சுபஹானல்லதி அஸரா பி அபுதிஹி லைலன் மினல் மஸ்ஜிதில் ஹராம் இலல் மஸ்ஜிதில் அக்ஸல்லதி பாரக்னா ஹவ்லஹு லி நுரியஹு மின் ஆயாத்தினா..." - ஓர் இரவில் தன் அடியாரை புனிதமிக்க ஹரம் ஷரீஃபிலிருந்து மஸ்ஜிதில் அக்ஸா வரை அழைத்துக்கொண்டுபோன இறைவன் தூய்மையானவன் என்றுதான் குர்ஆனில் இருக்கிறது.

அப்படியானால் அவர்கள் என்ன சொல்ல வந்தார்கள் என்பது சாதாரண கித்தாபுகளில் காணமுடியாது. இதற்கு எழுதப்படாத அறிவு; இல்மு ஃகைர மக்தூபி; இல்மு லத்துன்னி. இந்த அறிவை வைத்து சிலர் தப்ஸீரில் லேசாக கோடிட்டு காண்பித்திருக்கிறார்கள். சூஃபியாக்கள் சொல்கிறார்கள், மனித நிலைக்கும் ஆண்டவனுடைய நிலைக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது.  ஒரு குயவனுக்கும் பானைக்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்பு ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது. குயவன் எங்கோ இருக்கிறான் பானை நம் வீட்டில் இருக்கிறது. ஆனால் இதிலுள்ள பெரிய நுணுக்கம் என்ன வென்றால் எவன் படைத்தானோ அவனுடைய ஒரு வித்து இவனிடம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அந்த வித்து தன்னை தூய்மைப் படுத்த நாடுகிறது; எங்கிருந்து வந்ததோ அந்த நிலைக்கு உயர விரும்புகிறது. மேலே இருந்து கீழே வந்தவுடன் தூல உலகத்தில் கட்டுப்பட்டுப் போய்விட்டது. எனவே இங்கு பயிற்சி பண்ணுகிறது. பயிற்சி பண்ணப் பண்ண அந்த வித்து தூய்மைப் பெற்று மூடியிருக்கும் குப்பைகளெல்லாம் நீங்கி மேலே போக ஆரம்பிக்கிறது. மேலே போகும்போது முதலில் ஒரு திரை வரும் அப்புறம் வேறொரு திரை வரும் இப்படி பல திரைகள் இருக்கின்றன. ஒரு திரை உணர்ச்சித் திரை, மறு திரை அறிவு இருக்கிறது என்ற நினைப்பு-கர்வம் என்ற திரை. இப்படி ஒவ்வொரு திரையாக கிழித்தெரியப்படும்போது தான் யார் என்பது தெரியும். எந்த வினாடியில் அது தன்னைப் புரிந்துக்கொண்டதோ அந்த வினாடியில் அது ஆண்டவனைப் பார்த்தது என்று அர்த்தம்.

நுபுவத் - நபித்துவம் பெற்றபிறகு நபியாக வந்து பிரச்சாரம் பண்ணுகிற காலத்தில் எல்லைகளைக் தாண்டி, பல திரைகளைக் கடந்து போகும்போது தெய்வசக்தியை தனக்குத்தானாக கண்ணிற்கு நேராகப் பார்க்கிறார்கள்;  ஆண்டவனை நேராகப் பார்க்கிறார்கள். இதுதான் மிஃராஜின் தத்துவம்.

மிஃராஜ் என்ற வார்த்தைக்கு ஏணி என்று அர்த்தம், ஏறிப்போகுதல் என்று பொருள். ஏறுதல் என்றால் சட உலகத்தில் ஒவ்வொரு படியாக கால்வைத்து ஏறுதல் என்று அர்த்தமல்ல. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போதல்; கீழ்த்தரமான மனிதக் கட்டுப்பாடு நிறைந்த சட உலகத்திலிருந்து சடமற்ற சூட்சம நிலைக்கு உயர்தல். அப்படி உயரும்போது எத்தனைத் தடைகள் வருகின்றனவோ அத்தனைக்கும் வானம் என்பார்கள். ஷரீஅத்தில் இப்படித்தான் சொல்வார்கள்.

அப்பொ ரசூலல்லாஹ் நேராகப் பார்க்கும்போது என்ன விளைவு வரும்? நாம் ரொம்ப ரொம்ப விரும்பிய ஒன்றை பார்த்தோமென்றால் நம்மையே மறந்துவிடுவோம். இதை பற்றி மௌலானா ரூமி அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். ஒரு அரசன் இருந்தானாம், ஒரு துறவி தெருவில் போனாராம். அந்த அரசன் கேட்டானாம் துறவியைப் பார்த்து எங்கே போகிறீர்கள் என்று. அல்லாஹ்வைப் பார்க்கப் போகிறேன் என்றாராம் துறவி. அப்படியா! சரி, அல்லாஹ்வைப் பார்க்கும்போது இந்த அடியானைப் பற்றி சொல்லுங்கள் என்று அரசன் சொல்ல, துறவி சொன்னாராம் : 'அடப்போய்யா! நான் அங்கே போனால் என்னையே நான் மறந்துவிடுவேன் அப்படி இருக்கும்போது உன்னை எப்படி நினைப்பது?'

அங்கே அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் புருவ இடைவெளி அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது என்று சொன்னால் அவர்கள் தன்னையே முழுவதுமாக மறந்துவிட்டார்கள் என்றுதான் பொருள். ஆகவே மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயரக்கூடிய பாதைக்குத்தான் மிஃராஜ் என்று பொருள். இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன. அவற்றை சொல்வதற்கு இது இடமல்ல.
**

சொல் விளக்கம்:

காப கௌஸைனி - புருவமத்தி
ஹதீஸ் - நபி மொழி; நபி செயல் மற்றும் நடைமுறை
குஃப்ரு  -  நிராகரித்தல்; இறை நிராகரிப்பு
ஷரீஅத்  - சரியை
சஹாபா - நபி தோழர்
(சல்) சல்லல்லாஹு அலைஹிவசல்லம்  - சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
(ரலி) ரலியல்லாஹு அன்ஹு  -  இறைவன் பொருந்திக்கொள்வானாக
தயமம் - இரண்டு கைகளையும் மணலில் தட்டி புறங்கை மற்றும் முழங்கைகள் வரை தடவிக்கொள்ளும் செயல்
இன்னல்லாஹ கஃபூருர் ரஹீம் - நிச்சயமாக இறைவன் பிழை பொருப்பவனும் மிகுந்த அன்புடையோனுமானவன்
துஆ - பிரார்த்தனை
கபூல் - ஏற்றுக்கொள்ளுதல்
இல்மு ஃகைர மக்தூபி - எழுதப்படாத அறிவு
இல்மு லத்துன்னி - வரையறுக்கப்படாத அறிவு
தப்ஸீர் - விரிவுரை

*
நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) 
*
தொடர்புடைய பதிவு:

No comments:

Post a Comment